Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 8

அத்தியாயம் – 8
“ஏண்டா தம்பி, என்னைய தான் புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து ஒதுக்கிப்புட்டிங்க. வீட்ல ஒரு பொம்பள நாயா பேயா உங்களுக்கு உழைச்சு கொட்டிக்கிட்டு கெடக்கே.. நகை எடுக்க போற நீ அதை கூடவா அழைச்சுக்கிட்டு போகக் கூடாது?” – விழா முடிந்து வீட்டுக்கு வந்து சொந்தபந்தங்களை அனுப்பிவிட்டு குடும்பத்தினர் ஓய்ந்து அமர்ந்திருந்த போது திடீரென்று பிரச்னையை கிளம்பினாள் தாமரை.

தேங்காய் விற்ற பணம் தனக்கு வந்து சேரும் என்று நாராயணன் நம்பிக் கொண்டிருக்க, அது நகையாக மாறிவிட்டதே என்னும் கடுப்பில் மனைவியை பேச விட்டுவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் மனிதர். அவருக்கு இன்னொரு சந்தேகமும் இருந்தது.

‘தேங்காய் விற்ற பணத்தில் தாலி வேண்டுமானால் வாங்கியிருக்கலாம். ஆனால் செயின் வாங்குவதற்கு நிச்சயம் பணம் போதாதே! என்ன செய்திருப்பான்!’ – மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாக மைத்துனன் வாயை திறக்க காத்திருந்தார்.

கனிமொழி தாமரையை கடுப்புடன் பார்க்க, அலமேலு பிரச்னையை வளர்க்க விரும்பாமல், “யாரு வாங்கியாந்தா என்ன? நகை நல்லா இருந்ததே போதும், விடு” என்று மகளை அதட்டினாள்.

“அது எப்படிம்மா விட முடியும்? வீட்ல பெரிய மனுஷின்னு நீ எதுக்கு இருக்க? கூட பிறந்தவன்னு நா எதுக்கு இருக்கேன்? கல்யாணம்தான் தானா போயி பண்ணிக்கிட்டு வந்துட்டான். மத்த நல்லது கெட்டதுக்காவது நம்மள கூப்பிடணுமா வேண்டாமா?”

“என்னக்கா நீ இப்படி பேசுற? கல்யாணத்தன்னைக்கே இந்த நகையை நாம வாங்கியிருக்கணும். அன்னைக்கு முடியல. எல்லாம் அவசரமா நடந்து போச்சு. தாலி பிரிச்சு கோர்க்கறன்னைக்குள்ள எப்படியாவது வாங்கிடணும்னு பார்த்துகிட்டு இருந்தேன். போன வருஷம் வர வேண்டிய மானியப்பணம் சரியா நேத்து வந்துச்சு. வீட்ல கொண்டு வந்து வச்சா செலவாயிடுமேன்னு வரும் போதே நகையை வாங்கிகிட்டு வந்துட்டேன். மத்தபடி உன்ன கூப்பிடக் கூடாதுன்னு எல்லாம் இல்ல. காலையில கூட உன்கிட்ட சொல்லியிருப்பேன். நீதான் பட்டாசை கொளுத்திப்போட்ட மாதிரி படபடன்னு வெடிச்சுக்கிட்டு இருந்த. எனக்கு எதுவுமே நெனப்பு வரல…” என்றான் பொறுமையாக.

“என்னது! மானியப்பணத்தை கொண்டு போயி நகை வாங்கிகிட்டு வந்துட்டியா!” – அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தேவிட்டார் நாராயணன்.

“அது அவனுக்கு வந்த பணம். என்னவாவது பண்ணிட்டு போறான். நீங்க எதுக்கு அடிச்சுக்கிறிங்க?” – அலமேலு மருமகனிடம் கேட்க, தாயிடம் பாய்ந்தாள் தாமரை.

“நீ ஒரு ஆளு போதும்மா அவன் கெட்டு ஒழியிறதுக்கு. இப்ப இங்க நகைக்கு என்ன அவசரம்? இவகிட்ட இல்லாத நாகையா? வீடு பூரா ஒழுகுது. ஓட்டு மேல தார்பாயை தூக்கி போட்டு வச்சிருக்கான். அது எத்தனை நாளைக்கு தாங்கும்? நல்ல புத்திக்காரனா இருந்திருந்தா வீட்டை பழுது பார்க்கணும்னு நெனச்சிருக்க மாட்டான்?” – அவள் உரக்க பேச கனிமொழி வெடுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள்.

‘இவள் என்ன இப்படி அதிகாரம் செய்கிறாள்! இவன் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்கிறானே’ – மலையமானின் மீது தான் கோபம் வந்தது. அவனை முறைத்துப் பார்த்தாள்.

புருவம் சுருங்க. தாடையை தடவியபடி அவன் வெளிப்புறம் பார்வையை திருப்பியிருந்தான். உண்மையில் தாமரை சொன்ன எதுவும் தவறில்லை. அவனுடைய இன்றைய நிலைமைக்கு இந்த தங்க சங்கிலி அதிகப்படிதான். ஆனால் அவனுக்கு அது அத்தியாவசியமான ஒன்று.

அவன் கனிமொழியிடம் போராடிக் கொண்டிருக்கிறான். அவளுடைய அலட்சியத்தை வென்றுவிட பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அவளிடம் தன்னை நிரூபிக்க சந்தர்ப்பத்தை தேடி கொண்டே இருக்கிறான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ‘உன் அப்பாவைவிட… உனக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையை விட… ஏன் இந்த உலகத்தில் எவனையும் விட நான் குறைந்தவன் இல்லை’ என்று சத்தமாக கத்துகிறான். அவனிடம் குரல் இல்லை.. வார்த்தைகள் இல்லை.. அதனால் தான் செயல்களால் கத்துகிறான். அது இன்னும் அவள் செவியை எட்டவில்லை. எட்டுமா என்றும் தெரியவில்லை. ஆனால் எட்டும் வரை அவன் விடப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

ஒரு பத்து நாட்கள் சென்றிருக்கும். தோப்பிலிருந்த தேக்கு மரம் ஒன்றை வெட்டி, ஆசாரியை வர சொல்லி கட்டில் கோர்க்கச் சொன்னான் மலையமான். கூடவே மெத்தை தைப்பவரை வீட்டுக்கே வர சொல்லி, அந்த கட்டிலுக்கு ஏற்றார் போல் இலவம்பஞ்சில் மெத்தை தைக்க சொன்னான்.

அன்று சீர்வரிசை பற்றி பேச வந்த அங்கப்பன், மலையமானின் மறுப்புக்கு மதிப்புக்கு கொடுத்து கிளம்பிவிட்டார். ஆனால் அதன் பிறகு மணிமேகலையின் வற்புறுத்தலின் பொருட்டு மீண்டும் ஒரு நாள் அவனை சந்தித்து, கட்டில் மெத்தை மட்டுமாவது வாங்கித் தருவதாக சொன்னார். மகள் எந்த வசதியும் இல்லாமல் கஷ்டப்படுவது அவருக்குமே சங்கடமாகத்தான் இருந்தது.

மலையமான் தயங்குவதை கண்டு, ‘கனிக்கு தரையில படுத்து பழக்கம் இல்ல மாப்ள..’ என்றார் அவன் மறுப்பு கூறிவிடும் முன் அவசரமாக.

வெகு அமைதியாக அவர் கண்களை நேராக சந்தித்தவன், “நா பார்த்துக்கறேன் மாமா” என்றான் பிசிறற்ற குரலில். சீர் வரிசை பற்றி பேச வந்த அன்று சொன்ன அதே வார்த்தை…

மலையமான் என்னதான் அமைதியானவனாக தெரிந்தாலும், சொன்னதை கேட்டுக்கொள்ளும் நல்ல பிள்ளை போல் தோற்றமளித்தாலும், அவனுக்குள் ஒரு பயங்கரமான பிடிவாத குணம் இருப்பதை அன்று உணர்ந்துக் கொண்டார் அங்கப்பன்.

அடுத்து வந்த நாட்களில் மலையமான் கனிமொழியை கவனித்தான். இரவு படுக்கும் போது பாய்க்கு மேல் இரண்டு மூன்று போர்வையை கனமாக மடித்துப் போட்டு படுத்து கொண்டிருந்தாள். அப்படியும் சில சமயங்களில் உறங்க முடியாமல் புரண்டு புரண்டு படுப்பதும்.. எழுந்து அமர்ந்திருப்பதுமாக சிரமப்பட்டாள். அதன் பிறகுதான் அவன் மரத்தை வெட்டுவது பற்றி யோசித்தான்.

“இதெல்லாம் ரொம்ப ஓவரும்மா… பொண்ண கட்டிக்கொடுத்தவங்க கட்டிலு மெத்தையை கூட வாங்கி கொடுக்க மாட்டாங்களா?” – தாயிடம் நொடித்துக் கொண்டாள் தாமரை.

“அவங்க எல்லாம் வாங்கித்தரேன்னு தான் சொல்லுறாங்க. உன் தம்பிக்காரன் தான் வேண்டாங்கறான். என்ன பண்ண சொல்ற?”
“இவன் என்ன அவ்வளவு பெரிய குபேரனா? எல்லாத்தையும் வேண்டாம் வேண்டாங்கறான்! வீட்டை கட்டணும்… நிலத்தை வாங்கணும்… ஊரை போல நாட்டைப் போல வாழணும்னு நினைக்கிறானா! இப்படி நகை வாங்கவும்… கட்டிலு கோர்க்கவும் நிக்கிறானே! இதெல்லாம் நல்லாவா இருக்கு?”

“அவன் காச அவன் என்னவோ பண்ணிட்டு போறான். நீ உன் குடும்பத்தை பாரு. உனக்கு எதுக்கு அவன் கவலை” என்று மகளை கத்தரித்தே பேசினாள் அலமேலு.

இத்தனை ஆண்டுகளாக அவனிடமிருந்து பணத்தை வாங்கும் பொழுதெல்லாம் அவன் வீடு கட்டாததற்கும் நிலம் வாங்காததற்கும் கவலைப்படாத மகள், இப்போது அவன் தன் விருப்பத்திற்கு ஏதோ செய்யும் போது தடை போடுகிறாளே என்கிற கோபம் அவருக்குள் இருந்தது.

அடுத்த ஓரிரண்டு நாட்களிலேயே கட்டில் மெத்தை தயாராகி வீட்டுக்கு வந்துவிட்டது. கூடத்தில் சுவற்றோரமாக, தினமும் கனிமொழி படுக்கும் இடத்தில் அதை போட சொன்னான். கொசுவலை கட்டுவதற்கு வசதியாக நான்கு கால்களிலும் கம்பி கொடுத்து செய்யப்பட்டிருந்தது கட்டில். அதில் கொசுவலையை மாட்டியதும் அதுவே ஒரு அறை போல மாறிவிட்டது. கட்டில் ஓரமாக சுவற்றில் இருந்த ஜன்னல் மேடை அவளுடைய தினப்படித் தேவைக்கான பொருட்களை தாங்கி நிற்கும் ஷெல்பாக மாறியது. அவளுடைய கனத்த பெட்டிகள் கட்டிலுக்கு கீழே பாதுகாப்பாக பதுங்கிவிட்டன. அனைத்தும் அவன் பார்வைக்கு வெகு திருப்தியாக இருந்தது. ஆனால் அவள் மனதிலோ பல குறைகள்…

மெத்தை அவளுடைய அறையில் இருக்கும் டியூரோ ஃப்ளக்ஸ் மாதிரி இல்லாமல், கல்லாக இருந்தது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ஓட்டை ஃபேனின் காற்று, ஓரத்தில் போடப்பட்ட அந்த கட்டிலை எட்டுவதே இல்லை. அதுவும் அந்த கொசுவலையை தாண்டி அவளை தீண்டுவது என்பது நடக்காத காரியம். இப்படியெல்லாம் அவள் மனம் குறைகளை தேடி கண்டுபிடித்துக் கொண்டிருந்தால் அவனுடைய மெனக்கடல்களுக்கு அங்கீகாரம் எங்கிருந்துக் கிடைக்கும்?

அவள் முகத்தில் ஒரு சின்ன மலர்ச்சியை, சந்தோஷத்தை பார்த்துவிட முடியாதா என்கிற ஏக்கம் அவன் மனதிற்குள் விதையாக விழுந்து செடியாக முளைத்து செழித்து வளர்ந்து கொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை.


அன்று காலையிலேயே குளித்து முடித்து எங்கோ வெளியே செல்வது போல் தயாராகி இருந்தாள் கனிமொழி. அவள் ஏதாவது சொல்வாள் என்று முகத்தை முகத்தை பார்த்த அலமேலுவின் பக்கம் கனிமொழியின் கவனம் திரும்பவே இல்லை. அவள் தன் போக்கில், கைப்பையில் பொருட்களை சரிபார்த்து வைப்பதும், ஏதோ காகிதங்களை அடுக்கி வைப்பதுமாக தன்னுடைய வேலையிலேயே கருத்தாக இருந்தாள்.

மலையமான் வீட்டில் தான் இருந்தான். மனைவியின் நடவடிக்கைகளை எல்லாம் கவனித்தபடியே மாடுகளுக்கு வைக்கோல் அள்ளி போட்டுக் கொண்டிருந்தான். முகத்தில் கடுமை விரவியிருந்தது. அன்று அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி தன் போக்கிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாளே என்கிற கோபம் அவனை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது. வீட்டிற்குள் வந்தால் ஏதாவது கடுமையாக சொல்லிவிடுவோம் என்று எண்ணி வேலை செய்வது போல் கொட்டகையிலும் கட்டுத்தரையிலுமே சுற்றிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் அங்கே ஒரு ஸ்கூட்டி வந்தது… வந்தவள் ப்ரீத்தி. அவனைப் பார்த்ததும் வழக்கம் போல, “நல்லா இருக்கீங்களா அண்ணா?” என்றாள் பளீர் புன்னகையுடன்.

“வாங்கம்மா.. நீங்க நல்லா இருக்கீங்களா?” – மனைவியின் மீது இருக்கும் கோபத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்த பெண்ணிடம் நல்லவிதமாக பேசினான்.

அதற்குள் வெளியே ஓடி வந்த கனிமொழி, “வாடி.. வாடி.. என்ன லேட் பண்ணிட்ட?” என்றாள் பரபரப்பாக. கையில் ஒரு ஃபைலும் கைப்பையும் இருந்தது.

திண்ணையில் அமர்ந்து கல் உரலில் உளுந்து உடைத்துக் கொண்டிருந்த மாமியாரிடம், “காலேஜ்ல ஒரு சின்ன வேலை இருக்கு. போயிட்டு வந்துடறேன்” என்றாள்.

அலமேலுவின் பார்வை கட்டுத்தரையில் மாடுகளோடு வேலை செய்து கொண்டிருந்த மகனிடம் திரும்பியது. “தம்பிகிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு போ கண்ணு” என்றார்.

அவருக்கு தெரியும், மகனும் மருமகளும் இன்னும் மனமொத்து வாழ துவங்கவில்லை என்று. அன்று காலையிலிருந்து அவனிடம் காணப்படும் இறுக்கத்திற்கு காரணம் கனிமொழியின் நடவடிக்கைதான் என்பதையும் புரிந்திருந்தார். அவர்களுக்குள் இருக்கும் விலகல் இன்னும் அதிகமாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் மருமகளை வழிநடத்தினார்.

‘அவனிடம் சொல்லி அனுமதி வாங்கி கொண்டுதான் செல்ல வேண்டுமா’ என்று எரிச்சல் பட்டாலும், அந்த மூத்த பெண்மணியின் வாத்தையை தட்ட முடியாமல் அவனிடம் நெருங்கினாள் கனிமொழி. அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் எங்கோ பார்வையை பதித்தபடி, “காலேஜ்ல ஒரு வேலை இருக்கு. வர்றதுக்கு ஈவினிங் ஆகும்” என்று கடமைக்கு கூறிவிட்டு விலகி நடந்தாள்.

‘இவ என்கிட்ட சொல்லிட்டுப் போறாளா.. இல்ல இந்த மாட்டுக்கிட்ட சொல்லிட்டுப் போறாளா!’ என்று பற்கள் நறநறக்க அவள் முதுகையே வெறித்துப் பார்த்தான் மலையமான்.


அவர்கள் படித்த கல்லூரியில் விரிவுரையாளர் பணியிடம் காலியிருப்பதை அறிந்து தோழிகள் இருவரும் விண்ணப்பித்திருந்தார்கள். இன்டர்வியூவிற்கான அழைப்பு மெயிலில் வந்திருந்தது. அதில் கலந்துகொள்வதற்கு தான் இருவரும் சென்றுக் கொண்டிருந்தார்கள்.

“அந்த அண்ணா உன்கிட்ட நல்லாதானே நடந்துக்கிறாங்க! உனக்காக பார்த்துப்பார்த்து செய்றாங்க.. ஏண்டி இப்படி பண்ற? அவங்க முகமே மாறிடுச்சு” – ப்ரீத்தி வருத்தப்பட்டாள்.

‘அவன் நல்லா நடந்துக்கிட்டா மட்டும் எல்லாம் சரியாயிடுமா? அவனால என் வாழ்க்கையே போயிடிச்சு. அவன் மட்டும் அன்னைக்கு ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா! மணவறைக்கு வராம இருந்திருந்தா! என் கழுத்துல தாலி கட்டாம இருந்திருந்தா!’ – யோசிக்கும் போதே தொண்டையை அடைத்தது.

“ப்ரீத்தி, எனக்கு இந்த வேலை கிடைக்கணும். இல்லன்னா அந்த வீட்ல மூச்சு முட்டியே செத்துடுவேன் போலருக்கு” – கம்மிய குரலில் கூறினாள்.

வயல்வெளிக்கு நடுவில் ஓடிய மண் சாலையில் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு தோழியின் பக்கம் திரும்பினாள் ப்ரீத்தி.

“ஏண்டி.. அந்த தோப்பும் வீடும் எவ்வளவு அழகா இருக்கு! அங்க மூச்சு முட்டுதா உனக்கு? கண்ணை தெறந்து பாருடி. வேலையில்லன்னா செத்துடுவாளாம்ல!” – பொருமினாள்.

கனிமொழி தோழியை முறைத்தாள்.

“என்னடி அப்படி பார்க்கற?”

“இப்படியெல்லாம் ஹைப் கொடுத்து பேசினா.. நா அப்படியே மயங்கி அவன் பின்னாடி போயிடுவேனா? எதுக்குடி இப்படியெல்லாம் பேசுற? என்னைய குழப்பி நீ என்ன சாதிக்க போற?” – கடுமையாக பேசினாள்.

அன்றொரு நாள் அவள் அவனை ஹீரோ ரேஞ்சிற்கு கொண்டாடிவிட்டு போய்விட, இவள் மனமும் அல்லவா சற்று அசைந்துவிட்டது. அதை நினைக்கும் போது அவளுக்கு தன் மீதே கோபம் வந்தது. போயும் போயும் இவனிடமா! என்பது போல… அந்த கோபத்தைத்தான் இப்போது தோழியிடம் கொட்டினாள். ப்ரீத்தி ஒரு கணம் வாயடைத்துப் போய்விட்டாள்.

“என்னடி இப்படி எல்லாம் பேசுற! உன்ன குழப்பி நா என்ன செய்ய போறேன். மனசுல பட்டதை சொன்னேன். நீதான் தேவையில்லாததை எல்லாம் யோசிச்சு குழப்பிக்கிட்டு இருக்க. கல்யாணம் ஆயிடிச்சு. இனி இந்த வாழ்க்கையை கொஞ்சம் சரி பண்ண பாரேன். அதைத்தானே அந்த அண்ணாவும் ட்ரை பண்ணறாங்க”

“யார் என்ன ட்ரை பண்ணினாலும் என் மனசு மாறாது. என்னால இறங்கிப் போக முடியாது. இது என்னோட லைஃப்ஸ்டைல் இல்ல” – பிடிவாதமாக கூறினாள்.

தோழியை கவலையுடன் பார்த்த ப்ரீத்தி, “என்னடி பண்ண போற?” என்றாள்.

“இந்த கல்யாணம் எங்க அப்பா செஞ்சு வச்சது. அவரோட முடிவு தப்புன்னு சொல்லிட்டு அவர்கிட்டேயே போயி நிக்க முடியாதுல்ல”

“அதுக்கு?”

“நா என்னோட சொந்த கால்ல நிக்கணும். தனியா வாழற தகுதியை வளர்த்துக்கணும்” என்றாள்.

ப்ரீத்தி பதட்டத்துடன், “கனி! எது பண்ணினாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பண்ணுடி” என்று கூற,

“கல்யாணாம் ஆனதிலிருந்து இதை மட்டும்தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்” என்றாள் கனிமொழி வெகு உறுதியாக.


Tags:


Comments are closed here.