Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 16

அத்தியாயம் – 16

கனிமொழியை வீட்டில் கொண்டுவந்து விட்டதோடு கடமை முடிந்தது என்று பண்ணைக்கு கிளம்பியவன், மாலை எத்தனை லிட்டர் பால் கண்டது.. வேனுக்கு எத்தனை லிட்டர் ஊற்றினார்கள் என்பதையெல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு மாடுகளுக்கு தீவன புல் அறுக்க கொல்லைக்கு போய்விட்டான். அதன் பிறகு அவனுக்கு நிற்க நேரமில்லை. இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தான்.

மருமகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு மகள் வீட்டுக்கு போக முடியாமல் திண்ணையிலே படுத்துவிட்ட அலமேலு மகன் பைக் சத்தத்தைக் கேட்டு தூக்கம் களைந்து எழுந்தார்.

“என்னய்யா இவ்வளவு நேரம்! காலையில மூணு மணிக்கெல்லாம் எழுந்திருக்கிற நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து சாப்பிட்டு படுத்தா என்ன?” என்று புலம்பிக் கொண்டே எழுந்து உள்ளே சென்று சமையல் கொட்டகையில் பாத்திரங்களை உருட்டினார்.

தாயை தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்த மலையமான் கூடத்தில் தயங்கி நின்றான். கட்டிலில் அவள் உறங்கி கொண்டிருந்தாள். அவள் ஒருத்தி இல்லாதது அந்த வீடே பாழடைந்த மண்டபம் போல் ‘ஓ’வென்று ஆகிவிட்டது. இப்போதுதான் வீடு நிறைந்திருப்பது போல் தோன்றியது அவனுக்கு.

‘ஒண்ணுமே நடக்காதது மாதிரி எப்படி தூங்குறா பாரு!’ – அவன் மனதில் கோபம் எழுந்தது. அதில் கொஞ்சம் உரிமை உணர்வும் கலந்திருந்தது.

பெருமூச்சுடன் கொல்லைப்புறத்திற்கு சென்று தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டான்.

“என்னத்துக்கு இந்த நேரத்துல குளிக்கிற?” – கொட்டகையிலிருந்து குரல் கொடுத்தார் அலமேலு.

“மாட்டுக்கு புல்லு அறுத்துப் போட்டுட்டு வந்தேன். ஒரே சுணை…” என்றபடி குளித்துவிட்டு வந்தான்.

“ஒரு ஜான் வயித்துக்குத்தானே இந்த பாடு. நேரத்திலேயே வந்து சாப்பிட்டா என்ன?” என்று கடிந்து கொண்டபடியே மகனுக்கு சுடசுட தோசை சுட்டு கொடுத்தார் தாய்.

“அவ சாப்பிட்டாளாம்மா?” – அந்த கேள்வியை மட்டும் அவன் எப்போதும் மறந்ததில்லை.

“சாப்பிட்டா சாப்பிட்டா… நீ சாப்பிடு” – மகனை பசியாற்றுவதில் மும்மரமாக இருந்தது தாய் மனம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அவனுக்கு இன்னொரு விஷயம் புரிந்தது.

‘அம்மா இன்னைக்கு அக்கா வீட்டுக்கு போகலையே! வெளியே படுத்தா ஏதாவது நினைக்குமோ!’ – குழப்பத்துடனேயே சாப்பிட்டு முடித்தவன் வழக்கத்தை மாற்றாமல் கட்டிலை தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தான். எதிர்பார்த்தது போலவே அலமேலுவிடம் சட்டென்று ஒரு இறுக்கம் வந்தது. தாயை திரும்பிப் பார்க்காமலே வாசலில் சென்று படுத்து கொண்டான் மலையமான்.

‘கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி! இந்த கொடுமையை எங்க போயி சொல்லுவேன் நான்’ – புலம்பிக் கொண்டே திண்ணையில் படுத்தார்.

மறுநாள் காலை கனிமொழி மாற்றுடையோடு குளிக்க கிணற்றங்கரை பக்கம் சென்ற போது, கொல்லைப்புறத்தை கூட்டிக் கொண்டிருந்த அலமேலு மருமகளின் தலையைக் கண்டதும், “முடுக்குத்தெரு மூக்காயி மவனுக்கு மூணாம் மாசம்தான் கல்யாணம் ஆனுச்சு.. அவ மறுமவ முழுகாம இருக்காளாம்! மசக்கைக்கு மங்கா வாங்க என்னுகிட்ட வாரா! ஊரு உலகத்துல அப்படிதான்… பந்தல்ல கட்டின வாழைமரம் காயிறதுக்குள்ள அடிவாழ மொளச்சிடுது… இந்த வீட்லதான் எதையும் காணும்… நா ஊரை பார்த்து உமுறு குடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்!” என்று ஜாடை பேச்சில் வெளுத்து வாங்கினார்.

கனிமொழி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எப்பொழுதுமே அலமேலு அவளிடம் நன்றாக நடந்து கொள்வதாலோ… அல்லது அவர் பேசுவதில் நியாயம் இருப்பதாக நினைத்ததாலோ அவருடைய பேச்சை அவள் பொருட்படுத்தவில்லை.

‘அட நம்ம ஆளும் டிபிக்கல் மாமியார் தான் போல!’ என்று ஒரு சின்ன நையாண்டியுடன் கடந்துவிட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் அந்த குடும்பத்தின் வாரிசை பற்றிய எதிர்பார்ப்பை அடிக்கடி தன்னுடைய பேச்சில் வெளிப்படுத்தினார் அலமேலு. அந்த பேச்சை பல நேரங்களில் பொருட்படுத்தாமல் கடந்து சென்றாலும் சில நேரங்களில் வருத்தப்பட்டாள் கனிமொழி.

கனிமொழி வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. வீட்டில் அவனை பார்க்கவே முடியவில்லை. இப்படி கண்ணில் கூட காண முடியாமல் பண்ணையிலேயே கிடையாய் கிடக்கிறவன் எதற்காக தன்னை இவ்வளவு அவசரமாக அழைத்துக் கொண்டு வந்தான் என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டாள். அன்று வெள்ளி கிழமை. அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை நாள். வீட்டில் தான் நாள் முழுவதும் இருப்பாள்.

‘மவனே! எங்க ஓடி ஒளியிறேன்னு பார்க்கறேன்..’ – மனதிற்குள் ஒருவித மகிழ்ச்சி… எதிர்பார்ப்பு… தனக்குள் அவள் மாற்றத்தை உணர துவங்கியிருந்தாள்.

அன்று மாலை கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே அவனை எதிர்பார்க்க துவங்கியிருந்தது அவள் மனம். ‘மிட்நைட் வரைக்கும் அப்படி என்ன பண்ணறான் பண்ணையில!’ – ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள். ‘இன்னைக்கு அவனை பார்க்காம தூங்க கூடாது’ – பிடிவாதத்துடன் புத்தக வாசிப்பில் ஈடுபட்டாள்.

பண்ணையில் வேலைகளை முடித்துக் கொண்டு வழக்கம் போல பத்தரை மணிக்கு மேல் வீடு திரும்பினான் மலையமான். வழக்கத்திற்கு மாறாக கூடத்தில் மின்விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. ‘தூங்காமலா இருக்கா!’ – யோசனையுடன் பைக்கை நிறுத்தினான். திண்ணையில் படுத்திருந்த அம்மா அசதியில் ஆழ்ந்து உறங்கிவிட அவன் சின்ன எதிர்பார்ப்புடன் வீட்டுக்குள் நுழைந்தான். அவ்வளவுதான்… அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே நின்றுவிட்டான். புத்தகம் நெஞ்சில் கவிழ்த்துக் கிடக்க சேரில் அமர்ந்த நிலையிலேயே ‘ஆ’வென்று உறங்கி கொண்டிருந்தாள். ரசனையுடன் கூடிய சின்ன சிரிப்பு அவன் முகத்தில் தோன்றியது. சற்று நேரம் அவள் அப்படி உறங்குவதை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு மெல்ல அவளிடம் நெருங்கி, புத்தகத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, “கனி… க..னி…” என்று எழுப்பினான்.

மூடியிருந்த இமைகளை சிரமப்பட்டு பிரித்தவளின் உறக்கம் கலையவில்லை. கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருக்க… தான் எங்கிருக்கிறோம் என்பதே புரியாதது போல் விழித்தாள்.
அவள் எடையை விட இரு மடங்கு கூடுதல் எடை கொண்ட வண்டியில், குண்டும் குழியுமான கிராமத்து சாலையில் தினமும் இருமுறை பயணிக்கிறாள். அலுப்பு இருக்கத்தானே செய்யும்! அவன் மனம் கனிந்தது.

“படுத்து தூங்காம எதுக்கு உட்கார்ந்துக்கிட்டே தூங்குற? எந்திரிச்சு போயி பெட்ல படு” என்று அவளை எழுப்பினான்.

“ஆங்… நீங்க… ஏன்… இவ்வளவு லேட்டு?” – தூக்கக் கலக்கத்துடன் கேட்டுக் கொண்டே அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் மெத்தையில் சாய்ந்துவிட்டாள்.

கொசுவலையை ஒழுங்காக இழுத்துவிட்டபடி, “என்னவோ நமக்காகவே காத்துக்கிட்டு இருந்த மாதிரி கேட்குறா பாரு கேள்வி!” என்று எண்ணியவனுக்கு, ‘ஒருவேளை காத்துகிட்டு தான் இருந்தாளோ!’ என்கிற எண்ணம் எழ, நெஞ்சுக்கு கூட்டுக்குள் ஐஸ்க்ரீமை கொட்டியது போல் குளுமையும் இனிமையாக இருந்தது. அவளை உலுக்கி எழுப்பி, ‘எதுக்கு அப்படி கேட்ட?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவள்பாட்டுக்கு ஒரு கேள்வியை கேட்டுவிட்டு குறட்டைவிட துவங்கிவிட்டாள். அவன்பாடுதான் திண்டாட்டமாக போய்விட்டது.

குனிந்து கொசுவலையை இழுத்துவிட்டுக் கொண்டிருந்தவன் அப்படியே அவள் காதுக்கருகே சென்று, ‘சாவடிக்கிறடி’ என்று கூறிவிட்டு விலகி கொல்லைப்புறம் சென்றான்.

மறுநாள் கண்விழிக்கும் போதே இரவின் நினைவோடுதான் எழுந்தாள் கனிமொழி. அப்படி ஒன்றும் அவளுக்கு அனைத்தும் மறந்து போய்விடவில்லை. படித்துக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்பது தெரியவில்லை.. ஆனால் மலையமான் தன்னை எழுப்பியது நினைவிருந்தது. அதன் பிறகு கூட பக்கத்தில் வந்தான்..! ஏதோ சொன்னான்..! என்ன சொன்னான்! அல்லது ஏதாவது செய்தானா! – அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் பதிவது போன்ற காட்சி மனக்கண்ணில் தோன்ற விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறியிருந்தது. கண்ணாடியை எடுத்து முகம் பார்த்தாள். கன்னத்தில்… நெற்றியில் ஏதேனும் மார்க் தெரிகிறதா என்று ஆராய்ந்தாள். ஒன்றும் தெரியவில்லை…

‘ஒருவேளை எல்லாம் கனவோ!’ – குழம்பிப் போனவள் எதற்குத்தான் தூங்கினோமோ என்று தன்னைத்தானே நொந்துக் கொண்டாள்.

சனிக்கிழமை வரட்டும்… நீ எங்க போயி ஒளியிறேன்னு பார்க்கறேன் என்று சவால்விட்டுக் காத்திருந்தவள் இப்போது இரவு என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்கிற கற்பனையில் அவனை எதிர்கொள்ள முடியாமல் அவசர அவசரமாக குளித்துவிட்டு லைப்ரரிக்கு கிளம்பினாள்.

அன்று காலை உணவுக்கு சற்று தாமதமாக வீட்டுக்கு வந்த மலையமான், வரும் பொழுதே பைக்கில் ஏதோ ஒரு பெரிய சாக்கு மூட்டையை கட்டி கொண்டு வந்தான்.

“என்னப்பா லேட்டு… ராத்திரியும் ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையான்னு தெரியல. காலையிலையாவது சீக்கிரம் வந்து பசியாறிட்டு போகலாம்ல?” – கடிந்து கொண்டார் தாய்.

“பனங்காட்டுக்கு போயிட்டு வந்தேம்மா… பசங்க வந்தானுங்க… கொஞ்சம் நுங்கு வெட்டிப் போட சொல்லி கொண்டு வந்தேன்” என்று மூட்டையை அவிழ்த்து கொட்டினான்” – கண்கள் கனிமொழியின் வண்டியை காணாமல் தேடின.

“மருமகளுக்கு என்னமோ புத்தகம் படிக்கணுமாம்… டவுனுக்கு போயிருக்கு” என்றார்.

அவன் முகமே மாறிவிட்டது. ‘டவுனுக்கா! இன்னைக்கா!” என்றான் ஏமாற்றத்துடன். எவ்வளவு ஆசையாக அவளை பார்க்க ஓடி வந்தான்! பனைமரம் ஏறும் ஆட்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்னும் கூட விரைவாக வந்திருப்பான்… ஆனால் என்ன பிரயோஜனம்!

முதல்நாள் இரவு ‘ஏன் லேட்?’ என்று அவள் கேட்ட கேள்வியில் இருந்தது ஆசையா அக்கறையா அல்லது வெறும் வார்த்தைதானா என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு அடங்கவே இல்லை. இப்போது தெரிந்துவிட்டது… வார்த்தைக்காகத்தான் கேட்டிருக்கிறாள்.. கோபம் பொங்கியது.

‘படிக்க போயிட்டாளாம்! நேத்து நைட்டு படிச்சு கிழிச்சதைத்தான் பார்த்தேனே! ஏன் இங்கயெல்லாம் உட்கார்ந்து படிக்க முடியாதா! டவுனுக்கு தான் போகணுமா!’ – கடுப்புடன் நினைத்துக் கொண்டான். டவுனுக்கு என்றதும் மீண்டும் பெற்றோரின் வீட்டுக்கு போயிருக்கிறாள் என்று எண்ணினான். கல்லூரி இல்லாத போது அவள் வேறு எங்கு போக முடியும்! லைப்ரரி எல்லாம் அவன் யோசனைக்கு வரவே இல்லை.

அலைபேசியை எடுத்து சகோதரிக்கு அழைத்து அபியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வர சொல்லிவிட்டு குளிக்கச் சென்றான். அலமேலு மகனுக்கு கஞ்சியும் கருவாடு வறுவலும் எடுத்து வைத்தார். நன்றாக சாப்பிட்டான்.. பசி அடங்கியதும் கொதித்துக் கொண்டிருந்த உணர்வுகளும் கட்டுக்குள் வந்தன. அதற்குள் தாமரையும் அபியும் வந்துவிட அவர்களுக்கு நுங்கு சீவி கொடுத்தான். அவர்களோடு அலமேலுவும் சேர்ந்துகொள்ள, அபி விரல் வைத்து குடிக்க தெரியாமல் அலப்பறை செய்தாள். அவளை பார்த்து குடும்பமே ரசித்து சிரிக்க மாமன் எடுத்துக் கொடுத்து அவளை உன்ன சொன்னான். அப்போது தான் கனிமொழியின் வண்டி வாசலில் வந்து நின்றது.

தாமரை தான் முதலில் திரும்பிப் பார்த்தாள். கனிமொழியை கண்டுவிட்டு முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள். மலையமான் அவள் வந்ததை கவனித்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அலமேலுவும் அபியும் ஒருவரோடு ஒருவர் பேசியபடி திரும்பி அமர்ந்திருந்ததால் அவளை கவனிக்கவில்லை.
யாருமே தன்னை கண்டுகொள்ளாதது போல் தோன்ற வண்டியை ஓரமாக தள்ளிவைத்து ஸ்டான்ட் போட்டுவிட்டு, தன்னுடைய கைப்பை, புத்தகங்கள் மற்றும் இதர சாமான்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்த கனிமொழி தனிமையாக உணர்ந்தாள்.

தொட்டாற்சிணுங்கி போல் ஏன் அவள் மனம் இப்படி சின்ன விஷயத்திற்கெல்லாம் சுருண்டுகொள்கிறது என்று புரியவில்லை அவளுக்கு. மாற்றுடையுடன் கொல்லைப்புறத்திற்கு சென்றவள் ரெஃப்ரெஷ் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் வந்தாள். அப்போதும் அவளை தேடி யாரும் வரவில்லை. பசித்தது, சமையல் கொட்டகையில் ஏதாவது இருக்கிறதா என்று போய் பார்த்தாள். சமையல் வேலைகள் எதுவும் ஆரம்பித்ததற்கான அறிகுறியே இல்லை.

கையில் ஒரு புத்தகம், பிஸ்கட் பாக்கெட் மற்றும் வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வீட்டின் மறுபக்கம் இருக்கும் மாமரத்தடிக்கு சென்று பிளாஸ்டிங் சேரை போட்டு அமர்ந்தாள். அப்போதுதான் மருமகளை கவனித்தார் அலமேலு.

“ஏங்கண்ணு, எப்ப வந்த நீ!” என்றார் நெல்லி மரத்தடியிலிருந்து உரக்க குரல் கொடுத்து.

“இப்போதான்” – ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு புத்தகத்திற்குள் தலையை நுழைத்துக் கொண்டாள்.

மலையமானுக்கு கோபம் வந்தது. ‘யாரையாவது மதிக்கிறாளா! வீட்டுக்கு அக்கா வந்திருக்கு.. அதை வான்னு ஒரு வார்த்தை சொல்லல. ஒரு சின்ன புள்ள விளையாடிகிட்டு இருக்கு. அதுகிட்ட சிரிச்சு பேசல… என்னத்த அப்படி படிக்கிறாளோ!’ – பற்களை நறநறத்தான்.

“ரெண்டு நுங்கை சீவி கொடுப்பா.. அதுக்கு கொண்ட கொடுக்குறேன்” – அலமேலு மகனிடம் கேட்டார்.

“இங்க வந்து குடிக்க மாட்டாளா? மருமகளை ரொம்ப தாங்காத. தலையில ஏறி உட்கார்ந்துடுவா” – தாமரை தாயை கண்டித்தாள். அதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. இதற்கெல்லாம் ஏன் இடம் கொடுக்கிறாள் என்று அதற்கும் கனிமொழியின் மீதுதான் கோபம் வந்தது. சாதாரணமாக வந்து எல்லோரோடும் ஒரு வார்த்தை பேசிவிட்டு போனால் என்ன! அப்படியென்ன அவளைவிட இங்கு உள்ளவர்களெல்லாம் குறைந்துவிட்டார்கள் என்று ஆத்திரப்பட்டவன், எதையும் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக நான்கைந்து நுங்குகளை வரிசையாக சீவி வைத்துவிட்டு கை கால் கழுவ கொல்லைப்புறத்திற்கு சென்றான்.

அலமேலு இரண்டு கைகளிலும் நுங்குகளை அள்ளிக் கொண்டு சென்று மருமகளிடம் நீட்டினார்.

“இந்தா குடி, வெயிலுக்கு நல்லது”
நுங்கு, இளநீர், பதனீரெல்லாம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது அதை ருசிக்கும் மனமில்லை. எனவே “வேண்டாம்” என்றாள்.

அந்த அறுபது வயது முதியவர் கை நிறைய நுங்கு காய்களோடு நிற்க, தான் சட்டமாக அமர்ந்துக் கொண்டு ஹோட்டல் சர்வரிடம் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அவள் உணரவில்லை.

அலமேலு அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “ஏன் கண்ணு?” என்று அப்பாவியாக கேட்க, அதை பார்த்துக் கொண்டிருந்த அவர் பெற்ற பிள்ளைகள் இருவருக்கும் பற்றிக் கொண்டு வந்தது.

“ம்மா… நீ போயி உன் வேலையை பாரும்மா” – தாமைரை எதுவும் சொல்வதற்கு முன் தாயை கடுமையாக அதட்டியபடி மாமரத்தடிக்கு வந்தான் மலையமான்.

திடுக்கிட்டுப் போய் கனிமொழி நிமிர்ந்து பார்க்க, “எதுக்குடா இப்படி கத்துற?” என்று மகனை திருப்பி அதட்டிவிட்டு கையிலிருந்த நுங்குகளை கீழே வைத்துவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார் அலமேலு.

மலையமான் மனைவியை முறைத்துப் பார்த்தான். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு அவள் தானே அவன் மீது கோபமாக இருக்க வேண்டும்! இவன் எதற்கு முறைக்கிறான்! – குழப்பத்துடன் பார்த்தாள். அவள் அப்படி பேந்த விழிப்பதைக் கண்டு, ‘அடடா! ஒண்ணுமே தெரியாத பச்ச புள்ள.. முழிக்கிறதை பாரு!’ என்று எரிச்சல்பட்டவன், “அபிக்குட்டி வந்திருக்கா… பார்க்கலையா நீ?” என்றான்.

“பார்த்தேனே..!” – வெகு அலட்சியமாக கூறினாள். பழையபடி அவள் பேச்சில் திமிர் திரும்பியிருப்பதை கவனித்தபடி, “சரி வா… வந்து அவகிட்ட பேசு” என்றான்.

“அப்புறம் பேசிக்கிறேன்”

“ஏன்? அவ என்ன உனக்கு எதிரியா?” – காட்டமாக கேட்டான்.

“அப்படி சொன்னேனா நான்?” – அவள் பேச்சிலும் சூடு ஏறியது.

“பின்ன ஏன் ஒதுங்குற?”

“நா இப்படித்தான்” – பிடிவாதம் பிடித்தாள். அவளுக்கு தாமரையிடம் இறங்கி போக மனமில்லை.

“இந்த மாதிரி பேசிகிட்டு இருந்தா எப்படி? இது உன் வீடு. நீதான் அனுசரிச்சு போகணும்”

“என்னால முடியாது. நீங்க போயி உங்க அக்காவுக்கும் அக்கா பிள்ளைக்கும் நுங்கு வெட்டி குடுங்க. என்னைய என் வேலையை பார்க்க விடுங்க” – சிடுசிடுத்தாள். அவள் வந்த போது அவளை நிமிர்ந்துக் கூட பார்க்காதவன் இப்போது அவனுடைய அக்காவுக்காக மட்டும் நியாயம் பேச வந்துவிட்டான்… முகம் இறுக மீண்டும் புத்தகத்திற்குள் புகுந்துக் கொண்டாள்.

மலையமான் வெகு சிரமப்பட்டு பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். அவள் இப்படியே யாரையும் மதிக்காமல் எடுத்தெறிந்து பேசிக் கொண்டே இருந்தால் எத்தனை நாட்களுக்கு அவனால் இது போல் தாக்குப் பிடிக்க முடியும்! சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அவளுக்கு யார் புரியவைப்பது!
Comments are closed here.