Vedanthangal epi 6
1596
2
மசூத் கைபேசியை வாங்கி பேச ஆரம்பித்தான்.. கோபி கவலைப்பட வேண்டாம். என்னை எத்தனை வருஷம் உனக்குத் தெரியும்.. பிறகு ஏன் கவலைப்படுறீங்க. என்கூட ஸ்ரீ இருக்கும்போது யார் அவள்கிட்ட நெருங்க முடியும்? நான் ஸ்ரீயை பார்த்துக்கிறேன். ”
“ம். கவனம். இது வெங்கட் கேஸ். அதான் திரும்பத் திரும்ப சொல்றேன்.” என்று கோபி எச்சரிக்கை செய்தான்.
பழையதை நினைக்காதே என்று ஏ.எஸ்.ஐ கோபிநாத் கூறினாலும் அடங்காத கொஞ்சமும் அடங்காத ஸ்ரீ மனம் பழையதை நினைக்கத் தொடங்கியது.
அவளிடம் “ஏய் உனக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு?” என்று ராஜன் கேட்டுவிட்டு அவள் கைகளைப் பிடித்ததை அருகில் நின்ற ஏட்டையா சங்கடமாக முகம் சுளித்ததை அவள் உயிர் உள்ளவரை அவளால் மறக்க முடியமா? ராஜனை மனம் நிறைய நிரப்பிக்கொண்டு பிரிந்த காரணத்தைதான் மறக்க முடியுமா?
இல்லை பவித்ரா அவளைவிட்டு காணாமல் போனபிறகு அருகில் கண்களில் படும் அனைத்து ஆண்களையும் பற்களால் கடித்து குதறிட துடித்த அந்த கொடிய நாட்களும்தான் ‘மறந்துபோ’ என்றதும் அது தாயின் கருவறை மாதங்களாகிடுமா?
நான்கு வருடம் முன்பாக அவளை கொன்று வதைத்த நினைவுகள் நேற்றுதான் நடந்ததுபோல அவள் முன்பு சின்னஞ்சிறு குழந்தை முன்பாக கத்திகொண்டு மிரட்டும் ஈவு இரக்கமற்ற திருடன் போல மிரட்டியது.
நான்கு வருடங்களுக்கு முன்பாக…
ஸ்ரீ. . . . .
பணம். . .
பத்து ரூபாய் தாளுக்கு எவ்வளவு மவுசு? பத்து ரூபாய் கிடைக்கும் என்றால் ஒருவன் ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள்… அவனுக்கு அந்த பத்து ரூபாய் தேவையில்லாமல் இருந்தால்கூட ஒரே ஒரு சின்ன பொய்தானே? சொல்லிவிடுவான். ஐம்பது ரூபாய் தாளுக்கு எவ்வளவு மவுசு? ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்றால்? சும்மா ஒரு ஏழெட்டு பொய் சொன்னால்.. ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்றால்? அந்த ஐம்பது ரூபாய் அவனுக்குத் தேவையில்லாமல் இருந்தால்கூட ஏழெட்டு பொய்தானே?
சொல்லி விடுவான்.
ஆனால் அந்த பத்தும் ஐம்பதும் மிகத் தேவை என அலைந்து திரிபவன் முன்னால் ஐநூறு ரூபாய் நீட்டினால்? ஒன்றென்ன? ஏழென்ன? டின் டின்னாக வண்டி வண்டியாக பொய் சொல்வான். அவனுக்குத் தெரியாது ஐநூறு ரூபாய் சம்பாதிக்க ஆயிரம் நல்வழிகள் உண்டு என்று அவனுக்குத் தெரியாது.
அரை மணிநேரத்தில் பத்து பக்கம் டைப் செய்து ஐநூறு எண்ணலாம். இல்லை இருக்கவே இருக்கு ஒவ்வொரு தெருவிலும் ஒரு பாஸ்ட்புட் கடை. அதில் வெங்காயம் வெட்டிக்கொடுத்தாவது ஐநூறு பைக்குள் திணிக்கலாம். ஒரு வாசல் மூடினால் மறு வாசல் திறக்கும். பல வாசல் தேடிப் போக தெம்பும் துணிவும் தான் தேவை.
இதை போதிக்கத் தெரியாத துஷ்டர்கள் அவனிடம் இது மோசமான உலகமடா. இந்த வேலையில் காசு தேருமா?
‘ஐஞ்சுக்கும் பத்துக்கும் நானே லாட்டிரி அடிக்கிறேன். வேலை வேணும்மா? போப்பா.’ என்று துஷ்டர்கள் அவன் அவன்மீது வைத்த நம்பிக்கையையே பிடுங்கிப் போடுவார்கள்.
அவன் பயந்தே போவான். அவன் அவள் என்றால்? அதாவது அது ஒரு பெண்ணாக இருந்தால்? அழகாக இருந்தால்? அவளுக்கு வழிகாட்டும் விரல்கள் நிச்சயம் கோணலான அஷ்டகோணலான வழிகள் நிறைய காட்டிடும். அழகான சத்தான புளிப்பைவிட அழுக்கான இனிப்புதானே நாவு கேட்கிறது?
சத்துமிக்க நெல்லிக்காயைவிட அழுக்கான சர்க்கரையை வாரி வழங்கும் கரும்பைத் தானே நாவு கேட்கிறது? அவள் தடம் புரள நிறைய வாய்ப்புண்டு. அப்படி தடம் புரண்டு ஒரு ஏமாற்றுக்காரனால் ஏமாற்றப்பட்டு ஒரே ஒரு பெண் பிள்ளை பெற்றவள் ஸ்ரீயின் தாயார். அந்த தாயார் தனது மகள் ஸ்ரீக்கும் அதே அஷ்டகோணலான பாதையையே காண்பித்துவிட்டாள்.
குப்பன் வேசியின் வீட்டிற்குப் போனாலும் அவன் குப்பன் தான். அவன் பெயர் மாறுவதில்லை. சுப்பன் வேசியின் வீட்டிற்குப் போனாலும் அவன் சுப்பன் தான். அவன் பெயர் மாறுவதில்லை. (பல வேசிகளைப் பார்த்தாலும் அவன் பெயர் மாறுவதில்லை.)
அந்தோ பரிதாபம். அந்த பெண் பெயர் தான் தொலைந்து ‘வேசி’ ‘அயிட்டம்’ என்றாகிவிடுது. அவளுக்கும் தேவைதான். மூளையைக் கடன் கொடுத்தவளுக்குத் தேவைதான். ஆம்! தன்மானம் தொலைத்தவள் அடையாளம் இழக்க வேண்டியதுதான்.
ஸ்ரீ தனது தவறை தவறு என்று உணராது வாழ்ந்த நாட்களில் பவித்ராவே அவள் ‘தோழி’ ‘உடன்பிறவா தமக்கை’ ‘ரகசிய டைரி’ மனதின் எண்ண ஓட்டங்களைக் கணிக்கும் ‘ஜோதிடன்’!
ஒரு அழகிய திங்களில் இருவரும் பேசிக்கொண்டனர். ஸ்ரீயும் பவித்ராவும் பேசிக்கொண்டனர்.
“பவி இந்த துளசிச் செடி தளிர்க்கவே மாட்டிக்குது. பேசாமல் மருதாணி செடியை அதன் இடத்தில் வைப்போமா? ”
“ஹ_ம் ஹ_ம் போப்பா! துளசி மாலை கட்டித் தான்னு உன் அம்மா எப்ப பாரு கேட்டுக்கிட்டே இருக்காங்க. அவுங்களுக்கும் துளசி மாலை பிடிக்குமாம். சாமிக்கு போடணுமாம். எனக்கும் துளசி வாசனை ரொம்ப பிடிக்கும். செப்டம்பர் மழையில் எப்படி தளிர்க்குதுன்னு பார். புதர் போல தளிர்க்கப் போகுது. நம்மால் அதை பறித்து பூமாலை கட்டி மீள முடியாது. நீ தான் அந்த மாலையைக் கட்டப்போற பார் ஸ்ரீ. உன் கட்டுதான் நெருக்கமாக இருக்கும். உன்னை சரம் சரமாக கட்ட வைத்து நான் படுத்துக்கிட்டே வேடிக்கை பார்ப்பேனே! ”
“ஓ! கட்டிடலாம் பவி. பூமாலை கட்டத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமே.. நீ படுத்துக்கிட்டே வேடிக்கை பாரு. பவி உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே.. ” என்று சொன்னவள் கேள்வி எதுவும் கேட்காமலே அமைதியாக இருந்தாள். கேட்பதற்கே தயங்கித் தயங்கி நின்ற ஸ்ரீ பவித்ராவிடம் ஒருவழியாக கேட்டேவிட்டாள்.
“பவித்ரா இங்க வாயேன். ஒரு ஐநூறு ரூபாய் இருக்குமா? ”
“இருக்கும் ஸ்ரீ. எதுக்கு கேக்கிற? ”
2 Comments
👌 👌 👌 super
Thanks sir