Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

எந்தன் நேசம்  

Page 2 / 5
  RSS

Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
04/08/2020 5:10 am  

அத்தியாயம் 10

சக்தி தன்னை சுட மாட்டாள் என்ற நம்பிக்கை மகேஷிற்கு இருந்தது.

"சுட்டுடு சக்தி..."

மகேஷை ஆச்சரியமாக பார்த்தாள்.

"உனக்காக உயிரையும் தருவேன்னு நீ சொன்னது போல நான் பொய் சொல்ல மாட்டேன்... இது உன்னோட உயிர் சக்தி... நீ எப்ப வேணாலும் எடுத்துக் கொள்ளலாம்..."

சக்தியின் மனம் தடுமாற ஆரம்பித்தது.

"என் நெத்தியில சுடாத சக்தி... என் நெஞ்சில சுடு... ஏனா அங்கேதான் உன்னை குடி வச்சிருக்கேன்... செத்த பிறகாவது நான் உன் நினைவு இல்லாம ஆன்ம சாந்தி அடையனும்ன்னா என்னை நீ நெஞ்சிலதான் சுடணும்..."

சக்திக்கு மனம் வலித்தது. அவளது கை லேசாக நடுங்கியது. மகேஷ் அதற்காகவே காத்திருந்தது போல சட்டென அவளது கையை பற்றி துப்பாக்கியை பிடுங்கினான்.

சக்திக்கு சில நொடிகளுக்கு பிறகே அவன் செய்த ஏமாற்று வேலை புரிய ஆரம்பித்தது.
இவனது நடிப்பிற்கு இப்படி ஏமாந்து போய் விட்டோமே என தன்னையே நொந்துக் கொண்டாள்.

"மகேஷ் நீ..."

அவளை மேலே பேச விடாமல் அவளின் உதடுகளின் மீது விரல் வைத்தவன் "ஸ்ஸ்... இனி நீ பேசக் கூடாது... நான்தான் பேசுவேன்... இந்த துப்பாக்கி உன் கைக்கு வரணும்னா இனி நீ என் பேச்சைதான் கேட்கணும்... சரியா..?" என்றான்.

எரிச்சலோடு சரியென தலையசைத்தாள். மகேஷ் துப்பாக்கியை தனது இடுப்பில் சொருகி கொண்டான்.

'குமரன் ஸார் ஏற்கனவே என் மேல் காண்டுல இருக்காரு... இதுல இவன்தான் என் துப்பாக்கியை பிடுங்கி கொண்டான்னு சொன்னா அவர் நம்பவா போறாரு..? துப்பாக்கியை அசால்ட்டாக வச்சிருந்தேன்னு சொல்லி அவரே என்னை சஸ்பெண்டு பண்ணிருவாரு... எப்படியாவது நல்ல முறையில பேசி இவன்கிட்ட இருந்து துப்பாக்கியை வாங்கியாகனும்... கடவுளே... இது என் சோதனை காலம்டா..'

"அது பொம்மை இல்ல... அந்த துப்பாக்கியை என்கிட்ட கொடுத்துடு மகேஷ்..."

"இதை வச்சி நான் பூஜையா பண்ண போறேன்..? நான் சொல்றபடி நடந்துக்க... இந்த துப்பாக்கியை தந்துடுறேன்.."

"என்ன செய்யனும்..?"

"என் கூட ஹோட்டலுக்கு வா..."

சக்திக்கு அவனை கொல்ல வேண்டும் போல இருந்தது.

"நீ என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க..? நான் ஒரு போலிஸ்காரி... நீ ஒரு ரவுடி... உன் கூட நான் ஹோட்டலுக்கு வரனுமா..? பார்க்கறவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க..? நான்..."
அவளை கை காட்டி நிறுத்தினான்.

"ஹோட்டல்ல சாப்பாடுதான் பிரதானம்... அது உனக்கு தெரியுமா..? உன்னை ஹோட்டலுக்கு சாப்பிடதான் கூப்பிட்டேன்னே தவிர ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி நீ நினைக்கிற மாதிரி நடந்துக்கறதுக்கு இல்ல... உனக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தா ஸாரி... எனக்கு உன்னை பிடிக்கல... அதுவும் சுத்தமா பிடிக்கல..." அவனை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

'என்ன பேச்சையே காணம்...? இதுதான் பேச்சுல மயங்கறதா..? அடிப்பாவி உன்னை பிடிக்கலன்னு என் வாயாலயே சொல்ல வச்சிட்டியேடி... பொய்யுன்னாலும் மனசு வலிக்குதுடி... ஆண்டவன் உன் இதயத்தை மட்டும் கல்லுல செஞ்சிட்டானா..?' என நினைத்தபடி அவளின் முன் சொடுக்கிட்டான்.
"மேடம் இங்கே பாருங்க... நீ அசந்து பார்க்கற அளவுக்கு நான் அவ்வளவு ஆண் அழகன் இல்ல..."
சக்தி சுய நினைவு பெற்றவளாக அவனை முறைத்தாள்.

"அக்கப்போர் கேஸ்டா..." அவள் தனக்குள் முனகினாள்.

"நீ சொன்னது கேட்டுடுச்சி... என் கூட இப்போ கிளம்பி வரிங்களா மேடம்..?"

தன்னை மேலும் கீழும் பார்த்து கொண்டாள்.

"என்ன மேடம்... வாங்க போகலாம்..."

"அது..‌." தன்னை மீண்டும் ஒரு முறை பார்த்தவள் "நான்... டிரெஸ்... யூனிபார்ம்லயா வர முடியும்..?" என்றாள் தயக்கமாக.

அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். அவனது நெருக்கம் அவளை ஏற்கனவே ஏதோ செய்துக் கொண்டிருந்தது. இப்போது அவனது பார்வை அவளை கொல்லாமல் கொன்றுக் கொண்டிருக்கிறது. வீணாக போன வெட்கம் வேறு வந்து அவளின் கட்டுப்பாட்டை மீறி முகத்தை சிவக்க வைத்தது. சிவந்து போன முகத்தை அவனிடமிருந்து மறைக்க தலையை குனிந்து நிலத்தை பார்த்தாள்.

'ச்சே... எனக்கு மட்டும் ஏன் சுயக் கட்டுப்பாடு வேலை செய்ய மாட்டேங்குது..? இவனை பார்த்தாலே மனசு ஏதேதோ செய்யுது... இவன்கிட்டயிருந்து விலகி இருக்க நான் ஆயிரம் மடங்கு கஷ்டப்படுறேன். ஆனா இவன் அது அத்தனையையும் ஒரு நொடியில கலைச்சிடுறான்... மனசுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்ல இது மட்டும்தான் நல்லா தெரியுது...'

காக்கிசட்டையும்... காக்கி கால்சட்டை.... அள்ளி முடிந்த கொண்டை... அதிலிருந்து சிதறிய சில கற்றை கேசம்... கழுத்து பட்டன் போட்டிருந்தும் அதை தாண்டி வெளியே தெரிந்த ஒரு மெல்லிய செயின்...

'என் ஆளு யூனிபார்ம் போட்ட தேவதை... ஆண்டவன் இவளை உச்சந்தலை முடியிலயிருந்து உள்ளங்கால் பள்ளம் வரை பார்த்து பார்த்து அளவெடுத்து செஞ்சிருக்கான் போல... இவ ஒரு உயிருள்ள தங்க சிலைடா...' பெரு மூச்சோடு அவளது கழுத்தை பார்த்தான்.

"இந்த கழுத்துல நான் கட்டும் மஞ்ச தாலி மட்டும் இருந்திருந்தா சிலை இன்னும் கொஞ்சம் கலையா இருந்திருக்கும். ஆனா என்ன செய்ய..? என் தங்க சிலைக்கு மனச மட்டும் கடவுள் மண்ணாங்கட்டியில செஞ்சிட்டான் போல..." மெல்லிய குரலில் அவன் சலித்து கொண்டான்.
அவன் ஏதோ முனகுவதை கேட்டு நிமிர்ந்தாள்.

"ஏதாவது சொன்னியா..?"

"ம்..."

"என்ன..?"

"சுரைக்காயில உப்பு இல்ல... கத்தரிக்காயில காரம் இல்லன்னு.."

புரியாமல் அவனை பார்த்தவள் அவனது கேலி புரியவும் அவனை முறைத்தாள்.

"இந்த ட்ரெஸ்ஸே நல்லாதான் இருக்கு... வா... போகலாம்..."

மாட்டேன் என தலையசைத்தாள்.

"போலிஸ் யூனிபார்ம்ல உன் கூட வந்தா என் மொத்த இமேஜும் டேமேஜ் ஆகிடும்.."

"மனசாட்சியே இல்லை.. இமேஜை வச்சி என்ன பண்ண போற..?"

அவனை முறைத்த படியே ஸ்டேசனுக்குள் நுழைந்தாள்.

பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள்.

இளம் மஞ்சள் புடவை அவளுக்காகவே நெய்தது போலிருந்தது. பின்னடலிடப்பட்டு முன் பக்கம் போட்டிருந்த பின்னல் இடுப்பை தொட்டு அசைந்து கொண்டிருந்தது நெற்றியில் இருந்த சிறு குங்கும பொட்டு அவளது எளிமைக்கு அழகு சேர்த்தது.

'சேலை கட்டிய சோலையொன்று..' என அவன் மனம் பாட ஆரம்பித்தது.

சக்தி அவன் முன் வந்து நின்றாள்.

"போகலாமா..?"

அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்ன பாக்கற..?"

"மஞ்ச புடவையில மாரியாத்தா மாதிரியே இருக்க.."

அவள் கோபத்தை தடுக்க உதட்டை கடித்தபடி அவனை முறைத்தாள்.

அவனுக்கு அவளது கோப முகம் கண்ட பிறகே மனம் குளிர ஆரம்பித்தது.

"பாராட்டினாலும் முறைக்கிற... சரின்னு உண்மையை சொன்னாலும் முறைக்கற...‌ நீ மட்டும்தான் இப்படியா..? இல்ல மொத்த பெண் இனமுமே இப்படிதானா..? நான் எதுக்கு கேட்கறனா.."
அவனை பேச விடாமல் கை காட்டி நிறுத்தினாள்.

"போகலாமா..?" என்றாள் பற்களை கடித்தபடி.

அவர்கள் உணவகத்துக்குள் நுழைந்த போது ஒரே ஒரு மேஜை மட்டும் ஒரு மூலையில் காலியாக இருந்தது.

அவன் அமர்ந்த பிறகு சுற்றும் முற்றும் பார்த்தபடி தயக்கத்தோடு அமர்ந்தாள் சக்தி.

"என் கூட உட்கார்ந்து சாப்பிட அவ்வளவு தயக்கமா சக்தி..?" மகேஷின் குரலில் அவனையும் மீறி வலி தெரிந்தது.

சக்தி அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

அவளுக்கு மகேஷை கண்டு பயம் இல்லை. ஆனால் மூர்த்தியை பற்றி யோசித்தாலே போதும்... அவளது கால்கள் தானாக நடுங்க ஆரம்பித்தது விடும்.

இவள் இப்போது பயப்படுவது கூட இவளுக்கு வரும் ஆபத்தை எண்ணி அல்ல. அவனுக்கு வரும் ஆபத்தை எண்ணிதான்.

காலம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். வாழ்க்கை இமை பொழுதில் தலைகீழாக மாறலாம். ஆனால் மூர்த்தியோடு இவளுக்கு ஏற்பட்ட பத்து நிமிட நிகழ்வை இவளால் கனவிலும் மறக்க முடியவில்லை. அவனை பற்றி நினைத்தால் போதும் இவளுக்கு வாய் கசப்புறுவதை தவிர்க்க முடியாது.

"என்ன சாப்பிடுறிங்க..?" என கேட்ட சர்வரை நிமிர்ந்து பார்த்தாள் சக்தி.

சக்தி தனக்கு வேண்டியதை சொன்ன பிறகு மகேஷிடம் திரும்பினார் சர்வர்.

"அவ சொன்னதையே எனக்கும் கொண்டு வாங்க..." சர்வர் சென்றதும் இவள் புறம் திரும்பினான்.

"உங்க அப்பா எப்படி இருக்காரு..?"

"நல்லா இருக்கார்..." சக்தி மெல்லிய குரலில் சொன்னாள்.

அதன் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. உணவு வந்ததும் இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
"அந்த குடும்பத்தை பார்த்தியா சக்தி..?" அவன் கண் காட்டிய திசையில் பார்த்தாள்.

கணவன், மனைவி, ஒரு மகன், ஒரு மகள் என ஒரு அழகான குடும்பம் அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

"அப்படி ஒரு குடும்பம் எனக்கும் இருக்கும்னு ரொம்ப வருசத்துக்கு முன்னால கற்பனை பண்ணி வச்சிருந்தேன்... அந்த குடும்பத்துல உன்னையும் சேர்த்து கற்பனை பண்ணியிருந்தேன்... உன் ஒருத்தியால என் கனவு கடைசி வரை நிறைவேறல... உன்னை சந்திச்சது நான் பண்ண பாவம்ன்னு நினைக்கிறேன்..."

அவனை பார்க்கையில் அவளுக்கு பரிதாபமாக இருந்தது.

'உன்னால நான் பட்ட கஷ்டம் உனக்கு புரியாது மகேஷ்... ஆனாலும் நீ சொல்வதை நான் ஒத்துக்கிறேன்... என்னை சந்திச்சது நீ பண்ண பாவம்தான் போல..'

"என்னோட ஒவ்வொரு கனவுலயும் என் ஒவ்வொரு கற்பனையிலயும் நீ இருந்த... இப்ப வரைக்கும் இருக்க... " அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்தை ஈட்டி போல் துளைத்தது.
"என்னை மறந்துடுன்னு ரொம்ப வருசம் முன்னாடியே சொல்லிட்டேன் மகேஷ்..."

"நீ சொல்லிட்ட ஆனா என்னால முடியல..."

'என்னாலும் உன்னை மறக்க முடியவில்லை'என சொல்ல அவளின் மனம் கூப்பாடு போட்டது.
மகேஷ் தன் கட்டுப்பாட்டை மீறி வந்துக் கொண்டிருந்த வார்த்தைகளுக்காக தன் உள் மனதை திட்டிக் கொண்டிருந்தான்.

தன் முன் அமர்ந்து கொண்டிருந்தவளை கண்களால் அளந்துக் கொண்டிருந்தான் மகேஷ். அவள் அவனை பார்ப்பதை தவிர்த்து உணவு உண்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.

அவளை பார்க்கும் நேரங்களிலெல்லாம் தன் மனமும் உடலும் தன்னை பழி வாங்குவதை அவன் அறிவான். ஆனால் அவளை காணாத பொழுதுகள் அவனது வாழ்நாளிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை என்பதை அவனால் மறுக்க முடியாது என்பதும் அவன் அறிந்ததே...

அன்றொரு நாள் சாமிநாதன் சொன்ன வார்த்தைகள் இன்று இவனுக்கு நினைவுக்கு வந்தது.

சாமிநாதனும் கலையும் காதலித்ததை அறிந்த மகேஷ் கேட்ட முதல் கேள்வியே "எப்படிடா எங்க யாருக்கும் தெரியாம காதலிச்சிங்க..? நீ அவளை பார்க்கையில் உன் கண்ணுல எந்த ஒரு உணர்ச்சியையும் நாங்க பார்த்ததே இல்லையே...!" என்றுதான்.

"ஐ கேன் கன்ட்ரோல் மை பீலிங்க்ஸ்.." என்றவனை புரியாமல் பார்த்தான் மகேஷ்.

"பீலிங்க்ஸை கன்ட்ரோல் பண்ண முடியலன்னாதானே காதலே...!?"

இவனது தோளை தட்டி சாமிநாதன் சொன்னான். "பீலிங்க்ஸை கன்ட்ரோல் பண்ண வேண்டிய நேரத்துல கன்ட்ரோல் பண்ணலன்னா அப்புறம் நம்ம பீலிங்க்ஸை எப்பவுமே காட்ட முடியாம போயிட சான்ஸ் இருக்கு..."

அன்று அவன் சொன்னது இன்று எந்த அளவிற்கு உண்மையாகி உள்ளது என்பதை புரிந்தவனுக்கு உணவு தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்டது போலிருந்தது.

நண்பர்களே... கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
04/08/2020 5:46 pm  

Hi செவந்தி story super a eruku... Yaaru nejama love oppose panranga Mahesh a illa sakthi a, antha kuzhanthai yarodathu. Waiting to read next episode


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
04/08/2020 5:47 pm  

Hi செவந்தி story super a eruku... Yaaru nejama love oppose panranga Mahesh a illa sakthi a, antha kuzhanthai yarodathu. Waiting to read next episode


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
05/08/2020 6:02 am  

@vaniprabakaran தங்களின் கருத்துக்கு எனது நன்றிகள் நட்பே.. 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
05/08/2020 6:08 am  

அத்தியாயம் 11

 

சக்தியை பார்த்தபடியே சாப்பிட்டு முடித்த மகேஷ் இலையிலிருந்து எழுந்து சென்றான்.

சக்தி தன் யோசனைகளின் பிடியிலிருந்து மீள முடியாதவளாக அமர்ந்திருந்தாள். மகேஷின் மீது தான் கொண்ட காதலை கொண்டாட ஒரு வாழ்க்கைதான் கிடைக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. ஆனால் கடைசி வரை தன் காதலை சொல்ல வார்த்தைகளுக்கு கூட சக்தியில்லையே... என தன்னுள் நொந்திருந்தவள் தன் அருகே வந்து நின்ற சர்வரை கவனிக்கவில்லை.

"இன்னும் ஏதாவது வேணுங்களா..?"

நிமிர்ந்து பார்த்தவள் வேண்டாம் என தலையசைத்தாள். தன் முன் அமர்ந்திருந்த மகேஷை தேடினாள்.

"உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா..?" என் கேட்ட சர்வரை புரியாமல் பார்த்தாள்.

"இல்ல... ரொம்ப நேரமா ஏதோ யோசனையில் இருக்கிங்க... பார்த்தா நல்ல பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா மகேஷோடு வந்திருக்கிங்க..."

சக்தி தன்னருகே இருந்த கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

'நான் யாருன்னு தெரியாத அளவுக்கு இருக்கேனா..? நன்றி கடவுளே! இல்லன்னா எத்தனை பேர்க்கிட்ட பதில் சொல்லியிருக்கனுமோ..?'

"இந்த மகேஷ் கூட நான் எந்த பொண்ணையும் பார்த்தது இல்ல... ஆனா உங்க நல்லதுக்காக ஒன்னு சொல்றேன் கேளுங்க... இவனுக்கு எதிரி ரொம்ப அதிகம். யாராவது உங்களை அவனோடு பார்த்தா உங்க உயிருக்கே ஆபத்து..." என்றவனை புன்சிரிப்புடன் பார்த்தாள் சக்தி. பள்ளிகூடத்து பெண்ணை கண் முன் வன்புணர்வு கொண்டு சாகடித்தாலும் கண்டு கொள்ளாத உலகத்தில் முன் பின் தெரியாதவர்களுக்கு அறிவுரை கூறும் அந்த சர்வரை ஆச்சரியமாக பார்த்தாள்.

      சக்தி சர்வரை புன்சிரிப்புடன் பார்ப்பதை கண்டு ஆத்திரத்துடன் அருகில் வந்தான் மகேஷ். சர்வர் சக்திக்கு கூறிய அறிவுரையை காதில் கேட்டவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன்னால் சக்திக்கு ஆபத்து வர வாய்ப்பு உண்டு என நினைத்தவனுக்கு என்னவோ போலிருந்தது. சர்வர் இவனை கண்டதும் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

         சக்தி உணவை முடித்துவிட்டு எழுந்தாள். மகேஷ் பில்லை கட்டி முடித்தபோது அருகில் வந்து நின்றாள்.

    "போகலாமா..?"

    தலையசைத்து விட்டு தன்னோடு நடந்தவனின் முகத்தில் கலை இழந்திருப்பதை கண்டாள். "ஏதாவது பிரச்சனையா..?" புரியாமல் பார்த்தான் மகேஷ்.

       "உன் முகம் ஒரு மாதிரியா இருக்கே.."

       நடப்பதை நிறுத்தி விட்டு இவளை பார்த்தான். "உனக்கு என்னோடு சேர்ந்து வர பயமா... என் எதிரிகளால உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடும்ன்னு..?"

         இல்லை என தலையசைத்தாள். "நான் போலீஸ் மகேஷ்... பயப்பட வேண்டியது நான் இல்ல.."

        மகேஷின் முகத்தில் உடனடியாக மகிழ்ச்சி புன்னகை பூத்தது.

       "தேங்க்ஸ்.."

      "எதுக்கு..?"

      "என்னை விட்டு நீ விலகி இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனா வீக்கா இல்லாம ஸ்ட்ராங்கா உன்னை நீயே மாத்திக்கிட்டதுக்கு.."

       சக்தி பதில் ஏதும் சொல்லாமல் நடந்தாள். "உன்னை உன் வீட்டுல நானே விட்டுடுறேன்.."

         "வேணாம்னு சொன்னா விட்டுட்டு போக போறியா..?" என கேட்டவளிடம் யோசித்து தலையசைத்தான்.

      சக்திக்கு தனது செயல்களை கண்டு ஆச்சரியமாக இருந்தது. அவனிடமிருந்து விலகி இருக்க பாடாய் படுபவள் அவன் அருகிலிருக்கும் நேரத்தில் சுழலும் பூமி அப்படியே நின்று தன்னை இவனிடமிருந்து விலக்காமல் பார்த்துக் கொள்ளக் கூடாதா என ஆசைப்பட்டாள்.

         தன் தெருவின் முன் கார் நின்றதும் இறங்க முயன்றவளின் கரம் பற்றி நிறுத்தினான். திரும்பி அவள் பார்க்கையில் அவளது புறங்கையில் தன் இதழ் பதித்தான். அவளுக்கு முகம் சிவந்து விட்டது. வார்த்தைகள் உதடு தாண்டி வர மறுத்தன.

       "இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க சக்தி..." அவள் கண்ணின் இமைகள் படபடக்க அவனை பார்த்தாள். இதயம் படபடவென அடித்துக்கொண்டது. அவன் கைபிடியிலிருந்த தன் கையை உருவிக்கொள்ள  முயற்சித்தாள்.

      "நீ என்னை விலக்கி வைக்க வைக்க உன் மேல நான் வச்ச நேசம் அதிகமாகுதே தவிர குறைய மாட்டேங்குது சக்தி... நீ என் கூட சேர்ந்து வாழலான்னு பரவாயில்ல... இப்படியே எங்கேயாவது இருந்து நான் உன்னை தினம் தினம் பார்த்தா போதும்... எதிரியோட இடத்திலிருந்து நீ என்கிட்ட பேசுற சில வார்த்தைகளே போதும்... இப்படியேவாது நிம்மதியா வாழ்ந்துட்டு செத்துப்போறேன்..." தன்னிடமிருந்த அவளின் துப்பாக்கியை அவளது உள்ளங்கையில் வைத்தான்.

      அவனது வார்த்தைகள் பிடித்து வைத்திருந்த உண்மைகளை நன்றாக அறிவாள் சக்தி. தன் வயிற்றில் வளர்ந்த குழந்தையை உயிருடன் காப்பாற்ற யாரிடமும் சொல்லாமல் ஆக்ராவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செல்வாவின் வீட்டிற்கு சென்று அங்கு ஒரு வருடம் தங்கியிருந்தாள். திரும்பி வரவே விருப்பமில்லாதவள் தன் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே அக்குழந்தையை பிரிந்து வர காரணமே இவன் இவளை பிரிந்ததால் தன்னிலை மறந்து திரிந்ததுதான். அதை எப்படி அவனிடம் சொல்வாள் அவள்.?

      அவள் மௌனமாக காரிலிருந்து இறங்கினாள். அவனது வார்த்தைகளை சுமந்து கொண்டு அவளது இதயத்தை அவனிடமே விட்டு விட்டு வீட்டை நோக்கி நடந்தாள். தெருவின் கடைசியில் இருந்தது அவளது வீடு. தெருவிலிருந்த மற்ற வீடுகளில் இருந்தவர்கள் உறங்கி விட்டிருந்தனர் போல. காலியாக கடந்த தெருவில் தன் ஒரே இன்ப நினைவான இறந்த காலத்தை நினைத்தபடி நடந்தாள்.

       அன்று அப்பா நேசத்தை பற்றி புரிய வைத்தபிறகு மறுநாள் காலையில் அவள் கல்லூரி சென்றதும் அவளது கண்கள் தேடியது மகேஷைதான். செல்வாவும் சாமிநாதனும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருக்க இடையில் சிந்தனையோடு அமர்ந்திருந்தான் மகேஷ்.

      "என்னடா யோசிக்கிற..?" என்ற செல்வாவை திரும்பி பார்த்தான்.

       "சக்தி நேத்து என்னை அவ வீட்டுக்கு கூட்டி போனா.."

      நம்பாமல் பார்த்தனர் நண்பர்கள் இருவரும். "சத்தியமா..! நேத்து அவங்க அம்மாவுக்கு நினைவுநாள்... ஆனா மேட்டர் அது இல்ல... அவங்க வீட்டுக்கு போய்ட்டு வந்ததிலிருந்து எனக்கும் அவளுக்கும் நடுவுல இருந்த தூரம் குறைஞ்ச மாதிரி இருக்கு... அவ என் கண்ணுக்கு நேத்து வரை தேவதையாதான் தெரிஞ்சா... ஆனா இன்னைக்கு அவ என் கண்ணுக்கு சாமி மாதிரி தெரியறா.." சாமிநாதன் தன் வாய் மீது கை வைத்தான்.

     "சத்தியமா இது பங்கம்டா சாமி!"

     "உனக்கு பொறாமை... அவள நேத்து வீட்டுல ரொம்ப இயல்பா பார்த்தேன்... அவ்வளவு அழகா தெரிஞ்சா என் கண்ணுக்கு! அவ எனக்காக பிறந்தவடா..."

     "நீ எவ்வளவு வேணா பைத்தியம் போல உளரு... ஆனா என்கிட்ட அவ அழகை பத்தி வர்ணிக்காத.." என்ற செல்வாவை புரியாமல் பார்த்தான்.

    "ஏன்..?"

    "உன் அக்கா செக்ஸியா இருக்கான்னு நான் சொன்னா என்ன பண்ணுவ..?"

     "செருப்பாலயே அடிப்பேன்..."

     "அதேதான் எனக்கும்.. உன்ன விட வயசுல மூத்தவள உன் முன்னாடி வர்ணிச்சாலே உனக்கு இவ்வளவு கோபம் வருது... ஆனா சக்தி என் குட்டி தங்கைடா..! நீ அவளை காதலிக்கறத மட்டும்தான் என்னால ஏத்துக்க முடியும்... ஆனா நீ அவளை வர்ணிச்சா எனக்கு அன் ஈஸியா இருக்குடா.."

     உதடு கடித்தபடி அவனை பார்த்தவன் "ஸாரி.." என்றான். சாமிநாதன் ஸாரி கேட்டவனை அடக்க மாட்டாத சிரிப்போடு பார்த்தான்.

      சக்தி தயக்கத்தோடு தங்கள் அருகே வருவதை சாமிநாதன்தான் முதலில் பார்த்தான். தன் அருகிலிருந்த மகேஷின் இடுப்பில் முழங்கையால் இடித்தான். இடுப்பை தடவியபடி திரும்பி சாமிநாதனை முறைத்தான்.

     "என்னடா..?" கோபமாக கேட்டவனிடன் கண் சைகை காட்டினான். அவன் கண் காட்டிய இடத்தில் சக்தியை பார்த்தவன் சட்டென தன் முகத்திலிருந்த கோபத்தை விலக்கி புன்னகை பூத்தான்.

       "என்ன சக்தி..?" என கேட்டபடி முன்னால் நகர்ந்த செல்வாவை மனத்தில் திட்டி தீர்த்தான் மகேஷ்.

      "ம... மகேஷ் கூட கொஞ்சம் பேசணும்.." இருவருக்கும் இடையிலிருந்து விலகி நின்றான் செல்வா.

      அண்ணனை தயக்கமாக பார்த்தவள் "தனியா பேசணும்.." என்றாள். அதை கேட்டதும் மகேஷின் மனம் குட்டி கரணம் போட்டது. மகேஷை இன்னும் சற்று விலக்கி நிறுத்திவிட்டு பழிப்பு காட்டியபடி சக்தியை பின்தொடர்ந்தான்.

       யாரும் அதிகம் வராத இடத்திற்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள் சக்தி.

      "இங்க யாரும் இல்ல.." என்று வார்த்தைகளில் உறுதி கூறியவனை நிமிர்ந்து பார்த்தாள்.
       அவள் பேச தொடங்கும் முன் கை காட்டி நிறுத்தினான் மகேஷ்.

      "தயவுசெஞ்சி என்னை பிடிக்கலன்னு மட்டும் சொல்லிடாத... நமக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. நீ நல்லா யோசிச்சிட்டு ஒரு மாசமோ ஒரு வருசமோ கழிச்சி கூட சொல்லு..." என்றவனை தன் சிரிப்பை மறைத்தபடி பார்த்தாள்.

       "நீ என்கிட்ட உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேட்கவே இல்லையே..!?" மகேஷிற்கு தன்னையே அறைந்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

       'லவ் பண்ணுறத விட முக்கியம் அதை சொல்லுறது..'

        "ச... சக்தி உனக்கு என்னை பிடிச்சிருக்கா.."
  
        'பிடிச்சிருக்குன்னு சொல்லு.... பிடிச்சிருக்குன்னு சொல்லு...' கண்களை மூடியபடி மனதிற்குள் மனனம் செய்து கொண்டிருந்தவன் தன் கன்னத்தில் எதையோ உணர்ந்து கண் திறந்தான். 'அறைய போறாளா..?' ஆனால் அவளோ மெல்லிய முத்தம் ஒன்றை பதித்தாள்.

        'கனவுன்னு சொல்லி யாராவது எழுப்பிடாதிங்க..' தன் எதிரில் தலை குனிந்து நின்றவளின் கன்னத்தில் கிள்ளினான். "ஸ்ஸ்.." கன்னத்தை தேய்த்தபடி நிமிர்ந்து அவனை புரியாமல் பார்த்தாள்.

       "இது நிஜமாவே நிஜம்தான்... அட கடவுளே! சக்திக்கு என்னை பிடிச்சிருக்கு... சக்திக்கு நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா... சக்தி எனக்கு முத்தம் கொடுத்திருக்கா.. சக்தி எனக்கு.." அவன் அடுத்த வார்த்தை கூறும் முன் சட்டென அவனது வாயை பொத்தினாள்.

      "இன்னொரு வார்த்தை வெளியே வந்துச்சின்னா மகனே நான் உன்னை இங்கேயே புதைச்சிருவேன்... சரியா..?" சரியென அவன் தலையசைக்க தன் கையை பின்னால் எடுத்தாள்.

      "எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு... எங்க வீட்டுல எங்க அப்பாவுக்கு ஓகே... உங்க வீட்டுல சம்மதம்ன்னா சொல்லு நாளைக்கே கூட கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனா ஏமாத்திட்டு போக நினைச்ச உன்னை கொன்னுட்டு நானும் செத்துடுவேன்.."

      "நானா..? நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்... நீ ஏமாத்தினாலும் நான் ஏமாத்த மாட்டேன்.."

       "அப்ப சரி... இந்த முத்த மேட்டரை யார்க்கிட்டயும் சொல்லாத.." திரும்பி போக முயன்றவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

      "காதல் மேட்டரை சொல்லலாமா..?" யோசித்து விட்டு சரியென தலையசைத்தாள்.

       கலை இவளது காதல் விசயம் அறிந்ததும் சக்தியை சந்தோசத்தில் கட்டியணைத்துக் கொண்டாள்.

      "மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழ நினைச்சியே இப்போதான் எனக்கு ரொம்ப சந்தோஷம்..."

       ஆனால் சக்தி அப்போது கலையின் வார்த்தையிலிருந்த நிஜத்தை அறியவில்லை. தன் காதலுக்காக தன் சொந்த தாயையே பழி தந்த கலையை நினைக்கையில் சக்திக்கு மனதில் பாறாங்கல்லை வைத்தது போலிருந்தது.

      'சொர்கத்துல இருக்கியா..? இல்ல நரகத்துல இருக்கியா கலை..? நீ செத்து ரொம்ப வருசமானாலும் கூட உன்னை மறக்க முடியல கலை... என் காதலுக்கு குறுக்க வந்த சாதிக்காக நான் என் காதலனை பிரிஞ்சேன்... ஆனா உன் காதலுக்கு குறுக்க வந்த அந்தஸ்த்தை உடைக்க உன் சொந்த அம்மாவையே பழி தந்துட்ட... ஆனாலும் பாரு கடைசியில உன் காதல் சொர்க்கத்துல சேரணும்ன்னு விதி இருந்திருக்கு...'

      கலையை பற்றி யோசித்து நடந்தவள் தன்னை பின்தொடர்ந்து வந்த உருவத்தை கவனிக்கவில்லை. அந்த உருவம் தன் கையிலிருந்த கத்தியை சக்தியின் கழுத்திற்கு அருகில் கொண்டு வந்த போதும் அவள் அதை அறியவில்லை.

உங்களுக்கு சக்தியை பிடிச்சிருக்கா இல்ல மகேஷை பிடிச்சிருக்கான்னு மறக்கமா சொல்லுங்க நண்பர்களே...

கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க. Share பண்ணுங்க. 

    
     


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
06/08/2020 5:07 am  

அத்தியாயம் 12
   

     தன் கழுத்தை உரசியபடி நின்ற கத்தியை கண்டு தன் நடையை நிறுத்தினாள் சக்தி. அவளின் பின்னாலிருந்து நகர்ந்து வெளிச்சத்தில் வந்து நின்ற உருவத்தை கண்டதும் சக்திக்கு ஒரு நொடி மூச்சி நின்றது போலிருந்தது.

           "மூ...மூர்த்தி.." சக்தியின் குரலில் பதட்டம் தெரிந்தது.

       அவளது கழுத்தில் கத்தி சற்று அழுந்தவும் கத்தி பட்ட இடத்திலிருந்து கசிந்தது ரத்தம். "ஸ்ஸ்.." வலியோடு கூடிய எரிச்சலில் தன்னையும் மீறி முனகினாள்.

"என் பேரை சொல்லுற அளவுக்கு தைரியம் வந்துருச்சா உனக்கு..? எப்படி இருபது வருசமா என் மச்சான் பின்னாடி வராம இருந்துயோ அப்படியே இருக்க வேண்டியதுதானே..? உனக்கு இப்ப மறுபடியும் எதுக்குடி இந்த வேண்டாத சேர்க்கை.."

"நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நானும் மகேஷூம் விலகிதான் இருக்கோம்..." என்றவள் கத்தி மீண்டும் அழுத்தத்தோடு பதியவும் உதட்டை கடித்து வலியை கட்டுப்படுத்தினாள்.

"விலகி இருக்கறவங்க ஒன்னு சேர்ந்து மாஞ்செடி நடக்கூடாது. ஒன்னா ஓட்டலுக்கு போய் சேர்ந்து சாப்பிட கூடாது..."

"அதெல்லாம் ஒரு ஆக்ஸிடென்ட் மாதிரி..."

"என்னடி கதை விடுற..? அன்னைக்கு என் கையிலிருந்து உயிர் பிழைச்சிட்டா இன்னைக்கும் அதே மாதிரி உயிரோடு விட்டுருவேன்னு நினைக்கிறியா..?"

சக்திக்கு பழைய நினைவுகள் வந்து பயத்தை தந்தன. அதை விட அதிகமாக கோபம் வந்தது.

"நான் இன்னும் அதே பழைய சக்தி கிடையாது. உன் இஷ்டத்துக்கு ஈஸியா என் கழுத்தையும் அறுத்தர முடியாது... நான் இப்போ போலிஸ் இன்ஸ்பெக்டர்... என்னை கொல்லவும் உன்னால முடியாது. கொன்னுட்டா தப்பிச்சிடவும் முடியாது.."

"நீ போலிஸ்ன்னா உனக்கு என் மச்சான் மட்டும்தான்டி பயப்படுவான்... நீ போலிஸ் மட்டுமல்ல கலெக்டராவே ஆனாலும் எங்க சாதி மரியாதை உனக்கு கிடைக்காது... நீ என் கால் தூசுக்கு சமம்..." சக்திக்கு கோபத்தில் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது. அவனது கையை பற்றி மடக்கி அவன் கையிலிருந்த கத்தியை அவனது கழுத்துக்கு குறி வைத்து அழுத்தினாள்.

"நான் பழைய சக்தி இல்ல இது முதல் விசயம்.. நான் என் நேசத்தை மனசுக்குள்ளயே வச்சி மறைச்சிகிட்டு அவன் முன்னாடி வெறுப்பா நடந்துக்கறதுக்கு காரணம் உன் மிரட்டல் இல்ல.. அவனோட அம்மாவோட கண்ணீருக்காக... இது இரண்டாவது விசயம்.. மூணாவதாவும் ஒன்னு இருக்கு... எனக்கு சாதி மரியாதை தேவை கிடையாது... எனக்கு நான் என் சொந்த முயற்சியால வந்து சேர்ந்த இந்த வேலை தர மரியாதை போதும்... இதுக்கும் மேலயும் உன் வெட்டி மிரட்டலுக்கு பயப்படுவேன்னு நினைக்காத..." அவன் கழுத்திலிருந்து கத்தியை எடுத்தாள்.

"நீங்க கீழ்சாதின்னு சொல்ற நாங்கதான்டா உழைக்கும் வர்க்கம்... இந்த நாட்டுல உழைப்பு இல்லன்னா எவனுமே சுய மரியாதையோடு வாழமுடியாது... இன்னைக்கு இந்த கீழ்சாதிகாரி உனக்கு உயிர் பிச்சை தரேன்... பொழைச்சி போ..." அவனை விட்டு விலகி நடந்த சக்தியின் மனம் புயல் அடித்து ஓய்ந்தது போல சலனமற்று இருந்தது.

சக்தி அவளது வீடு நோக்கி நடக்க மூர்த்தி என்ன செய்வதென தெரியாமல் அருகிலிருந்த வீடுகளின் சந்து ஒன்றில் மறைந்து போனான்.

வீட்டின் திண்ணையிலேயே காத்திருந்தார் சக்தியின் அப்பா. இவளை கண்டதும் வாசலுக்கு எழுந்து வந்தார்.

"ஏம்மா இவ்வளவு நேரம்..?" அருகில் வந்தவரின் முகம் இருளடைந்தது போல இருந்தது.

"கழுத்துல என்னம்மா வெட்டுக்காயம்..?" அவரின் குரலில் இருந்த திகிலை கண்டு பெருமூச்சு விட்டவள் தன் உள்ளங்கையை கழுத்திலிருந்த வெட்டுக்காயத்தின் மீது அழுத்தினாள்.

      "வழிபறி ஒருத்தன வர வழியில கவனிக்க வேண்டியதா போச்சி... இது சின்ன காயம்தான்... சீக்கிரம் ஆறிடும்.."

     "பார்த்து பத்திரமா நடந்துக்கம்மா.." அவர் தன் கட்டிலை தட்டி விட்டு தலை சாய்ந்தார்.

     "இனியன் உங்ககிட்ட பேசுறேன்னாம்ப்பா..." செல்போனை அவரிடம் கொடுத்துவிட்டு தன் காயத்திற்கு மருந்து வைக்க சென்றாள்.

கண்ணாடியின் பிம்பத்தில் தெரிந்த தன் முகத்தில் சிறு கர்வம் தோன்றியதை அவளால் மறைக்க முடியவில்லை. தன்னால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு புது தெம்பை தந்தது.

மகேஷ் வீட்டிற்கு வந்தபோது அவனின் கண்கள் முதலில் தேடியது சந்தியாவைதான். "சந்தியா.." இவனது குரலுக்கு தனது அறையிலிருந்து ஓடி வந்தாள் அவள்.

"என்ன மாமா..?"

"என் ரூமுக்கு வா.." அவள் அறைக்குள் வந்ததும் அவளை அமர சொல்லி சைகை காட்டினான்.

"சக்தியை பத்தி உனக்கெப்படி தெரியும்..?"

சந்தியாவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. அவளுடன் ஒன்றாக படிக்கும் ரகு வெகுநாட்களாக அவளை ஒருதலையாக காதலிப்பதாக கூறி அவள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான். ஒரு வாரத்திற்கு முன்பு அவள் தனிபாதை ஒன்றில் தன்னந்தனியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்த போது அவளை பின்னாலிருந்து பின்தொடர்ந்து வந்தான் அவன். எதிர்பார்க்காத நேரத்தில் சந்தியாவின் கையை பற்றி விட்டான் ரகு. அவள் என்ன செய்வதென தெரியாமல் குழம்பி பயந்து நின்ற நேரத்தில் அங்கு எதேச்சையாக வந்தாள் சக்தி. சக்தியை கண்டு ரகு ஓடி விட்டான். ஆனால் சக்தி 'பெண்பிள்ளை தனியாக செல்லக் கூடாது' என சொல்லி அவளை ஊர் வரை வந்து விட்டுச் சென்றாள்‌. அப்படிதான் அவளுக்கு சக்தியை பற்றி தெரியும். சக்தி யாருடனோ போனில் பேசியதை கேட்ட பிறகுதான் சாமிநாதனுக்கும் தன் மாமாவிற்கும் ஏதோ தொடர்பு இருப்பது அவளுக்கு தெரியும். ரகுவை பற்றி சொன்னால் என்ன நடக்குமென சந்தியா அறிவாள். ரகுவிற்கு இருக்கும் சிறு சலனத்திற்காக அவனை தன் மாமாவிடம் பலிக் கொடுக்க அவள் விரும்பவில்லை.

"அன்னைக்கு ஒரு நாள் நான் தனியா நடந்து வந்துட்டு இருந்த போது அவங்கள பார்த்தேன். துணைக்கு ஊர் எல்லை வரைக்கும் வந்தாங்க... அவங்க ஃபோன் பேசிட்டிருந்தத கேட்டதாலதான் சாமிநாதன் சித்தப்பா பத்தி எனக்கு தெரியும்.." மகேஷ் யோசனையோடு நெற்றியை தேய்த்தான்.

"சக்திக்கு நீ யாருன்னு தெரியுமா..?"

"ம் தெரியும்.. என் பேர் கேட்டாங்க சொன்னேன்.." இது அவன் எதிர்பார்த்த பதில் இல்லை.

"நான் உன் மாமான்னு அவளுக்கு தெரியுமா..?"

"ம்கூம்.." என் தலையசைத்தாள். "அவ இவன்னு சொல்லுறிங்க அவங்கள... அவங்க போலிஸ் இன்ஸ்பெக்டர்..."

'அவ மத்தவங்களுக்கு மட்டும்தான் போலிஸ் இன்ஸ்பெக்டர். எனக்கு இல்ல.‌' என் நினைத்துக் கொண்டான்.

"சரி அப்படின்னா நீ தூங்க போ.."

"மாமா அந்த என்னவள் அந்த சக்தி மேடமா..?" காலையில் அவனது போனில் என்னவள் என்ற வார்த்தையை பார்த்ததிலிருந்தே அவளுக்குள் பல சந்தேகம். இன்று முழுக்க தன்னுடன் படிப்பவர்களோடு விசாரணை நடத்தி தன் மாமாவிற்கும் சக்திக்கும் இடையில் இருந்த காதல் கதையை அறிந்துக் கொண்டாள். ஆனாலும் அதை தன் மாமா வாய் வார்த்தையாக கேட்டுக் கொண்டால் ஒரு மன திருப்தியடைவாள்.

"ஆமா... ஏன்..?" என்றவனை முறைத்தாள்.

"என்கிட்ட ஏன் இவ்வளவு நாளா சொல்லவே இல்லை..?" சந்தியாவை கேள்வியாக பார்த்தான்.

"ஏன் சொல்லனும்..? நீயே ஒரு நண்டு... உனக்கெதுக்கு பெரியவங்க விசயம்..?" மகேஷின் தோளில் செல்லமாக அடித்தாள் சந்தியா.

"நான் நண்டு இல்ல... பெரிய பொண்ணு... நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா இன்னேரம் உங்களை நான் சேர்த்து வச்சிருப்பேன்..." அவளின் காதை பிடித்து திருகினான் அவன்.

"எத்தனை காதல் ஜோடியை நான் கொன்னிருக்கேன் தெரியுமா..? என்னாலயே அவளை கட்டுக்கு கொண்டு வர முடியல... நீ என்ன பெரிய பருப்பா..?" சந்தியாவின் முகம் இருளடைந்தது.

"நீங்க காதல்ல சேர் முடியலன்னு இருக்கற காதலர்களையும் கொல்லுறிங்க... நீங்க ரொம்ப கெட்டவங்க..." அவள் திட்டி விட்டு செல்ல அவன் தன் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கியப்படியே கட்டிலில் விழுந்தான்.

மகேஷை உறக்கம் தழுவிய நேரத்தில் வீட்டின் காலிங்பெல் ஒலித்தது‌. அதை கண்டுக் கொள்ளாமல் தூங்க முயன்றவன் சில நிமிடங்கள் கழித்து தனது அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு சலிப்போடு எழுந்தமர்ந்தான்.

"உன்னை பார்க்க வந்திருக்காங்க.." என்று உள்ளே வந்தாள் அம்மா.

"என் ரூம்க்குள்ள வராதிங்கன்னு எத்தனை முறை சொல்றது..?" என கேட்டபடி தன் அம்மாவை தாண்டி சென்றான்.

ஹாலில் கண்ணீரோடு நின்றுக் கொண்டிருந்த வாலிப பெண்ணொருத்தி இவனை கண்டதும் அருகில் வந்தாள். "காலேஜ் போன என் தம்பி அருண் இன்னும் வீட்டுக்கு வந்து சேரல...  அவனோடு கூட படிக்கிற பசங்கள கேட்டபோது அவனை சிலர் கடத்திட்டு போயிட்டாங்கன்னு சொல்றாங்க.‌‌.. என்ன பண்றதுன்னே தெரியல.. தயவு செஞ்சு அவனை காப்பாத்துங்களேன்..." முழு மூச்சில் கூறி விட்டு கண்ணீர் விட்டவளை கண்டதும் மொத்த தூக்க கலக்கமும் மறைந்து விட்டது மகேஷிற்கு.

அவளது நிலைமை அவனுக்கு நன்றாகவே புரிந்தது. "உன் தம்பியோட பிரண்ட்ஸ் ஃபோன் நம்பரை சொல்லு..." அவள் சொன்ன எண்ணுக்கு உடனடியாக அழைத்தான்.

"ஹலோ.. யார் பேசுவது..?"

"நான் மகேஷ்வரன் பேசுறன்‌... உன் பிரெண்ட் அருணை யார் கடத்திட்டு போனாங்கன்னு சொல்லு..." எதிர் முனையில் வெகு நேர தயக்கத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தான் அவன்.

"எ... எனக்கு தெரியாது..." அவன் மட்டும் நேரில் இருந்திருந்தால் அவனது பொடனியிலேயே இரண்டு போட்டிருப்பான் மகேஷ்.

"தூக்க கலக்கம் இல்லாம முதல் ரிங்க்லயே ஃபோன் எடுத்திருக்கியே அப்பவே தெரியும் நீயும் உன் பிரெண்டை நினைச்சி தூங்காம இருக்கன்னு.. அவனை காப்பாத்த நினைச்சா உண்மையை சொல்லு.."

"அது... அது.. இன்னைக்கு ஸ்டேட் லெவல்ல நடந்த வாலிபால் மேட்ச்ல எங்க காலேஜ்லயிருந்து கலந்துக்கிட்ட அருண் டீம் தோத்துடுச்சி.. அவன் மேலயும் டீம் மேலயும் பெட் கட்டியிருந்த சீனியர் பசங்க டீம் தோத்த கோபத்துல அருணை அடிச்சி இழுத்து கூட்டிட்டு போயிட்டாங்க..."

"அவங்க அவனை கூட்டிட்டு போன இடம் எதுன்னு தெரியுமா..?" தயங்கியபடி அவன் இடத்தை கூற மகேஷ் அழைப்பை துண்டித்தான். அந்த பெண்ணை அழைத்து கொண்டு அவன் அங்கு சென்றபோது மணி ஒன்றை தாண்டியிருந்தது.

வேலி போட்டிருந்த தென்னந்தோப்பின் இடையே வெளிச்சத்தை கண்டு காரிலிருந்து கீழே இறக்கினான் மகேஷ்.

"நீ இங்கேயே இரும்மா..." வேலிகளின் இடையே தெரிந்த கேட்டை தள்ளி உள்ளே நுழைந்தான்.

"என்னை விட்டுடுங்கடா... ப்ளீஸ்.." உடம்பெல்லாம் ரத்த காயத்தோடு கெஞ்சிய அருணின் முகத்தில் குத்து விட்டான் அருகிலிருந்த ஒருவன்.

"அவனை விட்டுட்டு இங்க வாடா மச்சி.. இல்லன்னா உன் சரக்கு எல்லாத்தையும் முகிலே அடிச்சிடுவான்.." அருணின் சீனியர்கள் ஐந்து பேர் வட்டமாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். 

"இருடா கொஞ்சம்... இந்த நாயை நம்பி நான் அந்த ராகவ்கிட்ட என் மொத்த காசையும் பெட் கட்டியிருந்தேன்... இவனால் எனக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா..? இந்த பொறம்போக்கு தோத்து போனதும் இல்லாம நாம இவன் மேல பெட் கட்டியதை பத்தி பிரின்சிபால்கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கு... இவனை இப்படியே விட்டா நம்ம கெத்து என்னாகும்..?"

"இது ஒரு சாதாரண கேம்... இதுக்கெல்லாம் எதுக்குடா என் மேல பெட்டை கட்டுறிங்க...? நீங்க குடிப்போதையில பெட் கட்டி விளையாட என்னை ஏன்டா யூஸ் பண்றிங்க..?" கோபத்தோடு கேட்டான் அருண்.

"அது சாதாரண கேம்தானே... அப்புறம் என்னதுக்குடா தோத்த..?" என எரிந்து விழுந்தபடியே அருணின் காலுக்கு உதை விட்டான் அவன். அருண் வலி பொறுக்காமல் கத்தவும் மீண்டும் காலிலேயே உதைத்தான்.

"ரொம்ப தப்பு பண்றிங்க..." மகேஷின் குரல் கேட்டு மொத்த பேரும் திரும்பி பார்த்தனர்.

சக்தியோடு தைரியம் உங்களுக்கு பிடிச்சிருக்கா..?

கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க. 

   
       


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
07/08/2020 9:20 am  

அத்தியாயம் 13

மகேஷ் அருணின் ரத்தம் கசியும் முகத்தையும் அங்கிருந்த மற்றவர்களையும் பார்த்தான்.

"ஏய்.. யார் நீ..?" குடிப்போதையோடு எழுந்து வந்து கேட்டவனின் கன்னத்தில் மகேஷ் பளீர் என ஒரு அறை விட்டதில் அவன் அங்கேயே சுருண்டு விழுந்து விட்டான்.

"படிக்கிற வயசுல நீங்க சூதாடுறதே தப்பு. இதுல நீங்க தோத்ததுக்கு அப்பாவி பையனை வேற அடிக்கிறிங்களா..?"

"நீ... நீ அந்த ரவுடி மகேஷ்தானே..?" என்று ஒருத்தன் பயத்தில் கேட்டதில் அங்கிருந்த அனைவருக்கும் போதை தெளிந்தது.

"இந்த ரவுடிக்கு நான் பயப்பட மாட்டேன்.." என கர்ஜித்தபடி ஒருவன் வர ஒரே நொடியில் ஓடி வந்தவனின் காலை இழுத்து அவனது முதுகை தரைக்கு அடித்தான் மகேஷ். கீழே விழுந்து கிடந்தவனின் முகத்தில் மகேஷ் ஒரே ஒரு குத்து விட அவன் அங்கேயே மயங்கி விட்டான்.

மற்றொருவன் தயக்கத்தோடு நின்ற இடத்திலேயே நிற்க அவனருகில் சென்று அவனது தாடைக்கு ஒரு குத்து விட அவன் தடுமாற்றத்தோடு மகேஷின் பாதையிலிருந்து விலகி நின்று கொண்டான்.

அருணை அடித்துக் கொண்டிருந்தவன் தன் கண் முன் நடப்பதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனருகில் வந்து விட்ட மகேஷ் அவனது கையை பிடித்து திருகி அவனை தன் முன் மண்டியிட வைத்தான்.

"படிக்கிற வயசுல படிக்கறத தவிர மத்த எல்லா ஆணியை புடுங்கறதுதான் உங்க வேலையா..?" தன் முன் வலியோடு முனகியபடி மண்டியிட்டிருந்தவனின் கன்னத்தில் நான்கைந்து அறைகளை விட்டான் மகேஷ்.

"அ... அவன் தோத்ததால எங்க காலேஜ்க்கே அவமானம்.." அவனது கன்னத்தில் மற்றோரு அறை விட்டான் மகேஷ்.

"அவன் ஜெயிச்சி காலேஜ்க்கு பெருமை சேர்த்த போது நீ அவனை கொண்டாடுனியா..? ஐம்பது மேட்ச்ல ஜெயிச்ச அவன் ஒரு மேச்சுல தோத்தா தப்புன்னு சொல்லுற நீ உன் காலேஜ் பேரை காப்பாத்த இதுவரைக்கும் என்ன பண்ணியிருக்க.. நீயும் ஒன்னும் செய்ய மாட்ட.. அடுத்தவன் ஏதாவது செஞ்சா அதையும் ஏத்துக்க மாட்ட... தண்டசோறு நீ... ஆனா அவனை அடிக்கற..." பேசியபடியே இன்னும் ஒரு அறையை விட்டான். அடி வாங்கியவன் எழுந்து நிற்க கூட சக்தியில்லாமல் கீழே விழுந்தான். மகேஷ் ரத்த காயங்களோடு இருந்த அருணை அங்கிருந்து அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

காருக்குள் அமர்ந்திருந்த அருணின் அக்கா இவர்களை கண்டதும் இறங்கி ஓடி வந்தாள். "அருண்... பாவி பசங்க எப்படி அடிச்சிருக்காங்க..." கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஓட தன் தம்பியை தோளோடு அணைத்துக் கொண்டாள் அவள்.

அவர்கள் இருவரையும் அவர்களது வீட்டில் மகேஷ் சேர்த்த போது இரவு நடுநிசியை தாண்டியிருந்தது. அவர்களது வீட்டில் இருந்தவர்கள் மகேஷிற்கு தங்களின் வாய் ஓயாமல் நன்றியை சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிளம்ப முயன்றான் மகேஷ்.

அருணின் அக்கா தன் முகத்தை துடைத்த படி மகேஷ் அருகில் வந்தாள். "நீங்க ரொம்ப பெரிய உதவி பண்ணியிருக்கிங்க... உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியல... உங்களுக்கு டைம் இருந்தா நாளைக்கு எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்களேன்... ப்ளீஸ்..."
மகேஷ் யோசித்து விட்டு "சரி... நாளை மதியம் வரேன்..." என்றான்.

சக்தி காலையில் எழுந்த போதே தலைவலி மண்டையை பிளப்பதை உணர்ந்தாள். தலைவலியை பொறுத்துக்கொண்டு அவள் ஸ்டேசனுக்கு வந்த உடன் அவளின் கண்கள் தேடியது வனஜாவைதான்.
சக்தியை கண்டதும் ஓடிவந்தாள் வனஜா.

"என்ன சக்தி ஆச்சி..? ஏன் முகமெல்லாம் வாடியிருக்கு..? கழுத்துல என்ன காயம்..?"

"ஒரு வழிப்பறி பொறுக்கி கத்தியோட நேத்து வந்துட்டான்க்கா... அவனை அடிச்சி துரத்திட்டேன்... ஆனா என்னவோ காலையில எழுந்ததில இருந்தே தலைவலி உயிரை வாங்குது.."

"மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டா..?"

"பரவால்லக்கா... இந்த தலைவலியை கூட சமாளிக்கலன்னா எப்படி இந்த வாழ்க்கையை வாழ முடியும்..? நீங்க அந்த அன்புசெல்வி அப்பாவோட சுத்து வட்டாரத்தை விசாரிச்சிங்களா..?"

"விசாரிச்சிட்டேன் சக்தி.. அன்புசெல்வி அப்பாவுக்கு பரம எதிரி கோபாலன். அவருக்கு அன்புசெல்வி அப்பா மேல கொலை காண்டு. அதனால் கண்டிப்பா நீ நினைச்ச மாதிரி சாட்சி கிடைக்கலாம்.."

"சரிக்கா... நீங்க போய் உங்க வேலையை பாருங்க... நான் அந்த கோபாலன் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்.."

சக்தி கிளம்ப முயன்றபோது கையிலும் தலையிலும் கட்டுப் போட்டபடி உள்ளே வந்தனர் ஐந்து இளைஞர்கள். அதிலிருந்த ஒருவன் சாடையாக பார்க்கையில் இனியனை போலவே இருந்தான்

"என்னப்பா ஆச்சி..? எங்க விழுந்திங்க..?" என கேட்டபடி அருகில் வந்தாள் வனஜா. "இப்படி உட்காருங்கப்பா.."

அருகிலிருந்த பெஞ்ச் ஒன்றை கை காட்டினாள்.

நொண்டியபடியே சென்று பெஞ்சில் அமர்ந்தனர் அனைவரும். சக்தி அருகிருந்த நாற்காலியை இழுத்து அவர்களருகே போட்டு அமர்ந்தாள்.

"மேடம் நாங்க கீழே விழல... ஒரு பைத்தியக்காரன் எங்களை அடிச்சிட்டான்.. நாங்க அவன் மேல கம்ப்ளைண்ட் தரோம்... ப்ளீஸ் ஆக்சன் எடுங்க.." இனியனை போல் சாடையடித்தவன் சொல்ல சக்திக்கு தன் மகனே சொல்லுவது போலிருந்தது.

"உன் பேர் என்ன..? உங்களை யார் அடிச்சது..?"

"என் பேர் முகில் மேடம்.. காலேஜ் தேர்ட் இயர் படிக்கிறேன்... எங்க ஜீனியர் அருணை நாங்க அடிச்சிட்டோம்ன்னு சொல்லி நேத்து நைட் எங்களை அடி பின்னிடாரு ரவுடி மகேஷ்... ஆனா அந்த அருண் மேல் எங்க சுண்டு விரல் கூட படலங்கறதுதான் உண்மை மேடம்... தயவு செஞ்சி அந்த மகேஷை பிடிச்சி ஜெயில்ல போடுங்க மேடம்.." மகேஷ்தான் இதில் சம்பந்த பட்டிருக்கிறான் என தெரிந்ததும் சக்திக்கு தலைவலி இன்னும் அதிகமானது.

'மகேஷோட இம்சை இல்லாத நாளே இருக்காதா..?'

"அக்கா இவங்ககிட்ட கம்ப்ளைண்ட் எழுதி வாங்குங்க.."

"அந்த அருண் மேலயும் கேஸ் போடுங்க மேடம்.. அவன் பணக்கார வீட்டு பையன்கற ஒரே காரணத்துக்காக தப்பே பண்ணாத எங்களை அடிக்க மகேஷை அனுப்பியிருக்கான்.."

"சரிப்பா... கண்டிப்பா.." என்ற சக்தியின் அருகே வந்த வனஜா "சக்தி அவங்க சொல்லுற அருண் கோபாலனோட பையன்.." என்றாள். சக்திக்கு முதலில் குழப்பமாக இருந்தது. பின்னர் அது கோபமானது. 'அவனால மட்டும் எப்படி எல்லா சைடும் கோல் போட முடியுது..? அருணை அரெஸ்ட் பண்ணா அன்புசெல்வி கேஸ்ல கோபலன்கிட்ட உதவி கேட்க முடியாது..'

"அருணையும் மகேஷையும் நான் கூட்டி வந்து விசாரிக்கிறேன்... நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க.."

அவர்கள் சென்றதும் சலிப்போடு நாற்காலியிலிருந்து எழுந்து நின்றாள் சக்தி.

"எப்படி வனஜாக்கா அவனை மட்டும் என்னால எதுவும் பண்ண முடியல..?"

"ஏனா அவன் ரவுடியா இருந்தாலும் நல்லவன்.." என்றபடி ஸ்டேசனுக்குள் வந்தாள் ஹெட் கான்ஸ்டபிள் ஜீவா. சக்தியை விட பன்னிரெண்டு வருடம் பெரியவளான ஜீவா மகேஷின் கலாரசிகையாக இருந்தாள். ஜீவா ஒவ்வொரு முறையும் மகேஷிற்கு பரிந்து பேசுவதும் அதை கண்டு சக்தி கடுப்பாவதும் எப்போதும் நிகழ்பவை. இன்றும் அப்படிதான் அவளை கடுப்புடன் பார்த்தாள் சக்தி.

"அவனுக்கு வக்காலத்து வாங்கறதை நீங்க நிறுத்துங்க அக்கா.." என்று எரிந்து விழுந்தாள்.

"நீ அவனை உன் எதிரியா பார்க்கறதை நிறுத்து.. அவன் ஒரு சமூக சேவகன்.. இந்த ஊர்ல பிரச்சனைகள் வராம இருக்கவே அவன்தான் காரணம்.. இந்த ஸ்டேசன்ல கைதிங்க யாரும் இல்லாத காரணமும் அவன்தான்.." இதை கேட்டதும் சக்தியின் கோபம் எல்லை மீறியது.

"அவன் சமூக சேவகன் இல்ல.. சமூக விரோதி..  இந்த ஊர்ல தப்பு நடக்காம இருக்க காரணம் அவன் இல்ல... இங்க நடக்கற எல்லா தப்பையும் செய்யுறதே அவன்தான்.. இந்த ஸ்டேசன்ல கைதிங்க இல்ல.. ஆனா அவன் இங்கே கைதியாக வந்து நிக்காத நாளே இல்ல.. வனஜாக்கா வாங்க நாம கோபாலன் வீட்டுக்கு போகலாம்.." அவள் விடுவிடுவென வெளியே நடக்க அவளை தொடர்ந்து ஓடினாள் வனஜா.

அவள் ஸ்டேஷன் வாசலுக்கு வந்த போது அவளின் ஃபோன் ஒலித்தது. ஃபோனில் குமரன் இருந்தார்.

"சொல்லுங்க ஸார்.."

"நீ உடனே கிளம்பி என் ஆபிஸ்க்கு வா.." அவரது குரலில் இருந்த அவசரம் கண்டு குழம்பிய சக்தி வனஜாவை அங்கேயே விட்டுவிட்டு குமரனை பார்க்க சென்றாள்.

நேராக அவரை தேடி சென்று அவர் முன் நின்று வீர வணக்கம் வைத்தாள்.

"எதுக்கு ஸார் என்னை கூப்பிட்டிங்க..?"

"இன்னும் இரண்டு நாள் கழிச்சி மகாராஷ்டிராவிலிருந்து மந்திரி மேகரீஸ் இங்கே வராரு.. அவர் கூட பாதுகாப்பு அதிகாரிங்க நிறைய பேர் வராங்க.. ஆனா அவர் இங்கே வந்த காரியத்தை முடிச்சிட்டு போற வரை நம்ம சைட்லயிருந்து ஒரு போலிஸ் ஆபிசராவது அவர் கூட இருந்தாகனும்.. நீதான் சாதிக்க விரும்பற ஆளாச்சே.. அதனால் அவருக்கு பாதுக்காப்பா உன்னைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கேன்.. உனக்கு சரிதானா..?" கடமைகளை கண்ணென நினைக்கும் சக்திக்கு இது பெரிய வேலையாக தெரியவில்லை.

"சரிங்க சார்.."

"அப்புறம் ஒரு விசயம்.. அந்த மந்திரி நம்ம மகேஷ் வீட்டுலதான் தங்க போறாரு.. நீயும் அந்த மந்திரி எங்கேல்லாம் இருக்காரோ அங்கேதான் இருக்கனும்.."

சக்திக்கு தன்னையே நொந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

"அவரை கவர்மெண்ட் கெஸ்டவுஸ்ல தங்க வைக்கலாமே ஸார்..!?" அவளை உற்று பார்த்தார் குமரன்.

"மேகரீஸும் மகேஷும் நண்பர்கள். அதனால அவர் மகேஷ் வீட்டுல தங்க போறாரு.. மந்திரியா இருந்தாலும் அவரும் மனுசன்தான்.. அவருக்கும் குடும்பம் நட்புன்னு இருக்கும்..‌ நாம ஒரு கவர்மெண்ட் சர்வண்ட்... நம்ம கவர்மெண்டை நடத்துற ஒருத்தருக்கு உதவி செய்ய நாம் எப்போதும் தயாராக இருக்கனும்..உன் சொந்த விருப்பு வெறுப்பை காட்டவா இந்த போலிஸ் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்த..?"

குமரனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லையென புரிந்து கொண்டாள் சக்தி. எத்தனையோ சோதனைகளை கடந்தவள் இதை கடக்க மாட்டாளா..?

"சரிங்க சார்.. வரப்போற மந்திரியோட நிழலாக இருந்து அவரை நான் பத்திரமா பார்த்துக்கிறேன்.. இப்போ நான் வரேன் சார்.." வீரவணக்கம் ஒன்றை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் ஸ்டேஷனுக்கு கூட செல்லாமல் நேரடியாக கோபாலனின் வீட்டிற்கு சென்றபோது மகேஷும் அதே சமயத்திற்கு அங்கு வந்து சேர்ந்தான்.

சக்தியை கண்டதும் புன்னகையோடு அருகே வந்தான். ஆனால் அவளது கழுத்திலிருந்த காயம் கண்ட மறு நிமிடமே அவன் முகம் இருளடைந்து போனது.

"கழுத்துல என்ன காயம்..?" அவளின் கை அனிச்சையாக சென்று கழுத்திலிருந்த காயத்தை மறைத்தது.

நண்பர்களே...
கதை பிடித்திருந்தால் மறக்காமல் vote பண்ணுங்க. Comment பண்ணுங்க. Share பண்ணுங்க.


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
08/08/2020 6:53 am  

சக்தியின் கையை விலக்கிவிட்டு அவளது கழுத்தை சோதித்தான் மகேஷ்.

"நேத்து நைட் வரைக்கும் இந்த காயம் இல்லையே.. எப்படி இது வந்தது..?"

"அ..அது நேத்து நைட் நீ என்னை விட்டுட்டு போனபிறகு ஒரு வழிப்பறி கத்தியோட எதிர்ல வந்துட்டான்.." அவனது கையை தட்டிவிட்டு அவனை விட்டு விலகி நின்றாள்.

மகேஷிற்கு கோபத்தில் முகம் சிவந்தது. "ஒரு வழிப்பறி வந்து கழுத்துல கத்தி வைக்கும் வரை நீ என்ன பூவா பறிச்சிட்டு இருந்த..?" அவளது காயம் அவனுக்கு வலியை தந்தது.

"இது சின்ன காயம்தான்... விசயம் இதில்ல... நான் உன்னை அரெஸ்ட் பண்ண நான் வந்திருக்கேன்.." அவளை புரியாமல் பார்த்தான் மகேஷ்.

"எதுக்கு.. இந்த முறை என்ன பொய் கேஸ் போட போற‌‌..?" சக்திக்கு ஆத்திரமாக வந்தது.

"பொய் கேஸ் போட வேண்டிய அவசியம் எனக்கில்லை... நீ இந்த வீட்டு பையன் அருண்கிட்ட காசு வாங்கிகிட்டு காலேஜ் பசங்க சிலரை அடிச்சி துவைச்சிருக்க.. சின்ன பசங்கள அப்படி போட்டு அடிச்சிருக்கியே உனக்கு மனசாட்சியே இல்லையா..?"

மகேஷ் அவளை சில நிமிடம் மௌனமாக பார்த்தான்.

"என்னை ஏன் இப்படி பாக்கற..? உன் வீரத்தை காட்ட அந்த சின்ன பசங்கதான் கிடைச்சாங்களா..? உன்னால உன் வாழ்நாளுல ஒரு நாள் சும்மா இருக்க முடியாதா..? உன்னால இப்படி தினம் தினம் இம்சையை அனுபவிக்கிறத விட எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு போய் தொலையலாம்.." வார்த்தைகள் அனைத்திலும் வெறுப்பை நிரப்பி பேசியவளை கண் கொட்டாமல் பார்த்தான்.

"ஏன் இப்படி அமைதியா சிலை மாதிரி நிக்கற..? இந்த முறையும் உன் மேல தப்பேதும் இல்லன்னு சொல்லு... நான் கண்ணுல பார்த்த அந்த காயம் பட்ட பசங்க எல்லோரும் இந்த பூமியில இல்லாதவங்கன்னு சாட்சி ரெடி பண்ணு.. அதையெல்லாம் விட முக்கியமா இந்த சக்தி ஒரு பைத்தியகாரின்னு ஒரே ஒரு சர்டிபிகேட் ரெடி பண்ணு... மொத்த வேலையும் முடியட்டும்.."

மகேஷை அழைக்க வந்த அருணின் அக்கா மகேஷை கண்டதும் புன்னகையோடு அவனருகே வந்தாள். ஆனால் சக்தியை கண்டதும் தயங்கி நின்றாள்.

"சக்தி மேடம்... நீங்க என்ன வேலையா இவ்வளவு தூரம் வந்திருக்கிங்க..?" தயக்கமாக கேட்டவளுக்கு மகேஷ் பதிலளித்தான்.

"நான்தான் விருந்து சாப்பிட வர சொன்னேன்... நீ போய் இலையை போட்டு வை.. நான் இவள... இவங்கள கூட்டிட்டு வரேன்.."

அவள் சென்றதும் முன்பைவிட கோபமாக மகேஷின் புறம் திரும்பினாள் சக்தி.

"அங்கே அந்த பசங்க வலியோடு இருக்காங்க... ஆனா நீ இங்கே விருந்து சாப்பிட வந்திருக்க..!"

"நீ என்னைக்குமே என் மேல நம்பிக்கை வச்சதில்ல சக்தி... இன்னைக்கும் கூட அப்படித்தான்.. காயத்தோடு வந்த அவங்க பக்கமிருந்த நியாயத்தை மட்டும் கேட்டுட்டு என் பக்கம் இருக்கற நியாயத்தை கேட்க கூட நீ தயாரா இல்ல.. உன்னை பொறுத்தவரை நான் மனசே இல்லாத ஒரு மிருகம் அப்படிதானே..?"

"அதை நீ இல்லன்னு மறுத்து சொல்லப் போறியா..?"

"நான் மறுத்து சொன்னா நீ நம்ப போறியா..?" என்றவன் அவளின் கரம் பற்றினான்.

"என்ன பண்ற..? என் கையை விடு.."

"அமைதியா என்னோடு சாப்பிட வா.. சாப்பிட்டு முடிச்சிட்டு அப்புறமா எது வேணாலும் பேசலாம்..." அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

அவளை கட்டாயப்படுத்தி அமரவைத்து விட்டு அவளருகே தானும் அமர்ந்தான். அருணின் அக்கா இருவருக்கும் உணவு பறிமாறினாள். சக்தியை சந்தேக கண்களோடு பார்த்தாள்அவள். அவள் மகேஷிடம் சிரித்து சிரித்து பேசுவதை கண்டு சக்தியும் அவள் மீது சந்தேகம் கொண்டாள்.

"பாகற்கா பொரியல் வச்சிக்கங்க.." அவள் மகேஷிற்கு பரிமாற முயல அவளை கை காட்டி தடுத்தாள் சக்தி.

"அவனுக்கு... அவருக்கு கசப்பு பிடிக்காது... அந்த பொரியலை எனக்கு வைங்க.." சக்தி சொன்னதை கேட்டு அவளை சந்தேகமாக முறைத்தாள் அருணின் அக்கா.

மகேஷிற்கு மனதுக்குள் ஏனோ பட்டாம்பூச்சி பறந்தது. முகமெல்லாம் சிரிப்பு ரேகை ஓட முயன்றது.

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்த அறை ஒன்றை நோக்கி நடந்தான் மகேஷ்.

"என்ன எங்க கூட்டி போற மகேஷ்..?" அவள் கேட்டு முடித்த நேரம் அவளை அந்த அறைக்குள் இழுத்து வந்திருந்தான் அவன். அங்கே படுக்கையில் உடம்பு முழுக்க கட்டோடு படுத்திருந்தான் அருண். அவனது முகமெல்லாம் காயங்களால் கன்றிப் போயிருந்தது. இவர்களை கண்டதும் எழ முயற்சித்தான் அவன். அருகே சென்று அவனை எழ விடாமல் தடுத்தான் மகேஷ்.

சக்தி அருணின் நிலையை கண்டதும் குழம்பி விட்டாள். ஒன்றும் புரியாமல் மகேஷை பார்த்தாள். கட்டிலின் அருகே இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்த மகேஷ் தன் அருகிலிருந்த இருக்கையில் அமரச் சொல்லி சக்திக்கு சைகை காட்டினான். அவள் மறுப்பு கூறாமல் அமைதியாக வந்து அமர்ந்தாள். அருணின் காயங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவளை மகேஷ் அர்த்தமாக பார்த்தான்.

"அருண் ஒரு வாலிபால் வீரன். நேத்து நடந்த மேட்ச்ல இவனோட டீம் தோத்துடுச்சி... இவன் மேல பெட் கட்டியிருந்த சீனியர் பசங்க இவனை அடிக்கறதுக்காக கடத்திட்டு போய்ட்டாங்க... நேத்து நான் சரியான நேரத்துக்கு அங்கே போகலன்னா அவனுங்க இவனை அடிச்சே கொன்னிருப்பானுங்க.."

"அப்போ அவங்க சொன்னதெல்லாமே பொய்யா..?"

"அவங்க சொன்னது முழுசா பொய் கிடையாது... அவங்கள நான்தான் அடிச்சேன்... நீ கேஸ் போடுறதா இருந்தா என் மேல் மட்டும் போடு.. இவன் படிக்கிற பையன்... என் மேல் இருக்கற கோபத்துல இவன் வாழ்க்கையை நாசமாக்கிடாத.." அவன் சொல்லி முடிக்கவும் எழுந்து நின்றாள் சக்தி.

"இவன் மேல எனக்கொன்னும் விரோதம் கிடையாது... தேவையேயில்லாம மத்தவங்க லைப்பை அழிக்க நான் ஒன்னும் மகேஷ் கிடையாது.." என்றவளை உச்சந்தலையில் கொட்டி வைக்க வேண்டும் போலிருந்தது மகேஷிற்கு.
'இவ திருந்தவ மாட்டாளா..?'

சக்தி அங்கிருந்து கிளம்ப நினைத்தபோது அருணின் அக்கா தன்னோடு ஒருவரை அழைத்து வந்தாள். சக்தியை கண்டதும் அருகில் வந்தார் அவர்.

"மேடம் நான் அருணோட பிரின்சிபால்.. அந்த முகில் குரூப் மேல நான் அபிஷியலா கம்ப்ளைண்ட் தரேன்... அவங்க மேல நீங்க எல்லாவித ஆக்சனும் எடுக்க இந்த கம்ப்ளைண்ட் லெட்டர் உதவும்... அவங்க இதுக்கு முன்னாடி பண்ண நிறைய தப்புகளை கூட இதுல எழுதியிருக்கேன்.." என்றவர் கடிதத்தை நீட்ட சக்தி மகேஷை ஒரு பார்வை பார்த்தபடி அதை வாங்கிக் கொண்டாள்.

அருணின் பிரின்சிபால் மகேஷின் அருகே வந்து அவனை தோளோடு அணைத்தார்.

"ரொம்ப நன்றி மகேஷ்.. அருணை காப்பாத்தினதுக்கு நாங்க எல்லோரும் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கோம்.. அருணை போல ஒரு நல்ல ஸ்டூடன்ட்டுக்கு ஏதாவது ஆகியிருந்தா எங்க காலேஜ் பேர் முழுசா கெட்டுப் போயிருக்கும்.." மகேஷ் ஓரக்கண்ணால் சக்தியை பார்த்தான். அவள் உதட்டை கடித்தபடி வேறு திசைக்கு முகத்தை திருப்பினாள்.

"சரிங்க ஸார்.. எனக்கும் மேடத்துக்கும் வேலை இருக்கு.. நாங்க கிளம்பறோம்.." மகேஷ் சக்தியை அழைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த போது அருணின் அம்மா அருணின் அக்காவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டு அங்கேயே நின்றான்.

"அந்த போலிஸ்காரி போன உடனே மொத்த வீட்டையும் கழுவி விடுடி.. போலிஸ் ஆனாலும் சரி.. அவ மந்திரியாவே ஆனாலும் சரி.. அவளோட சாதி தீட்டு விட்டு போகுமா..?"

இதை கேட்டதும் மகேஷிற்கு ரத்தம் கொதித்தது. பற்களை கடித்து கோபத்தை அடக்கியபடி சக்தியை பார்த்தான்.

சலனமற்று இருந்தவள் அவனது கையிலிருந்த தன் கரத்தை விடுவித்து கொண்டு முன்னேறி நடந்தாள். சக்தியை கண்டதும் பெண்கள் இருவரும் தங்களது பேச்சை நிறுத்திக் கொண்டனர்.

"அப்புறம் மேடம்.. ஸ்வீட் ஏதாவது சாப்பிடுறிங்களா..?" என ஒன்றும் அறியாதது போல சிரித்த முகத்துடன் கேட்டாள் அருணின் அம்மா.

"இல்லைங்க.. எதுவும் வேண்டாம்.. உங்க வீட்டுல கொஞ்சம் முன்னாடி நான் சாப்பிட்ட சாப்பாடே இன்னும் ரொம்ப நேரம் தாங்கும்.." அவளும் அதே சிரித்த முகத்துடன் கூறி விட்டு வெளியே நடந்தாள். மகேஷ் பதில் பேச விரும்பாமல் அவளை பின்தொடர்ந்து வெளியேறினான்.

வாசலுக்கு வந்த பிறகு அவளது கை பற்றி அவளை நிறுத்தினான்.

"ஸாரி சக்தி... என்னால்தான் நீ இப்படி ஒரு சூழ்நிலையை சந்திக்க வேண்டியதாயிடுச்சி.."

"இதுக்கு காரணம் நீ இல்ல... அவங்களோட இந்த வார்த்தைகள் என்னை பாதிக்காது.. சின்ன வயசுல என்னை பயப்படுத்தின ஒரு கேள்வி நீ என்ன சாதிங்கறதுதான்... ஆனா நான் இப்போது அந்த கேள்விக்கு பயப்படுறது இல்ல.. ஏனா உன் சாதி போல என் சாதியும் என் முன்னோர்கள் மூலம் எனக்கு வந்து சேர்ந்திருக்கு.. உன் சாதிக்கு ஒரு கௌரவமும் வரலாறும் இருப்பது போல் என் சாதிக்கும் ஒரு வரலாறும் கௌரவமும் இருக்கு... இவங்களுக்கு சமத்துவம் இல்லாததால நான் உன் மொத்த சமூகத்தையும் குறை சொல்ல மாட்டேன்.. இவங்க நான் நின்ற இடத்தை கழுவி விடுறதால என் சாதியால் எனக்கு கிடைச்ச வரலாறை அழிச்சிட முடியாது... சமத்துவ குணம் இல்லாத அவங்க இருக்கற வீட்டுக்கு வந்தது என் தவறில்லை... இதுல உன் தவறும் ஏதுமில்லை.." அவனுக்கு பதில் என்ன சொல்வதென தெரியவில்லை.

அவனை தாண்டி தன் வாகனத்தை நோக்கி நடந்தாள் சக்தி. அவளை தொடர்ந்தவன் அவளுக்கும் முன்னால் வண்டியில் ஏற முயல அவனை பிடித்து நிறுத்தினாள் சக்தி.

"நீ ஏன் என் வண்டியில ஏறுற..?"

"என்னை அரெஸ்ட் பண்ணதானே நீ இவ்வளவு தூரம் வந்திருக்க..?"

"உண்மை என்னன்னு தெரியும் முன்னாடிதான் உன்னை அரெஸ்ட் பண்ண இருந்தேன்.. அருணை அந்த பசங்ககிட்டயிருந்து காப்பாத்தியிருக்க வேண்டியது நான்தான்... ஆனா நீ என் இடத்துல இருந்து அந்த பையனை காப்பாத்தியிருக்க... இதுக்கு நான் உனக்கு நன்றிதான் சொல்லனும்.." என்றவளை நம்பாமல் பார்த்தான் மகேஷ்.

"நிஜமா சொல்றியா..? நீ என்னை அரெஸ்ட் பண்ண போறதில்லையா..?"

"இல்ல.. நான் சட்டத்தை என் கண்களை போல மதிக்கிறேன்... நீ செஞ்ச கொலைகளுக்காக ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடு வந்து உன்னை அரெஸ்ட் பண்றேன்..." என்ற சக்தியை வியப்போடு பார்த்தான் மகேஷ்.

சக்தி அங்கிருந்து கிளம்பி செல்ல மகேஷ் தன் வீடு நோக்கி சென்றான்.

சக்தி ஸ்டேசனுக்கு வந்த பொழுது அவளது வரவை எதிர் நோக்கி காத்திருந்தது முகிலின் நண்பர்கள் கூட்டம்.

"அவங்களை அரெஸ்ட் பண்ணலயா மேடம்..?" சக்தியை பார்த்ததும் எழுந்தோடி வந்து கேட்டான் முகில். அவனை மேலும் கீழும் பார்த்தாள் சக்தி.

"பொய் கேஸ் தந்ததுக்கு உன்னைதான் அரெஸ்ட் பண்ணணும்..." சக்தி சொன்னதை கேட்டு முகிலின் முகத்தில் பயரேகை ஓடியது. அவன் பயத்தோடு ஓரடி பின்னால் எடுத்து வைத்தான்.

"நா.. நாங்க பொய் சொல்லல மேடம்..." முகிலின் வார்த்தைகள் தடுமாற்றத்தோடு வெளி வந்தன.

"உங்க காலேஜ் பிரின்சிபால் உங்க மேல கம்ப்ளைண்ட் தந்திருக்காரு... நான் என்ன செய்யனும்ன்னு இனி நீங்களே சொல்லுங்க..." கம்ப்ளைண்ட் லெட்டரை அவர்களின் முன்னே நீட்டினாள் சக்தி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

நண்பர்களே இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம vote பண்ணுங்க... Comment பண்ணுங்க..


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
08/08/2020 1:53 pm  

Hi Sevanthi, I like mahesh character so much. Sakthi, mahesh kita matti mulikarala illa mahesh sakthi kita matti mulikarana 😀 😀 .. Story super a eruku 👍 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 47
09/08/2020 5:41 am  

@vaniprabakaran நன்றிகள் நட்பே.. ❤️ ❤️ ❤️ 


ReplyQuote
Page 2 / 5
Share: