Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு-60

அத்தியாயம் – 60


ஓநாய் மற்றும் அவருடைய கிடான்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுது தீயாக பரவிக் கொண்டிருந்தது. இதுவரை அவர் யார் என்கிற விபரம் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்பட்டுவிட்டால் பல விஷயங்கள் பொதுமேடைகளில் விவாதத்திற்குள்ளாகும். கோர்த்தாவை உள்ளே கொண்டுவர முடியாது என்றாலும், டேவிட்டை தனி மனிதனாகக் காட்டி பலிகடாவாக்கும் அபாயம் ஏற்படலாம். அதற்கு முன் அவன் இந்த மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும். விசாரணையோ, கைதோ வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற சில நாட்கள் பிடிக்கும். அதற்குள் பிரச்னையை மடைமாற்றிவிடலாம். இதைத்தான் மூடிய கதவுக்கு பின்னால் அர்ஜுனும் டேவிட்டும் விவாதித்து முடிவெடுத்தார்கள்.

விவாதம் அதோடு முடியவில்லை. டேவிட் மிருதுளாவைப் பற்றி பேச்செடுத்தான்.

“வாட் அபௌட் மிருதுளா?”

சட்டென்று அர்ஜுனின் முகம் மாறியது. ஏற்கனவே தன்னுடைய அனுமதி இல்லாமல் அவன் மிருதுளாவை வெளியே அழைத்துச் சென்ற கோபத்தில் இருந்தவன் சூழ்நிலை மோசமாக இருக்கும் ஒரே காரணத்தால், கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு காரியத்தில் கவனத்தை குவித்திருந்தான். ஆனால் இப்போது அவனுடைய பொறுமையின் எல்லையை டேவிட் உரசிப்பார்க்கவும், “நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்று வெடுவெடுத்தான்.

“அர்ஜுன்… ஸ்பார்ட்ல நாங்க ரெண்டு பேருமே இருந்தோம். எனக்கு இருக்க ரிஸ்க் மிருதுளாவுக்கும் இருக்கு”

“ஓ ரியலி!!! அவளோட ரிஸ்க் பத்தி இப்பதான் தெரியுதா உனக்கு?”

“இல்ல, நா எதிர்பார்க்கல” – சங்கடத்துடன் சமாளித்தான்.

“எக்ஸ்பெக்ட் தி வொர்ஸ்ட். கோர்த்தாவோட முதல் பாடம். மறந்துடிச்சு இல்ல?” – பற்களை நறநறத்தான். டேவிட்டின் முகம் கன்றிப்போனது.

“ஷி வாஸ் போர்ட்”

“சோ? நீ ஹிரோவா ஆயிட்ட? ஊர்சுத்த கூட்டிட்டு கிளம்பிட்ட?”

“காட்! ஐம் சா…ரி” – வெறுப்புடன் தலையை அழுந்தக் கோதினான் டேவிட்.

“டிராஷ் இட்” – அதைவிட அதிக வெறுப்போடு ‘குப்பையில போடு’ என்கிற வார்த்தைகளை உமிழ்ந்தான் அர்ஜுன்.

“மேன்! ஐ வாஸ் ஜஸ்ட் கன்ஸர்ண்ட். ஏன் இவ்வளவு கோவப்படற?”

‘கன்ஸர்ண்ட்’ என்கிற வார்த்தை அர்ஜுனை மிகவும் ஆத்திரப்படுத்தியது. கைமுஷ்டி இறுக விருட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தான்.

பற்கள் நறநறக்க வேகமூச்சை வெளியேற்றியபடி, “ஒன் மோர் வோர்ட்… ஐ’ல் கட் யுவர் டங்” என்றான். சிவந்துவிட்ட கண்களில் தெரிந்தது அவன் கோபத்தின் அளவு.

டேவிட் நண்பனை இமைக்காமல் பார்த்தான். மிருதுளாவின் மீதான நம்முடைய அக்கறையைக் கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.

ஒருபக்கம் வலித்தது. இன்னொரு பக்கம் சற்று நிம்மதியாக இருந்தது. பாதுகாப்பான இடத்தில் அவள் இருக்கிறாள் என்பது போன்றதொரு நிம்மதி. மெல்லிய புன்னகையுடன் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுனின் தசைகளில் இறுக்கம் தளரவில்லை. பயமும் கோபமும் கலந்த ஒரு கலவையான உணர்வு அவனை ஆக்கிரமித்திருந்தது. பொறாமை என்று அதற்கு பெயர்சூட்ட அவன் விரும்பவில்லை. ஆளுமையோ… ஆதிக்கமோ… ஏதோ ஒன்று. அவனைத் தாண்டி அவள் சென்றிருக்கக் கூடாது. அதுவும் டேவிட்டோடு சென்றிருக்கவே கூடாது. – உள்ளம் புழுங்கியது.

வெகுவாய் சிரமப்பட்டு அவன் உள்ளே ஒதுக்கி வைத்திருந்த அந்த எதிர்மறை உணர்வை சற்றும் யோசிக்காமல் குத்திக் கிளறிவிட்டு போய்விட்டான் டேவிட். குறையா கோபத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் அர்ஜுன். உச்சந்தலையில் கொட்டும் குளிர்ந்த நீர் தரையை தொடும் போது சூடாகியிருந்தது. அந்த அளவுக்கு கொதித்துப் போயிருந்தான்.

ஒருபக்கம் ராகேஷ் சுக்லா கொடுக்கும் அழுத்தம்… இன்னொரு பக்கம் ப்ளூ ஸ்டாரின் அறிவுறுத்தல்கள்… இன்னொரு பக்கம் பகவான்… இப்போது இந்த ஓநாயின் மரணம்… நான்கு திசைகளிலும் நான்கு பிரச்சனைகள் அவனை இழுத்துக் கொண்டிருக்கிறது. நான்குமே மிருதுளாவை அவனிடமிருந்து பறிக்கப்பார்க்கிறது. இப்போது டேவிட்டும் அவர்களில் ஒருவனாகத் தோன்றினான். – சட்டென்று ஷவரை அணைத்துவிட்டு உடைமாட்டிக் கொண்டு வெளியே வந்தான். ஈரம் சொட்டும் தலையை துவட்டக் கூட தோன்றாமல் சமையலறை பக்கம் வந்தான்.

கையேடு கை கோர்த்து கண்ணோடு கண் கலந்து நெருக்கமாக நின்ற இருவரையும் கண்டான். தீப்பிடித்துக் கொண்டது போல் நெஞ்சுக்குள் திகுதிகுவென்று எரிந்தது. இணைந்திருக்கும் அவர்களுடைய கரங்களில் நிலைத்திருந்த அவன் பார்வை மெல்ல உயர்ந்து மிருதுளாவின் கண்களோடு மோதிவிட்டு சில நொடிகளுக்குப் பிறகு டேவிட்டின் பக்கம் திரும்பியது. அவன் நெஞ்சை பிளந்துவிடும் கொலைவெறி தெரிந்தது அந்த கண்களில்.

அவனுடைய அக்கினிப் பார்வையில் இருவரும் விலகினார்கள். ஏதோ தவறு செய்துவிட்டது போல் சங்கடப்பட்டு அவன் பார்வையை தவிர்த்தார்கள்.

அழுத்தமான காலடிகளுடன் அவர்களைக் கடந்து உள்ளே சென்று பிரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தொண்டையில் சரிதான் அர்ஜுன். மடமடவென்று அரை பாட்டில் காலி ஆனதே தவிர உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருக்கும் தீ அடங்கவில்லை. பாட்டிலை மூடி பிரிட்ஜில் போட்டுவிட்டு டேவிட்டிடம் திரும்பினான்.

“கிளம்பு… நாளைக்கே நீ மகல்பாட்னால இருக்கணும்” – மறுத்துப் பேச முடியாத குரல்.

தலையை ஆமோதிப்பாக அசைத்துவிட்டு உடனே கிளம்பினான் டேவிட்.

சமைத்து வைத்த உணவை சாப்பிடக் கூட விடாமல் கழுத்தைப்பிடித்து தள்ளாத குறையாக அவனை அனுப்பிவிட்டான் என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் மிருதுளாவிற்கு புரிந்தது.

“ஏன் இப்படி பண்றிங்க?” – ஆற்றாமையுடன் கேட்டாள். ஆவேசத்துடன் அவள் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    eshwari c says:

    Please upload 64 episode

error: Content is protected !!