Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு – 62

அத்தியாயம் – 62

குற்ற உணர்வும் பதட்டமும் சரிவிகிதத்தில் மிருதுளாவை ஆக்கிரமித்திருந்தது. கனத்த மனதுடன் ஒரு கணம் தயங்கி நின்றவள், முடிவெடுத்தப் பின் பின்வாங்குவது மூடத்தனம் என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாள். அர்ஜுனின் சுயநினைவற்ற நிலை அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் அவளை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தது.

கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்கை பூட்டிவிட்டு ஒருமுறைக்கு இருமுறை கதவை நன்றாக தள்ளிப்பார்த்தாள். இனி வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்ல முடியாது, அர்ஜுன் கண்விழித்து கதவை திறந்தால்தான் உண்டு என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு ஓட்டம் பிடித்தாள். சூழ்ந்திருந்த இருள் அவளை அச்சுறுத்தவில்லை. அதைவிட அவள் செய்துவிட்டு வந்திருந்த காரியம் பெரிது. ஆனால் அதற்கு அவசியம் ஏற்பட்டுவிட்டதே! மனதின் உறுத்தலை புறந்தள்ள முயன்றபடி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். சற்று நேரத்திலேயே அவளுக்கு அருகில் ஒரு கார் வேகத்தை குறைந்து வந்து நின்றது.

“சீக்கிரம் ஏறு” – முன்பக்க கதவை திறந்துவிட்டபடி அவசர குரலில் ஆணையிட்டவர் பகவானேதான். தன்னையறியாமல் மிருதுளாவின் உடல் விறைத்தது. எத்தனை ஆண்டுகள் ஆயிற்று இந்த மனிதரை பார்த்து! “ம்ம்ம், சீக்கிரம்” – திகைத்து நிற்கும் மகளை துரிதப்படுத்தினார். அவளும் சுதாரித்துக் கொண்டு பாய்ந்து உள்ளே ஏறினாள். கார் வேகமெடுத்து ஓடியது.

“போனோ… இல்ல வேற ஏதாவது எலக்ட்ரானிக் ஐட்டமோ கைல இருக்கா?” – எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு மகளை பார்க்கும் மனிதரிடமிருந்து வந்த முதல் கேள்வி. மிருதுளா அவரை வெறித்துப் பார்த்தாள். உணர்வுகளே இல்லாத அந்த மனிதர் வெகு அந்நியமாய் தோன்றினார்.

“என்ன அப்படி பார்க்கற? இருக்கா இல்லையா? அவன் நம்மள ஃபாலோ பண்ணி வந்துடக் கூடாது. பதில் சொல்லு” – பதட்டத்தை வெளிக்காட்ட விரும்பா அழுத்தத்துடன் மகளை எச்சரித்தார்.

அவளுடைய தலை குறுக்காக அசைந்தது. பார்வை தந்தையின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“இத்தனை வருஷமா எங்க போயிருந்தீங்க?” – மகளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ஓரிரு நிமிடங்கள் மெளனமாக காரை செலுத்தியவர் பிறகு, “இந்த கேள்விக்கு உன் அம்மாகிட்ட பதில் இருக்கு” என்றார்.

“நீங்க என் அப்பா. எனக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. எதுக்காக எங்களை விட்டுட்டு போனீங்க?”

சட்டென்று மகளை திரும்பிப் பார்த்தார் பகவான். அவள் முகத்தில் தெரிந்த பிடிவாதம் அவருடைய ரசனைக்கு உள்ளானது. கனிந்த குரலில், “நானா விரும்பி போகல. சூழ்நிலை… குடும்பத்தை விட்டுட்டு ஓட வேண்டிய கட்டாயம்” என்றார்.

“எப்படி வந்தது அந்த சூழ்நிலை?”

அவர் பதில் சொல்ல முடியாமல் பெருமூச்சுவிட்டார்.

“எனக்கு தெரியும், உங்களுக்கு பயம். அர்ஜுன் மேல பயம்”

சட்டென்று அவருடைய முகபாவம் மாறியது. கடுங்கோபத்துடன் “மிருதுளா” என்று அதட்டினார்.

அவள் ஒன்றும் பயந்துவிடவில்லை. “என்ன பிரச்சனை? எதுக்காக இந்த ஓட்டம்? எதுக்காக இந்த தலைமறைவு?” விடாமல் கேள்விகளை அடுக்கினாள். அவர் வாய் திறக்கவில்லை. சற்று நேரத்திலேயே கார் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்தது. மிருதுளா அந்த இடத்தை சுற்றிச் சுற்றி பார்த்தாள். அவர்கள் அனந்த்பூரை விட்டு வெளியேறவில்லை. அப்படியென்றால் அவளுடைய பெற்றோர், அவளை சுற்றி, அவளுக்கு அருகில் தான் இருந்திருக்கிறார்களா!

இருவரும் காரிலிருந்து இறங்கி மின்தூக்கியில் நுழைந்து நான்காவது தளத்தில் வெளியேறினார்கள். தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு பகவான் அந்த அப்பார்ட்மென்டின் கதவை திறக்க இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

“யார் வீடு இது?” – மிருதுளா கேட்கவும், “மிருதூ” என்கிற கூவலுடன் ஷோபா அறையிலிருந்து பாய்ந்து வரவும் சரியாக இருந்தது. தாயும் மகளும் கட்டி கொண்டார்கள். மிருதுளா உடைந்து அழுதாள். பிரிவுத்துயரை கண்ணீரில் கரைத்தாள். ஷோபாவின் உடலும் நடுங்கியது. தாய் அல்லவா? பதட்டம் இருப்பது இயல்புதான். மகளை தழுவி முதுகை வருடி தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்த முயன்றாள். அவள் முகத்தில் விழுத்த முடியை காதோரம் ஒதுக்கி, கண்ணீரை துடைத்துவிட்டு நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

“உனக்கு எதுவும் ஆகாதுன்னு எனக்கு தெரியும். நீ என்கிட்ட வந்துடுவேன்னு எனக்கு தெரியும்” – மகிழ்ச்சி பொங்கியது தாயின் குரலில்.

“என்ன ம்மா நடக்குது?”

“உன்ன அவன்கிட்டயிருந்து தூக்க பல முறை ட்ரை பண்ணி தோத்துட்டோம். ஆனா நீ தப்பிச்சு வந்துட்ட. ஒரு பெரிய அரக்கனை ஏமாத்திட்டு வந்துட்ட” – பெருமையுடன் கூறினாள். அர்ஜுனை ஏமாற்றிவிட்ட நினைவில் மிருதுளாவின் முகம் சுண்டிப்போனது.

“ம்மா, ஐ நீட் டு டாக்”

“இப்பவே பேசணுமா? ரெஃப்ரெஷ் பண்ணிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன். நள்ளிரவுக்கு மேல நாம இங்கிருந்து கிளம்பனும்”

“கிளம்பணுமா! எங்க? ஏன்?”

“மிருது, இது அந்த அர்ஜுன் வசிக்கிற ஊர். எரிமலை அடிவாரத்துல குடியிருக்கறதும் இந்த ஊர்ல தாமதிக்கிறதும் ஒன்னு. நாம மூவ் பண்ணியே ஆகணும்”

“இல்ல, அர்ஜுன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. உங்களுக்குள்ள ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்…”

“என்ன! என்ன பேசுற நீ?” – மகளை இடைவெட்டி அதட்டினார் தந்தை.

“ஹி இஸ் எ குட் மேன்” – அழுத்தமாகவே கூறினாள் மகள்.

“பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு? என்னையும் என் குடும்பத்தையும் கொல்ல வருஷக்கணக்கா துரத்திக்கிட்டு இருக்கான். அவனைப் போயி நல்லவன்னு சொல்ற?” – ஆத்திரப்பட்டார்.

“ஆனா என்னை கொல்லல. உங்க பொண்ணுன்னு தெரிஞ்சும் கொல்லல. அதுக்கு என்ன அர்த்தம்?”

“உன்ன பிணையா பிடிச்சு வச்சிருந்தான்னு அர்த்தம். என்னைய பிடிக்க உன்ன தூண்டில் புழுவா பயன்படுத்தினான்னு அர்த்தம்” – மகளிடம் பாய்ந்த கணவனை, “நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. நா பேசிக்கிறேன்.” என்று தடுத்துவிட்டு மகளை தனியாக அழைத்துச் சென்றாள் ஷோபா.

“ஏன் இப்படியெல்லாம் பேசுற?”

“ஏன்னா நா அர்ஜுன் கூட மாசக்கணக்கா இருந்திருக்கேன். ஐ நோ ஹிம்”

“அவன் உன்ன ட்ராப் பண்ணி வச்சிருந்தான் மிருது”

“நானும் விரும்பித்தான் அங்க இருந்தேன்”

“என்ன சொல்ற நீ!”

“ம்மா… எங்களுக்குள்ள ஸம் எமோஷன்ஸ் டெவலப் ஆயிருக்கு”

“என்ன! என்ன மாதிரி எமோஷன்?” – பதட்டத்துடன் கேட்டாள்.

“ரொம்ப ஸ்ட்ராங்கான எமோஷன்ஸ். ஒருத்தரவிட்டு ஒருத்தர் இருக்க முடியாதுங்கற அளவுக்கு”

“நோ” – ஷோபாவின் கண்கள் விரிந்தன. முகம் ரெத்தப்பசையற்றுப் போய்விட்டது.

“ஐம் சாரி ம்மா”

“மிருது! என்ன பேசுற நீ? எவ்வளவு பெரிய சிக்கலை இழுத்துகிட்டு வந்திருக்க! போச்சு… சூழ்நிலை இன்னும் மோசம ஆக போகுது. ம்ஹும்… விடமாட்டேன். இங்க பாரு, எல்லாத்தையும் மறந்துட்டு இப்போவே கிளப்பு. இங்கிருந்து போயிடலாம்” – படபடத்தாள்.

“ம்மா ப்ளீஸ்”

“அவன் உன்ன கொன்னுடுவான் மிருது”

“இல்ல, அர்ஜூனால என்னை கொல்ல முடியாது”

“கடவுளே, இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு? மிருது, அவன் உன்னைவிட பத்து பன்னிரண்டு வயசு மூத்தவன். அவன்கிட்ட உனக்கு எப்படி…”

“தெரியாது ம்மா… ஆனா எனக்கு பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு”

“அவன் கல்யாணம் ஆனவன்”

“மனைவி இல்ல”

“அவ யாருன்னு தெரியுமா உனக்கு? அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா?”

“சொல்லுங்க. ஆர்த்திக்கு என்ன ஆச்சு?”

தலையை பிடித்துக் கொண்டாள் ஷோபா. மகளுடைய பிடிவாதம் அவளை அச்சுறுத்தியது. எதையும் உடைத்து பேச முடியாமல் தடுமாறினாள். பிறகு மெல்ல துவங்கினாள். “மிருது, வி ஆர் கோர்த்தாஸ்” – மிருதுளாவின் உடல் சட்டென்று இறுகியது. தெரிந்த விஷயம்தான் என்றாலும் அதை தாயின் வாய்மொழி உறுதிப்படுத்திய போது மனம் கனப்பதை தவிர்க்க முடியவில்லை.

“அப்பா ஆர்மிதானே?” – வலுவற்ற குரலில் கேட்டாள்.

“கோர்த்தாஸ் இல்லாத இடமே இல்ல. அவர் ஆர்மிக்குள்ள இருந்த கோர்த்தா மேன். கோர்த்தாவோட ஸ்க்வார்ட்ஸ் எல்லாம் இவ்வளவு பிரபஷனலா இருக்கறதுக்கு உங்க அப்பாவோட ஆர்மி ட்ரைனிங் ஒரு முக்கியமான காரணம். அன்னைக்கு மட்டும் இல்ல, இன்னைக்கும் நாங்க தலைமைக்கு ரொம்ப விசுவாசமான கோர்த்தாஸ். அர்ஜுன் எங்களோட ரிசோஸ். உங்க அப்பாவோட சிஷ்யன். பத்து நாள்ல கத்துக்க வேண்டியதை ஒரே நாள்ல கத்துக்குவான். புத்திசாலி… கொஞ்சம் சூது… ரொம்ப கெட்டவன். ஆனா எங்களுக்கு ரொம்ப பிடிச்சவன். நாங்க நினைக்கிறதை செஞ்சு முடிக்கிறவன். வயசு வித்தியாசம் இல்லாம நட்பா பழகினோம். தலைமை உடைஞ்சது. நாங்க ஜெகன் நாயக் பக்கம் நின்னோம். அர்ஜுன் ராகேஷ் சுக்லா பக்கம் நின்னான். ஒருத்தர ஒருத்தர் தாக்க வேண்டிய கட்டாயம். நாங்க முந்திக்கிட்டோம். அர்ஜூனுக்குத்தான் குறி வச்சோம். ஆர்த்தி பலியாயிட்டா. இப்போ அவன் பழிவெறி பிடிச்சு அலையிறான்” – எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகு சாதாரணமாக சொல்லி முடித்தாள்.

மிருதுளா தளர்ந்து போய் அமர்ந்தாள். தாய் சொன்னவற்றை கிரகிக்க முடியாமல் தத்தளித்து, “நீங்க… நீங்களுமா? இதுல…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தடுமாறினாள்.

“நானும் கோர்த்தாவோட அங்கம் தான்” – தெளிவாக பதில் கொடுத்தாள் தாய். மிருதுளாவின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

“ஷி வாஸ் ப்ரெக்னென்ட்… தெரியுமா?”

“எந்த வீக்னஸுக்கும் இடம் கொடுக்க முடியாத சூழ்நிலை அது”

“கடவுளே!!!” – இதயம் வலித்தது. இந்த அளவுக்கு இரக்கமற்றவளா அவள் தாய்!

“இதுல அழறதுக்கு எதுவும் இல்ல மிருது. அன்னைக்கு நாங்க அலட்சியமா இருந்திருந்தாலோ, பலவீனத்துக்கு இடம் கொடுத்திருந்தாலோ இன்னிக்கு உயிரோட இருந்திருக்க முடியாது”

“லீவ் மீ அலோன்”

“நிச்சயமா… தனியா இருந்து யோசி. அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டு யோசி. உனக்கு அர்ஜுன் மேல ஃபீலிங்ஸ் இருக்கு. அர்ஜூனுக்கும் உன்மேல இருக்கலாம். அதனால கூட அவன் உன்ன விட்டு வச்சிருக்கலாம். ஆனா ராகேஷ் விடமாட்டான். ஏன்னா ஆர்த்தி அவனோட ஒரே பொண்ணு. அர்ஜுன் உன்ன காப்பாத்த முயற்சி பண்ணறான்னு தெரிஞ்சா அவன் அர்ஜுனையும் விடமாட்டான். இனி யோசி… அர்ஜுனை தேடி போகணுமா? இல்ல விலகி போகணுமான்னு நல்லா யோசி” – நங்கூரமிட்டது போல் சொல்ல வேண்டிய அனைத்தையும் அழுத்தம் திருத்தமாக கூறி, மகளை தனிமையில் விட்டுவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள் ஷோபா.
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Poongodi says:

  When will be the next ud nithiya ammu pls


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  SELVA RANI says:

  unga novel ellame super.
  nilal nilavu next episode eppo varum
  kaniyamuthe novel next episode ku waiting


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Gomathy B says:

  Please update


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sagayam Arockiadass says:

  super next ud mam

error: Content is protected !!