Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 3

அத்தியாயம் – 3

“யார் உன்ன அனுப்பியது?” – ‘யார் அனுப்பியது என்றால்!’ – அவனுடைய கேள்வியின் அர்த்தம் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் மிருதுளா. மாட்டிக்கொண்டதால் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறாள் என்று புரிந்துக் கொண்ட அர்ஜுன் ஹோத்ரா, “பதில் சொல்லு” என்றான் உள்ளடக்கிய கோபத்துடன்.

 

அப்போதும் அவள் பதில் சொல்லாமல் போனதும் ஆத்திரத்துடன் துப்பாக்கியை அவள் நெற்றியில் வைத்து அழுத்தினான். மிருதுளாவின் விழிகள் தெரித்துவிழுவது போல் விரிந்தன. அடக்க முடியாத அழுகை பீறிட்டது. தலையை இடவலமாக ஆட்டினாள். ஏதோ சொல்ல முயன்று தோன்றவளாக வாயை திறந்து திறந்து மூடினாள்.

 

“ஃபைவ் செகென்ட்ஸ்… வாயத் தெறந்து பேசு… இல்ல செத்து போ…” என்று வெகு தீவிரமாக அவன் கூற, “ஸ்…ஸார்… ஸார்… ப்…ப்…ப்ளீஸ்… ஸார்…” என்று உதறலுடன் படபடத்தாள்.

 

“ஸ்பீக்… அவுட்…” – கத்தினான்.

 

“அ… அ…அனந்தபூர்ல… ரௌ… ரௌ…டி…பசங்க… பயந்து…. உங்க… உங்க கார்ல… கார்ல… ஏறிட்டேன்… ஸ்…ஸா…ரி… ஸாரி… ப்…ளீஸ்…” – அவள் பேசப் பேச அவனுடைய முகம் ரௌத்திரமாக மாறியது.

 

‘பொய்…’ – அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு பெண் அவனுடைய காரிலேயே பயணம் செய்வதா! பொருந்தாத பொய்… – அவனுடைய உதடுகள் இகழ்ச்சியில் வளைந்தன. மறுகணமே அவன் முகம் மாறியது. ‘இவன் அனந்தபூரிலிருந்து வந்தது இவளுக்கு எப்படி தெரியும்!’ – புருவங்கள் நெரிந்தன.

 

“ஒரியா நல்லா பேசுறியே!” – போலியாக வியந்தான்.

 

“சின்ன வயசுல… ஒரிஸாலதான்…” – “உண்மைய பேசு… இல்ல ஒரே புல்லட்தான்… செத்…துடுவ…” – அவளுடைய பேச்சை இடைமறித்து உறுமினான்.

 

“உ… உண்…உண்மைதான்… நிஜமாவே… சார் ப்ளீஸ்… பிலீவ் மீ… ப்ளீஸ்…” – மன்றாடினாள்.

 

அவளுடைய பதட்டமும் கண்ணீரும் உண்மைக்கு வெகு அருகில் இருந்தது. அவனையே கன்வென்ஸ் செய்யும் விதத்தில் மிகவும் தத்ரூபமாக இருந்தது.

 

‘வெல் ட்ரெயிண்ட் ரிசோர்ஸ்’ என்று மனதிற்குள் நினைத்தவன், தான் வெகு நெருக்கமாக உளவுபார்க்கப் படுகிறோம் என்று உணர்ந்தான். முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் துப்பாக்கியை அவள் நெறியிலிருந்து இறக்கினான்.

 

“சரி சொல்லு… யார் நீ? ஏன் என்னோட கார்ல ஏறின?” – இயல்பாகக் கேட்டபடி அங்கே கிடந்த கோச்சில், ரிலாக்ஸாக அமர்ந்தான்.

 

“நா மிருதுளா… ரௌடி பசங்க தொரத்தினாங்க… அவங்ககிட்டேருந்து தப்பிக்க உங்க கார்ல ஏறிட்டேன் சார்… வேற எதுவும்… எனக்கு… வேற எதுவும் தெரியாது சார்…” பயத்துடன் படபடத்தாள்.

 

அவளுடைய ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக கவனித்தபடி, “யார் அந்த ரௌடிஸ்… எதுக்கு உன்ன துரத்தினாங்க” என்றான். அந்த இடத்தில் மிருதுளா சுதாரித்தாள். அனந்தபூர் கொலைகாரர்களுக்கும் இவனுக்கும் தொடர்பு இருப்பதாக அவளுக்குள் அழுத்தமாய் பதிந்திருந்த எண்ணம் அவளை எச்சரித்தது.

 

‘இல்லை… இவனிடம் எதையும் சொல்லக் கூடாது… நம்மைப் பற்றி எந்த விபரமும் இவனுக்குத் தெரிய கூடாது…’ – உறுதியான எண்ணம் உள்ளே தோன்றியது.

 

“அவங்க ஏதோ… ரோட் சைட் ரௌடிஸ்… லேட் நைட்… ரோட்ல யாரும் இல்ல… நா ஒர்க் முடிஞ்சு தனியா வந்ததும் தப்பா நடக்க ட்ரை பண்ணினாங்க… அவங்ககிட்டேருந்து தப்பிச்சு ஓடிவந்துதான்…” – நடந்ததை மறைத்து சமாளித்தாள்.

 

“ம்ம்ம்… பேரன்ட்ஸ் என்ன பண்ணறாங்க?”

 

“ஹாங்…” – சட்டென்று பதிலை யோசிக்க முடியவில்லை.

 

“பேரண்ட்ஸ்?” – மீண்டும் கேட்டான்.

 

“இல்ல… யாரும் இல்ல… நா தனியாத்தான்… அங்க…. வேல பார்த்துட்டு… ஹாஸ்ட்டல்ல…” – கோர்வையாக பேசமுடியவில்லை. பொய் தொண்டையில் சிக்கிக் கொண்டு வெளியே வர மறுத்தது.

 

‘இந்த சிறு பெண் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள்! நம்மை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிடலாம் என்று எண்ணினாளா!’ – வியப்பை வெளிக்காட்டாமல், “ஓ…” என்றான்.

 

“எங்க வேலை பார்க்கற?” – அடுத்த கேள்வியை கேட்டான்.

 

“ஹாஸ்ப்பிட்டல்ல… அட்டெண்டர்…” – ஏதோ வாய்க்கு வந்ததை சொல்லி வைத்தாள்.

 

“எந்த ஹாஸ்ப்பிட்டல்?”

 

“கா…க்..காவேரி…”

 

“எங்க தங்கியிருக்கேன்னு சொன்ன?”

 

“ஹாஸ்ட்டல்ல சார்…”

 

“ஹாஸ்ட்டலுக்கு பேரு எதுவும் இருக்கா… இல்ல பேரு இல்லாத ஹாஸ்ட்டலா?” – எவ்வளவு முயன்றும் எள்ளலை கட்டுப்படுத்த முடியவில்லை அவனுக்கு.

 

“ஆங்… இருக்கு… பேரு… தெரசா… தெரசா உமன்ஸ் ஹாஸ்ட்டல்…” – அவள் மீது பதித்த பார்வையை அவன் விளக்கவில்லை. அலட்சியம், எள்ளல், ஆராய்ச்சி எல்லாம் கலந்திருந்தது அந்தப் பார்வையில்.

 

“சு..ஜீ…த்…” – திடீரென்று எழுந்த அவனுடைய பெருங்குரல் அவளை திடுக்கிடச் செய்தது. அந்த அழைப்பிற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் உடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஒருவன்.

 

ஆறடிக்கு மேல் வளர்ந்திருந்தான். உடல், முற்றிய மரம் போல் பெருத்திருந்தது. அணிந்திருந்த கருப்பு கோட் அவனுடைய கம்பீரத்தை அதிகப்படுத்தியது. வலது கன்னத்தில் இருந்த பெரிய தழும்பு அவனை மேலும் துஷ்டனாகக் காட்டியது. அந்த அறையில் இருந்த இரு பெரும் மலைகளுக்கு நடுவில் தன்னை ஒரு துரும்பை போல் உணர்ந்தாள் மிருதுளா. அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதி அவள் அடிவயிற்றில் புளியை கரைத்தது.

 

“இந்த பொண்ண சர்வெண்ட்ஸ் ரூம்ல தங்க வை” – திடமான குரலில் கூறினான். எதிர்த்து பேச முடியாத குரல். இட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்று என்று சொல்லாமல் சொல்லும் குரல்.

 

‘சர்வெண்ட்ஸ் ரூம்லயா!!! சர்வெண்ட்ஸ் ரூம்ல நான் ஏன்!’ – கலவரமானாள் மிருதுளா. ஆனால் அதை யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை.

 

“ஏய்… வா என் கூட” – அதட்டி அழைத்தான் சுஜித். அவனுடைய முகமும் பார்வையும்… கடவுளே! – சட்டென்று அர்ஜுன் ஹோத்ராவிடம் திரும்பினாள்.

 

அவனுடைய மிரட்டலுக்கு பயந்து இவனிடம் தஞ்சமடைவது போலிருந்தது அவளுடைய செயல். அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் உயர்ந்தது.

 

“நா போகணும் சார்… ப்ளீஸ்…” – சின்ன குரலில் கெஞ்சினாள்.

 

“எங்க?”

 

“என்னோட ஊருக்கு… அனந்தபூருக்கு…” – யாசிக்கும் அவள் கண்களையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், பதில் ஏதும் சொல்லாமல் சுஜித்தின் பக்கம் திரும்பினான்.

 

தலைவனின் குறிப்பை உணர்ந்து, “ம்ம்ம்…ம்ம்ம்… கிளம்பு…” என்று கட்டளையிட்டான் சுஜித். மிருதுளா பதைபதைப்புடன் அர்ஜுன் ஹோத்ராவைப் பார்த்தாள். அவனோ கற்சிலை போல் இறுகி நின்றான். வேறு வழியில்லாமல் சுஜித்தை பின்பற்றி அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

 

********************

 

அந்த பிரம்மாண்டமான மாளிகையின் பிற்பகுதியில் சமையலறைக்கு அடுத்தாற்போல் வேலைக்காரர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அங்குதான் மிருதுளாவின் அறையும் இருந்தது.

 

அட்டாச்ட் பாத்ரூம், மின்விசிறி, சொகுசான படுக்கை, சுவரோடு பொருத்தப்பட்டிருந்த மர அலமாரி மற்றும் காற்றோட்டமான ஜன்னல் என்று அனைத்து வசதிகளோடும் இருந்தது அந்த அறை. வேலைக்காரர்கள் தங்கும் இடம் என்று சொல்ல முடியாத அளவிற்கு வசதியாகவே இருந்தது.

 

“இதுதான் உன்னோட ரூம்… குளிச்சுட்டு வெயிட் பண்ணு…” – கடுகடுத்த முகத்தோடு பேசினான். அவன் கண்களில் தெரிந்த வெறுப்பு மிருதுளாவை அச்சுறுத்தியது. பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். ஓரிரு நொடிகள் அவளை உறுத்துவிழித்தவன் பிறகு சட்டென்று திரும்பி அங்கிருந்து வெளியேறினான்.

 

அவன் அகன்றதும் கதவை மூடி தாளிட்டுவிட்டு தரையில் சரிந்து அமர்ந்தாள் மிருதுளா. மரண சூழலில் சிக்கிக் கொண்டது போல் மூச்சுமுட்டியது. எப்படி இங்கிருந்து தப்பிக்கப் போகிறோம் என்கிற கலக்கத்துடன் கால்களைக் கட்டிக் கொண்டு முழங்காலில் முகம் புதைத்து குலுக்கினாள்.

 

குபீரென்று ஆடையில் ரெத்தவாடை அடித்தது… “உவ்வே…” என்கிற குமட்டலுடன் எழுந்து குளியலறைக்கு ஓடினாள். நேற்று அடிபட்டுக் கிடந்த அந்த மனிதனின் ரெத்தம் அவள் ஆடையில் எங்கோ படிந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் வீச்சம் இருந்திருக்கிறது. அதை இப்போதுதான் உணர்கிறாள்.

 

குடலே வெளியில் வந்து விழும் அளவிற்கு குமட்டல் அவளை புரட்டிப்போட்டது. ஆனால் காலியாக இருந்த வயிற்றிலிருந்து எதுவும் வரவில்லை. மேல்மூச்சு வாங்க கண்ணீரும் கம்பலையுமாக நிமிர்ந்து தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தவள் அதிர்ந்தாள். முகமெல்லாம் அழுக்கு… ஆங்காங்கே சிராய்ப்புகள்… கண்டபடி களைந்து கிடந்த கேசம்… சேற்றில் துவைத்து எடுத்தது போல் கறைபடிந்திருந்த ஆடை… என்ன கோலமிது! – தன்னைத் தானே அடையாளம் காண முடியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது அவள் உருவம்.

 

முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தாள். யாரோ கதவை தட்டினார்கள். திறந்து பார்த்தாள். அரக்கு நிற சுடிதாரில் ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள். இறுக்கமான முகபாவத்துடன் கையிலிருந்த கவரை நீட்டினாள். மிருதுளா அதை வாங்கி கொண்டதும் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள். மீண்டும் கதவை மூடிக் கொண்டு உள்ளே வந்த மிருதுளா, அந்த கவரை பிரித்துப் பார்த்தாள். அந்த பெண் அணிந்திருந்த அதே அரக்கு நிறத்தில் ஒரு ஆடை இருந்தது.

 

அதை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். சுடுதண்ணீர் குழாயை திறந்து, நன்றாக சோப்புப் போட்டு குளித்தாள். ஆனாலும் அவனுடைய ரெத்தம் அவள் உடம்பில் படிந்திருப்பது போன்றதொரு உணர்விலிருந்து மீள முடியவில்லை. அந்த மனிதனின் நிலை என்னவாகியிருக்கும்… இறந்திருப்பானா… அல்லது நூற்றில் ஒரு வாய்ப்பாக எப்படியாவது பிழைத்திருப்பானா… என்றெல்லாம் எண்ணங்கள் அலைபாய்ந்தது. நாம், வேறு எப்படியாவது அவனை காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம்… சுயநலமாக பயந்து ஓடி வந்துவிட்டோம்… அந்த பாவம்தான் இங்கு வந்து சிக்கிக் கொண்டோம் என்றெல்லாம் யோசித்து மனதை அலட்டிக் கொண்டாள். மொத்தத்தில் அமைதியில்லாமல் போராடியது அவள் உள்ளம்.

 

ஷவரை திறந்துவிட்டு வெதுவெதுப்பான நீருக்கு அடியில் நேரம் போவது தெரியாமல் நின்றுக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு, வெளியே அவளுடைய அறைக்கதவு தட்டப்படும் சத்தம் சிறிதும் கேட்கவில்லை. குளித்துவிட்டு நிதானமாக வெளியே வந்தபோது, உணவு ட்ரே ஒன்று டீப்பாயில் இருந்தது. குழப்பத்துடன் கதவைத் திரும்பிப் பார்த்தாள். லாக் செய்யப்பட்டுதான் இருந்தது. உள்பக்கம் பூட்டியிருந்த அறையை வெளிப்பக்கமிருந்து திறந்திருக்கிறார்கள்! – நெருப்பில் நிற்பது போல் உணர்ந்தாள்.

 

அங்கிருந்து ஓடிவிட அவள் கால்கள் துடித்தன. ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதை புத்தி அறிந்திருந்தது. டீப்பாயில் இருந்த ட்ரேயை பார்த்தாள். ரொட்டி குருமாவோடு ஜூசும் இருந்தது. உணவை பார்த்ததும் காலியாய் கிடந்த வயிறு சத்தமெழுப்பியது. ஆனால் அவள் அந்த உணவை உன்ன தயாராக இல்லை. அதில் ஏதேனும் கலந்திருந்தால்!

 

இங்கிருப்பவர்களைப் பார்த்தால் உணவில் விஷம் வைத்து கொலை செய்பவர்களாகத் தோன்றவில்லைதான். துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு விஷத்தை ஏன் தேடப் போகிறார்கள். ஆனால் மயக்க மருந்து ஏதேனும் கலந்து பெண்களை வெளிநாட்டுக்கு கடத்துபவர்களாக இருந்தால்! – நினைக்கும் போதே நெஞ்சம் நடுங்கியது. பயனற்ற முயற்சி என்று தெரிந்தும், கதவின் லாக்கை இன்னொரு முறை நன்றாக அழுத்தி விட்டாள். வெளியிலிருந்து சாவியைப் போட்டால் திறக்கத்தான் போகிறது. ஆனாலும் மனதின் போராட்டம் அதை செய்யச் சொன்னது.

 

எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து தப்பி செல்ல வேண்டும். இல்லையென்றால் அவள் அழிவது உறுதி. ஆழமூச்செடுத்து பயத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை நோட்டமிட்டாள். அந்த மாளிகையின் பக்கவாட்டுப்பகுதி தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரங்களாகத்தான் இருந்தது. ஏதோ பெரிய தோப்பு அல்லது காட்டுப்பகுதியாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தாள்.

 

இங்கிருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம்! – மனம் சோர்ந்து. ‘அம்மா!!!’ – உள்ளம் குமுறியது… கண்களில் கண்ணீர் கசிந்தது. மகள் இரவெல்லாம் ரூமுக்கு வரவில்லை என்னும் செய்தி இந்நேரம் அந்த தாயை எட்டியிருக்கும். என்ன பாடுபடுகிறாளோ! எப்படியெல்லாம் தவிக்கிறாளோ! – தாயின் வேதனையை எண்ணி மகள் கலங்கினாள்.

 

கண் முன் நடந்த கொலை… உயிர் பயத்தில் ஓடிய ஓட்டம்… இப்போது சிக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான இடம்… எப்படி இதிலிருந்தெல்லாம் வெளிவரப்போகிறாள்! யார் காப்பாற்றப் போகிறார்கள்! – எதுவுமே புரியவில்லை. சிந்தனைகள் சுழன்றுக் கொண்டே இருந்தன.

 

ஒருவேளை அந்த கொலை பழி இவள் மீதே கூட விழுந்திருக்கலாம்… அலைபேசி, கால் செருப்பு, கடை சாவி எல்லாம் அங்குதான் எங்கோ கிடந்திருக்கும். போலீஸ் தடயங்களை சேகரித்திருப்பார்கள். அப்போது இவற்றில் ஏதேனும் அவர்கள் கையில் கிடைத்திருந்தால் சந்தேகம் இவள் பக்கம் தானே திரும்பியிருக்கும். சந்தேகமென்ன… இவள் தலைமறைவாகிவிட்டதாக எண்ணி குற்றவாளி என்றே முடிவு செய்திருக்கலாம். கடவுளே! – வயிறு கலங்கியது. கண்களில் கலவரம் கூடியது.

 

‘இல்லை… பயப்படக்கூடாது… தப்பிக்க வேண்டும்… உயிரோடு பிழைத்து இங்கிருந்து வெளியேற வேண்டும்…’ – ஆழமாக மூச்செடுத்து மனதை திடப்படுத்திக் கொண்டு சிந்தித்தாள்.

 

நேற்று இரவு அவள் கடையை மூடும் பொழுது மணி சரியாக பத்து. அதற்கு பிறகுநடந்த சம்பவங்களையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், இவள் அந்த காரில் ஏறிய போது நேரம் நள்ளிரவை தாண்டியிருக்க வேண்டும். அதற்கு மேல் பயணம் செய்து ஒரிஸாவிற்குள் நுழைந்திருக்கிறாள் என்றால் எப்படியும் ஆந்திரா-ஒரிசா பாடரில்தான் இப்போது அவள் இருக்க வேண்டும். எந்த ஊர்- எந்த இடம் என்பதைத்தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. – அவள் சிந்தனையுடன் நின்றுக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது.

 

மிருதுளா அசையாமல் நின்றாள். வந்திருப்பது யார்… எதற்கு? என்கிற கேள்விகள் பல அவளுக்கு எழுந்து விடையை தேடிக்கொண்டிருந்த போது கதவு மேலும் பலமுறை தட்டப்பட்டுவிட்டது. ஓரிரு நிமிட தயக்கத்திற்குப் பிறகு சென்று கதவைத் திறந்தாள்.

 

மெல்லிய உடல்வாகில் ஜீன்ஸ் அணிந்த பெண் ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள். தோள்பட்டை வரை வெட்டிவிடப்பட்ட கூந்தலை போனிடெயிலில் அடக்கியிருந்தாள். அவள் அணிந்திருந்த கண்ணாடி அவளுடைய அழகை கூட்டிக் காட்டியது. முகத்தில் அறிவுக்களை இருந்தது. நீண்ட நாள் பழகிய தோழியை பார்ப்பது போல் மலர்ந்த முகமும் விரிந்த புன்னகையுமாக மிருதுளாவை நோக்கினாள்.

 

பதிலுக்கு புன்னகைக்க முடியாமல் அறிமுகமற்ற பார்வையோடு நின்றுக் கொண்டிருந்தாள் மிருதுளா.

 

“ஹாய்… ஐம் பூஜா…” – தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

 

அப்போதும் பதில் பேச முடியாமல், “ஓ…” என்று தலையை ஆட்டிவிட்டு அசையாமல் நின்றாள் மிருதுளா.

 

“உள்ள வரலாமா?” – மலர்ந்த முகம் மாறாமல் கேட்டாள் பூஜா.

 

தான் வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறோம் என்பதையே அவ்வளவு நேரம் உணராமல் போய்விட்ட மிருதுளா சற்று சங்கடத்துடன், “எஸ்… ப்ளீஸ்…” என்று வழிவிட்டு ஒதுங்கினாள்.

 

உள்ளே வந்த பூஜா டீப்பாயில் இருந்த உணவு ட்ரேயை கண்டுவிட்டு, “இன்னும் சாப்பிடலையா நீ?” என்றாள் ஆச்சரியமாக.

 

“ஆங்… இல்ல… பரவால்ல…” – தடுமாறினாள் மிருதுளா. ஏன் சாப்பிடவில்லை என்பதற்கான காரணத்தை யோசிக்க வேண்டுமே!

 

“நைட்லேருந்து எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட… முதல்ல சாப்பிடு” – அக்கறையோடு கூறினாள்.

 

மிருதுளா வாய் திறந்து எதையும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய முகபாவத்திலிருந்தே அவளுடைய எண்ணவோட்டத்தை கணித்துவிட்ட பூஜா, “நீ நினைக்கற அளவுக்கு இங்க யாரும் மோசமானவங்க இல்ல மிருதுளா. பயப்படாம சாப்பிடு” என்றாள்.

 

‘துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்… கொலை செய்கிறார்கள்… ஆனால் மோசமானவர்கள் இல்லையாம்! ஆஹா!!!’ – மனதில் தோன்றிய ஏளனத்தை வெளியே சொல்லவில்லை. ஆனால் அவள் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. பூஜாவின் புன்னகை மேலும் விரிந்தது.

 

“குல்டா வசுந்தரா… மஹாநதி மினரல் மைனஸ் எல்லாம் தெரியுமா?” என்றாள்.

 

“ஆங்…” – இந்த சுரங்கங்கள் எல்லாம் ஒரிசாவில் புகழ்பெற்ற சுரங்கங்கள். குழந்தைக்கு கூட தெரியும். அவளுக்குத் தெரியாதா! – தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

 

“அதோட ஓனர் அர்ஜுன் ஹோத்ராவோட வீடுதான் இது. நீ இங்க பார்த்த துப்பாக்கி… கார்ட்ஸ் எல்லாம் இங்க இருக்கவங்களோட பாதுகாப்புக்குத்தான். உனக்கு எந்த ஆபத்தும் இல்ல” – பூஜாவின் பேச்சு மிருதுளாவிற்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இங்கிருந்து சுமூகமாகவே வெளியே சென்றுவிடலாம் என்று எண்ணினாள்.

 

“இது எந்த ஊர்?” – மெல்ல கேட்டாள்.

 

“மஹல்பாட்னா. ஆந்திரா பார்டர். நீ எப்படி இவ்வளவு நல்லா ஒரியா பேசற?” – மெல்ல விசாரணையை துவங்கினாள்.

 

மிருதுளா சாமர்த்தியமாக அர்ஜுன் ஹோத்ராவிடம் கூறியதை அப்படியே இவளிடமும் ஒப்புவித்தாள்.

 

அவள் கூறுவது அனைத்தையும் முழுமையாக நம்புவது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்த பூஜா, அவளுடைய ஒரிசா வாழ்க்கையைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்பினாள்.

 

ஆனால் அதைப்பற்றி கேட்பதற்கு முன் மிருதுளாவிடம் இனிக்கப் பேசி அவளுடைய நம்பிக்கையை சம்பாதித்தாள். அல்லது சம்பாதிக்க முயன்றாள் என்று கூட சொல்லலாம்… அதன் பிறகு அவளை சமாதானம் செய்து உணவருந்த வைத்தாள். கடைசியாக தனக்குத் தேவைப்பட்ட விபரங்களை சேகரிக்கத் துவங்கினாள். ஆனால் அவளுடைய நுட்பங்கள் எதுவும் மிருதுளாவிடம் வேலை செய்யவில்லை.

 

அவள் ஒரு கொலையை நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள். அந்த கொலையாளிகளோடு இவர்களுக்கு நேரடி தொடர்பிருப்பதை நன்கு அறிந்திருக்கிறாள். அவ்வளவு சுலபமாக அதையெல்லாம் புறந்தள்ளிவிடுவாளா என்ன! பூஜா இனிக்கப் பேசினால்… நட்பாக பழகினால் அதையே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் மிருதுளாவின் எண்ணம். எனவே அவள், பூஜாவின் எந்த கேள்விக்கும் உண்மையான பதிலை கொடுக்கவில்லை. பாதுகாப்பான பதிலை மட்டுமே கொடுத்தாள்.

 

மிருதுளாவின் அனுமானப்படி பூஜா இங்கு ஒரு முக்கியமான ஆள். இவளை மிகவும் நம்புகிறாள். அந்த நம்பிக்கையை பயன்படுத்தி எந்த சேதாரமுமின்றி இங்கிருந்து உருப்படியாக வெளியேறிவிட வேண்டும். – இதுதான் அவளுடைய எண்ணம். அவளை அப்படி நம்ப வைத்தது பூஜா என்னும் மனோதத்துவ நிபுணரின் சாமர்த்தியம்.

 

பூஜா ஆய்வு செய்தவரை, மிருதுளா அதீத பயத்தில் இருக்கிறாள். அவள் கூறும் கதையில் உண்மையை விட பொய்கள் தான் அதிகம் நிறைந்திருக்கின்றன. அவளுடைய கணிப்புப்படி, இதுதான் மிருதுளாவின் முதல் அசைன்மெண்டாக இருக்க வேண்டும். – இதைத்தான் ரிப்போர்ட்டாக அர்ஜுன் ஹோத்ராவின் கவனத்திற்கு அனுப்பினாள் பூஜா.

 
11 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  PAPPU PAPPU PAPPU PAPPU says:

  semmaaaaaaaaaa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Miruthula pavam pa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Yes Pavam thaan… But she’ll be alright… 🙂


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  adapavi mutha assigmentaaaaaaaaa hayo hayo


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Ugina


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Mani thathuva dr ah irunthum ivalum thappave guess pannra. Kasu kuduthu seat vangirpalo??


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Anjali


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Semma thrill. Waiting for the next thrill


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Vidya… Next epi posted…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vats says:

  Ada kadavule.. unmaiya sonna matikanum, poi porundala.. epdi thapikka poralo


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   🙂

error: Content is protected !!