Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

கருவேலங்காட்டு மனிதர்கள் - Tamil Novel  

  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 613
20/11/2020 4:31 pm  

கருவேலங்காட்டு மனிதர்கள்

 

This topic was modified 1 week ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 25
17/11/2020 3:10 pm  

கருவேலங்காட்டு மனிதர்கள்

கருவேலங்காட்டு மனிதர்கள் கதை 1984ல் பயணிக்கிறது. கல்யாண கனவுகளை சுமந்து கொண்டு புகுந்த வீடு வரும் குறிஞ்சி தேவிக்கு அங்கு இருக்கும் பேர் அதிர்ச்சி எல்லேந்தி. எல்லேந்தி வீரன் தான் ஆனாலும் முரடன், யோசிக்க தெரியாதவன். குறிஞ்சி அவனுக்கு வாக்கப்பட்டு எப்படி காலத்த கடத்துவா.

சிலம்பன் புத்திசாலி அவன் கிரகம் அவனுக்கு கல்யாணம் நடக்குமா, அழகி அன்பழகி வாக்கப்பட்டு போனதுமே தாலி அறுந்து வீடு திரும்பிட்டா அவ கதைய எப்படி சொல்றது அத்தனை கஷ்டம் படுறா.

சூழ்ச்சியால் உடையும் குடும்பம். சூழ்ச்சிக்கு  எத்தனை உயிர்கள் பலியாக போகிறதோ.

சில மனிதர்களை சுற்றி நடக்கும் கதை தான் கருவேலங்காட்டு மனிதர்கள். என் கதைக்கு இது ஒரு மைல் கல். சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறேன், ஒவ்வொரு அத்தியாத்தையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். என்னோட சேர்ந்து பயணியுங்கள். கருவேலங்காட்டு மனிதர்களாக கொஞ்ச காலம் நாமும் வாழ்வோம்.

அத்தியாயம் 1

கல்யாண வைபோகமே

வைகறை பொழுது  பஞ்சு மூட்டையை கொட்டி கைகளால் கிளறிவிட்டது போல மேகங்கள் சிந்தி சிதறி கிடக்கின்றன. அடி வான ரேகைகள் மருதாணி பூசியது போல சிவக்கின்றன. சூரியன் மெல்ல மெல்ல பிரவேசித்து கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் பணியை தொடங்கின. அது ஐப்பசி மாத காலம் நேற்று வரை மழைபெய்து இன்று வெயில் அடிக்க சுருண்டு கிடந்த கிழவிகள் குளிர்காய தொடங்கியது. சொத சொதத்து கிடந்த வாசலை கூட்டி பெறுக்கி சாணி மொழுகி கொண்டிருந்தனர் பெண்கள்.

டீ கடையில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. குளிர் தணிய இதமான டீயை ருசித்து கதையை பேசிக்கொண்டிருந்தனர் சில ஆண்கள்.

கருவேலங்காடு
ஊரின் பெயர் பலகை மஞ்சள் நிறம் உறிந்து க எழுத்தின் கருப்பு நிறம் உதிர்ந்து ருவேலங்காடு அன்போடு அழைக்கிறது என்றவாறு ஒற்றை கால் உடைந்து தொங்கி கொண்டிருந்தது.
பெயர்பலகையை கடந்த போது ஒற்றை அடிப்பாதை ஒன்று நீண்டு கொண்டிருந்தது. இரண்டு பக்கங்களும் படர்ந்து அடைத்து கிடந்த சீமை கருவேல மரங்களும்  கொடிகளும் காட்டு செடிகளும் பின்னி பினைந்து கிடந்தன. அடித்து கொட்டிய மழையில் ஒத்தை அடி பாதை சேறும் சகதியுமாக கிடந்தது. அங்கங்கு குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி நின்றது.

‘ஜலக்‘ தண்ணீரை தழும்பிக்கொண்டு இரட்டை மாடுகள் இணைத்த கட்டை வண்டி ஒன்று ஒற்றைஅடி பாதையில் வந்தது. ஜல்..ஜல்.. மணி சத்தம் கேட்க காலைக்கடனுக்கு ஒதுங்கிய சில பெண்கள் விருட்டென்று எழுந்து மரத்தின் பின்னால் பதுங்கி கொண்டனர்.

டூர்..டூர்..ஹை..ஹை…டிர்..டிர்.. சத்தம் கொடுத்து மாடுகளை முன்னேற்றி கொண்டிருந்தான் கந்தப்பன். மேல் பனியனும் தலை முண்டாசும் கைலியும் முறுக்கபட்ட மீசையும் ஆஜானுபாகான உடலும் அதட்டல் குரலுமாக கந்தப்பன் கம்பீரமாகவே இருந்தான்.

அவனுக்கு பின்னால் இன்னும் இரண்டு தலைகள் தென்பட்டது ஒரு ஆண்தலை இன்னொன்று பெண்தலை. குண்டு குழிகளை ஆராய்ந்து வண்டியை பாந்தமாக செலுத்திக்கொண்டிருந்தான் கந்தப்பன். அவனையும் மீறி கட்டை வண்டி குலுங்கியது. குலுங்களில் மேலே எழும்பி இருக்கைக்கு வந்தாள் குறிஞ்சித்தேவி, அவளுக்கு பின்னால் கால்களை வெளியே தொங்கவிட்டு ஆட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தபடியே வந்தான் எல்லேந்தி.

தலைபாகை சுருட்டலில் கிடந்த ஒற்றை பீடியை தேடிபிடித்து உதடுக்கு கொடுத்து விட்டு சட்டை பாக்கொட்டில் தீப்பெட்டியை துலாவினான். தன் மேனியெங்கும் தடவி பார்த்தான், மடிப்பு களையாத பட்டு வேட்டியும் சட்டையும் அவன் கைகள் பட்டு கசங்கி கொண்டு இருந்தது. மிளிர்ந்த பட்டு வேட்டியில்  ஒட்டி கிடந்த மஞ்சளும், செந்நிறத்தில் கிடந்த கரை வெற்றிலை போட்டு துப்பியது போல திட்டு திட்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது. கரு கருவென்ற மீசையை அடிக்கடி தடவி முறுக்கி கொண்டான். கருத்து போன தேகம் வழியே அதிகாலை வெயில் பட்டு வேர்வை துளிகள் மினுக்கி கொண்டு இருந்தன. தடித்த தோள்களும் படர்ந்த மார்பும் அவன் அழகை காட்டியது. மெல்லமாய் தன் வேட்டியை விலக்கி விட்டு டவுசர் பாக்கெட்டில் துலாவினான்.  இதையெல்லாம் ஓர கண்களால் பார்த்துக்கொண்டிருந்தாள் குறிஞ்சி. தேக்கு கட்டை போல இருந்த அவன் தொடையை பார்த்தவள் முனுக்கென்று சிரித்துக்கொண்டு பார்வையை திருப்பிக்கொண்டாள். ஒரு வழியாக தீப்பெட்டியை எடுத்து பீடியை பற்றவைத்து புகைத்தான். கட்டை வண்டி இப்போது பெரும் பல்லத்தை தொட்டு குலுங்கியது, குறிஞ்சி ‘ஆ‘ என்ற சின்ன சத்தத்தோடு குலுங்கினாள்.

“அம்மாடி, கொஞ்சம் நிதானிச்சி உட்கார்ந்துக்க அது வெறும் மூங்கிபிளாச்சி தான் கீழ விழுந்துடாத“
கந்தப்பனின் எச்சரிக்கையை கேட்டு கொஞ்சம் முன் நகர்ந்து உட்கார்ந்தாள்.

அவள் நகர்ந்த போது தலையில் வைத்திருந்த மல்லியும் கனகாம்பரமும் முன் தோளுக்கு வந்தது. வழித்து சீவிய தலையில் உச்சியில் சொருகி கிடந்த மல்லி கனகாம்பரமும் அவளை தீண்டிக்கொண்டிருக்க காதில் கிடந்த கல்வைத்த குடை ஜிமிக்கி அவளை உரசிக்கொண்டிருந்தது. கழுத்து நிரம்ப கிடந்த மஞ்சள் கயிறும் தாலிக்கொடியும் அவளை மெழுக்கேற்றியது. தாலிகயிறு பின்னிகிடந்த இரட்டைவட சங்கிலி அவள் மார்புகூட்டை அளந்து கொண்டிருந்தது. கூரை புடவை அந்த மாநிற மேனியை தழுவி கதைப்படித்தது. அகண்ட விழியை அங்கும் இங்குமாய் உருட்டிக்கொண்டே இருந்தாள். நேர்வகுடு படர் நேற்றி கருஞ்சாந்து பொட்டு சுருள் கூந்தல் ஒற்றை பூ மூக்குத்தி அவள் பெண்ணா பதுமையா என்றே தோன்ற செய்தது.

“அம்மாடி ஏதும் படிச்சிருக்கியா“ என்றான் கந்தப்பன்.

“ஆறாம் வகுப்பு..“

“போதும்..இந்த காலத்துல இது படிச்சாலே பொழைச்சிக்கலாம்..எல்லேந்தி மூனாவகுப்பு தான் அதுக்கு மேல படிப்பு ஏறல ஆனா கெட்டிகாரன். ஒரு தொழிலை புடிச்சிக்கிட்டான் விவசாயம் பண்ணுவான் அது இல்லாத நேரத்துல ரொட்டி எடுத்து கடகடைக்கு வியாபாரம் பண்ணுவான் ஏதாவது ஒன்னு செஞ்சிகிட்டே இருப்பான்.“

“ம்..ம்..“ சின்னதாய் முனங்கிவிட்டு மெல்லமாய் அவனை பார்த்தாள் முழுபீடி இப்போது துண்டு பீடியானது.

“ஏன்டா மாப்பிளை இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணத்த பண்ணிக்கிட்டு வந்து நிக்கிற.“

“ஆமாம் நான் கேட்டேன் அங்குட்டு கிடக்குறாலே என்ன பெத்தவ அவ தான் என்னென்னவோ சொல்லி கல்யாணத்த முடிச்சிப்புட்டா..“

“பரவாயில்லடா மேலூர் பொண்ணு கனகப்பன் வளர்ப்பு வேற புடிச்சாலும் புளியங்கொம்பாதேன் புடிச்சிருக்க..“
பீடி புகை தொண்டையை கவ்வ கனைத்துவிட்டு  காறி உமிழ்ந்தான் எல்லேந்தி.

“ரொம்ப கோபக்காரவளோ..பயமா இருக்கே அத்தை சொன்னாலே கொஞ்சம் கோபப்படுவாம்னு.. பார்க்க மதுரை வீரன் கணக்கால்ல கோபப்படுவாரு போல..“ உள்ளுக்குள்ளேயே குறிஞ்சி மென்னுகொண்டாள்.

அரசு பஸ்சு ஒன்று வந்து கருவேலங்காட்டு ஊர் சாலையில் நின்றது. சிறு பொம்பளை ஆம்பளை கூட்டம் பேருந்தை விட்டு இறங்கி கருவேலங்காடு ஒத்தை அடி பாதையில் நடக்க ஆரம்பித்தது.

“ஏன்டி குருவாயி நம்ம ஊருல பொண்ணு இல்லன்னா மேலூருல போய் புடிச்ச“ என்றாள் ஒத்தை அடி பாதையில் காலைகடனுக்கு ஒதுங்க நின்ற ஒருத்தி.

“ஆமான்டி உங்க பொண்ணுவள தான் உப்பு பானையில ஒழிச்சி வச்சியலே அப்பறம் எங்குட்டு நான் என் மவனுக்கு கட்ட. இப்ப பாருங்கடி சீமையில உள்ள கணக்கா என் மருமவளே புடிச்சி வந்திருக்கேன்.“

“ஆமாம்..ஆமாம் உன்கிட்டயும் உன் மொவன்கிட்டயும் அது என்ன பாடு படபோவுதோ போ..“ என்று உள்ளுக்குள்ளயே முனங்கி கொண்டாள் கடனுக்கு வந்தவள்.

“என்னடி முணங்குற..“

“ஒன்னும் இல்ல போ ஆத்தா நீ..நீ போறத்துக்குள்ள மருமவ வீடு போயிட போறா.“

“என் மொவளுவோ இருக்காலுவோடி…“ என்று விசுக்கி விசுக்கி நடையை கூட்டினாள்.

“குருவாயி சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிட்டியே கேட்டியா பார்த்தியா“ என்றாள் பக்கத்தில் தகரபெட்டி தலையில் வைத்து நடந்த இன்னொருத்தி.

“அயித்த அது நம்ம கனகப்பன் மாமா வளர்ப்பு நிறையா தான் இருக்கும். குறிஞ்சிக்கு கூட பிறந்த பொறப்பு இரண்டு அண்ணன் இரண்டு அக்கா பக்கத்து மேலூரு தான் சொந்த ஊரு அயித்த. ஆயி செங்கம் அப்பன் ராசாங்கம் ரெண்டும் விவரம் இல்லா ரெண்டாங்கட்டி அண்ணன்னுவோ அவன் அவன் கல்யாணத்தை பண்ணிக்கிட்டான். கனகப்பன் தான் அந்த குடும்பத்துக்கு நல்லது கெட்டது எல்லாமே பண்ணுறது, செங்கத்தோட அப்பா. ஒத்த மவன் மூளைகாய்ச்சல்ல செத்து போவ அதுல இருந்து மவ செங்கம் குடும்பம் தான் எல்லாமே பெரியவருக்கு. பெரியவரு கொஞ்சம் நிலபோககாரு, போட்டடிச்சி இரண்டு புள்ளைய கரையேத்திட்டாரு இது தான் கடைசி. கனகப்பனோட தூரத்து சொந்தம்ங்கிற முறையில போய் குறிஞ்சிய  பொண்ணுக்கேட்டப்போ பெரியவரு வேண்டவே வேண்டான்னு மறுத்துட்டாரு, நான் விடுற மாதிரி இல்ல நடையா நடந்தேன்.

“குருவாயி இந்த கடைசி கழுதை செல்லமா வளர்ந்தது. உன் குடும்பமோ ரொம்ப பெருசு இரண்ட நாத்தனா, கொழுந்தன் மாமன்,மாமின்னு எப்படி சமாளிப்பா அது ஒத்து வராது குருவாயி.“

“என்ன மாமா இப்ப மட்டும் அவ சின்ன குடும்பத்துலயா இருக்கா. உன் மவன் மட்டும் உயிரோட இருந்திருந்தா நான் தானே கட்டிருப்பேன். எனக்கு குடுப்பன இல்ல அது போயி சேந்துட்டு.“ மூக்கை முந்தானையில் மொழுகி கொண்டு.
''அது அது கல்யாணம் ஆனா போயிட போவுது. அப்பறம் இவ தானே ராணி சொந்தத்துல கொடுத்தா தானே மாமா எதாவதுன்னா நீ கேட்கலாம் பார்க்கலாம். ஏன் மொவனுக்கும் என்ன குறைச்ச ஒரு மா நிலம் கிடக்கு மூனு மாடு நிக்குது நாலஞ்சி ஆடு, வீடு வேலைக்கு வேலை விவசாயத்துக்கு விவசாயம் அவ சொகுசா தான் இருப்பா ஒத்துக்க மாமா..“

“அதுவும் சரிதான் இரண்ட தான் பிரத்தில கொடுத்து மூக்கொழுக வச்சிட்டேன் இதையாவது தெரிஞ்ச கையில புடிச்சி கொடுக்கலாம். சரி குருவாயி நான் இரண்டு கழுதைக்கும் என்ன செஞ்சேனோ அதை நிறைவா இதுக்கும் செயிறேன். ஏழு பவுனு போட்டு மூவாயிரம் ரொக்கம் தரேன் பண்ட பாத்திரமல்லாம் வாங்கி வக்கிறேன்.“

போராடி  ஒரு வழியா ஒத்துக்க வச்சிட்டனே.

“அப்பறம் என்னடி சொல்லி பேசி கல்யாணத்தை பண்ண வேண்டியது தானே. நீயும் உன் கொழுந்தன் குடும்பமும் கமுக்கமா போய் முடிச்சிட்டு வந்துட்டிங்க.“

“அயித்த அங்க தானே பிரச்சனையே..“

 


ReplyQuoteKiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 25
20/11/2020 9:04 am  

அத்தியாயம் 2

 

திரி எரிந்த விளக்கு

 

"இந்த கருவக்காட்டுக்குள்ள இன்னும் எத்தனை காலம் கிடக்குறதோ எழவு" 

 

விரிசல் பட்டு கிடந்த மண் திண்ணையில் சாய்ந்த படியே பக்கத்து வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கிடந்த மாரியிடம் கதை வைத்தான் இருளி.

 

இருளி கட்டையான உருவம், வயிறொட்டிய உடலும், நரை ஏறிய தலை, காய்த்து இருந்த கைவிரல் உழைத்து உழைத்து ஓடாய் உடல் தேய்ந்து கருத்து கிடந்தது. இருளியின் மகள் தான் அன்பழகி, இளம் வயதுகாரி இடுப்புக்கு கீழே நெளிந்துக்கொண்டு கிடந்தது கூந்தல். அவ ஆத்தா நல்ல சிகப்பு அத ஒத்து போய் நல்ல சிகப்பா இருந்தா அன்பழகி குச்சியான உடல்வாகு, நீண்ட முகம் என களையாக தான் இருந்தாள். இருந்து என்ன பண்றது கல்யாணமான அன்னைக்கே புருஷன்காரன் கள்ளசாரயத்தை குடிச்சிபுட்டு தாலி கட்டுன கையோட கீழ சரிஞ்சி செத்து போயிட்டான்.

பொறந்த வீட்ட விட்டு எல்லாம் புகுந்த வீட்டுக்கு போவாங்க இவ பொறந்த வீட்டுலயே தங்கிட்டா. அவ அண்ணன் ஒருத்தன் கிடக்கான் சாத்தன், எதுக்குமே லாயக்கு இல்லாதவன். குடிகாரபய என்நேரமும் பாட்டிலும் கையுமா தான் திரிவான், தடித்த உடம்பும், தாடியும், குடித்து சிவந்த கோவைபழ கண்களுமாய் தெறிப்பு விட்டு கிடந்த மண் திண்ணையில் விழுந்து கிடந்தான். திண்ணை, கூடம். கூடமும் இரண்டு ஆளுக்கு மேல் இருக்க முடியாது. பிய்ந்து தொங்கி கிடந்த கீற்றுகள், வீட்டின் கூடத்தில் நைந்த பழைய துணியாக கிடந்தாள் சூலி. அன்பழகியையும், சடையனையும் பெத்த மகராசி.

 

அன்பழகி வாழ்க்கை திரி எரிஞ்ச விளக்கா  போயிட்டேன்னு கவலைப்பட்டு கவலைபட்டே ஆத்தா சூலி படுத்த படுக்கையா கிடக்கா. இப்போ குடும்பத்த பார்க்குறவ அன்பழகி தான். முன்ன மாதிரி இப்போ சலவை தொழில் இல்ல, அக்கம்  பக்கத்துல இருந்த குடும்பத்துல உள்ள அடுத்த தலைமுறை மக்கள் பலரு வெளியூருக்கு வேலைக்கு போயிட்டாங்க. இருளிக்கும் முன்ன மாதிரி கண்ணு தெரியிறது இல்ல கண்ணுல பூ விழுந்து பல வருஷம் ஆகிடுச்சு தடவி தடவி போட்டடிச்சி ஏதோ ரெண்டு மூனு குடும்பத்துக்கு துணி வெளுத்து போய் கொடுப்பாரு. அவங்க கொடுக்குற பத்து இருவத வச்சி காலத்தை ஓட்டிகிட்டு கிடக்குறாரு. சாத்தனுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது காலையிலேருந்து குடிப்பான் என்நேரமும் போதையிலயே தான் கிடப்பான். அன்பழகி வயவேலைக்கு போகும், துணி வெளுக்கும், அஞ்சாரு ஆடு நிக்குது அத மேய்க்கும், சோறாக்கும், ஆத்தாவ பார்த்துக்குடும்.

 

"இருளி நம்ம பொறப்பு அப்புடி...கீழ் சாதிக்கும் கீழ பொறந்தா படனும்தான்"

வெற்றிலை வாயில் வைத்தே கோதப்பி பொழிச் என்று துப்பினான் மாரி.

 

"நம்ம பக்கம் கிடந்தவைங்க பூரா பொழப்பு தேடி போயிட்டாங்க.. நம்ம பத்து குடும்பம் தான் இங்குனயே கிடக்குறோம். மெட்ராஸ் பாக்க போயிடலாம்"

 

"போயி...அங்கயும் நம்ம பொழப்பு கோவணத்துக்கு அலைஞ்ச கதையால கிடக்கும்.."

 

இருவரையும் இடைமறித்தாள் அன்பழகி.

 

"த….. நான் தண்ணீ எடுக்க போறேன்"

 

"போபுள்ள சூதனமா"

 

தண்ணீ எடுக்க குடத்த ரெண்டு எடுத்துக்கிட்டு கிணத்த பார்க்க நடந்தா அன்பழகி, எல்லாரும் தண்ணீ எடுக்க ஊரு கிணறுக்கு தான் வரனும். வதக்கு வதக்குன்னு மழை பெஞ்சிகிடந்த அந்த சேத்துக்குள்ள நஞ்சி கிடந்த புடவைய அள்ளி சொருகிகிட்டு வந்தா. பாதைநெடுக்க கருவமுள்ளு வேற குத்தி கிளிச்சிகிட்டு இருந்தது. நஞ்சி கிடந்த புடவை மேல என்ன தான் ஆசையோ அந்த கருவமுள்ளுக்கு கிழிஞ்சி கிடந்த புடவைய இன்னும் கிழிச்சி போட்டது. அங்குட்டு இங்குட்டு இழுத்து சரிசெஞ்சிகிட்டு கிணத்த பார்க்க நடந்தா. வடக்கி தெர கடந்து தான் ஊரு கிணத்துக்கு போகனும் குடத்த தூக்கி முகத்த மறைச்சி பதுங்கி பதுங்கி போனா. யாரு கண்ணுலயும் பட்டுட கூடதேன்னு பயந்து நடந்தா சேறு ஏறி போய் கிடந்த காலுல திட்டு திட்டா சிவப்பு குருதி ஒலுகி கிடந்தது. 

 

"கீழ் சாதிக்கே மதிப்பு மருவாத இல்ல நம்ம அதுக்கு கீழ கிடக்கோம் எத எதிர்பார்க்க. தெற்கு தெரு வடக்கு தெரு எரச்சப்பறமே நமக்கு கிடைக்கும் அதுவரைக்கும் காத்துகிடக்கனும். மழை பெய்து குட்டை நிரம்புது அது சூத்து கழுவ தான் முடியும். குடிக்க ரெண்டு குடத்துக்கு இம்புட்டு பாடு.."

புலம்பிய படியே அன்பழகி வடக்கு தெருக்குள் நுழைந்தாள்.

 

“ஏன்டி…நில்லு யாரவ“ என்ற குரல் அவள் முதுகுக்கு பின்னால் ஒலித்தது.

 

அவள் திரும்பி பார்க்காமளே “தாயி.. நான் தான் வண்ணன் மவ“

 

"இருளி மவளா…"

 

"ஆமாம் ஆளு"

 

“விடிஞ்ச கையோட வரனுமா தண்ணீய தூக்க.. ஆம்பள ஆளுவோ பொழைப்ப பார்க்க போக வேண்டாம். ஒன் மூஞ்சில முழிச்சிட்டு தான் போவனுமா..“ என்றாள் பின்னால் நின்றவள்.

 

யாருன்னு கூட அன்பழகி திரும்பி பார்க்க நினைக்கல, பார்த்தா கூட காலையில உன்ன பார்த்துட்டேன்னு அதுக்கு கதை வைப்பாவளோன்னு பயந்துக்கிட்டு பதுங்கி கிடந்து உடம்பு நடுங்குது.

 

திரும்பி தலை வைத்த குடத்தை இறக்கி. “தாயி வாரத்துக்கு ஒருக்கா தான் குடிதண்ணீ, இன்னைக்கு போவளன்னா குடிக்க தண்ணீ கிடைக்காது தாயி…“

 

“அதுக்கு நேரசண்டு போன என்ன..எங்க இருளன்..“

 

“அப்பாருக்கு முடியல தாயி.. “

 

“தெற்கு தெருகாரவக புடிச்சி, அப்பறம் நாங்க புடிச்சி தானடி உனக்கு நிறையும்.“

 

“தாயி தான் மனசு வைக்கனும் நீங்க புடிக்கயில இரண்டு குடம் தண்ணீ தரனும்.“

 

“இனிக்க பேசு, ஏன் குட்டை ரொம்பலயா…“

 

“ஒரே கலங்களா இருக்கு தாயி குடிக்க முடியல வாடை அடிக்குது..“

 

அன்பழகி தலையை தூக்கி பார்க்காமலே பேசிகொண்டு இருக்கும் போதே குரலை வைத்து "வெள்ளச்சி தான்னு" மனகணக்கு போட்டு கிட்டா.

 

“போ..போ.. பின்னால வரேன்..“

 

“வா….தாயி“ கூனி குறுகி நின்று முந்தானையை எடுத்து தலைக்கு முக்காடு போட்டுக்கொண்டு நடந்தாள்.

 

அன்பழகி ஒத்தையடி பாதையில் ஏறினாள். ஒத்தை அடி பாதையில் யாரும் இருக்ககூடாது வேண்டிக்கொண்டே நடந்தாள். பின்னால் வண்டி வரும் சத்தம் கேட்டது மாடுகளின் சலங்கை “ஜல்..ஜல்…“ என்று ஒலித்தது.

 

திரும்பி பார்க்காமலே முதுகை காட்டிக்கொண்டு திரும்பி நின்றாள். வண்டி அவளை கடந்த பிறகு முக்காடை மூடிக்கொண்டு ஓர கண்ணால் பார்த்தாள். 

 

வண்டியில் எல்லேந்தியும், குறிஞ்சியும் போய் கொண்டு இருந்தனர்.

 

குறிஞ்சி, அன்பழகியை பார்க்க தவறவில்லை. 

 

குருவாயி ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தாள்  ஒத்தைஅடி பாதையில். “அப்பறம் என்னடி செஞ்ச குருவாயி உன் மவன் எப்படி ஒத்துக்கிட்டான்.“

 

“அரளி விதைய அரைச்சி குடிக்க போயிட்டன்ன.. ஒரு வழியா ஒத்துக்க வச்சி இராத்திரியோட இராத்திரியா கொண்டு போய் தாலிய கட்டி கொண்டுட்டு வந்துட்டேன். இனுமே என்ன செய்யிறான்னு பார்ப்போம் அந்த ஈனசிறுக்கி..“

 

“சாமார்த்தியம் தாண்டி குருவாயி.. பொண்டாட்டி தான் வந்துட்டாளே உன் மெவன் வாலாட்ட முடியாது....“ 

 

“ஏ அயித்த அந்தா போறது வண்ணான் மொவ தான..“

 

“அவ மாதிரி தான் இருக்கு“

 

“ஏய்ய்ய்ய்… யாருடி அவ நில்லுடி..“  தொலைவில் போய் கொண்டிருந்த அன்பழகியை சத்தம் போட்டு அழைத்தாள் குருவாயி.

 

தூரத்தில் குரல் கேட்டதும் நின்றாள். காலை எதிர் வெயில் முகத்தில் அடித்தது அழைத்தது யார் என்பதே அன்பழகிக்கு தெரியவில்லை. நெற்றியில் கையை வைத்து வெயிலை மறைத்து தூரத்தில் அழைத்தது யாரு என்று பார்த்தாள் அன்பழகி.

 

"கண்ணி கடைசி வீட்டு தாயி" நினைத்து கொண்டு நின்றாள்.

 

குருவாயி இப்போது நெருங்கி வந்தாள்.

 

“ஏன்டி இருளி மவ தானே நீ.. வண்டி போயிட்டா..“

 

“போயிட்டு தாயி அஞ்சு நிமிசம் இருக்கும்..“

 

“ஏட்டி உன் அப்பன வரசொல்லு பந்த துணி எடுத்துட்டு போவ..“

 

“அப்பனுக்கு உடம்பு சுகமில்ல தாயி..“

“செத்த வந்துட்டு போவ சொல்லுடி…. நீ தண்ணீய தூக்கிட்டு வாடி பலகாரம் தரேன்..“

“சரி தாயீ…“ மண்டையை மண்டையை ஆட்டி வழி விட்டு ஒதுங்கினாள் கருவேலம் மரத்தோடு அன்பழகி.

குருவம்மா நடையில் வேகமெடுத்தாள்.

கந்தப்பன் வண்டியை உருட்டிக்கொண்டு ஊருக்குள் நுழைந்தார். தெற்கு தெரு பொம்பளைங்க தண்ணிபிடிக்க கிணத்தை அடைச்சிகிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க.

வண்டி சத்தம் கேட்டு தண்ணி இறைப்பதை மறந்து குறிஞ்சி வந்த வண்டியை உத்து பார்த்து குசுகுசுத்து கொண்டு இருந்தனர்.

“குருவாயி..குருவாயி மருமவ.. சொல்லாம கட்டிகிட்டு வந்துருக்கான்ன...“

“பண்ணுவா..பண்ணுவா..குருவாயி லேசுபட்டவளா..“ முனுமுனுப்பு சத்தம் அடங்காமலே இருந்தது. அந்த கூட்டம் குறிஞ்சியையே உற்று பார்ப்பது போல இருந்தது குறிஞ்சிக்கு.

 

வண்டி ஒருபாடாக எல்லேந்தி வீட்டின் கண்ணியை வந்தடைந்தது.

 

“ஆயி.. இந்த கண்ணி கடைசி தான் உன் வீடு..“ சொல்லிக்கொண்டே கந்தப்பன் வண்டியை வளைத்து நெளித்து உள்ளே திருப்ப சில நேரம் ஆனது சின்ன பாதை அது நெடுக வீடு. வீடுகள் பெரும்பாலும் ஓலைகூடிசையும், மண்சுவருமாக இருந்தது அவர் அவர் வீடுகளை அடைத்து மூங்கி பரல் பின்னி கிடந்தது. வாசலை மூடி மூங்கில் தட்டி.

பாதை நெடுக சேறும் சகதியுமாக கிடந்தது. ஆடு, மாடுகள் போய் போய் பாதைகள் கொத கொதத்து கிடந்தது.

 

“இந்த பக்கமா தான் வயலுக்கு, குளத்துக்கு எல்லாம் போவாங்க.. இது தான் மெயின் ரோடு மாதிரி.“ என்றான் கந்தப்பன்.

குறிஞ்சி கேட்டுக்கொண்டே  ஊம் போட்டு வந்தாள்.

கட்டகடைசி வீடாக எல்லேந்தி வீடு இருந்தது  வண்டி வீட்டு வாசலை வந்தடைந்தது.


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
21/11/2020 6:15 am  

Hi Krupa antha kalatha azhaga kan munadi kondu vantheinga padikumbothu.. Arumai 👍 .. Adutha epi kaga waiting


Kiruba Jp liked
ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 25
25/11/2020 3:23 am  

@vaniprabakaran thank you sis thodarnthu padinga nan romba risk yeduthu yelluthura story....உங்கள் ஊக்கம் தான் என் பலம் நன்றி😍😍😍😘😘


ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 25
25/11/2020 3:23 am  

@vaniprabakaran thank you sis thodarnthu padinga nan romba risk yeduthu yelluthura story....உங்கள் ஊக்கம் தான் என் பலம் நன்றி😍😍😍😘😘


ReplyQuoteKiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 11 months ago
Posts: 25
25/11/2020 3:25 am  

அத்தியாயம் 3

மர்மமான உருவம்

வாசலுக்கு வெளியிலேயே வடிவாய்கால் ஒன்று ஓடியது. அதை கடக்க மரத்தால் அடித்த பலகை போடப்பட்டு இருந்தது.
கந்தப்பன் “ஓ..ஓ..“ என்று மாட்டை இழுத்து பிடித்து நிறுத்தினான்.
எல்லேந்தி கட்டைவண்டியை விட்டு குதித்து இறங்கினான்.

“பாத்து இறங்கு ஆயி..“ கந்தப்பன் சொன்னான். குறிஞ்சி மெல்லமாக ஒடுக்கி கால்களை மெல்ல ஊன்றி இறங்கி எல்லேந்தியின் பக்கம் வந்து நின்றாள். எல்லேந்தியின் கண்கள் யாரையோ தேடிக்கொண்டு இருந்தது. அவன் தேடிய கண்கள் அதுவே எல்லேந்தி வீடே கடைசி வீடு அதற்கு பின்னால் வயல் வெளிகள், குளம். அந்த குளக்கரை மேலே ஏதோ ஒரு உருவம் எல்லேந்தியையும், குறிஞ்சியையும் உற்று பார்த்தபடி நின்றது. எல்லேந்தி கண்கள் மறுபக்கம் திரும்ப அந்த உருவம் படித்துறையை பார்க்க இறங்கி மறைந்தது.

குறிஞ்சி தலையை குனிந்து கொண்டே அந்த வடிவாய்கால் மேல் கிடத்தபட்டிருந்த மரபலகையில் ஏறி வாசலுக்கு வந்தாள். பந்தல், வாழைமரம், பந்தலை சுற்றிய துணிஅலங்காரம், சாணியை மொழுகி போடப்பட்டிருந்த திண்ணை, வாசல். வாசலே தெரியாதபடி அடைத்து கிடந்த கோலம், துணி தோரணங்கள், சுண்ணாம்பு அடிக்கப்பட்டு புத்தம் புதுசாக கிடந்த மண் சுவர்கள், எல்லாவற்றையும் சுற்றி பார்த்துக்கொண்டாள் குறிஞ்சி.
எல்லேந்தியை பார்த்ததும் சிப்பிபாறை சாம்பல் நிற நாட்டு நாய் ஒன்று ஓடி வந்து தாடிப்போட்டது. குறிஞ்சியை பார்த்து குரைத்தது. குறிஞ்சி கொஞ்சம் அஞ்சினாள்.

“த..ராசு..ராசு..“ அமைதியா இரு சத்தம்போட்டு கொண்டே வீட்டிற்குள் இருந்து ஓடி வந்தாள் அங்கவை.
“மதணி வாங்க..வாங்க… நான் தான் அங்கவை.. உங்க நாத்தி…அங்க தான் சரியா பார்த்துக்க முடியல..“
குறிஞ்சி தெரியும் என்று தலையை அசைத்தாள்.

எல்லேந்தி வாசலை கடந்து வீட்டிற்குள் போக பார்த்தான். “அண்ணென் செத்த நின்னு சங்கவை பொட்டாத்தாவ அழைக்க போயிருக்கா. அது ஆரத்தி எடுத்தா தான் உள்ள போகனும்..“

“அது எப்ப வரது நான் அம்புட்டு நேரம் இப்படியே நிக்கவா..“

“செத்த பொருண்ணே…“

பின்னால் குரல் கேட்டது. “த்தா வந்துட்டோம்..“ இளம் பெண் ஒருத்தி கூன் விழுந்த கிழவியை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.

“ஆத்தா சீக்கிரம் வாத்தா..“ என்றாள் அங்கவை.

“இருடி சக்காளத்தி நான் வரவேண்டாம்.. நான் என்ன இளசா..“ அது மெல்ல அசைந்து அசைந்து வந்தது. உடல் தளர்ந்து போய் நரம்புகள் எல்லாம் வெளியே தெரிந்தது. எட்டு கஜம் புடவையை இரவுக்கை போடாமல் சுத்தி கட்டி இருந்தது. எம்.ஜி.ஆர் உருவம் வலது தோள்பட்டையில் பச்சை குத்தபட்டு கிடந்தது. நெற்றி நிறைய கிடந்த குங்கும பொட்டு, இரட்டை மயில் மூக்குத்தியும், காதுகளில் ஆடி கொண்டிருந்த தண்டட்டியும், புகையிலை போட்டு வெந்து போய் கிடந்த வாய் ஓரங்களுமாய் மெல்லமாய் தட்டி தடுமாறி கிழவி ஒரு வழியாக எல்லேந்தி குறிஞ்சி அருகே வந்தது.

“ஏய் மோடுமுட்டி பயல சொல்லாம போய் கட்டிகிட்டு வந்துட்டியா..“
“ஆத்தா நீ முதல சுத்து பிறவு உன் கதைய வை..“ கடுப்படித்தான் எல்லேந்தி.

“அட போடா… மூளை கடுப்பெடுத்தவனே.. மகராசிய இரு..“ ஆரத்தி எடுத்துவிட்டு குறிஞ்சிக்கு நெட்டியை முறித்தாள் கிழவி.

“வாங்க மதணி..வாங்க…“ சங்கவை வாய்நிறைய அழைத்தாள்.
அங்கவை சங்கவை இரண்டும் இரட்டை பிறவிகள். எல்லேந்தியின் கடைசி தங்கச்சிகள். கருப்பு நிறம், களையான முகம்,நெடு மரம் போல உயரம்.

ஒரு பக்க திண்ணையில் போய் எல்லேந்தி அமர்ந்தான். “அண்ணெண் உள்ள வாண்ணென்.. பாய் போட்டுருக்கேன் அதுல வந்து உட்காரு..“

“கிடக்கட்டும் கிடக்கட்டும்..“ என்றவன் கீத்தில் சொறுகி கிடந்த பீடியை எடுத்து பற்ற வைத்தான். குறிஞ்சி மற்றொரு திண்ணையில் கிடந்த இன்னொரு உருவத்தை பார்த்தாள் போர்வையை முகம் முழுக்க இழுத்து போத்தி கிடந்தது.

“மதணி..அது நடண்ணென்.. நீங்க பார்த்திருக்க மாட்டிங்க.. அது கல்யாணத்துக்கு வரல வெளியூர்ல வேலை பார்க்குது.. வா மதணி உள்ள..“ என்று அழைத்தாள் அங்கவை.
கூடம், கூடத்தின் நடுவே ரெண்டு தட்டிகள் தடுப்பு. ஒன்னு சமையலறை மற்றொன்று சாமி அறை. வீடு சற்று விசாலமாக தான் இருந்தது. கூடத்தின் நடுவே கிடந்த கோரை பாயில் குறிஞ்சியை உட்கார வைத்தாள் அங்கவை.

அன்பழகி தண்ணீர் குடத்தை தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய் இடுக்கி கொண்டு மீண்டும் அந்த ஒற்றை அடியை கடந்து கருவக்காட்டுக்குள் நடந்து வீடு வந்து சேர்ந்தாள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தான், இருளி சட்டியில் பழையதை வைத்து கொண்டு உப்பில் வைத்திருந்த எலுமிச்சபழத்தை கடித்து கொண்டு கஞ்சியை குடித்துக்கொண்டிருந்தான்.

“எப்ப போனவ.. மணி என்னங்குறேன்.“
“என்னத்த பண்ண சொல்ற..இரண்டு குடத்து தண்ணீக்கு எம்புட்டு வேலை செய்ய சொல்றாளுவோ.. வெள்ளச்சி ஆத்தா வீட்டு சாமான் பூரா தேய்ச்சிகொடுத்துட்டு, சின்ன பண்ணை வீட்டுக்கு தண்ணி இறைச்சி கொடுத்துட்டு வரேன்.“
“சரி போ..போ.. உன் ஆத்தாவுக்கு கஞ்ச வாத்துக்குடு… இந்த கிடக்குறான் பாரு நாய் பய வேலை வெட்டிக்கு போவாதவன்.. இவனுக்கு சோறு தண்ணீ போடாத..நான் சிங்கபூராரு வீட்டுக்கு போய் வெளுத்த துணிய கொடுத்துட்டு வரேன்..“

“அந்த வீட்டுல துணியெடுக்காதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.“
“கழுதை நம்பல்லாம் அண்டி பொழைக்கிறவங்க யாரையும் பகைச்சிக்க முடியாது.. அவன் தலையெழுத்து போயிட்டான் என்னத்த பண்றது.. வயிறு இருக்கே..“ புலம்பிக்கொண்டே நகர்ந்தான் இருளி.
குறிஞ்சி கஞ்சியை சட்டியில் வார்த்துக்கொண்டு சூலி அருகே வந்து அமர்ந்தாள். சூலி ஜாடையிலயே ஏதோ கேட்டாள்.

“சாப்புட்டுட்டு வேலைக்கு போயித்து.. நீ வாய தொற..“ எங்க என்றாள் சூலி ஜாடையாக.

“சிங்கபூராரு வீட்டுக்கு போயிருக்கு..“ சூலி கோபமாக ஏதோ ஜாடையாய் பேசினாள்.

“அவரு கள்ளசாரயம் காச்சினா வாங்கி குடிக்கிறவனுக்கு எங்க போச்சி புத்தி…மொடா குடிகாரனா பாத்து நீங்க கட்டி வச்சிய அவன் தாலி கட்டுன கையோட குடிக்க போயிட்டான் அவன் ஆயுசும் முடிஞ்சிட்டு..“ அன்பழகி மூக்கை முந்தானையில் சிந்தினாள்.
குருவாயி வீடு வந்து சேர்ந்தாள்.

“அடேய் எழுந்தறிச்சி வாடா..“ எல்லேந்தியை வரும் போதே ஒரு அதட்டு போட்டாள் குருவாயி. வழித்துக்கொண்டிருந்த பீடியை தூக்கி போட்டு விட்டு உள்ளே வந்து குறிஞ்சி பக்கத்தில் அமர்ந்தான்.

குருவாயி அங்கவை எடுத்துவைத்திருந்த பாலும் பழத்தையும் கொண்டு வந்து கொடுத்தாள். எல்லேந்தி குடித்துவிட்டு மிட்சத்தை குறிஞ்சியிடம் நீட்டினான். குறிஞ்சி வெட்கத்துடன் வாங்கி குடித்தாள்.

“ஏட்டி குருவாயி..கல்யாணத்தை தான் இராத்திரி பண்ணுன மிட்ச சடங்கையும் அங்கயே பண்ணிட்டு வந்துட்டியா..“

“ஆ..அதெப்படி பொட்டு கிழவி… நேத்து இராத்திரி நேரமும் சரியில்ல… நான் போய் நம்ம ஐயருகிட்ட நேரத்தை குறிச்சி வாங்கிட்டு வரேன்..முதராத்திரிய இன்னைக்கு வச்சிக்கலாம்..கிழவி நான் சோறாக்குறேன் இங்கயே இரு சாப்புட்டு போகலாம்.. தாயி செத்த நீ தலை சாச்சிக்குறியா..“ என்றாள் குறிஞ்சியை பார்த்து குருவாயி.
முதல்நாள் இரவு.

“ஏய் அங்கவை, சங்கவை ரெண்டு பேரும் பெரிய வீட்டுக்கு போங்கடி..“
“இந்தா போரோம்மா..“

“ஆத்தா குறிஞ்சி போய் தலைக்கு குளிச்சிட்டு வா..நம்ம பக்கத்து பங்காளி ஊட்டுல இருந்து நலங்கு வைக்க வருவாங்க.“

குறிஞ்சி எழுந்து குளித்துவிட்டு புதுபுடவை கட்டி தலைநிறைய மல்லிகை பூவையும் நெற்றி நிறைய குங்குமமும் வைத்து இருந்தாள்.
“ஏன் கண்ணெ பட்டுடும்“ நெட்டி வழித்தாள் குருவாயி.

சில பெண்கள் கூட்டம் வந்து குறிஞ்சியை கேலி கிண்டல் செய்து கொண்டிருந்தது. குறிஞ்சி காலையில் வந்த போது திண்ணையில் கிடந்த அந்த உருவத்தை தேடினாள் ஆள் அங்கு இல்லை.

உள்ளே இரண்டு மூனு பெண்கள் பாய் விரித்து வெள்ளை துணியை போட்டு அதன் மேல் மல்லிகையால் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். பால், பழம், இனிப்பு தாம்பழத்தில் வைக்கப்பட்டு இருந்தது. நல்ல விளக்கு ஒன்று மூளையில் ஏற்றபட்டு இருந்தது.
குறிஞ்சிக்கு நலங்கு வைத்து உள்ளே அனுப்பி வைத்தனர்.

கன்னங்களில் பூசப்பட்ட சந்தன மனமும் மல்லிகை மனமும் குறிஞ்சிக்குள் ஏதேதோ செய்தது. விரிந்து இருக்கும் கண்கள் பலகனவுகள் காண கால்களால் கோலம் போட்டுக் கொண்டு காத்துக்கிடந்தாள்.


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 153
25/11/2020 2:51 pm  

Padikum bothu romba romba sweet a eruku.. Oru gramathu life a apadiye katreinga... But eniaku romba chinna pathivu... 


ReplyQuoteShare: