Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

மழையே இது காதல் தானா-1  

  RSS

Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 6 months ago
Posts: 33
29/03/2020 5:03 pm  

மார்கழி மாத குளிரில் உரைந்து போனவனாய் படுக்கையில் சுருண்டு ஒரு புழுப்போல படுத்துக்கொண்டு இருந்த எனக்கு கடிகார அலாரம் மணி 5.30 என்பதை காட்டியவுடன்,எழுந்திருக்க மனமில்லாமல் உருண்டு பெரண்டு படுக்க ஏதோ நினைவுக்கு வந்தவனாய் சட்டென விழித்துவிட்டு கண்களை தேய்த்தபடி எழுந்தேன் ,என் ஜன்னலோர காற்று மெல்ல இதமாய் வீச அந்த குளிரையும் தாண்டி ஏனோ  ஓர் புத்துயிர் பெறவே சற்று ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தேன்.

ஈரத்தலையோடு ,தலையில் ஒரு டவலைக்கட்டிக்கொண்டு அரக்கு கலர் பாவடையுடன் பச்சை நிற தாவணியில் தேவதைப்போல தோற்றமளித்தாள் அந்த புதியதாக குடிவந்த ராமசந்திரனின் மகள் ஆர்த்தி. வீட்டுக்கு ஒரே செல்ல மகள்,எனினும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வது,பள்ளிக்குச் சென்று படிப்பது,என்று தனக்குள் எந்த வித களைப்புமின்றி ரங்கராட்டினம் போல் செயல்படுவாள்.

ஆர்த்தி என்ற பெயரை உச்சரிக்கும் போதே என் மனம் ஏதோ செய்கிறது ஆம் ,20 ஆண்டுகள் கடந்துவிட்டன தற்போது அவள் எங்கு இருக்கிறாள் என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது நான் அவளது ஆசைப்படி ஒரு கைத்தேர்ந்த மருத்துவராக இருக்கிறேன். என்ன சொன்னேன் அவளது ஆசையா? ம்ம்ம் சரிதான் அது அவளுடைய ஆசையே!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அந்த சமயத்தில் என்னுடைய மதிப்பெண்களை பார்த்துவிட்டு "டேய் அர்ஜுன் நீ இவ்வளவு நல்லா மார்க் வாங்கியிருக்க,எனக்கு ஒரே ஒரு ஆசை தான் நீ படிச்சு டாக்டர் ஆகணும். இதை தவிர எனக்கு உன்கிட்ட எந்த வித எதிர்பார்ப்புமில்லை டா அர்ஜுன்" என்று என்னுடைய என்னவளின் வார்த்தைகளே எனக்கு வைராகியமாய் அமைய நன்கு படித்து மருத்துவராகி விட்டேன். இன்று நான் ஒரு பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்.

ஆனால்... என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை? ஹாஹா திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்தேன். அவள் சந்தேக புத்தி கொண்டவளாய், தினமும் "ஏன் மருத்துவமனையிலிருந்து லேட், ஏன் நான் போன் பண்ணா எடுக்கல" அப்படி இப்படி என்று ஏதேதோ கூறி என்னிடம் வம்பிழுப்பதை தினசரி வாடிக்கையாக கொண்ட என் மனைவிக்கு வேறு வழியின்றி விவாகரத்து தந்துவிட்டு இன்று தனிமரமாய் நின்றுக்கொண்டு இருக்கிறேன். வயது 35 ஆயிற்று. போதும் இதற்கு மேல் சொன்னால் அழுதுவிடுவேன் போலும்.

இப்படி தனிமரமாய் இருக்கும் எனக்கோ பெற்றோரின் ஆதரவும் தம்பியின் ஆதரவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் செய்யும் தொழிலே எனக்கு மிகப்பெரிய ஆறுதல் எனவும் கூறலாம். உண்மை தானே மருத்துவம் ஒரு சேவையல்லவா.இந்த சேவையை மனமுவந்து செய்கிறேன். சரி ஏன் திடிரென ஆர்த்தியின் ஞாபகங்கள் எட்டிப்பார்த்தன ? ஒன்றும் புரியவில்லை.. ஆங் சொல்ல மறந்துவிட்டேன் இன்று அவளுடைய பிறந்தநாள்.

ஆமாங்க..அவளுடைய பிறந்தநாள் என்று கூறியவுடன் எனக்கு அந்த முதியோர் இல்லம் நியாபகத்திற்கு வருகிறது. வருடா வருடம் என்னுடைய ஆர்த்தி தன் பிறந்தநாள் அன்று அங்கு சென்று முதியோருக்கு சேவை செய்துவிட்டு தன்னால் முடிந்த ஏதோ ஒன்று சமைத்து பரிமாறிவிட்டு வீடு திரும்புவாள்.

இன்று நான் அந்த முதியோர் இல்லத்தை தேடி செல்ல இருக்கிறேன். நாங்கள் வாழ்ந்த அதே சிற்றூருக்கு என்னுடைய காரில் பயணம் செல்கிறேன். என்னுடைய பயணத்தில் நீங்களும் கலந்துக்கொள்ளலாமே!

சென்னையிலிருந்து இரண்டு மணிநேரத்தில் வந்துவிடலாம் அந்த சிற்றூரிற்கு. எங்கு பார்ப்பினும் வேப்பிலை மரங்களும்,ஆங்காங்கே வேலிகாத்தான் முற்கள் செடியும் நிறைந்திருக்கும். நாங்கள் வசித்த அந்த தெருவிற்கு இன்னும் சற்று தூரத்தில் வந்தடைந்துவிடுவேன் .

இதோ நம் மாறனின் டீக்கடை, அப்போது அவருக்கு வயது 25 இருக்கும், தற்போது 45 வயதுடன் இன்னும் அதே சுருசுருப்புடன் வேலை செய்துகொண்டிருக்கிறார். காரை நிறுத்திவிட்டு அவரருகில் சென்று

"அண்ணே மாறன் அண்ணே ஒரு டீ" என்று சொல்லிவிட்டு அங்கு போடபட்டிருக்கும் பென்சில் அமர்ந்தேன். என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்து விட்டு

"அர்ஜுன் தானே நீ" என்றார். நானும் ஒரு சிறுபுன்னகையுடன் அவரை பார்த்து ஆமாம் என்றவுடன் என்னை கட்டி அணைத்தபடி "எவ்வளவு வருஷம் ஆச்சு தம்பி,இப்போ தான் இந்த ஊருபக்கமே உன்னை பார்க்கிறேன். ஏன் இவ்வளவு நாளா எங்க இருந்த ? உன் அப்பா அம்மா தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று வினவினார்.

பதில் கூறிவிட்டு நான் அவர் போடும் டீயிற்காக காத்துகிடக்க அப்போது தான் அந்த "ஒரு ரூபாய் அண்ணாச்சியை" பார்த்தேன்.

"அட என்ன ஆச்சரியம் முடி நரைத்திருந்தாலும் இன்னும் அதே கம்பீர நடை போட்டுக்கொண்டு நடக்கிறார்" என்று எனக்கு நானே சொல்லிவிட்டு மாறன் தந்த டீயை பருகிவிட்டு மீண்டும் காரை கிளப்பி சென்றேன்.நான் அடையும் இடம் வந்தது.

அந்த முதியோர் இல்லம் தற்போது இல்லையாம். அந்த இடத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இருப்பதை கண்டு "என்னடா இது அப்போ அந்த முதியோர் இல்லம் எங்கே போயிற்று"? என்று தெருவோரம் நடந்து செல்லும் ஒருவரை கேட்க அவரோ "தம்பி நீ ஊருக்கு புதுசா இம்புட்டு நாள் கோமாவில் எதாவது இருந்தீர்களோ" என்று என்னை நக்கலடிக்க...

"ஐயா சொல்லுங்கள்" என்றேன் மிதமான குரலில்.

"இந்த சூப்பர் மார்க்கெட் ஓனர் அந்த முதியோர் இல்லத்துக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிட்டாரு. இந்த சூப்பர் மார்க்கெட் வந்தே ஏழு வருஷமாச்சு தம்பி" என்று சொல்ல..

"அது சரி, இங்க இருந்த முதியோர் இல்லம்"? என்று வினவ அவரோ ஒரு விலாசத்தை கொடுத்து அங்க மாத்திட்டாங்க என்று கூறி அனுப்ப அந்த விலாசத்தை தேடி அலைந்தேன். முடிவில் அந்த விலாசம் கண்டுபிடித்துவிட்டேன்.

உள்ளே நுழைய அங்கு முதியோரின் கூட்டமும் டி.வி சத்தமும் காதை பிளக்க அந்த அமைதியான சாலையில் அமைந்திருக்கும் அந்த முதியோர் இல்லமோ ஏதோ கடைவீதிக்கு வந்தது போல் சத்தமாக இருக்க ..முதலில் யாரை அணுகுவது என்று தெரியவில்லை.

ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதோ கணக்கு பார்த்துக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியிடம்
"மேடம் இன்னைக்கு இங்கே அண்ணதானம் பண்ண ஆசைப்படுறன். அதற்கு பணம் செலுத்த வந்தேன்" என்று கூற அதை காதில் வாங்கியவள் "ஓ...சரி குடுங்க எவ்வளவு தர விருப்பம் படுறீங்களோ தாங்க. உங்களுக்கு என்ன மாதிரி உணவு பரிமாற ஆசையோ அதற்கு தகுந்தாற்போல் நாங்க சமைத்து போட்டுருவோம்"

"அ..அப்படினா இந்தாங்க இதுல இரண்டாயிரம் இருக்கிறது. எல்லாருக்கும் இன்று மதியத்திற்கு புலாவ் பண்ணி போட்டுடுங்க" என்றபடி பணம் செலுத்திவிட்டு அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் அனைவரையும் ஒருமுறை பார்த்து வணங்கிவிட்டு செல்ல சட்டென ஒரு முதியோர் அவனது கைகளை பிடித்து.

"தம்பி உன் பெயர்"?என்று வினவ

"என் பெயர் அர்ஜுன்" என்றான் ஒரு சிறு புன்னகையுடன்.

"ஓ..நீ அந்த ராமசந்திரன் வீட்டுக்கு எதிர்தாப்ல இருந்த பையன் தானே? ஆளே அடையாளம் தெரியல பா. ஆமாம் என்ன விசேஷம் ? இங்க இன்னைக்கு அண்ணதானம் செய்ய வந்திருக்க"என்று கேட்க அவன் சிந்தைக்கு அவரது கேள்வி எட்டினாலும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.தன்னிலை உணர்ந்தவனாய்

"ஐயா,அது வந்து இன்னைக்கு எனக்கு வேண்ட பட்டவங்களோட பிறந்தநாள் அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்" என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இன்று அவசியம் இந்த முதியோர் இல்லம் தேடி வந்திருக்கணுமே. ஒருவேளை அவளிருக்கும் ஊர் இதுவல்லாது வேறு எங்கோ இருந்தால் ? அதானே அவள் தற்போது திருமணம் முடிந்து எங்கிருக்கிறாளோ. என்று மனதுக்குள் கூறிக்கொண்டு தன் காரை கிளப்பினான். காரை நகர்த்தி தன் ஊர் சென்னையை நோக்கி பயணிக்க அவனது பழைய நினைவுகளை மனதில் அலசியபடி காரை ஓட்டினான்.

அன்று வழக்கம் போல பள்ளி சீருடையில் இரட்டை ஜடை பின்னலுடன் என் தேவதை ஆர்த்தி நடந்து செல்ல வழியில் இருக்கும் ஒரு கல்லை தடுக்கி கீழ விழயிருந்தபோது லாவகமாக ஓடிச்சென்று அவளை தாங்கி பிடித்தேன். முதன்முதலில் என் கரங்கள் அவளை நெருங்கியது.அவளுக்கு என்னவோ போலாயிற்று, என் பிடியில் சிக்கியவள் என்னையே அவள் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. எனது கண்களும் அவளது முகத்தை பார்த்து அளவளாவிக்கொண்டிருந்தன.அவள் முகம்முழுவதையும் என் கண்களால் ஸ்கேன் செய்துகொண்டிருந்த தருணமும் அது.

'என்ன ஒரு அழகான கண்கள் அவளுடையது. ப்பா கருப்பு பன்னீர் திராட்சை போலவே இருந்தது.' ஹாஹா இதையெல்லாம் இன்னும் மறக்கமுடியவில்லை. முதன்முதலில் ஒரு பெண்ணின் அழகை என் கண்கள் நோட்டமிட்டன...ஐயோ வெட்கத்தில் நானும் சிவந்து தான் போனேன். என்னுடைய இந்த முதல் பார்வை அவள் மீது அம்புபோல் பாயந்துகொண்டிருக்க அங்கு தூவியது எங்கள் காதல் மழை.

...திக் திக் என்றது என்னுடைய இதயத்துடிப்பு சற்று சுதாரித்து கொண்டு அவளை நிமிர்த்தி விட்டு "இனி பார்த்து பொறுமையா நட என்றேன்"

அவளும் தலையசைத்துவிட்டு நகர்ந்தாள். முதல் நாள் வெளியே கோலம்போட்டுக்கொண்டிருந்தவளை ஜன்னல் வழியே நோட்டமிட்ட எனக்கோ மறுநாள் அவளை இவ்வளவு நெருக்கமாக பார்க்கும் பாக்யம் ஐயோ நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இப்படியே எனது கண்கள் அவளை தினந்தோறும் தேடிக்கொண்டே தான் இருந்தது.

அப்போது எங்களுக்கு என்ன 15 வயதே நிரம்பியிருக்கும். காதல் முளைக்கும் வயது தானே இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அரும்பு மீசையுடன் அப்போது இருந்த தோற்றம் எல்லாமே இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

ம்ம்ம் இதோ வந்துவிட்டது நான் வாழ்ந்த பழைய வீடு. அதே திண்ணை ஹாஹா ஆனால் என் தந்தை வயதில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நான் யார் என்பது கூட அவருக்கு தெரியாது. சரி எதிரே என் ஆர்த்தி வாழ்ந்த அந்த வீட்டையும் ஒருமுறை நோட்டமிட்டேன். சிறிது மாற்றத்துடன் பல கலை வேலைபாடுகளுடன் சிறப்பாக இருந்தது.

"என் ஆர்த்தியின் குடும்பம் இங்கே வாழ வாய்ப்பு இருக்கிறதா" என்ற கோணத்தில் சற்று யோசித்தேன். "அட பைத்தியக்காரா இவ்வளவு வருஷம் ஆகியும் எப்படி இங்கேயே இருப்பாங்க"என்றது மனம் என்னை தட்டி எழுப்பியபடி நான் விழித்துக்கொண்டேன் என் பழைய காதல் நினைவுகளிலிருந்து ஆனால் இன்னும் முழுவதுமாய் தெளியவில்லை. எப்படி தெளியும் காதல் என்பதே ஓர் போதை தானே . சரி என் பயணம் உங்களுடன் தொடரும். என் காதல் பயணத்தில் நீங்களும் பயணியுங்கள்.

தொடரும்.

 


Quote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Trusted Member Registered
Joined: 10 months ago
Posts: 84
30/03/2020 3:18 pm  

Hi Bhagya, azhagana intro


ReplyQuote
Bhagya Lakshmi
(@bhagya)
Eminent Member Writer
Joined: 6 months ago
Posts: 33
30/03/2020 4:35 pm  

@vaniprabakaran thank you ma .

 


ReplyQuote
Share: