திருமணம் முடிந்து, மூன்று மாதங்களை கடந்தும் தனக்கு தனிமையை மட்டுமே துணையாக தரும் தன்னவனை நினைத்து வேதனை அடைந்தாள் மதியழகி.
காதல், கல்யாணம் என்று பல நிகழ்வுகளை தன் கனவுகளின் நாயகன் உடன் கண்டவள்.
எதிர் காலத்தில் அவளின் ஆசைகள் அனைத்தும் நிராசையாக போகும் என்பதை அவள் முன்பே அறிந்து இருக்கவில்லை.
அவளின் திருமணம் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது.
எந்த கேள்வியும் கேட்காமல், சம்மதம் தெரிவித்தாள்.
அதற்கு காரணம் வேழவேந்தனின் முகமே.
மற்றவர்களின் எண்ண ஓட்டத்தில் அது சாதாரண புகைப்படம் தான் ஆனால் அதை ஆழ்ந்த பார்த்தால் மட்டுமே புலப்படும் அவனின் விழிகளில் இருக்கும் வலி.
ஏனோ அந்த கண்கள் ஏதோ ஒன்றை யாசித்து நிற்பது போல் அவளுக்கு தோன்றியது.
அவனுக்கு ஆதரவாக தான் இருக்காலம் என்ற எண்ணத்தில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள,அவனோ யாருடைய ஆதரவும் எனக்கு வேண்டாம் என்பது போல் அவளை தவிக்க விட்டான்.
தன் போக்கில் சிந்தித்து கொண்டு இருந்தவளை தடை செய்தது வேழவேந்தனின் வருகை.
கதவை திறந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
மனைவியின் முகம் தன்னை கண்டவுடன் புத்தம் புது மலராக மலர அதிலும் அந்த மைவிழிகளில் காதலை நிரப்பி கொண்டு பார்ப்பதை கண்டும் காணாதவன் போல், அறைக்கு செல்ல
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
என்ற குரலில் திருவள்ளுவர் அனிச்சை மலரை முகர்ந்து பார்த்தாலே வாடி விடும்.
அதுபோல தன்னை நாடி வரும் உறவுகளை இன்முகத்துடன் வரவேற்கவில்லை என்றாலும் அவர்கள் முகமும் வாடி விடும் என்று கூறினார்.
அதை போல் இங்கு மதியழகியின் முகமும் வாடியது.
மனைவியின் முகமாற்றத்தை உணர்ந்தும் அவன் எதுவும் பேசவில்லை.
சிறிது நேரத்தில்"காபி"என்று அவன் முன் சென்று நின்றாள்.
"ம்ம்ம்" என்றவாறு அதை வாங்கி கொண்டான்.
"ரொம்ப வேலையா"என்று அக்கறையாக கேட்க
"இல்லை எப்போதும் போல தான்" என்ற அவனின் பதிலில் சற்று தைரியம் வர பெற்றவள்.
"வெளியே எங்கேயாவது போகலாமா" என்று ஆவலுடன் கேட்க
அடுத்து அவன் கூறிய பதிலில் அவளுடைய ஆவல் அடங்கி போனது.
"உனக்கு ஆசையாக இருந்தால் நீ மட்டும் போ"என்று சுவரை பார்த்து கூறிவிட
அவனின் பாரா முகம் அவள் மனதில் பாரத்தை ஏற்றியது.
"என் கூட எங்கேயும் வர கூடாதா"என்று ஏக்கம் நிரம்பிய குரலில் வினவ
அதற்கு அவளை அமைதியாக ஒரு பார்வை பார்த்தவன் பதில் கூறாமல் தலையை மட்டும் அசைக்க
என்றுமே அவன் முன் அவள் கண்ணீர் சிந்தியது இல்லை ஏனோ இன்று கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் இருந்து அருவி போல பெருகியது.
அதை கண்டு பதறியவன்.
“மகி”என்றவாறு அருகில் வர
"வேண்டாம்"என்பது போல் கரங்களால் சைகை செய்து விட்டு தன் அறைக்கு ஓடினாள்.
செல்லும் அவளை கண்களில் வலியோடு பார்த்தான் வேழவேந்தன்.
அறைக்கு வந்து மனதில் இருக்கும் பாரம் இறங்கும் வரை கதறி அழுதாள்.
மனதில் அவனுக்காக கட்டிய காதல் கோட்டை தரை மட்டம் ஆகியது போல உணர்ந்தாள்.
எத்தனை முறை தன் காதலை அவனிடம் கூற முயன்றும் கடைசியில் அவளுக்கு தோல்வியே எஞ்சியது.
எதுவும் சாப்பிடாமல் அப்படியே உறங்கி விட,அதை கண்டவன் அவளை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டான்.
காலையில் எழுந்தவுடன் மனைவியிடம் செல்ல
இன்னும் அவள் உறக்கத்தில் இருப்பதை உணர்ந்து சற்று சந்தேகம் வர,நெற்றியில் கை வைத்து பார்க்க காய்ச்சலாக இருந்தது.
"மகி மகி"என்று மெல்ல எழுப்ப
அவளிடம் அசைவே இல்லை அதில் அவன் பயம் ,பதற்றம் இரண்டும் அதிகமானது.
பல முறை அழைத்தும் பலன் இல்லாமல் போக,தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்தான்.
அவன் ஒரு மருத்துவன். வேழவேந்தனின் ஆருயிர் தோழன்.
வீட்டுக்கு வந்த கதிரவனை மனைவியின் அறைக்கு அழைத்து சென்றான்.
அவளை பரிசோதனை செய்து விட்டு " "என்ன டா வேழா காய்ச்சல் அதிகமாக இருக்கு நீ இப்படி அக்கறை இல்லாமல் இருக்க உன்னை என்ன செய்யலாம்"என்று நண்பனை கடிந்து கொள்ள
"சாரி கதிர். கொஞ்சம் வேலை அதான்" என்று பொய் உரைக்க
"வேலை தான் முக்கியமா உனக்கு"
"அப்படி இல்லை டா. இனிமேல் இது மாதிரி நடக்காது நான் பார்த்து கொள்கிறேன்"
"சரி போ.அவங்க எழுந்தவுடன் சாப்பிட ஏதாவது தந்துட்டு அப்புறம் இந்த மாத்திரை எல்லாம் கொடு சரியா"
"சரி டா"என்று அவனை அனுப்பி விட்டு உள்ளே வந்தவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை பரவியது.
மனைவி கண் விழிக்க,காத்து இருந்தான் அவளின் வேந்தன்.
சிறிது நேரத்தில் கண் விழித்தவள், கேட்ட கேள்வியில் முற்றிலும் அதிர்ந்தான்.
"எதுக்கு டாக்டரை வர சொன்னீங்க அப்படியே விட்டு இருந்தால் உங்களுக்கும், பூமிக்கும் பாரம் இல்லாமல் போய் இருப்பேன்"என்று பலவீனமான குரலில் கேட்க
அடுத்த நொடி"மகி"என்று அலறியவாறு அவளை வாரி அணைத்து கொள்ள, அவளுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும் இப்படி இருப்பதே ஒரு சுகம் என்பது போல அவன் அணைப்பை ஏற்று கொண்டாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தி"என்ன வார்த்தை சொல்கிறாய் மகி"என்று வலி நிரம்பிய குரலில் கேட்க
மதியழகி அவன் முகத்தை மட்டுமே பார்த்து கொண்டே இருந்தாள்.
அவளின் அமைதி அவன் அறிந்த ஒன்றே என்பதால்"சரி இப்போது எதுவும் பேச வேண்டாம் நீ முகத்தை கழுவி விட்டு வா சாப்பிடலாம்"என்று கூற
மறு வார்த்தை பேசாமல் எழுந்து சென்றாள்.
அதன் பின் அவளுக்கு தன் கைகளால் உணவை ஊட்டி விட்டு, மாத்திரைகளை தந்து உறங்க வைத்தான்.
தாய் போல தன் தாரத்தை தாங்கினான்.
இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல, மதியழகியின் காய்ச்சலும் சரியாகி விட்டது.
இரவின் தனிமையில் மதியழகி அறைக்கு சென்றவன்.
மனைவியின் அருகில் அமர்ந்து அவள் கரங்களை பற்றி கொண்டு பேச தொடங்கினான்.
"உன்னை விலக்கி வைத்து ரொம்ப கஷ்டத்தை தந்து விட்டேன் நான் செய்தது சரியா?தப்பா? என்று எனக்கு தெரியவில்லை.அதுக்கு காரணம் என்னுடைய பயம் தான்"என்று கூறியவனை புரியாமல் பார்த்தாள்.
"என்ன பயம்" என்று கேட்க
"சொல்கிறேன். நான் பிறந்தவுடனே என்னுடைய அம்மா இறந்து போயிட்டாங்க அதுக்கு காரணம் நான் தான் என்று எல்லோரும் பேச ஆரம்பித்தார்கள்.அம்மா இறந்த பிறகு அப்பாக்கு என்மேல ஒரு வெறுப்பு வந்து விட்டது.என்னை விட்டு விலக தொடங்கினார் அப்புறம் அவருக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணாங்க. சித்தி எப்போதும் என்னை பார்க்கும் போது எல்லாம் ராசி இல்லாதவன், அம்மாவை சாக அடித்து விட்டு பிறந்து இருக்கிறான் என்று கண்ணில் படும் போது எல்லாம் பேசுவாங்க"என்றவன் தன் பேச்சை நிறுத்த
அவனுக்கு ஆறுதல் தரும் வகையில் மதியழகி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அது அவனுக்கு வார்த்தைகளால் தர முடியாத ஆறுதலை தந்தது.
"சித்திக்கு குழந்தை பிறந்தவுடன் அப்பா என்னை சுத்தமா மறந்து போயிட்டார். தனியாக இருக்க பழகி கொண்டேன். தம்பிகள் கூட என்னிடம் பேச மாட்டாங்க .நாள் ஆக ஆக அப்படியே நானும் நம்ப ஆரம்பித்தேன் 'நான் ராசி இல்லாதவன்' என்று இது என்னுடைய மனதில் ஆழமா பதிந்து விட்டது.என்னுடைய கல்யாணம் பற்றி பேச தொடங்கினார்கள் உன்னுடைய போட்டோ பார்த்தவுடனே பிடித்து விட்டது அதுவும் உன்னுடைய மைவிழி கண்களை பார்த்ததும் நான் அப்படியே சரண்டர் ஆகி விட்டேன் தான் சொல்லணும் ஆனால்" என்று இழுத்தவன் மனைவியின் முகம் காண
அவனின் தோளில் முகத்தை புதைத்து இருந்தவள் கண்களால் 'என்ன'என்று வினவினாள்.
"நாங்க பெண் பார்க்க வருவதாக சொன்ன போது உனக்கு காய்ச்சல்னு சொன்னாங்க. உடனே எங்க வீட்டில் என்னுடைய ராசி தான் காரணம் என்று ரொம்ப பேச, எனக்கும் பயம் வந்து விட்டது என்னால் தான் உனக்கு இப்படி ஆனது என்று நினைத்து , நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லிட்டேன் ஆனால் உன்னிடம் சொல்லாத என் காதலை விதி தெரிந்து கொண்டு உன்னை எனக்கே திரும்ப தந்து விட்டது" என்று அவன் பேச்சை முடிக்க
"அய்யோ உங்க பயத்தை என்ன சொல்வது?எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை. அது நான் வண்டி ஓட்டி பார்க்கும் போது கீழே விழுந்து விட்டேன் கொஞ்சம் அடி வேற அதை எப்படி சொல்லுறதுனு தான் இப்படி சொன்னாங்க. எனக்கும் உங்க போட்டோவை பார்த்தும் பிடித்து விட்டது. எப்படி சொல்ல முதல் பார்வையிலே என் மனதில் நுழைந்து விட்டீர்கள். ஆனால் அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டு வேண்டாம்னு சொல்ல எப்படியோ எங்க வீட்டில் பேச சொல்லி கல்யாணத்துக்கு ஓகே வாங்கினேன்.எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா" என்று கூற
"சாரி டா என்மீது அப்போதே உனக்கு காதல் வந்து இருக்கும் என்று எனக்கு தெரியலை ஆனாலும் நீ கல்யாணத்துக்கு பிறகும் சந்தோஷமா இல்லையே. எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய தேவை இல்லாத பயம் தான்" என்று வருந்தினான் வேழவேந்தன்.
"விடுங்க வேந்தா.உங்க மேல தப்பு இல்லை சின்ன வயசில் உங்களை எல்லாரும் அப்படியே சொல்லும் போது அதுவே உங்க மனதில் ஆழமா பதிந்து விட்டது. நீங்க என்கிட்ட முன்பே சொல்லி இருக்கலாம்" என்று குறையாக கூற
"எனக்கு குழப்பம் வேறு நீ எப்படி எடுத்து கொள்வாயோ என்று அதான் சொல்லவில்லை"
சில நொடிகள் மெளனமே மொழியாக ஆட்சி செய்தது.
பின் வேழவேந்தன்"எதுக்கு மகி அப்படி பேசினாய்" என்று மறுபடியும் வலியோடு கேட்க
அன்று பேசிய அவளின் வார்த்தைகளின் வீரியத்தை இன்று உணர்ந்தவள்.
"சாரி வேந்தா ஏதோ கோபத்தில் பேசி விட்டேன்"என்று மன்னிப்பை வேண்டினாள்.
"பரவாயில்லை மகி விடு இனிமேல் பேசும் போது கவனமாக பேசு"என்று அறிவுரை கூற
"அப்போ காலை வரைக்கும் பேச தான் போறோமா"என்று சோகமான குரலில் கேட்க
அவளின் குறும்பை உணர்ந்தவன்.
"ஆமா பேச போறோம் அதுவும் சத்தமில்லாத காதல் பேச்சுகளை"என்று கண் சிமிட்டி விட்டு அணைத்து கொண்டான் அவளை ஆளும் வேந்தனாக..
ராசி இல்லாதவன் என்று விலகி இருந்தவன் வாழ்வில் ரசிக்கும்படியாக சில நல்ல நிகழ்வுகள் காதலோடு அவர்கள் வாழ்வில் அரங்கேற வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.
முற்றும்....
நடப்பது அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனிடம் இருப்பதில் தவறு இல்லை.
சில நேரங்களில் எதிர்மறையாக நடந்தாலும் ஏற்று கொண்டு அதை நேர்மறையாக மாற்ற முயல வேண்டும்.
நன்றி....
Super dear
நல்லாதே நினை நல்லதே நடக்கும்..
அன்புடன் ,
ரம்யா அனாமிகா