Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 58

அத்தியாயம் – 58

மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம். நீண்டு அகண்ட அந்த பெரிய சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்திருந்த கடைகளில் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சாலையில் இறங்கி நடக்க துவங்கியிருந்தார்கள். மிருதுளா மெடிக்கல் ஷாப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். காரில் சாய்ந்து நின்றபடி சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான் டேவிட். சாலையோர கடையில் ஒரு தொப்பியை விலைபேசி வாங்கி தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்த வெள்ளை ஜிப்பா அணிந்த ஒரு முதியவர், சுருட்டை வாயில் வைத்துவிட்டு தீப்பெட்டியை தேடி பாக்கெட்டை மாறிமாறி துழாவினார். பிறகு நெருப்புக்காக டேவிட்டிடம் வந்தார். பார்வையாலேயே அவருடைய தேவையை புரிந்துக் கொண்ட டேவிட் லைட்டரை எடுத்து அவரிடம் நீட்டினான்.

அதே நேரம் – வெவ்வேறு கடைகளிலிருந்து மூன்று வெளிநாட்டுப் பெண்கள் சாலையில் இறங்கி மக்களோடு கலந்தார்கள். முன் ஒருவர் – பின் இருவர் என்று மானசீக முக்கோண வடிவில் வியூகம் அமைத்து அவர்களை நோக்கி மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

டேவிட் கொடுத்த லைட்டரை வாங்கி சுருட்டை பற்றவைத்துவிட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்த அந்த ஜிப்பா மனிதர், இயல்பாக தலையிலிருந்த தொப்பியை எடுத்து தன் வழுக்கை தலையை தடவிவிட்டு மீண்டும் தொப்பியை அணிந்துக் கொண்டார்.

அதுதான் சிக்னல்… டார்கெட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பெண்களின் கை கைப்பைக்குள் நுழைந்தது.

டேவிட்டிற்கு நன்றி கூறிவிட்டு முதியவர் அங்கிருந்து விலகினார். அடுத்த நொடி முக்கோண வியூகத்தில் முதலிலிருந்த பெண்ணின் கைத்துப்பாக்கி டேவிட்டை குறிபார்த்தது. பொட்டுவெடி போல் பட்டென்று ஒரு சத்தம்… அவ்வளவுதான்…

குறிவைத்தவளின் நெற்றிப்பொட்டில் சின்னதாய் – ஆழமாய் ஒரு காயம். சத்தமில்லாமல் தரையில் சரிந்தாள்.

முக்கோணத்தின் பின் இரு புள்ளிகளாய் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்த மற்ற இரு பெண்களும் அதிர்ந்தார்கள். பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். அந்த பதட்டமும் கையிலிருந்த துப்பாக்கியும் அவர்களையும் காட்டிக் கொடுத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று திசைகளிலிருந்து சீற்றத்துடன் பாய்ந்த தோட்டாக்கள் அந்த பெண்களோடு சேர்ந்து அந்த முதியவரையும் – அதாவது முதியவர் வேஷத்தில் இருந்த மனிதரையும் மண்ணில் சாய்த்தது.

வெட்டி சாய்த்த மரம் போல் திடீரென்று ஆங்காங்கே நான்கு பேர் தரையில் சாய்ந்ததும், சுற்றியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். உதவி செய்வதற்காக அருகில் வந்தார்கள். குபுகுபுவென்று பெருகிய குருதியையும் அவர்கள் கையிலிருந்த துப்பாக்கியையும் கண்டு அஞ்சி பதற்றத்துடன் பின்வாங்கினார்கள். சூழ்நிலையின் பரபரப்பை பயன்படுத்தி கொலையாளிகள் மாயமாக மறைந்து போனார்கள்.

மிருதுளா திகைத்துப்போய் நின்றாள். டேவிட்டிடம் பேசிவிட்டு திரும்பிய மனிதர் திடீரென்று தரையில் சாய்ந்ததை கவனித்துவிட்டுத்தான் ஓடிவந்தாள். அவருக்கு என்னவாயிற்று என்று பார்ப்பதற்குள் ஒரே சலலசப்பு…. ரெத்தம்! – துப்பாக்கி! – கொலை! – அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. உடல் நடுங்கியது.

மிரண்டு போய் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்து காருக்குள் தள்ளி கதவை மூடிவிட்டு ட்ரைவர் சீட்டில் அமர்ந்தான் டேவிட். கீழே விழுந்தவர்களை சுற்றி தேனீ கூட்டம் போல் மக்கள் குழுமினார்கள். எந்த பதட்டமும் இல்லாமல் வெகுஇயல்பாக இன்ஜினை ஸ்டார்ட் செய்தான்.

‘என்ன நடந்தது! – யார் யாரை சுட்டார்கள்? அல்லது தங்களை தாங்களே சுட்டுக் கொண்டார்களா? சத்தம் வரவில்லையே!’ – மூளைக்குள் பரபரக்கும் கேள்விகளை வாய்விட்டு கேட்க முடியவில்லை. மொழி மறந்து போனவளாக படபடக்கும் இதயத்தோடு பார்வையை ஜன்னல் வழியே வெளிப்புறம் வீசினாள் மிருதுளா.

கூட்டமும் பரபரப்பும் அவள் பார்வையிலிருந்து விலக துவங்கியது. கார் பிரதான சாலையில் இறங்கி ஓட துவங்கியது.

“கேம் ஓவர்” – டேவிட்டின் கனத்த குரலில் திடுக்கிட்டு அவன்புறம் திரும்பினாள். இயல்பற்ற தோற்றம்… இறுகிய முகம்… கண்களில் பளபளப்பு – பகீரென்றது அவளுக்கு.

யாருக்கோ தகவல் தெரிவித்துவிட்டு அலைபேசியை அணைத்துப் போட்டுவிட்டு ஸ்டியரிங்கை இறுக்கிப் பிடித்தவனின் பார்வை சாலையிலிருந்து பிறழவில்லை.

“இட்ஸ் ஆன் அசாசினேஷன்… படுகொலை!!!” – வெறும் திகைப்பென்று சொல்லிவிட முடியாது. அதற்கும் மேல்… என்னவென்றே புரியாத – புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தாள்.

டேவிட் மிருதுளாவை திரும்பிப்பார்த்தான். அழுத்தமான ஒரு பார்வை. பிறகு அலட்டிக்கொள்ளாமல் தோளை குலுக்கிவிட்டு மீண்டும் சாலையில் கவனமானான்.

“எப்படி?? எப்படி இது???” – வார்த்தைகளை கோர்க்க முடியவில்லை. குரல் நடுங்கியது. சில்லிட்டுப்போன கைகளை ஒன்றோடொன்று கோர்த்து இறுக்கிக் கொண்டாள்.

“க்ளீயர் – மாஸ்டர் – பிளான்…” – திருத்தமாகக் கூறினான்.

மிருதுளாவின் முகம் வெளிறியது. கண்களில் கலவரம் கூடியது. அர்ஜுனின் இன்னொரு பிரதியாக தெரிந்தான் டேவிட்…

“பிளானா!!!” – உதடுத்துடிக்க முணுமுணுத்தாள். அவன் எதுவும் பேசவில்லை. அவள்புறம் திரும்பவும் இல்லை…

சற்று நேரம் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “நாதானே வெளியே கூப்பிட்டேன். இன்னிக்கு – இப்போ – இங்க வரணும்ங்கறது என்னோட ஐடியாதானே! என்னோட ஐடியால நீ எப்படி பிளான் பண்ணுவ?” – புரியவே இல்லை அவளுக்கு. நம்பவும் முடியவில்லை.

“சில நேரங்கள்ல அது நடக்கும்” – சுருக்கமாக கூறினான்.

“நோ… நீ குழப்புற… அப்படியெல்லாம் நடக்கவே முடியாது” – தலையை குறுக்காக அசைத்தாள்.

“இதைவிட அதிகமா கூட நடக்கும்”

“புரியல”

“மைண்ட் கேம். நம்மளோட தேவைக்கு ஏத்த மாதிரி எதிர்ல இருக்கவங்கள திங்க் பண்ண வைக்கிறது. சுச்சுவேஷனை கிரியேட் பண்ணறது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல”

மிருதுளாவிற்கு திக்கென்றது. “என்னையும் அப்படித்தான் ட்ரிக் பண்ணுனியா?” – பீதியுடன் கேட்டபடி கையிலிருந்த தூக்க மாத்திரை கவரை இறுக்கிப் பிடித்தாள்.

அவன் பதில் சொல்லவில்லை. மாறாக சின்னதாய் ஒரு புன்னகை செய்தான்.

*****

மிருதுளா வெளியே செல்ல வேண்டும் என்று அழைத்த போது டேவிட் எதார்த்தமாகத்தான் கிளம்பினான். சற்று தூர பயணத்திலேயே தங்களை ஒரு வெண்ணிற அம்பாசிடர் கார் பின்தொடர்வது போல் உணர்ந்தான். சந்தேகம் வந்தது… காரின் வேகத்தை குறைத்தான். அம்பாசிட்டரின் வேகம் குறையவில்லை. அது தன் போக்கில் அவர்களை கடந்து சென்றது.

தன் சந்தேகம் தவறானது என்று தோன்றியது. ஆனாலும் சின்ன உறுத்தல் இருந்தது. முன்னே சென்றுக் கொண்டிருக்கும் காரின் பதிவு எண்ணை குறித்து, சம்மந்தப்பட்டவருக்கு குறுஞ்செய்தி அனுப்பி விபரம் கேட்டான்.

அது ஒரு டிராவல்ஸின் கார். சுற்றுலா பயணி வாடகைக்கு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்தது. நீண்ட மூச்சை வெளியேற்றி ஆசுவாசமடைந்தான். ஆனால் அந்த நிம்மதி சற்று நேரம் கூட நிலைக்கவில்லை.

இப்போது ஒரு ஊதா நிற வெளிநாட்டு கார் அவனை உறுத்தியது. ஏதோ சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. அந்த காரின் பதிவு எண்ணையும் சோதனை செய்தான்.

அதுவும் அதே டிராவல்ஸை சேர்ந்த கார். சுற்றுலா பயணிக்கு வாடகைக்கு விடப்பட்டிருத்தது. அவன் விழித்துக் கொண்டான்.

இரண்டு கார்களையும் வாடகைக்கு எடுத்திருப்பது யார்? அவர்கள் எந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள் என்கிற விபரத்தை சேகரித்தான். பெயர் பரிச்சயமில்லாததாக இருந்தாலும் வெளிநாட்டு பயணிகள் – மூன்று பெண்கள் ஒரு ஆண் என்பது தெரியவந்தது.

டேவிட் சுதாரித்துவிட்டான். உல்ஃப் தன்னை வட்டமிட்டுவிட்டான் என்று புரிந்துக் கொண்டான்.

அவனை முடிக்க அர்ஜுனோடு சேர்ந்து இவன் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, அதை முந்திக்கொண்டு அவன் இப்போது இவனை வளைத்துவிட்டான். கூட மிருதுளா வேறு இருக்கிறாள். பதட்டமானான். உடனே அர்ஜுனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு எந்த இடத்திலும் நிற்காமல் சிட்டி முழுக்க வட்டமடித்தான்.

எவ்வளவு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது தெரியாமல் தன் சிந்தனையில் மூழ்கியிருந்த மிருதுளா தோழியை சந்திக்க வேண்டும் என்றாள்.

டேவிட் தயங்கினான். ஆனால் அவளுடைய வாடிய முகம் அவனை உந்தியது. ரிஸ்க் எடுத்தான். அவளை தோழியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மிருதுளாவை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு வாயிலில் நின்று சாலையை நோட்டமிட்டான்.

அர்ஜுன் தொடர்பில் வந்தான். ஓநாயின் திட்டத்திற்கு மேல் இன்னொரு புதிய திட்டம் சில நிமிடங்களிலேயே உருவாக்கப்பட்டது. ஸ்னைப்பர்ஸ் அனுப்பப்பட்டார்கள்.

சாலையில் அவர்களுடைய கார் சிக்னல் கொடுத்துவிட்டு கிராஸ் செய்ததும் வீட்டுக்குள் சென்று மிருதுளாவை அழைத்தான்.

அதுவரை அவள் உள்ளே என்ன செய்து கொண்டிருடந்தாள் என்பதை பற்றி யோசிக்கக் கூட அவனுக்குத் தோன்றவில்லை. பரபரப்பான சூழ்நிலை ஒருபக்கம் என்றாலும், அவள் மீது அவன் கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் வேறுவிதமாக அவனை சிந்திக்க விடவில்லை என்பதும் உண்மை.

மீண்டும் அவர்களுடைய பயணம் துவங்கியது. மிருதுளா மெடிக்கல் ஷாப் போக வேண்டும் என்று கூறினாள். டேவிட்டின் காதில் பொருத்தப்பட்டிருந்த ப்ளூடூத் அர்ஜுனை அவனோடு இணைப்பில் வைத்திருந்தது. எந்த மெடிக்கல் ஷாப்பில் காரை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினான் அர்ஜுன். அப்படியே செய்தான் டேவிட்.

காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சுற்றத்தை கண்களால் ஸ்கேன் செய்தான். ஆங்காங்கே அவர்களுடைய ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் மிருதுளாவை தனியே அனுப்ப அஞ்சி உடன் செல்ல எத்தனித்தான். அவள் மறுத்தாள். ஆட்களும் வேண்டாம் என்று சிங்னல் கொடுத்தார்கள். அவன் தேங்கிவிட்டான்.

மிருதுளா இறங்கி கடைக்குள் சென்றாள். அர்ஜுனின் அறிவுறுத்தலுக்கிணங்கி, புகைபிடிப்பது போல் காரிலிருந்து இறங்கி வெளியே நின்றான் டேவிட். ரிஸ்க் தான்… ஆனால் வேறு வழியில்லை. அவர்களுடைய டார்கெட்டை வெளியே கொண்டுவர வேண்டும் என்றால் அவன் முதலில் டார்கெட் புள்ளியில் வந்து நிற்க வேண்டும். நின்றான்… அதன் பிறகு எல்லாம் சுபமாக முடிந்தது. உல்ஃபின் அத்தியாயம் அழிந்தது.
Comments are closed here.

error: Content is protected !!