விடிவெள்ளி – 38
3367
2
அத்தியாயம் – 38
மாலை ஐந்து மணி…. நீண்ட நேரம் சிந்தனைகளின் பிடியில் சிக்கிக் கொண்டு தவித்தவன் அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். தான் யார்…? தற்போது எங்கிருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்த நிலையில் நித்திரையில் மூழ்கியிருந்தவனை யாரோ தோள்தொட்டு உலுக்கி எழுப்பினார்கள். தூக்கக் கலக்கத்தில் மூண்ட எரிச்சலில் தன் தோளில் படிந்திருந்த கையை பட்டென்று தட்டிவிட்டபடி “ஏய்… என்ன வேணும்…?” என்று சுள்ளென்று பாய்ந்தான்.
அவன் எழுந்து அமர்ந்த வேகமும்… அவன் குரலில் இருந்த கோபமும் பவித்ராவை அதிரச் செய்தது. பிறகுதான் அவன் தன்னிலைக்கு வந்தான். மனைவியின் அதிர்ந்த முகத்தைக் கண்டு… ‘ஐயோ பவி நீயா…!’ என்று நினைத்து… கடுப்படித்துவிட்டோமே என்கிற வருத்தத்தில் தலையை கோதியபடி “ச்ச…” என்றான் வாய்விட்டு.
‘என்னை பார்த்தாலே எங்கிருந்துதான் இவ்வளவு கோபம் வருமோ…! எல்லோரிடமும் சிரித்துப் பேசத் தெரிகிறது… அந்த புனிதாவிடம் கூட பல்லைக் காட்ட தெரிகிறது… என்னைக் கண்டால் மட்டும்… அப்படியே சீற்றம் பொங்கும்…’ அவளால் அவனுடைய கோபத்தைத் தாங்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ முறை காயம்படும் அளவிற்குக் கூட அடித்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் புண்படாத அவள் மனம் இன்று ஏனோ வெகுவாக காயப்பட்டது. கூடவே ரோஷமும் வந்தது…
“நானா ஒண்ணும் உங்களை எழுப்பல… உங்களை பார்க்க உங்க பிரண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க… அதனால உங்க அம்மா தான் எழுப்ப சொன்னாங்க… அவங்க சொன்னதை நான் செஞ்சேன்… அவ்வளோதான்…” என்று படபடவென்று பொரிந்துவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
“அதானே…! நீயா எதுக்கு என்னை எழுப்ப போற…? என்னை பார்த்தாலே உன் முகம் போற போக்கை பார்த்தா உன் நினைப்பு என்னன்னு எனக்கு தெரியாதா…!” அவன் எரிச்சலுடன் நினைத்தான். அவனுடைய கோபம் அதிகமானது… இறுகிய முகத்துடன் எழுந்து குட்டிக் குளியல் போட்டுவிட்டு வெளியே வந்தான். ஆட்டோ ஸ்டாண்ட் நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் அவனுடைய இறுக்கம் தளர்ந்தது.
“டேய் மச்சான்… வாடா மாப்ள… டேய் ராஜா… எப்படிடா இருக்கீங்க…? எங்கடா துரையை மட்டும் காணும்…?” என்று கூட்டமாக வந்திருந்த நண்பர்களை கட்டி அனைத்து மகிழ்சியாக கூச்சலிட்டு வரவேற்று நலம் விசாரித்தான்.
“மாப்ள… மச்சி… ஜீவா…” என்று பலவித குரல்கள் எதிரொலிக்க… அங்கே சிரிப்பு சத்தமும் மகிழ்ச்சி கூக்குரல்களும் வீட்டை நிறைத்தன. அவர்களுடைய ஆர்பரிப்பில் வீடே கலகலப்பானது.
“பவி… எல்லோருக்கும் காபி கொண்டுவா…” ஜீவன் சற்று முன் நடந்த சம்பவத்தை மறந்துவிட்டு மனைவியை உற்சாகமாக அழைத்தான்.
அவள் காபி ட்ரேயுடன் ஹாலுக்கு வந்தாள். ‘இவர்களுடைய பழக்கம் தொடர்ந்தால் மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிடுவானே…! என்கிற பயமும் குழப்பமும் அவள் மனதில் சூழ்ந்திருந்தது. அதை முகத்தில் காட்டாது கவனமாக மறைத்துக் கொண்டு அனைவருக்கும் காபியை விநியோகித்தாள்.
“வாடா மாப்ள… அப்படியே வெளியே ஒரு ரௌண்ட் போயிட்டு வருவோம்…” வந்திருந்தவர்களில் ஒருவன் ஜீவனைப் பார்த்துச் சொன்னான்.
“இல்ல இல்ல… அவர் ரெஸ்ட் எடுக்கணும்… இன்னிக்கி தானே வந்திருக்கார்…” பவித்ரா ஜீவனை முந்திக் கொண்டு பேசினாள்.
பவித்ராவின் கண்டிப்பான பேச்சில் ஜீவனை வெளியே அழைத்தவனின் முகம் செத்துவிட்டது. தர்மசங்கடமாக உணர்ந்த ஜீவன் மனைவியின் துடுக்கான பேச்சை எண்ணி உள்ளுக்குள் எரிச்சலானான். ஆனாலும் அவளை நண்பர்களுக்கு முன் விட்டுக் கொடுக்க முடியாமல் “ஆமாட மச்சான்… ரொம்ப அலுப்பா இருக்கு… நாளைக்கு காலையில ஸ்டாண்டுக்கு வர்றேன்…” என்றான் சமாதானமாக.
அதன் பிறகு அந்த சூழ்நிலை கொஞ்சம் இறுக்கமானது. ஏனோ எல்லோருடைய உற்சாகமும் சற்று மட்டுப்பட்டது.
“சரிடா மாப்ள… நாங்க கெளம்புறோம்… நீ காலையில வா…” என்றபடி காபியை குடித்து முடித்தவுடன் வந்திருந்த பட்டாளம் கிளம்பியது.
“ஒரு நிமிஷம்டா…” என்று உள்ளே சென்ற ஜீவன் மீண்டும் ஹாலுக்கு வரும் பொழுது வாட்ச், சென்ட், போன்ற சில பொருட்களுடன் வந்தான். நண்பர்களுக்காக வாங்கி வந்திருந்த சிறிசிறு பரிசுப் பொருட்களை கொடுத்து அவர்களை வழியனுப்பினான்.
அவர்கள் கிளம்பியதும் பவித்ராவிடம் திரும்பி “வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இப்படித்தான் நடந்துக்குவியா…?” என்று கோபமாகக் கேட்டான்.
“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்…? வந்தன்னிக்கே அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு போயிடனுமா…?”
“போனா என்ன…? அங்க போனாலாவது கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்துட்டு வருவேன்… இங்க உட்கார்ந்து என்ன செய்ய சொல்ற…?” என்று குரலில் சுருதி கூட்டி கத்தியவன் ‘இவளும் சிரிச்சு பேசமாட்டா… பேசுரவனுங்களையும் விடமாட்டா…’ என்று முணுமுணுத்தான்.
‘இங்க உட்கார்ந்து என்ன செய்றதா…! என்னை பார்த்தா மனுஷியா தெரியலையா…? என்கிட்டே பேசுறதுக்கு எதுவுமே இல்லையா…?’ பவித்ராவிற்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் முதல் நாளே அதிகமாக பேசி வம்பை விலை கொடுத்த வாங்க வேண்டாம் என்று எண்ணி தன்னை அடக்கிக் கொண்டாள்.
அவள் அமைதியாகிவிட்டதும் இவனும் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான். இளையவர்களின் வாக்குவாதத்தை கவனித்தாலும் அதில் தலையிடாமல் “என்ன ஆச்சு இதுகளுக்கு…? என்னவோ சரியில்லாதது மாதிரி இருக்கே…!’ என்று நினைத்து பாட்டியும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்போது ஜீவன் ஒரு பையை கொண்டு வந்து தாயிடம் கொடுத்து,
“ம்மா… இதுல கொஞ்சம் திங்க்ஸ் இருக்கு… யார் யாருக்குன்னு பார்த்து கொடுத்துடு…” என்றான்.
“என்ன இருக்கு…?” என்று கேட்டபடி சிவகாமி அந்த பையை வாங்கி பிரித்துப் பார்த்தாள். நிறைய பொருட்கள் இருந்தது… ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து ரசித்தாள். ஒவ்வொரு பொருளையும் யாருக்காக வாங்கினான் என்று கேட்டு தெரிந்து கொண்டாள்.
பாட்டி, சிவகாமி, பிரகாஷ் என்று எல்லோருக்கும் விதவிதமாக ஏகப்பட்ட பொருட்கள் அந்த பையிலிருந்து வெளிப்பட்டது. ஆனால் பவித்ராவிற்கு மட்டும் அதில் எதுவுமே இல்லை…
ஏமாற்றத்தில் அவள் மனம் வெந்தது… கேபத்தில் மேல்மூச்சு வாங்கியது… ‘ஆட்டோகாரன்லேருந்து வயசான பாட்டி வரைக்கும் எல்லோருக்கும் கிஃப்ட் வாங்கத் தெரியுது… ஆனா தாலிக்கட்டின மனைவி நான்… எனக்கு ஒரு சின்ன கர்ச்சிப் கூட வாங்கனூன்னு தோனல… அதெல்லாம் எப்படி தோணும்… புனிதா மாதிரி எவளாவது மனைவியா வந்திருந்தா தோணும்… என்னையெல்லாம் மதிக்கத் தோணுமா…!’ கண்ணைக் கரித்தது. அழுதுவிடக் கூடாது என்கிற பிடிவாதத்தில் தண்ணீரைக் குடித்து அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு முகம் அலம்பிவிட்டு வந்தாள்.
‘ச்ச… இப்படியெல்லாம் யோசிக்கக் கூடாது… நம்மை எவ்வளவு கஷ்ட்டப்பட்டு படிக்க வச்சான்…’ என்று மனதை சமாதானம் செய்துகொள்ள முயன்றாள். ஆனால் அடுத்த கணமே அவள் எண்ணங்கள் திசை மாறின…
‘மனைவி படிச்சவளா இருக்கணும் என்கிற அவனுடைய ஆசையை நிறைவேற்றிக்க கஷ்ட்டப்பட்டு படிக்க வச்சுட்டான்… மற்றபடி நம்மை பற்றியும் நம் மனதைப் பற்றியும் அவன் என்றைக்கு சிந்திச்சிருக்கான்…!’ கண்மண் தெரியாத ஆத்திரம் அவள் மூளையை மழுங்கச் செய்தது.
அதன் பிறகு அவள் முகத்தில் சிரிப்பென்பது மருந்துக்கும் இல்லை… அவளை கவனித்துக் கொண்டிருந்த ஜீவன்… ‘எப்படி உர்ருன்னு இருக்கா பாரு…! இவளுக்காக தண்ணியிலா தேசத்துல கெடந்து கஷ்ட்டப்பட்டுட்டு வந்திருக்கேன்… அந்த நெனப்பு கொஞ்சமாவது இருக்கா… பொம்மை மாதிரி ஏசி ரூம்ல உட்கர்ந்து வேலை பார்த்துட்டு அலுங்காம வருவேன்னு நெனச்சிருப்பா போல… அறிவுக்கெட்டவ…’ மனைவியை முறைத்துப் பார்த்துப் பல்லைக் கடித்தான்.
பாட்டியும் சிவகாமியும்தான் இருவரிடமும் மாற்றி மாற்றிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் ஈகோவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு திரிந்தார்கள். அதனால் அவர்களுக்கு தனிமைக் கொடுக்க விரும்பிய சிவகாமி அன்று இரவே வீட்டிற்கு கிளம்பிவிட, பேரனின் மனைவியை அவனிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்ட திருப்தியில் பாட்டியும் மகளோடு புறப்பட்டுவிட்டார்கள்.
சிவகாமியும் பாட்டியும் கிளம்பிவிட்ட பிறகு வீடு அமைதியாக இருந்தது. பவித்ரா பால்கனியில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்தபடி சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜீவன் ஹாலில் அமர்ந்து பக்கவாட்டில் திரும்பியிருக்கும் அவள் முகத்தை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான். இருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
‘கப்பல் கவிழ்ந்து போன மாதிரி கன்னத்துல கைவச்சுகிட்டு உட்கார்ந்திருக்கா பாரு… ராட்ச்சசி… ஊரிலிருந்து வந்தவன்கிட்ட ஒரு வார்த்தை ஆசையா பேசனும்ன்னு தோணுதா… எதிரியை பார்க்கறமாதிரி முறைச்சு பார்க்க வேண்டியது… இல்லைன்னா முகத்தை திருப்பிக்கிட்டு போக வேண்டியது… உன்னையெல்லாம் நாலு சாத்து சாத்தனும்டி…’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தான்.
பவித்ரா அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை… ஜீவன் பொறுமையிழந்து ஒரு டி-ஷர்டை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான். கேட் திறக்கும் சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். கணவன் தன்னிடம் சொல்லாமல் எங்கோ வெளியே கிளம்புவதை கண்டு “எங்க கிளம்புறிங்க இந்த நேரத்துல…?” என்று அனிச்சையாக கேள்வி கேட்டாள்.
அவன் அவளை நின்று நிதானமாக ஒரு பார்வை பார்த்தான். ஆனால் அவளுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. திறந்த கேட்டை அடித்து சாத்திவிட்டு வேக நடையுடன் வெளியேறினான்.
‘இவ்வளவு நேரம் தனியா உட்கார்ந்திருந்தேன்… என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்கல… வெளியே கிளம்பினதும் வந்துட்டா… எங்க போறிங்கன்னு கேக்க… படிச்ச திமிர்… அழகா இருக்கோன்ற கர்வம்…’ கோபத்தில் கண்டபடி சிந்தனைகளை படரவிட்டான். மனம் கனத்துப் போனது… வேதனையுடன் வீதியில் இறங்கி நடந்தான்.
அவன் கேட்டை அடித்து சாத்தியது பவித்ராவிற்கு முகத்தில் அரை வாங்கியது போல் இருந்தது… ‘எப்படி நடந்துக்கறான்…! என்கிட்ட மட்டும்தான் சிடுசிடுப்பெல்லாம்… இதுவே அந்த புனிதா கேட்டிருந்தா மட்டும் பல்லை இளிச்சுக்கிட்டு பதில் சொல்லியிருப்பான்… அவளை விட எந்த விதத்துல நான் குறைஞ்சு போயிட்டேன். ஊருக்கு போகும் போது எப்படி உருகி உருகிப் பேசினான்… இப்போ இப்படி தலைகீழா மாறிட்டானே…! என்னை எப்படி இவனுக்குப் பிடிக்காமல் போகலாம்… அதெல்லாம் முடியாது… இவனுக்கு ஏதோ கிறுக்குத்தான் பிடித்திருக்கிறது… புனிதா கிறுக்கு… கடவுளே…! கடவுளே…!’ தலையில் அடித்துக் கொண்டாள். புனிதாவைப் பற்றிய தேவையில்லாத சிந்தனைகளால் அடக்க முடியாமல் அழுகை பீறிட்டது. தரையில் சரிந்து அமர்ந்து விம்மி அழுதாள். சூழ்நிலையை மறந்து கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தவள் கதவை தாளிட வேண்டும் என்பதைக் கூட மறந்து அப்படியே உறங்கிவிட்டாள்.
ஜீவன் மீண்டும் வீட்டுக்கு வரும் பொழுது நேரம் நள்ளிரவை தொட்டுவிட்டது. கதவு முழுவதும் மூடப்படாமல் பாதி திறந்த நிலையிலேயே இருந்தது. இவன் வெளியே போகும் பொழுது அடித்து சாத்திய வேகத்தில் நிலைவாசலில் மோதி மீண்டும் திறந்து கொண்ட கதவு அப்படியே இருப்பதை புரிந்து கொண்டான்.
‘கதவைக் கூட தாள் போடாமல் என்ன செய்றா இந்த நேரத்துல…’ சிறு எரிச்சலுடன் உள்ளே வந்தான்.
சுவற்றை ஒட்டி… வெறும் தரையில்… கைகால்களை குறுக்கிக் கொண்டு அவள் படுத்திருந்த விதம் அவன் மனதை தொட்டது. ‘படுத்த இடத்திலேயே தூக்கம்…’ என்று கடிந்து கொண்டு அவளிடம் நெருங்கினான். அவள் முகம் சிவந்து வீங்கியிருந்தது. கண்ணீர் தடங்கள் கூட தெரிந்தது. அழுதிருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டான்.
தன்னுடைய கோபம் அவளை பாதிக்கிறது என்பது அவனுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது… சிரிப்பு கூட வந்து… ‘ஒரு முறைப்பு முறைத்ததற்கே இவ்வளவு அழுகையா…!’ என்று எண்ணியபடி அவளுக்கு அருகில் அமர்ந்து முகத்தில் படிந்திருந்த முடியை ஒதுக்கிவிட்டான். ‘காலையிலிருந்து பேசமாட்டேன்… சிரிக்க மாட்டேன்னு… பாடாபடுத்தி என்னை கொல்லாம கொன்னுட்டு இப்போ ஒண்ணும் தெரியாத குழந்தை மாதிரி தூங்கரதைப் பாரு…! சரியான அரக்கிடி நீ… என்னை ஒரு வழிப் பண்ணாம விடமாட்டன்னு நினைக்கிறேன்…!’ செல்லமாகத் திட்டினான்.
அவள் முகத்தை பார்த்தபடி அவளிடம் பேசுவதாக நினைத்துக் கொண்டு தனக்குத் தானே நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அவள் தரையில் குறுகிப் படுத்திருப்பது உறுத்தியது. எழுந்து சென்று படுக்கையறையில் மின்விசிறிக்கு கீழே பாய் விரித்து… தலையணை போர்வை எல்லாம் ஒழுங்குப் படுத்திவிட்டு வந்தான்.
‘இவளை எப்படி அங்கு கொண்டு செல்வது…! எழுப்பலாமா…?’ என்று யோசித்தான். ஆனால் ஆசை விடவில்லை… விழித்துவிடுவாளோ என்கிற பயம் வந்தது…. விழித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்கிற தைரியமும் கூடவே பிறந்தது…
‘ஹும்… தாலி கட்டின மனைவியை தூக்க எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு… இந்த அளவுக்கா நம்மை பயமுறுத்தி வச்சிருக்கா…! ஜீவா… எப்படி இருந்த நீ இப்படி மாறிட்டியேடா…’ என்று தன்னைத் தானே கிண்டலடித்துக் கொண்டு கீழே குனிந்து அவளை பூமாலை போல் இரு கரங்களிலும் ஏந்தினான்.
பஞ்சு பொதி போன்ற அவள் மேனியை சுமக்கும் பொழுது இவன் உடல் சிலிர்த்தது… இதயம் வேகமாக துடித்தது… வெகு அருகில் தெரியும் அவள் அழகிய ஆப்பிள் முகம் அவன் மனதில் ஏதேதோ ஆசைகளைத் தூண்ட… கட்டுப்பாடிழந்து கன்னத்தில் இதழ் பதித்துவிட்டான்…
கன்னத்தில் ஏதோ ஊர்வது போல் தோன்ற அவள் கையால் அந்த இடத்தை துடைத்துவிட்டு புரண்டு படுக்க முயன்றாள். எதிலோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு அவளை புரளவிடாமல் தடுக்க கண்விழித்தாள். ஜீவனின் முகம் வெகு அருகில் தெரிந்தது… கனவோ என்கிற எண்ணத்தில் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தாள். நிஜம்தான்…! என்ன ஏது என்று யோசிப்பதற்குள் பதட்டம் பற்றிக்கொள்ள துள்ளிக் குதித்து அவனிடமிருந்து விலகி நின்றாள்.
அவள் விழித்துவிட்டது அவனுக்கும் சங்கடமாகிவிட்டது… அதிலும் ஏதோ தொடக் கூடாதவன் தொட்டுவிட்டது போல் அவள் பதறி விலகியது சற்று எரிச்சலாகக் கூட இருந்தது…
‘கதவைக் கூட பூட்டாமல் அப்படி என்ன படுத்த இடத்திலேயே தூக்கம்… போ… ரூம்ல பாய் போட்டிருக்கேன்… அங்க போய் தூங்கு…” என்று தன்னுடைய மனஉணர்வுகளை மறைக்க அவளை அதட்டினான்.
இங்கே இப்போ என்ன நடந்தது…! என்கிற குழப்பமும்… தூக்கக் கலக்கமுமாக நின்றவளுக்கு எதுவுமே புரியவில்லை… அவனைப் பார்த்து திருதிருவென விழித்தாள்.
அந்த பார்வைக் கூட அவனை சோதித்தது… “என்ன அப்படியே நிக்கற… நின்னுகிட்டே தூங்கப் போறியா…? உள்ள போய் படு…” என்றான் மீண்டும். கோபமாக பேச வேண்டும் என்று அவன் நினைத்தாலும் குரல் குழைந்தது…
அவள் பதில் பேசாமல் படுக்கையறைக்குள் நுழைந்தாள். அவள் அந்த பக்கம் சென்றதும் தான் இங்கு இவனுக்கு இயல்பாக மூச்சுவிட முடிந்தது… “ஹப்பாடா…” என்று எதையோ சாதித்துவிட்டவன் போல நிம்மதிப் பெருமூச்சு விட்டான்… அவனை வெறுத்து எதுவும் பேசிவிடுவாளோ என்கிற பயம் தான் அவனுடைய படபடப்பிற்குக் காரணம்…
மதியம் ஒரு முறை உறங்கிவிட்டதாலும்… சற்று முன் நடந்த மனப் போராட்டங்களாலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை… சிந்தனைகளுடன் விழித்துக் கிடந்தான்… இதே நிலையில் அவனால் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாது என்று தோன்றியது… அதே சமையம் அவளுடைய விருப்பத்தை புறக்கனுக்கவும் முடியாது… ஆனால் அவளை விட்டுக் கொடுக்கவும் முடியாது… என்ன முடிவெடுப்பது என்று புரியவில்லை… எதுவாக இருந்தாலும் நாளைக்கு மனம்விட்டு அவளிடம் பேசிவிட வேண்டும் என்கிற முடிவிற்கு வந்த பிறகு தான் கண்ணயர்ந்தான்…
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Saravana Kumari says:
Jeevanam pavi kadhal unarvugal arumaii, seekaram love propose panni romance start pannunga pa …. Antha punitha poramai padra alavuku irukanum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Rendu perum pasatha vachikitu ipdi irukangale…..