Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு-61

அத்தியாயம் – 61

காட்டுத்தீயின் கோரம் தெரிந்தது அவன் முகத்தில். மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய மனநிலை விளிம்பிலிருப்பதை உணர்ந்துகொண்டாள். விலகி நில் என்று மனம் எச்சரித்தது. ஆனாலும் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள். பளபளக்கும் அவன் கண்களை படிக்க முயன்றாள். கோபத்தையும் வெறுப்பையும் தவிர வேறொன்றும் அங்கே தென்படவில்லை.

“எதுக்கு அர்ஜுன் இவ்வளவு கோபம்? ஃபிரண்ட்கிட்ட கூட ஏன் இவ்வளவு வெறுப்பு?” – கேட்டுவிட்டாள். கொதிக்கப் போகிறான் என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனால் அவனுடைய பார்வை மாறியது. ஏளனப்பார்வை….

“ரொம்ப அக்கறையோ!” – கோணல் புன்னகையுடன் அவளை கூர்ந்து பார்த்தான். மிருதுளாவின் கண்கள் விரிந்தன. அவனுடைய மனவோட்டம் தெளிவாக புரிந்தது அவளுக்கு. “டேவிட் எனக்கு நல்ல ஃபிரண்ட்” என்றாள் விளக்கம் கொடுப்பது போல.

“ஃபிரண்டா!! ஹா! இது நண்பர்களுக்கான இடம் இல்ல மிருதுளா. இங்க நட்புக்கும் துரோகத்திற்குமான இடைவெளி ரொம்ப கம்மி” என்றான் தீவிரமாக. குரலிலும் முகத்திலும் கோபம் மீண்டிருந்தது.

மிருதுளா அவனை விழியாகற்றாமல் பார்த்தாள். “ஏன் இப்படி பேசுறீங்க?”

“உண்மையை பேசுறேன்”

அவள் மறுப்பாக தலையசைத்தாள். “இல்ல அர்ஜுன். இவ்வளவு நெகட்டிவிட்டி வேண்டாம். இது நம்மள அழிச்சிடும்” – பயத்துடன் கூறினாள். அப்படி கூறும் போது தன்னை அவனோடு இயல்பாக இணைத்துக் கொண்டாள். நீரில் விழுந்த உப்பு கல் போல் அவனுடைய கோபம் மெல்ல கரைய துவங்கியது. அதை காட்டிக்கொள்ள விரும்பாமல் அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனித்தான். அவன் கையைப் பிடித்துத் தடுத்து, “ஐ நீட் டு டாக்” என்றாள் மிருதுளா.

அவள் முகத்தை பார்த்தபடியே மெளனமாக நின்றான் அர்ஜுன். தான் பேசுவதற்காக காத்திருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்டவள், “இன்னைக்கு வந்தவங்க யாரு?” என்றாள். அர்ஜுன் கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான்.

அவன் பதில் சொல்ல மாட்டானோ என்று அஞ்சியவள், “கண்ண கட்டிவிட்ட மாதிரி இருக்கு அர்ஜுன். சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. இருட்டுல மாட்டிகிட்ட மாதிரி பீல் பண்றேன். ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்” என்று வாய்விட்டுக் கெஞ்சினாள்.

ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன், “உன்னோட பேரன்ட்ஸ் ஹயர் பண்ணின ஹிட்மேன் அண்ட் ஹிஸ் கிடான்ஸ்” என்றான் நிதானமாக.

பகீரென்றது அவளுக்கு. முகம் வெளிறிப் போய்விட்டது. அவன் சொல்வதை நம்ப பிடிக்கவில்லை. ஆனால் மூடத்தனமாக கண்களை மூடிக்கொள்ளவும் விருப்பமில்லை. அவளுடைய பெற்றோருக்கு கோர்த்தாவுடன் ஏதோ பெரிய பிரச்சனை இருப்பது அவர்களுடைய நடவடிக்கைகளில் இருந்தே தெளிவாக தெரிகிறது. அதுமட்டும் அல்ல… அவளுமே இப்போது அர்ஜுனின் பிடியில் இருக்கிறாள். மகளை காப்பாற்றுவதற்கு அவர்கள் ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம் தான். ஆனால் முடிவு? நான்கு உயிர்கள் பலியானதுதான் மிச்சம். யாரை குற்றம் சொல்வது? அவரவருக்கு அவரவர் நியாயம்…

“பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை பெருசாகிகிட்டே இருக்கு அர்ஜுன். தேவையில்லாம நாலு பேர் செத்துட்டாங்க” – மனம் வருந்தினாள்.

கண்கள் இடுங்க அவளை பார்த்தான் அர்ஜுன். “தேவையில்லாம செத்துட்டாங்களா! அவங்களோட டார்கெட், கோர்த்தா லீடர்ஸ். இன்க்ளூடிங் மீ அண்ட் டேவிட். அவங்க சாகலேன்னா நாங்க ரெண்டுபேரும் இந்நேரம் மார்ச்சுவரில கிடந்திருப்போம்” – கடுகடுத்தான்.

‘இதென்ன கொடூரம்! அவளுடைய பெற்றோர் கொலை செய்ய ஆள் அனுப்பினார்களா! அதுவும் யாரை!’ – மிருதுளா மிரண்டு போனாள். உடல் நடுங்கியது. “இருக்காது அர்ஜுன்” – உதடு துடிக்க முணுமுணுத்தாள்.

அர்ஜுன் அவளை வெறித்துப் பார்த்தான். ஆர்த்தியின் கடைசி நேர நினைவுகள் நெஞ்சை ஆக்கிரமித்தன. ‘கர்பிணி பெண்ணை விஷம் வைத்து கொன்றவர்கள் இதை செய்ய மாட்டார்களா?’ – அவன் ரெத்தம் கொதித்தது. முகம் ரௌத்திரத்தில் சிவந்தது. தலையை குறுக்காக அசைத்தான்.

“தே காண்ட் எஸ்கேப்… விடமாட்டேன்” – உள்ளடங்கிய குரலில் முணுமுணுத்தான். மிருதுளாவின் அடிவயிறு தடதடத்தது. அர்ஜுனைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் கண் எதிரிலேயே எத்தனையோ சம்பவங்கள்! அவளுடைய பெற்றோருக்கும் அதே நிலை வர எவ்வளவு நேரம் ஆகும்! விதிர்விதிர்த்துப்போனாள். “அவசரப்படாதீங்க அர்ஜுன். ப்ளீஸ்… எனக்காக… நம்ம ரிலேஷன்ஷிப்காக.” – கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

“இந்த அழுகை, வார்த்தை ஜாலமெல்லாம் உண்மையாவே என்னை அஃபெக்ட் பண்ணும்னு நினைக்கிறியா?” – நிதானமாகக் கேட்டான். அவன் பார்வை அவளை தள்ளி நிறுத்தியது.

மிருதுளா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவள் மனம் தவித்தது. அவன் கண்களில் காதலை… அன்பை… சின்ன ஒட்டுதலையாவது கண்டுவிடலாம் என்று பரிதவித்தாள்.

பலனில்லை. உணர்வுகளற்று வறண்டு போன பார்வையுடன், “ஒரு விஷயத்தை எப்பவும் மைண்ட்ல வச்சுக்கோ மிருதுளா. நீ என்னோட வீக்கனஸ் இல்ல. என்கிட்ட உன்னால எதையும் சாதிக்க முடியாது” என்றான் தெளிவாக.

நொருங்கி போனாள் மிருதுளா. “வாட் யு மீன்?” – வார்த்தையே வரவில்லை. தொண்டையை அடைத்தது.

“ஐ மீன் வாட் ஐ செட்” – அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.

முகத்தில் கலவரம்… கண்களில் வலி… “யு லவ் மீ ரைட்?” – தவிப்புடன் கேட்டாள்.

“ஐ நெவர் செட்” – வெகு குரூரமான வார்த்தையை சற்றும் தயக்கமில்லாமல் அவள் மீது வீசினான்.

உயிர்மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு மறுப்பாக தலையசைத்தாள் மிருதுளா. அவன் பேச்சை நம்ப மறுத்தது மனம். பொய் என்று புறம்தள்ள துடித்தது. “நோ… ப்ளீஸ் டோன்ட் சே தட்” – கண்ணீர் பெருகியது. குரலோடு சேர்ந்து உடலும் நடுங்கியது.

அவள் படும் துன்பத்தை விழியாகற்றாமல் பார்த்துக்கொண்டு, பட்டமரம் போல் நின்றவனிடம் சிறிதும் இலக்கமில்லை. “திரும்பவும் சொல்றேன். நா உனக்கு கமிட்மெண்ட் கொடுக்கவே இல்ல. பொய்யில வாழறதுதான் உன் விருப்பம்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. கேரி ஆன்” – அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் சொன்னதை முழுமையாக உள்வாங்கி புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு. எதிர்வினையாற்றும் திறன்கூட அற்றுப் போனவளாக சிலையாக சமைந்து நின்றவள் சில நிமிடங்களுக்குப் பிறகே தன்னிலைக்கு மீண்டாள். உடனே பதறித்துடித்துக் கொண்டு அவனை பின்தொடர்ந்து ஓடினாள்.

“அப்புறம் எதுக்கு என்னை காப்பாத்துனீங்க? த்ரீ டைம்ஸ்… உங்க உயிரை பணயம் வச்சு… ஏன்? எதுக்கு கூடவே இருக்கணும்னு சொன்னீங்க?” – ஆத்திரத்துடன் குரலை உயர்த்தினாள்.

நின்று திரும்பிப் பார்த்தான் அர்ஜுன். கண்களில் கோபம் தெறித்தது., “துருப்புச் சீட்டு… தூண்டில் புழு… எப்படி வேணா வச்சுக்கோ. யு ஆர் ஜஸ்ட் மை வெப்பன். புரியுதா?” – பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை உதிர்த்தான்.

“அர்ஜுன் ப்ளீஸ்… டோன்ட் டூ திஸ் டு மீ” – தவிப்பும் கண்ணீருமாக அவனிடம் மிருதுளா நெருங்க அடுத்த நொடி பயங்கர சத்தத்துடன் அருகிலிருந்த மேஜையிலிருந்து பொருட்களெல்லாம் தரையில் சிதற அவன் கைத்துப்பாக்கி அவள் நெற்றி பொட்டில் அழுந்த பதிந்திருந்தது.

“ஐ ஹேட் திஸ் டிராமா. ஸ்டாப் இரிடேடிங் மீ. சு..ம்..மா கண்ணுல தண்ணிய வச்சுக்கிட்டு புலம்பிகிட்டு இருந்த… இறக்கிடுவேன்” – வேட்டை மிருகம் போல் சீரியவன், அவளை கீழே தள்ளாத குறையாக உதறிவிட்டு விலகிச் சென்றான்.

அவனுடைய மூர்க்கத்தனத்தில் உடைந்து போனாள் மிருதுளா. நெஞ்சுக்குழி கனத்துப்போனது. ஆத்திரம் தொண்டையை அடைத்தது. வெடித்து அழுதாள். கண்ணீர் வற்றும் வரை அழுது தீர்த்தாள். உச்சத்திலிருந்த உணர்வுகள் மெல்லமெல்ல மட்டுப்பட்டது. சிந்தனை மேலிட்டது.

அவளை காதலிக்கவில்லையாம்! துருப்புச் சீட்டாம்! தூண்டில் புழுவாம்! ஆனால் இது எதையுமே அவனால் சுலபமாக சொல்ல முடியவில்லையே! ஏன்? – அத்தனை துன்பத்தை அனுபவித்தப் பிறகும் கூட மனம் அவனுக்கு சாதகமாகவே சிந்திக்க முற்பட்டது.

அவளால் அவனை பாதிக்க முடியாதாம்! ஆனால் அவள் கண்ணீரை சகிக்க முடியவில்லை. எத்தனை கோபம்! எத்தனை ஆத்திரம்! ஏன் இந்த முரண்பாடு? – அவனுடைய கோபத்தில் காதலை தேடினாள்.

அவன் இல்லை என்று மறுக்கும் காதல்… பார்வையில் கூட காட்ட மறுக்கும் நேசம், அவனுடைய கோபத்தில் வெளிப்பட்டதாக நம்பினாள். முட்டாள்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் காதலும் முட்டாள் தனமும் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகள். ஒன்று இருக்கும் இடத்தில் மற்றொன்றும் இருக்கும். மிருதுளாவுக்கும் இருந்தது. அதனால்தான் கண்ணில் மாட்டிவிட்ட மஞ்சள் கண்ணாடி போல் அவனுடைய அனைத்து செயல்களிலும் காதலை தேடினாள். அவளுடைய தேடலை பூர்த்தி செய்வது போல்தான் அவனும் நடந்து கொண்டான்.

அவ்வளவு வெறுப்பாக அவளிடம் பேசிவிட்டு விலகிச் சென்றவன் நள்ளிரவை தாண்டி தானாக திரும்பி வந்து அவள் அருகில் படுத்தான். அவள் குளிர்ந்து போனாள். அவன் காதலிப்பது உண்மை. அவளை நேசிப்பது உண்மை. ஒப்புக்கொள்ளத்தான் மனமில்லை. தாமரை போல் மலர்ந்த அவள் மனம் சட்டென்று வாடியது. ‘பழிவுணர்ச்சி… அவள் பெற்றோரை அழிக்க வேண்டும் என்கிற வெறி…’ – காதலை கூட விட்டுக்கொடுக்க தூண்டும் இந்த எதிர்மறை உணர்வுகள் அவனை எங்கு கொண்டு நிறுத்தும்! – பயத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்.

தோட்டாக்கள் இரண்டு இருமுனையிலிருந்து பாய்ந்து வருகிறது. ஒன்று அவள் பெற்றோரை நோக்கி. மற்றொன்று அர்ஜுனை நோக்கி. நடுவில் அவள். தோட்டா யார் மீது பாய்ந்தாலும் மண்ணில் விழப்போவது அவள் தான். இருவருக்குமே அது புரியவில்லை. புரிய வைக்காவிட்டால் விபரீதமாகிவிடும். மனம் அமைதியிழந்து சஞ்சலப்பட்டது.

ரெத்தப்பாசம் பொல்லாதது. காதல் அதற்கு ஒரு படி மேல். இரண்டு உணர்வுகளுமே தீவிரமானது. ஒன்றுக்கொன்று சளைக்காதது. அவளால் எந்தப்பக்கம் செல்ல முடியும்? யாரை விட்டுக்கொடுக்க முடியும்? உறங்கவே முடியவில்லை. இரவெல்லாம் யோசித்தாள். தான் செய்ய நினைப்பது சரியா தவறா என்று மனதிற்குள்ளேயே வாதவிவாதம் செய்தாள். இந்த பிரச்னையை தீர்க்க அந்த ஒரு வழியை தவிர அவள் அறிவுக்கு வேறு மார்க்கமே புலப்படவில்லை. பெருமூச்சுடன் படுக்கையிலிருந்து எழ முயன்றாள்.

ஆலம்விழுது போல் அவள் மீது படர்ந்திருந்த அவன் கை அவள் முயற்சிக்கு எதிராய் செயல்பட, “டைம் ஆகல” என்று கனத்த குரலில் முணுமுணுத்தபடி முகத்தை அவள் கூந்தலுக்குள் புதைத்துக் கொண்டான்.

மிருதுளாவின் அசைவுகள் சட்டென்று தடைப்பட்டன. சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “நான் போகணும்” என்றாள் மெல்ல.

“முடியாது. தூங்கு” – அவன் மறுத்த விதம் அவளை காயப்படுத்தியது.

நொந்து போய், “ஐம் நாட் யுவர் டாய்” என்றாள்.

“ம்ம்ம்… மைண்ட்ல வச்சுக்குறேன்” – மீண்டும் அலட்சிய தொனியிலேயே அவனிடமிருந்து பதில் வந்தது.

“லீவ் மீ அர்ஜுன். விடுங்க என்னை” கோபத்துடன் அவனிடமிருந்து விலக முற்பட்டு முரண்டு பிடித்தாள்.

“யு… காண்ட் லீவ் மீ…. நா விட்டாலும் உன்னால என்னை விட்டு எங்கேயும் போக முடியாது” என்றவன், சட்டென்று அவளை தன் பக்கம் திருப்பினான். சிவந்த அவன் விழிகள் கலங்கிய அவள் விழிகளோடு கலந்தது.

“ப்ராமிஸ் பண்ணியிருக்க” – வஞ்சகமாய் அவளிடம் பெற்ற வாக்குறுதியை நினைவுறுத்தினான்.

“யு ஆர் சோ க்ரூயல்” – வலிமையற்ற குரலில் வார்த்தைகளை உதிர்த்தாள்.

ஓரிரு நொடிகள் மெளனமாக அவளை பார்த்தவன், கண்ணீரில் பளபளக்கும் அவள் கண்களில் இதழ்பதித்து, “எஸ்… ஐ ஆம்” என்றான். மிருதுளா உடைந்து போனாள். அழுகையில் குலுங்கியது அவள் உடல். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

அவன் அணைப்பில் அடங்கியவள் சில நொடிகளில் தலையை உயர்த்தி மீண்டும் அவன் முகத்தை பார்த்தாள்.

“வாட்?” – மென்புன்னகையுடன் அவள் நெற்றியோடு நெற்றியை முட்டினான்.

“இதுக்கு பேர் காதல் இல்லைன்னா வேற என்ன அர்ஜுன்?” – ஏக்கத்துடன் கேட்டாள். அவ்வளவுதான்… சட்டென்று இரும்பு குண்டலம் போல் மாறியது அவன் முகம். நாசி விடைத்து தாடை இறுகியது.

“நேத்தே உன்கிட்ட சொன்னேன்… எனக்கு இந்த டிராமா சுத்தமா பிடிக்காது. நிறுத்திக்கோ” – பற்களை நறநறத்தான்.

சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு, “சரி” என்று ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு மீண்டும் அவன் மார்பில் முகம் சாய்த்துக் கொண்டாள். மெளனமாக அவள் வடித்த கண்ணீர் அவன் நெஞ்சை ஈரமாக்கியது.

இது அவன் எதிர்பார்க்காத எதிர்வினை… அப்பாவிக் குழந்தையை அடித்துவிட்டது போல் உணர்ந்தான் அர்ஜுன். மனம் கனத்து போய்விட்டது. அவள் உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டு, “உன்ன ஹர்ட் பண்ணணுன்னு நினைக்கல” என்றான்.

தலையை மேலும் கீழும் அசைத்தபடி அவள் அவனோடு மேலும் ஒட்டிக்கொள்ள, பாலை நிலத்தில் பெய்த மழையின் குளிச்சியை நெஞ்சுக்குள் உணர்ந்தான் அர்ஜுன்.

அன்று முழுவதும் மிருதுளா தன் பெற்றோரைப் பற்றி பேசவில்லை. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அர்ஜுனோடு வெகு இணக்கமாக நடந்து கொண்டாள். அவளிடமிருந்து விலக விரும்பாத அவன் மனமும் அவள் காட்டிய நெருக்கத்தில் நெகிழ்ந்து போனது. இனைந்து உடற்பயிற்சி செய்தார்கள். போட்டி போட்டுக் கொண்டு தாண்டா எடுத்தார்கள். சமையலறையை சேர்ந்து உருட்டினார்கள். பொதுவாக பேசினார்கள். பழையபடி சிரித்தார்கள்.

இவையெல்லாம் இயல்பாக ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் மிருதுளாவின் திடீர் மாற்றம் அவனை உறுத்தத்தான் செய்தது. அவனுக்குள் இருக்கும் பயிற்சி பெற்ற மனிதன் எச்சரிக்கத்தான் செய்தான். ஆனால் நெகிழ்ந்திருந்த மனம் தன்னைப் போலவே அவளும் இந்த நெருக்கத்திற்காக ஏங்கியிருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டி உறுத்தலை உதறி தள்ளியது.

மதியத்திற்கு மேல் அவனுக்கு தோட்டத்தில் வேலை இருந்தது. கழித்துப்போட்ட மரக்கிளைகள் எல்லாம் முதல் நாள் முழுவதும் பெய்த மழையால் ஊறி கனத்துப்போயிருந்தன. அதை துண்டுபோட்டு மதில் சுவர் ஓரமாக இழுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்.

புறவாசல் இல்லாத வீடு. வீட்டை சுற்றிக் கொண்டு பின்புற தோட்டத்திற்கு வந்தாள் மிருதுளா.

ஒரு சிவப்பு நிற கைக்குட்டையை மடித்து நெற்றியில் கட்டியிருந்தான். உடலை இறுக்கிப்பிடித்திருந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. அந்த முரட்டு மரத்தை ‘தம்’ பிடித்து இழுக்கும் போது தன்னியல்பாக அவனிடமிருந்து வெளியேறும் ஒலி தோட்டம் முழுக்க எதிரொலித்தது. போர்க்களத்தில் எதிரியை ஒழித்துக்கட்டும் வீரனின் வேகத்தோடு அவன் வேலை செய்து கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்து சற்று நேரம் அசையாமல் நின்றுவிட்டாள் மிருதுளா.

அவள் வந்திருப்பதை உணர்ந்து வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான். கையில் தண்ணீர் பாட்டிலும் கண்களில் ரசனையுமாக விழியாகற்றாமல் அவனை பார்த்துக் கொண்டு நின்றாள் மிருதுளா. சற்று நேரத்திலேயே அவள் தன்னை தேடி வந்துவிட்டதில் அவன் மனம் உவகை கொண்டது. தன்னை ரசிக்கும் அவள் பார்வையை ரகசியமாய் ரசித்தபடி மீசைக்குள் மறைத்து வைத்த புன்னகையுடன் அவளிடம் நெருங்கினான். நெற்றியில் கட்டியிருந்த கைக்குட்டையை கழட்டியவன், அவள் கையில் இருந்த பாட்டிலை வாங்கி நீர் அருந்திவிட்டு திமுதிமுவென்று முகத்தில் ஊற்றி முகம் அலம்பினான்.

“யாரையாவது வர சொல்லி இருக்கலாமே! ரொம்ப கஷ்டமான வேலை” – கவலைப்பட்டாள் மிருதுளா.

பாட்டிலை மூடி அவள் கையில் கொடுத்தபடி, “ஐ கேன் மேனேஜ்” என்றான்.

மிருதுளா அர்ஜுனை பார்த்தாள். ஒரு சின்ன தயக்கம் தோன்றியது. நொடி பொழுதில் அதை உள்ளேயே புதைத்து சமாதிகட்டிவிட்டு, “இன்னைக்கு நா டின்னர் ரெடி பண்ணவா?” என்றாள்.

அவனுக்கு எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை. தனக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறாள் என்று தான் நினைத்தான். அவளுக்கும் நேரம் நல்லவிதமாக கழியும் என்று எண்ணி, “உன் விருப்பம்” என்றான்.

அர்ஜுன் வேலையை முடித்துவிட்டு குளித்து உடைமாற்றிக் கொண்டு உணவுக்கு கூடத்திற்கு வந்த போது ஒரு முழு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள் மிருதுளா. மேஜையில் பல பதார்த்தங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மின்விளக்கின் மந்தமான ஒளியோடு உணவு மேஜையின் நடுவில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த மெழுகுவர்த்தி அடுக்கு அந்த அறையின் சூழ்நிலையை ரம்யமாக்கியது. அவளும் மிதமான ஒப்பனையில் அழகாய் இருந்தாள். தன் முகத்திலிருக்கும் பதட்டத்தை மறைக்கும் அவளுடைய முயற்சி கச்சிதமாய் நிறைவேறியது.

ஒரு சின்ன சந்தேகம் கூட எழாமல், “ஓ வாவ்! பர்ஃபெக்ட் டின்னர்” என்று மகிழ்ச்சியும் வியப்புமாக உள்ளே நுழைந்தான் அர்ஜுன். ஒரு நொடி… ஒரே ஒரு நொடி இந்த விருந்தை அவள் தாய் கொடுத்த விருந்தோடு அவன் ஒப்பிட்டுப் பார்த்திருந்தால் கதை வேறு திசையில் பயணித்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை. அவள் தாய் கொடுத்த விருந்தை எப்படி வஞ்சகமில்லாமல் சுவைத்தானோ அதே போல் இன்றும் அவள் பரிமாறிய அனைத்து உணவு வகைகளையும் தயங்காமல் சுவைத்தான்.

பாதி உணவிற்கு மேல் தான் ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தான். அப்போதும் அவள் மீது சந்தேகம் எழவில்லை. ஏதோ மெண்டல் ஸ்ட்ரெஸ் என்றே நினைத்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே பார்வை மங்க துவங்கியது. எதிரில் அமர்ந்திருந்த மிருதுளாவின் உருவம் இரண்டாய்… நான்காய் பிரிந்து மெல்ல மெல்ல மறைந்து போக கண்கள் செருகியது. சுதாரித்து எழ முயன்று முடியாமல், ஆத்திரத்துடன் உணவு மேஜையிலிருந்த பொருட்களை உருட்டிவிட்டான். தலை பாரம் தாளாமல் கழுத்து நொடிக்க, உணவு மேஜையின் மீதே தலைகுப்புற கவிழ்ந்து, முழு இருளுக்குள் மூழ்கிப் போனான் அர்ஜுன்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kokilasureshbabu says:

    Nithya
    When will u post the next episode

error: Content is protected !!