Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே – 18

அத்தியாயம் – 18

கருத்துத் திரண்டிருந்த கார்மேகம் இடியும் மின்னலுமாக மழையை கொட்டித் தீர்த்தது. கோழிகளுக்கு சாரலடிக்காமல் கூடாரத்தை சுற்றி சுருட்டி வைக்கப்பட்டிருந்த மூங்கில் தட்டிகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தான் மலையமான். மழையென்றாலும் புயல் என்றாலும் பால் கறக்கும் வேலைக்கு தேக்கமில்லை என்பதால் கொட்டகைக்குள்ளேயே மாடுகளை தனித்தனியாக அவிழ்து கட்டி பால் கறந்து கொண்டிருந்தார்கள் வேலையாட்கள். சரியாக ஆறுமணிக்கெல்லாம் பால் வேன் பண்ணைக்குள் நுழைய, அதற்கு பின்னாலேயே அலமேலு குடையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தார். ஆட்களிடம் பாலை அளந்து ஊற்ற சொல்லிவிட்டு தாயிடம் விரைந்த மலையமான் அவரை ஒரு கொட்டகைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான்.

“எதுக்கும்மா இந்த சாரல்ல வர்ற? என்ன அவசரம் அப்படி?” – கடுப்படித்தான். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துவிட்டு இப்போதுதான் கொஞ்சம் தேறியிருக்கிறது. அதற்குள் இப்படி மழையில் அலைந்து மீண்டும் இழுத்துக்கொள்ள வேண்டுமா என்கிற ஆதங்கம் அவனுக்கு.

“மருமகளை இன்னும் காணும் ப்பா. மழையா வேற இருக்கு. வண்டியில போற புள்ள, என்ன ஆச்சுன்னு தெரியல” என்றார் கவலையுடன்.

மலையமான் ஆயாசத்துடன் ஆழ மூச்செடுத்து கண்களை மூடி திறந்தான். மீண்டுமா என்றிருந்தது அவனுக்கு. அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்துப் பார்த்தான். பதில் இல்லை. ஒரு கணம் யோசித்துவிட்டு பிறகு மாமனாருக்கு அழைத்து விசாரித்தான். ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கிறவள் இன்று இவ்வளவு தாமதமாகியும் வரவில்லை என்றால் பிறந்த வீட்டுக்குத்தான் சென்றிருப்பாள் என்று நம்பினான். ஆனால் அவள் அங்கு இல்லை என்று பதில் கிடைத்ததும் குழப்பத்துடன் தாயை பார்த்தான்.

“எப்போதும் எத்தனை மணிக்கும்மா வருவா?”

“இந்நேரம் வந்திருக்கணும் ப்பா”

“மழையா இருக்குல்ல, காலேஜிலேருந்தே லேட்டா கிளம்புவாளோ என்னவோ. கொஞ்ச நேரம் போகட்டும், பார்க்கலாம்”

“இல்ல இல்ல… பொம்பள புள்ள நேரத்துக்கு வீட்டுக்கு வரலைன்னா உடனே என்னன்னு பார்க்கணும். நீ கெளம்பு, போயி என்னன்னு பாரு” – மகனை துரிதப்படுத்தி கிளப்பினார் அலமேலு.


பள்ளத்தில் இறங்கிவிட்ட தனது வண்டியை நகர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் கனிமொழி. இடியும் மின்னலும் வேறு அவளை அச்சுறுத்தியது. சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயலும் தோப்பும் தான். உதவிக்கு யாரையும் அழைக்க முடியாது. என்ன செய்வதென்று புரியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்த போது தான் ஆள் அரவமற்ற அந்த கிராமத்து சாலையில் தூரத்தில் இரண்டு ஆட்கள் அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும் தான் அவளுக்கு சற்று நிம்மதியானது.

“என்ன மருமகளே! ரொம்ப நேரமா இங்க நின்னுகிட்டு இருக்க! நம்ம கொள்ளை இந்த பக்கம்தான். போர் கொட்டாயில உட்கார்ந்திருந்தேன். யாரோ பொண்ணு நிக்குதுன்னு நெனச்சேன். தூரத்திலிருந்து கண்ணு தெரியல.. தம்பி சொன்ன பிறகுதான் நீன்னு தெரிஞ்சுது. என்ன ஆச்சு?” – வந்த இருவரில் இளையவன் அமைதியாக நிற்க மூத்தவர் பேசினார்.

தெரிந்த மனிதர்தான். மலையமானுக்கு பங்காளி வீட்டு ஆள். அவரோடு நிற்பது அவருடைய மகன். பத்தாவதோ பன்னிரண்டாவதோ படிக்கும் பள்ளி மாணவன்.

“வண்டி பள்ளத்துல இறங்கிடிச்சு மாமா. தூக்க முடியல”

“நகருங்க அண்ணி. நா எடுக்கறேன்” – இளையவன் அவளை நகர சொல்லிவிட்டு பைக்கை நகர்த்த முயன்றான்.

“மழையில நீக்காத கண்ணு. இந்தா குடைய வாங்கிக்க”

“இல்ல மாமா, நா ஏற்கனவே ஃபுல்லா நனஞ்சுட்டேன். நீங்க நனையாதீங்க” என்றாள் கனிமொழி.

அவளுடைய மறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் குடையை அவளிடம் கொடுத்துவிட்டு மகனுக்கு உதவி செய்தார் அந்த மனிதர். பின் வீல் நன்றாக சகதியில் இறங்கிவிட்டதால் அவர்கள் இருவரும் சேர்ந்து தூக்க முயன்றும் வண்டியை மேலே ஏற்ற முடியவில்லை.

நேரம் ஆக ஆக அவளுக்கு கவலையாக இருந்தது. மழையினாலோ என்னவோ அன்று சற்று விரைவாகவே பொழுது கவிய துவங்கிவிட்டது.

‘பேய் மழை பேயுது.. இருட்ட வேற ஆரம்பிச்சுடுச்சு… இவ்வளவு நேரமாகியியும் நாம வீட்டுக்கு வரலையேங்கற அக்கறை யாருக்காவது இருக்கா!’ – மலையமானை மனதில் நினைத்துக் கொண்டு கருவினாள்.

‘அவன்தான் விருந்தாளி என்று சொல்லிவிட்டானே! அழையா விருந்தாளி.. ஒழிந்தவரை நல்லது என்று நினைத்திருப்பான்’ – மேலும் மேலும் அவள் மனம் அவனையே சுற்றிக் கொண்டிருந்த போது, பரிட்சயமான அந்த பழைய பைக்கின் சத்தம் அவள் கவனைத்தை ஈர்த்தது. திரும்பிப் பார்த்தாள். அவனேதான்! மேகத்தை கிழித்துக் கொண்டு பாயும் மின்னல் போல அவர்களை நோக்கி சீரிப் பாய்ந்து வந்தது அவனுடைய பைக்.

அதுவறை கவலையில் சுருங்கியிருந்த அவள் முகம் சட்டென்று பிரகாசமானது. கண்களில் மலர்ச்சி மீண்டது.

“அவங்க வந்துட்டாங்க மாமா!” – உற்சாகத்துடன் கூறினாள். அவன் வந்துவிட்டால் மட்டும் அப்படியே வண்டியை அலேக்காக தூக்கி மேலே வைத்துவிடுவானா என்ன! மருமகளின் மகிழ்ச்சியை கண்டு புன்னகையுடன் நிமிர்ந்தார் அந்த மனிதர்.

“என்ன சித்தப்பா! வண்டிக்கு என்ன ஆச்சு?” – அவர்களுக்கு அருகில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு விசாரித்தான் மலையமான். அவள் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் அவரிடம் அவன் பேசிய விதத்தில் அவள் முகம் கூம்பியது.

‘திரும்பி கூட பார்க்க மாட்டான்.. அப்புறம் எதுக்கு நின்னு விசாரிக்கணும்? போயிகிட்டே இருக்க வேண்டியது தானே!’ – கடுப்புடன் நினைத்துக் கொண்டாள்.

“வண்டி சேத்துல உட்கார்ந்துருச்சு ண்ணே… தூக்குனா உள்ள இழுக்குது”

“நகரு, கல்லு எதுவும் கிடக்கா பாரு…” என்று கூறியபடி அவனுடைய வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன், சாலை ஓரத்தில் இருந்து இரண்டு கற்களை கொண்டுவந்து டயருக்கு முன் அணைவாக வைத்துவிட்டு, “முன்னாடி பிடிங்க சித்தப்பா, நா பின்னாடி தூக்குறேன்” என்று தூக்கினான். அதிக மெனக்கடல் இல்லாமல் வண்டி மேலே எழும்பியது.

கனிமொழியின் முகம் பூரிப்புடன் மலர்ந்தது. அந்த நேரத்தில் மலையமான் அவள் கண்களுக்கு ஹீரோ போல் தெரிந்தான். ‘எவ்வளவு ஈஸியா தூக்கிட்டான்!’ என்று அவள் அவனை வியந்து பார்க்க அவனோ வழக்கம் போல அவள் புறம் திரும்பாமல் வண்டியை நகர்த்தி வைத்து ஸ்டார்ட் செய்தான். ஸ்டார்ட் ஆகவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி செய்த பிறகு பெட்ரோல் இருக்கிறதா என்று வண்டியை ஆட்டிப்பார்த்தான். நிறையவே இருந்தது. என்ன பிரச்சனை என்று புரியாமல் அவளை பார்த்தான்.

“காலேஜ்லேருந்து வரும்போது பாதியிலேயே நின்னுடுச்சு. ஸ்டார்ட் ஆகவே இல்ல. தள்ளிகிட்டுதான் வந்தேன்” – முணுமுணுப்பாக கூறினாள்.

அவன் முகத்தில் கடுமை கூடியது. அவளை முறைத்துப் பார்த்தான். “உன் போன் எங்க?” – கடுப்புடன் கேட்டான்.

“அட ஏம்ப்பா நீ! வண்டி நின்னு போனதுக்கு புள்ள என்ன பண்ணும். ரொம்ப நேரமா மழையில் நெனஞ்சுகிட்டு நிக்கிது. கூட்டிட்டு போ. நா வண்டியை தள்ளி கொண்டு போயி தோப்புல போட்டு வைக்கிறேன். நீ நாளைக்கு வந்து எடுத்துக்க” என்றார் சித்தப்பா.

“சரி சித்தப்பா” என்று அவரிடம் ஆமோதிப்பாக கூறிவிட்டு தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்தான். ‘வா’ என்று அவளை அழைக்கவில்லை. ஆனால் அவள் ஏறுவதற்காக காத்திருந்தான்.

என்றைக்கும் இல்லாமல் அன்று கனிமொழிக்கு அவனுடைய கோபம் பிடித்திருந்தது. உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் வண்டியில் ஏறி அமர்ந்தாள். முதல் முறையாக அவனுடைய அருகாமை அவளுக்கு பெரிய ஆனந்தத்தை கொடுத்தது. மனம் இனித்தது. புதிதாக அடி வயிற்றில் பட்டாம்பூச்சியெல்லாம் பறந்தது. ‘என்னடா இது!’ என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. கூடவே பயமாகவும்…

அந்த பயத்தினாலோ அல்லது அடித்து ஊற்றிக் கொண்டிருந்த மழையினாலோ அவள் உடல் நடுங்கியது. உள்ளங்கையெல்லாம் சில்லிட்டு போனது. லேசாக சாய்ந்து அவன் முதுகோடு ஒண்டி கொண்டாள். அதை அவனும் உணர்ந்தான். ஆனால் எல்லாம் நம் கற்பனை என்று எண்ணிக் கொண்டு வண்டியின் வேகத்தை கூட்டினான். உடனே பிடிப்பிற்காக அவள் அவனுடைய முதுகு சட்டையை பற்றினாள். ‘கம்பி தான் இருக்குல்ல!’ என்று எண்ணி அவன் பல்லை கடித்தான்.

‘நீருக்கும் இல்லாம நிலத்துக்கும் இல்லாம இது என்ன வாழ்க்கை! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆபத்துக்கு கூட போன் அடிக்காம வண்டியை தள்ளிகிட்டே வந்தவ இப்ப எதுக்கு நம்ம சட்டையை புடிக்கிறா!’ – கடுப்புடன் வீட்டு வாசலில் வண்டியை கொண்டு வந்து நிறுத்தினான். மழை ஓய்ந்துவிட்டது. அவன் மனதிற்குள் அடித்துக் கொண்டிருந்த புயல் ஓயவில்லை.

கனிமொழி இறங்கி வீட்டுக்குள் செல்ல கூடவே அவனும் இறங்கி வந்தான்.

“அடக்கடவுளே! இப்படி தொப்பலா நனைஞ்சு வாரியே! ஒரு போனு பண்ணி சொல்லிப்புட்டு மழை விட்டோன வரக்கூடாது?” – அலமேலு துண்டை எடுத்துக் கொண்டு மருமகளிடம் ஓடி வர, “ஒரு நாள் மழையில நனைஞ்சா என்ன செத்தா போயிடுவா? போம்மா உள்ள” என்று வீடே அதிரும்படி கத்தினான் மலையமான். சமையல் கொட்டகையில் வேலை செய்து கொண்டிருந்த தாமரை கூட வீட்டுக்குள் எட்டிப்பார்த்தாள். உள்ளே நின்றுக் கொண்டிருந்த பெண்கள் இருவரும் அதிர்ந்து போய் அவனை பார்க்க, கண்களில் கொப்பளிக்கும் கோபத்துடன் தாயை முறைத்தான் மகன்.

“என்னப்பா!” – குரலே எழும்பபாமல் கேட்டார் அலமேலு.

“இந்த வீட்ல நீ என்ன எடுபிடி ஆளா? உன்ன பார்த்துக்கவே உனக்கு முடியல. துண்டை தூக்கிகிட்டு ஓடியாற்ற!” என்று தாயிடம் சீரியவன் பிறகு மனைவியின் பக்கம் திரும்பினான்.

மழையில் நனைந்த கோழி குஞ்சு போல் மாமியார் கொடுத்த துண்டை இறுக்கப் பற்றிக்கொண்டு நின்றவளுக்கு அவனை பார்க்கவே அச்சமாக இருந்தது.

“மழை அடிச்சு ஊத்துது.. வண்டி பாதி வழியிலேயே நின்னு போச்சு.. கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் சுத்தி முத்தி வயக்காடு.. அவ்வளவு இக்கட்டான நேரத்துலக் கூட நீ எனக்கு போன் பண்ணல. நானா பண்ணினப்பவும் எடுக்கல. அப்படி என்ன நீ உலகத்துல இல்லாத பேரழகி, நா உனக்கு மட்டமா போயிட்டேன்?” – ரெத்தம் தெறிப்பது போல் கேட்டான். குபீரென்று அவள் முகம் சிவந்து கன்றி போனது.

‘போன் அடித்தானா! நமக்கா! எப்போது! ஓ… போன் வண்டி சீட்டுக்குள் கிடந்ததே, நாம் தான் கவனிக்கவில்லையோ!’ – மனதிற்குள் தோன்றும் எண்ணங்களுக்கெல்லாம் வார்த்தை கிடைக்காமல் தடுமாறினாள். சற்று நேரத்திற்கு முன் அவள் ரசித்த அவனுடைய கோபம் இப்போது பூதாகரமாக அவளை பயமுறுத்த, மூச்சுக்காற்று சீர்குலைந்து.

“எப்பா தம்பி…” என்று அலமேலு அவர்களுக்குள் குறுக்கிட முயல, அடுத்த நொடியே பக்கத்தில் கிடந்த சேரை தூக்கி சுவற்றில் அடித்தான். பயங்கர சத்தத்துடன் அது தெறித்து விழு, “ஐயோ” என்று அலமேலு அலற, தாமரை பின்கட்டிலிருந்து கூடத்திற்கு ஓடி வர, கனிமொழி திடுக்கிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது.

“நீ எதுக்கும்மா எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கிற? இவ என்ன நீ பார்த்த பொண்ணா? நானாத்தானே கட்டிக்கிட்டு வந்தேன்? நானே பார்த்துக்கிறேன், நீ உள்ள போ. போ!!!” – சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே. அதுதான் அப்போது நடந்து கொண்டிருந்தது.

வாய்க்கு வாய் அவனிடம் எதிர்த்து திமிராக பேசும் கனிமொழிக்கு அப்போது ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. நெஞ்சுக்கூடு படபடக்க, துடிக்கும் கீழுதட்டை பற்களால் அழுந்த பற்றியபடி கலங்கி சிவந்த விழிகளுடன் அவனை ஏறிட்டாள். அவனுடைய கோபம் சிறிதும் குறையவில்லை.

“சொல்லு, நா யாரு உனக்கு? உன் கழுத்துல கிடக்குறதுக்கு என்ன அர்த்தம்னு நெனச்சுகிட்டு இருக்க? இப்பவே எனக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும். சொ..ல்..லு…” – அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியை குறைத்துக் கொண்டு அவள் முகத்துக்கு நேராக கையை நீட்டி கர்ஜித்தான்.

“கவனிக்கல… போன்.. சீட்டுக்கு அடியில இருந்தது… ரிங்.. சத்தம்.. கேக்கல” – அழுகையை உள்ளே இழுத்துப் பிடித்துக் கொண்டு திணறலாகக் கூறினாள். முதன்முறையாக அவனை மதித்து விளக்கம் கொடுத்தாள். அது ஒன்றே அவனுடைய வேகத்தை கட்டுப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனாலும் கோபம் முற்றிலும் குறைந்துவிடவில்லை. விடைத்த நாசியுடன் நெற்றி நரம்பு புடைக்க அவளை முறைத்துப் பார்த்தான்.

தன் இயல்பிலிருந்து தப்பி வழிமாறிப் போன மான்குட்டி போல் மிரண்டு விழித்தவளின் கண்களில் திமிரின் சாயல் சுத்தமாக இல்லை. அவள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்த அகம்பாவம் எங்கு போனதென்றே தெரியவில்லை. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். மகன் சற்று ஆசுவாசமாவதை உணர்ந்த அலமேலு உடனே உள்ளே புகுந்து, “புள்ள நடுங்குகிட்டு நிக்கிதுப்பா. காச்சல் கீச்சல் வந்துர போவுது” என்றார் நயமாக. மகன் இத்தோடு விட்டுவிட வேண்டுமே என்கிற தவிப்பு அவரிடம் இருந்தது.

“என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல. இதுக்கு மேலையும் நீ அமைதியா இருக்க முடியாது. பேசித்தான் ஆகணும்…” என்று அழுத்தமாக கூடுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

தளர்ந்து போய் கட்டிலில் அமர்ந்தாள் கனிமொழி. அவ்வளவு நேரமும் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் வெடித்துக் கொண்டு வெளியேற உள்ளங்கையில் முகத்தை புதைத்துக் கொண்டு குலுங்கி அழுதாள்.
Comments are closed here.