Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications

[Closed] மாதினி-யாமினி!  

Page 1 / 2
  RSS

Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
28/12/2019 3:14 pm  

வணக்கம் அன்புத் தோழமைகளே!

இதோ எனது மற்றொரு கதை உங்கள் பார்வைக்காக!
 
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்!
 
நட்புடன்,
கிருஷ்ணப்ரியா நாராயண்.
This topic was modified 2 months ago 2 times by Krishnapriya Narayan

Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
28/12/2019 3:15 pm  

மாயா-1

சென்னை புறநகர் பகுதி,

டிசம்பர் 14,

டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே ‘சர்.. சர்..’ எனப் பறந்து கொண்டிருக்கும் நண்பகல்வேளை தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா.

ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன்  கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதிவேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்! ‘அவளாஆஆஆ?’

***

மருத்துவமனையில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நண்பனைக் காண வந்தான் அவன், வீரா - வீரசெல்வன்.

நல்ல உயரமும் மாநிறமுமாக சற்று பருமனான உடல்வாகுடன், அணிந்திருந்த உடை, கடிகாரம், ஷூ என அனைத்திலும் நிரம்பி வழியும் செல்வச்செழுமையுமாக அந்த அறைக்குள் நுழைந்தவன்,  நண்பனின் கை பற்றி, “நந்தா! என்ன நடந்நதுடா?” என்று கேட்க, அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டவனின் கண்களில் அதீத மிரட்சி!

‘உன்னால்தானே’ எனும் பார்வை!

துன்பத்துடன் அவன் இறுதியாக உச்சரித்த பெயர் வீராவை குலைநடுங்க வைத்தது.

அது ‘யாமினி!’

தன் நண்பனின் அகால மரணத்தால் அவன் மனம் உலைக்கலனாய் கொதித்துக் கொண்டிருந்தது.

ஒரு மூன்று மணி நேரத்திற்கு முன் தன்னிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றவன் இப்பொழுது சடலமாக!

அந்த நேரம் அவனுக்குத் தெரியாது அது வெறும் ஆரம்பம்தானென்று.

***

மருத்துவமனையை விட்டு வெளியே வந்த வீரா அவசரமாக அந்தப் பகுதி ஆய்வாளர் செல்வத்தை தன் பேசியில் அழைக்க அதை ஏற்றவர், “சாரி மிஸ்டர் வீரா, இப்பதான் ஹாஸ்பிடல்ல இருந்து தகவல் வந்தது.

நந்தா கேஸ்தான் விசாரிச்சிட்டு இருக்கேன்; முடிஞ்சா நாளைக்கு ஸ்டேஷன் வாங்க பேசலாம்; அதுகுள்ள போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்சும் வந்துடும்” என்று கூற, “சரி” என்ற ஒற்றை வார்த்தையுடன் அழைப்பைத் துண்டித்தான் அவன்.

அடுத்தநாள் அவன் காவல்நிலையம் செல்வதற்கு முன்பே அவனை அழைத்த செல்வம், “உங்க ஃபிரண்டுக்கு நடந்தது ஆக்சிடண்ட்தான்;  போஸ்ட்மார்டம் ரிபோர்ட்ல அவர் டிரக் கன்ஸ்யூம்பண்ணியிருக்கார்னு தெளிவா வந்திருக்கு.

என்ன சொல்ல வறேன்..ன்னு புரியுது இல்ல. ட்ரக்ன்னா நார்கோடிக் ட்ரக் வீரா.

ரொம்ப நாளா அவருக்கு அந்த பழக்கம் இருக்குன்னு க்ளியரா மென்ஷன் பண்ணியிருக்காங்க!

போதைல வண்டி ஓட்டியிருக்கார். ஸோ எதபத்தியும் கவலைபடாதீங்க வீரா” என்று கூறவே மேற்கொண்டு ஏதும் பேசாமல் அங்கிருந்து சென்றான் வீரா.

***

அதே நேரம் வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் புறமாக அமைந்திருக்கும் உணவகத்தின் முதல் தளத்தில் உட்கார்ந்து கண்ணடி தடுப்பின் வழியே  ஜீ.எஸ்.டீ சாலையில் ஊர்ந்து செல்லும் போக்குவரத்தை எதோ யோசனையுடன் வெறித்தபடி தட்டிலிருந்த உணவை அளைந்து கொண்டிருக்கும் அவளின் நிலவு போன்ற முகத்தில் நிலைத்திருந்தன ஜெய்யுடைய கண்கள்!

"என்ன மாதி! இன்னும் என்ன யோசனை!

முதல் ஸ்டெப் பர்பெக்டா முடிச்சிட்டோம் இல்ல!

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு!" என அவன் சொல்ல, "நோ ஜெய்! இதுக்குள்ள எல்லாம் என்னால ரிலாக்ஸ் ஆக முடியாது!

நாம நினைச்சதை மொத்தமா செய்து முடிச்சாதான் எனக்கு நிம்மதி!

அதுவரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன்!

ப்ளீஸ் என்கூட சேர்ந்து நீங்களும் கஷ்டப்படாதீங்க!

நானே பார்த்துக்கறேன்!" என அவள் சொல்ல, "மாதினி!" எனக் கோபத்துடன் அழைத்தவன், "உன்னோட உளறலை இதோட நிறுத்திக்கோ!" என்றான் கடுமையாக.

"என்ன; நான் சொல்றது உங்களுக்கு உளறலா தெரியதா!" என அவள் அதே கோபத்துடன் சீற, 'உருவத்துல வேணா இவ அவளை மாதிரி இருக்கலாம்! ஆனா குணத்துல இவ வேற!

இதே இப்படி குரலை உயர்த்தி பேசினா அவ அழுதே இருப்பா!' என்ற எண்ணத்துடன் அவளது முகத்தைப் பார்த்தவன், 'அவளோட கண்ணுல எனக்கான காதல் தெரியும்!

ஆனா இவளுக்கு அதுல ஒரு தீ இருக்கு!

அவளோட முகம் எப்பவுமே மென்மையை பூசி இருக்கும் இவளோடது மாதிரி இரும்பா இறுகி இருக்காது!

அவதான் என்னோட நிஜம்!

இவ அவளோட நிழல்!

ரெண்டுபேரும் என்னைக்குமே ஒண்ணா ஆக முடியாது' என்ற எண்ணத்துடன் விழிகளை மூடிக்கொண்டான் ஜெய்.

அவன் கண்களுக்குள் வந்து நிறைந்தாள் அவள் - அவனுடைய யாமினி!

அவனுடைய முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளை உள்வாங்கியவளாக, "ப்ளீஸ் ஜெய்! என் கிட்ட யாமினியை தேடாதீங்க!

அவ வேற! நான் வேற!

என்கிட்ட மட்டும் இல்ல அவளை வேற யார் கிட்டேயும் தேடாதீங்க!

அவ கிடைக்க மாட்டா! உங்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சமா இருக்கும்!

உங்களோட இந்த மனநிலையை மாத்திக்கிட்டு உங்க அம்மா அப்பா பார்த்து வெச்சிருக்கும் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க!

அதுதான் அவளோட ஆன்மாவுக்கு அமைதியைக் கொடுக்கும்!

அவ விஷயத்தை நான் பார்த்துக்கறேன்!" உணர்ச்சியற்ற குரலில் மாதினி சொல்லிக்கொண்டிருக்க, "நான் என்ன பண்ணனும்னு நீ சொல்ல தேவை இல்ல!

உன் தங்கைக்காக நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ தாராளமா செய் நான் தடுக்கல.

அதே மாதிரி என் யாமினிக்காக நான் செய்ய நினைக்கறத தடுக்கற உரிமை உனக்கு இல்ல!

உன்னை தனியா விட்டுட்டு நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு போனால் யாமினியோட ஆன்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது!" எனக் கோபத்துடன் கடுமையாகச் சொன்னவன், 'பேரர்' வைத்துவிட்டுப் போன 'பில்'லை சரிபார்த்து சில ரூபாய் நோட்டுகளை வைத்து அந்த அட்டையை மூடிவிட்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் அங்கிருந்து சென்றான் ஜெய் கிருஷ்ணா!

அவனது செய்கையைப் பார்த்து மென் புன்னகை ஒன்று மலர்ந்தது மாதினியின் முகத்தில்.

***

அவளிடம் அப்படி கோபமாகப் பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவனுடைய அந்த செயல் அவனுக்கு வருத்தத்தையே கொடுத்தது.

ஏனோ அவளை மறுபடி அழைத்து சமாதானமாகப் பேச அவனது 'ஈகோ' அவனை அனுமதிக்கவில்லை.

அந்த ஒரு சிறு உரசல் இல்லாமல் இருந்திருந்தால் கூட அவளாகவே அழைத்திருப்பாள். ஆனால் இப்பொழுது அவள் அழைக்கவே மாட்டாள் என்பது உறுதியாக விளங்க அடுத்த நாள் காலை வரை பொறுத்தவன், அவளை கைப்பேசியில் அழைக்க, அதை ஏற்றாலும் எதிர் முனையில் அவள் அமைதி காக்கவும், 'திமிரு பிடிச்சவ! நான்தான் இறங்கி வந்து போன் பண்ணிட்டேன் இல்ல! என்னன்னு கேட்டா குறைஞ்சா போயிடுவா!' என்ற எண்ணம் தோன்ற, தொண்டையை செருமிக்கொண்டு, "எங்க இருக்க?" எனக் கேட்டான் ஜெய்.

"ஹை கோர்ட்ல!" என்றவள், "ஒரு மொக்க ஹியரிங்! சீனியர் என்னை அட்டண்ட் பண்ண சொல்லிட்டார்!

எப்படியும் முடிய மத்தியானம் ஆயிடும்னு நினைக்கறேன்!" என்றாள் மாதினி எதுவுமே நடக்காதது போன்று.

"சும்மாதான் கேட்டேன்!" என்று அவன் அழைப்பைத் துண்டிக்க, தோளைக் குலுக்கியவாறு அவளுடைய சக 'ஜுனியர் வக்கீல்' மனோகருடன் அவளது பணியைக் கவனிக்கச் சென்றாள் மாதினி பி.ஏ.பி.எல். ஹானர்ஸ்.

சென்னையிலேயே புகழ் பெற்ற வழக்கறிஞர் கோதண்டராமனின் 'ஜூனியர்'களில் ஒருத்தி.

மதியம் அவள் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும்பொழுது அங்கே இருக்கும் டீ கடையில் போடப்பட்டிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து தேநீரைப் பருகியவாறு கைப்பேசியை குடைந்துகொண்டிருந்தான் ஜெய்.

அவள் அவனுக்கு அருகில் வந்து நிற்கவும் அதைக் கூட கவனிக்கவிடாமல் 'பப்ஜி' அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மாதினி கோபமாக அவனது கைப்பேசியைப் பிடுங்கவும் அதில் எரிச்சலுற்று நிமிர்ந்தவனின் முகம் அப்படியே மென்மையாக மாறிப்போனது.

பிங்க் நிற பார்டருடன் கூடிய வெள்ளை காட்டன் புடவையுடன் பிங்க் நிற கலம்காரி ப்ளௌஸ் அதற்கு மேலும் அழகு சேர்க்க, அவள் கழுத்தில் அணிந்திருந்த வழக்குரைஞர்கள் அணியும் வெள்ளை நிற பட்டி அவளுக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுக்க அருகில் நின்றவளை, முதன்முதலாக இப்படிப் பார்க்கவும் பேச்சற்று போனான் ஜெய்!

அவள் கைப்பேசியை அவனது முகத்திற்கு நேராக ஆட்டி, "இது என்ன நான் வந்ததை கூட கவனிக்காம கிட்டிஷா இப்படி கேம் விளையாடிட்டு இருக்கீங்க!" என அவள் கிண்டலாகக் கேட்க,

'ம்ம். மேடம் பெரிய மகாராணி! வந்த உடனே நாங்க எழுந்து நின்னு மரியாதை செலுத்தணும்!" ஜெய் அவள் சொன்ன அதே ராகத்துடன் அவளுக்குப் பதில் கொடுக்கவும் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மனோகருக்குச் சிரிப்பு வந்துவிட அதை அவன் மிக முயன்று அடக்குவதைக் கவனித்த ஜெய், "நீ போ! நான் இதோ வந்துடறேன்!" என்றவாறு மனோகருடைய தோளில் கையை போட்டுக்கொண்டு, "சொல்லுங்க சகோ! என்ன அப்படி ஒரு சிரிப்பு!" என ரகசிய குரலில் கேட்க, "நம்மளால செய்ய முடியாததை மத்தவங்க செய்யும்போது வர குதூகலம்தான் சகோ!" என்றான் அவன்.

"ரொம்பவே பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுதே!" என ஜெய் கிண்டல் குரலில் கேட்க, "ப்ச். இவ வந்ததுக்கு பிறகு எங்க சீனியர் கே.ஆர் சாருக்கு நாங்கல்லாம் வேண்டாதவங்களாக மாறி போயிட்டோம்!

எப்ப பாரு 'மாதும்மா! மாதும்மா!'ன்னு அவளையே எல்லாத்துக்கும் கூப்பிட்டுட்டு இருக்காரு.

கேட்டா 'என் குருவோட பேத்திடா அவ! பிறக்கும்போதே பிரில்லியண்ட் வக்கீல்'னு கவுண்டர் வேற!" என்று உதடு பிதுக்கினான் அவன்!

அவர்களை வினோதமாகப் பார்த்தவள், "என்ன குசுகுசுன்னு பேச்சு! எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது!" என அவள் அவர்களை அழைக்க, "இல்ல இந்த கேவலமான டீயை எப்படி குடிக்கிறீங்க!

கேஸ் ஆர்க்யூமென்ட் பண்ணும்போது பாதியில வயித்தை கலக்கினா என்ன செய்வீங்கன்னு கேட்டுட்டு இருந்தேன்" என ஜெய் சொல்ல அடப்பாவி என்று மனோகர் சிரிக்க, தன்னை மறந்து கலகலவென சிரித்தாள் மாதினி!

அந்த சிரிப்பில் கூட அவன் தேடிய யாமினி அவனுக்குக் கிடைக்காமல் போக ஏமாற்றம் படர்ந்தது ஜெய்யின் முகத்தில்.

அதைச் சட்டென மறைத்தவன், "முக்கியமான வேலை எதாவது இருக்கா மாதி!" என அவன் கேட்க, "இல்ல; முதல்ல போய் சீனியரை பார்த்து அவர்கிட்ட இன்னைக்கு கேஸ் டீடெயில்ஸ் அப்டேட் பண்ணணும்; அவ்ளோதான்!" என அவள் சொல்ல, "அதை மனோ கூட செய்யலாம் இல்ல!" என அவன் கேட்கவும், "ம்; செய்யலாமே" என அவள் மனோகரைப் பார்க்க, "நல்லா வருவீங்க ரெண்டுபேரும்! கே.ஆர் சார்கிட்ட என்னை கோத்து விடறீங்களே இது நியாயமா?!

நீ தான் பயங்கரம்னு பார்த்தேன்! உன் ஆளு அதைவிட பயங்கரம்! ஆத்தா என்னை விட்டுடு!" என அவன் உண்மையான நடுக்கத்துடன் சொல்ல, "என்னா..து ஜெய் என் ஆளா! கொன்னுடுவேன் கொன்னு!

இதை சொன்னதுக்காகவே நீ போய் கேஸ் டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் அவர் கிட்ட ஒப்பிச்சிட்டு வா!

மீ எஸ்கெப்!" என அவள் மனோவிடம் சண்டைக்குக் கிளம்ப,

"சில் மாதி! பாவம் அவனை ஏன் கலாய்க்கற! நீ போன்ல அவர்கிட்ட பேசிட்டு மனோவை அங்க அனுப்பு!" என அந்த பிரச்சினைக்கு முடிவு சொன்ன ஜெய், "முக்கியமா ஒருத்தங்களை பாக்க போகணும் மாதி! டைம் வேஸ்ட் பண்ணாத!" என மெல்லிய குரலில் அவளிடம் சொன்னான்!

"பைக்ல தான வந்திருக்கீங்க?" என அவள் கேட்கவும், "ம்; ராயல் என்பீல்ட்" என அவன் கெத்தாகச் சொல்ல, "அப்ப சாவியை கொடுங்க!" என அவள் அதிகாரமாகச் சொல்லவும், "ஏய் வர வர என்னை ரொம்பவே டாமினேட் பண்ற நீ!

பைக்கை கொடுக்க மாட்டேன்!" என்றான் அவன் பிடிவாதமாக.

"ப்ச்! சாரீ கட்டிட்டு இருக்கேன் ஜெய்!

என்னால பைக்ல கம்பர்டபுலா உக்காந்துட்டு வர முடியாது! என்னோட கார்லயே போகலாம்!" என அவள் சொல்ல, "என்ன உன் கார்லயா!" என அவன் சங்கடமாக நெளியவும், "நீங்கல்லாம் ஆடில போறவங்க! என் காரை பார்த்தால் இப்படித்தான் தோணும்!" என அவள் உள்ளே போன குரலில் சொல்லவும், "ப்ச்; என்ன பேச்சு பேசற நீ!" என்றவன் தன் பைக் சாவியை மனோகரிடம் நீட்டியவாறே, "நீங்க என் பைக்ல போங்க! நான் ஈவினிங்  உங்க ஆபீஸ்க்கு வந்து அதை எடுத்துக்கறேன்!" என்றான் ஜெய்.

ஒரு உற்சாக துள்ளலுடன் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து ஓடியே போனான் மனோகர்.

"உங்களுக்கெல்லாம் அந்த பைக் பேஷன்! மனோ மாதிரி பசங்களுக்கு அது ட்ரீம்!” என மாதினி சொல்லவும் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினான் ஜெய்!

அந்த ஹை கோர்ட் வளாகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து வாகன நிறுத்தத்தை அடைந்து அவளுடைய காரை நெருங்கவே அரை மணி நேரம் பிடித்தது அவர்களுக்கு.

மங்களகரமான அழகிய மஞ்சள் நிறத்திலிருந்த அவளுடைய குட்டி நானோவை அடைந்து அதன் முன் கதவை அவள் திறக்க, "அப்ஜக்ஷன் மை லார்ட்!

லேடிஸ் ட்ரைவிங்ல எல்லாம் நான் உட்கார்ந்துட்டு வரமாட்டேன்; நான் ட்ரைவ் பண்றேன் நீ உக்காந்துட்டு வா!" என அவன் வீம்புடன் சொல்ல,

"அப்ஜக்ஷன் சஸ்டைன்ட்! உங்களை மாதிரி ஆண் ஆதிக்கம் பிடிச்ச ஒருத்தர் ட்ரைவரா வரதுல  எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்ல!" என அவள் சட்டெனப் பதில் கொடுக்க, அந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காதவன், வெடுக்கென்று சாவியை அவள் கைகளிலிருந்து பறித்து, ஓட்டுநர் இருக்கையில் போய் உட்கார்ந்தான் அவன்.

அவனது உயரத்திற்கும் உடற்கட்டிற்கும் அந்த இருக்கை மிகச் சிறியதாக இருக்க, அதன் மேற்பகுதி வேறு அவன் தலையில் இடிப்பதுபோல் ஒரு பிரமையை அவனுக்கு ஏற்படுத்த, கால்களை நீட்டி அதை இயக்குவது அவனுக்குச் சுலபமாக இருக்காது என்று தோன்றவும், சாவியை அவளிடம் கொடுத்துவிட்டுச் சுற்றி வந்து உடலைக் குறுக்கி முன் இருக்கையில் அமர்ந்தவன், "உன் கார்! நீயே ஓட்டு தாயே!

உன்னை மாதிரி ஒரு ஆல்ஃபா சிங்கப்பெண் காரை ஓட்டினா பக்கத்துல உக்காந்துட்டு வரதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்” என்று அவன் தன் நிலையை மறைத்துக்கொண்டு பெருந்தன்மையாகச் சிரித்துக்கொண்டே சொல்ல அவன் சொன்ன பாவனையில் அவள் வெடித்துச் சிரிக்கவும், இருவரின் சிரிப்பொலியுடன் சேர்ந்து சீறிக்கொண்டு கிளம்பியது அந்த வாகனம்.

*** 

அவன் சொன்னதுபோல் போரூர் பைபாஸ் சாலையை நோக்கி வாகனத்தை மாதினி செலுத்த, "வெயிட்! வெயிட்! இந்த இடம்னுதான் நினைக்கறேன்; கொஞ்சம் இரு" என்றவன் இறங்கிச் சென்று அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்துவிட்டுத் திரும்ப வந்தான்.

பின் "லெஃப்ட்ல திரும்பு" என அவன் சொல்ல அவள் வாகனத்தைச் செலுத்தவும், ஒரு ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பை நெருங்க, "இங்கதான்; வெளியிலேயே ஓரமா காரை பார்க் பண்ணு!" என அவன் சொல்ல, வீதியிலே ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு அவனுடன் அந்த குடியிருப்பின் உள்ளே சென்றாள் மாதினி.

மின் தூக்கி மூலம் அதன் எட்டாவது தளத்தை இருவரும் அடைய, வீட்டின் வரிசை எண்ணைச் சரிபார்த்து அருகே சென்று அதன் அழைப்பு மணியை ஜெய் அழுத்த, வந்து கதவைத் திறந்தாள் அங்கே வேலை செய்யும் பெண். 

அந்த 'ட்யூப்லெக்ஸ்' வகை 'ஃப்ளாட்'டை நோட்டமிட்டவாறு, "சிந்துஜாஸ்ரீ வீடு!" என அவன் இழுக்க, "இதுதான் உள்ள வந்து உட்காருங்க சார். வாங்க மேடம்" என அவர்களை வரவேற்றவள், “எங்க மேடம்ம கூப்பிடறேன்!" என்று சொல்லவிட்டு அந்த பெண் மாடிப்படி நோக்கிப் போக, அங்கே சுவரில் மிகப் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவிட்டு, "ஜெய் இவங்கள எங்கயோ பார்த்திருக்கேனே!" என யோசித்தவள், "ஹேய்! ஃபேமிலி பன்ச் லேம்ப் டீவீ சீரியல்ல நடிக்கறவங்க இல்ல!" என அவள் ஆச்சரியம் கலந்த குரலில் கேட்க,

"என்ன; ஃபேமிலி பன்ச் லேம்பா!" என அவன் புரியாமல் கேட்க, "அதான் குடும்ப குத்துவிளக்கு! அந்த சீரியல் பேர்" என அவள் அதற்கு விளக்கம் கொடுக்க, தலையில் அடித்துக்கொண்டவன், "நீ சீரியல் எல்லாம் கூட பார்ப்பியா?" என ஜெய் ஒரு மாதிரி குரலில் கேட்க, "ஐ...ய!" என்றவள், "ஊருக்கு போனா எப்பவுமே இதுதான் ஓடிட்டு இருக்கும்! பெரியம்மாவுக்கும் கனகா பாட்டிக்கும் இதையெல்லாம் பார்க்கலன்னா தூக்கமே வராது!" என அவள் சொல்ல, படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள் அந்த சிந்துஜாஸ்ரீ!

ஒப்பனைகள் எதுவும் இன்றி கண்களில் கரு வளையம் சூழ்ந்து, தொளதொளவென்ற ஒரு 'லாங் கவுன்'னில் நோய்வாய் பட்டவள் போன்ற தோற்றத்துடன் அவளைக் காணவும், மிக ஆடம்பர அலங்காரத்துடன் தொலைக்காட்சியில் பார்த்தவள்தானா இவள் என்ற அதிர்ச்சி உண்டானது மாதினிக்கு.

மாதினி ஆராய்ச்சியுடன் அவளை பார்க்க,  ஜெய்யை பார்த்துப் புன்னகைத்த சிந்துஜா, "நீங்கதான் அகிலாம்மா சன்னா!" என வெகு மரியாதை நிரம்பிய குரலில் கேட்க, "ம்; இப்ப எப்படி இருக்கீங்க?" என அவன் நலம் விசாரிக்க, "உங்க அம்மா புண்ணியத்துல பீலிங் பெட்டெர்!" என அவள் சொல்லவும், "யூஷுவலா அம்மா அவங்களோட பேஷண்ட்ஸ் பத்தி வீட்டுல எதுவும் பேச மாட்டாங்க!

ஆனா கான்பிடென்ஷியலா நீங்க ஒரு லாயர் வேணும்னு கேட்டிருந்தீங்களாம். அதனால அம்மா சொன்னாங்க" என்றவன்,

"இவங்கதான் லாயர் மாதினி! கே.ஆர். அசோசியேட்ஸ் கோதண்டராமன் சார் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க; அவரோட ஜுனியர்.

எல்லாத்துக்கும் மேல ஃபேமஸ் கிரிமினல் லாயர் சிவராமன் சாரோட பேத்தி!" என மாதினியை அவன் அறிமுகப் படுத்த, எழுந்தே நின்றுவிட்டாள் சிந்துஜா.

"மை காட்! சிவராமன் சார் எவ்வளவு பெரிய லெஜண்ட்! நேர்மையான கேஸ்லதான் வாதாடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன்!

சார் எப்படி இருகாங்க மேம்!" என அவள் நேரடியாக மாதினியிடம் விசாரிக்க, "நல்லா இருக்கார். ஏஜ் காரணமா எங்க வில்லேஜுக்கே போயிட்டார் தாத்தா!" என்றாள் மாதினி.

"இப்படி பட்ட ஒரு இக்கட்டான நேரத்துல உங்கள மீட் பண்ணது என்னோட நல்ல நேரம்னுதான் நினைக்கறேன் மேம்!" என அவள் தழுதழுக்க,

அவளுக்கு அந்த பெண்ணிடம் ஒரு அனுதாபம் ஏற்பட, "என்ன ப்ராபளம் சொல்லுங்க! நான் எதாவது செய்ய முடியமான்னு பாக்கறேன்!" என்றாள் மாதினி.

அதற்குள் இடை புகுந்த ஜெய், "மாது! நம்ம யாமி மர்டர்க்கும் இவங்க பிரச்சினைக்கும் எதாவது வகையில கனெக்ஷன் இருக்கும்னு தோணுது! அதான் உன்னை நேரா இங்க கூட்டிட்டு வந்தேன்!" என்றவன், "சாரி மிஸ் சிந்துஜாஸ்ரீ!" என அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டு, "இவங்க 'ஹாப்பி பில்ஸ்' அடிக்ஷனுக்காகத்தான் அம்மா கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தாங்க" என்றான் ஜெய்.

அதிர்ச்சியில் பேச்சற்று போனாள் மாதினி!

***


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
05/01/2020 4:16 pm  

மாயா-2

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்!

அந்த உடைந்த பாலத்தினின்று அதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு ஆதவன் புறப்பட, அவனுடைய கிரணங்கள் மாதியினியின் முகத்தில் தெறித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன.

முந்தைய தினம் சிந்துஜாஸ்ரீயிடம் பேசிமுடித்து விடைபெற்று வெளியில் வந்ததும், வேதனையின் சாயல் அளவுகடந்து அவளுடைய முகத்தில் படிந்திருக்க, இறுகிப்போயிருந்தாள் மாதினி.

மயிலாப்பூரில் உள்ள அவளுடைய அலுவலகத்தில் அவளுடன் போய் இறங்கும் வரையிலும் கூட அவளது முகம் கொஞ்சமும் மென்மையுறவில்லை.

ஏனோ அவளுடைய அந்த முகம், யாமினியின் நினைவை அதிகம் மேலெழுப்பி ஜெய்யுடைய உறக்கத்தைக் கெடுத்திருந்தது.

மனதில் ஒரு பொறி தோன்ற, அது நடு நிசி என்பதும் அவன் நினைவில் இல்லை.

அந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணை அழைக்கிறோம் என்பதும் அவனுக்கு நினைவில்லை.

நொடிக்குள் அவளது கைப்பேசியின் கதவைத் தட்டியிருந்தான் ஜெய்.

முதல் ஒலியிலேயே "சொல்லுங்க ஜெய்!" எனத் தெளிவாக ஒலித்த அவளுடைய குரல் அவளுமே உறங்கவில்லை என்பதை அவனுக்குத் தெரிவிக்க, "ஏம்மா தூங்கலையா!" என்றான் மென்மையாக.

"ப்ச்.. தூக்கம் வரல ஜெய்! மனச என்னவோ அழுத்திட்டு இருக்கு!

அதான் ஒரு கேஸை ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்!" என்றாள் அவள்.

அவளுடைய நினைவையுமே யாமினிதான் ஆக்கிரமித்திருந்தாள் என்பது புரிந்தது அவனுக்கு!

"எங்க என்னன்னு எந்த கேள்வியும் கேக்காத; நாளைக்கு ஏர்லி மார்னிங் அரௌண்ட் பைவ்; ரெடியா இரு! உன்னை வந்து பிக் அப் பண்ணிக்கறேன்!" அவன் சொன்ன விதத்தில் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

அதிகாலை வீட்டின் வாயிலிலேயே தயாராகக் காத்திருந்தவளைத் தனது காரிலேயே அங்கே அழைத்து வந்திருந்தான்.

'சூரியன் உதிச்சா தாமரை மலருமாமே! இன்னைக்குத்தான் நேரில் பார்க்கறேன்!' என ஜெய் சொல்ல,

"கடல்ல தாமரையா! அது இங்க எங்க இருக்கு ஜெய்!" அவள் உண்மையாகவே வியந்துபோய் கேட்க, அவனது கைப்பேசியின் கேமராவை 'செல்ஃபி மோட்'இல் போட்டு அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்டு ஒரு க்ளிக் செய்தவன், "இதோ இங்க!" என அந்த திரையைக் காட்ட அவளது முகம் மேலும் மலர்ந்தது.

"ஜெய்!" எனப் பொய் கோபத்துடன் அழைத்தவள், "தேங்க்ஸ் ஜெய்! உண்மையாவே இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் அவள் ரசனையுடன்.

"இதை ப்ரோக்கன் பிரிட்ஜ்னு சொல்லுவாங்க!" என்றவன், "வாலி படத்துல சோனான்னு ஒரு சாங் வரும் இல்ல; அதை இங்கதான் ஷூட் பண்ணியிருப்பாங்க!

அதுமட்டும் இல்ல நிறைய படம் இங்க ஷூட் பண்ணி இருக்காங்க.

இப்பகூட வெட்டிங் போட்டோ ஷூட்ஸ் எல்லாம் இங்க நிறைய பண்றாங்க!' என்றான் தகவலாக.

"ஓ.. மெட்ராஸா இருந்தது சென்னையா மாறின வருஷத்துல இருந்து நான் இங்கதான் இருக்கேன். ஆனா இப்படி ஒரு இடம் எனக்கு புதுசு!' என்றாள் மாதினி. 'இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' எனச் சொல்லாமல் சொன்னது அவளுடைய குரலிலிருந்த உற்சாகம்.

"இப்ப உன்னோட மைண்ட் டைவர்ட் ஆச்சா மாது!" அவன் அக்கறையுடன் கேட்க, 'ஓஹ்! அதுக்குதான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா!" என நெகிழ்ச்சியுடன் கேட்டவள், "ரொம்பவே ரிலாக்ஸ்டா பீல் பண்றேன் ஜெய்! தேங்க்ஸ்!" என்றாள் மாதினி.

பேசிக்கொண்டே கடல் அலைகளை நோக்கி இருவரும் செல்ல, எக்கச்சக்கமாக நண்டுகள் அங்கே ஊர்ந்துக் கொண்டிருக்கவும், அவை பாதங்களின் அடியில் குறுகுறுக்கவே, அங்கே நடக்க முடியாமல் கரை நோக்கி இருவரும் வர, அப்பொழுது அவர்களை பார்த்துவிட்டு ஓடி வந்த ஒரு சிறுவன், "அக்கா..கா! நண்டு வேணுமா கா! பிரெஷ்ஷா புடிச்சது" என கேட்க, தூரத்தில் ஒரு பெரியவர் நண்டுகளைப் பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

"நண்டா! ஐயோ! நண்டு தேளு இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் பா! வேண்டாம்!" என அவள் சொல்ல, "ப்ச்! இன்னிக்கி செலவுக்கு காலில ஏதாவது தேறும்னு பாத்தேன்! ம்.." என அலுத்துக்கொண்டான் அவன்.

அவன் அப்படி சொல்லவும் பாவமாகப் போனது அவளுக்கு.

"உன்னை இப்படி நண்டு பிடிக்க விட்டுட்டு உங்க அப்பா என்ன செய்யறாரு!" என மாதினி கேட்க, "அவன் கிடக்கறான் ஒரு பொறம்போக்கு***" என அவனுடைய வயதிற்கு மீறிய கொச்சையான வார்த்தைகளால் அவனைப் பெற்றவனை ஏச, ஒரு மாதிரியாகப் போய் விட்டது அவளுக்கு.

"என்ன ஜெய் இவன் இப்படி பேசறான்?" என அவள் அருவெறுப்புடன் கேட்க, "இங்க இதெல்லாம் ரொம்ப சகஜமான பேச்சு மாது! இப்படி பேசறது அசிங்கம்னு கூட இவனுக்கு தெரியாது; டேக் இட் ஈஸி!" என்றவன், "உனக்கு என்னடா உங்க அப்பா மேல அவ்வளவு கோபம்!" எனக் கேட்டான் ஜெய்.

"சார்! கஞ்சா வித்துட்டு சுத்திக்கிடிட்ருக்கற நாயி சார் அவன்.

அவன் பேருல அம்பது கேஸ் இருக்கு. எங்கள வுட்டுட்டு யாரோ ஒரு பொம்பள கூட பூட்டான் சார் அவன்!

அம்மா! தம்பி தாத்தா பாட்டினு அல்லாரும் கஸ்டமா லோல் பட்டுக்குனுகீறோம்!

அதோ நண்டு புடிச்சிகினுகீதே அதான் என்னோட தாத்தா! அதுதான் துட்டு சம்பாதிச்சு எங்கள காப்பாத்துது!

போன மாசம் அதுக்கு ஆக்சிடன்ட் ஆயி கால்ல எலும்பு ஒடிஞ்சி போச்சு!

சரி ஆயி இன்னிக்கிதான் பொழப்புக்கு வந்திருக்கு!" என்றான் அவன் சர்வ சாதாரணமாக!

"நீ ஸ்கூல் போறியா?" என மாதினி கேட்க, "ஆமாக்கா... எட்டாங்கிளாஸ் படிக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்துல வூட்டுக்கு போயி எதுனா துண்ணுட்டு பொறவு ஸ்கூல் போயிருவேன் கா" என்றான் அவன்.

"எப்படியாவது படிப்பை முடிடா. நீ நல்ல நிலைமைக்கு வரலாம்!" என அவள் சொல்ல, "அம்மாவும் இப்படித்தான் கா சொல்லிக்கினுருக்கும்" என்றான் அவன்.

அப்பொழுது அங்கே திருமண 'போட்டோ ஷூட்' செய்ய சிலர் வரவும், "இங்க இப்படி நிறைய பேர் வருவாங்களாடா?" என மாதினி கேட்க, "ஆமாக்கா; ஆனா காலில மட்டும்தான் இப்படி வருவாங்க.

ராவானா இங்க வேற மாறி இருக்கும்!" என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.

"என்ன வேற மாதிரி இருக்கும்!" என அவள் கேட்க, அதுவரை அமைதியாய் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெய், 'பயங்கர புத்திசாலின்னு நினைச்சா, சமயத்துல இப்படி சொதப்பிவெப்பா' என்ற எண்ணத்துடன் தலையில் அடித்துக்கொள்ள, அந்த சிறுவன் இளித்தவாறே, "ராவானா அண்ணாமாரு தம்பிமாரெல்லாம் இங்க வருவாங்கக்கா; ஒரே பப்பி ஷேமா இருக்கும்" என்றான் அவன் நெளிந்தவாறு.

அவன் சொல்வது விளங்காமல் மாதினி ஜெய்யின் முகத்தைப் பார்க்க, அந்த சிறுவனுக்குப் புரியவேண்டாம் என்று, 'ஆண்களும் பெண்களுமாக இங்கே வந்து, குடிப்பது; போதைப்பொருட்கள் எடுத்துக்கொள்வது;  மேலும் பாலியல் அத்துமீறல்கள் எனத் தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது எல்லோரும் அறிந்த விஷயம்தான்!' எனும் பொருள் படும்படியாக அவளுக்கு ஆங்கிலத்தில் விளக்கினான் ஜெய்.

"இவன் வயசுக்கு தம்பி மாரெல்லாம் இங்க வரமாட்டாங்க. அக்காங்கதான் வருவாங்க. அதைத்தான் இவன் அப்படி சொல்றான்! கரெக்ட்டாடா" என ஜெய் அவனிடம் கேட்க, "ஆமா சார்!” என சங்கடமாக நெளிந்தவன்,

ஒரு நாளு; டீவீல வருமே அந்த யமுனாக்கா இல்ல அதுவும் இங்க வந்துது.

டீவில பாக்க சொல்லோ அந்த அக்காவ எங்கம்மாக்கு ரொம்ப புடிக்கும்!

அன்னைக்கு அந்த அக்காவ இங்க பார்த்துட்டு அதுக்கு அழுகையே வந்துடிச்சி!

வூட்டுக்கு வந்து எங்கம்மா காறி காறி மீஞ்சுது சார்!' என்றான் அந்த பையன்.

"யாருடா அந்த யமுனாக்கா?" என அறிந்துகொள்ளும் ஆவலுடன் ஜெய் கேட்க, "அதா சார் 'குடும்ப குத்து வௌக்கு' ட்ராமால வரும் இல்ல அந்த அக்காதான்" என அவன் விளக்கவும், "ஜெய்! சிந்துஜாஸ்ரீயைத்தான் சொல்றான் அவன்; அந்த சீரியல்ல அவங்க கேரக்டர் நேம் அது!' என அதிர்ந்தாள் மாதினி.

"டேய் தம்பி அன்னைக்கு அந்த யமுனா அக்கா யார் கூட வந்திருக்காங்கன்னு நீ பார்த்தியாடா?" என ஜெய் அவனிடம் கேட்க, "இல்ல சார் அன்னைக்கு நான் இங்க வரல! அம்மாதா கண்டுக்குனு வந்து சொல்லிச்சு! அம்மாக்கு தெரியுங்காட்டியும்!" என்றான் அந்த பையன்.

அவனுடைய இருப்பிடத்தைக் கேட்டுத் தெறிந்துகொண்டு பின் அங்கிருந்து கிளம்பினார் இருவரும்.

***

ஜெய் வாகனத்தை செலுத்த, மாதினி அமைதியாக வரவும், "ப்ச்! இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனன்னு பார்த்தேன். மறுபடியுமா?" என அவன் அங்கலாய்க்க, "இல்ல ஜெய்! அந்த சிந்து கேட்ட லீகல் கைடன்ஸ் ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல! அந்த பேமெண்ட் விவகாரமெல்லாம் எங்க கோதண்டம் மாமாவுக்கு சப்ப மேட்டர்!

ஆனா ஹாப்பி பில்ஸ் விவகாரம்தான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு" என்றாள் மாதினி.

'ஹாப்பி பில்ஸ்' இது சிறிது சிறிதாக ஒருவரை உள்ளே இழுத்துக்கொள்ளும் புதைகுழி. இது அதி ஆபத்தான ஒரு ரசாயன போதை மாத்திரை.

மதுவுடன் கூட ஆட்டம் பட்டம் உல்லாச கேளிக்கை கொண்டாட்டங்கள் தேடி மேல் தட்டு பெண்கள் கூடும் 'பப்'கள்தான் அந்த ரசாயன போதைப்பொருளை புழக்கத்திற்குக் கொண்டுவந்திருக்கும் 'நெட்ஒர்க்'கின் கைக்கூலிகள்.

வெள்ளிக்கிழமைதோறும் அதிக களைக் கட்டும் அந்த உயர்மட்ட 'பப்'களில், பெண்கள் அருந்தும் ஏதோ ஒரு மதுபானத்தில் அந்த மாத்திரையை அவர்களே அறியாமல் கலந்து கொடுக்கின்றனர்.

அதனால் அவர்கள் அதிக போதை கொள்வதுடன் அவர்களுடைய பாலியல் உணர்வுகள் அதிகம் தூண்டப்படுகிறது.

அதன்பின் அங்கே அவர்களை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அதில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறது ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகை.

அந்த மாத்திரைக்குத்தான் அவளே அறியாமல்  அடிமையாக்கப் பட்டிருக்கிறாள் சிந்துஜாஸ்ரீ.

அப்படி ஒரு தருணத்தில் போதையின் மயக்கத்தில் தன் நினைவில் இல்லாத சமயம் அவளே அறியாமல் சில ஒப்பந்த பாத்திரங்களில் கையொப்பம் இட்டிருக்கிறாள் சிந்து.

அதன்படி அவள் இப்பொழுது நடித்து வரும் தொடரில் அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ அப்படி நடிக்கவேண்டும். அப்படி நடிக்க மறுத்தாலோ அல்லது பாதியிலேயே விலக முற்பட்டாலோ, நஷ்ட ஈடாக அவர்கள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகையை அவள் கொடுக்க நேரிடும்.

சில தினங்களுக்கு முன் ஒரு காட்சியில் வரம்பு மீறி அவளை நடிக்கச் சொல்லி அவர்கள் வற்புறுத்த அவள் அதை திட்டவட்டமாக மறுக்கவும், அப்பொழுதுதான் அந்த ஒப்பந்தம் பற்றியே அவளுக்குத் தெரிய வந்தது.

அத்துடன் இல்லாமல், அவளைத் தவறாகச் சித்தரிக்கும் சில காணொளிகளை அந்த நிறுவனத்தை நடத்திவரும் சதானந்த் அவளிடம் காண்பிக்க, ஆடித்தான் போனாள் சிந்து.

அந்த காணொளியில் அவளுடன் இருந்தவனின் முகம் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்க, அந்த தருணத்தில்தான் அவளுக்குத் தெரிந்திருக்கிறது தான் முற்றிலும் சுயநினைவை இழந்து இப்படி அவனுக்கு உடன்பட்டிருந்தது.

அன்று அவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டு அவள் வந்துவிட, அவளால் அந்த மாத்திரை எடுக்காமல் இருக்க முடியாது என்பதைத் தொடர்ந்து வந்த ஓரிரு  நாட்களிலேயே அவள் உணரவும், கொஞ்சமாகத் தன்னை சுதாரித்துக்கொண்டு, அதிலிருந்து விடுபட மனநல மருத்துவரான அகிலாவின் துணை தேடி வந்திருந்தாள் அவள்.

அந்த ஒப்பந்தத்திலிருந்து விடுபட ஒரு திறமையான வழக்குரைஞர் அவளுக்குத் தேவைப்படவும் அதைப்பற்றியும் அவள் அகிலாவிடம் சொல்லியிருந்தாள்.

முந்தைய தினம் அனைத்தையும் அவள் மூலமாக அறிந்துகொண்ட பிறகு வெகுவாக மனம் கனத்துத்தான் போனது மாதினிக்கு.

அந்த ஒப்பந்தத்தை முறியடிப்பது அவளுக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை என்றாலும் அந்த 'ஹாப்பி பில்ஸ்' விவகாரம் அவளுடைய மூளையை குடைந்துகொண்டே இருந்தது.

அவளது மனநிலையை உணர்ந்தவனாக அவளுடைய வலதுகையின்மேல் தன் கையை வைத்து ஆறுதலாக அழுத்தியவன், "நாளைக்கு வேணா அந்த பையனோட அம்மாவை கேட்டு பார்க்கலாம்.

அன்னைக்கு அந்த சிந்துவை இங்க கூட்டிட்டு வந்தது யாருன்னு கண்டுபிடிக்க முடிஞ்சா, நம்ம யாமியை கொலை செஞ்சவன் யாருன்னு க்ளூ கிடைக்கும்.

முடிஞ்சா அந்த சதாவையும் கொஞ்சம் கண்காணிக்கணும்!" என்றான் ஜெய்.

"ப்ச்! அன்னைக்கு என்ன ஆச்சு; அந்த ஜிம் கோச் நந்தா கிட்ட போய் விசாரிச்சோம்! ஆனா அடுத்தநாளே அவன் ஆக்சிடெண்ட்ல செத்து தொலைஞ்சிட்டான்!

இப்ப இந்த சதாவுக்கு என்ன நடக்குமோ!" என அவள் படபடக்க.

"இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்காம நீ ஓய மாட்ட! அதுக்காகவாவது அந்த ஆளை சீக்கிரம் கண்டுபிடிக்கணும்!" என்றான் ஜெய் தீவிரமாக.

***

அடுத்த நாளே அந்த சிறுவனின் அம்மாவிடம் சென்று அவர்கள் விசாரிக்க, முழு போதையின் பிடியிலிருந்த சிந்துவை அங்கே அழைத்துவந்தவனின் தெளிவான அடையாளத்தை அவரால் சொல்ல இயலவில்லை.

சில தினங்கள் கடந்த நிலையில் சிந்துஜாஸ்ரீயின் சார்பில் அந்த சதானந்த்தை நேரில் சந்தித்து அந்த ஒப்பந்தம் பற்றிப் பேச அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மாதினி. உடன் மனோகரும்.

உள்ளே வர ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க, அவனுடைய பிரத்தியேக அறைக்குள் மாதினி மட்டுமே நுழையவும், அவளைக் கண்டதும் தன்னையும் அறியாமல் ஒரு அதிர்வுடன் எழுந்துநின்ற சதா, "நீ.. நீ.. நீங்க!" எனத் தடுமாற, "நான் மாதினி; அட்வகேட் கே.ஆர் சார் ஜுனியர்!" எனத் தன்னை கம்பீரமாக அறிமுகப்படுத்திக்கொண்டாள் அவள்.

கூடவே பெட்ரோல் நெடியுடன் எதோ தீயில் கருகும் வாடையும் சேர்ந்து மூச்சுமுட்டச் செய்ய, அந்த அறை முழுவதுமே தீ பற்றி எறிவதுபோல் ஒரு பிரமை அவனுக்கு உண்டாக, அவளுக்குப் பின்னால் நின்றித்த கரிய நிழல் உருவம், "நான்தாண்டா யாமினி! என்னை உனக்கு அடையாளம் தெரியல!" என்றது.

மாதினியின் குரலோடு சேர்ந்தாற்போல உருமாலாக சீற்றத்துடன் ஒலித்த அந்த பயங்கர குரலில் ரத்தம் சில்லிட்டுப்போனது சதாவுக்கு!

***

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே!


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
10/01/2020 7:58 am  

மாயா-3

அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உஷ்ணம் தகிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது மாதினிக்கு. கூடவே மகிழம் பூவின் மணம் வேறு சேர்ந்துகொள்ள யாமினியின் நினைவு வந்தது அவளுக்கு.

அவர்கள் கிராமத்து வீட்டில் மிகப்பெரிய மகிழ மரம் ஒன்று உண்டு. அதில் உதிரும் பூக்களை அள்ளி வந்து, வாயிற் திண்ணையில் உட்கார்ந்தவாறு  ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டே அழகாகக் கோர்ப்பது அவர்களுடைய சாந்தா மற்றும் கனகா என இரண்டு பாட்டிகளுக்கும் மிகவும் பிடித்தமான  பொழுதுபோக்கு.

அதைப் பேத்திகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் அலாதி ஆனந்தம் அவர்களுக்கு.

சிறு வயதில் அவர்கள் சொற்படி கேட்டு நடந்தவள், வளர வளர தனது விருப்பப்படி தன் பாதையை வகுத்துக்கொண்டாள் மாதினி.

அவளுடைய வேகத்துக்கு நீண்ட கூந்தலைப் பராமரிப்பது ஒத்துவராமல் போகவே, அவள் அதைக் குட்டையாக வெட்டிக்கொள்ள குடும்பத்தில் அவளை யாரும் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டார் சந்தா.

கனகா பாட்டியின் விருப்பத்திற்குத் தகுந்தாற்போன்று யாமினி இருக்கவே அவர் மாதினியை கொஞ்சம் கண்டுகொள்ளவில்லை அவ்வளவே.

ஆனால்  யாமினியின் நீண்ட கூந்தலை மகிழம்பூ சரம் மேலும் அழகாக்கிக் காண்பிக்க அதனைத் தினமும் சூடிக்கொள்வாள் அவள்.

அதனால்தானோ என்னவோ அவளிடம் அந்த மகிழம் பூவின் மணம் எப்போதுமே இருப்பதுபோல் தோன்றும் மாதினிக்கு.

அந்த மணம் நொடிப் பொழுதிற்குள் அவளை ஏதேதோ நினைவுகளுக்குள் இழுத்து சென்றிருக்க, எதிரே நின்றவனின் நிலையைச் சற்று தாமதமாகவே உணர்ந்தாள் மாதினி.

'யா.. யா..' என்றவாறு அவன் ஏதோ சொல்ல வர, தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டதற்காக அவன் பதில் சொல்கிறான் என்றே எண்ணினாள் அவள்.

எனவே, "எங்க கே.ஆர் அஸோஸியேட்ஸ்தான்  சீரியல் ஆக்டர் மிஸ்.சிந்துஜாஸ்ரீயோட லீகல் அட்வைசர்ஸ்!

உங்களுக்கும் அவங்களுக்குமான காண்ட்ராக்ட் பத்தி பேசத்தான் நான் வந்திருக்கேன்!" என்று அவள் சொல்ல, "ஓ" என வியந்தான் அவன்.

அவன் முகத்தில் தெரிந்த மிரட்சிக்கான காரணம் புரியாமல், "நான் ஒரு தடவ அதோட ஒரிஜினல்ஸ பார்க்கலாமா!" என அவள் நிதானமாகக் கேட்க, எந்த பதிலும் சொல்லாமல், அனிச்சை செயல் போன்று அங்கே இருந்த 'பீரோ'வை திறந்தவன், அந்த காகிதங்களை எடுத்துவந்து அவளிடம் நீட்டினான்.

அவனது பார்வை ஒரு குழப்பத்துடன் அவள் பின்புறமாகவே வெறித்திருக்க, பின்னல் திரும்பி கதவைப் பார்த்தவள், "நான் கூப்பிடாம மிஸ்டர் மனோகர் உள்ள வரமாட்டார். நீங்க டென்ஷன் ஆக தேவையே இல்ல!" என்றாள் எகத்தாளமாக.

அதில் அவன் நெற்றி சுருங்க, "யா.. யா.." என்றான் மறுபடியும்.

'இவன் என்ன லூசா' என்ற எண்ணம் எழ அந்த காகிதங்களைப் புரட்டியவள், "எப்படி மிஸ்டர் மனசாட்சியே இல்லாம உங்களால இப்படியெல்லாம் செய்ய முடியுது!

ஊர் மொத்தம் குழந்தை குட்டிகளோட குடும்பமா உட்கார்ந்து பார்க்கும் டீவீ சீரியல்ல போய் படுக்கை அறை காட்சியெல்லாம் வெக்கணுமா உங்களுக்கு!

அதுல நடிக்க சொல்லி ஒரு பொண்ணை இப்படி ப்ளாக் மெயில் பண்ணுவீங்களா!

அந்த கேவலத்துக்கு ஒத்துக்கலன்னு சொல்லி அந்த அப்பாவி பொண்ணு கிட்ட ஐம்பது லட்சம் காம்பன்சேஷன் வேற கேக்கறீங்க!

அவங்களுக்குன்னு மக்கள் மத்தியில ஒரு மரியாதை இருக்கு இல்ல; அதை கெடுக்க நினைக்கறீங்க!

உங்களுக்கே இது கேவலமா இல்ல!

நான் உங்களையெல்லாம் சும்மாவே விடமாட்டேன் பார்த்துக்கோங்க!

கோர்ட்டுக்கு இழுத்து உங்களை கதற வெக்கல என் பேர் மாதினி இல்ல!" அவள் ஆக்ரோஷமாகச் சொல்ல, மறுபடியும் அந்த நிழல் உருவம் அவன் முன் தோன்றி, 'உங்க எல்லாரையும் கதறவெக்கல நான் யாமினி இல்லடா!" என்றது மாதினியின் குரலுடன் ஒன்றியவாறு.

விதிர் விதிர்த்துப்போய் அவனது உடல் தொய்ந்து போக, வேகமாக அவள் கையிலிருந்த அந்த ஒப்பந்தப் பத்திரத்தைப் பிடுங்கியவன்,  தன் 'பேண்ட் பாக்கெட்'டில் கையை விட்டு 'சிகரெட் லைட்டர்'ரை எடுத்து அவசரம் அவசரமாக அதைப் பற்றவைத்தவாறு, "வேண்டாம் நான் இதை கொளுத்திட்டேன்! என்னை ஒண்ணும் செஞ்சிடாத; விட்று! ப்ளீஸ் என்னை விட்டுடு!" என நடுங்கும் குரலில் கெஞ்சிக்கொண்டே அதைக் கீழே போட்டுவிட்டு, அவனது இருக்கையில் போய் 'தொப்' என விழுந்தான் சதா.

என்ன நடக்கிறது என ஒன்றும் புரியாமல், அவள் அவனிடம் ஏதோ கேட்க வரவும், கரம் குவித்து அவளை கும்பிட்டவன், 'வெளியே போ!' என்பது போல் வாயிற்புறமாகச் சுட்டிக்காட்ட, ஒன்றுமே விளங்காமல் வெளியில் வந்தவள், "என்ன ஆச்சு மாதி! அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட்டுக்கு ஒத்து வருவானா இல்ல லீகலா போக வேண்டியிருக்குமா!" என ஆர்வத்துடன் ரகசிய குரலில் கேட்ட மனோவிற்கு எந்த பதிலையும் சொல்லாமல் அவனுடைய கையை பற்றி இழுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்தாள் மாதினி.

அந்த மகிழம் பூவின் மணமும் அவளைப் பின்தொடர்ந்தது.

***

கோதண்டராமனின்  இடி முழக்கம் போன்ற சிரிப்பொலி அந்த அறை முழுவதும்  எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

மாதினிக்கு பின்புறமாக எட்டிப்பார்த்தவர், கண்ணடி வழியே தெரிந்த மனோகரைப் பார்த்துவிட்டு, "இதே மாதிரி அங்கேயும் கிளாஸ் பார்ட்டிஷன் இருந்துதா மாதும்மா?" இந்த மனோவை பார்த்துத்தான் அவன் மிரண்டிருப்பானோ?

இவனும் பார்க்க நல்ல வாட்டச் சட்டமா பீம் பாய் மாதிரிதானே இருக்கான்!" என்று அவர் கேட்க, "சீனியர்! வேண்டாம்; அப்பறம் காண்டாயிடுவேன்!

இவன் பார்க்கத்தான் பீம்பாய்! நிஜத்துல சோட்டா பீம்! குட்டி குழந்தை கூட இவனைப் பார்த்து பயப்படாது!" என அவள் படபடக்க, மேலும் சிரித்தவர் உள்ளே வருமாறு மனோகரை ஜாடை செய்து அழைத்துவிட்டு, "நீ சொன்னதை அப்படியே அவன் கிட்ட சொல்லட்டுமா?" எனக் கேட்க, "ஐயோ மாம்ஸ்! வேணாம் ப்ளீஸ்! சின்ன பையன்! பொழைச்சு போகட்டும்! சொன்னா ரொம்ப வருத்தப்படுவான்!" என அவள் சொல்ல, "கோவம் வந்தா சீனியர்! காரியத்தை சாதிச்சுக்கணும்னா மாம்ஸா?" என அவர் தீவிரமாய் கேட்க, அதற்குள் மனோகர் உள்ளே வந்துவிடவும் அந்த பேச்சை நிறுத்திவிட்டு, "மனோ! நீ ஏன் இவ கூட உள்ள போகல?

அது அவனோட ஆபீஸ்!

அவனே கொளுத்திட்டு இவளை வம்புல மாட்டிவிட்டா என்ன செய்யறது?" என அவர் கண்டன குரலில் கேட்க, "முந்திட்டு உள்ள போனது அவ; ஆனா கேள்வி கேக்கறது என்கிட்டே" என அவன் வாய்க்குள்ளேயே முனகியவாறு நிற்கவும், "என்னடா கேட்டுட்டு இருக்கேன்! இப்படி மரம் மாதிரி நிக்கற!" என அவர் அதட்ட,  "இவதான் சீனியர்! சொல்ல சொல்ல கேக்காம உள்ள போனா; அந்த நேரத்துல நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க!" என அவன் உள்ளே போன குரலில் சொல்ல, "சரி! சரி! ஒழிஞ்சு போ! இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கோ!" என அவர் சொல்லவும், விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடியே போனான் மனோகர்.

"யாமி போன தூக்கமே துக்கமே இன்னும் மறையல மாது! உனக்கு எதாவது ஒண்ணுன்னா உங்க தாத்தாவுக்கு யார் பதில் சொல்றது!

பார்த்து கவனமா நடந்துக்கோ!" என எச்சரித்து அவளை அனுப்பினார் கே.ஆர்.

'எது எப்படியோ அந்த சிந்துஜாஸ்ரீ இப்ப இந்த பிரச்சனைல இருந்து வெளியில வந்துட்டாங்க! அது போதும்' என்ற நிறைவுடன் அங்கிருந்து சென்றாள் மாதினி.

***

வார இறுதி என்பதால் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் அந்த கேளிக்கை விடுதி உல்லாச விரும்பிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.

எந்த பக்கம் திரும்பினாலும் மது! அதன் போதையும் திருப்தி அளிக்காத நிலையில் தடை செய்யப்பட்ட கோகைன் போன்ற போதைப் பொருட்களின் ஆதிக்கத்தில் ஆங்காங்கே சரித்துக்கிடக்கும் இளவட்டங்கள்.

எல்லாருமே மேல்தட்டு வர்க்கத்து இளம் தலைமுறை.

கணக்கு வழக்கில்லாமல் சொத்துக்களைக் குவித்துவிட்டு மேலும் மேலும் குவித்துக்கொண்டிருக்கும் பேராசை பிடித்த அப்பன்களுக்கு அவன் குவிக்கும் பணத்தை அப்படியே அழிக்கப்  பிறந்திருக்கும் தறுதலைகள்.

அவர்களுடைய வக்கிரங்களைத் தணித்துக்கொள்ள வழிவகை செய்துகொடுக்கும் ஒரு விடுதிதான் அது.

அங்கே இருந்த பிரத்தியேக அறையில் கொதி நிலையில் எகிறிக்கொண்டிருந்தான் அந்த விடுதியின் சொந்தக்காரன் வீரா.

காரணம் சதா!

"என்ன அறிவுகெட்ட காரியத்தை பண்ணிவெச்சிருக்க சதா நீ!

அந்த சிந்து பொண்ண வெச்சு எவ்வளவு பிளான் பண்ணிவெச்சிருந்தேன் தெரியுமா!

கொஞ்சம் கூட யோசிக்காம அந்த காண்ட்ராக்ட கொளுத்தியிருக்க.

அதுவும் போயும்போயும் ஒரு பொண்ணை பார்த்து பயந்துபோய்! ச்ச!

மறுபடியும் சின்னவர் அந்த பொண்ணு வேணும்னு கேட்டா என்ன செய்யறது!" என அவன் பொரிந்து தள்ள,

"என்ன சொன்ன; போயும் போயும் ஒரு பொண்ணா! டேஏஏஏய்... அது ஒரு பேய் டா! பேய்! பயங்கர பேய்!

நான் கண்ணால பார்த்தேன் டா!

அந்த பேய் தான் பழி வாங்க நம்ம நந்தாவை போட்டு தள்ளியிருக்கணும்!" என அவன் முழு போதையிலும் தெளிவாக விவரிக்க, "திரும்ப திரும்ப இதையே உளறிட்டு இருந்தேன்னு வை; நானே உன்ன போட்டு தள்ளிடுவேன் பார்த்துக்க.

நான் நல்லா விசாரிச்சுட்டேன்; போன வாரம் உன் ஆஃபிசுக்கு வந்தது மாதினி; அவ அந்த யாமினியோட ஐடென்டிக்கல் ட்வின்!

அவ்ளோதான்!

அவளை பார்த்ததும் குழம்பிப்போய் பயத்துல உனக்கு என்னென்னவோ தோணியிருக்கு; தட்ஸ் இட்!

போ... அந்த சிந்துவை எப்படி மறுபடி ட்ராப்(Trap) பண்றதுன்னு யோசி!" என வீரா சொல்ல, தன் பேச்சை அவன் நம்பவில்லையே என்ற வெறுப்புடன் தள்ளாடியபடி அங்கிருந்து கிளம்பினான் சதா!

அங்கிருந்து வெளியே வந்தவன் அந்த விடுதியைத் திரும்பிப் பார்க்க, அந்த இடம் முழுவதுமே தீ பற்றி எறிவதுபோன்ற மாயை உண்டானது அவனுக்கு!

நெருப்பு உமிழும் கரிய புகை அவனது நுரை ஈரல் முழுவதும் நிரம்பி வழிவதுபோல் மூச்சடைக்க உச்சபட்ச பயத்துடன் அப்படியே மயங்கிச் சரிந்தான் சதா!

***

ஓட்டி வந்த அவளுடைய நானோவை ஓரமாக நிறுத்திவிட்டு, மார்கழி குளிரில் உடல் நடுங்க அவர்கள் வீட்டை நோக்கிப் போனாள் மாதினி!

வீட்டு வாசலில் சாணம் மட்டும் தெளிக்கப்பட்டிருக்க,  அதில் கோலமும் அதன் நடுவே சாணத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பூசணி பூவும் இல்லாத வெறுமை யாமினியின் பிரிவை அதிகம் சொல்ல, 'அவ இருந்தா இங்க அழகா பெரிய கோலம் போட்டிருப்பா! ப்ச்' என்ற எண்ணம் மனதை அழுத்த வீட்டிற்குள் நுழைத்தாள் மாதினி!

அவளைப் பார்த்ததும், 'கனகா! நம்ம வக்கீலம்மா வந்திருக்கு பாரு! ஓடி வா!' என உற்சாகமாகக் குரல் கொடுத்தார் அவளுடைய தந்தை வழி தாத்தா மாணிக்கம்!

"ஆமாம்! எனக்கு அப்படியே ஓடி வர வயசு பாருங்க ம்கும்!' என நொடிந்தவாறு அங்கே வந்தவர், "மாது குட்டி! மாடு இப்பதான் கறந்துது! பால் காய்ச்சி தரேன் சாபிடறியா!' எனப் பேத்தியிடம் கரிசனையாகக் கேட்டார் கனகா.

"பெரியம்மா இல்லையா பாட்டி!" என அவள் கேட்க, "சாந்தாவை பார்த்துட்டு வரேன்னு போயிருக்கா! இப்ப வந்துடுவா!' என்றார் கனகா பாட்டி.

"சரி பாட்டி! நீங்க இருங்க நான் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்!" என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் மாதினி.

அவள் சென்றதும் பாட்டியின் கண்கள் கலங்கவும், "ப்ச்.. கனகம்! தேவை இல்லாம அழுது எல்லாரையும் கலவரம் பண்ணாத" என அதட்டினார் மாணிக்கம் தாத்தா.

சில நிமிடங்களில் பால் குவளைகளுடன் வந்தவள் தாத்தா பாட்டிக்குக் கொடுத்துவிட்டு தானும் ஒரு குவளையை எடுத்துப் பருக, அங்கே வந்த அவரது மூத்த மருமகள் தங்கம், "மாது குட்டி! வந்துட்டியா! நல்லதா போச்சு! நீ வந்த உடனே சிவா தாத்தா உன்னை அங்க வரச் சொன்னாரு!" என்றவர் மாமியாரை நோக்கி, "முடிஞ்சா உங்களையும் மாமாவையும் கூட அங்க வர சொன்னார் அத்தை!" என மாதினியை ஒரு ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே சொல்ல, அவர் எதற்காக அழைக்கிறார் என்பது கொஞ்சமாகப் புரியவும், "பெரியம்மா! எல்லாரும் சேர்ந்து எதோ கூட்டுச் சதி செய்யற மாதிரி தெரியுதே!" எனக் கோபமாக அவள் கேட்க,

"மாது! இது கோர்ட் இல்ல; நம்ம பரம்பரை வீடு; உனக்கு முன்னால நிக்கறது உன்னோட பெரியம்மா; அது ஞாபகம் இருக்கட்டும்; பணிவா நடந்துக்கோ!" என அவளைக் கனகா பாட்டி கடிந்துகொள்ளவும், 'சாரி பெரிம்மா!" என்று இறங்கிய குரலில் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டை நோக்கிப் போனாள் மாதினி!

அங்கே ஊஞ்சலின் அருகில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி 'வாடா மாது கண்ணா! வா வா!" எனப் புன்னகையுடன் அவளை வரவேற்ற அவளுடைய தாய்வழி தாத்தா சிவராமன், ஊஞ்சலை நோக்கி கை காண்பிக்க, அதில் அவர் கடைவிரித்திருந்த புகைப்படங்கள் அவளைப் பார்த்துச் சிரித்தன.

"எல்லாம் மாப்பிள்ளை போட்டோஸ்! உனக்கு பிடிச்ச பையனை நீ செலெக்ட் பண்ணலாம்!" என்றார் அவர்களை நோக்கி வந்த சாந்தா பாட்டி தோரணையாக.

ஏனோ அந்த நொடி அவள் மனதிற்குள் 'சம்மன்' இல்லாமலேயே 'ஆஜர்' ஆனான் ஜெய் கிருஷ்ணா!

*** 

Hi Friends!

Kindly Share your views.


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
12/01/2020 4:07 pm  

மாயா-4

ஏற்கனவே மார்கழி அதிகாலை குளிர் அந்த கிராமத்து வீட்டின் முற்றம் வழியாகத் தடையின்றி உள்புகுந்து அவளை நடுங்கச் செய்ய, ஏனோ ஒரு நொடி தோன்றிய ஜெய்யின் நினைவால் அவளது உடல் சிலிர்த்தது.

"பாட்டி!" என குழப்பத்துடன் அழைத்தவள், "கல்யாணம்னு சொன்ன உடனே ஒருத்தரோட ஞாபகம் வந்தா அவரை நமக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்! ஒரு வேளை இதுதான் லவ்வா பாட்டி!" என அவள் கேட்க,

வாயை கையால் மூடிக்கொண்டு அதிர்ந்த சாந்தா பாட்டி, "உங்க பேத்தி என்ன கேள்வி கேக்கறா பாருங்க!" எனத் தாத்தாவைப் பஞ்சாயத்துக்கு அழைக்கவும், "அப்படி யாரு கண்ணு உன் ஞாபகத்துல வந்தவன்" என தாத்தா வேடிக்கையாகவே கேட்பதுபோல் கேட்க, கொஞ்சமும் தயங்காமல் சொன்னாள் மாதினி, "நம்ம ஜெய்தான் தாத்தா!" என்று.

"என்ன ஜெய்யா?" என வியப்புடன் பேத்தியின் முகத்தைப் பார்த்தவர், "இந்த லவ்வு ஜவ்வு இதையெல்லாம் பத்தி எங்ககிட்ட கேட்டா என்ன தெரியும் கண்ணு, உங்க அம்மா அப்பாவைதான் கேக்கணும்.

அவங்கதான காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க!" என்று எதார்த்தமாகத் தாத்தா சொல்ல,

"போங்க தாத்தா! இங்க பக்கத்துப் பக்கத்து வீட்டுல இருந்துகிட்டு, அவங்க லவ் பண்ணதுல என்ன த்ரில்.. ம்?

ஏற்கனவேதான் நீங்க ஒரு சம்மந்தம் வேற பண்ணியிருக்கீங்க.

அதுவும் அவங்க உங்க கிட்ட வந்து சொன்ன உடனே; என்ன ஏதுன்னு கூட கேக்காம உடனே கல்யாணத்தை பண்ணி வெச்சுடீங்க;

கொஞ்சம் கூட ஸ்வாரசியமே இல்ல. ம்ப்ச்.. ரொம்ப போர்!" என மாதினி அலுத்துக்கொள்ள,

அனைத்தையும் கேட்டவாறே, அவளுடைய அப்பாவின் கையில் காஃபீ அடங்கிய டபரா டம்பளரை கொண்டுவந்து கொடுத்த மாதினியின் அம்மா ஸ்வர்ணலட்சுமி, "சொல்லுவடி சொல்லுவ! நம்ம ஜெய்யாமே! நம்ம ஜெய்!

முதல்ல உனக்குத்தானே அவரை பார்த்தோம்! பெருசா அப்ப வேண்டாம்னு சொல்லிட்டு எல்லாம் முடிஞ்சுபோன பிறகு இப்ப வந்து இப்படி சொல்ற!

போறாத குறைக்கு எங்க லவ்வை வேற கிண்டல் பண்ணிட்டு இருக்க!"" எனப் பொரிய,

"ப்ச்.. இப்ப என்ன முடிஞ்சுபோச்சுங்கற ஸ்வர்ணா எதுவுமே முடியல! பாப்பா இப்பத்தான வீட்டுக்குள்ள நுழையறா! அதுக்குள்ள சண்டைக்கு கிளமபறியேம்மா நீ!

அவ சொல்ல வர விஷயத்தை சொல்லி முடிக்கட்டுமே!" எனப் பேத்திக்குப் பரிந்தவாறே காஃபியை ஆற்றி அதைக் கொஞ்சம் டபராவில் ஊற்றி மாதினியிடம் கொடுத்தார் சிவராமன் தாத்தா.

அதை வாங்கிக்கொண்டு ஊஞ்சலிலிருந்த புகைப்படங்களை எல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு அதில் உட்கார்ந்தவள், காஃபியை சுவைத்துவிட்டு நாக்கை நீட்டி அவளுடைய அம்மாவிடம் பழிப்பு காட்டிவிட்டு, "தாத்தா எனக்கும் புரியல தாத்தா, இந்த போட்டோவை எல்லாம் பார்க்கும்வரைக்கும் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்ல.

ஆனா பார்த்ததுக்கு அப்பறம் என்னால அவரை நினைக்காம இருக்க முடியல தாத்தா.

அவர் ஒரு ஸ்வீட் பெர்சன்!" என அவள் சொல்ல, அப்பொழுது, "எந்த ஸ்வீட் பர்சனை பத்திடா பேசிட்டு இருக்கு நம்ம வக்கீலாம்மா!" எனக் கேட்டுக்கொண்டே அங்கே ரத்தினம் வர அவரை பின்தொடர்ந்து கனகா பாட்டியும் அவளுடைய பெரியம்மா தங்கமும் அங்கே வந்துவிட, வீடே களை காட்டியது.

"ஒண்ணும் இல்லடா ரத்னம்! மாது குட்டிக்கு நம்ம யாமிக்கு நிச்சயம் பண்ணோம் இல்ல அந்த பையன் ஜெய்யைத்தான் பிடிச்சிருக்காம்! அவனைப் பத்திதான் சொல்லிட்டு இருக்கா!" என்றார் சிவராமன்.

லேசான அதிர்ச்சி தெரிந்தது ரத்தினத்திடம். தாடையைத் தடவியவாறே, "ஜெய் நல்ல பையன்தான். ஆனா இது ஒத்து வருமா சிவா!" எனத் தயக்கமாகவே வினவினார் அவர்.

"மார்கழி முடியட்டும் நாம ஜெய் அப்பா கிட்ட பேசுவோம். ஒண்ணும் தப்பில்லை. நடப்பது நடக்கட்டும். ஏன்னா மாது இதுவரைக்கும் வேணும்னு கேட்ட விஷயம் எல்லாமே ரொம்ப நியாயமானதாத்தான் இருந்திருக்கு" என்றார் சிவராமன்.

"அவ போக்கிலேயே போய்.. போய்தான் எல்லாரும் அவளைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி வெச்சிருக்கீங்க!

இப்ப கல்யாண விஷயத்துலையுமா?" என கனகா படபடக்க, "அப்படி சொல்லுங்க அத்தை!" என அவருக்குப் பின் பாட்டுப் பாடினாள் ஸ்வர்ணா.

"ஏய் உங்களுக்கு ஏண்டி இவ்வளவு காண்டு!" என அவர்கள் மீது பாய்ந்த சந்தா பாட்டி, "அவ தெளிவா இருக்கும்போது நாம அவ போக்குல போனா என்ன தப்பு; என்ன தப்புன்னு கேக்கறேன்?

இதோ பாருங்க ரத்தினம் அண்ணா, மார்கழி முடியற வரைக்கும் எல்லாம் காத்திருக்க வேணாம்! நான் இன்னைக்கே அகிலாவை போன்ல கூப்பிட்டு பேசி சீக்கிரமா ஒரு முடிவைச் சொல்ல சொல்றேன்!

பொங்கல் முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாமா இல்ல கல்யாணத்தையே முடிச்சிடலாம்னு எல்லாரும் யோசிக்கற வழியை பாருங்க!' என ஒரே போடாகப் போட்டு அந்த பேச்சை முடித்தார் வழக்கம்போல யாமினிக்கு பரிந்துகொண்டு.

அனைவரும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, வீட்டின் தோட்டத்திற்கு வந்தாள் மாதினி.

இரண்டு வீட்டிற்கும் பொதுவாக இரண்டு குடும்பங்களுக்கும் பாலமாக இருப்பதுபோல் பருத்து வளர்ந்திருந்தது அந்த மகிழ மரம்.

அது மலர்கள் மலரும் பருவம் இல்லை என்பதால் பூக்கள் இல்லாமல், அந்த பூக்களின் மணம் இல்லாமல் அந்த மரம் தன் இலைகள் முழுவதும் மார்கழியின் பனித்துளிகளைச் சுமந்து நிற்க, "ஏய் வகுளாம்மா! யாமினி உன் கூட இல்லன்னு கண்ணீர் வடிக்கறியா நீ!" எனக் குரலில் சோகம் இழையோட அந்த மரத்திடம் மாதினி கேட்க, 'யார் சொன்னா யாமினி இங்க இல்லன்னு!’ என அவளுக்குப் பதிலுரைப்பதுபோல் மென் காற்று வீசவும், அந்த மரத்தின் இலைகளிலிருந்த பனித்துளிகள் அவள் மீது தெளித்து அவளை நடுங்கச்செய்ய, அப்பொழுது திடீரென்று அங்கே அழுத்தமாக மகிழம் பூவின் மணம்  வீசியது.

அதில் குழம்பிப்போய் அவள் நிற்க, அவளைத் தேடி அங்கே வந்தனர் அவளுடைய அப்பாவும் பெரியப்பாவும்.

"கணேஷ்பா! மகிழ மரத்துல மார்ச் மாசத்துக்கு அப்பறம்தானே பூ பூக்க ஆரம்பிக்கும்!" என யோசனையுடன் அவள் கேட்க, "ப்ச்.. கண்ணு இது என்ன இப்படி பச்சப்புள்ள மாதிரி பதில் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேக்கற!" என  அலுத்துக்கொண்டார் அவளுடைய அப்பா குமரேஷ்.

"ப்ச்.. குமரா சும்மா இரு. அவ ஏதோ கேக்க வர மாதிரி இருக்கு!" என்ற அவளுடைய பெரியப்பா கணேஷ், "மார்ச் ஏப்ரல்ல தான கண்ணு இந்த மரம் பூக்கும்! இப்ப ஏன் திடீர்னு இப்படி கேக்கற" எனக் கேட்க, "பெரியப்பா உங்களுக்கு மகிழம்பூ வாசனை வரல! எனக்கு ரொம்ப வருது" என மூக்கை உறிஞ்சியவாறு அவள் கேட்க,

"எனக்கு எந்த வாசனையும் வரலையே மாதும்மா!" என்றவாறு அதிர்ச்சியுடன் கணேஷ் தம்பியின் முகத்தைப் பார்க்க, "பாப்பா எனக்கும் எந்த வாசனையும் வரல, இன்னும் பனி விலகவே இல்ல; நீ முதல்ல உள்ள வா! தலை வலி வரப்போகுது" என்று சொல்லிக்கொண்டே ரத்தினம் தாத்தாவின் வீட்டிற்குள் அவர்கள் செல்ல, அந்த மரத்தையே திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் மாதினி.

அந்த மகிழ மரம்  அவளைப் பார்த்து வேகமாகத் தலை அசைத்தது.

***

அன்று எல்லோருக்கும் சிவராமன் தாத்தா வீட்டிலேயே காலை உணவு தயாராகியிருக்க, குளித்து முடித்து அவளுடைய அம்மா மற்றும் பெரியம்மா இருவரின் கை மணத்தில் தயாராகியிருந்த உணவு வகைகளைச் சாப்பிட்டவள், அவளுக்கும் யாமினிக்கும் பொதுவாக இருக்கும் அறைக்குள் போய் தனது மடிக்கணினியைத் திறந்துவைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

ஆனால் அவளது மனம் வேலையில் லயிக்காமல் போகவே, சலிப்புடன் அதை மூடிவைத்துவிட்டு கட்டிலில் போய் கண்மூடி படுத்துக்கொண்ட மாதினி, 'யாமி! உன்னோட ஜெய்ய எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேனே! அதுல உனக்கு கோவமா!" எனத் தங்கையிடம் மனதிற்குள்ளேயே கேள்வியை கேட்க, அந்த படுக்கை முழுவதும் மகிழம்பூவின் மணம் வருவதுபோல் தோன்றியது அவளுக்கு.

அடர்த்தியான அந்த வாசனையில் அவளுக்கு மூச்சுமுட்ட, ஏதேதோ நினைவுகளுடன் அப்படியே மயக்கமாகிப்போனாள் மாதினி!

***

வந்தவாசியை அடுத்த விளாங்காடு என்னும் சிறிய கிராமம் அவர்களுடையது.

அது ஒரு வானம் பார்த்த பூமிதான் என்றாலும் அங்கே கொள்கையுடன் விவசாயம் செய்துகொண்டிருந்தார் ரத்தினம்.

அவர்களுடைய அடுத்த வீடு, ரத்தினத்தின் தூரத்து உறவும் மனதிற்கு நெருக்கமான நட்புமாகிய சிவராமனுடையது.

அவர் சட்டப்படிப்பை முடித்ததும் அவருடைய வேலையின் நிமித்தம் சென்னையிலேயே குடிபுக, ரத்தினம் விவசாயத்தைக் கவனித்துக்கொண்டு விளாங்காட்டிலேயே இருந்துவிட்டார்.

ரத்தினத்துக்கு இரண்டு மகன்கள்; கணேஷ் மற்றும் குமரேஷ். சிவராமனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் தங்க லட்சுமி மற்றும் ஸ்வர்ணலட்சுமி.

சதாசிவம் மனசாட்சிப்படி நடக்கும் ஒரு நேர்மையாளர். அவர் பணத்தை நோக்கி ஓடாமல் நேர்மையின் பின்னால் நின்றதால் அவரால் அதிக வருமானம் ஈட்ட இயலவில்லை.

ஆனால் அவருடைய நேர்மை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

முதலில் மாம்பலத்தில் வாடகை வீட்டில் குடி இருந்தவர், பின்பு அங்கேயே சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டினார்.

அவர் மனதின் எதோ ஓர் ஓரத்தில் 'மகள்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனிமை படுத்தப்பட்டுவிடுவோம்' என்ற அச்சம் குடியிருக்க, அந்த நேரம் பார்த்து கனகாவின் விருப்பப்படி தனது மூத்த மகனுக்குத் தங்கத்தைக் கேட்டார் ரத்தினம்.

அது சிவராமனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க திருமணத்தையும் உடனே முடித்தார்.

அவர்கள் திருமணம் முடிந்து ஓராண்டுக்குள்ளாகவே குமரேஷும் ஸ்வர்ணாவும் காதலிப்பதாக வந்து சொல்லவும், கொஞ்சமும் தயங்காமல் அந்த திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.

குமரேஷுக்கு சென்னையிலேயே ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைக்க சிவராமனின் வீட்டின் மாடியிலேயே குடியேறினர் குமார்-ஸ்வர்ணா தம்பதியர்.

அதில் சிவராமன் மிகவும் மகிழ்ந்துதான் போனார்.

அந்த வருடத்திலேயே தங்கத்தின் மகன் ஷியாம் பிறந்துவிட, சில வருடங்கள் கழித்து ஸ்வர்ணா கருவுற்றாள்.

கருவில் இருப்பது இரட்டை குழந்தைகள் என்பது தெரியவும் அவளை வெகு பத்திரமாகப் பார்த்துக்கொண்டார் சாந்தா.

ஸ்வர்ணாவுக்கு  பிரசவம் சிக்கலாகிப்போக, அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தைகளை எடுத்தனர்.

ஒரே உருவத்துடன் பிறந்திருக்கும் அந்த அழகிய ரோஜா மொட்டுகளுக்கு 'மாதினி - யாமினி' என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் அனைவரும்.

இயல்பிலேயே மாதினி சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்க, யாமினி கொஞ்சம் சவலை குழந்தை போல இருந்தாள்.

ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைக் கவனிக்கமுடியாமல் ஸ்வர்ணா திணறவும், யாமினியை தன்னுடன் விளங்காட்டிற்கே எடுத்து வத்துவிட்டார் கனகா.

கனகாவும் தங்கமும் சேர்ந்து கொடுத்த கவனிப்பில் குழந்தை நன்றாகத் தேறி வரவும் அவளை அங்கேயே இருக்கும்படி விட்டுவிட்டனர் குமரேஷ் மற்றும் ஸ்வர்ணா இருவரும்.

யாமினி கிராமத்திலேயே வளர, ஒவ்வொரு விடுமுறைக்கும் பெற்றோருடன் அங்கே சென்று சகோதரியுடன் கிராமத்து மகிழ்ச்சியெல்லாம் அனுபவித்துவிட்டு வருவாள் மாதினி.

யாமினியும் சென்னை வந்து இருந்துவிட்டுச் செல்வதுண்டு.

பார்க்க ஒரே தோற்றத்திலிருந்தாலும் பெண்கள் இருவரும் வெவ்வேறு குணாதிசயத்துடன் வளர்ந்தார்கள்.

இயல்பிலேயே மாதினிக்கு இருக்கும் துணிவு யாமினிக்கு கொஞ்சமும் இல்லை.

காலத்திற்கு ஏற்ப வளரும் மாதினியை புரிந்துக்கொண்டு சாந்தா அவளுக்குப் பக்கபலமாக இருக்க, கொஞ்சம் பழைய பழக்கவழக்கங்களில் ஊறிப்போன கனகா யாமினியை கண்டிப்புடனேயே வளர்த்தார்.

மனதில்பட்டதை பளிச்சென்று சொல்லிவிடுவாள் மூத்தவள்.

அவளது ஆசையைக்கூட மாதினியின் மொழியாகத்தான் நிறைவேற்றிக்கொள்வாள் இளையவள்.

சுருக்கமாக சொல்வதென்றால் புலியுடன் கூட 'செல்ஃபீ' எடுப்பாள் துணிவுடன் ஒருத்தி. ஆனால் பூனையைப் பார்த்தே மிரளுவாள் மற்றவள்.

மொத்தத்தில் இருவரும் இரு வேறு குண இயல்புகள் கொண்டவர்கள். ஆனால் அடிப்படையாக இருக்கும் அன்பு என்ற குணத்தில் ஈருடல் ஓர் உயிர் என இருவரும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டவர்கள்.

***

தங்கத்தின் மகன் ஷியாம் அவனது படிப்பு முடியவும் வேலை கிடைத்து பின் பெரியவர்கள் பார்த்த பெண்ணை மணந்துகொண்டு வெளிநாட்டில் குடியேறியிருக்க, அவர்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் பொறியியல் கல்லூரியில் படித்து எம்.டெக் முடித்தாள் யாமினி.

சிறு வயதுமுதலே சிவராமன் தாத்தாவுடன் ஹை கோர்ட் வளாகம் முழுதும் சுற்றி திரிந்தவள், ஈ.பீ.கோ துணையிடனேயே வளர்ந்தாள் மாதினி.

சட்டப்படிப்பை ஆர்வமுடன் அவள் தேர்ந்தெடுக்க, மகள்களில் ஒருத்தி கூட அக்கறையில்லாமல் பெயருக்கென்று ஒரு படிப்பைத் தேர்ந்து படித்திருக்க அந்த வருத்தத்திலிருந்த சிவராமன், மாதினியால் மகிழ்ந்தே போனார்.

வயது காரணமாக அவர் 'ப்ராக்டிஸ்'ஸை நிறுத்தியிருக்க, அவருடைய 'ஜுனியர்'ஆக இருந்த கோதண்டராமனிடமே பேத்தியை ஒப்படைத்தார் அவர்.

பின் அவர் கிராமத்துடனேயே வந்துவிட, ரத்தினம் தம்பதியினர் அவருடைய மூத்த மகன்  மருமகள் மற்றும் யாமினியுடன் அவரது  வீட்டில் இருக்க, சிவராமனும் சாந்தாவும் இளைய மகள் மற்றும் மருமகனுடன் அவருடைய வீட்டிலிருந்தார்.

வார இறுதி நாட்களில் மட்டும் மாதினி அங்கே வருவது வழக்கம்.

***

சென்ற ஆண்டு இதே போன்ற ஒரு மார்கழி அதிகாலை மாதினி விளாங்காடு நோக்கி அவளுடைய மஞ்சள் 'நானோ'வில் வந்து இறங்க, வீட்டின் வாயிலில் யாமினியின் கைவண்ணத்தில் மிக அழகாகத் தொகை விரித்து நின்றிருந்தன இரண்டு மயில்கள்.

அதனை ரசித்துக்கொண்டே நின்றிருந்தவளைப் பார்த்துவிட்டு ஓடி வந்த யாமினி, "மாது! கோல மயில் எப்படி இருக்கு!" என எதிர்பார்ப்புடன் கேட்க, அதைத் தன் கைப்பேசியில் பதிவுசெய்தவாறே, "ஆஸம் யாமு! ரொம்ப அழகா இருக்கு" என்றவளை, "தாங்க்யூ!" என சொல்லிக்கொண்டே சிவராமன் தாத்தாவின் வீட்டிற்குள் இழுத்துச்சென்றாள் அவள்.

ரத்தினம் தாத்தாவின் வீட்டிற்குள் செல்லாமல் வழக்கத்திற்கு மாறாக அவளுடைய கால்கள் சிவராமன் தாத்தாவின் வீட்டை நோக்கிப் போகவும், "என்ன யாமி ஏதாவது முக்கியமான விஷயமா! அதிசயமா இங்க இழுத்துட்டு வர!" என மாதினி கேட்க, "வா வா உனக்கே தெரியும்!" என்றாள் யாமினி.

அங்கே காஃபியை பருகிக்கொண்டிருந்த தாத்தா, மாதினியை ஊஞ்சலில் உட்காருமாறு ஜாடை செய்துவிட்டு, காஃபியைக் கொஞ்சமாக டபராவில் ஊற்றி அவளிடம் கொடுத்துவிட்டு, அவள் அதைப் பருகி முடிக்கும்வரை காத்திருந்தவர், "சாந்தா அந்த போட்டோவை எடுத்துட்டு வா!" என்று சொல்ல, ஒரு புகைப்படத்தை எடுத்துவந்து அவளிடம் நீட்டினார் சந்தா.

அதில் வசீகரமாக அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான் ஜெய் கிருஷ்ணா.

"என் கிளையண்ட் ஒருத்தரோட தம்பி பேரன்மா இந்த பையன்! அவர்தான் இந்த ஜாதகத்தை கொடுத்தார்.

அம்மா அப்பா ரெண்டுபேரும் டாக்டர்ஸ்! நிறைய சொத்து இருக்கு! இவன் ஒரே பையன்!

சொந்தமா எதோ பிசினஸ் பண்றானாம்!" என தாத்தா சொல்லிக்கொண்டிருக்க, "ஏதோ பிசினஸ் இல்ல மாது! ஆர் ஓ வாட்டர் பாக்டரி வெச்சிருக்கார்!

சின்ன சின்ன பாட்டில் முதல், பெரிய கேன் வரைக்கும் சென்னை முழுக்க சப்ளை பன்றாராம்!

அதோட இல்லாம எர்த் மூவர்ஸ்னு சொல்லுவாங்க இல்ல ஜே.சி.பி மாதிரி பெரிய வண்டியெல்லாம் வாடகைக்கு விடற பிசினஸ்; அதுவும் செய்யறாராம்!" என நடுவில் புகுந்து பெருமையுடன் சொன்னாள் யாமினி!

தாத்தா அவளை ஒரு புரியாத பார்வை பார்க்க, "இல்ல தாத்தா பெரியம்மா சொன்னாங்க" என்றாள் அவள் உள்ளே போன குரலில்.

"அவ சொன்னதுதான் மாது! ஜாதகமும் நல்லா பொருந்தி வந்திருக்கு.

நீ சம்மதம்னு சொன்னா உடனே பொண்ணு பார்க்க வரச்சொல்லிடலாம்!" என்றார் தாத்தா.

போட்டோவில் இருந்தவனின் சிரிப்பில் ஒரு வசீகரம் தெரிய நேரில் பார்க்கும்போது அவனைப் பிடித்துப் போக அதிகம் வாய்ப்பிருக்கிறது என அவளது அறிவு சொல்ல, "தாத்தா! எனக்கு யோசிக்கக் கொஞ்சம் டைம் கொடுங்க!" என்றாள் மாதினி.

"கண்ணா மார்கழி முடியறதுக்குள்ள சொல்லிடுவியா!" என எதிர்பார்ப்புடன் சாந்தா கேட்க, "சாயங்காலமே சொல்றேன் பாட்டி!" என்றாள் மாதினி அடுத்த நிமிடம் நடக்கவிருப்பது தெரியாமல்.

"நல்ல பதிலா இருந்தால் சந்தோஷம்! உடனே யாமிக்கும் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து பிக்ஸ் பண்ணிடலாம்!" என்றார் தாத்தா சலனமற்ற குரலில்.

பின் வழக்கம் போல மகிழ மரத்தின் அடியில் மாதினி போய் நிற்க அவளை பின் தொடர்ந்து வந்தவள், "மாப்பிளை நல்ல உயரமாம் மாது! மா நிறமா இருந்தாலும் ஹாண்ட்சம்மா இருக்கார் இல்ல! ஓகே சொல்லிடு மாது!" என்றாள் யாமினி இறைஞ்சுதலாக.

அவளது வாய்தான் அப்படிச் சொன்னதே தவிர அவளுடைய கண்கள் வேறு கதை சொல்ல, அதை உணர்ந்த மாதினியின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

சில நிமிடங்கள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவள் அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவாறு வீட்டிற்குள் சென்று தாத்தாவிடம் சொன்னாள், "தாத்தா எனக்கு வக்கீல் மாப்பிள்ளையா பாருங்க! இவரை யாமிக்கு பிக்ஸ் பண்ணிடுங்க!' என்று தெளிவாக.


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
24/01/2020 4:02 pm  

மாயா 5

"ஏண்டி! பெரியவங்க சொல்றத கேக்கவே மாட்டியா! தாத்தா பாட்டி இவ்வளவு ஆசையா சொல்றாங்க இல்ல?" என ஸ்வர்ணா மாதினியிடம் கோபப்பட, "ஏன் மாது இப்படி சொல்ற!" என கிசுகிசுப்பாக அவளைக் கடிந்துகொண்டாள் யாமினி.

"ப்ச்.. என் ப்ரொஃபஷன்ல இருக்கற ஒருத்தர நான் எதிர்பார்க்கறதுல தப்பு ஒண்ணும் இல்லையே யாமு?" எனக் கேட்டவள்,

"உனக்கும் அந்த ஜெய்யை பிடிக்கலன்னா வேண்டாம்னு சொல்லிடலாம்" என்றாள் மாதினி அடாவடியாக.

அதில் யாமினியின் முகம் கறுத்துப்போக, அந்த சம்பந்தத்தை விட்டுவிட பெரியவர்களுக்கும் மனம் இல்லாமல் போகவே, "உன் போட்டோவைதான் அவங்களுக்கு அனுப்பி இருக்கோம் மாது!

பேசி பாக்கறேன்.

ஒத்து வந்தால் முடிக்கலாம்!" என்ற சிவராமன் தாத்தா ரத்தினம் தாத்தாவையும் பாட்டியையும் அங்கே வரச்சொல்லி அழைத்தார்.

மேலும் அவருடைய இரண்டு மகள்களும் மாப்பிள்ளைகளும் அங்கே வந்துவிட, அதற்குள் ஜெய்யின் அப்பாவுடன் பேசி இருந்தவர், "ரத்தினம்! மாதினி அந்த பையனை வேண்டாம்னு சொல்லிட்டா! நானும் அவளை கம்பெல் பண்ண விரும்பல!

அதனால நான் மாப்பிளை வீட்டுல பேசிட்டேன்; அவங்க பையன் கிட்ட நம்ம மாதுவோட போட்டோவை காமிச்சிருக்காங்க!

அவரும் பிடிச்சிருக்குனு சொல்லியிருக்கார்.

இப்ப யாமினிக்கு பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு, 'இன்னும் பெண்ணை நேரில் கூட பார்க்கல இல்ல; மோர் ஓவர்  ரெண்டு பேரோட ஜாதக அமைப்பும் ஒண்ணுதானே! அதுவும் ரெண்டு பேரும் பார்க்கவும் ஒரே மாதிரி இருக்கறதால பரவாயில்லைன்னு சொல்லிட்டார் பையனோட அப்பா ஸ்ரீதர்.

நம்ம குடும்பத்துமேல அவங்களுக்கு இருக்கற மரியாதையும் ஒரு காரணம்!" என்றவர், "அந்த பையனை நம்ம யாமினிக்கே முடிச்சிடலாம்! உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையே?" எனக் கேட்டார்.

"எல்லாருக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம். இதுல வேண்டாம்னு சொல்ல என்ன இருக்கு?" என்ற ரத்தினம், "நீ என்ன சொல்ற கனகம்?' என்று மனைவியிடம் கேட்க,

உடனே கனகவல்லி பாட்டி யாமினியின் முகத்தைப் பார்க்க, அவள் பதட்டத்துடன் மாதினியைப் நோக்கவும், "அவளை என்ன பார்க்கற யாமு! உனக்கு ஓகேவா; அதை சொல்லு!" என்றார் சந்தா.

"உனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லு யாமு! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல!" என மாதினி சொல்ல, மகிழ்ச்சி பூக்கள் முகத்தில் பூக்கச் சம்மதமாகத் தலையை அசைத்தாள் யாமினி.

*** 

அடுத்த நாளே அவர்கள் யாமினியைப் பெண் பார்க்க வருவதாகச் சொல்ல, அவர்கள் வீடே கல்யாண களை காட்டியது.

அதற்குள் ஒரு முக்கிய வழக்கு விஷயமாக உடனே சென்னை புறப்பட்டு வரும்படி கோதண்டராமன் மாதினியை அழைக்கவும் அவள் அந்த நேரத்தில் அங்கே இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் அதையே சாக்காக வைத்து அங்கிருந்து கிளம்பிச்சென்றாள் அவள்.

*** 

அவர்கள் பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு மாதினியை கைப்பேசியில் அழைத்த யாமினி, "மாது; தேங்க்ஸ்!" என மெல்லிய குரலில் சொல்ல, "எதுக்கு இந்த தேங்க்ஸ் எல்லாம்?" எனக் கேட்டாள் மாதினி ஒன்றுமே தெரியாதது போல்.

"எனக்குத் தெரியும் மாது; எனக்ககத்தானே நீ ஜெய்யை வேண்டாம்னு சொன்ன?" என யாமினி வருந்தும் குரலில் சொல்ல, "லூசு மாதிரி பேசாத!

உண்மையிலேயே எனக்கு இப்ப கல்யாணத்துல இஷ்டம் இல்ல; அது உனக்கே தெரியும் இல்ல.

மாஜிஸ்ட்ரேட் எக்ஸாம் எழுதணும்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன் யாமு!

அதுக்கு எந்த குறுக்கீடும் வரக்கூடாது.

எங்க அந்த ஜெய்யை நேரில் பார்த்தால் என் எண்ணமெல்லாம் மாறிப்போயிடுமோன்னு பயம் வந்துடுச்சு!

அதே நேரம் அவரை உனக்கு பிடிச்சிருக்குன்னு புரிஞ்சிது. உன்னை அதுல கோத்து விட்டுட்டு நான் எஸ் ஆகிட்டேன்!" என்ற மாதினி, "அதெல்லாம் இருக்கட்டும் விடு; நேரில் எப்படி இருக்கார் உன் ஹீரோ! முதல்ல அதை சொல்லு!" என்று அவள் கேட்க, எதிரில் குடிகொண்ட மவுனம் அவளது வெட்கத்தை மாதினிக்குச் சொல்ல, "ஓ..ஹோ!" எனக் குதூகலமானவள், 'சொல்லு சொல்லு எப்படி இருக்காரு!" என்று விடாமல் அவளை ஓட்ட, "சூப்பரா! கெத்தா இருக்கார்! மாது" என்றாள் அவள் திக்கித் திணறி.

"பார்றா!" என்றவள், "உண்மையிலேயே ஹி இஸ் லக்கி யாமு! உன்னை மாதிரி ஒரு பொண்ணு அவருக்கு கிடைக்க.

மோஸ்ட் ஆஃப் தி மென் உன்னை மாதிரி பெண்ணைத்தான் விரும்புவாங்க.

நானெல்லாம் செட்டே ஆக மாட்டேன்.

இப்படி வெக்க படவெல்லாம் எனக்கு வராது!" என்றாள் மாதினி.

அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல், "அவங்களுக்கும் என்னை பிடிச்சிருக்காம்; சொல்லிட்டு போயிட்டாங்க!

அடுத்த வாரம் நிச்சயதார்தத்துக்கு நாள் குறிச்சிருக்காங்க!

மார்ச் மாசம் கல்யாணத்துக்கு நாள் பார்த்திருக்காங்க மாது.

நிச்சயதார்தத்துக்கு நீ இங்க கண்டிப்பா இருந்தே ஆகணும்!" என்றாள் யாமினி கண்டிப்புடன்.

"டன்!" என்று முடித்தாள் மாதினி அதற்கு அடிபணிந்து.

மாதினி அழைப்பைத் துண்டிக்க, அடுத்த நொடியே மறுபடியும் அவளை அழைத்த யாமினி, "மாது இந்த நேரம் பார்த்து எனக்கு நான் படிக்ச காலேஜ்ல இதே வேலைல ஜாயின் பண்ண சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு.

ஜனவரி ஃபர்ஸ்ட் வீக் வந்து ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க! என்ன பண்ணலாம் சொல்லு?" என யாமினி கேட்க, "ப்ச்.. இதையெல்லாமா என்னை கேப்ப! நீதான் முடிவு பண்ணனும் யாமு!' என அவள் சொல்ல, "இல்ல மாது! வேலைக்கு போறதா வேண்டாமான்னு குழப்பமா இருக்கு.

சாந்தா பாட்டி வேலைக்கு போ! அதுதான் சரின்னு சொல்றாங்க! கனகா பாட்டியை கேட்டா கல்யாணம் நிச்சயமாகி இருக்கும் சமயத்துல இதெல்லாம் தேவையான்னு கேக்கறாங்க!" என அவள் தயக்கமாகச் சொல்ல,

"இனிமேல் நீ என் முடிவையோ இல்ல இந்த கிழவிங்க முடிவையோ கேக்கறது தப்பு யாமு.

ஒண்ணு நீயே சுயமா ஒரு முடிவை எடு; இல்லனா உனக்குத்தான் ஒரு ஹீரோ வந்துட்டாரே அவர்கிட்ட கேளு!" என மாதினி சொல்ல அதற்கும், "ஐயோ! சான்ஸே இல்ல!" என அவள் பதறவும், "ஓ மை கடவுளே!" என அலுத்துகொண்டவள், "ஒண்ணு பண்ணு; இப்போதைக்கு இந்த வேலைல  ஜாயின் பண்ணு.

உனக்கு பிடிச்சிருந்தா கன்டின்யூ பண்ணு; இல்லனா விட்டுட்டு பதி சேவை செய்!" என அந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைச் சொன்னாள் மாதினி அதனால் புதிதாக ஒரு பெரிய பிரச்சனை உருவாகப்போவதை அறியாமல்.

*** 

நிச்சயித்த நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறியது ஜெய் - யாமினி நிச்சயதார்த்தம்.

சிவராமன் வீட்டில் சாப்பாட்டுப் பந்தியும் ரத்தினத்தின் வீட்டில் நிச்சயதார்த்த விழாவும் அமர்க்களப் பட்டது.

மாப்பிள்ளை வீட்டுச் சீராக வந்த ஆரஞ்சு நிறத்தில் பச்சை சரிகை போட்ட காஞ்சி பட்டில் பொன்னாலான நகைகள் மின்ன ஜொலிஜொலித்தாள் யாமினி.

அம்மா, பாட்டிகள் என வற்புறுத்த மாதினியும் பச்சையில் மெல்லிய 'ஸெல்ஃப்' பார்டர் இட்ட  பட்டுப்புடவையில் எளிய நகைகள் அணிந்து வந்த விருந்தினர்களை ஓடி ஓடி உபசரித்துக்கொண்டிருந்தாள்.

தாத்தா, ஸ்ரீதர் குடும்பத்தினர் அனைவருக்கும் அவளை அறிமுகப் படுத்த முதலில் அவள் ஜெய்யை மறுத்தது எதையும் மனதில் கொள்ளாமல் அகிலா உட்பட எல்லோருமே இயல்பாகவே அவளிடம் நடந்துகொண்டனர்.

ஜெய் யாமினி இருவரும் அதற்கு முன்னதாகவே கைப்பேசியில் பேசத் தொடங்கி இருக்க, அன்று அவர்கள் பழகிய விதத்தைப் பார்த்து அழகிய புரிதலுடன் ஒரு மெல்லிய காதல் அவர்களுக்குள் உருவாகி இருந்தது புரிந்தது மாதினிக்கு.

மனதிற்குள்ளேயே அதை ரசித்துக்கொண்டிருந்தாள் அவள்.

அதுவும் நண்பர்கள் வற்புறுத்தலின் பெயரில், ஜெய் மண்டியிட்டு, மலர்க்கொத்தை யாமினியின் கரங்களில் கொடுத்து, "அழகியே மேரி மீ!" என்று சொல்லி அவளது மெல்லிய விரலில் மோதிரத்தை அணிவிக்க, அங்கே இருந்த அவர்களது நண்பர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, நாணத்தால் சிவந்துபோனாள் யாமினி.

அந்த கட்சியை வெளிப்படையாக தன் கைப்பேசியிலும் ரகசியமாக தன் மன பெட்டகத்திலும் பதிவு செய்துகொண்டாள் மாதினி.

முதலில் அறிமுகப்படும்போது ஒரு 'ஹை!' சொன்னதுடன் சரி, அதற்கு பிறகு அவளிடம் ஒரு வார்த்தைகூட பேச எத்தனிக்கவில்லை ஜெய்.

அவளது நிராகரிப்பு ஒரு ஆண் மகனாக அவன் மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என எண்ணிக்கொண்டாள் மாதினி.

ஆனால் யாமினியினுடனான அவனது உறவு நன்றாக இருந்தால் போதும் என்று மட்டும் தோன்றியது அவளுக்கு.

ஏதோ சொல்லத் தெரியாத ஒரு பாரம் அவள் மனதை அழுத்த அங்கே இருக்க முடியாமல் தனிமை வேண்டி மகிழ மரத்தடிக்கு வந்தவள், "ஹேய் வகுளாம்மா எனக்கு ஏன் இப்படி தோணுது. யாமி இனிமேல் வேற யாருக்கோ சொந்தமாகப்போறான்னு இப்படி இருக்கா. இல்ல இவங்க ரெண்டுபேரையும் பார்க்கும்போது எனக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சா! இது வயசு கோளாறுன்னு சொல்லுவாங்களே அதுவா?அது தப்பாச்சே!" என அவள் மென் குரலில் அந்த மரத்திடம் புலம்ப, மாதினி தனித்து வருவதைக் கவனித்து  பின் தொடர்ந்து வந்தவள் அவள் சொன்ன அனைத்தையும் கேட்டுவிட்டு, பின்னாலிருந்து அவளை அணைத்துக்கொண்டாள் யாமினி.

"மாது! நான் உனக்குக் கெடுதல் செஞ்சுட்டானா?" என அவள் தயக்கமாகக் கேட்க, "லூசு மாதிரி உளறாத; யாராவது கேட்டல் தப்பா ஆகிட போகுது!" என்றவள், "அம்மா வயத்துல இருந்து நாம ஒண்ணாவே இருக்கோம் யாமு! வேற வேற இடத்துல இருந்தாலும் நீயும் நானும் வேற வேற இல்லங்கற ஒரு பீல் எனக்கு இருக்கும்.

இனிமேல் அதைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும் இல்ல? மனசுல ஒரு வெற்றிடம் உருவாகறத தடுக்க முடியல!" என்றாள் மாதினி.

சொல்லும்போதே அவள் குரல் தழுதழுக்க, கண்களின் ஓரம் கண்ணீர் திரண்டது.

அதிர்ந்தாள் யாமினி.

மாதினியின் கண்களில் கண்ணீர் என்பதை அவள் கற்பனையிலும் கூட கண்டதில்லை.

"இங்க யாரும் யாரையும் மிஸ் பண்ண வேண்டியதில்லை! இப்ப இருக்கற மாதிரியே எப்பவும் இருக்கலாம்னு உன் உடன்பிறப்புகிட்ட சொல்லு யாமி!" என்ற குரலில் சகோதரிகள் இருவரும் திடுக்கிட்டுத் திரும்ப, அங்கே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ஜெய் கிருஷ்ணா.

அவர்களுடைய தலையில் தன் இலைகளை மகிழ்வாய் உதிர்த்தது அந்த வகுள மரம்.

அதைப் பார்க்கும் போது அந்த மரம் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பதுபோல் இருந்தது.

*** 

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. மாதினி அவளுடைய அன்றாட பணிகளுடன் மேற்படிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்தாள்.

தினமும் ஜெய்யுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க, இடையில் ஒரு முறை அவன் வற்புறுத்தி அழைத்ததன் பெயரில் அவனுடன் ஒரு 'ஷாப்பிங் மால்' முழுவதையும் சுற்றிவிட்டு வந்தாள் யாமினி.

கனகா பாட்டிக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும் மற்ற எல்லாரும் அவரை சமாதானப்படுத்தியிருந்தனர்.

சில பரிசுகளுடன் அவளை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனான் ஜெய். அந்த சின்ன சின்ன விஷயங்கள் அவளுக்கு மலை அளவு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

நாட்கள் அழகாகச் செல்ல, அவள் படித்த 'என்.கே.காலேஜ் ஆப் என்ஜினியரிங்' பொறியியல் கல்லூரியிலேயே 'அசிஸ்டன்ட் ப்ரொஃபஸர்'ஆக வேலையில் சேர அங்கே வந்திருந்தாள் அவள்.

அவள் படிக்கும் வரை வேறு ஒருவருக்குச் சொந்தமாக இருந்த அந்த கல்லூரி இப்பொழுது புதிதாக வேறு கைக்கு மாறி இருந்தது.

அவளது 'அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்'ரை எடுத்துக்கொண்டு அவள் வரவேற்பு பகுதியிலிருந்த பெண்ணிடம் சொல்ல, "நரேன் சாரை மீட் பண்ணிட்டு ஜாப்ல ஜாயின் பண்ணிக்கோங்க மேம்!" என்றாள் அவள்.

'நரேன் செல்வகுமார். சேர் பெர்சன்' எனப் பொன்னாலான எழுத்துக்கள் பொருத்தப்பட்ட அறை வாயிலில் சில நிமிடங்கள் காத்திருக்க, அழைப்பு வரவும் உள்ளே சென்றாள் அவள்.

நாற்பதைக் கடந்த வயதிலிருந்தான் அந்த நரேன் செல்வகுமார்.

கண்ணாடி அணிந்து பருத்த உடலால் அந்த இருக்கை முழுவதையும் நிரப்பி இருந்தான்.

அவனது தொப்பை மேசையைத் தள்ளிக்கொண்டிருந்தது.

அவன் தன் வழுக்கையை மறைக்க 'விக்' அணிந்திருப்பது நன்றாகப் புலப்பட்டது.

அவள் கையிலிருந்த காகிதத்தை வாங்கி படிப்பதுபோல் பாவனை செய்தவனின் பார்வை அவளை அளவெடுக்க, அந்த விபரீதப் பார்வை  அவளை ஊசியாய் குத்தியது.

ஏற்கனவே புதிய வேலையில் சேரும் பயத்தின் பிடியிலிருந்தவள் மேலும் பயந்துதான் போனாள் யாமினி!


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
26/01/2020 4:06 pm  

மாயா-6

அந்த உதவி பேராசிரியர் பணி பிடித்துத்தானிருந்தது யாமினிக்கு. அன்று ஒருமுறை அந்த நரேனை நேரில் பார்த்ததுடன் சரி, அதன்பிறகு அவனைச் சந்திக்கும் தொல்லை நேரவில்லை அவளுக்கு.

எனவே கொஞ்சம் இலகுவாகவே உணர்ந்தாள் அவள்.

சேர்ந்து இரண்டு தினங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் சென்றிருக்க, அதற்குள் பொங்கல் பண்டிகை காரணமாக ஐந்து நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

பண்டிகையைக் கொண்டாட மாதினியும் ஊருக்கு வந்துவிட, வீடே புது கோலம் பூண்டிருந்தது.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இன்றளவும் ரத்தினம் தாத்தாவின் வீட்டில் கறவைகளையும் காளைமாடுகளையும் கட்டி பராமரித்து வருவதால் பெரும்பொங்கலை விட மாட்டுப்பொங்கல் அவர்கள் வீட்டில் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

இந்த வருடக் கொண்டாட்டங்களுக்குப் பெரியவர்கள் ஜெய் குடும்பத்தையும் அழைத்திருக்க, பொங்கலன்று மாலையே அகிலா மற்றும் ஸ்ரீதரன் இருவருடனும் அங்கே வந்திருந்தான் அவன்.

அவர்கள் வீட்டு புழக்கடையில் அமைந்திருக்கும் மாட்டுக்கொட்டகையில்  மாதினியும் யாமினியும் ஒரு காளையின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருக்க, யாருடைய கருத்தையும் கவராவண்ணம் யாமினியைத் தேடிக்கொண்டு அங்கே வந்த ஜெய், அன்று இருவருமே புடவையில் இருக்கவும், 'இவர்களில் யார் யாமினி' என்ற குழப்பத்துடனேயே அவர்களை நெருங்க, பின் நீளமான கூந்தலை பார்த்து அவனுடையவளை அடையாளம் கண்டுகொண்டான்.

அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் அவர்களின் அருகில் வர, கோபமாகச் சீறியது அந்தக் காளை.

அவன் பயந்து சற்று பின்வாங்க, அதைப் பார்த்து சிரித்த மாதினி, "இந்த காளையை அடக்கினாத்தான் எங்க வீட்டுல பெண்ணை கொடுப்பாங்க.

அதுக்குதான் தாத்தா உங்க எல்லாரையும் இங்க இன்வைட் பண்ணியிருக்கார்!" என்று தீவிரமாக சொல்ல, அந்த காளையுடைய உயரத்தையும் அதன் முதுகிலிருந்த திமிலையும் அதன் கொம்புகளையும் பார்த்து முதலில் சற்று அதிர்ந்தவன், மாதினியின் உதட்டில் தவழ்ந்த விஷம புன்னகையிலும் யாமினியின் கண்கள் காட்டிய எச்சரிக்கையிலும் சுதாரித்தவனாக, "என்ன மிஸ்டர் காளை! வரீங்களா ரெண்டுபேரும் சண்டை போடலாம்!

நான் ஜெயிச்சாத்தான் எனக்கு யாமினியை கொடுப்பாங்களாம்.

ஒரு வேளை நீங்க ஜெயிச்சிட்டா உங்களுக்கு மாதினியை கட்டி கொடுத்தாலும் கொடுப்பாங்க!" எனச் சொல்ல,

என்னவோ அவன் சொன்னது புரிந்த மாதிரி அதன் கொம்புகளைச் சுற்றி கட்டியிருந்த சலங்கை ஒலிக்க மாடு தலை அசைக்கவும், "பார்றா! காம்படிஷன் ரொம்ப டஃப்பா இருக்கும் போலிருக்கே!

மாடு உன்னை கட்டிக்க ரெடியா இருக்கற மாதிரி வேற தெரியுது!" என்றவன், "அப்படினா இவங்க மிஸ்ஸஸ் காளை; ரைட்!' என அவன் மேலும் கிண்டலில் இறங்க, அதற்கும் அந்த காளையன் தலை ஆட்டவும் கலகலவென சிரித்தாள் யாமினி.

அதில் காண்டானவள், "லூசு! நீ ஒண்ணும் பூம் பூம் மாடு கிடையாது! உழவு மாடு எரும!" என்று மாட்டைக் கடிந்துகொள்ள, "என்ன இது எருமையா! எருமை இப்புடி..யா இருக்கும்?" என்றான் ஜெய் தீவிரமாக.

 "எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கீங்களேன்னு பார்க்கறேன்! இல்லனா இந்த பெயிண்டை உங்க மூஞ்சிலயே கொட்டிட்டு போயிட்டே இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த 'பெயிண்ட்' டப்பாவை தொப்பென்று கீழே வைத்துவிட்டு, "நீயும்; உன்னோட இந்த காளையுமா சேர்ந்து இந்த எருமைக்கு பெயிண்ட்ட பூசுங்க!" என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டை நோக்கிப் போனாள் மாதினி.

"என்ன வக்கீலாம்மா! உங்களால என் கூட ஆர்க்யூ பண்ண முடியலையா?" என அவன் அவளை மேலும் வம்புக்கு இழுக்க, மறுபடியும் அவர்களை நெருங்கி வந்தவள், "மனுஷங்க கூடத்தான் ஆர்க்யூ பண்ணுவேன்" என அவள் சொல்ல, "அப்படினா என்னை தேவன்.. யக்ஷன் அப்படிங்கற!" என விடாமல் அவன் தொடர, "ப்ளீஸ்! விட்ருங்க!" என இருவருக்கும் பொதுவாக யாமினி ஜாடை செய்ய, அவளுடைய தவிப்பை உணர்ந்து அமைதியாக உள்ளே போனாள் மாதினி.

"இங்க ஜல்லிக்கட்டு உண்டா?" என அவன் சந்தேகமாக இழுக்க "ஐயோ இது ஒண்ணும் ஜல்லிக்கட்டு மாடு இல்ல ஜெய்; இது உழவு மாடு!

எங்க ஊர்ல ஜல்லிக்கட்டெல்லாம் கிடையாது. அவ சும்மா விளையாட்டா உங்களை ஓட்டிட்டு போறா!" என யாமினி விளக்கமாகச் சொல்லவும், ஒரு பெருமூச்சு விட்டவன் "ப்பா; இவளை எப்படி உங்க வீட்டுல சமாளிக்கறாங்க?" என ஜெய் கேட்க,

தலையைச் சாய்த்து அவனை ஒரு பார்வை பார்த்தவள், " உங்க வீட்டுல எப்படி உங்கள சமாளிக்கறாங்களோ அப்படித்தான்!" என அனாயாசமாகச் சொல்ல, "அடிப்பாவி! அக்காவுக்கு சப்போர்ட்டு!" என அவன் சொல்லவும்,

"இல்லையா பின்ன? அதுவும் உங்க ரெண்டுபேரையும்  சேர்த்து இப்ப நான் சமாளிக்கணும்!" என அவள் சலிப்பாகச் சொல்வதுபோல் ஆனால் பெருமை பொங்கச் சொன்னாள்.

 "உன்னை ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன்! நீ கூடவா யாமு?" என அவன் அதிசயித்து கேட்க, மென்மையான புன்னகையைச் சிந்தியவள், 'எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட மட்டும் இப்படி பேசுவேன்!" என்றாள் யாமினி.

"ம்ஹும்! என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?" என அவன் கேட்க, அதற்கு வெட்கப் புன்னகையை அவள் பதிலாகக் கொடுக்கவும், "ம்.. உங்க அக்கா என்னை ரிஜெக்ட் பண்ணதாலத்தான நீ என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்ச?" என அவன் தீவிரமாகக் கேட்க, "இல்லை! முதன்முதலில் உங்க போட்டோவை தாத்தா எல்லாருக்கும் காமிச்சார். அப்ப நானும் அதைப் பார்த்தேன். அப்ப இருந்தே எனக்கு உங்களைப் பிடிக்கும்!" என்றவள் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள். "ஓஹ்!" என வியந்தான் ஜெய்.

"என்னை கேள்வி கேக்கறீங்களே; மாது வேண்டாம்னு சொன்னதாலதான நீங்க எனக்கு ஓகே சொன்னீங்க?" என அதே கேள்வியை அவள் கேட்க, "உண்மையை சொல்லனும்னா நான் ஓகே சொன்ன பிறகு மாதினி என்னை ரிஜெக்ட் பண்ணதும் எனக்கு ரொம்ப கோபம்தான் வந்தது.

அம்மா அப்பா கம்ப்பல் பண்ணதாலதான் உன்னைப் பெண் பார்க்கவே வந்தேன்.

என் எதிர்பார்ப்புக்கும் ரசனைக்கும்  மேட்சா நான் ஆசைப்பட்டபடி நீ இருக்கவும் உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு.

இனிமேல் உன்னை பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது!" என்று சொல்லி அவளிடமிருந்து எழுந்த நறுமணத்தால் கிறங்கி அவன் அவளை நெருங்கவும், அவனுடைய பதிலில் தன்னை மறந்து அவள் இருக்க, மறுபடியும்  தன் தலையை ஆட்டியவாறு அந்த காளை, 'புஸ் புஸ்!' என சீறவும், மயக்கம் தெளிந்தான் ஜெய்.

அந்த காளையிடம், "சிங்காரம்! நம்ம ஃப்ரெண்டுதான்! நீ கோபப்படாத!" என்றாள் யாமினி!

பேசிக்கொண்டே அவள் அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி முடித்திருக்க, "இது என்ன ஃப்ராக்ரன்ஸ் யாமு!" என அந்த மணத்தை அனுபவித்துக்கொண்டே அவன் கேட்க, "ஓ.. இதுவா? இது மகிழம்பூவோட ஸ்மெல்!

இப்ப சீசன்லாம் இல்ல; ஆனாலும் பூத்திருக்கு!" என்றவள், வாங்க எங்க வகுளாம்மாவ உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கறேன்!" என்றவள் அவனது கரத்தை பற்றி மகிழ மரத்தை நோக்கி இழுத்துச்சென்றாள்.

"அது யார் வகுளா அம்மா?" என அவன் புரியாமல் கேட்க, அந்த மரத்தின் அடியில் வந்து நின்றவள், "இந்த மரம்தான் அது!

மகிழ மரத்துக்கு வகுளம்ன்னு ஒரு பேர் இருக்கு! எனக்கும் மாதுக்கும் இந்த மரம்னா ரொம்ப பிடிக்கும்" என்றவள் அதை வருடிக் கொடுக்க, அந்த இடம் முழுதும் அந்த பூ கொட்டிக்கிடக்க, அதன் மணம் பரவி கமகமத்துக் கொண்டிருந்தது.

அது அவனுக்கு ஒரு போதையைக் கொடுக்க அதில் கிறங்கியவன், அவள் கண்களில் பொங்கி வழிந்த காதலில் கரைந்துகொண்டே அவளை அந்த மரத்தின்மீது சாய்த்து, "ஐ ஃபீல் லைக் டு கிஸ் யூ! ப்ளீஸ் டோண்ட் சே நோ!" என்று சொல்லப் பேசாமல் கண்மூடி நின்றாள் யாமினி!

வில்லங்க வார்த்தைகட்கு விடை சொல்லத் தான் தயங்கி...

பேச்சுரைக்கும் இதழிரண்டும் மௌனத்தைப் பூட்டிக்கொள்ள,

இதழ் பேசா வார்த்தைகளை உரைத்திடுமோ விழி இரண்டும்?

அவ்விந்தைதனை தான் உணர்ந்து விபரீதம் தடுத்திடத்தான்...

மங்கையவள் மயங்கிப்போய் விழிப் அடைத்து நின்றிருக்க,

இதழ் பேசா... விழி உரைக்கா... வார்த்தைகள் அத்தனையும்...

ஐயமுற இடமின்றி விளக்கியதே முகச் சிவப்பு!

கண்டுகொண்ட கள்வனுமே மோகம் கறையுடைக்க...

பூட்டிய செவ்விதழ்களிலே...

தன் கவிதை முழுவதையும் வரைந்தானே முத்தத்தால்!

பெண்ணவளின் மனமறிந்து மென் காற்று தான் வீச...

காதலின் சாட்சியாகக் காவல் நின்ற அந்த மரம்...

மழையாகச் சொறிந்ததுவே மகிழ்வாக தன் மலரையெல்லாம்!

அன்று அவன் இதழ் பதித்த அந்த முத்தத்தின் சூட்டை உணர்ந்தவள், பதறி எழுத்து உட்கார்ந்தாள் மாதினி.

சுற்றி எங்கும் மகிழம்பூவின் மணம்.

கூடவே ஏதோ பற்றி எரியும் வாடை. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது அவளுக்கு.

தெரித்துவிடும் போல் வலித்த தலையை தன் கைகளால் தாங்கிக்கொண்டாள் அவள்.

கனவா நினைவா எனப் புரியாமல் குழப்பத்தில் அவள் உட்கார்ந்திருக்க, அவளுடைய கைப்பேசி ஒலித்தது.

யார் என்பதைக் கூட பார்க்காமல் அனிச்சையாக அந்த அழைப்பை அவள் ஏற்க, "ஏன் மாதினி  உங்க வீட்டுல இப்படி சொல்லி வெச்சிருக்க?" கொஞ்சம் சூடாக  ஒலித்தது ஜெய்யின் குரல்.

ஒரு தெளிவான மனநிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தவள், "ஜெய்! இப்ப போன்ல வேணாம்; பொங்கல் முடியட்டும் நான் சென்னை வந்துடுவேன்! நேர்ல பேசலாம்!" என நிதானமாக அவள் சொல்ல,

"நீ இப்ப என்ன செஞ்சிட்டு இருக்க? வேற ஏதாவது கிரகத்துக்கு போயிட்டாயா? தை முதல் முகூர்த்தத்துல நாள் குறிச்சு சொல்லிட்டார் உங்க ரத்தினம் தாத்தா!

அம்மா அப்பா நான் சொல்ற எதையும் கேக்கற மூட்ல இல்ல.

எங்க அம்மா பயங்கர சென்டியா பேசறாங்க. அவங்க ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டான்னு எனக்கு சந்தேகமே வந்துடுச்சு.

நீ என்னடானா கோர்ட்ல வாய்தா கேக்கற மாதிரி கேக்கற!" என அவன் பொரிய,

"ஐயோ எனக்கு தெரியாது ஜெய்; சாயங்காலம்தான் பாட்டி உங்க அம்மா கிட்ட பேசப்போறதா சொன்னாங்க" என அவள் குழப்பமாகச் சொல்ல,

"மணி என்ன தெரியுமா! ஈவினிங் சிக்ஸ்" என அவன் சொல்லக் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு மணியைப் பார்த்தாள் மாதினி.

அறையின் ஜன்னல்கள் சாத்தப்பட்டு மின் விளக்கு எரிந்துகொண்டிருக்க அவளால் நேரத்தை கணிக்க இயலவில்லை.

"சாரி ஜெய்! ரொம்ப நேரம் தூங்கி இருக்கேன்" என அவள் சொல்ல, "ப்ச்.." என அலுத்துக்கொண்டவன், "ஏன் மாதினி இந்த திடீர் முடிவு? முதல்ல என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல" என அவன் கேட்க,

"ப்ளீஸ் ஜெய்! புரிஞ்சிக்கோங்க! இது போன்ல பேசற விஷயம் இல்ல! நாளைக்கே நாம மீட் பண்ணலாம்" என அவள் வருத்தத்துடன் சொல்ல, பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.

அவள் அறையை விட்டு வெளியில் வரவும் அவளைப் பிடித்துக்கொண்ட அவளது பெரியம்மா, "என்ன மாது இப்படி தூங்கி இருக்க!

நானும் உங்க அம்மாவும் நாலஞ்சு தடவ வந்து எழுப்பி பார்த்தோம்! பாட்டிங்க ரெண்டுபேரும் பயந்து போயிருப்பாங்க ச இப்படியா செய்வ" எனக் கேட்டவர், "ஜெய் வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க" என்று முடித்தார் மகிழ்ச்சியுடன்.

எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கூடத்தை நோக்கி அவள் போக, அவளை உட்கார வைத்து த்ருஷ்டி சுற்றி போட்டார் கனகா பாட்டி.

அன்று எல்லாமே வித்தியாசமாகத் தோன்றியது மாதினிக்கு.

***

அடுத்த நாள் காலை சூரியன்  மேலே வரலாமா வேண்டாமா எனச் சோம்பலுடன் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, தனது 'நானோ'வை உயிர்ப்பித்து கிளம்பினாள் மாதினி.

"இந்த நேரத்துல எங்க கிளம்ப மாது? ஊரெல்லாம் போகிங்கர பேர்ல டயரையும் அதையும் இதையும் கொளுத்தி இருப்பாங்க. மூச்சை அடைக்கும்" எனச் சாந்தா பாட்டி சொல்ல, "இல்ல பாட்டி நான் ஜெய்யை நேர்ல பார்க்கணும்.

அதுக்கு முன்னால புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன் பாட்டி" என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டு தடுத்த ஸ்வர்ணாவையும் சமாளித்து அங்கிருந்து கிளம்பினாள் அவள்.

அன்று தேதி ஜனவரி பதினாலு!

***

கொதிநிலையில் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்தான் வீரா. அவனை அங்கு எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் செல்வம், அமைதியாக இருக்குமாறு ஜாடை காட்டி அவனை உட்காரச் சொல்லிவிட்டு, “நீங்க சொல்றது போல இது கொலையோ சதியோ இல்லை மிஸ்டர் வீரா.

உங்க ஃபிரண்டுக்கு நடந்தது ஒரு ஆக்சிடண்ட்.  உங்களுக்கு நல்லாவே தெரியும் அது ஒரு ஆக்சிடண்ட் ஸோன் (zone).

நாம எப்படியும் வாரத்துல இரண்டு மூணு ஆக்சிடண்ஸ அந்த இடத்துல பார்த்துட்டுதானே இருக்கோம்.

யாரோ போகி கொளுத்தி இருந்திருக்காங்க.

அங்கே உங்க ஃப்ரெண்டோட கார் ஆக்சிடென்ட் ஆகி கவுந்திருக்கு.

பெட்ரோல் லீக் ஆகி தீ பிடிச்சு எரிஞ்சிருக்கு" என்று சொல்ல,

அவரை தீப் பார்வை பார்த்த வீரா, “என்ன மிஸ்டர் செல்வம்;  டிசம்பர் 14 நந்தா;  இந்த மாசம் சதா; இன்னுமா இதெல்லாம் ஆக்சிடன்ட்ணு சொல்றீங்க?

அதுவும் அதே இடத்துல?

அது திட்டமிட்ட கொலைதான். எனக்குத் தெரியும்!

கிட்டத்தட்ட ஒரு மாசமா நீங்க எந்த ஆணியும் புடுங்கல.

யாமினிக்காக யாரோ பழிவாங்கராங்கன்னு எனக்கு தோனுது.

யாரோ என்ன யாரோ அவளோட ட்வின் சிஸ்டர் மாதினிதான்!

இது உங்க மண்டையில ஏறல?” என எள்ளலாகக் கேட்க, அவரோ தணிந்த குரலில், “வீரா! டென்ஷன் ஆகாதீங்க;

இது  ஸ்டேஷன்ல வச்சு  பேசற விஷயமில்ல. நாம எப்பவும் மீட் செய்யற இடத்தில் ஈவினிங் ஏழு  மணிக்கு சந்திக்கலாம்” என்று கூறவே அவன் அடக்கப்பட்ட கோவத்துடன் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினான்.

பயத்தில் குலை நடுங்கிப் போயிருப்பது புரிந்த்து செல்வத்துக்கு. காரணம், அன்று காலை நந்தா விபத்துக்குள்ளான அதே இடத்தில் காருடன் எரிந்து சாம்பலாகிப்போயிருந்தான் சதா!


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
28/01/2020 4:48 pm  

மாயா-7

சொன்னது போலவே அவர்கள் வழக்கமாக சந்திக்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவின் எதிர் முனையில் அமைத்திருக்கும் நட்சத்திர விடுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மதுபான அருந்தகத்தில் அதாவது 'பார்'ரில் செல்வம்  காத்துக் கொண்டிருக்க தன் அடியாள் பிரபுவுடன் அங்கே வந்து சேர்ந்தான் வீரா.

உடனே தன் பணியைச் சிரமேற்கொண்டு நெருங்கி வந்த 'பேரர்'ரிடம் உணவுக்கு ஆவண செய்தபின் செல்வம், “உணர்ச்சி வசப்பட்டு போனில் இந்த விஷயமெல்லாம் பேசாதீங்க வீரா.

ஏற்கனவே அந்த பொண்ணு கேஸ்ல எல்லாரும் கேக்கற கேள்விக்கே என்னால பதில் சொல்ல முடியாம தவிச்சேன்.

ஒரு வழியா இப்பதான் அடங்கி இருக்கு” எனச் சலிப்பாகக் கூற, வீராவோ, “அதை மறைக்கத்தானே லட்ச லட்சமா கொட்டினோம்.

எப்படி பதில் சொல்லுவீங்களோ அது உங்க பாடு.

ஏற்கனவே என் ஃப்ரண்ட்ஸ் இரண்டு பேர ஆக்சிடண்டுங்கற பேர்ல யாரோ போட்டுத் தள்ளிட்டாங்க.

இப்படியே போனா எங்க இரண்டு பேருக்கும் என்ன ஆகுமோன்னு பயந்து பயந்தே சாக வேண்டியதுதான்.

என்னால சுத்தமா முடியால.

இதுக்கு பின்னால் இருக்கும் நபர் யாருன்னு நீங்க உடனே கண்டுபிடிக்கணும்" என்றான் காரமான குரலில்.

"நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல வீரா" என அழுத்தி சொன்ன செல்வம், "பழி வாங்கற அளவுக்கு அந்த பொண்ணுக்கு அரசியல் பேக்கிரௌண்டோ இல்ல பைனான்ஷியல் பேக்கிரௌண்டோ எதுவும் கிடையாது.

அவங்க ஒரு சாதாரண விவசாய குடும்பம்தான்.

அப்பா கூட ப்ரைவேட்ல நல்ல சம்பளத்துல எதோ வேலைல இருந்தாரு.

அவரும் அந்த யாமினி இறந்த பிறகு வேலையை விட்டுட்டு ஊரோட போயிட்டாரு.

அவளோட தாத்தா அந்த காலத்து தேங்கா மூடி வக்கீலு. அவரே நேர வந்து வாதாடினா கூட யாமினிக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல கொலைதான்னு அவரால நிரூபிக்க முடியாது.

கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா அந்த மாதினி மட்டும்தான்!

ஆனா அந்த பொண்ணு கூட சட்டம் படிச்சு முடிச்சிட்டு இப்ப கொஞ்ச நாளாத்தான் கே.ஆர் சார் கிட்ட ஜூனியரா இருக்கு.

ஆனா அந்த பொண்ணு கூட இதுவரைக்கும் எந்த கேள்வியும் கேக்கல.

இந்த மீடியாலதான் கிளப்பி விட்டுட்டே இருந்தாங்க! வேற வேற சென்சேஷனல் இஷ்யூஸ் வரவே இப்ப இதை மறந்திருக்காங்க!” எனக் கூற அதைக்கேட்ட வீரா, “ஆமா நீங்க அந்த வக்கீல் பொண்ணைப் பார்திருக்கீங்க இல்ல? என்று கேட்க, "அமாம்பா பார்க்க அச்சு அசல் அந்த செத்துப்போன பொண்ணு மாதிரியே இருக்கும் அந்த மாதினி” என்று முடித்தார் செல்வம்.

"இத்தனை நாள் இதைப் பத்தி என் கிட்ட எதுவுமே நீங்க சொல்லல! சதா சொல்லித்தான் எனக்கே தெரியும்!" என்று கடிந்துகொண்ட வீரா இனிமே நானே கவனிச்சிக்கறேன் என்று சொல்ல, செல்வமோ, "நீங்க ஏற்கனவே செஞ்சதே போதும். மறுபடியும் ஏதையாவதை செஞ்சு ஏழரைய கூட்டாதீங்க.

இனி உங்க சின்னவருக்காகன்னாலும் சரி; எவ்வளவு  பணம் கொடுத்தாலும் சரி; என்னால ஒண்ணும் செய்ய முடியாது வேணா மேலிடத்துல பார்த்துக்கோங்க!" என்று கிளம்பி விட இயலாமையால் எழுந்த ஆத்திரத்துடன் உணவு மேசையை ஓங்கி அடிக்க மட்டுமே முடிந்தது வீராவால். 

"நீ வுடு தல; அந்த ஆளு அப்படித்தான் சொல்லுவான்.

 நீ என்ன செய்யணும்னு மட்டும் சொல்லு; நம்மளே  பார்த்துக்கலாம்" என்று அனைத்தையும் உடனிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரபு கூற, கேள்வியாக அவனைப் பார்த்தவாறு அங்கிருந்து கிளம்பினான் வீரா.

வெகு பணிவுடன் அவனைப் பின்தொடர்ந்து போனான் பிரபு.

அங்கிருந்து  ஆவேசமாக அவர்கள் வாகனத்தை கிளப்பிச் செல்வதை எரிமலையாய் குமுறிக்கொண்டிருக்கும் மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மாதினி தன் மஞ்சள் 'நானோ'வில் அமர்ந்தவாறு! 

அதே நேரம் அவளது கைப்பேசி ஒலிக்க, அழைப்பை ஏற்றவள், "வந்துட்டேன் ஜெய்! வண்டிய பார்க் பண்ணிட்டு மேல வரேன்; ஜஸ்ட் டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க!" என்றாள் அவள்.

*** 

ஜெய்யின் எதிரில் அவள் வந்து அமரவும், 'பேரர்'ரை அழைத்தவன், "ஒரு செட் சப்பாத்தி அண்ட் ஒரு செட் சாம்பார் இட்லி!" என அவளுக்கும் சேர்த்து 'ஆர்டர்' செய்ய, "இல்லல்ல... எனக்கு வெஜ் பிரைட் ரைஸ்! சொல்லுங்க" என அவசரமாகச் சொன்ன மாதினியை கேள்வியாய் பார்த்தவன், "இந்த டைம்ல ஹெவியா சாப்டா வெயிட் போடும்னு எப்ப வந்தாலும் இட்லிதான ஆர்டர் பண்ணுவ, திடீர்னு என்ன யாமினி பழக்கம்" எனக்கேட்டான் அவன்.

"கொஞ்சம் யாமினியாவும் இருக்கலாம்னுதான்! இப்பல்லாம் யாமினிக்கு என்ன பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடிக்குது!" என்றவள், "சும்மா அவளோட டேஸ்ட்டை ட்ரை பண்ணேன்" என்றாள் மாதினி.

அவளுடைய அந்த பதிலில் அதிர்ந்தவன், 'என்ன இவ லூசு மாதிரி உளர்றா!' என எண்ணியவாறு, "கொஞ்ச நாளா உனக்கு எதோ ஆகிப்போச்சு! இல்லனா தேவை இல்லாம என்னை இந்த கல்யாணத்துல கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருப்பியா?" என அவன் கேட்க, அவள் முகம் தீவிரமாக மாறிப்போனது.

"நான் சொன்னது சாப்பட்ற விஷயத்துல மட்டும் இல்ல ஜெய்! வாழ்க்கையிலயும்தான்!" என்றாள் மாதினி தீவிரமாக.

அதில் கோபம் சுறுசுறுவென ஏற, அவன் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அவன் கையை பிடித்துத் தடுத்தவள், "நான் சொல்ல வரத முழுசா கேட்டுட்டுப்போங்க ஜெய்!' என்றாள் பிடிவாத குரலில்.

அதற்குள் உணவு தட்டுகளுடன் அந்த 'பேரர்' வர மற்றவர் பார்வைக்குக் காட்சிப் பொருளாவதைத் தவிர்க்கும் பொருட்டு பேசாமல் உட்கார்ந்தான் ஜெய்.

அவன் முகத்தில் கோபத்தின் சாயல் படர்ந்திருக்க அதைக் கண்டும் காணாதவளாக, வந்த 'பிரைட் ரைஸ்'ஸை எடுத்துச் சுவைத்தாள், அதில் லயித்தவளாக, "வாவ்! என்ன டேஸ்ட்! சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா?" என ரசனையுடன் கேட்டுவிட்டு, "சில் ஜெய்! எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்!

எப்படியும் உங்க வீட்டுல வேற பெண்ணை பார்க்காம விட மாட்டாங்க!

என்னால உங்களை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது!' என்றாள் தீவிரமாக.

பதில் ஏதும் சொல்லாமல் வேகமாகச் சாப்பிட்டு முடித்தவன், அதற்கான பணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, 'என்ன ஜெய் பேசவே மாட்டேங்கறீங்க!" என்றாள் மாதினி.

"ஒரு போட்டோவை கொடுத்து; இந்த பெண்ணை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க! அவ கண்ணுல ஒரு திமிர் இருந்திச்சு; அவளை பிடிச்சுது! ஓகே சொன்னேன்!

ஆனா அன்னைக்கு ஈஸியா அவதான் என்னை ரிஜெக்ட் பண்ணா!

அதோட விடாம இவ வேண்டாம் அவளை பாருன்னு சொன்னாங்க அம்மா அப்பா!

யாமினியை பார்த்து பிடிச்சு கல்யாணத்து ஓகே சொன்னேன்.

புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூட முடியாம திடீர்னு ஒரு நாள் கனவு மாதிரி கலைஞ்சு போயிட்டா!

இப்ப மறுபடியும் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா என்ன அர்த்தம்.

என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல!

என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு!

அம்மா அப்பாவுக்குன்னு இருக்கறது நான் மட்டும்தான். அதனால அவங்க மனச கஷ்டப்படுத்தக்கூடாதுனு நினைக்கறேன்!

அதை அட்வாண்டேஜா எடுத்துட்டு எல்லாரும் கேம் ப்ளே பண்றீங்க இல்ல?

என் மனசை பத்தி யாரும் யோசிக்கவே மாட்டிங்களா?" என உறுமினான் ஜெய் அடிக்குரலில்.

"அப்படி எல்லாம் இல்ல ஜெய்! உங்களுக்காகவும் உங்க மனசை கொஞ்சம் மாத்திக்க ட்ரை பண்ணுங்க!" என அவள் சொல்ல,

"மாசத்துக்கு ஒரு தடவை புதுசு புதுசா மத்தறயே உன்னோட செல் போன் கவர்! என மனசும் அது மாதிரின்னு நினைச்சியா!" என்றவன், "தெரியுமா ஒரு தடவ கண்ட்ரோல் பண்ண முடியாம யாமினியை கிஸ் கூட பண்ணியிருக்கேன்! அந்த அளவுக்கு அவளை பிடிச்சிருந்தது எனக்கு!

உன்னை என்னால அப்படி நினைக்க முடியல!

சொன்னா புரிஞ்சிக்கோ!" என்றவன் கோபம் குறையாமல் எழுத்து சென்றுவிட, அனிச்சை செயல்போல் அவனை பின் தொடர்ந்து சென்றாள் மாதினி. பெருமிதம் ததும்ப உறைந்துபோய் அங்கே எஞ்சி நின்றாள் யாமினி?!

***

அன்று பொங்கல் பண்டிகை.

தன் மாம்பலம் வீட்டில் தனித்திருந்தாள் மாதினி. 

முந்தைய வருடத்தின் பொங்கல் தினம் நினைவில் வந்தது அவளுக்கு.

அவள் கோபித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்ற பிறகு ஜெய்யும் யாமினியும் பேசிக்கொண்டதும் நடந்துகொண்டதும் ஏதோ கனவில் கண்டதை போல தோன்றியது அவளுக்கு.

'ச்ச! ஏன் இப்படியெல்லாம் தோணுது நமக்கு!' என மனதிற்குள் சங்கடமாக உணர்ந்தவள் அன்று நடந்த அனைத்தையும் கோர்வையாக எண்ணிப்பார்க்க அவள் வீட்டிற்குள் வந்த சில நிமிடங்களில் ஜெய் யாமினி இருவரும் உள்ளே வர, அதன் பின் அன்றைய தினம் கொண்டாட்டமும் குதூகலமுமாகச் சென்றது.

மாட்டுப்பொங்கல் தின கொண்டாட்டங்கள் அதைவிடக் கோலாகலமாக அமைய மகிழ்ச்சியுடன் விடைபெற்றுச் சென்றனர் ஜெய் குடும்பத்தினர்.

அதெல்லாம் கனவாகக் கானல் நீராக மாறிப்போனதே என்றிருந்தது அவளுக்கு.

யாமினி இறந்த துக்கம் காரணமாக அவர்களுக்கு இந்த வருடம் பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லையென்றாலும் மாடுகளுக்காகப் பொங்கல் வைப்பதைக் குறைக்க விரும்பவில்லை அவர்கள்.

கிராமத்து வீட்டிலிருந்து கிளம்பியதுதான் அவளுடைய நினைவில் இருக்கிறது.

அவள் மாம்பலம் வீட்டிற்கு எப்போது வந்தாள் என்றே புரியவில்லை அவளுக்கு.

சற்று நேரத்திற்கு முன்பாக வெகு சாவகாசமாகக் கனகா பாட்டி அவளை அழைத்து, "மாதும்மா! சாயங்காலம் நேரத்தோட வீட்டுக்கு வந்துடு! நாளைக்கு உன் கையாலதான் பொங்கல் வைக்கணும் கண்ணு!' என அவளைக் கரிசனையாக அழைத்ததை வைத்து அவள் இங்கேதான் இருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. அதனால்தான் அவளை அவர்கள் தேடவில்லை என்பது புரிந்தது அவளுக்கு.

'அதற்குள் முடிந்தால் ஜெய்யை நேரில் பார்த்துத் தெளிவாகப் பேசவேண்டும்!' என எண்ணிக்கொண்டாள் மாதினி.

யோசனையுடன் அவனுக்கு அழைக்கலாம் என தன் கைப்பேசியை எடுத்தவள் முந்தைய தின 'கால் ஹிஸ்டரி'யை பார்க்க அதிலிருந்து சாந்தா பாட்டியின் எண்ணிற்கு 'அவுட் கோயிங் கால்' ஒன்று பதிவாகி இருக்க குழம்பிப்போய் அப்படியே அவள் உட்கார்ந்துவிட, அப்பொழுது பிரபுவுடன் சேர்த்து இன்னும் சில அடியாட்கள் பின்தொடர அடாவடியாக அவளது வீட்டிற்குள் நுழைந்த வீராவைக் கண்டு திடுக்கிட்டு பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அவள்.

வீட்டைச் சுற்றி தன் பார்வையை ஓட்டியவாறு “தனியா இருக்க போல இருக்கு” என்று கேட்டுக் கொண்டே அந்த வரவேற்பறையில் போடப்பட்டிருந்த ஒற்றை சோபாவில் திமிராக அவன் அமர அவனது அடியாட்கள் அவனது பின்னல் வந்து நின்றனர்.

அதற்குள் நிலை உணர்ந்து சுதாரித்துக்கொண்டவள், 'ரத கஜ துரக பதாதிகளோட வர மாதிரி வந்து உட்கார்ந்திருக்கான்! பெரிய மகாராஜான்னு நினைப்பு! இருக்குடா உனக்கு' என மனதிற்குள் அவனை நிந்தனை செய்ய,

அடிக் குரலில் “என்ன உன் தங்கையோட நிலைமை உனக்கும் வரணுமா?" என அவன் கேவலமாக அவளை மிரட்ட, "என்ன மிஸ்டர் வீரா! என்னை என்ன அவளை மாதிரி வாயில்லாத பூச்சினு நினைச்சயா நீ மிரட்டறதையெல்லாம் கேட்டுட்டு பயந்துபோய் பேசாம இருக்க!

நான் பார்க்கத்தான் அவளை மாதிரி! ஆனா வேற!" என்றவள், "எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அதுக்கு நீதான் காரணம்னு ரெண்டு நாள் முன்னாலதான் கமிஷனர் ஆபிஸ்ல போய் கம்ளைன்ட் செஞ்சுட்டு வந்திருக்கேன்.

எப்படியும் என்னை தேடி நீ இங்க வருவன்னு எதிர் பார்த்துட்டேதான் இருந்தேன்.

இப்படி தானா வலிய வந்து மாட்ற!" என்றாள் மாதினி.

"ஏய் என்ன பூச்சாண்டி காட்டறியா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்" என அவன் எகத்தாளமாக கேட்க,

"ஹா ஹா! பயப்பட... மாட்டியா? குட் ஜோக்!" என சிரித்தவள், "வீட்ட சுத்தி சிசி டிவி கேமரா செட் பண்ணி வெச்சிருக்கேன்.

இந்த ரெகார்டிங்ஸ் உடனுக்குடனே என்னோட கூகுள் அக்கௌட்ல ஸ்டோர் ஆகற மாதிரி செட் பண்ணியிருக்கேன்!

இப்ப நீ உள்ள வந்தது! இதோ மிரட்டிட்டு இருக்கறது எல்லாமே பக்கவா எவிடென்ஸ் ஆகிட்டு இருக்கு! இப்ப எனக்கு என்ன நடந்தாலும் நீதான் மாட்டுவ" என்றாள் மாதினி அவன் பேசியதை விடவும் எகத்தாளம் தொனிக்க.

அவள் பேசியதைக் கேட்டு ஆத்திரம் மேலோங்க, நிலைமையின் தீவிரத்தை உணராமல் பிரபு அவளைத் தாக்கும் எண்ணத்தில் மாதினியை நெருங்க, நொடி கூட தாமதிக்காமல் ஒரே அடியில் அவனைத் தூக்கி எறிந்தவள், "என்னடா! இவனோட ஏவல் நாய்தான நீ! அடுத்தது நீ தாண்டா!" எனக் கர்ஜித்தாள் தன் கொஞ்ச நஞ்ச அமைதியையும் கைவிட்டு முற்றிலும் ஆக்ரோஷமாக மாறியிருந்த மாதினி.

வாயிற் கதவில் மோதி அவன் கீழே விழ வீராவுடன் வந்திருந்த அடியாட்கள் நான்குபேரும் சேர்ந்து அவனைத் தூக்கி நிறுத்தவும், ஏதோ தீயில் கருகும் வாடை அவனது நாசியில் நுழைத்து நுரை ஈரல் முழுதும் பரவ,  மூச்சு முட்டுவது போல உணர்ந்தவன், "தல! பிரசினை வேணாம்! வா தல போயிடலாம்! நாம நினைக்கற மாதிரி இது பொண்ணு இல்ல தல! இது ஒரு பேய்!" என நடுங்கும் குரலில் பதறினான் பிரபு.

பிரபுவின் நிலையை உணராதவனாக வீரா குழப்பத்துடன் அவளைத் திரும்பிப் பார்க்க அமைதியே உருவாக நின்றிருந்தாள் மாதினி கேள்வியாகப் பிரபுவையே பார்த்துக்கொண்டு!

அவளுடைய கண்களுக்குள் நிறைந்திருந்தாள் யாமினி!

மாயா-8

'பிரபு ஏன் இப்படிப் பிதற்றுகிறான்' என்ற யோசனையுடன் தடதடவென அவனுடைய அடியாட்கள் சகிதம் வீரா அங்கிருந்து வேகமாக அகன்றுவிட, அப்படியே துவண்டு போய் அங்கிருந்த 'சோஃபா'வில் சரிந்தாள் மாதினி!

அரை மணி நேரம் கடந்தபின்னும் தன்னை மறந்து அவள் அப்படியே கிடக்க, தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து நிறுத்தியவன், அகலத் திறந்தே கிடந்த கதவை யோசனையுடன் பார்த்துக்கொண்டே உள்ளே  நுழைந்தான் ஜெய்.

அவளது கோலம் மனதைக் கரைக்க அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தவன், "ஏன் மாதினி! உடம்பு சரி இல்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என அக்கறையுடன் அவன் கேட்க,

"ப்ச்" எனச் சலித்துக்கொண்டவள், வீரா அங்கே வந்ததை பற்றிச் சொல்ல, அவசரமாக அவனுடைய கைப்பேசியில் கண்காணிப்பு 'கேமரா'வின் பதிவுகளை ஆராய, அதுவும் அவள் சர்வ சாதாரணமாக ஒருவனைத் தூக்கி வீசியதைப் பார்த்து அவன் முகம் கோபத்திலும் வியப்பிலும் இறுகிச் சிவந்தது.

"நீ ஊருக்கு போகாம; தனியா இங்க என்ன பண்ற?" என அவன் அவளிடம் கண்டனமாகக் கேட்க,

"இல்ல ஜெய் ஊருக்குத்தான் போயிருந்தேன்!" என்றவள், "தப்பா நினைக்கதீங்க ஜெய்" என்று சொல்லிவிட்டு "அன்னைக்குத் தாத்தா மாப்பிளை போட்டோஸ் எல்லாத்தையும் கடைவிரிச்சு வெச்சிருந்ததை பார்த்ததும் ஏனோ எனக்கு உங்க நினைவுதான் வந்தது!

எனக்கு இப்போதைக்கு கல்யாணத்தில் எல்லாம் பெரிய இன்ட்ரெஸ்ட் இல்ல.

அதை சொன்னா அங்க யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க.

அவங்க கம்பல்ஷனுக்கு ஒத்துக்கிட்டு புதுசா யாரோ ஒரு முன்ன பின்ன தெரியாதவனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கறது எனக்கு என்னவோ செட் ஆகும்னு தோணல.

உங்களைப் பத்தி நினைச்சதும் ஒரு கம்பஃர்டபுல் பீல் வந்தது.

அதான் கொஞ்சம் கூட யோசனையே இல்லாம டக்குனு உங்க பேரை சொல்லிட்டேன்!

உங்க எண்ணத்தை கேக்காம சொன்னதுக்கு ரியலி சாரி!" என அவள் சொல்ல,

"நான் என்ன கேட்டா நீ என்ன பதில் சொல்லிட்டு இருக்க! இப்ப இந்த பேச்சு தேவையா?" என அவன் கேட்க, "அவசியம் தேவைதான்" என்றவள், "உங்களுக்கு விருப்பம் இல்லனா பரவாயில்ல!

நானே எதையாவது சொல்லி இந்த பேச்சை நிறுத்தறேன்!" என்றாள் அவள் கொஞ்சம் கரகரத்த குரலில்.

அதற்கு என்ன பதில் சொல்வது என்ற தயக்கத்தில் சற்று மௌனமானவன், "மறுபடியும் எதையாவது பேசி குழப்பி வெக்காத!" என்றவன், " நேத்து பேசும்போதுகூட என் மனச மாத்திக்க சொல்லி சொன்ன; இப்ப இப்படி பேசற;

ஏன் மாது நீ எப்பவுமே ரொம்ப தெளிவா இருப்ப இல்ல; இப்ப ஏன் இப்படி நடந்துக்கற" என அவன் சலிப்புடன் கேட்கவும்,

"என்ன நேத்து நாம மீட் பண்ணி பேசினோமா?" எனக் கேட்டாள் அவள் அதிர்வுடன்.

"சுத்தம்" என்று அவன் தலையில் கையை வைத்துக்கொள்ள, "சீரியஸ்லி எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல ஜெய்!

புதுப்பாக்கம் கோவிலுக்கு போகலாம்னு நேத்து மார்னிங் விளங்காட்டிலிருந்து கிளம்பினதுதான் நினைவில் இருக்கு! அப்பறம் எப்படி இங்க வந்தேன்னு கூட தெரியல" என உள்ளே போன குரலில் சொன்னாள் மாதினி!

அவன் முகத்தில் யோசனை படர, "நீ சொல்றதெல்லாம் உண்மையா மாது!" என அவன் இளகிய குரல் கேட்க, "என்னைப் பார்த்தால் பைத்தியம் மாரி தோணுதா?" என்றவள், "உங்களை பிடிச்சிருக்குன்னு வீட்டுல சொல்ற வரைக்கும் தெளிவாத்தான் இருந்தேன்!

பிறகுதான் இந்த குழப்பமெல்லாம்! எங்க போனாலும் யாமினி என் கூடவே வர மாதிரி ஒரு ஃபீல்!

எப்ப பாரு என்னைச் சுத்தி மகிழம்பூ வாசனை வந்துட்டே இருக்கு!

முன்னால எல்லாம் எப்பவாவதுதான் அப்படி இருக்கும்; ஆனா இப்ப பர்மனெண்டா இருக்கு!

முந்தாநாள் எனக்கு ஒரு கனவு வந்தது! அதுக்கு பிறகுதான் பிரச்சனையே!" என்றவள் அதைப் பற்றிச் சொல்லத் தயங்கி அவள் முகம் சிவந்துபோனது.

அவன் கூர்மையாக அவளைக் கவனிப்பதை உணர்ந்தவள் பேச்சை மாற்ற எண்ணி, "இப்ப கூட அந்த வீரா வந்ததெல்லாம் தெளிவா ஞாபகம் இருக்கு.

ஆனா ஒரே நிமிஷத்துக்குள்ள என்ன நடந்ததுன்னு புரியல. அவன் கூட வந்த அந்த அடியாள் ஒருத்தன் கீழ விழுந்து கிடக்கிறான்!

அவன் என்னை பார்த்துட்டு அலறிட்டு ஓடறான்! நடுவில் நடந்தது அப்படியே ப்ளாங்கா இருக்கு!" என அவள் புலம்ப,

"ப்ச்! புத்திசாலி! ஒரே மீட்டிங்கில் புரிஞ்சிக்கிட்டான்!" என்றான் ஜெய்.

தான் இலகுவாக இருப்பது போலக் காண்பிக்கவே அவன் அப்படிக் கிண்டலாகப் பேசினானே ஒழிய உண்மையில் அவனுக்குள்ளும் பல கேள்விகள் எழுந்தது.

என்னதான் ஆரோக்கியமானவளாக இருந்தாலும் ஒரு மெல்லிய தேகம் கொண்டவள் வாட்டசாட்டமான அடியாள் ஒருவனை, அதுவும் கிட்டத்தட்ட அரை அடிவரை மேலே தூக்கி வீசுவதென்றால் வேறு ஏதோ உந்துதல் இருக்கவேண்டும் என நம்பினான் அவன்.

அதுவும் முந்தைய தினம் மாதினியின் கண்கள் அவனிடம் ஒரு புது மொழியை பேசியது.

இப்பொழுது யோசித்துப் பார்த்தால் அவளுக்குள் அவன் தேடிக் கொண்டிருக்கும் யாமினி சில நிமிடங்கள் அவனுக்குத் தரிசனம் கொடுத்ததுபோலவே உணர்ந்தான் ஜெய்.

அதை அவனால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

தங்கையின் பிரிவு அவள் மனதில் எதாவது பாதிப்பை ஏற்படுத்திவிட்டதா அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமா என்ற ஐயம் தோன்ற, அவனுடைய அம்மாவிடம் அவளை ஒரு 'கௌன்சிலிங்' அழைத்துப் போகலாம் என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.

ஆனால் அதைச் சொல்லாமல், "வீட்டுக்கு வரியா மாது! அம்மா உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தாங்க!" என அவன் அவளை இயல்பாக அழைப்பது போல் அழைக்க, "எனக்கும் அவங்களை நேர்ல வந்து பார்க்கணும்னு ஆசையாத்தான் இருக்கு; ஆனா நான் ஊருக்கு போயே ஆகணும்! கனகா பாட்டி வரச்சொல்லி போனே பண்ணிட்டாங்க! நாளன்னைக்கு இங்க வந்துடுவேன். வீக் எண்ட்ல வரட்டுமா?" என அவள் உண்மை நிலையைச் விளக்க, அதற்கு உடன்பட்டவன் இந்த நிலையில் அவளைத் தனியே அனுப்ப மனமில்லாமல் தானும் அவளுடன் கிளம்பினான் ஜெய்.

வாகனத்தை ஓட்ட முனைந்தவளைத் தடுத்துத் தானே ஓட்டினான். ஒரு வார்த்தை கூட பேசாமல் அதற்கு ஒப்புக்கொண்டாள் மாதினி!

மாதினி பொதுப்படையாக ஏதேதோ பேசிக்கொண்டே வர, அவள் சொல்வதைக் கேட்டபடி வாகனத்தைச் செலுத்தியவன், வண்டி செங்கல்பட்டைக் கடக்கும் நேரம் அங்கே குடிகொண்ட நிசப்தத்தை உணர்ந்து, திரும்பி அவளைப் பார்க்க, அப்படியே உறங்கியிருந்தாள் அவள்.

எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியில் அவள் முகம் பளிங்கு போல இருக்க, அவளுடைய  தலை ஒரு பக்கமாகச் சரிந்து பற்றுதலைத் தேடவும், அதுவரை அவனுக்கு இருந்த சஞ்சலமெல்லாம் மறைந்து மனம் ஒருநிலை பட்டவனாக, இடதுகையால் அவளை இழுத்து தன் தோள் மேல் சாய்த்துக்கொண்டான் ஜெய் கிருஷ்ணா! அதைக்கூட உணராத ஒரு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் மாதினி.

*** 

சில நிமிடங்களில் அவர்கள் விளாங்காட்டை அடைந்திருக்க, ஓட்டி வந்த வாகனத்தை அவன் ஓரமாகப் போய் நிறுத்தவும், அவனைக் கவனித்துவிட்டு அங்கே வந்த அவளுடைய பெரியம்மா, "வாங்க மாப்ள! எப்படி இருக்கீங்க! அம்மா அப்பாலாம் சௌக்கியமா!' என முகம் மலர்ந்து அவனை வரவேற்க, "எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை! நீங்க எப்படி இருக்கீங்க!" எனக் கேட்டுக்கொண்டே அவன் இறங்கிவரவும், மறுபுறமாக இறங்கியவள் சுற்றுப்புறம் பார்க்காமல் மின்னல் போல வீட்டிற்குள் போனாள் மாதினி!

அவளது அந்த செயலை பார்த்து, "இவ என்ன இப்படி மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கா!" என்றவர், "நேத்து காலைல போனவதான் மாப்ள! சாயங்காலம் எங்கம்மாவுக்கு போன் பண்ணி ‘மாம்பலம் வீட்டுக்கு போயிட்டேன்! நாளைக்குத்தான் வருவேன்’னு ரெண்டே வார்த்தை பேசிட்டு கட் பண்ணிட்டா!

இவளை நீங்கதான் அடக்கி வெக்கணும்!" எனப் பொரிந்தார் அவர்.

அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தவன், "நான் எல்லாரையும் பார்த்துட்டு உடனே கிளம்பனும்! இவளை தனியா விட மனசில்லாம வந்தேன்!" எனச் சொல்லிக்கொண்டே அவன் உள்ளே நுழைய, சிவராமன் தாத்தா கூடத்தில் உட்கார்ந்திருந்தார்.

அதற்குள் இவன் வந்திருப்பதை அறிந்து மாதினியின் அப்பாவும் பெரியப்பாவும் அங்கே வர, முகம் கழுவி வந்தாள் மாதினி!

ஸ்வர்ணா தாத்தாவுக்கும் ஜெய்க்கும் காஃபீ கொண்டுவந்து கொடுக்க, வழக்கம்போல அதை ஆற்றி டபராவுடன் மாதினியிடம் நீட்டினார் தாத்தா!

"தாத்தா! எனக்கு காஃபீ பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியாதா?" என அவள் எதார்த்தமாகக் கேட்க, அவளை ஒரு விசித்திர பார்வை பார்த்தார் தாத்தா.

யாமினிதான் காஃபீ சாப்பிடமாட்டாள். ஆனால் மாதினி உடன் இருக்கும் பட்சத்தில் தாத்தா எப்பொழுதெல்லாம் காஃபீ சாப்பிடுகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் அவளுக்கு ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

இது சிறு வயது முதலே அவர்களுடைய பழக்கம்.

தாத்தா பார்த்த பார்வையில், "இல்ல தாத்தா! இப்ப காஃபீ வேண்டாம்; பசிக்குது! எதாவது டிஃபன் இருந்தா  சாப்பிடலாம்னு" என அவள் சமாளிக்க, "ப்ச்... எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல நீ ஜெய்யை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவ! அப்பறம் இந்த தாத்தா உனக்கு எப்படி இந்த மாதிரி காஃபில ஷேர் கொடுக்க முடியும் மாதுகுட்டி!" என வருத்தத்துடன் அவர் சொல்ல, "தாத்தா!" என உறுமினாள் அவள். 

அவளது செய்கை பிடிக்காமல், "மாது என்ன இது! தாத்தாவுக்கு எதிரா குரலை உசத்தறது?" என அவளுடைய அப்பா அவளைக் கண்டிக்க, "விடுங்க மாப்ள! குழந்தைதானே!" என்றார் தாத்தா.

"அப்பா இவ ஒண்ணும் பச்சை குழந்தை இல்ல! வர வர ரொம்ப ஓவரா பண்றா!" என அவளுடைய அம்மா ஸ்வர்ணா மகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க,

"ப்ச்... விடுங்க அத்தை! தாத்தா பிரிவை பத்தி பேசவும்; அவளால தங்க முடியல போலிருக்கு" என சமாதானம் பேசினான் ஜெய்!

அவள் பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்தவாறு அங்கிருந்து சென்றுவிட, அதைக் கவனிக்காதவன் போல, "தாத்தா! நீங்கக் கவலையே படாதீங்க! மாதினி இப்ப வர மாதிரி எல்லா வீக் எண்ட்ஸுக்கும் நாங்க ரெண்டுபேருமே இங்க வந்துடுவோம்!" என்றான் ஜெய்.

"ரொம்ப சந்தோஷம் கண்ணா!" என்றவர், "நான் என் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி கொடுத்து கூட தனியா அனுப்பல!

அதுவும் மாது என் கூடவே இருந்துட்டா இல்ல! அதான் அப்படி பேசிட்டேன்" என்றார் தாத்தா சங்கடமாக.

"புரியது தாத்தா! வருத்தப்படாதிங்க!" என்றான் ஜெய்.

சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன், மாதினியை தேடிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் வர, அங்கே மகிழ மரத்தடியில் நின்றுகொண்டு கையில் சில மலர்களை வைத்து அதை முகர்ந்துகொண்டிருந்தாள் மாதினி.

"எல்லாரும் அங்க பேசிட்டு இருக்கும்போது தனியா இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க?" என ஜெய் அவளைக் கண்டிப்பது போலக் கேட்க,

"அவங்க பேசற டாபிக் எனக்கு பிடிக்கல ஜெய்!" என்றாள் அவள்.

"என்ன பிடிக்கல! உன் மேல இருக்கற அன்புலத்தான தாத்தா அப்படி சொன்னார்!" என அவன் கேட்க,

"தாத்தாவுக்கு என் மேல அன்பு கிடையாது ஜெய்! அந்த மாதினி மேலதான் அதிக பாசம்!" எனத் தெளிவாக அவள் குழப்பவும், "ஏய் லூசு! நீதானே மாதினி!" என அவன் கேட்க, "நான் மாதினி இல்ல! நான் யாமினி! உங்களோட யாமினி! நான் இருக்கும்போது நீங்க எப்படி அவளைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிங்க?

தாத்தா கல்யாணத்தை பத்தி பேசும்போது அதை அக்சப்ட் பண்ற மாதிரி பேசாம இருக்கீங்க!

நேத்து என்கிட்டே அப்படி சொல்லிட்டு இன்னைக்கு அவளை தேடி ஏன் அங்க வந்தீங்க! அவளை உங்க தோள்ல ஏன் சாய்ச்சுகிட்டீங்க!" என அவள் சீற்றமாய் கேட்க,

"மாதினி!" என்றான் ஜெய் பதட்டத்துடன்.

"என்னை அப்படி கூப்பிடாதிங்க! நான் சொல்றது புரியல! நான் யாமினி!" என்றாள் அவள் உறுமலாக.

ஜெய் கேள்வியாக அவளுடைய கண்களைப் பார்க்க, காதல் சிந்தும் அந்தக் கண்கள் அப்பொழுது கனலைச் சிந்திக்கொண்டிருந்தன!


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
29/01/2020 3:47 pm  

மாயா-9

முற்றிலும் யாமினியாகவே மாறிப்போயிருந்த மாதினியைப் பார்க்கவே சற்று கிலியாக இருந்தது ஜெய்க்கு.

"நீ என்ன பேசறன்னு புரிஞ்சுதான் பேசறியா மாதினி" எனக் கேட்டான் அவன்.

"ஏய்! சொல்றேன் இல்ல! என்ன மாதினின்னு கூப்பிடாதன்னு! நான் யாமினிடா!" என மறுபடியும் உறுமியவள், "நான் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ஜெய்! அது மாதினிக்கா இருந்தாலும்!

முதல் முதலா உன் போட்டோவை பார்த்ததுமே அவளுக்கு உன்னை பிடிச்சு போச்சு!

இல்லன்னா அவ எடுத்த உடனே வேண்டாம்னு சொல்லியிருப்பா!

ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருக்குனு புரியவும் எனக்காக உன்னை அவ விட்டுக்கொடுத்தா.

அவ மனசு புரிஞ்சும் நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன். ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருந்தது”  என அவள் சொல்லிக்கொண்டிருக்க, அதுவரை, எடுத்த எடுப்பில் தன்னை நிராகரித்தவள் என மாதினியின்மேல் அவனுக்கிருந்த சிறு குறையும் காணாமல் போனது.

அந்த சிறு நிம்மதியுடன் அவளது வார்த்தைகளில் கவனம் செலுத்தினான் ஜெய்!

“அப்ப விட்டுக்கொடுத்துட்டு இப்ப மட்டும் நீ வேணும்னு சொல்லுவாளா அவ!" எனக் கேட்டவள், “நம்ம கல்யாண நாளை எவ்வளவு எதிர்பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா?

அப்பதான் அந்த வீராவும் நந்தாவும் காலேஜுக்கு வந்தானுங்க!

அவங்க கண்ணுல பட்டதாலதான் எனக்கு பிரச்சனையே ஆரம்பிச்சுது!

அந்த பாவிங்க கண்ணுல படாம இருந்திருந்தா இந்த நேரம் நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்.

அவனுங்க பண்ண அராஜகம் எனக்கு தெரியாம போயிருந்தா நான் உயிரோடவாவது இருந்திருப்பேன்!

இந்த மாதினி இப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டா!" என அழுகையுடன் புலம்பினாள் மாதினிக்குள் புகுந்திருக்கும் யாமினி!

அவளுடைய ஏக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது முடிவில் விலுக்கென்று எழுந்த அவளுடைய கேவல்.

அதிசய நிகழ்வாக ஒருவேளை யாமினியின் ஆன்மா மாதினியை ஆடிக்கொண்டிருக்கும் பட்சத்தில் நடந்த உண்மைகளை அவள் மூலமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழுந்தது ஜெய்க்கு.

அவளுடைய இந்த நிலையை வீட்டில் இருப்பவர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று வேறு இருந்தது அவனுக்கு.

ஏற்கனவே யாமினியின் பிரிவுத்துயரிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக மீண்டு கொண்டிருப்பவர்கள் இவளது இந்த நிலை பற்றி அறிந்தால் மறுபடியும் நொறுங்கிப்போகக்கூடும்!

அவன் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்க்க, யாருமே வரவில்லை அங்கே.

மாதினியை ஏறிட்டவன் அவள் மனதைத் தன்வசம் திருப்பும் முனைப்புடன், "யாமினி!" என அழைத்தான் மென்மையாக!

அவனது அந்த அழைப்பில் அவள் முகம் பிரகாசிக்க, கண்கள் மின்ன, "ஆமாம்! இப்படித்தான்... இப்படித்தான் கூப்பிடணும்னு சொன்னேன்!" என்றாள் கரகரத்த குரலில்.

"சரி! நீ கொஞ்சம் அமைதியாகு யாமு! கூல்" என்றவாறு அவளை நெருங்கி அவளது கூந்தலை மென்மையாக வருட, அவனது அந்த 'யாமு!' என்ற அழைப்பில் உடைந்தவள், அப்படியே அவன் மீது சரிந்தாள்!

அவளுடைய அணைப்பு இறுகிக்கொண்டே போக, இரும்பு போல இருந்தது அவளது கரங்கள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தவன், மிக முயன்று அவளை தன்னிடமிருந்து பிரித்து, அருகிலிருந்த  மேடையில் அவளை அமரவைத்து தானும் அருகில் அமர்ந்து கொண்டான்.

அவள் தன்னை மறந்த நிலையில் எங்கோ வெறித்திருக்க, அவள் தலை நிலையில்லாமல் ஆடிக்கொண்டே இருந்தது.

அதைக் கவனித்து மனம் தாளாமல் அவளது தலையை தன் தோளில் சாய்த்துக்கொண்டு, "சொல்லு யாமு! என்ன நடந்தது!

உன்னை யார் என்ன பண்ணாங்க!

நீ சொன்னாதான எனக்குத் தெரியும்" எனக் கேட்டான் அவன்.

சில நிமிடங்கள் மௌனமாக அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவள், "பொங்கல் ஹாலிடேஸ் முடிஞ்சதும் நான் காலேஜுக்கு போனேன்;

ஒரு வாரம் ரொம்ப நார்மலா போச்சு!

கிளாசஸ் இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது; அதெல்லாம் போன்ல பேசும்போது உங்க கிட்ட கூட சொல்லி இருக்கேன் இல்ல" எனக் கேட்டாள் அவள்.

"ம்.. நியாபகம் இருக்கு" என்றவன், "அப்பதான் அம்மா ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ்காக லண்டன் போனாங்க!

நான் அவங்களுக்கு துணையா போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால கிளம்பிப் போனேன்!" என்றான் அவன்.

"ஏன் போனீங்க ஜெய்! என்னை தனியா விட்டுட்டு ஏன் போனீங்க!" என கோபமாக அவனுடைய சட்டையைப் பிடித்து உலுக்கியவாறு, "மாதினியும் ரொம்ப பிஸின்னு சொல்லிட்டு இருந்தா!

உங்க ரெண்டுபேர் கிட்டயும் என்னால எதையும் ஷேர் பண்ண முடியல!" என மூச்சுவாங்க கத்தியவள், தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்!

***

பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் தெளிவாக சில தினங்கள் கடந்திருக்க, காலை கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி தன் வருகையைப் பதிவு செய்ய அலுவலக அரை நோக்கிப் போனாள் யாமினி.

அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த வருகையைப் பதிவுசெய்யும் கருவியைச் சுற்றி கும்பலாக இருக்கவும் சற்றே ஒதுங்கி ஓரமாக நின்றிருந்தாள் அவள்.

சரியாக அதே நேரம் அவளைக் கடந்து தனது அலுவலக அறையை நோக்கிப் போனான் நரேன்.

பார்வையால் அவளை அளவிட்டவாறே அவன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட வெகு சில நிமிட இடைவேளையில் அவளைக் கடந்து சென்றனர் வீராவும் நந்தாவும்.

அவளைப் பார்த்த நொடி வீராவின் கண்களில் சிறு மின்னல் வெட்ட, அவன் நந்தாவை ஒரு பார்வை பார்க்கவும், அவன் எதோ கிண்டலாகச் சொல்ல சிரித்துக்கொண்டே நரேனுடைய அறை நோக்கிப் போனவர்கள் அவனது அனுமதிக்காகக் கூட காத்திருக்காமல் அவனது அறைக்குள் சென்றனர்.

பின் தனது வருகையைப் பதிவுசெய்துவிட்டு வகுப்பறை நோக்கிப் போனாள் யாமினி.

அவர்கள் மூவரும் அவளைப் பார்த்த விதத்தில் சிறு பதட்டம் தொற்றிக்கொண்டது அவளுக்கு.

அன்றைய வகுப்புகள் தொடங்கியதும் அவளது கவனம் அதில் சென்றுவிடச் சற்று நிதானத்துக்கு வந்தாள் அவள்.

அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்க, இடையில் குறுக்கிட்டவாறு, தள்ளாட்டத்துடன் அவளை நோக்கி வந்த ஒரு மாணவி, "மேம் பீலிங் சிக்; என்னால க்ளாஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல; ஷெல் ஐ லீவ்!" எனக் கேட்க, என்ன பிரச்சினை என்பதை அறிந்துகொள்வதை விட, "இந்த நிலைமையில நீ எப்படி வீட்டுக்கு போவ!" என்று மட்டுமே கேட்கத் தோன்றியது யாமினிக்கு.

"மேம்! என்னோட கார் ட்ரைவரோட வைட்டிங்ல இருக்கு; ஸோ நோ ப்ராப்ளம்" என்று பதில் சொன்னாள் அவள் குளறலாக.

உடனே மற்றொரு மாணவியை அழைத்து, "ப்ரின்ஸிபல் சார் கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு, அவளை கார் கிட்ட கொண்டு போய் விட்டுட்டு வந்துடு!" எனப் பணித்து அவளுக்குத் துணையாக அனுப்பிவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் அவள்.

எதையுமே எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் யாமினிக்கு அந்த பெண்ணின் செய்கையில் எந்த சந்தேகமும் தோன்றவில்லை. உண்மையிலேயே அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றே எண்ணினாள்.

அப்பொழுதே அவள் கொஞ்சம் சுதாரித்திருந்தாள் என்றால் நிலைமை அவளது கையை மீறிச் சென்றிருக்காதோ?

*** 

அவ்வப்பொழுது எதாவது காரணம் சொல்லி அவளை தன் அலுவலக அறைக்கு அழைக்கும் நரேன், அவளது பணி நிமித்தமாக எதாவது கேள்விகளாகக் கேட்ட வண்ணம் இருப்பான்.

முதன்முதலாகப் பார்த்த பொழுது நரேனின் பார்வையிலிருந்த வக்கிரம் அதன் பின் இல்லாமல் கண்ணியமாகவே நடந்துகொண்டான் அவன்.

எப்பொழுதுமே அவனுடன் அந்த வீரா அங்கே இருக்க எப்பொழுதாவது நந்தாவும் உடன் இருப்பான்.

ஆனால் அவளுடைய கவனத்தைக் கவரும் விதமாக ஒரு அதிகப்படியான அலட்டல் வீராவிடம் தெரியும்.

அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் அவளுக்கு இல்லாமல் போனாலும்,  உருண்டையான தோற்றத்தில் இருக்கும் அந்த நரேனின் பிரத்தியேக 'ஜிம்' பயிற்சியாளர்தான் அந்த நந்தா; அவனுக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடங்கள் சில சென்னையின் முக்கிய பகுதியில் உள்ளது.

வீரா என்பவன் அந்த நரேனுக்கு தூரத்து உறவினன்; அவனுடைய 'பினாமி' மேலும் நரேனுக்கு சொந்தமான உரிமம் பெறப்படாத சில கேளிக்கை விடுதிகள் அந்த வீராவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்கிற விஷயங்கள் மற்றவர் பேசுவதை வைத்து அவளுக்குத் தெரிய வந்தது.

நரேனின் அல்லக்கை என்கிற ஒரே ஒரு தகுதி இருப்பதாலோ என்னவோ, அவ்வப்பொழுது யாமினியை வழி மறித்து பல்லை இளித்தவாறு ஏதோ சொல்ல வருவான் வீரா.

ஆனால் அவன் முன் நின்று பேசவே அருவறுத்தவளாக ஒரு செயற்கை புன்னகையுடன் அவனைக் கடந்து சென்றுவிடுவாள் அவள்.

இதுவே தினசரி வழக்கமாக இருக்க கல்லூரி முடிந்து மாலை வீடு வந்த பிறகு ஜெய்யுடன் கைப்பேசியில் காதல் பேசுவதும், வார இறுதியில் மாம்பலம் வீட்டில் போய் தங்கிக்கொண்டு கல்யாணத்திற்குத் தேவையான ஜவுளிகள் நகைகள் என வாங்குவதுமாக சில தினங்கள் சென்றது.

இதற்கிடையில் ஒருநாள் அவளை அழைத்த ஜெய், "ஒரு முக்கியமான விஷயம் மாது யாமு!" எனத் தயக்கத்துடன் சொல்ல, "எதாவது பிரச்சனையா ஜெய்!" எனக் கேட்டாள் அவள்.

"ஒண்ணும் இல்ல" என இழுத்தவன், "நெக்ஸ்ட் வீக் ஒரு கான்ஃபரன்ஸ்காக அம்மா லண்டன் போறாங்க! அப்பாவுக்கும் முக்கியமான சர்ஜரி ஒண்ணு இருக்கு.

அதனால நான் கூடப் போக வேண்டியதா இருக்கும்!" என விளக்கமாகச் சொன்னான் அவன்.

"ப்ச்... இவ்வளவுதானா! என்றவள் "இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்; அத்தைக்குத் துணையா போறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?" என அவள் கேட்க, "திரும்பி வர நாலஞ்சு நாள் ஆகும்.  என்னால உன்கூட இப்ப மாதிரி போன்ல பேச முடியாதே! அதுதான் பிரச்சனை" என்றான் அவன் வருந்தும் குரலில்!

"ஜெய்! இதெல்லாம் ரொம்ப ஓவர்! நாலஞ்சு நாள்தான! பரவாயில்ல மேனேஜ் பண்ணிக்கலாம்!" என்றாள் அவள் கிண்டல் குரலில்!

அதன் பின் அவர்களுடைய வழக்கமான 'ஸ்வீட் நத்திங்ஸ்' தொடர நிறைந்தது அன்றைய நாள்!

அன்று பிப்ரவரி பதினான்கு!

இன்னும் ஒரே மாதம்தான் இருந்தது அவர்கள் திருமணத்திற்கு.

ஜெய் லண்டன் சென்று மூன்று நாட்கள் ஆகியிருக்க 'நாட்கள் நகராதோ! பொழுதும் போகாதோ!' என்கிற நிலையிலிருந்தாள் யாமினி.

கல்லூரிக்குச் செல்ல மனமே இல்லாமல் கிளம்பி அங்கே வந்திருந்தாள் அவள்.

தனது வருகையைப் பதிவு செய்து விட்டு அவள் திரும்ப, அவளை நோக்கி வந்த 'பியூன்' "மேடம் நீங்க வந்த உடனே சார் உங்களை வந்து பார்க்கச் சொன்னார்" எனச் சொல்லிவிட்டுப் போக, நரேனுடைய அலுவலக அறை நோக்கிப் போனாள் அவள்.

நரேன்தான் அவளை அழைத்திருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் அங்கே செல்ல, வாயெல்லாம் பல்லாக 'ஈ'யென இளித்தவண்ணம் கையில் சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தை ஏந்தியவாறு நின்றிருந்தான் வீரா!

அவளைப் பார்த்ததும் கள்ளுண்ட மந்தி போல மதி மயங்கிப் போனவன், மேற்கத்தியப் பாணியில் அப்படியே ஒரு காலை மடக்கி மண்டியிட்டவாறு  அந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டி, "ஐ லவ் யூ!?" என்றான் உல்லாசமாக!

பதட்டத்துடன் அவள் தன் பார்வையை அந்த அறை முழுவதும் சுழல விட, அவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை அங்கே!

பயத்தில் தொண்டை அடைக்க முதலில் என்ன சொல்வது என்பது புரியாமல் அசைவற்று நின்றவள், கொஞ்சமாகத் தன்னை சமன் செய்துகொண்டு, "சாரி.. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு" எனச் சொல்ல அவன் முகம் கன்றிபோனது.

"இன்னும் கல்யாணம் நடக்கல இல்ல! மொதல்ல அதை நிறுத்து!" என்றான் அவன் கட்டளையாக!

பயத்தில் உடல் சில்லிட்டுப்போக உறைந்து நின்றாள் யாமினி!

மாயா-10

"ப்ளீஸ்! சொன்னா புரிஞ்சிக்கோங்க; நெக்ஸ்ட் மந்த் எனக்கு கல்யாணம்.

அதனால இந்த மாதிரியெல்லாம் பேசாதீங்க!" என மூச்சை இழுத்துப்பிடித்து யாமினி சொல்ல வீராவின் முகம் விகாரமாக மாறிப்போனது.

அதற்குள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்த நரேன், அங்கே அவர்கள் இருவர் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு ஒரு கேவலமான சிரிப்பு சிரிக்க, அதில் தடுமாறினான் வீரா.

தோன்றிய அருவறுப்புடன் கிடைத்த அந்த சிறு இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு அந்த அலுவலக அறையை விட்டு வெளியில் வந்த யாமினி வேகமாக அவளுடைய வகுப்பறை நோக்கிப் போனாள்.

அப்பொழுதுதான் ஒவ்வொரு மாணவர்களாக அங்கே வந்துகொண்டிருந்தனர்.

அதைக் கவனித்தவாறே முதல் வரிசையில் மாணவர்கள் அமரும் இருக்கையில் போய் அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயன்று தோற்றாள்.

அவளுக்குள் கிளம்பிய பயமும் அதனால் ஏற்பட்ட படபடப்பும் அடங்கவே இல்லை அவளுக்கு.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நின்றுகொண்டே அவள் பாடம் எடுக்கவேண்டும்.

அது முடியாது என மனம் சொல்ல, உடல்நிலை சரி இல்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போய்விடலாம் என்று தோன்றியது அவளுக்கு.

அவளுடைய வகுப்பை ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது.

இப்பொழுதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அவள் எழ, திடீரென்று அங்கே இருந்த பெண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

அவள் அருகில் சென்று பார்க்கவும்  அங்கே ஒரு மாணவி அரை மயக்கத்தில் இருக்க அவள் மூக்கில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

'ஐயோ! இது வேறா?' என்று ஆயாசமாக இருந்தது அவளுக்கு.

ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் யாமினியின் மனம் இடம் கொடுக்கவில்லை.

எப்படியும் தானும் கிளம்பத்தானே போகிறோம் என்ற எண்ணத்தில் அந்த பெண்ணை கைதாங்கலாக முதல் உதவி அறை நோக்கி அழைத்துச்சென்றாள்.

அங்கே இருந்த செவிலியர் அவளுடைய ரத்தத்தைத் துடைத்துவிட்டு அவளை மேலோட்டமாக பரிசோதனை செய்த பின், "இவங்கள உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறது நல்லது.

அட்மிஷன் போட வேண்டியதா இருக்கலாம்!" எனப் பயத்தைக் கிளப்பி விட்டுவிட்டு, அவளுடைய கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்து, "சுனிதாதான உங்களோட நேம்! நீங்க ஹாஸ்டல் ஸ்டுடென்ட்டா இல்ல டே ஸ்காலரா?" என்று அந்த செவிலியர் கேட்க, 'ஹாஸ்டல் ஸ்டூடெண்ட் சிஸ்டர்" என மிக முயன்று பதிலளித்தாள் அவள்.

யாமினியின் நிலை புரியாமல், "சரி பிரின்சிபல் சார் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு வரேன்! நீங்க அதுவரைக்கும் கொஞ்சம் கூட இருங்க மேம்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த செவிலியர்.

முள்ளின் மேல் நிற்பதுபோல் யாமினி நின்றுகொண்டிருக்க, கிடைத்த அந்த தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு, "மேம்! ப்ளீஸ் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க!

இங்க இருந்தால் ட்ரீட்மெண்ட் குடுக்காம என்னை கொன்னுடுவாங்க" என்றாள் அந்த பெண் பீதியுடன்!

ஏற்கனவே படபடப்பிலிருந்தவள் மேலும் பதறிப்போனாள்.

"ஐயோ! என்ன சொல்ற நீ!" என யாமினி நடுங்கும் குரலில் கேட்க, "எஸ் மேம்! ப்ளீஸ்! இப்ப எதுவும் கேக்காதீங்க! என்னை எப்படியாவது வெளியில கூட்டிட்டு போயிடுங்க!" எனக் கெஞ்சத்தொடங்கினாள் அவள்.

அந்த நொடி பயத்துடனே, மாதினியை அழைத்து ஆலோசனை கேட்கலாம் என்று எண்ணியவளாக தன் கைப்பேசியை எடுத்து அவளது எண்னை அழுத்த முற்பட, "மேம் ப்ளீஸ்! இங்க இருந்து கால் பண்ணாதீங்க!

யாராவது வந்தால் பிரச்சனை ஆகிடும்!" என்று அந்த சுனிதா சொல்லவும், தயக்கத்துடன் அதை 'லாக்' செய்தாள் அவள்.

தான் படுக்கவைக்கப்பட்டிருந்த சிகிச்சை பலகையிலிருந்து மெல்ல தன் தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்தவாறு, மெல்லிய குரலில், "மேம்! நம்ம சேர்மென் ரொம்ப மோசமானவரு! சரியான பொம்பளை பொறுக்கி!

அந்த வீரா அவரோட வேட்டை நாய் மாதிரி!" என்றாள் அச்சத்துடன்.

அவர்களது பெயர்களைக் கேட்டதும் உதறல் எடுத்தது யாமினிக்கு.

சற்று முன் நடந்த ஒரு நிகழ்வு போதும் அவளது அச்சத்தை உச்சத்தில் கொண்டு நிறுத்த.

"இப்ப என்ன செய்ய சொல்ற!" என அவள் அதே அச்சத்துடன் கேட்க, "மேம்! அந்த சிஸ்டர் வரதுக்குள்ள என்னை இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க ப்ளீஸ்!

இந்த கேம்பசை விட்டு வெளியில போனால் போதும்.

எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டு எப்படியாவது எங்க ஊருக்கு போயிடுவேன்" என்றவள் முயன்று எழுந்து உட்கார, தனக்குமே இங்கே இருந்து போனால் போதும் என்று இருக்கவும், அவளை கை தாங்கலாகப் பற்றித் தூக்கியவள், அவளது கரத்தை தன் தோளைச் சுற்றிப் போட்டவாறு நடக்கத் தொடங்கினாள் யாமினி. 

அந்த நொடி பதறி அடித்துக்கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்த அந்த செவிலியர், "என்ன மேடம் இவங்கள எங்க கூட்டிட்டு போறீங்க!" என்று கேட்க, என்ன சொல்வதென்று புரியாமல், "இல்ல; ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்னு" என இழுத்தாள் அவள்.

அவள் சொல்வதைக் காதில் வாங்கியவாறு அந்த செவிலியரைப் பின்தொடர்ந்து வந்த வீரா, "உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலையெல்லாம்?" என்றான் மிரட்டலாக.

"இல்ல பாவம் இந்த பொண்ணுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல!" என அவள் தட்டுத்தடுமாறிச் சொல்ல, "சொல்லிட்ட இல்ல; நீ கிளம்பு; நான் பார்த்துக்கறேன்" என்றான் அவன்.

அதைக் கேட்டதும் மேலும் மிரண்டுபோய் அவளை இறுகப் பற்றிக்கொண்டு, "ப்ளீஸ் மேம்! என்னை தனியா விட்டுட்டு போயிடாதீங்க!" எனக் கெஞ்சினாள் அந்த பெண். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

என்ன செய்வது, எப்படி அந்த சூழ்நிலையைக் கையாள்வது எனப் புரியாமல் தவித்தவள், “இல்ல; பரவாயில்ல; நான் இவங்க கூடவே இருக்கேன்.

நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக அரேஞ்ச் பண்ணுங்க” என்றாள் யாமினி.

அவனுடைய இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது.

ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என அவள் சொன்ன விஷயம் அவனை வெகுவாக கொதிப்படையச் செய்திருந்தது.

அதுவும் அவள் அந்தப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு இவ்வாறாகப் பேசவும் அவனுடைய வன்மம் மேலும் அதிகரித்தது.

“தென் ஃபைன்” என்றவன் “அப்படின்னா நீயும் இவ கூடவே இங்கயே கிட!” என்றவாறு அந்த செவிலியரிடம் ஏதோ ஜாடை செய்துவிட்டு அவன் அங்கிருந்து அகன்று விட,  மின்னலென அவனைத் தொடர்ந்து தானாக மூடிக்கொள்ளும் அந்தக் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள் அந்தப் பெண்.

மூடிய கதவையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு உறைந்து போய் நின்ற யாமினி பின்பு சுனிதாவைப் பற்றியவாறே அந்தக் கதவைத் திறக்க முயல, அந்த கதவு வெளிப் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

ஏதோ சரியில்லை என்பது அவளது உணர்வுகளுக்குப் புரிய உடனேகைப்பைசியில் மாதினியை தொடர்பு கொள்ள முயன்றாள் அவள்.

அங்கே சுத்தமாக ‘சிக்னல்’ இல்லாமல் இருக்கவே இணைப்பு கிடைக்கவேயில்லை.

பின் அவள் வேகமாக அந்தக் கதவைத் தட்டிப்பார்த்தும் பலவாறு போராடிப் பார்த்தும் எந்தப் பயனும் இல்லை.

நேரம் வேறு கடந்துகொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள் சுனிதாவின் அருகில் போய் உட்கார, அதுவரை  அனைத்தையும் ஒரு இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள், “மேம்! என்னால நீங்களும் மாட்டிக்கிட்டீங்களே!

எப்படியாவது தப்பிச்சு போயிடுங்க மேம்! ப்ளீஸ்” என்றாள் அவள்.

அங்கிருந்து எப்படித் தப்பித்துப் போவது என்பது புரியாமல் தன் கையை பிசைந்தவள், “என்ன நடக்குதுன்னே புரியலயே; உனக்கு உடம்புதான சரியில்லை. உன்னை ஏன் இப்படி லாக் செஞ்சு வெச்சிருக்காங்க.

உன்னோட சேர்த்து என்னை வேற ஏன் இப்படிப் பூட்டி வெச்சிருக்காங்க?” என அவளிடம் பரிதாபமாகக் கேட்டாள் யாமினி.

உங்களை ஏன் லாக் பண்ணியிருக்காங்கன்னு எனக்கு புரியல மேடம்.

ஆனா என்னை இப்படி அடைச்சு வைக்கக் காரணம் இவங்க செய்யற ஹாப்பி பில்ஸ் அப்படிங்கற ட்ரக் டீலிங் வெளியில லீக் ஆகிடுமோங்கற பயத்துலதான்” என்றாள் சுனிதா மூச்சு வாங்க.

“என்ன சொல்ற; எனக்கு ஒண்ணுமே புரியல!” சொல்லும்பொழுதே அவளுடைய முகம் முழுவதும் கலவரத்தை பூசி இருந்தது.

தொய்வான குரலில் ஏதோ சொல்லத் தொடங்கினாள் சுனிதா.

அவள் மேலும் மேலும்  பலகீனம் ஆகிக் கொண்டே செல்வது போல் தோன்றியது அதைக் கேட்டுக் கொண்டிருந்த யாமினிக்கு.

 “நம்ம கிளாஸ்ல இருக்கிற வந்தனா தெரியும் இல்ல உங்களுக்கு”

சில தினங்களுக்கு முன் வகுப்பில் மயங்கி விழுந்த பெண் அவள் என்பது நினைவில் வந்து ஆம் என்பது போல் தலையை ஆட்டினாள்.

"அவங்க அப்பா ஒரு பிசினஸ்மேன். அவ கேக்குற போதெல்லாம் நிறையப் பணமும் கிடைக்கும் வித் அன்லிமிட்டட் ஃப்ரீடம்.

அவதான் என்னோட பெஸ்ட் பிரண்ட். 

இன்னும் சில பேர் சேர்ந்து நாங்க எல்லாம் ஒரு கேங்க். 

ஆக்சுவலி இங்க படிக்க வந்திருக்கோம் என்பதைவிட ஜாலியா என்ஜாய் பண்ண வந்திருக்கோம் அப்படிங்கிற மாதிரி ஹாப்பியா சுத்திட்டு இருப்போம்.

நாங்க எல்லாரும் சேர்ந்து வீக்எண்ட் ஆனா ஈசிஆர்ல இருக்கிற ஒரு பஃப்புக்கு போவோம்.

அப்பல்லாம் பியர் இல்லன்னா ஒயின் சாப்பிடுவோம்.

அவள் வெகு இயல்பாகச் சொல்ல, அதிர்ந்து அவளைப் பார்த்தாள் யாமினி.

“சாரி மேம்” என்றவள் தொடர்ந்தாள்.

“எங்களுக்குன்னு ஒரு செட் ஆஃப் புக் கலெக்ஷன்ஸ் இருக்கு.

அதே மாதிரி லேட்டஸ்ட் மூவிஸ் லாம் நிறைய பார்ப்போம்.

சில கொரியன் சீரியல்ஸ் எங்களோட ஃபேவரைட். அதுல எல்லாம் லவ்வை விட லஸ்ட் ரொம்பவே தூக்கலா இருக்கும்.

இப்ப ரீசன்ட்டா வந்த ஒரு தமிழ் படத்துல கூட ஹீரோயின் ட்ரிங்க் பண்ற மாதிரி வருதில்ல? அதுக்கு பிறகு வர டயலாக்கெல்லாம் வேற ஒரு லெவெல்ல இருக்கும்"

ஆமாம்! மிகப் பிரபல நடிகர் நடித்த படம்தான் அது.

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்.

சில நாட்களுக்கு முன் ஜெய்யுடன் போய் பார்த்திருக்கிறாள் யாமினி. அவள் சொல்ல வருவது புரிந்தது.

"அதனால   ட்ரிங்க் பண்றது தப்புன்னே நாங்க நினைக்கல.

அது எங்களுக்கு ஒரு பேஷன் மாதிரி.

அதுவும் இப்படியெல்லாம் செய்யலன்னா எங்க கேங்ல அவங்கள குட்டி பாப்பான்னு ட்ரோல் பண்ணி ஓட்டுவாங்க.

அதனாலதான் அறிவு கெட்டுப்போய் இவ்வளவு பெரிய ஸ்கேம்ல மாட்டியிருக்கோம்” என்று சொல்லி மூச்சு வாங்கியவள் தொடர்ந்தாள்.

வந்தனாவும் இன்னும் ஒரு பொண்ணும் மட்டும் டே ஸ்காலர்ஸ்.

அவங்க ரெண்டுபேருக்கும் பாய் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க.

டேட்டிங்லாம் அவங்களுக்கு ரொம்ப சகஜம்.

இந்த சந்தர்ப்பத்துலதான் ஒரு நாள் ட்ரிங்க் பண்ணிட்டு எங்க வார்டன் கிட்ட மாட்டினோம்.

அப்ப கூட அவங்க எங்க பேரண்ட்ஸ்கிட்ட போட்டுக் குடுப்பாங்க.

அவங்கள ஈஸியா ஹேண்டில் பண்ணிக்கலாம்னுதான் நினைச்சோம்.

ஆனா நெக்ஸ்ட் டே அவங்க நேரா சேர்மேன் கிட்ட கொண்டுபோய் நிறுத்தினாங்க.

அவர் அதை கேஷூவலா எடுத்துகிட்ட மாதிரித்தான் பேசினார். ‘இதெல்லாம் ரொம்ப தப்பு. இந்த ஹாபிட்ல இருந்து நீங்க சீக்கிரம் வெளியில வரணும்.

இது தொடர்பா ஏதாவது ஹெல்ப் வேணும்னா நீங்க எப்ப வேணும்னாலும் என்னை அணுகலாம்’ அப்படின்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ணி விட்டுட்டார்.

ஆனா ஹாஸ்ட்டல்ல எங்கள மார்க் பண்ணிட்டாங்க.

ஸ்ரிடிக்டா வெளியில எங்கயும் போக முடியாதபடி செக்யூரிட்டிய டைட் பண்ணிட்டாங்க.

அந்த வீக்  ஃபுல்லா எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல.

பட் வீக் எண்ட்ல எங்களால ட்ரிங்க் பண்ணாம இருக்க முடியல.

ஒரு மாதிரி டிப்ரஸ்டா இருந்தது.

நரேன் சார் ஹெல்ப் பண்றேன் சொன்னதை நம்பி அவர்கிட்ட போய் எங்க நிலைமையைச் சொன்னோம்.

அப்பதான் அவரு எங்ககிட்ட ஒரு டேப்லட்டை கொடுத்து, ‘இதை டெய்லி நைட்ல எடுத்துக்கிட்டீங்கன்னா இந்த பிராப்ளம் உங்களுக்குச் சீக்கிரம் சரியா போயிடும்’னு சொன்னார்.

அவர் சொன்னதை நம்பி ஒரு வாரம் தொடர்ந்து அந்த டேப்லட்டை நாங்க எடுத்துகிட்டோம்.

அந்த ஒரே வாரத்தோடு அவர் கொடுத்த அந்த டேப்லெட் முடிஞ்சு போச்சு.

ஆனா அடுத்த நாள் அந்த டேப்லட்டை போட்டுக்காம எங்களால இருக்க முடியல கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு.

வேற வழி தெரியாமல் மறுபடியும் நரேன் கிட்ட போய் நின்னோம்.

ஆனா அந்த டேப்லெட்டை கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டார்.

அந்த டேப்லெட் காக அவர்கிட்ட ரொம்பவே கெஞ்ச ஆரம்பிச்ச அப்பதான் அவர் எங்களை பிளாக்மெயில் பணணத் தொடங்கினார்.

எங்களை மிரட்டி மிரட்டி அவருடைய விருப்பத்திற்கு எங்க எல்லாரையுமே இணங்க வெச்சார்.

நாங்க அதுவரைக்கும் ஜாலியா நினைச்ச பல விஷயங்கள் எங்களுக்கு நரகத்தை காண்பிச்சது.

அவருக்கு சொந்தமான பப்லதான் அந்த டேப்லட் அவைலபிளா இருக்கும்.

அதனால அவர் கூட நாங்க அங்க எல்லாம் போக வேண்டியதாயிருந்தது.

அந்த ஹாப்பி பில் டேப்லெட்டை  மார்க்கெட்டிங் செய்யறது வீரா.

இது எல்லாத்துக்கும் அடியாள் மாதிரி வேலை செய்கிறது அந்த நந்தாவும் சதாவும்.

இங்க பெண்கள் போகும் பல பப்ல இந்த மாத்திரை புழக்கத்துல இருக்கு.

அங்க பெண்கள் குடிக்கற ட்ரிங்க்ல அவங்களுக்கே தெரியாம அதை கலந்து கொடுத்து அவங்களை அதுக்கு அடிமை ஆக்கறாங்க!

நரேன் மாதிரி பெரிய ஆளுங்க நிறையபேர் இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு அந்த பெண்களை பலி கொடுக்கறாங்க.

அந்த டேப்லட்டை பத்தி போகப்போகத்தான் எங்களுக்கு புரிய வந்தது.

அது ஒரு போதை பொருள் மட்டுமல்ல. பெண்களின் அந்தரங்க உணர்ச்சிகளை அதிகம் தூண்டக்கூடிய மாத்திரை அது.

அதை அதிகமாக எடுக்கும் போது அது உயிருக்கே ஆபத்தாகப் போய் முடியும்.

அந்த நரேனோட தேவைக்காக எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதோட டோசேஜை அதிகமாக்கிட்டே போனான் வீரா.

இப்ப அது எங்க ஹெல்த்தை ரொம்பவே பாதிச்சிருக்கு.

நாங்க இதுக்கான ட்ரீட்மெண்ட் எடுக்க போனால் இவங்க மாட்டிப்பாங்க.

அதனால எங்களை ட்ரீட்மெண்ட் எடுக்க விடாம தடுக்கறாங்க.

நான் அல்மோஸ்ட் ஃபைனல் ஸ்டேஜ்க்கு வந்துட்டேன்!

சும்மா ஜாலிக்காகன்னு ட்ரிங்க் பண்ணப் போக அந்த பழக்கம் அப்படியே தனக்குள்ள எங்களை போட்டு உயிரோட புதைச்சிடுச்சு.

அதோட இல்லாம ஏற்கனவே மன வக்கிரம் பிடிச்ச ஆண்கள், என்னை மாதிரி பொண்ணுங்கள கேவலமான கண்ணோட்டத்துல பார்க்கறாங்க .

அவங்களோட வக்கிரங்களை தீர்த்துக்க இந்த மாதிரி செக்ஸுவலா யூஸ் பண்ணிட்டு எங்களை அடையாளம் தெரியாம அழிச்சிடறாங்க.

அதையெல்லாம் புரிஞ்சிட்டு இந்த நிலைமையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் அந்த கெட்ட பழக்கங்களையெல்லாம் செஞ்சிருக்கவே கூடாதுனு நான் யோசிக்கும்போது காலம் ரொம்பவே கடந்து போச்சு மேம்"” என முடித்தாள் சுனிதா.

பேசிக்கொண்டே இருந்தவளின் நாசியிலிருந்து மறுபடி குருதி வழிய, கண்கள் நிலைக்குத்தி உணர்விழந்துபோனாள் அவள்.

குலை நடுங்கிப்போனது யாமினிக்கு

மதியம் வந்து மாலையும் ஆகிவிட நேரம் கடந்து கொண்டே இருந்ததே ஒழிய அவளைத்தேடி யாரும் வரவில்லை அங்கே.

அவளது கைப்பேசியில் தொடர்பு கிடைக்கவேயில்லை.

‘ஆஃப்லைன் மெசேஜ்’ஆவது செய்யலாம் என எண்ணி மாதினியின் எண்ணைத் தேர்ந்தெடுத்து எப்படித் தொடங்குவது எனப் புரியாமல் ‘ஹேப்பி பில்ஸ்” என அவள் ‘டைப்’ செய்யத் தொடங்க, தடதடவென அந்த அறையின் கதவைத் திறந்துகொண்டு வீரா நந்தா மற்றும் சதா பின் தொடர உள்ளே நுழைந்தான் நரேன்.

சட்டென கைப்பேசியை அவள் அணைக்க அவளைப் பார்த்துச் சிரித்த நரேன், “இங்க ஜாமர் வெச்சிருக்கோம்;  இங்கே இருந்து ஒரு கால் கூட உன்னால பண்ண முடியாது.

வீணா  ட்ரை பண்ணாத” என்று சொல்லிவிட்டு, நேராக சுனிதாவை நோக்கிப் போய் அவளை ஆராய்ந்தவாறு அவளுடைய தலையை இப்படி அப்படி திருப்பிப் பார்த்துவிட்டு, “கோமாக்கு போயிட்டான்னு நினைக்கறேன்.

நம்ம டாக்டர வெச்சு கன்ஃபார்ம் பண்ணிடு.

இவளுக்கு ஏதாவது ஆனா நாம மீடியாவுக்கு எல்லாம் நிறைய பதில் சொல்லணும். அதனால பிரச்சினையாகாம அவங்க பேரண்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சிடு” என்று சொன்னான்.

அதைக் கேட்டு, “ஜி என் ஆளு ஜி!” என வீரா இழுக்கவும், "இன்னுமா அவளை உன் ஆளுன்னு சொல்லிட்டு இருக்க?" என அவனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தவன் “இவதான் ரொம்ப டேஞ்சரஸ். முதல்ல இவளோட மேட்டர முடிச்சிருங்க” என்றான் வெகு சகஜமாக.

அதிர்ந்தான் வீரா.

“ஜி! ஏன் இப்படி சொல்றீங்க?” என அவன் கேட்க, “இந்த நேரம் நம்ம ரகசியம் மொத்தமும் இவளுக்குத் தெரிந்திருக்கும்” என்று நரேன் சொல்ல,

“ஜி! எனக்காக!” என இழுத்தான் வீரா.

“இவளாள உனக்கு எந்த பிரயோஜனமும் இல்ல. அதனால முடிச்சிடு: என்றான் நரேன் கட்டளையாக.

அடுத்த நொடி சதாவும் நந்தாவும் அவளை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியில் வர, ஆள் அரவமே இல்லாமல் லேசாக இருள் சூழ்ந்து இருந்தது அந்த கல்லூரி வளாகம்.

ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.

அவர்களுமே நரேனுடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக

இருக்கக்கூடும்.

காலை முதல் பாதித்திருக்கும் அதிர்ச்சியும் நடுக்கமும் பசியுடன் சேர்ந்து அவளைச் சோர்வடையச் செய்திருக்க, அவர்களைக் கொஞ்சமும் எதிர்க்க முடியாத நிலையிலிருந்தாள் யாமினி.

மிக எளிதாக அவளை இழுத்து வந்தவர்கள் அங்கே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய பேருந்துக்குள் அவளைத் தள்ளி அதைப் பூட்டினர்.

அதிலிருந்து வெளியேற அவள் எடுத்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிய அதன் மீது பெட்ரோலை ஊற்றினர் நந்தாவும் சதாவும்.

வீரா தீக்குச்சியைக் கொளுத்தி அந்த பேருந்தின் மீது வீசக் கொழுத்துவிட்டு எரியத் தொடங்கியது அந்த பேருந்து.

பேருந்துடன் சேர்த்து யாமினியையும் தன் கோரப் பசிக்கு இறையாக்கியது அந்த பொல்லாத நெருப்பு.

அதே நேரம் மாதினியின் கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்ப யாமினியிடமிருந்து வந்திருந்த அந்த குறுந்தகவலை பார்த்தாள் அவள்.

அந்த நொடி ‘ஹாப்பி பில்ஸ்’ என்ற இரண்டே வார்த்தைகள் மட்டுமே யாமினியிடமிருந்து  அவளுக்கு எஞ்சியிருக்கிறது என அறியவில்லை மாதினி.


Krishnapriya Narayan
(@krishnapriya-narayan)
Eminent Member Writer
Joined: 2 months ago
Posts: 31
07/02/2020 8:48 am  

மாயா-11

"உடம்பெல்லாம்  எரிஞ்சுது ஜெய்! பத்தி எரிஞ்சுது! வலியைத் தாங்கவே முடியல ஜெய்! என்னால கொஞ்சம் கூட தாங்க முடியல!

என்னை காப்பாத்த அப்ப அங்க யாருமே இல்ல ஜெய்! யாருமே இல்ல!" அழுகையினூடே சொல்லிக்கொண்டே போனாள் மாதினிக்குள் நிரம்பியிருந்த யாமினி!

என்ன காரணம் ஏது காரணம் என அறிந்துகொள்ளாமலேயே அந்த துயரத்தை அனுபவித்தவளின் தொண்டைக் குழியிலிருந்து எழுந்த கேவல் அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெய்யின் மனதில் வேதனையை மிகைப் படுத்தியது.

மாதினி மூலம் 'கல்லூரியில் நடத்த தீ விபத்தில் யாமினி இறந்துவிட்டாள்" என்ற செய்திதான் அவனுக்கு வந்தது.

அதைக் கேள்விப்பட்டு அவன் துடித்த துடிப்பு கொஞ்சம் நஞ்சமில்லை.

இப்போது அதைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம் துடித்தான் ஜெய், அவள் அடைந்த வேதனையை தானே அனுபவித்தவன் போல!

"சாரி யாமு! சாரி யாமு! அந்த நேரத்துல நீ ரொம்ப தவிச்சு போயிருப்ப இல்ல! நான் உன் பக்கத்துல இல்லாம போயிட்டேனே!

எங்களால உனக்கு எந்த நியாயமும் செய்ய முடியலே யாமு! சாரி யாமு!" எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தான் அவன்.

அதைக் கேட்டு, "ஹா! என்ன நீ எனக்கு நியாயம் தேடப்போறியா?” எனப் பெருங்குரலெடுத்துச் சிரித்தவள்,  எனக்கான நியாயத்தை நானே தேடிகிட்டேன்! தேடிகிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் சீற்றத்துடன்.

"யாமினி!" என அவன் அதிர்ச்சியுடன் சொல்ல, அவனது கண்களில் குடிகொண்டிருந்த மிரட்சியை அனுபவித்துக்கொண்டே, "என்னோட முதல் பலி அந்த நர்ஸ் ஜூலி!

அடுத்தது நந்தா!

மூணாவதா சதா!

இன்னும் மீதம் இருக்கறவங்களையும் பழி வாங்க பசியோட காத்துக்கிட்டு இருக்கேன் ஜெய்!" என்றாள் அவள் வன்மமாக!

அவளது முகமே களை இழந்து விகாரமாக மாறியிருப்பதுபோல் தோன்றியது ஜெய்க்கு!

"மாது!" என அவளை அழைத்தவன் உடனே மாற்றிக்கொண்டு, "சாரி யாமு! கூல் டவுன்!" என அவளைச் சமாதான படுத்த முயன்றான் அவன்.

"ஷ்.. குறுக்க பேசாத ஜெய்! எனக்கு பிடிக்கல!" என்றவள், "என்னை சமாதான படுத்த உன்னால முடியாது!

அதனால நடுவுல எந்த கேள்வியும் கேக்காம நான் சொல்றத கேளு" எனக் கட்டளையாகச் சொன்னவள், தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

"அந்த காலேஜ்ல படிக்கறவங்க மட்டும் இல்ல, இன்னும் நிறைய பெண்களை இந்த போதை பழக்கத்துக்கு ஆளாக்கி இருந்தாங்க அந்த சதையை பிச்சி தின்னும் ஓநாய்கள்.

அந்த சதா டிவி சீரியல் எடுக்கறேன்னு சொல்லி நடிக்க சான்ஸ் தேடி வர பொண்ணுங்களை நரேன் மாதிரி ஆளுங்களுக்கு பலி கொடுக்கிறான்.

இதுதான் இவனுங்க பிழைப்பே!

வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்ல ஊனமாஞ்சேரி தாண்டி ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு! 

அந்த நந்தாவும் பிரபுவும் அங்க இருந்துதான் அந்த பொண்ணுங்கள பிக் அப் பண்ணிட்டு போய் வீராவோட இன்ச்சார்ஜ்ல இருக்கற பஃப்ல விடுவான்!

மறுபடியும் அவங்கள அங்கேயே கொண்டுவந்து விட்டுட்டு போயிடுவான்.

நவமபர் பதினாலாம் தேதி, எங்களை அந்த ரூம் குள்ள போட்டு பூட்டிட்டு போனாளே அந்த நர்ஸ் ஜூலி அவளை அந்த இடத்துல ட்ராப் பண்ணிட்டு போனானுங்க.

மிட் நைட் வேற; யாருமே இல்லாம அந்த ரோடே வெறிச்சோடி கிடந்தது.

வெஹிகிள்ஸ் கூட அதிகம் போகல.

அப்படி இருக்கும் பொது நான் அமைதியா அவளுக்கு முன்னால போய் நின்னேன்; அவ்வளவுதான்!

என்னைப் பார்த்ததும் தலை தெறிக்க ஓட ஆரம்பிச்சா அவ!

அப்ப பயங்கர ஸ்பீடா வந்த லாரி அவளைத் தூக்கி எறிஞ்சிட்டு போயிடுச்சு!" என்றவள், அன்னைக்கு அவ மட்டும் எங்களை தப்பிக்க விட்டிருந்தால் எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது.

ஒரு பொண்ணா இருந்தும் கூட அவ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம நடந்துக்கிட்டா இல்ல.

அந்த வெறி என் மனசுக்குள்ள பத்தி எறிஞ்சிட்டு இருந்தது.

அதுக்குதான் அவளை பழி தீர்த்துக்கிட்டேன் ஜெய்.

அடுத்தது...

டிசம்பர் பதினாலாம் தேதி அந்த நந்தா தனியா வந்து என் கிட்ட சிக்கினான்!

அவன் அதே இடத்துல ஒரு பெண்ணை ட்ராப் பண்ணிட்டு திரும்ப போய்ட்டு இருந்த நேரம் நான் அவனுக்கு முன்னால போய் நின்னேன்!

என்ன பார்த்த அடுத்த செகண்ட் அவன் நிலை தடுமாறி பைக்கோட போய் விழுந்தான்.

அதோட அவனோட லைஃப் முடிஞ்சுது.

அடுத்தது அந்த சதா! ஜனவரி பதினாலு அன்னைக்கு அவனையும் முடிச்சேன்!

இன்னும் மிச்சம் இருக்கற அந்த மூணு போரையும் பிப்ரவரி பதினாலுக்குள்ள கொன்னு என் பழியை தீத்துக்க போறேன் ஜெய்!

அதுவரைக்கும் என் ஆன்மா சாந்தி அடையாது!" என்றாள் யாமினி குரோதத்துடன்.

கோபத்தில் அவளது உடல் அதிர்ந்தது.

உள்ளே இருக்கும் ஆன்மா யாமினியுடையதானாலும் அந்த உடல் மாதினியுடையதானதால் அவளுக்கு எதாவது துன்பம் நேர்ந்துவிடுமோ என அஞ்சியவன், அவளை அமைதிப் படுத்தும் விதமாக அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்தான் ஜெய்.

அந்த தீண்டலில் அவளது உடல் அதீதமாகத் தகிக்கவும் மின்சாரம் தாக்கியது போல் அவன் அவளை விட்டு விலக, "நான் இருக்கும் போது மாதினியை தொட முயற்சி செய்யாத ஜெய்! அது அவளுக்குத்தான் ஆபத்து" எனக் கர்ஜித்தாள் அவள்.

நொந்தே போனவனாக இயலாமையுடன் தன் தலையைக் கோதிக்கொண்டான் ஜெய்.

அப்பொழுது அங்கே யாரோ வரும் அரவம் கேட்க, மாதினியின் உடல் சிலிர்த்தது. அடுத்த நொடி அப்படியே மயங்கிச் சரிந்தாள் அவள்.

அவளைத் தொட்டுத் தூக்கவும் பயந்து தயங்கியவனாக ஜெய் ஸ்தம்பித்து நிற்க, அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்தார் மாதினியின் பெரியப்பா கணேஷ்.

அவளைத் தாங்கி பிடித்தவாறே, "என்ன ஆச்சு மாப்ள!" எனப் பதட்டத்துடன் அவர் கேட்க, என்ன சொல்வது என்று தயங்கியவன், "யாமினியை பத்தி பேசிட்டு இருந்தா; ரொம்ப எமோஷனல் ஆகி இவளுக்கு திடீர்னு இப்படி மயக்கம் வந்துடுச்சு" என்றவன், வேகமாக வீட்டிற்குள் போய் அவளது அப்பா குமரேஷை அங்கே அழைத்துவந்தான்.

அண்ணன்  தம்பி இருவருமாக அவளை வீட்டிற்குள் தூக்கி வந்து ஊஞ்சலில் படுக்க வைத்தனர்.

வீட்டில் அனைவரும் பதறிப்போய் நிற்க, தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான் ஜெய்.

அதில் மெள்ள அவளுடைய மயக்கம் தெளிந்து அவள் கலவரமாக அனைவரையும் பார்க்க, அருகில் நின்ற சாந்தா பாட்டியிடம், "அவளுக்கு ஜுரம் இருக்கா பாருங்க பாட்டி" என்றான் ஜெய் தயக்கத்துடன்.

அவளது நெற்றியில் கை வைத்து பார்த்த பாட்டி, "சில்லுன்னுதான் இருக்கு மாப்ள!" என்றார் தெளிவற்ற குரலில்.

அதற்குள் அவளுடைய அம்மா ஸ்வர்ணா சூடாகப் பாலை கொண்டுவந்து அவள் கையில் கொடுக்க மறுக்காமல் அதைப் பருகினாள் அவள்.

இதை காரணம் காட்டி அவளை வீட்டை விட்டே வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் கனகா பாட்டியும் அவளது அம்மாவும்.

அத்துடன் சேர்ந்து தன்னை சுற்றி என்னதான் நடக்கிறது என்ற கேள்வியும் குழப்பமும் அவளுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக்கொள்ள தலையே வெடித்துவிடும் போலிருந்தது அவளுக்கு.

அத்தனை பேரும் சூழ்ந்திருக்க அங்கே மாதினியிடம் ஏதும் பேச இயலவில்லை ஜெய்யால்.

அவள் மாதினியாக இருப்பாளா அல்லது யாமினியாக மாறிப்போவாளா என்ற நிலையில் அவளிடம் எப்படிப் பேசுவது என்றே புரியவில்லை அவனுக்கு.

விடைகாண முடியாத கேள்விகளுடன் அங்கிருந்து கிளம்பினான் அவன்.

அங்கிருந்து வெளியேறுவதற்கு முன் கணேஷை தனியே அழைத்தவன், அவளது உண்மையான நிலையை அவரிடம் சொல்லி அதன் மூலம் மற்ற அனைவரையும் கலவரப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன், "யாமினியின் ஞாபகத்துல அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா மாமா!

அதனால அவளை கொஞ்சநாள் இங்கேயே வெச்சு பத்திரமா பார்த்துக்கோங்க!

சென்னைக்கு இப்ப அனுப்ப வேண்டாம்!" என்றவன், "நான் சொன்ன பிறகு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சா போதும்! இப்போதைக்கு அவ கிட்ட கல்யாணத்தை பத்தி யாரும் எதுவும் பேசாதீங்க.

இது என்னோட சின்ன ரெக்வஸ்ட். இதை எல்லார் கிட்டயும் சொல்லிடுங்க" என முடித்தான்.

"மாப்ள! இந்த கல்யாணம்?" எனக் கேள்வியாய் அவர் இழுக்க, அவர் மனதின் வேதனை புரிந்தவனாக, "நிச்சயமா நடக்கும் மாமா! ஆனா யாமினிக்கான நியாயம் கிடைச்சதும்" என்று தெளிவாகச் சொல்லிவிட்டு யாமினியின் மஞ்சள் 'நேனோ'விலேயே அங்கிருந்து கிளம்பினான் ஜெய்.

*** 

கல்லூரியில் நடந்த தீ விபத்தில் யாமினி சிக்கிக்கொண்டாள் என்ற செய்தி அறிந்து, வெளிநாட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த ஜெய்க்கு தகவல் கொடுத்துவிட்டு, கணேஷ் மற்றும் குமரேஷுடன் மாதினி அங்கே போய்ச் சேருவதற்குள் அனைத்து காவல்துறை நடைமுறைகளும் முடிந்து அவளுடைய சடலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது.

அங்கே சென்று பார்க்க, அவசர அவசரமாக பிரேதப் பரிசோதனையும் முடிந்திருந்தது.

இரண்டொரு நாட்களில் அது விபத்துதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டு அனைத்தும் மூடி மறைக்கப்பட்டிருந்தது.

கடைசியாக யாமினியின் கைப்பேசியிலிருந்து வந்திருந்த 'ஹாப்பி பில்ஸ்!' என்ற வார்த்தைகளை பின் தொடர்ந்து செல்ல அதைப் பற்றி இணையம் சொன்ன தகவல்கள் விவகாரமானதாக இருக்கவும், அன்று அங்கே நடந்தது விபத்து இல்லையோ என மாதினிக்கு ஏற்பட்ட சந்தேகம் அவனையும் தொற்றிக்கொண்டது.

ஆனால் அதை நிரூபணம் செய்ய அவர்களுக்குச் சரியான ஆதாரங்கள் இல்லாமல் போகவே எந்த ஒரு கேள்வியும் கேட்க இயலாமல் அவளுடைய சடலத்தை வீட்டிற்குக் கொண்டுவந்தனர்.

செய்வதறியாது அவர்களுடைய மொத்த குடும்பமும் சோகத்தில் இடிந்துபோயிருந்தது.

ஆனால் இத்துடன் முடிந்தது என மாதினியால் இருக்க முடியவில்லை.

யாமினியின் ஈமச்சடங்குகள் முடிந்ததும் ஜெய்யை வந்து சந்தித்தவள் அவள் இறுதியாக அனுப்பிய தகவலை அவனிடம் காண்பித்து அந்த 'ஹாப்பி பில்'ஸை பற்றி அவனிடம் விளக்கமாகச் சொன்னாள்.

ஆடித்தான் போனான் அவன்.

தென்றலாக அவனது வாழ்வில் நுழைத்தவள் இப்படி புயலாக அவனை வேருடன் சாய்த்துவிட்டுச் சென்றதை அவனால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.

அவளது இந்த கோரமான மரணத்திற்குப் பின் யார் இருந்தாலும் அவர்கள் நியாயமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என எண்ணினான் ஜெய்.

அதற்காக மாதினிக்கு பக்கபலமாகத் துணை நிற்க வேண்டும் என முடிவு செய்தான்.

பின் யாமினியிடமிருந்து கடைசியாக வந்த குறுந்தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை உதவியை அவர்கள் நாட, அவர்களுக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

எனவே இருவரது தொழில் சார்ந்த வேலைகளுக்கு நடுவில் அந்த 'ஹாப்பி பில்ஸ்' போதை மருந்து விற்பனையில் ஈடுபடும் 'நெட்ஒர்க்' தொடர்பான தகவல்களை தனிப்பட்ட முறையில் தேடிக்கொண்டிருந்தனர்.

பலநாள் தேடல்களுக்கு பிறகு 'ஹாப்பி பில்ஸ்' விற்பனையில் ஈடுபடும் நந்தாவை பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைக்க, அவனை அவர்கள் பின்தொடர்வதற்குள்ளாகவே அவன் விபத்தில் இறந்துபோனான்.

அந்த சதாவின் கதையும் அதைப்போலவே ஆனது.

ஆனால் கொஞ்சமும் எண்ணிப்பார்க்க இயலாத ஒரு கோணத்தில், அதற்குப் பின் யாமினிதான் இருக்கிறாள் என்ற உண்மை வெகு பயங்கரமாக இருந்தது ஜெய்க்கு.

அதுவும் இறந்தபின்னும் தன்னை அவளுடைய சொந்த சகோதரிக்குக் கூட விட்டுக்கொடுக்க விரும்பாத யாமினியின் காதல் வியப்பை அளித்தது.

மாதினி அவனை மறுத்ததன் காரணம் அதைவிட வியப்பை அளித்தது அவனுக்கு.

யாமினிமேல் அவள் வைத்திருந்த அன்பின் ஆழம் புரியவும் அவள் பால் அவனது மனம் கொஞ்சம் சரியத்தான் செய்கிறது.

ஆனால் இந்த எண்ணத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல இயலுமா என்ற கேள்வியுடன் நடந்த அனைத்தையும் மனதிற்குள் அசைபோட்டவாறு பலவாறான சிந்தனைகளுடன் வீடு வந்து சேர்ந்திருந்தான் ஜெய்.

***

அவர்கள் வழக்கமாக சந்திக்கும் 'பார்'ரில் எதிரெதிராக உட்கார்ந்திருந்தனர் இன்ஸ்பெக்டர் செல்வமும் வீராவும்.

மாதினியின் வீட்டுக்கு சென்றது, அவள் தன் பெயரில்  கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருப்பது என நடந்த அனைத்தையும் கூறி முடித்தான் வீரா.

தான் அவ்வளவு கூறியும் இவன் இப்படி செய்கிறானே என  நொந்தே போனார் செல்வம்.

மேற்கொண்டு, என்ன செய்யலாம் என்று வீரா அவரிடம் கேட்க, “முதல்ல நீ அவ வீட்டுக்கு போனதே சரியில்ல வீரா.

அவ கொடுத்த கம்ப்ளைண்ட் ஸ்ட்ராங் ஆக நீயே ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துட்ட. இப்ப  நீ அமைதியாக இல்லன்னா வீண் சிக்கல்தான்!" என சற்று கடுமையாக சொன்னவர்,  "அதான் அடுத்த 14ஆம் தேதிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கில்ல; அதுக்குள்ள என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.

அதுவரைக்கும் நீ என்னை போன்லயோ இல்லை நேர்லயோ காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாத.

அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

*** 

குழப்பமும் ஆத்திரமுமாக நேராக அவர்களுடைய 'பஃப்'பிற்கு வந்து சேர்ந்தவன், அங்கே நரேனுக்கென்று இருக்கும் பிரத்தியேக அறை நோக்கிச் செல்ல, "வா வீரா!" என்ற நரேன், "ஒரு முக்கியமான விஷயம்" என்று சொல்லவும், அவன் தனக்காகவே காத்திருப்பதை உணர்ந்தவன், அவனைக் கேள்வியுடன் நோக்க, “செல்வம் போன்பண்ணி இருந்தார்! நிலைமை கொஞ்சம் கை மீறி போயிட்டு இருக்கு போல!" என்றான் தீவிரமாக.

அவன் ஏதும் பதில் பேசும் முன், "நீ கொஞ்ச நாள்  ஏதாவது வெளியூர் இல்ல வெளிநாட்டுக்குப் போய் இருந்துட்டு வாயேன்!

உனக்கும் ஒரு ரெஸ்ட் மாதிரி ஆச்சு” என்று சொல்ல, 

“என்ன சின்னவரே? ஒரு பொண்ணுக்கு பயந்துட்டு என்னை ஓடி ஒளியச் சொல்றீங்களா? என்னால முடியாது. எது வந்தாலும் நான் பார்த்துக்கறேன்” என்றான் வீரா வேகமாக.

அவனது அந்த பேச்சு எரிச்சலை மூட்டியது நரேனுக்கு.

"உனக்கு என்ன நடந்தாலும் அது என்னைப் பாதிக்கும் வீரா! சொல்றத மட்டும் செய்!

இல்லனா வேற எதை பதியும் யோசிக்காம நானே உன்னை போட்டுத்தள்ள வேண்டியதா போயிடும்!" என நரேன் உறுமாலாகச் சொல்ல, அதிர்ந்தான் வீரா.

"இல்ல சின்னவரே!" என அவன் மறுத்து ஏதோ சொல்ல வர, அதை காதில் வாங்காமல், "ப்ச்... நான் சொன்னதைச் செய்!" என கட்டளையாக சொன்னவன், அதுக்கு முன்னால அந்த சிந்துஜாஸ்ரீயை ஒரு தடவ அரேஞ் பண்ணி கொடுத்துடு" என முடித்தான்.

ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது வீராவுக்கு.

ஒரு முறை அந்த சிந்துஜாஸ்ரீ நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவிட்டு, "இவ எனக்கு வேணும்! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அரேஞ்ச் பண்ணு"  என நரேன் அவனிடம் சொல்ல, சதா மூலமாக அவளை தங்கள் வலையில் சிக்க வைத்து, 'ஹாப்பி பில்ஸ்' பழக்கத்திற்கு ஆளாக்கி அவளை தங்கள் விருப்பத்திற்கு ஆட்டி படைத்தனர்.

சதா அவளுடைய அந்த ஒப்பந்தப் பத்திரத்தைக் கொளுத்திய பிறகு, அவளை இவர்கள் விருப்பத்திற்கு இணங்க வைக்க  இயலவில்லை வீராவால்.

அந்த கசப்பு வேறு அவன் மேல் இருந்தது நரேனுக்கு!

அது தெரிந்திருந்தும் வேறு வழி இல்லாமல், "இல்ல சின்னவரே அவங்கள இனிமேல் மிரட்டி பணிய வெக்க முடியாது! எதாவது பிரச்சனை வரும்!" என்று உள்ளே போன குரலில் அவன் சொல்ல, அதில் அவன் முகம் விகாரமாக மாற, "உன்னால முடியலன்னா பிரபு கிட்ட சொல்லு!" என முடிவாக நரேன் சொல்லிவிட அங்கிருந்து வெளியில் வந்த வீரா பிரபுவை அழைத்து, "எங்க இருக்க பிரபு!" என்று கேட்டான்.

"வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்ல தல! நம்ம பஃப்புக்குதான் வந்துட்டு இருக்கேன் என பதிலளித்தான் அவன்.

"சரி வா; நேர்ல பேசிக்கலாம்" என அழைப்பைத் துண்டித்தான் வீரா.

நீண்ட நேரம் அவனுக்காக காத்திருந்தும் அவன் வராமல் போக பொறுமை இழந்தவன் அவனது கைப்பேசிக்கு அழைக்க, அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை!

காரணம் அந்த அழைப்பை ஏற்க பிரபு உயிருடன் இல்லை!


Page 1 / 2
Share: