Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முட்டகண்ணி முழியழகி – 1

வணக்கம் ஃபிரண்ட்ஸ்,
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. சகாப்தத்திற்கு இன்னொரு எழுத்தாளர் அறிமுகமாகியுள்ளார் – வதனி. இவர் புது எழுத்தாளர் அல்ல… ஏற்கனவே ஐந்து கதைகள் எழுதியுள்ளார். இது அவருடைய ஆறாவது கதை… “முட்டகண்ணி… முழியழகி…” பெயரே வித்தியாசமாக இருக்கிறது… கதை எப்படி இருக்கும்? படிக்க ஆர்வமாக இருக்கிறதா… எனக்கும்தான்… இதோ முதல் எபிசோட் இங்கே உள்ளது. வாசித்துப் பார்த்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் ஃபிரண்ட்ஸ்…

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

 

அத்தியாயம் – 1

ஆதவனின் அலைக்கரங்கள் இன்னும் பூமியைத் தழுவத் தொடங்காத முன் காலைப் பொழுது. தூங்கா நகரம் என்று பெயர் பெற்ற மதுரை மாநகரம்.  அம்மாநகரின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

 

மார்கழி மாதம் முடிந்தும் பனி பொழிவு முடிந்திராத காலைப் பொழுது, உடலை வெடவெடக்க செய்யும் குளிரையும் பொருட்படுத்தாமல், பயணிகள் தங்கள் பயணப் பொதிகளை அள்ளிக்கொண்டு மாற்றுப்பேருந்துகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அவர்களை வேடிக்கைப் பார்த்தவாறே அங்கிருந்த டீக்கடை ஒன்றில் அமர்ந்து உறைய வைக்கும் குளிருக்கு இதமாய் இஞ்சி டீயை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தவளை பயத்துடன் பார்த்திருந்தாள் ஷாலினி.

 

“பங்கு… உனக்கு நிஜமாவே பயமாயில்லையாடி… எப்படி இவ்ளோ தைரியமா இந்தக் காரியத்தை செஞ்ச… உன்னைக் காணோம்னா அடுத்து என்னைத் தேடி தாண்டி வருவாங்க… என்னை உங்கப்பா நாலு அடி அடிச்சிட்டாக் கூட பரவாயில்லடி… எங்கப்பா அம்மாவுக்கு ரெண்டு மணி நேரம் க்ளாஸ் எடுப்பாருடி… அதுக்கு பயந்தே உன் ஃப்ரண்ட்ஷிப் கட் பன்ன சொல்றாங்க தெரியுமா… ஏண்டி இப்படி இருக்க… இந்த தடவை என்ன பன்னிட்டு வந்த.?” அழாக்குறையாக புலம்பியவளை அற்ப புழுவைப் போல் பார்த்து “இந்த தடவை மிஸ்டர்.கதிர் ரொம்ப என்னை டென்சன் பண்ணிட்டார், சோ அவரை சும்மா விட முடியாது… என்னைத் தேடி அலையட்டும்.. எனக்கே எப்போ தோனுதோ அப்போ தான் வீட்டூக்கு போவேன்..” என்றவளை கொலைவெறியோடு பார்த்தவள்,

 

“நீயும் ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் வீட்டை விட்டு ஓடிவர, அடுத்த நாளே உங்கப்பா கோழி அமுக்குற மாதிரி அமுக்கிட்டு போயிடுறார், இதுல உனக்கு வீட்டை விட்டு ஓடி வந்துட்டோமேன்னு பெருமை, உங்கப்பாவுக்கு உன்னை கண்டுபிடிச்சிட்டோமேன்னு பெருமை… குடும்பமாடி இது…” என்று கடுப்பாய் கத்த,

 

“ஹா.. ஹா.. கூல் மச்சி… எங்களை மாதிரி நீயும் உங்கப்பாவும் ட்ரை பன்னுங்களேன்… ஜாலியா இருக்கும்..” என்றவளை என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தாள் ஷாலினி.

 

தோழியின் பரிதாப நிலையைப் பார்த்து, மனதுக்குள் சிரித்துவிட்டு, “விடு..விடு மச்சி… நம்ம மானம் போறது, இன்னைக்கு நேத்தா நடக்குது… அதெல்லாம் நமக்கு டஷ்ட் மாதிரி தட்டிவிட்டுட்டு போயிட்டே இருக்கனும்… இப்போ டைம் ஆச்சு கிளம்புவோம்…” என்றபடியே தனது பேகை எடுத்துக் கொண்டு நகர, “அடியேய்…” என்று பல்லைக் கடித்தபடியே அவள் பின்னால் ஒடினாள் ஷாலினி..

 

தேனி மாவட்டத்தின் தென்மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் பசுமை மாறாக் கிராமமாக காட்சியளிக்கும் மயிலாடும்பாறை எனும் அழகான ஊருக்கு சொந்தக்காரி.. கதிரவன் – சந்திரா இருவரும் குமரி முதல் இமையம் வரை இருக்கும்  கோவில் அனைத்திற்கும் சென்று வேண்டி தவமாய் தவமிருந்து பெற்ற ஆருயிர் மகள்.. மூன்று தலைமுறைகளாக பெண் பிள்ளைகளே இல்லாமல், மூன்றாவது தலைமுறையில் பிறந்த அவளை தங்கள் குலதெய்வமாக பார்க்கும் மூக்கையன் – சின்னம்மாளுக்கு செல்ல பேத்தி..

 

மொத்த சேட்டைகளுக்கும், குறும்புகளூக்கும் சொந்தக்காரி.. பள்ளிப் படிப்பை ஊரிலேயே முடித்தவள், கல்லூரிக்கு தேனியில் சேர்க்கலாம் என்று நினைத்த மொத்தக் குடும்பத்தையும் அசால்டாய் சமாளித்து மதுரை பாத்திமா கல்லூரியில் சேர்ந்தாள். படிப்பில் கெட்டி என்றாலும், நாம் படித்து என்ன செய்ய போகிறோம் என்று தன் ரேங்குகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து, ஆசிரியர்களிடம் அடி வாங்குபவள்.

 

அவள் – கனலி.. கனலி என்றால் நெருப்பு… பெயருக்கும் அவளுக்கும் சற்றும் பொருத்தம் இருக்காது… சிரித்து, சிரிக்க வைத்து என்று மகிழ்வான பெண்ணவள், வீட்டில் எல்லாருக்கும் செல்லமாய் பொம்மி, பிடித்தவர்களுக்கு குட்டிம்மா.. அவளது சேட்டைகளில் நொந்து நூடுல்ஸானவர்களுக்கு குட்டிப்பிசாசு, வலிய சென்று வம்புகளை பார்சல் செய்து வாங்கி வருபவள்.. இவளது பஞ்சாயத்தை பார்க்கவே மூக்கையனுக்கும் சின்னம்மாளுக்கும் நேரம் சரியாக இருக்கும்.. அது அவர்களுக்கு  பிடித்தமானதும் கூட,

 

இப்படி மொத்த வால்தனங்களையும் குத்தகை எடுத்திருப்பவளை கொஞ்சமாவது கண்டிப்புடன் நடத்துவது சந்திரா மட்டும் தான்.  ஆனால் அவர் சொல்வதைக் கேட்கத்தான் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.. இப்படி ஆளாலுக்கு மகளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறார்களே என்று வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், மகளை நினைத்து பெருமை படவும் சில விசயங்கள் இருந்தது.

 

கனலியின் குரும்புகள் எப்போதும் ஒருவரை காயப்படுத்தியிருக்காது. தப்பு செய்தவர்களுக்கு அவளது பானியிலேயே தண்டனை கொடுத்து எதுவும் தெரியாதது போல் இருந்து விடுவாள். முதல் பார்வையிலேயே மனிதர்களை எடைபோட்டு விடுபவள், அதை வைத்தே அவர்களிடம் பேசுவாள். அன்பாய் பேசுபவர்களிடம் அன்பாய், வம்பாய் பேசுபவர்களிடம் அவளது பானியில் வம்பாய்..

 

அத்தனைக்கும் மேலே அவளது அழகு… அழகென்ற சொல் பொருந்தாது அவளுக்கு.. பேரழகே பொருத்தம். வட்டமுகம்.. பால்நிறம், நீள்விழி, வில்லாய் வலைந்த புருவம்.. இடது மூக்கில் அணிந்திருக்கும் ஒற்றைக்கல் வைர மூக்குத்தி, காதுகளில் பளிச்சென மின்னும் வைட் கோல்ட் ரிங்க்… கழுத்தில் ஒரு கருப்புக்கயிறு, அதில் ஒரு வரிசையாய் மூன்று தாயத்து…  பாவாடை தாவணியும், புடவையும் என்றிருந்த ஊர்களில் இப்போது தான்  சுடிதார்  மெல்ல மெல்ல மேடையேறியிருந்தது.

 

பள்ளிகளில் சுடிதார் யூனிஃபார்ம் உறுதியான பிறகே, தங்கள் பிள்ளைகளுக்கு சுடிதார் எடுத்த பெற்றோர் இங்கே அதிகம்… அப்படியான ஊரில், வெழுத்த ஜீன்சையும், முழுக்கையினால ஆன சர்ட்டையும் மாட்டிக்கொண்டு ஆண் பையனைப் போல் சுற்றித் திரியும் மகளை அவருக்குப் பிடிக்கும்.

 

செய்யாதே என்றால் செய்ய மாட்டாள், ஆனால் அவளை யாரும் அப்படி சொன்னதில்லை இதுவரை. ஆனால் கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு, மாப்பிள்ளை என்று பார்க்க ஆரம்பித்தததும் தான் அவளுக்கு கட்டுப்பாடுகள், ‘அதை செய்யாதே.. இதை செய்யாதே’ என்று ஏனென்றால் மாப்பிள்ளைக்கு பொறுப்பான பெண்தான் வேண்டுமாம்.

 

‘பொறுப்பான பொண்ணை கட்டிக்கிட்டு இவன் என்ன பருப்பா வேக வைக்க போறான்..’ என்று அடிக்கடி அவனை மந்துக்குள்ளே சாம்பார் வைப்பாள். சிறு பிள்ளையில் கோபம் வந்தால், உடனே வீட்டுப்பரணிலோ, அல்லது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் குடிலிலோ ஒழிந்து கொள்வாள். அப்படியே வளர வளர அவளது சிறுபிள்ளைத்தனமும் வளர்ந்து, கனலி ஒழிந்து கொல்லும் இடமும் மாறியது.

 

படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் வீட்டில் தான் இருக்கிறாள். வரும் மாப்பிள்ளைகளை எல்லாம் நண்டு, சிண்டுகளோடு சேர்ந்து விரட்டி விட்டிருந்தாள். ஆனால் இந்த முறை அப்படி முடியவில்லை.. காரணம் ஒன்று மாப்பிள்ளையின் அம்மா அவளது உயிரான அத்தை. மற்றொன்று தனது அப்புச்சியின் ஆசை.. ஆனாலும் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை..

 

எப்பொழுதும் விரைப்பாகத் திரியும், மருந்திற்கு கூட சிரிக்காதவன், காலம் பூராவும் தன்னோடு இருப்பதை அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வீட்டில் சொல்லிப் பார்த்தாள் பலனில்லை.. வாண்டுகளோடு முயர்சித்துப் பார்த்தாள் பலிக்கவில்லை.. கடைசியாக அந்த சிடுமூஞ்சியிடமே பேசிப்பார்த்தாள், அவனிடம் பேசியே இருக்க வேண்டாம் என்று இப்போது வரை நொந்து கொண்டிருக்கிறாள்.

 

கனலியின் இந்த முயற்சிகளைப் பார்த்த, அவனது அப்புச்சியும், அப்பத்தாவும், திடீரென முடிவு செய்து அடுத்த இரண்டு நாளிலேயே திருமணம் என்று முடிவு செய்து நாள் குறித்து விட்டனர். கனலிக்குத் தெரியாமல் இதை செய்ய நினைக்க, அவளது உளவுத்துறையிடம் இருந்து தகவல் வர, மற்றவர்கள் சுதாரிக்கும் முன், தனது என்ஃபீல்டில் பறந்திருந்தாள் ஊரைவிட்டு.

 

அவன் – நிலவன். பெற்றோர் பார்த்தசாரதி-லோகநாயகி, பார்த்தசாரதிக்கு கேந்த்ர வித்யாலாயாவில் ஆசிரியர் வேலை. லோகநாயகி வீட்டரசி. ஒரே மகன் நிலவன், அவனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு அனைத்தும் பாண்டி தான். படித்து முடித்ததும் கனடாவில் வேலை, நான்காண்டுகள் அங்கே இருந்தவனை, தந்தையின் தொடர் நச்சரிப்பு, தாயின் உடல்நலம் தாயகத்திற்கு திரும்ப வைத்தது. தற்போது பாண்டிச்சேரியில் ஒரு MNC-யில் வேலை.

 

பேச்சிலும், செயலிலும் எப்போதும் நேர்மை இருக்க வேண்டும். பொய் என்ற வார்த்தையே அவனது அகராதியில் கிடையாது. பொய் சொல்லி தப்பிப்பதை விட, உணமையை சொல்லி மாட்டி, அதிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பவன். தன்னைச் சுற்றி இருப்பவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்றும் நியனிப்பவன். அதனாலோ என்னவோ அவனுக்கு நண்பர்கள் பட்டியல் மிக குறைவு.. அதிலும் நெறுங்கி பழகும் அளவுக்கு யாரும் இருக்கவில்லை.

 

நிலவனின் இந்த செயல்கள் சாரதிக்கு பெருமையைக் கொடுத்தால் நாயகிக்கு பயத்தைக் கொடுத்தது.. யாரிடமும் ஒன்றாமல் தனித்து விடுவானோ என்று. அவரது இந்த பயம் தான் கனலியைத் தன் மகனுக்கு மனைவியாக்க தூண்டியது.. அவளது ஒவ்வொரு செயலிலும் கவரப்பட்டவர் நாயகி.

 

நிலவனின் சிறுவயதில் அடிக்கடி தாயின் சொந்த ஊரான மயிலாடும்பாறை வந்தாலும், கல்லூரி படிப்பு, வேலை வெளிநாட்டு வாழ்க்கை என்றான பிறகு அவனுக்கு வாய்ப்பே அமைந்தது இல்லை. ஆனால் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நிலவனின் பெற்றோர் அங்கே வந்து விடுவார்கள். சாரதியின் வேலை காரணமாக அவரது அந்த இரண்டு மாத விடுமுறையும் சொந்த ஊரில் தான் கழியும், நாயகியின் விருப்பமும் அதுதான். சொந்தத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் இந்த இரண்டு மாதத்தில் போய் வந்துவிடுவார் நாயகி. அவர்களது திருமணம் முடிந்த காலத்தில் இருந்து இப்போது வரை தொடர்கிறது இந்தப் பயணம்.

 

கனலிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போதே சின்னம்மாள் நாயகியிடம் கேட்டார்தான். ஆனால் அப்போது நிலவன் கனடாவில் இருந்தான். அவனிடம் பேசும்போது பிடிகுடுக்காமல் பேச, நாயகிக்கு மிகுந்த வருத்தம், தனது சித்தியிடம் புலம்பியபடியே தான் மகனின் முடிவை சொன்னார். அது சின்னம்மாளுக்கும் வருத்தம் தான். ஆனால் யாருக்கு எங்கே என்று இருக்கோ, அங்கே தானே அமையும் என பேசி, மகளை அவர்தான் சமாதானம் செய்யும்படி ஆனது.

 

ஆனால் கனலிக்கு பார்க்கும் மாப்பிள்ளையின் கணக்கு கூடியதே தவிர, ஒன்றும் பொருத்தமாய் அமையவில்லை. இதனால் மூக்கையனுக்கு மன அழுத்தம் உண்டாகி உடல் நலம் கெட, சின்னம்மாள் மீண்டும் நாயகியிடம் பேச, அவர் மகனிடம் பேச, நிலவனும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டான் ஒரே கண்டிசனுடன். அது பொண்ணு மிகவும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று… அதுவே கனலியை ஊரை விட்டு ஓட வைத்தது….
10 Comments