Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முட்டக்கண்ணி முழியழகி-6

முட்டக்கண்ணி – 6

தெருவையடக்கிப் போடப்பட்டிருந்த அந்த அலங்காரப் பந்தலில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தான் நிலவன். அவனது நீலநிற பட்டு சட்டையும், வெள்ளை பட்டு வேட்டியும், அவனது ஆறடி உயரத்தை எடுப்பாய் காட்ட, முகம் முழுக்க புன்னகையும், கண்களில் ஆர்வமும், ஏக்கமும் சரிவிகிதமாய் மின்ன அமர்ந்திருந்தவனை, வந்திருந்த அனைவரும் கிராமத்திற்கே உரிய சிரிப்பும் கேலியுமாய் பார்த்திருந்தனர்.

 

அதில் ஒரு வயதான பாட்டி, “இம்புட்டு பேரழகானாட்டம் மாப்பிள்ளை இருக்கப் போய் தான், இந்த சின்னம்மா அந்த சித்ராங்கிய யாருக்கும் கொடுக்காம இருந்துருக்கா…. இது தெரியாம நானும் வளச்சு, வளச்சு அவளுக்கு மாப்பிள்ளப் பார்த்து அலைஞ்சுருக்கேன்.. எல்லாம் நேரந்தான்…” என முகவாயில் இடித்தபடியே சலிக்க,

 

“ஏய் ராக்கிக் கிழவி, என் பொம்மிய சித்ராங்கி சொன்ன, உன்னை கீழ உருட்டி விட்டுருவேன்..” என அங்கு விளையாடிக் கொண்டிருந்த வாண்டுகள் மொத்தமாய் வரிந்து கட்ட,

 

“ஆமா ஹர்ஷித், இந்த ஓல்ட் லேடி ஆல்ரெடி எங்கிட்ட அடிவாங்கியும், நம்ம பொம்மியை பேசுது… கிழவி நீ சட்னி ஆகப்போற பாரு…” என மற்றொரு வாண்டு பொங்கிக் கொண்டு வர,

 

“எலேய் நான் தான்டா நீங்க பிறந்ததும் உங்களுக்கு சேன வச்சேன்… இப்போ என்னவே அடிப்பீங்களா… அப்படியென்ன மாயம் பண்ணாளோ, இந்த நண்டு, சிண்டெல்லாம் என்னை அடிப்பேங்குது..” என அங்கலாய்க்க,

 

“ஏய் கெழவி… எங்கம்மா சொல்ற மங்காத்தா நீதானா..? எங்கம்மா சொல்றாங்க, நான் உன்ன மாதிரியே சொன்ன பேச்சுக் கேட்காம சேட்ட பண்றேனாம்..” என ஒரு வாண்டு ஆரம்பிக்க, இன்னொருவனும் “ஆமாடா எங்கம்மாவும் சேம் டைலாக் சொன்னாங்க…” சொல்ல, இப்படியாக ஒவ்வொரு வாண்டும் கூட்டு சேர, “ராக்கி செத்த உன் வாயக் கொற, சின்னப்பிள்ளைக கிட்ட வம்பழுந்துட்டு இருக்க..” என  நாட்டாமை அதட்டல் போட, ராக்கம்மா ‘கப்சிப்’ என்று அமைதியானார்.

 

ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சாரதியும், நாயகியும் தங்களது தாம்பூழத் தட்டை நடுநாயகமாக வைத்து “ஊர் பெரியவங்களுக்கு எங்க குடும்பம் சார்பா மரியாதையும் வணக்கத்தையும் சொல்லிக்கிறேன். பொழைக்க வெளியூர் போனாலும், நான் பிறந்து வளர்ந்த இந்த ஊர்தான் என்னோட உலகம். என் ஒரே மகன் நிலவனுக்கு, என் மச்சான் பொண்ணு கனலியை நிச்சயம் பண்ண வந்துருக்கோம், ஊர் பெரியவங்க ஆசிர்வாதம் பண்ணி நடத்திக் கொடுக்கனும். எங்க குடும்பத்துல நடக்கிற முதல் விசேஷம், நீங்க எல்லாரும் முன்னாடி நின்னு நடத்திக் கொடுக்கிறதுல தான் எங்க குடும்பத்துக்கு மனசார சந்தோசம் கிடைக்கும்.” என்று ஊர் பொதுவில் கேட்க, பெரியவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“என்ன நாட்டாமை பேச வேண்டியதப் பேசி, நல்ல காரியத்த ஆரம்பிச்சு வைங்க..” எனக் கூட்டத்தில் ஒருவர் பேச, நாட்டாமை தன் தொண்டையைச் செறுமி பேச  ஆரம்பித்தார்.

 

“மாப்பிள்ளை வீட்ல பேசி வந்துட்டாங்க, இந்தப் பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து நான் கூட இருக்கிறதுனால, எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பொண்ணுக்கும், புள்ளைக்கும் பிடிக்காம கட்டி வைக்கிறீங்களோன்னு… அதனால புள்ளைங்க ரெண்டும், பொதுவுல வந்து சம்மதம் சொல்லிட்டா தட்டை மாத்தி நிச்சயம் பண்ணிடலாம்..” என்ற நாட்டாமையின் பேச்சைக் கேட்டு, ‘பார்ரா,  புளுகு மூட்டை மாதிரி இருந்துட்டு, இந்தாளு நேர்மைய..’ என நிலவன் மனதுக்குள் கவுன்டர் கொடுக்க, மற்றவர்களோ, அதிர்ந்து தான் போனார்கள்.

 

எங்கே இதை சாக்காக வைத்து இருவரும் வேண்டாம் என்று விட்டால், நிலவனை இன்னும் முழுதாக நம்பியிருக்கவும் இல்லை அவர்கள். அதனால் எல்லாரும் சற்று பயப்படத்தான் செய்தனர்.  ஆனால் அவர்களது பயமெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல், தனது இடத்திலிருந்து, தன் ஆறடிக்கும் நிமிர்ந்து எழுந்தான் நிலவன்.

 

கூடியிருந்த சபையோரை நோக்கி, “பெரியவங்களுக்கு வணக்கம். என்னதான் வெளியூர்ல படிச்சு, வெளிநாடெல்லாம் போய் வந்தாலும், நம்ம ஊரையும், இங்க இருக்கிற கட்டுப்பாடுகளையும் மறந்தவன் கிடையாது, என்னைப் பெத்தவங்க என்னை அப்படித்தான் வளர்த்துருக்காங்க, எனக்கும் இதுதான் சொந்த ஊர், என்னோட வேர் இங்க இருந்துதான் ஆரம்பிச்சது. அதனால இந்த ஊருக்கு நான் கட்டுப்படுறேன், அப்புறம் எங்க பொம்மியை பிடிச்சுப் போனதால தான், இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். பெரியவங்க நீங்க முழுசா நம்பலாம்.”

 

“அதோட, நானும் வந்ததுல இருந்து அவளைப் பார்க்க ட்ரை பண்றேன், எங்க அம்மாச்சி விட மாட்டேங்குது, இப்போ வேணும்னா சம்மதம் கேட்கிற மாதிரி கூப்பிடுங்க, நானும் பார்த்த மாதிரி ஆச்சு, உங்களுக்கும் அவ வாயாலயே சம்மதத்தைக் கேட்ட மாதிரியும் ஆச்சு…” என்று பேச,

 

வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் ஆவென வாய் பிளக்க, ஊர்ப் பெரியவர்கள் முகத்தில் அசடு வழிந்தது.  அதில் ஒருவர், “நிலவா உன் மேல நம்பிக்க இல்லாம இல்லப்பா, நீ ஊருப்பக்கமே வந்ததில்ல, டவுன்ல வளர்ந்த புள்ள, நம்ம பொம்மி இந்த ஊரேக் கெதின்னு கெடக்கும், ரெண்டு பேருக்கும் ஒத்து வராம போயிட்டா, பின்னாடிக் கஷ்டம் பாரு, அதான் … ஆனா நீ பேசினது அந்தக் கவலையே தேவை இல்லைன்னு தோன  வச்சிருச்சு..” என்றவர் மற்றவர்களிடம், அடுத்து என்ன செய்யலாம் எனப் பேச,

 

கூட்டத்தில் மற்றொரு பெரிசு, “படிச்சவன் படிச்சவன் தான்யா, எப்படி பொசுக்குன்னு ஆசையைச் சொல்லிட்டான், பார்த்தீங்களா,” என வம்பளப்பது அவன் காதில் விழ, புன்னகை உண்டானது நிலவனுக்கு.

 

“எப்பா கதிரு, உனக்கு இதுல விருப்பம் தான, தட்டை மாத்திக்கலாமா..? பொண்ணைக் கூப்பிடுங்க…” – நாட்டாமை

 

“எங்க குடும்பத்துல எல்லாருக்கும் முழு விருப்பம் நாட்டாமை.., சந்திரா பொம்மியக் கூப்பிட்டு வா..” – கதிர்

 

“இன்னும் கதவுக்குள்ள என்னடி பண்ணுவீங்க, ஷாலினி பொம்மியைக் கூப்பிடுறாங்க, கதவைத் திற..” – சந்திரா.

 

“நாங்க ரெடி ஆன்டி, போலாமா..” என்றபடி வெளியே வந்த இருவரையும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்தார் சந்திரா.

 

“என்ன ஆன்டி..” என ஷாலினியும், ‘என்ன’ என்பது போல் கனலியும் புருவத்தை உயர்த்தி கேட்க, “தலைக்குப் பூ வச்சு, புடவைக் கட்டினா, பார்க்க எவ்ளோ அழகா இருக்கீங்க, அதை விட்டுட்டு எப்பப் பாரு, கிழிஞ்சுப் போன ஜீன்சும், ஆம்பள பையன் போடுற வெளுத்த சட்டையையும் மாட்டிக்கிட்டு அலையுறது, இப்ப பாரு, என் கண்ணே பட்டுடும் போல..” என இருவரையும் நெட்டி முறித்து, அவர்களின் கிண்டல் பார்வையைக் கண்டு கொள்ளாமல் முன்னே நடக்க,

 

“பங்கு, இந்த் ‘அச்சம், மடம், நானம், பயிர்ப்பு’ ன்னு சொல்வாங்களே, அதெல்லாம் நமக்கு எப்ப வரும், டைமிங்க் தெரிஞ்சா தப்பிச்சிடலாம், இல்லாட்டி வந்த மாதிரி ஆக்ட் பண்ணி மேனேஜ் பண்ணனும்..” ஷாலினி.

 

“மச்சி, நானேத் தலையைக் குனிஞ்சு தான் மேனேஜ் பண்றேன். காமெடின்ற பேர்ல, எதையாச்சும் செஞ்சு, எங்கிட்ட உதை வாங்கிட்டுப் போயிடாதே..” – கனலி.

 

“பங்கு.. ஐயாம் யுவர் ப்ரண்ட்..” ஷாலினி

 

“இப்போ மூடிட்டு வரியா.. என்ன..?” – கனலி

 

“எப்பப் பாரு குசுகுசுன்னு, வாயை மூடிட்டு வந்து பெரியவங்களுக்கு வணக்கம் வை..” என்ற சந்திராவின் அதட்டலில், “வாயை மூடி எப்படி வணக்கம் சொல்றது..” என்ற கனலியின் கிண்டலுக்கு, “பங்கு, வாயை மூடி வணக்கம் வைன்னு தான் ஆன்டி சொன்னாங்க, சொல்லுன்னு சொல்லல..” என்றவாரே, கனலியின் பின்னால் சென்ற ஷாலினியை இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்ட பேச்சி அவளை முறைக்க, ‘ஹி..ஹி..’ என்ற அசடு வழிதலோடு ஓரங்கட்டி நின்றாள்.

 

மத்தியில் வந்து நின்றவள், எல்லோருக்கும் பொதுவில் ஒரு வணக்கத்தை வைக்க, ‘ஆத்தி கனலிப் புள்ளையா இது, இம்புட்டு அழகா இருக்குறது, இத்தன நாளா அந்த பேன்டு சட்டையில எல்லாத்தையும் ஒழிச்சு வச்சிருந்தா போல, என்னதான் சொல்ல, பொட்டப்புள்ளைக்கு அழகு சேலையும், நீளமான முடியும் தான்..’ என்று கிழவிகள் ஆரம்பிக்க, அது கனலியின் காதில் விழுந்து, அவள் தன் குட்டிச் சாத்தான் கேங்கை திரும்பி பார்த்தாள்.

 

‘சரிதான் கெழவிகளுக்கு கட்டம் சரியில்ல, நம்மாளு பார்க்கிற பார்வையப் பார்த்தா ப்ளான் பிக்ஸ்ட் போல,  என்று ஷாலினியின் மைண்ட் வாய்ஸ் ஓட, கனலியின் பார்வையில் அத்தனைக் கிழவிகளும் கப்சிப்..

 

இப்போது நாட்டாமை மீண்டும், “பொம்மி பாப்பா, உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்தான, உன்னோட முடிவைத் தைரியமா சொல்லலாம், எந்த நிர்பந்தமும் இல்ல..” என்றதும்,

 

“இந்தக் கிறுக்குப்பயல போய் நாட்டாமையாப் போட்டானுங்க பாரு புத்திக் கெட்டவனுங்க, நாமளே, இவளை எப்போ இந்த ஊரை விட்டு துரத்தலாம்னு இருக்கோம், விருப்பமா, கிருப்பமான்னு கேட்டுக்கிட்டு..” என்று சில கிழவிகள் புலம்புவதை ஒன்றுமில்லாமல் ஆக்கியது கனலியின்  பேச்சு.

 

“என்ன அப்புச்சி இப்படிக் கேட்டுட்டீங்க, எனக்கு எது நல்லதோ அதைத்தான் எங்க வீட்ல செய்வாங்க, அவங்களுக்கு எது விருப்பமோ , அதுதான் எனக்கும். அதோட அத்தைன்னா எனக்கும் ரொம்ப பிடிக்குமே..” என,

 

‘ஓ அத்தையைப் பிடிக்குமா.., அத்தைப் பெத்த பையனையும் சீக்கிரம் பிடிக்க வைக்கிறேன்’ நிலவனின் மைண்ட் வாய்ஸ். அவள் வந்ததில் இருந்து அவளது ஒவ்வொரு செய்கையையும் ரசித்து, அதில் தன்னையும் அறியாமல் விழுந்துக் கொண்டிருந்தான் மன்னவன்.

 

“அப்போது என்னம்மா சொல்ற, மாப்பிள்ளைப் பையன், பட்டுன்னு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான். அதே மாதிரி நீயும் ஒரு வார்த்த சொல்லிடு,” என்று சொல்ல,

 

“அவளோ நிலவனை ஓரக்கண்ணால் பார்த்தவள். வழக்கம்போல் தன் துடுக்குத்தனத்தைக் கையில் எடுத்து, அவனை நேருக்கு நேராய் அவன் விழிகளை சில நொடிகள் பார்த்து, “எனக்கு மாமாவைக் கட்டிக்க சம்மதம்..” என்று சொல்ல,அவளது அந்த வெளிப்படையான செயலும், தைரியமும், முற்றிலுமாய் அவள் பால் விழச் செய்தது.

 

மாப்பிள்ளை வீட்டில் எடுத்து வந்த தாம்பூலத்தை அவள் கையில் கொடுத்து, அதில் இருக்கும் புடவையைக் கட்டி வரச்சொல்லி அனுப்ப, அத்தைமார்கள் சூழ உள்ளே வந்தவளை, பூஜையரையில் அமர வைத்து பிறந்த வீட்டினர் நலுங்கு வைக்க,, வயதில் பெரியவர்கள் நலுங்கு பாட, குமரிப் பெண்கள் அவளைச் சுற்றி அந்தப் பாடலுக்கு கும்மிகொட்டி ஆட ஆரம்பித்தனர்.

 

நலுங்கு முடிந்து அவளை மஞ்சள் நீரில் குளிக்க வைத்து, மாப்பிள்ளை பட்டை உடுத்தவைத்து, மீண்டும் சபைக்கு அழைத்து வர, வந்தவளைப் பார்த்தவன் சொக்கித்தான் போனான் நிலவன்.

 

கரும்பச்சையில் ரோஜா வண்ண கரை, புடவை முழுவதும் ஆங்காங்கே தாமரைப் பூக்கள் தங்க ஜரிகையில் பூத்துக் குலுங்கியது. புடவையும், அதற்கு ஏற்றார் போல் னகையும், ஜடை அலங்காரமும் அவளை ஒரு தேவதையாகத்தான் காட்டியது.

 

இந்தக் கனலியை அவனுக்கும் கொஞ்சமே கொஞ்சம் பிடிக்கத்தான் செய்தது. அந்த மகிழ்ச்சி அவனது முகத்தில் நிறைவானப் புன்னகையை ஒட்ட வைத்தது.

 

புடவை மாற்றி வந்தவளை நிலவனின் அருகில் வைத்து மீண்டும் ஒரு நலுங்குப் பாடல் பாடப்பட்டது. ‘ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்று பெரியவர்கள் சொல்வதைப் போல, கனலியின் கால்கள் ஆடப் பரபரத்தன, அவளது கால்கல் படும் பாட்டை ஓரக்கண்ணால் ரசித்தபடி வாய்க்குள் சிரித்துக் கொண்டிருந்தான் நிலவன்.

 

ஷாலினி கூட அந்தக் கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தாள், கனலியின் கண்களில் படாமல்.. பட்டால் அவள் ஆடமுடியவில்லை என்றால் தன்னையும் ஆட விடமாட்டாள் என்று. கனலியின் குட்டீஸ் கேங்க் அவர்களைச் சுற்றி ஆடிப் பட்டையைக் கிளப்பியது. ஒரு வழியாக நிச்சயம் முடிந்து, கையோடு பெண்ணை மண்டபத்திற்கு அழைத்து வந்து விட்டனர்.

 

அனைத்தும் சரியாக நடக்க, அடுத்தநாள் காலையில் குலதெய்வக் கோவிலில் திருமணம் என்று பெரியவர்கள் நிம்மதியில் ஆசுவாசமாக, அப்படியெல்லாம் விட்டு விடுவேனா, என்பது போல் அடுத்து கனலி செய்த செயலில், நிலவன் கோபத்தின் உச்சியில் ‘கல்யாணமே வேண்டாம்’ என்று கத்திக் கொண்டிருந்தான்.

 

 

 
Comments are closed here.

error: Content is protected !!