Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மனதில் தீ-14

அத்தியாயம் – 14

 

அன்று

 

புகழேந்திக்கு உடல்நிலை  தேறி இப்போது மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துவிட்டான். ஆனால் நிரஞ்சனியை ‘இதற்கு முன் பார்த்தது கூட இல்லை’ என்பது போல் நடந்து கொண்டான். அவனுடைய இந்த செயல்பாடே நிரஞ்சனியின் உறுதியை அசைத்துப் பார்த்தது. அவள் மனம் புகழேந்திக்காக ஏங்கியது.

 

அந்த நேரத்தில் தான் அந்த விபத்து நடந்தது. நிரஞ்சனி வந்த பேருந்து எதிரில் எக்கு தப்பாக வந்த ஒரு காரின் மீது மோதிவிடாமல் தவிர்ப்பதற்காக திடீரென்று பிரேக் போட்டதில் குலுங்கி நின்றது. உயிர் சேதம் இல்லை என்றாலும் பயணிகளுக்கு அடிபட்டுவிட்டது. நிரஞ்சனிக்கும் முன் இருக்கையில் முட்டிக்கால் மோதி நல்ல அடி. ஆரம்பத்தில் அதிக வலி தெரியவில்லை.

 

ஆனால் அவளுடைய பஸ் நிறுத்தத்தில் இறங்கியவளுக்கு அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. நேரம் ஆக ஆக கால் வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. யாராவது ஒருவருடைய துணை இல்லாமல் அவளால் அந்த இடத்தை விட்டு நகரக் கூட முடியாது என்கிற நிலையில் இருந்தாள்

 

முன்பு  பிரசன்னா அவளை கடத்த முயன்ற போது காப்பாற்றிய புகழ் அவனுடைய கைபேசியின் நம்பரை அவளுடைய கைபேசியில் பதிவு செய்துவிட்டு ஏதாவது அவசரம் என்றால் அவனை அழைக்கும் படி சொல்லியிருந்தான்.

 

அந்த நினைவு இப்போது வந்தது. சிறு தயக்கத்திற்கு பின் அவனுக்கு அழைத்தாள்.

 

நிரஞ்சனியின் கைபேசியிலிருந்து வந்த அழைப்பை நம்பமுடியாமல் ஒரு கணம் பார்த்த புகழ் அடுத்த கணமே மொபைல் ஆன் செய்து அவளிடம் பேசினான்.

 

“ஹலோ…”

 

“ஹலோ… நா நிரஞ்சனி…”

 

“எந்த நிரஞ்சனி….” அவன் அவள் மீது கோபமாக இருப்பதை பறைசாற்ற அவளை தெரியாதது போல் பேசினான்.

 

அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் “சாரி… ராங் நம்பர்” என்று சொல்லி போனை அணைத்துவிட்டாள். ‘எதுக்கு இப்போ இவனுக்கு கூப்பிட்டோம்… ‘ என்று நினைத்து அவமானமாக உணர்ந்தாள்.

 

அடுத்து என்ன செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது… புகழேந்தியும் நிரஞ்சனியை பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அப்போதுதான் அவனுக்கு தோன்றியது… “ஒருவேளை அந்த போலீஸ்காரன் ஏதாவது வம்பு பண்ணுகிறானோ….?”

 

புகழேந்திக்கு பிரசன்னா அடிபட்டு கிடப்பது தெரியாததால் அப்படி நினைத்தான். அந்த மாதிரி ஒரு எண்ணம் தோன்றியவுடனே நிரஞ்சனிக்கு அவசரமாக கைபேசியில் தொடர்பு கொண்டான். இரண்டு முறை முயற்சித்து முன்றாவது முறை தான் அவள் போனை எடுத்தாள். ‘அவளுக்கும் வீம்பு இருக்குமே…’

 

அதற்குள் அவனுடைய உயிர் போய் எமலோகத்தை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வந்தது.

 

“ஹலோ… ஜெனி… எங்க இருக்க…” படபடப்பாக கேட்டான்.

 

“இங்க தான்… பஸ் ஸ்டாப்ல…” அவள் கால் வலியில் முனகலாக பதில் சொன்னாள்.

 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவன் அங்கு இருந்தான்.

 

“என்ன ஜெனி…” என்று கேட்டுக்கொண்டே பரபரப்பாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்தான்.

 

அவன் மருத்துவமனைக்கு வருவது போல் முழுக்கை சட்டை அணிந்து, இன் பண்ணி ஃபார்மலாக வராமல், டி-ஷர்ட் ஜீன்ஸ் -இல் வந்திருந்தான். அந்த உடையில் அவன் மிக வசீகரமாக இருந்தான். அந்த கால் வலியிலும் நிரஞ்சனி அவனை ரசித்தாள்.

 

‘ஐயோ… கடவுளே… இவன் ஏன் இப்படி அழகா இருந்து தொலைக்கிறான்… இப்படியே என்னை விழத்தட்டிவிடுவான் போலருக்கே…’ என்று நொந்துக் கொண்டாள்.

 

“என்ன ஜெனி… இப்படி பார்க்குற….? என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டான்.

 

“ம்ம்.. ஒன்னும் இல்ல… வந்து…”   என்று ஆரம்பித்து நடந்ததை விபரமாக சொன்னாள்.

 

அவன் அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து… அவனுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான். அங்கிருந்து அவனுடைய அண்ணனையும் அண்ணியையும் அவளுக்கு துணையாக அனுப்பி வேம்பங்குடியில் அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு வர சொன்னான். அவர்களும் அவளை பத்திரமாக அவர்களுடைய காரில் அழைத்து சென்று வீட்டில் சேர்த்தார்கள்.

 

நிரஞ்சனியை புகழ் மருத்துவமனைக்கு கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்ததிலிருந்து மீண்டும் வெளியே அழைத்து செல்லும் வரை அவளுடனேயே இருந்தான். அவளுக்கு தேவையானதை எல்லாம் அவனே செய்தான். அவளுக்கே அது சங்கடமாக இருந்தது. ஆனால் அவன் அதை அலட்சியம் செய்து அவளை கருத்தாக பார்த்துக் கொண்டான்.

 

அது மருத்துவமனையில் அனைவரின் கண்களையும் உறுத்தியது. ‘எல்லோருக்கும் நிரஞ்சனிக்கும் புகழேந்திக்கும் என்ன சம்மந்தம்’ என்று சந்தேகமாக இருந்தது. அவரவர் தங்களுடைய கற்பனை கதையை அள்ளி விட்டார்கள். அவர்களைப் பற்றி ஒரே நாளில் மருத்துவமனை முழுவதும் ‘கிசு கிசு’ பரவியது.

 

அந்த செய்தி இரண்டே நாட்களில் புகழேந்திக்கு தெரிந்த போது அதற்காக அவன் மகிழ்ச்சி அடைந்தான்.

 

 

இன்று

 

நிரஞ்சனி மாடியில் துவைத்த துணிகளை காயப்போட்டுவிட்டு கீழே இறங்க எத்தனிக்கையில் அவர்கள் வீட்டிற்கு முன் இருக்கும் சாலையில் ஒரு கல்யாண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தை நிரஞ்சனி ஆர்வமாக பார்த்துக் கொண்டு நின்றுவிட்டாள்.

 

‘புகழுக்கும் நமக்கும் இப்படி திருமணம் நடக்குமா… ‘ என்று ஏக்கமாக அவள் அதை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊர்வலத்திலிருந்து ஒருவன் நிரஞ்சனியை பார்த்துக் கொண்டே இருப்பதை அவளால் உணரமுடிந்தது. யார் அவன் என்று கூட்டத்திற்குள் பார்வையை கூர்மையாக்கியவள் திகைத்தாள்.

 

அங்கு அவள் வேலை பார்த்த மருத்துவமனையில், வேலை செய்யும் பையன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் நிரஞ்சனியிடம் எதையோ சொல்ல விரும்புகிறான் என்று அவளுக்கு புரிந்தது. அவள் அவசரமாக படியிறங்கி அவர்களுடைய வாசலுக்கு வந்தாள். வேடிக்கை பார்ப்பது போல் நின்றாள்.

 

அவனும் நிரஞ்சனியை நோக்கி வந்தான். நிரஞ்சனிக்கு அருகில் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். சிறிது துரத்தில் சித்தி அல்லி நிற்பதும் அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு பயத்தில் வியர்த்தது.

 

கூட்டத்திலிருந்து விலகி நிரஞ்சனிக்கு அருகில் வந்தவன் “கொஞ்சம் குடிக்க தண்ணீ குடுங்க…” என்று கேட்டான்.

 

அதுபோல் ரோட்டில் செல்பவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது வழக்கம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

நிரஞ்சனி அவசரமாக உள்ளே சென்று ஒரு செம்பு தண்ணீர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கி குடித்துவிட்டு மீண்டும் செம்பை நிரஞ்சனியிடம் கொடுத்தவன் அதோடு ஒரு சிறு காகிதத்தையும் சேர்த்து மற்றவர்கள் அறியாமல் கொடுத்தான்.

 

அதை வாங்கிய நிரஞ்சனிக்கு இதயம் வேகமாக் அடித்துக் கொண்டது. செம்பை வீட்டிற்குள் வைக்க செல்வது போல் சென்று குளியலறைக்குள் புகுந்து  கதவை தாளிட்டவள், காகிதத்தை பிரித்து படித்தாள்.

 

ஜெனி…

 

நாளைக்கு உன்னுடைய ஃபோன்காக காத்திருப்பேன். கண்டிப்பாக நான் உன்னிடம் பேச வேண்டும். நீ போன் செய்யவில்லை என்றால் நான் அங்கு வந்து எல்லோரிடமும் பேசி ஒரு முடிவெடுப்பேன்….

 

புகழ்...’ என்று எழுதியிருந்தது.

 

நிரஞ்சனி சிவரஞ்சனியிடம் சென்றாள். மற்றவர்கள் அறியாமல் அவளுடைய நிலைமையை விளக்கினாள். சிவரஞ்சனிக்கு நிரஞ்சனி மேல் இரக்கம் இருந்தாதால் அவள் தன்னுடைய கைபேசியை நிரஞ்சனிக்கு கொடுத்து உதவினாள்.

 

நிரஞ்சனி ஆயிரம் தடைகளை தாண்டி சிவரஞ்சனியின் கைபேசியுடன் மாடிக்கு சென்று புகழேந்திக்கு அழைத்தாள். அவனுடைய குரல் அவள் அனுபவிக்கும் துன்பங்களுக்கெல்லாம் மருந்தாக இருக்கும் என்று நினைத்து அவனை கைபேசியில் அழைத்தாள்.

 

“ஹலோ…” ஆசையாக வந்தது அவளுடைய குரல்.

 

“ஹலோ…” கடினமாக இருந்தது அவனுடைய குரல்.

 

“எப்படி இருக்கீங்க புகழ்…?”

 

“அதை பற்றி உனக்கென்ன….? அது சரி… என்ன மாப்பிள்ளை எல்லாம் பலமா தேடிகிட்டு இருக்கீங்க போலருக்கு…?” புகழேந்தியின் பேச்சின் ஆரம்பமே நிரஞ்சனியை காயப்படுத்தியது.

 

“புகழ்… ப்ளீஸ்… நீங்களும் என்னை காயப்படுத்தாதீங்க…. என்னால முடியல…”

 

“என்னாலையும் தான் முடியல… நீ இல்லாம எனக்கு இங்க பைத்தியம் பிடிக்குது… அங்க நீ பெண் பார்க்க வர்றவனுக்கெல்லாம் போஸ் கொடுத்துகிட்டு இருக்கியா…?”

 

“ஐயோ… இல்ல… புகழ்  என்னோட நிலைமைய புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்…”

 

“என்னதான் உன்னோட நிலைமை… இன்னைக்கு சொல்லு… நானும் தெரிஞ்சுக்குறேன்” அவன் விடாபிடியாக கேட்டான்.

 

“இங்க எல்லாமே இராஜசேகர் சொல்றபடி தான் நடக்குது புகழ். அவன் ஒரு முரடன். நீங்க அவன் கிட்ட பேசினா அவன் வெட்டு குத்துன்னு இறங்கிடுவான். ”

 

“யார் அவன்…? உங்க அக்கா கணவன் தானே…”

 

“ஆமா…”

 

“அவன் ஏன் உன் விஷயத்துல தலையிட்றான். உங்க அப்பா அம்மா என்ன சொல்றாங்க…?”

 

“அவன் சொல்றதுதான் சரின்னு சொல்றாங்க… அவன் சம்மதிச்சாதான் நம்ப கல்யாணம் நடக்கும்…”

 

“இப்ப என்னை என்ன தான்டி செய்ய சொல்ற… உன்ன கல்யாணம் செஞ்சு கொடுக்க சொல்லி அவன் கால்ல விழ சொல்றியா… சொல்லு வந்து விழுவுறேன்…” கடுமையாக பேசினான்.

 

“ஏன் இப்படி பேசுறீங்க… கொஞ்ச நாள் இப்படியெல்லாம் செஞ்சு பார்ப்பாங்க… நாம பிடிவாதமா இருந்தா அப்புறம் ஒத்துகிட்டு தானே ஆகணும்…?”

 

“ஒத்துக்கலன்னா… என்ன செய்றது?”

 

“என்ன செய்றது…?” அவள் திரும்ப அவனையே கேட்டாள்.

 

“சொல்லு… என்ன செய்றது…?

 

“நான் இப்படியே தான் இருப்பேன்… யாரையும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். நீங்க வேற…”

 

“ஷட் அப்……” என்று சீறினான்.

 

“நா என்னோட அம்மா அப்பாவோட உங்க வீட்டுக்கு வந்து பெண் கேட்கிறேன்டி… என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. எனக்கு என்னடி  குறைச்சல்…? ஏண்டி இப்படி உங்க வீட்ல பிடிவாதம் பிடிக்கிறாங்க…?”

 

“………………….”

 

“அவங்க பிடிவாதத்த விட்டுட்டு நம்ப கல்யாணத்துக்கு சம்மதிச்சா ஓகே…. இல்லன்னா நீ என்னோட உடனே வீட்டை விட்டு கிளம்பிவர தயார இருக்கணும்…” என்று உத்தரவிடுவது போல் சொன்னான்.

 

அதில் பதட்டம் அடைந்த நிரஞ்சனி… “நிச்சயம் மாட்டேன்… பெத்தவங்க சம்மதம் இல்லாமல் என்னோட கல்யாணம் நடக்காது… நான் சொல்லாமல் நீங்க இங்க வரவும் கூடாது…. முதல்ல ஒரு நாள் வந்தத நினைத்து திரும்ப முயற்சி செய்யாதிங்க… அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க…” என்று மிரட்டலாக சொன்னாள்.

 

“என்னடி செய்வ…?”

 

“புகழ்… இந்த தடவ நான் சொல்ல மாட்டேன்… செஞ்சுடுவேன்… எனக்கும் எல்லா கஷ்டங்களில் இருந்தும்  விடுதலை கிடைத்துவிடும்  ”

 

அதில் கடுப்பான புகழ் கைபேசியை அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அணைத்துவிட்டான்.

 

 
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நிரஞ்சனியின் வீட்டு நிலவரம் தெரியாமல் புகழ் வேறு நிரஞ்சனியை படுத்துகின்றார்.

    நன்றி

error: Content is protected !!