Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

[Closed] அன்பால் கைதுசெய் அன்பே - Tamil novel  

Page 2 / 3
  RSS

carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
14/11/2019 5:56 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 8

ஆதவன் அழகாய் உதிக்க, அந்தி சாயும் தருணம் எப்படியோ??

மலராக அரும்பிய காதலை தன்னவனிடம் தெரிவிக்க ஆசையாக கிளம்பினாள் இசை.

அவளுக்கு பிடித்த ஆகாய நீல வண்ணத்தில் புடவை அணிந்து ,அளவான அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வந்தாள்.

தன் கைப்பையில் மறக்காமல் அந்த பரிசையும் வைத்துக்கொண்டாள்.

"என்ன மேடம் முகம் பிரகாசமா இருக்கு" என்று வெண்மதி கேட்க

"ஏய் அப்படி எதுவும் இல்லை எப்பவும் போல தான் இருக்கேன்" என்று நாணத்தால் முகம் குனிந்து இசை கூற

மேலும் கீழும் அவளை பார்த்தவள்.

அடுத்த நிமிடம்"நம்ப முடியவில்லை இல்லை இல்லை"என்று பாட தொடங்க

"சும்மா இரு மதி.நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்"

"நானு"என்று பாவமாய் கேட்க

"என்னுடைய செல்ல பேபி இல்ல அடுத்த முறை" என்று கொஞ்ச

"சரி போ"என்று சம்மதித்தாள்.

இசை சென்றவுடன் அங்கு இருந்த விநாயகர் சிலையின் அருகே சென்ற வெண்மதி இருகரம் குவித்து"இசை உங்களை பார்க்க தான் வருகிறாள்,அவள் ஆசைப்படுவதே நடக்கணும். நீங்க அவள் கூடவே எப்போதும் இருக்கணும்" என்று தோழியின் நலனுக்காக வேண்டினாள்.

தன்னை நாடி வரும் இசையை வினைகளை தீர்ப்பவர் தன் கரம் தந்து காப்பாற்றுவாரா??அல்லது கண் கலங்கும் நிலையை தந்து விட்டு தானும் கலங்குவாரா??

இசை உச்சி பிள்ளையார் கோவில் படியில் ஏறும் போது ஒரு பெண்மணி மயங்கி விழுவதை காண வேகமாக சென்று தாங்கினாள்.

"அம்மா அம்மா "என்று கன்னம் பற்றி அழைக்க

அவரின் கணவர் இசையின் அருகே சென்று தன் மனைவியை தாங்கி கொள்ள

"சார் நீங்க"என்று கேட்க

"நான் இவங்க கணவர் மா"

"நான் தண்ணீர் எடுத்து வரேன்"என்று கூறி விட்டு சென்றாள்.

மயங்கிய மனைவியின் முகத்தை கண்டு வேதனையில் செய்வதறியாது தவித்தார்.

நிமிடத்தில் வந்தவள் தண்ணீர் தெளிக்க அவர் மயக்கத்தில் இருந்து விழித்தார்.

"என்ன மா காலையில் சாப்பிடலையா" என்று அக்கறையாக கேட்க

அவளின் அன்பில் கண்கள் கலங்க"இல்ல டா சாப்பிட்டேன் மாத்திரை தான் போடலை"

"அப்படியா மாத்திரை எங்க இருக்கு"

"காரில்  இருக்கு"

இவர்கள் பேசிக்கொண்டே இருக்க அகத்தியன் அங்கு வந்தான்.

"அம்மா அப்பா" என்று அழைக்க

அங்கு இசை நிற்பதை பார்த்தவன்.

"இசை நீயும் இங்க தான் இருக்கியா"

"ஆமாம் அண்ணா.உங்களுக்கு தெரியுமா இவங்களை"

"தெரியும் டா அம்மா ஏன் ஒரு மாதிரி இருக்காங்க"என்று கேட்டவுடன்

நடந்தை சொல்ல, மாத்திரை எடுக்க காருக்கு விரைந்தான் அகத்தியன்.

இசை அவர்களுடன் பேசி கொண்டு இருப்பதை பார்த்த ஒருவனின் கண்களில் கனல் வீசியது.

அந்த கண்களுக்கு சொந்தகாரன் அதிவீரராம் தான்.

அப்போது ராமை கண்ட இசையை தென்றல் வருடியது போல் அவள் மேனி சிலிர்த்தது.

அவர்களிடம் விடை பெற்று தன்னவனிடம் சென்றாள்.

உள்ளே எரிமலையாக வெடித்து கொண்டு, வெளியே போலி சிரிப்போடு நின்றான்.

"வாவ்.நீங்க இங்க"என்று ஆச்சரியப்பட

"ஏன் நான் வர கூடாதா"

அவனின் குரல் வேறுபாட்டை அவள் அறியவில்லை.

"அப்படி எல்லாம் இல்லை"

எப்படி தன்னுள் அரும்பிய காதலை தெரிவிப்பது என்று இசை யோசிக்க, அவளின் எண்ண ஓட்டத்தை யுகித்தவன்.

"நான் உன் கிட்ட பேசணும்" என்று தானாக முன்வந்து கேட்க

கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனம் வராமல் உடனே "நானும் தான்" என்று கூற

"சரி வா போகலாம்"என்றவன் காருக்கு அழைத்து சென்றான்.

அப்போது காருக்குள் ஒலித்த பாடல் இசையின் தவிப்பை அதிகரிக்க,ராமின் கோபத்தின் எல்லையை கடக்க செய்தது.

ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ

நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட

தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ

நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட

இருதயம் முறைப்படி துடிக்கவில்லை

இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை

நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போலே ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே

வந்து சேர்ந்ததா

தன் உணர்வுகளை கட்டு படுத்தி கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீதியில் தன் காரை நிறுத்திவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நிற்க,இசையும் அவன் அருகே வந்தாள்.

இருவரும் சற்று நேரம் எதுவும் பேசவில்லை அந்த மெளனத்தை உடைத்தாள் இசை.

"நான் உங்க கிட்ட எப்படி இதை சொல்லனு எனக்கு தெரியல, சொல்லாமலும் இருக்க முடியல.உங்க கூட பேசும் போது ரொம்ப தெரிந்தவங்க கிட்ட பேசுகிற மாதிரி தான் தோணும்.காதலை பத்தி எனக்கு எதுவும் தெரியாது தான் ஆனால் அது வந்தா நம் மனசுக்கு பிடித்தவங்களை பார்க்கும் போது நமக்குள் வர இனம் புரியாத ஒரு உணர்வு, தவிப்பு இது எல்லாமே உங்களை பார்த்தால்  எனக்கு வருது. நீங்க என்னுடைய வாழ்க்கை முழுதும் துணையாய் வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். இத்தனை நாள் என்னுடைய மனதில்  இருந்த உணர்வை சொல்லிட்டேன் இனி உங்க விருப்பம்"

ராமின் முகம் காணாது சொல்லி முடித்தவள்.அவனை பார்க்க சற்று அதிர்ந்து தான் போனாள்.

 

அன்பின் கைது தொடரும்....

 


carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
14/11/2019 7:35 pm  

அன்பால் கைதுசெய் அன்பே - 9

அங்கே கண்கள் சிவக்க, கழுத்து எலும்பு புடைத்து, கைகளை இறுக கட்டிக்கொண்டு உணர்ச்சியற்ற சிலை போல் நின்றவனை கண்டு மிரண்டவள்.

"அதி"என்று கரம் பற்ற

அதை உதறிவிட்டு"அப்படி சொல்லாதே" என்று கர்ஜிக்க

தன் மனம் கவர்ந்தவனின் பெயரை கூட சொல்ல முடியாமல்,அடி வாங்கியது போல்  பின்னால் நகர்ந்தாள்.

"எதுக்கு என்கிட்ட நடிச்ச"என்று அமைதியாக ஆனால் அடக்கப்பட்ட ஆத்திரத்தில் கேட்க

நடிப்பா ??என்னுடைய காதல் நடிப்பா??உள்ளுக்குள் நொறுங்கினாள் இசை.

"நான் நடிச்சேனா??"என்று கண்களில் கண்ணீர் தழும்ப வினவினாள்.

அவள் கண்களை கண்டால் தன்னையே மறப்பவன் இன்று அவள் கண்ணீரையும் அல்லவா சேர்த்தே மறந்து விட்டான்.

"வாவ். இப்பவும் உன்னோட நடிப்பு சூப்பர் தான்.எப்படி எதுவுமே தெரியாத மாதிரி பேசுற பார்த்தியா உனக்கு கண்டிப்பா அவார்டு தரலாம்" என்று நக்கலாக சொல்ல

"ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க"என்று உதடுகள் துடிக்க கேட்க

"இனிமேல் ஓரு வார்த்தை பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன்"என்று உறுமினான்.

கண்களில் வழிந்த கண்ணீர் கன்னத்தை தொட, அதை கண்டவன்"கண்ணுக்கு என்ன போட்ட, அருவி மாதிரி வருது" என்று ஏளனம் செய்ய

ராமின் மென்மையான பக்கத்தை மட்டுமே அறிந்தவள் அவனின் இந்த வெறுப்பை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

மூளை மறுத்து போய் அவனின் முகம் பார்த்தாள்.

"என்ன அப்படி பார்க்கற நீ யார் சொல்லி என்கிட்ட பழக ஆரம்பிச்சேன்னு எனக்கு நல்லா தெரியும். சோ இதோட எல்லாத்தையும் நிறுத்திகோ அப்புறம் உன்னோட நாடகத்துக்கு நான் சுபம் போடுறேன்"

அவளை ஆழ்ந்து பார்த்தவன் " நீ ஒரு வாரமா என்கிட்ட இதை சொல்ல தானே முயற்சி பண்ணிட்டு இருந்த, இப்போ என்னுடைய பதிலை உனக்கு சொல்றேன் நல்லா கேளு. இது தான் நான் உன்கிட்ட பேசுற கடைசி முறை,உன் முகத்தை பார்க்க கூட நான் விரும்பலை. குட் பை"என்றவன்

கடைசியாக அவள் கண்களை ஆசை தீர ரசித்து விட்டு"நீ இப்படி பொய்யானவளா மாறுவாய் நான் சத்தியமா எதிர்பாக்கலை" என்று கரகரப்பான குரலில் கூறினான்.

இசையிடம் ராம் பேசும் போது கைகளை இறுக்கி கட்டி கொண்டே பேசினான் எங்கே கோபம் கண்களை மறைத்து அவளை ஏதும் அடித்து விட்டால் என்ன செய்வது என்ற அக்கறை வேறு.

தன் பேச்சை முடித்தவுடன், அங்கே உயிரின் வலியை கண்களில் தேக்கி கொண்டு நிற்பவளை காணாது அகன்றான்.

கால்கள் தன் வசம் இழக்க இருக்கையில் அமர்ந்து, ராம் கூறிய வார்த்தைகளை தன்னுள் உள்வாங்கி கொள்ள முயன்றாள்.

மனதில்'என்ன தப்பு செய்தேன் என்று எதுவும் புரியலை.இவர் இப்படி பேசறஅளவுக்கு நான் ஏதாவது பண்ணிட்டேனா??'என்று தன்னையே சுயபரிசோதனை செய்து கொண்டாள்.

எந்த பிழையும் செய்யாமல் தன்னை பிழை திருத்தம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.

சிறு வயதில் அவள் செய்த தவறுகளையும் நினைத்து பார்த்து விரலை விட்டு எண்ண ஆரம்பிக்க,ஆதனால் கூட ராம் தன்மேல் கோபமாக இருக்கிறானா என்று சிறுபிள்ளை போல் சிந்தித்தாள்.

நேரம் மட்டுமே கடந்தது தவிர,தன் தவறை அவளால் அறிய முடியவில்லை.கண்களும் அதன் பணியை செவ்வனே செய்தது (கண்ணீர் சிந்தும் பணியை தான்)

சுற்றி இருப்பவர்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை உணர்ந்து, கண்ணீருக்கு தடை விதித்து விட்டு எழுந்து வெளியே வந்தாள்.

இசையிடம் கோபமாக பேசி விட்டு காருக்கு வந்தவன். சிறிது நேரம் செயலற்று அப்படியே நின்று விட்டான்.

'நீயா இப்படி ஏன் டி என்னை ஏமாத்தின'என்று மனதில் குமுறியவன்.

சாலையை பார்க்க அங்கே இசை எதையோ இழந்தது போல் முகம் அழுகையில் சிவந்து, தளர்ந்த நடையில் வந்தாள்.

அவளின் விழிகள் ராமை தேட,அப்போது அவனும் அவளை தான் பார்த்து கொண்டு இருந்தான்.

இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்தது.

'நான் பொய்யானவளா அதிரடி'என்று மனதில் கதறினாள்.

அவளை பார்த்தவுடன் சற்று இளகிய ராமின் முகம் நொடியில் இறுகியது அனைத்தும் ஞாபகம் வந்தவுடன் .

வேகமாக காரை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.அதை பார்த்தவள் முகத்தில் கசந்த முறுவல் மட்டுமே வந்தது.

இதயம் வலிக்க

வழியும் கண்ணீரை

போலி என்றாய்

பற்றிய கரங்களை

பரிவற்று உதறினாய்

அகம் அறியாது

அமிலம் வீசினாய்

வார்த்தையால்

பாராமல் இருப்பதே

பாக்கியம் என்றாய்

தவறை கூறாமலே தண்டனை தந்து தனியாக விட்டு செல்லும் தன்னவனை தாங்க முடியாத வலியுடன் கண்டாள் அந்த பாவை.

தந்தி அறுந்த வீணை போல் இசையின் காதல் ராகம் பாதியில் தடைபட்டு நிற்க,உரியவன் உறவை உணராமல் உதறிவிட்டு செல்ல

இனி இசையின் நிலை என்னவோ!!

 

அன்பின் கைது தொடரும்...

 


carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
15/11/2019 3:25 pm  

அன்பால் கைதுசெய் அன்பே - 10

இசையிடம் பேசி விட்டு நிதானமின்றி தன் வீட்டுக்கு சென்றான். அங்கே ராமின் பெற்றோரிடம் பேசி கொண்டு அமர்ந்து இருந்த அகத்தியன் அவனை பார்த்து கோபமாக முறைத்தான்.

நண்பனின் கோபத்தின் காரணம் அறியாதவன்"டேய் அகன் ஏன் டா கோபமா இருக்க"என்று கேட்க

"உனக்கு எவ்வளவு நேரமா நான் போன் பண்றேன் எதுக்கு எடுக்கலை"

"சரி இப்போ சொல்லு"என்று ஆர்வம் இல்லாதவனை போல் கூறினான்.

'இவனை'என்று பல்லை கடித்து கொண்டு நடந்ததை சொல்ல தொடங்கினான்.

"அம்மா கோவில் மயங்கி விழுந்துட்டாங்க நல்ல வேளை இசை அங்க வந்தால் அவ மட்டும் வரலனா"என சொல்லி கொண்டே இருந்தவனை நிறுத்தியது ராமின் குரல்.

"நீயுமா அங்க இருந்தே"என்று அதிர்ச்சியை உள்ளே வைத்துக்கொண்டு, வெளியே அமைதியான குரலில் வினவினான்.

"ஆமாம். நான்,இசை எல்லாரும் அங்க தான் இருந்தோம்"என்று சொல்ல

எங்கோ தான் சறுக்கியதை அந்த கணம் உணர்ந்தான்.

தன் பெற்றோர் முன்னால் எதுவும் கூற விரும்பாதவன் நண்பன் பக்கம் திரும்பி"அகன் ஒரு நிமிஷம் வா"என்று கூறி தன் அறைக்கு அழைத்து சென்றான்.

அறைக்கு வந்தவுடன் முதல் கேள்வியாகராம் கேட்டது.

"இசை யார் கூட வந்தாள்??அப்புறம் அங்க என்ன நடந்தது"

"டேய் என்ன டா ஆச்சு"

"நான் கேட்கறத்துக்கு மட்டும் பதில் சொல்லு டா"என்று பார்வையால் கெஞ்ச

நண்பனின் கலங்கிய முகம் அவனுக்கு பலகதைகள் சொல்ல, அமைதியாக ராமை பார்த்தான்.

"இதை வெளியே கேட்க வேண்டியது தானே சரி முறைக்காதே சொல்லறேன்.அவ தனியாக தான் வந்தாள்,அம்மா மயக்கம் வந்து விழும் போது இசை பிடித்தாள். அப்புறம் தான் அப்பாவும் ,நானும் வந்தோம்.நான் மாத்திரை எடுக்க காருக்கு வந்தேன் அப்போ தான் உன்னை பார்த்தேன் இசை கூட எங்கயோ கிளம்புனா"என்று முடிக்க

ராம் தலையை பிடித்து கொண்டு சோபாவில் சாய்ந்தான்.

"ஏதோ தப்பு பண்ணிட்டேன் போல"என்று புலம்ப

"தெரியுது. உன் முகத்தை பார்க்கும் போது என்ன பண்ண சொல்லு"

இசையை சந்தித்தது முதல் பிரிந்தது வரை சொல்ல, அமைதியாக ராமை பார்த்தான் அகத்தியன்.

"இசை தான் இதுக்கு எல்லாம் காரணம்னு நீ சொல்லறதுக்கு என்ன ஆதாரம் இருக்கு"என்று கேட்க

"இதோ இருக்கே"என்று கையில் உள்ள புகைப்படங்களை காட்டினான்.

அதை பார்த்தவன் அடுத்த நொடி அவன் கூறிய வார்த்தைகளில் முற்றிலும் அதிர்ந்தான்.

"முட்டாள்"என்று அகத்தியன் சொன்ன ஒற்றை வார்த்தையில் படித்தவன் என்ற பட்டமும் அதனுடன் வாங்கிய தங்க பதக்கமும் தலைமறைவு ஆகிவிட்டது.

"அகன்"என்றவனுக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை.

"என்ன பேச முடியலை போல"என்று நக்கலாக அவன் முகம் பார்க்க

ராமின் முகத்தில் குழப்பமும், அதிர்ச்சியும், போட்டி போட்டுக்கொண்டு வலம் வந்தது.

"இசையோட அப்பாவும் உன்னுடைய அப்பாவும் நண்பர்கள் ஆதனால் அவங்க சொன்னதால் தான் இசை உன்கிட்ட பழக ஆரம்பிச்சான்னு நீயே யோசித்து இப்படி பேசிட்டு வந்து இருக்க என்ன நான் சொல்லறது சரியா"என்று வினவ

தலையை மட்டுமே அவனால் அசைக்க முடிந்தது.

"இசை யாருன்னு கூட உன்னுடைய அம்மா அப்பாக்கு தெரியாது"

"தெரியாதா"என்று திரும்பி கேட்ட நண்பனை பாவமாக பார்த்தான்.

"ஆமாம் தெரியாது.இசை அவங்களை பார்த்தது கூட இல்லை. இன்னைக்கு தான் ஏதோ சந்தர்ப்பம் கிடைத்தது பார்த்தாங்க ஆனால் நீ ஒரு போட்டோவை நம்பி இப்படி பண்ணி இருக்க கூடாது"என்று அவனை குற்றம் சாட்டினான்.

"உனக்கு எப்படி டா தெரியும்"என்று மெல்லிய குரலில் கேட்க

"ஒருமுறை இசை அவங்க குடும்பத்தை பத்தி சொன்னாள். அப்போ தான் எனக்கு சந்தேகம் வந்தது ஆதனால அப்பா கிட்ட இசை அப்பா பெயரை மட்டும் சொல்லி விசாரித்தேன்"என்று கூற

ராமோ தன் நிலையிலே இல்லை கையில் உள்ள புகைப்படத்தில் புதைந்து விடுபவன் போல் அதையே வெறித்து பார்த்தான்.

அந்த படத்தில் இசை தன் தாய், தந்தையோடு சிரித்த முகமாக நின்று கொண்டு இருந்தாள்.

இன்னொரு படத்தில் ராமின் தந்தை, இசையின் தந்தையோடு நின்று கொண்டு இருந்தனர்.

'என்ன வார்த்தை சொல்லிட்டேன்'என்று தன்னுள் வருந்த வெளியே இறுக்கமாக இருந்தான்.

அகத்தியன் அப்போது தான் ராமின் நிலையை உணர,அவனின் தோள் தொட்டு"இசையை லவ் பண்றியா”

"ஆமாம்"என்று விரக்தி மற்றும் இயலாமை கலந்த குரலில் சொல்ல

"இசை கிட்ட பேசலாம் வா"என்று அழைக்க

"அவ என்கிட்ட பேசுவாளா??"என்று தவறு செய்த குழந்தை போல் கேட்டான்.

ராமின் இந்த நிலை அகத்தியனுக்கு புதியது.

அவனின் ஆழ் மனதில் அரும்பி இருந்த காதலை அறியாமல் தவறு செய்து விட்டு தவிக்கும் நண்பனை கண்டு பாவமாக இருந்தது.

"பேசி பார்க்காலம் டா வா"என்று கூற இருவரும் இசையை காண சென்றனர்.

பெரியவர்கள் ஒருவரை ஒருவர் அர்த்த பார்வை பார்த்தது அவர்கள் அறியவில்லை.

தவறு செய்வது மனித இயல்பு அதை திருத்தி கொள்ள ஒரு சந்தர்ப்பம் தருமாறு தன்னவளை காண விரைந்து செல்கிறான்.

 

அன்பின் கைது தொடரும்...
carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
16/11/2019 4:42 pm  

அன்பால் கைதுசெய் அன்பே - 11

அவர்கள் சென்ற இடம் இசை தங்கியிருந்த வீடு.

கதவை தட்ட வெண்மதி திறந்தாள்.

"அண்ணா வாங்க வாங்க சார் "என்று இருவரையும் வரவேற்க

ராமின் கண்கள் இசையை தான் தேடியது.

"எப்படி இருக்க மா"என்று அகத்தியன் கேட்க

“நல்ல இருக்கேன் அண்ணா.நிலா எங்க இருக்கா??”

"கவி கூட ஊருக்கு போய் இருக்கா மா இசை எங்க”

"ஊருக்கு போயிட்டா அண்ணா. காலையிலே சந்தோஷமா கோவிலுக்கு போனால்,திரும்ப வரும் போது முகமே சரியில்லை. ஏன் என்று கேட்டும் பதிலே வரலை எதும் பிரச்சினையா அண்ணா" என்றவள் சந்தேகமாக ராமை பார்க்க

முதல் வரியை கேட்ட ராம் முற்றிலும் உடைந்தான்.

'என்னை விட்டு போயிட்டாளா' என்று தனக்குள் கேட்டு கொள்ள அவன் முகத்தில் வலியின் சாயல் படர்ந்தது.

வெண்மதி பார்வையை உணர்ந்த அகத்தியன்,பிறகு வருவதாக கூறி விடை பெற்றான்.

அகத்தியன் எதுவும் பேசாமல், ராமை வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டான்.

அவனுக்கும் தெரியுமே பிரிவின் வலியை பற்றி அதற்கு தனிமையே சிறந்த மருந்து என்று.

அறைக்கு வந்த ராம் தன் முகத்தை கண்ணாடியில் காண அதுவோ எள்ளி நகையாடியது.

பிழை செய்யாதவன் என்ற

இறுமாப்பில் அலைந்தேன்

காதலில் பிழை செய்தேன்

பிழை திருத்தும் ஆசானாக

வருவாயா என் கண்மணி!!

முகத்தில் அறைந்து கொண்டு "இசை திரும்ப வா டி என்னை மன்னித்து விடு நானும் உன்னை லவ் பண்றேன்.நான் பேசினது ரொம்ப தப்பு தான் எனக்கு நீ வேணும் இசை"என்று வாய்விட்டே கெஞ்ச,பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தவளை அந்த குரல் எட்டியதோ என்னவோ சுற்றி பார்த்தாள் இசை.

ராம் பேசி விட்டு சென்ற பிறகு, இனி அவனிடம் பேசி பயன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்து அங்கே இருந்து கிளம்பி விட்டாள்.

தன் வீட்டுக்கு வந்தவள், பெற்றோரிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு அறைக்கு சென்றாள்.படுக்கையில் அமர்ந்து வாய் மூடி அழ ஆரம்பித்தாள்.

வெகு நேரம் தாங்கிய வலிக்கு மருந்தாக கண்ணீர் இருக்கும் என்று நம்பினாள்.

கண்களில் கண்ணீர் வற்றும் வரை கதறினாள்.

முன்னால் இருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவள்.ராமின் வார்த்தைகள் ரணமாய் வலிக்க செய்ய, அதிலும் 'நடிப்பு'என்ற வார்த்தை முள்ளாய் தைத்தது.

'என்னுடைய காதலை நடிப்புனு சொன்னவங்க எனக்கு வேண்டாம்'என்று மனதில் பதிய வைக்க முயன்றாள் ஆனால் அவளுக்கு தோல்வியே எஞ்சியது.

தோல்வியை அறியாதவள்

காதலில் தோற்றேன்

உன் முகம் காணாத

தூரம் செல்கிறேன்

தேடி வருவாயா?? அல்லது

தொலைத்து விடுவாயா??

இங்கு ராமோ வினாடி கூட இமைக்காமல், தன் கையிலுள்ள புகைப்படத்தை வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

அது நிலாவின் பிறந்த நாளில் எடுத்த படம்.

அதில் கண்களும் சிரிக்க, மாறாத புன்னகையுடன் நின்று இருந்தாள் இசை.

கடைசியாக கண்கள் கலங்கி, உதடுகள் துடிக்க நின்றவளின் தோற்றம் அவனின் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.

குற்ற உணர்ச்சி தலை தூக்க, தனிமை கொடுமையாக கசந்தது.

இமை மூடியவன் விழிகளில் இசையின் முகமே வர 'உன்னுடைய காதலை உணராமல் காயப்படுத்திட்டேன் இசை'என்று வருந்தினான்.

விடியல் யாருக்கும் காத்திராமல் விடிய, இசையின் அறைக்கு வந்த கவியரசி மகளின் நிலை கண்டு பதறி போனார்.

 

அன்பின் கைது தொடரும்...

 


carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
19/11/2019 11:40 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 12

 “என்னங்க"என்று உரக்க அழைக்க

"என்ன மா"என்றவாறு கவியரசன் அங்கே வந்தார்.

"இசைக்கு காய்ச்சலா இருக்கு டாக்டரை போய் அழைச்சிட்டு வாங்க"என்று கூற

"சரி மா .நான் டாக்டர் கூட வரேன்" என்று சொல்லி விட்டு அவர் கிளம்பினார்.

காய்ச்சலின் வேகத்தால் சுய நினைவின்றி எதையும் உணராமல் படுக்கையில் இருந்தாள் இசை.

டாக்டர் வந்து பரிசோதனை செய்து மருந்துகள் எழுதி தந்து விட்டு சென்றார்.

கவியரசி மகளின் அருகே இருந்து கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்.

இரண்டு நாளில் உடல் நலம் சற்று தேறிவிட நேராக தன் பெற்றோர் முன் வந்து நின்றாள்.

"இப்போ எப்படி டா இருக்கு"என்று கேட்ட தந்தையின் கனிவான கேள்வியில் கண்கள் கரித்து கொண்டு வர,

அதை சமாளித்து விட்டு"பரவாயில்லை பா" என்று கூறியவள்.

அவர்களின் முகத்தை தயக்கத்துடன் பார்க்க"என்ன டா மா.உன் மனதில் இருக்கிறதை சொல்லு"என்ற தந்தையின் பேச்சு தைரியம் தர,அவளின் தாயும் கண்களால் அதையே ஆமோதித்தார்.

"நான் வேலைக்கு போகலை இனிமேல் உங்க கூட இங்கேயே இருக்கிறேன்"என்று சொல்லி விட்டு அவர்கள் பதிலுக்கு காத்து இருந்தாள்.

மகளின் மனதில் ஏதோ இருப்பதை உணர்ந்தவர்கள்.

அவளின் விருப்பத்தை ஏற்று"சரி டா உன் விருப்பம் போல் செய்"என்று சம்மதம் தெரிவித்தனர்.

இசை வேலையை விட்டு விட்டு பெற்றோர் உடன் மதுரையில் தங்கி விட்டாள்.

அவளின் பெற்றோர் திருச்சி சென்று, அங்கு இருந்த அவளின் பொருட்களை எடுத்து கொண்டு வந்து விட்டனர்.

இதையறிந்த ராம் துவண்டு தான் போனான்.

எப்படியும் இங்கு வேலை செய்ய வருவாள் அப்போது அவளிடம் மன்னிப்பு கேட்டு, தன் காதலை தெரிவிக்கலாம் என்று நினைத்தவனின் எண்ணத்தில் இடியை இறக்கினாள் இசை.

'என்னை வெறுத்து விட்டாளா'என்று கதி கலங்கி தான் போனான் அவளின் அதிரடி.

வீட்டில் பொழுது போகவில்லை என்பதால் அவள் பயின்ற பரத கலையை பிறருக்கு கற்று தர வேலைக்கு சென்றாள்.

இசை என்ன தான் ராமை மறக்க முயன்றாலும் அவளால் அது மட்டும் முடியவில்லை.

திருச்சியில் அவளுடன் பழகியவர்கள் என அனைவரின் தொடர்பையும் துண்டித்து கொண்டாள்.

யாரிடமும் தொடர்பு இல்லாமல் தனிமையே துணை என்று அதையே விரும்ப தொடங்கினாள்.

நீதிமன்றத்தில் கூட தவறை அறிந்த பின்பு தான் தண்டனை வழங்கப்படும் ஆனால் அவள் வாழ்வில் தண்டனை மட்டுமே முதலில் விதிக்கப்பட்ட, தன் தரப்பு பதிலை கேட்க கூட ஆள் இல்லையே என்று நாள்தோறும் வருந்தினாள்.

பெற்றோர் முன் இயந்திரம் போல் வேலைகளை செய்து கொண்டு, முகத்தில் சிரிப்பை வலுக்கட்டாயமாக வரவைத்து வலம் வந்தாள்.

இம்சையரசி என்ற சிறப்பு பெயர் பெற்றவள் இப்போது இருக்கும் இடம் தெரியாது அமைதியின் சிகரமாக மாறி விட்டாள்.

அவளை அப்படி மாற்றியவனின் நிலை என்னவோ!!!

இங்கு ராமின் மனதில் இசையின் முகம் அழியாத ஓவியமாக பதிந்தது.

அன்று யார் முகத்தை பார்க்க விரும்பவில்லை என்று சொன்னானோ?? இன்று அவள் முகம் பார்த்து தான் அவன் கண் விழிப்பதே .

இசை சென்று பிறகு, ஒருமுறை நிலாவை காண அகத்தியன் வீட்டுக்கு சென்றான்.

அங்கு நிலா அழுது கொண்டு இருக்க, பக்கத்தில் அகத்தியன்,கவிகா இருவரும் கைகளை பிசைந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருந்தனர்.

"அகன் என்ன ஆச்சு"என்று கேட்க

"எதுவும் இல்லை டா.நீ வந்து உட்காரு"என்று பேச்சை மாற்றினான்.

"நான் கேட்கறத்துக்கு மட்டும் பதில் சொல்லு"என்று அழுத்தமான குரலில் கேட்க

நிலா ராமின் கரங்களை பற்றி கொண்டு"அங்கிள் தேன் என்கிட்ட ஒரு வாரமா பேசவே இல்லை"என்று தேம்பியவாறே சொன்னாள்.

ராம் நம்ப முடியாது அகத்தியன் முகம் பார்க்க அவன்'ஆமாம்'என்பது போல் தலையை அசைத்தான்.

"இசை நம்பரை மாத்திட்டா போல இது வரைக்கும் யார்கிட்டயும் பேசலை"என்று ஒருவாறு கூறிவிட்டான்.

அடுத்த நொடி அங்கு இருக்க முடியாமல் அதிவீரராம் கிளம்பிவிட்டான்.

மனநிம்மதி வேண்டி சென்ற இடத்தில் மேலும் பாரம் ஏறியது.

'தன் மீது தான் கோபமாக இருக்கிறாள்' என்று அவன் நினைக்க ஆனால் இப்பொழுது அவளுக்கு பிரியமானவர்கள் மீதும் அல்லவா அவள் கோபம் திரும்புகிறது.

'எல்லாம் தன்னால் தான் 'என்று தன்னையே நொந்து கொண்டான்.

நாட்கள் செல்ல செல்ல இசை ராமை மறக்க முயற்சி செய்ய,ராமனின் மனதில் ஆணி அடித்தது போல் இசை நிலைத்து விட்டாள்.

ராமின் காதலை அறியாமல் இசை அவனை மறக்க நினைக்கிறாள் .

இசையின் காதலை அறிந்து அவள் மனதை மாற்ற ராம் நினைக்கிறான்.

நான் தொடர்புள்ளி வைக்க முனைய

நீ முற்றுப்புள்ளி வைக்க முயல

நம் காதல் கை கூடுமா என்பது வினாகுறியே??

 

அன்பின் கைது தொடரும்...


Mufi Riz liked
carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
20/11/2019 10:47 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 13

ஆறு மாதங்களுக்கு பிறகு

வழக்கம் போல் பரதநாட்டிய வகுப்பிற்கு சென்று விட்டு இசை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் ஒரு கார் அவள் அருகே வேகமாக வந்து நின்றது. தீடிரென வண்டி நிற்கவும் சற்று பயத்துடன் பார்த்தாள்.

காரில் இருந்து இறங்கியவன் அவள் கனவுகளின் காதலன் அதிவீரராம் தான்.

யாருக்காக வேலை, தெரிந்தவர்கள், ஊர் என அனைத்தையும் உதறிவிட்டு வந்தளோ அவனே அவள் எதிரில் நின்றான்.

தேனின் முகத்தில் வந்த பாவனைகளை ரசித்து கொண்டே அவளிடம் நெருங்கிய ராம்"ஹலோ மேடம் நான் ஊருக்கு புதுசு இந்த தெரு எங்க இருக்கு ?" என்று ஒரு தெருவின் பெயரை சொல்ல தன்னவன் தன் அருகே வந்தவுடன் தலை குனிந்து நின்றவள்.

அவன் கேள்வியில் நிமிர்ந்து பார்க்க"ஹலோ மிஸ் ம்ம்ம் இல்ல மிஸ்ஸா” என்று யோசிக்க

அவளின் அனல் வீசும் பார்வையில் "வெல்கம் பேக்  மிஸ். தேனிசைச்செல்வி  இப்போ தான் பழைய இசை மாதிரி இருக்க"என்றவனை அவள் முறைக்க

"நாம் முதல் தடவை சந்தித்த போது இப்படி தான் பார்த்த அதாவது முறைச்ச"

அவனை வெற்று பார்வை பார்த்தவள் பதில் கூறாமல் சென்று விட்டாள்.

செல்லும் அவளை பார்த்து கொண்டு இருந்தவன் முகம் வேதனையில் கசங்கியது.

மனதில்'உன்னை பழைய இசையாய் நான் மாற்றுவேன்' என உறுதிமொழி எடுத்தான்.

உன் மௌனம்

கொல்லாமல்

கொல்லும்

விஷம் பெண்ணே!!

இரவில் உறக்கம் தொலைத்தாள் இசை.

கண்களை மூடினால் கனவில் அவனின் சிரித்த முகமே வந்து இம்சை செய்தது.

என்ன செய்வது என புரியாமல் குழம்பினாள்.

ஆறு மாதங்களுக்கு பிறகு பார்த்த அவன் முகம் தன் மனதில் செதுக்கிய சிற்பம் போல் பதிந்து இருப்பதை அழிக்க முடியாமல் தவித்தாள்.

'நிம்மதியாக இருந்தேன் எதுக்கு இப்போ இந்த அதிரடி வந்தாங்க ' என்று தனக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.

'அதிரடி முகமே சரியில்லை. கொஞ்சம் மெலிந்து போயிட்டாங்க அப்புறம் அந்த இரண்டு கண்ணும் ஏதோ பாவமா பார்க்கற மாதிரி இருக்கு'என்று அவனை நினைத்து வருந்தவும் வேறு செய்தாள்.

இவளின் இரண்டு மனநிலையை கண்டு குழம்பி போன அவளின் மனசாட்சி குரல் கொடுத்தது.

'அடியே உனக்கு என்ன தான் இப்போ பிரச்சினை??நீ தான் அதிரடி மேல கோபமா இருக்க அப்புறம் எதுக்கு உருகி வழிகிறாய் பக்கி' என்று கேள்வி கேட்க

'நான் ஒன்னும் உருகலை சும்மா தான் சொல்லி பார்த்தேன்' என்று பதில் கூற மனசாட்சியோ 'உர்ர்ர்ர்ர்'என்ற கோப குரலில் தலைமறைவு ஆனது.

மனசாட்சியின் கேள்வியில் அவளும் கூட சற்று குழம்பி தான் போனாள்.

'எப்படி இருந்தாலும் சரி .இனிமேல் இந்த அதிரடியை பார்க்க கூடாது' என தனக்கு தானே உறுதியாக சொல்லி கொண்டாள்.

பாவம் அவள் உறுதி எல்லாம் நாளை காலையில் தகர போகிறது என்பதை அறியாது உறங்க முயன்றாள்.

கண்களால் கைது செய்யும் கள்வனே

உன் விழி மொழியின் அர்த்தம்

என்ன டா??

 

அன்பின் கைது தொடரும்..


Mufi Riz liked

carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
21/11/2019 5:44 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 14

அடுத்த நாள் காலை வழக்கம் போல் பரதநாட்டியம் வகுப்பிற்கு கிளம்பினாள்.

பிள்ளைகளுக்கு அபிநயம் கற்று தந்தவள் திரும்பி பார்க்க அதிர்ச்சியில் உறைந்தாள்.

அதற்கு காரணம் அவளின் நாயகன் அல்லவா.அவளின் நடனத்தை ரசித்து கொண்டு இருந்தான்.

சுட்டும் மை விழிகளால் அவள் வீசிய பார்வையில் சுற்றம் மறந்தான்.

"சார்" என்ற அழைப்பில் தெளிந்து திரும்பியவன் அருகே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்றார்.

"நீங்க வந்து இருப்பதா சொன்னாங்க ஏதும் பிரச்சினையா சார்"என்று பதட்டமாக கேட்க

"இல்லை மேடம்.எனக்கு தெரிஞ்சவங்க அவங்க குழந்தைக்காக  கேட்டாங்க அதான் விசாரிக்க வந்தேன் "என்று இசையை பார்த்து கொண்டே பொய் சொன்னான்.

அவன் கள்ளப்பார்வை உணர்ந்த இசை "திருடா" என்று சத்தமில்லாமல் இதழை அசைத்தாள்.

அவர்கள் அருகில் வந்த இசை"நான் வரேன் மேடம்" என்று விடைபெற

"இரு இசை. சார் கிளாஸ் பத்தி கேட்கறாங்க நீ சொல்லு டா "என்று நகர்ந்திட

"சொல்லுங்க சார். என்ன விஷயம்" என்று அப்பாவி போல் வினவ

"இசை நடிக்காதே.நான் எதுக்கு வந்தேன்னு உனக்கு நல்லா தெரியும்"

"ரொம்ப நல்லவே தெரியும் மிஸ்டர்.அதிவீரராம்"

"ப்ளீஸ் இசை.நான் உங்கிட்ட தனியாக பேசணும் "

அவள் கண்களால் எரிக்க"இனிமேல் தொந்திரவு செய்ய மாட்டேன்"

அவனின் கெஞ்சல் பார்வையில் மனம் இறங்கி "சரி" என்றாள்.

அவன் அழைத்து சென்றது அவன் தங்கியிருந்த வீடு.

அவளை அமர சொன்னவன் "இசை நான் உன் கிட்ட என்னை பற்றி சொல்லணும்" என்று  இறுகிய முகத்துடன் தன் கடந்த காலத்தை கூற தொடங்கினான்.

"நான் பிறந்த ஊர் மதுரை தான்"என்றவன்.

அவளின் ஆச்சரிய பார்வையை அலட்சியம் செய்து ஜன்னல் வழியே வெளியே வெறித்து பார்த்தான்.

"என்னுடைய அப்பா பெயர் அமுதரசன்.பையன் மனசை காயப்படுத்திட்டு மற்றவங்க மனசை சரிப்படுத்துற இதயநோய் நிபுணர்.அம்மா பெயர் கலைவிழி.ரொம்ப அமைதியானவங்க அப்படி நினைத்து நான் தான் ஏமாந்து போயிட்டேன்"

"எனக்கு எட்டு வயது இருக்கும் போது"என தொடங்கியவன் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போனது.

20 வருடங்களுக்கு முன்பு

"என்னங்க நான் சொல்லுவதை கேட்டா என்ன"என்று கோபத்தில் கலைவிழி கேட்க

"நீ கொஞ்சம் என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொள் கலை"என்று அமுதரசன் தொடங்க

"உங்களால் வர முடியுமா?முடியாதா?அதை மட்டும் சொல்லுங்க"

"எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கற,உங்க அப்பா வீட்டுக்கு நாளைக்கு போகலாம் மா.இப்போ எனக்கு வேலை இருக்கு"

"எப்படியோ போங்க"என்று கலைவிழி சென்று விட்டார்.

அமுதரசன் அமைதியாக மருத்துவமனைக்கு கிளம்பினார்.

இவையெல்லாம் வேடிக்கை பார்த்து கண் கலங்கி நின்றான் அதிவீரராம்.

பேரனின் மனம் அறிந்த பனிமொழி"ராம் கண்ணா இங்க வாங்க"அழைக்க

"பாட்டி"என ஓடிவந்து அவரின் அருகே அமர்ந்து கொண்டான்.

"என்ன உன்னுடைய முகம் வாடி போயிருக்கு"

"பாட்டி எதுக்கு அம்மா அப்பா அடிக்கடி சண்டை போடுறாங்க? என்கூட சரியா பேச மாட்டாறாங்க"

பேரனின் தலையை தடவியபடி"அப்படி எதுவும் இல்லை கண்ணா.நீ கவலை படாமல் இரு.நீ,நான், தாத்தா வெளியே போகலாம் "

"சூப்பர் பாட்டி. நான் ரெடி ஆக போறேன்"என்று கூறி விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து செல்லும் பேரனை பாசத்துடன் பார்த்தார்.

ஓவியகண்ணன் மனைவியின் கரம் பற்றி"கவலை படாதே எல்லாம் சரியாகும்"என்று ஆறுதலாக கூற

பனிமொழியின் முகத்தில் விரக்தி புன்னகை மட்டுமே வந்தது  அதற்கு காரணம்  இருவரும் அறிந்த ஒன்றே.

ஆம் அவர்களின் மருமகள் கலைவிழி தான் அதற்கு காரணம்.

கலைவிழியின் தந்தை பெயர் எழிலரசன். பெயருக்கு ஏற்ப அரசனாக வலம் வருபவர். பல ஜவுளி கடையின் உரிமையாளர். தாயை இழந்த கலைவிழி,தந்தையின் வீட்டில் இளவரசியாக வளர்ந்தார்.

அமுதரசனின் அமைதியான குணம் கண்டு மகளை திருமணம் செய்து தந்தார். பரிசாக ஒரு மருத்துவமனையை கட்டி கொடுத்தார் ஆனால் அமுதரசன் மறுத்து விட்டார்.

"நான் நிர்வாகியாக இருக்க மாட்டேன்,ஊழியனாக மட்டுமே இருப்பேன்"என்று உறுதியாக கூறியவர்.

தொடர்ந்து ஒரு மருத்துவராக மட்டுமே அங்கே பணிபுரிந்தார்.

அமுதரசனின் இச்செயல் தந்தைக்கும்,மகளுக்கும் பிடிக்கவில்லை இருந்தும் அமைதி காத்தனர்.

அமைதியாக சென்ற இவர்களின் வாழ்வில் கலைவிழியின் பிடிவாத குணத்தால் புயல் வீச தொடங்கியது.

இப்பொழுதும் தந்தை வீட்டுக்கு செல்ல வேண்டும் என அடம்பிடிக்கும் மனைவியை எப்படி சமாதானம் செய்வது என யோசித்து கொண்டு இருந்தார் அமுதரசன்.

கலைவிழியோ யாரிடமும் எதுவும் சொல்லாமல் தன் தந்தையை காண சென்று விட்டார்.

ஆனால் இருவருமே தங்களின் மகனை பற்றி நினைக்கவில்லை.

அதிவீரராம் தன் தாத்தா, பாட்டியோடு வெளியே சென்று விட்டு களைப்பில் சீக்கிரமே உறங்கி விட்டான்.

அமுதரசன் மருத்துவனையில் இருந்து வீடு திரும்பினார்.

மகனை கண்ட பனிமொழி"சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வா தம்பி"என்று அழைக்க

தாயை பார்த்து"நீங்க தூங்குங்க மா.கலை பரிமாறுவாள்"

"கலை அவங்க அப்பா வீட்டில் இருக்கா"

"எப்போ மா போனா என் கிட்ட சொல்லவே இல்லை"என்று கூறிய மகனை கவலையுடன் பார்த்தார்.

"நீ கிளம்பி போன பத்து நிமிடத்திலே"

"ராம் எங்க மா"

"அவன் தூங்கிட்டான் தம்பி"

மகனுக்கு உணவு பரிமாறி விட்டு அருகில் அமர்ந்தார்.

"உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை"

மகன் அமைதியாக இருப்பதை உணர்ந்து"கலை அவங்க அப்பா வீட்டுக்கே நிரந்தரமா போயிடலாம்னு உன்கிட்ட சொல்றா அப்படி தானே"

தாய் கூறியவுடன் அதிர்ச்சியாக நிமிர்ந்தார்.

"உங்களுக்கு தெரியுமா இந்த விஷயம்"

"தெரியும் .கலை எங்கிட்ட இதை பத்தி சொன்னாள்,நீ என்ன சொல்ற"

"முடியாது மா.உங்களை ,அப்பாவை விட்டு தனியா போக மாட்டேன்"

"எங்களால் பிரச்சினை வர வேண்டாம் தம்பி.நீ வேணா அங்க"என்றவரின் பேச்சை அமுதரசனின் கலங்கிய விழிகள் தடை செய்தது.

"என்னை எப்படி மா நீங்க அப்படி சொல்லாம் நான் அப்படி விட்டு போறவனா"என்று ஆதங்கமாய் கேட்ட மகனின் கன்னம் பற்றி"இல்லை பா. உங்களுக்காக தான் இதை சொல்றேன் ராம் சின்ன பையன் தம்பி.இதெல்லாம் பார்த்தா அவன் மனசு என்னவாகும் அதான்"

"போதும் மா.இனிமேல் இந்த விஷயத்தை பத்தி பேச வேண்டாம்.அவளுக்கு அவள் அப்பா எப்படி முக்கியமோ அதுபோல் தான் எனக்கும் நீங்க இரண்டு பேரும்.நான் நாளைக்கு கலை கிட்ட பேசறேன் இப்ப நீங்க தூங்குங்க மா"

மகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அந்த தாயுள்ளம் வேண்டியது.

 

அன்பின் கைது தொடரும்...


carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
22/11/2019 4:54 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 15

 காலையில் அமுதரசனுக்கு ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை இருந்ததால், மாலையில் கலை வீட்டுக்கு போகலாம் என தள்ளி போட்டார்.

முன்தினம் எழிலரசன் வீட்டுக்கு கண்ணீரோடு சென்ற கலை தான் இனிமேல் அங்கு செல்ல மாட்டேன் என உறுதியாக கூறினார்.

மகளின் மேல் உள்ள அன்பு அவரது கண்களை மறைக்க,காரணம் எதுவும் கேட்காமல் மருமகனிடம் பேச முடிவு செய்தார்.

அமுதரசன் அறுவை சிகிச்சை அறையில் இருக்க,தந்தையும் மகளும் அவருக்காக காத்து கொண்டு இருந்தனர்.

நேரம் கடந்து செல்வதில் எரிச்சல் வர"பாருங்க பா.இவரு வேணும்னே தான் இப்படியெல்லாம் பண்றாரு"என்று தந்தையிடம் புகார் வாசிக்க

"இரு மா.மாப்பிள்ளை வரட்டும் பார்க்கலாம்"

கலைவிழி சலிப்புடன் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

சிறிது நேரத்தில் தன் அறைக்கு வந்த அமுதரசனை புன்னகையுடன் வரவேற்றான் அதிவீரராம்.

"ராம் கண்ணா.இங்க என்ன பண்றீங்க"என்று மகனை கொஞ்ச

"நான் உங்க கூட வரேன் பா.அம்மாவை பார்க்க"

"சரி கண்ணா போகலாம்"

தந்தையின் பதிலில் மகிழ்ந்து அவரின் கழுத்தை கட்டி கொண்டு, கன்னத்தில் முத்தம் வைத்தான்.

அவர்கள் சிரிப்புடன் வெளியே வர,அங்கு கோபத்தில் முகம் சிவக்க நின்று இருந்த மனைவியை யோசனையோடு பார்த்தார்.

மாமனார் அருகில் இருப்பதை உணர்ந்து "வாங்க" என்று பொதுவாக இருவரையும் அழைத்தார்.

கலைக்கு இவ்வளவு நேரம் காத்திருந்த எரிச்சல் கோபமாக மாறியது.

சுற்றுப்புறம் மறந்து"எங்க ஹாஸ்பிடல எங்களுக்கே வரவேற்பா சபாஷ்"என்று கை தட்ட

"கலை உள்ள வா மா"என்று பொறுமையாக அமுதரசன் சொல்ல

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு

என்ற திருக்குறளை அந்நேரத்தில் மறந்துவிட்டார் கலைவிழி.

"நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்க இந்த ஹாஸ்பிடல் உங்களுடையதா" என்று நக்கலாக கேட்க

சுற்றி இருப்பவர்களின் ஏளன பார்வையில் தலை குனிந்தார்.

மருமகனின் நிலை உணர்ந்த எழிலரசன் "கலை வீட்டுக்கு போய் பேசலாம் வா"

"முடியாது பா.நான் இங்க தான் பேச போறேன் " என்று அடம்பிடிகக

எதுவும் புரியாத ராம்"அம்மா" என்று அழைக்க அதையும் அவர் உணரவில்லை.

"அவள் பேசட்டும் விடுங்க மாமா"  என்று அனுமதி வழங்க

"நீங்க யாரு எனக்கு அனுமதி தர,நான் நினைச்சா இப்பவே உங்களை இந்த ஹாஸ்பிடல் வேலையில் இருந்து தூக்குவேன்"என்ற அவரின் கர்வம் நிரம்பிய குரலில் அமுதரசனின் காதல் மனம் உடைந்தது.

வார்த்தைகளுக்கு ஆக்கும், அழிக்கும் சக்தி உள்ளது என்பதை அறியாது வார்த்தைகளை  சிதறவிட்டார்.

"இப்போ கூட பாருங்க எப்படி சிலை மாதிரி நிக்கிறாரு.என்ன மனுஷன் இவரு ச்சே நான் வீட்டில் இல்லையே என்னை சமாதானம் படுத்தாம, இங்க பையனை கொஞ்சி கிட்டு இருக்காரு"என்று கூற

மேலும்"நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லி இருந்தேன் அதுக்கு உங்க பதில்" என்று கேட்க

ஒரு நிமிடம் மெளனமாக மனைவியின் முகத்தை கண்டவர். பின் எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்று,கைகளில் காகிதங்களுடன் திரும்பி வந்தார்.

எழிலரசனிடம்"நான் வேலையை விட்டு விட்டேன் அதுக்கான கடிதம் இது" என்று ஒன்றை தந்தவர்.

மறுபடியும் மனைவியை ஒருமுறை பார்த்து விட்டு"இது உங்கள் மகளை பிரிவதற்கு" என்று தன் கையெழுத்து போட்ட காகிதத்தை கொடுத்து விட்டு மகனை தூக்கி கொண்டு வேகமாக வெளியேறினார்.

"மாப்பிள்ளை" என்ற எழிலரசன் அழைப்பு காற்றில் கரைந்தது.

ராம் கண்ணீரோடு தாய் முகம் காண, அவரோ முகத்தை திருப்பி கொண்டார்.

கலைவிழியின் கண்களுக்கு கலங்கிய மகனின் முகமும், ஏதோ யாசித்து பார்த்த கணவனின் கண்களும் கருத்தில் படவில்லை.

இந்த பிடிவாத குணத்தால், அவர் எதிர்காலத்தில் மகனின் பாசத்திற்கு ஏங்கி வருந்துவார் என்பதை அந்த கணம் உணர தவறினார்.

அமுதரசன் வீடு செல்லும் முன்பே, கலைவிழி தன் பொருட்களை வேலையாட்கள் மூலம் எடுத்து சென்று விட்டார்.

அழுதுகொண்டே வந்த பேரன், இறுகியமுகத்துடன் வந்த மகனை கண்டு பெற்றவர்களின் உள்ளம் கலங்கியது.

அமுதரசன் அறைக்கு செல்ல,ராமை அணைத்து கொண்டார் பனிமொழி.

கையில் பெட்டியை தூக்கி கொண்டு வந்த மகனை அதிர்ச்சியாக பார்க்க

"இவன் இனிமேல் உங்க பொறுப்பு. நான் சென்னைக்கு கிளம்புகிறேன்" என்று கூறியவர்.

மகனை ஒரு முறை ஆசையாக அணைத்து விட்டு, பெற்றோரின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டார்.

அமுதரசனின் சுயமரியாதை மனைவியால் சீண்ட பட அதை அவரின் தன்மானம் தட்டிக்கேட்க ஊரைவிட்டு கிளம்பினார்.

கலைவிழியோ தன் வீட்டுக்கு வந்து கணவன் அழைக்கவில்லையே என்ற அவரின் ஏக்கம்.கோபமாக மாறி அதன் எல்லையை கடக்க செய்ய வார்த்தைகளை தவறவிட்டார்.

ராமின் நிலையை இருவரும் உணராமல் தவறு செய்து விட்டனர்.

எப்போதும் இரவில் தாய் அல்லது தந்தையின் கரம் பிடித்து தூங்குபவன் இன்று இருவரும் இல்லாத அந்த மெத்தையை வெறித்து பார்த்தான்.

இனி தாயும், தந்தையும் வர போவதில்லை என்னும் நிதர்சனமே, அவன் நித்திரையை கைப்பற்றி கொண்டது.

அந்த சிறுவயது ராமின் மனதில் பெற்றோரின் பிரிவு பசு மரத்தாணி போல் பதிந்து விட்டது.

அமுது ஊட்ட தாயும் இன்றி அரவணைக்க தந்தையும் இல்லாமல் , அழும் அதிவீரராமின் துயர் துடைக்க ஆள் இல்லாது கதறியது அந்த பிஞ்சு மனம்.

சிறுவயதில் தனிமையை வெறுத்தவன், இளம் வயதில் அதை விரும்ப தொடங்கினான்.

அன்று ரசித்த பசுமையான நினைவுகளை இன்று நிழல் ஓவியம் போல் அதை  நினைத்து பார்த்து நாட்களை நகர்த்தினான் அதிவீரராம்.

அறியாத வயதில்

அன்னையின்

அன்பை இழந்தேன்

அரவணைத்த

அப்பாவின் கரங்கள்

அகன்றன

தவித்தேன்

தனிமை சிறையில்...

 

அன்பின் கைது தொடரும்...

This post was modified 3 weeks ago by carolinemary C

carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
22/11/2019 4:48 pm  

அன்பால் கைதுசெய் அன்பே - 16

ராம் கண்களை மூடி திறந்து அருகில் இருந்த இசையை காண அவளது விழிகளும் கலங்கி இருப்பதை கண்டவன்.

வெற்று புன்னகை அவளை பார்த்து வீசியவாறு மேலும் தொடர்ந்தான்.

"அப்புறம் நாங்க திருச்சி போயிட்டோம். அப்பா மட்டும் போன் பண்ணி பேசுவாங்க. அம்மா அது கூட பண்ணலை இப்படியே நாட்கள் போச்சு.எட்டு வருஷத்துக்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து வந்தாங்க. இனிமேல் எந்த பிரச்சினையும் வராது. நாங்க மனசு விட்டு பேசிட்டோம். எல்லாம் சரி ஆயிடுச்சு ஆதனால் என்னை அவங்க கூட வர சொன்னாங்க. நான் போகலை. கெஞ்சி பாத்தாங்க நான் ஒத்துகலை"

"அப்புறம் எனக்காக அங்கேயே வந்துட்டாங்க  ஆனா என்னால் தான் பழைய மாதிரி பேச முடியலை,விலகி விலகி போனேன். அப்போ தான் காலேஜ்ல அகத்தியனை பார்த்தேன்.அவனும், நானும் ரொம்ப நல்ல நண்பர்கள்"

"பாட்டி சாகும் போது கடைசி வரை அப்பா, அம்மா கூட அந்த வீட்டில இருக்க சொல்லி சத்தியம் வாங்கிட்டாங்க.அவங்க ஆசைக்காக தான் அங்க இருக்கறேன்"

பின்பு இசையை நேராக நிமிர்ந்து பார்த்து"அவங்க கூட உன்னை பார்த்தவுடனே  ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன் நான் அப்படி பேசி இருக்க கூடாது . நான் செய்தது தப்பு தான் அதுக்கு என்னை மன்னித்து விடு. உன்னை பார்த்து மன்னிப்பு கேட்க தான் இங்க வந்தேன் அதுல என்னை பத்தி வேற சொல்லிட்டேன். சாரி மா.நான் நாளைக்கு திருச்சி போறேன் இனிமேல் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்"

அவன் பேசியது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் இசை அவனை பார்க்க, அவள் பக்கம் கூட திரும்பாமல் "கிளம்பு மா" என்று சொல்லி விட்டு வெளியே செல்ல

இசையோ என்ன செய்வது என்று புரியாமல் அவனை பின் தொடர்ந்தாள்.

அவள் வீட்டுக்கு முன் வண்டியை நிறுத்தி விட இறங்கிய இசையிடம்"பை மா" என்றவன் அவள் முகம் காணாது சென்று விட்டான்.

ராமோ மனதில்'நம்முடைய காதலுக்கு தோல்வியே இல்லை டி .அது எப்படியும் நம்மல சேர்க்கும் ஆனா நான்விலகி வந்ததுக்கு காரணம் இருக்கு. நாம அனுதாபத்தில் சேர கூடாது அதான் நான் லவ் பத்தி எதுவும் சொல்லவில்லை. நீயா என்கிட்ட பேசுவ அது வரைக்கும் நான் காத்து இருப்பேன்'

இசையோ'இப்ப கூட என்னுடைய காதல் இந்த அதிரடிக்கு புரியலை .என்னை கஷ்ட படுத்தவே கிளம்பி வந்து இருக்காங்க' என்று கண்ணீரில் கரைந்தாள்.

அவன் மேல் உள்ள வெறுப்பு, கோபம் எல்லாம் காற்றில் பறந்தது.

ராமின் காதலை அறியாமல் இசை அவனை கடிந்து கொண்டு இருந்தாள்.

இசையின் காதலை அறிந்த ராம் அது கரம் சேரும் நாளுக்காக காத்து இருந்தான்.

காதலிப்பது ஒரு சுகம் என்றால் காத்து இருப்பதும் ஒரு சுகமே....

ராம் சொன்னபடியே திருச்சி சென்று விட்டான்.

சோர்வுடன் உள்ளே நுழைந்த மகனின் முகம் கண்டு, கலையின் தாயுள்ளம் கலங்கியது.

மகன் தன்னிடம் கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று துணிந்து அருகே சென்றார்.

"ராம்"என்று அழைத்த தாயின் குரல் கூட அவனை எட்டவில்லை.

"கண்ணா"என தோளை தொட

அதில் உணர்வு பெற்றவன் சலனமற்ற பார்வை பார்க்க, கலையின் விழிகளில் கண்ணீர் நிரம்பியது.

நடப்பதை பார்த்து கொண்டே உள்ளே வந்த அமுதரசன்,மனைவியை கண்களால் சமாதானம் செய்து விட்டு மகனின் அருகில் அமர்ந்தார்.

"வெள்ளி கிழமை பெண் பார்க்க அவங்க வீட்டுக்கு போறோம்" என்று மனைவியை பார்த்து கூற

அதில் சட்டென்று தந்தையின் முகம் பார்த்தவன்.

"முடியாது நான் வர மாட்டேன்" என்று கோபமாக கத்தி விட்டு எழுந்து செல்ல

"அந்த பெண் பெயர் தேனிசைச்செல்வி மதுரையில் இருக்கா . என்னுடைய நண்பன் கவியரசனின் மகள்.அப்போ இப்பவும் வேண்டாமா"என்று சிரித்து கொண்டே கேட்க

தேனிசைச்செல்வி என்ற பெயரில் திகைத்து நிற்க"உங்களுக்கு எப்படி தெரியும்"

"நான் உன்னுடைய அப்பா டா.என்ன தான் நீ எங்க கிட்ட இருந்து விலகி இருந்தாலும், உன்னை பத்தி எல்லாமே எங்களுக்கு தெரியும். நீ மட்டும் தான் கிரிமினலா யோசிப்பியா ஏன் என்னால் யோசிக்க முடியாதா"

மகனின் குழப்பத்தை கண்டவர்"ரொம்ப மூளைக்கு வேலை தராதே.உன்னுடைய ஆருயிர் நண்பன் அகத்தியன் தான் எல்லாம் சொன்னான்"

ராம் மனதில் அகத்தியனை திட்ட துவங்கினான்.

அவரே பேச்சை தொடர்ந்தார்"இங்க பாரு ராம். எங்க கூட சேர்த்து இசையை பார்த்தால நீ அவ கிட்ட சண்டை போட்டு, இப்போ அவளை வேண்டாம்னு சொல்லிட்டு வந்து இருக்க அதற்கு ஒருவகையில் நாங்களும் காரணம் தான்.அதனால நாங்க பண்ண தப்பை நாங்களே சரி செய்ய போறோம். நீ இசையை கல்யாணம் பண்ண முழு  மனசா சம்மதிக்கிறோம்"

கலையும்"ஆமாம் கண்ணா.உனக்கு இசை ரொம்ப பொருத்தமானவள்"என்று கூறியவர்.

பலநாட்களாய் மகனிடம் கேட்டும் கிடைக்காத மன்னிப்பு இப்போதும் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் தலையை குனிந்தவாறு"எங்களையும் மன்னித்து விடு பா" என்று மன்னிப்பை கேட்டார்.

கலங்கி நின்ற பெற்றவர்களின் நிலை உணர்ந்து இனியும் தன் கோபத்தை பிடித்து வைக்க மனம் வராமல் இருவரையும் அணைத்து கொண்டான்.

"எங்க கோபத்துல  ஏதாவது பேசி உங்களை கஷ்டப்படுத்தற மாதிரி ஏதும் நடந்தால் என்ன பண்ணுறது அதான் நான் விலகி இருந்தேன்"என்று ராம் சொல்லி இருவரிடமும் மன்னிப்பை வேண்டினான்.

கலைவிழி"இசை கிட்ட சொல்லிடு கண்ணா பாவம் பிள்ளை தவிச்சி போய் இருக்கும்"

"சர்ப்ரைஸா இருக்கட்டும் மா"என்று சிரிக்க

விலகி இருந்தவர்கள் மனம் நிறைய பலகதைகள் பேசி மகிழ்ந்தனர்.

ரொம்ப வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பொலி கேட்டது.

நிம்மதியாக ராம் உறங்க, இசையோ உறக்கம் தொலைத்தாள்.

கவியரசன் "இசை இங்க வா டா" என்று அழைக்க

"சொல்லுங்க பா"

"உன்னை பெண் பார்க்க வெள்ளி கிழமை வராங்க டா.வேறு யாரும் இல்லை என்னுடைய நண்பன் மகன் தான்"

அதிர்ச்சியை வெளியே காட்டாமல் அமைதியாக நின்றாள்.

கவியரசி மகளின் தலை கோதி"என்ன டா மா"என்று கேட்க

மனதை கல்லாக்கி கொண்டு"சரி மா" என்று சொல்லி விட்டு அகன்றாள்.

செல்லும் மகளை கவலையோடு பெற்றவர்கள் பார்த்தனர்.

இசை ராமின் போனுக்கு தொடர்பு கொள்ள அதுவோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.தன்னவனை மனதில் திட்ட தொடங்கினாள்.  

 

அன்பின் கைது  தொடரும்...
carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
23/11/2019 9:15 am  

அன்பால் கைதுசெய் அன்பே - 17

அழகாய் விடிந்தது காலை பொழுது.

இசை மனதில் ஒரு முடிவோடு தான் இருந்தாள். பெண் பார்க்க வரும் அந்த பையனிடம் தனியாக பேசும் போது 'விருப்பமில்லை' என்று சொல்லி விடலாம். பிறகு ராமிடம் பேசணும் என நினைக்க, அவனை பற்றி நினைத்தும் மனம் எண்ணெயில் போட்ட கடுகு போல் பொரிய ஆரம்பித்தது.

நேற்று இரவு ராமுக்கு போன் செய்து பேசும் போது அவள் சொல்லும் அனைத்தையும் பொறுமையாக கேட்டவன். கடைசியில் 'வாழ்த்துக்கள்' என்று சொல்லி கட் செய்து விட்டான்.

இசையின் பொறுமையை கடுமையாக சோதித்தான் அதிவீரராம்.

கருநீல பட்டு புடவை உடுத்தி, பொருத்தமான நகைகள் அணிந்து, தளர பின்னிய கூந்தலில் மல்லிகை சூடி தேவதை போல் வந்த மகளின் நெற்றியில் முத்தமிட்டார் கவியரசி.

"வா டா எல்லோரும் வந்து இருக்காங்க"என்று கூறி அழைத்து சென்றார்.

அமைதியாக அன்னையின் கரம் பற்றி நடக்க, வெளியே வரும் போது நிலாவின் குரல் கேட்டு திகைத்தாள்.

'நிலா எப்படி இங்கே'என்ற குழப்பதோடு நுழைய அங்கு அமர்ந்தவர்களை கண்டவுடன் மின்சாரம் பாய்ந்தது போல் ஸ்தம்பித்து நின்றாள்.

அங்கு ராமின் குடும்பமும், அகத்தியன் என அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

தோழிகளிடம் கண்களால் மன்னிப்பு வேண்ட,அவளின் தோள் பற்றி ஆறுதலாக அணைத்தனர்.

நிலா முகத்தை திருப்பி கொள்ள, இசை ஏக்கமாய் பார்த்தாள்.

ராமை தன் முட்டை கண்களால் முறைக்க, அவனோ கண் சிமிட்டினான்.

அலை பாய்ந்த மனம் ஏனோ ராமை கண்டு அமைதியானது.

ஏதோ நினைவு வர,தன் பெற்றோர் முகம் காண அவர்கள் புன்சிரிப்புடன் நின்று இருந்தனர்.

"அம்மா அப்பா"என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாற

முதன் முதலில் ஒரு குழந்தை பேசும் போது எப்படி திக்கி தடுமாறுமோ அதை போல் நின்ற மகளை அணைத்து கொண்டார் கவியரசி.

கவியரசன் மகளின் தலையை வருடி விட்டு"என்னுடைய உயிர் நண்பன் தான் அமுதன். கொஞ்ச வருஷமா தொடர்பு இல்ல.ஒரு சமயம் மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்தோம் அப்போ தான் உங்க இரண்டு பேர் பிரச்சினை பத்தி சொன்னான்"என்று நிறுத்த

கவியரசி மகளின் கன்னம் பற்றி"இந்த ஆறு மாசமா நீ எப்படி இருந்தனு எங்களுக்கு தெரியாதா"என்று கேட்க

கண்ணீர் வழிய தாயை அணைத்து கொண்டு"சாரி மா"என்று தேம்பினாள்.

கலைவிழி அவர்களின் அருகே வந்து"போதும் டா விடு நல்ல நேரத்தில் எதுக்கு கண் கலங்கிட்டு"என்று சமாதானம் செய்ய

தனக்கு பிடித்த தேன் அழுவதை தாங்க முடியாமல் நிலா குட்டி ஓடி வந்து இசையின் காலை பற்றி கொள்ள, குனிந்து தூக்கியவளின் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.

அதை பொறாமையும், ஏக்கமும் கலந்து ஒரு ஜீவன் பார்த்து கொண்டு இருந்தது.

வேற யாரு நம் அதிவீரராம் தான்...

எல்லோரும் மகிழ்ச்சியாக தட்டை மாற்றி விட்டு திருமண வேலைகளை பற்றி விவாதித்து கொண்டு இருந்தனர்.

அகத்தியன் ராமிடம்"டேய் தங்கச்சி கிட்ட போய் பேசு டா"

"அடேய் உன் தொங்கச்சி என்னை கண்ணாலே எரிக்கிறா இதுல நான் பேசுனா அவ்வளவு தான் போ டா"

"நீயெல்லாம் ஒரு போலிஸ்"என்று திட்ட துவங்க

அதற்குள் நிலா ஓடி வந்து"உங்களை தேன் வர சொன்னா வாங்க"என்று கரம் பற்றி இழுக்க

பரிதாபமாக நண்பனை பார்க்க அவனோ நக்கலாக சிரித்தான்.

'அய்யோ என்ன செய்ய போறானு தெரியலை கடவுளே காப்பாத்து'என்று வேண்ட

ஊரையே காப்பாற்றுபவன் தன்னை காக்க கடவுளிடம் வேண்டினான்.

அவன் பயந்தது போல் அறையில் உக்கிரமாக நின்றாள் அவனின் பிரியமான இசை.

காதல் பார்வை பார்க்காமல் காளி அவதாரத்தில் அவனை கொலை வெறியில் இசை பார்க்க, நிலா ஓடி விட்டாள்.

மெல்ல காலை எடுத்து வைக்க, வேகமாக ஒரு தலையணை அவன் நெஞ்சில் வந்து மோதியது.

திகைத்து விழித்தவனின் சட்டையை பற்றி"டேய் திருடா ,420"என்று சரமாரியாக மொத்த துவங்கினாள்.

"வலிக்குது டா"

"கொஞ்சம் அமைதியா இரு மா"

"ஏய் நான் போலிஸ்காரன் டி"

இப்படி பலவிதமாக அவன் புலம்பியது எதுவும் அவள் செவிகளில் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் அவளே ஓய்ந்து போய் நிறுத்தினாள்.

"போன் பேசும் போது என்ன சொன்ன வாழ்த்துக்களா??நான் அழுதுட்டே பேசுறேன் ஆனா நீ சிரிக்கிறல. அன்னைக்கு பெரிசா சொல்லற உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் அப்படினு இப்போ எதுக்கு வந்த போ"என்று மீசையை பிடித்து இழுத்தாள்.

ராம் எதுவும் பேசாமல் அவள் முகத்தை பார்த்தான்.

கோபத்தில் முகம் சிவக்க கட்டிலில் அமர்ந்து விட,ராம் அவளின் முன் மண்டியிட்டான்.

இசை ஏதோ சொல்ல வாயை திறக்க அதில் ஒன்றை திணித்தான்.

அதில் அவளின் விழிகள் இரண்டும் பெரிதாக விரிந்தது.

அவள் விரும்பும் தேன் மிட்டாயின் சுவையில் எதுவும் பேச தோன்றாது அமர்ந்து இருந்தாள்.பல மாதங்களுக்கு பிறகு கிடைத்த அது அமிர்தம் போல் அல்லவா இனித்தது.

கண் சிமிட்டிய ராமை வியப்பாக பார்க்க" நீ கோபமா இருக்கும் போது உனக்கு இதை தந்தால் சமாதானம் ஆகிடுவலே அதான்"

"அது மத்தவங்களுக்கு தான் உங்களுக்கு இல்ல திருடா"என்று கூறினாள்.

வெளியே முறைத்தாலும் உள்ளுக்குள் ரசிக்கவே செய்தாள்.

தன்னவன் தான் விரும்பிய தேன் மிட்டாயை வாங்கி தரும் போது கோபம் எல்லாம் சிறகு முளைத்து பறந்து விட்டது என தெரிந்தும் அதை வெளி காட்டவில்லை.

"சாரி டா.உன்கிட்ட அப்படி எல்லாம் நான் பேசி இருக்க கூடாது.நான் பண்ணியது தப்பு தான் " என்று மனம் வருந்த

"போதும் அதி விடுங்க. இனிமேல் அதை பத்தி பேச வேண்டாம்"

அவன் முகம் தெளியவில்லை"இருந்தாலும் நான்"என்று இழுக்க

"ஹலோ மிஸ்டர். அதிரடி நான் வேணா நம்ம கல்யாணத்தை ஒரு வருஷத்துக்கு அப்புறம் வைக்க சொல்லறேன்.நீங்க பொறுமையா பீல் பண்ணி முடிங்க"என்று குறும்புடன் சொல்ல

அவளின் குறும்பில் தன் நிலைக்கு வந்தவன்"ஏய் என்னது ஒரு வருஷமா??இரு இரு என்ன சொன்ன அதிரடியா அடிபாவி நில்லு"என்று துரத்த

நிலா குட்டியும் அவர்களோடு ஓட இதை கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.

 

அன்பின் கைது தொடரும்...


Page 2 / 3

Share:

Please Login or Register