Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 37

அத்தியாயம் – 37

அன்று இரவெல்லாம் இன்பப் படபடப்பில் பவித்ராவிற்கு உறக்கமே வரவில்லை. எப்படிவரும்..? மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கண்ணீருடன் நின்றவளைப் பிரிந்து பிழைப்பைத் தேடி வெளிநாடு சென்றவன் நாளை காலை ஊர் திரும்புகிறானே…!

 

‘எப்படி இருப்பான்…! ஏற்கனவே அழகா இருப்பான்… இப்போ வெளிநாட்டிலிருந்து வர்றான்… இன்னும் கலரா மாறியிருப்பான்… நம்மைப் பார்த்ததும் என்ன கேட்பான்…? கேட்பதற்கு முன் சிரிப்பான்… அழகான பல்வரிசை அவனுக்கு… நாளை காலை உணவுக்கே வீட்டிற்கு வந்துவிடுவான்… அவனுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ… அத்தனையையும் செய்துவிட வேண்டும்… அவளுடைய சிந்தனைகள் முழுவதும் ஜீவனை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க ஹாலில் மாமியாரின் நடமாட்டம் கேட்டது.

 

“எழுந்துடிங்கலாத்த…” படுக்கையறையிலிருந்து எழுந்து வெளியே வந்து கேட்டாள்.

 

“ஆமாம்மா…. தூக்கமே வரல… அதான் கொஞ்சம் வடைக்கு ஊற வச்சிட்டு வேலையை ஆரம்பிக்கலாமேன்னு எழுந்தேன்… நீ ஏன்  இப்பவே எழுந்த… இன்னும் மணி ஆகலையே…”

 

“எனக்கும் தூக்கம் வரலத்த… நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்…” என்றாள்.

 

சிவகாமிக்கு மருமகளின் மனம் புரிந்தது. இருவரும் ஜீவனை வருகையை எதிர் நோக்கியபடி… குளித்து தயாராகி காலை பலகாரத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.

 

காலை பத்து மணி… பவித்ரா, சிவகாமி மற்றும் பாட்டியோடு சேர்ந்து பைரவியும் ஜீவனை வரவேற்க ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நேரம்…  வாசலில் ஒரு வாடகைக் கார் வந்து நின்றது. மகன் வந்துவிட்டானோ…! என்கிற ஆர்வத்தில் சிவகாமி அவசரமாக ஓடிவந்து பால்கனி வழியாக எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்ப்பு பொய்கவில்லை…

 

காரிலிருந்து முதலில் குணா இறங்க… ஜீவன் அடுத்து இறங்கினான். சிவகாமியின் கண்கள் நிலைகுத்திவிட்டன. அவனை வரவேற்க கீழே செல்ல வேண்டும் என்பதைக் கூட மறந்துவிட்டு அப்படியே நின்றாள். மகனின் உருமாற்றத்தைக் கண்டவளின் வயிறு எரிந்தது… தலைமுடி நன்றாக உதிர்ந்து முன்நெற்றி ஏறியிருந்தது… எழும்பும் தோலுமாய் மெலிந்துவிட்ட மேனியும்… கடுமையான வெயிலினால் கருத்திருந்த தோலும் அந்த தாயின் கண்களில் கண்ணீரைக் கசியச் செய்தது.

 

காரிலிருந்து வரிசையாக பெட்டிகளை குணா இறக்கி வைக்க ஜீவன் டிரைவருக்கு பணத்தைக் கொடுத்து கணக்கை முடித்தான். இருவரும் ஆளுக்கு ஒரு பெட்டியையும் பையையும் தூக்கிக் கொண்டு மாடிப்படி பக்கம் வந்தார்கள். சிவகாமி பால்கனியிலிருந்து வாசல் கதவை நோக்கி வருவதற்குள் அவர்கள் மேலே வந்துவிட்டார்கள்.

 

சிவகாமியுடன் வாசல் கதவுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த பாட்டியும்… பைரவியும் ஜீவனின் உருமாற்றத்தைக் கண்டு அதிர்ந்தார்கள். அவர்களுடைய முகமாற்றத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் சமையலறை வாசலில்… ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், லேசான வெட்கத்துடன் சிரித்த முகமாக தலைகுனிந்து நின்றுக் கொண்டிருந்த பவித்ராவின் மீது தான் இருந்தது.

 

படிப்புக்களையும்… பணத்தின் செழுமையும்… கணவனின் நல்லவிதமான மாற்றத்தில் விளைந்த நிம்மதியும்… அவன் அன்பு தந்த மகிழ்ச்சியும் அவளுடைய உடலில் பிரதிபலித்தது. அவன் அவளை ஆசையுடன் பார்த்தபடி உள்ளே நுழைந்தான்.

 

மாநிற மேனியாளாக இருந்தவள் இப்போது பொன்னிற மேனியாளாக மாறியிருந்தாள். அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற காட்டன் புடவையும்… தலையில் சூட்டியிருந்த பூச்சரமும்… சிறு நெற்றிப் பொட்டும்… அதற்கு மேல் கீற்றாக இட்டிருந்த திருநீர் சந்தனமும்… அளவான சிறு நகைகளும்…  அவள் அழகை பல மடங்கு கூட்டிக் காட்டின…

 

‘ஒல்லிக்குச்சியா இருந்தவள் இப்போ கொஞ்சம் வெயிட் போட்டிருக்கா…! முகத்தில் பொலிவு…! ஒளிரும் கண்கள்…! புன்னகைத் தவழும் இதழ்கள்…! ஹேர் ஸ்டைலை கூட மாத்திட்டாளே…! வாவ்… பவி…!’ அவன் ஆனந்த வெள்ளத்தில் கூத்தாடினான்.

 

‘எவ்வளவு மாற்றம்…!’ அழகென்றால் கோடிகோடி அழகு… இதற்கு முன் அவன் பவித்ராவை இப்படிக் கற்பனை செய்துக் கூட பார்த்ததில்லை. ‘ஹனி…! மை ஸ்வீட் பவி…!’ மனம் சொக்கிப்போனான்.

 

ஒரு நிமிடம் தான் தலைகுனிந்து நின்றாள்… ஒரே நிமிடத்தில் அவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெட்கத்தை ஒதுக்கிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள். நம்ப முடியாத பேரதிர்ச்சி…! அவனை பார்க்கப் போகிறோம் என்கிற பூரிப்பில் மலர்ந்திருந்த முகம் நொடியில் வாடி வதங்கிவிட்டது.

 

‘எப்படி மாறிவிட்டான்…! ஆணழகனாக இருந்த ஜீவனா இவன்…? என்ன இது…? எப்படி இப்படி…?’ சிந்திக்கக் கூட முடியாமல் தடுமாறினாள்.

 

“வாப்பா… நல்லா இருக்கியா?” என்று பேரனை வரவேற்ற பாட்டியின் குரலோ… “ஜீவா…. என்னடா ஜீவா இப்படி மாறிட்ட…?” என்று மகனை தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கண்கலங்கிய சிவகாமியின் கலக்கமோ அவன் மனதை பாதிக்கவே இல்லை. அவர்களுக்கெல்லாம் இயந்திரத்தனமாக பதில் சொன்னவனின் மனம் மனைவியின் அதிர்ந்த முகத்திலேயே நிலைத்திருந்தது. அவனை பார்க்கும் வரை மலர்ந்திருந்த முகம், அவனை நிமிர்ந்து பார்த்ததும் வாடிவிட்டது அவனுக்குள் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

 

‘எவ்வளவு கடினமான வேலைகளைச் செய்திருந்தால் இவனுடைய உருவத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கும்…? எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறான்…! எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறான்…! எல்லாம் யாருக்காக… எனக்காக… எனக்காக மட்டும்தான்…’ அவள் மனம் உருகி கண்களில் கண்ணீர் கசிந்தது.

 

அந்த கண்ணீருக்கான அர்த்தத்தை அவன் தவறாக புரிந்துக் கொண்டான். அவளுடைய சிறிய முகமாற்றமும் ஒரு துளி கண்ணீரும் அவனை அடித்து சாய்த்தது… ‘என்னிடம் இருந்த ஒரே நிறை அழகு மட்டும்தான்… அதுவும் இப்போது இல்லை என்றதும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கலங்கிவிட்டாள்…’ அவன் மனம் ரணமாக வலித்தது. அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியாமல் படுக்கையறைக்குள் நுழைந்தான்.

 

அங்கே புதிதாக ஒரு பீரோ இருந்தது. அதில் ஆளுயரக் கண்ணாடியும் பொருத்தப் பட்டிருந்தது. தன்னை தலை முதல் கால் வரைப் பார்த்தான். பழைய உருவம் இல்லை… நிறமில்லை… அழகு இல்லை… முன்நெற்றி ஏறிவிட்டது… ஓரிரண்டு நரை முடிகள் எட்டிப் பார்த்தது… மொத்தத்தில் உருக்குலைந்திருந்த மேனி அவன் வயதைக் கூட்டிக் காட்டியது… ஆத்திரம் பொங்கியது… கத்தி அழ வேண்டும் போல் இருந்தது… ஆனால் முடியவில்லை… வீடு முழுக்க கூட்டம்…

 

சம்பாதிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை நோக்கி ஓடிக் கொண்டிருந்த போது அவன் தன்னுடைய உருமாற்றத்தை பற்றிக் கவலைப் பட்டதே இல்லை… ஆனால் இன்று உடைந்து போனான். பெரிதாக எதையோ இழந்துவிட்டது போல் மருகினான். தன்னைத் தானே வெறுத்தான்.

 

‘அழகு பதுமையாக கிளி போல் இருக்கும் என் பவித்ராவுக்கு நான் எப்படி பொருத்தமானவனாக இருப்பேன்…’ அவன் மனம் தாழ்வு மனப்பான்மையில் சுருண்டது. படித்த பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவன் அவனே தான்… ஆனால் இன்று அவள் முகத்தில் தெரியும் அறிவுக்களை அவனை அச்சுறுத்தியது… தன்னால் அவளுக்கு இணையாக… இயல்பாக வாழ முடியாது என்கிற அவநம்பிக்கை மேலிட்டது. மலையளவு பாரம் மனதில் ஏறிக் கொள்ள… அங்குக் கிடந்த நாற்காலியில் சோர்ந்து அமர்ந்துவிட்டான்.

 

“நாங்க கிளம்பறோம் பவித்ரா… மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும்… சாயங்காலம் வந்து பார்க்கிறோம்…” குணா தங்கையிடம் பேசினான்.

 

“சாப்பிட்டுவிட்டு போகலாம் தம்பி…” பாட்டி உபசரித்தார்கள்.

 

“இல்ல பாட்டி… இங்க வரும் போதே டிஃபன் முடிச்சிட்டுதான் வந்தோம். ஆபீஸ்க்கு டைம் ஆச்சு… கிளம்பறோம்…” பைரவி சொன்னாள்.

 

“சரி… அப்போ இதையாவது குடிங்க…” சிவகாமி காபிக் கப்புடன் வந்து குணாவுக்கும் பைரவிக்கும் கொடுத்துவிட்டு, மருமகளிடம் திரும்பி

 

“அம்மாடி… இதை கொண்டு போய் ஜீவனுக்குக் கொடு… காபியை குடித்ததும் குளிக்க சொல்லு… நேரமாச்சு சாப்பிடட்டும்…” என்றாள்.

 

காபியை குடித்துவிட்டு குணாவும் பைரவியும் விடைபெற்றுவிட பவித்ரா ஜீவனை தேடிச் சென்றாள்.

 

“காபி எடுத்துக்கோங்க…” ஜீவனிடம் கப்பை நீட்டினாள். அவன் அவள் முகத்தைப் பார்க்காமல் கப்பை வாங்கிக் கொண்டான்.

 

“ரொம்ப மெலிஞ்சுட்டிங்க… அங்க ரொம்ப வேலையா…?” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.

 

அவள் அவனுடைய ஆரோக்யத்தை மனதில் கொண்டு கேட்பதை, இவன் தன்னுடைய தோற்றத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்துக் கேட்கிறாள் என்று நினைத்து அவளிடம் முகம் கொடுக்காமல்… “ம்ம்ம்…” என்றபடி காபியில் கவனமாக இருந்தான்.

 

“குளிக்கரிங்களா…? சுடுதண்ணி எடுத்து வைக்கவா…?” அவள் அக்கறையாகக் கேட்டாள்.

 

அவளுடைய அக்கறை அவன் மனதை எட்டவில்லை. “வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

 

அவன் குளித்துவிட்டு வெளியே வரும் பொழுது பிரகாஷ் அவன் மனைவியுடன் உள்ளே நுழைந்தான். அண்ணனை பார்த்தவுடன் “ஹேய்… ஜீவா….” என்று பாய்ந்து வந்துக் கட்டிக் கொண்டான்.

 

ஜீவனும் தம்பியை பாசத்தோடு அனைத்துக் கொண்டான். “என்னடா ஜீவா ஆளே மாறிப் போய்ட்ட…? முடியெல்லாம் கூட கொட்டிடுச்சு…?” தம்பி ஆதங்கப்பட்டான்.

 

தம்பியின் ஆதங்கம் அண்ணனின் இழப்பை இன்னும் எடுத்துக் காட்ட அவனுக்கு சட்டென கோபம் வந்தது… “ப்ச்… டிரைவர் வேலைக்கு போனவன் வேற எப்படிடா வருவான்…?” என்றான் பொங்கிய கோபத்தை உள்ளடக்கியபடி.

 

“சரி… சரி… விடு… அதான் இங்க வந்துட்டல்ல… இனி அண்ணி உன்னை தேற்றிடுவாங்க…” என்று கிண்டலடிப்பது போல் உண்மையை சொன்னான்.

 

“வாப்பா… பிரகாஷ்… வாம்மா புனிதா…” பாட்டி இளைய பேரனையும் அவன் மனைவியையும் வரவேற்றார்கள்.

 

“வந்துட்டியா பிரகாஷ்… உன்னை இன்னும் காணுமேன்னு நெனச்சுகிட்டே இருந்தேன்…” என்றாள் சிவகாமி.

 

ஜீவனை பார்க்க வந்துவிட்டு எதுவுமே பேசாமல் இருந்தால் பிரகாஷ் தவறாக நினைப்பான். பேசினால் ஜீவன் எக்குத்தப்பாக எதையாவது சொன்னாலும் சொல்லிவிடுவான்… என்ன செய்வது என்று புனிதா தயங்கிக் கொண்டிருந்தாள். அவள் தன் அண்ணனிடம் நலம் விசாரிப்பாள் என்று நினைத்து, தான் பேசுவதை நிறுத்திவிட்டு மனைவி பேசுவதற்கு வாய்ப்புக் கொடுத்து அவள் முகத்தை பார்த்தான் பிரகாஷ். அவளும் வேறு வழியில்லாமல் ஜீவனிடம் “நல்லா இருக்கிங்களா…?” என்று பயத்துடன்  கேட்டாள்.

 

“நல்லா இருக்கேன்… நீங்க நல்லா இருக்கிங்களா…?” என்று சாதரணமாக பேசினான் ஜீவன்.

 

அவன் தன்னிடம் இயல்பாக பேசுவதையும்…  பன்மையில் அழைப்பதையும் வியப்புடன் கவனித்தாள் புனிதா. அவனுடைய மாற்றம் அவளுக்கும் விடுதலை உணர்வைக் கொடுத்தது. புன்னகையுடன் “நல்லா இருக்கேன்…” என்று பதில் சொன்னாள். அவளிடம் தலையசைத்துவிட்டு தம்பியிடம் திரும்பி, “டாக்டரை பார்த்துட்டு வந்துட்டியா…?” என்று கேட்டான்.

 

“ம்ம்ம்… ஆமாம்… நேரா ஹாஸ்ப்பிட்டலில் இருந்து இங்கதான் வர்றேன்…”

 

“என்ன சொன்னாங்க…?”

 

“அதை பற்றி அப்புறம்  பேசலாம்… நீ ஏர்போர்ட்லிருந்து எப்படி வந்த…? இன்னிக்கு பார்த்து ஹாப்பிட்டல் போக வேண்டியதா போச்சு… குணா கரெக்ட் டைம்க்கு உன்னை பிக்அப் பண்ண வந்துட்டாரா?”

 

அண்ணனை அழைக்க விமானநிலையம் செல்ல முடியவில்லை என்கிற வருத்தமும்… அவன் மீதான அக்கறையும் தெரிந்தது பிரகாஷின் பேச்சில்.

 

“வந்துட்டார்டா… உனக்கு புது வேலையெல்லாம் எப்படி போகுது…?” அண்ணனும் தம்பியும் பேசிக் கொண்டே ஆளுக்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து அம்மா கொண்டு வந்து கொடுத்த தட்டை கையில் வாங்கி காலை உணவை கவனிக்க ஆரம்பித்தார்கள். சகோதரர்களின் உரையாடலில் குறுக்கிடாமல் ஒதுங்கி நின்ற புனிதா மெல்ல நகர்ந்து சமையலறைப் பக்கம் சென்றாள்.

 

ஜீவன் புனிதாவை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. காரணம்… அவள் அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவே இல்லை. முன்பு போல் அவளை பார்த்ததும் கோபமோ… வெறுப்போ… ஏமார்ந்துவிட்டோம் என்கிற தன்னிரக்கமோ… அவனுக்குத் தோன்றவில்லை. இன்னும்  அழுத்தி சொல்ல வேண்டும் என்றால்… அவள் தொடர்பான அத்தனை உணர்வுகளும், அவன் மனதில் புதைந்து… செத்து… மடித்து… உரமாகி… அதில் பவித்ராவின் மீதான காதல் செழித்து வளர்ந்துவிட்டது.

 

ஆனால் அந்த விஷயம் புரியாத பவித்ரா, அவர்களுடைய சந்திப்பை நினைத்து பயந்தாள். ஊரிலிருந்து வந்ததிலிருந்து அவன் தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட ஆசையாக பேசவில்லை என்பது அவள் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது… அந்த நேரம் பார்த்து அவன் புனிதாவிடம் நலம் விசாரித்துவிட்டான். அவள் உள்ளம் உளைக்கலமாகக் கொதித்தது…

 

நம்மை ஒரு வார்த்தை நலம் விசாரிக்கவில்லை… இவளிடம் மட்டும் எவ்வளவு அக்கறை என்று மருகினாள். புனிதாவை பார்க்காதவரை அவளிடம் அன்பாக நடந்துக் கொண்டவன்… இனி எப்படி நடந்துக் கொள்வானோ… என்கிற கலக்கம் அவளை சூழ்ந்துக் கொண்டது.

 

‘முதல் நாளே வந்துவிட்டாளே…! பாவி…!’ அந்த புனிதாவின் மீது பயங்கரக் கோபம் வந்தது… அவள் முகத்தை கூட பார்க்கப் பிடிக்காமல் வேலை செய்வது போல் பாவனை செய்து கொண்டு சமையலறையிலேயே நின்றாள்.

 

பவித்ராவுக்கு பழைய விஷயங்கள் எல்லாம் தெரியும் என்கிற உண்மை தெரியாமல், அவளுடைய மனநிலைப் புரியாமல் புனிதா எதார்த்தமாக உள்ளே வந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். ஆனால் பவித்ரா அவளிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் முகத்தை பார்க்காமல் பதில் சொல்லிவிட்டு வேலையில் கவனமாக இருந்தாள்.

 

தன்னிடம் பேசுவதற்கு பவித்ரா ஆர்வம் காட்டவில்லை என்றதும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இவள் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்கிற குழப்பத்துடன் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள். பாட்டி உள் அறையில் படுத்துவிட… மாமியாரும் கணவனும் ஜீவனோடு பேசுவதில் பிஸியாக இருக்க… அவர்களோடு  கலந்துகொள்ளவும் முடியாமல்… நீண்ட நேரம் தனியாக இருக்கவும் முடியாமல் முள்மேல் நிற்ப்பது போல் அமர்ந்திருந்தாள் புனிதா.

 

சிறிது நேரத்தில் அவளுடைய சோர்வான முகத்தை கவனித்துவிட்ட பிரகாஷ் விபரம் கேட்டான். தலைவலி என்றும் சிறிது நேரம் உறங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் சொன்னாள். உடனே அவன் மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

 

பிரகாஷ் கிளம்பிய சிறிது நேரத்தில் ஜீவன் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். அவன் உறங்குகிறான் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால் அலைபாயும் அவன் மனம் அவனை உறங்கவிடவில்லை.
Comments are closed here.

error: Content is protected !!