Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

ஆழ்கடலடி என் இதயம் !!!  

Page 1 / 2
  RSS

Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
05/09/2020 5:06 pm  

அனைவருக்கும் வணக்கம். நான் லாவண்யா தயூ. எனது முதல் கதையான " வசீகரனின் யாழ் நீ "க்குப் பிறகு, எனது அடுத்த கதையான "ஆழ்கடலடி என் இதயம்" உடன் வந்திருக்கிறேன். இந்த கதையையும் படித்து உங்கள்  மேலானக் கருத்துக்களைத் தாருங்கள். நன்றி!!!

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
05/09/2020 5:30 pm  

இதயம் - 1

" பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணுமாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதலின்பத்தைக் காத்திடுவோமடா" - மகாகவி பாரதியார்

 

ஒளி வெள்ளத்தை தன் செங்கதிர்களால் உலக உயிர்களுக்குப் பாய்ச்சியப்படி சூரியன் உதிக்கத்தொடங்கிய அந்த காலை வேளையில் தன் அன்பு கணவனை எழுப்பிக்கொண்டு இருந்தாள் அருந்ததி.

"வருண், எழுந்திருங்க"

அவளின் ஒரு அழைப்புக்கே கண்களைத் திறந்த வருண், குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் எதிரில் நின்ற மனைவியைப் பார்த்து, "என்ன அரு? இன்னிக்கு சண்டே தானடா? ஏன் இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட? நைட்டெல்லாம் பாப்பா உன்னை தூங்கவேவிடல. இப்போவாவது கொஞ்சம் தூங்கக் கூடாதா?" என்றான் அக்கறையும் கண்டிப்புமாக.

சிறு சிரிப்புடன் கணவனைப் பார்த்தவள், "இப்போ இன்னொரு பாப்பா என்னை தூங்காவிடாமப் பண்ணிடுச்சி. அவளப் போய் பார்த்துட்டு வந்தா தான் எனக்கு தூக்கமே வரும்" என்றாள்.

"யாரு அந்த பாப்பா?"

"வேற யாரு? எனக்குனு ஒரு பிரெண்ட் இருக்காளே, அவ தான். நேத்தில இருந்து அவ ஞாபகமாவே இருக்கு, போய் பார்த்துட்டு வந்துடுறேன், நீங்க பாப்பாவைப் பார்த்துக்கோங்க" என்று சொல்லி விட்டு கிளம்பத் தொடங்கினாள்.

அவள் நினைவு முழுக்க தன் உயிர் தோழியின் மீது இருந்தது. அருந்ததியின் ஒரே உண்மையான தோழி 'அனுபமா'.

'எதுக்குடி பயப்படுற? உனக்கு நிறைய டேலண்ட் இருக்கு. பயந்து பயந்து எல்லாத்தையும் உள்ளே போட்டு புதைச்சிடாத!'

'லைஃப்ல நாம பார்க்க வேண்டியது நெறைய இருக்கு, தைரியமா இரு'
என தனக்கு அறிவுரைகள் சொன்ன அனுபமாவின் நினைவு வந்தது.

அதே அனுபமா தான் இப்போது தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறாளாம், அவளைக் கேள்விக்கேட்கும் அதிகாரம் கொண்ட பெற்றோரை பயமுறுத்தி வைத்திருக்கிறாளாம். அன்புத்தோழியான அருந்ததியின் அழைப்பைக்கூட ஏற்க மறுக்கிறாள். அவளை நேரிலேயேப் பார்த்துக் கேள்விக்கேட்டுவிட கிளம்பிவிட்டாள் அருந்ததி.

எல்லோர் வாழ்விலும் கல்லூரிக் கால நட்பு ஏதோ வகையில் நெருக்கமாக இருக்கும். பள்ளிவாழ்வு முடிந்து குழந்தையும் அல்லாத, வளர்ந்த பருவமும் அல்லாத இரண்டும் கெட்டான் வயதில் யாரோவாக அறிமுகமாகி, ஒன்றாகவே வளரும் உறவு அது. அந்த நட்பு மட்டும் சரியான நட்பாக அமைந்துவிட்டால் அதை விட சிறந்தது எதுவும் இல்லை.

அருந்ததி வாழ்வில் அவள் பெற்ற ஒரே உண்மையான தோழி அனுபமா. அருந்ததி கோடீஸ்வரக் குடும்பத்தில் அன்பான பெற்றோர், அண்ணனுடன் பிறந்தவள். அதிக பாதுகாப்புடன் வளர்ந்ததாலோ என்னவோ எல்லாவற்றுக்கும் பயப்படுவாள். அவளுக்கு பள்ளிக்காலம் முதல் பல தோழிகள் இருந்தனர். யாரும் அருந்ததிக்காக அவளுடன் பழகவில்லை. அவள் வசதியான வீட்டு பெண் என்பதால், அவள் தினம் ஒரு காரில் பள்ளிக்கு வருவதால், பள்ளியில் அவள் அண்ணனுக்கு இருந்த ரசிகையர் கூட்டத்தால் நண்பர்கள் போல் பழகினர். ஆனால் உண்மையான நட்புடன் இருக்கவில்லை. அவளது பயந்த சுபாவத்தை மற்றவர்களிடம் சொல்லி சிரித்தனர்.

பள்ளி முடிந்து கல்லூரியில் சேர வேண்டும் என்றதும் அருந்ததி பயந்தாள். அதனால் தன் அண்ணன் படிக்கும் கல்லூரியிலேயே சேர்ந்தாள்.

முதல் நாள் கல்லூரியில் அவள் தயக்கத்துடன் விழித்தபடி இருந்தபோது, அனைவரிடமும் கலகலப்பாக பேசிய அனுபமா அவள் கவனத்தைக் கவர்ந்தாள்.தொடர்ந்த நாட்களில் அவளது தைரியமும் கல்வியில் அவளுக்கு இருந்த நாட்டமும் அருந்ததிக்குப் பிடித்துவிட்டது.

அனுபமா நடுத்தரக் குடும்ப பெண், எளிமையான சுடிதாரிலும் அழகாகத் தெரிவாள். சிரித்த முகம் அவளுக்கு கூடுதல் அழகு.

பொய்யில்லாத அவளின் இயல்பான குணம், தன்னை மற்றவருடன் ஒப்பிடாமல் தன்னிடம் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கும் தன்மை ஆகியவற்றால் அவளின் ரசிகையாகிப் போனாள் அருந்ததி.

ஒருமுறை ஆங்கில வகுப்பில் அனைவரும் கொடுக்கப்பட்டத் தலைப்பில் இரண்டு நிமிடம் வகுப்பில் எல்லோர் முன்பும் பேச வேண்டும் என விரிவுரையாளர் சொல்லி இருந்தார்.

அப்போது கல்லூரித் தொடங்கி ஒருமாதம் தான் ஆகி இருந்தது.

அருந்ததி எப்போதும் தனியாகவே இருப்பாள். யாருடனும் அதிகம் பேசுவது இல்லை. இயல்பான பயந்த குணமும் முன்பு இருந்த தோழிகளால் ஏற்பட்டு இருந்த காயங்களும் அவளை யாருடனும் பழகவிடவில்லை. திடீரென எல்லோர் முன்பும் பேசவேண்டும் என்றதும் படபடப்புடன் இருந்தாள்.

அனுபமா தமிழ்வழியில் பள்ளியில் படித்தவள். அவளுக்கு ஆங்கிலத்தில் பேசுவது கடினமாக இருந்தபோதும் தைரியமாகப் பேசினாள்.

"என் இங்கிலீஷ் ஸ்கில்ல இம்ப்ரூவ் பண்ண நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் மேம்" என்று சொல்லி அந்த விரிவுரையாளரின் மனதில் இடம் பிடித்தாள்.

அருந்ததியின் முறை வந்தது. "குட் மார்னிங், ஐ அம் அர் அர் அருந்ததி. மை... டாபிக் இஸ்..." என்று தொடங்கும் போதே குரல் நடுங்கி கண்கலங்கிவிட்டாள்.

விரிவுரையாளர் அவளை அடுத்த வகுப்பில் பேசுமாறு சொல்லிவிட, அழுதபடியே ஓடிவந்து தன் இடத்தில் அமர்ந்துவிட்டாள். அந்த வகுப்பு முடிந்ததும் இடைவேளை வந்தது. கேண்டீன் சென்று புத்துணர்ச்சிக்காக டீ வாங்கி கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தவளின் அருகில் வந்து அமர்ந்தாள் அனுபமா.

நிமிர்ந்துப் பார்த்தவளைப் பார்த்து சிரித்த அனுபமா, "நா அனுபமா. உன் கிளாஸ் தான். ரோல் நம்பர் ஒன். என்னை பார்த்து இருக்கியா?" என்றாள்.

 

"ம். உங்களத் தெரியாம யாராவது நம்ம கிளாஸ்ல இருப்பாங்களா?" என்றாள் அருந்ததி.

 

வியப்பாக இவளைப் பார்த்தபடி,"உனக்கு இவ்ளோ பேச தெரியுமா அர் அர் அருந்ததி?" என்றாள்.

 

பட்டென்று முகம் சோர்ந்துவிட்டவளைப் பார்த்து மென்மையாக சிரித்தவள்,"காலேஜ் முடிஞ்சி வெளியேப் போனதும் எதிர்கால வாழ்க்கையில நாம பல பிரச்சனைகளப் பார்க்க வேண்டிவரும். இவ்ளோ சின்ன விஷயத்துக்கே பயந்துப்போய்ட்டா எப்படி? நெக்ஸ்ட் கிளாஸ்ல உனக்கு தெரிஞ்சத தைரியமா பேசு, பயப்படக்கூடாது. சரியா?" என்று ஏதோ குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அன்று முழுவதும் சிந்தனையுடன் இருந்த அருந்ததி, அடுத்த நாள் வகுப்பில் மனதில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அனுபமாவைப் பார்த்தபடியேப் பேசினாள். பேசி முடித்ததும் அனுபமாவின் அருகில் வந்து அமர்ந்துவிட்டாள்.

விரிவுரையாளர் சென்றதும், "ஹே சூப்பர்... அழகா பேசிட்ட" என்று ஆச்சர்யத்துடன் சொன்னவளின் கரத்தைப் பற்றி," தேங்க்ஸ். நீ சொன்னதால தான் எனக்கு தைரியம் வந்தது" என்றாள்.

"ஹோ... நீ நல்லா இங்கிலிஷ் பேசற. எந்த ஸ்கூல்ல படிச்ச?" என்றாள்.

அருந்ததி பள்ளியின் பெயரை சொன்னதும்,"அவ்ளோ பெரிய ஸ்கூல்ல படிச்சிருக்க, நல்லா பேசற.அப்புறம் ஏன் பயப்பட்ட? நா கூட உனக்கு என்ன பேசறதுனு தெரியல போலனு நெனச்சேன். உனக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் போல" என்று சொல்லிவிட்டு அவளின் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்தப் பெண்ணிடம் திரும்பிப் பேசத்தொடங்கினாள். அருந்ததி அவள் இடத்திற்கு சென்றுவிட்டாள்.

அவளுக்கு அனுவிடம் பேச வேண்டும் போல இருந்தது. ஒருவாரம் தயங்கியவள், ஒருநாள் கல்லூரி வளாகத்தில் மரத்தடியில் அமர்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்த அனுபமாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.

திரும்பி பார்த்தவளிடம், "நா அருந்ததி. ரோல் நம்பர் டூ. என்னை உன் பிரெண்டா அக்சப்ட் பண்ணிக்கிரியா?" என்றாள் தன் கையை அவள்புறம் நீட்டியபடி.

ஆச்சர்யமாகப் பார்த்த அனுபமா, பின் லேசான சிரிப்புடன் அருந்ததியின் கரத்தைப் பற்றினாள்.

அன்று பற்றிய கரத்தினை இன்றுவரை அவர்கள் விடவேயில்லை. அவர்களின் நட்பு உயிர்த்தோழமையாக இன்றும் தொடர்கிறது.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuoteLavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
08/09/2020 7:28 pm  

இதயம் - 2

"உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்;
உயிருனும் இந்தப் பெண்மை இனிதடா!" - மகாகவி பாரதியார்

"மேடம்..." என்ற டிரைவரின் அழைப்பில் தன் யோசனையில் இருந்து வெளிவந்தாள் அருந்ததி. அவளின் கார் அனுபமாவின் வீட்டு வாசலில் நின்றிருந்தது. இருபக்கமும் வீடுகள் கொண்ட தெருவில் இருந்தது அந்த வீடு. அவர்களின் கல்லூரிக்காலத்தில் இரு அறைகள் கொண்டதாக இருந்த சிறிய வீட்டை, தான் வேலைக்கு சென்றதும் வளர்த்திக்கட்டி நான்கு அறைகள் கொண்டதாக மாற்றி இருக்கிறாள் அனு. வீட்டின் பின்புறம் இருந்த இடத்தில் தோட்டம் அமைத்து, முன்புறம் சிறியதாக ஒரு துணிக்கடையை அவள் அப்பாவுக்கு வைத்துக்கொடுத்து இருக்கிறாள். காரில் இருந்து இறங்கியவளைக் கடையின் கண்ணாடி தடுப்புக்கு மறுபக்கம் இருந்து பார்த்த அனுபமாவின் தந்தை ராஜசேகரன் வெளியில் வந்து வரவேற்றார்.

"வாம்மா, அம்மா உனக்காக தான் காலையிலிருந்து காத்துட்டு இருக்கா. உள்ளே போம்மா" என்றார். அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் உற்சாகம் துளியும் இல்லை. 'எல்லாம் இந்த அனுவால தான்' மனதுக்குள் தோழியைக் கண்டித்தபடி கடையை ஒட்டி இருந்த கேட்டைத் திறந்தபடி உள்ளே நுழைந்தாள்.

வாசலில் அரிசியைப் புடைத்தபடி அமர்ந்திருந்தார் அனுவின் தாய் தேவகி. அருந்ததியைக் கண்டதும் வேகமாக எழுந்து வந்தவர், அவளின் கையைப் பிடித்துக்கொண்டார்.

"என்ன ஆச்சும்மா? என்ன வேணுமாம் அவளுக்கு?" என்றவளிடம் கண்ணீரோடு பேசினார்.

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணத்துக்கு மாப்பிள்ளைப் பார்க்கிறேன்னு சொன்னதுக்கு வீட்டைக் கட்டுறேன், உங்க ரெண்டு பேருக்கும் வருமானத்துக்கு வழிப்பண்றேன், அப்புறம் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னா. இப்போ எல்லாத்தயும் பண்ணிட்டா. சரி இப்போவாவது கல்யாணம் பண்ணலாம்னு போனவாரம் ஒரு பையன் போட்டோவைக் காட்டினா, அதை பார்க்கக் கூட மாட்றா, கல்யாணமே வேணாம்னு சொல்றா, நேத்து நானும் அவரும் கோவமா பேசினதும் 'என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லித் தொல்லைப் பண்ணினா உங்களை விட்டுட்டுப் போயிடுவேன்'னு சொல்லிட்டுப் போய்ட்டா. நைட் எங்க கிட்ட பேசவும் இல்ல, சாப்பிடவும் இல்ல.

ஒரு 9 மணிக்கு மொட்டை மாடிக்குத் தனியாப் போனா. என்னனு நாங்க பின்னாடியே போய் மேல் படிக்கட்டுல அவ கண்ணுக்குப் படாம நின்னோம் . திடீர்னு மாடி கைப்பிடி சுவர்ல ஏறி, ரோட்டைப் பார்த்துத் திரும்பிட்டா. குதிக்கறதுக்குள்ள நாங்க ஓடிப் போய் பிடிச்சிட்டோம். கீழ இழுத்துட்டு வந்து இனி கல்யாணம் பத்தி பேச மாட்டோம்னு சத்தியம் பண்ணினதுக்கு அப்புறம் தான் அவ முகமே தெளிஞ்சிது. நாங்க கவனிக்காம இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? பெத்த மனசுப் பதறிப்போச்சும்மா. அவ உன்கிட்ட தான் எல்லாத்தையும் பேசுவா. அதான் உனக்கு காலையிலேயே போன் போட்டேன். நீ கொஞ்சம் பேசும்மா " என்றார் முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடி.

அருந்ததி சிந்தனையுடன் வீட்டிற்குள் செல்ல, "அனுமா! யார் வந்து இருக்காங்கன்னு பாரு" என குரல் கொடுத்தார் தேவகி.

அமைதியான முகத்துடன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனுபமா. தன் தோழியை நீண்ட நாட்களுக்குப் பின் கண்டதும் ஓடிவந்து அணைத்துக் கொண்டவளை முறைத்தாள் அருந்ததி.

கல்லூரியின் தொடக்க நாட்களில் இருந்த அனுபமா இல்லை இவள். அவளது மாறாத சிரிப்பு இப்போது அமைதி சிரிப்பாக மாறி இருக்கிறது. அவளது கலகல குணம், சாந்தமே உருவாக மாறிவிட்டது.

"என்னடி தனியா வந்து இருக்க? என் மாப்பிள்ளையைக் கூட்டிட்டு வரலையா?" என்றவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்துத் தாழிட்டாள் அருந்ததி.

"எப்படிடி எதுமே நடக்காத மாதிரி நடிக்கிற?" என்றாள் அனுவிடம்.

ஒரு நொடி அமைதியான அனுபமா, "அம்மா சொன்னாங்களா?" என்றாள்.

"ஆமா,நீதான் எதுவும் சொல்ல மாட்ட, அம்மாவும் அப்படியே இருப்பாங்களா? சொல்லுடி ஏன் இப்படி பண்ண? எல்லாருக்கும் அட்வைஸ் குடுக்குற நீ வாழ்க்கைய முடிச்சிக்கிற முடிவ ஏன் எடுத்த?" கூர்ந்த பார்வையுடன் கேட்டாள் அரு.

சிறிதுநேரம் அனுபமா பதில் பேசவில்லை. பின்,"அந்த மாதிரி முட்டாளத்தனத்த நா எப்பவும் பண்ண மாட்டேன்டி" என்றாள் திடமான குரலில்.

குழப்பத்துடன்,"அப்போ அம்மா சொன்னாங்களே..." தயக்கமாகக் கேட்டாள் அரு.

லேசாக சிரித்துவிட்டு, "என்ன சொன்னாங்க?" என்றாள்.

"உன்ன மேரேஜ் பண்ணிக்க சொன்னதுக்கு நீ அவங்கள விட்டுட்டு போக போறதா சொல்லிட்டு, மாடியில இருந்து குதிக்க பார்த்தனு சொன்னாங்க" என்றாள் அரு.

"என்னய மேரேஜ் பண்ணிக்க சொன்னா அவங்கள விட்டுட்டு போய்டுவேன்னு சொன்னேன். அதுக்கு உயிரை விடப்போறேன்னு மீனிங் இல்ல, லேடீஸ் ஹாஸ்டல்க்கு போய்டுவேன்னு மீனிங். அதுவும் அவங்கள மிரட்ட தான் சொன்னேன். மனசு சரி இல்லனு மொட்டமாடிக்குப் போய் கைப்பிடி சுவர்ல உக்கார்ந்தேன். அதுவும் சன்ஷேடுக்கு நேரா தான் இருந்தேன். விழணும்னு முடிவுப்பண்ணா எல்லாரும் முழிச்சிருக்கும் போது அவங்களுக்கு தெரிஞ்சா போவேன்? அம்மா நா தப்பான முடிவு எடுத்துடப் போறேன்னு பயந்து என் முடிவுக்கு ஒத்துக்கிட்டாங்க. நானும் அந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கிட்டேன். அவ்ளோ தான்" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு கண்ணடித்தாள்.

ஆசுவாசமாக சிரித்த அரு ,"அழுத்தக்காரிடி நீ. நா பயந்தேப் போய்ட்டேன்டி. எனக்கே இப்படி இருந்தா அவங்களுக்கு எப்படி இருக்கும்? ஏன்டி மேரேஜ் வேணாம்னு சொல்ற?" என்றாள் அழுத்தமான குரலில்.

அனுவின் முகத்தில் தீவிர சிந்தனை வந்தது. பின்,"எனக்கு என் பேரண்ட்ஸ் போதும்டி. என்னால யாரையும் மேரேஜ் பண்ணிக்க முடியாது " என்றாள் அழுத்தமாக.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
10/09/2020 7:28 pm  

இதயம் - 3

"அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!" - மகாகவி பாரதியார்

கூர்விழியோடு தன்னைத் துளைத்தத் தோழியை நோக்கி ஒரு சிறு சிரிப்பை அனுப்பினாள் அனு.

அவளின் சிரிப்பைப் புறந்தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தவளை நோக்கி அவளுக்கான காஃபியோடு வந்தார் தேவகி.

அருந்ததியின் பின்னால் அறையை விட்டு வெளிவந்த அனுபமா தன் தாயை முறைத்தாள்.

"எல்லாத்தையும் அப்படியே இவ கிட்ட சொல்லிடனுமா? உங்களால முடியலனு இவளைத் தூண்டி விடுறீங்களா?" என்றாள்.

"எதுக்குடி அம்மாவைத் திட்டுற? அவங்க என்கிட்ட சொன்னதுல என்ன தப்பு? உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அவங்க நெனக்கிறதுல எந்த தப்பும் இல்ல. நீ மேரேஜ் பண்ணியே ஆகணும்" என்றாள் அரு.

"நல்லா சொல்லும்மா இவளுக்கு என்ன பதினாறு வயசா ஆகுது? எங்கள பத்தி யோசிக்கவே மாட்டேங்குறா" என புலம்பினாள் அவள் தாய்.

"நீங்க வொரி பண்ணாதீங்கம்மா! இவ கண்டிப்பா மேரேஜ் பண்ணிப்பா. நா இவளுக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்" என்றாள் அரு.

பரவசத்துடன் அவளை தேவகி பார்க்க, முறைப்புடன் பார்த்தாள் அனுபமா.

"டிபன் சாப்பிடலாம் வாம்மா" என்று அழைத்த தேவகியிடம் மறுத்துவிட்டு,"அனு கல்யாணத்தை முடிவு பண்ணிட்டு தான் இந்த வீட்டுல நா சாப்பிடுவேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

'அப்போ இனி இந்த வீட்டுல நீ சாப்பிடவே போறது இல்ல' என நினைத்துக்கொண்டு நக்கல் சிரிப்புடன் தனது அறைக்குள் சென்றாள் அனு.

அனுவும் அருவும் இளங்கலை கணினிஅறிவியல் படித்தனர்.  இளங்கலை முடித்ததும் அருந்ததி அவளுக்கு பிடித்த ஆடை வடிவமைப்புக் கலையைப் பயின்றாள். இரண்டு ஆண்டுக்கு முன் தான் அவளுக்கும் அவளின் மாமன்மகன் வருணுக்கும் திருமணம் முடித்தார்கள். இப்போது அவர்களுக்கு ஆறுமாத ஆண் குழந்தை உள்ளது. அருந்ததி தனது கணவனின் ஆடைகள் ஏற்றுமதி கம்பெனியில் சேர்ந்து தொழிலைக் கற்றுக்கொண்டு இருக்கிறாள்.

அனுபமா தனது முயற்சியாலும் பயிற்சியாலும் தன் நடுத்தர குடும்ப சூழலிலும் தொடர்ந்து படித்து தனது முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிப்புரிகிறாள்.

தனது சுயஉழைப்பில் தனது குடும்பநிலையை ஓரளவு உயர்த்தியும் இருக்கிறாள்.

அருந்ததி சபதம் போட்டுவிட்டுப் போன பிறகு அனுபமா வீடு அமைதியாகவே இருந்தது. ஒரு வாரத்திற்கு பிறகு மிகுந்தக் களைப்புடன் ஸ்கூட்டியில் தன் வீட்டு கேட்டுக்குள் நுழைந்த அனுபமாவை வரவேற்றது அருந்ததியின் உற்சாகக் குரல்.

அனுவின் முகத்தில் புன்னகை வந்தது. 'இவளாவது இந்த வீட்டுப்பக்கம் வராம இருக்குறதாவது! இந்நேரம் காஃபி, டிபன் எல்லாம் முடிஞ்சிருக்கும். இன்னிக்கு நல்லா கிண்டல் பண்ணனும்' என எண்ணியபடி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைய முனைந்தவள் கவனத்தைக் கவர்ந்தது அங்கிருந்த விலையுயர்ந்த செருப்பு.

அருந்ததியுடன் வேறு யாரோ ஒரு பெண்மணியும் வந்திருக்கிறாள் என்ற எச்சரிக்கை உணர்வோடு உள்ளே நுழைந்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி.

அங்கே சோபாவில் அமர்ந்து தேவகியுடன் பேசிக்கொண்டு இருந்தார் அகல்யா, அருந்ததியின் தாய்.

அவரைக் கண்டதும், "அம்மா" என்று அழைத்தபடி ஓடிச்சென்று அருகில் நின்றாள் அனு.

அன்பான புன்னகையுடன் அவளை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டு, " எப்படி இருக்கடா?"என்றார் அகல்யா.

"நல்லா இருக்கேன்மா. எப்போ வந்திங்க? எப்படி இருக்கீங்க"

"நல்லா இருக்கேன்டா. இப்போ தான் வந்தோம். நீ டயர்டா இருப்ப, போய் ரெப்பிரஷ் ஆகிட்டு வா சாப்பிட்டுட்டுப் பேசலாம்"என்றார்.

"ஏன்டி? உன் பிரெண்டு நா குத்துக்கல்லு மாதிரி உக்கார்ந்துட்டு இருக்கேன். என்னைக் கண்டுக்காம நீங்க ரெண்டுப் பேரும் கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க?" என சண்டைக்கு வந்தாள் அருந்ததி.

"உன்னை கவனிக்க தான் ஆள் இருக்காங்களே, அப்புறம் நா எதுக்கு?" என்று தன் அம்மாவைக் கைக்காட்டிக் கேட்டாள் அனு.

அவளைச் செல்லமாக முறைத்தபடி, "ஓவரா பேசாதடி. போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு" என்றாள் அரு.

'என்ன சர்ப்ரைஸ்?' என்ற யோசனையுடன் தன் அறையில் இருந்த அட்டாச்டு பாத்ரூமில் குளித்து உடைமாற்றி விட்டு அறைக்குள் நுழைந்த போது, கட்டிலில் அமர்ந்து போன் நோண்டிக் கொண்டிருந்தாள் அருந்ததி.

சிரித்தபடி அவளின் அருகில் அமர்ந்த அனுபமா,"என்னடி ? நீ சபதம் போட்டுட்டு போனத பார்த்து இனி இந்த பக்கமே வரமாட்டனு நெனச்சேன்" என்றாள்.

"நா இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லலயே! உன் கல்யாணத்தை முடிவுப்பண்ணிட்டு தான் இங்க சாப்பிடுவேன்னு சொன்னேன்."

"எல்லாம் ஒன்னு தான். நீ வந்தா அம்மா சாப்பிடாம அனுப்ப மாட்டாங்க. நீ இன்னிக்கு சாப்பிட்டுட்டு தான் போயாகனும். அன்னிக்கே வெறும் காபியோட உன்ன அனுப்பினத நெனச்சு அம்மா பீல் பண்ணினாங்க. உன் சபதத்திற்கு ஆயுசு கம்மிப் போல" என்றாள் அனு நக்கல் சிரிப்புடன்.

"இன்னிக்கு நா கண்டிப்பா சாப்பிட்டுட்டு தான் போவேன்டி. நா தான் என் சபதத்தை நிறைவேத்திட்டேனே!" என்றாள் அருந்ததி கர்வமான பார்வையோடு.

அதிர்ச்சியுடன்,"என்னடி ஒளரிட்டு இருக்க?" என்றவளைப் பார்த்து கண்டிப்பான குரலில், "உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். அதை பற்றி பேச தான் அம்மா வந்து இருக்காங்க" என்றாள் அரு.

கோபத்தில் முகம் சிவக்க,"நீ எப்போ மேட்ரிமோனியல் ஸ்டார்ட் பண்ண? எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி நா சொன்னேனா? நீ சொல்றத நா கேட்க மாட்டேன்னு, அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கியா? யார் சொன்னாலும் இந்த விஷயத்துல நா மாறமாட்டேன்" என்றாள்.

"அனு செல்லம், நா சொல்றத கேளுடி. இந்த பையன உனக்கு கண்டிப்பா பிடிக்கும்டி. அவன் எனக்கு ரிலேடிவ் தான். போட்டோ காட்டுறேன், இந்தா பாரு"என்றபடி தன் மொபைலில் இருந்த புகைப்படத்தைத் தன்புறம் நீட்டியவளின் கையைத் தட்டிவிட்டாள் அனு.

"எந்த ராஜகுமாரனா இருந்தாலும் எனக்கு பிடிக்காது. நா போய் அம்மாகிட்ட சொல்றேன்" என்றபடி கதவைத் திறந்தவளின் காதில் அகல்யாவின் குரல் கேட்டது.

"உங்களுக்கு எங்க குடும்பத்தைப் பத்தி நல்லா தெரியும். எனக்கும் அனுவைப் பத்தி நல்லா தெரியும். அவளோட வாழ்க்கைக்கு நா பொறுப்பு. நம்பி கல்யாணம் பண்ணி குடுங்க. நா பார்த்துக்குறேன்"

"அனு எப்பவும் எங்க குடும்பத்துல ஒருத்தி தான். இப்போ உரிமையான உறவா ஆகப் போறா அவ்ளோ தான். என் பையன் அர்ஜுனைப் பத்தியும் உங்களுக்குத் தெரியும். அவன் அப்பா பிஸினஸையும், அவன் சொந்த பிஸினஸையும் சேர்த்துப் பார்த்துக்குறான். எந்த கெட்டப் பழக்கமும் இல்ல. வேணும்னா விசாரிச்சிப் பாருங்க. அப்புறம் கூட கல்யாணம் பத்தி பேசலாம்" என்றார்.

அனுவின் உலகம் ஒரு நொடி அப்படியே நின்றது.

'அர்ஜூன் '

கண்கள் விரிய அதிர்ந்து நின்றவளின் தோளைத் தட்டினாள் அருந்ததி.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
13/09/2020 7:26 pm  

இதயம் - 4

"அன்பு வாழ்கென்றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையினாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்" - மகாகவி பாரதியார்

 

"என்னடி ஷாக் ஆகி நின்னுட்ட?" என்றாள் அருந்ததி அனுவைக் கூர்ந்துப் பார்த்தபடி.

தன் உதட்டைக் கடித்தபடி,"மாப்பிள்....ளை யா....ரு?" என்றாள் தடுமாற்றத்துடன்.

"என் அண்ணன் அர்ஜுன், சாரி சாரி உன் காதலன் அர்ஜுஜுன்ன்ன்" என்று அழுத்தமாகக் கூறினாள் அரு.

அனுவின் கண்கள் அதிர்வை அப்பட்டமாகக் காட்டியது. "உனக்கு எப்படி தெரியும்?" என்றாள் குரல் நடுங்க.

"நீ என்கிட்ட மறைக்க நினைச்சா, எனக்கு தெரியாதுனு நெனைச்சியா? எனக்கு எல்லாம் தெரியும், இப்போ இல்ல, நம்ம காலேஜ் படிக்கும்போதே" என்றாள் அமைதியானக் குரலில்.

நடுங்கிய கால்களை மறைக்க, பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அமர்ந்தாள் அனு. அவளால் இத்தனை அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அனுவின் கரங்களைப் பற்றி அழுத்தினாள் அருந்ததி.

"நா உன்கிட்ட மறைக்கணும்னு நெனைக்கலடி. என் நெலமை அப்படி. அதை உன்னால புரிஞ்சிக்க முடியாது" என்றாள் அனு.

"ஹே லூசு! பழையக் கதையை விடுடி. இப்போ உங்க மேரேஜ்க்கு ஓகே சொல்லு"என்றாள் அரு.

ஒரு நிமிட அமைதிக்குப் பின்,"அவர்கிட்ட பேசிட்டிங்களா?" என்றாள். அவளின் இதயம் அறிவியல் உண்மைக்கு மாற்றாக அதிகமாகத் துடிப்பதைப் போல உணர்ந்தாள்.

"எல்லாம் பேசியாச்சு. அவனுக்கு ஓகே, நீ உன் முடிவை சொல்லு" என்றாள் ஆர்வமாக.

அனுவால் அருந்ததி சொன்னதை நம்ப முடியவில்லை. 'எப்படி இது சாத்தியம்?' என சிந்தனையுடன் இருந்தவளைப் பற்றி உலுக்கினாள் அரு.

"போதும் உன் 'அவர்' கூட டூயட் பாடப் போய்ட்டியா? நா போய் அம்மாகிட்ட உனக்கு ஓகேனு சொல்லிட்டு டிபன் சாப்பிடுறேன்" என்றபடி அங்கிருந்து நகரப்போனாள்.

அவளின் கையைப் பிடித்து இழுத்த அனு," நா எப்போடி ஓகே சொன்னேன்" என்றாள்.

"அடியே இவளே!!! அன்னிக்கு 'என்னால யாரையும் மேரேஜ் பண்ணிக்க முடியாது'னு சொன்னியே, அதுக்கு 'அர்ஜுனைத் தவிர வேற யாரையும் மேரேஜ் பண்ணிக்க முடியாது'னு அர்த்தம்னு எனக்கு தெரியும்டி. நீ சீன் போடாம கல்யாணத்துக்கு ரெடியாகு. அம்மாகிட்ட நா பேசிக்கிறேன். அண்ட் உன் லவ் மேட்டர் என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அவங்களப் பொறுத்த வரைக்கும் இது பக்கா அரேஞ்டு மேரேஜ் தான். சோ டோன்ட் வொரி" என்றுவிட்டு கண்ணடித்துவிட்டு சென்றாள் அருந்ததி.

அருந்ததி போவதை பார்த்துக்கொண்டே இருந்தாள் அனு. 'இவ பிரென்ட்ஷிப்க்கு நா எந்த விதத்தில தகுதியானவ?' என தனக்குள் எண்ணிக் கொண்டாள். அருந்ததி அனைவரிடமும் அனுவுக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டாள். நம்ப முடியாமல் பார்த்த அனுவின் பெற்றோருக்கு,"அவளுக்கு மேரேஜ் ஆனா உங்களை விட்டு பிரியனுமேனு பயம் அப்பா. அதான் மேரேஜ் வேணாம்னு சொல்லி இருக்கா. எங்க வீடு பத்து நிமிஷம் டிராவல் தான? அதான் ஒத்துகிட்டா. அதோட என்னையும் விட்டு பிரியாம எனக்கு அண்ணியா வரலாம்னு பேசி ஓகே வாங்கிட்டேன். எங்க பிரென்ஷிப் அப்படி அம்மா" என்று இருவரிடமும் சொன்னாள்.

அனுவின் பெற்றோர் மகிழ்த்துவிட்டனர். அகல்யா நிறைவான மனதுடன் அனுபமாவைக் கட்டி அணைத்துவிட்டு முறைப்படி பெண்பார்க்க வருவதாக சொல்லி சென்றார்.

'இதெல்லாம் உண்மை தானா?' என குழம்பிய அனு தன் கன்னத்தை வேகமாக தட்டிக்கொண்டாள், வலித்தது. ஓடி சென்று கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் வெகுநாட்களுக்கு பிறகு உண்மையான மகிழ்வுடன் சிரித்தாள்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
15/09/2020 5:30 pm  

இதயம் - 5

"மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூசலாடுவாய்
அடுத்ததை நோக்கியடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவிடென்றதை விடாதுபோய் விழுவாய்" - மகாகவி பாரதியார்

 

'அர்ஜுன் எப்படி ஒத்துக்கிட்டார்?' என்ற குழப்பமும் அவளை வாட்டியது.

'இத்தனை வருஷத்துல அவர் மனசுல மாறுதல் வந்து இருக்கும்.எது எப்படியோ அவர் ஒத்துக்கிட்டார். அதுவே போதும்' என தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டாள்.

தனது எட்டு ஆண்டுக்கால ஆசை நிறைவேறிவிட்டதாக எண்ணியவள், அவளின் நெருக்கமான தோழியான தலையணையை அணைத்துக் கொண்டாள். "ஹே பொம்மி! உனக்கு ஒண்ணு தெரியுமா? என் அர்ஜுன், திரும்பவும் 'என் அர்ஜுனா' ஆகப் போறார்" என்றாள் தலையணையை இறுக்கியபடியே. சொல்லும் போதே அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மறுநாள் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியில் நனைய கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவளை,'மழை நின்ற பின்மும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்...' என பாடி அழைத்தது அவளின் போன்.

போனை எடுத்துப் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன. போன் திரையில் 'அஜ்ஜு' என்ற பெயரைக் கண்டவளின் உடல்சிலிர்க்க அடுத்தநொடி அட்டெண்ட் செய்தாள்.

மெதுவான குரலில் "ஹலோ" என்றாள்.

மறுமுனையில்,"ஹலோ, அனுபமா? " என்ற அழுத்தமான குரல் ஒலித்தது.

உயிர்வரை அதிர்வலைகளை உருவாக்கிய குரலைக் கண்களை இறுக்கமாக மூடி கிரகித்தாள் அனு.

பொறுமையில்லாமல் மீண்டும் "ஹலோ அனுபமா. நா அர்ஜுன்" என்றான் அவன்.

"ஹ ஹலோ... இப்போ கேக்குதா?" என்றாள் தயக்கத்துடன்.

"ஹ்ம்ம் எஸ். நா உன்கிட்ட கொஞ்சம் இம்பார்டட்னட் மேட்டர் பேசணும். பிரீயா இருக்கியா?" என்றான் அழுத்தமான குரலில்.

அவனே தன்னிடம் பேச முயற்சிக்கும்போது மறுக்க அவள் என்ன முட்டாளா?

"ம்ம்... சொல்லுங்க" என்றாள்.

"நம்ம வீட்டுல நமக்கு மேரேஜ் பண்ண பிளான் பண்ணிட்டு இருக்காங்க. தெரியுமா?"

"ஹ்ம்ம் நேத்திக்கு அம்மாவும், அருவும் வீட்டுக்கு வந்தாங்க"

"என்னை மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் இல்லனு சொல்லிடு" என்றான் பட்டென.

"ஏன்ன்ன்!!!!" அதிர்ந்துவிட்டாள் அனு.

ஒரு நொடி அமைதிக்கு பின்,"என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும். நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகாது. தட்ஸ் வொய்" என்றான் இறுக்கமாக.

உடைந்து நொறுங்கிய இதயத்தை இறுக்கி நிறுத்தி, "பாருங்க அஜ்..அர்ஜுன். இத்தனை வருஷமா நா கல்யாணமே வேணாம்னு இருந்தேன். திடீர்னு உங்க தங்கச்சியும் அம்மாவும் வந்து என் பேரண்ட்ஸ் கிட்ட ஏதேதோ பேசி, இந்த கல்யாணத்தை முடிவுப்பண்ணிட்டுப் போய்ட்டாங்க . இப்போ என் பேரண்ட்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க. என்னால என்ன செய்ய முடியும்? உங்ககிட்ட அவங்க இங்க வரதுக்கு முன்னாடியே பேசலயா? அப்பவே அவங்கள நீங்க ஸ்டாப் பண்ண வேண்டியது தான?" என்றாள் கோபக்குரலில்.

அவளின் கோபத்திற்கு மாறாக அவன் அமைதியாக பதில் சொன்னான். "நானும் எனக்கு மேரேஜ் வேணாம்னு சொல்லிட்டேன். மம்மி ,சடர்னா டூ டேஸ் முன்னாடி மயங்கிட்டாங்க. பேமிலி டாக்டர் அவங்க ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்கன்னு சொன்னாங்க. மம்மிகிட்ட விசாரிச்சேன். என்னோட மேரேஜ் பத்தின கவலை தான் அவங்களுக்கு ஸ்ட்ரெஸ்ஸாகுதுன்னு சொன்னாங்க. நா மேரேஜ் பண்ணிக்கணும்னு ரெக்குவஸ்ட் பண்ணாங்க. எனக்கு மம்மி ஹெல்த் முக்கியம். அவங்க மனசுக்கு நல்லதுனு தான் மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சும்மா சொல்லிட்டேன். பட் அவங்க உன்ன மேரேஜ் பண்ணிக்க சொல்வாங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணல. நைட் தான் உங்க வீட்டுக்கு வந்தத பத்தி சொன்னாங்க. ஐ அம் சாரி" என்றான்.

"இனிமே தான் பொண்ணு தேட ஸ்டார்ட் பண்ணுவாங்க. ஏதாவது பண்ணி மேரேஜ நிறுத்திடலாம் ,ரெண்டு மூணு பொண்ணுப் பார்த்துட்டு ஒன்னும் செட் ஆகலனு மம்மி விட்டுடுவாங்கனு நெனச்சேன். அவங்க திடீர்னு உன்ன முடிவுப்பண்ணி பேசிட்டு வந்துட்டாங்க. அதான் உன்கிட்ட நேரடியாவே சொல்லி நிறுத்தலாம்னு கூப்பிட்டேன்"

அவன் வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பது கொஞ்சம் இன்பமாக இருந்தது.
அதேசமயம் தன்னையும் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பது வலிக்க செய்தது.

"அர்ஜுன், இப்போ நா என்ன சொன்னாலும் இங்க எடுபடாதுன்னு தோணுது. உங்ககிட்ட மேரேஜ நிறுத்த வேற ஏதும் பிளான் இருக்கா?"பாவமான குரலில் கேட்டாள்.

"ஹ்ம்ம் இருக்கு. வேற யாராவதா இருந்தா, என் கேரக்டர் சரியில்லனு கிரியேட் பண்ணி நிறுத்தி இருப்பேன். பட் உங்க வீட்டுல என்ன பத்தி தெரியும், அதனால மேரேஜ் டேட் பக்கத்துல வரும்போது எனக்கு சின்னதா ஆக்சிடன்ட் மாதிரி பார்ம் பண்ணிடுவேன். மேரேஜ் ஆட்டோமேட்டிக்கா நின்னுடும்" என்றான் உறுதியாக.

"அச்சச்சோ வேணாங்க . எனக்கு ஜாதகத்துல மாங்கல்ய பலம் ஸ்ட்ராங்கா இருக்குனு ஜோசியர் சொல்லி இருக்காரு. நமக்கு மேரேஜ் பண்ணா, உங்களுக்கு நல்லதுனு மேரேஜ ஹாஸ்பிட்டல்லயேப் பண்ணிடுவாங்க " என்றாள் வேகமாக.

பின்,"நீங்க பயப்படாதீங்க, இந்த கல்யாணத்தை நா நிறுத்துறேன்" என்றாள் அவனுக்கு நம்பிக்கை தரும் விதமாக.

"ஹ்ம்ம் தேங்க்ஸ். பை" என்று போனை வைத்துவிட்டான் அர்ஜுன்.

போனைத் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அப்படியே சுவரில் சாய்ந்தவள், வேலை செய்ய மறுத்த இதயத்தை அழுத்திவிட்டுக் கொண்டாள்.

'என்னை கல்யாணம் பண்ணிக்கிறது ஆக்சிடண்ட விட கஷ்டமா அஜ்ஜூ?' என்று மனதுக்குள் அவனிடம் கேட்டாள்.

எட்டு ஆண்டுக்கு முன் , "இவ என் வொய்ப்" என முகமறியா அன்னியர்கள் முன் கம்பீரமாக சொன்ன அர்ஜுன் மனக்கண்ணில் தோன்றினான்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
16/09/2020 4:03 pm  

Hi Lavanya... Welcome back, story so far is very interesting.. Pavam Anu lover a marriage stop panalam nu solrathu.. Flash back therinjuka arvama eruku


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
17/09/2020 2:58 pm  

@vaniprabakaran  Thank u Sissy 😍. 

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
20/09/2020 4:58 am  

இதயம் - 6

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"  - மகாகவி பாரதியார்.

 

தனக்குள் ஒரு முடிவை எடுத்தவள் கல்லூரிக்கு போன் செய்து ஒரு நாள் விடுப்பு சொன்னாள். பின் அருந்ததியை அழைத்துத் தான் அவள் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தாள்.

ஒரு மணி நேரத்தில் பழங்கள், இனிப்புடன் தன் வீட்டிற்கு வந்த அனுவை ஆச்சர்யமாகப் பார்த்தாள் அருந்ததி.

அருந்ததியும் அனுவும் நெருங்கிய தோழிகளாக இருந்தாலும், அனு அருந்ததியின் வீட்டிற்கு வரமாட்டாள். அவள் முதல்முறை வந்தது அருவின் நிச்சயதார்த்தத்திற்காக தான். ஆயிரம் தான் அரு நெருங்கிப் பழகினாலும் அனுவிடம் ஒரு ஒதுக்கம் இருக்கும். அருந்ததிக்கு அதெல்லாம் கிடையாது. அவள் பெரும்பாலும் அனுவின் வீட்டில் தான் இருப்பாள்.

அப்படிப்பட்டவள் தன் மாமியார் வீட்டுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் வந்தது அருவுக்கு ஆச்சர்யம்.

"என்னடி? வீட்டுக்கு வானு கூப்டா ஓவரா ஸீன் போடுவ! இப்போ நீயா வந்துருக்க! ஒரு வேளை நா உன் நாத்தனார் அப்டிங்கிற மரியாதையோ?" என்றாள் அனுவை அணைத்தபடி.

'வயித்தெரிச்சல கொட்டிக்காதடி!' என மனதுக்குள் எண்ணியபடி அருந்ததியை உறுத்துப்பார்த்தாள் அனுபமா.

அவள் பார்வையில் ஏதோ சரியில்லை என உணர்ந்தவள், "வா நம்ம ரூம்க்கு போய் பேசலாம்" என அனுவை அழைத்தாள்.

அப்போது அங்கு வந்த அருந்ததியின் மாமியாரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, அருந்ததியை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றாள் அனு.

மர நிழலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தவள், தலைகுனிந்தபடி அமைதியாக இருந்தாள். அருகில் அமர்ந்திருந்த அருந்ததி அனுவின் கையில் லேசாக தட்டினாள்.

"என்னடி அமைதியா இருக்க? என்னவோ சொல்ல தான இங்க வந்த? நீ பாட்டுக்கு உக்கார்ந்துட்டு இருக்க?" என்றாள்.

அனு ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினாள். "உன் அண்ணன் போன் பண்ணாங்க"

அருந்ததி கண்ணில் ஒளி வந்தது. "வாவ்... என்ன சொன்னாங்க?"

"ம்ம்ம்... இந்த கல்யாணத்தை நிறுத்தனுமாம்!"

"என்ன்ன்ன?" அதிர்ச்சியுடன் கேட்டாள் அரு.

"அவர்கிட்ட பேசிட்டதா சொன்னியே! அவருக்கு ஓகேனு சொன்னியே! எல்லாம் பொய்யா அரு? அவருக்கு கல்யாண பொண்ணு நான் தான்னு தெரியாதாமே! அம்மாவுக்காக மேரேஜ்க்கு ஓகேனு சொல்லி இருக்காரு. அம்மாவுக்கு நிஜமா ஒடம்பு சரியில்லையா? இல்ல எனக்காக நீ அவங்கள மயங்க சொன்னியா?" தீர்க்கமான பார்வையுடன் கேட்டாள் அனு.

லேசான சிரிப்புடன்,"நீ புத்திசாலிடி. அம்மா நல்லா தான் இருக்காங்க. உன்ன பாத்து பேசிட்டு வந்ததும் எனக்கு என்ன பண்றதுனு புரியல. அம்மாகிட்ட போய் 'அண்ணா மேரேஜே வேணாம்னு சொல்லிட்டு இருக்கான். அவன் மனச மாத்தனும், சோ நம்ம ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தரலாம்னு சொன்னேன். அம்மாவும் மகன் மேரேஜ் நடந்தா போதும்னு சூப்பரா ஆக்ட் பண்ணிட்டாங்க. அதர பழைய ஐடியாவா இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகிடுச்சி. அண்ணா ஓகே சொல்லிட்டான்" என்றாள் அரு.

"அப்புறம் அம்மாகிட்ட அனுவை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிடலாம், அவளுக்கு நம்ம குடும்பம், அண்ணா பத்தியெல்லாம் தெரியும்னு சொன்னேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். உடனே உங்க வீட்டுக்கு கெளம்பிட்டாங்க. எல்லாம் சரியா போகுதுனு ஹேப்பியா இருந்தேன். பட் இப்போ இவன் இப்படி கேட் போடுறானேடி! அவன் உன்கிட்ட போன்ல என்ன சொன்னான்?" என்றாள் கலக்கமான குரலில்.

அர்ஜுனுடன் நடந்த உரையாடலை விலக்கியவள்,"கல்யாணத்தை நடத்த நீங்க ஹாஸ்பிட்டல் செட்டப் பண்ணிங்க, அதை நிறுத்த அவர் ஆக்சிடண்ட் செட்டப் பண்ணப் போறாராம்" என்றாள் விரக்தி சிரிப்புடன்.

அருந்ததியின் கண்கள் கலங்கின. "அண்ணா சொன்னா செய்வான்டி. நா வேணும்னா அவன்கிட்ட பேசட்டுமா?"

"வேணாம், நா கல்யாணத்த நிறுத்துறேன்னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன். இப்போ நீ போய் கேட்டா, நா உன்கிட்ட சொல்லிட்டேன்னு என் மேல அவருக்கு கோபம் வரும். என்ன இனி நம்ப மாட்டாரு" என்றாள்.

"ஆமா அவன் உன்னை கல்யாணம் பண்ணாம இருக்க, உன்னையே யூஸ் பண்ணிக்கறான். அவன் நம்பிக்கை உனக்கு ரொம்ப முக்கியம்!! இருந்தாலும் ரொம்ப ஓவர் காதலிடி நீ" என்றாள் அரு கோபத்துடன்.

அனுவின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.

"ஹே சிரிக்காத! இப்போ என்ன பண்ணப்போற? அவன்மேல உனக்கு இருக்க லவ்வ, உங்க மேரேஜ நிறுத்தி ப்ரூவ் பண்ணப்போறியா? வேணாம்டி ப்ளீஸ்" அருவின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

அனுவின் முகத்தில் இறுக்கம் வந்தது.
"நா அவ்ளோ நல்லவ இல்லடி" என்றாள் ஆழ்ந்தக் குரலில்.

அருவின் புருவங்கள் உயர்ந்தன.
"என்னோட எட்டு வருஷ காதலுக்கு வெற்றி கிடைக்க கடவுள் உன் மூலமா ஒரு வழி காமிச்சு இருக்காரு. அத நான் மிஸ் பண்ண மாட்டேன். இந்த கல்யாண பேச்சை நீ தொடங்கிவச்சிட்ட, இனி மீதியை நா பார்த்துக்குறேன். உன் அண்ணன் வாயாலயே இந்த மேரேஜ் கண்டிப்பா நடக்கும்னு சொல்ல வைக்கிறேன். இனி நீ உன் போன்ல என் நம்பரை மிசஸ்.அனுபமா அர்ஜுன் னு மாத்திடு" என்றாள் குரலில் உறுதியுடன்.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Lavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
22/09/2020 5:14 pm  

இதயம் - 7

"சக்தியென்ற மதுவையுண்போமடா!
தாளங்கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தியல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வியக்கக் களித்துநின் றாடுவோம்" - மகாகவி பாரதி.

 

அருந்ததியின் கண்கள் மின்னியது. "வாவ்... மை அனு இஸ் பேக்!!!" என்றாள்.

அனுபமா சிரிக்கவில்லை. "இப்போ எனக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்" என்றாள்.

"என்ன செய்யணும்னு சொல்லுடி. உன் சாரதி நா இருக்கேன். உன் ஆள கடத்திடுவோமா? கன் பாய்ண்ட்ல மேரேஜ்க்கு ஓகே வாங்கிடலாமா?" என்றாள் உற்சாகக் குரலில்.

அவள் தலையில் லேசாகக் கொட்டியவள்,"நல்ல தங்கச்சிடி நீ! கடத்தல் எல்லாம் வேணாம்.என் மாமியாரை மறுபடியும் மயங்க வைக்கணும் அவ்ளோ தான்" என்றாள்.

கேள்வியாய் பார்த்தவளிடம்
தனது திட்டத்தை அவள் விளக்க, அருந்ததி உற்சாகமாக கேட்டுக்கொண்டாள்.

உடனே அதனை நிறைவேற்றவும் கிளம்பிவிட்டாள்.

"அம்மாமம்மாஆ" என வீடே அதிரும்படி வந்த மகளைக் கண்டு ஆச்சர்யத்துடன், "என்னடா? எதுக்கு இப்படி கத்திட்டு வர?" என்றார் அகல்யா.

"மா அனு இந்த மேரேஜ வேணாம்னு சொல்லிட்டாமா"என்றாள் சோகக்குரலில்.

"என்னடி சொல்ற? ஏனாம்?" என்றார் அகல்யா பதற்றத்துடன்.

"தெரியலமா. எனக்கும் உன் அண்ணனுக்கும் செட் ஆகாதுனு சொல்றா. அன்னிக்கு ஓகே சொன்னவ இப்போ இப்டி சொல்றத பார்த்தா, அண்ணா தான் அவகிட்ட ஏதோ சொல்லியிருப்பானோனு தோணுதுமா"

"ஹே! எதையாவது ஒளராத! அவன் தான் சம்மதம் சொன்னானே" என்றார் அகல்யா.

"நோ மா, எனக்கு டவுட்டா இருக்கு. எதுக்கும் அண்ணனுக்கு ஒரு டெஸ்ட் வச்சி பாப்போம்" என்றாள் அரு.

"என்ன பண்ணலாம்ங்கிற?" என்றவரைத் தடுத்து அர்ஜுனை போனில் அழைத்தாள்.

"ஹலோ அண்ணா! அம்மாவுக்கு திடீர்னு பீபி ரெய்ஸ் ஆகிடுச்சி. சீக்கிரம் வீட்டுக்கு வா ப்ளீஸ்" என்றாள் அழுகுரலில்.

பதறியடித்து ஓடிவந்த அர்ஜுன் தாயின் அறைக்கு ஓட, அங்கு கண்மூடிப் படுத்திருந்தார் அகல்யா. அருகில் சோகமான முகத்துடன் அருந்ததி.

"ஹே ! என்ன ஆச்சு?" என்றான் தங்கையிடம்.

"பீபி அதிகமாகிடுச்சி அண்ணா. டேப்லட் குடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன்"

"பீபி ரெய்ஸ் ஆகுற மாதிரி என்ன நடந்தது? நீ ஏதும் பண்ணியா? ஹாஸ்பிட்டல் போகலாம் வா!" என்றான்.

இதற்கு மேல் தாங்காது என எண்ணிய அகல்யா மெல்ல கண்களைத் திறந்தார்."அதெல்லாம் வேணாம் அர்ஜு, நா இப்போ உயிர் வாழ்ந்து என்ன செய்யப்போறேன்?" என்றார் விரக்தி குரலில்.

"மா ஏன் இப்படி பேசறீங்க? நா தான் மேரேஜ்க்கு ஒத்துகிட்டேனே" என்றான் கோபமாக.

"நீ மட்டும் ஒத்துக்கிட்டா போதுமா? அனு இந்த மேரேஜ் வேணாம்னு சொல்றா" என்றாள் அருந்ததி.

அவன் கண்கள் ஒரு நொடி பிரகாசமானது. "அதனால என்னமா? வேற பொண்ணு பாருங்க. பொறுமையா பொண்ணு பார்த்து, இன்னும் த்ரீ ஆர் போர் இயர்ஸ்க்கு அப்புறம் கூட பண்ணிக்கலாம். அதுக்கா பதட்டமாகுறிங்க" என்றான்.

தன் அண்ணனின் பேச்சைக் கேட்டவள்,'பாத்தீங்களா?' எனும் விதமாக தாயிடம் கண்ணைக் காட்டினாள் அரு.

'ஹ்ம் ஆமா' எனும் விதமாய் அகல்யாவும் கண்காட்டினார்.

"வேற பொண்ணு பார்க்கலாம்டா, ஆனா அது நம்ம அனுவா இருக்காதே. உனக்கு அவளை பத்தி நல்லா தெரியும். அவளுக்கும் உன்ன பத்தி தெரியும், என்மேல அவளுக்கு ரொம்ப பாசம். அதோட அருவையும் எதிர்காலத்தில நல்லா பார்த்துப்பா, என் மகளுக்கு எனக்கு அப்புறம் கூட அன்பான தாய்வீடு இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எல்லாம் கனவாகிடுமோனு பயமா இருக்குடா "

"மா, இது நம்ம அருவோட வீடுமா. எந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாலும், அருவை நா அன்பா பார்த்துப்பேன். அந்த பொண்ணுக்கு பிடிக்கலனா விட்டுடுங்க" என்றான் கறார் குரலில்.

"அவளுக்கு பிடிக்காமயெல்லாம் இருக்காது. நாங்க அவங்க வீட்டுக்கு போனப்போ அவ மறுத்து பேசலயே. இப்போ திடீர்னு வேணாம்னு சொல்றத பார்த்தா, யாரோ அவளை குழப்பி இருக்கனும்னு தோணுது" என்றாள் அரு.

சிறு முக சுளிப்புடன்,"யாரோ எதுக்கு இந்த மேரேஜ நிறுத்தப் பார்க்கணும்?" என்றான்.

"எல்லாம் பொறாமை தான். என் காலேஜ் பிரெண்டுகளுக்கே எங்க பிரென்ட்ஷிப் மேல ஜெலஸ். அவளுக யாராவது தான் இந்த மேரேஜ் வேணாம்னு சொல்லி குழப்பி இருக்கணும். எனக்கு அனுதான் அண்ணினு நா டிசைட் பண்ணிட்டேன். எப்படியாவது அதை நடத்துவேன், இல்லனா, இந்த வீட்டுக்கே நா வரமாட்டேன்" என்றாள் உறுதிக்குரலில்.

"அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? எனக்கு வேற பொண்ணு பாருங்க மா" படப்படத்தான் அர்ஜுன்.

"என் மனசுல அனு தான் என் மருமகனு முடிவுப் பண்ணிட்டேன்பா. அதோட முதல் முதல்ல உனக்கு பார்த்த பொண்ணே உன்ன ரிஜக்ட் பண்ணத என்னால ஏத்துக்க முடியல. என் உடம்பும் பொண்ணு தேடி அலைய ஒத்துழைக்கல. என்னால வேற பொண்ணுல்லாம் பார்க்க முடியாது. எனக்கு இந்த ஜென்மத்துல மருமகள பார்க்கிற அதிர்ஷ்டம் இல்ல போல" என்றபடியே கண்ணை மூடினார் அகல்யா.

அர்ஜுன் பதறிவிட்டான். "மா மா, என்னமா பண்ணுது? ஹாஸ்பிடல் போலாமா?"என்றான்.

"எனக்கு ஒரு கேடும் இல்ல. நீ உன் வேலைய பார்க்க போ"என்றார் கண்களை மூடியபடியே.

"மா அந்த பொண்ணு மேரேஜ் வேணாம்னு சொல்றதுக்கு நா என்ன பண்ணுவேன்? என்னை என்ன பண்ண சொல்றிங்க?" என்றான் சலிப்பாக.

"நீ அனுகிட்ட பேசு அண்ணா. அவ கண்டிப்பா ஓகே சொல்லிடுவா. அம்மாவும் நானும் ஹேப்பியா கல்யாண வேலையைப் பார்க்க ஸ்டார்ட் பண்றோம்" என்றவளை முறைத்தான் அர்ஜுன்.

"நா அம்மா ஹெல்த் பத்தி பேசிட்டு இருக்கேன். நீ சம்மந்தம் இல்லாம பேசுற?" என்றான் எரிச்சலாக.

"உன் கல்யாணம் நல்லபடியா அனு கூட நடக்கும்ன்ற செய்திதான் எனக்கு மருந்து. அது வரைக்கும் நா படுக்கையில தான் இருப்பேன். இருப்பேனோ? இப்படியே போய்டுவேனோ? அந்த கடவுள் விட்ட வழி" என்றார் அகல்யா நோயாளி குரலில்.

ஒரு நொடி கண்ணை இறுக்கி மூடித்திறந்துவிட்டு, "உங்களுக்கு ஒன்னும் ஆகாதுமா. இப்போ என்ன? நா அனுபமா கிட்ட பேசணும், அவ்ளோ தான? பேசுறேன். இந்த கல்யாணம் நீங்க ஆசைப்பட்ட படி கண்டிப்பா நடக்கும். 'இட்ஸ் எ பிராமிஸ்' " என்றான் உறுதியான குரலில்.

அகல்யாவின் விழிகள் பிரகாசித்தன. அருந்ததி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல் இருக்க பிரயத்தனப்பட்டாள்.

இது அத்தனையையும் அருந்ததி உதவியுடன், வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்தாள் அனுபமா.

அவள் முகத்தில் சிறிய வெற்றி சிரிப்பு வந்தது.

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
Page 1 / 2
Share: