Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 72

அத்தியாயம் 72

அதிர்ச்சி என்று ஒற்றை வார்த்தையில் அவளுடைய உணர்வுகளை சொல்லிவிட முடியாது. தற்போது அவள் உயிரோடு இருக்கிறாள் என்பதை நம்புவதற்கே அவள் போராடிக் கொண்டிருந்தாள். இருட்டிக் கொண்டு வரும் கண்களை மீறி, அடங்க மறுத்து எகிறிக் குதிக்கும் இதயத்துடிப்பை தாண்டி, துணி போல் துவண்டு கீழே விழ விழையும் உடலோடு போராடி, தான் உயிரோடு தான் இருக்கிறோம் என்னும் உண்மையை மூளைக்குள் மெல்ல மெல்ல ஏற்றிக் கொண்டிருந்தாள் மிருதுளா.
அவளிடம் நெருங்கி அவளை தாங்கிப் பிடித்தான் அர்ஜுன். “ஆர் யூ ஓகே?” அவள் கன்னத்தை தட்டினான். பதில் சொல்ல விரும்பினாள், ஆனால் உதடுகளை பிரிக்க முடியவில்லை. கண்கள் அவன் முகத்தில் தான் படிந்திருந்தது. ஆனால் பார்வை எங்கோ தூரத்தில்.. புலம் தெரியாத காரிருளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.
“மிருது.. மிருது..” பதட்டத்துடன் அவள் கன்னத்தை இன்னும் வேகமாக தட்டினான் அர்ஜுன். கிணற்றுக்குள் ஒலிப்பது போன்ற அந்தக் குரலை கேட்டுக் கொண்டே முற்றிலும் நினைவிழந்தாள் மிருதுளா. அவளை தூக்கி படுக்கையில் கிடத்திவிட்டு, தரையில் கிடக்கும் சுக்லாவை சற்று நேரம் வெறித்துப் பார்த்தான். பிறகு எழுந்து உள்ளே சென்று எதையோ கொண்டு வந்தான். அது ஒரு பை. பிணத்தை மூட்டை கட்டும் பாடி பேக். சுக்லாவை அலுங்காமல் குலுங்காமல் பேக் செய்துவிட்டு, அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாருக்கு அழைத்தான்.
“க்ளவ்ட் நம்பர் 11, லேக் ரோட், ஃபைவ் ஏஎம், டுடே” என்றான்.
இதில் ‘க்ளவ்ட் நம்பர் 11’ என்பது ஆபரேஷன் பெயர். ‘க்ளவ்ட்’ என்பது மேகம். உருவம் இருப்பது போல தான் தோன்றும். ஆனால் பிடிபடாது. அதுதான் இந்த ஆபரேஷன். மறைந்த ஒருவருக்கு மாயையாய் உருவம் கொடுப்பது. இந்த ஆபரேஷன் ஏற்கனவே எங்கோ எக்ஸிக்யூட் செய்யப்பட்டதுதான். அதை மீண்டும் இப்போது இங்கே இம்ப்ளிமென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் அவனுடைய குறியீடு.
‘லேக் ரோட்’: இடம். ‘ஃபைவ் ஏஎம்’ அதிகாலை ஐந்து மணி. ‘டுடே’: நாள் இன்று.
அவன் கொடுத்த சுருக்கமான செய்தியை புரிந்துக் கொண்டவர், “டார்கெட்?” என்றார். ‘யாருக்கு உருவம் கொடுக்க வேண்டும்?’ என்பதுதான் அவருடைய கேள்வி.
“ராகேஷ் சுக்லா” உள்ளடங்கிய குரலில் கூறினான் அர்ஜுன்.
“வாட்!” அதிர்ச்சியில் அவர் குரல் இருமடங்காக உயர்ந்தது.
“யு ஹியர்ட் மீ”
“யு ஹவ் கான் கிரேஸி” என்கிற வார்த்தைகள் அதிருப்தியுடன் ஒலித்தன.
“அவாய்ட் பண்ண முடியாத சூழ்நிலை” என்றான் அர்ஜுன்.
“அந்த பொண்ணுக்காகவா?” சரியாகக் கேட்டார்.
அர்ஜுன் பதில் சொல்லவில்லை. இப்போது அவர் கோபத்துடன் கத்தினார். “நீ என்ன செஞ்சிருக்கனு தெரியுதா உனக்கு? சாகப் போற நீ.”
“பிரச்சனையை நேரடியா ஃபேஸ் பண்ணறவன் நான். பதட்டப்பட வேண்டிய நிலை எனக்கா இல்ல உங்களுக்கா?” அழுத்தமாகக் கேட்டான்.
அவர் ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பிறகு, “ஐ’ல் டூ மை பெஸ்ட்” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
தான் சொன்ன காரியத்தை அவர் சரியாக செய்து முடித்துவிடுவார் என்கிற பரிபூரண நம்பிக்கையுடன் மணியைப் பார்த்தான். மூன்று என்றது கடிகாரம். மிருதுளாவை பார்த்தான். அசைவில்லாமல் கிடந்தாள். அவளை தூக்கிச் சென்று அவளுடைய அறையில் படுக்க வைத்து அறையை பூட்டிவிட்டு கீழே சென்றான். காவலுக்காக ஆட்கள் வீட்டுக்கு வெளியே உலாத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே ஒருவன் மட்டும் தான் இருந்தான். அவனுக்கும் வேலை சொல்லி வெளியே அனுப்பிவிட்டு, சர்வைவல் கேமிராவின் கண்களை ஏமாற்றிவிட்டு, சுக்லாவின் பாடியை பேஸ்மென்ட் வழியாக கராஜிற்கு எடுத்துச் சென்று சுக்லாவின் கார் ட்ரங்கில் அடைத்தான். நேரம் நான்கு என்றது அவன் கைக்கடிகாரம். சத்தம் எழுப்பாமல் மேலே வந்தான். அந்த பெரிய ஹாலில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. சாதாரணமாக அவனுடைய அலுவலறையில் சென்று அமர்ந்தான்.
நேரம் நான்கு முப்பது. அர்ஜுன் சொன்ன வேலையை முடித்துவிட்டு அவனிடம் ரிப்போர்ட் செய்ய வந்தான் அந்தக் காவலன். அவன் கையில் சுக்லாவின் கார் சாவியைக் கொடுத்தான் அர்ஜுன்.
“லேக் ரோட் போ. நியூஸ் வரும்” என்றான். மறு பேச்சில்லாமல் சாவியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
சரியாக ஐந்து மணிக்கு லேக் ரோடில் சுக்லாவின் காரை துப்பாக்கி முனையில் சிலர் சுற்றி வளைத்தார்கள். காரை ஒட்டிக்கொண்டு வந்தவன் திகைத்தான். அவன் எதிர்வினையாற்றுவதற்குள் அவனை மடக்கிப் பிடித்து வேறு ஒரு காருக்குள் தள்ளியவர்கள், ட்ரங்கில் இருந்த சுக்லாவின் பாடி பேகையும் தங்களுடைய காருக்கு மாற்றினார்கள்.
அடுத்த சில மணி நேரங்களில், ‘அர்ஜுனின் வீட்டிலிருந்து புறப்பட்டு லேக் ரோடில் பயணம் செய்த சுக்லா அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்’ என்னும் செய்தி ஊடகங்களில் கசிந்தது. அந்த அடையாளம் தெரியாதவர்கள் பகவானின் ஆட்கள் தான் என்று கோர்த்தா அழுத்தமாக நம்பியது.
அந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்து வந்த நாட்களில் பகவானின் ஆட்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டார்கள். பதிலுக்கு அவர்களும் திருப்பிக் கொடுத்தார்கள். மிகப்பெரிய கேங் வார் அரங்கேற துவங்கியது. பொது மக்களுக்கு பிரச்சனை வராதவரை வேடிக்கை மட்டுமே பார்ப்பது என்கிற முடிவோடு அமைதியாக இருந்தது அரசு.
ஒரு வாரம் இரு பக்கமும் இரத்தம் ஆறாக ஓடியது. தடுப்பதற்கு யாரும் இல்லை. மறைந்து மறைந்து அடித்துக் கொண்டிருந்த பகவான் வலுவிழந்து போனார். “சுக்லாவை தாங்கள் கடத்தவே இல்லை” என்று கூறி பிரபல சாமியார் மூலம் சமாதான தூது அனுப்பினார்.
தூது வந்தவனையே போட்டுத்தள்ளிவிடும் வெறியோடு கோர்த்தா இருந்த போதிலும், சுக்லாவை பத்திரமாக மீட்க வேண்டும் என்கிற அர்ஜுனின் ஆலோசனையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார்கள்.
கோர்த்தாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ரகசிய மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கோர்த்தாவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதே போல் பகவான் பக்கத்திலிருந்தும் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற பட்டியலும் தயார் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் கோர்த்தாவை சேர்ந்த அனைவருக்குமே அதில் தயக்கம் இருந்தது. முக்கியமானவர்கள் அனைவரும் எதிரியை ஒரே இடத்தில் சந்திப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதை எடுத்துக் கூறி மறுத்தார்கள். ஆனால் சுக்லா என்னும் சிங்கம் சிறைப்பட்டிருப்பதை நினைவுப் படுத்தினான் அர்ஜுன். அனைவரும் சங்கடத்துடன் மௌனமானார்கள்.
அவனை பொறுத்தவரை பகவானின் ஆட்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று திரட்ட வேண்டும். கோர்த்தாவின் ஆட்கள் ஒன்று கூடினால் மட்டும் தான் அவர்களும் நம்பிக்கையுடன் வருவார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட அவனுக்கு இதைவிட பெரிய வாய்ப்பு ஒருபோதும் கிட்டாது. ரிஸ்க் தான், ஆனால் அவனுடைய வாழ்க்கையே ரிஸ்க் தானே!
*******************
பொன்மாலை நேரம்.. மிருதுளா தோட்டத்தில் நடந்துக் கொண்டிருந்தாள். இப்போது அவளுடைய காயம் நன்றாகவே ஆறிவிட்டது. அவளுடைய நடை கூட இயல்புக்கு திரும்பிவிட்டது. என்ன ஒன்று முன்பு போல் வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியாது. திரும்பும் போது கூட கவனமாகத்தான் திரும்ப வேண்டும். மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை. பெருமூச்சுடன் தோட்டத்தில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தாள்.
கிட்டத்தட்ட இருபது நாள் ஆகிவிட்டது அந்த சம்பவம் நடந்து. கனவோ என்று கூட பலமுறை யோசித்திருக்கிறாள். அவளை பாதுகாக்க அர்ஜுன் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அவளுக்கு தெரியும். ஆனால் தன்னுடைய தலைவனையே கொலை செய்யத் துணிவான் என்பது அவளுடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதை கூட ஏதோ உணர்ச்சிவசப்பட்டோ அல்லது அவள் மீது உள்ள காதலினாலோ செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கு பிறகு அவனுடைய செயல்பாடுகள்! அதை எந்த கணக்கில் சேர்ப்பது! அவன் என்ன நினைக்கிறானோ அதை அவனை சுற்றி இருக்கும் அனைவரும் நம்புகிறார்கள்! அவன் நம்ப வைக்கிறான்! இவன் எப்பேர்பட்டவன்!
‘டேஞ்சரஸ் மேன்!’ உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. அதே நேரம் அவளை நோக்கி அந்த டேஞ்சரஸ் மேன் வந்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் காற்றில் களைந்த மேகம் போல் அவளுடைய அனைத்து சிந்தனைகளும் மறைந்து போய்விட, மலர்ந்த முகத்துடன் அவனை எதிர்நோக்கினாள்.
தன்னை கண்டதும் மலரும் அவள் முகத்தை ஓரக்கண்ணால் உள்வாங்கி மனதிற்குள் சேமித்துக் கொண்டவன், சின்ன புன்னகையுடன் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான். உதட்டோரம் ஒளிந்திருந்த அந்த புன்னகை அவன் கண்களை எட்டவில்லை என்பதை அவள் கவனிக்க தவறவில்லை.
“ஹௌ வாஸ் த டே?” தலையை லேசாக சரித்து பார்வையை அவள் பக்கம் திருப்பிக் கேட்டான்.
“மிஸ்ட் யு” அவன் கையை சுற்றி வளைத்து தோள் மீது தலை சாய்த்துக் கொண்டாள். அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான் அர்ஜுன்.
“ஆர் யு ஓகே?” நலிந்த குரலில் கேட்டாள்.
“ம்ம்ம்..”
“இல்ல.. எனக்கு வித்தியாசம் தெரியுது. கவலை படற மாதிரி ஏதாவது..” அவள் முடிப்பதற்குள் நன்றாக திரும்பி அமர்ந்து அவள் கண்களுக்குள் பார்த்தான். மிருதுளாவின் பேச்சு தடைபட்டது.
“நாளைக்கு எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ரொம்ப முக்கியமான மீட்டிங். என்ன ஆகும்னு சொல்ல முடியாது.”
“என்ன ஆகும்னு சொல்ல முடியாதா! அப்படின்னா? வாட் டூ யு மீன் பை தட்?” அவனை பேச விடாமல் படபடத்தாள்.
“லிசன்.. ஷ்ஷ்ஷ்.. காம் டௌன். பேபி, என்ன நம்புறேல்ல?”
கலங்கிய கண்களுடன் மேலும் கீழும் தலையசைத்தாள் மிருதுளா.
“இங்கிருந்து நீ கிளம்பனும்.”
“நோ! ஐ காண்ட் லீவ் யு” அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“யு ஹேவ் டு.”
“ப்ளீஸ்” உதடு துடிக்க அவன் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். அவள் முகத்தை கைகளில் ஏந்தி இதழோடு இதழ் ஒற்றியெடுத்து, “உனக்காக வருவேன்.. உன்ன தேடி வருவேன்” என்றான்.
மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள். “பயமா இருக்கு.. ஏதோ தப்பா தோணுது. ப்ளீஸ், எங்கேயும் போகாதீங்க. என்னையும் அனுப்பாதீங்க” கெஞ்சினாள்.
அவன் பதில் பேசாமல் அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவளுடைய அலைபேசி மற்றும் டிராக்கிங் டிவைஸ் அனைத்தையும் செயலிழக்க செய்துவிட்டு புதிதாக ஒரு அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.
“பத்திரமா வச்சுக்கோ. இந்த போனுக்கு ரெண்டே நம்பர்லேருந்துதான் கால் வர முடியும். ஒன்னு நான் பண்ணுவேன். இன்னொன்னு ப்ளூ ஸ்டார். நியாபகம் இருக்கா? கொஞ்ச நாள் முன்னாடி சொல்லியிருந்தேன்.”
“ம்ம்ம்..”
“அவரை நீ முழுசா நம்பலாம். அவர் என்ன சொன்னாலும் கேட்கலாம்.”
“அர்ஜுன் ப்ளீஸ்.”
“பீ பிரேவ். பீ சேஃப். ஐ’ல் கம் ஃபார் யு.”
அவன் சொல்ல சொல்ல மிருதுளா தளர்ந்து அமர்ந்து தேம்பி அழுதாள். அர்ஜுன் இறுகிப்போனான். அவள் அழுது ஓயும் வரை அழுத்தமாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றவன், அவளுடைய தேம்பல் குறைந்ததும், அவளை எழுப்பி முகம் கழுவ வைத்தான்.
இரவு உணவை அறைக்கு வரவழைத்து அவளை சாப்பிட வைத்தான். கூடவே அவனும் சேர்ந்து உண்டான். அப்போதுதான் மிருதுளா அந்தக் கேள்வியை கேட்டாள்.
“நாளைக்கு நீங்க போற மீட்டிங்ல என்னோட பேரண்ட்ஸ் ஏதாவது விதத்துல சம்மந்தப்பட்டிருக்காங்களா?” கவலையுடன் கேட்டாள்.
ஒரு கணம் அர்ஜுனின் அசைவுகள் உறைந்து போயின. பின் சுதாரித்துக் கொண்டு, “நோ” என்றான். பொய்தான். ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம்.
அவள் மனம் சமாதானம் ஆகவில்லை. உள்ளுணர்வு எதிர்மறையாக எதையோ உணர்த்திக் கொண்டே இருந்தது. சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. கனத்த மனதுடன் எழுந்து கைகழுவிவிட்டு வந்தாள்.
“ரெடி?”
“இப்பவே கிளம்பணுமா?”
எதுவும் சொல்ல தோன்றாமல் ஓரிரு நிமிடங்கள் அவளை ஊன்றிப் பார்த்தவன், “இதே மாதிரி எப்பவும் இருப்பியா?” என்றான்.
அவள் புருவம் சுருங்கியது. “சரி விடு” தலையை உலுக்கிக் கொண்டு, “ட்ரைவர் வெயிட் பண்ணறான், கம்” என்று முன்னோக்கி நடந்தான். சட்டென்று பாய்ந்து அவன் முதுகை கட்டிக் கொண்டாள் மிருதுளா. மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒருகணம் இறுகி நின்றவன், மறுகணமே முரட்டுத்தனமாக அவள் கையைப் பிடித்து முன்பக்கம் இழுத்து சுவற்றோடு தள்ளி இதழோடு இதழ் பொருத்தினான்.
புயலாக மாறிய அசுரனின் வேகத்தை தாளாமல் தளர்ந்தாள் தளிர்க்கொடி. மூச்சுக்காற்றுக்காக அவள் முகத்தை திருப்பிய போது, அவள் கன்னம், காது, கழுத்து என்று கணக்கில்லாமல் முத்திரையை பதித்துவிட்டு, அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான். அவளை இழக்க விரும்பாதவன் போல்.. அவளை தனக்குள்ளேயே புதைத்துக்கொள்ள விழைபவன் போல்.. மேலும் மேலும் இறுக்கமாக கட்டிக் கொண்டான். கூடவே, “ஐ லவ் யு, ஐ டோண்ட் வாண்ட் டு லூஸ் யு” என்று முணுமுணுத்தான். கரகரத்த அவன் குரல் உடைந்து போன அவன் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டியது. அவன் முதுகை வருடி, நெஞ்சில் முத்தமிட்டாள் மிருதுளா.
இருவரும் இயல்பு நிலைக்கு மீள வெகுநேரம் பிடித்தது. அதன் பிறகு பல மென்மையான முத்தங்களை பரிசளித்துவிட்டு அவளை பேஸ்மெண்ட் வழியாக கராஜிற்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன். அங்கே அவளுக்காக காத்திருந்த ட்ரைவர் வேறு யாரும் அல்ல டேவிட் தான். தன்னை தவிர வேறு ஒருவனை நம்பி மிருதுளாவை அர்ஜுன் ஒப்படைக்கிறான் என்றால் அது வேறு யாராக இருக்க முடியும்?
Comments are closed here.

error: Content is protected !!