Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

காஜலிட்ட விழிகளே 7

 

கார்த்திக் தனது வீட்டிற்குள் நுழையும்போது திக் திக் என்று இதயம் அடித்துக்கொண்டது. உள்ளே தருண் மடச்சாம்பிராணி இருப்பானே அவனை எப்படி கையாள்வது என்ற மனப்போராட்டம் இருந்து கொண்டேயிருந்தது.
தனது சாவியைப் போட்டு கதவைத் திறந்தவன் வாசல் தாண்டி உள்ளே போனதும் அவன் எதிர்ப்பார்த்தபடியே தருண் முகத்தைதான் முதலில் பார்த்தான். மந்தகாசமாய் சிரித்துக் கொண்டு அவன் முன்னே காட்சி தந்த தருண்முகத்தை அவன் ஏறிட்டும் பார்க்கவில்லை.
“என்ன கார்த்திக் டேட்டிங் முடிந்ததா? ஒரு நாள் முழுதும் பத்துச்சா இல்லை பத்தலையா? நான் வேண்ணும்ன்னா ஸ்ருதி அப்பாகிட்ட எக்ஸ்ட்ரா ஒரு மணிநேரம் வாங்கித்தரவா? ”
கார்த்திக் முறைத்தான். தருண் விடவில்லையே. அவன் பின்னாலே சென்று வம்பிழுத்தான்.

“அதெப்படி கார்த்திக் டேட்டிங் போகும்போது பொண்னோட அப்பாவையும் சேர்த்து கூட்டிட்டு போவாங்களா? நான் இதுவரை கேள்விப்பட்டதேயில்லையே? நீ கேள்விப் பட்டிருக்கியா என்ன? ”
“….”
“ஆனால் அந்த வழியைக் கண்டுபிடித்த பெருமை என் அருமை நண்பனைச் சேரும் என்று நான் எவ்வளவு பெருமையாகச் சொல்வேன் தெரியுமா? ”
“போடா லூசு! ”
“நீ என்னை லூசுன்னு சொல்லிக்கோ. நான் உன்னை ஜீனியஸ்ன்னுதான் சொல்வேன். அதெப்படி கார்த்திக் உன்னால் மட்டும் இதெல்லாம் முடியுது? கார்த்திக் அடுத்த சன்டே நானும் வரேன்னே.. மூனுபேரா எங்கேயும் போகக்கூடாதாம். பெரியவங்க சொல்லியிருக்காங்கப்பா. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னமாதிரிடா! ”
“தருண் இங்க வாயேன்! ”
“நோ மச்சி நான் தூங்கப்போறேன். ரொம்ப நேரமாக சிரிச்சிச் சிரிச்சி டயர்டாக இருக்கு மச்சி. ஆனந்தம்.. பரம ஆனந்தம் என்பது என்ன என்று தெரியுமோ? அதை உன் தயவால் நான் அடைந்தாச்சு. ”
கார்த்திக் கையில் துணிகளை மாட்டி வைக்கும் ஹாங்கரை கையில் எடுத்து தருண் பக்கமாகத் திரும்பும்போது..
தருண் குறுக்கிட்டான் “டேய் நாம் காந்தி பிறந்த மண்ணில்தான் பிறந்திருக்கோம் ஞாபகம் வச்சிக்குகோ.. நோ வன்முறை! ”
“போடா அங்கிட்டு. நான் ஏ.டி.யெம் போகணும். தள்ளு!” என்று அவனருகே சென்ற கார்த்திக் தனது சட்டை எடுத்து ஹாங்கரில் மாட்டிவிட்டு எரிச்சலுடன் நகர்ந்து விட்டான்.
தருண் தனது அறைக்குப் போகும்முன் சிரித்துக்கொண்டே ஒரு குட்நைட் கார்த்திக்கிடம் சத்தமாகச் சொன்னான். தன் அறைக்குள் வந்து கண்களை மூடியபிறகும் அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. “கார்த்திக் கார்த்திக் ” என்று வெளியே செல்லப்போனவனை கத்தி அழைத்தான்.
கார்த்திக் எரிச்சலுடன் அவன் அறைக்குள் நுழைந்ததும், “இப்ப என்னடா வேணும்? சும்மாயிருக்கமாட்டியா? ”
“ கார்த்திக் ஒரு பெரிய பிரச்சனைடா! ”
“ என்ன புடலங்காய்ப் பிரச்சனை? ”
“ கார்த்திக் எனக்கு இதற்கு முன் இந்த பிரச்சனை வந்ததேயில்லை! இதுதான் முதல் தடவை தெரியுமோ? ”
“ விஷயத்தைச் சொல்லித் தொலை. ”
“டேய் கார்த்திக்.. தூங்கும்போதும் சிரிப்பு வருதுடா.. இந்த மாதிரியெல்லாம் எனக்கு நடந்ததேயில்லை.. ”
“ஓ!அப்படியா? நாளைக்கு கீழ்ப்பாக்கம் போயிடுவோம். இந்தா உன் ஃபோனைக் கையில் வச்சிக்கோ.. ஹாலில் வச்சிட்டு வந்திட்ட.. யாரோ இப்ப கால் பண்ணாங்க. பத்து நிமிஷம் கழிச்சு பேசுங்கன்னு சொன்னேன். திரும்ப கால் பண்ணுவாங்க. நான் வர்றேன். பை! ”
கார்த்திக் போகும்முன் அவனை அழைத்துக் கொண்டேயிருந்த தருணை அவன் அசட்டை செய்தான்.
தருண் கார்த்திக் சொன்ன அழைப்பிற்காக காத்துக்கொண்டேயிருந்தான். சரியாக இருபது நிமிடங்கள் கழித்து அவனது செல்பேசி சிணுங்கியது.
கால் வரவில்லையே.. மெசேஜ்தானே வருது என்று தனது கைபேசியை எடுத்து மெசேஜை பார்த்தான்.
KVB alert * INR 20,000 IS THE BALANCE IN A/C ****0265 AS OF 06 MAY 2018 09.03.20 என்றது அந்த குறுந்தகவல்.
அடுத்த நிமிடம் இன்னும் ஒரு தகவல் வந்தது..
DEAR CUSTOMER RS 5000 HAS BEEN WITHDRAWN FROM A/C ****0265 ON 06 MAY 2018 09.04.15
கால் மேல் கால் போட்டு கட்டிலில் படுத்திருந்த தருண் எழுந்து உட்கார்ந்துவிட்டான். ஐயாயிரம் ரூபாய் நான் எப்ப எடுத்தேன்?
அடுத்த நிமிடம் இன்னும் தகவல்கள் வந்து கொண்டேயிருந்தது..
DEAR CUSTOMER RS 5000 HAS BEEN WITHDRAWN FROM A/C ****0265 ON 06 MAY 2018 09.04.39

ஈஸ்வரா! அடக்கடவுளே பத்தாயிரம் போச்சு! என்று தலையில் கைவைத்தான்
DEAR CUSTOMER RS 5000 HAS BEEN WITHDRAWN FROM A/C ****0265 ON 06 MAY 2018 09.04.50
DEAR CUSTOMER RS 5000 HAS BEEN WITHDRAWN FROM A/C ****0265 ON 06 MAY 2018 09.06.10
கடைசியாக வந்த தகவலை வாசித்தான்..
DEAR CUSTOMER RS 5000 HAS BEEN WITHDRAWN FROM A/C ****0265 ON 06 MAY 2018 09.08.10
தருண் இப்போது ஈஸ்வரனை அழைக்கவில்லை யாரை அழைத்தான்? எப்படி அழைத்தான்?
“கார்த்திக்! டேய் கிராதகா இங்கவாடா.. ஐநூறு தான் இருக்கு. இதற்குமேல் எடுக்காதேடா வந்துத் தொலைடா! கார்த்திக் கார்த்திக் கார்த்திக் யூ ஃபூல்..! இடியட்!”
ஆனால் இரண்டு மீட்டர் தொலைவில் ஒரு ஏ.டியெம் மிஷினில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக் ஆற அமர தனது வேலைகளை முடித்துக்கொண்டு பன்னிரெண்டு மணிக்குத்தான் நண்பன் குரலுக்கு செவி சாய்த்தான்.

கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அவன் ஏற்கனவே நிச்சயமாய் நம்பியபடி தருண் ஹாலில் கொட்ட கொட்ட முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
கார்த்திக் அமைதியாக தனது வேலைகளைச் செய்தான்.. பேன்ட்டைக் கழற்றிவிட்டு ஷார்ட்ஸுக்குள் புகுந்தான். பல் துலக்கினான். பிறகுதான் இஞ்சி தின்ற குரங்கின் பின்பத்தின் அருகே சென்றான்.
“தூங்கலை? ஏன் ஹாலில் உட்கார்ந்திருக்க? ”
தருண் அவன் முன்னே வந்து நின்றுகொண்டு “சாரிடா மச்சி.. உன்னை கேலி செய்திருக்கக்கூடாது.. ரொம்ப ரொம்ப சாரி. ”
“நண்பர்கள் சாரி சொல்லக்கூடாதுடா.. ”
“கரெக்ட்! ம்.. கொடு!” என்று தனது மிட்டாய் கேட்கும் குழந்தையைப்போல் கைகளை அவன் முன்னே விரித்துக் காட்டிக்கொண்டு நின்றான்.
“எதை? ”
“எதையா? நைன்டீன் தௌசன்ட் ஃபைவ் ஹன்ட்ரட் ருபீஸ்! ”
“ஓ? அதுவா? செலவாகிடுச்சுடா.. மச்சி. ”

“கார்த்திக் நான் இப்ப என்ன செய்யணும்? அதான் மன்னிப்பு கேட்டேன்ல்ல..”

“நீ இப்ப என்ன செய்யணும்? இது கேள்வி! ம்.. இப்ப இதற்கு நான் பதில் சொல்றேன்.. நண்பர்கள் சாரி சொல்லக்கூடாது.. ”

“ம்! ” என்றதும் “ம்” கொட்டினான் தருண்.

“அதனால் நீ தினம் எனக்கு சாரிடா மச்சின்னு ஒரு மெசேஜ் அனுப்பிடு! ”

“தினமா? ”

“ஆமாம். ஆனால் சன்டே மட்டும்.. ”
அப்பாடா சன்டே மட்டுமாவது நம்மை விட்டானே என்று தருண் நினைக்கும்போது..
“சன்டே மட்டும் ஒரு இருபது சாரி அனுப்பிடு.. ஒவ்வொரு சாரிக்கும் கரெக்டா இருபது நிமிஷம் இடைவெளி இருக்கணும்! ”
மாட்டேன் மாட்டவே மாட்டேன் என்று சொல்லத்தான் அவனுக்கு விருப்பம் என்றாலும் சரி என்றுதான் பதில் தந்தான்.

“என் பணத்தை எப்ப கொடுப்ப? நான் என் கம்பெனி ஆட்களுக்கு டீரீட் வைக்கணும். சம்பளம் இன்கிரிமென்ட் ஆகிருக்குல்ல அதுக்கு! ”

“ஒரு வாரம் நான் சொன்னதைச் செய் அப்புறம் பார்க்கலாம். குட்நைட்! அப்போது தூங்கும்போது சிரிப்பு வருதுன்னு சொன்னீயே? அந்த பிரச்சனை சரியாகிடுச்சா? இல்லை நாளைக்கு கண்டிப்பா கீழ்ப்பாக்கம் போகணுமா? ” என்று கேட்டுக்கொண்டே வெறுப்பின் உச்சியில் இருந்த தருணை தனியே விட்டுவிட்டு அவன் அறைக்குள் அடைந்துகொண்டான்.

காலையில் கார்த்திக் எழுந்ததும் முதலில் தனது கைபேசியை பார்ப்பது வழக்கம். அன்றும் அவ்வாறே செய்தான். ஸ்ருதியின் குட்மார்னிங் மெசேஜ் அவனுக்கு எப்போதும் போல் காட்சி தந்தது. அடுத்ததாக தருணின் சாரி குறுந்தகவல் அவனை சிரிப்பில் முழ்கடித்தது.

மெள்ள எழுந்து பல் துலக்கிவிட்டு அடுக்களைக்குள் புகுந்தான்.

அங்கே தருண் கம்பெனி வண்டி வருவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறான் என்று புரிந்தது.

தருண் கார்த்திக்கை கண்டதும் “ஐயா ரொம்ப ஜாலியாக இருக்கார் போல? காலையிலேயே என் மெசேஜ் முகத்தில் விழித்ததுதான் காரணமா? ”

என்று கேட்கும்போதே அவன் செல்ஃபோனில் ஒரு மெசேஜ் வந்தது..
YOUR ORDER PLACED AT SNAPDEAL SIR.. CASSETTES WILL BE DELIVERED TO S.THARUM, 171 KAMARAJAR SALAI MADURAI 9
“கார்த்திக் என்ன ஆர்டர் பண்ண? கேசட்டா? என் ஊர் அட்ரஸ் போட்டிருக்கியே? மதுரை அட்ரஸ் எதுக்கடா குடுத்த? ”

“ம்.. ” என்று தனது காபியைக் குடித்துக்கொண்டே அறைப்பக்கம் நகர்ந்தான்.

“டேய் கேசட் ஆர்டர் பண்ணியா? என்ன கேசட்? ”

“ஒரு நாலு இங்கிலீஷ் படம் ஆர்டர் போட்டேன். ”

“படத்தின் பேரு என்ன? சொல்லு! ”
கார்த்திக் மட மட வென நான்கு படத்தின் பேரைச் சொன்னான்.
“டேய் அதெல்லாம் பக்கா ப்ளு ஃப்லிம்டா.. ”

“ப்ளு ஃப்லிம் இல்லை.. டார்க் ப்ளு ஃப்லிம்.. கேசட் கவர்கூட கிக்காக இருக்கும் என்றால் பார்த்துக்கோயேன்..

“டேய் மச்சி.. வேண்டாம்டா.. வீட்டுக்கு போச்சுன்னா அம்மா கண்டிப்பா பிரித்துப் பார்ப்பாங்க. அம்மா என்னை தொலைச்சிடுவாங்க.. ப்ளீஸ்.. ஆர்டரை கேன்சல் பண்ணு! ”

“ப்ளீஸ் ப்ளீஸ்.” என்று தருண் கெஞ்சக்கூட நேரம்கொடுக்காமல் அவனது கம்பெனி வண்டி வாசலில் ஹார்ன் ஒலி எழுப்பியது.

தருண் வாசல் சென்று ஷுவைப் போடும்போதும் “கார்த்திக் ஆர்டரைக் கேன்சல் பண்ணிடு.” என்று கத்திக்கொண்டே நின்றான்.

அவன் இருக்கும் இடத்திற்கு வந்த கார்த்திக் “ஏன் இப்படி ஊரைக் கூட்டுற? ஆர்டரைக் கேன்சல் பண்றேன். டென்ஷன் ஆகாமல் ஆஃபீஸுக்கு போ.” என்று சொல்லும்போதே அவன் நின்ற கோலம் கண்டு அவனுக்கு உடம்பெல்லாம் ஒரே கிச்சு கிச்சு!
சட்டென்று சிரித்தவனைப் பார்த்து தருண், “ஏன்டா சிரிக்கிற” என்று எரிச்சலில் கத்தியபோது

“தருண் நீ சாக்ஸ் போட்டு ஷுபோடாமல், சாக்ஸ் போட்டு செருப்பைப் போட்டிருக்க!” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னபோது கார்த்திக்கின் ஃபோன் உள்ளேயிருந்து ஸ்ருதி ஹோம் காலிங் என்று கத்தியது.
செருப்பை கழற்றிவிட்டு ஷுவைப் போட்டுக் கொண்டு “தாங்ஸ்டா.

கீழே என் டார்லிங் ஆர்த்தி முன்பாக அவமானப்படாமல் காப்பாற்றியிருக்க.. ரொம்ப தாங்க்ஸ்டா மச்சி!” என்று கார்த்திக்கின் கையைப் பிடித்துச் சொன்னவன் அவனை கெட்டியாகப் கட்டிப்பிடித்துக் கொண்டான். கார்த்திக்கின் ஃபோன் உள்ளேயிருந்து இன்னும் சத்தமாக கத்தியது.

ஸ்ருதி ஹோம் காலிங் என்று கத்தியது. அதனைக்கேட்ட பிறகும் கட்டிப்பிடித்தவன் கார்த்திக்கை விடவேயில்லை.

“தாங்ஸ்டா மச்சி.. தாங்ஸ்டா மச்சி” என்று சொல்லிக்கொண்டேயிருந்தான்..
“தருண்.. ஸ்ருதி கூப்பிடுறா.. விடு என்னை. நான் ஃபோனை எடுக்க வேண்டாமா? ”

“தாங்ஸ்டா மச்சி.. ”

“எருமை விடுடா.. ”

“தாங்ஸ்டா மச்சி.. ஏன் அவசரப்படுற? உன் மாமனார்கிட்ட பேச அவ்வளவு ஆசையா? உன் காதலுக்கு நிச்சியமா கண்ணே இல்லைடா! கண்ணு மட்டுமா? வாய் மூக்கு என்று எதுவுமே இல்லைடா.. மொத்தத்தில் சுரனையே இல்லையடா உன் காதலுக்கு! ”

“டேய் உதை வேணுமா?
தனது பிடியை விடுவித்தவன் “டேய் கார்த்திக் சீக்கிரம் போய் அவர்கிட்ட பேசு.. ஃபோனை எடுக்கலைன்னு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடப்போறார்.. பைடா.. ” என்று கூறியவன் ஓடிச்சென்று தனது அலுவலக வண்டியில் புகுந்துகொண்டான்.
கார்த்திக் வேகமாக உள்ளே சென்று தனது கைபேசியை இயக்கினான்.
“ஹலோ.” ஸ்ருதியாக இருக்குமோ என்ற ஆசையில் எடுத்தவனுக்கு ஏமாற்றம் தந்தது அவளது தந்தையின் குரல்.
Comments are closed here.