Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-6

அத்தியாயம் – 6

 

அன்று

 

ஒரு வாரம் கழித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு  ஒரு சர்க்குலர் வந்தது. அதில் ஆறு மணிக்கு மேல் மருத்துவமனையை விட்டு வெளியேறும் ஊழியர்களை மருத்துவமனை வாகனம் புதிய பேருந்து நிலையம் வரை அழைத்து சென்றுவிடும் என்று அறிவிப்பு வந்தது.

 

இந்த அறிவிப்பு நிரஞ்சனிக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. புதிய பேருந்து நிலையம் வரை பாதுகாப்பாக போய் விட்டால், பிரசன்னாவின் தொல்லை இருக்காது. மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் தான் அவனுடைய ஸ்டேஷன். இப்போது அந்த பஸ் நிறுத்தத்திற்கு போகாமல் நேராக புதிய பேருந்து நிலையத்திற்கு போய் விட்டால் அவனுக்கு அங்கு வந்து அவளை பார்ப்பது சிரமம். அதனால் அவனுடைய தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தாள்.

 

இந்த ஏற்ப்பாட்டை புகழேந்திதான் செய்திருக்கிறான் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால் இது எல்லோருக்கும் பொதுவான ஒரு சலுகை. அதனால் நிரஞ்சனிக்கு சங்கடம் இல்லாமல் இருந்தது.

 

 

அவள் கணித்தது போல் அந்த ஏற்பாட்டை புகழேந்தி தான் செய்திருந்தான். கடந்த இரண்டு வாரமாக நிர்வாகத்துடன் பேசி அவர்களை கரைத்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த சலுகையை பெற்றுத் தந்திருந்தான்.

 

பிரசன்னாவால்  நிரஞ்சனியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவனுடைய ஆத்திரம் அதிகமானது. அதே ஆத்திரத்தில் அவன் விவகாரமான ஒரு செயலை செய்துவிட்டான்.

 

பிரசன்னா தன்னுடன் வேலை செய்யும் ஒரு போலீஸ்காரனிடம் இப்போது மிக நெருக்கம் காட்டினான். அந்த போலீஸ்காரன் வேம்பங்குடிக்காரன். அவனை வேலை நேரம் முடிந்ததும் தினமும் தண்ணியில்(அந்த தண்ணி) குளிப்பாட்டினான். இருவரும் நெருக்கமாக பழகினார்கள். ஒருவர் ரகசியத்தை மற்றவர் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு.

 

அந்த நேரத்தில் பிரசன்னா சொன்னான்.

 

“ரவி… இதுவரைக்கும் யாருக்கும் சொல்லாத ஒரு ரகசியத்த உனக்கு நான் சொல்லப்போறேன். ”

 

“என்ன சார்… சொல்லுங்க…”

 

“ரவி… எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது…”

 

“சார்… ஜோக் அடிக்காதிங்க சார்…”

 

“நிஜமாதாண்டா… வீட்டுக்கு தெரியாது… ரிஜிஸ்டர் மேரேஜ்…”

 

“எப்ப சார்… உங்க wife யாரு… என்ன சார்… ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே…”

 

“அது தான் இப்போ சொல்லிட்டேனே… ”

 

“சார் ட்ரீட் கொடுங்க சார்… சும்மா சொன்னா மட்டும் போதுமா…?”

 

“கண்டிப்பா தர்றேன் ரவி… இப்போதைக்கு நானும் என்னோட மனைவியும் தனி தனியாதான் இருக்கோம். யாருக்கும் தெரியாமல் எங்கள் திருமணத்தை ரகசியமா வச்சிருக்கோம். எல்லாருக்கும் தெரியப்படுத்தும் போது உனக்கு கண்டிப்பா ட்ரீட் உண்டு… ஓகேவா….”

 

“சரி சார்… உங்க மனைவி யார் சார்…”

 

“கொஞ்சம் இரு…” என்று சொல்லிவிட்டு பிரசன்னா அவனுடைய கைபேசியை எடுத்து நிரஞ்சனியின் புகைப்படத்தை போட்டுக் காட்டினான். அந்த படம் அவளுக்கே தெரியாமல் எடுத்தது.

 

அந்த படத்தை பார்த்த ரவி திடுக்கிட்டான்.

 

“சார்… இந்த.. இந்த பொண்ணு எந்த ஊரு…?”

 

“வேம்பங்குடி…” பிரசன்னா ரவியின் முகத்தை பார்த்துக் கொண்டே தெளிவாக சொன்னான்.

 

ரவிக்கு தெரிந்த விஷயம் அடுத்த இரண்டே நாட்களில் ஊர் முழுக்க காட்டுத் தீயாகப் பரவியது…

 

‘என்னைத் தவிர நீ யாரையும் கட்ட முடியாதுடி… அதுக்கு நா விட மாட்டேன்.’ என்று பிரசன்னா தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

இன்று

 

பரந்து விரிந்திருந்த அந்த ஆலமரத்தடியில் பங்குனி மாத வெயில் சிறிதும் தெரியாமல் ‘சிலு சிலு’-வென தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது. அங்கே பத்து பேர் சிவப்பு நிற ‘பிளாஸ்டிக்’ நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் மணியடித்தது.

 

“இந்த வருஷம் கோயில் கொலத்த ஏலம் விட ஆரம்ப ரூவா இருவத்தஞ்சாயிர(ம்)… ஏலம் கேக்குறவங்க கேக்கலாம்ப்பா…” அங்கே நடுநாயமாக அமர்ந்திருந்த பெரியவர் தன் மீசையை தடவிக் கொண்டே பெரிய குரலில் சொன்னார். அவர் தான் அந்த ஊரில் கோவில் சம்மந்தப்பட்ட பொறுப்புகளை கவனிப்பவர்.

 

அவரை தொடர்ந்து அங்கே அமர்ந்திருந்தவர்கள் ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொருவராக கேட்டு கொண்டிருந்தார்கள். விலை ஏறிக்கொண்டே போகவும் மற்றவர்கள் அடங்கிவிட இராஜசேகர் அந்த ஏலத்தை எடுத்தான்.

 

அவன் ஏலம் எடுத்த தொகையில் முப்பது சதவிகிதம் பணத்தை அந்த பெரியவரிடம் செலுத்திவிட்டு அவர் வைத்திருந்த கணக்கு புத்தகத்தில் கையெழுத்திட்டு இரசீது வாங்கிக்கொண்டு, தன்னுடைய இடம் நோக்கி வரும் பொழுது ஒருவன் சொன்னான்…

 

“பணம் இருந்தா பெரிய மனுசனாயிடலாமுன்னு பாக்குறானுவ…. வெக்கங் கெட்டவணுவ…” என்றான் ஏளனமாக.

 

இராஜசேகரின் கால்கள் ஒரு நொடி தானாக நின்றன. ஆனால் பேசியவனை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. பின் என்ன நினைத்தானோ தன்னுடைய நடையை தொடர்ந்தான்.

 

முன்பு பேசியவனுக்கு அருகில் அமர்ந்திருப்பவன் சொன்னான்…

 

“நீயும் அவன வம்பிழுக்க பாக்குற… அவன் சிக்க மாட்டேங்கிறானே…!”

 

“மானம் இருக்கவனா இருந்தா ‘யாரடா பேசினன்னு’ கேட்பான்…. இவன்தா(ன்) வீட்டு பொண்ணுங்கள ‘வேத்து சாதிக்கற பயலா இருந்தாலும் பரவால்ல பணமிருந்தா சரி… வந்து இழுத்துக்கிட்டு போன்னு’   சொல்ற பயலாச்சே…” என்றான் மீண்டும் ஏளனமாக.

 

அவன் பேசியது கடைசி வரிசையில் அமர்ந்திருந்த இராஜசேகருக்கு தெளிவாக கேட்டுவிட்டது.

 

வேகமாக அந்த இடத்திலிருந்து எழுந்தவன் ஒரே நொடியில் பேசியவனின் சட்டையை பிடித்து “யாரடா பேசின…?” என்று கேட்டான்.

 

அவனும் வேம்பங்குடியில் பிறந்தவனாயிற்றே… ‘உனக்கு நான் சளைத்தவனில்ல’ என்று சொல்லும் படி

 

“உன்னத்தான்டா சொன்னே… உம் மச்சினியா  என்ன ஒழுங்கா… முந்தி ஒரு போலீஸ்கார பயல ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிகிட்டா… இப்ப ஒரு டாக்டர் பய…”

 

“ஆனா ஒன்னுடா… அவ புடிக்கிறதெல்லா(ம்) புளியங்கொம்பு  தான்… நீ அதிர்ஷ்டக்காரன்டா… அந்த டாக்டர் பணத்துல தான இந்த ஏலம் எடுத்த…?”   என்று கேட்டுவிட்டான்.

 

இராஜசேகர் வெறியாகி அவனை புரட்டி எடுத்துவிட்டான். அவர் தரையில் கிடக்க இராஜசேகர் அவன் மேல் ஏறி அமர்ந்துகொண்டு அவனை கொலைவெறியுடன் தாக்கிக் கொண்டிருந்தான்.

 

அங்கு கூடியிருந்தவர்கள் இராஜசேகரின் பிடியிலிருந்து அவனை மிகுந்த சிரமத்துடன் பிரித்து எடுத்தார்கள்.

 

“என்னப்பா நீ… பேசிகிட்டு இருக்கும் போதே கை நீட்ற…?” அங்கு இருந்த பெரியவர் இராஜசேகரை பார்த்து கேட்டார்.

 

“அவன் என்ன பேசினான்னு கேட்டுமா என்ன இந்த கேள்வி கேக்குறீங்க…? பெரியப்பா, இது சரியில்ல..” என்றான் இராஜசேகர் கோபம் சிறிதும் குறையாதவனாக.

 

“அவன் பேசினது பெரிய தப்பு தான்… ஆனா நா இங்க ஒரு பெரியமனுச எதுக்கு இருக்கேன்… நா கேக்க மாட்டனா…?”

 

இராஜசேகர் எதுவும் சொல்லவில்லை.

 

“என்னடா இது பேச்சு…? நம்ப ஊரு பொண்ண நீயே தப்பா பேசுற? நாக்க அறுத்து நாயிக்கு போட்டுறுவேன் படுவா பயலே…” என்றார் கடுமையாக மற்றவனிடம்.

 

“அது இல்ல சித்தப்பா…” என்றான் அவன்.

 

“என்னடா சித்தப்பா… நொத்தப்பா…. பொம்பள புள்ளைய பத்தி ஏதாவது பேசுனா அப்பறம் பட்டற கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணி உன்ன மண்ணு கூட சொமக்க வக்க வேண்டியதுதான்…”

 

பட்டறை கூட்டம் என்பது ஊர் மக்கள் அனைவரின் முன் நடக்கும் பஞ்சாயத்து. அதில் தண்டனை மண் கூடையை தலையில் சுமந்து ஊரை சுற்றிவருவது தான். அந்த தண்டனை அந்த ஊர் மக்களை பொறுத்தவரை மிகப்பெரிய அவமானம். பட்டறை கூட்டம் என்றாலே அந்த ஊர் மக்கள் பயப்படுவார்கள். இதுவரை யாரும் அந்த கூட்டத்தில் குற்றவாளியாக நிற்கும் படி வைத்துக் கொண்டதில்லை. முதல் முறையாக தான் அதற்க்கு விதிவிளக்காகி விடுவோமோ என்ற பயத்தில்

 

“நா பேசினது தாப்பு தான் சித்தப்பா…” என்று ஒத்துக் கொண்டான் மற்றவன்.

 

அவன் ஏலம் எடுக்க முடியாத பொறாமையில் பேசினான் என்பதை இராஜசேகரால் புரிந்துகொள்ள முடிந்தாலும், நிரஞ்சனிக்கு திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கும் வரை இந்த மாதிரியான பேச்சுகளை நிறுத்தமுடியாது என்று நினைத்தான்.

 

ஏலம் எடுக்க சென்றவன் கிழிந்த சட்டையுடனும் அங்காங்கே இரத்தக் காயங்களுடனும் வீட்டிற்கு வந்ததை பார்த்து நீரஜாவும் அவர்கள் வீட்டில் உள்ள மற்றவர்களும் பதறினார்கள். அவர்களிடம் இராஜசேகர் எதுவும் சொல்லவில்லை.

 

தனியாக நீரஜா கேட்டதற்கும் அவளிடம் “ஏலம் எடுப்பதில் கொஞ்சம் பிரச்சனை” என்று தான் சொன்னானே தவிர ‘உன் தங்கையால் தான் பிரச்சனை’ என்று சொல்லி அவளை நோகடிக்கவில்லை.

 

ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய சொந்த வேலைகளை கொஞ்சம் கவனித்துவிட்டு நிரஞ்சனியின் பக்கம் கவனத்தை திருப்பினான்.

 

********************

 

“ரஞ்சி என்ன சொல்றா…?” என்று கேட்டுக் கொண்டு இரண்டு நாள் கழித்து இராஜசேகர் அல்லியின் வீட்டிற்கு நீரஜாவை அழைத்துக் கொண்டு வந்தான்.

 

“மாப்பள… கொஞ்ச நாள் போகட்டும்… அப்புறமா கல்யாணத்த பத்தி யோசிக்கலாம்…” என்றார் அல்லியின் கணவர் வேணு.

 

“என்ன மாமா…. நீங்க தான அன்னைக்கு சூட்டோட சூடா காரியத்த முடிக்கனுமுன்னு சொன்னீங்க… இப்ப என்ன ஆச்சு…?”

 

வேணு என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசிக்கும் போதே அல்லி சொன்னார். “மாப்ள அவளுக்கு இப்ப கல்யாணத்துல விருப்பமில்ல… கொஞ்ச நாளு கழிச்சி இத பேசிக்கலா(ம்) ”    என்றார் தெளிவாக.

 

அந்த பதிலை கேட்ட இராஜசேகர் ரௌத்திரமானான்.

 

என்ன சொன்னா அவ… யாரு அவளுகிட்ட சம்மதமெல்லா(ம்) கேட்டா… அதுக்கெல்லாம் அவளுக்கு தகுதியே கிடையாது… எங்க அவ… ” என்று சீறினான்.

 

“மாப்ள நீங்க செய்றது நல்லா இல்ல… அவ அடங்கி வீட்டோட இருக்கா… இப்ப எதுக்கு அவளை கட்டாயப் படுத்தனும்… விட்டு புடிப்போம்..” என்றாள்  அல்லி.

 

இராஜசேகர் எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டான். அரைமணி  நேரத்தில் திரும்பவும் வந்தான்.

 

அவர்கள் வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நிரஞ்சனியுடைய பெற்றோரும் வந்திருந்தார்கள். அவர்களை இராஜசேகரின் ஆணைப்படி நீரஜா தான் தொலைபேசியில் அழைத்து வர சொல்லியிருந்தாள்.

 

அனைவரும் இறுக்கமான முகத்துடன் அல்லியின் வீட்டு கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

 

“மாமா… உங்க மூத்த பொண்ண நா எடுத்துருக்கேன்… உங்க ரெண்டாவது பொண்ணு சரியில்ல… அவளை இனி வீட்ல வச்சிருக்க முடியாது… நீங்க என்ன சொல்றீங்க?” அவன் அவனுடைய மாமனார் அரசுவை பார்த்துக் கேட்டான்.

 

“நீங்க சொன்னா சரி மாப்ள…”

 

“நா மாப்ள பாக்கட்டுமா…? இப்ப சரின்னு சொல்லிட்டு பின்னாடி பிரச்சனை பண்ணக் கூடாது…” அவன் கறாராகக் கேட்டான்.

 

“என்ன மாப்ள… எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யுற காரியமா இது… கொஞ்சம் பொறுமையா செய்வோமே…” அல்லி இடையில் புகுந்து சொன்னாள்.

 

“ஆமாங்க… சித்தி சொல்றதும் சரிதான்… கொஞ்சம் பொறுமையா பாக்கலாமே…” நீரஜா அல்லிக்கு ஆதரவாக பேசினாள். அவள் பேசி முடிப்பதற்குள் இராஜசேகரின் கை அவள் கன்னத்தில் பலமாக இறங்கியது.

 

“யம்மாடி…” அவள் கன்னத்தை பிடித்துக்கொண்டு சுருண்டுவிட்டாள்.

 

அங்கிருந்த அனைவரும் தங்களுக்கே அந்த அறை விழுந்ததைப் போல் உணர்ந்து திகைத்தார்கள். அல்லியை எடுத்தெறிந்து பேச முடியாத கோபத்தை நீரஜாவிடம் கடுமையாக காட்டினான். அது அனைவருக்குமே புரிந்தது.

 

“என்னடி…? ஆம்பளைங்க பேசும்போது குறுக்க என்ன பேச்சு…? நீயா வெளிய போற…? கடத்தெருவுக்கு ஒருவாட்டி போயிப்பாரு… தல நிமுந்து போக முடியலடி… எம் முன்னாடி நின்னு பேசாத பயலெல்லாம் என்ன நக்கலா கேள்வி கேட்கிறான்டி…” காரமாக பேசினான். அந்த பேச்சு நீரஜாவிற்கு மட்டும் அல்ல. அனைவருக்குமே மனதில் ‘சுருக்’கென்று பட்டது. அல்லி அதற்கு பின் வாயையே திறக்கவில்லை.

 

அவனுடைய நிலையில் பார்த்தால் அவன் பேசுவது நியாயமாக தோன்றினாலும், அவன் அவனுடைய கோபத்தை வெளிப்படுத்திய விதம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.

 

“இங்க பார்… அவளுக்கு இன்னைக்கு ஒருநாள் அவகாசம் தர்றேன்… நாளைக்கு எனக்கு பதில சொல்ல சொல்லு. அவ கல்யாணத்துக்கு  சம்மதிச்சா நீ என்னோட வீட்டுக்கு வரலாம். இல்லன்னா நாளையோட உனக்கும் எனக்குமான உறவு அருந்துருச்சுன்னு வச்சுக்க… நா நாளைக்கு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு நீரஜாவையும் அங்கேயே விட்டுவிட்டு போய்விட்டான்.

 

அனைவருக்குமே பீதியில் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது….

 

வீட்டு கூடத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளை உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சனி அடுத்தகட்ட போராட்டத்திற்காக மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டாள்.

 

“ரஞ்சி இங்க வா…” சித்தி அல்லி நிரஞ்சனியை அழைத்தாள். இராஜசேகர் வெளியே சென்ற பிறகு ஆண்கள் இருவரும் பெண்களிடம் நிரஞ்சனியிடம் பேசும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

 

தாமரைக்கு தன் இரண்டு பெண்களின் வாழ்க்கையுமே சிக்கலாகிவிட்டதை நினைத்து தாளவில்லை. நீரஜாவும் சிவரஞ்சனியும் இராஜசேகரின் அதிரடி பேச்சில் அரண்டு போய் அமர்ந்திருந்தார்கள்.  அந்த நிலையில் அல்லி தான் முதலில் சுதாரித்துக் கொண்டு நிரஞ்சனியை வெளியே அழைத்தாள்.

 

நிரஞ்சனி அமைதியாக வந்து கூடத்தில் ஒரு மூலையில் அமர்ந்தாள்.

 

“என்ன ரஞ்சி… மாப்ள சொன்னத கேட்டியா… நீ என்ன சொல்ற…?” அல்லி நிரஞ்சனியின் கருத்தை கேட்டாள்.

 

“சித்தி… என்னால இப்போ கல்யாணம் செஞ்சுக்க முடியாது. நீங்க சொன்னபடி வீட்டை விட்டு வெளியே போகாம நான் இருக்கேன். என்னால எந்த பிரச்சனையும் உங்களுக்கு வராது.. என்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கட்டாயப் படுத்தாதிங்க… என்ன விட்டுடுங்க சித்தி…” நிரஞ்சனி கெஞ்சினாள்.

 

“அது எப்புடிடீ… வயசு பொண்ண வீட்டுல வச்சுகிட்டு உக்காந்துருக்க முடியுமா…? அவரு சொல்றதுல என்ன தப்பு இருக்கு… உன்னால எங்க யாருக்குமே வெளிய தல காட்ட முடியல…” தாமரை தன் ஆத்திரத்தை நிரஞ்சனியிடம் கொட்டினாள்.

 

நிரஞ்சனி அமைதியாக இருந்தாள்.

 

“உன்னால நீரு வாழ்க்கையும் சிக்கலா இருக்கே இப்ப..? அதுக்கு என்ன செய்றது சொல்லு…” அல்லி அமைதியாக கேட்டாள்.

 

“சித்தி… நீரு வாழ்க்கை எதுக்கு சிக்கலாகனும்.. அவளும் காதலிச்சுதானே கல்யாணம் செஞ்சுகிட்டா.. அவளோட கல்யாணத்துக்கு சம்மதிச்சவங்க இப்போ எதுக்கு என்னோட கல்யாணத்துல பிரச்சனை பண்றாங்க…”

 

“அடி வெளக்கமாத்தால… யாரடி சாட(ஜாடை) பேசுற….? அவ சா(ஜா)திமான காதலிச்சாடி… நீ எவனோ நாளாந்தர பயல கொண்டு வந்தியன்னா… உனக்கு மாலை போட்டு மருவாத பண்ணி கூத்தடிக்க சொல்றியா… ” தாமரை மகளிடம் பாய்ந்தாள்.

 

‘இவள் தான் என் தாயா…? எப்படி என்னை தலை மேல் வைத்து கொண்டாடியவள் இன்று இப்படி மாறிவிட்டாளே… எது இவளை மாற்றியது…?’ நிரஞ்சனி ஆவேசமாக பேசும் தன் தாயை ஆச்சர்யமாக பார்த்தாள்.

 

“உன்னால எம்மகளோட வாழ்க்கை போவ போவுதுடி… நீ எப்புடியோ கெட்டு ஒழுஞ்சுட்ட… அவளையாவது வாழவிடு…” தாமரை அழுது கொண்டே பேசினாள்.

 

“அப்ப நா உன்னோட மக இல்லையாம்மா…? நா நல்லா வாழனுன்னு  நீ நினைக்க மாட்டியா…?         ”

 

“ச்சீ.. வாய கழுவு… என்னோட ரெத்தத்துல உதிச்சிருந்தா இப்புடி கேடுகெட்டு போயிருப்பியா…? என்ன அம்மான்னு கூப்புடாத…” தாமரை வெறுப்பாக பேசினாள்.

 

நிரஞ்சனிக்கு முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது. தாயின்  வார்த்தைகள் நெருப்பாக சுட்டன. பெற்ற தாயே அந்நியமாகிவிட்ட பிறகு அவளுடைய தங்கையும் தங்கை மகளும் தங்கை கணவரும் எப்படி உறவாக முடியும்.

 

நிரஞ்சனிக்கு இப்போது எங்கேயோ ஒரு புதிய இடத்தில் அகதியாக ஒட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது. தனிமை உணர்வு நெஞ்சில் இரத்தம் வடிய வைத்தது. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

 

“நீ எதுக்குக்கா அவள இப்புடி புடுங்குற… ஏதோ தப்பு பண்ணிட்டா… இப்ப திருந்தி இருக்கா… அவளும் பொண்ணுதானே… என்னதான் ஜாதிகெட்டவனா இருந்தாலும் ஒருத்தன நெனச்சுட்டா… அவளோட மனச மாத்திக்க அவகாசம் கொடுக்க வேண்டாமா…? அந்த ஆளுதான் புரியாம பேசுராருன்னா நீயும் இப்படி அவள கொத்தி குடிக்கிறியே….! நல்லாருக்காக்கா இது…?” என்று தமக்கையை கடிந்து கொண்டாள் அல்லி.

 

“எனக்கு என்னா ஆசையா அல்லி… வயக்காட்டுக்கு போவ முடியலடி… நீ வீட்டுக்குள்ள இருக்க… என்னால வய வரப்புக்கு போவாம இருக்க முடியுமா…? ஒருஒருத்தி பாக்குற பார்வையும் பேசுற பேச்சும்… என்னால சயிக்க(சகிக்க) முடியலையே… நா என்ன செய்வே(ன்)……” என்று ஓ-வென மகளை திட்டிவிட்ட துக்கத்தில் ஒப்பாரிவைத்தாள்.

 

 

 
Comments are closed here.

error: Content is protected !!