Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 20

அத்தியாயம் – 20

வீட்டு வேலைகள் அனைத்தையும் முன்கூட்டியே முடித்துவிட்டு கனிமொழியை கரித்துக்கொட்ட துவங்கியிருந்தாள் தாமரை. அவளிடம் பதிலுக்கு பதில் பேசி பிரச்னையை வளர்க்க விரும்பாமல் பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கிக் கொண்டு நெல்லிமரத்தடிக்கு வந்து அமர்ந்த கனிமொழிக்கு கையிலிருந்த அலைபேசியில் கவனம் பதியவில்லை.

‘காலையிலிருந்தே அவனை பார்க்க முடியவில்லை. எத்தனை மணிக்குத்தான் எழுந்துகொள்வானோ! பட்சிகளும் பறவைகளும் கூட சற்று அசந்து உறங்கும், இவனுக்கு மட்டும் உறக்கமே வராது. விடிவதற்கு முன்பே பண்ணைக்கு ஓடிவிடுவான். ஹும்ம்… கல்லூரி நாட்களாக இருந்தால் இந்நேரம் நம்மை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வந்திருப்பான். இன்றைக்கு அதுவும் இல்லை’ – அவள் மனம் கணவனை நாடியது.


‘வண்டியை ஒர்க் ஷாப்பில் கொண்டு போய் விட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. என்ன ஆனதென்றே தெரியவில்லையே! அப்படியெல்லாம் பொறுப்பற்ற தனமாக எடுத்த வேலையை பாதியிலேயே போட்டு வைக்க மாட்டானே! என்ன ஆயிற்று! அதிகமாக செலவு ஏதும் ஆகியிருக்குமோ! பணத்தை புரட்ட முடியாமல் சிரம படுகிறானோ!’ முதல் முறையாக கணவனின் கஷ்டத்தை பற்றி யோசித்தாள்.

அடுத்த நொடியே ‘ஆயுசு நூறு’ என்று எண்ணிக் கொண்டாள். ஆம், மலையமான் தான் நேரில் வந்து கொண்டிருந்தான். மனைவி நெல்லிமரத்தடியில் அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு வண்டியை நேராக அவள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே விட்டான்.

“என்ன டீச்சரம்மாவுக்கு இன்னைக்கு படிக்கிற வேலை இல்லையா! புத்தகம் இல்லாம தனியா உட்கார்ந்திருக்க!” – பரிகாசமாக விசாரித்தான்.

கனிமொழியின் முகம் மலர்ந்தது. “டீச்சர்ன்னா படிச்சுக்கிட்டே இருக்கணுமா? ரிலாக்ஸ் பண்ண கூடாதா?” என்றாள் புன்னகையுடன்.

“அதுசரி, மரத்தடில தனியா உட்கார்ந்து திருதிருன்னு முழிச்சுகிட்டு இருக்கறதுதான் ரிலாக்ஸ்சா!”

“வேற என்ன பண்றது? எவ்வளவு நேரம் ஃபோனையே பார்க்கறது? போரா இருக்கு” – அவள் அலுத்துக்கொள்ள, இவன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, “சரி கிளம்பு, பண்ணைக்கு கூட்டிட்டு போறேன்” என்றான்.

“பண்ணைக்கா!” – ஆச்சரியமாக கேட்டாள்.

“ஆமாம், நீதான் நம்ம பண்ணைக்கு வரவே இல்லையே! இன்னைக்கு வந்து பாரு”

இங்கு தனியாக அமர்ந்து போரடித்துக் கொண்டிருப்பதற்கு பதில் அவனோடு சற்று நேரம் செலவு செய்யலாம் என்பதற்காகவே பண்ணைக்கு செல்ல தயாரானாள் கனிமொழி.

அவள் நைட் பேண்டிலிருந்து சுடிதாருக்கு மாறுவதற்குள் காலை உணவை முடித்துக் கொண்டான் மலையமான்.

“கனியை பண்ணைக்கு கூட்டிட்டு போயிட்டு வரேம்மா”
மகன் சொன்னதை கேட்டதுமே உற்சாகமானார் அலமேலு.

“நல்லா கூட்டிட்டு போப்பா… இங்க என்ன வேலை? மத்தியான சாப்பாட்டை கூட நா பண்ணைக்கே கொடுத்தனுப்பறேன். நீ யாரையாவது ஆளை மட்டும் வர சொல்லு” என்றார்.

தாமரைக்கு கூட ஆச்சரியம். ‘என்னடா இது! அத்தைக்கு மீசை முளைச்சிருக்கு! மலையனோட தோப்புக்கு போறதுக்கு இவ்வளவு குஷியா கிளம்பறா!’ என்று வியப்புடன் பார்த்தவள், “வேலையை கெடுத்துகிட்டு ஆளை எதுக்கு வர சொல்லணும்? மாமா வந்துடுவாரு. அவருகிட்ட கொடுத்தனுப்புறேன்” என்றாள். எப்படியோ, இப்படி பட்டும் படாமல் இருக்காமல் நன்றாக வாழ்ந்து தொலைத்தால் சரி என்கிற எண்ணம் அவளுக்கு.

மலையமான் சிரித்துக் கொண்டான். “சரிக்கா.. வரேம்மா..” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன், காத்துக்கொண்டிருந்த மனைவியை அழைத்துக்கொண்டு பண்ணைக்கு புறப்பட்டான்.


கனிமொழி இதற்கு முன் அந்த பண்ணைக்கு வந்ததும் இல்லை பார்த்ததும் இல்லை. ஆனால் அவள் மனதிற்குள் எப்படி எண்ணி இருந்தாளோ அப்படியே அமைந்திருந்தது அந்த பண்ணை. மாடுகளுக்கான ஷெட், கோழிகளுக்கான கொட்டகை, மீன் குளம் அனைத்தும் கிட்டத்தட்ட அவள் கற்பனை செய்திருந்ததையே ஒத்திருந்தது அவளுக்கே ஆச்சரியம். அந்த மகிழ்ச்சியை அவள் கணவனிடம் பகிர்ந்து கொண்ட போது, “அப்படியா!” என்று வியந்தான். கூடவே, “நாம என்ன அந்த அளவுக்கு ஒத்துமையாவா வாழறோம்! ஒருத்தர் மனசுல இருக்கறதை இன்னொருத்தர் சொல்லாமலேயே தெரிஞ்சு..புரிஞ்சு… நடந்துக்குறதுக்கு!” என்றான்.

அவன் பெரிதாக எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் தோன்றியதை சட்டென்று சொல்லிவிட்டான். மனதில் இருந்த ஆதங்கம் அவனை அறியாமல் வெளிப்பட்டுவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் கனிமொழி காயப்பட்டாள். நன்றாக பேசி சந்தோஷமாக அழைத்துக் கொண்டு வந்தவன் இப்படி சுருக்கென்று பேசிவிட்டானே என்று அவள் முகம் கூம்பிவிட்டது.

“நீங்க அடிக்கடி உங்க பண்ணையோட பிளான் எல்லாம் வீட்ல சொல்லிகிட்டே இருப்பீங்கள்ல, அதையெல்லாம் கவனிச்சுக்கிட்டு தானே இருந்தேன். அதனாலதான் எனக்கும் இதே மாதிரி மனசுல தோணியிருக்கு” என்று சுரத்தில்லா குரலில் கூறினாள்.

அவளுடைய வருத்தம் மலையமானுக்கும் புரிந்தது. முதன்முதலில் பண்ணைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டு வெடுக்கென்று பேசிவிட்டோமே என்று அவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது.

“சரி வா, அந்த பக்கம் இன்னொரு குளம் இருக்கு, பார்த்துட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்றவன், “அதோ அந்த கடைசி வரைக்கும் நம்ம தோப்புதான். இந்த பக்கம் அந்த வேலி வரைக்கும். எல்லாம் நான் தலைப்பட்டு வச்ச மரம்தான். காய்க்க ஆரம்பிச்சு மூணு வருஷம் தான் ஆகுது” என்று விபரம் கூறினான்.

சின்ன தோப்புதான். வெகு சுத்தமாக இருந்தது. மரங்களில் ஒரு காய்ந்த மட்டையை கூட காண முடியவில்லை. தென்னங்குரும்பைகள் கீழே விழும் போதே கேட்ச் பிடித்துவிடுவானோ என்னவோ! ஒன்றை கூட தரையில் பார்க்க முடியவில்லை. வீட்டுப்பக்கம் தலைகாட்டாமல் தோப்பே கதி என்று கிடக்கிறான் அல்லவா! அப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

என்னதான் தோப்பை சுற்றிக் காட்டி பேச்சை மாற்றினாலும் மனைவியின் முகத்தில் உற்சாகத்தை மீட்டெடுக்க முடியாமல் போய்விட, ‘ஏண்டா… மலையா!’ என்று தன்னைத்தானே நொந்துக் கொண்ட மலையமான், அவளை தோப்பின் முன் பகுதிக்கு அழைத்துக் கொண்டு வந்தான்.

“தம்பி, பால் காய்ச்சி வச்சிருக்கேன். டீ போடட்டுமா?” – அங்கே வேலை செய்யும் தாத்தா கேட்டார். காலை உணவிற்கு பிறகு தோப்புக்கு வந்ததும் ஒரு முறை டீ குடிக்கும் வழக்கம் மலையமானுக்கு உண்டு.

தீவன மூட்டைகள், கோழி முட்டைகள் மற்றும் தோப்பில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை பத்திரமாக வைக்க தனியாக ஒரு கொட்டகை போட்டிருந்தான். அதே கொட்டகையில் ஒரு கயிற்று காட்டிலும் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளும் கூட கிடைக்கும். முக்கியமான ஆட்கள் யாராவது அவனை பார்க்க தோப்புக்கு வந்தால் அவர்களை அமரவைக்க தேவைப்படும் என்று வீட்டிலிருந்து கொண்டுவந்து போட்டிருந்தான். கூடவே ஒரு ஸ்டவ் மற்றும் சில பாத்திரங்களும் வைத்திருந்தான். வீட்டுக்கு சாப்பிட போக நேரமில்லை என்றால் தோப்பிலேயே டீ போட்டு குடித்துவிட்டு வேலையை கவனிப்பான். அந்த கொட்டகைக்கு தான் இப்போது மனைவியை அழைத்துக் கொண்டு வந்தான்.

அவளுக்கு சேரை இழுத்துப்போட்டு “உட்காரு” என்று கூறியவன், “நீ போ தாத்தா, நான் பார்த்துக்கறேன்” என்று அவரை அனுப்பிவிட்டு தானே டீ போடும் வேலையில் இறங்கினான்.

அவன் நேர்த்தியாக வேலை செய்யும் அழகில் இவள் மனநிலையில் மாற்றம் வந்தது. சின்ன புன்னகையுடன் அவன் செல்லுமிடமெல்லாம் பார்வையால் தொடர்ந்தாள்.

பாத்திரங்கள் டீ தூள் மற்றும் சர்க்கரை டப்பாவை எடுத்து வந்து பக்கத்தில் வைத்துக் கொண்டு பம்ப் ஸ்டவ்வில் காற்றை அடித்தான்.

“இப்போல்லாம் தான் குட்டி சிலிண்டரோட ஸ்டவ் கிடைக்குதே, வாங்கி வச்சுக்கலாம்ல?” – கனிமொழி கேட்டாள்.

“சொல்லிட்டேல்ல… வாங்கிடுவோம்”

அவளுக்குள் கொஞ்சநஞ்சம் இருந்த பிணக்கும் அந்த ஒரு வார்த்தையில் மறைந்து விட முகம் மலர்ந்தாள்.

“இன்னைக்கு நா டீ போடட்டுமா?” – அவள் திடீரென்று கேட்கவும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்தான் மலையமான்.

“என்ன!”

“இல்ல… நா போடட்டுமான்னு…” – அவன் முகபாவத்தை பார்த்துவிட்டு இழுத்தாள்.

“தெரியுமா உனக்கு?” – கிண்டலெல்லாம் இல்லை. நிஜமாகத்தான் கேட்டான்.

அவள் முறைத்தாள். அதில் கொஞ்சம் செல்லம் தெரிந்தது. அவன் சிரித்துக் கொண்டே, “என்ன?” என்றான்.

“என்ன நெனச்சீங்க என்னை பற்றி?”

“அதிகாரம் பண்ணியே பொழைக்கிறவன்னு”

“என்ன!?”

“இல்லையா பின்ன?”

“உங்களை…” – அடிப்பது போல் கையை ஓங்கி கொண்டு எழுந்தவள் அவனிடம் நெருங்கியதும், நினைத்ததை செய்ய முடியாத தயக்கத்துடன், “என்னைய பார்த்தா அப்படியா தெரியுது?” என்றாள்.

ஓங்கிய அவள் கையையும் அவளையும் ஏற இறங்க பார்த்துவிட்டு, “அதிகாரம் மட்டும் இல்ல, அடிதடியில கூட இறங்குவ போலருக்கே!” என்றான் உள்ளடக்கிய சிரிப்புடன்.

அதற்கு பிறகு அவள் யோசிக்கவில்லை. பட்டென்று அவன் முதுகில் ஒன்று கொடுத்தாள். ஏதோ பெரிய பாராட்டு பதக்கம் கிடைத்தது போல் அவன் சத்தமாக சிரித்தான்.

“நகருங்க, இன்னிக்கு நான் தான் டீ போடுவேன்” – அவன் மீது இரண்டு கையையும் வைத்து ஓரமாக தள்ளிவிட்டு, பால் பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்தாள்.

“காய்ச்சின பாலையே திரும்ப காய்ச்சுவியா? என்ன டீ தூள் இவ்வளவு போடற? என்ன சர்க்கரை இவ்வளவு போடற? என்ன இவ்வளவு நேரம் கொதிக்க விடற?” என்று அவன் அவளை சீண்டிக் கொண்டே இருக்க, அவளும் அலுக்காமல் பதில் கொடுத்துக் கொண்டே வேலையை முடித்தாள்.

“வேலை செய்ற எல்லாருக்கும் ஒரே நேரத்துல ஊத்தி கொடுத்துடாத” என்றான்.

“ஏன்?” – புரியாமல் கேட்டாள்.

“எல்லாரையும் ஒண்ணா அசுபத்திரிக்கு அள்ளிக்கிட்டு போக முடியாது”

“சரி அப்போ நீங்களே முதல்ல குடிங்க”

“எல்லா பொண்டாட்டிக்கும் புருஷன்காரனுங்க தான் முதல் சோதனை எலி.. கொடு” – அவ்வளவு ஆசையையும் மறைத்துக் கொண்டு அலுத்துக்கொள்வது போல் அவள் கையிலிருந்து டம்ளரை வாங்கினான். குடித்துப் பார்த்துவிட்டு “ம்ம்ம்… கைவசம் தொழில் இருக்கு. டீக்கடை போட்டுடலாம் போலருக்கே!” என்றான் பாராட்டுதலாக. அதற்குள் வெளியே ஏதோ பெரிதாக சத்தம் கேட்டது. இருவருமே பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தார்கள்.

“என்ன ஆச்சுண்ணே?” – காலால் தட்டி கைலியை மேலே தூக்கிக் கட்டி கொண்டு முன்னே நடந்தான்.

“ஷெட்டுக்குள்ள ரெண்டு மாடு முட்டிக்குது தப்பி. ஆளுங்க புடிக்கிறாங்க”

“என்ன!” – பொதுவாக பசுக்கள் முட்டிக்கொள்வதில்லை. எப்போதாவது சில ஆக்ரோஷமான பசுக்கள் அப்படி செய்யும். இவன் பண்ணையில் அப்படி எந்த பசுவும் இல்லையே என்கிற எண்ணத்துடன் முன்னோக்கி சென்றவனை கையை பிடித்தது தடுத்தாள் கனிமொழி. அந்த அளவுக்கு ஷெட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்த சத்தம் அச்சமூட்டுவதாக இருந்தது.

அந்த சூழ்நிலையில் அவளை கண்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லாததால், “ப்ச், விடு” என்று அவளிடமிருடந்து கையை உதறி உருவிக்கொண்டு ஷெட்டுக்குள் ஓடினான்.

அவன் கணித்தபடியே புதிதாக இறக்கியிருந்த மாடுகளில்தான் இரண்டு மோதிக் கொண்டிருந்தது. ஆட்கள் மூக்கணாங்கயிறை பிடிக்க முயல, சிலுப்பிக் கொண்டு அவர்களையும் முட்ட முயன்றது.

ஏதாவது ஒரு மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டிவிட்டால் கூட போதும். ஆனால் அதுவே முடியாது போலிருந்தது. அப்போதுதான் ஒரு மாட்டுக்கு காலில் ரெத்தம் வருவதையும் கவனித்தான். பக்கத்திலேயே ஒரு தகர பலகையும் கிடந்தது.

“இதை யாரு இங்க கொண்டு வந்து போட்டது?” அதட்டிக் கொண்டே ஓடி, அதை முதலில் அங்கிருந்து எடுத்து ஷெட்டுக்கு வெளியே வீசினான். பிறகு ஆட்களோடு சேர்ந்து மூக்கணாங்கயிற்றை பிடிக்க முயன்றான். சற்று நேர போராட்டத்திற்கு பிறகு காயம்பட்ட மாட்டை அவிழ்த்துக்கொண்டு வெளியே வந்து மரத்தடியில் கட்டினார்கள்.

“ஈர துணிய கொண்டாண்ணே…”

“உதைக்கும் தம்மி. பார்த்து” – தலையில் கட்டியிருந்த முண்டாசை எடுத்து நீரில் நனைத்து அவனிடம் நீட்டியபடியே எச்சரித்தார்.

அவர் சொன்னபடியேதான் நடந்தது. மூக்கணாங்கயிறை பிடித்திருந்ததால் மாட்டுக்கு முட்ட முடியவில்லை. ஆனால் காலை எட்டி எட்டி உதைத்து பக்கத்தில் ஆளை நெருங்கவிடாமல் விரட்டியது. கனிமொழி மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். மலையமான் விடாக்கண்டனாக தொடர்ந்து முயற்சித்து அந்த மாட்டுக்கு காலில் கட்டு போட்டுவிட்ட பிறகுதான் அடங்கினான். அதற்கு பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது. தளர்ந்து போய் திரும்பி சென்று கொட்டகைக்குள் கிடந்த சேரை வெளியே கொண்டுவந்து போட்டு அமர்ந்தாள். இன்னமும் கூட அவளுக்கு நடுக்கம் குறையவில்லை. தூரத்தில் ஆட்களோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் கணவனை வெறித்து பார்த்தாள். கோபம் கோபமாக வந்தது.

‘பெரிய சண்டி வீரன்னு நெனப்பு. அவ்வளவு பெரிய மாடு… முட்டி தூக்கி வீசினா தெரியும்…’ – கடுப்புடன் எண்ணிக் கொண்டாள்.

வெகு நேரம் கழித்து மனைவியை தேடி வந்த மலையமான், அவள் முகம் கடுகடுவென்றிருப்பதை கவனித்துவிட்டு, ‘இப்ப என்ன ஆச்சு!’ என்று நினைத்தான். உண்மையாகவே அவனுக்கு தெரியவில்லை. அவள் அவன் கையை பிடித்து தடுத்தது, அவன் உருவிக் கொண்டு சென்றது, அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அவள் பயந்து நடுங்கியது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை.

“என்ன ஆச்சு கனிமொழி?” என்றான்.

“வீட்டுக்கு போறேன்”

“அங்க போயி என்ன செய்ய போற?”

“இங்க மட்டும் என்ன செய்றேன்? நீங்க போயி மாட்டை கட்டிப்பிடிச்சு குடும்பம் நடத்துங்க” – என்ன பேசுகிறோம் என்று உணராமல் அவள் கூற மலையமான் சத்தமில்லாமல் சிரித்தான்.

“அம்சமா பொண்டாட்டி கண்ணுக்கு எதிர்ல உட்கார்ந்திருக்கும் போது மாட்டை கட்டிப்பிடிச்சு குடும்பம் நடத்த நான் என்ன மடையனா?” – அதுதான் உண்மை என்பதை உணராமல் கூறினான். கனிமொழி அவனை முறைத்து கொண்டே,

“அதனாலதான் என் கையை தட்டிவிட்டுட்டு உங்க மாடுகளுக்கு நடுவுல பஞ்சாயத்து பண்ண போனீங்களா?” என்றாள்.

“உன் கையை தட்டிவிட்டேனா! எப்போ!”

“ஆஹா! நம்பிட்டேன்”

“ஏய்.. சும்மா சொல்லாத. நா எப்போ உன் கையை தட்டிவிட்டேன்?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு நடந்தது நினைவில் வந்துவிட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,

“வேணுன்னா இன்னொரு தரம் பிடி, தட்டிவிடறேனா பார்க்கலாம்” என்றான். அவள் காட்டும் இணக்கத்தில் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கியது. இந்த முறை அவள் எவ்வளவு விலகிப் போனாலும் விட கூடாது என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.
Comments are closed here.