Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 24

அத்தியாயம் – 24
விடிந்து ஆறு மணிக்கு மேல் தான் அலமேலு அம்மாள் வீட்டுக்கு வந்தார். உள்ளே மருமகள் படுத்திருக்கும் போது சட்டென்று வீட்டுக்குள் நுழைந்துவிடக் கூடாது என்கிற இங்கீதத்துடன் வெளி வேலைகளை செய்து கொண்டிருந்தவர், பண்ணையிலிருந்து பால் கொண்டு வந்தவரிடம் ஏதோ சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சத்தத்தில் தான் கனிமொழிக்கு விழிப்புத் தட்டியது.
விழித்ததுமே அவளுடைய முதல் பார்வை பக்கத்தில் அவன் படுத்திருந்த இடத்திற்குத் தான் பாய்ந்தது. அங்கே அவன் இல்லை… விடிவதற்கு முன்பே கிளம்பிவிட்டான். கிளம்புவதற்கு முன் அவன் செய்த சேஷ்டைகளில் ஒரு முறை விழித்துவிட்டுத் தான் மறுபடி தூங்கினாள். ஆனாலும் அருகில் அவன் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருந்தது.


ஒரே இரவில் எவ்வளவு மாறிவிட்டாள்! கிட்டத்தட்ட தலைகீழாக! பெருமூச்சுவிட்டாள். எழுந்து கொள்ளவே மனமில்லை. உடல் களைத்து போயிருந்தது… வெளியே மாமியார் சாணம் தெளித்து பெருக்கும் ஓசை அவளை படுக்கவிடவில்லை. எழுந்துகொண்டாள். வாசல் பக்கம் சென்றால் அவரை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், மாற்றுடையை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்திற்குச் சென்றாள். அவள் குளித்துவிட்டு வெளியே வந்த போது,
“என்ன கண்ணு! காலையிலேயே குளிச்சுட்டியா! உள்ள காபி போட்டு வச்சிருக்கேன். எடுத்துக்க” என்றபடி பின்பக்க கொல்லையை கூட்டிக் கொண்டிருந்தார் அலமேலு.

கையிலிருந்த துணிகளை கொடியில் காய போட்டுவிட்டு, காபி டம்ளரோடு கூடத்திற்கு வந்தவள், முதல் வேலையாக மொபைலை எடுத்து விடுப்புக்கேட்டு கல்லூரிக்கு மெயில் அனுப்பினாள். அவளுக்கு அன்று வெளியில் செல்லவே மனமில்லை.

முதல்நாள் இரவு நடந்ததெல்லாம் சரியா இல்லை அவசரப்பட்டுவிட்டோமா என்கிற கேள்வி அவள் மண்டையை உடைத்தது. அவன் அருகில் இருந்தவரை… ஏன் இரவெல்லாம் அவனோடு கூடி கழித்த தருணங்களில் ஒரு கணம் கூட அவளுக்கு இந்த எண்ணம் எழவில்லை. இப்போது மட்டும் ஏன்! தலைவலிக்கு இதமாக காபியை குடித்து முடித்தவள், ஈர கூந்தலில் கட்டியிருந்த டவலை அவிழ்த்து முடியை உலர்த்தினாள். வெளியே பைக் சத்தம் கேட்டது. நொடியில் அவளிடம் ஒரு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனை நேருக்கு நேர் எதிர்கொள்ள கூச்சப்பட்டு கூந்தலை உலர்த்துவது போல் வேறு பக்கம் திரும்பி நின்றுக் கொண்டாள்.

பொதுவாக இந்த நேரத்தில் அவன் வீட்டுக்கு வருவதில்லை… அன்று அவள் கல்லூரிக்கு செல்லும் முன் ஒரு முறை பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் தான் ஓடி வந்தான். வந்தவன் பார்த்தது தனக்கு முதுகுகாட்டி நின்ற மனைவியை தான்.

அப்படியே அவளை இறுக்கி அணைத்து வாசம் பிடித்தான். “ஐயோ! யாராவது வந்துட போறாங்க” என்று அவள் பதறி விலக முற்பட்டாள். அவனோ, மேலும் பலமாக அவளை இறுக்கிப் பிடித்து தூக்கி ஒருமுறை சுற்றி, அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான். அவன் மீது விழுந்ததால் அவளுக்கு அடி இல்லை. அவனுக்கு அடிபட்டதா என்றும் தெரியவில்லை. ஆனால் பயங்கர சத்தம்… கட்டில் உடைந்துவிட்டதோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.

“என்ன ஆச்சு?” என்று கொல்லைப் புறத்திலிருந்து அலமேலுவின் சத்தம் ஓங்கி ஒலிக்க கனிமொழி பதறி கணவனின் பிடியிலிருந்து விலகுகிறேன் என்று ஜன்னலில் இருந்த பொருட்களை எல்லாம் உருட்டிவிட்டாள். எல்லாம் கலகலவென்ற சத்தத்துடன் கீழே உருண்டது.

அதற்குள் தாய் உள்ளே வரும் சத்தம் கேட்டு நல்ல பிள்ளை போல் மலையமான் எழுந்து தலைவாருவது போல் கண்ணாடி பக்கம் திரும்பி நின்றுக் கொள்ள கனிமொழி முழித்துப் போனாள்.

“ஐயோ! என்ன கண்ணு ஆச்சு?” என்று தனக்கு எதிரில் வந்து நின்ற மாமியாரை திகைப்புடன் பார்த்தவள், “அது… வந்து…. விழுந்… விழுந்துட்டேன்” என்றாள் உளறலாக.

அவள் ஜன்னலை ஒட்டி மெத்தையில் எக்குத்தப்பாக அமர்ந்திருப்பதை கண்டு, “அங்க போயி எப்படி கண்ணு விழுந்த?” என்றார் வியப்புடன்.

அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. “மேல ஏறி… தெரியாம…” என்று அவள் தடுமாற அலமேலு மகனை பார்த்தார்.

“ஏம்பா… இங்குட்டு ஒரு பொண்ணு விழுந்து கெடக்கு… என்னன்னு பார்க்காம நீ பாட்டுக்கு தலை சீவுற! தடார்ன்னு சத்தம் கொல்லப்பக்கம் வரைக்கும் கேட்குது. ஏதும் அடிகிடி பட்டிருக்கான்னு பாரு…” என்று கூறிவிட்டு கீழே கிடந்த பொருட்களையெல்லாம் மேலே எடுத்து வைத்தார். “நா எடுத்துக்கறேன்… நீங்க விடுங்க” என்று கனிமொழி கீழே இறங்கி மாமியார் செய்த வேலையை தனதாக்கிக்கொள்ள மூத்தவர் கொல்லைப்புறத்தில் விட்டுவிட்டு வந்த வேலையை தொடரும் நோக்கில் வெளியே சென்றார். அதுவரை மனைவியின் பக்கம் திரும்பாமல் சிரத்தையாக சிகையலங்காரம் செய்து கொண்டிருந்தவன், தாயின் தலை மறைந்ததும் அவளை இழுத்துக் கட்டிக் கொண்டு, “ஏண்டி சாமான் சட்டையெல்லாம் உடைச்சு செலவு வைக்கிற?” என்றான்.

அவள் விழிகள் பெரிதாக விரிந்தன. செய்வதெல்லாம் செய்துவிட்டு அவள் மீது பழியா! இரண்டு கைகளிலும் அவன் மீசையை பிடித்து ஆட்டி, “நான் செலவு வைக்கிறேனா!” என்றாள்.

“ஏய்… ஏய்… வலிக்குதுடி… ராட்சசி…” என்று அவன் கத்த, “ராட்சசி அப்படிதான் செய்வா” என்று அவள் மேலும் ஆட்டினாள்.

அவள் கையில் பிடிபட்டிருந்த மீசையை அப்படியே விட்டுவிட்டு அவளை சுவற்றோடு சாய்த்து முகம் நோக்கி குனிந்தான். அதில் மயங்கி தன்னிலையிழந்தவளின் பிடி தானாக தளர்ந்தது. ஆனாலும் சுற்றம் சூழல் அவள் நினைவிலிருந்து முழுதாக மறந்துவிடவில்லை. பகல் நேரம்… திறந்திருக்கும் கதவுகள்.. கொல்லைப்புறத்தில் மாமியார்… இயல்பான எச்சரிக்கை உணர்வோடு அவனிடமிருந்து விலகியவள், “கொஞ்சம் கூட எதிர்பார்க்கள” என்றாள்.

“எதை” என்றான் அவன் அவளை விட மனமில்லாதவனாக.

“இந்த உம்மணா மூஞ்சிக்குள்ள இப்படி ஒரு மன்மதனை” என்றாள் சிரித்துக்கொண்டே.

“அதெல்லாம் நிறைய இருக்கு… காலேஜ் போயிட்டு வா காட்டறேன்” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் வாசல் பக்கம் சென்றாள். “ஓய்! என்ன… மாமனை பிரிய முடியாம லீவ் போட்டுட்டியா?” என்று கத்தினான் வீட்டுக்குள் இருந்தபடியே.

வெளியே சென்றவள் சட்டென்று நின்று கண்களை உருட்டி முறைத்தாள்.

உண்மையில் அவள் விடுப்பு எடுத்திருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னான். ஆனால் அவள் பார்த்த பார்வை அதுதான் உண்மை என்று கூறிவிட “ஓஹோ!” என்று சத்தமாக சிரித்தான்.

“ஹலோ ஹலோ… லீவ் போட்டது மட்டும் தான் உண்மை… மத்ததெல்லாம் ஒன்னும் இல்ல… டயர்டா இருக்கு… ரெஸ்ட் எடுக்கணும் அவ்வளவுதான்”

“எடு எடு… நைட் வேலை இருக்கும்ல” என்று கண்ணடித்துவிட்டு அவன் கொல்லைப்புறத்திற்கு செல்ல வெட்கச் சிரிப்புடன் அவள் வாசல் பக்கம் வந்தாள்.

மகன் முகத்தில் இருக்கும் புன்னகையையும் மருமகளிடம் தெரிந்த மாற்றத்தையும் கவனித்த அலமேலு காலம் கனிந்துவிட்டது என்பதை புரிந்துக் கொண்டு, பேரன் பிறக்க வேண்டும் என்று ஊரில் உள்ள தெய்வங்களையெல்லாம் வேண்ட துவங்கினார்.


அந்த ஒரு மாதம் எப்படி போனதென்றே தெரியவில்லை. படிப்பு பணம் அழகு என்று அனைத்து ஏற்ற தாழ்வும் மனதிலிருந்து மறைந்து விட, இருவருக்கும் தங்களை பற்றிய எண்ணம் மட்டுமே மேலோங்கியிருந்தது. தயக்கம் பயம் சந்தேகம் என்று பலவித எதிர்மறை உணர்வுப் போராட்டங்களுடன் உறவை துவங்கிய கனிமொழி இப்போது முற்றிலும் தன்னை கணவனோடு பிணைத்துக் கொண்டாள். காரணம் முழுக்க முழுக்க மலையமான் மட்டும் தான்…

நீ ஒரு அடி விலகினால் நான் பத்து அடி விளக்குவேன் என்று தன்மான சிங்கமாக மனைவியிடமிருந்து தள்ளியிருந்தவன், இப்போது அவளை உடல் பொருள் ஆவி என்று அனைத்து வகையிலும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டான். அவளை தன்னிலை மறக்கச் செய்தான். முப்பது நாட்கள் மோகக்கடலில் முத்தெடுத்துவிட்டு ஆசை என்னும் அலையில் இன்பமாக மிதந்துக் கொண்டிருந்த நாட்கள் அவை…

அன்று கல்லூரிக்கு விடுமுறை… வழக்கம் போல கனிமொழி கூடத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். பூனை போல் வீட்டுக்குள் நுழைந்த மலையமான் அவளை பின்னாலிருந்து கட்டி அணைக்க, அந்த நேரத்தில் அவன் பண்ணையிலிருந்து வருவான் என்பதை எதிர்பார்க்காத கனிமொழி பயந்து கையிலிருந்த பொருளை நழுவவிட, அவன் அவளை நழுவவிடாமல் இறுக்கிக் கொண்டான்.

“அழுக்கா! அதுக்குள்ள என்ன அவசரம்! குளிச்சிட்டு வர வேண்டியது தானே?” என்று கணவனை கடிந்துக் கொண்ட கனிமொழி அவனை விலக்கிவிட எந்த முயற்சியும் செய்யவில்லை.

மலையமானின் இடி சிரிப்பில் அந்த பழைய வீட்டின் ஓடுகள் உதிர்ந்து விழ தயாராகிவிட்டன.

“ஐயோ! எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க!” – அதற்கும் கனிமொழி பயந்தாள். யாராவது வந்து விடுவார்களோ என்கிற அச்சம் அவளுக்கு.

அதையெல்லாம் கன்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லை. குவிந்து விரிந்த அவள் சிப்பி இதழ்களை சிறை செய்யும் முயற்சியில் அவன் இறங்க, அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக, “கனி” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் அலமேலு.

அவருடைய குரல் கேட்டதுமே இருவரும் பதறி விலகிவிட்டார்கள் என்றாலும் அந்த சூழ்நிலை மூவருக்குமே சங்கடமாகிவிட்டது. மகன் வீட்டுக்கு வந்ததை அலமேலு பார்த்திருந்தால் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டார். இதுவரை இப்படி ஒரு தர்மம் சங்கடம் அந்த வீட்டில் நடந்ததில்லை. பதட்டத்தில் கை காலெல்லாம் நடுங்க கனிமொழி கணவனின் முதுகுக்கு பின்னால் ஒதுங்கிக்கொள்ள, “என்னம்மா?” என்றான் மலையமான்.

“கனியோட சிநேகிதி பொண்ணு வந்துருக்குப்பா. வெளியே தாமரைகிட்ட பேசிகிட்டு நிக்குது. ரெண்டு பெரும் வாங்க” என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

கன்றிய முகத்துடன் தலை குனிந்து நின்ற மனைவியின் முகத்தை நிமிர்த்திய மலையமான், “என்ன ஆச்சு இப்போ?” என்றான்.

அவனை எரிச்சலுடன் பார்த்தவள், “உங்களாலதான்” என்றாள். அவனுக்கு சிரிப்பு வந்தது.

“அவங்க என்ன நெனச்சிருப்பாங்க!”

“நல்லவிதமாதான் நெனச்சிருப்பாங்க. நீ மூஞ்சிய இப்படி உம்முன்னு வச்சுக்காம சிரி” என்றான்.

அவள் சிரிக்கவில்லை. அதற்குள் ப்ரீத்தி வீட்டுக்குள் வந்துவிட்டாள். அவளை பார்த்ததும் வரவேற்று உபசரித்தார்கள்.

திருமண தேதி நெருங்கிவிட்டதால் பத்திரிக்கை கொண்டு வந்திருந்தாள் ப்ரீத்தி. வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்துவிட்டு மலையமானை, “அண்ணா, நீங்க கண்டிப்பா வந்துடனும்” என்று ஸ்பெஷலாக அழைத்துவிட்டுச் சென்றாள்.

ப்ரீத்தி வந்து சென்ற பிறகும் கூட கனிமொழி தெளியவில்லை. தாங்கள் நெருக்கமாக இருந்த போது மாமியார் உள்ளே வந்துவிட்டது அவளை பாதித்துவிட்டதை மலையமான் புரிந்துக் கொண்டான். அவளை சமாதானம் செய்ய பெரிதும் முயன்றான். யாரும் இல்லாத போது “என்னடி” என்று அவளை கட்டிப்பிடித்து கொஞ்சினான். அவள் அவனிடம் முகத்தை திருப்பிக்கொள்ளவில்லை. ஆனால் அவளுடைய சிரிப்பு மனதிலிருந்து வராமல் வெறும் உதட்டளவில் மட்டும் இருந்தது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

அடுத்த நாளே பிளைவுட் பலகை வாங்கி வந்து ஒரு பக்க கூடத்தை முழுவதுமாக அடைத்து கதவு போட்டு ஒரு அறை போல தயார் செய்தான். ‘இதை முதலிலேயே செய்யாமல் போனோமே’ என்று நொந்துக் கொண்டு அவள் முகம் பார்த்தான்.

அவசர அவசரமாக ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை. அவளை பிடித்து உலுக்க வேண்டும் போல் கோபம் கூட வந்தது அவனுக்கு. எதுவும் சொல்லாமல் வெளியே போய்விட்டான். வேலை செய்த ஆட்கள் வாசலில் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கூலி கொடுத்துவிட்டு பண்ணைக்கு போய்விட்டான்.

கோபமாக பண்ணைக்கு வந்தவனை வேலை உள்ளிழுத்துக் கொண்டது. அவன் வீட்டுக்கு வரும் நேரம் சற்று தாமதமானதும் அலைபேசியை எடுத்துவிட்டாள் கனிமொழி.

“மணி பத்தாயிடிச்சு. பண்ணையில இன்னும் என்ன பண்றீங்க?” என்று உரிமையுடன் அதட்டினாள்.

“ஏன்… உனக்கு மட்டும் தான் வேலை இருக்குமா? எனக்கு இருக்காதா?”

“அப்படி என்ன வேலை… பதினோரு மணி வரைக்கும்?”

“உனக்கு தான் புத்தகமும் பேனாவும் இருக்கே! அதையே கட்டிக்கிட்டு அழுவு… என்னை எதுக்கு தேடுற?” என்று கடுப்படித்தான்.

அவள் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு, “வீட்ல யாரும் இல்ல” என்று முணுமுணுத்தாள். குரலில் லேசான பயம் தெரிந்தது. அவனுக்கு உருகிவிட்டது. வேலையாட்களிடம் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிட்டான். உப்புக்கடலில் முத்துக்குளிப்பது போல் பிணக்கில் கழிந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஊடலோடு கூடிய கூடலாக கழிந்தது அன்றைய இரவு அவர்களுக்கு.

மறுநாள் கல்லூரிக்கு கிளம்பும் போது சற்று கூடுதல் அலங்காரத்துடன் தயாரானாள் கனிமொழி. அதை கவனித்துவிட்டு, “என்ன விசேஷம் இன்னைக்கு?” என்றான் மலையமான்.

“ப்ரீத்திக்கு கல்யாணம்ல… அங்க போயிட்டு அப்படியே காலேஜுக்கு போகணும்” என்றாள்.

“ப்ரீதிக்கா! அந்த பொண்ணுக்கு இன்னைக்கா கல்யாணம்! என்னைய கூட ரொம்ப வருந்தி கூப்பிட்டுச்சே! நானும் வரணுமா?” என்றான்.

அவள் சட்டென்று “வேண்டாம் வேண்டாம்… நா போயிக்கிறேன்” என்றாள்.

அவள் அப்படி உடனே தன்னை வேண்டாம் என்று சொன்னது முகத்தில் அடித்தது போல் இருந்தது அவனுக்கு.

ஏதேதோ வேண்டாத எண்ணங்கள் மனதில் எழ முயல… ‘படிச்ச பொண்டாட்டி எதை பேசினாலும் படிக்காத புருஷனுக்கு தப்பாதான் தெரியும். இந்த மாதிரி தாழ்வு மனப்பான்மை ஈகோவெல்லாம் இருக்கக் கூடாதுடா மலையா’ என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டு பண்ணைக்கு கிளம்பிவிட்டான்.

பன்னிரண்டு ஒரு மணி இருக்கும். அவனுடைய அலைபேசிக்கு ஏதோ ஒரு புது எண்ணிலிருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. வேலையாக இருந்தவன் அதை கவனிக்கவில்லை. வேலையாள் தான் கவனித்துவிட்டு சொன்னான். எடுத்து யார் என்று கேட்டவனுக்கு ஆச்சரியம்.

“உடனே வர்றேண்ணே” என்று சொல்லிவிட்டு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பினான்.
Comments are closed here.