Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதோடு ஒரு ராகம்-7

அத்தியாயம் – 7

 

மழை மேகம் சூழ்ந்திருக்கும் அழகிய மாலைவேளையில் குளிர்காற்றுச் சில்லென்று வீசியது. அந்த இதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாத மனநிலையோடு, சித்தார்த்தைத் தேடிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.

 

“என்ன பூசணி? என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கப் போலருக்கு” – மந்திரம் போட்டது போல் அவள் முன் தோன்றி உற்சாகமாகக் கேட்டான் சித்தார்த்.

 

“நீங்கதானே அப்படிப் பண்ணினது?” – மனதில் பொங்கும் கோபத்தை முகத்தில் தேக்கியபடிக் கேட்டாள்.

 

“எப்படி பண்ணினது?” – அவளுடைய கோபத்தில் சிறிதும் பாதிக்கப்படாதவனாகச் சிரித்துக் கொண்டே பதில் கேள்விக் கேட்டான் அவன்.

 

“ஆஹா… ஒண்ணும் தெரியாத பாப்பா… கேக்கறக் கேள்வியைப் பாரு. என் வண்டியை எதுக்கு பஞ்சர் பண்ணுனீங்க? கையிக் காலு நல்லா இருக்கதுப் பிடிக்கலையா?” – டேக்வோண்டோ மாணவி அல்லவா. அதனால்தான் அவனுடைய கை கால் நலனைப் பற்றி எடுத்துக் கூறி எச்சரிக்கைச் செய்தாள்.

 

ஏனோ அவள் விழியை உருட்டி அவனை மிரட்டிச் செய்த எச்சரிக்கை எதிர்திசையில் வேலை செய்துவிட்டது. அவனும் பயம் கொள்வதற்குப் பதில் ஏதோ காமெடி சீனை பார்த்தது போல் பயங்கரமாகச் சிரித்தான்.

 

“ஹா…. ஹா…. ஹா… ஹையோ… பூசணி… என்ன பண்ணுவ? ஹா… ஹா… என் கையை உடச்சுடுவியா? இந்தா உடச்சுக்கோ… ஹா… ஹா…” என்று வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டே அவளிடம் கையை நீட்டினான்.

 

“ரொம்பச் சிரிக்காதீங்க… கான்கிரீட் கட்டிடம் இடிஞ்சு விழுந்துடப் போகுது…”

 

“ஏன்…? ஏன் சிரிக்கக் கூடாது? சிரிக்கற மாதிரி காமெடி பண்ணிட்டுச் சிரிக்கக் கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் பூசணி?”

 

“இப்போ இங்க சிரிக்கற மாதிரி என்ன நடந்துச்சு? ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீங்க என்கிட்ட நல்லா வாங்கப் போறீங்க. அன்னிக்குதான் தெரியும் இந்த பூர்ணிமா யாருன்னு”

 

“நான் இன்னிக்கே உன்னை முழுசாத் தெரிஞ்சுக்கணும்னுதான் நினைக்கிறேன். எங்க… நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கற” – சட்டென்று அவன் குரலில் ஒரு மாற்றம். இளம் பெண்களை வசீகரிக்கும் அந்தக் குரல் அவள் மனதையும் தொட்டது. நொடியில் அவளிடம் ஒரு தடுமாற்றம் தோன்றப் பேச முடியாமல் அமைதியாகிவிட்டாள்.

 

“என்ன பேச்சையே காணும்?” – அவளை விழுங்கும் பார்வைப் பார்த்தபடிக் கேட்டான்.

 

அவளும் நாணத்துடன் புன்னகைச் செய்தபடி “ஏன் சித்து இப்படிச் செஞ்சிங்க? இப்போ நான் எப்படி ஹாஸ்ட்டல் போறது” என்று சிணுங்கினாள்.

 

அதுவரை அவளிடம் இருந்த கோபம் அந்த வித்தைக்காரன் செய்தச் சித்து வேலையில் மாயமாய் மறைந்துப் போய்விட்டதில் அவன் கர்வம் கொண்டு தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.

 

“ஏய் பூசணி… இப்போ நீ என்னை எப்படி கூப்பிட்ட?” – அதே தித்திக்கும் குரலில் குழைந்தான்.

 

“ப்ச்… இப்போ அதுதான் முக்கியமா? நானே வண்டிப் போயிடுச்சேங்கற வருத்தத்துல இருக்கேன். நீங்க வேற…” – அடியாள் போல் அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கும் பூர்ணிமா குழந்தையாக மாறி கொஞ்சல் மொழிப் பேசினாள்.

 

“உன் வண்டி எங்கேயும் போகல… ஸ்டாண்ட்லதான் இருக்கு. நான்தான் சொன்னேன்ல… உனக்கு அந்த வண்டி வேணாம்னு… நீ ஏன் என் பேச்சைக் கேட்கல? அதான் அப்படிப் பண்ணினேன்”

 

“அதுசரி… உங்க பேச்சைக் கேட்கணும்னா நான்தான் ஹாஸ்டல்லேருந்து காலேஜிக்கும், காலேஜ்லேருந்து ஹாஸ்டலுக்கும் மாங்கு மாங்குன்னு நடக்கணும்”

 

“நடக்கணும்னு என்ன அவசியம். என்னை உன் டிரைவரா அப்பாயின்ட் பண்ணிக்கோ. டெய்லி உன்னை நான் பிக்கப் பண்ணி டிராப் பண்ணறேன். என்ன சொல்ற?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

 

“அட… இது நல்ல ஐடியாவா இருக்கே! சம்பளம் என்ன கேப்பிங்க ?” – அவனுடைய கேலிப் பேச்சை ரசித்து இவளும் விளையாடினாள்.

 

“என்ன கேட்டாலும் கொடுப்பியா?” – மீண்டும் கீழ் பார்வையும் புன்சிரிப்புமாகப் பதில் கேள்விக் கேட்டு அவளை வாயடைக்கச் செய்தான்.

 

‘என்ன இவன்… இப்படிப் பூடகமாவே பேசி உயிரை எடுக்குறானே…!’ – அவன் செய்யும் அழும்பை ரசித்துக் கொண்டே திட்டினாள்.

 

“என்னதான் பையன் மாதிரி ஷோ காட்டினாலும்… நீ டிபிகல் தமிழ் பொண்ணு பூசணி… ஐ……. லைக் இட்…” – அவளை ரசனையுடன் நோக்கியபடிக் கூறினான்.

 

“தேங்க்ஸ் தலைவா…”

 

“நான் உன் தலைவனா?” – மீண்டும் அதே குரல்… அதே பார்வை… அதே பூடகமான பேச்சு…

 

“ஐயோ சித்து… இனி நான் தாங்க மாட்டேன்… என்னை விட்டுடுங்க… நான் அப்பீடாயிக்கறேன். பாய் பாய்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் பூர்ணிமா. அவளுடைய உடல்தான் அங்கிருந்து வெகு தூரம் ஓடியதே தவிர மனம் அவனை மட்டும்தான் சுற்றிக் கொண்டிருந்தது. பிறகு என்ன…? பூர்ணிமா ஒருவித மாய வலையில் சிக்கிக் கொண்டு கனவுலகில் சஞ்சரிக்கத் துவங்கினாள்.

 

###

 

வெளியே நவம்பர் மாத மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடிக் கொடிகளெல்லாம் மழையோடு உறவாடிக் கொண்டிருந்தன. ஆடிட்டோரியத்திற்கு அருகில் உள்ள காரிடரில் நின்று மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் சித்தார்த். அப்போதுதான் அந்தக் குரல் அவன் செவிகளில் தேனை வார்த்தது…

 

“மழையே மழையே… நீரின் திரையே…

வானம் எழுதும்… கவிதைத் துளியே…

மேகத்தின் சிரிப்பொலியே

வானவில்லிலே நிறம் ஏழு கூடி

ஊஞ்சலாடி ஓவியம் தீட்டுகின்றதே…!

இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே…!

இயற்கை…! அழகே…! ரிம் ஜிம்…!”

 

‘வாவ்…!’ – சித்தார்த் தன்னை மறந்துக் கண்கள் செருகினான்.

 

அவன் ஒன்றும் நாதம், சுருதி, ஸ்வரம், தாளம், லயம் என்று பாடலின் சூட்சமங்களையெல்லாம் புரிந்துத் தன்னை மறந்து இசைக்குள் மூழ்கிப் போகும் பெரிய இசை ரசிகனெல்லாம் கிடையாதுதான். ஆனால் குழைந்துக் குழைந்துக் காற்றில் தவழ்ந்து வந்து செவியில் மோதி உயிரைத் தீண்டிப் பார்க்கும் அந்தக் குரல்… அதிலிருக்கும் அந்தக் காந்த சக்தி…! அதை விளக்கிச் சொல்ல வார்த்தைகள் ஏது…!

 

வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழையைத் தூவானத்தில் நனைந்தபடி ஒருவன் ரசித்துக் கொண்டிருக்கிறான். அதே நேரம் எங்கிருந்தோ புல்லாங்குழலை இசைப்பது போன்றதொரு தேன் குரல் அதே மழையை ரசித்து இசைப்பாடுகிறது. உயிரற்ற ஜடப்பொருள் கூட உயிர்பெற்று ரசிக்கும் அந்தச் சூழ்நிலை சித்தார்த்தின் உள்ளத்தைத் தொட்டதில் ஆச்சர்யம் ஏது..? அவன் மெய் சிலிர்த்துப் போனான்.

 

வெளியே இயற்கைப் பொழியும் மழையை விட உள்ளே அந்தக் குரலுக்குச் சொந்தக்காரிப் பொழியும் இசை மழை அவனைக் கவர்ந்திழுக்க அவன் கால்கள் அனிச்சையாக ஆடிட்டோரியம் நோக்கிச் சென்றன. கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து மேடையைப் பார்த்தவனின் கண்கள் நிலைக்குத்தி நின்றுவிட்டன.

 

“இவளா…!!!” – ஆச்சர்யத்தில் வாய்பிளந்தான். ‘இந்த ரௌடிக்குப் பாடவெல்லாம் வருமா! அதுவும் இவ்வளவு அழகா!!!’

 

“பூமி தேகமே…

அதில்… விழும்… மழை… துளி…

இந்த உலகின் ஜீவனாகுமே….

நெஞ்சம் எங்கும் நம்பிக்கைப் பூக்கள் தோன்றும்

வரண்டப் பாறைகளை ஆக்கும் சோலைகளாய்

வானம் தந்த தானம்

இந்த மழை நீர் தானே

ரிம் ஜிம்…!”

 

அவள் இதழ் பிரித்து இசைத்த கானம் அவன் மனதில் பசைபோடாமல் ஒட்டிக் கொண்டது. அவள் பாடி முடித்த பின்னும் அவன் செவிகளில் “ரிம் ஜிம்…! ரிம் ஜிம்…!” என்கிற ஒலிக் கேட்டுக் கொண்டே இருக்க… அவன் மனதில் ஒரு மெல்லிய ராகம் இசைந்து கொண்டே இருந்தது.

 

அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாதவன் தன்னையறியாமலே “மழையே மழையே” என்று முணுமுணுத்தான். பாட்டுப் பாடுகிறானாம்…! நண்பர்கள் எல்லோரும் அவனை விசித்திர ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தார்கள்.

 

“என்னடா மச்சி… காலையிலேருந்து என்னவோ புலம்பிகிட்டே இருக்க?” – கதிர் வெளிப்படையாகவே கேட்டான்.

 

“புலம்பறேனா! பாட்டுடா… இ..சை…” – ரசித்துக் கூறினான்.

 

“ஏண்டா… பாடணும்னு ஆசைப்பட்டா ‘அட்ராட்ரா நாக்க‌முக்க‌… நாக்க‌முக்க‌…’-ன்னு ஒரு நல்ல பாட்டா எடுத்து விட வேண்டியது தானே? அதைவிட்டுட்டு எதுக்குடா இப்படி எதையோ கண்டு பயந்தவன் மாதிரி வாய்க்குள்ளயே முணுமுணுத்துக்கிட்டு இருக்க?”

 

சித்தார்த் திரும்பி நண்பனை இரக்கமாகப் பார்த்தான்.

 

“என்னடா அப்படிப் பாக்குற?”

 

“கழுதைகிட்ட போயி கற்பூர வாசனையைப் பற்றிச் சொன்னா… பாவம் அதுக்கு என்னடாத் தெரியும்?” என்று கூறிவிட்டுத் தன்னை எரித்துவிடுவது போல் நோக்கும் நண்பனின் பார்வையில் சிறிதும் பாதிக்கப்படாதவனாக அதே இனிமையான மனநிலையுடன் அந்தப் பாடலை மீண்டும் முணுமுணுக்க ஆரம்பித்தான்.

 

 
Comments are closed here.

error: Content is protected !!