Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்காகவே வந்தேனடா – 4

இரவும் முடிந்து பொழுதும் புலர்ந்திட, மறுநாளுக்கான விடியல் இனிதே துவங்கியது
குருபவனத்தில்.

 

புது இடம் என்பதால் சாக்ஷிக்கு சீக்கிரமே முழிப்பு வந்துவிட, எழுந்தவுடனே குளித்தும்
முடித்தவள், பேக்கர்ஸ் எங்கே இருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தாள்.

 

அவர்கள் ஒருமணி நேரத்தில் வந்துவிடுவதாக உரைக்க, சரியென்று போனை
அணைத்துவிட்டு இரவு நடந்ததை நினைத்து பார்த்தாள்.

 

இரவே சாக்ஷி நித்திலனையும், பாட்டியையும் பார்த்துவிட்டாள். நித்திலன் சில
பொதுப்படையான கேள்விகளை கேட்டுவிட்டு சாவியை கொண்டுவந்து
கொடுத்துவிட்டு கிளம்பிவிட, பாட்டி தான் நிறைய கேள்விகளை கேட்டார். பிறகு
அவருக்குமே இவளிடம் கொஞ்சம் திருப்தி உண்டானது, அனாவசிய அலட்டல்
இல்லா இவளின் பேச்சை கேட்டு! மேலும் நடேசனின் சிபாரிசு… சொல்லவா
வேண்டும்…

 

நந்தன் தன்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. பாலாவும் அவனுடன்
இருந்ததினால், சாக்ஷி என்ற புதிய மனுஷி அங்கே இருப்பதை இவர்கள் இருவர்
மட்டுமே அறியவில்லை. மேலும் பாட்டி தானே அவனை டீல் செய்து கொள்வதாக
சொல்ல, பேசாமல் இருந்துவிட்டனர் இவர்கள் மூவரும்!

 

ஹாலிற்கு வந்தவளின் கண்கள் கிச்சனை நோக்கி தான் சென்றது. அங்கே தேவிகா
எதையோ உருட்டி கொண்டு இருந்தார்.

 

அங்கே சென்றவள், “குட் மார்னிங் ஆண்ட்டி! சீக்கிரம் முழிச்சுட்டிங்க போல? ஆமா…
சந்தோஷி மேடம் எங்கே?” என்று தெரிவிக்க,

 

“குட் மார்னிங்மா… எனக்கு எப்பவுமே சீக்கிரம் முழிப்பு வந்துரும்… சந்தோஷி
பின்னாடி செடிக்கு தண்ணி பாய்ச்சிட்டு இருப்பா… இன்னைக்கு லீவ் தான…”
என்றவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த, அவரிடம் தான் எதிர்வீட்டை
சுத்தம் செய்ய போவதாக சொல்லிவிட்டு தனது உடமைகளை எடுத்து கொண்டு
வந்தாள்.

 

நீலவானிற்கு அழகு சேர்ப்பதாய் இருந்தது வெண்ணிற மேகங்கள்… அவளுக்கு
எப்பொழுதுமே வானை பார்ப்பது மிகவும் பிடிக்கும்… பரந்து விரிந்த பெருவெளி…
அதற்கு வெளிச்சம் கொண்டு வந்து சேர்த்தது கீழ்வானின் சூர்யோதயம்…
எதிர்திசையில் வெண்ணிறத்தில் பிறைச்சந்திரன்!!! முத்தாய்ப்பாய் விமானம் ஒன்று
சரியாய் அந்த நேரம் ஊடே பாய, மனசு லேசாகித்தான் போனது பெண்ணிற்கு!!!

 

நேற்று முழுக்க அத்தனை வேதனையில்… பயத்தில் இருந்தவளுக்கு இன்று இந்த
இயற்கையை ரசிக்க முடிந்தது ஆச்சர்யம் தான்…

 

கடவுள் அன்பாய் கட்டளையிட்டு இருக்கிறாரே? உனக்கான இடத்தில் வந்து
சேர்ந்துவிட்டாய்… சந்தோஷப்பட்டு கொள் என்று! அந்த எண்ணம் தந்த மகிழ்வு தான்
அவளை ரசிக்கவே சொல்லியது…

 

தனது எண்ணத்தை நினைத்து தனக்குள் புன்னகைத்து கொண்டவள், கதவை திறந்து
பெட்டியினுள் இருந்த சாமி படங்களை பூஜை அறையை துடைத்துவிட்டு வைக்க
ஆரம்பித்தாள்.

 

வீடும் கொஞ்சம் சுத்தமாக தான் இருந்தது… கூட்டிடுவிட்டு மாப் போட்டுவிட்டால்
போதும் என்று நினைத்து பிறகு செய்தும் முடித்தாள். அரைமணி நேரம் கழிந்தது…
அருகிலேயே கடை திறந்து இருக்க, அங்கு சென்று பால் பாக்கெட், சில காய்கறிகள்,
அரிசி, கல்உப்பு, சக்கரை என்று வாங்கி வந்தாள்.

 

அதற்குள் பேக்கர்ஸும் வந்துவிட, சாமான்களை ஒரு பக்கம் அடுக்க ஆரம்பித்தனர்.
உதவிக்கு சந்தோஷியும், நித்திலனும் வந்துவிட்டனர்… தேவிகாவும் பிரபாவும் இதை

 

கண்ணுற்று நல்ல நேரம் முடிவதற்குள் சாக்ஷியை பாலை காய்ச்ச பணிக்க, வேண்டிய
சாமான்களை எடுத்து கொண்டு பாலை காய்ச்சினாள்.

 

தாயை மானசிகமாக வேண்டி கொண்டவளின் எண்ணமெல்லாம், ‘காலம் முழுக்க
இங்கேயே இருக்க என்னை வைத்துவிடுங்கள்’ என்பதாகவே தான் இருந்தது.

 

******

 

நந்தன் அப்பொழுது தான் எழுந்து அமர்ந்தான். தூக்க கலக்கம் போகாமல் இன்னமும்
கண்ணை கசக்கி கொண்டிருந்தவன் கையை எடுத்துவிட்டு நிமிர, பாலா அவனை
மேலும் கீழுமாக பார்த்தது.

 

“என்னடா?” என்று விரைப்புடன் கேட்க,

 

‘அடேய்! கதவ திறடா… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்குடா… வாடா… கொழுப்பு
பிடிச்சவன் பாத்ரூம் கதவையும் திறந்து வைச்சுருக்க மாட்டான்…’ என்று
கண்ணாலேயே பேசி பாத்ரூம் பக்கமும் அவனின் மேலும் பார்வையை வீசியது அது!

 

“ஹோ… என்னை குளிக்க சொல்றியா? சரிதான்… லேட்டா வேற ஆகிருச்சு…
இப்படியே வெளில போனா சின்ன டானும், பெரிய டானும் டண்டணக்கா டான்
ஆகிருங்க… நான் போய் குளிச்சிட்டு வரேன்…” என்று பாத்ரூமிற்குள் நுழைய போக,
வள்ளென்று குறைத்தது பாலா.

 

“என்னடா?”

 

எழுந்து நின்றவனின் பேன்ட்டை வாயோடு இழுக்க ஆரம்பித்து, வாயில் கதவு பக்கம்
சென்றது பாலா… அப்பொழுது தான் நந்தனின் மண்டைக்குள் மணி அடிக்கவே
ஆரம்பித்தது…

 

‘”ஹோ… உனக்கான காலை கடமைகள் இருக்குல???” என்றபடி வாயில் கதவை
திறந்துவிட்டவன், பாலாவின் காதருகே சென்று,

 

“ஜாக்கிரதையா இருடா… நாய் புடிக்கிறவங்க இங்கே ஜாஸ்தி… கடத்திட்டு
போயிருவாங்க… என்ன புரியுதா?” என்று எச்சரிக்கை வேறு செய்தான் நந்தன்.

 

‘உன்கிட்ட இருந்து நாய் படாத பாடு படுறதுக்கு… எவனாவது வந்து என்னை
தூக்கிட்டு போறதே மேல்…’ என்று மனதோடு புலம்பி கொண்டு நந்தனை
அலட்சியப்படுத்தி வெளியில் ஓடியது பாலா.

 

‘ஹ்ம்ம்… கஷ்டப்பட்டு சோறு போட்டு வளர்க்கிறது எல்லாம் நானு… என்னைக்காவது
என்னை பாசமா நினைச்சு பார்க்குறானா? நம்ம பேச்சை கேட்கிறானா? எல்லாம்
இந்த பொண்ணுங்க சொன்னா தான் கேட்குது!’ என்று நொந்து போய் குளிக்க
சென்றான் நந்தன்.

 

வெளியில் வந்த பாலாவோ, தனது காலை கடமைகளை முடித்துவிட்டு நேராக சென்று
நின்ற இடம் சந்தோஷியின் வீடு தான்! தேவிகா அதற்கு பாலை பெடிக்ரீயுடன் கலந்து
தந்தவர்,

 

“இந்த நந்தன் பையன் வந்தானா… காலைல சாப்பாடு வேலை எல்லாம் முடிஞ்சிரும்…”
என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு வீட்டினுள் சென்றார் அவர்.

 

பாலா சாப்பிட்டுக்கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. அப்பொழுது தான்
வாயிலில் நித்திலனுடன் எதையோ எடுத்துக்கொண்டிருந்த சாக்ஷி அதன் கண்ணில்
பட்டாள்.

 

“லொள்… லொள்…” என்று எழுந்து நின்று அவளை நோக்கி குரைக்க, திடீரென்று
எங்கேயிருந்து நாய் கத்துகிறது என்று முழித்தாள் சாக்ஷி.

 

சந்தோஷி வந்து, “டேய்… இனி இவங்க இங்கே தான் இருப்பாங்க… புது டெனன்ட்…
அதான் அவங்க வீடு” என்று எதிர்வீட்டை காட்டிவிட்டு,

 

“நல்ல பிள்ளையா… ஃபிரெண்ட்லியா இருக்கணும் புரியுதா?” என்று பணித்தவள்,
சாக்ஷியை தன்னருகே வருமாறு அழைத்தாள்.

 

சாக்ஷி குழம்பி போய் நித்திலனை பார்க்க, “போங்கம்மா… போங்க… அவனுக்கு
ஃபிரெண்ட் ஆகிக்கோங்க… கர்ள்ஸ்ன்னா உயிரையே கொடுப்பான் அந்த
மானஸ்தன்…” என்று கிண்டல் செய்ய,

 

‘லூசாயா நீ?’ என்று புரியாமல் நோக்கிக்கொண்டு இன்னமும் அங்கேயே நிற்க,

 

“அட… சும்மா கிண்டல் பண்ணுனேன் சாக்ஷி… இங்கே ஃப்ரீயா இருக்கணும்னா
இவனுக்கு ஃபிரெண்ட் ஆகிக்கிறது நல்லது! சும்மா போங்க…” என்று சிரிப்புடன்
அனுப்பிவைத்தான் இந்த நல்லவன்.

 

மெல்ல சந்தோஷியை நெருங்கியவள் கண்களை எட்டாத புன்னகையை
வெளிக்காட்ட,

 

“உங்களுக்கு நாய்ன்னா பயமா?” என்று நட்புடன் கேட்ட சந்தோஷியிடம்,

 

“கொஞ்சம்…” என்று பதில் தந்தாள் சாக்ஷி.

 

“இவன் பொண்ணுங்களை எல்லாம் கடிக்க மாட்டாங்க… ரொம்ப நல்லவன்… சும்மா
நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்னு அட்டென்ஷன் சீக்கிங் தான்!!!” என்று
சிரிப்புடன் சொல்லிய சந்தோஷி,

 

“டேய்… இவங்க சாக்ஷி… நம்ம ஃபிரெண்ட்….. அண்ட் சாக்ஷி… இதான் பாலா…
எங்கவீட்டு செல்லம்” என்று அறிமுகம் செய்து வைக்க, முதலில் தனக்கு முன்னே
முன்னங்கால் இரண்டையும் தூக்கி எழுந்து நின்ற அந்த ஐந்தறிவு ஜீவனையும்,

 

அதனுடன் சரளமாக பேசியபடி அதனின் குணாதிசயங்களை பற்றி விவரித்த
சந்தோஷியையும் வேற்றுகிரக ஜந்து ரேஞ்சிற்கு பார்த்து வைத்தவள், அதன்பிறகே
அவளின் கூற்றை உள்வாங்க ஆரம்பித்து இருந்தாள்.

 

“எ.. என்… என்னாது? பாலாவா?” என்று ஜெர்க்காகி நின்ற அதே நேரம், ,

 

“அடேய்! அறிவுக்கெட்ட பாலா…” என்று கத்திக்கொண்டே வந்து சேர்ந்தான் நந்தன்.

 




Comments are closed here.

You cannot copy content of this page