Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 21

அத்தியாயம் – 21

“மணி ஒன்பதாயிட்டே கண்ணு! தோசை சூடா ஊத்திக்கிட்டு இருக்கும் போதே வந்து சாப்பிட்டுடேன்” – புத்தகமும் கையுமாக அமர்ந்திருந்த மருமகளை பத்தாவது முறையாக வந்து கூப்பிட்டுவிட்டார் அலமேலு.

“முக்கியமான நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். அப்புறமா சாப்பிட்டுக்கறேன். நீங்க சாப்பிட்டுட்டு தூங்குங்க”

“அப்படினா ரெண்டு தோசையை ஊத்தி வைக்க சொல்லட்டுமா?”

“இல்லல்ல.. வேண்டாம், நா பார்த்துக்கறேன்” – சின்ன புன்னகையுடன் கூறினாள்.

பிரெட்டும் ஜாமும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாளோ என்று எண்ணியவர் ஒரு கணம் தங்கிவிட்டு, “நா இங்கதான் திண்ணையில படுத்திருப்பேன். உன் வேலை முடிஞ்ச பிறகு எழுப்பு கண்ணு, நா தோசை ஊத்தி தரேன்” என்றார் அக்கறையோடு.

“சரி” என்று தலையசைத்தாள் கனிமொழி. ஆனால் அவளுக்கு மாமியாரை எழுப்பும் எண்ணமில்லை. அன்று என்னவோ அவளுடைய மனநிலை வித்தியாசமாக இருந்தது. ஆம், அவள் கணவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். மற்றபடி புத்தகம் நோட்ஸ் எல்லாம் வெறும் ஹம்பக் தான்…

அதே மனநிலைதான் மலையமானுக்கும். அன்று மதியம் சூடான சாதம், நாட்டுக்கோழி குழம்பு, கரி வறுவல் முட்டை என்று அடுக்கு டப்பாவை நிறைத்துக் கொண்டு தோப்பிற்கு வந்தார் நாராயணன். அவர் கொண்டுவந்து கொடுத்த உணவை மனைவியோடு சேர்ந்து உண்டு முடித்த பிறகு, பால் கறக்க ஆட்கள் வந்துவிட்டார்கள். அதற்கு பிறகு அவன் செய்ய வேண்டிய வேலைகள் தொடர்வண்டி போல் வரிசை கட்டி நின்றன. அவன் நிலையறிந்து, “வீட்டுக்கு கிளம்பவா?” என்றாள் கனிமொழி.

அவனுக்குத்தான் அவளை அனுப்ப மனமில்லை. “கொஞ்ச நேரம் உட்காரு, நானே கொண்டு வந்து விடறேன்” என்றான்.

“பக்கத்துலதான், நடந்து போயிடுறேன். நீங்க வேலையை கவனிங்க” என்று அவனுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று மறுத்தாள் கனிமொழி.

“இல்ல உட்காரு” – அவளுடைய மறுப்புக்கு மறுப்பு சொல்லிவிட்டு ஷெட்டுக்கு போய் பால் கறக்கும் ஆட்களிடம், காயம் பட்டிருக்கும் மாட்டிடம் பால் கறக்கும் போது கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு மனைவியிடம் வந்து வண்டியை எடுத்தான்.

மதிய உணவு கொண்டுவரப்பட்ட பாத்திரங்களை எடுத்து அடுக்கி பையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு பின்னால் ஏறி அமர்ந்தாள் கனிமொழி. மிதமான வேகத்தில் சென்று வீட்டு வாசலில் நின்றது மலையமானின் பைக்.

அவளை வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தோப்புக்கு வந்தவன் பாலை அளந்து ஊற்றிவிட்டு, அடிபட்ட மாட்டை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தான். ஒரே ஒரு மாட்டை பார்க்கவெல்லாம் மருத்துவர் பண்ணைக்கு வரமாட்டார் என்பதால் அவனுக்கு அந்த சிரமம். அதை முடித்துவிட்டு தீவனப்புல் அறுக்கப் போனவனுக்கு பொழுது சாயும் வரை வேலை சரியாக இருந்தது. அதன் பிறகு மீண்டும் பண்ணைக்கு வந்து இதர வேலைகளை முடித்துவிட்டு அவன் வீட்டுக்கு வர இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

கனிமொழி திண்ணையில் புத்தகம் படித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை தூரத்தில் வரும் பொழுதே பார்த்துவிட்டான். தூங்கியிருப்பாள் என்று எண்ணியபடி வந்தவனுக்கு அவள் விழித்திருந்து ஆனந்த ஆச்சர்யம். உள்ளம் துள்ள பைக்கை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். மறு திண்ணையில் படுத்திருந்த அலமேலு பைக் சத்தம் கேட்டுவிட்டு விழித்து எழுந்தார்.

“வந்துட்டியாப்பா!”

“படும்மா படும்மா… இன்னைக்கு லேட்டாயிட்டு” – தாயின் உறக்கத்தை கெடுக்கிறோமே என்கிற எண்ணத்தில் அவசரமாக சொன்னான்.

“அந்த பொண்ணு வேற சாப்பிடாம உட்கார்ந்திருக்குப்பா. ரெண்டு பேருக்கும் தோசை ஊத்தி கொடுத்துட்டு வந்து படுக்கிறேன். நீ கைய காலை கழுவிட்டு வா” என்று எழ போனார்.

மலையமான் மனைவியை, ‘இன்னம் சாப்பிடலையா நீ!’ என்பது போல் பார்க்க அவளுடைய கவனமோ மாமியாரிடம் இருந்தது.

“நாங்க சாப்பிட்டுக்கறோம், நீங்க தூங்குங்க” என்றாள். அவள் அவசரமாக தன்னை கழட்டிவிட முயல்வதை புரிந்துக் கொண்ட மாமியார் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். நல்லது நடக்க வேண்டும் என்று ஊரில் உள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு “சரி போங்க” என்று அலுப்புடன் கூறுவது போல் கூறிவிட்டு படுத்து கொண்டார்.

ஹாலில் குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொண்டு படுத்திருந்த தாமரை குறட்டைவிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய உறக்கத்தை கலைத்துவிடாமல் கணவனும் மனைவியும் பூனை போல் அடியெடுத்துவைத்து பின்கட்டிற்கு சென்றார்கள்.

” மணி என்ன ஆகுது! ஏன் இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்த?”

“அதேதான் நானும் கேட்கறேன், மணி என்ன ஆகுது? எதுக்கு இவ்வளவு லேட்?” – அவள் அதிகாரமாக கேட்ட தொனியில், வேலை செய்த களைப்பெல்லாம் எங்கோ மறைந்துவிட மலையமானின் முகம் பிரகாசமானது.

“எப்பவும் லேட்டா தானே வருவேன்!” என்றான்.

“இவ்வளவு லேட்டாவா!” – ஆச்சரியத்துடன் கேட்டாள். பெரும்பாலும் அவன் வரும் நேரத்தில் அவள் உறங்கிவிடுவதால் உண்மையிலேயே அவளுக்கு தெரியவில்லை.

“தினமும் ஒரே நேரத்துல வீட்டுக்கு வர்றதுக்கு நா என்ன ஆபீஸ் வேலைக்கா போறேன். பண்ணையம் தானே, முன்ன பின்ன ஆகும்” என்றான். அவன் என்னவோ எதார்த்தமாகத்தான் அந்த வார்த்தையை சொன்னான். ஆனால் அவளுக்கு சுருக்கென்று குத்தியது.

அவனுடைய நிலையையும் தொழிலையும் இன்னமும் முழுமையாக அவளுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி மலையமான் என்கிற மனிதனின் பக்கம் அவள் மனம் சாயத்துவங்கிவிட்டது. இப்படி மாறிவிட்டோமே என்று அதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மனதில் எழுந்த எதிர்மறை உணர்வை வெளிக்காட்டாமல் சமாளித்து தனக்குள்ளேயே விழுங்கிக்கொள்ள அவள் போராடிக் கொண்டிருந்த போது, “கசகசன்னு இருக்கு, உடம்புல தண்ணியை ஊத்திக்கிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு கிணற்றங்கரைக்குச் சென்றான் அவன்.

அந்த இடைவெளியை அவகாசமாக எடுத்துக் கொண்டு தன்னை சமன்படுத்திக் கொண்டாள் கனிமொழி.

‘உலகத்துல என்னென்னவோ நடக்குது! எத்தனையோ பொண்ணுங்க கல்யானம்கற பேர்ல கொடூரமான ஆம்பளைங்ககிட்ட மாட்டிக்கிறாங்க. நமக்கு அப்படி எதுவும் ஆகளையே! நல்ல மனுஷனைத்தானே கல்யாணம் பண்ணியிருக்கோம்’ என்று ஏதேதோ எண்ணி தன்னைத்தானே தேற்றி கொண்டு சமையல் கொட்டகைக்குள் நுழைந்தாள்.

விறகு அடுப்புத்தான்… எறிந்த விறகை வெளியே இழுத்து வைத்திருந்தார்கள். அடுப்பு சுத்தமாக அணைந்து போயிருந்தது. இதற்கு முன் விறகடுப்பை பற்ற வைத்ததில்லை என்றாலும் எப்படி பற்ற வைக்க வேண்டும் என்பது அவளுக்கு தெரியும்.. பார்த்திருக்கிறாள். தோசை மாவு, கரண்டி தட்டு அனைத்தையும் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு, விறகை அடுப்பில் வைத்து தீ மூட்ட முயன்றாள். கனத்திருந்த விறகில் தீ பற்ற மறுத்தது. இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அடுப்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குச்சியை கிழித்து போட்டாள். குபீரென்று பற்றிக் கொண்டது நெருப்பு. கிட்டத்தட்ட ஆள் உயரத்திற்கு… அலறிவிட்டாள் கனிமொழி. பதட்டமும் நடுக்கமுமாக பக்கத்தில் இருந்த குடத்தை தூக்கி கவிழ்த்து விட தீ அணைந்து புகைமண்டலமாக மாறிவிட்டது அந்த கொட்டகை.

‘என்ன காரியம் செய்துவிட்டோம்! ஒரு டம்ளர் மண்ணெண்ணெய் தானே இருக்கும்! அவ்வளவு ஊற்ற கூடாதோ!’ – பதட்டம் குறையவில்லை அவளுக்கு. சற்று அசந்திருந்தாலும் என்னவாகியிருக்கும்! உடல் வெடவெடவென்று உதற திகைப்பூண்டை மிதித்தது போல் வேரூன்றி போய் நின்றாள்.

குளித்துவிட்டு கைலியை மாற்றிக் கொண்டு ஈரத்துண்டை உதறி தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு கிணற்றங்கரையிலிருந்து இறங்கிய மலையமான் திடீரென்று பளீரிட்ட வெளிச்சத்தில் கொட்டகை பக்கம் பார்வையை திருப்ப, அதே நேரம் கனிமொழியின் அலறல் ஒலி அவன் ஈரக்குலையை உலுக்கியது.

“என்ன ஆ…ச்…சு!” – ஓங்கி குரல் கொடுத்தபடி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான். நான்கே எட்டில் அவன் கொட்டகையை அடைவதற்குள் அந்த இடம் புகை மண்டலமாக மாறியிருக்க அங்கே, கையில் குடத்துடன் அடுப்பை வெறித்துக் கொண்டு நின்றாள் கனிமொழி.

நடந்தது என்ன என்பதை அவள் சொல்லி அறிந்துகொள்ள வேண்டிய தேவையில்லாமல் சூழ்நிலையே அனைத்தையும் அவனுக்கு உணர்த்திவிட, அவள் கையிலிருந்த குடத்தை பிடுங்கி தூர எறிந்துவிட்டு அவள் கையை பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.

“என்ன பண்ணின அங்க?” – கடும் கோபத்துடன் கேட்டான்.

“த்தொ..தோசை…” – பேச முடியாமல் தொண்டையை ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்துக் கொண்டது.

“தோசையா! முதல்ல உனக்கு விறகடுப்பு பத்த வைக்க தெரியுமா?”

“பா..ர்..த்திருக்கேன்”

“கிழிச்சிருக்க” – நாசி விடைக்க நெற்றி நரம்பு புடைக்க சீறினான். தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த ஆத்திரம் அழுகையாக மாறி கண்களில் கண்ணீர் வடிந்தது கனிமொழிக்கு.

ஆழ மூச்செடுத்து தலையை அழுந்த கோதியவன் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு கொல்லைப்புற வாசற்படியில் அமர்ந்துவிட்டான். அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்தவனுக்கு உடல் முழுவதும் வியர்வை. கனிமொழிக்கு சங்கடமாக இருந்தது. அவனை பயமுறுத்திவிட்டோமே என்று வருந்தியவள் தன்னுடைய பயத்தை முற்றிலும் மறந்து போனாள்.

அவன் பதட்டம் அடங்கும் வரை சற்று நேரம் காத்திருந்தவள் பிறகு மெல்லிய குரலில், “சாரி… சேர்ந்து சாப்பிடலாம்னு நெனச்சேன்” என்றாள்.

தலையை உயர்த்தி அவள் முகத்தை பார்த்தான் மலையமான். அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு நின்றாள். மலங்க விழிக்கும் குழந்தையின் பார்வை. ஒரு கையை உயர்த்தி அவளை அருகில் அழைத்தான். தயங்காமல் வந்து அவனோடு ஒட்டி அமர்ந்துக் கொண்டாள். அவளை தோளோடு அவன் அணைக்க, அவள் தலை தானாக அவன் நெஞ்சில் சாய்ந்தது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை. நெஞ்சுக் கூடு பலமாய் அதிர, நாணேற்றிய வில் போல் அவன் உடல் இறுகியது. மனம் மத்தளம் கொட்டியது. அதை அவளும் உணர்ந்தாள். காரணம் புரிந்து சங்கடப்பட்டவள் மெல்ல விலகினாள். சட்டென்று அவளை தன்னோடு இறுக்கிப் பிடித்துக் கொண்ட மலையமான், “ஏன்! என்ன ஆச்சு?” என்றான் அவளை விட மனமில்லாதவனாக.

“பசிக்கலையா?” என்றாள் குரலே எழும்பாமல். அவளை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். அவன் கண்கள் வேறு கதை சொன்னது. அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் கனிமொழி எழுந்தாள்.

பொம்மையை பறிகொடுத்த சிறுவன் போல் அவன் பரிதாபமாக பார்க்க, “ட்ரெஸ்ஸெல்லாம் ஈரமாயிடிச்சு. மாத்திக்கிட்டு வரேன்” என்று அவள் சாக்கு சொன்னாள். அவன் அவளை மேலும் கீழும் பார்த்தான். கொஞ்சம் நனைந்துதான் இருந்தது. தீயை அணைக்க குடத்தை எடுத்து கவிழ்த்த போது தன் மீதும் ஊற்றிக் கொண்டாள் போலும் என்று நினைத்தவன் ‘சரி’ என்பது போல் தலையசைத்தான். கனிமொழி வீட்டுக்குள் செல்லும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், மீண்டும் ஒரு பெருமூச்சோடு எழுந்து கொட்டகையில் கிடந்த கயிற்றுக் கட்டிலை தூக்கிக் கொண்டு வந்து கொள்ளைபுற வாசலில் நிலவொளியில் போட்டு அமர்ந்தான்.

கனிமொழி வீட்டுக்குள் சென்ற போது தாமரை அடித்துப் போட்டது போல் உறங்கி கொண்டிருந்தாள். திண்ணையில் எட்டிப்பார்த்தால் அலமேலுவின் நிலையம் அதுதான். ஒரு பிரளயமே வெடித்து அடங்கியிருக்கிறது! இவர்கள் எதுவுமே தெரியாமல் உறங்கி கொண்டிருக்கிறார்களே என்கிற ஆச்சரியத்துடன் உடை மாற்றிக் கொண்டு அவளுடைய கட்டிலை அடுத்து உள்ள ஜன்னலில் இருட்டுக்குள் எதையோ தேடி எடுத்துக் கொண்டு கொள்ளைப்புற வாசலுக்கு கணவனைத் தேடி வந்தாள்.

அவள் வருவாள் என்று தெரிந்தே இருந்தது மலையமானுக்கு. பின்வாசல் நிலைப்படியை அவள் தாண்டியதும் அவளை பார்த்துவிட்டவனின் பார்வை சட்டென்று கூர்மையானது. மறுநிமிடமே கண்களில் குறும்புடன் சத்தம் எழாமல் சிரித்தான். அவன் சிரிப்பதை கவனித்துவிட்டு அவனிடம் நெருங்கியவள் “எதுக்கு சிரிக்கிறீங்க!” என்றாள் அவன் சிரிப்பை ரசித்தபடி.

அவன் காரணம் சொல்லாமல் மறுப்பாக தலையசைத்தான்.

“சொ..ல்..லுங்க” – செல்லமாக வற்புறுத்தினாள்.

“ஊருக்குள்ள கல்யாணம் ஆன பொண்ணுங்களை எல்லாம் பார்த்திருக்கியா?”

“ம்ம்ம்… ஏன்?” – புரியாமல் கேட்டாள்.

“என்ன டிரஸ் இது?” என்றான் அவள் ஆடையை மேலும் கீழும் பார்த்து. கனிமொழியும் குனிந்து பார்த்துக் கொண்டாள். ஸ்கர்ட்-டாப்ஸ் நன்றாகத்தான் இருந்தது.

“என்ன ஆச்சு? நல்லா இல்லையா!” – கவலையுடன் கேட்டாள்.

“நல்லாத்தான் இருக்கு, ஆனா அபிக்கு அக்கா மாதிரி இருக்கு. குட்டி பிள்ளை மாதிரி… அபிக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் சொல்ல முடியும். அவளை விட நீ கொஞ்சம் உயரமா இருக்க… அவ்வளவுதான்” என்றான்.

“இதுக்கு முன்னாடி கூட இந்த டிரஸ் போட்டிருக்கேனே! அப்போல்லாம் நீங்க ஒன்னும் சொல்லல!”

“அப்போல்லாம் நா உன்ன இப்படி பார்க்கலையே!”

எப்படி என்று அவள் கேட்கவில்லை. உதட்டை கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள். அவள் உதட்டையே ஊன்றிப் பார்த்தவன், “கனி” – அவன் குரல் கனத்து கிசுகிசுப்பாய் ஒலித்தது. அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

“கனி… இங்க பாரு… நிமிரு…” எழுந்து நின்று அவள் முகத்திற்கு அருகே குனிந்து அவள் பார்வையை சந்திக்க முயன்றான். அவனுடைய அந்த செய்கையில் மலர்ந்த புன்னகையுடன் அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“ப்பா, ஒரு பார்வைக்கே இவ்வளவு கஷ்ட்டம்!” என்று அலுத்துக் கொண்டவன் அவள் பார்வை தன்னை தழுவியதும், “எப்படி இருக்கேன்?” என்றான். அவள் கண்களில் சின்னதாய் ஒரு அதிர்ச்சி தோன்றி மறைந்தது. ‘சைட் அடிக்கிறோம் என்று சொல்கிறானோ!’ என்பது போல்.

அவளுடைய எண்ணத்தை புரிந்து கொண்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “ஆறடி உயரத்துல நல்ல வாட்ட சாட்டமா திடகாத்ரமா இருக்கேனா?” என்று கண் சிமிட்டியவன், தொடர்ந்து, “என்னோட பொண்டாட்டி நீ, கொஞ்சமாவது எனக்கு ஏத்த மாதிரி இருக்க வேண்டாமா?” என்றான் அவளை மன்மத பார்வை பார்த்தபடி.

குபீரென்று அவள் முகம் சிவந்துவிட்டது. அதை அந்த நிலவொளியில் தெளிவாக கண்டுகொண்டவன் உல்லாசமாக வாய்விட்டு சிரித்தான்.

அவன் அந்த அர்த்த ராத்திரியில் அப்படி சத்தம் போட்டு சிரித்ததும் பயந்து போனவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் உதட்டில் ஒற்றை விரலை வைத்து, “ஷ்ஷ்ஷ்” என்றபடி அவனிடம் நெருங்கி வந்தாள். குவிந்திருந்த அவள் உதட்டை சுவைத்துப் பார்க்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவலை செயல்படுத்த முடியவில்லை அவனால். தான் எத்தனை பெரிய கோழை என்பதை அன்றுதான் உணர்ந்தான் மலையமான்.

“ரௌடி..”

“என்ன!”

“என்னை எப்படி மிரட்டி வச்சிருக்க தெரியுமா நீ?”

“நானா! எப்போ!”

“ஹும்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவன் “இப்ப கூடத்தான்” என்றான் அவள் உதட்டை பார்த்துக் கொண்டே. அவன் பார்வையிலும் குரலிலும் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்துக் கொண்டவள், சட்டென்று தன் கையிலிருந்த ப்ரெட்டைடியும் ஜாமையும் அவன் கையில் திணித்துவிட்டு, “சாப்பிடுங்க” என்றாள்.

“இதையா!” என்று கையிலிருந்ததை கவலையுடன் பார்த்துவிட்டு அவன் அவள் இதழ்களை மீண்டும் பார்க்க கனிமொழி சுதாரித்துக் கொண்டு, “மாவு சட்னிலையெல்லாம் தண்ணி ஊத்தி நாசமாயிடிச்சு” என்றாள் பேச்சை மாற்றும் உத்தேசத்துடன்.

“அதுக்கு! இந்த கருமைத்தை நா சாப்பிடணுமா?”

“ப்ளீஸ்… இன்னைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேணுன்னா நா ஜாம் போட்டு தரேன்” – அவனிடமிருந்து பிடுங்காத குறையாக வாங்கி ப்ரெடில் ஜாமை தடவி கொடுத்தாள்.

வாங்கி கொண்டான். “நீயும் சாப்பிடு” என்று அவளையும் அருகில் அமர்த்திக் கொண்டான். அந்த இரவு விடியவே கூடாது என்று தோன்றியது அவனுக்கு. அவளுடைய அருகாமை… சரசமான பேச்சு… எல்லாம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கும் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு அவள் மனம் இன்னமும் தயாராகவில்லை.

“ரொம்ப லேட் ஆயிடிச்சு… தூக்கம் வருது” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடி மெத்தையில் சுருண்டுக் கொண்டாள். உறக்கம்தான் எட்டாக்கனியாக எட்டி நின்று வித்தை காட்டியது.
Comments are closed here.