Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 70

அத்தியாயம் – 70

அன்றைய விடியல் எதையோ பெரிதாக இழந்துவிட்டது போன்றதொரு உணர்வுடனே விடிந்திருந்தது மிருதுளாவுக்கு. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. அவள் கண்விழிக்கும் போது படுக்கையில் அவளுக்கு அருகில் அர்ஜுன் இல்லை.

‘விடியற்காலை மூன்று மணியாகிவிட்டது, ஓய்வெடுக்க வேண்டும் என்று சொன்னவன் எப்போது எழுந்தான்? எங்கு சென்றான்? ஏன் அவளை எழுப்பவில்லை?’ – அடுக்கடுக்கான கேள்விகள் அவளை கொக்கி போட்டு இழுக்க, நிம்மதியாக படுத்திருக்க முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.

காயம்பட்ட இடம் விண்ணென்று தெறித்தது. சட்டென்று கண்களில் திரண்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது. பற்களை கடித்து வலியை சகித்தவள், மெல்ல முயன்று கட்டிலின் ஹெட்போர்ட் பக்கம் நகர்ந்து சாய்ந்து அமர்ந்தாள்.

அர்ஜுன் அருகில் வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் கோபமாக உருவெடுத்தது. அவன் பெயரை சொல்லி கத்த வேண்டும் போல் இருந்தது. சரியாக அதே நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.

கன்றி சிவந்திருந்த அவள் முகத்தை பார்த்ததும், “மிருது! எப்போ எழுந்த? ஏன் ஒருமாதிரி இருக்க? என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டபடி அவளிடம் நெருங்கினான்.

அதுவரை அவளை ஆக்கிரமித்திருந்த கோபம் கரைந்து கண்ணீராக பெருகியது. “ஹேய்! என்ன? வலிக்குதா? நீட் எனி ஹெல்ப்? பெயின் கில்லர் வேணுமா? மிருது” – அவன் பதறப்பதற அவளுடைய அழுகை அதிகமானது. விக்கிவிக்கி அழுதாள்.

“மை காட்! யூ ஆர் நாட் எ பேபி மிருது. வாயை திறந்து ஏன் சொல்ல மாட்டேங்கிற? என்ன பண்ணுது? ஸ்பீக் அவுட்” – அவன் குரலை உயர்த்த, அதைவிட உயர்ந்த குரலில், “ஐ ஃபெல்ட் அலோன்” என்று கத்தினாள் மிருதுளா.

அர்ஜுன் திகைத்துப்போனான். ஓரிரு நொடிகள் அவனால் எதுவுமே பேச முடியவில்லை. தன் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுது கொண்டிருப்பவளை சமாதானம் கூட செய்யத் தோன்றாமல் உறைந்துப் போயிருந்தவன், “வாட்?” என்றான் கம்மிய குரலில்.

மிருதுளா அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். “ஐ மிஸ்ட் யூ. ஐ மிஸ்ட் யூ மேட்லி. என்னை விட்டு போகாதீங்க. எப்பவும் போகாதீங்க” – பைத்தியம் போல் உணருகிறோம் என்று அவளுக்கே தெரிந்தது. ஆனாலும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஏன் இத்தனை பலகீனமாகிவிட்டோம் என்று அதற்காகவும் அழுதாள்.

அவன் முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை தோன்றியது. எத்தனையோ பிரச்சனைகள் அவனை சூழ்ந்திருந்தாலும், அவளுடைய அந்த ஒரு வார்த்தை அவனை நிம்மதி படுத்தியது. அவனுக்கான அவளுடைய தேடல் அவனை மகிழ்வித்தது. திருப்தியுடன் அவளை அணைத்துக் கொண்டவன், “எங்க போய்ட்டேன் நான்? உன் கூடவேதான் இருக்கேன். என்ன ஆச்சு உனக்கு?” என்று ஆறுதல் சொன்னான்.

“ஏதோ தப்பு நடக்க போகுது அர்ஜுன். பயமா இருக்கு. தனியா ஆயிட்ட மாதிரி… நீங்க தூரமா போயிட்ட மாதிரி… அர்ஜுன்… எல்லாம் சரியாயிடும் தானே? நாம சந்தோஷமா இருக்க போறோம் தானே?” – புலம்பியபடி அவனோடு ஒண்டி கொண்டாள்.

“ஷ்ஷ்ஷ்.. காம் டௌன்… நமக்கு எதுவும் ஆகாது. நீண்ட எதிரிகாலம் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கு. வெப்பன்ஸ், புள்ளெட்ஸ், ப்ளெட் எல்லாம் ரொம்ப பக்கத்துல பார்த்துட்ட. இந்த மாதிரி ஃபீலிங்ஸ் இருக்கத்தான் செய்யும். கொஞ்ச நாள் தான். அப்புறம் எல்லாம் சரியாயிடும். ரிலாக்ஸ்” – அவள் நெற்றியில் முத்தமிட்டு சமாதானம் செய்தான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி ஒலித்தது.

அது பிரத்யேக அலைபேசி. அழைப்பது ராகேஷ் சுக்லாவாகவோ அல்லது அவருக்கு நெருக்கமானவர்களாகவோ தான் இருக்க முடியும் என்று தெரிந்தும், மிருதுளாவை விளக்க மனமில்லாதவனாக அலைபேசி அழைப்பை ஏற்கத் தவறினான். அலைபேசி மீண்டும் ஒலித்தது. விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. புலன்கள் விழிப்புற்று அவளிடமிருந்து மெல்ல விலகினான். அனிச்ச மலராக வாடிவிட்ட அவள் முகத்தில் அழுத்தமான முத்தமொன்றை பதித்துவிட்டு அலைபேசியுடன் அங்கிருந்து வெளியேறினான்.

கணித்தபடி அஞ்சனி லால் தான் அழைத்திருந்தார். சுஜித் சிங் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற சுக்லாவின் கட்டளையை தெரியப்படுத்தினார். அஜூனின் முகம் தீவிரமாக மாறியது.

“இது என் மேல நடந்த அட்டாக். நான் பார்த்துக்கறேன்” என்றான்.

அவர் முடியாது என்று மறுத்தார். தாக்குதல் அவன் மீது நடந்திருந்தாலும் அதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியாது. கோர்த்தாவின் தளபதியை தங்கியிருக்கிறார்கள். அதுமட்டும் அல்ல. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்துக்கொண்ட இடம் என்பதை எடுத்துக் கூறி நிலைமையின் தீவிரத்தை அவனுக்கு விளங்கியதோடு, சுக்லாவின் கடுமையான கோபத்தையும், அர்ஜுனின் அலட்சியப் போக்கின் மீதான அவருடைய அதிருப்தியையும் எடுத்து சொல்லி சுஜித்தை உடனே அனுப்பி வைக்குமாறு கூறினார்.

அதுமட்டும் அல்ல. தாக்குதல் நடந்த அன்று, அர்ஜுனின் சார்பாக எதிர் தாக்குதல் நடத்தியது யார் என்பதையும் விசாரித்தார் அஞ்சனி.

“பெர்சனல் கார்ட்ஸ்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்ட அர்ஜுனின் முகம் இறுகியது. அவனுக்கு வேறு வழியில்லை. சுஜித்தை அனுப்பியே ஆக வேண்டும். அன்று மட்டும் மீட்டிங் முடிந்ததும் கிளம்பியிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்று எண்ணியபடி, “அனுப்பறேன்” என்றான் ஒப்புதலாக.

*****************

பகவான் ஆட்களால் கடத்தப்பட்டதிலிருந்து இன்று வரை சுமன் சந்தித்த கொடூரங்கள் எண்ணிலடங்காது. உடலளவிலும் மனதளவிலும் மிகவும் நலிந்துப் போயிருந்தாள். கோர்த்தாவின் மருத்துவர் அவளுக்கு தரமான சிகிச்சை அளித்தார். அதற்கு மாலிக்கின் உந்துதல் தான் முக்கிய காரணம்.

எப்படியாவது அவளை தேற்றிவிட வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது. அவளுடைய துன்பத்தை சகிக்க முடியாமல் தவித்தான். சுஜித் விடுதலை பெற்று வழக்கம் போல் அவளோடு சேர்ந்துவிட மாட்டானா என்றிருந்தது அவனுக்கு. ஆனால் அது நடக்கவே போவதில்லை என்பது போன்றதொரு செய்தி அவன் செவியை எட்டிய போது சுமனை எண்ணி அவன் வெகுவாக கலங்கினான்.

கோர்த்தா தளபதிகளின் வேலைகளில் எப்போதாவதுதான் சுக்லா தலையிடுவார். அப்படி அவர் தலையிடுகிறார் என்றால் நிலைமை வெகு தீவிரம் என்று பொருள்.

இன்று சுஜித் அவருடைய கஸ்டடிக்கு கொண்டு செல்லப்படுகிறான். அவன் உயிரோடு திரும்பி வருவானா? அதற்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? யோசித்துப் பார்த்தால், இதற்கு முன் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை. குறிப்பாக உள்ளே இருந்துக் கொண்டு எதிரிகளுக்கு துப்புக் கொடுப்பவர்களுக்கு கோர்த்தாவில் ஒரே தண்டனைதான். மரணம். – மாலிக்கின் மனம் வலித்தது. கூடவே இருந்த நண்பன். இன்று குற்றவாளியாக நிற்கிறான். உணர்வுகளை கொண்டுவிட்டு இயந்திரமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதன் அவன். அவனுக்கே வலிக்கிறது. சுமன் எப்படி தாங்குவாள்!

கனத்த மனதுடன் நண்பனின் காயங்களுக்கு மருந்திட்டு அவனுக்கு நல்ல உடை அணிவித்து அவனை பயணத்திற்கு தயார் படுத்தினான். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்ட சுஜித் இறுகிப் போயிருந்தான். இரண்டு மூன்று முறை மாலிக் அவனிடம் பேச்சு கொடுத்தான். அவன் பேசவில்லை. கடைசியாக, “சுமனை வர சொல்லட்டுமா?” என்றான்.

அவனிடம் ஒரு அதிர்வு தெரிந்தது. அவளை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்கிற துடிப்பு அது. ஆனால் அவன் அழுத்தக்காரனாயிற்றே! அவ்வளவு எளிதில் அசைந்து கொடுத்துவிடுவானா என்ன? அழுந்த மூடிய உதடுகளுடன் சிலை போல் அமர்ந்திருந்தான். குறித்த நேரம் வந்ததும் ஆட்கள் அவனை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். காரில் ஏறுவதற்கு முன் ஒரு நொடி தயங்கிய சுஜித் மாலிக்கை ஏறிட்டுப்பார்த்தான்.

“பார்த்துக்க…” – ஒற்றை வார்த்தையில் மொத்த பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, செயலற்றவனாக காரில் ஏறினான்.
Comments are closed here.

error: Content is protected !!