Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி -39

அத்தியாயம் – 39

அன்று காலை எழுந்ததிலிருந்து பவித்ராவிற்கு ஒரே குழப்பம்… ‘நைட் என்ன நடந்தது…? அவன் எதுக்கு நம்மை தூக்கி வச்சிருந்தான்…! அப்புறம் எதுக்கு ஏதோ திட்டுற மாதிரி பேசினான்…? தூக்கத்துல ஏதாவது உளறிட்டோமோ…! என்ன நடந்திருக்கும்…!’ அவள் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாக சப்பாத்தியை தேய்த்து தோசைக்கல்லில் போட்டாள். ஹாலில் ஜீவனுடைய கைபேசி குரல் கொடுத்தது… அவன் எடுப்பான் என்கிற நினைவில் இவள் சப்பாத்தியை திருப்பிப் போட்டபடி இரவு என்ன நடந்திருக்கும் என்கிற சிந்தனையில் தீவிரமானாள்.

 

கைபேசி ஒரு முறை அடித்து ஓய்ந்து மீண்டும் அலறியது. இவள் சமையலறையிலிருந்து ஹாலை எட்டிப் பார்த்தாள். பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த ஜீவனை காணவில்லை. குளிக்கப் போய்விட்டான் போலும் என்று எண்ணியபடி வேகமாக வந்து கைபேசியை எடுத்து காதுக்குக் கொடுத்து “ஹலோ…” என்றாள்.

 

“ஹலோ… நான் துரை பேசுறேம்மா…”

 

“சொல்லுங்கண்ணா…”

 

“அவன் எங்கம்மா…? போனை அவன்கிட்ட குடு…”

 

“அவர் குளிக்கறார்…. என்னன்னு என்கிட்ட சொல்லுங்கண்ணா…” அண்ணா என்று அழைத்தாலும் என் கணவனை எதற்கு அழைத்தாய் என்று என்னிடமே சொல் என்று கட்டளையிட்டது அவள் குரல்.

 

“ஒண்ணும் இல்லம்மா… ஜீவன் இன்னிக்கு ஸ்டாண்டுக்கு வருவான்னு பசங்க சொன்னாங்க…. அவன் வந்தான்னா சவாரி லோக்கல்ல தான் போவேன்… வெளியே போகமாட்டேன். அதான் வர்றானான்னு கேக்கலான்னு போன் பண்ணினேன்”

 

“அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கறதா சொல்லிக்கிட்டு இருந்தாருண்ணா… ஸ்டாண்டுக்கு வர மாட்டார்ன்னு நினைக்கிறேன். நீங்க அவருக்காக வெயிட் பண்ணாம சவாரி வந்தா கிளம்புங்க…”

 

அவர் வர மாட்டார்… நீ உன் வேலையை பார் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாள். துரை என்னதான் ஜீவனுக்கு பிடித்தமான நண்பனாக இருந்தாலும்… சிறு வயதிலிருந்து இவன் கெட்டுப் போவதற்கு முக்கியக் காரணமாக அவன் இருந்திருக்கிறான் என்பதை பவித்ரா புரிந்து வைத்திருந்ததால் அவனிடம் கறாராக பேசினாள்.

 

“ஓ… சரிம்மா…” துரையின் குரல் சோர்ந்துவிட்டது.

 

‘வந்துட்டானுங்க… நல்லா இருக்கறவரை கெடுக்கறதுக்குன்னே போன் பண்ணி கூப்பிடுவானுங்க போல…’ என்கிற முணுமுணுப்புடன் பவித்ரா போனை அணைத்துவிட்டு திரும்பும் பொழுது ஈரத்தலையுடன் இவளை உருத்து விழித்தபடியே ஜீவன் படுக்கையறை வாசலில் நின்றான்.

 

ஒரு நொடி அவளுக்கு தூக்கிவாரி போட்டுவிட்டது… ‘இவன் எதுக்கு இப்போ மதுரை வீரன் மாதிரி முறைச்சுகிட்டு நிக்கறான்… போன்ல பேசுனதை கேட்டுட்டானோ…!’ மனதிற்குள் மூண்ட சந்தேகத்தை வெளியே சொல்லாமல் அவனை கடந்து சமையலறைக்குள் செல்ல எத்தனித்தாள்.

 

“போன்ல யாரு…?” அவனுடைய குரல் அவளை தடுத்தது.

 

“உங்க ஃப்ரண்ட் துரை…”

 

“என்ன கேட்டான்…?”

 

“அது… வந்து… நீங்க இல்லையான்னு கேட்டார்…”

 

“அவ்வளவுதானா…?”

 

“……………………..”

 

“உன்கிட்ட எனக்கு வேலையிருக்குன்னு நான் சொன்னேனா…?” அவன் அவளை கூர்மையாகப் பார்த்துக் கேட்டான்.

 

அவள் பதில் சொல்லவில்லை. தவறு செய்துவிட்டவள் போல மெளனமாக நின்றாள். இந்த சூழ்நிலையில் பழைய ஜீவனாக இருந்திருந்தால்… அவன் பேசியிருக்க மாட்டான்…. அவனுடைய கைதான் பேசியிருக்கும். ஆனால் அனுபவம் தந்த பொறுமையும் நிதானமும் பக்குவமும் அவனிடம் இருந்தது. அதற்கும் மேலாக அவனுக்குள் வியாபித்திருந்த கடலளவு ஆழமான காதல் அவளிடம் கோபத்தைக் காட்டவிடாமல் தடையாக நின்றது.

 

அவன் அவளை ஆழ்ந்து ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்து படுக்கையறைக்குள் நுழைந்து உடை மாற்றி தயாராகி ஹாலுக்கு வந்தான். அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பவித்ரா அவன் வெளியே செல்ல தயாராகியிருக்கிறான் என்பதைப் புரிந்துக் கொண்டு “டிஃபன் எடுத்து வைக்கிறேன்… கை கழுவிட்டு வாங்க…” என்றாள்.

 

“எனக்கு வேண்டாம்…” அவனிடமிருந்து சுருக்கமான பதில் வந்தது.

 

“சாப்பிடாம எங்க கிளம்பிட்டிங்க…? ”

 

“ஸ்டாண்டுக்கு…”

 

“ஸ்டண்டுக்கா…!?” தட்டைக் கொண்டு வந்து ஹாலில் வைத்து பரிமாற்ற ஆரம்பித்த பவித்ராவின் கை வேலைநிறுத்தம் செய்துவிட்டது.

 

“ஆமாம்… ஸ்டாண்டுக்குத்தான் போறேன்…” அவன் அழுத்தமாக பதில் சொன்னான்.

 

“நீங்க அங்க வரமாட்டீங்கன்னு நான் சொல்லிட்டேன்…” என்று படபடத்தாள்.

 

“நான் அங்க வருவேன்னு நேத்தே நானும் சொல்லிட்டேன்….” கோபம் கலந்த நக்கலுடன் சொன்னான்.

 

“இப்படி சொன்னா என்ன அர்த்தம்…?”

 

“நான் ஸ்டாண்டுக்கு போகப் போறேன்னு அர்த்தம்…”

 

“நீங்க அங்க போகக் கூடாது…” உணர்ச்சி வேகத்தில் கட்டளையிடுவது போல் சொன்னாள்.

 

“அதை சொல்ல நீ யார்…?” சுள்ளென்று பொங்கிய கோபத்தில் அவனும் வார்த்தையை விட்டான்.

 

“நான் யார்ன்னு உங்களுக்கு தெரியாதா?” சுருக்கென்று பாய்ந்த வார்த்தை அம்பின் வலியை மனதிலேயே மறைத்துக் கொண்டு கோப முகமூடியுடன் சீற்றமாகக் கேட்டாள்.

 

“தெரியாமல்தான் கேட்கறேன் சொல்லு… யார் நீ…?” அவன் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

 

அவளுடைய கண்கள் கலங்கிவிட்டன. “ஹ… என்னையெல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா…? என் முகத்தை பார்க்கக் கூட பிடிக்காதவர் தானே நீங்க…!” வலி நிறைந்த குரலில் அவள் சொன்னது அவன் மனதை பிசைந்தது.. ஆனால் ‘செய்யுறதையெல்லாம் செஞ்சுட்டு இப்போ என்னவோ நான் தப்பு செஞ்சது மாதிரி என்னை குற்றம் சொல்றாளே…!’ என்கிற எண்ணம் அவனை வருத்தியது.

 

“ஏண்டி இப்படி பண்ற…? உனக்கு என்னதான் ஆச்சு பவி…? நான் ஊருக்கு போகும் போது நல்லாதானே இருந்த…? இப்போ ஏன் இப்படி மாறிட்ட…? எதுக்கெடுத்தாலும் முகத்தை திருப்பற… எப்ப பார்த்தாலும் சிடுசிடுக்கற… வீட்டுக்கு வந்த என்னோட ஃபிரண்ட்ஸ்கிட்ட முகத்துல அடிக்கிறமாதிரி பேசுற… இதெல்லாம் என்ன புது பழக்கம்… ம்ம்ம்ம்?” அவன் அமைதியாக அதே சமயம் அழுத்தமாக… அவள் நடந்துகொள்ளும் விதம் சரியில்லை என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் எண்ணத்தில் பேசினான்.

 

“உங்களோட பழைய பழக்கம் எதுவும் தொடரக் கூடாதுன்னு தான் நான் இந்த புது பழக்கத்தையெல்லாம் பழக வேண்டியிருக்கு…” அவள் புனிதாவை மனதில் கொண்டு இரட்டை அர்த்தத்தில் பேசினாள். அவள் பேசும் தொனியில் இதுநாள் வரை அவன் பவித்ராவிடம் கண்டிடாத பிடிவாதம் இருந்தது. அந்த பிடிவாதம் அவனுடைய பொறுமைக்கு சவால்விட… புனிதாவைப் பற்றிய அவளுடைய உட்குறிப்பை புரிந்துகொள்ளாமல் பழைய நண்பர்களுடன் நெருங்க விடாமல் தடுக்கிறாள் என்கிற நினைவில்,

 

“திருந்தி வாழ்ந்துகிட்டு இருக்கேன் பவித்ரா… என்னை ரொம்ப சோதிக்காத… அப்புறம் நீ பழைய ஜீவனை பார்க்க வேண்டியிருக்கும்… தாங்க மாட்ட…” என்று கோபத்தை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு நிதானமாகவே மிரட்டினான்.

 

அவனுடைய மிரட்டும் தொனி பவித்ராவின் கோபத்தைத் தூண்டியது. அவள் பேச்சை மதிக்கவில்லை… புனிதாவை மறக்கவில்லை… அவளை மனதில் ஏற்கவில்லை… என்று அவளாக கற்பனை செய்து கொண்ட விஷயங்களை ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு அவனை வார்த்தைகளால் சுட்டாள்.

 

“இனிதான் பழைய ஜீவனா மாறனுமா…? அதான் அப்படியே இருக்கிங்களே…!”

 

அவன் புருவங்கள் நெறிந்தன… “நான் மாறவே இல்லைன்னு சொல்றியா…?” உள்ளடக்கிய கோபத்துடன் கேட்டான்.

 

“என்ன மாறியிருக்கிங்க…? குடிக்கறதை மட்டும் நிறுத்திட்டா போதுமா…? மற்றபடி வெளிநாடு போறதுக்கு முன்னாடி எப்படி இருந்திங்களோ அதே மாதிரி தானே இருக்கீங்க…?” அவன் புனிதாவை மறக்கவில்லையோ என்கிற ஆதங்கத்தில் பொரிந்துக் கொட்டினாள்.

 

“ஓஹோ… இந்த நாலு வருஷத்துல நீங்க படிச்ச மேதாவியாயிட்டிங்க… நாங்க அதே பழைய முட்டாள் ஜீவனாவே இருக்கோம்… அதானே…!” அவன் ஒருவித இறுக்கம் நிறைந்த குரலில் கேட்டான்.

 

“முட்டாள்தனமா… சும்மா புரியாம…. கண்டதையும் உளறாதிங்க… நான் என்ன சொல்றேன்… நீங்க என்ன பேசுறீங்க?”  உரையாடலின் தடத்தை மாற்றுகிரானே என்கிற கோபத்தில் அவள் சிடுசிடுத்தாள்.

 

ஆனால் முட்டாள்… புரியாதவன்… உளறல்… என்று அவள் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தும் சம்பட்டியால் அடித்தது போல் அவன் மனதை காயப்படுத்திவிட அவன் முகம் பயங்கரமாக மாறியது. உடலில் உள்ள அத்தனை இரத்தமும் முகத்தில் வந்து பாய்ந்தது போல் குப்பென்று சிவந்துவிட்ட அவன் முகம் உள்ளே கொதிக்கும் அவன் உள்ளத்தை படம்போட்டுக் காட்டியது. வெறுப்பைக் கக்கும் அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தடுமாறினால் பவித்ரா…

 

‘அதிகமா பேசிட்டோமே…!’ என்று அவள் உணர்ந்து “இல்ல… நா…. நான்…. என்ன சொல்றேன்னா…” என்று திக்கித்திக்கி அவள் பேசுவதற்குள் அவன் விறுவிறுவென்று வீட்டைவிட்டு வெளியேறினான்.

 

அவனை மனதார நேசித்த போதும் அவனிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மூன்றாம் மனிஷியாக விலகி நின்று பிரச்சனைகளை கையாண்ட போது வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த பவித்ரா… அவனுடைய காதலை எதிர்பார்க்க ஆரம்பித்ததிலிருந்து உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிவிட்டாள்.

 

அவன் எதிர்பார்த்த படிப்பும் அழகும் நம்மிடம் இப்போது இருக்கிறது… இனியும் அவனுக்கு ஏன் நான் முக்கியமானவளாக இல்லாமல் போனேன் என்கிற ஏமாற்றம் அவள் சிந்தனையை சிதைத்துவிட்டது.

 

புத்திசாலித் தனமாக சிந்தித்து வாழ்க்கையை ஜெயித்துக் கொண்டிருந்த பவித்ரா உணர்ச்சிவசப்படும் முட்டாள் பெண்ணாக மாறிப் போய் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். எதையும் செய்யும் காதல் நோய் வரைந்த கோலம் தான் இதுவும்…
Comments are closed here.