🎶 🎶 இசை 🎶 🎶
3112
5
“இண்டியாஸ் எங் வாய்ஸ்” – மிகப் பிரபலமான இந்திய தேசிய தொலைகாட்சி ஒன்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு டேலண்ட் ஷோ… இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் இளைஞர்கள் கலந்து கொண்டு, தங்களுடைய குரல் வளத்தை பாடல்களின் மூலம் நிரூபித்து பரிசுகளையும் வானளாவிய புகழையும் வாரிச் செல்வது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் அள்ளிக் கொடுக்கும் பணத்தில் பிரம்மாண்டமாய் உருவாகும் இந்த நிகழ்ச்சி, காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை எங்கும் பிரபலம்.
2013-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு, முதற்கட்ட தேர்வே சில நூறு பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடையாள எண்ணை பேட்சாக ஒட்டி ஸ்டேஜுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பிரபன் சிங் – ஆளுமையான குரலுக்கு சொந்தக்காரன். ஷர்மிலி – தித்திக்கும் தேன் குரலுக்கு சொந்தக்காரி. இந்த இருபெரும் வடநாட்டுப் பாடகர்களுக்கு மத்தியில், தன்னுடைய வசீகரக் குரலால் மிகக் குறுகிய காலத்தில் உலகத்தின் பார்வையை தன் பக்கம் திரும்பிய, கார்த்திக் வேணுகோபால் என்னும் தென்னிந்திய இளம் பாடகரும் நடுவராக அமர்ந்திருந்தான்.
ஸ்டேஜில் வந்து நிற்கும் ஒவ்வொரு போட்டியாளரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவர்களுடைய பாட்டை கேட்டு, அவர்களை தேர்வு செய்தும் நிராகரித்தும் தங்களுடைய வேலையை சரியாக செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவர்கள்.
அடுத்ததாக… ஒரு பெண் மேடையேறினாள். தலையை பாய் கட் அடித்திருந்தாள். ஜீன்ஸ் பேண்டும் டி-ஷர்ட்டுக்கு மேல் லைட் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். பார்க்க மொழுமொழுவென்று மெழுகு பொம்மை போல் அழகாக இருந்தாள். அவள் மைக்கை பிடித்திருந்த விதமே அவளுடைய நம்பிக்கையை பறைசாற்றியது.
“ஹாய் எங் லேடி… டெல் மீ… வாட்ஸ் யுவர் நேம்?” – ‘வணக்கம் இளம் பெண்ணே… சொல்லுங்க… உங்க பேர் என்ன?’ – பிரபன் சிங்.
“ஹாய்… மை நேம் இஸ் ஸ்ருதி… ஐம் ஃபிரம் பஞ்சாப்…”
“ஓகே… என்ன பண்ணறீங்க?”
“ஐம் எ மெடிக்கல் ஸ்டூடன்ட்…”
“வெரி குட்… என்ன பட்டுப் பாடப் போறீங்க இன்னைக்கு?”
“எ தமிழ் சாங்…”
“கோ ஆன்… ஆல் தி பெஸ்ட்…” – வாழ்த்தினான் பிரபன்.
ஸ்ருதி தயாரானாள்… மியூஸிக் ஆரம்பமானது… சரியான பிட்சில் பாடலைத் துவங்கினாள்…
“தில்ருபா… தில்ருபா… காதல் நிலவே தில்ருபா…
தில்ருபா… தில்ருபா… காதல் உறவே தில்ருபா…”
நல்ல எனர்ஜிட்டிக்கான பாடல்… முடிந்த அளவுக்கு உற்சாகமாக… முழு எனர்ஜியோடு பாடினாள். யார் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் அவளுக்கு கவலை இல்லை. அவள் எதையும் கவனிக்கவில்லை… அவளுடைய முழு கவனமும் அவளுடைய குரலில் மட்டும்தான் இருந்தது… பாடல்… குத்தாட்டம்… குதூகலம்… எனர்ஜி… ஆடியன்ஸ் என்ஜாய்மென்ட்… இவைகள் மட்டுமே அவளுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தன. தன்னை ஒரு ராக் ஸ்டாராக உருவகப்படுத்திக் கொண்டு, படு உற்சாகமாக பாடி முடித்துவிட்டு நடுவர்களை பார்த்தாள். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.
‘வாட்ஸ் ராங்!’ – தனக்குள் கேட்டுக் கொண்டு பார்வைக்காளர்கள் பக்கம் பார்வையை திருப்பினாள். அவள் விரும்பும்படியான எதிரொலிப்பு அங்கேயும் இல்லை… மீண்டும் அவளுடைய பார்வை நடுவர்கள் பக்கம் திரும்பியது.
முதலில் வாய் திறந்தது கார்த்திக் தான்… “வொர்ஸ்ட் சாங் ஐ எவர் ஹியர்ட்…” – ‘நா கேட்டதுலேயே மிக மோசமான பாடல்…’ – ஸ்ருதியின் கண்கள் விரிந்தன.
“யு ஜஸ்ட் டெல் மீ ஒன்திங்… இப்போ நீங்க என்ன பண்ணுனீங்க? பாடினேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்… இட் வாஸ் ஆவ்ஃபுல்… ஆர்க்கஸ்டரா ஒருபக்கம் போயிட்டு இருக்கு… நீங்க ஒரு பக்கம் கத்திக்கிட்டு இருக்கீங்க… ப்ளீஸ் டோன்ட் கில் மியூசிக்…” – இசையின் மீது அவனுக்கிருந்த அதீத காதல் கடுமையான வார்த்தைகளாய் வந்து விழுந்தன.
ஸ்ருதி திகைப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய சீரற்ற சுவாசமும் துடிக்கும் உதடுகளும் கேமிராவில் க்ளோசப்பில் பதிவாகிக் கொண்டிருந்தன. கார்த்திக்கின் கோபம் சற்று மட்டுப்பட்டது.
“எனக்கு புரியுது…. உங்களுக்கு மியூசிக் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கு. பட் இது உங்களுக்கான ப்ரஃபஷன் இல்ல…” – “நா எந்த பிரபஷனை சூஸ் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்ல தேவையில்லை மிஸ்டர் கார்த்திக் வேணுகோபால்” – அவன் முடிப்பதற்குள் குரல் நடுங்க, முகம் சிவக்க, நாசியை விடைத்துக் கொண்டு படபடவென்று பொரிந்தாள் ஸ்ருதி.
மொத்த ஆடிட்டோரியமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. “ஓ… மை… காட்!!!” – பிரபன் வாயைப் பிளந்தான்.
“ஹௌ டேர் ஷி!!!” – ஷர்மிலியின் விழிகள் தெறித்து விழுவது போல் விரிந்தன.
கார்த்திக் புருவம் உயர்த்தி, அலட்சியமாக உதட்டை சுழித்தான். அவனுடைய ரியாக்ஷன் அவளை இன்னும் கடுப்பாக்கியது.
“சில வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு ஸ்டேஜ்ல… முதல் தடவ நீங்க ஆடிஷனுக்கு வந்து நின்னப்போ எப்படி பாடுனீங்கன்னு நியாபகம் இருக்கா உங்களுக்கு?” – விழிகளை உருட்டியபடி மூச்சுவிடாமல் பேசினாள்.
மிகவும் பலவீனமான வாதம்… அவனுடைய பாடலை இவள் பாடலுடன்… இல்லையில்லை… கத்தலுடன் ஒப்பிடுகிறாள்! ஆனாலும் அவளுடைய துணிச்சல் அவனை மிரள வைத்தது. வெளியேற துடிக்கும் புன்னகையை மறைத்துக்கொண்டு, “பெட்டர் தென் யு…” என்றான் இலகுவாக.
அவள் அவ்வளவு தூரம் டென்ஷனாகி கத்திக் கொண்டிருக்கிறாள். அவனோ ஒரே வார்த்தையில் இலகுவாக அவளுடைய பிபியை எகிற செய்தான்.
அவளும் விடவில்லை… “ஓ யா… யு ஆல்வேஸ் திங்க் யு ஆர் பெட்டர்…” – ‘ஓ ஆமாம்… நீங்க எப்பவுமே உங்களைத்தான் பெட்டரா நினைப்பீங்க…’ – என்று நக்கலாகக் கூறிவிட்டு உதட்டை சுழித்தாள். கூட்டம் சலசலத்து. அனைவரும் ஸ்ருதியை வேற்று கிரக வாசி போல் பார்த்தார்கள்.
“ஸ்ருதி…. ஸ்ருதி… லிசன் டு மீ… யு காண்ட் டாக் டு அஸ் லைக் திஸ்” – இடையில் புகுந்து அறிவுரை கூறினாள் ஷர்மிலி.
“யு கைஸ் காண்ட் டாக் டு மீ லைக் திஸ்” – அதே அறிவுரையை அவளுக்கு திருப்பிக் கொடுத்தாள் ஸ்ருதி.
“நீதான் இங்க வந்து எங்க முன்னாடி பாடணும்னு முடிவு பண்ணின… சோ எங்களோட கமெண்ட்ஸையும் நீ அக்செப்ட் பண்ணித்தான் ஆகணும்” – கார்த்திக் கண்டித்தான்.
“ஓ ரியலி…! அப்போ நாம ஒன்னு பண்ணலாம்… நீங்க இங்க வந்து பாடுங்க. நா அங்க வந்து உட்கார்ந்து உங்களை ஜட்ஜ் பண்ணறேன். அண்ட் ஐ ப்ராமிஸ் யு… நீங்க என்னை கமெண்ட் பண்ணினதை விட மோசமா நா உங்களை கமெண்ட் பண்ணுவேன்” – சவால்விட்டுவிட்டு அடுத்த தாக்குதலுக்கு தயாராக நின்றாள்.
“ஓ காட்!” – சிரித்தான் பிரபன் சிங். அவளுடைய பேச்சு எக்குத்தப்பாக இருந்தாலும் அவளுடைய ரியாக்ஷன்ஸ் கியூட்டாக இருந்ததாலோ என்னவோ அவள் மீது அவனுக்கு கோபம் வரவில்லை.
கார்த்திக்கிற்க்கோ அவளை இன்னும் வம்பிழுத்து கதறவிட வேண்டும் போலிருந்தது.
“நீ பாடணும்… நா ஜட்ஜ் பண்ணனும்… அதுதான் இங்க பேட்டன்… ஆம் ஐ கிளீயர்?” – வலுக்கட்டாயமாக சிரிப்பது போல் பாவனை செய்து அவளை வெறுப்பேற்றினான்.
“நீங்க பாடுங்க… நா ஜட்ஜ் பண்ணறேன்… பேட்டனை கொஞ்சம் மாத்தலாம்… டூ யு ஹியர் மீ?” – அவன் எப்படி சொன்னானோ அதே தொனியில் சொல்லிவிட்டு அவனைப் போலவே உதட்டை இழுத்து பிடித்து வலுக்கட்டாயமாக சிறிதட்டுவிட்டு உடனே முறைத்தாள். பதிலுக்கு பதில் திருப்பிக் கொடுத்துவிடும் வேகம் அவளிடம் இருந்தது.
“ஸ்ருதி… நீ ஒரு விஷயத்தை அக்செப்ட் பண்ணிதான் ஆகணும்… நீ பாடினது நிச்சயமா நல்லா இல்ல…” – பிரபன்.
“இருக்கலாம்… ஆனா அதுக்காக நீங்க யாரும் என்கிட்ட ரூடா பேசணும்ங்கற அவசியம் இல்ல…”
“எஸ்… ஐ அக்ரி… வி காண்ட் பி சோ ரூட்… வி… ஆர்… சாரி… ஆல்ரைட்?” – சிறு பெண்தானே என்கிற கரிசனத்துடன் சமாதானமாக கூறினான் பிரபன். அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்தது.
பிரபனுடைய சமாதான பேச்சிற்கு ஸ்ருதி ரியாக்ட் செய்வதற்குள் இடைப்புகுந்தான் கார்த்திக்.
“உன் பாட்டைவிட பேச்சு பெட்டரா இருக்கு… ஆனா அதை கேட்டுட்டு இருக்க எங்களுக்கு நேரம் இல்ல…” என்று கூறிவிட்டு சிகப்பு பஸரை அழுத்தினான்.
மீண்டும் ஒரு போர் துவங்கப் போகிறது என்கிற எண்ணத்துடன், “நாட் அகைன்…” என்று ஷர்மிலி கூறினாள். அதே நொடி, கார்த்திக்கைப் பார்த்து நுனிநாக்கை துருத்தி பழிப்புக் காட்டினாள் ஸ்ருதி. நொடிக் கூட தாமதிக்காமல் அவளை அப்படியே இமிட்டேட் செய்தான் கார்த்திக். முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு பேக் ஸ்டேஜிற்கு திரும்பினாள் ஸ்ருதி.
ஸ்ருதி ஆடிஷனை முடித்துவிட்டு வந்த பிறகு, கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஸ்டேஜிற்கு ஓடினாள் அடுத்த போட்டியாளர்.
மேடைக்கு சென்றவள் போட்டியாளர்கள் நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், கெக்க-புக்கவென சிரித்துக் கொண்டு குடுகுடுவென்று கார்த்திக்கிடம் ஓடினாள்.
“ஓ… கார்த்திக்!!! ஐ லைக் யு சோ மச்… எனக்கு உன்னோட குரல் பிடிக்கும்… உன்னோட கண்ணு பிடிக்கும்… உன்னோட சிரிப்பு பிடிக்கும்… உன்னோட பேச்சு பிடிக்கும்… ஆஹா… கார்த்திக்…!!! யு ஆர் ஹியர்…!!! என் முன்னாடி…! ஐ காண்ட் பிலீவ் திஸ்… ஓ மை காட்! ஐ லவ் யு… லவ் யு சோ மச் கார்த்திக்…” – அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில், நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்த மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
“ஓ கார்த்திக்!!! எவ்வளவு இனிமையான சிரிப்பு உனக்கு! நீ சிரிச்சா என்னால மூச்சே விட முடியாது!” என்று கூறிக் கொண்டே அவளும் கலகலத்து சிரித்தாள்.
அவளுடைய வெகுளித்தனமான பேச்சும் செய்கையும் அவர்களை வெகுவாய் கவர்ந்தது… அதை ரசித்து சிரித்தார்கள். அதே நேரம் அவன் மீது அவளுக்கு அதீத அன்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள்.
பேக் ஸ்டேஜில் தன்னுடைய பொருட்களை சேகரித்து பையில் அடுக்கிக் கொண்டிருந்த ஸ்ருதி, திரையில் அந்த பெண் அடித்த லூட்டியைப் பார்த்துவிட்டு கடுப்பானாள். செய்து கொண்டிருந்த வேலையை அம்போவென்று விட்டுவிட்டு திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நா உனக்காக ஒரு கிபிட் கொண்டு வந்திருக்கேன்” – அந்த பெண் ஒரு டைரியை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்தாள்.
அதில் நிறைய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. அவனுடைய பல போட்டோக்கள் கத்தரித்து ஒட்டப்பட்டிருந்தன. பக்கங்களை புரட்டி அனைத்தையும் ஒருவித எஸ்க்ஸைட்மெண்ட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“நானே எழுதினேன்… எல்லாமே உனக்கு தான்…” – கபடமில்லாமல் சிரித்தாள்.
“வாவ்… ஐ லைக் இட்…” – சந்தோஷப்பட்டான் கார்த்திக்.
உடனே அவன் கையிலிருந்து அந்த டைரியை பிடுங்கி, “நானும் பார்க்கறேன்… ஷோ மீ மேன்” என்று ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தான் பிரபன்.
கலர் கலராக கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. பலவித ஜிகினா காகிதங்களை வெட்டி ஒட்டி கவிதையையும் அவனுடைய புகைப்படத்தையும் அலங்கரித்திருந்தாள். அதை பார்க்கப் பார்க்க அவனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது. சிரித்துக் கொண்டே, “உனக்காக நா ஒரு கவியதையை படிச்சு காமிக்கிறேன்” என்று கூறிவிட்டு ஒரு கவிதையை வாசித்தான்.
“உன்னை நினைத்தால்
என் முகத்தில் புன்னகை…
டிவியில் உன்னை பார்த்தால்
என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி…
உன்னைப் பற்றி பேசினால்
என் உடம்பெல்லாம் சிலிர்ப்பு…
நீ அருகில் இருந்தால்
உன்மேல் விழுகிறேன் காதலில்!” – ஒவ்வொரு வரியையும் பிரபன் படிக்கப் படிக்க, சிரித்துத் தள்ளிவிட்டான் கார்த்திக்.
அவன் மட்டுமல்ல ஷர்மிலியும் சிரிப்பில் மண்டையை உடைத்துக் கொண்டாள். அவளோடு இனைந்து அந்த பெண்ணும் கூட சிரித்தாள். அந்த புத்தகத்தில் இருந்த அனைத்து கவிதைகளும் இந்த தொனியில் தான் இருந்தன.
சற்று நேரம் அவளுடைய அப்பாவித்தனத்தை ரசித்துவிட்டு அவள் என்ன பாடப் போகிறாள் என்று கேட்டார்கள்.
காதல் ரசம் சொட்டும் ஒரு பாடலை கூறிவிட்டு, அதை கார்த்திக்கிற்காக பாட வேண்டும் என்றும் கூறினாள். மற்ற இருவரும் நடுவர் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்கள்.
“இந்த பாட்டு உனக்கான பாட்டு… நாங்க தொந்தரவு பண்ண விரும்பல… என்ஜாய்” என்று சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்கள்.
“ஓ… நோ… ஸ்டே மேன்… ஷர்மிலி…” – அவன் தடுத்துப் பார்த்தான்… ஆனால் அவர்கள் கேட்கவில்லை. “என்ஜாய்… என்ஜாய்…” என்று கிண்டலடித்துக் கொண்டே தள்ளி நின்று அந்த பெண்ணின் பாடலை ரசித்தார்கள்.
அவள் அவனுக்காகவே பாடினாள். ஆரம்பத்தில் சற்று சங்கடத்துடன் அமர்ந்திருந்த கார்த்திக் பிறகு இயல்பாகி அவளுடைய பாடலை கவனித்தான்.
சுமாராக பாடினாள். முடிவெடுக்கும் நேரத்தில், “ஹேய்… வாங்கப்பா…” என்று மற்ற இருவரையும் அழைத்தான்.
“நோ… நோ… அந்த பாட்டு உனக்கானது… நீதான் முடிவெடுக்கணும். உன்னோட உரிமையை நாங்க பறிக்க விரும்பல” என்று கூறிவிட்டு இருவரும் டீ குடித்தபடி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
கார்த்திக் சற்று நேரம் யோசித்தான். அவளுடைய பாடல் சுமாராகத்தான் இருந்தது… ஆனால்?
“வாட்ஸ் யுவர் டிசிஷன் மேன்?” – ஷர்மிலி.
“கண்டிப்பா எஸ் தான்… ஷி இஸ் கோயிங் டு தி நெஸ்ட் லெவல்….” என்று கூறியபடி பச்சை பஸரை அழுத்தினான்.
“ஓ…” வென்று கூச்சலிட்டபடி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் அந்த பெண். ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டாள். கார்த்திக் அவளை கனிவாக நடத்தினான்.
“நீ உன்னோட இதயத்திலிருந்து பாடின… என்னால உன்னை நிராகரிக்க முடியல… நெஸ்ட் ரௌண்டுகு இன்னும் நல்லா தாயாராயிட்டு வா…” என்று வாழ்த்தி அனுப்பினான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியின் உள்ளம் பொங்கிப் பொங்கி அடங்கியது… கார்த்திக்கின் மீதும் அந்த பெண்ணின் மீதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அவனை எதுவும் செய்ய முடியாது… ஆனால் இவளை…!!!
அவசரஅவசரமாக பையில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் வைத்து ஜிப்பை மூடினாள். சந்தோஷமாக ஸ்டேஜிலிருந்து இறங்கி பேக் ஸ்டேஜிற்கு வந்தாள் அந்த பெண். அதற்காகவே காத்திருந்த ஸ்ருதி, அவளுக்கு அருகில் சென்று கையிலிருந்த பையை முதுகில் மாட்டுவது போல் வேகமாக தூக்கி விசிறி, செம்மையாக அவளுக்கு ஒரு அடி கொடுத்தாள்.
‘ஐயோ அம்மா…’ என்று அவள் அலறி கொண்டு கீழே விழுந்த போது இவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதே போல் அவனுக்கும் ஒன்று கொடுத்தால் நன்றாக இருக்கும்… அந்த காட்சியை கற்பனையில் கண்டு மகிழ்ந்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.
🎼🎼🎼🎼🎼
“இண்டியாஸ் எங் வாய்ஸ்” நிகழ்ச்சியில் ஸ்ருதி பங்கேற்ற பகுதி ஒளிபரப்பப்பட்ட அன்று, கார்த்திக் மற்றும் ஸ்ருதியின் வாக்குவாதம் வெகு பரபரப்பை உண்டாக்கியது. இறுதியில் இருவரும் ஒருவருக்கொருவர் பழிப்புக் காட்டிக்கொண்டது வெகுவாய் அனைவரையும் ஈர்த்தது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது என்பார்களே… அது போல ஒரே நாளில் ஃபேமஸானாள் ஸ்ருதி.
நெட்டீசன்கள் மீம்ஸ் போட்டுத் தள்ளினார்கள். அவளுடைய குரல் டப்ஸ்மாஷ் செய்பவர்களுக்கு புது விருந்தானது. ஒரே இரவில் ஓர் ஆர்மி உருவாகி அவளை தலைவியாக்கியது. அவளுடைய பழிப்புக்காட்டிய முகம்… அவளுடைய பேச்சு… அவளுடைய கியூட்டான ரியாக்ஷன் அனைத்தையும் கொண்டாடினார்கள்…
இன்னொரு பக்கம் கார்த்திக்கை கொண்டாடுகிறவர்கள் ஸ்ருதியை வெறுத்தார்கள். அட்டேன்ஷன் ஸீக்கர்… பப்லிசிட்டி பைத்தியம் என்று தூற்றினார்கள். அவள் பாடிய சுமாரான பாடலை கர்ணகொடூரமாக சித்தரித்து காமிடி வீடியோ செய்து உலவவிட்டார்கள்.
மொத்தத்தில் சில காலம் வரை ஸ்ருதியும் கார்த்திக்கும் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்காக இருந்தார்கள்.
ஸ்ருதிக்கு சிறு வயதிலிருந்தே திட்டு வாங்குவது பிடிக்காது. அதனால்தான் அன்று கார்த்திக்கின் அதிகப்படியான பேச்சை சகித்துக்கொள்ள முடியாமல் எதிர்த்துப் பேசிவிட்டாள். அந்த பேச்சு தன்னை இத்தனை தூரத்திற்கு துரத்திக் கொண்டு வரும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
உணர்ச்சிவசப்பட்டு இரு தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை ஒரு கன்டென்டாக்கி டெலிகாஸ்ட் செய்து, இப்படி பலருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவளை ஆளாக்கிவிட்டது அந்த சேனல். இதற்காகவே அந்த நிகழ்ச்சியின் டைரக்டரை நேரில் பார்த்து கிழிக்க வேண்டும் என்று ஆவேசம் வந்தது அவளுக்கு. ஆனால் அதையும் ஒரு கன்டென்டாக்கி டெலிகாஸ்ட் செய்துவிட்டார்கள் என்றால் என்ன செய்வது என்கிற பயத்தில் அமைதியாக இருந்தாள்.
ஆனால் சமூக வலைத்தளங்களை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. எதிர்மறை கருத்துக்கள் அவளை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே அவளுடைய அனைத்து அக்கவுட்ஸையும் கிளோஸ் செய்துவிட்டு பழையபடி வாழ்க்கையை தொடர்ந்தாள்.
2014-ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி துவங்கியது. முதற்கட்ட தேர்வில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கலந்து கொண்டார்கள். இறுதியாக ஒரு பெண் வந்தாள். அவளை பார்த்ததுமே ஷர்மிலியின் புருவம் சுருங்கியது.
“சொல்லும்மா… உன் பேரு என்ன?” – பிரபன் கேட்டான்.
சட்டென்று நினைவு வந்தவளாக, “ஹேய்… ஐ நோ யு…” என்று சத்தமிட்டாள் ஷர்மிலி.
கார்த்திக்கிற்கு அவளை அடையாளம் தெரியவில்லை.
“யாரு?” என்று கேட்டான்.
“உனக்கு தெரியலையா!” – ஆச்சரியமாகக் கேட்டாள் ஷர்மிலி.
“நோ…”
“நீ கண்டுபிடிச்சிட்டியா?” – பிரபனிடம் கேட்டாள்.
அவனும் சற்றுநேரம் யோசித்துவிட்டு, “பார்த்த மாதிரி இருக்கு… சரியா நியாபகம் வரல” என்றான்.
“ஓ காட்! எப்படி மறந்தீங்க!” என்று அவள் ஆச்சரியப்படுப் போதே, 2013 ம் ஆண்டு எடுத்த வீடியோ ஸ்டேஜில் இருந்த திரையில் ஒளிபரப்பப்பட்டது.
“நா எந்த பிரபஷனை சூஸ் பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்ல தேவையில்லை மிஸ்டர் கார்த்திக் வேணுகோபால்” – முதல் டயலாக்.
வீடியோ ஒளிபரப்பப்பட்ட கணமே கூட்டத்தில் சலசலப்பும் கைதட்டல் ஒலியும் எழுந்தது. அவர்களுக்கும் புரிந்துவிட்டது என்பது தெரிந்தது.
“சில வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு ஸ்டேஜ்ல முதல் தடவ நீங்க ஆடிஷனுக்கு வந்து நின்னப்போ எப்படி பாடுனீங்கன்னு நியாபகம் இருக்கா உங்களுக்கு?” – இரண்டாவது டயலாக்…
“ஓ காட்!!!” – கார்த்திக் வாய்விட்டு சிரித்தான்.
“ஸ்ருதி!!!” – அவளை குறிப்பிட்டு கத்தினான் பிரபன்.
அந்த வீடியோ திரையில் முடியும் வரை அனைவருமே அதை ரசித்து பார்த்தார்கள். வீடியோ முடிந்ததுமே, “கார்த்திக்… நீ எப்படி மறந்த… நீதானே முக்கியமான ஆள்… உங்க ரெண்டுபேரோட ஆர்கியுமென்ட்ஸும் தானே பயங்கரமா ட்ரோல் ஆச்சு” என்று உற்சாகக் குரலில் கேட்டுவிட்டு சத்தமாக சிரித்தாள் ஷர்மிலி.
“எஸ்… பட் ஷி புட் ஆன் வெயிட்… அண்ட்… முடி கூட லங்கா வளர்ந்துடிச்சு… ஷி லூக்ஸ் டோட்டலி டிஃப்ரெண்ட்” – நம்பமுடியாத ஆச்சரியத்துடன் கூறினான். அவளிடம் நிறைய மாற்றம் இருந்தது என்பதும் உண்மைதான்.
“சோ ஸ்ருதி… ஹௌ ஆர் யு?” – பிரபன்
“குட்…”
“என்ன பாட்டு பாட போறீங்க?”
“தி சேம் சாங்… லாஸ்ட் இயர் பாடினது…”
நடுவர்கள் மட்டுமல்ல… பார்வையாளர்களும் கூட ஆச்சரியக் கூச்சலிட்டார்கள்.
அனைவருக்குமே அவள் எப்படிப் பாடப் போகிறாள் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. மியூசிக் துவங்கியது. இந்த முறை நிதானமாக அதிகப்படியான கூச்சல் இல்லாமல் நன்றாகவே பாடினாள்.
“நல்ல முன்னேற்றம்… குட்…” – பிரபன் பாராட்டினான். ஷர்மிலிக்கும் அவளுடைய பாடல் பிடித்திருந்தது. அவளும் கட்டைவிரலை உயர்த்தினாள். இருவருமே அவளை அடுத்த ரௌண்டிற்கு தேர்வு செய்தார்கள்.
கார்த்திக் தலையை குறுக்காக அசைத்தான். “ஐம் நாட் கன்வென்ஸ்ட்” என்றான்.
“ஆர் யு ஸூர்?” – பிரபன்.
“நிச்சயமா… மை ரிசல்ட் இஸ்…” என்று சிகப்பு பசரை அழுத்தினான்.
அவன் தேர்வு செய்யவில்லை என்றாலும் மூன்று நடுவர்களின் இருவர் தேர்வு செய்துவிட்டதால் அவள் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகிவிட்டாள். ஆனாலும் அவள் மனதிற்குள் தோன்றிய அந்த விஷயத்தை அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“அந்த விடியோவை பார்க்கலன்னா நீங்களும் என்னை செலெக்ட் பண்ணியிருப்பீங்க” என்றாள். அந்த எண்ணம் அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது என்பது ஒருபுறம் இருக்க,
“நோ நோ நோ…” என்று அவளுடைய குற்றச்சாட்டை அவசரமாக மறுத்தான் கார்த்திக்.
“ஐ டூ மை ஜாப் ஹானஸ்டலி… நீ கண்டிப்பா இன்னும் இம்ப்ரூவ் ஆகணும்” என்றான். அவனுடைய குரலில் உண்மை இருந்தது.
அந்த ஆண்டு அடுத்த இரண்டு கட்டங்கள் தப்பித்து மூன்றாவது ரௌண்டில் அடிபட்டாள் ஸ்ருதி. அந்த இரண்டு ரௌண்டிலும் கூட கார்த்திக்கின் குட் லிஸ்டில் அவளால் வர முடியவில்லை.
மீண்டும் 2015 -லிருந்து 2018 -ம் ஆண்டு வரை தொடர்ந்து அந்த போட்டியில் பங்கெடுத்தாள். கார்த்திக் அவளுடைய குறைகளை குறிப்பிட்டு சொல்லிக் கொண்டே இருந்தான். அவளை கடுமையாக கையாண்டான். ஸ்ருதி அவனிடம் அடங்க மறுத்தாள். அவன் சுட்டிக்காட்டும் விஷயங்கள் அவளுடைய மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்றால் எதிர்த்து வாதாடினாள். இருவருக்கும் வாக்குவாதம் வந்து கொண்டே இருந்தது. அது டிஆர்பி – யை எகிற செய்தது… அதனால் முடிந்த அளவிற்கு அவளை தக்க வைத்துக்கொள்ள சேனல் போராடியது. ஒவ்வொரு ஆண்டும் அவளிடமும் நல்ல முன்னேற்றம் இருந்தது என்றாலும் கால் இறுதிப் போட்டியைக் கூட அவளால் எட்ட முடியவில்லை.
ஆனால் அவள் மனம் தளரவில்லை. முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து போராடினாள். தினமும் பாட்டு கற்றுக் கொண்டாள். தேர்ந்த குரல் வள பயிற்சசியாளரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டாள். தன்னுடைய குரலுக்கு என்ன மாதிரியான பாடல்கள் நன்றாக இருக்குமோ அத்தகைய பாடல்களை தேர்வு செய்து பயிற்சி செய்தாள்.
அடுத்த ஆண்டிற்கான போட்டி அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல ஸ்ருதி அந்த போட்டியில் கலந்துகொள்ள தயாரானாள். ஊரில் உள்ள கடவுளையெல்லாம் வேண்டிக் கொண்டு ஆடிட்டோரியத்திற்கு வந்தாள்.
அவளை பார்த்ததுமே புருவம் உயர்த்தினான் கார்த்திக். ‘இந்த வருஷமுமா!’ என்றது அவன் பார்வை.
“இது ஆறாவது வருஷம்… தொடர்ந்து இந்த போட்டியில கலந்துக்கற. ஏன்? வாட்ஸ் யுவர் கோல்?” – உண்மையிலேயே அவனுக்கு புதிராக இருந்தது. தனக்கு வராத விஷயத்தை எதற்கு இப்படி போட்டு இழுத்து அடுத்தவர்களுடைய நேரத்தையும் வீணடித்து தன்னையும் சர்ச்சைக்குள் இழுத்துவிடுகிறாள் என்றிருந்தது அவனுக்கு.
நீ என்ன நினைத்தால் எனக்கென்ன என்பது போல், “கோல்… ஆம்பிஷன் எல்லாம் எதுவும் இல்ல… கலந்துக்கணும்னு தோணுது… கலந்துக்கறேன். அவ்வளவுதான்” என்று அலட்சியமாக பதிலளித்தாள் ஸ்ருதி.
அவளுடைய பதில் அவனை வெறுப்பேற்றியது. “என்ன இந்த வருஷமும் தில்ருப்பா தானா?” என்றான் எரிச்சலை மறைக்க முயன்றபடி.
இல்லை என்று தலையசைத்த ஸ்ருதி, “இந்த தடவ வேற சாங்…” என்றாள். அவளை பற்றி கேட்பதற்கு வேறு ஒன்றும் இல்லை என்பது போல், “கோ ஆன்…” என்றான். ‘இவள் குரலும்… மொக்கை பாடல்களும்… சரியான போர்…’ – – அலுப்புடன் இயர் ஃபோனை காதில் செருகினான்.
ஷர்மிலியும் பிரபனும் கூட வேறு எதுவும் அவளிடம் கேட்க ஆர்வம் காட்டாததால், அவள் பாட இருக்கும் பாட்டிற்கான ஸ்ருதி கொடுக்கப்பட்டு மியூசிக் ஆரம்பமானது… அதை கேட்டதுமே அரங்கத்தில் சந்தோஷ சலசலப்பு…
“ஹம் தேரே பினு அபு ரஹ நஹீ க்தே
தேரே பிநா க்யா வஜூது மேரா…” என்று இந்தியில் ஆரம்பித்த அந்த இனிய கீதம்,
“என் அன்பே…!
என் அன்பே…!
உன் பாடலில் என்னை மறந்தேன்
அன்பே உந்தன் வழி நடந்தேன்
வீணையின் நாதம் போல் நானும் உனக்கு
சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு
இனி உனது விழி அது எனது வழி
நாம் இருவரும் ஒருவர் அன்றோ….!
விழி மூடினால் நீயும் வருகிறாய்
விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய்!
பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்…” என்று தமிழில் வந்து முடிந்தது.
அரங்கமே எழுந்து நின்று ஐந்து நிமிடம் விடாமல் கைதட்டியது… அத்தனை ஜீவன்… உயிர்ப்பு இருந்தது அந்த பாடலில். ஒவ்வொரு வார்த்தையும் அவள் வாயிலிருந்து வரவில்லை… நேரடியாக இதயத்திலிருந்து வந்து விழுந்தது போலிருந்தது. பிரம்மித்துப் போய்விட்டான் கார்த்திக். அவனால் நம்ப முடியவில்லை… கடந்த ஐந்து ஆண்டுகளாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும் அதே ஸ்ருதிதானா இவள்! காட்!
கைதட்டல் ஓய்ந்து முடித்தப் பிறகு, “அமேஸிங்… ஐ ஜஸ்ட் காண்ட் பிலீவ் இட்…” என்றான் உணர்ச்சிவசத்துடன் பிரபன்.
“சேம் ஹியர்… வார்த்தைகளே இல்ல… வேற லெவல்” – ஷர்மிலி சிலாகித்தாள். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்வையாளர்களின் கைதட்டல் அரங்கத்தை அதிர செய்தது.
அடுத்து கார்த்திக்கின் முறை… இந்த முறை அவன் என்ன சொல்லப் போகிறான்… அனைவரும் அவன் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே படிந்திருந்தது. பிறகு அவனுடைய கை கோல்டன் பசரை நோக்கிச் சென்றது… சில நொடிகளில் பெரும் ராக் மியூஸிக்குடன் ஸ்டேஜ் முழுக்க தங்கமழை பொழிந்தது… அவள் அரையிறுதிக்கு நேரடியாக தேர்வாகிவிட்டாள்… அதைவிட முக்கியம்… அவளை தேர்வு செய்தது கார்த்திக்… வாவ்!!!
பார்வையாளர்களின் ஆரவாரம் அரங்கம் முழுக்க எதிரொலித்தது. தரையில் சரிந்து மண்டியிட்டு… கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் ஸ்ருதி. ‘இந்த தருணம்…!! இதற்காகத்தானே அவளுடைய போராட்டம்…!!!’ – அவள் உடல் குலுங்கியது.
சட்டென்று ஸ்டேஜிற்கு விரைந்தான் கார்த்திக். ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் அதிகமானது.
கீழே குனிந்து அவள் தோள்களை பிடித்து தூக்கி நிறுத்தினான். கரைபுரண்டோடும் கண்ணீருடன் அவனை நோக்கினாள் ஸ்ருதி… “ஐம் வெரி ஹேப்பி… ஃபைனலி நீ உன்ன கண்டு பிடிச்சுட்ட… உன்னோட குரலை கண்டு பிடிச்சுட்ட… இதுதான் நீ… இதுதான் உன்னோட வாய்ஸ்… மியூசிக்ல உனக்கு எதிர்காலம் இருக்கு” என்றான் நெகிழ்ச்சியுடன்.
ஸ்ருதியின் முகம் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தது… கண்களில் வடியும் கண்ணீர் அதிகமானது. வாய் திறந்து எதையும் பேச முடியாதவளாக ‘இல்லை…’ என்பது போல் மறுப்பாக தலையசைத்தாள்.
அவள் எதை மறுக்கிறாள் என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்தபடி விளக்கத்திற்காக காத்திருந்தான் கார்த்திக்.
“மியூ…சிக்… இஸ்… நா…ட்… ம்..மை… கெ…ரியர்…” – தேம்பியபடி, ‘இசையை தான் தொழிலாகக்கொள்ளப் போவதில்லை’ என்றாள்.
சட்டென்று அவன் முகத்தில் குற்றவுணர்ச்சி ஃபிளாஷ் ஆனது… முதல் முறை அவள் இந்தப் போட்டிக்கு வந்த போது தான் கூறிய வார்த்தை அவளை மிகவும் காயப்படுத்தியிருக்கிறது என்கிற எண்ணம் அவனை வருத்தியது.
“பிலீவ் மீ… யு ஆர் எ குட் சிங்கர்… நீ போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு…” என்றான். அவள் புன்னகைக்க முயன்றபடி, “மெடிக்கல் ஃபீல்டுல…” என்றாள்.
அவளுடைய பிடிவாதத்தை உடைக்க முடியாதோ என்கிற கவலையுடன் அவளை ஓரிரு நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், “உன்கிட்ட பல தரம் சொல்லணும்னு நெனச்சு என்னோட ஈகோ சொல்ல விடாம தடுத்த விஷயத்தை இப்போ சொல்லப் போறேன்” என்றான்.
அவள் கண்களில் ஒருவித எதிர்பார்ப்புடன் மெளனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
“ஐ அட்மையர் யுவர் ஃபைட்டிங் ஸ்பிரிட்… உன்னோட விடாமுயற்சியை பார்த்து நா வியக்கிறேன்… டோன்ட் கிவ் அப் ஃபார் எனிதிங்… நா உன்கூட இருக்கேன்… உன்னை ட்ரெயின் பண்ணறேன்” என்றான்.
இந்த சலுகையை அவளால் மறுக்கவே முடியாது என்கிற நம்பிக்கையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். ஸ்ருதியும் அவன் முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அவள் எதுவுமே பேசவில்லை. பிறகு வழக்கம் போல அவன் சொன்னதையே அவனுக்கு திரும்பிச் சொன்னாள்.
“உங்ககிட்ட ரொம்பநாளா சொல்லணும்னு நெனச்சு என்னோட ஈகோ சொல்ல விடாம தடுத்த விஷயத்தை இப்போ நான் சொல்லப் போறேன்”
அவளுடைய பழைய பேச்சுக்களெல்லாம் நொடியில் பொழுதில் நினைவலையில் வந்து போக, கார்த்திக்கின் முகத்தில் புன்னகை தோன்றியது. ‘என்ன சொல்லப்போகிறாள்!’ என்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிந்தது.
அவள் எதுவும் சொல்லவில்லை… தன்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து, பழைய கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை பிரித்துப் பார்த்த கார்த்திக்கின் புருவம் உயர்ந்தது. “மை பிக்ச்சர்…” – அந்த படத்தை பார்த்தபடியே முணுமுணுத்தான்.
“பத்து வருஷமா என்னோட பாக்கெட்லேயே இருக்கு…” – ஸ்ருதி.
சட்டென்று நிமிர்ந்து அவளுடைய பார்வையை சந்தித்தான் கார்த்திக்.
“ஐ லைக் யு…” – மெல்லிய குரலில் கூறினாள். சாதாரண வார்த்தை தான். ஆனால் அந்த வார்த்தையில் இருந்த கனம் அவனுக்குள் ஏதோ செய்தது.
எத்தனையோ ரசிகைகளை அவன் பார்த்திருக்கிறான்… எதிர்கொண்டிருக்கிறான்… ஆனால் இவள்! இவளுமா அவனை ரசித்தாள்! அதுவும் இவ்வளவு தீவிரமாக!நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
“வா….வ்!!!! ஐ நெவர் எக்ஸ்பெக்ட் திஸ்… ஷி வான்டட் திஸ் மொமண்ட்…! ஷி கிரியேட்டட் திஸ்… டாம்… மொமண்ட்…! ஆறு வருஷமா இதுக்காகத்தான் ஃபைட் பண்ணியிருக்கா!!! மை காட்!!!” – புல்லரித்துப் போய் எழுந்து நின்று வாய் பிளந்தாள் ஷர்மிலி.
உண்மைதான்… இந்த ஒரு தருணத்திற்காக… அதை உருவாக்குவதற்காகத்தான் அவள் போராடினாள்… அவனிடமிருந்து ஒரு பாராட்டு… மனதிலிருந்து ஒரு சிரிப்பு… அதற்காகத்தானே ஏங்கினாள். கிடைத்துவிட்டது… இனி என்ன வேண்டும்…!
“ஹி இஸ் லக்கி!” – கார்த்திக்கை பார்க்கையில் பிரபனுக்கு சற்று பொறாமையாகக் கூட இருந்தது.
கார்த்திக் உறைந்து போய் நின்றான். அவள் செய்த அனைத்துமே அவனுக்காகத்தான்… அவனுக்காக மட்டும் தான் என்கிற உண்மையை கிரகித்துக்கொள்ள முடியாமல் தடுமாறினான். உணர்ச்சி மிகுதியில் அவன் உடல் லேசாக நடுங்கியது. தன்னை சுற்றி பெரிய கூட்டம் இருக்கிறது… பல கேமிராக்கள் இருக்கிறது என்பதெல்லாம் அவன் நினைவில் இல்லவே இல்லை…
“உனக்கு… மியூசிக்… பிடிக்கும் தானே?” – அதை கேட்கும் போது ஏனோ அவனுக்கு பயமாக இருந்தது. அவள் ‘ஆம்’ என்று சொல்லிவிட வேண்டும் என்று மனம் ஏங்கியது.
அவளுடைய அதீத அன்பை தன்னந்தனியாக சுமக்க முடியாமல் இசையை துணைக்கு அழைக்கிறானோ!
“பிடிக்கும்… உங்களோட குரலை முதல் தரம் கேட்டதிலிருந்து…” – அவளுடைய பதில் அவனை விழத்தட்டிவிட்டது.
“ஐ தாட் யு ஹேட் மீ…” – ‘நீ என்னை வெறுக்கறேன்னு நெனச்சேன்’
“தட்ஸ் ட்ரு… ஐ ஹேட் யு… பிகாஸ் லைக் யு மோர் தேன் மீ…” – ‘உண்மைதான்… நா உங்கள வெறுக்கிறேன்… ஏன்னா என்னைவிட அதிகமா உங்களை ரசிக்கிறேன்…’ – அவள் குரல் தடுமாறியது… கண்கள் கலங்கின.
கார்த்திக்கின் இதழ்களில் புன்னகை விரிந்தது. “கேன் வி ஹேவ் எ காஃபி?” என்றான். ஸ்ருதியின் விழிகள் வியப்பில் விரிந்தன. உற்சாகக் கூச்சலில் ஆடிட்டோரியம் ஆர்ப்பரித்தது.
🎻🎻🎻
5 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Wow super.விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Confidence appreciation vera level story…. I think this week is new stories week………..
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you Vidya… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Wow… Appreciation is such a thing and it will make people to go to any extent. Super mam. Super!!!
Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thank you… 🙂