Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

செய்வதை துணிந்து செய்  

   RSS

0
Topic starter

திருச்சி டூ ஈரோடு அரசு பேருந்து... திருச்சியில் இருந்து நிம்மதியாய் தூங்கியவாறே நாமக்கல் வந்தாயிற்று ... டிரைவர் இருக்கையின் பின் மூன்றாவது இருக்கையில் நான். நாமக்கலில் ஒரு இருபது வயதுகூட நிரம்பியிராத பெண் கையில் ஒரு வயது பெண்குழந்தை இரண்டு ஆண்களுடன் ஏறினாள். ஒருவன் அவள் கணவன். மற்றொருவன் அவள் தகப்பன். ஏறும் போதே இருவரும் தள்ளாடியபடியே தான் ஏறினர்.

அந்த பெண் தன் கணவனை பிடித்து அமரவைக்க அவனோ ரொம்ப மோசமான கெட்டவார்த்தைகளை உபயோகித்தபடியே அமர்ந்தான். பேருந்து கிளம்ப சற்று நேரமிருக்க அதற்குள்ளாகவே என் பொறுமை சிறிது சிறிதாய் போய் கொண்டிருக்கிறது.

அந்த பெண்ணோ அவனையும் சமாளிக்க முடியாமல், அழும் குழந்தையையும் சமாளிக்க முடியாமல் அலைமோதிக் கொண்டிருக்கிறாள். இவன் பேசிய வார்த்தைகளை கேட்டு டிரைவர் அண்ணாவுக்கு செம கோவம் வர "இறங்குடா மொதல்ல பரதேசி..... நீதான் பெரிய குடிகாரனா.... சும்மா வார்த்தையா பேசுற..... ஆளையும் அவனையும் பாரு.... குழந்தையை வெச்சிட்டு ஒரு பொம்பளை புள்ளைய கூட்டிட்டு வர்ற அறிவில்ல..." என்று சகட்டு மேனிக்கு கத்த

இவனும் பதிலுக்கு எகிற ஆரம்பித்துவிட்டான். அந்த பெண் கெஞ்சுகிறாள். கண்டக்டர் அண்ணாவோ உனக்காக பார்க்கிறேன்மா பேசாம உட்காரச் சொல்லு அவனை இல்ல வழியில ஸ்டேசன்ல்ல எறக்கி விட்டுட்டுவேன் என்றவாறே அவனுங்க ரெண்டு பேரையும் மிரட்ட

அப்பெண்ணின் தகப்பனோ (அறிவு கெட்ட முட்டாபய) சரிங்க சார் .... சரிங்க சார்.... பேசலை சார் என்று அதையே திருப்பி திருப்பி பேசுறான். இப்படி ஒரு தகப்பனுக்கு பிறந்ததாலேயே அப்பெண்ணுக்கு இப்படி ஒரு கணவன். இதில் ஹைலைட்டே மாமனாரும் மருமகனும் ஒன்றாய் சேர்ந்து குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

அப்பெண் அழுகிறாள். என்னால் இதையெல்லாம் பார்க்கவே முடியவில்லை. என் பெண்ணை விட சின்னவளாக இருக்கிறாள் அவள் உடையிலேயே அவளின் குடும்ப வறுமை தெரிகிறது. ச்சே என்ன ஆண்மகன்கள் இவனுங்க என்று அங்கேயே அவனுங்களை வெட்டி வீழ்த்தும் ஆத்திரம் எனக்கு.

சிறுது தூரத்திலேயே அவனுங்க சேட்டை அதிகமாக டிரைவர் அண்ணா வேலக்கவுண்டன்பட்டி காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தி விட்டார். போலீஸ்காரர் அவனுங்க ரெண்டு பேரையும் இறக்கி மிரட்டிக் கொண்டிருக்க அப்பெண்ணோ சார்... சார்.... விட்ருங்க என்று கெஞ்சி அழுகிறாள். அதற்குள் பஸ்ஸிற்குள் ஆளாளுக்கு பேசுகின்றனர்.

ஒருவழியாய் மிரட்டி பஸ்ஸில் ஏற்றி விட என் இருக்கைக்கு முன் இருக்கையில் அமரவைத்தனர். உட்கார்ந்த கணம் முதலாய் அவள் கணவன் திமிரிக்கொண்டிருக்க அவள் அடக்க முயற்சிக்க அங்கேயே அப்பெண்ணை யாருக்கும் தெரியாதென சத்தமில்லாமல் அடிக்கிறான். டிரைவர் அண்ணாவோ டென்சனுடன் வண்டி ஓட்டிக் கொண்டே பார்க்கிறார்.அவன் மேலும் மேலும் அவளை அடிக்க

என் பொறுமை எல்லை மீறிவிட்டது. ஆத்திரம் தாங்காமல் சகட்டு மேனிக்கு அவனை திட்ட ஆரம்பித்துவிட்டேன். நீயெல்லாம் ஒரு மனுசனாடா பச்சபுள்ளையோட இந்நேரத்துக்கு உன்னை நம்பி வந்தவளை சொல்லனும். அடி செருப்பால மூடிக்கிட்டு உக்காரு இல்ல மூஞ்சியை பேத்துடுவேன். பொம்பளை அடிக்க மாட்டேன்னு நினைக்காத .... என கத்த

"அவனோ எம்பொண்டாட்டி நா அடிக்கிற அத கேக்க நீ யாரு ..." என சவுண்டு விட அப்பெண் மீண்டும் அவனுக்காய் என்னிடம் மன்றாடுகிறாள்.

"அக்காக்கா விடுங்கக்கா......" என்று

"இவனை நம்பி வந்த உன்னை சொல்லனும் ஸ்டேசன்லயே விட்டுட்டு காலைல வந்திருக்கட்டும்ன்னு விடாம அவனுங்களை கூட்டிட்டு வர்ற ..." என்று ஆதங்கத்தோடு அமர

அவனுங்க அடங்குகிற மாதிரி தெரியவில்லை. அதற்குள் திருச்செங்கோடு வந்துவிட பஸ் நின்றது. சில நிமிடங்களில் பின்னால் சப்தம் அப்பெண்ணின் தகப்பன் பின்னால் அமர்ந்திருந்தவன் என்ன செய்தானோ கண்டக்டர் அவனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்.

சப்தம் கேட்டு டிரைவரும் எழுந்து செல்ல பஸ்ஸில் களேபரம். அந்தாளை இறக்கிவிட்டு பஸ்ஸை எடுக்கச் சொல்ல அந்த பெண்ணோ பரிதவிக்கிறாள். அண்ணா பஸ்ஸுக்காவது காசு குடுக்கிறேன் என்று படிகட்டின் அருகே நின்றவாறு கேண்டவளை கண்ணிமைக்கும் நேரத்தில் எட்டி உதைத்து விட்டான் அந்த பரதேசி . குழந்தையோடு பஸ்ஸில் இருந்து விழுந்து விட்டாள் அப்பெண். அலறித்துடிக்கிறாள். விழுந்த பெண்ணை கீழே இறந்துவர்கள் தூக்க என் ஆத்திரம் எல்லை மீற அவனை சட்டையை பிடித்து பளார் பளாரென அடித்து சட்டையை பற்றி கீழே தள்ளி விட்டேன். அதற்குள் டிரைவர் அண்ணாவும் மற்றவர்களும் அவனை நையப்புடைக்க அந்த பெண்ணோ நிற்க முடியாமல் அழுகிறாள். நல்லவேளை பலமாய் காயமெதுவும் இல்லை. விழுந்ததில் கால் பிசகிவிட்டதென்று நினைக்கிறேன். ஆனால் எலும்பு முறிவல்ல....

அதற்குள் போலீஸ் வந்துவிட அவனை விட்டுவிட்டு அருகே இருந்த அவள் ஊருக்கு அப்பெண்ணை ஆட்டோ ஏற்றிவிட்டு அனுப்பிவிட்டு பஸ் ஏறினேன்.ஆட்டோவுக்கு பணம் கொடுக்க...அதை மறுத்தவர் " பக்கத்துல தான்ம்மா என்வீடும் நான் விட்டுட்டுறேன்.... என்று கூற அந்த பணத்தை அப்பெண்ணின் கையில் திணித்து விட்டு குழந்தைக்கு ஏதாச்சும் வாங்கிக் கொடு என்றுவிட்டு பஸ்ஸில் ஏறி விட்டேன்.
கனத்துக் கிடக்கிறது இதயம். இந்த பாழாய் போன குடியால் இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கை சீரழியுமோ..... 😥😥😥😥😥😥😥😥‌ எத்தனை பெண்களின் வாழ்க்கை இப்படி இருட்டிலேயே இருக்குமோ....

ஒன்று மட்டும் புரிந்தது. அப்பெண்ணிற்கு. போதிய கல்வி அறிவு இல்லை. அது அவளுக்கு கொடுக்கப்படவில்லை. கொஞ்சமேனும் கல்வியறிவு இருந்திருந்தால் தன் சுயத்தோடு அவளுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

2 Answers
0

கலங்க வைத்து விட்டாய் தோழி மனம் வலித்தது இந்த பதிவினை படித்து. 😢😢😢😢உண்மை 100% உண்மை பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும்.. அருமையான பதிவு. இப்படி பட்ட நிகழ்வுகளை  அவ்வப்பொழுது பதிவிடுங்கள் 💪💪

அன்புடன்
இந்திரா செல்வம்0

Ss..very true sis..  Antha ponnuku thevaiyana padipu arivu kammiya irukarthu tha idhuku reason.. Ponnunga suyama yaraiyum nambi vazhama iruka kathukanum..athuku education romba important...manasuku romba kashtama iruku.. 😢😢
Share: