Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 36

அத்தியாயம் – 36

ஜீவன் இல்லாத இடம் காற்றில்லா வெற்றிடம் போல் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த சிறிய வீடு கூட பெரிய கானகமாக மாறி அவளை அச்சுறுத்தியது. அன்று அவன் அணிந்திருந்துவிட்டு கழட்டிப் போட்டிருந்த அழுக்கு ஆடை முதல் தலை வாரிய சீப்பு… நகம் நறுக்கிய நகவெட்டி… உணவருந்திய தட்டு… அவன் பயன்படுத்திய படுக்கை… தூக்கியெறிய நினைத்த பழைய காலனி… வரை ஒவ்வொன்றிலும் தோன்றும் அவன் ஞாபகங்கள் அவளுடைய வேதனையை அதிகப்படுத்தியது. ஆனால் அதே ஞாபகங்கள் தான் அவளை உயிர்ப்புடன் வாழ வைத்துக் கொண்டும் இருந்தது… piniyum avane…! pini theerkkum marundhum avane…!

 

உணவையும் உறக்கத்தையும் மறந்துவிட்டு அவனுடைய அழைப்புக்காக காத்திருந்தாள் பவித்ரா. அரபுநாட்டில் சென்று இறங்கியதும் விமான நிலையத்திலிருந்தே ஜீவன் மனைவிக்கு அழைத்து பேசினான். அதிக நேரம் பேசாமல் தான் பத்திரமாக வந்துவிட்டதை சொல்லிவிட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது பேசுவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான். அதன் பிறகு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவளுக்கு கைப்பேசியில் அழைப்பான்.

 

ஆரம்பத்தில் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தவன் போகப் போக பேசும் நேரத்தைக் குறைத்துக் கொண்டான். அதற்குக் காரணம் வேலை நெருக்கடியாக இருக்கும்… அல்லது பணப் பற்றாக்குறையாக இருக்கும் என்று நினைத்த பவித்ரா துன்பத்தை மனதில் புதைத்துக் கொண்டு அவனை தொல்லை செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தினாள். அவனுடைய உழைப்பிற்கான வெகுமதி அவளுடைய மதிப்பெண்தான் என்று நினைத்து அதை உயர்த்த பாடுபட்டாள்.

 

மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க குணா அடிக்கடி வந்து தங்கையை பார்த்துக் கொண்டான். ஜீவனும் அவ்வப்போது அழைத்து மச்சானுடன்  பேசுவான். பவித்ராவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணன் வீட்டுக்கு சென்று முடிந்த அளவு அவளுடைய அண்ணிக்கு   உதவிகளை செய்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளுடைய உறவு பைரவியுடனும் ஓரளவு நல்ல முறையிலேயே நீடித்தது.

 

மகனைப் பார்க்க முடியவில்லையே என்கிற வருத்தத்தில் அவ்வப்போது பவித்ராவிடம் சிவகாமி கோபத்தைக் காட்டினாலும் மருமகள் மீது அக்கறையாகத்தான் நடந்துக் கொண்டாள். வாராவாரம் அவளை வந்து பார்த்துவிட்டு செல்வது… பரிட்சை நேரத்தில் வந்து அவளோடு தங்கியிருந்து உதவிகள் செய்வது… என்று பொறுப்புடன் நடந்துக் கொண்டாள். பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாமல் நாட்கள்… வாரங்கள்… மாதங்கள் என்று காலம் மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்தது…

###

ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்றான ராஸ் அல்-கைமா அமீரகத்தில்… மிரட்டும் பாலைவன மணல் மேடுகளுக்கிடையில் அமைந்துள்ள உள்ளடங்கிய பாலைவன கிராமமான அல்-ஃபஜாராவை அடுத்து சமுத்திரம் போல் அலையலையாக பரவிக்கிடக்கும் மணல் பரப்பில் சிறு சிறு திட்டுகள் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பண்ணைகள் அமைந்துள்ளன.

 

தக்காளி, கத்திரி, வெண்டை, கீரை போன்ற காய்கறிகள் பயிரிடப்படும் அந்த பண்ணைகளில் பாதிக்கு மேல் பேரீச்சை மரங்களே ஆக்கிரமித்திருந்தன. அதுதவிர ஆடு, மாடு, கோழிகளுடன் பெருமளவில் ஒட்டகங்களும் வளர்க்கப்பட்டன. அந்த பண்ணைகளில்  விளையும் பொருட்களையும், விற்கப்பட்ட கால்நடைகளையும் பக்கத்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக டிரக் ஓட்டுனர்களாகவும்… விவசாய வேலை செய்பவர்களாகவும்… கால்நடைகளைப் பராமரிப்பவர்களாகவும்… ஏகப்பட்ட இந்தியர்களும் பாக்கிஸ்த்தானிகளும் வேலை செய்தார்கள். அவர்களுள் ஒருவராக தான் ஜீவன் வந்திருந்தான்.

 

கத்திரி வெயில் என்றால் என்னவென்று கேள்விப்பட்டிருந்த ஜீவன் கதறடிக்கும் வெயில் என்றால் என்னவென்பதை ராஸ் அல்-கைமாவில் தெரிந்து கொண்டான்.  அடிக்கிற வெயிலில்… காற்று தண்ணீர் போல ஏசியும் ஒரு அத்யாவசியப் பொருள்தான் அந்த ஊரில். ஆனால் அந்த அத்யாவசியப் பொருள் கூட இல்லாத லேபர் கேம்பில் தான் ஜீவன் தங்கியிருந்தான்.

 

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஜீவன் காட்டிற்குள் சாலை போடப் பட்டிருக்கிறது என்பதைக் கூட கேள்விதான் பட்டிருக்கிறான். ஆனால் இங்கு வந்த பிறகு… தினம் தினம் பாலைவன மணல் குவியலுக்கிடையில்  போடப்பட்டிருக்கும் சாலையில்… அவ்வப்போது வரும் மணல் புயலை சமாளித்தபடி… லோடு ஏற்றப்பட்ட வாகனத்தை ஓட்டிச் செல்வதுதான் அவனுடைய வேலையாகிப் போனது.

 

பொதுவாக அத்யாசிய வசதிகளோடு அந்த ஊரில் வாழும் ஒரு மனிதன்  குளிரூட்டப்பட்ட வீட்டிலிருந்து வெளியேறி பார்க்கிங் ஏரியாவில் நிற்கும் ஏசி காருக்குள் நுழைவதற்குள்… நரகத்தையே கடந்து வந்தது போலத்தான் உணர்வான். அப்படிப்பட்ட கொடும் வெயிலில்… மணல் காற்று அதிகமாக இருக்கும் நாட்களில் வண்டி ஓட்ட முடியாமல் நடு வழியிலேயே மணிக்கணக்கில் காத்திருக்கும் கொடுமையை கூட அனுபவித்திருக்கிறான் ஜீவன்.

 

வீசும் புழுதிக் காற்றோடு போராடி நேரகாலம் பார்க்காமல் வேலை செய்துவிட்டு கலைத்து அறைக்கு வந்து, அலுப்புத் தீர ஒரு குளியல் போடலாம் என்று நினைத்து குழாயைத் திறந்தால், ஐம்பத்தைந்து டிகிரி செல்சியசில் ஹீட்டர் போடாமலேயே தண்ணீர் சூடாக வரும். அதை வாளியில் பிடித்து ஆற வைத்து குளிக்கும் அளவிற்கு பொறுத்திருக்க முடியாமல் பசி வயிற்றைக் கிள்ள, ‘என்ன அவலம்…!’ மனம் வெறுத்துப் போய் குளியலை மறந்துவிட்டு… துண்டை தண்ணீரில் நனைத்து அதை ஆறவைத்து உடம்பைத் துடைத்துக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வருவான். பசி வயிற்றைக் கிள்ளும்… வேலை முடிந்து வரும் பொழுது வாங்கிக் கொண்டு வந்த மலிவு விலை உணவான குபூஸ் எனப்படும் அரேபியன் ரொட்டியை, வேக வைத்த பருப்பில் நனைத்து உன்ன முயல்வான். ஆனால் அது தொண்டைக் குழியிலேயே சிக்கிக்கொள்ளும்… அம்மாவின் கைமணம் நினைவில் வந்து நெஞ்சை அடைக்கும். பாதி உணவிலேயே கைகழுவிவிட்டு பாரமான இதயத்துடன் படுப்பான்… உறக்கம் வராது… கண்களை மூடி உறங்க முயற்சி செய்வான்… மூடிய விழிகளுக்குள் பவித்ரா வந்து சிரிப்பாள். மனம் கலங்கி கண்களில் கண்ணீர் வழியும்…

 

கைபேசியில் எஃப்-எம் ரேடியோவை ஒலிக்கவிட்டு எண்பதுகளில் வெளியான சோகப் பாடல்களைக் கேட்டபடி இரவெல்லாம் விழித்துக் கிடப்பவன் விடியலில் கண்ணயரும் போது பாத்ரூம் கியூவில் இடம் பிடிப்பதற்காக தூக்கத்தை தியாகம் செய்த தியாகிகளின் நடமாட்டம் கேட்கும்.

 

ஒவ்வொரு நாழிகையையும் துன்பத்தோடு கடத்திவிட்டு வெள்ளிக் கிழமைக்காக காத்திருந்து மகிழ்ச்சியாக மனைவியுடன் பேசுவான். முதல் பத்து நிமிடம், தான் நலமாக இருப்பதாகவும்… தனக்கு எந்த குறையும் இல்லை என்றும்… நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் என்றும்… அமிர்தமான உணவு கிடைப்பதாகவும்… சகல வசதியுடன் கூடிய அறையில் தங்கியிருப்பதாகவும் கூசாமல் பொய் சொல்வான்.

 

அடுத்த ஒரு மணி நேரமும் அவளைப் பேசவிட்டுக் கேட்பான். வாரம் முழுக்க வீட்டிலும் கல்லூரியிலும் நடந்த விஷயங்கள்… அவள் அண்ணன் வீட்டில் நடந்த சமாசாரங்கள்… தன் அம்மா வீட்டு நிலவரம் என்று அவளுக்குத் தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவளை ஒப்புவிக்க வைப்பான்.

 

அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உல்லாசமகாத்தான் இருக்கும்… ஆனால் போனை வைத்தப் பிறகுதான் தெரியும் இழப்பின் வலி… வாரம் முழுக்க அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு மனம் அதிகமாக வலிக்கும். அந்த தாக்கத்திலிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு அவனால் வெளியே வர முடியாது. இந்த துன்பத்திலிருந்து தப்பிக்க அவன் கண்டுப்பிடித்த வழி பவித்ராவோடு பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்வது… தேவைக்கு அதிகமாக அவனும் பேசுவதில்லை… அவளையும் பேசவிடுவதில்லை… பேசவிட்டால்தானே அவள் பேசியதையும்… அவளையும்… எண்ணியெண்ணி  ஏங்கத் தோன்றும்… முரட்டுப் பிடிவாதத்துடன் கவனத்தை வேலையில் மட்டும் செலுத்தினான். அப்போதும் உள்ளம் துடிக்கும்… ஆனால் முன்னதற்கு இது பரவாயில்லை என்று தோன்றியது…

 

அவன் வேலை செய்யும் பண்ணையில் மண்ணோடு ஒட்டி உறவாடி… பின்னி பிணைந்து… செழித்து வளர்ந்திருக்கும் மரத்தை வேரோடு பிடுங்கி எங்கோ கொண்டு போய் அழகுக்காக நட்டு வைப்பார்கள். அதை பார்க்கும் பொழுது அவன் மனம் ஊமையாய் அழும்… என்னையும் விதி இப்படித்தான் என் சொந்த பூமியிலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டது… என்று உள்ளுக்குள் வெம்புவான்.

 

வருடத்திற்கு ஓரிரு முறை எப்போதாவது அந்த ஊரில் மழை வரும். கொஞ்சம் அதிகமாக மழை பெய்யும் காலங்களில் அங்கே ஒரு அதிசயத்தைக் காண முடியும். ஒன்றோடொன்று போட்டிப் போட்டுக் கொண்டு பாய்ந்து வந்து பூமியை முத்தமிடும் மழைத் துளிகளை வறண்டு கிடக்கும் அந்த மண் ஓரளவுக்கு மேல் உறிஞ்சாது… சில அடி ஆழத்திலேயே இருக்கும் எண்ணை நீரை உறிஞ்ச விடாது… அது போல் தன்னாலும் இந்த மண்ணில் எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தாலும் ஒட்ட முடியாது என்று அவனுக்குத் தோன்றும்…

 

இவன் மட்டும் பழைய ஜீவனாக இருந்திருந்தால் உன் வேலையும் வேண்டாம்… நீ கொடுக்கும் பணமும் வேண்டாம்… என்று தூக்கி எறிந்துவிட்டு வந்திருப்பான். ஆனால் இவன் தான் புதியவனாயிற்றே…! பவித்ராவின் மீது காதல் கொண்டுவிட்ட பித்தனாயிற்றே…! படிக்க வேண்டும் என்கிற அவளுடைய ஆசையை இவனால் எப்படி உதாசீனப் படுத்த முடியும்…? ‘உயிரைக் கொடுத்தாவது உன்னைப் படிக்க வைப்பேன்…’ என்று அவளுக்குக் கொடுத்த வாக்கை எப்படி சிதைக்க முடியும்…?

 

வைராக்யத்துடன் போராடினான்… சுட்டெரிக்கும் வெயிலை வென்று… இரத்தத்தை உறைய வைக்கும் குளிரை கொன்று… புழுதிக் காற்றை சுவாசித்து… ஷவர்மாவையும், குபூசையும் உண்டு… முதலாளியின் கஞ்சத்தனத்தினால் உப்புக் கரிக்கும் ஒட்டகப் பாலை அருந்தி… ஊரையும், உறவையும் எண்ணி ஏங்கித் தவித்து… உடல் ஆரோக்யத்தையும் மன ஆரோக்யத்தை குலைத்துக் கொண்டு மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து போராடி கரை சேர்ந்தான்.

###

ஜீவன் பிழைப்பை தேடி அரபு நாட்டிற்கு சென்ற பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பிரகாஷும் புனிதாவும் இந்தியாவிற்கு வந்துவிட்டார்கள். திருமணம் முடித்த அடுத்த ஆண்டே புனிதா குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்துவிட்டாள்.  குழந்தை இல்லாததை குறையாக பிரகாஷ் நினைக்கவில்லை. ஆனால் அதைப் பற்றி பெரிதாக பேசிப் பேசி… கவலைப்பட்டு… புலம்பி… தன் நிம்மதியை தொலைத்து… அவன் நிம்மதியையும் குலைத்து வாழ்க்கையை நரகமாக மாற்றிக் கொண்டிருந்தாள் புனிதா…

 

மெல்ல மெல்ல குழந்தை என்பது பெரிய வரம் என்று பிரகாஷும் நம்ப ஆரம்பித்தான். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினான். ஒரு கட்டத்தில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டு மனைவியோடு இந்தியாவிற்கு வந்து செட்டில் ஆகிவிட்டான்.

 

தாயகத்தில் அவனுக்கு வேலை கிடைக்க தாமதமானது. மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் நீர்கட்டியின் காரணமாக புனிதா கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது என்பது தெரியவந்தது. வேலை இல்லாமையும்… குழந்தை ஏக்கமும் அவனை வெறுப்படைய செய்வதால் அவ்வப்போது மனைவியிடம் சிடுசிடுப்பான். அவனுடைய குண இயல்பே மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. அதை பற்றி புனிதா கவலைப் படவில்லை. அவளுடைய மனம் எப்பொழுதுமே தனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்பதிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் நாட்கள் தான் கரைந்துக் கொண்டிருந்ததே தவிர அவளுடைய விருப்பம் கைகூடவில்லை…

 
3 Comments