Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே – 19

அத்தியாயம் – 19
அன்று காலை எழுந்ததுமே கட்டிலிலிருந்து இறங்குவதற்கு முன் ஜன்னலில் இருந்த கண்ணாடியை எடுத்து முகம் பார்த்தால் கனிமொழி. முகமெல்லாம் நன்றாக வீங்கி கண்ணிமைகள் தடித்து விழிகள் சிவந்திருந்தன. இரவெல்லாம் உறக்கமில்லை. அந்த அளவுக்கு அவனுடைய கோபம் அவளை புரட்டிப்போட்டுவிட்டது. சோர்வுடன் எழுந்து கொல்லைப்புறத்திற்கு சென்றாள்.

கிணற்றங்கரையில் வேலை செய்து கொண்டிருந்த தாமரை இவளை பார்த்ததும், அவள் தாமதமாக எழுந்து வருவதை குறித்து ஏதோ ஜாடை பேசியபடியே அங்கிருந்து விலகிச் சென்றாள். கனிமொழி எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவளுக்கு முதல்நாள் மலையமான் பேசிய வெறுப்பான வார்த்தைகளை உருப்போட்டு மருகுவதற்குத்தான் நேரம் சரியாக இருந்தது.

‘ஒரு நாள் மழையில நனைஞ்சா செத்தா போயிடுவான்னு கேட்டானே! செத்தா கூட கவலைப்பட மாட்டானோ! அந்த அளவுக்கா வெறுத்துட்டான்!’ – ஏதேதோ எண்ணியபடி காலை வேலைகளை முடித்துவிட்டு கல்லூரிக்கு தயாராக துவங்கினாள். முதல் நாள் பெய்த மழையின் மிச்சம் லேசான தூறலாக அன்று காலையிலேயே துவங்கியது.

சூடான காபியோடு மருமகளிடம் வந்தார் அலமேலு. “இந்தா, இதை குடிச்சிட்டு கிளம்பு” – அக்கறையுடன் அதட்டியபடி டம்ளரை ஜன்னலில் வைத்துவிட்டு போனார்.

‘அவளுக்கு என்ன நீ எடுபிடி ஆளாம்மா?’ என்று அவன் கேட்டது நினைவிற்கு வர காபியை மறுக்க எண்ணினாள். ஆனால் முடியவில்லை. பிரதிபலன் எதிர்பார்க்காத அந்த பெண்மணியின் அன்பு அவளை கட்டிப்போட்டிருந்தது. கனிமொழி காபியை கையில் எடுத்த போது வெளியே வண்டி சத்தம் கேட்டது.

ஏனோ வழக்கத்திற்கு மாறாக அன்று காலையிலேயே வீட்டுக்கு வந்தான் மலையமான். அவன் முகத்தை பார்க்க முடியாமல், ஏதோ வேலை செய்வது போல் சுவற்றுப்பக்கம் திரும்பிக் கொண்டாள். மனைவியின் முதுகை பார்வையால் துளைத்தபடி கூடத்தை கடந்து சமையல் கொட்டகைக்குச் சென்றவன், கையில் கொண்டு வந்த தூக்கு வாலியை தாயிடம் நீட்டினான்.

“இந்தாம்மா, சீம்பாலு… காய்ச்சி எல்லாருக்கும் கொடு” என்று கூறிவிட்டு கிணற்றங்கரைக்குச் சென்றான்.

அவன் குளித்துவிட்டு வருவதற்குள் கல்லூரிக்கு செல்ல தயாராகிவிட்ட கனிமொழி பின் கொட்டகைக்கு வந்து மாமியாரிடம், “கிளம்பறேன்” என்றாள்.

“என்ன அதுக்குள்ள கிளம்புறேங்கற! சோறு இன்னும் வேகல, குழம்பு தாலிக்கனும்… தாமர, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா வரைக்கும் கொஞ்சம் டப்பாவுல எடுத்துப் போட்டு மூடி குடு” என்று மகளிடம் கூறிவிட்டு, “நீ சித்த உட்காரு. நா ரெண்டு தோசை ஊத்திக்கிட்டு வாரேன். காலையில கெளம்பி போற நீ சங்காலம்தான் வீட்டுக்கு வருவ. அதுவரைக்கும் அங்க புள்ளைங்களுக்கிட்ட கத்துறதுக்கு தெம்பு வேணாம்?” என்று மருமகளிடம் சொல்லியபடியே தோசை மாவை எடுத்துக் கரைத்தார்.

தாமரைக்கு கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ‘ஊர் உலகத்துல வேலைக்கு போற பொம்பளைங்க எல்லாரும் இப்படித்தான் இருக்காங்களா! வீட்ல ஒரு வேலையும் தொடாம மகாராணி மாதிரி வர்றதும் போறதுமா இருக்கா! இந்த அம்மா வேற இவளை இந்த தங்கு தங்குதே!’ என்று கடுப்புடன் எண்ணியபடி பாத்திரங்களை டங்கு டங்கு என்று போட்டு உடைத்தாள்.

“என்ன இப்படி போட்டு உடைக்கிற தாமர! மெல்ல செய்யி…” – அலமேலு மகளை அதட்டியபடி தோசைக்கல்லை தூக்கிக் கொண்டு அடுப்படிக்கு வந்தார்.

“இதை எதுக்கு இப்ப இங்க தூக்கிகிட்டு வர்ற? ரெண்டு அடுப்புலேயும் சட்டியும் குண்டானும் இருக்கறது உன் கண்ணுக்கு தெரியல?” என்று தாயிடம் கடுப்படித்தாள் மகள்.

“அட அந்த கொழம்பை இறக்கி கீழ போடு. அதான் கொதிச்சுட்டே! அந்த புள்ள கெளம்பி நிக்குது. லேட் ஆயிரும்ல?”

“ஆகட்டும் ஆகட்டும்… பள்ளிக்கூடத்துக்கு போற என் புள்ளையே இன்னும் கிளம்பல. இவளுக்கு என்ன அவசரம்?” – வெகு அலட்சியமாக அவள் கூற கனிமொழிக்கு கோபம் சுள்ளென்று வந்தது.

கல்லூரிக்கு கிளம்பும் நேரத்தில் வாக்குவாதம் செய்து தன்னுடைய நேரத்தையும் எனர்ஜியையும் விரையம் செய்ய விரும்பாமல் பல்கலைக் கடித்துக் கொண்டு, “எனக்கு எதுவும் வேண்டாம். நா கிளம்பறேன்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வீட்டைவிட்டு வெளியேறினாள்.

‘குடியை கெடுக்க வந்த கூனி’ என்று எண்ணி மகளை முறைத்த அலமேலு, “வேரோட பிடுங்கி நிலம் மாத்தி நட்ட மரம், தழைச்சு தோப்பாகறதுக்குள்ள இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பேசினா குடி குட்டிச்சுவரா ஆயிடும்” என்று புலம்பிக் கொண்டே அவசர அவசரமாக சாப்பாட்டை டப்பாவில் அடைத்து மருமகளின் லன்ச் பேகை தயார் செய்தார்.

அதற்குள் மலையமான் குளித்துவிட்டு உள்ளே வந்தான். ‘வாடாப்பா… வந்ததும் வராததுமா பாத்துரூமுக்குள்ள நுழைஞ்சுகிட்ட! நேத்தைக்கு அந்த புள்ளையை அந்த புடுங்கு புடுங்கி வச்சியே, இன்னைக்கு நீ என்ன பண்ணுன? அது கெளம்பி நிக்கிது… நீ பாட்டுக்கும் குளிக்க போற? அதுகிட்ட வண்டி இல்லைன்னு தெரியும்ல? அதை கொண்டு போயி விடணும்னு தெரியாது? இந்தா புடி.. சாப்பாட்டை கூட எடுக்காம போவுது. போ… கொண்ட போயி குடுத்து பஸ் ஏத்திவிட்டுட்டு வா. பஸ்ஸு போயிட்டுன்னா அப்படியே திரும்பி வந்துடாத. டவுனுல பள்ளிக்கூடத்துல கொண்டு போயி விட்டுட்டுவா” – மகனிடம் கடுமையாக கோபித்துக் கொண்டார்.

மலையமானுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.. ‘குளிக்கத்தானே போனோம்! எதுக்கு அம்மா இந்த கத்து கத்துது’ என்று எண்ணியபடி உடைமாற்றிக் கொண்டு விரைந்தான்.

‘கெளம்பி நின்னாளாமே! நமக்காகவா நின்னிருப்பா!’ – ஆசை கொண்ட மனதில் எதிர்பார்ப்பு எட்டிப்பார்த்தது. அதை தூண்டும் விதமாக தான் அலமேலு பேசியிருந்தார். நேற்று அந்த பெண்ணை அப்படி அழ வைத்தானே என்று அவருக்கு மகன் மீதே கோபம். அப்படி என்ன வீட்டுக்கு வந்த பெண்ணிடம் முகத்தை காட்டுவது! சேரையெல்லாம் தூக்கி அடிக்கும் அளவுக்கு சண்டியராகிவிட்டானா என்னும் ஆற்றாமை.

தாயின் மனதில் இருக்கும் கோபம் சூட்சமம் எதுவும் அவனுக்கு விளங்கவில்லை. கனிமொழி அவனுக்காக காத்திருந்ததாக தாய் சொன்னதை உண்மையென்றே நம்பினான். உற்சாகமான மனநிலையோடு வண்டியின் வேகத்தை கூட்டி சற்று நேரத்திலெல்லாம் அவள் வழியை மறித்து வந்து நின்றான். அவள் திடுக்கிட்டு இரண்டடி பின்வாங்கி நிமிர்ந்து பார்த்தாள்.

“நான்தான்…” – கனத்த அவன் குரல் கம்பீரமாக அவள் செவியை தீண்ட, அவள் மெளன பார்வை அவன் முகத்தை அளந்தது.

“குளிச்சிட்டு வர்றதுக்குள்ள என்ன அவசரம்? ஏறு.. மழை வேகமா வந்துட போகுது” – மனதின் உற்சாகத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் கண்டிப்புடன் கூறினான்.

மறுத்துப்பேச தோன்றாமல் கனிமொழி அவன் பின்னால் ஏறிக்கொள்ள காற்றில் மிதந்தது மலையமானின் பழைய பைக்.

மரம் இல்லாத ஊரில் மண் வாசம் தான் மழைவாசம்… ஆனால் அவர்களுடைய கிராமத்திலெல்லாம், மண்வாசம்.. மரங்களின் இலை தழை வாசம்… காய்ந்த சருகுகளின் வாசம்… கால்நடைகளின் வாசம்… எல்லாம் கலந்த கலவையான வாசம் தான் மழை வாசம்… அந்த மழை வாசத்தோடு இன்று அவன் மனைவியின் வாசமும் சேர்ந்து கொள்ள சூழ்நிலை வெகு ரம்யமாய் இருந்தது அவனுக்கு.

ஒருவேளை தாமரை அவளை கோபப்படுத்தாமல் இருந்திருந்தால் அவளும் கூட அந்த சூழ்நிலையை இரசித்திருப்பாளோ என்னவோ! இப்போது அவளால் முடியவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே தான் வந்தாள். பஸ் ஸ்டாப்பில் அவன் வண்டியை நிறுத்தியதும் எதுவும் பேசாமல் இறங்கி ஓரமாக சென்று நின்றுக் கொண்டாள். அங்கே வேறு யாரும் இல்லை. அவளிடம் ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

“எத்தனை மணிக்கு பஸ்ஸு?”

கனிமொழி அவன் பக்கம் திரும்பி தன் பெரிய முட்டை கண்களை உருட்டி அவனை வெறித்துப் பார்த்தாள். ‘உன் ஊரு தானே? உனக்கு தெரியாதா?’ என்றது அந்த பார்வை.

“இல்ல… இந்நேரம் வந்திருக்கணுமே! மணியென்ன? அவசரத்துல வாட்சு கூட கட்டாம வந்துட்டேன்” – அடிக்கு பயந்து உளறுவது போல் உளறினான். கித்தாப்பு குறையாமல் இருக்க எத்தனை முயன்றும் வழிசல் வெளிப்பட்டுவிட்டதே!

“எட்டே முக்கால். இன்னும் அஞ்சு நிமிஷத்துல பஸ் வந்துடும்”

“ஓ! சில்லறை இருக்குல்ல?” – அவள் இல்லை என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பான்! அவசரத்தில் வாட்ச் காட்டாமல் வந்தவன் பர்ஸை மட்டும் எடுத்துக் கொண்டா வந்தான்! நல்லவேளை கனிமொழி, “ம்ம்ம், இருக்கு” என்று கூறி அவனை காப்பாற்றினாள். இல்லையென்றால் இன்னொருமுறை அவன் அசடு வழிந்திருக்கக் கூடும்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பேருந்து வந்தது. கனிமொழி ஏறி கொண்டாள். அவள் ஜன்னல் ஓர சீட்டில் வந்து அமரும் வரை அவன் பார்த்துக் கொண்டே இருக்க, கண்டக்டர் விசிலடித்ததும் கனிமொழி அவனை நிமிர்ந்து பார்த்தாள். உடனே அவன் தலையசைத்து புன்னகைத்தான்.

பஸ் கிளம்பி வெகுநேரம் வரை அவனால் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. ஏதோ சிந்தனையுடன் அப்படியே வண்டியில் அமர்ந்துவிட்டவன் சற்று நேரம் கழித்துத்தான் கவனித்தான், கனிமொழியின் மதிய உணவு பை பைக்கின் பக்கவாட்டு கம்பியில் தொங்கி கொண்டிருந்தது.

“அடக்…” – மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன் உடனே பைக்கை கிளப்பி வேகமெடுத்தான்.

கிராமத்து பஸ்ஸை துரத்திப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. சற்று நேரத்திலெல்லாம் வழியை மறித்துக் கொண்டு பஸ்ஸுக்கு எதிரில் வந்து நின்றான்.

கனிமொழிக்கு ஒரே ஆச்சரியம், ‘என்ன ஆச்சு இவனுக்கு இன்னைக்கு!’ என்று கணவனை வியப்புடன் பார்த்தாள். வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன் லன்ச் பையோடு பேருந்தின் ஜன்னல் ஓரம் மனைவிக்கு அருகில் வந்து, “கொடுக்க மறந்துட்டேன்…” என்று பையை நீட்டினான்.

என்னெவென்று சொல்ல முடியாத ஒரு இனிய உணர்வு அவள் நெஞ்சில் நிறைந்தது. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அந்த உணர்வை அவள் கண்கள் வெளிப்படுத்த அவன் மனமும் அந்த உணர்வை உள்வாங்கி கொண்டது. மீண்டும் விசில் அடித்தது… பஸ் மூவ் ஆனது… இந்த முறை அவன் கையை உயர்த்தி, தலையை அசைத்து அழகாக பல்வரிசை தெரிய புன்னகைத்தான்.

அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து நாட்களாக வண்டியில் மனைவியை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதும், மாலை அவள் கல்லூரியிலிருந்து வரும் நேரத்திற்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வருவதும் வழக்கமாகியிருந்தது. அந்த பத்து நிமிட பயணம் அவர்களுக்குள் ஒரு சுமூகமான சூழ்நிலையை உருவாக்கியிருந்தது.

இப்போதெல்லாம் இருவரும் தயக்கமின்றி நேரடியாகவே பேசிக் கொண்டார்கள். கனிமொழி கல்லூரிக்கு தயாராகிவிட்ட பிறகு மலையமான் பண்ணையிலிருந்து வருவதற்கு தாமதமாகிவிட்டால், “லேட் ஆயிடுச்சே! என்ன பண்ணுனீங்க இவ்வளவு நேரம்? பஸ் போயிட போகுது” என்று அவள் உரிமையாக கோபித்துக்கொள்வதும், “வந்துட்டேன் வந்துட்டேன்… பஸ் போய்ட்டா வண்டிலேயே போயிடுவோம் விடு” என்று அவன் சமாதானம் சொல்வதும் கூட நடக்கும்.

ஒருநாள் அப்படித்தான், மாலை அவள் பேருந்திலிருந்து இறங்கும் போது சோர்ந்து தெரிந்தாள். “என்ன ஒடிஞ்சு விழற மாதிரி வர்ற? மதியம் ஒழுங்கா சாப்பிட்டியா இல்லையா?” என்று அவன் அதட்டியதற்கு, “ப்ச், ஆறிப்போன சாப்பாட்டை எப்படி ஒழுங்கா சாப்பிட முடியும்? பிடிக்கவே இல்ல” என்று அவள் சலுகை கொண்டாடினாள்.

மறுநாளே அவள் கல்லூரிக்கு சென்ற பிறகு டவுனுக்கு போய், லன்ச் கொண்டு செல்வது போல் ஒரு ஹாட் பாக்ஸை வாங்கி கொண்டு வந்துவிட்டான் என்பதும், அதை பார்த்த தாமரையின் காதுகளில் புகை வந்ததும் கிளைக்கதை.

அந்த கிளைக்கதையை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு மெயின் கதையை மட்டும் பார்த்தால் மலையமானுக்கும் கனிமொழிக்கும் இடையே பரஸ்பரம் நினைத்ததை கேட்கும் – சொல்லும் அளவிற்கு நட்பும் நெருக்கமும் உண்டாகியிருந்தது.

மருமகள் மகனிடம் இணக்கமாக இருப்பதையும், மகன் மகிழ்ச்சியோடு அவளிடம் பகடி பேசுவதையும் காணக்காண அலமேலுவிற்கு பூரிப்பு தாளவில்லை. இருவரையும் ஒன்றாக அமரவைத்து சுற்றி போட்டார்.

‘ம்கூம்… கெழவி இப்பவே இந்த தாண்டு தாண்டுது! இன்னும் பேரன் பேத்தியெல்லாம் பெத்து கொடுத்துட்டான்னா ஊரையே ரெண்டு பண்ணிடும் போலவே!’ – தாமரை நொடித்துக் கொண்டாள்.

மறுநாளே கனிமொழியின் காலடி மண்ணை எடுத்து அபி குட்டிக்கு சுற்றி போட்டாள். “இல்லாததை கண்டு ஏங்குறவங்க வயித்தெரிச்சல் பொல்லாததுடி அம்மு குட்டி…! நல்லா துப்பு… உன் மேல தான் ஊரு கண்ணே இருக்கு” என்று ஜாடையாக தம்பி மனைவியை குத்தினாள்.

‘மாமி.. மாமி’ என்று அவளையே சுற்றி வரும் குழந்தையை அவளிடம் நெருங்க விடாமல் கண்ணாலேயே மிரட்டி வைத்திருந்தாள். அதன் பிறகு கனிமொழியை கண்டுகொள்ளாமல் விளையாடும் அபி, தாயின் பார்வையில் படாத சமையத்தில் மட்டும், “மாமி” என்று கூப்பிட்டு கன்னத்தில் குழி விழ சிரிப்பாள்.

அதையெல்லாம் கனிமொழி பெரிதாக கண்டு கொள்வதில்லை. மலையமானின் உபயத்தால் அவள் மனநிலை நன்றாகவே இருந்தது. அதைத்தான் தாமரையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளால ஒத்த பைசாவுக்கு புரயோஜனம் இல்ல இந்த வீட்ல. அப்படி இருக்கும் போது இவளை எதுக்கு தாயும் மகனும் இந்த தங்கு தாங்குறாங்க!’ என்பது தான் அவளுடைய ஆதங்கமாக இருந்தது. அதை ஒருநாள் தாயிடம் கேட்கவும் செய்துவிட்டாள்.

“அவ ஒரு பங்கு பண்ணினா, நீயும் உன் மகனும் அவளை கண்டிக்காம செல்லம் கொடுத்தே பத்து பங்கு கெடுக்குறீங்கம்மா! இதெல்லாம் எங்க போயி முடியுமோ!” – அலுத்துக் கொண்டாள்.

“இப்பதான் ரெண்டு பெரும் நல்லவிதமான பேசி புழங்க ஆரம்பிச்சிருக்காங்க. இனிமே எல்லாம் நல்லதுல தான் முடியும். நாளையிலிருந்து நாம ராத்திரி படுக்கைக்கு உன் வீட்டுக்கே போயிடுவோம்”

“இருந்தது இருந்துட்டோம்.. இன்னும் ஒரு நாலு நாள் கழிச்சு போவோம். அந்த மனுஷன் உர மூட்டையை கொண்டு வந்து வீட்ல அடுக்கிப் போட்டு வச்சிருக்காரு. இந்த நேரம் பார்த்து அங்க போயி உனக்கு அலர்ஜியாகி திரும்ப வீஸிங் வந்துட்டுன்னா யாரு பார்க்குறது? அவருகிட்ட சொல்லி சீக்கிரமா அதையெல்லாம் அப்புறப்படுத்த சொல்றேன். அதுக்கு அப்புறம் ராத்திரிக்கு என்ன.. பகளுக்கே அங்க போயிடுவம். இங்க நடக்குற அக்ரமத்தையெல்லாம் என்னால சகிக்க முடியல” என்றாள் தாமரை.

‘அதுதான் எல்லாருக்கும் நல்லது’ என்று எண்ணிக் கொண்டார் அலமேலு.
Comments are closed here.