Share Us On
[Sassy_Social_Share]Vedanthangal epi 11
1343
2
ஸ்ரீ தன் அம்மாவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லப் போவதாகச் சொல்லிச் சென்றாள். பவித்ரா ஹேம்நாத்துடன் ஒரு பலசரக்கு கடையில் நின்று கொண்டு அவனிடம் கமிஷன் பணம் கொடுத்தபோது அவள் செல்பேசி அடித்தது.
திலிப்பாக இருக்குமோ என்று ஆசையாக எடுத்து “ஹலோ” என்றாள்.
“பவித்ரா வா?” என்று கேட்ட குரல் திலிப் அல்ல என்று அவளிடம் காண்பித்தபோது சுவாரசியமே இல்லாமல் “ஆம் ” என்றாள்.
அவள் பதில் சொன்னது தான் தாமதம் ஐந்து பேர் ஹேம்நாத்தை இடித்துத் தள்ளிவிட்டு பவித்ராவை தூக்கி ஒரு மாருதி ஆம்னி வேனிற்குள் போட்டனர்.
அவர்கள் மூன்று மணி நேரமாக செய்த சித்ரவதைகளை தாங்கவே முடியாமல் தாங்கியவள் அவர்கள் “கௌன்சிலரின் நாற்பது லட்சம் எங்கடி வச்சிருக்க? ” என்று கேட்டபோது சுரனையே இல்லாமல் இருந்தாள். மூன்று மணி நேரத்தில் தான் பிணமாகிப் போனதை உணர்ந்தவள் அதன்பிறகு உயிர் இருந்தபோதும் வாய் திறக்காத பிணமாகவே மாறிப்போனாள். அவர்கள் எவ்வளவோ வதைத்தபோதும் தன்னிடமிருந்த பணத்தைப் பற்றி வாயே திறக்கவில்லை.
அவள் இருந்த காருக்கு அருகே ஒரு போலிஸ் ஜீப் கடந்து போக எங்கிருந்தோ வரவழைத்த சக்தி கொண்டு காரின் கதவைத் திறந்து குதித்தாள்.
போலிஸ் ஜீப் நின்றது. அதிலிருந்து இறங்கிய ராஜன் பவித்ராவின் அருகே வந்து நின்றபோது மாருதி ஆம்னி 140km வேகத்தில் பறந்து சென்றுவிட்டது.
பவித்ரா
பவித்ராவின் உடல் சடலமாக இருக்க தனுவும் மோகனாவும் பித்து பிடித்ததுபோல் சுவரில் முட்டி முட்டி அழுதனர். ஸ்ரீ பவித்ராவின் உடலை ஐஸ் பெட்டியில் வைக்கப்போனபோது கத்தி ஆர்பாட்டம் செய்து அதிலே வைக்கவிடாமல் போட்ட கூச்சல்தான் அவளிடம் இருந்து வந்த கடைசி சப்தம். அதன்பிறகு பவித்ராவின் மாரோடு கட்டிக்கொண்வள் அசைவின்றிக் கிடந்தாள்.
வலி உடலில் எங்குமே இல்லை. கைகளில் கால்களில் எங்குமே வலி இல்லை. ஆனால் நெஞ்சைத்தான் யாரோ அழுத்தி மிதிப்பதுபோல் இருந்தது ஸ்ரீக்கு. வலி என்றால் இது வலி அல்ல!
இது வேறு ஏதோ ஒன்று! வலி என்பது வெறும் இரண்டு எழுத்துக்களின் கூட்டு. இது அதனிலும் பெரியது. உண்மை அப்படியிருக்க வலி என்று இரண்டு எழுத்தில் இது எப்படி அடங்கிட முடியும்? அத்துணை தமிழ் எழுத்துக்களையும் சேர்த்து ஒரு சொல் வடிவமைத்திருக்க வேண்டுமா? ஆம்! ஆனால் ஏனோ அதனைச் செய்யவில்லை நம் பாட்டனும் பூட்டனும். அவர்கள் இந்த வலியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்பாயிசில் போகும் கொடுமைகளை அவர்கள் அனுபவித்திருக்கமாட்டார்கள். நூறு ஆண்டுகள் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு வாழ்ந்தவர்கள் எதற்காக இந்த வலியைப் பற்றி நினைக்க வேண்டும்?
பவித்ராவின் தோள் மீது கண்ணம் வைத்து விசும்பியவளின் அருகே துளசியின் வாசம் காற்றிலே கலந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தபோது பவித்ராவின் கழுத்தில் யாரோ துளசி மாலை போட்டிருந்தார்கள். அவள் காதினில் முன்பு தோழிகள் இருவரும் பேசியவை மனதை வலிக்கச் செய்து வலிக்கச் செய்து ஞாபகத்தில் வந்தது.
எனக்கும் துளசி வாசனை ரொம்ப பிடிக்கும். செப்டம்பர் மழையில் எப்படி தளிர்க்குதுன்னு பார். புதர் போல தளிர்க்கப் போகுது. நம்மால் அதை பறித்து பூமாலை கட்டி மீள முடியாது. நீ தான் அந்த மாலையைக் கட்டப்போற பார் ஸ்ரீ. உன் கட்டுதான் நெருக்கமாக இருக்கும். உன்னை சரம் சரமாக கட்ட வைத்து நான் படுத்துக்கிட்டே வேடிக்கை பார்ப்பேனே!
ஓ! கட்டிடலாம் பவி. பூமாலை கட்டத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமே.. நீ படுத்துக்கிட்டே வேடிக்கை பாரு.
என்ன நினைத்தாளோ எங்கிருந்துதான் அவளுக்கு சக்தி வந்ததோ என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு வேகமாக பின்புறம் சென்றவள் ஒரு வாலி நிறைய துளசி செடிகளைப் பறித்து வந்திருந்தாள். வேகமாக நூல் கண்டை எடுத்தவள் துளசி மாலை கட்ட ஆரம்பித்தாள். அணிவித்தால் பவித்ராவின் தோளில் இருந்து வயிறு வரை உயரம் இருக்கும் என்று சொல்லக்கூடிய மாலையை ஆவேசமாக கட்டி முடித்து அவளுக்குச் சூட்டிய பிறகே அமைதியானாள். அடுத்த நொடியில் பவித்ராவின் தலைக்குப் பக்கத்திலே தன் தலையையும் வைத்து படுத்துக்கொண்டே அவள் விட்டத்தை வெறித்தாள்.
கத்திக் கத்திக் கதறியதால் மூச்சே நிற்கும் அளவிற்கு அழுததால் சடங்குகள் அனைத்தும் முடிந்து பிவத்ரா அஸ்தியானபோது ஸ்ரீக்கு கடும் காய்ச்சல் வந்தவிட்டது.
அவளின் காய்ச்சலைக் கண்டதும் “ஸ்ரீம்மா அம்மா ஒரு கால்பால் மாத்திரை வாங்கிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சென்றார் அவளது தாயார்.
ஆனால் போனவர் வரவேயில்லை. போதையேறிப்போன ஒரு கார்காரன் அவரை ஒரு போஸ்ட் கம்பத்தில் தூக்கியெறிந்துவிட்டு அருகில் இருந்த ஆட்டோவில் வண்டியை மோதியபிறகுதான் அவனது வண்டியை நிறுத்தினான். ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவி ஆட்டோக்காரனும் உயிர் விட்டான்.
ஒரே நாளில் இரு உறவுகளை இழந்த ஸ்ரீ நடைபிணம் ஆனாள்.
உண்ணவும் இல்லை உறங்கவும் இல்லை. இரண்டே நாளில் அவள் தெருவில் கௌன்சிலர் ஓட்டு கேட்டு வந்தபோது அவர் மீது கல்லை விட்டெறிந்தாள்.
அவளை அந்த இடத்திலிருந்து இழுத்துக்கொண்டு வருவதற்குள் தனுவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. கௌன்சிலர் ஆளுங்களிடம் அவள் கெஞ்சிக் கூத்தாடி ஸ்ரீயை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஸ்ரீயின் முகத்தை கௌன்சிலர் பார்க்கவில்லை. ஆனால் தனுவை அவரது ஆட்கள் அடையாளம் வைத்துக்கொண்டார்கள். எலெக்ஷன் நேரம் என்பதால் ஸ்ரீயை ஒன்றும் செய்ய திட்டம்போடவில்லை கௌன்சிலர். பவித்ராவின் விஷயத்தில் ஏற்கனவே சொதப்பியதால் அமைதியாக இருந்துவிட்டார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு கௌன்சிலர் ஆட்களின் தொல்லை அதிகமானது. தனுவிடம் தினம் வந்து வம்பிழுத்தனர். அதனால் ஸ்ரீ அக்கம் பக்கத்தில் சொன்னவர்கள் அறிவுரைப்படி யாரும் அறியாத இடத்திற்கு செல்ல முடிவெடுத்தாள். ஹேம்நாத் ஊரைவிட்டே ஓடிவிட்டான். ஸ்ரீயும் தனு மோகனாவை அழைத்துக்கொண்டு மசூத்திடம்கூடச் சொல்லாமல் திருச்சி சென்றுவிட திட்டம்போட்டாள். திட்டத்தின் முதல் கட்டமாக தனுவையும் மோகனாவையும் அவளது பையனையும் திருச்சிக்கு அனுப்பினாள். மறுநாள் அவளும் கிளம்ப ஆயத்தமானாள். பவித்ராவின் பணத்தைக் கொண்டு பவித்ராவும் ஸ்ரீயும் என்ன செய்ய நினைத்தார்களோ அதனை பிசகில்லாமல் செய்ய முடிவு செய்தாள்.
2 Comments
Nicee
Thanks