Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

vidivelli

Share Us On


விடிவெள்ளி -43 ( நிறைவு பகுதி)

அத்தியாயம் – 43

ஜீவன் பவித்ராவின் வாழ்க்கைப் படகு இன்ப நீரோடையில் மிதந்தபடி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தது. பவித்ராவிற்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைக் கிடைத்து ஆறு மாதமாகிவிட்டது. இந்த ஆறுமாதத்தில் கணிசமான தொகை அவளுடைய வங்கிக் கணக்கில் சேர்ந்திருந்தது. பழையபடி டிரைவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த ஜீவனை சொந்தமாக தொழில் துவங்கச்  சொன்னாள். அவன் தன்னால் முடியுமா என்று தயங்கியபோது ‘முடியும்…’ என்று அடித்துப் பேசி அவனுடைய தன்னம்பிக்கையை அதிகப் படுத்தினாள்.

 

கணவனிடமிருந்த சேமிப்போடு தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து அவனிடம் நீட்டி நல்ல கண்டிஷனில் இருக்கும் கார்களை வாங்கச் சொன்னாள். பணம் பற்றாத போது தன்னுடைய நகைகளைக் கொடுத்தாள். அதுவும் போதாத போது லோன் போட்டுக் கொடுத்தாள். மொத்தத்தில் அவனுடைய வளர்ச்சிக்கு பலமான அஸ்த்திவாரமாக மாறி “ஜெயம்” ட்ராவல்சை உருவாக்கினாள்.

 

ஜீவனும் கடுமையாக உழைத்தான். அவனுடைய உழைப்பிற்கான பலன் விரைவிலேயே தெரிந்தது. ஆரம்பத்தில் நஷ்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த தொழில்… சில நிறுவனங்களின் கான்ட்ராக்ட் கிடைத்ததும் தொடர் வருமானத்தை கொடுத்து லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியது. பேங்க் லோன் தவிர மற்ற கடன்களை அடைத்துவிட்ட பிறகு பணப் பிரச்சனை ஒழிந்து… சேமிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் பவித்ரா கருவுற்றாள். மருத்துவப் பரிசோதனையில் அவனுக்கு இரட்டைக் குழந்தை என்று தெரியவந்தது… அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஓலைக் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டவில்லை… கான்க்கிரீட் கூரையை உடைத்துக் கொண்டு கொட்டியது… அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் சிவகாமி இரண்டு பிரச்சனைகளுடன் மூத்தமகன் வீட்டிற்கு வந்தாள்.

 

“எப்பதான் நான் சொல்றதை கேக்க போறீங்க ரெண்டு பேரும்… நீ என்னடான்னா ட்ராவல்சே கதின்னு அதையே கட்டிக்கிட்டு அழுவுற… இவ என்னடான்னா ரெட்டைக் குழந்தையை சுமந்துகிட்டு வேலைக்கு போறேன்னு டெய்லி பஸ்ல அலையிறா… இதெல்லாம் கேக்க இந்த வீட்டுல பெரியவங்கன்னு யாரு இருக்கா…? கேட்டாலும் யாரு அடங்கரிங்க…” நடுவீட்டில் நின்று கத்திக் கொண்டிருந்த சிவகாமியின் கோபக் குரலில் அந்த சிறு வீடு கிடுகிடுத்தது.

 

பவித்ரா அடங்கிப் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். ஜீவனோ சத்தம் போடும் தாயை விட்டுவிட்டு மனைவியை முறைத்தான்.

 

“ஏண்டா ஜீவா… உனக்கு எங்கிருந்துடா இவ்வளவு பணத்தாசை வந்தது… அதான் லட்ச லட்சமா நீ சம்பாதிக்கிரியே… அப்புறம் எதுக்குடா இவள இந்த மாதிரி நேரத்துல வெளியே வேலைக்கு அனுப்பற…? குழந்தையை விட உனக்கு பணம் பெருசா போயிடுச்சா…?” சீற்றமான தாயின் பேச்சைக் கேட்ட ஜீவன் பல்லைக் கடித்தான்…

 

‘போதுமாடி… பெத்த தாயே என்னை பார்த்து பேராசைக்காரன்னு சொல்லிடிச்சு… இப்ப நிம்மதியா உனக்கு…?’ பார்வையாலேயே குற்றம் சொன்னான். அவனும் பாவம் எத்தனை முறை அவளிடம் கெஞ்சியிருப்பான்… இவள் கேட்டால் தானே…! கணவனுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் அவசரமாக மாமியாரின் பேச்சில் இடைப்புகுந்தாள்.

 

“அத்த அவருக்குக் கூட நான் வேலைக்கு போறது பிடிக்கல… நானா தான் போறேன்…” என்று உண்மையை சொல்லி கணவனை காப்பாற்ற முயன்றுவிட்டு இன்னும் அதிகமாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

 

“ஓ… அப்போ கட்டின புருஷனுக்கும் நீ அடங்கறது இல்ல…? ஏண்டா ஜீவா… இவ்வளவுதான் உன் பேச்சுக்கு இந்த வீட்டுல மரியாதையா…?” என்று மகனை பார்த்து கேட்டுவிட அவனுடைய கோபம் எல்லை மீறியது…

 

“ம்மா… என்னதாம்மா உன் பிரச்சன…? எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்க… பவி வேலைக்கு போகக் கூடாது அவ்வளவு தானே…! இனி அவ போகமாட்டா… நீ வேலையை பாரு…”

 

“ஏங்க… என்ன விளையாடறிங்களா…? ட்ரவல்ஸ் ஆரம்பிக்கும் போது வாங்கின லோனே இன்னும் முடியல… ஞாபகம் இருக்கா இல்லையா…?”

 

“இன்னும் எத்தனை மாசத்துக்குடி நீ அந்த லோனை சறுக்கு சொல்லிகிட்டே இருப்ப…? லோனை வாங்கி ட்ரவல்ஸ் ஆரம்பிச்ச எனக்கு அதை திருப்பி கட்டத் தெரியாதா…? ஒழுங்கு மரியாதையா நாளையிலேருந்து வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு… இல்ல… ” என்று சுட்டுவிரல் நீட்டி மிரட்டினான்.

 

‘ம்க்கும்… பெண்டாட்டிய ரெஸ்ட் எடுக்க சொல்ற லட்சனத்த பாரு… சரியான முசுடு…’ என்று சிவகாமியின் காதில் விழாமல் முணுமுணுத்தாள் பவித்ரா.

 

அவளுடைய உதட்டசைவிலிருந்து அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு எரிச்சல் மறைந்து முகத்தில் லேசான சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

எப்படியோ சிவகாமியின் முதல் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட அடுத்தது துவங்கியது… அவளுடைய பார்வை அந்த சிறிய வீட்டை வட்டமடித்தது… டிவி, கட்டில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஆங்காங்கே இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும் மகனும் மருமகளும் முதன்முதலாக அந்த வீட்டிற்கு குடி வந்தபோது இருந்த எளிமை இன்னும் மாறவில்லை.

 

“ஜீவா… ஒண்ணுக்கு ரெண்டா குழந்தைகள் வரப் போகுது… இன்னும் எத்தனை நாளைக்குடா இந்த புறாக் கூட்டுக்குள்ளேயே குடியிருப்பிங்க? அங்க நம்ம வீடு கடல் மாதிரி இருக்கு… அங்க வந்துடேன்டா…”

 

“இப்ச்… உனக்கு எத்தனை தடவம்மா சொல்றது…? நாங்க இங்க தனியா வந்து பல வருஷம் ஆச்சு… இனிமே நாங்க அங்க எப்படிம்மா…? ”

 

“வயசான காலத்துல ஒரு பேரப் பிள்ளைக்காக ஏங்கிப் போய் கெடக்குறேன்… பவித்ராவுக்கு குழந்தை பிறந்துடிச்சின்னா என்னால குழந்தையை விட்டுட்டு இருக்க முடியாதுடா ஜீவா…” சிவகாமியின் குரல் கெஞ்சியது.

 

“உன்ன யாரும்மா விட்டுட்டு இருக்க சொன்னது… நீ இங்க எங்களோடவே வந்துடு…”

 

“அது எப்படிடா முடியும்…? என்ன இருந்தாலும் அதுதானடா   நம்ம வீடு… அதை விட்டுட்டு என்னால இங்கேயெல்லாம் இருக்க முடியுமா சொல்லு…?”

 

“அது பிரகாஷோட வீடும்மா…  என்னோட வீடு இல்ல…” ஜீவன் ஆணித்தனமாக சொன்னான்.

 

“ஜீவா…!!!” சிவகாமி அதிர்ந்தாள். தாயின் அதிர்ச்சி ஜீவனை பாதிக்கவே இல்லை… அவன் சாதாரணமாக நின்றான்.

 

“என்னடா இப்படி சொல்லிட்ட… அவன் உன் தம்பி இல்லையா…? அவன் கட்டின வீட்டுல நீ வந்து தங்க மாட்டியா…? எப்போலேருந்துடா அவனை இப்படி பிரிச்சு பார்க்க ஆரம்பிச்ச…?” சிவகாமி ஆதங்கத்துடன் பேசினாள்.

 

“பிரகாஷ் எனக்கு தம்பி மட்டும் இல்லம்மா… புனிதாவுக்கு கணவனும் கூட…” அன்று பவித்ரா தன்னிடம் சொன்ன வார்த்தைகளை இன்று தாயிடம் சொன்னான் ஜீவன்.

 

“அதுனால என்…ன..?” மகன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொண்டுவிட்டதால் சிவகாமியின் பேச்சு பாதியிலேயே நின்றுவிட்டது. ‘புனிதா இருக்க வீட்ல இவனால எப்படி நிம்மதியா இருக்க முடியும்…? அதுவும் பவித்ராவுக்கு எல்லா உண்மையும் தெரியும் எனும்பட்சத்தில அவளுக்கும் நிம்மதி இல்லாம போய்டுமே…! இத எப்படி நான் நினைக்காம போனேன்…! ஆனா எனக்கு என்னோட பெறக் குழந்தைகள் வேணுமே…! அவங்கள நான் வளர்க்கணுமே…! இவ்வளவு நாள் வாழ்ந்த இடத்த விட்டுட்டு இங்க வந்து எப்படி நான் இருப்பேன்…’ சிவகாமிக்கு ஆத்திரம் தொண்டையை அடைக்க கண்ணீர் பொலபொலவென உதிர்ந்துவிட்டது.

 

சிவகாமியின் கண்ணீரைக் கண்டதும் பவித்ரா பதறிவிட்டாள். “ஐயோ… அத்த… எதுக்குத்த அழறிங்க… கண்ண தொடச்சுக்கோங்கத்த… அழாதிங்க…” என்று தான் அமர்ந்திருந்த  நாற்க்காலியிலிருந்து எழுந்து வந்து மாமியாரின் கண்களைத் துடைத்துவிட்டாள்.

 

அவளுக்கு மாமியாரை புரிந்துகொள்ள முடிந்தது. யாருக்கும் மனக்கஷ்ட்டம் இல்லாமல் இந்த பிரச்சனைக்கு எப்படி சுமூகமான தீர்வை கண்டுபிடிப்பது என்று யோசித்தாள். ஒரு வழி கிடைத்தது. அதைப் பற்றி அன்றே தனிமையில் கணவனிடம் பேசினாள்.

 

“ஏங்க… நாம அத்தை வீட்டுக்கு பக்கத்துலையே வீடு பார்த்துகிட்டு போய்டுவோமா…? அங்க இருந்தா அத்தைக்கு அவங்க வீட்டுல இருந்த மாதிரியும் இருக்கும்… நம்மளையும் பார்த்துகிட்ட மாதிரி இருக்கும்…”

 

“அதெல்லாம் வேண்டாம்… நீ பேசாம படுத்து தூங்கு… இனி அம்மா நம்மள அங்க வர சொல்லி கூப்பிடாது….”

 

“அது இல்லங்க… வயசான காலத்துல அவங்களை எதுக்கு நாம கஷ்டப்படுத்தனும்…?”

 

“அங்க போனா நீ தினமும் புனிதாவ பார்க்கற மாதிரி இருக்கும் பவி… உனக்கு மனசு கஷ்டப்படும். சொன்னா கேளு வேண்டாம்…” ஜீவன் முடிவாக சொன்னான்.

 

பவித்ரா அவனை இமைக்காமல் பார்த்தாள்… “உங்களோட காதல் என் மேல மட்டும்தான்னு உறுதியா தெரிஞ்ச பிறகு என் மனசு வேற எதுக்காக கஷ்டப்படும்…? நான் உங்களை நல்லா புரிஞ்சுகிட்டேங்க… உங்களையும் உங்க காதலையும் முழுசா நம்பறேன்… வேற என்ன வேணும்… இனி நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது…” பவித்ரா உறுதியாக சொன்னாள்.

 

அவள் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கை அவன் மனதை வருடியது. அவனுக்கும் ஒருவிதத்தில் தன் தாயை மகிழ்ச்சிப் படுத்துவதில் விருப்பம் இருந்ததால் சரி என்று ஏற்றுக் கொண்டான்.

###

ஜீவனும் பவித்ராவும் பிரகாஷ் வீட்டிற்கு பக்கத்திலேயே குடி வந்துவிட்டார்கள். சொந்த வீட்டிற்கு வராமல் பக்கத்து வீட்டில் அண்ணன் குடிவருகிறானே என்கிற ஆதங்கம் இருந்தாலும் அவன் பொறுப்புடன் இருப்பதற்கு தனிக்குடித்தனம் அவசியம் தான் என்று நினைத்த பிரகாஷும் அமைதியாக இருந்துவிட்டான். தனித்தனி வீட்டில் வசித்தாலும் அனைவரும் ஒரே குடும்பமாக தான் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். பவித்ராவிற்கு புனிதாவுடன் பழையபடி நட்பாக பழக முடிந்தது. பவித்ராவுக்கு தன்னுடைய கடந்தகாலக் கதை தெரியும் என்று அறியாததால் புனிதாவுக்கும் அவளுடன் இயல்பாகப் பழக முடிந்தது…

 

பவித்ராவிற்கு நான்காவது மாதம் துவங்கிவிட்டது. இரட்டைக் குழந்தை என்பதால் அவளுடைய வயிறு நன்றாகவே மேடிட்டிருந்தது. ஜீவன் மட்டும் அல்லாது சிவகாமி பாட்டி என்று அனைவரும் பவித்ராவை தாங்கினார்கள். போதாதற்கு பிரகாஷ் கூட அண்ணியின் மீது அக்கறையுடன் இருந்தான்.  தினமும் அவளுடைய உடல் நலத்தை விசாரித்துத் தெரிந்துக்கொள்வான். அடிக்கடி அவளுடைய டாக்டர் ரிப்போர்ட்டை வாங்கிப் படிப்பான்.

 

வீட்டில் சமைக்கும் உணவிலிருந்து… செடியில் பூக்கும் பூ வரை அனைத்திலும் பவித்ராவிற்குத்தான் முதலிடம். குறுகிய காலத்தில் பவித்ரா அந்த குடும்பத்தின் நட்சத்திரமாகி விட்டாள். புனிதாவிற்கு பவித்ராவின் மீது பொறாமை இல்லை… ஆனால் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் இருந்தது. குழந்தை இல்லாததால் தன்னை எல்லோரும் ஒதுக்குகிறார்களோ என்கிற சந்தேகமும் தாழ்வுமனப்பான்மையும் அதிகமாகிக் கொண்டிருந்தது.

 

ஏழாவது மாதம் துவங்கியதும் பவித்ராவிற்கு வளைகாப்பு செய்ய தயாரானார்கள். வளைகாப்பை எந்த வீட்டில் செய்வது என்பதில் ஒரு குழப்பம் எழுந்தது. ஜீவன் தன்னுடைய வீட்டில் தான் வளைகாப்பு நடக்க வேண்டும் என்றான். சிவகாமி சொந்த வீட்டில் தான் வளைகாப்பு நடக்க வேண்டும் என்று சொன்னாள். அதற்க்கு ஜீவன் மறுத்த போது…

 

“வீடுதான் உன் தம்பி கட்டினது… ஆனா அந்த வீடு இருக்க இடம் உன் தாத்தா வாங்கிப் போட்டது. நம்ம எல்லோருக்கும் சொந்தமான பூர்வீக இடம். அந்த இடத்துலத்தான் இந்த குடும்பத்தோட மூத்த வாரிசுக்கு முதல் விழா நடக்கணும்…” என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள். ஒரு வழியாக ஜீவனும் சம்மதித்தான்.

 

பவித்ராவிற்கு புனிதாவும் பவித்ராவின் அண்ணி பைரவியும் தான்  அலங்காரம் செய்தார்கள். பட்டுப் புடவை கட்டி… தலையலங்காரம் செய்து… முக அலங்காரமும் முடிந்து… கடைசியாக நகைகளை அணிவிப்பதற்காக பவித்ராவின் நகைப் பெட்டியை திறந்தவள் அசந்து போனாள்.

 

‘இவ்வளவு நகைகளையும் ஜீவன் தான் வாங்கிக் கொடுத்தானா…!’ அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 

திருமணத்தின் போது பவித்ராவிற்கு பிறந்த வீட்டிலிருந்து நகைகள் அதிகம் போடவில்லை. அப்படி இருக்கும் போது இந்த நகைகளை அவன்தான் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்… தன்னிடம் இருக்கும் நகைகளை விட ஒரு பிடி நகை அதிகமாகவே பவித்ராவிடம் இருந்ததை கண்டு ‘ஒரு ரூபாய்க் கூட சம்பாதிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு ஊதாரியாகத் திரிந்தவனா இவன்…! அடேயப்பா…!!!’ என்று மனதிற்குள் ஆச்சர்யப்பட்டுப் போனாள்.

 

எல்லாவற்றையும் பவித்ராவிற்கு அணிவித்துவிட்ட பிறகு அவள் கழுத்திலிருந்து ஒரு நெக்லஸ் டாலடித்தது புனிதாவின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது…

 

“இந்த நெக்லஸ் ரொம்ப அழகா இருக்கு பவி உங்களுக்கு…” என்றாள்.

 

அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட பவித்ராவிற்கு சிரிப்புவந்தது… “ஏன் சிரிக்கிறிங்க…?” என்றால் பைரவி…

 

“அண்ணி… இந்த நெக்லஸ் அவர் எமிரேட்ஸ்லேருந்து வாங்கிட்டு வந்தது… எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கிட்டு வந்தவர் எனக்கு மட்டும் எதுவுமே வாங்கிட்டு வரலையோனு நான் கோபமா இருந்தப்போ சர்ப்ரைசா திடீர்ன்னு ஒரு நாள் எடுத்துக் கொடுத்தார். அதை நெனச்சேன்… சிரிப்பு வந்துடிச்சு…” என்றாள்.

 

புனிதாவிற்கு ஏக்கமாக இருந்தது… புனிதா ஏதாவது வேண்டும் என்று கேட்டால் ATM அட்டையை எடுத்து நீட்டி “எது வேணுமோ வாங்கிக்கோ… ” என்று சொல்லும் தன் கணவனை நினைத்து எரிச்சல் மூண்டது… ‘ஒரு நாளாவது இது மாதிரி ஏதாவது வாங்கிட்டு வந்து நமக்கு சர்ப்பரைஸ் கொடுத்திருக்கானா…!’ என்கிற சிந்தனை எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. இதில் வேறு நொடிக்கொரு முறை ஜீவன் மனைவியை வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவதும்…. யாரிடமாது ஜூஸ் கொடுத்து அனுப்புவதும்… விருந்தினர்கள் கூட்டம் அதிகமானதும் போனில் அழைத்துப் பேசுவதுமாக இருப்பதைக் கண்டு அவளுடைய நிம்மதி தொலைந்து போனது. விழா இனிமையாக முடிந்து பவித்ரா சம்பிரதாயத்திர்காக அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மறுநாள் மனைவியை கையோடு அழைத்து வருவதற்காக கூடவே ஜீவனும் சென்றுவிட்டான். முதல் முறையாக  மைத்துனன் வீட்டில் அன்று தங்கினான் அவன்.

 

அன்று இரவு புனிதாவின் மனம் பயங்கர பாரமாக இருந்தது… ஏதேதோ வேண்டாத சிந்தனைகள் வந்து அவளை அலைக்கழித்தது… தனக்கும் இது போல் என்றாவது ஒரு நாள் வளைகாப்பு நடக்குமா என்று ஏக்கமாக இருந்தது…

 

ஜீவன் தன் மனைவியை போல் தன்னை பெரிதாக கண்டுக்காமல் இருக்கும் தன் கணவனும் என்றாவது ஒரு நாள் தன்னை தாங்குவானா என்கிற ஏக்கமும் வந்தது… போதாதற்கு ஜீவனோடு அவள் பழகிய காலம் நினைவில் வந்து அவளை வாட்டியது… அவனுக்கு துரோகம் செய்த பாவத்திற்கு தான் தனக்கு இப்போது குழந்தை வரம் கிடைக்கவில்லையோ என்று தவிப்பாக இருந்தது… இரவு முழுக்க உறங்காமல் புரண்டுக் கொண்டிருந்தவள் அதற்கு அடுத்தடுத்த நாட்களிலும் உறங்க முடியாமல் தவித்தாள். காரணம் புனிதா இருந்த வீட்டிதான் பவித்ராவும் தங்கி இருந்தாள்.

 

பிரசவம் முடியும் வரை வளைகாப்பு நடந்த வீட்டில் தான் பவித்ரா தங்க வேண்டும் என்று சிவகாமி சொல்லிவிட்டாள். அப்படி ஒரு சம்பிரதாயம் இருக்கோ இல்லையோ யாருக்கும் தெரியாது… ஆனால் அவள் சொன்ன சொல்லை ஜீவன் மறுத்துப் பேசவில்லை. காரணம் பவித்ரா எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக பிரசவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு முக்கியமாக இருந்தது.

 

பவித்ராவிற்கு அர்த்த ராத்திரியில் பிரசவ வலி எடுத்தது. அவளுக்கு வலி எடுத்ததில் வீடே பதறியது… பவித்ராவை ஜீவனும் சிவகாமியும் பின் சீட்டில் தாங்கிப் பிடித்து அமரவைத்துக் கொள்ள… பிரகாஷ் டிரைவர் சீட்டில் அமர்ந்தான். கார் சீறிக் கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தது.

 

ஒவ்வொரு முறை அவள் வலியில் துடிக்கும் பொழுதும் ஜீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஒன்னும் இல்ல பவி… இதோ வந்துடிச்சு… அவ்வளவுதான்… கொஞ்சம் பொறுத்துக்கோ…’ என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் இவன் மனம் மரணவலியை அனுபவித்தது…

 

ஆறடி ஆண்மகன் இப்படி மூக்கை உருஞ்சுகிரானே என்று மருத்துவமனையில் யாரும் அவனை கேவலமாக பார்க்கவில்லை.  மாறாக அன்புக் கணவனின் அந்த கண்ணீர் அனைவரையும் நெகிழ்த்தியது. மூன்று மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு முத்து முத்தாக இரண்டு சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தாள் பவித்ரா.

 

டாக்டர்… நர்ஸ்… வார்ட் பாய்… ஆயா…நோயாளிகள்… அவர்களின் உறவினர்கள்… என்று சர்க்கரை வியாதிக் காரனைக் கூட விடாமல் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கும்மாளம் போட்டுக் கொண்டாடிய ஜீவனை எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் பார்த்தார்கள்.

 

‘ஊர்ல எவனுமே சாதிக்காததை சாதிச்ச மாதிரி என்னா ஆட்டம் போடறான்…’ என்று சிலர் முதுகுக்குப் பின்னால் கிண்டலடித்தார்கள்.

 

மறுநாள் புனிதா பவித்ராவை பார்க்க வந்தாள். அவள் உள்ளே நுழைந்த நேரம் ஜீவன் பவித்ராவின் கையை பிடித்தபடி அவளுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தான். குழந்தைகள் இருவரும் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

அவர்கள் அன்யோன்யமாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் “சாரி…” என்று சொல்லிவிட்டு சட்டென வெளியேறப் போனாள்.

 

“இல்ல.. இல்ல… வாங்க புனிதா…” என்று பவித்ரா அழைக்க  ஜீவன் எழுந்து வெளியே சென்றான். புனிதா குழந்தைகளை பார்த்துவிட்டு பவித்ராவிடம் நெருங்கி “எப்படி இருக்கீங்க பவித்ரா…?” என்று கேட்டாள்.

 

“நல்லா இருக்கேன் புனிதா… உக்காருங்க… ” என்று புன்னகையுடன் பதில் சொன்னாள் பவித்ரா.

 

“அத்தை எங்க…?”

 

“கேண்டீன் போயிருக்காங்க…”

 

“சந்தோஷமா இருக்கு பவித்ரா… குழந்தைங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்காங்க…”

 

“தேங்க்ஸ் புனிதா…”

 

“உங்களை கடவுள் ஆசிர்வதிச்சிருக்கார்…” என்றபடி அன்புடன் சிரித்தாள்.

 

“அவரா ஆசிர்வதிக்கல புனிதா… நான் தான் ஆசிர்வதிக்க வச்சேன்…” பவித்ராவும் அன்புப் புன்னகையுடன் பதில் சொன்னாள்.

 

புனிதா சில கணம் அமைதியாக இருந்தாள். அவளுடைய கண்கள் லேசாக கலங்கியது.தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முயன்றாள். முடியவில்லை…

 

“சாரி பவித்ரா…” என்று மன்னிப்புக் கேட்டாள்.

 

“இருக்கட்டும் புனிதா… நாமெல்லாம் ஒரே குடும்பம்… என்னோட சந்தோஷம் உங்க சந்தோஷம் எனும் போது… உங்களோட கஷ்டம் என்னோட கஷ்டம் தானே… என்கிட்டே பேசனுன்னு தோணினா மனசு விட்டு பேசுங்க…”

 

“என்னத்த பேசப் போறேன் பவி… வாழ்க்கைல எல்லாமே இருக்கு… ஆனா எதுவுமே இல்ல… ரொம்ப வெறுப்பா இருக்கு…”

 

“தப்பு புனிதா… வாழ்க்கையில எது நமக்கு நடக்கனுன்னு நாம முடிவு பண்ணக் கூடாது… நமக்கு என்ன நடக்குதோ அதை பாசிட்டிவா… நமக்கு சாதகமா… மாத்திக்க முயற்சி பண்ணனும்… உங்க லைஃப்ல இப்போ என்ன நடக்குதோ அதை உங்களுக்கு சாதகமா மாத்திக்க முயற்சி பண்ணுங்க… சந்தோஷம் தானா கிடைக்கும்… வெறுப்பு ஓடிடும்…”

 

‘அப்படி இருந்த ஜீவன் இப்படி மாறினதுக்கு இந்த மந்திரம் தான் காரணமோ…!’ என்கிற சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள “அதைதான் நீங்க பண்ணினிங்களா…?” புனிதா விழிவிரித்துக் கேட்டாள்.

 

பவித்ரா ஆம் என்பது போல் தலையாட்டி நிறைவானதொரு புன்னகை பூத்தாள்.

 

இதுதான் நீ பயணம் செய்ய வேண்டியப் பாதை என்பதை பவித்ரா புனிதாவிர்க்குக் காட்டிக் கொடுத்துவிட்டாள். இனி அந்த பாதையில் பயணம் செய்து வாழ்க்கையில் கரை சேர வேண்டியது புனிதாவின் பொறுப்பு…

 

புனிதாவுக்கும் தான் எங்கே தவறு செய்கிறோம் என்பது புரிந்தது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்கிற ஐடியாவும் கிடைத்தது. மலர்ந்த முகத்துடன் “தேங்க்ஸ் பவித்ரா…” என்றாள்.

 

அந்த நேரம் ஜீவனும் பிரகாஷும் உள்ளே நுழைந்தார்கள். அவரவர் மனைவின் முகத்திலிருந்த மகிழ்ச்சியில் மகிழ்ந்தவர்கள்… அவர்களின் காதல் பார்வை தங்கள் மீது படிவதைக் கண்டு உள்ளம் குளிர்ந்தார்கள்.

 

பிரகாஷ் குழந்தைகளை எட்டிப் பார்த்துவிட்டு மனைவின் அருகே சென்று நின்றுக்கொள்ள ஜீவன் பழையபடி பவித்ராவிற்கு அருகில் வந்து அமர்ந்தான். “ங்கா… ங்கா… ” என்று ஒரு வாண்டு அழுகையை ஆரம்பிக்க இன்னொன்றும் அதைத் தொடர்ந்து குரல் கொடுத்தது…

 

“டேய்… பசங்களா… அழாதிங்கடா… அழாதிங்க…” என்று தொட்டிலை ஆட்டியபடி ஜீவன் சமாதானம் செய்ய முயல… பிரகாஷ் “ஆரிராரோ… ஆரிராரோ…” என்று கர்ண கொடூரமாக தாலாட்டுப் பாடியபடி இன்னொரு தொட்டிலை ஆட்ட ஆரம்பித்தான்.

 

குழந்தைகளின் அழுகை அதிகமானதே தவிர குறையவில்லை. அப்பாவும் சித்தப்பாவும் அரண்டு போனார்கள் இருந்தாலும் தங்களின் முயற்சியை விடாமல் தொடர்ந்தார்கள். பெண்கள் இருவருக்கும் அவர்களைப் பார்த்து சிரிப்பு வந்தது.

 

அந்த நேரம் “டேய்.. டேய்… நிறுத்துங்கடா…” என்றபடி சிவகாமியும் பாட்டியும் உள்ளே நுழைந்தார்கள்.

 

“அதைத்தாம்மா நானும் சொல்லிகிட்டே இருக்கேன்… இந்த வாண்டுப் பயலும் கேக்க மாட்டேங்கிறான்… அவன் தம்பியும் கேக்க மாட்டேங்கிறான்…”

 

“அடேய்… உங்க அம்மா சொன்னது தொட்டில்ல கெடக்குற பசங்கள இல்லடா… தொட்டில ஆட்டிகிட்டு இருக்க பசங்கள… ஒருத்த என்னடான்னா குழந்தைகிட்ட பேச்சுவார்த்தை நடத்தறான்… இன்னொருத்தன்… தாலாட்டு பாடுறேன்னு பயமுறுத்துறான்… நகருங்கடா அந்த பக்கம்…” பாட்டி அதட்ட சகோதரர்கள் இருவரும் ‘ஹி… ஹி…’ என்று வழிந்து கொண்டு இடத்தை காலி செய்தார்கள்.

 

அவர்களுடைய முகபாவம் அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறை பெண்களையும் மனம்விட்டு சிரிக்க வைத்தது… இன்றைய மகிழ்ச்சி என்றென்றும் அந்த குடும்பத்தில் நிலைத்திருக்கட்டும்…

 

நிறைவடைந்தது
3
Leave a Reply

avatar
3 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
3 Comment authors
Deepika PNataraj NatarajVats Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Deepika P
Member

Super story sis👌👌👌👌

Nataraj Nataraj
Member

Super story

Vats
Guest
Vats

Very very nice story… Thanks for giving it

error: Content is protected !!