மனதோடு ஒரு ராகம்-10
4899
0
அத்தியாயம் – 10
ராதாகிருஷ்ணன் சோகம் படிந்த முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார். யாழினி பயந்து போய் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தாள். தமிழி கால்களைக் கட்டிக் கொண்டு தலைக் குனிந்துக் கூடத்துச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். வசந்தாவின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
“பாவி… பாவி… எப்படிடீ உனக்கு மனசு வந்தது? குடிகாரப் பாயலாம். ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லாதவனாம். அவனைப் போய் எப்படிடீ லவ் பண்ணித் தொலைச்ச?”
“நடு ரோட்ல நிக்க வச்சு உன்னை அசிங்கப் படுத்தியிருக்கான். அதுக்குப் பிறகும் நேத்து நீ அவனைத் தேடிப் போயிருக்க. என்ன நெஞ்சழுத்தம்டீ உனக்கு!”
“பெத்தவங்க மேலக் கொஞ்சமாவது மரியாதையோ… பயமோ இருந்தா உன்னால இப்படிச் செய்ய முடியுமா? எங்களை விடு… உனக்கு அடுத்து ஒரு தங்கச்சி இருக்கான்னு நெனச்சுப் பார்த்தியாடி…?”
“நீ இப்படி ஒரு கேடுகெட்டவனைப் பிடிச்சுகிட்டு வந்தா, நாளைக்கு அவளை எவண்டித் திரும்பிப் பார்ப்பான்? இவனை மாதிரியே எவனாவது குடிகாரப் பயலுக்கிட்டத்தான் அவளையும் தள்ளிவிடணும்”
“காலேஜிக்குப் போனோம்… பாடத்தப் படிச்சோம்… மரியாதையா வீடு வந்து சேர்ந்தோம்னு இல்லாம இப்படி எங்களைச் சந்திசிரிக்க வச்சுட்டியே! உன்னையெல்லாம் படிக்க வச்சப் பாவத்துக்கு எங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்டி…” – உணர்ச்சிவசப்பட்டுத் தலையிலடித்துக் கொண்டாள்.
“அவனே உன்னை வேணாம்னு உதறித் தள்ளுரானாம். அப்புறம் நீ எதுக்குடி அவனுக்கிட்டப் போயி முட்டிகிட்டு நிக்கிற? சரிதான் போடான்னுச் சொல்லிட்டுப் படிக்கிற வேலையைப் பார்க்க வேண்டியது தானே? அதைவிட்டுட்டு இப்படி எங்க மானத்தை வாங்கிட்டுத் திரியிறியே… இது உனக்கே நல்லா இருக்காடி?” – கண்ணீர்விட்டு அழுதாள்.
தமிழி ஒரு வார்த்தைக் கூட எதிர்த்துப் பேசவில்லை. குன்றிப் போனவளாகக் குனிந்தத் தலை நிமிராமல் அமர்ந்திருக்கும் மகளைப் பார்க்கும் பொழுது ராதாகிருஷ்ணனுக்கு மனம் தாங்கவில்லை.
“வசந்தா… போதும் விடு…”
“என்னை எதுக்கு அதட்டரிங்க? இவ்வளவு பெரிய காரியத்தைச் செஞ்சுட்டு வந்து இப்படிக் கமுக்கமா உட்கார்ந்திருக்கா… இவளை என்னன்னுக் கேட்காம என்னையே அடக்கப் பார்க்குரிங்களே…! நீங்க கொடுக்கறச் செல்லத்துலத் தான் இவ இப்படிப்பட்ட காரியத்தையெல்லாம் துணிஞ்சுச் செய்யிறா”
“சின்னப்புள்ள… ஏதோ வயசுக் கோளாறுல செஞ்சுட்டா. அதுக்காக எப்பவும் திட்டிகிட்டே இருந்தா அவ மனசுத் தாங்குமா? பாரு எப்படி ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருக்கான்னு. செஞ்சத் தப்பை நெனச்சு அவளும்தானே வருத்தப்படுவா… நீ மேல மேல நோகடிச்சா என்ன அர்த்தம். அந்தப் பையனால இனி நம்ம வீட்டுல எந்தப் பிரச்சனையும் வராது. நம்ம தமிழு அதுக்கு விடமாட்டா… நீ பேசாமப் போயி உன் வேலையைப் பாரு…” என்று மனைவியை அடக்கியவர்,
“அம்மா தமிழு… நீ எழுந்துப் போயி முகத்தைக் கழுவிட்டு காபி, டி ஏதாவது சாப்பிடு…” என்று மகளையும் சமாதானம் செய்ய முயன்றார்.
அதுவரை தலைகுனிந்து அமர்ந்திருந்தவள் மெல்லத் தந்தையை நிமிர்ந்துப் பார்த்தாள். முகத்தில் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தன.
“என்னம்மா…?”
“என்னால ரவியை மறக்க முடியாதுப்பா… எனக்கு அவர்தான் வேணும்…” – அழுகை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக ஒலித்த அவளுடைய குரலில் இருந்த உறுதியில் குடும்பத்தினர் அனைவரும் திகைத்துப் போனார்கள்.
###
“என் செல்லா… என் தங்கா… என் முத்தா…”
“என்ன மேடம்…? இன்னிக்குக் கொஞ்சலெல்லாம் ஓவரா இருக்கு?”
“ஏன்..? என் புஜ்சுகுட்டிய நான் கொஞ்சக் கூடாதா? அப்படிதான் கொஞ்சுவேன்…” – பத்து கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கும் சித்தார்த்தை ஃபோனில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.
“புஜ்சுக்குட்டி… பூனைக்குட்டின்னுச் சுத்தி வளைக்காம மேட்டருக்கு வா பூசணி”
“மேட்டரா? அதெல்லாம் ஒண்ணும் இல்லையே…”
“ஒண்ணும் இல்லையா! ஒண்ணுமே இல்லையா? சோழியன் குடுமிச் சும்மா ஆடாதே!”
“ஹி ஹி… சித்து….”
“அதானே பார்த்தேன்…. சொல்லு…”
“நாளைக்கு வெளியே போகலாமா?”
“நாளைக்கா! நாளை மறுநாள் எக்ஸாம் பூசணி….”
“அது நாளை மறுநாள் தானே. நாளைக்கு என்ன பண்ணப் போற? கூட்டிட்டுப்போ சித்து….”
“படிக்க வேண்டாமா? ஃபைனல் எக்ஸாம் பூசணி. வச்சிருக்க அரியர்ஸ் எல்லாம் இந்த எக்ஸாம்ல க்ளியர் பண்ணினாதான் வேலைக்குப் போக முடியும். வேலைக்குப் போனாத்தான் சம்பாதிக்க முடியும்… சம்பாதிச்சாத்தான் உங்க அப்பாகிட்டப் பொண்ணுக் கேட்டு உன்னைக் கல்யாணமும் பண்ணிக்க முடியும். புரியுதா?”
“அதெல்லாம் புரியுது. ஆனா உனக்கு எக்ஸாம் முடிஞ்சுட்டா நீ காலேஜ் பக்கமே வர மாட்ட. நானும் செமஸ்டர் ஹாலிடேஸ்ல ஊருக்குப் போய்டுவேன். சோ ப்ளீஸ் சித்து… நாளைக்கு மட்டும்தான். அப்புறம் உன்னைத் தொந்தரவுப் பண்ண மாட்டேன். என் செல்லம்ல… என் புஜ்ஜுல்ல…”
“ஐய்யைய… மறுபடியும் ஆரம்பிக்காத…. பக்கத்துல இருக்கும் போது ஸ்டன்ட் மாஸ்டர் மாதிரி ரியாக்ஷன் கொடுப்பா…. போன்லக் கொஞ்ச வந்துட்டா…”
“அப்போ நாளைக்கு பிளான் கன்பார்மா…?”
“இல்லைன்னா நீ விட்டுடுவியா? காலையிலப் பத்து மணிக்கு மெயின் கேட்டுக்கு வந்துடு…”
“தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ…” – பூர்ணிமா உற்சாகமாகக் குதிக்கச் சித்தார்த் சிரித்துக் கொண்டே போனை கட் செய்தான்.
மறுநாள் சொன்னது போலவே கல்லூரியின் மெயின் கேட்டிற்கு வந்து பூர்ணிமாவை அழைத்துக் கொண்டான்.
“எங்க போகணும்?”
“முதல்ல தலைவர் படத்துக்குப் போறோம்…. பதினோரு மணிக்கு ஷோ…”
“டிக்கெட்?”
“அதெல்லாம் ஆன்லைன்ல புக் பண்ணிட்டேன்”
“அடுத்து?”
“அடுத்து ஒரு நல்ல ஹோட்டல போயிச் சாப்பிடறோம்”
“சாப்பாடை விட்டுக்கொடுக்க மாட்டியே… அடுத்து?”
“அடுத்துக் கொஞ்சம் ஷாப்பிங்… அப்புறம் ஈவினிங் கொஞ்ச நேரம் பீச்சுக்குப் போறோம்….”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன…? என்னைக் கொண்டு வந்து ஹாஸ்ட்டல்ல விட்டுட்டு நீ போயி படி…”
“உனக்குப் படிக்கிற ஐடியால்லாம் இல்ல போலருக்கு…”
“அதான் இன்னும் மூணு வருஷம் இருக்குல்ல… பொறுமையாப் படிச்சுக்கலாம்…”
“நல்லது…” – என்றபடி அக்சிலேட்டரை முறுக்கினான் சித்தார்த். பூர்ணிமாவின் விருப்பப்படி அன்று முழுவதும் அவளுக்கு சென்னையைச் சுற்றிக் காட்டினான். அவள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்தான். மாலையில் சிறிது நேரம் பீச்சில் அமர்ந்து வருங்காலத்தைப் பற்றி அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிப் பேசினான். அவள் அதில் பெரிதாக ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் சுண்டலைச் சுவைத்துக் கொண்டே ‘உம்’ கொட்டினாள். பிறகு அவளை ஹாஸ்ட்டலுக்கு டிராப் செய்வதற்காக வந்தான். கல்லூரி வளாகத்தில் லேடிஸ் ஹாஸ்ட்டலுக்குச் செல்லும் வழியில் அவளை இறக்கிவிட்டான்.
“இனி போயிடுவியா பூசணி?”
“ம்ஹும்…”
“இன்னும் என்ன?”
“சி…த்…து…”
“சொ…ல்…லு…”
“இன்னும் ஒரு வாரத்துக்கு…. எக்ஸாம் முடியிற வரைக்கும் உன்னைக் கண்ணுலையே பார்க்க முடியாது…”
“அதுக்கு…”
“பெருசா ஒரு ஹக்… சின்னதா ஒரு கிஸ்… கொடுத்துட்டுப் போ… அப்புறம் உன்னைத் தொல்லைப் பண்ணவே மாட்டேன்…”
அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. மெல்லிய புன்னகையுடன் வண்டியிலிருந்து கீழே இறங்கிக் கைகளை விரித்துக் கண்களால் அவளை அழைத்தான். நொடியில் பாய்ந்து வந்து அவனுடைய அகன்ற மார்பில் ஒன்றிக் கொண்டவளை இறுக்கமாக அணைத்து மெலிதாக நெற்றியில் இதழ் பதித்தான்.
“அட… அட… அட… என்ன ஷாட்…! என்ன சீன்…! சூப்பர் மச்சி…” – எங்கிருந்தோ கையில் செல் ஃபோன் கேமிராவுடன் அவர்கள் முன் தோன்றினான் சதீஷ்.
அவன் பேசிய விதத்திலும்… கையில் செல் போனைப் பிடித்திருந்த விதத்திலும் தாங்கள் நெருக்கமாக இருந்ததை மறைந்திருந்து படம்பிடித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சித்தார்த்தின் விழிகள் சிவந்தன. அவனை அடித்துத் துவைத்து நார்நாராய் கிழித்துவிடும் வேகத்தில் கிளர்ந்தெழுந்தான். ஆனால் அவனுக்கு வேலை வைக்காமல் ஒரே நொடியில் பூர்ணிமா கொடுத்தாளே ஒரு ரியாக்க்ஷன்…! ஆண்கள் இருவரும் கலங்கிப் போனார்கள்
Comments are closed here.