Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 40

அத்தியாயம் – 40

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் குளுமையான காற்றுக் கூட, கொதித்துக் கொண்டிருக்கும் ஜீவனின் மனதை சாந்தப்படுத்த முடியாமல் உஷ்ணமாக மாறியது…

 

‘எப்படி பேசிட்டா…! நான் முட்டாளா…? நான் புரியாத பைத்தியக்காரனா…? என் பேச்சு உளறலா…? இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசும் தைரியம் இவளுக்கு எங்கிருந்து வந்தது…? எப்படி வந்தது…?’ தீப்பிழம்பு போல் கனன்றுக் கொண்டிருக்கும் அவன் மனம் ஆறுதல் அடைய முடியாமல் வெந்து தணிந்தது…

 

‘இவளுக்காத் தானே…! இவளுக்காக மட்டும் தானே எல்லாவற்றையும் மாற்றினேன்…! உறவுகளை விளக்கி… நண்பர்களை தவிர்த்து…. உல்லாசங்களை உதறி… இவள் சிரிக்க வேண்டும் என்பதற்காக மூன்றரை ஆண்டுகள் தனிமைப் பட்டு அழுதேனே…!’

 

‘நல்லதோர் இடத்தில் வசிக்க முடியாமல்… சுவையான உணவு கிடைக்காமல்… தேவைக்கு தண்ணீர் இல்லாமல்… மனம்விட்டு சிரிக்க முடியாமல்… மாற்றானிடம் என்னை அடகு வைத்துவிட்டு அடிமை வாழ்க்கையை வாழ்ந்தேனே…!’

 

‘என் இரவுகளின் உறக்கத்தை தொலைத்துவிட்டு… என் இளமையை பாலைவனத்தில் பலிகொடுத்துவிட்டு உழைத்தேனே…! யாருக்காக…? எதற்காக…?’

 

‘படித்துவிட்டாய்… அழகு சுந்தரியாயிருக்கிறாய்… நான் யார்…? படிக்காத முட்டாள் பயல்… பாலைவனத்தில் கிடந்து காய்ந்து போய் வந்திருக்கும் வெட்டிப்பயல்… என்னை எப்படி உனக்கு மதிக்கத் தோன்றும்…? நீ மதிக்கும் படி என்னிடம் என்ன இருக்கிறது…!’ தாழ்வுமனப்பான்மையில் வெந்து செத்தான்.

 

‘உன் முகத்தை நினைவில் கொண்டு என் துன்பங்களையெல்லாம் விரட்டியடித்தேனேடி… இப்போது நீயே என்னை ஏளனமாக பேசி எனக்கு தீராத துன்பத்தை தேடித் தந்துவிட்டாயே…!’

 

‘உன் மனத்திலும் எனக்கு இடம் இல்லாமல் போய்விட்டதா…! உண்மையான அன்பும் காதலும் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைக்கவே கிடைக்காதா… எல்லாமே பணத்தையும்… பகட்டையும் சுற்றிக் கட்டும் வேஷம் தானா…! எல்லாமே பொய்யா…! நீயும் பொய்யா…! உன்னிடமும் உண்மை இல்லையா…? காதல் இல்லையா…!’ அவன் மனம் அரற்றியது…

 

‘அன்று என்னை பிரியும் போது நீ அழுத அழுகைக்கு என்ன அர்த்தம்…? இன்று நீ காட்டும் அலட்சியத்திற்கு என்ன அர்த்தம்…? அன்று இருந்த எது இன்று என்னிடம் இல்லமால் போனது… அழகா…? அதற்குத்தான் இந்த கோபமா…? அதற்குத்தான் என் மீது இவ்வளவு வெறுப்பா…? இவ்வளவு தானா நீ…! பவி… பவி… என்னை ஏமாத்திட்டியே பவி… உன்னை நம்பி உனக்காக வாழ்ந்த என்னை இப்படி ஏமாத்திட்டியே பவி…’ அவளுடைய அன்புக்காகவும் காதலுக்காகவும் ஏங்கிபைத்தியக்காரனைப் போல் புலம்பினான்.

 

‘இனி யாருக்காக வாழனும்… எதற்காக வாழனும்…’ விரக்தியின் உச்சியில் இருந்தான்.. இன்னொருமுறை அவமானத்தையோ தோல்வியையோ சந்திக்கும் சக்தி அவனிடம் இல்லை…

 

அவன் வாழ்வின் ஆதாரமே பவித்ராதான்… அவளே இவனை வெறுக்கிறாள் என்கிற எண்ணம் வாழ்க்கையின் மீது அவனுக்கு இருந்த பிடிப்பையே அசைத்துப் பார்த்தது. அழுகையை மீறிய துக்கத்தில் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருந்தவன் நிழல் மறைந்து உச்சி வெயில் மண்டையை பிளக்கும் பொழுதுதான் சுற்றத்தை உணர்ந்து எழுந்தான்.

 

அப்போதும் வீட்டுக்கு செல்ல மனமில்லை… நண்பர்களை சந்திக்கவும் பிடிக்கவில்லை… வண்டியை எடுத்துக் கொண்டு அதிவேகமாக சிட்டிக்குள் வந்தான்… பெட்டிக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு டீ குடித்தான். அப்படியே ஒரு தம் அடித்தான்… மனதில் ரணம் சிறிதும் குறையவில்லை… வெட்டியாக ஊரை சுற்றிக் கலைத்து போனவன் கடைசியில்… அமைதியை கைவசப்படுத்தும் எண்ணத்தில் அதற்கான மருந்தை வாங்கிக் கொண்டு தாய் இருக்கும் வீடு நோக்கிச் சென்றான்.

 

பிற்பகல் மூன்று மணி… கணவன் அலுவலகத்திற்கு சென்றுவிட… உறவினர் வீட்டு விழாவிற்கு மாமியார் சென்றுவிட பாட்டியும் புனிதாவும் தான் அன்று வீட்டில் இருந்தார்கள். அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டது… டிவி பார்த்துக் கொண்டிருந்த பாட்டி “யரோ வந்திருக்காங்க… யாருன்னு பாரும்மா…” என்றார்கள்.

 

சமையலறையிலிருந்து வெளிப்பட்டு கதவை திறந்த புனிதா ஜீவன் நின்ற கோலத்தை கண்டு ஒரு நொடி அதிர்ந்தாள்.

 

‘என்ன ஆச்சு இவனுக்கு…? ஏன் இப்படி பேயடிச்ச மாதிரி இருக்கான்…’ என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளை கண்டுகொள்ளாமல் இவன் உள்ளே நுழைந்தான்.

 

இவள் திகைப்பு நீங்காமல் கதவை மூடிவிட்டு அவனை தொடர்ந்து உள்ளே வந்தாள்.

 

“யாரது… ஜீவனா… என்னப்பா தனியா வந்திருக்க… பவித்ரா எங்க…? ஆமாம்… ஏன் ஒரு மாதிரியா இருக்க…? சாப்ட்டியா…?” பாட்டியின் கவனம் டிவியிலிருந்து முற்றிலும் பேரன் பக்கம் திரும்பிவிட்டது.

 

பாட்டிக்கு பதில் சொல்லாமல் மாடிப் படிகளில் ஏறியவன்… பின் தாமதித்து நின்று… பாட்டியை திரும்பிப் பார்த்து “நான் நிம்மதியா தூங்கனும்… என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது…” என்று சொல்லிவிட்டு மீண்டும் படியேறினான்.

 

“என்ன ஆச்சு இந்த பயலுக்கு…? நேத்துதான் ஊரில் இருந்து வந்தான்… அதுக்குள்ள பொண்டாட்டிய அங்க விட்டுட்டு இங்க வந்து நிக்கிறான்…” பாட்டு முணுமுணுத்துவிட்டு மீண்டும் டிவியில் கவனமானார்கள்.

 

பால்கனியில் அமர்ந்து நொடிக்கொரு தரம் சாலையின் இரு புறமும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் மனம் திக்திக்கென்று இருந்தது… காலையில் சண்டைப் போட்டுக் கொண்டு வெளியே சென்ற கணவன்  இன்னும் வீடு திரும்பவில்லையே என்கிற பயத்தில் நிலைகொள்ளாமல் தவித்தாள்.

 

‘ஒரு வார்த்தை சொன்னதற்கு இவ்வளவு கோபமா…? காலையிலேயும் சாப்பிடல… மத்தியமும் சாப்பிட வரல… அப்படி எங்கத்தான் போயிருப்பான்…! இன்னும் காணமே…!’ அவள் கவலை அதிகமானது….

 

ஆனால் அடுத்த கணமே கோபமாக நினைத்தாள். ‘அந்த ஆட்டோ ஸ்டாண்டை விட்டா வேறு எங்க போயிருப்பான்… வரும்போது வரட்டும் நாம எதுக்கு இவ்வளவு கவலைப்படணும்…’ என்று மனதை தேற்றிக்கொள்ள முயன்றாள். வெற்றி கிடைக்கவில்லை… பசியோடு போய்விட்டானே என்கிற எண்ணத்தில் உருகினாள்.

 

‘இப்ச்… சாப்பிட்டதுக்கு பிறகாவது பேசியிருக்கலாம்… கொஞ்சம் பொறுமையாக் கூட எடுத்து சொல்லியிருக்கலாம்…’ வருத்தத்துடன் காலை நடந்த பிரச்னையை நினைத்துப் பார்த்தாள்.

 

கொஞ்சம் அதிகமாகக் கோபப்பட்டுவிட்டோம் என்று குற்றவுணர்வுடன் நினைத்தாள். ஆனால் ‘அவனுக்கும் நம் மீது கொஞ்சமாவது அன்பு இருக்க வேண்டாமா…? அவனுக்காகத் தானே நான் ஒவ்வொன்றையும் யோசிக்கிறேன்… அவன் என்னை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டாமா…! எப்போ பார்த்தாலும் மட்டம் தட்டிக் கொண்டே இருந்தால் நானும் எவ்வளவு நாள் தான் பொறுத்துப் போக முடியும்…’ என்கிற சிந்தனை அவளுடைய குற்ற உணர்வை குறைத்தது…

 

சிந்தனைகளுடன் அவள் அமர்ந்திருந்த போது வாசலில் ஹாரனுடன் யாரோ வண்டியை நிறுத்தும் சத்தம் கேட்டது. ஜீவன் தான் வந்துவிட்டானோ என்கிற ஆர்வத்தில் எட்டிப்பார்த்தாள். இல்லை… கீழ்வீட்டிற்கு அடிக்கடி வரும் ஒரு எல்ஐசி ஆசாமிதான் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தார்.

 

பவித்ராவிடமிருந்து ஏமாற்றம் கலந்த ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. கைபேசியை எடுத்து நேரம் பார்த்தாள். நேரம் மாலை ஐந்து என்று காட்டியது… அவளுடைய பதற்றம் அதிகமானது… காலையிலிருந்து தொண்ணுற்றி ஒன்பதாவது முறையாக அவனை கைபேசியில் தொடர்புகொள்ள முயன்றாள்.

 

‘நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் எண் தற்பொழுது அனைத்து வைக்கப்பட்டுள்ளது… சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்…’ என்கிற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் அவளை வெறுப்பேற்றியது.

 

‘ச்ச… போனைக் கூட ஆஃப் பண்ணி வச்சுட்டு எங்க போய் தொலஞ்சான்…!’ எரிச்சலுடன் நினைத்தவள், மேலும் ஒருமணிநேர காத்திருப்பிற்கு பிறகு பதட்டத்துடன் நகங்களை கடித்துத் துப்ப ஆரம்பித்தாள்.

 

மாலை ஆறு மணி… ஏழு மணி… எட்டு மணி… நேரம் மட்டும் தான் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர அவனிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை… ஒன்பது மணியாகியும் அவன் வரவில்லை என்றதும்… இரவு எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று நம்பிக் கொண்டிருந்தவளின் நம்பிக்கை ஆட்டம் காண ஆரம்பித்தது. ‘சரி… துரைக்கு போன் செய்து பார்த்துவிடலாம்…’ என்று எண்ணி அவனுடைய எண்ணிற்கு அழைத்தாள்.

 

“அண்ணா… நான் பவித்ரா…”

 

“சொல்லும்மா…”

 

“அவர் அங்க இருக்காரா…?”

 

“யாரைம்மா கேக்கற? ஜீவனையா…?”

 

“ம்ம்ம்….”

 

“அவனுக்கு தான் காலையிலேயே வேலையிருக்குன்னு சொன்னான்னு சொன்னியேம்மா… அவன் இங்க வரவே இல்லையே…!”

 

அவளுக்கு பகீரென்றது… ‘காலையிலிருந்தே வரலையா…? அப்புறம் எங்க போயிருப்பான்…! ‘ பயத்தில் குப்பென்று வியர்த்தது…

 

“என்னண்ணா சொல்றிங்க…? அங்க வரவே இல்லையா…?”

 

“இல்லையேம்மா… எங்க போறேன்னு ஏதாவது சொல்லிட்டு போனானா…?”

 

“…………….” பதில் பேசத் தோன்றாமல் சிலை போல் நின்றாள்.

 

“ஹலோ…. ஹலோ… பவித்ரா…”

 

“ஆங்…. சொல்லுங்கண்ணா…”

 

“என்ன ஆச்சும்மா…? எதாவது பிரச்சனையா…?”

 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணா… வெளியே போறேன்னு சொல்லிட்டு போனார்… இன்னும் காணமேன்னு கேட்டேன்… நான் அப்புறம் பேசுறேண்ணா…” என்று சொல்லி அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

 

அவர்களுடைய உரையாடல் முடிந்துவிட்டது. பவித்ராவின் தவிப்பு அதிகமானது. ‘ஐயோ… உழைத்து உழைத்து ஓடாய் திரும்பி வந்தவனை நோகடித்துவிட்டேனே… இப்போ எங்கு போனானோ தெரியலையே…!’ ஏதோ பெரிய தவறை செய்துவிட்டவள் போல் படபடக்கும் இதயத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி தரையில் சரிந்து அமர்ந்தாள். சுவர் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தாள்… மணி பத்து என்று காட்டியது…

 

“எங்கடா இருக்க…? ஒரு போன் பண்ணி சொல்லக் கூடாதா…? ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ்வளவு சித்ரவதை செய்றியே…!” என்று வாய்விட்டு புலம்பியவளின் கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது…

 

திடீர்ரென்று அவளுக்கு வேறு ஒரு பயம் தோன்றியது… ‘ஐயோ… கோபத்தோட வண்டில போனானே… வேகமா… கீகமா… ஓட்டுறேன்னு ஏதாவது…! கடவுளே…!’ மேலே சிந்திக்க முடியாமல் அவசரமாக எழுந்து ஓடி சாமி படத்திற்கு முன் நின்று கொண்டு ‘கடவுளே… அவனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதுப்பா… இறைவா நீதாம்ப்பா காப்பாத்தணும்…’ என்று கண்ணீருடன் வேண்டினாள்.

 

அவள் கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருக்கும் பொழுது ஹாலிலிருந்த கைபேசி அலறியது. படபடக்கும் இதயத்தோடும் ஜீவனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடும் அவசரமாக ஓடிவந்து கைபேசியை எடுத்து நம்பரைக் கூட பார்க்காமல் ஆன் செய்து காதுக்குக் கொடுத்தாள்.

 

“ஹலோ…” நடுக்கத்துடன் ஒலித்தது அவளுடைய குரல்.

 

“பவித்ரா… நான் அத்தை பேசுறேம்மா…”

 

சிவகாமியின் குரலை கேட்டதும் மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டாள். இவங்க எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடறாங்க… ஜீவன் எங்கன்னு கேட்டா என்ன சொல்றது… என்கிற பயத்துடன்,

 

“சொல்லுங்கத்த… ” என்றாள்.

 

“என்னம்மா அங்க பிரச்சனை…? நீ அங்க இருக்கும் போது ஜீவன் எதுக்கு இங்க வந்திருக்கான்… அதுவும் ராத்திரி நேரத்துல இங்கேயே தங்கிட்டான்…” சிவகாமியின் குரலில் லேசான கோபம் தெரிந்தது.

 

“என்னது…! அங்க வந்திருக்காரா…?!” அவன் பத்திரமாக இருக்கிறான் என்கிற நிம்மதியை மீறி அவளுடைய படபடப்பு பல நூறு மடங்கு அதிகமானது….

 

‘அந்த புனிதா இருக்கும் இடத்தில் இவனும் இருக்கிறானா…? அங்கு எதற்கு போனான்…? என்னை இங்கு தனியாக விட்டுவிட்டு அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்…!’ அவள் மனம் அவசர அவசரமாக ஏதேதோ சிந்தித்தது.

 

“இப்ப பதறி என்ன செய்றது…? இங்கதான் இருக்கான்… நீ பயப்படாம கதவை பூட்டிகிட்டு பத்தரமா இரு…”

 

“அங்க எப்ப வந்தாரு…?” இறுக்கமான குரலில் கேட்டாள்.

 

“சாயங்காலமே வந்துட்டானாம்… நான் இப்பதான் திருப்பதிலேருந்து வந்தேன்… பிரகாஷும் ஆபீஸ்லேருந்து நேர என்னை கூப்பிட பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டு இப்பதான் வீட்டுக்கு வர்றான்… வந்து பார்த்தா இவன் வீட்டுல இருக்கான்… என்னடான்னு பிரச்சனைன்னு பெரியவனைக் கேட்டா எரிஞ்சு விழறான். நேத்துதானே ஊர்லேருந்து வந்தான்… அதுக்குள்ள அவன்கிட்ட வம்பிழுக்கலன்னா என்ன…? வருஷக்கணக்கா தனியா கிடந்துட்டு வந்தவனுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட்டு… இதமா பேசி அவனை சந்தோஷமா வச்சிக்காம… கோபம்… சண்டை… இதெல்லாம் நல்லாவா இருக்கு…? ஆண்பிள்ளைங்க கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் நாமதானே பொறுமையா நடந்துக்கணும்…?” சிவகாமி மருமகளை காய்ச்சி எடுத்துவிட்டு போனை வைத்தாள்.

 

மாமியாரின் வார்த்தைகள் எதுவும் மருமகளின் செவிகளில் ஏறவில்லை. அவளுடைய சிந்தனைகள் முழுவதும் தனி தடத்தில் ஓடிக் கொண்டிருந்தன…

 

‘என்னை இங்க தனியா விட்டுட்டு அங்க போய் உட்கார்ந்திருக்கான்னா என்ன அர்த்தம்…? என்னை என்னன்னு நெனச்சுகிட்டு இருக்கான்…? எல்லாத்தையும் பார்த்துகிட்டு அமைதியா இருப்பேன்னா…?’ அவள் மனம் கொதித்தது…

 

‘புனிதா இருக்க வீட்டுல இவனுக்கு என்ன வேலை…? இவன் எப்படி அங்க போகலாம்…!’ அவளுடைய ஆத்திரம் கட்டுக்கடங்கவில்லை.

 

பாட்டி மாமியார் கணவன் என்று ஒரு குடும்பத்தோடு புனிதா இருக்கும் பொழுது அந்த வீட்டில் ஜீவன் ஒருநாள் தங்கினால்… அப்படி என்ன கெட்டுப் போய்விடும் என்று பவித்ரா நினைத்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை… ஆனால் அவளுக்கு பிடிக்கவில்லை… ஆனால் அவள் இருக்கும் வீட்டில் இவன் சும்மா ஏதோ ஒரு மூலையில் தங்கியிருப்பதை கூட அவள் விரும்பவில்லை. அவள் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது…

 

காதல் கொடுத்த உரிமை உணர்வில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். விட்டால் அந்த இரவே அவனை தேடிச் சென்று சட்டையை பிடித்து உலுக்கியிருப்பாள். ஆனால் நடுராத்திரியில் நகரத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தனியாக செல்வது பாதுகாப்பில்லாதது என்பதில் மட்டும் அந்த உணர்ச்சிபூர்வமான நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.

 

ஜீவனை அங்கு விட்டு வைத்துவிட்டு இவளுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏன் இந்த தவிப்பு…? எதற்காக இந்த துடிப்பு…? அவளுக்கு விளங்கவில்லை… இன்று இல்லாவிட்டாலும் நாளை அவன் இங்குதான் வந்தாக வேண்டும்… அது விஷயமே இல்லை… ஆனால் இன்று ஏன் வராமல் இருந்தான்…? அவளை எப்படி அவன் உதாசீனம் செய்யலாம்…? அவளுக்கு ஆத்திரமாக வந்தது. அவனுடைய ஒரு சின்ன விலகலை தாங்க முடியாமல் தவியாய் தவித்தாள்… துடியாய் துடித்தாள்…! இப்படி ஒரு வெறித்தனமான காதல் தனக்குள் இருக்கிறது என்பதை அவளே அன்றுதான் ஆச்சர்யத்துடன் உணர்ந்தாள்…

 

‘இருடா… உனக்கு கச்சேரி வைக்க காலையில வர்றேன்…’ என்று கோபத்துடன் நினைத்தாலும்… வருத்தத்திலும் வேதனையிலும் மனம் நைந்து போனது… தனிமையில் அழுதழுது கண்ணீர் வற்றிப் போனது… இரவு முழுக்க உறங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருந்து ஒவ்வொரு கனத்தையும் யுகமாய் கடத்திவிட்டு விடிந்ததும் விடியாததுமாக பதறியடித்துக் கொண்டு கணவனைத் தேடி ஓடினாள்.

 

மாமியார் வீட்டிற்குள் அவள் வீட்டிற்குள் நுழையும் போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. வீட்டில் எல்லோருடைய நடமாட்டமும் இருந்தது… ஜீவனை தவிர…

 

களைந்த கேசமும்… வீங்கிய முகமும்… சிவந்த கண்களுமாக அணிந்திருந்த சுடிதாருக்கு பொருத்தமில்லாத ஒரு ஷாலை அணிந்து கொண்டு… களையிழந்து போய் அவள் வந்து நின்ற கோலத்தைக் கண்டு திகைத்த பிரகாஷ் பின் சுதாரித்துக் கொண்டு “வாங்க அண்ணி… என்ன ஆச்சு…?” என்றபடி படித்துக் கொண்டிருந்த பேப்பரை அவரசரமாக மடித்து டீப்பாயின் மீது தூக்கிப் போட்டுவிட்டு எழுந்தான்.

 

காபி கப்புடன் வந்த புனிதாவும் பவித்ராவை கண்டு தயங்கி நின்று “வாங்க பவித்ரா…” என்றாள்.

 

இவர்களின் குரல் கேட்டு சிவகாமியும் சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

 

“அவர் எங்க….?” பவித்ரா பொதுவாக கேட்டாள்.

 

ஏதோ பெரிய பிரச்சனைப் போலும் என்று நினைத்தபடி, “மாடில… செகண்ட் ரூம்ல இருக்கான்… இன்னும் எந்திரிக்கல…” என்று பிரகாஷ் பதில் சொன்னான்.

 

திகைப்பு நீங்காமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏறினாள் பவித்ரா.
Comments are closed here.

error: Content is protected !!