Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

கருவேலங்காட்டு மனிதர்கள் - Tamil Novel  

Page 2 / 2

Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 5

 

கல்லுக்குள் ஈரம்

 

காலை பொழுது பொலபொலவென விடிந்தது. குருவாயி வாசலுக்கு சாணி தெளித்துப்போட்டாள். பால் கறக்க மாடுகளை அவிழ்த்து கட்டிக் கொண்டிருந்தாள். மழையும் மெல்ல ஆரம்பித்துக் கொண்டிருந்தது. கரவை மாடு கன்றை கண்டதும் தன் நாவினால் நக்கியது.

 

“ஏய் அங்கவை அந்த பால்கறக்குற சொம்ப எடுத்துக்கிட்டு வா..“

 

“இந்தாங்கத்த..“குறிஞ்சி கொண்டு வந்து நீட்டினாள். குறிஞ்சியை பார்க்கும் போது குருவாயிக்கு உள்ளுக்குள் ஏதோ குற்ற உணர்வு.

 

“ஏம்மா நீ இந்த வேலைய செய்யுற, நீ செத்த தூங்க கூடாதா ராத்திரியெல்லாம் முழிச்சிகிட்டே கிடந்த. ஆயி குறிஞ்சி நீ ஒன்னும் தப்பா நினைச்சிக்காத அவனுக்கு ஏதோ போதாத வேலையா இருந்திருக்கும், உடம்பு மட்டும் தான் அங்க இருந்திருக்கும் மனசு பூரா உன்ன தான் நினைச்சிக்கிட்டு கிடந்திருப்பான்.“

 

“இருக்கட்டும்..“

 

“மதினி நான் குளிக்க போறேன் வரிங்களா..“என்றாள் அங்கவை.

 

“போ, ஆயி போ குளம் பக்கம் தான் குளிச்சிட்டுவா..“

 

குறிஞ்சியும் மாற்று துணிகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.

 

குருவாயி பாலை கறந்து வைத்துவிட்டு அப்படியே வாசல்படியில் குத்தவைத்து அமர்ந்திருந்தாள்.

 

குருவாயி சின்ன மகன் சிலம்பன் வந்து திண்ணையில் அமர்ந்தான்.

 

“இத பார்த்தியாட இந்த பெரிய பய பண்ணுன வேலைய… இராத்திரி பூரா வீட்டுக்கு வரவே இல்லடா..“

 

“இப்போ நொட்டு, அவனுக்கு நீ தான கல்யாணம் பண்ணிவச்ச.. அவன்ல திருந்தவே மாட்டான்..“

 

குருவாயி கண்ணீர் வடித்தாள். எல்லேந்தி மழையில் நனைந்துக்கொண்டே வீட்டிற்கு வந்தான். திண்ணையில் வந்து அமர்ந்து கூரைமேல் தடவி பீடியை எடுத்து பற்ற வைத்தான்.

 

“எங்கப்பா போன இராத்திரியெல்லாம்..“

 

“ம்ம்..அதான் சொன்னேனே ரொட்டி எடுக்க டவுனுக்கு போனன்.“

 

“கிழிச்சான்.. அவன் வேட்டில எவ மஞ்ச ஒட்டிருக்குன்னு பாரு..“

 

“டேய் நீ வாய மூடுடா உனக்கும் எனக்கும் பேச்சு கிடையாது..“

 

“நான் பேசுவேண்டா..ஊரு சுத்தி நாய..“எல்லேந்திக்கும், சிலம்பனுக்கும் வாய் பேச்சு முற்றி கைகள் நீண்டது.
சிலம்பன் எல்லேந்தியை பிடித்து தள்ளினான். கொட்டகை தூணில் போய் இடித்தது நெற்றி இரத்தம் கசிந்தது. குருவாயி ஓடி வந்து சிலம்பனை அடித்தாள்.

 

“பாவி..பாவி உன் கோபத்துக்கு அளவே இல்லையா..இரத்தம் வரமாதிரி அடிச்சிருக்க..“

 

“ஆமாம் நீ என்னையே சொல்லு அவன் என்ன செஞ்சாலும் அவன தூக்கி வச்சிக்க நாளைக்கு அவன் தான கொள்ளிபோடனும். நான் எங்கப்பன் ஓடி போன மாதிரியே எங்கயாவது ஓடி போறேன்.“

 

வாக்குவாதம் நடந்துக் கொண்டிருக்கும் போதே குறிஞ்சியும் இரண்டு நாத்தனார்களும் குளித்து முடித்துவிட்டு அங்கு வந்தனர்.

 

சிலம்பன் குறிஞ்சியை கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டு திண்ணையில் போய் ஒரு மூலையில் அமர்ந்துக்கொண்டான். குறிஞ்சியின் கண்கள் எல்லேந்தியை நோட்டம் விட்டது. நெற்றி பொட்டில் இரத்தம் கசிந்துக்கொண்டிருந்தது.

 

“அது ஒன்னும் இல்ல ஆயி தலைய இடிச்சிக்கிட்டான்.“

 

எல்லேந்தி எழுந்து வீட்டுக்குள் சென்றான்.

 

“போ ஆயி..போய் ஏதாவது காப்பி தண்ணி வச்சிக்கொடு.“

 

குறிஞ்சி சிலம்பனை பார்த்தாள். ஆளு கம்பீரமான உருவம், சின்னதாக தாடி, தடித்த கட்டான உடல், நெற்றி வரை கிடந்த அடர்ந்த கேசம், மாநிறம். சிலம்பன் வெடுக்கென்று எழுந்து அங்கிருந்து நகர்ந்தான்.

 

குறிஞ்சி உள்ளே சென்றாள். எல்லேந்தி பாயை எடுத்து விரித்து படுத்திருந்தான். குறிஞ்சி சாதாரண வாயில் புடவை கட்டியிருந்தாள், தலைக்கு குளித்து கொண்டை இட்டிருந்தாள். வந்தவள் நேராக சென்று சாமி அறையில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றி நிறைய வைத்துக்கொண்டாள். மஞ்சள் தேய்த்து வண்ணம் ஏறிகிடந்த முகத்தில் குங்குமமும் சேர்ந்து அழகை கூட்டியது. வாயில் புடவை முந்தியை எடுத்து சொருகி கொண்டு மூங்கி பிளாச்சிகளை எடுத்து மண்ணென்ணய்யில் நனைத்து அடுப்பை பற்ற வைத்தாள். கறந்த பாலை காய்ச்சி டீ தூளும் கருப்பட்டியும் போட்டு கொதிக்கவைத்து இறங்கினாள். நாளஞ்சி டம்ளர்களை எடுத்து வைத்தாள். முதலில் குருவாயிக்கு கொண்டு போய் டீயை நீட்டினாள், அங்கவையும், சஞ்கவையும் கொல்லை பக்கம் மாடு கொட்டகை கூட்டி கொண்டு நின்றனர். அவர்களுக்கு ஒரு ஒருடம்ளரை கொடுத்தாள்.

 

“ஆயி இன்னொரு டம்ளர இங்க வையி சின்னவன் குளத்துக்கு போயிருக்கான் வந்தா குடிப்பான்.“

 

குறிஞ்சி எடுத்து இன்னொரு டம்ளரை வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

 

எல்லேந்தி இரத்த காயத்துடன் படுத்து கிடந்தான். அவன் அருகே சென்று அமர்ந்து டீயை ஆத்தினாள்.  அவன் கண்கள் வீட்டின் மோட்டை மேய்ந்துக்கொண்டிருந்தது. தன் முந்தியை எடுத்து எல்லேந்தி நெற்றியை ஒத்தி எடுத்தாள். எல்லேந்தி கண்களை மூடிக்கொண்டான். இரத்தத்தை ஒத்தி எடுத்துவிட்டு காபி தூளை அள்ளி அமுக்கிவிட்டு டீயை வைத்துவிட்டு நகர்ந்தாள்.

 

சிலம்பன் வந்து திண்ணையில் அமர்ந்து டீயை எடுத்து குடித்தான்.

 

“சின்னவனே நாளைக்கு பொண்ணு வீட்டுகாரவங்களுக்கு கறிவிருந்து வைக்கனும்டா..நீ நம்ப பாய்கிட்ட ஆட்டுகறிக்கு சொல்லிடு..“

 

“உம்ம்..நான் வண்டிக்கு போறேன் போகயில சொல்லிட்டு போறேன்.“

 

“நீ கல்யாணத்துக்கும் இல்ல இப்போ கறிவிருத்துக்கும் இல்லன்னா என்ன நினைப்பவோ..“

 

“ஆன்..என் புருஷன் ஓடி போனமாதிரி அவனும் ஓடிபோயிட்டான்னு சொல்லு..“ சிலம்பன் உள்ளே சென்று கண்ணாடி முன்னே நின்று எண்ணெயை தேய்த்து தலையை படிய சீவிக்கொண்டு மீசை, தாடியையும் சீவினான். விபூதியை அள்ளி நெத்தியில் அடித்துக்கொண்டான். விடுவிடுவென்று கிளம்பினான்.

 

“ஏல ரெண்டு கஞ்ச குடிச்சிட்டு போடா..“

 

எதுவுமே பேசாமல் நடந்தான்.

 

ஒத்தை அடி பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தான். எதிரே ஒரு உருவம் அவனை கண்டதும் பம்மி கொண்டு முக்காடு போட்டு ஒதுங்கி நின்றது. சிலம்பன் மீசையை முருக்கிக்கொண்டு நடந்தான். அந்த உருவத்தை கடந்ததும் “ஆ..“ முக்காடு போட்ட உருவம் திரும்பி பார்த்தது சிலம்பன் கால்களில் கண்ணாடி சில் குத்தி இரத்தம் வடிந்தது.

 

“என்ன சாமி பாத்து போககூடாதா..“என்று வந்த உருவம் அவன் காலில் குத்தி கிழித்த கண்ணாடி சில்லை எடுத்து போட்டது.

 

அன்பழகி தான் அது, சிலம்பனும் அன்பழகியும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக தான் படித்தனர். அன்பழகி சிலம்பனுக்கு பழக்கம் தான் அன்பழகியை அந்த வாத்தியார் வாசலிலேயே உட்கார வைத்திருப்பார், அங்கேயே  உட்கார்ந்து தான் படிப்பாள். சிலம்பன் அவளுக்கு நேர் எதிர் பலகையில் அமர்திருப்பான்.
அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் அன்பழகியை வாசலிலேயே உட்கார வைத்திருக்கிறான் இந்த வாத்தி என்ற எண்ணம் ஓடும். அஞ்சான் கிளாசுக்கு சிலம்பன் போனதும் அன்பழகி பள்ளிக்கூடத்தை விட்டே நின்று விட்டாள். அவள் படிப்பதை அந்த ஊர்மக்கள் யாரும் விரும்பவில்லை. சூலியோட பிடிவாதத்துல தான் இருளி அன்பழகிய பள்ளிக்கூடத்துக்கே அனுப்பினான்.

 

நன்றாக படிப்பாள், அவளுக்கு படிப்பது என்றால் பிடிக்கும். இப்போதுமே எதுவும் கீழே கிடக்கும் துண்டு பேப்பர்களை எடுத்து எழுத்துக்கூட்டி படிப்பாள். கையெழுத்து போடுவாள். சிலம்பன் ரொம்ப வருடம் கழித்து தான் இப்போது அன்பழகியை பார்க்கிறான். ஒரே ஊரில் தான் இருக்கிறான், ஆனால் சிலம்பன் பாதி நேரம் லாரியில் லோடு ஏத்த போய்விடுவான். அன்பழகிக்கு கல்யாணம் முடிந்தது. முடிந்த நாளே புருஷன்காரன் கள்ளசாராயத்தை குடிச்சி செத்தது எல்லாம் சிலம்பன் கிளினர் பய சவுரி சொல்ல கேட்டிருக்கான். சவுரியும் சிலம்பனோட படிச்சபயதான்.

 

“அன்பழகியா..“

 

“ஆமாம் சாமி.. செருப்பு போட்டுகிட்டு போககூடாதா..“

 

“இது கல்லு உடம்பு இதெல்லாம் எம்மாத்திரம்..போபுள்ள..“

 

“கல்லா இருந்தாலும் ஈரம் இருக்கும்முன்ன சாமி..“ அன்பழகி எழுந்து நடந்தாள். சிலம்பன் ஒத்தைஅடி பாதையை கடந்துக்கொண்டிருந்தான்.

 

குறிஞ்சி கிணத்தடிக்கு தண்ணீர் தூக்க அங்கவையோடு வந்தாள்.

 

“ஏன் மதினி நீங்க வரிங்க“

 

“ஏன்னு கேட்குறேன் நீ வாக்க பட்டு போயிட்டா நான் தானே எல்லாம் செய்யனும்..“

 

“அது சரிதான்..“

 

“உங்க சின்ன அண்ணேன் கோபக்காரா பெரிய அண்ணேன் கோபக்காரா..“

 

“ரெண்டுன் தான்..“

 

“ஆத்தாடி ஆத்தா..எப்படி சமாளிக்கிறிய..“

 

“அம்மா தான் பாவம் மதினி ரெண்டுக்கும் நடுவுல கிடந்து பாடா படும்..“

 

“உங்க அப்பாரு எங்க இருக்காருண்ணாவது தெரியுமா..“

 

“அது எங்க போனுச்சின்னே தெரியாது மதினி..எங்க அப்பாரு நல்லா படிக்குமா இலக்கியம் புத்தகமெல்லாம் நல்லா வாசிக்குமா.. நாங்க ரெண்டும் பொறந்து ஆறுமாச புள்ளையா இருக்கும் போதே வீட்டவுட்டு போயிட்டான். என்ன காரணமுன்னு அம்மா சொல்லாது..“

 

இருவரும் பேசிக்கொண்டே கிணத்தடிக்கு வந்தனர். அன்பழகி தண்ணி குடத்தோடு ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள்.

 

“யாரது.. இருளி மவளா..“ என்றாள் அங்கவை.

 

“ஆமாம் தாயி..என்ன புதுபொண்ண கிணத்துக்கரைக்கு கூட்டி வந்திருக்கிங்க..“

 

“மதினி சொன்னா கேட்ட மட்டைங்குது..“

 

குறிஞ்சி தண்ணீ இறைக்க போனாள். “கொடுங்க தாயி நான் இறச்சி தரேன்..“

 

“கொடுங்க மதினி அது தான் எல்லாருக்கும் இறச்சி கொடுக்கும் கடைசியா அதுக்கு ஒரு கொடம் தண்ணீ கொடுப்பாங்க.“

 

அங்கவை ஒரு குடத்தை தூக்கிகொண்டு நடந்தாள். “மதினி அந்த குடத்தை தூக்கிட்டு வாங்க..“ என்று முன்னே சென்றாள்.

 

அந்த ஊரு கோயில் குருக்கள் மனைவி தண்ணீர் இறைக்க வந்தாள்.

 

“கயித்த புடிங்க தாயி..“ குறிஞ்சியிடம் கயிற்றை கொடுத்தாள் அன்பழகி.

 

“யாருடி அவோ.. குருவாயி ஆத்து மாட்டுபொண்ணா..“

 

“ஆமாம் தாயி அந்த ஆத்தா மருமக தான்.“

 

குறிஞ்சி தண்ணீர் இறைக்க போனவளை “செத்த தள்ளி நின்னுடி நான் இரண்டு கொடம் இறைச்சிக்கிறேன்.“

 

“வாங்க தாயி இந்தண்ட மாமி இறைச்சிக்கட்டும்..“ என்றாள் அன்பழகி.

 

இறைத்து வைத்திருந்த தண்ணீய சாய்த்து விட்டாள். தண்ணீர் இறைத்து கயிற்றை கழுவினாள், கையை கழுவினாள். மீண்டும் தண்ணீர் இறைத்தாள்.

 

குறிஞ்சியும், அன்பழகியும் ஒதுங்கி நின்றனர்.

 

“வரேண்டி மாட்டுபொண்ணு..‘‘

 

“அவங்க அப்படி தான் தாயி சுத்தம் பார்ப்பாங்க. தாயி உங்க குடத்தால ஒரு குடம் தண்ணீ ஊத்துங்க“ குறிஞ்சி ஒரு குடம் தண்ணீரை அன்பழகி குடத்தில் ஊற்றினாள். இன்னொரு குடம் இறைத்து அதையும் அன்பழகிக்கு ஊற்றினாள்.

 

“எங்களுக்கு ஒரு குடம் தான் கொடுப்பாங்க.“

 

“இருக்கட்டும் வச்சிக்கோ யாரும் வரதுக்குள்ள நீ எடுத்துக்கிட்டு கிளம்பு..“

 

அன்பழகிக்கு குறிஞ்சியை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. விருட்டு விருட்டென்று குடத்தை தூக்கிகொண்டு யாரும் பார்க்கும் முன்னே நடந்தாள். குறிஞ்சி இன்னொரு குடம் தண்ணீயை எடுத்துக்கொண்டு நடந்தாள்.


ReplyQuote
Barani Usha
(@hamsavenkat)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 92
 

super

BaraniUsha


Kiruba Jp liked
ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 6

நெரித்த தொண்டைக்குழி

அன்பழகி சிங்கபூரார் வீட்டுக்கு வேலைக்கு சென்று விட்டு தன் குடிசைக்கு திரும்பி கொண்டிருந்தாள். அவள் மனது முழுக்க சிங்கபூரார் வீட்டில் நடந்ததே ஓடிக்கொண்டிருந்தது. அன்பழகி காலையிலயே வேலைக்கு வந்தாள். வேலை முழுக்க வாங்கி கொண்டாள் மல்லியம்மா. வார்த்தைக்கு வார்த்தை சிங்கபூரான் உட்கார்ந்து கொண்டு முண்டை இத செய் அத செய்யுன்னு தொன தொனத்துக்கொண்டே இருந்தான். அன்பழகிக்கு எரிச்சலாக இருந்தது. சோறு கூட போடாமல் வேலையை வாங்கி கொண்டு டீ தண்ணியை போட்டுக் கொடுத்தாள் மல்லியம்மா.

“தாயி டீ தண்ணி வெடவெடன்னு இருக்கு…“

“ஏய் முண்டை டீ தண்ணியா இல்லாம உங்களுக்கு பாலா ஊத்தி போடனுமோ“ என்றான் சிங்கபூரான்.
அன்பழகிக்கு தொண்டைக்குழிகள் நெரித்து பற்றி எரிந்தது, எச்சிலை முழுங்கி பற்றி எரிந்த நெருப்பை அமுத்தினாள். வேலை முடியும் வரை எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு விடுவிடுவென்று நடந்தாள்.

மதியவேளை அவள் வெளியே வந்த போது மழையும் தொடங்கியது, காலையில் இருந்து பசி வேறு காதை அடைத்தது.

“ஒரு வாய் சோறு தண்ணீகூட போடலேயே செருவாடு சேத்து என்ன பண்ணபோறாளுவோ.. மனுச மக்கள மதிக்கவே மாட்டைங்குதுவோ இப்படி சேத்து என்ன பண்ண போவுதுவே..“ புலம்பிக்கொண்டே வந்தாள்.

“ஏய் வண்ணத்தி மவளே..“ அன்பழகி புலம்பலை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தாள். கொளஞ்சியின் டீ கடையிலிருந்து தான் யாரோ அழைத்தார்கள்.

கொளஞ்சியின் அண்ணன் முத்துகாளை டீ ஆத்திக்கொண்டிருந்தான்.

“சாமி..“

“அன்பழகி இந்த சாமான செத்த தேயேன்..“

அன்பழகிக்கு கண்கள் இருண்டு கொண்டு வந்தது. மழையில் நனைந்தது வேறு குளிர்ந்தது.

“சாமி நான் இன்னும் காலையில இருந்த கஞ்சிகூட குடிக்கல..சுத்திகிட்டு வருது..“

“இத வெளக்கி போடு நல்ல டீயும் இரண்டு வரட்டி ரொட்டியும் தரேன்.“
அன்பழகி அந்த மழையிலே உட்கார்ந்து டீகடை சாமான்களை கழுவி வைத்துவிட்டு அந்த டீயை வாங்கி இரண்டு ரொட்டியையும் வாங்கி நனைத்து திண்ணுக்கொண்டே கேட்டாள்.

“ஏன் சாமி தங்கச்சி இல்லையா“
“குளத்துக்கு குளிக்க போயிருக்கு“ இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்தே கொளஞ்சி நோட்டம் விட்டுக்கொண்டே கையில் துவைத்த துணிகளை வைத்துக்கொண்டு தயங்கி தயங்கி வந்தாள்.

“நேத்து பாத்தத சொல்லுறாளோ.. இவ இங்க நின்னு என்னத்த அவன்கிட்ட சொல்லுறாளோ தெரியலையே..“

சிறிது நேரத்திற்கு பிறகு டீயை குடித்துவிட்டு அன்பழகி அங்கிருந்து நகர்ந்தாள். கொளஞ்சி துணியை காயவைக்க கொல்லை பக்கம் சென்றாள்.

“ஏய் முத்துகாளை உன் தங்கச்சி என்ன பண்ணிருக்கான்னு தெரியுமா??“ என்று டீ குடிக்க வந்தவன் காதை கடித்தான்.

முத்துக்காளை இரத்தம் கொதித்தது. “உனக்கு யாருடா சொன்னது..“

“என் வீட்டுக்கு சாமான் தேய்க்க வந்த முனி தான் சொன்னா. நேத்து இரா சோறு வாங்க வந்தப்போ தான் பார்த்திருக்காடா…“

முத்துகாளை அடுப்பு எறிக்க வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். உடம்பு சரியில்லாமல் படுத்துக்கிடந்த அம்மா மாரி மீது ஊற்றினான். தன் மீதும் ஊற்றிக்கொண்டான்.

“ஏய் சிறுக்கி உள்ளவாடி….“  என்று கத்தினான். கொளஞ்சி "முண்டை தேவடியா பத்தவச்சிட்டு போயிட்டா..“
அன்பழகியை மனதுக்குள் கருவிகொண்டு உள்ளே வந்தாள்.
மண்ணெண்ணய் தண்ணீ போல சிந்தி ஓடி கிடந்தது.

“ஏண்டா நீ முட்டாளா..“ கொளஞ்சி முத்துபாண்டி கையில் இருந்த தீப்பெட்டியை தட்டிவிட்டாள்.

“ஏய் நாடுமாறி சிறுக்கி நீ இப்படி அவன் கூட திருட்டுதனமா படுக்குறதுக்கு எங்கள கொளுத்திபோட்டு போடி..“

மீண்டும் தீக்குச்சியை கிழித்தான் கொளஞ்சி ஊதி அணைத்தாள்.

“டேய் சொன்னா கேளுடா வேண்டாமுடா..“ என்று கத்தினாள் மாரி.

“பொண்ணா வளத்து வச்சிருக்க இவ இப்படி சிரிப்பா சிரிச்சி நிப்பான்னு முன்னாடியே தெரிஞ்சவன் மாதிரி எங்கப்பன் போய் சேர்ந்துட்டான். இந்த ஓழிமவ என்ன சித்திரவதை பண்றா..“
தலையில் அடித்துக்கொண்டு கத்தினான்.

“அதுக்கு ஏன்டா ஆம்பளை சிங்கம் நீ அழுவுற அவள கொளுத்துடா அவ வேண்டாம்டா அவள கொளுத்துடா..“

“அவ இருக்கட்டும்மா என் தோள்ல போட்டு வளர்த்துட்டேன் என்னால முடியாது நம்ம சாவோம்“ மீண்டும் கொளுத்தினான்.

“அய்யோ.. இருடா நான் என்னடா இப்போ.. பண்ணனும் சொல்லுங்கடா பண்றேன்டா...பண்றேண்டா..பண்றேன்டா….“ தலையில் அடித்துக்கொண்டு சரிந்தாள்.

செங்கம்,ராசாங்கம் பொண்ணு புள்ளை அவங்க ஊரு சனம்  ஆறெழு பேரு எல்லாம் குருவாயி வீட்டுக்கு வந்தனர்.

“வாங்க மதினி..வாங்க… வாங்க அண்ணென் எல்லாரும் வரனும் வாங்க…“ குருவாயி அழைத்தாள். அங்கவை எல்லோருக்கும் சந்தனம் குங்குமம் கொடுத்தாள். சங்கவை பொம்பளைங்களுக்கு பூ கொடுத்துக் கொண்டு வந்தாள். குறிஞ்சி செங்கத்தின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

“எப்படி ஆயி இருக்க புகுந்த வீடு புடிச்சிருக்கா..“

“உம்ம்..எங்க தாத்தா வரலையா..“
“ஆமாம் அண்ணி ஏன் மாமா கூப்பிட்டுக்கிட்டு வரல…‘‘

‘‘எங்க அதால முன்னமாதிரி முடியுது..“என்றாள் செங்கம்.

“எங்க மாப்பிளைய காணும்..“ என்றான் ராசாங்கம்.

“இந்தா வந்துடுவாண்ணே நீங்க எல்லாம் வாங்க கை நனைக்க..“
எல்லாருக்கும் தலைவாழை இலை போடப்பட்டு முட்டை, ஐரமீனு குழம்பு, ஆட்டுகறி, தலைகறி, குடல்னு தனி தனியா பிரிச்சி இலை நிறைய இருந்தது.

எல்லோரும் பிசைந்து வாயில் சோத்தை எடுத்து வைக்க போகும் போது. வாசலில் குரல் கேட்டது. “ஏய் எல்லேந்தி நாசமா போனவனே..வெளிய வாடா..“

குருவாயி யார் என்று வெளியே வந்து பார்த்தாள். முத்துகாளை “எங்கடி உன் மவன் நெல்லுபானையில ஒழிச்சி வச்சிருக்கியா..“

“அவ இவன்ன வௌக்கமாரு பிஞ்சு போயிடும் பிஞ்சு“ குறிஞ்சிக்கு எதுவுமே புரியாமல் விழித்துக்கொண்டு நின்றாள். சோறு திங்க உட்கார்ந்த அத்தனை சனமும் வெளியே வந்தது.

“ஓ.. உன் மவன அவடுத்தவன் வீட்டுக்கு ஊரு மேயவுட்டுட்டு இங்க விருந்து வைக்கிறியோ..“

“என் மவன பத்தி பேச உனக்கு என்னடா யோக்கித இருக்கு.“
“அந்த கேடுக்கட்டவன நீ தான் மெச்சனும்..நேத்து இராத்திரி எங்கடி அனுப்புன என் தங்கச்சிய எதுக்குடி வந்து பாக்குறான்..“ குருவாயிக்கு தூக்கிவாரி போட்டது. குறிஞ்சிக்கு முகமே மாறியது. ராசாங்கம் “தம்பி வாயில வந்ததுயெல்லாம் பேசாதப்பா..“

“யோவ் அந்த குடிக்கி மவன் இராத்திரி பூரா என் தங்கச்சிக்கூட இருந்திருக்கான் ஊரே சிரிக்குது இப்போ தான்  நியாயம் பேசுர..“
“என்னமா இது..“

“அண்ணென் இவன்  பௌப்பத்த பயண்ண.. நீங்க உள்ள வாங்க..“
முத்துகாளை ஆவேசமாக ஆடினான். ஊரும் கூடியது “ஏய் முத்து இங்க என்னடா நின்னு கத்துறவன் பஞ்சாயத்துல பேசிக்கலாம் வாடா..“
“இல்லடா பங்காளி வெட்டி சாயிக்கனும்டா அவன..“ அவனோட சாதி சனம் முத்துவை சமாதானம் படுத்தியது.

“விடுங்கடா என்ன விடுங்கடா..இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்க்குறேன் அவன அறுக்கனும்டா..“ முத்து கிடந்து குதித்தான்.

அவனை எல்லாரையும் பிடித்து அமுக்கி ஆசுவாசபடுத்தி அழைத்து சென்றனர். போகும் வரை முத்து கத்திக்கொண்டே சென்றான்.
குருவாயிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் நின்றாள்.

“என்னமா இது பொண்ண வந்து கேட்டு கட்டிக்கிட்டு வந்திங்க..இங்க என்னமா இப்படி சிரிப்பா சிரிக்குது..“ ஆவேசமாக கத்தினார் ராசாங்கம்.

“அண்ணென் இல்லண்ணென்…“

“அய்யோ கேட்டு பாத்து கொடுக்கமா என் அப்பன் இப்படி என் மவள தள்ளிபுட்டானே..அய்யோ…அய்யோ..அய்யோ..“ செங்கம் அடித்துக்கொண்டு அழுதாள்.
குறிஞ்சிக்கு அழுகையும் ஆத்திரமும் பொத்துக்கொண்டு கண்கள் வழியே கசிந்தது. துக்க வீடு போல வீடே அமைதி ஏறி போய் கிடந்தது.

எல்லேந்தி தள்ளாடி கொண்டு வந்தான். நடையில் தடுமாற்றம் வேட்டி கட்டே தலைகீழாக இருந்தது.
ராசாங்கம் ஆவேசமாக பாய்ந்தார். “ஏய் சாராயம் வேற குடிப்பியாடா.. டேய்.. என் பொண்ணு வாழ்க்கைய இப்படி பண்ணிட்டிங்களேடா..“ ராசாங்கம் கத்தினார். அண்ணன்மார்கள் எல்லாம் கொந்தளித்தனர். எல்லரையும் அதட்டி அமைதி படுத்தி வைத்தார்கள் பொண்டாட்டிமார்கள்.

“ஏய் கைய எடு..கைய எடு..“ சொன்னதையே சொன்னான் எல்லேந்தி.

“இந்த பய வேண்டான் வாமா நீ..“ என்றாள் செங்கம்.

“எங்க வர சொல்லுர… எங்க வர சொல்லுர வந்து முக்காடு போட்டுகிட்டு வாழா வெட்டியா உட்கார சொல்லுரியா போரவ வரவயெல்லாம் இவ மூஞ்சில முழிக்கனும் புருஷன விட்டுட்டு வந்தவன்னு சொல்லுரதுக்கா… பொண்ண கரையேத்துனா போதும்னு புடிச்சி தள்ளிவுட்டிய இப்போ வான்னு லேசா சொல்லிட்டிய.. பட்டாலும் கேட்டாலும் இது தான் என் வீடு நான் பொழச்சி கிடந்தா தலை பொங்கலுக்கு பட்டு துணி கொண்டுவா இல்லண்ணா என் பொறந்தவனுவோ கையால கோடிதுணி கொண்டாந்து போடுங்க..“ சொல்லிவிட்டு குறிஞ்சி உள்ளே சென்று சுவரோடு சுவராக சரிந்து விழுந்து அழுதாள்.

எல்லாரும் வந்த வழியே திரும்பி சென்றனர். இலைகளில் போட்ட சோறு போட்டபடியே கிடந்தது.

“அடப்பாவி அடப்பாவி இப்படி பட்ட பொண்ண இந்த பாடு படுத்திரியேடா.. சண்டாள பாவி..“குருவாயி அவனை அடித்து அழுதாள்.

“தப்பு பண்ணிட்டனே தப்பு பண்ணிட்டனே..“ மூலையில் சாத்திகிடந்த விளக்கமாத்தை எடுத்து அடி அடியென்று அடித்தாள்,  எல்லேந்தி விருட்டென்று எழுந்தான்.
குருவாயியை குனியவைத்து முதுகு மேலயே பொட்டு பொட்டு என்று ஆவேசமாக அடித்தான். வாய் வழியே எச்சி வழிந்தது விழிகள் சிவப்பு ஏறியது. குருவாயி அப்படியே படுத்து அழுதாள் குறிஞ்சி இது எதற்கும் வெளியே வந்து பார்க்கவே இல்லை அங்கவையும் சங்கவையும் கடந்து கத்தினார்கள்.


ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 7

 

அவசர புத்திகாரன்

 

மழை சடசடவென வெளுத்து வாங்கி கொண்டிருந்தது. இரவு நேரம் குடிசையில் இருந்த மங்கலான விளக்கின் ஒளியில் உட்கார்ந்து சுவற்றை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.

 

குருவாயி மாட்டு கொட்டகை மூலையில் அமர்ந்து இருந்தாள். மாட்டு சாணியும், மூத்திரமும் மேலே தெளிப்பது கூட உணர முடியாதவளாய் பித்து பிடித்தவள் போல உட்கார்ந்து இருந்தாள். அங்கவையும், சங்கவையும் பொட்டுகிழவி அழைத்துக் கொண்டு போய் தன் வீட்டில் சாப்பாடு போட்டு படுக்க வைத்திருந்தாள். குருவாயியையும் கிழவி அழைத்து பார்த்தாள், “நான் செத்து இந்த சவம் மட்டும் தான் கிழவி வெளிய போகனும் நான் போகமாட்டேன்.“ பிடிவாதமாக சொல்லிவிட்டாள்.

 

அடித்து கொட்டும் மழையில் சுயநினைவு அற்றவனாய் கிடந்தான் எல்லேந்தி. தவளைகள் குதித்து ஓடிக்கொண்டிருந்தது அவன் மேலே. மழை மெல்ல விட்டது. மெல்ல மெல்ல கண்விழித்தான். அவன் கண்முன்னே கண்ட வானம் பெரும் இருள் சூழ்ந்து போய் இருந்தது. அமைதி இருளை கவ்வி கொண்டு இருந்தது. அங்கங்கு கேட்ட  தவளை சத்தத்தோடு எழுந்து மெல்ல போய் திண்ணையில் அமர்ந்தான் வேட்டி எல்லாம் சேறாக இருந்தது.

 

குடிசையின் உள்ளே எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பை ஈசல்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. எல்லேந்தி விருட்டென்று எழுந்து எங்கோ நடந்தான்.

 

கொளஞ்சி வீடே அமைதியாக இருந்தது. இன்று டீ கடையை கூட திறக்காமல் திண்ணையிலேயே விழுந்து கிடந்தான். கொளஞ்சி எழுந்து வாசலுக்கு வந்தாள்.

 

“எங்கடி..“ என்றாள் மாரி.

 

“கொல்லைக்கு போகனும் அதுக்கும் போகமா அடக்கி வச்சிக்க சொல்லுறியா..“

 

“உன் வாய் தாண்டி உன்ன உருப்புடாமா பண்ணிட்டு“

 

“ஒன்னுகிட்டயும் உன் மவன் கிட்டயும் குப்பை கொட்ட வாய் தான் வேணும்.“ சத்தம் கேட்டு முத்து எழுந்து உள்ளே வந்தான்.

 

“என்னவான் இந்த ஓடுகாளிக்கு..“

 

“ஆ…ங்… கொல்லைக்கு போகனுமா..“

 

“நான் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிபுட்டன்ன.. அப்பறம் எதுக்குடா என்ன படுத்துறிங்க.. நான் அவன் கூட ஓடி போயிடுவன்னு நினைக்கிறியா“

 

முத்து அமைதியாக இருந்தான்.

 

“நீ என் பின்னாடியே வா…“

 

“ச்சை..வாய மூடு.. நீ அவங்கூட தான் போயன்டி நீ போன அடுத்த நிமிஷமே அவன தேடி வந்து அவன் தலைய தனியா வெட்டி எறிஞ்சிட்டு முண்டச்சியா இழுத்துகிட்டு வந்து போடுவண்டி“

 

“நான் போக மாட்டன்டா..“ ஆவேசமாக கிளம்பி கருவகாட்டை நோக்கி நடந்தாள். அந்த இருளில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் கொதகொதத்து கிடந்த சேத்துக்குள் நடந்தாள். எப்போதும் சந்திக்கும் புங்கை மரத்தடியில் எல்லேந்தி உட்கார்ந்திருந்தான்.  ஆந்தை ஒன்று ஓயாமல் கத்தி கொண்டேஇருந்தது.மேலெங்கும் சேறும் சகதியுமாக ஆளே தெரியாமல் உட்கார்ந்திருந்தான். கொளஞ்சி லாந்தர் விளக்கை மேலே உயர்த்தி அவன் முகத்தை பார்த்தாள். விளக்கு வெளிச்சம் கண் கூசியது தலையை நகர்த்தி பார்த்தான்.

 

“வாடி..வா…“

 

“எச்ச பயல அன்னைக்கே என் கழுத்துல தாலி கட்டிருந்தா இத்தனை நான் படுவேனாடா..எவ கழுத்துலையோ கட்டிபுட்டியேடா..“

 

“ஏய் துப்பு கெட்டவளே உன் அண்ணன்கிட்ட என்னத்தடி சொன்ன அவன் என் வீட்டுல வந்து பிரச்சனை பண்ணுனான்..“

 

“ஏன்டா புத்தி பேதலிச்சி போயிட்டா..இராசோறு எடுக்கவந்த முண்டை தான்டா போட்டு கொடுத்துட்டா..“

 

“அவள..வேரருக்குறேன்டி..“

 

“டேய், உன் வீரத்தை பொம்பளை கிட்ட போய் காட்டதடா..அப்பவே என் அண்ண கிட்ட வீரத்தை காட்டிருந்தா இன்நேரம் உனக்கு பொண்டாட்டி ஆகிருப்பேன்டா..“

 

கொளஞ்சி உடைந்து அழுதாள்.

அவளின் அழுகை சத்தம் அமைதியாக கிடந்த இருளையே கலங்க செய்தது.

 

மறுநாள் காலை பொழுது விடிந்தது. அந்த மண் மேட்டிலேயே கிடந்த எல்லேந்தி விடிந்து எழுந்தான். நேற்று இரவு கொளஞ்சி அழுதது எல்லாம் கண் முன்னே வந்து போனது.

 

“நான் வேற ஒருத்தன கட்டிகிறதா வீட்டுல ஒத்துகிட்டேன்.“

 

“எப்புடி டி என்ன மறந்துட்டு வேற ஒருத்தன கட்டிக்குவ..“

 

“நீ எப்படி பண்ணுனியோ அப்படி தான்.. நான் உன்கூட இப்படி வந்து திருட்டு தனமா படுத்தன்னா உனக்கு வப்பாட்டின்னு சொல்லும் ஊரு.“

 

“வாடி இந்த ஊர விட்டு போயிடுவோம்..“

 

“போயி..பயந்து வாழ சொல்றியா.. போடா..“

 

சுல்லென்று சூரியன் முகத்தில் அடித்தது. இத்தனை நாள் அடித்த மழைக்கு இந்த காலை வெயில் இதமாக இருந்தது. எல்லேந்தி மணல் மூட்டை விட்டு எழுந்து விடுவிடுவென்று கருவகாட்டுக்குள் நடந்தான்.

 

அன்பழகி மழையில் கூரை ஒழுகி நனைந்து கிடந்த அரிசி பானையில் இருந்த அரிசியை வெயிலில் காயவைத்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கு எதிரே ஆணின் கால் தெரிந்தது.

 

காயவைத்துக் கொண்டிருந்த அரிசியை எட்டி உதைத்தான் எல்லேந்தி.

 

“ஏன்டி பொட்ட கழுதை..“ அன்பழகி முடியை பிடித்து உலுக்கி எழுப்பினான்.

 

“சாமி..விடுங்க“ என்று கத்தினாள் அன்பழகி  சத்தம் கேட்டு அங்கிருந்த குடும்பங்கள் கூடியது. இருளி ஓடி வந்து “சாமி…உடுங்க சாமி.. என்ன தப்பு செஞ்சோம் சாமி..“என்று கெஞ்சினான்.

 

“எவ எவன்கூட இருந்தா என்னடி அத ஊரு பூரா தம்பட்டம் அடிக்க சொன்னதாடி உன்ன..“

 

“சாமி சத்தியமா நான் சொல்லல சாமி எனக்கு எதுவும் தெரியாது..“

 

“ஏய் சீ..எச்சி குடிக்கிறவ உனக்கே இம்புட்டு இருந்தா எனக்கு.. உன் மையித்த அறுத்து, முண்டச்சியா அழையிற உன்ன மொட்டச்சியா அழையவிடுறேன்டி.“

 

அன்பழகியை பிடித்து இழுஇழுவென்று இழுத்தான். முதுகு மேலேயே தொப்பு தொப்பென்று அடித்தான். வலி தாங்கமுடியாமல் கத்தினாள் அன்பழகி. அனைத்து சனமும் கூடி மன்றாடியது. அதற்குள் ஊருக்குள் செய்தி தெரிந்து வடக்கு தெரு தெற்கு தெரு சனம் எல்லாமே கூடியது. சிங்கபூரான் தொப்பையை அசைத்து அசைத்து வந்து சேர்ந்தார்.

 

எல்லேந்தியை பிடித்து வைத்திருந்தனர்.

“டேய்..டேய்..எல்லேந்தி பயல நீ நம்ம சாதிகார பயலா இருக்கியேன்னு..ஒன்னு ஒன்னயும் பொறுத்து போறேன். நீ செய்யுற காரியம் எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறியா. தெரியும்டா எல்லாம் தெரியும்.. ஊருக்கே தெரிஞ்ச விசயத்த இவ போய் புதுசா சொன்னாளா? போடா..போடா..இவனே...“ என்று எச்சரித்தான் சிங்கபூரான்.

 

“சாமி பாருங்க பொட்ட புள்ளைய புடிச்சி என்ன அடி அடிச்சிருக்காரு..“

 

“பாத்தேன்..பாத்தேன்.. நான் எல்லா சாதிக்கும் சமமானவன்..இந்த பய செஞ்ச தப்புக்கு அவனுக்கு சரியான தண்டனை கொடுக்குறேன்.இனுமே இவன் கொண்டு வந்து ஊருக்குள்ள வியாபாரம் பண்ற எதையும் வாங்ககூடாது. இவனுக்கு எவனும் வேலையும் கொடுக்க கூடாது.“

சிங்கபூரான் துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு நடந்தான். மூக்கன் பின்னாலேயே ஓடி போனான்.

 

“என்ன குழந்தை இப்படி சொல்லிபுட்டிங்க..அவன் நம்ம சாதிகாரான்.“

 

“டேய்..எடுபட்ட பயல..மூனு தெரு சனமும் ஒன்னா நின்னுச்சி பாத்தியா நான் இப்படி தீர்ப்பு சொன்னதும் இப்போ அந்த பயலுவோ என்ன நினைச்சிருப்பானுவோ நியாயமான மனுசன்யா..“

 

“குழந்தை எங்கயோ போயிட்டிங்க போங்க இப்ப இந்த எல்லேந்தி பயல எப்படி சமாதானம் பண்ணுவிங்க..“

 

“அவன் கிடக்குறான்டா பொழப்பத்தபய நாயி எங்க சுத்துனாலும் நம்ம காலுகிட்ட வந்து தான் ஆகனும்.. கட்சி வேலைய பாக்க இழுத்து போடுடா“ சொல்லி விட்டு இடிக்க இடிக்க சிரித்தான் சிங்கபூரான்.

 

குறிஞ்சி குருவாயியை போய் பார்த்தாள்.

 

“அத்த வாங்க நான் காபி தண்ணி வச்சி தாரேன்.“ குருவாயி எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தாள்.

 

கந்தப்பன் அவசர அவசரமாக ஓடிவந்தான்.

 

“அக்காவ்..அக்காவ்..“ கத்திக்கொண்டு ஓடி வந்தான். குருவாயி எதுக்குமே அசையவில்லை.

 

“ஆயி..“சிறிது மூச்சி வாங்கி விட்டு நடந்ததை சொன்னான்.

 

“வாக்கா..சீக்கிரம் வாக்கா அடிச்சிபுட போறாயிங்க..“என்று கந்தப்பன் முன்னாடி ஓடினான்.

 

“அத்தை சீக்கிரம் வாங்க..“கையை பிடித்து இழுத்தாள் குறிஞ்சி. குருவாயி கையை தட்டிவிட்டாள். குறிஞ்சி ஏற இறங்க பார்த்துவிட்டு வேகமாக ஓடினாள்.

 

அந்த சேத்துக்குள் விழுந்து அடித்து ஓடினாள் தாலியின் மஞ்சள் ஈரம் காய்வதற்குள். அவளுக்கும் எத்தனை கஷ்டமோ என்பது போல் ஊர் பொம்பளைகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்கள்.

 

சிலம்பன் லாரியை விட்டு வீட்டிற்கு வந்தான். அங்கவையும், சங்கவையும் சிலம்பனை கட்டிக்கொண்டு அழுதனர். சிலம்பன் ஓடி போய் குருவாயியை பார்த்தான். நேற்று எப்படி அமர்ந்திருந்தாலோ அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

சிவந்து போய் கிடந்த கண்களை உருட்டி சிலம்பனை பார்த்தாள், குருவாயி கண் கலங்கியது.

 

“அம்மா மேலயே கைய வச்சிட்டானா கேடு கெட்டபய.. எவ மயக்கத்துல இதெல்லாம் பண்றான் அவன் சங்க கடிச்சி துப்புறேன்டி இன்னைக்கு..“

கையிலியை தூக்கி மடித்து கொண்டு விழுந்தடித்து ஓடினான் சிலம்பன்.

 

குறிஞ்சி ஓடி வந்து வடக்கு தெருவை கடந்தாள்.

 

தெற்கு தெரு சனம் வடக்கு தெரு சனம் எல்லாம் களைந்து வந்து கொண்டிருந்தது. எல்லாம் குறிஞ்சியை பாவமாக பார்த்தது.

அவள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை எல்லேந்தியை தேடி ஓடினாள். ஒத்தை அடி பாதையில் எல்லேந்தி கிழிந்த சட்டையும் களைந்த தலையும் அவிழ்ந்த வேட்டியுமாக எதிரே வந்தான். கல்யாணம் முடித்து கட்டை வண்டியில் வந்த போது எத்தனை கம்பீரமாக இருந்தானே அவனா இது கிழிந்த கந்தல் துணியாக வருகிறானே என்று பார்த்தாள் குறிஞ்சி.

குறிஞ்சி எதிரே வந்து தலையை தொங்க போட்டு கொண்டு நின்றான். குறிஞ்சி வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். எல்லேந்தி உந்தி உந்தி முன்னே நடந்தான். குறிஞ்சி பின்னால் வந்தாள்.

 

வீர ஆவேசமாக எதிரே சிலம்பன் வந்து நின்றான். மூச்சு வாங்க வாங்க ஓடி வந்திருந்தான். மூச்சு இரைக்க வந்து எல்லேந்தி எதிரே நின்றான். எல்லேந்தியை முறைத்து பார்த்தான் சிலம்பன்.

 

“அம்மாவ அடிச்சியாடா..“

 

குறிஞ்சி பின்னால் அரண்டு போய் நின்றாள்.

 

எல்லேந்தி பதில் ஏதும் சொல்லாமல் தலையை தொங்க போட்டு கொண்டு நின்றான்.

 


ReplyQuoteKiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 8

வெந்த நெஞ்சுகூடு

சிலம்பன் ஓடி வந்து தன் தலையால் எல்லேந்தி நெஞ்சில் ஒரே முட்டாய் முட்டினான். எல்லேந்தி நிலை தடுமாறி குறிஞ்சி பக்கமாக மண்ணில் சாய்ந்தான். சிலம்பன் மீண்டும் ஆவேசமாக கைகளை ஓங்கி கொண்டு ஓடி வந்தான் குறிஞ்சி சத்தமாக கத்தினாள். “போதும்…போதும்..விடுங்க…“ கத்திக்கொண்டே குறிஞ்சி குறுக்கே வந்து நின்றாள்.
அவளை மீறி போய் அவனை தொட முடியவில்லை. சிலம்பன் விருட்டென்று திரும்பி வேகவேகமாக நடையை கட்டினான்.

எல்லேந்தி மெல்ல எழுந்து நடந்தான் குறிஞ்சி பின்னால் நடந்தாள். தெற்கு தெரு வடக்கு தெரு சணமே ஏதோ காணாத கதையை கண்டது போல கூடி நின்று குசுகுசுத்துக் கொண்டிருந்தது.
எல்லேந்தி வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்தான். குருவாயி இன்னும் மாட்டுக் கொட்டகையில் தான் உட்கார்ந்திருந்தாள். அங்கவையும் சங்கவையும் வீட்டு திண்ணையின் மறுபக்கத்தில் ஒடுங்கி போய் உட்கார்ந்திருந்தனர்.

அன்பழகி பித்து பிடித்தவள் போல வானத்தையே விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இப்படி ஊரே பார்க்குற மாதிரி வயசு பொண்ண இந்த சாமி இப்படி அடிச்சிபுட்டே..“, இருளி கடந்து கத்தினான். சூலி படுத்த படுக்கையிலேயே கண்களின் வழியே நீர் கசிந்து கொண்டிருந்தது. இது எதுவுமே உணராதவனாய் குடித்துவிட்டு வீட்டின் நடுவே விழுந்து கிடந்தான் சடையன்.

“சடையப்பன வேண்டிகிட்டு பெத்தேன். ஆம்பள புள்ள இது கடைசி காலத்துல கஞ்சி ஊத்தும்னு, முடியாத காலத்துலயும் நான் ஊத்திகிட்டு இருக்கேன். இதெல்லாம் பாத்து சகிச்சிகிட்டு கிடக்குறதவிட சாமி என்ன உன்னுகிட்ட கூப்பிட்டுக்கோ..“ இருளி கத்தி கத்தி அழுதான்.

அன்பழகி எழுந்து தலையை கொண்டை போட்டுக்கொண்டு “இப்போ என்ன சாவா விழுந்து போயிட்டு. முள்ளு குத்திப்புட்டேன்னு அங்கயேவா கிடக்குறோம் தூக்கி போட்டுட்டு வேலைய பார்க்குறது இல்ல..ஊரே முண்டச்சி முண்டச்சின்னு சொல்லி பழிச்சு பேசயில சாவாத நீ இப்போ சாவபோறியா..போ..போ போய் பொழப்ப பாரு..“

இரவு நேரம் வீட்டிற்கு விளக்கேற்றிவிட்டு குறிஞ்சி மீண்டும் குருவாயியை  அழைத்தாள், இதோடு நுறு தடவைக்கு மேல் போய் அழைத்திருப்பாள். அவள் வருவதாக இல்லை இந்த சிலம்பனும் எங்கு சென்றான் என்று தெரியவில்லை. அங்கவையும், சங்கவையும் கூட வீட்டின் உள்ளே வர மறுத்தனர். வடித்த சாதம் பானையில் அப்படியே தண்ணீர் ஊற்றி இருந்தது. வீட்டின் உள்ளே வந்து பார்த்தாள் எல்லேந்தி விழித்துக்கொண்டு படுத்திருந்தான். அவனின் மார்பு சிலம்பன் முட்டிய முட்டில் சிவந்து போய் இருந்தது. மஞ்சளை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து நெருப்பில் காட்டினாள்.
எல்லேந்தி அருகே வந்து “மஞ்ச பத்து அப்படியே எடுத்து கொஞ்சம் சூட்டோட நெஞ்ச சுத்தி போடுங்க..இரத்தம் கட்டு இருந்தா வடியும்..“

சொல்லிக்கொண்டே இருந்தாள், அவன் எதையும் காதில் வாங்குவது போல இல்லை. அந்த சிவந்து கிடந்த நெஞ்சு கூட்டில் ஏதோ கருப்பெழுத்துகள் மின்னியது. குறிஞ்சி இப்போது தான் பக்கம் வந்து உற்று பார்த்தாள். கொளஞ்சி என்று எல்லேந்தி தன் மார்பில் பச்சை குத்தி இருந்தான். இதை பார்த்தபோது குறிஞ்சியின் நெஞ்சுகூடு வெந்தது வேதனையில்.

அப்படியே போய் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தூரல் விழ ஆரம்பித்த வானத்தோடு சேர்ந்து இவளின் விழியும் தூரல் சிந்தியது.
விடிந்தது. மழை பெய்து கொண்டே இருந்தது. அந்த சாரலில் தான் விடிய விடிய கிடந்தாள் குறிஞ்சி. அப்படியே திண்ணையிலேயே தூங்கி போய் இருந்தாள். எழுந்து பார்த்தாள் விடிந்தும் விடியாமல் கிடந்த வானத்தை மெல்ல திறந்த விழிகளால் பார்த்துக்கொண்டே படுத்து இருந்தாள். சற்று நேரத்தில் மழைவிட்டது.  குறிஞ்சி எழுந்து வாசலை கூட்டி தள்ளி விட்டு சாணி மொழுகினாள். எல்லேந்தி எழுந்து வந்து திண்ணையில் உட்கார்ந்து பீடியை புகைத்துக் கொண்டு இருந்தான்.

கந்தப்பனின் மாட்டுவண்டி கண்ணிக்குள் வந்துக்கொண்டு இருந்தது. கீத்து மரம் எல்லாம் ஏத்தி வந்துக்கொண்டிருந்தது.

பின்னாலேயே நாளைந்து வடக்கு தெரு ஆட்கள் வந்தனர் அவர்களுக்கு பின்னால் சிலம்பன் வந்துக்கொண்டிருந்தான்.

வண்டி வந்து வாசலில் நின்றது.
வடக்கு தெரு ஆட்கள் கீத்து, கம்பையெல்லாம் இறக்கி வைத்தனர். சிலம்பன் முன்னே வந்து “ஏய் மாடசாமி இந்தா பாரு மாட்டுகொட்டகைக்கு அந்தண்ட போடு கொட்டாய. தணிச்சி போட்டு நாலுபக்கமும் நெருக்க கம்ப ஊணி கீத்த அடை.“

“சரி சாமி..“ மாடசாமி தலையை ஆட்டினான்.

குறிஞ்சி ஓடி போய் குருவாயை பார்த்தாள்.

“அத்த இப்படி நான் வந்து நாலாண் நாளே தனி குடிசை போட்டா ஊரு என்ன சொல்லும்.“

“அது தான் கவுரவம்..என் மேல கையவச்சவன் நாளைக்கு அந்த வயசு பொண்ணுவோள அடிச்சான்னா என்ன பண்றது. தனியாவே இருந்துக்குறோம். உன் மேல எந்த தப்பும் இல்ல எல்லாம் என் மேல தான்“, குருவாயி முந்தானையில் மூக்கை சிந்தினாள்.

கந்தப்பன் மற்றொரு திண்ணையில் அமர்ந்தான்.

“சாமி.. ஆளுவோ இந்த கீத்த இறக்கட்டும். டீ கடை சாமி வீட்டு கல்யாணத்துக்கு இராத்திரி பந்த போட்டுட்டு வந்தோம். அங்க அருவா கத்திய விட்டுபுட்டு வந்துட்டேன் போய் எடுத்துட்டு வந்தரேன். பாலை கிழிக்க அதான் தோதுபடும்..“
சொல்லிக்கொண்டே மாடசாமி ஓட்டமும் நடையுமாக ஓடினான். அத்தனை நேரம் அமைதியாக இருந்த எல்லேந்தி வேக வேகமாக எழுந்து கண்ணியை கடந்தான். எல்லாத்தையும் குறிஞ்சி பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
எல்லேந்தி கொளஞ்சி வீட்டுக்கு எதிரில் இருந்த புள்ளையார் கோவிலில் மறைந்து நின்றபடி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு பொண்ணு குத்துவிளக்கை எடுத்துக்கொண்டு முன்னாடி வண்டியில் ஏறியது. பின்னாலேயே கொளஞ்சி மணக்கோலத்தில் வந்தாள். கழுத்தில் மின்னிக் கிடந்தது புத்தம்புது தாலி கயிறு. பின்னாலேயே வாட்டசாட்டமான ஆளும் வந்தான்.
“முத்து புடிச்சாலும் மாப்பிளையே சிங்கமாட்டம் புடிச்சிருக்க“ என்றது திண்ணையில் உட்கார்ந்து கிடந்த கிழம்.

“பட்டாளத்து மாப்புளன்னா சும்மாவா..சொந்த அத்த மவன் வேற..என்ன இராத்திரியோட இராத்திரியா கல்யாணம் பண்ணுனது தான் சொந்த பந்தம் எல்லாத்தையும் கூப்பிட முடியாம போச்சி.“ என்றது இன்னோரு பெருசு.

கொளஞ்சி முன்னால் ஏறி வண்டியில் அமர்ந்தாள். பின்னாலேயே வாட்ட சாட்டமான மாப்பிளை ஏறிக் கொண்டான்.

எல்லேந்தி மனது குமுறியது. நேர சாராய கடையை பார்க்க நடந்தான்.
இரவு நேரம் இன்னும் எல்லேந்தி வீடு திரும்பவே இல்லையே என்று வாசலையே பார்த்துக்கொண்டு குறிஞ்சி உட்கார்ந்திருந்தாள். புதிதாக போட பட்டிருந்த குடிசை வீட்டை எட்டி பார்த்தாள் குறிஞ்சி. வாசல் கதவு சாத்தப்பட்டு இருந்தது. விளக்கு எரியும் வெளிச்சம் மட்டும் தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் எல்லேந்தி தள்ளாடி தள்ளாடி வந்து சேர்ந்தான் வீட்டிற்கு, குறிஞ்சிக்கு புரிந்தது. நடுவீட்டில் சம்மனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். குறிஞ்சி தட்டில் சோத்தை போட்டு கருவாட்டு குழம்பை ஊற்றி வைத்தாள். அள்ளி அள்ளி திண்ணான், திண்ண கையை வேட்டியில் துடைத்து விட்டு படுத்துக்கொண்டான். குறிஞ்சி  பாயை விரித்து கதவு ஓரமாக படுத்து இருந்தாள். நடு இரவு யாரோ குறிஞ்சியின் முதுகு பின்னால் மூச்சு விடுவது போல இருந்தது. அவள் முதுகை ஏதோ உதடுகள் கோலம் போட்டது. குறிஞ்சி விழித்துக் கொண்டாள். அவள் திரும்பவில்லை விலக நினைத்தாள், “நான் தான்“ என்றது அந்த குரல்.

 


ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 9

வைராக்கியத்திற்கு பிறந்தவ

குறிஞ்சி முதுகே பட்ட மூச்சு காற்று அவள் உடம்பை தீயாய் எரிய செய்தது. அவள் இடைகளை இறுக்கிய கைகள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. அவள் கால்களோடு பின்னிய கால்கள், கால்களை சுற்றிய நாகம் போல பயமுறுத்தியது. இணைந்த அவனது உடல் அந்த இருளில் அவன் மார்பில் மின்னிய கொளஞ்சியின் பெயர் குறிஞ்சிக்கு ஒருவித அருவருப்பை உண்டு பண்ணியது. அவள் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.

பொழுது புணர்ந்தது. இருளி டீ கடையில் போய் டீ பார்சல் வாங்கி வந்து படுத்து கிடந்த அன்பழகி அருகில் வைத்து எழுப்பி விட்டான். சடையன் எதையோ வீட்டுக்குள் தேடிக்கொண்டு இருந்தான்.

“என்னத்தடா தேடுற சல்லி பயல பத்து பைசா தேராது..“

“த்த..பிச்சைகார பயல..சல்லி பைசாக்கு புண்ணியம் இல்லாத பய இவன்லாம் ஒரு அப்பன் தூ..“

“துப்புடா தேவுடியா பயல“

“அப்பன்னு கூட பார்க்கமாட்டன் வச்சன்னா செவத்துல போய் சாஞ்சிடுவ..“

இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அன்பழகி குறுக்கே கடந்து தடுத்து பார்த்தாள் ஒன்று முடியவில்லை.

“அம்மாவு..இது ரெண்டும் அடிச்சிகிட்டு சாகட்டும்..கார்த்திகைக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு எல்லாம் வீட்டு வேலைக்கு கூப்பிட்டுருக்காங்க. நான் போயிட்டு வரேன்.. இந்தா டீ இத குடிச்சிட்டு படுத்துக்கோ நான் வந்து கஞ்சி வச்சி தரேன்.“ கொடுத்துவிட்டு மளமளவேன கிளம்பி வெளியில் வந்தாள். இருளியும், சடையனும் ஆளுக்கு ஒரு திண்ணையில் மோட்டை பார்த்தபடி அந்த கோபதனல் தணியாமல் இருந்தனர்.

“உனக்கு வேலைவெட்டி எதும் இல்லையா..“

“ஏன் இல்ல எனக்கு நிறையா இருக்கு இந்தா கிடக்குறானே ஒன்னுத்துக்குமே உதவாதவன்.“

“அப்பாவு நீ வா..“ என்று இழுத்துக்கொண்டு நகர்ந்தாள் அன்பழகி.

ஒத்தையடி பாதையில் இருவரும் நடந்து வந்து கொண்டிருக்க எதிரில் சிலம்பன் வந்துக்கொண்டிருந்தான்.
இருளி தலையை குனிந்துக்கொண்டே கடக்க முற்பட்டான் அன்பழகியும் முக்காடை போட்டுக்கொண்டு சிலம்பனை கடந்தாள்.

“இருளி..“

இருளி திரும்பி “சாமி..“ அன்பழகி திரும்பிய படியே தள்ளி நின்று கொண்டிருந்தாள்.

“எங்கண்ணென் பண்ணுனது தப்புதான் அதுக்கு பதிலா நான் கும்பிடுறேன்.“

“சாமி என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு. அது கிடக்கட்டும் விடுங்க சாமி.. சாமி“ இருளி தலையை சொறிந்துக்கொண்டே இருந்தான்.

“காசு பணம் ஏதாச்சும் வேணுமா.“

“அய்யோ மவராச அதெல்லாம் வேண்டாம்..என் மவனுக்கு எதாவது பொழப்பு பாத்து கொடுத்திங்கன்னா…. நீங்க நாளு இடத்துக்கு போற நீங்க…. அப்படியே இந்த பாழா போன குடியையும் நிறுத்த ஏதாவது பண்ணிவுட்டிங்கன்னா..“

“அடுத்தவாரம் மெட்ராசுக்கு போறேன் லோடு ஏத்தி, அங்க ஏதோ இந்த குடிகாரபயலுவோ திருந்த ஆஸ்பத்திரி இருக்காம். அது அரசாங்கம் தான் நடத்து தான். அதுல சேத்துவுடுறேன்.“

“சாமி நீங்க மெட்ராசா போறிய.. சாமி சின்ன செய தான்..“

“சொல்லு..“

“அங்க எங்க இனத்துக்காரங்களுக்கு வீடுகட்டி தராரம் எம்ஜியாரு.. அது என்னன்னு??“

“பாப்போம்.. நான் வரேன்“

“நல்லது சாமி..“ விலகி வழிவிட்டான் இருளி.

“தங்கமான பையன்..தங்கம்.. ஒன்னு அப்படி இருந்தா இன்னொன்னு இப்படி தான் இருக்கும்.“ இருளி அன்பழகியிடம் புகழ்ந்துக்கொண்டே வந்தான்.

குறிஞ்சி வாசலுக்கு சாணி மொழுகி கொண்டு இருந்தாள். எல்லேந்தி களைந்த வேட்டியை சரிசெய்து கொண்டு எழுந்து வெளியே வந்தான்.
பீடியை எடுத்து பற்ற வைத்தான். கோலம் போட்டு கொண்டு இருந்த குறிஞ்சியை கண்களை சுருக்கி பார்த்தான். ஈரதலை நெற்றி நிறைந்த பொட்டு மஞ்சள் பூசிய முகம் ஜொலித்தாள். புருவத்தை தேய்த்து கொண்டு இருந்தான்.

சங்கவை சொம்பில் டீ வாங்கி கொண்டு வந்தாள்.

“த..இங்க வா..“

“அண்ணென்..“

“என்னது"

" டீ..“

“ஏன் மாடு கரக்கலயாக்கும்..“

“இல்லன்னே சினையா இருக்கு மாசம் நெருங்கிட்டுன்ன அதான் கரக்கல.“

“எனக்கு ஒரு குவளையில ஊத்திட்டு போ..“

“இந்தா தரேன்னே..“, அண்ணன் கேட்டதும் வீட்டுக்குள் ஓடி போய் குவளையை எடுத்து வந்து ஊற்றி கொடுத்தாள்.

“இந்தா அவளுக்கு..“ குறிஞ்சி தலையை நிமிர்ந்து எல்லேந்தியை பார்த்தாள்.

“எனக்கு எதுவும் வேண்டாமுடி..நீ போய் அத்தை கிட்ட கொடு..“

சங்கவை அங்கிருந்து நகர்ந்தாள். குறிஞ்சி எழுந்து உள்ளே போனாள் காபி டம்ளரை தூக்கி கொண்டு எல்லேந்தியும் உள்ளே போய் கதவடைத்தான். வெளியில் உட்கார்ந்திருந்த குருவாயிக்கு சந்தோஷம் மண்டாடியது. சங்கவை காபியை ஊத்திக்கொண்டு குறிஞ்சி வீட்டை நோக்கி போக முற்பட்டாள்.

“எங்கடி போறவ..“

“மதினிக்கு காபி தண்ணி..“

“போதும் போ“ என்று உள்ளே துரத்தினாள்.

உள்ளே வந்தவன் “இந்தாடி இத குடி“
காபி டம்ளரை நீட்டினான்.

“இது என்னவாம் உருட்டா“

“என்னத்த உருட்டு கொடுத்தாவோ.“

“உனக்கு தெரியாது??“ எல்லேந்தி கண்களை குறிஞ்சி முறைத்து பார்த்தாள். இப்போது தான் அவள் கண்களையே பார்க்கிறான். எத்தனை விரிந்த விழிகள் அந்த பார்வை சட்டென்று கொளஞ்சியை கொண்டு வந்தது. தலையை கீழே போட்டான்.

“யான்..அவ நியாபகம் வந்துட்டா..“ சுவரோடு போய் உட்கார்ந்தான்.

“உன்னால அவள மறக்க முடியல ஆனா என்னோட படுக்க முடியுது. அவள நினைச்சிகிட்டு தானே படுத்த முத தடவையா இப்போ தானே தலைய தூக்கி பாக்குற என்னைய..“

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல“

“உனக்கு எம்புட்டு தைரியமுன்னா நேத்து அவ தாலிகட்டி போன ஒன்ன நீ தாலி கட்டுனவ தேவைபடுறா.. அவ பேர நெஞ்சில வச்சிகிட்ட என் முந்தில தலைய வைக்கிற“

எல்லேந்தி விருட்டென்று எழுந்து கதவை திறந்தான்.

வாசலில் ஏதோ மாட்டு வண்டி நின்று கொண்டு இருந்தது. குறிஞ்சி பின்னாடி இருந்து வந்து பார்த்தாள்.
வண்டியில் அரிசி மூட்டை பருப்பு மூட்டை இரண்டு நாட்டு கோழி கால்கள் கட்ட பட்டு தொங்கியது அறைசாமான்கள் எல்லாம் இருந்தது.

“தாயி..நல்லா இருக்கியளா..“

“மாடன் என்னது இது??“

“அப்பாரு கொடுத்துவுட்டாப்புள சாமனுவோ“

“ஏய் மாடன் மருவாதையா எல்லாத்தையும் எடுத்துகிட்டு போ. இங்க என்ன பிச்சையா எடுக்குது இவரு இதெல்லாம் கொடுத்து விட்டுருக்காரு“

மாடன் தலையை சொறிந்து கொண்டு குனிந்து நின்றான்.

எல்லேந்தி அவள் கோபத்தை பார்த்தான்.

குருவாயி அவள் குடிசையில் உட்கார்ந்த படியே “வைராக்கியதுக்கு பொறந்தவ..“ என்று முனுமுனுத்தாள்.

“இந்தா வண்டிய கட்டு திருப்பிட்டு போ..த..கிளம்பு“ அதட்டினாள் குறிஞ்சி.
மாடன் வண்டியை கட்டினான்.

“திருப்பிவுட்டவ சோத்துக்கு என்ன பண்ணுவ..“

“பட்டினிய கிடப்பேன்.“

“நீ என் கிடக்கவ நான் போய் எதும் வேலை கிடைக்குதான்னு பாக்குறேன்.“ எல்லேந்தி எழுந்து கண்ணியில் நடந்தான். குறிஞ்சி திரும்பி குருவாயியை பார்த்தாள்.

“சாமர்த்தியகாரி..“ மருமகளை மெச்சிக்கொண்டாள்.

எல்லேந்தி ஊர் ஆட்கள் பொதுவாக கூடும் இடம் நடுக்கரையில் வந்து அமர்ந்திருந்தான்.

“என்னவன் எல்லேந்தி இங்க உட்காந்திருக்க“

“வா..சித்தப்பா“

“பொழப்பு இல்லையாள“

“அதான் தலைவரு சொல்லிபுட்டாரே“

“ஏன்வ நீ போய் வெளியூர்ல எதும் கிடைக்கு தான் பாருல பக்கம் தானேல டவுனு..“

எல்லேந்தி எழுந்து பஸ்சுக்காக ஒத்தையடி பாதையில் நடந்தான்.
ஏறுவெயிலாக இருந்தது பஸ்க்காக நின்று கொண்டிருந்தான் நீண்ட நேரமாகியும் வரவில்லை. ஏதோ யோசனை வந்து ஊருக்குள் திரும்ப முற்பட்டான், பஸ் வந்தது. பஸில் இருந்து முத்துகாளை இறங்கினான்.
எல்லேந்தி முறைத்துக்கொண்டு நின்றான். “பொழப்பத்த பய..“ முனங்கி கொண்டு நடந்தான். சுருக்கென்றது எல்லேந்திக்கு.

“ஏன்வே ஏறுறியா இல்லையாயா“ என்றார் நடத்துனர்.

“வேண்டாம்யா.. போ.. எனக்கு வேற வேலை இருக்கு..“

எல்லேந்தி சிங்கபூரான் வீட்டு கேட்டை திறந்துக்கொண்டு வீட்டருகே பிரவேசித்தான்.


ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 10

வாழ்க்கை சுழல்

மூக்கன் வாசலில் உட்கார்ந்திருந்தான் யாரோ கேட்டை திறக்கும் சத்தம் கேட்டு எட்டி பார்த்தான். எல்லேந்தி வருவதை கண்டதும் “மனுசன் சரியா கணிச்சிருக்கான்யா..“ கண்டு கொள்ளாதது போல் திரும்பி உட்கார்ந்து கொண்டான்.

“மூக்கா..“

“யாரு??“தலையை திருப்பி பார்த்தான்.

“எல்லேந்தி வாப்பா..வா..“

“மூக்கா தலைவர பார்க்கனும்..“

“தலைவரையா என்ன விஷயம்“

“ஏன் என்ன விஷயம்னு உன்கிட்ட கொட்டனுமோ..“

“ஆ…எங்க கிட்ட சொல்லாத விஷயமா? உட்காரு போய் கேட்டுட்டு வரேன்.“

எல்லேந்தி வாசலில் கிடந்த மர நாற்காளியில் அமர்ந்து கால் ஆட்டிக்கொண்டு தோப்பை சுற்றி கண்களால் நோட்டம் விட்டான்.

நடு வராண்டாவில் அமர்ந்து உப்பு கல்லையை கைகளால் தேய்த்து வாயில் போட்டுக்கொண்டு கருப்பு வெள்ளை டிவியில் செய்தி கேட்டுக்கொண்டிருந்தார் சிங்கபூரார்.
“என்னடா..“ மூக்கன் வருவதை உணர்ந்தே திரும்பி பார்க்காமல் கேட்டான்.

“குழந்தை உங்கள பாக்க எல்லேந்தி வந்துருக்கான்.“

“ஆ..ஆ..நான் சொல்லல“

“ஆமாம்..“நெலிந்துக்கொண்டு “நீங்க அதான் தலைவரா இருக்கிங்க“

“வர சொல்லு அவன“ , மூக்கன் வேகமாக வெளியே ஓடினான்.

“எப்பா எல்லேந்தி உள்ள வாயா“
எல்லேந்தி எழுந்து துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு உள்ளே சென்றான்.

“வணக்கம் குழந்தை“

“வா..வா..“

எல்லேந்தி சற்று பணிவுடன் நின்று கொண்டான்.

“என் பொழப்பு கெட்டு போச்சு என்ன பண்றதுன்னு தெரியல வெளியூர பார்க்க போவலாம்னு இருக்கேன் போறதுக்கு முன்னாடி உங்கள பார்த்துட்டு…“

“டேய் முட்டா பயல எதுக்குடா ஊர விட்டு போற, நீ செஞ்சது தப்பு இல்ல ஆனா தப்பு…. எப்படி? ஏய் எல்லேந்தி நம்ம காலுக்கு கீழ போற எறும்பு கடிச்சா அப்படியே காலால வச்சி ஒரே நசுக்கா நசுக்கி தூக்கி எறிஞ்சிட்டு போகனும். அத விட்டுட்டு குனிஞ்சி கையில புடிச்சி அப்பறம் நசுக்குனா உனக்கு என்ன மரியாதை இருக்கு“
“புரியுதா..“

“புரியுது குழந்தை ரொம்ப கோவம் வந்துட்டு அதான் அப்படி நடந்துட்டேன்.“

“அது நம்ப சாதி அப்படிடா, பொசுக்குன்னு கோவம் வந்துடும் ரோஷம்டா..நம்ம கட்சில இருடா எதும் கட்சி வேலைய பாரு நாளையில இருந்து பிரச்சாரம் போவனும். சுத்தி முத்தி பாத்தா யார்ரா நீ, என் பங்காளி நடேஷன் மவன் தானடா. உனக்கு செய்யாம யாருக்குடா செய்ய போறன். எலக்சன் முடியட்டும் நம்ம காட்டு களனியிலயே வேலைய பாரு??“

“ரொம்ப சந்தோஷம்..“

“இப்போதைக்கு உனக்கு நான் கொடுத்த தண்டனை தண்டனையாவே இருக்கட்டும்.“

எதையோ பெருசா சாதித்தது போல கள்ள சிரிப்பு அரும்பியது சிங்கபூரானுக்கு.

குருவாயி நடையாக நடந்து ஒத்தையடி பாதையில் போய் கொண்டிருந்தாள்.

“எங்க போறவ இந்த வேகாத வெயிலுல“

“அத்தாச்சியா, எங்க காட்டுக்கு வந்தியலா??“

“ஆமான்டி“

“இந்தா சம்மந்தி வீடு வரையும் போறேன்.“

“போ..போ..“

ஒத்தையடி பாதை ஏறும் போது பேருந்தும் வந்தது “நிறுத்துயா நிறுத்து“ கத்திக்கொண்டு ஓடி ஏறினாள்.

கனகப்பன் திண்ணையில் படுத்துக் கிடந்தார். குருவாயி களைத்து போய் உட்கார்ந்திருந்தாள். செங்கம் சொம்பில் தண்ணியை கொண்டு வந்து நீட்டினாள்.

“அந்த கழுதைக்கு அத்தனை திமிரு.. குடுத்துவுட்ட அரிசி பருப்பெல்லாம் திருப்பி உட்டுருக்கு“ என்றான் கோபமாக ராசாங்கம்.

“உங்க கையால கொண்டு வந்து குடுத்து இருந்தா வாங்கி சந்தோஷமா உள்ள வச்சிருப்பா, நீங்க என்ன பண்ணுனிய வண்டிக்காரன்கிட்ட கொடுத்துவுட்டிய. எப்படியா வாங்குவா கனகப்பன் மாமா வளர்ப்பு ரோஷமா தான் இருக்கும்.“

செங்கம் அடுப்பாங்கறையில் களியை கிண்டிக்கொண்டிருந்தாள்.

“என்ன மதினி களி கிண்டுறியா சோறாக்களயா??“ கேட்டுக்கொண்டே வாசலை எட்டி பார்த்துவிட்டு “மதினி அன்னைக்கு நடந்தத மாமாகிட்ட சொன்னியலா??“

“எப்படி சொல்ல சொல்றிய மனுசன் நாண்டுக்குவாரு??“ சொல்லும் போதே செங்கம் தொண்டை குழி அடைத்து கண்ணீர் சொரிந்தது.

“இப்ப ஏன் கலங்குறிய எல்லாம் நல்லபடியா அவ குடும்பத்த புடிச்சிகிட்டா புருஷனையும் கைக்குள்ள வச்சிட்டா நல்லபடியா தான் ரெண்டும் இருக்குதுவோ. நான் வந்ததே தாலி பெருக்கி போடுறத பத்தி பேச தான்.“

“இந்த மனுசன் இனிமே அந்த படி ஏறமாட்டாரு.“

“இப்படி சொன்னா என்ன பண்றது அப்படியே உட்டுடுவியலா பெத்தத“

“அது எப்படி“

“அப்பறம்“

“பொதுவா ஒரு இடத்துல வையுங்க“

“கோயிலுல வைக்கவா??“

“வையுங்க பெருக்கி போட்டு நாங்க கூப்புடுகிட்டு வரது தான முறை“

“அது வேண்டாம்..இப்போ தான் ரெண்டும் ஒன்னும் மண்ணா இருக்கு மறுநாள அழைச்சிட்டு வந்தா அவன் பேதளிச்சி போவான்.“

“ஒரு வாயி சாப்புட்டுட்டு போங்க“
“வேண்டாம் மதினி வேலை கிடக்கு, மாமா வரட்டுமா??“

“என் உடனே போறவ??“

“தலைக்கி மேல வேலை கிடக்குன்ன“
குறிஞ்சி மோர் கடைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
எல்லேந்தி வந்து அருகே உட்கார்ந்தான்.

“கொஞ்சம் தண்ணி கொண்டா..“
கடைந்த மோரில் உப்பு போட்டு ஆத்தி கொண்டு வந்து கொடுத்தாள்.
“என்னவான் வேலை விஷயம்..“

“சிங்கபூராருகிட்ட பேசிட்டேன், கொஞ்ச நாளு போவட்டும் அதுவரையும் கட்சி வேலைய மறவா பாக்க சொல்றாரு“

“மறவா பாத்தா சோத்துக்கு என்ன பண்ணுறது.“

“அதான் யோசிக்கிறேன் எதும் காசு கொடுக்காம இருக்கமாட்டாரு.“

“நான் எதும் வேலை வேட்டிக்கு போவா“

“யாரவ??ஏன் இடுப்பு செத்தவனா நீ போய் தாங்கபோற“

“பொம்பளைய வேலைக்கு போனா என்னவாம்..“

“ஆன்..பாப்போம்..“

சட்டை அவிழ்த்து ஆணியில் மாட்டி விட்டு தலையை கைக்கு கொடுத்து கீழே சாய்ந்தான். மோர் குடித்த குவளையை எடுக்க குனிந்த குறிஞ்சி அவன் மார்பில் கிடந்த பெயரை பார்த்தாள்.

எல்லேந்தியும் கவனித்து விட்டு திரும்பி படுத்துக்கிடந்தான். முந்தியை உதறிவிட்டு வெளியில் வந்தாள். குருவாயி வந்து நின்றாள்.

“உங்கவூட்டுல போய் பேசிட்டு வந்துட்டேன் தாலி பெருக்கி போட, வர சாழகிழமை வரன்னு சொல்லிருக்கவோ“

“ம்ம்..“

“இங்க இறங்கி வா..“ தனியாக அழைத்துக்கொண்டு சென்றாள். முந்தியில் முடிந்து இருந்த பணத்தை எடுத்து கொடுத்தாள்.

“எதும் கறி மீனு எடுத்து போடு“

“அவோலுக்கு சொன்னது தான் உங்களுக்கும் உங்களுக்கு எம்புட்டு ரோஷம் இருந்து நீங்க தனியா போனியலோ அதே தான் இங்கயும்.“

“அவனுக்கு வேலைகிடைக்குற வரைக்கும் தான“

“அவருக்கு வேலை கிடைக்க வரைக்கும் நான் வேலைக்கு போவேன்.“ சிலுப்பிக்கொண்டு உள்ளே சென்றாள்.

குருவாயி வாயில் கைவைத்துக் கொண்டு நின்றாள்.

கோயிலில் வைத்து தாலியை பெருக்கி போட்டனர். கனகப்பன் மட்டுமே எல்லேந்தியிடம் பேசிக்கொண்டு இருந்தார் வேறு யாருமே பேசவே இல்லை. குருவாயி கூட எல்லேந்தியிடம் எதுவுமே பேசவில்லை.
அன்று இரவு எல்லேந்தி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.

“இன்னும் உன் ஆயி, அப்பனுக்கு என் மேல கோபம் போவல போல“

“எப்படி போவும் காலத்துக்கும் போவாது.“

“உனக்கு போயிட்டாக்கும்??“ திரும்பி குறிஞ்சி எல்லேந்தியை பார்த்தாள்.
அன்பழகி வாசலில் உட்கார்ந்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள். முனி வீட்டுக்கு அவளின் மகனும் மருமகளும் திருப்பூரில் இருந்து வந்திருந்தனர். முனி இராசோறு வாங்க சென்று விட்டாள். அன்பழகி இந்த சம்பவத்துக்கு அப்புறமாக இராசோறு வாங்க போவதே இல்லை. திடீரென்று ஏதோ முனகல் சத்தம் கேட்டது.

“விடுயா உங்க அம்மா வந்துட போவுது.“

“அது இப்போ வராதுடி வாடி“

“யோவ் போயா விடுயா“ அன்பழகியின் தொண்டை குழிக்குள் எச்சில் இறங்க மறுத்தது. அவள் உடல் சில்லிட்டது. மழை பெய்ய தொடங்கியது. உடலில் ஏதோ ஒரு தடுமாற்றம், அந்த சத்தம் அவளை ஏதோ செய்தது. வயது பெண்ணுக்குள் ஏற்படும் நிலைமாற்றம் தான் அதை அவளால் உணர முடிந்தது. அவளின் ஆசாபாசங்கள் எல்லாம் கண்ணீராக வெளியேறி கொண்டிருந்தது. கைகளை பிசைந்துக்கொண்டு எழுந்து வந்து அம்மாவின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

சூலி மெல்லமாய் தலையை நீவிக்கொடுத்தாள்.

சூலி ஜாடையாக இருளியிடம் அன்பழகிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பதை பற்றி கேட்டாள்.

“அடிப்போடி பொசக்கெட்டவலே அதெல்லாம் பெரும் தப்புடி இன்னொரு கல்யாணமா?? எவன்டி கட்டிக்க வருவான். ஊரு சனம் என்னத்த சொல்லும்.“

“ஆங்..அங்..அங்..“

“வெளியூருல மாப்பிளை கொண்டு வரவா... உன் அப்பன் சொத்து சேத்துட்டு போயிருக்கான் பாரு?? மறு கல்யாணமுங்குறது பாவம்டி பாவம். அதை பத்தி பேசுன செவுட்டுல அடிச்சி புடுவேன்.“

பற்றி எரியும் உடல் நெருப்பில் உருகி கொண்டு இருந்தது அன்பழகியின் உயிர். சுருண்டு போய் சுருங்கி கிடந்தாள்.

எல்லேந்தி குறிஞ்சியின் தாலியை பிடித்து இழுத்து பக்கத்தில் அழைத்தான்.

“உனக்கு சம்பாதிச்சி தங்கத்துல வாங்கி போடுறேன்.“

“இப்படியே பேசி தான் அவள மயக்கி வச்சியாக்கும். தெரியாம கேட்குறேன் எப்படி ஒரே நாள்ல மனச மாத்திக்கிட்டவன்.“

“பொட்டகழுதை ஊருல எவனும் தப்பே செய்யலையா நான் தான் செஞ்சிபுட்டனா அதையே பேசுறவ??“

“அப்போ நீ செஞ்சது தப்பு, சரி இப்படி அவ பேர வச்சிகிட்டு என்கிட்ட வரயில எனக்கு எப்படி இருக்கும் நான் எவன் பேரையும் வச்சிகிட்டு உன்கிட்ட வரவா??‘‘

பளீச் என்று கன்னத்தில் அறைந்தான். விழுந்த அறையில் கீழே விழுந்தாள் குறிஞ்சி.


ReplyQuote
Kiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 11

இரக்கமற்ற நரி

எல்லேந்தி ஓங்கி அறைந்து விழுந்தவள் எழுந்து உட்கார்ந்து எல்லேந்தியை பார்த்தாள். அவளின் பார்வை அவன் மேலே அமிலத்தை ஊற்றுவது போல இருந்தது.
“என்னடி அப்படி முறைக்கிறவ அவ்வளவு ஆணவமா உனக்கு பொட்டகழுதை. உன் திமுர என்கிட்ட காட்டுறியா..எழும்புடி“ குறிஞ்சி முடியை இழுத்து வந்து கதவை திறந்து வெளியில் தள்ளினான்.

மழை இடைவிடாமல் பெய்ந்துக்கொண்டே இருந்தது. “விடிய விடிய மழையிலயே நின்னுடி..திண்ணையில ஒதுங்குனா அப்பறம் தெரியும் என் சேதி..“ எச்சரித்துவிட்டு உள்ளே சென்றான்.
கொட்டும் மழை மெல்ல அதிகரித்து குறிஞ்சி உடலை நடுங்க செய்தது. கால்கள் வெடவெடவென ஆடி நடுங்கியது. பற்கள் எல்லாம் அடித்துக்கொண்டது குளிர் ஏறியது. இடி சத்தம் காதை கிழித்துக்கொண்டு இருந்தது. மின்னல்கள் பளிச் பளிச்சென்று கண்கள் அருகே மின்னியது.

சிலம்பன் லாரியை விட்டு நள்ளிரவில் வீடு வந்துக் கொண்டிருந்தான். கண்ணியில் வரும் போதே வாசலில் உருவம் நிற்பதை பார்த்தான் அது குறிஞ்சி தான் என்று உணர்ந்தான். தொப்பு தொப்பென்று நனைந்துக்கொண்டு வந்தான்.
சிலம்பனை பார்த்ததும் குறிஞ்சி மெல்ல திரும்பி ஒதுங்கி நின்றாள். குறிஞ்சியை பார்த்து பாவ பார்வையை வீசினான்.

விறு விறுவென்று சிலம்பன் தன் குடிசையை நோக்கி போய் தட்டினான்.
“ந்தா வரன்டா..“

கதவை திறந்துக்கொண்டு குருவாயி வந்தாள்.

மழை இரவை இன்னும் இருள செய்து பயமுறுத்திக் கொண்டு பெய்தது.
“என்னடா இம்புட்டு நேரம்.“

“இந்தா பாரு உன் மவன் பண்ணிருக்க காரியத்தை..“

என்னத்த பண்ணிருக்கான்.“
குருவாயி எட்டி பார்த்தாள் மழையின் புகையில் குறிஞ்சி வாசலில் நிற்பது அலைஅலையாக தெரிந்தது.

“என்னடா இது..“

அவங்கள மழையில நிறுத்திருக்கான்.“

“அது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை நம்ம கேட்க முடியாது.“ குருவாயி உள்ளே சென்றாள். சிலம்பனுக்கு மனது கனமாக இருந்தது.

விடிய விடிய மழை கொட்டிக்கொண்டிருந்தது. மணி மூன்று கண்முழித்தவன் மெல்ல எழுந்து வாசல் கதவை திறந்தான். குறிஞ்சி நனைந்தபடியே வாசலில் உட்கார்ந்திருந்தாள் மழை விட்டிருந்தது. உடல் நடுங்கியது. எல்லேந்தி அவள் அருகே வந்து மெல்ல தூக்கி உள்ளே அழைத்து வந்தான்.
உடல் குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது. நனைந்த குறிஞ்சியின் உடைகளை மெல்ல களைந்தான்.
கூந்தல் நனைந்து சொட்டிக்கொண்டிருந்த நீர் துளிகளோடு மெல்லமாய் கூந்தலை அவிழ்த்தான். அவன் ஐந்து விரல்களால் அந்த கூந்தலை இறுக்கி பிடித்து தன் பக்கமாக இழுத்தான் அவள் கழுத்தை கவ்வினான். காமபோதை கொண்ட நரி ஒன்று இரக்கமற்று போனதுவோ இரக்கமற்ற நரி இவன் என்றே குறிஞ்சிக்கு தோன்றியது.

அவன் ஈச்சை தீர்ந்ததும் உறக்கத்திற்கு சென்றான். களைந்த கூந்தல் சிவந்த கண்கள் உடல் நடுக்கம் சுவரோடு சுவராக உட்கார்ந்து கொண்டு கலங்கினாள் குறிஞ்சி.

சிங்கபூரான் பஞ்சாயத்து வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்திற்கு சென்று இருந்தான். கூடவே மூக்கனும், எல்லேந்தியும் சென்று இருந்தனர். இன்னும் சில வெள்ளை வேட்டிகளும் சென்று இருந்தனர்.

எல்லா டாக்குமென்டும் சரியாக இருக்கிறதா என்று தேர்தல் ஆணையர் பார்த்துக் கொண்டிருந்தார். அதே நேரம் யாரே ஒரு இளைஞன் உள்ளே வர அனுமதி கேட்டுக்கொண்டு இருந்தான்.

“எஸ் கியூஸ் மீ சார்.“ அவன் பின்னே இன்னும் சில இளைஞர்கள் இருந்தனர்.

“வாங்க..“ அந்த இளைஞன் சில பைல்களை அலுவலரிடம் நீட்டினான். எல்லாவற்றையும் பிரட்டி பார்த்துவிட்டு

உட்காருங்க சார்..“

“தேங்யூ சார்..“

“மிஸ்டர் மலையன் இவரும் உங்க ஊருதான் அதே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தான் வேட்புமனு செய்யுறாரு.“

“அப்படியா சந்தோஷம் ஆனா தம்பிய பார்த்ததே இல்லையே..தெரிஞ்ச முகமாவும் இல்ல

“எனக்கு உங்கள தெரியும் சார்.. ஒருவாரத்துக்கு முன்னாடி தான் ஊருக்கு வந்தேன். ரொம்ப ஆச்சரியம் இருவது வருஷமா ஒரே பஞ்சாயத்து தலைவர் ஒரு முன்னேறமும் இல்லாத ஊரு பாழடைஞ்ச பள்ளிகூடம், ஆரம்ப சுகாதார நிலையம் இல்ல, பேருந்து நிறுத்தம் இல்ல, கள்ளசாராய வியாபாரம், நல்ல செல்வாக்கு இது போதுமாக உங்கள பத்தி நான் தெரிஞ்சிகிட்டது.“

“தம்பி புரியாம பேசுது..“

சிங்கபூரானுக்கு கோபம் தலைக்கு ஏறியது. மூக்கனும், எல்லேந்தியும் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டனர்.
அந்த இளைஞன் சிரித்துக்கொண்டு எழுந்தான்.

இங்க ஒரு சைன் பண்ணுங்க..“
என்றார் கலெக்டர் அந்த இளைஞனை. கையேழுத்து போட்டுவிட்டு கைகுலுக்கி நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தான். சிங்கபூரானும் பின்னாலேயே வந்தான்.

“தம்பி இவ்வளவு விவரமா பேசுதே தம்பி யாரு.“

“நான் இளவன். எம்.எ வரலாறு படிச்சிட்டு ஆர்காலஜி டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்தேன்.“

“அட அதெல்லாம் வேண்டாம், எந்த வகையரா என்ன ஆளுவோ…ஆயி, அப்பன் யாரு அத சொல்லு..“
இளவன் சிரித்தான்.

குருவாயி மெல்ல வந்து வீட்டை சுற்றி பார்த்தாள். குறிஞ்சி வீட்டு கதவு திறக்கவே இல்லை, கதவை தட்டி பார்த்தாள். திறந்த பாடு இல்லை. சிலம்பன் சாம்பலை வைத்து பல்லை தேய்த்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் தன் அம்மா என்ன செய்கிறாள் என்று.

“ஏட்டி அங்கவ..இங்க வாடி..“குருவாயி சத்தம் போட்டாள்.

“இந்தா வரேன்“ அங்கவை ஓடி வந்தாள்.

“என்னமா..“

உங்க மதினி கதவை திறக்கவே மாட்டைங்கிறாடி..“

“இருமா..“அங்கவை வந்து இரண்டு மோது மோதி பார்த்தாள் கதவு திறந்துக்கொண்டது.

“வாம்மா“

“நான் வரமாட்டேன்டி.. நீ பாரு “

“நீயும் உன் ரோஷமும்.“ அங்கவை உள்ளே சென்று பார்த்தாள் குறிஞ்சி நடுங்கி கொண்டு போர்வைக்குள் கிடந்தாள். அங்கவை மெல்ல சென்று போர்வையை இழுத்து கையை வைத்து பார்த்தாள்.

“அம்மா மதினிக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது.“

அவள மெல்லமா வெளிய அழைச்சிட்டு வாடி..“

அங்கவை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

சிலம்பனும் நகர்ந்து பக்கம் வந்தான்.

“அந்த புத்தி இல்லாதவன் தான் மழையில நிறுத்தி வச்சிருந்தானே.“ என்று கடுப்படித்தான் சிலம்பன்.
மேனி அனலாக கொதித்தது.

“சிலம்பா போட அந்த கவர்மன்ட் ஆஸ்பத்திரில வேலை பாக்குறாரே சபா கம்பவுண்டர் டாக்டரு அவர போய் கூப்புட்டுக்குட்டு வாடா.“

“நீ ஒரு ஆளு அவனுக்கு பரிஞ்சுக்குவ.. நேத்தே அவனே கேட்டுருக்க வேண்டியது தான..“

“ஏல போடா..சண்டை வழக்காம“
சிலம்பன் “போடி போய் சட்டைய எடுத்துட்டு வா..“ என்றான் அங்கவையை.

வேக வேகமாக ஓடினான். சிறிது நேரத்துலயே சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தான்.
வந்த அந்த மனிதர் சற்று வயதானவர் “வாங்க..வாங்க மருமவளுக்கு காய்ச்ச.“
வாய் திறந்து எதுவுமே பேசவில்லை அந்த மனிதர். கை நாடியை பிடித்து பார்த்தார், கண்விழியை பார்த்தார்.

“நல்ல காய்ச்சலா இருக்கு மாத்திரை தரேன் போடட்டும் முடியலனா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு வாங்க“
இரண்டு மூன்று மாத்திரையை கொடுத்தார். “கஞ்சி கொடுங்க..“

“எதாவது ஊசி போடுங்க தெம்புக்கு..“
அவரும் எதுவும் பேசாமல் “சுடுதண்ணி கொண்டு வாமா..“ அங்கவை ஓடி போய் சுடு தண்ணி சிலம்பன் குளிக்க எறித்து கிடந்தது அதை மொண்டுக்கொண்டு ஓடி வந்தாள்.

சிரஞ்சியை எடுத்து இரண்டு முறை சுடுதண்ணியில் கழுவிவிட்டு மஞ்சள் நிற மருந்தை ஏத்தி குறிஞ்சியை திரும்ப சொல்லி இடுப்பு சீலையை லேசாக இறக்க சொல்ல சிலம்பன் தள்ளி தூரம் சென்றான்.

“ஆ..“என்று மெல்லமாய் சத்தம் கொடுத்தாள். குருவாயி ஊசி போட்ட இடத்தை தேய்த்து விட்டாள்.

“சரி ஆயிடும்..“

சிலம்பன் அருகே வந்தான் சட்டை பையில் இருந்து “இருபது ரூபாய் நோட்டை நீட்டினான். மீண்டும் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றான்.

“இந்தாடி இவள கொண்ட படுக்க வை.. நான் நல்லா சூடா கஞ்சி வச்சி கொண்டு வரேன்.“ என்று குருவாயி எழுந்தாள்.

இளவன் சிரித்துக்கொண்டே “நான் வடக்கி தெரு வெள்ளாயி மகன்.“

“வடக்கி தெருவானுவோலா.. நீங்கல்லாம் எதுத்து நிக்கிர நிலைமையாடா...“

நீங்க மனுசன் தான இல்ல சாமியா.“

“ஆமான்டா சாமிடா நாங்க.“

நல்ல கதை நீங்க சாமினா சாமி என்னவாம்.“

மூக்கன் குதித்துக்கொண்டு முன்னே வந்தான். சுற்றி போலிஸ் நின்று கொண்டிருந்தது.

“டேய்.. பொருடா எதுக்குடா குதிக்கிற இவன் ஆளு தெரியாம மோதுறான் மோதட்டும் மோதட்டும்..“

“தெரிஞ்சி தான் மோதுறேன் நான் தான் ஜெயிப்பேன்.“

“போடா..போடா..“சிங்கபூரான் இடிக்க இடிக்க சிரித்துக்கொண்டே “ஒன் ஊரான் நூறு பேரு ஓட்டு போட்டு நீ செயிக்க போறியா.. ஓட்டு கேட்டு என் தெருவுல கால வையிடா அப்பறம் இருக்கு உனக்கு“

“நான் வருவேன் ஓட்டு கேட்பேன். ஜெயிப்பேன்…“ இளவன் சிரித்துக்கொண்டே விலகி நடந்தான்.

 


ReplyQuoteKiruba Jp
(@kirubajp)
Eminent Member Writer
Joined: 1 year ago
Posts: 34
 

அத்தியாயம் 11

தீரா காதல்

இளவன் ஒத்தையடி பாதையில் நடந்து வந்த கொண்டிருத்தான். வடக்கு தெரு சனமே பாதையை கூடி அடைத்து நின்றது. வெள்ளாயி முகம் முழுக்க பதற்றமும் பயமும் புரையோடி போய் இருந்தது.  இளவன் தாய் மாமன் சாந்தன் முன்னால் ஓடி வந்து இளவனை எதிர்நோக்கினான்.

“என்னடா தம்பி இப்புடி பண்ணிபுட்ட“

“என்ன பண்ணிப்புட்டாங்க இப்போ“

“தெற்கு தெரு ஆளுவோள நம்ப எப்புடிடா பகைச்சிக்க முடியும் படியளக்குற சாமியள எதிர்க்க முடியுமாடா??“

“ஒரு ஜான் வயித்த பாக்குறியே, உன் மானத்தை பாக்குறியா..ஒரு வாய் சோறு திண்ணாலும் மரியாதையா திங்கனும் மாமா..“

அவனின் அதட்டல் பேச்சில் வாயடைத்தான் சாந்தன்.

“ஒத்துங்கடா ஒத்துங்க சல்லி பயலுவோலா“

மூக்கன் விலக்கிக் கொண்டு  வந்தான். சிங்கபூரான் கூட்டத்தை நகர்த்தி முன்னே வந்தான்.“ என்னங்கடா துளிர்விட்டு போயிட்டா ஒருத்தன் காலர தூக்கிட்டா?? எல்லாம் மாறிடுமா?? உத்து பாத்தாலே ஒன்னுக்கு போற பயலுவோ சோத்துக்கு என்னடா பண்ணுவிய“

“வாஸ்தவன் தான் நீங்க மனசு வச்சா தான் நாங்க சாப்பிடலாம். ஆனா நாங்க மண்ணுல இறங்கி விளைச்சா தான நீங்களே படியளக்களாம்..“

“வார்த்தை படருதுடா வடக்கிதெறான். பாத்தரம் சேதாரம் ஆவுமுடா??“

சிங்கபூரான் எச்சரித்து விட்டு “ச்சை..விலகுங்கடா“ முன்னே நடந்தான்.

“வெள்ளாயி ஒத்தை புள்ளைய பெத்துருக்க கவனம்“ மூக்கன் விலக்கி விட்டு சிங்கபூரான் பின்னாலேயே சென்றான். கூட்டமும் களைந்தது, “வாடா..“ அழைத்தாள் வெள்ளாயி. “நீ முன்ன போ“ என்றான் இளவன்.

திரும்பும் போது எதிரே அன்பழகி நின்று கொண்டிருந்தாள்.

“அன்பழகி நல்லாயிருக்கியா வருஷம் போச்சி பாத்து, பள்ளிகூடம் படிக்கும் போது துருதுருன்னு இருப்ப இப்போ??“

“சாமி எங்க சவுரியதுக்கு என்ன குறை?? சாமி நீங்க செயிச்சா எங்கள இந்த காட்டுலேருந்து காப்பத்தனும்“

“நான் நம்ப எல்லாருக்கும் தான் சேத்து போராடுறேன்.“

அன்பழகி மெல்ல சிரித்தாள். “ஏன்??“

“நீங்க ஒரு கூட்டத்தை எதுக்குறிய??நாங்க இரண்டு கூட்டத்தை எதுத்து போராடனும் உங்களையும் சேத்து தான்.“

“இத்தனை புத்திசாலி பொண்ண  பதிமூனு வயசுல கல்யாணம் பண்ணி வச்சி அதோட இருபது வயசுக்குள்ள வாழ்க்கையே முடிச்சி வச்சிட்டிங்களே??‘‘

“கழுதை தலையெழுத்து சாமி..“

“அப்பாரு வா..“ அன்பழகி முன்னே சென்றாள்.

“நான் மாத்துவேன்..சொல்லுங்க உங்க பொண்ணுக்கிட்ட“ இருளி கையை பிடித்து வாக்குகொடுத்தான். அன்பழகி மெல்லமாய் சிரித்துக்கொண்டாள்.

எல்லேந்தி வீட்டுக்கு வந்தான்.
சட்டையை அவிழ்த்து ஆணியில் மாட்டிவிட்டு கொல்லை புறம் சென்று முகத்தை கழுவினான். உள்ளே வந்தான் குறிஞ்சி இழுத்து போத்திக்கொண்டு கிடந்தாள்.
அடுப்பாங்கரையை பார்த்தான் “என்னடி சோறு பொங்கலையா??“ குறிஞ்சியிடத்தே எந்த பதிலும் இல்லை. அருகே வந்தவன் கம்பளியை இழுத்து அருகே சென்றான். குறிஞ்சி உடல் நடுக்கத்தில் இருந்தது. கழுத்தில் கைவைத்து பார்த்தான்.

“என்னடி உடம்பு இப்படி கொதிக்குது“ குறிஞ்சி கையை தட்டி விட்டாள்.

“ஏன் உனக்கு தெரியாதா?? தெரியாதவன் மாதிரி கேக்குறவன்.“

“நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்.“

“போதும் உன் அக்கரை மசிரு“
“கொழுப்பெடுத்தவடி“

“அண்ணே..அண்ணே…“

“வா..வா..உள்ள“

“ந்தா அண்ணே அம்மா கஞ்சி வச்சி கொடுத்துச்சி..“

“ஊத்தி கொடு.“ எல்லேந்தி எழுந்து வெளியே வந்தான்.

சிலம்பன் வாசலில் நின்று கொண்டிருந்தான். எல்லேந்தியை முறைத்து பார்த்தான்.

புரோக்கர் புண்ணியம் வந்தான்.

“வாங்க புரோக்கரு??“ என்று வரவேற்றான் எல்லேந்தி.

“வணக்கம்..அண்ணன் தம்பி ரெண்டு பேரும் இங்க தான் இருக்கியளா??“

“வாங்க..வாங்க.“

“நீங்க தான் எனக்கு சோழி வைக்காம
கல்யாணம் பண்ணிட்டிய??“

“திடீர்னு ஆயிபோச்சி..“

குருவாயி பேச்சி குரல் கேட்டு வந்தாள்.

“அக்கா..“

“வாடா?? என்ன என்னைக்கும் இல்லாத திருநாளா இந்த பக்கம் வந்திருக்க..“

“எல்லாம் நல்ல விசயம் தான்.“

“அப்படி விசயம்டாப்பா“

“உன் பொண்ணுவோ கல்யாணத்தை பத்தி தான்.“

“ஏல இரண்டுக்கு பதினாரு வயசு தான்டா ஆவுது..“

“அக்கா நல்ல சம்மந்தம் இரண்டு பையனுவோ ஒரே இடத்துல பொண்ணு எடுக்கனும்னு ஒத்த காலுல நிக்கிறாரு அப்பாரு. யாரு தெரியும்ன நம்ம ஊரு போஸ்ட் மாஸ்டரா இருந்தாரே ராமேஸ்வரம்“

“ஏல அவரு வேற வகையராடா“

“ஆமாம் உனக்கும் தெரியும் பெரிய சேதி..நம்ம குலம் நம்ம வகையரா தான் அவோ“

“இருந்தாலும் இப்போ வேண்டாம்டா“

“நான் கேள்வி பட்டேன் உன் மவனுக்கு மட்டும் பத்தொன்பது வயசு பொண்ணகட்டி வச்சிருக்க அது எந்த நாயம்..“

“டேய் கூறு கேட்ட பயல..“

“என் வாய அடைக்காத இரண்டு பயலும் அரசாங்க உத்தியோகத்துல இருக்காயிங்க போஸ்ட் மாஸ்டரா இருக்கான் பெரியவன் சின்னவன் வாத்தியான்.“

“ஏல பெரிய இடமா இருக்குடா நிறைவா கேட்பாங்க??“

“என்ன பத்து பத்து பவுனு போடமாட்டியா“

“பத்து பவுனா?? இப்போ தான்டா மூத்தவனுக்கு கல்யாணம் முடிச்சிருக்கேன், அதுக்குள்ள எப்புடிடா??“

“இரண்டு சிங்கத்த பெத்து வச்சிருக்க இது ரெண்டு பண்ணிவைக்காதா??“

“நாங்க என்ன வக்கத்த பயலுவோளா?? எல்லாம் பண்ணிவப்போம் பேசிமுடிங்க“ என்று கடிந்தான் எல்லேந்தி.

“அப்பறம் என்ன பெருசே சொல்லிட்டு, ஆளாலுக்கு பத்து பத்து போடட்டுமே.“

“இந்த சின்னவனுக்கு ஒரு பொண்ண பாத்துக்குடு“

“சாதகம் தான் இருக்கே செவ்வாய் தோஷமா இருக்கு எல்லாம் யோசிக்குதுவோ..இந்தா டீ கடை முத்துகாளை தங்கச்சிக்கு செவ்வாய் தோஷம் தான் அத மறைச்சி சொந்த மாமன் மொவனுக்கே கட்டிட்டாயிங்க. என்ன அவசரமோ பறக்க பறக்க கல்யாணம் முடிச்சிட்டாயிங்க. என்கிட்ட தான் பாக்க சொல்லிருந்தாயிங்க பாத்தா பொசுக்குன்னு கல்யாணத்தை முடிச்சிட்டாயிங்க.“

எல்லேந்தி எதிரே கொளஞ்சி வந்து நின்றாள். சிறிது தடுமாற்றம் “அவள் என்ன செய்து கொண்டிருப்பாள் இன்நேரம் என்னை நினைச்சுப்பாளா நான் மறந்துட்டு இல்ல, அவமட்டும் நினைச்சிகிட்டா இருக்கபோறா“
கொளஞ்சி கொல்லை பக்கம் உட்கார்ந்து கொண்டு சுடுதண்ணீ எரித்துக்கொண்டு இருந்தாள். அங்கு இருந்த கரிக்கட்டையை எடுத்து எல்லேந்தி பெயரை எழுதிப்பார்த்தாள்.

“ஏய் கொளஞ்சி தண்ணீய கொண்டுவாம்மா“

எழுதிய பெயரை கிறுக்கிவிட்டு “இந்தாவரங்க..“ தண்ணீயை தூக்கி கொண்டு போய் வாளியில் ஊற்றினாள்.

“என்னவன் சோகமா இருக்கவ?? மாமன் ஊருக்கு போறத நினைச்சா“
கொளஞ்சி அமைதியாக இருந்தாள்.

“சீக்கிரம் வந்துடுவேன் மிலிட்டிரிகாரன் வாழ்க்கையெல்லாம் இப்படி தான் இருக்கும் பட்டுன்னு புறபட்டு வரசொல்லுவாயிங்க..“

“நான் எங்க அம்மாவுட்டுல போயி இருக்கவா“

“ஏன்வன் இங்க தான் அம்மா இருக்குன்ன நீ துணையா இரு..“
கொளஞ்சி “சரி“ திரும்பி வரும் போது அவள் முகம் முழுவதும் சந்தோஷ ரேகை ஓடிக்கொண்டு இருந்தது.

 


ReplyQuote
Page 2 / 2
Share: