Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 5

அத்தியாயம் – 5

மலையமானுக்கு உறக்கம் வரவில்லை. முணுமுணுப்பாக கூறினாலும் அவள் சொன்னது அவன் காதில் விழத்தான் செய்தது. அவன் தங்கத்தில் அவளுக்கு தாலிக்கொடி போடவில்லையாம்! எத்தனை இளக்காரமாக பேசுகிறாள்! என்னதான் அவன் தன் இயலாமையை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் நிமிர்வாக பேசினாலும் உள்ளுக்குள் குறுகித்தான் போனான்.

முதல் முறையாக பூட்டிய அறைக்குள் ஒரு பெண்ணோடு தனித்திருக்கும் இன்பம் அவன் மனதில் சிறிதும் இல்லை. அவள் சூட்டியிருந்த மல்லிகையின் வாசமோ அல்லது அவள் பயன்படுத்தியிருந்த நறுமண பொருளின் வாசமோ அந்த அறை முழுக்க நிறைந்திருந்தது. அதுவரை அவன் நுகர்ந்திராத அந்த புது வாசம் அவன் நெஞ்சை தொடவில்லை.

மாறாக நம் தகுதிக்கு தகுந்தாற் போல் ஒரு பெண்ணை எடுத்திருந்தால் இந்த அவஸ்தை இல்லாதிருந்திருக்குமே என்கிற புழுக்கம் தான் அவன் உறக்கத்தை பறித்துக் கொண்டது. போதா குறைக்கு அவள் புரண்டு படுக்கும் போது சலசலக்கும் வளையல் ஓசை வேறு உயிரை எடுத்தது. பேசாமல் எழுந்து போய் வாசலில் படுத்துக்கொள்ளலாமா என்று எண்ணினான். ஆனால் வெளியே தூறல் போட்டுக் கொண்டிருந்தது. திண்ணையும் ஒழுகும். கூடத்தில், அவர்கள் படுத்திருக்கும் அந்த ஓரத்தில் மட்டும் தான் படுக்க முடியும்.

இரவெல்லாம் நெருங்காத உறக்கம் விடியலில் அவன் கண்களை தழுவியது. சற்று நேரம் தான் கண்ணயர்ந்திருப்பான்.. திடீரென்று ஏதோ சத்தம்.. கூடவே ‘அம்மா’என்கிற அலறல் வேறு… ‘கனி!’ – விரண்டு எழுந்தான். உறக்கத்தில் கூட அவன் அவளை மறக்கவில்லை. அது அவள் குரல்தான் என்று எப்படி உணர்ந்தான்! – அதைப் பற்றியெல்லாம் யோசிக்க ஏது நேரம்? போர்வையை சுருட்டி வீசிவிட்டு எழுந்து கொல்லைப்புறம் ஓடினான். அங்கிருந்துதானே சத்தம் வந்தது!

இரவெல்லாம் பெய்த மழையால் கொல்லைப்புறம் சேறும் சகதியுமாக இருந்தது. மெல்ல அடியெடுத்துவைத்து கிணற்றங்கரைப் பக்கம் சென்றவன் திடுக்கிட்டான். அங்கே கனிமொழி ஆடை கை கால் எல்லாம் சேறாக நின்றுக் கொண்டிருந்தாள். முகம் கன்றி சிவந்திருக்க, கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.

பார்க்கும் போதே, வழுக்கி விழுந்து எழுந்து நிற்கிறாள் என்பது புரிந்தது போக, “ஏ… எதுக்கு தனியா வந்த? என்னை எழுப்பியிருக்க வேண்டியதுதானே?” என்று பதட்டத்தில் குரலை உயர்த்தி அதட்டியபடி அடியை எட்டிப்போட்டு அவளிடம் நெருங்கினான்.
“எப்படி விழுந்த? அடி ஏதும் பட்டுடுச்சா?” என்று பதற்றத்துடன் அவன் அவளை ஆராய முற்பட, அவளோ ஆத்திரத்துடன், “விடு என்னை” என்று அவனை உதறினாள்.

சுள்ளென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு. “என்னடி மரியாதை இல்லாம வா.. போ.. ங்கற?” என்று அவளை பிடித்து உலுக்கிவிட்டான்.

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் கனிமொழி. அத்தனை கோபத்தை அவனிடம் அவள் எதிர்பார்க்கவில்லை. நேற்றிலிருந்து ஏதோ மௌன சாமியார் போல் அமைதியாக இருந்துவிட்டு இன்று இப்படி சீறுகிறானே என்கிற திகைப்பிலும் அவன் அவளை ‘டி’ போட்டு அழைத்த அதிர்ச்சியிலும், அவளுடைய பெரிய கண்கள் மேலும் பெரிதாக விரிந்தன. அதில் தேங்கியிருந்த கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று கன்னத்தில் வடிய தயாராக காத்திருந்தது.

உதட்டை மடித்து கடித்துக் கொண்டு ஆழ மூச்செடுத்தான் மலையமான். அவள்தான் சின்ன பெண்.. ஏதோ கோபத்தில் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாள். நமக்கென்ன வந்தது! இப்படி அதட்டிவிட்டோமே என்று வருந்தினான். அவள் தோள்களை பற்றியிருந்த அவன் கைகள் தானாக விலகின.

அடுத்த நொடி அங்கிருந்து நகர எத்தனித்தாள் கனிமொழி. ஆனால் அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு காலில் வலி… முகத்தை சுளித்துக் கொண்டு கண்களை இறுக்கமாக மூடியபடி அப்படியே நின்றுவிட்டாள்.

உடனே பதட்டமானான் அவன். “எங்க வலிக்குது? கால்ல தானே.. காட்டு” – சட்டென்று கீழே அமர்ந்து அவள் பாதத்தை பார்த்தான். நன்றாகவே வீங்கியிருந்தது.

“ப்ச்… நா அங்க தானே இருந்தேன்! கூப்பிட்றதுக்கு என்ன?” – அடிபட்டுக் கொண்டாளே என்கிற ஆற்றாமையுடன் சிடுசிடுத்தவன் எழுந்து அவளை தோளோடு அணைத்து கைத்தாங்கலாக நடக்க வைக்க முயன்றான். உடனே முகத்தை சுளித்துக் கொண்டு விலக முயன்றாள் கனிமொழி.

சட்டென்று தன் பிடியில் இறுக்கத்தை கூட்டி, “உன்ன என்ன நா கடிச்சா திங்க போறேன்? பேசாம வா” என்றான் தவிர்க்க முடியாத எரிச்சலுடன்.

அவளுக்கும் வேறு வழியில்லை. அவனுடைய உதவியில்லாமல் அவளால் அப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்பதால் அவனோடு சேர்ந்து நடந்தாள். அவளை மெல்ல நடத்தி துணி துவைக்கும் கல் வரை அழைத்துச் சென்று அதில் அமரும்படி கூறினான்.

“இங்கேயா!” – முகத்தை சுளித்துக் கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தாள். முதல்நாள் இரவு அடித்த காற்றால் மரத்தில் இருந்த சருகுகளெல்லாம் கிணற்றங்கரையில் கொட்டி மழைநீரில் நனைந்துக் கிடந்தது.

அவள் அருவருப்பாக உணருகிறாள் என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு சங்கடமாக இருத்தது. இவள் எப்படி நம்மோடு பொருந்தி வாழப் போகிறாள் என்கிற கவலையும் எழுந்தது. அதை பின்னுக்கு தள்ளி வைத்துவிட்டு, “அடிபட்ட உடனே தண்ணிய ஊத்தி உருவிவிட்டா சரியாயிடும். இல்லன்னா ஆசுபத்திரிக்கு போற மாதிரி ஆயிடும்” என்றான் மென்மையாக.

‘அதுக்கு கூட உன்கிட்ட காசு இல்லையா?’ என்று உள்ளுக்குள் இகழ்ந்தாள்.

அவள் முகம் போன போக்கை பார்த்தே அவளுடைய எண்ணத்தை ஊகித்தவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “உட்கரு” என்று சற்று அழுத்தமாக கூறி அவளை அமரவைத்தான்.

கிணற்றில் தண்ணீர் இறைத்து அவள் கைகால் கழுவ உதவியவன் பிறகு காயங்களையும் ஆராய்ந்தான். கால் வீக்கத்தைத் தவிர உள்ளங்கைகளிலும், வலது கை முட்டியிலும் லேசான சிராய்ப்பு இருந்தது.

“ப்ச்…” – தன்னையறியாமல் அதிருப்தியுடன் உச்சுக்கொட்டியவன், தண்ணீர் ஊற்றி அவள் காலை உருவிவிட்டான்.

வலியில் அவள் வாய்விட்டே அழுதாள். “சரியாயிடும்… சரியாயிடும்… அவ்வளவுதான்.. இதோ… முடிஞ்சிடிச்சு” என்று குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிக் கொண்டே அவளுக்கு வைத்தியம் பார்த்தவன், “என்னைய எழுப்பியிருக்கக் கூடாதா?” என்றான் மீண்டும் தவிர்க்க முடியாத ஆற்றாமையுடன்.

அவள் எதுவும் பேசவில்லை. கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் காலை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்திரு. இதோ வந்துடறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றவன், ஒரு விளக்கமாரோடு வந்து கிணற்றங்கரையோடு குளியலறை கழிவறை அனைத்தையும் பரபரவென்று கூட்டி கழுவி சுத்தம் செய்து, தொட்டியில் புது நீரை நிரப்பி வைத்துவிட்டு, “வா…” என்று அவள் கையை பிடித்தான்.

அவள் கல்லிலிருந்து இறங்கியதும் தன் பிடியை தளர்த்தாமலேயே, “கால ஊன முடியுதா, இல்ல இன்னும் வலி இருக்கா?” என்றான்.
அவனுக்கு பதில் சொல்லாமல் காலை மெல்ல கீழே ஊன்றி பார்த்துவிட்டு, அவன் கையை விட்டுவிட்டு நடக்க முயன்றாள். பரவாயில்ல.. ஓரளவுக்கு நடக்க முடிந்தது. அவனிடமிருந்து விலகி பாத்ரூம் பக்கம் சென்றவள், சட்டென்று அப்படியே நின்றாள். அவளுடைய பார்வை உடைந்திருந்த அந்த தகர கதவின் மீது பதிந்திருந்தது.

முதல்நாள் இரவு இருட்டில் சரியாக கவனிக்காமல் அவள் பயன்படுத்திய அந்த அறை இத்தனை மோசமாக இருக்கும் என்று அவள் நினைக்கவே இல்லை. பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இல்லை என்றாலும் அவளுக்கு உள்ளே செல்லவே கூசியது. உதட்டை கடித்துக் கொண்டு அப்படியே நின்றாள்.

அவள் சங்கடத்தை புரிந்துக் கொண்டு, “நா அங்க கொட்டாயில இருக்கேன். ஏதாவது வேணுன்னா கூப்பிடு” என்று கூறிவிட்டு அங்கிருந்த நகர்ந்த மலையமானின் மனதில், ‘எப்படி பணத்தை ரெடி பண்றது!’ என்கிற ஒரே சிந்தனைதான் ஓடியது.

அதை சிந்தித்துக் கொண்டே மனைவிக்கு குளிக்க வெந்நீர் காயவைத்தவன், கட்டுத்தரையை கூட்டி சுத்தம் செய்துவிட்டு மாடுகளை கொட்டகையிலிருந்து பிடித்துக் கொண்டு வந்து அங்கே கட்டினான். பிறகு வைக்கோல் பிடுங்கிப் போட்டு பால் கறந்தான்.
கனிமொழி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கிணற்றங்கரையிலிருந்து கீழே இறங்கினாள். அதைக் கண்டவன், செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அவளிடம் ஓடினான்.

“கால் தான் வலிக்குதுல்ல! கூப்பிட்றதுக்கு என்ன?” என்று கடிந்து கொண்டான்.

“குளிக்கணும்… டிரஸ் உள்ள இருக்கு”

“எங்க இருக்கு? நா எடுத்துட்டு வாரேன். நீ நடக்க வேண்டாம்” என்று அவன் உதவிக்கு வந்தான்.

அதை மறுத்தவள், “வேண்டாம்.. நானே போயி எடுத்துக்கறேன்” என்று கூறிவிட்டு காலை தாங்கித்தாங்கி நடந்து உள்ளே சென்று தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள். அதற்குள் மலையமான், அவளுக்கு வெந்நீர் வெளாவி வைத்திருந்தான்.

தனக்கு தேவையான ஒவ்வொன்றையும் அவன் பார்த்துப் பார்த்து செய்வதை கவனித்தவளுக்கு, ‘எவளோ ஒரு பட்டிக்காட்டு பைங்கிளியை கல்யாணம் பண்ண வேண்டியவனுக்கு நம்மள மாதிரி ஒரு பொண்ணு கெடச்சா வேற என்ன செய்வான்!’ என்கிற எண்ணம் தானாக தோன்றியது.

பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவன் கட்டிய தாலியை அவள் அணிந்துதான் இருக்கிறாள், கழட்டி எறிந்துவிடவில்லை. அப்படியென்றால் அவள் அவனுடைய மனைவி, அவன் அவளுடைய கணவன்! நினைத்தே பார்க்க முடியாத விஷயம் தான்.. ஆனால் நிஜமாகி இருக்கிறது. இனி அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வதும் அவனுடைய கடமை. ஆனால் அவனால் முடியுமா! அவளை வசதியாக வாழ வைக்க அவனிடம் என்ன இருக்கிறது! இன்றைய நிலைமைக்கு குளியலறையையும் கழிவறையையும் பழுது பார்க்கக் கூட அவனிடம் பணமில்லை. என்ன செய்ய போகிறான்! மண்டையை உடைத்துக் கொள்ளாத குறையாக யோசித்தபடியே ஒவ்வொரு மாடாக அவிழ்த்துக் கட்டி பால் கறந்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் வாசல் பக்கம் மருமகனோடு பைக்கில் வந்து இறங்கினார் அலமேலு.

“என்னம்மா பண்ணின இவ்வளவு நேரம்? காலையில எந்திரிச்ச உடனே வர மாட்டியா?” – இருந்த கடுப்பில் தாயை பார்த்ததும் சிடுசிடுத்தான்.

என்னதான் திடீர் கல்யாணமா இருந்தாலும் சின்னஞ்சிறுசுகள்.. ராத்திரி லேட்டா தூங்கிட்டு காலையில அசந்து தூங்கினாலும் தூங்குங்க. நாம போயி தொந்தரவு செய்துவிடக் கூடாது என்று எண்ணி தாமதமாக வீட்டுக்கு வந்த அலமேலு மகனின் எரிச்சலை பார்த்ததுமே கண்டு கொண்டார்.

‘எலியும் பூனையுமா தான் இருக்கீங்களா! குடும்பம் விளங்கின மாதிரிதான்’ என்று மனதில் நினைத்ததை வெளியில் சொல்லாமல்,

“தூங்கிட்டேன் ப்பா” என்று சமாதானமாக சொல்லிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.

ஒரு காலை தரையில் ஊன்றியபடி பைக்கிலேயே அமர்ந்திருந்த நாராயணன் மாமியாரின் தலை மறைந்ததும், “என்னடா மாப்ள? பொண்ணு என்ன சொல்லுது?” என்றார்.

அவரை முறைத்தவன், “நா வேணுன்னா போயி கேட்டுட்டு வரவா?” என்றான்.

“சரி சரி, கடுப்படிக்காத.. நேத்து உன் மாமனார் வீட்டு விருந்துக்கு போயிட்டு வந்துட்ட. இன்னைக்கு மச்சான் வீட்டுக்கு வந்துடு” என்றார்.

“ப்ச்… ஏன் மாமா நீ வேற!” – அலுத்து கொண்டான்.

“என்னடா மாப்ள இப்படி அலுத்துக்குற! ஏதோ உம்பேர சொல்லி ஒரு நாள் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு பார்த்தா விடமாட்ட போலருக்கே!” என்றார்.

“இன்னொரு நாள் பார்த்துக்கலாம் மாமா. இன்னைக்கு வேலை இருக்கு. நல்ல கொத்தனார் ஒருத்தனை வர சொல்லு. பாத்துரூமு தரையெல்லாம் வெடிச்சு போயி, கதவு ஒடஞ்சி கிடக்கு. அவ சங்கடப்படுறா” என்றான்.

“அதுவும் சரிதான். செலவு புடிக்குமே! உன் மாமனாறுக்கிட்ட வேணுன்னா ஒரு வார்த்தை போட்டு வைக்கவா?”

“அதெல்லாம் வேண்டாம் மாமா. நீ பாட்டுக்கும் அவருகிட்ட போயி எதுவும் கேட்டுடாத. நா பார்த்துக்கறேன்” என்று உடனடியாக மறுத்தவன், “நீ கொத்தனார் மட்டும் வர சொல்லு. நா டவுனுக்கு போயி சிமெண்டு மூட்டையும் மணலும் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கறந்து முடித்த பாலை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

*****************


மலையமான் குளித்துவிட்டு டவுனுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது, “இந்த பொண்ணு இப்படி காலையிலேயே கீழ விழுந்து கைய கால ஒடச்சுக்கிட்டு நிக்குதே பார்த்தியா! இந்த எழவுக்கு தான் கொல்லப்பக்கம் கெணத்தடி வரைக்கும் சிமெண்டை போட்டுவிடுன்னு தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன், கேட்டியா? சுரக்க சுரக்க அங்க கொண்ட கொட்டி குடுத்துட்டு இங்க நீ ஒன்னும் இல்லாம இருக்குற” என்று மகனிடம் புலம்பிக் கொண்டே, சூடாக டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார் அலமேலு.

அவனே இயலாமையுடன் வெந்துக் கொண்டிருக்கும் போது அவர் அப்படி அவனை குத்திக் காட்டிக் கொண்டிருந்ததில் சுள்ளென்று அவனுக்கு கோபம் பொங்கியது.

“பேசாம இரும்மா நீ..” என்று அவன் போட்ட அதட்டலில் வீடே அதிர்ந்து போய்விட்டது. அலமேலு அம்மாள் கப்பென்று வாயை மூடிக்கொள்ள, கனிமொழி திடுக்கிட்டு அவனை பார்த்தாள். ‘என்ன இப்படி கத்தறான்! முரடான இருப்பானோ!’ என்று எண்ணிக் கொண்டாள்.

அதன் பிறகு அவனுடைய கருத்த முகம் மேலும் கருத்து கடுகடுவென்றுதான் இருந்தது. வெள்ளை வேட்டி சட்டையை அணிந்துக் கொண்டு, தலை சீவி.. கையில் ஒரு ரப்பர் வாட்ச்சை கட்டிக் கொண்டு, பாக்கெட்டில் பர்ஸை எடுத்துத் திணித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி செருப்பை போட்டான்.

“வெறும் வயித்தோட போகாம, இந்த டீயை குடிச்சுட்டு போய்யா..” என்றார் அலமேலு மகனின் கோபத்தை பொருட்படுத்தாமல்.

“வேண்டாம்.. வேண்டாம்” என்று எரிச்சலுடன் மொழிந்துவிட்டு வாசல்வரை சென்றவன் மீண்டும் உள்ளே வந்து கனிமொழியிடம்,

“டவுனுக்கு போறேன், உனக்கு ஏதாவது வேணுமா?” என்றான்.
அவள் அவனை விசித்திரமாக பார்த்தாள். உன்னால் எனக்கு என்ன வாங்கி கொடுக்க முடியும் என்றது அந்த பார்வை. அந்த பார்வையில் இருந்த ஏளனம் அவனை மேலும் காயப்படுத்தியது.

“ம்மா, போனுக்கு கார்டு கீர்டு ஏதும் வேணுமான்னு கேளு” என்று தாயை அவர்களுக்கு நடுவில் இழுத்தான். சற்று நேரத்திற்கு முன் அவள் சிக்கினால் கிடைக்காமல் மொபைலை தூக்கிப் பிடித்தபடி அலைந்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டு, போனில் காசு தீர்ந்துவிட்டதோ என்று எண்ணித்தான் அதைக் கேட்டான்.

அலமேலு அம்மாள் மருமகளை பார்த்தார். “என்ன கார்டு?” – சிம் கார்ட் தான் இருக்கிறதே! இவன் என்ன கார்ட் வாங்கப் போகிறான் என்கிற நினைவில் புரியாமல் அவள் மாமியாரிடம் சந்தேகம் கேட்க, “போனுக்கு காசு போடணுமான்னு கேக்குறான்” என்றார் அவர் விளக்கமாக.

“ஓ! என்னோடது போஸ்ட்பெய்டு” – சுருக்கமாக பதிலளித்தாள். ஆனால் அந்த பதில் அவருக்கு புரியவில்லை. குழப்பத்துடன் மகனைப் பார்த்தார்.

“பேசிட்டு அப்பறமா காசு போடறது. கரண்டு பில்லு மாதிரி” என்று தாய்க்கு விளக்கம் கொடுத்தான் அவன்.

“ஆங்! மாசாமாசம் கட்டுறதா! எவ்வளவு வரும்?” – என்றார் அதிசயமாக. பத்துரூபாய்க்கு கார்ட் வாங்கி போட்டால் போனில் பேசலாம் என்பதுதான் அவருக்கு தெரிந்த விபரம். இது புதிதாக இருக்கிறதே, இதற்கு எவ்வளவு கட்டவேண்டியிருக்கும்… கம்மியாக இருந்தால் மக்களிடம் சொல்லி அவளையும் இது போல் ஒரு போனை வாங்கிக்கொள்ள சொல்லி அவளுடைய செலவை குறைக்கலாம் என்றெல்லாம் அவருடைய சிந்தனைகள் நொடி பொழுதில் ஊரை சுற்றிவிட, “ஐயாயிரம்… ஆறாயிரம் வரும்” என்று அசால்ட்டாக சொன்னாள் கனிமொழி.

அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை குத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னாள் அவள். அவள் எதிர்பார்த்தபடியே மலையமானின் தாடை இறுகியது. அதை அவள் திருப்தியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “அட கிரகமே!” என்று மருமகளின் கையிலிருந்த ஐ-போனை பார்த்த அலமேலு, “அத தூக்கி கெட்டப்புல போட்டுட்டு, தாமரை வச்சிருக்க மாதிரி ஒரு நல்ல போனா வாங்கிக்க கண்ணு.. பத்து ரூவாய்க்கு கார்டு போட்டா பத்து நாளைக்கு பேசலாம்” என்றார் வெகு தீவிரமாக.

வார்த்தைகள் வற்றி போய்விட மாமியாரை பரிதாபமாக பார்த்தாள் கனிமொழி.
Comments are closed here.

error: Content is protected !!