Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 41

அத்தியாயம் – 41

அர்ஜுன் ஹோத்ராவின் கார் மிருதுளா படிக்கும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது. நேற்று இருந்த அதே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் காரிலிருந்து கீழே இறங்கினாள்.

 

“எனக்கு என்னவோ போல இருக்கு அர்ஜுன்… கிளாஸுக்கு போகவே பயமா இருக்கு”

 

“நா வேணுன்னா உள்ள வந்து பிரின்சிபால மீட் பண்ணி பேசவா?”

 

“வேண்டாம் வேண்டாம்…. நானே பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க..” – அவனிடம் விடைபெற்று வகுப்பறைக்குச் சென்றாள்.

 

பாடம் எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளரின் முகம் இவளை பார்த்ததும் கடுமையாக மாறியது.

 

“ஒரு மாசமா எங்க போயிருந்த? நீ நினைக்கும் போது வர்றதுக்கும் போறதுக்கும் இது என்ன சத்திரமா இல்ல சந்தைக்கடையா?” என்று எறிந்துவிழுந்தார்.

 

அவமானத்தில் குன்றிப் போய் தலைகவிழ்ந்து நின்றவள் மீது மேலும் பல வசைமொழிகளை அள்ளி வீசிவிட்டு,

 

“பிரேக்ல ப்ரின்சிபால போயி மீட் பண்ணு… நாளைக்கு பேரண்ட்ஸ்கிட்டேருந்து லெட்டர் வாங்கிட்டு வரணும்…” என்று கடிந்து கூறி உள்ளே அனுமதித்தார்.

 

குனிந்த தலை நிமிராமல் உள்ளே வந்த மிருதுளா ஏதோ உள்ளுணர்வு உந்த நின்று திரும்பிப் பார்த்தாள். பகீரென்றது… அங்கே இடுங்கிய கண்களுடன் விரிவுரையாளரை முறைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

 

அவள் நின்று திரும்பிப் பார்த்ததால் விரிவுரையாளரின் பார்வையும் வாயில் பக்கம் சென்றது. அங்கே நிற்பவனைக் கண்டதும் அவர் முகம் மிரண்டதை மிருதுளா கவனிக்கவில்லை. அவளுடைய பார்வைதான் அர்ஜுனிடமே இருந்ததே…

 

‘இவன் எதற்காக இங்கே வந்தான்! பிரபஸர் திட்டியதை கவனித்திருப்பானா!’ – பட்ட அவமானம் இருமடங்காகத் தோன்றியது. உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு விரிவுரையாளரின் பக்கம் திரும்பி, “எக்ஸ்கியூஸ் மீ சார்…” என்றாள்.

 

“ஆங்… எஸ்… கோ-அஹெட்…” – தடுமாற்றத்துடன் வந்து விழுந்தன அவர் வார்த்தைகள்.

 

மிருதுளா அர்ஜுனிடம் நெருங்கி, “எ..ன்..ன?” என்றாள்.

 

“உன்னோட போன்” – அவளிடம் அலைபேசியை நீட்டினான்.

 

தேவையே இல்லாத இந்த அலைபேசி அவளுக்கு கூடுதல் சுமையாகவே தோன்றியது. இதை வைத்துக்கொண்டு யாரிடம் பேசமுடிகிறது… – விவாதம் செய்ய நேரமில்லாமல் அவன் கொடுத்த அலைபேசியை வாங்கி கொண்டு, “தேங்க்ஸ்… கிளம்புங்க” என்றாள்.

 

அவனுடைய பார்வை மீண்டும் ஒருமுறை அந்த பிரபஸரிடம் சென்று மீண்டது.

 

அர்ஜுன் கிளம்பியதும், “யார் அது?” என்று அவர் மீண்டும் மிருதுளாவிடம் பாய்ந்தார்.

 

“ஃபேமிலி ஃபிரண்ட் சார்…”

“ஃபேமிலி ஃபிரண்டா!!!” – பார்வையால் அவளை துளைத்தவர், “உன்னோட சேர்க்கை ஒன்னும் சரியில்ல… படிக்கிற வயசுல படிப்பை மட்டும் பாரு… வீணா போயிடாத” என்றார் எச்சரிக்கும் விதமாக.

 

கல்லூரி முடிந்து மிருதுளா வெளியே வரும் பொழுது கார் பார்க்கிங்கிலேயே அர்ஜுன் காத்திருந்தான். ஆச்சரியத்துடன் துள்ளிக் கொண்டு அவனிடம் ஓடியவள், “எப்போ வந்தீங்க?” என்றாள்.

 

அவளை வியப்புடன் பார்த்தவன், “உன்கூடத்தானே வந்தேன்” என்றான்.

 

“வாட்!!!” – அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

 

“என்ன?” – எதற்கு இத்தனை அதிர்ச்சி என்பது போல் குழப்பத்துடன் அவளை நோக்கினான் அர்ஜுன்.

 

“காலையிலிருந்து இங்கதான் இருக்கீங்களா!!!”

 

“ஆமாம்… ஏன்?”

 

“அதை நான் கேட்கணும். எதுக்கு இங்கேயே இருக்கீங்க?”

 

“குழந்தை மாதிரி கேள்வி கேட்காத… உன்னை அட்டாக் பண்ண ரெண்டு தரம் முயற்சி நடந்திருக்கு… மூணாவது தரம் மேல போயிடுவ. உன்ன டார்கெட் பண்ணியிருக்க குடூஸ் உன் காலேஜ்லேயே கூட இருக்கலாம்” என்றான் தீவிரமாக.

 

“இங்கேயா! என்னோட காலேஜ்லேயா!!!” – அகலவிரிந்த விழிகளுடன் அவனை இமைக்காமல் பார்த்தாள். அவன் கூறுவதை அவளால் நம்பவே முடியவில்லை.

 

ஆந்திரா மண்ணில் காலடி வைத்ததுமே பாதுகாப்பை உணர்ந்தவள், ஒரிசாவிலிருந்து ஆந்திரா வரை ஆபத்து தன்னை பின்தொடர்ந்து வர கூடும் என்று எண்ணவில்லை.

 

அவன் சற்று மிகைப்படுத்திக் கூறுகிறானோ என்று தோன்றினாலும், இரண்டு முறை சாவின் விளிம்பை தொட்டு மீண்டவளுக்கு முற்றிலும் அவன் கூறுவதை புறம்தள்ளவும் முடியவில்லை. கொஞ்சம் சந்தேகமும்… கொஞ்சம் பயமும் கலந்த கலவையான உணர்வு அடிவயிற்றைல் என்னவோ செய்தது.

 

சிறு நடுக்கத்துடன், “நிஜமாவே உங்களுக்கு அப்படி தோணுதா அர்ஜுன்?” என்றாள் அப்பாவியாக.

 

அவளை கனிவோடு பார்த்தவன், “உனக்கு அப்படித் தோணலையா?” என்றான்.

 

“இதுவரைக்கும் தோணல… ஆனா இப்போ கொஞ்சம் பயமாத்தான் இருக்கு” – என்றபடி பார்வையை சுற்றும் முற்றும் சுழலவிட்டாள்.

 

“இந்த பயம் நல்லதுதான். எச்சரிக்கையோடு இருப்ப…”

 

“இப்போ என்ன பண்ணறது? நீங்க டெய்லி இப்படி வந்து எனக்காக இங்க நிக்க முடியாதே!”

 

“ஏன் முடியாது?”

 

“ஏன் முடியாதா! இது காலேஜ்… இங்க எப்படி? எல்லாரும் என்ன நினைப்பாங்க?”

 

“சரி காலேஜ் வேண்டாம்… வீட்லேருந்து படி…”

 

“அங்க மட்டும் அட்டாக் பண்ணமாட்டாங்களா?”

 

“என்னை மீறி எவன் உன் மேல கைவைப்பான்?”

 

மீண்டும் விழிகள் விரிய ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள் மிருதுளா.

 

“வாட்ஸ் யுவர் ப்ராப்லம்? ஏன் என்ன சொன்னாலும் இப்படி முழிக்கிற?”

 

“எங்க வீட்ல நீங்க எப்படி?”

 

“வாட்!!!” – புருவம் சுருக்கியவனுக்கு உடனே புரிந்துவிட்டது. முகம் கடுகடுக்க, “இங்க வந்த முதல்நாளே உன்னோட வீடு எதுன்னு உன்கிட்ட க்ளீயரா சொல்லிட்டேன்” என்றான் அழுத்தமாக.

 

“ஆனா அது உங்க வீடு”

 

“கார்ல ஏறு…”

 

“அங்க எப்படி நான்…”

 

“கெட் இன்…”

 

“ஆ…வ்.. அர்ஜுன்… என்… என்ன இது…!” – அழுத்தமாக அவள் கையைப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி கதவை அடித்து மூடியவனின் பார்வை சென்ற திசையில் வெறித்த கண்களுடன் அவர்களையே பார்த்தபடி அந்த பிரபஸர் நின்றுக் கொண்டிருந்தார்.

 

“ஏன் இப்படி பண்ணுனீங்க?” – அவனுடைய கார் பிரதான சாலையில் ஏறி டிராஃபிக்கில் கலந்துவிட்டது.

 

“நீ ஏன் தேவையில்லாம ஆர்கிவ் பண்ணற?”

 

“உங்க வீட்ல நான் எப்படி ஸ்டே பண்ண முடியும்?”

 

“மகல்பாட்னால எங்க இருந்த?”

 

“அது வேற. அங்க எனக்கு வேற சாய்ஸ் இல்ல. ஒரு கெஸ்ட் மாதிரி தங்கியிருந்தேன். ஆனா இங்க அப்படி இல்ல. என்னோட அம்மா எனக்காக செட் பண்ணிக்கொடுத்த வீடு இருக்கு. அதைவிட்டுட்டு உங்க கூட வந்து தங்கினா, நாளைக்கு என்னோட அம்மாவே என்ன சொல்லுவாங்க?”

 

“அவங்க சொல்றதை கேட்கறதுக்கு நீ முதல்ல உயிரோட இருக்கணும்” – அவன் கூறுவதும் நியாயம் தான். மிருதுளா சிந்தித்தாள்.

 

“அர்ஜுன்… நீங்க சொல்றது சரிதான். என்னோட உயிருக்கு ஆபத்து இருக்கு. அது எனக்கு நல்லா புரியாது. அதே சமயம் என்னால உங்க வீட்டுலேயும் தங்க முடியாது. இதுக்கு வேற ஏதாவது சொலியூஷன் இருக்கா?”

 

“இதுக்கு ஒரே ஒரு சொலியூஷன் தான்… நீ என்னோட… என் வீட்ல… என் பாதுகாப்புல தான் இருக்கணும். டாப்பிக் க்ளோஸ்ட்… நோமோர் ஆர்க்யூமென்ட்ஸ்” – அந்த பேச்சுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

 

*******************

 

புதுடெல்லிக்கு வெளியே மக்கள் புழக்கம் குறைவாக உள்ள புறநகர் காபி ஷாப் ஒன்றில் தனிப்படை அதிகாரி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரில் தீவிர முகபாவத்துடன் பகவான் அமர்ந்திருந்தார்.

 

தனிப்படை அதிகாரி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

 

“இங்க – டெல்லியில சமீபத்தில சுட்டுக்கொல்லப்பட்ட ஆறு பேரும் நாயக் குழுவை சேர்ந்தவங்கன்னு எங்களுக்கு – அதாவது டெல்லி போலிஸுக்கு தெரியும். அவங்களை கொன்னது கோர்த்தா தான்னு நாங்க சந்தேகப்படறோம்”

 

“எஸ்… நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம்” என்றார் பகவான்.

 

அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மோதலை பெரிதாக்க விரும்பினார் அந்த அதிகாரி. எனவே,

 

“அவங்களோட டார்கெட் இந்த ஆறு பேரும் மட்டும் இல்ல… நீங்க எல்லாருமேதான். ஆபரேஷன் கன்டினியூ ஆகும்ங்கறது எங்களோட இன்டெலிஜென்ஸ் இன்ஃபர்மேஷன்…” என்று பொய் தகவலை உண்மை போலவே கூறினார்.

 

பகவானின் முகத்தில் சின்ன அதிர்வு தோன்றி மறைந்தது. சாதாரண மனிதனாக இருந்திருந்தால் கண்டுபிடித்திருக்க முடியாது… ஆனால் போலீஸ் கண்கள் அந்த அரை நொடி பொழுதில் தோன்றி மறைந்த மாற்றத்தை துல்லியமாக கண்டுக்கொண்டது. வெற்றி வெகு தொலைவில் இல்லை என்கிற எண்ணத்துடன் மேலும் தொடர்ந்தார்.

 

“டெல்லியில இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கறதை நாங்க விரும்பல. அதனாலதான் உங்களை எச்சரிக்க நினைத்தோம்”

 

“தேங்க்ஸ்…”

 

“இதை எப்படி ஹாண்டில் பண்ண போறீங்க?”

 

“நாங்க சாதாரணமானவங்க… பெருசா என்ன செஞ்சுட முடியும்? எங்களுடைய ஆட்களை எச்சரித்து கவனமாக இருக்கச் சொல்லுவோம்” என்றார்.

 

பதுங்கியிருக்கும் புலியை சாதாரணமாக எண்ணிவிட முடியாது என்பதை நன்கு அறிந்த அதிகாரி, “வேற எதுவும் செய்யப் போறதில்லையா?” என்றார்.

 

“வேறன்னா??? எதை சொல்லறீங்க?” – குழப்பமாக கேட்டார்.

 

தனிப்படை அதிகாரி சற்று நேரம் மெளனமாக அமர்ந்திருந்துவிட்டு, “கோர்த்தா ஆளுங்க உங்களை ஏதாவது செய்றதுக்கு முன்னாடி, நீங்க முந்திக்கிற உத்தேசம் ஏதாவது இருக்கா?” என்றார்.

 

“அதெப்படி முடியும்? ஒருமுறை செஞ்ச முயற்சியே தோல்வியில முடிஞ்சிடிச்சு. இப்போ திரும்ப ட்ரை பண்ணறதுன்னா ரிஸ்க் அதிகம். அதோடு ஒரிஸாவுக்குள்ள நாங்க நுழையிறது இயலாத காரியம்” என்றார்.

 

அவர் கூறுவது உண்மைதான். அவர்கள் விழிப்போடு இருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் மீது கைவைக்க நினைப்பது, தானாக சென்று முதலையின் வாய்க்குள் தலையை கொடுப்பது போன்றது.

 

ஆனால் அதிகாரி வேறுவிதமாக சிந்தித்தார்.

 

“உங்க ஆளுங்க உள்ள போனாதானே பிரச்சனை?”

 

“என்ன சொல்கிறீர்கள்?”

 

“நீங்க யாரும் ஒரிஸாவுக்குள்ள நுழையாமலே காரியத்த முடிச்சிடுங்க”

 

“அதெப்படி முடியும்?” – பகவான் இப்படி கேட்டதும் அதிகாரியின் முகத்தில் புன்னகை தோன்றியது. ‘சில நேரங்களில் புலிகளுக்கு கூட வேட்டையாட சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது’ என்பது போன்ற புன்னகை.

 

“இப்போ வரிசையா உங்க ஆளுங்கள போட்டுத்தள்ளினது கோர்த்தான்னு உங்களுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும். ஆனா நிரூபிக்க முடியாது… ஏன்னா உங்க ஆளுங்கள டார்கெட் பண்ணினது பிரிட்டன் பொண்ணுங்க. அதே பார்முலாவை நீங்களும் பயன்படுத்தலாமே” என்றார்.

 

பகவான் சிறிது நேரம் யோசித்தார். – தங்களுடைய தாக்குதலுக்கு நாயக் குழுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கோர்த்தா ஊகித்திருக்கும். காரணம் பகவான் எப்படி சிந்திப்பார் என்பதை கோர்த்தா நன்கு அறியும். இந்த நேரத்திலாவர் பதுங்குவார் என்பதுதான் அவர்களுடைய ஊகமாக இருக்கும். இந்த நேரத்தில் பாய்ந்தால்…? ஒரிஸாவிற்குள்ளேயே பாய்ந்தால்? அவர்களுடைய பார்முலாவிலேயே பாய்ந்தால்? – இதை நிச்சயம் அவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். வெளிநாட்டுக்காரர்களின் நடமாட்டம் ஒரிஸாவிற்குள் அதிகம்… அவர்களோடு கலந்து டார்கெட்டை சாய்ப்பது வெள்ளைத்தோல் வாடகை கொலைகாரகளுக்கு மிகவும் எளிது. – நல்ல யோசனையென்றே தோன்றியது.

 

நம்பிக்கையுடன் அதிகாரியை பார்த்தார்.

 

“இந்தமாதிரி காரியங்களை செய்யிற ஆளுங்க கூட உங்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கா?”

 

“யோசிக்கணும்…” – சிந்தனையில் அவர் புருவம் சுருங்கியது.

 

அவர் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், “இவரை பிடிங்க… காரியத்தை கச்சிதமா முடிச்சுக்கொடுப்பர்” என்று அதிகாரி ஒரு ஆளை கைகாட்டிவிட்டார்.

 

அவர் கூறிய பெயரை கேட்டதும் வியப்புடன், “அவரா!!!” என்றார் பகவான்.

 

Share Your Comments Here 

 
Comments are closed here.