Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 6

அத்தியாயம் 6:

வீடெங்கும் மாவிலை தோரணம் கட்டப்பட்டு புத்தாடைகள் உடுத்தி அழகிய இரு மண் பானைகளில் வெண்ப்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் கிழக்கு பக்கமாக செவ்வனே பொங்கியது. பொங்கல் பொங்கிவரும் பொழுது,

 

“பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என்கின்ற கோஷம் அந்த கூட்டத்தையே பிளந்தது. பெண்களின் குலவையொலி மிகவும் அழகாக இருந்தது. எல்லாம் ஏதோ புதிதாக நடப்பது போல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருதாள் ரம்யா. அவ்வப்பொழுது பாஸ்கரனின் பார்வை தன் மீது படிவதை அவளால் உணரமுடிந்தது. குனிந்து தன் ஆடை அணிமணிகளை சரிப்பார்த்தாள். முதன்முதலாக தாவணி கட்டுவதால, சரியாக கட்டவில்லையோ என்ற சந்தேகம் கூட அவளுக்கு வந்துவிட்டது.

 

எப்பொழுதும் சுடிதார்தான் அணிவாள். கல்லூரியில் விழா என்றால் புடவை…  அதுவும்  வீட்டில் வேலை செய்யும் கோமதி கட்டிவிடுவாள். தாவணி அவள் கட்டிராத உடை, சுகுணா  தான் தன் தாவணியை கொடுத்து வற்புறுத்தி கட்ட வைத்தாள். நாம் ஏதோ அரைகுறையாய் உடுத்தியிருக்கிறோம் போல் தோன்றுகிறது, இல்லையென்றால் இந்த கரார் பாஸ்கரன்  ஏன் நம்மை அடிக்கடி  பார்த்துக் கொண்டிருக்கிறான். பின் தனியே ஏதேனும் பழமொழி கூறி கொடுமைப்படுத்துவான் என்றுணர்ந்து பொங்கல் பொங்கி சாமிக்கு படைத்ததும் உடனே உடைமாற்றி திரும்பினாள். அப்போதுதான் நிம்மதியாக உணர்ந்தாள்.

 

ஆனால் பின்னோடு “ஏன் தாவணி நன்றாகத்தானே இருந்தது” என்று பாஸ்கரனின் குரல்கேட்டு படபடத்து எழுந்தவள் அங்கே எதிரில் கிடந்த ஆட்டுக் கல்லின் மீது வேகமாக மோதிக் கொண்டாள். கட்டை விரலில் நகம் உடைந்து இரத்தம் வழிந்தது.

 

இடித்த வேகத்தில் அம்மா!!! என்று அலறிக் கொண்டு விழப்போனவளின் கரம் பற்றி சட்டென தன் புறமிழுத்து நிற்க வைத்தான் பாஸ்கரன். அப்படிச் செய்ய வில்லையென்றால் ஆட்டுக்கல்லிற்கு அடுத்ததாக போடப்பட்டிருந்த உரலில் மேல் அவளது முகம் பட்டு பெரிய சேதமாகி இருக்கும்.

 

அந்த நிலை தான் தனக்கு ஏற்பட்டு விட்டது என்று நினைத்து கண்களை இருக மூடிக்கொண்ட ரம்யாவின் காதோரம் ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை   என்று பாஸ்கரனின் குரல் வெட்பமாய் கேட்டது. சட்டென விழி விரித்தவள் தான் அவனது பிடியிலிருக்கிறோம், என்பதை உணர்ந்து திமிரினாள். ஆனால் அவளின் திமிரலுக்கு பயனில்லை, அவனது பிடி அத்தனை அழுத்தமாக இருந்தது. “விடுங்கள் என்னை” என்றவளின் குரல் நடுங்கியது.

 

“எதற்கு? இப்படி கைகால்கள் தந்தியடிக்கும் பொழுது  நான் விட்டு விட்டால் நேராக உரலில் விழுந்து உன் மன்டையை உடைத்துக கொள்ளலாம் என்கின்ற உத்தேசமா… தற்கொலை செய்வது தான் உன் நோக்க மென்றால் அதற்கான இடம்  இதுவல்ல” என்று கடினமாகவே பேசினார்.

 

அதற்குள் அவளது அம்மா!! என்ற அலறலை கேட்டு சுகுணாவும், பார்வதியும் ஓடி வந்தார்கள். நல்ல வேலையாக அவர்கள் கண்களில் பாஸ்கரன் ரம்யாவை நெருக்கமாக பிடித்திருந்தது பதியவில்லை ரம்யாவின் கால்களில்  வழிந்த ரத்தம் தான் பதிந்தது.

 

“அய்யோ ரத்தம்… என்ன ரம்யா இது “என்று அவள் கால்களை தொட்டாள் சுகுணா.

 

பார்வதி வேகமாக ஒரு நாற்காலி கொண்டு வர அதில் ரம்யாவை அமரவைத்தவன். உள்ளே சென்று முதலுதவி பெட்டியுடன் வந்தான். தண்ணீரால் கால்களை  கழுவியதும் அதில் மருந்து தடவி கட்டுப் போட்டு முடித்தான். அவளுக்கு வலிக்காத அளவு மிக மென்மையாக கட்டுப் போடப்பட்டதை வியந்து நோக்கினாள். தற்கொலை பற்றி பேசியவனா இவன். மூளைக்குள் ஏதோ  மணியடித்தது. நெஞ்சில் நெரிஞ்சி முள் அழுத்தமாக பதிந்தது.

 

இன்று மாட்டுப்பொங்கல்….. வீட்டில் இருக்கும்  மாடுகளை குளிப்பாற்றி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி அவைகளுக்கு மாலை அணிவித்து அன்று முழுவதும்  மாடுகளுக்கான நாளாக விளங்கியது. மாலையில் ஜல்லிக்கட்டு என்றார்கள்!

 

இதுவரை ரம்யா ஜல்லிக்கட்டை பார்த்ததில்லை. அதனால் அவளது மனம் துள்ளிக் குதித்தது. மக்கள் மைதானத்தில் ஒன்றுகூடினார்கள். அந்த கூட்டத்தை பார்த்ததும் அவளுக்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு பரவுவதை அவளால் உணரமுடிந்தது. ஆவலாக வேடிக்கை பார்க்கலானாள்.

நாட்டாமைதான் ஒலிப்பெருக்கியில் பேசினார்.

 

“ஊர் மக்க எல்லாருக்கும் இந்த நாட்டாமையோட வணக்கம். இன்னைக்கு இங்க வீரர்களின் விளையாட்டும், நம்ம மண்ணின் பாரம்பர்ய சவாலான ஜல்லி கட்டும் ஆரம்பமாக போவுது. விருப்பம் இருக்குற இளம் காளைகள் நிஜக்காளைகளை அடக்கலாம். அப்படி அடக்கும் காளைகளின் கொம்புல கட்டிவிட்ட பணப்பரிசை எடுத்துக்கலாம். சரிதானா” என்று முடித்தது தான் தாமதம் ஒருபெரும் ஆரவார ஒலி எழுந்து நின்றது.

 

“ஆங்… ஆரம்பிக்கலாம்பா…” என்று நாட்டாமை உத்தரவு கொடுக்கவும் சங்கு முழங்கப்பட்டது. உடனே காளைகள் அந்த மைதானத்திற்குள் விடப்பட்டன. இளைஞர்கள் ஆளுக்கொரு காளையாக அடக்க முயற்சிக்க உள்ளே பாஸ்கரன் நின்றதை அப்போது தான் ரம்யா கவனித்தாள்.

 

இருதயம் படபடக்க விழிவிரித்தவள் தன் கண்ளையே நம்ப முடியாமல் தவித்தாள். ‘ஏன்., பாஸ்கரன் இதிலெல்லாம் கலந்து கொள்கிறார். மாடு முட்டிவிட்டால்?  ஏன் மற்றவர்களை முட்டினால் பரவாயில்லையா?  அவளது உள்மனம் கேள்வி எழுப்ப அதற்கான விடையை அவள் உள்ளம் உணருமுன் நினைவுகளை மாற்றினாள். ச்சே… தெரிந்தவர் என்பதால் வந்த பயம் அவ்வளவுதான் உள்ளுக்குள் உரைத்தவளின் காதுகளில்,

 

“கமான் அண்ணா கமான்… ம்..,ம்..!” என்று சுகுனாவின் குரல் காதுமடலை கிழிக்கும் அளவு கேட்டது.

 

“ஏய்… கொஞ்சம் மெதுவாகடி…. உன் சத்தத்தில் மாடுகளெல்லாம் மிரண்டு எல்லோரையும் முட்டிவைக்கப் போகிறது”

 

“எல்லாம் எங்களுக்குத் தெரியும் நீ வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்” என்றவள் மீண்டும் “கமான் அண்ணா” ராகம் பாட ஆரம்பித்து விட்டாள்.

 

கடுமையான போராட்டத்திற்குப்பின் பாஸ்கரன் அந்தக் காளையை அடக்கி பரிசையும் வென்று விட்டான். அவனை போலவே இன்னும் சிலரும் வெற்றிபெற எல்லோரையும் பாராட்டி பேசிய நாட்டாமை சபையை கலைத்தார். அவரவர் வீடுகளிலிருந்து பொங்கப்பட்டு எடுத்துச் சென்ற பொங்கலை முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து எல்லோரும் பகிர்ந்து உண்ட பிறகு கலைந்தனர்.

 

வீடுவந்து சேர்ந்தவர்கள், அவரவர் அறைக்குள் சென்றுவிட ரம்யாவிற்கு மட்டும் அறைக்குள் அடைய என்னவோ போல் இருந்தது  அதனால் சற்று நேரம் மொட்டை மாடியில் உலவலாம் என்ற எண்ணம் தோன்ற மாடிக்குச் சென்றாள்.

 

நிலவொளி  அழகாகவே இருந்தது ஆங்காங்கே தெரிந்த நட்சத்திரம் என்னவோ நிலவை பார்த்து கண்சிமிட்டுவது போல் தோன்றியது. பூமியை தவிர இது போலவே இந்த வானவெளியில் வேறு கிரகம் இருக்கக்கூடுமா?  அதில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறு உண்டா?  அப்படி வாழ்ந்தால் அவை எப்படி இருக்கும்? ஆங்கிலப்படங்களில் வருவது போல் கொடூரமாக இருக்குமா?  இப்படி பலபல கேள்விகள் எழ வானத்தையே வெரித்திருந்தாள் ரம்யா.

 

“வானத்தில் இன்று புதிதாக வெளிவந்திருக்கும் விக்ரம் நடித்த “ஐ” படம் காட்டுகிறார்களோ?” என்று கேலிக்குரல் கேட்டு திரும்பியவள் யூகித்தது போல் பாஸ்கரன் தான் ஆகாயத்தை அவளோடு ஆராயும் பார்வையில் நின்றான்.

 

“ம் உங்களுக்கு தெரியாதா?  நல்ல சீன் வரும்போது டிஸ்டர்ப் செய்து விட்டீர்களே?”

 

“எங்கே? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே”

 

“அது… அறிவாளிகளுக்கு மட்டுமே தெரியும் பிரின்டாம். படம் போடுவதற்கு முன்பே நிலவுப்பெண் ஒலிப்பெருக்கியில் தெரிவித்து விட்டாள்!!”

 

“அம்பேல்” என்பது போல கை உயர்த்தி சிரித்தான் பாஸ்கரன்.

 

“பெண்களிடம் ஜெயிக்க இன்னொரு பிறவி தான் எடுக்க வேண்டும்”

 

“பெண்கள்!!! அதாவது பன்மை., அப்படியானால் உங்கள் முழுநேர வேலையே பெண்களிடம் வம்பு பேசுவது தானா?”

 

“அடடா… உன்னை கற்பூரபுத்தி என்று கூறிய என் தங்கையை முதலில் இரண்டு குட்டு குட்ட வேண்டும்”

 

“ஏனோ!!” என்றாள் மிடுக்காகவே

 

“நீ ஒருத்தியே நூறு பேருக்கு சமம் என்பதைத்தானே நான் அப்படி கூறியது!!  அறிவு கொஞ்சம் மட்டுதான்” என்றான் பரிதாபமாக.

 

கோபமுடன் ஏதோ பேச வாயெடுத்தவள், அவன் கைகளில் இருந்த புத்தகத்தின் பெயரை பார்த்ததும் விழிவிரித்தாள்.

 

‘JOURNEY TO THE CENTER OF THE EARTH” (A WORLD UNDER THE WORLD)’

 

“வாவ்… பெயரே அற்புதமாய் இருக்கிறதே கொடுங்களேன் பார்க்கிறேன்” என்று ஆவலாக கை நீட்டினாள்.

 

“நல்ல மழுப்பல்” என்றவன் அவள் கைளில் புத்தகத்தை வைத்தான்.

 

“இப்போது தான் நான் இந்த வின்வெளியில் வேறு உலகம் இருக்க முடியுமா?  என்று யோசித்துக்கொண்டிருந்தேன், அதற்கேற்றார் போல் உங்கள் கைகளில் இந்த புத்தகம், நான் படிக்கலாமா?”

 

“அதற்காகத்தானே கொடுத்தேன், உனக்கு ஒன்று தெரியுமா?  இப்போது பூமிக்குள் இன்னோரு பூமி இருக்கலாம் என்பதற்கு சிலசான்றுகள் கிடைத்திருக்கிறது. அதன்அடிப்படையில் ஆராய்ச்சிகளும் நடக்கிறது”

 

இதனை கேட்ட ரம்யாவிற்கு ஆச்சர்யம், ‘என்ன மனிதன் இவர் வேப்பங்குளம் என்னும் கிராமத்தில் இருந்துகொண்டு சமீபத்திய ஆராய்ச்சி பற்றி புட்டு புட்டு வைக்கிறார், இவரை எந்த கணக்கில் வைப்பது?’ என்று யோசனை ஓட புத்தகத்தின் வண்ணப் படங்களை ஆவலாக பார்க்கலானாள்.

 

அதனை பார்த்த பாஸ்கரனுக்கு ஒருகேள்வி எழுந்தது.

 

“ஒரு சின்ன சந்தேகம்…. கேட்கலாமா?” அவன் கேள்வியில் உள்ளுக்குள் விழித்துக் கொண்டாள் ரம்யா.

 

‘அடடா என்னத்தை கேட்கப் போகிறார்? மனம் நிணைக்க,

 

“ம் ” என்று தலையசைத்தவள் கையில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டி தன் கவனத்தை அதில் முன்பைவிட பலமாக செலுத்திக் கொண்டிருப்பது போல் நடித்தாள்.

 

“என் தங்கை சுகுணா எப்பொழுது பார்த்தாலும் காதல் கதைகள் தான் படிப்பாள். கேட்டால் “வயதிற்கேற்ற கதை அண்ணா, பின்னே உன்னை போல் கார்ல் மார்க்சும், ஹிட்லரும், அம்பேத்காரும், காந்தியும், விவசாயமும் படிக்கச்சொல்கிறாயா?  சுத்த போர்!  நீயும் உன் ரசனையை மாற்றிக்கொள் அல்லது வருகிற அண்ணி பாவம்” என்பாள்.

 

“நீயும் அவள் வயதை ஒத்த பெண்தானே?  நீ என்னடாவென்றால், குழந்தைகள் போல் பிக்ஷன் படிக்க ஆசைபடுகிறாய்?” – கேட்டு முடித்தவனின் பார்வை கூர்மையாக ரம்யாவின் முகத்தில் படிந்தது.

 

பக்கங்களை புரட்டியவள் “அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டுமே சார்” முடிக்கையில் சட்டென உதடுகடித்தாள். உடனே மாற்றி, “சிறுவயதிலிருந்தே இது போன்ற கதைகள்தான் சார் பிடிக்கும், ஒருவேளை எனக்கும் சுகுணாபோல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால்…..” அதற்கு மேல் பேச நா எழவில்லை, எச்சரிக்கையாக பேசவேண்டுமென்று ஏடாகூடமாக பேசிவிட்டாள். கண்களில் கண்ணீர் திரைகட்டி நின்றது. எதிரில் நின்ற பாஸ்கரன் மங்கலாய் தெரியவும் சுதாரித்தவள்…

 

“சாரி சார் ” என்றுவிட்டு கீழே படிகளில் இறங்கிச் சென்றாள்.

 

“அட நம்ம இப்ப என்னத்தை கேட்டுபுட்டோம்னு இந்த புள்ள இப்படி தலைதெரிக்க ஓடுது” என்று தாடையில் கைவைத்து தேய்த்துக் கொண்டே சிந்தித்த பாஸ்கரனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

சாத்திய கதவுகளுக்கு பின்னால் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

 

“எப்படி மறந்தேன். என் கடந்த காலத்தை நான் எப்படி மறந்தேன். மறக்கக்கூடிய விஷயமா அது…? தினம் தினம் நெரிஞ்சிமுள்ளாய் குத்திக்கிழிக்கிறதே, அப்போதுமா மறந்துவிட்டது?  இந்தச் சூழலில் மறந்திருக்கும்தான், மறந்ததும் நன்றாகத்தானே இருந்தது. இப்போது நினைக்கையில் இருதயத்தில் பாராங்கல்லை வைத்தார் போல் கனக்கிறதே. மூச்சு முட்டுகிறதே, உயிர் போகும் வலியை ஏற்படுத்துகிறதே. கசப்பான சம்பவம் என்று மறக்கவும் முடியவில்லை, இனிது இனிது என்று ஏற்கவும் முடியவில்லை. கடவுளே!!!  என்னை சோதித்துக்கொண்டே இருப்பதில் உனக்கு என்ன லாபமோ?” அழுது கறைந்து எப்போது தூங்கினாள் என்பது ரம்யாவிற்கே தெரியாது.

 

ஆனால் இங்கே பாஸ்கரனுக்கு துளியும் உறக்கம் வர மறுத்தது. இந்தப்புள்ள ரம்யாகிட்ட ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு. இந்த வயசு பிள்ளைகள்கிட்ட இருக்குற ஒரு சந்தோஷம் கொஞ்சம் கொரச்சலாதான் இருக்கு. ஆனா அது வெளிய தெரியாம இருக்க வாய்த்துடுக்கா பேசிகிட்டு திரியுரா போலருக்கு. அது என்னவா இருக்கும்?  யோசித்து யோசித்து பாஸ்கரனின் சித்தம் கலங்கியது தான் மிச்சம். தலைகால் புரியவில்லை.

 

‘அந்த பொண்ணு மேல ஒரு கண்ணு வெக்கனும்.,எதுவோ சரியில்லை’ மனதிற்குள் நினைத்தவன் பின் மெல்ல உறங்கலானான்.
Comments are closed here.