Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 22

ராஜன் தனது வீடு வெளியிலிருந்து பூட்டப் பட்டிருப்பதை அறிந்தவன் தனது செல்ஃபோனில் காவலர் துரைக்கு அழைப்புவிடுத்தான்.
“ராஜன் சார் சொல்லுங்க. ”
“துரை நீங்க எங்க இருக்கீங்க? ”
“நம்ம அப்பார்ட்மென்டுக்கு அடுத்த தெருவில் டீக்கடையில் சார். ”
“என்ன டியுட்டி உங்களுக்கு இன்னைக்கு? ”
“சார் டியுட்டியில்தான் மஃப்டியில் இருக்கேன். இங்க ஒரு ஈவ் டீசிங் கேஸ் பற்றி நியுஸ் கொடுக்க ஆர்டர் சார். மகளிர் போலிஸில் புகார் கொடுத்திருக்காங்க. அங்கயிருந்து நம்மகிட்ட அசிஸ்டன்ஸ் கேட்டிருக்காங்க. ”
“துரை ஒரு அரை மணிநேரம் எனக்கு தரமுடியுமா? ”
“சொல்லுங்க சார். அந்த பையன் வர இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு. ”
“நல்லது. நீங்க எங்க தெருவில் இருந்து உங்க தெருவுக்கு யெல்லோ கலர் சுடிதார் போட்ட பொண்ணு வருதான்னு பாருங்க. ”
“ஆமாம் சார். ஒரு பொண்ணு வருது. கையில் ஒரு ஜவுளி கடை கட்டப்பை இருக்கு. ”
“கரக்ட். அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணுங்க. மதுரையைவிட்டு நகரக்கூடாது. மதுரைக்குள் எங்க வேணும்னாலும் சுத்தட்டும். ஆனா கண்காணிங்க. ஒவ்வொரு மூவ்மென்ட்டும் கண்காணிங்க. ”
“சரி சார். மதுரையை விட்டு நகர்ந்தால் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன். நான் அவுங்களை ஃபாளோ பண்றேன். ”
“ம். சரி. பதினைந்து நிமிஷத்தில் கால் பண்றேன். ”
எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒலி கேட்டது.
ராஜன் தனது பாத்ரூமில் வெண்ணீர் பட்டனை ஆன் செய்தான். நல்ல சுடுநீரில் குளித்தான். குளித்துவிட்டு தனது அலமாரியைத் திறந்து அணியவேண்டிய உடைகளைத் தேர்வு செய்ய ஆரம்பித்தான். இரண்டு சட்டைகளை எடுத்தான். இரண்டிற்கும் பேன்ட்டைக் காணவில்லை. எங்கடா வைத்தோம் என்று வேறு இரண்டு பேன்ட்டை எடுத்தான் கையில்.
எடுத்துவைத்த இரண்டு பேன்டுக்கும் சட்டை இல்லை. ஏதோ யோசனையில் கிடைத்த டி ஷர்ட்டையும் பேன்ட்டையும் போட்டுக்கொண்டு தனது கைபேசியை மேஜையிலிருந்து எடுத்துக்கொண்டு சோபாவின் கைகளில் அமர்ந்தான்.
துரைக்கு செல்பேசியில் அழைப்பு தொடுத்தான்.
“சார் இப்ப அந்த பொண்ணு பெரியார் பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வாசலில் நிற்குது சார். இப்ப அங்க இருக்கும் பிச்சைகாரங்களுக்கு பையிலிருந்து சட்டை பேன்ட்டை தானம் போடுது சார். ”
“என்ன சொன்னீங்க? ”
“பையிலிருந்து சில சட்டை பேன்ட் எடுத்து பிச்சைபோடுது சார். ”
ராஜன் தன் காதுகளின் செவித்திறனை பரிசோதித்துக் கொண்டிருந்த வேலையில் துரை தனது தகவலை தந்து கொண்டேயிருந்தார்.
“அந்தப் பொண்ணு இப்ப இரண்டு உண்டியலை எடுத்து உடைத்து சில்லரையையும் பிச்சைக்காரன்களுக்கு கொடுக்குது சார். ”
ராஜன் தனது பூஜை அறைக்குச் சென்றான். அங்கே ஸ்ரீயின் உண்டியலும் இல்லை. அவளுக்கு என்று ஏட்டையா பொண்ணு கொடுத்த உண்டியல்.
அவனது உண்டியலும் இல்லை. மதுரை பாண்டி கோயிலுக்கு அவன் உண்டியலில் பணம் சேர்ப்பது வழக்கம். நம்பிக்கை இல்லாவிடிலும் அம்மா ஞாபகமாக செய்வது.
“அம்மையார் இப்ப என்ன செய்யிறாங்க? ”
“அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாய் தாள் போடுறாங்க. கையில் ஒரு வாலட் இருக்கு சார். ”
ஒரு நிமிடம் இரு பக்கமும் பேச்சில்லை.
“புளு கலர் வாலட்” என்று சந்தேகமாய் துரை இழுத்தார். அடிக்கடி பார்த்த பொருள் ஆயிற்றே! கேட்பதற்குதான் கொஞ்சம் பயம் அவருக்கு. நிச்சயமாய் அது யாருடையது என்று தெரிந்தபோதும் கேள்விகேட்கத்தான் நாவு எழவில்லை.
ராஜன் அவர் அதன் நிறத்தை சொல்லும் முன்னே அவனே கண்டுபிடித்துவிட்டான் அதன் நிறத்தை. இன்னும் சொல்லப்போனால் கண்கள் முன்பாக அந்தக் காட்சி படம் போலவே ஓடியது.
மரியாதை கொடுக்கும் விதமாகவே துரை வாலட்டைப் பற்றி கேட்கவில்லை. ஆண்கள் உபயோகிக்கும் வாலட் பெண்கள் கையில் எப்படி? என்று யோசிக்கத் தெரியாத ஆண்மகனா? காவலரா?
துரையின் கற்பனை எங்கெல்லாம் விரியும் என்று நினைத்த ராஜன் காதினில் மற்றொரு தகவல் வந்தது
“சார் இப்ப ஹேட்டல் விஜயாவில் சாப்பிடப்போகுது. ”
‘சாப்பிடப்போறாளா இல்லை ஹோட்டல் கேஷ் டேபிளில் ஆதரவற்றோர் நிதி என்ற உண்டியளில் வாலட்டை காலி பண்ணப் போறாளா? என்று பாரும். ’ என்று சொல்லப்போனவன் அதைச் சொல்லாமல் “சரி நான் அங்க வந்ததும் நீங்க கிளம்பலாம் துரை. ரொம்ப தாங்க்ஸ். ” என்றான்
“சரி சார். எதுக்கு நன்றியெல்லாம்? ஓ.கே சார். வச்சிடுறேன்.”
ராஜன் ஏட்டையாவிற்கு கால் செய்து கதவைத் திறக்க வழிசெய்தான்.
மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்ததும் பதினைந்து நிமிடத்தில் ஸ்ரீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டல் வாசலில் வந்து நின்றான்.
பிய்த்துப்போட்டு வைத்திருந்த தோசையின் கடைசி சிறு துண்டை எடுத்து வாயில் வைக்கப்போனவள் எதிரே ராஜன் போல் ஒரு மனிதன் தெரியவும் அவனை உற்றுப் பார்த்தாள். ராஜனே தான் என்று உறுதி செய்தவள் டேபிளில் நூறு ரூபாய் தாளை வைத்து அதன்மேல் டம்பளரை வைத்துவிட்டு பின்வாசல் தேடி ஹோட்டல் அடுக்களைக்குள் நுழைந்தாள். அவள் அடுக்களைக்குள் நுழைந்து மூன்று எட்டு வைப்பதற்குள் அவள் கைகளைப் பிடித்து அவள் நான்காவது எட்டை எட்டு வைக்காமல் தடுத்தது ராஜன் கைகள். “நேரா வாசலுக்கு போ. எனக்கு கோபம் வந்து பத்துபேர் முன்னாடி அடிச்சிட்டு இழுத்திட்டு போக வைத்திடாதே. அப்புறம் நிஜமாகவே உன்னை காவலில் வைத்துதான் விசாரிப்பேன். ” ஒரே நாளில் இரண்டு முயற்சிகளும் தோல்வி ஆனதால் அனைத்தையும் அனைவரையும் தன்னையும்சேர்த்து முற்றிலும் வெறுத்தாள்.
ஸ்ரீ அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கொஞ்சமாக வழிவிட்டிருந்த இடைவெளியில் பம்மிப் பம்மி வெளியேறினாள். அடித்துவிடுவானோ என்ற பயம் அவனைத் தாண்டிச் செல்லும்வரை அவளுக்கு இருந்தது. மற்ற வேளையாக இருந்தால் திரும்ப இவளும் கை நீட்டத் தயங்கப்போவது இல்லை. ஆனால் எந்நேரமும் F.I.R போடப் போறேன் என்று சும்மாவேணும் பயமுறுத்துறவன் நிஜமாகவே போட்டுவிட்டால்?
இருவரும் பைக்கில் சென்றபோதும் ஒன்றும் பேசவில்லை. அந்த ஹோட்டல் தெருவை தாண்டிச் சென்றபோது ரோட்டோரமாய் ஒரே சல சலப்பு. அழுகையும் இரைச்சலும். ராஜன் வண்டியை நிறுத்திவிட்டு ஸ்ரீ கைகளைப்பிடித்து கூட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றான்.
“ராஜன் வேண்டாம். அங்க போக வேண்டாம். ஏதோ ஆக்சிடன்ட்ன்னு பேசிக்கிறாங்க. நான் வரல்ல. இங்கேயே நிற்கிறேன். எங்கேயும் போக மாட்டேன். அங்க மட்டும் கூட்டிட்டு போகாத ப்ளீஸ். ப்ளீஸ் ராஜன். ”
ராஜன் ஸ்ரீயிடம் திரும்பாமலே அவளையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தை நெருங்கினான்.
Comments are closed here.