Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 40

அத்தியாயம் – 40

அனந்த்பூருக்கு வந்த முதல் நாளே, மிருதுளா தங்கிருந்த வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு வந்தான் அர்ஜுன். எதிர்படுபவர்களின் பார்வைகள் எல்லாம் தன்னையே துளைப்பது போல் உணர்ந்த மிருதுளா சங்கடத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள். கால்கள் கூச சின்ன நடுக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.

 

கையில் புத்தகத்துடன் வந்து கதவைத் திறந்த கண்ணாடியணிந்த அந்த பெண், காணாமல் போன தன் தோழி திடீரென்று யாரோ ஒரு புதியவனுடன் ஜோடியாக வந்து நிற்பதைக் கண்டு, “மிருதூ” என்றாள் அதிர்ச்சியுடன்.

 

பிறகு தன் கண்ணாடியையே பூதக்கண்ணாடியாக பாவித்து அர்ஜுனை தலை முதல் கால்வரை உற்றுப் பார்த்தாள்.

 

அவளுடைய பார்வையை புரிந்துக் கொண்ட மிருதுளா, “இவர் அர்ஜுன். ஃபேமிலி ஃப்ரண்ட்…” என்று அவன் சொல்லிக் கொடுத்திருந்ததை கிளிப்பிள்ளை போல் அப்படியே கூறினாள்.

 

அவனுடைய வயதும் பக்குவப்பட்ட தோற்றமும் மிருதுளாவின் கூற்றை ஓத்திருந்ததால் அந்த கண்ணாடிப் பெண்ணுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. மூவரும் அந்த சின்ன வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

 

“உட்காருங்க…” என்று ஒரு பிளாஸ்டிக் நற்காலையை அர்ஜுனுக்கு எடுத்துக் போட்டாள் மிருதுளா. அவன் அமராமல் அந்த வீட்டை பார்வையால் ஸ்கேன் செய்தான்.

 

“திடீர்ன்னு எங்க போய்ட்ட நீ? அன்னைக்கு நைட் முழுக்க நீ வரலைன்னதும் நா ரொம்ப பயந்துட்டேன். உங்க அம்மா வேற… போன் பண்ணிகிட்டே இருந்தாங்க…”

 

“அம்மாவா! போன் பண்ணினாங்களா?” – பரபரப்புடன் இடையிட்டாள் மிருதுளா.

 

“ஆமாம்… பண்ணினாங்க… ஆனா அன்னைக்கு மட்டும் தான். மறு நாள்லேருந்து அவங்க போன் ஆஃப் ஆயிடிச்சு. என்னால அவங்களை காண்டாக்ட் பண்ண முடியல”

 

மிருதுளா கலவரம் படிந்த கண்களுடன் அர்ஜுனைப் பார்த்தாள். பார்வையாலேயே அவளை தைரியப்படுத்தியவன், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துப் பேசவைத்தான்.

 

மிருதுளாவின் தாய் என்றைக்கு – எப்போது – எந்த நம்பரிலிருந்து அழைத்தார்? கடைசியாக என்ன கூறினார் என்கிற விபரங்களையெல்லாம் வாங்கி கொண்டான்.

 

“என்ன ஆச்சு? அவங்களையும் காணுமா?” – அவனுடைய கேள்விகளின் எதிரொலியாக இந்த கேள்வி அவளிடமிருந்து எழுந்தது.

 

“நோ-நோ… இது ஜஸ்ட் ஃபேமிலி ஈகோ இஷு… அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சு வாழறாங்க. பொண்ணு ரெண்டு பேருக்கும் இடையில கஷ்ட்டப்படறா…” – இந்த விஷயங்கள் அரைகுறையாக அவளுக்கும் தெரியும் என்பதால் அவன் கூறிய பொய்யை நூறு சதம் உண்மை என்றே நம்பினாள் அந்த பெண்.

 

எத்தனை இலகுவாக உண்மை போலவே பொய்யை அள்ளிவிடுகிறான் என்று மிருதுளாவே அசந்து போனாள்.

 

“நீ எஸ்கேப் ஆனா அதே நாள்… இங்க ஒரு மர்டர் நடந்துடிச்சு மிருதூ. செத்தவன் கேங்ஸ்டராம். கேங் வார்ல போட்டுத்தள்ளிட்டானுங்க. மறுநாள் போலீஸ் வந்த பிறகுதான் எங்களுக்கெல்லாம் தெரிஞ்சுது. உன்னை வேற காணுமா… ரொம்ப பயந்துட்டேன்” – அன்றைய நிலவரங்களை விவரித்தாள்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் டெல்லியில் வெவ்வேறு இடங்களில் ஒரே விதமாக ஆறு கொலைகள் நடந்தன. கண்கட்டி வித்தை போல் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் சிட்டுக்குருவிகள் புகுந்து சுட்டுவிட்டு பறந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் என்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிடான்ஸின் சங்கேத பெயர்.

 

அர்ஜுனின் அலைபேசி பீப் ஒலி எழுப்பியது. எடுத்துப்பார்த்தான்….

 

“பறித்து வைத்திருந்த மாங்காய் பழுத்துவிட்டது” – டேவிட்டிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அந்த வாசகத்திற்கான அர்த்தம் என்ன என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

 

‘டெல்லி ஹோட்டலில் சிக்கிய நாயக் ஆளின் கதையை முடித்துவிட்டான். அவன் கதை முடிந்துவிட்டது என்றால் சித்திரவதை தாங்காமல் அவன் காட்டிக் கொடுத்த நாயக் ஆட்களின் கதையும் முடிந்திருக்கும்’ – அவன் மனம் மகிழவில்லை… அமைதியடையவில்லை… இன்னும் பசித்தது… ரெத்ததாகம் தீராமல் நாவறண்டது… இன்னும் அந்த பகவானின் இருப்பிடம் தெரியவில்லையே… ஜெகன் நாயக் சிக்கவில்லையே… அதுவரை சாந்தமாக இருந்த அர்ஜுனின் முகம் பயங்கரமாக மாறியது… மிருதுளா முதல் முறை அவனை பேஸ்மெண்டில் பார்க்கும் போது இருந்த அதே முகம்… அதீத கோபம்… கொடூரம்… வேட்டை புலியின் வெறியை கண்களில் தேக்கியபடி அலைபேசி திரையையே வெறித்துக் கொண்டு நின்றான்.

 

“அர்ஜுன்… என்ன ஆச்சு?” – அவனுடைய திடீர் மாற்றத்தில் பயந்து போன மிருதுளா அவன் கையை பிடித்து உலுக்கினாள்.

 

“லெட்ஸ் கோ…” – எந்த விளக்கமும் கொடுக்காமல் அவளை அழைத்துக் கே ஒண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

 

*******************

 

டெல்லியில் ஒரே நேரத்தில் ஒன்று போல நடந்த கொலைகள் மிகப்பெரிய சென்சேஷனல் நியூஸாக மாறி டெல்லி போலீஸின் குரல்வளையை நெரித்தது. எந்த டிவியை போட்டாலும்… எந்த பேப்பரை புரட்டினாலும் அந்த ஒரே செய்திதான். சமூக வலைத்தளம் பற்றிக் கொண்டு எரிந்தது. பொதுமக்கள் இரண்டு பேர் ஒன்றாக சேர்ந்தாலே இந்த பேச்சுதான்… காவல்துறையின் விழி பிதுங்கியது. தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணை முடுக்கிவிடப்பட்டது. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.

 

யார் கொலையாளி என்கிற ரீதியில் நடந்த விசாரணை காவல்துறைக்கு தலைவலியைத்தான் கொடுத்தது. காரணம்… கொலை செய்த அனைவரும் இருபதிலிருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் உள்ள பெண்கள்… அனைவருமே பிரட்டனிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள். யார் இவர்கள்.. என்ன மோட்டிவ் என்று எதுவும் புரியவில்லை. ஆனால் விஷயம் ஏதோ பெரிது என்பதை மட்டும் உறுதியாக நம்பினார்கள்.

 

அதன் பிறகு தான், கொலை செய்யப்பட்டவர்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை இருக்கிறது என்பதை தோண்டினார்கள். அனைவருமே பழைய கோர்த்தா ஆட்கள்… அப்படியென்றால் இப்போது நாயக்கின் குழுவினராக இருக்கலாம்… விஷயம் ஓரளவுக்கு பிடிபடுவது போல் இருந்தது. மேலும் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

 

பிரிட்டனில் உள்ள ஒரு ஏஜென்சி, அந்நிய நாடுகளில் கொலைகள் செய்வதற்கென்றே பல நாட்டுப் பெண்களையும் பணியமர்த்தி – பயிற்சி கொடுத்து கிடான்ஸாக வைத்திருந்தார்கள் என்கிற விபரம் கிடைத்தது. வந்திருந்தது அந்த ஏஜென்சியின் ஆட்கள் தான் என்பதற்கோ அவர்கள் தான் கொலை செய்தார்கள் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. கரணம் கொலை செய்ய வரும் யாரும் தன் சொந்த பெயரில் – சொந்த பாஸ்ப்போர்ட்டில் வரமாட்டார்கள். இனி கொலை செய்த அந்த பெண்களே பிரிட்டனிலிருந்து இறங்கி வந்து நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ஒப்புக் கொண்டாலே ஒழிய டெல்லி போலீஸ் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது.

 

கேஸ் அதலபாதாளத்தில் சென்று விழுந்தது. மீடியாக்கள் காவல்துறையை கழுவி ஊற்றினார்கள். சமூக வலைத்தளங்களில் காக்கிச்சட்டை மீம்ஸ் பல வைரலாகிக் கொண்டிருந்தன. கொலை செய்தது யார்… செய்யச் சொன்னது யார் என்று தெரிந்தும் மெளனமாக கையைக் கட்டி கொண்டிருக்க வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் இருந்தது காவல்துறை.

 

அதை சகிக்க முடியாமல், தனிப்படையின் தலைமை அதிகாரி, அன்-அபிஷியலாக ஒரிஸாவிற்கு வந்து கோர்த்தாவின் தலைமை ஆலோசகரை நேரில் சந்தித்தார்.

 

“உங்கள் ஆட்கள் தான்… அதாவது கோர்த்தாவின் ஆட்கள்தான் டெல்லியில் நடந்த கொலைக்கு காரணமா?” என்று நேரடியாகக் கேட்டார்.

 

அவர் அப்படிக் கேட்டதும் லேசாக சிரித்த கோர்த்தாவின் மூத்த ஆலோசகர், “அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும்” என்றார்.

 

அதிகாரியின் முகம் கறுத்தது. “நாங்க உங்களைத்தான் சந்தேகப்படறோம்” என்றார்.

 

“கொலை நடந்தது உங்க ஊர்ல… கொலை செய்தது வெளிநாட்டுப் பொண்ணுங்க… எங்களை சந்தேகப்படுகிறீர்களா!!! ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தார். பிறகு, “சரி… இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றார்.

 

“உங்க ஆளுங்க யாரையாவது சரண்டர் ஆக சொல்லுங்க”

 

“எப்படி? வெளிநாட்டுப் பொண்ணுங்க மாதிரி வேஷம் போட்டுக்கொண்டா?” – நக்கலாகக் கேட்டார்.

 

கொலை செய்தவர்கள் அனைவரும் வெளிநாட்டுப் பெண்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அப்படி இருக்கும் போது இவர்களுடைய ஆட்கள் சரணடைந்து என்ன பிரயோஜனம்?

 

அதோடு, கோர்த்தாவிடம் இல்லாத குடூஸா… அல்லது கிடான்ஸா… அப்படி இருந்தும் இவ்வளவு செலவு செய்து வெளிநாட்டிலிருந்து கிடான்ஸை இறக்குமதி செய்தது எதற்கு? இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து சரண்டர் ஆகுவதற்காகவா?

 

கோர்த்தாவை பொறுத்தவரை சுரங்கத் தொழில் முக்கியம். டெல்லியில் வெளிப்படையாக ஆப்பரேஷன் செய்து மத்திய அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கி அவர்களோடு உரசிப்பார்க்க கோர்த்தாவின் தலைமை விரும்பவில்லை. அதே நேரம் ராகேஷ் சுக்லா மீதே கைவைக்க துணிந்தவர்களை பழிதீர்க்காமலும் விட முடியாது. அதனால் தான் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை ஆள் வைத்து செய்தார்கள். உள்நாட்டு ஆட்களாக இருந்தால் என்றைக்கு இருந்தாலும் தலைவலி என்று எண்ணி வெளியிலிருந்து ஹயர் செய்து காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு ஹாயாக இருக்கிறார்கள். இது எதுவும் புரியாமல் நேரடியாக வந்து பேரம் பேசும் அந்த அதிகாரியின் புத்திசாலித்தனத்தை நினைத்து அவருக்கு சிரிப்பு வந்ததில் வியப்பேதும் இல்லை.

 

அவருடைய சிரிப்பையும் நக்கலையும் நிதானமாக உள்வாங்கி கொண்ட அந்த அதிகாரி இவர்களை ஒழித்துக்கட்டியே தீர வேண்டும் என்கிற சங்கல்பத்தை தனக்குள் எடுத்துக் கொண்டார்.

 

அதன் பிறகு சில நாட்களில் எப்படியோ லிங்கைப் பிடித்து பகவானை சந்தித்து, கோர்த்தாவையும் அர்ஜுனையும் மண்ணில் சாய்க்க முறையான வியூகம் ஒன்றை வகுத்துக் கொடுத்தார்.

 

Share Your Comments Here
Comments are closed here.