Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 35

அத்தியாயம் – 35
இன்றும் ஏரிக்கரையோர பனங்காட்டைத்தான் தேடி வந்தான் மலையமான். மனம் அலைகடல் துரும்பு போல் நிலைகொள்ளாமல் தத்தளித்தது.

‘அம்மா, அக்கா, டிரைவர் என்று அவ்வளவு பேர் சுற்றி இருந்த போதும் எப்படி அவள்…!’ – என்பதற்கு மேல் அவனால் யோசிக்க கூட முடியவில்லை. அவன் வளர்ந்த சூழ்நிலையில் அது மிக பெரிய விஷயம். அந்த பெரிய விஷயத்தை அவள் சாதாரணமாக செய்திருக்கிறாள் என்றால் அவளுடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்! அதுவும் அவன் அவ்வளவு வெறுப்பை கொட்டிய நொடியில் அவள் காட்டிய அன்பு அவனை புரட்டிப் போட்டது. இதற்கு மேல் ஒரு பெண் எப்படி தன் மனதை வெளிப்படுத்துவாள்! – உள்ளே வலித்தது அவனுக்கு.

‘அப்படி என்ன பண்ணிட்டேன்னு அன்னைக்கும் கேட்டா… இன்னைக்கும் கேட்கறாளே! கோவத்துல… சின்ன புள்ள தனமா… என்ன பேசறோம்னு தெரியாம தான் பேசிட்டாளோ!’ – சிந்தனையில் புருவங்கள் நெரிய நெற்றியில் கோடுகள் விழுந்தன.

அன்று அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனை கொலையாய் கொன்றது என்னவோ உண்மைதான். அந்த பாதிப்பிலிருந்து அவனால் மீள முடியவில்லை என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் காலப்போக்கில் அவன் கொஞ்சம் மனம் இறங்கிருந்தாலும், ‘போகிறது போ…’ என்று அவளை மன்னித்திருக்க முடியும். ஆனால் அவன் அதை செய்யவில்லை.

அவள் இறங்கி வர வர… ‘என்னுடைய தேவை உனக்கு இவ்வளவு இருக்கும் போது நீ எப்படி என்னை அப்படி பேசலாம்!’ என்கிற அகங்காரம் வளர்ந்து அவளை மேலும் மேலும் நிராகரிக்கத் தூண்டியது. அந்த குரூர உணர்வுக்கு ‘கெளரவம்’ என்று பெயர் வைத்து.. அதற்கு தீனி போட்டு அவளை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் செய்தான். அதுதான் உண்மை… மற்றபடி கோபம்… மனக்காயம்… எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

வேறு யாருக்கும் அந்த உண்மை தெரியவில்லை என்றாலும் அவனுடைய மனசாட்சிக்கு தெரியும் அல்லவா! அந்த மனசாட்சி இப்போது குத்தியது. ‘மனைவியிடம் என்னடா உனக்கு கெளரவம்! அப்படி அவளை தண்டித்து இப்போது நீ எதை சாதித்துவிட்டாய்!’ என்று.

மன்னிப்பும் அன்பும் தரும் சமாதானத்தை… நிம்மதியை… அமைதியை… வேறு எந்த எதிர்மறை குணங்களும் தருவதில்லை. அவையெல்லாம் எதிரில் இருப்பவர்களை மட்டும் காயப்படுத்துவதில்லை. நம்மையும் சேர்த்தே வாட்டி வதைத்துவிடும் என்பதை வெகு தாமதமாக இப்போது புரிந்துக் கொண்டான் மலையமான்.

ஆனால் இவ்வளவு நாளும் அவளை வேண்டவே வேண்டாம் என்று ஒரேடியாக ஒதுக்கிவிட்டு இப்போது ஒரே நாளில் தலைகீழாக மாற மாறுவதென்றால் அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவளை நேருக்கு நேர் பார்க்கக் கூட முடியாதோ என்று தோன்றியது. அந்த அளவுக்கு அவன் மனதில் ஒரு பெரும் பனிச்சுவர் எழும்பியிருந்தது. அதை உடைக்க முடியாமல், மனவோட்டத்தை தன் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டான்.

‘அவளாத்தானே வந்தா! அவபாட்டுக்கு வீட்ல இருந்துட்டு போகட்டும்!’ என்று அலட்சியமாக எண்ணுவது போல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான்.


வாசலில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த அலமேலு.. கார், போன வேகத்திலேயே திரும்பி வருவதைக் கண்டு, அழுகையை நிறுத்திவிட்டு புருவம் சுருக்கி காருக்குள் இருப்பது யார் என்று கூர்ந்து பார்த்தார்.

கரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய டிரைவர், டிக்கியை திறந்து பெட்டிகளை எடுத்து திண்ணையில் வைத்தான். கனிமொழி கீழே இறங்கவில்லை. சட்டென்று எழுந்துச் சென்று காருக்குள் எட்டிப் பார்த்த அலமேலு மருமகளைக் கண்டதும், “என் கண்ணான கண்ணே… நா கண்டெடுத்த வைரமே!” என்று மீண்டும் ஒரு ஒப்பாரியை துவங்க… சத்தம் கேட்டு தாமரை கொல்லைப்புறத்திலிருந்து ஓடி வந்தாள்.

“ஆயா… எதுக்கு இப்ப அழுவுற? நவறு… கதவ தெறந்தாதானே அவங்க கீழ இறங்க முடியும்?” என்றான் டிரைவர்.

“என்னப்பா? திரும்பி வந்துட்ட! மலையன் எதுவும் சொன்னானா!” என்று தாமரை ஆவலுடன் டிரைவரிடம் விசாரித்தாள்.

“ஆமாக்கா, அண்ணன் தான், இந்த அக்காவை திரும்ப இங்கேயே கொண்டு வந்து விட சொன்னுச்சு” என்றான்.

உடனே அவள் முகம் மலர்ந்தது. “அப்படியா! சரிப்பா… சரிப்பா…” என்று கூறிக் கொண்டே”அம்மா, நீ நகரு” என்று தாயை நகர்த்திவிட்டு, கார் கதவை திறந்து கனிமொழியை கையை பிடித்து கீழே இறங்கச் செய்தாள்.

“வருத்தப்படாத… எல்லாம் சரியாயிடும். உள்ள வா…” என்று அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். கனிமொழி யாரோடும் எதுவும் பேசவில்லை. மௌனமாகச் சென்று அட்டை தடுப்புக்கு உள்ளே கட்டிலில் படுத்து கொண்டாள். நெஞ்செல்லாம் எரிந்தது. விரட்ட விரட்ட இப்படி வந்து ஒட்டிக் கொள்கிறோமே! அந்த அளவுக்கா ரோஷம் இல்லாமல் போய்விட்டது என்று தன் மீதே கோபம் பொங்கியது.

ஒரு நேரம் மான ரோஷம் என்று எந்த வரையறையும் இல்லாமல் அவனுக்காக அனைத்தையும் விட்டுக்கொடுக்க துணிகின்ற மனம், பிறகு எல்லாம் நடந்து முடிந்ததும் இவ்வளவு இறங்கிவிட்டோமே எண்ணி புழுங்கி தவிக்கிறது. அந்த தவிப்பும் அவமானமும் அவளை ஒடுங்கச் செய்தது.

அன்று இரவு மலையமான் வீட்டுக்கு வரவில்லை. பண்ணையிலேயே படுத்துவிட்டான். என்னதான் அலட்சிய போர்வையை போர்த்தி அவன் தன்னை தின்னப்படுத்திக் கொண்டாலும், அவனுக்கும் அவளை எதிர்கொள்ள பயம்… அவள் முகத்தை ஏறிட்டு பார்க்க தயக்கம்… மொத்தத்தில் வீட்டுக்கு வரவே அச்சம்! உணர்வுகளின் ஆக்கிரமிப்புக்கு அடங்கி அவனும் தன்னை குறுக்கிக் கொண்டான்.

இரவு பதினோரு இருக்கும்! தாமரை தம்பிக்கு போன் அடித்தாள். “என்ன இன்னும் வீட்டுக்கு வராம இருக்க?” என்று அதட்டினாள்.

“வேலை இன்னும் முடியல” என்று பொய்யுரைத்தான் மலையமான்.

“விடியவிடிய வேலை பார்ப்பியா? வீட்ல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு எந்த அக்கறையும் இல்ல… அப்படித்தானே?” – கடுப்படித்தாள்.

“ப்ச்… எதுக்கு கூப்பிட்ட? எரிச்சல் படுத்தாம விஷயத்தை சொல்லு” என்று அவனும் கடித்தான்.

“எத்தனை நாளைக்கு இப்படி ஓடுவ? ஓடிக்கிட்டே இருந்தா எல்லாம் சரியாயிடுமா?” என்றாள் தமக்கை.

“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. நிஜமாவே வேலைதான். வரேன் வையி” என்று கூறி அழைப்பை துண்டித்தவன், மேலும் சற்று நேரம் பண்ணையிலேயே இருந்துவிட்டு நள்ளிரவுக்கு மேல வீட்டுக்கு கிளம்பினான்.

திண்ணையில் அலமேலு படுத்திருக்க, கூடத்தில் தாமரையும் குழந்தையும் படுத்திருந்தார்கள். கனிமொழியை காணவில்லை. அட்டை தடுப்புக்கு உள்ளே மின்விசிறியின் சத்தம் கேட்டது. உள்ளே படுத்திருக்கிறாள் என்று ஊகித்தவன், சத்தம் எழுப்பாமல் வெளியே வந்து, கயிற்றுக் கட்டிலை போட்டு வாசலில் படுத்து கொண்டான்.

சற்று நேரத்திலெல்லாம் கண்களை இழுக்க நன்றாக உறங்கிவிட்டான். மூன்று மூன்றரை மணியிருக்கும். வழக்கம் போல பண்ணைக்கு செல்லும் நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது. எழுந்து அமர்ந்தான். கொல்லைப்புறத்தில் கிணற்றடி பக்கம் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. கூடவே ஏதோ சத்தம்… என்னவென்று எழுந்துச் சென்று பார்த்தான். கனிமொழி தனியாக இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றாள். பகீரென்றது அவனுக்கு.

‘இந்த நேரத்துல இங்க என்ன பண்றா!” என்று எண்ணியபடி விரைந்து அவளிடம் நெருங்கினான்.

அவன் அருகில் செல்வதற்குள் பெரிதாக அவளிடமிருந்து ஒரு சத்தம் எழும்பியது… கூடவே கபகபவென்று வாந்தி…

ஓடிச் சென்று அவள் தலையை பிடித்தான். “என்ன என்ன” என்று பதறி கேட்டுவிட்டு… “ஒன்னும் இல்ல… ஒன்னும் இல்ல” என்று பதிலையும் தானே சொல்லிக் கொண்டு, அவளுக்கும் தைரியம் சொன்னான்.

ஒரு மூச்சு அவள் வாந்தி பண்ணிவிட்டு நிமிர்ந்தாள். என்னவோ தானே குடல் புரட்ட வாந்தி எடுத்தது போல் மேல்மூச்சு வாங்கியவன், அவளுக்கு முகம் கழுவ தண்ணீர் இறைத்துக் கொடுத்தான்.

அவள் முகம் கை காலெல்லாம் கழுவிக் கொண்டு நிமிர்ந்த போது, “தனியா எதுக்கு வந்த? யாரையாவது எழுப்பி இருக்கலாம்ல” என்றான் சின்ன அதட்டலுடன். அக்கறையாகத்தான் அதட்டினான். ஆனால் அவள் இருந்த மனநிலையில் எரிச்சல் படுவதாக தோன்றியது.

பதில் சொல்லும் திராணி இல்லாமல் கிணற்றங்கரையில் இருந்து கீழே இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவளுடைய சோர்ந்த தோற்றம் ஒருபுறம் பாதித்தது என்றால், அவள் பதில் சொல்லாமல் சென்றது இன்னொருபுறம் பாதித்தது.

‘நேத்து எல்லாருக்கும் முன்னாடி அப்படி முத்தம் கொடுத்தவ, இப்ப பேச கூட மாட்டாளாமா!’ – மனம் சிணுங்கியது.

அவள் பின்னாலேயே வீட்டுக்குள் சென்றான். அதற்குள் அவள் தன் கூட்டுக்குள் சென்று முடங்கி கொண்டாள். கூடத்து மின்விளக்கை போட்டு, “அக்கா… க்கா… எந்திரி” என்று தமக்கையை எழுப்பினான்.

அவள் எழுந்ததும், “அவளுக்கு ஏதோ முடியல போல. என்னன்னு பாரு” என்றான்.

அதற்கு மேல் கனிமொழியை தாமரை கவனித்துக் கொண்டாள். பண்ணைக்கு கிளம்பும் வரை, குட்டி போட்ட பூனை போல் கூட்டத்தையே சுற்றிக் கொண்டிருந்தான் மலையமான்.

அவளை தூரத்தில் வைத்திருந்த வரை ஒன்றும் தெரியவில்லை. பக்கத்தில் அனுமதித்ததுமே நிலைகொள்ள முடியவில்லை. ‘இது மந்திரமா என்ன!’ – அவனால் நம்ப முடியவில்லை. ரொம்பவே விசித்திரமாக இருந்தது.

கனிமொழிக்கு போட்ட டீயில் ஒரு டம்ளர் தம்பிக்கும் கொண்டு வந்து கொடுத்தாள் தாமரை. அதை குடித்துவிட்டு மனமில்லாமல் பண்ணைக்கு கிளம்பிச் சென்றான் அவன்.

பண்ணைக்கு வந்தும் அவளுடைய நியாபகங்கள் தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. ‘இருட்டுக்கு அப்படி பயப்படுவா! இப்போ எப்படி இவ்வளவு மாறிட்டா!’ என்கிற வியப்பு மளவில்லை அவனுக்கு.

பால் கறந்து வேனுக்கு ஊற்றியதுமே எட்டு மணி போல் ஒருமுறை வீட்டுக்கு வந்தான். அவள் உறங்கி கொண்டிருந்தாள் போலும். ஆளை வெளியே பார்க்க முடியவில்லை. குளித்து உடைமாற்றிக் கொண்டு உடனே மீண்டும் பண்ணைக்கு கிளம்பிவிட்டான்.

“கொஞ்சம் இரு மலையா, சாப்பிட்டு போகலாம்” என்று சகோதரி தடுத்தாள்.

“எடுத்து வையி, வந்து சாப்பிடுறேன்” என்று வண்டியை கிளப்பினான்.

பண்ணையில் ஆட்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு மணிநேரத்தில் காலை உணவை காரணம் காட்டி வீட்டுக்கு வந்தான்.

அப்போதும் அவளை வெளியே பார்க்க முடியவில்லை. அலமேலு மகனுக்கு சாப்பாடு எடுத்துவைத்தார்.

“என்னம்மா, மணி பத்தாயிடிச்சு… அவ இன்னும் எந்திரிக்கலையா!” என்றான்.

“எந்திரிச்சிடுச்சுப்பா. இப்ப தான் சாப்பிட்டு போயி படுத்துச்சு” என்றார் அவர்.

“ஏன் படுத்தே இருக்கா! உடம்பு ஏதும் சரியில்லையா?” என்றான்.

“அது இந்த நேரத்துல அப்படி தான் பண்ணும். சில பேருக்கு ஒன்னும் பண்ணாது… சில பேருக்கு இந்த மாதிரி உயிரை எடுக்கும். நீ சாப்பிடு” என்று அலுப்புடன் கூறிக் கொண்டே மகனுக்கு இன்னும் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்தார்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அலைபேசி அழைத்தது. எடுத்து பேசியவன், உடனே கையை உதறிக் கொண்டு எழுந்தான்.

“என்னப்பா! எங்க எந்திரிக்கிற?” என்றார் அலமேலு.

“ஒன்னும் இல்லம்மா. முக்கியமான வேலை ஒண்ணு… வந்துடறேன்” என்று பாதி உணவிலேயே கையை கழுவிக் கொண்டு அவசரமாக ஓடினான்.
Comments are closed here.

error: Content is protected !!