Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

வெற்றியடி நான் உனக்கு !!!  

Page 1 / 2
  RSS

Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
06/08/2020 5:38 am  

        வெற்றியடி நான் உனக்கு!!!

அத்தியாயம் - 1

அது ஒரு திருமண மண்டபம், மிகவும் பிரமாண்டம் இல்லை என்றாலும் சற்று விசாலமாகவும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டிருந்தது. வாழை மரங்களாலும், பூக்களினால் செய்யப்பட்ட தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டதில் அலட்டலில்லா அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருக்க "அர்ஜுன் வெட்ஸ் ஸ்ருதி" என்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகை, அந்த இளங்காலையின் சூரிய கதிர்கள்  பட்டு மேலும் மின்னிக் கொண்டிருக்க, அதனை கண்டவளின் கண்களில் இன்னதென பிரித்தரியமுடியா உணர்வு, இதழில் மட்டும் புன்னகை !!!

கண்கள் வருடியதை கைகள் கொண்டு வருட ஆவலெழ, அதற்கு தடா போட்டது அவளது அன்னையின் குரல்.

"ஏன் டி இந்த மேக்கப் இங்க பண்ணினா ஆகாதா, அந்த பார்லர்க்கு தான் போகணுமா? எல்லாம் உன் இஷ்ட்டம் தான்" என அடைமழையாய் வெளுத்து வாங்கியவரின் கண்களோ மகளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது.

அடைமழை நொடியில் பனித்தூறலாய் மாற மகளின் முகம் வழித்து திருஷ்டி எடுத்து "என் பொண்ணு எவ்ளோ அழகாயிருக்கா பாரு, என் கண்ணே பட்டுடும் போல" என்றவர் மீண்டும் அடைமழையாக மாறி "சரி சரி சீக்கிரம் வா, அப்பா வேற மாப்பிளையே மனையில உக்காந்தாச்சு, இன்னுமா உன் பொண்ணு மேக்கப் முடிஞ்சி வரலனு கேட்டுட்டுஇருந்தாரு" என அவர் முன் செல்ல, தன் சொந்தங்களின் புடைசூழ அவள் வந்துக்கொண்டிருக்க "நல்ல நேரம் போய்ட்டு இருக்கு, பொண்ண அழைச்சுட்டு வாங்கோ" என்று ஐயர் குரல் கொடுக்கவும் சரியாக இருந்து.

அதுவரை மேடையில் நிலைத்திருந்த அனைவரின் பார்வையும், இவள் வந்துக் கொண்டிருந்த திசை நோக்கித்திரும்ப,  நாணம் பூசிக் கொண்டது இவளின் முகம் !

மென் சிரிப்புடன் அனைவரது பார்வையும் எதிர் கொண்டவளது பார்வை, மேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை கர்ம காரியமாக சொல்லிக் கொண்டிருந்தவனிடம் படிய, இதழ்கள் மேலும் விரிந்தது.

தன் அருகில் ஒலித்த வளையல் சத்தத்தில் பார்வையை திருப்பியவளின் கண்கள் கண்டது, மணமகள் அலங்காரத்தில் தன்னை கடந்து செல்லும் பெண்ணை !

தூக்கத்தில் வந்த இனிய கனவுக்  கலைந்து எழுந்தது போன்ற நிலை அவளது.

கண்களை சூழலவிட்டவளது பார்வையில், சற்று முன் கண்ட அவளின் சொந்தங்கள் இல்லை! மேடையில் மணமகன் அமர்ந்து மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தான், ஆனால் அது அவன் இல்லை! கண்கள் தன்னிச்சையாக அந்த பெயர் பலகையைப் பார்க்க அதில் மின்னியது "ரமேஷ் வெட்ஸ் கவிதா".

நொடியில் அவளது மடமை விளங்கிவிட, அதன் வெளிப்பாடாய் வந்தது நிறைவேறாத ஆசையின் வலி மற்றும் அடுத்தவர்க்குச் சொந்தமான பொருளை தன் மனம் இன்னுமா மறக்கவில்லை என்ற கோபம் மட்டுமே.

இரண்டு வருடத்திற்கு முன்புவரை தேனாய் இனித்த இதுபோன்ற கற்பனையான நினைப்பு, இன்று தனலாய் தகித்தது அவளுள்.

ஏனோ, கால்கள் தளர்வதை போல் உணர்ந்தவள் அருகிலிருந்த இருக்கையைப்பற்றி அமர்ந்த நேரம், அனைவரும் எழுந்து மணமக்களுக்கு அர்ச்சதைத் தூவி ஆசிவழங்கினார்.

அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை, இரவு இமைமூடும் முன்னும், காலை இமைத்திறந்த பின்னும் தன் பிம்பத்தையே அவளது கண்களில் நிறப்புபவள், தன்னை கைகளில் தாங்கும் தலைவியவள்! அந்த தலைவியின் தவிப்பை போக்க எண்ணியதோ என்னவோ? அவளுக்கு பிடித்த பாடலைக் கொண்டு ஒலிக்க தொடங்கியது அவளின் செல்போன் !!!

"யூ ஆர் மை பம்கின், பம்கின்….
ஹலோ அனி பனி….
ஐ அம் யூ ஆர் டம்ப்ளிங் டம்ப்ளிங்….
ஹலோ அனி பனி….
பீலிங் சம்திங் சம்திங்….
ஹலோ அனி பனி….
அனி பனி… டோகோ…டோகோ…"

இருக்கையில் அமர்ந்து தன்னை சமன்படுத்த, கண் மூடி ஆழ மூச்சுகளை எடுத்துக்கொண்டிருந்தவளின் செவியையடைந்தது அந்த பாடல். இமைத்திறந்தவள், பதறிய மனதை திசைத்திருப்பும் பற்றுக்கோளாய் அந்த பாடல் வரிகளை மாற்றியவள், மெல்ல அதனை  முணுமுணுத்தாள்.

சில விஷயஙகள், மனதுக்கு பிடிக்க காரணங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை. அத்தகைய காரணமில்லா பிடித்தமே இந்த பாடல் அவளுக்கு. மனம் துள்ளிடும் இந்த பாடலை கேட்கையில் அவளுள். ஒருவேளை மனதின் துள்ளல் தான் பிடித்ததிற்கு காரணமோ? அதை அவளே அறிவாள் !!!

மனதை சமன்படுத்துவதில் வெற்றி கண்டவள், மெல்ல எழுந்து தான் இங்கு வந்ததற்கான வேலையில் தன்னை  ஈடுபடுத்திக்கொண்டாள்.

                         *********

பிரபல மருத்துவமனை வளாகம், மகளிர் சிறப்பு மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு.

காலை எட்டுமணிக்கே அங்கு கூட்டம் நிரம்பி வழியக்காரணம், அன்று ஸ்கேன் நாள்.

கருவுற்றிந்த பெண்கள், தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அறிய ஆவலுடன் அமர்ந்திருந்தனர். அனைவரது முகங்களிலும் தாய்மை தந்த மலர்ச்சியும், பூரிப்புடனும் இருக்க, அங்கிருந்த இரண்டாம் வரிசையின்,  நான்காம் இருக்கையில் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் முகத்தில் மட்டும் படபடப்பு, அதனுடனே காதில் போன் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

எதிர்முனையில் அழைப்பு எடுக்கவில்லை போலும், மீண்டும் முயற்சித்தாள் அதே நிலை. மறுமுறை முயற்சிக்கையில், மிஸ்சஸ். ப்ரீத்தி சித்தார்த் என்ற செவிலியரின் அழைப்பில் இருக்கையிலிருந்து எழுந்தவள், முறைப்புடனே தனது உடமைகளை அருகிலிருந்த கணவனிடம்
கொடுத்தவள், தனது எழுமாத பிள்ளையை சுமந்துகொண்டு மென் நடையிட்டு ஸ்கேன் அறை நோக்கி சென்று மறைந்தாள்.

சிறிது நேரம் கடந்திருந்த நிலையில், ப்ரீத்தியின் போன் அலற அழைப்பை ஏற்ற அவளது கணவன் சித்தார்த் ஹலோ என்பதற்குள், "என்ன அண்ணியாரே ஸ்கேன் போட்டாச்சா?" என மறுமுனையில் வந்த கேள்வியால் இதழ்கள் மெல்லிதாக விரிந்தது அவனுக்கு.

"ஸ்ருதி நான் அண்ணன் பேசுறான் டா, அவ ஸ்கேன் ரூம் போயிருக்கா, நீ ஸ்சேபா  மண்டபம் ரீச் ஆகிட்டிய?"

"ம்ம் அண்ணா, ஸ்சேபா போய்ட்டேன்"

"ஏற்கனவே உன்ன அவ்ளோ லாங் அனுப்பவேணாம், நான் மட்டும் போய் ஸ்கேன் போட்டு வந்துடுறேன் நீங்க மண்டபதுக்குபோங்க அப்படினு சொல்லிட்டுயிருந்தா, அவ பேச்சை மீறி உன்ன அனுப்பினேன் அதுக்கு கோபம், உனக்கு கால் பண்ணி போகவேணாம்னு சொல்ல ட்ரை பண்ணினா நீயும் போன் எடுக்காததால இன்னும் கோபம், மொறைச்சிட்டே போயிருக்கா ஸ்கேன் போட, சரி நீ போன வேலை முடிஞ்சிதா மா?"

"முடிஞ்சிது அண்ணா, பொண்ணு வீட்லயிருந்து பேலன்ஸ் அமௌன்ட் வாங்கி மண்டபத்துக்கு செட்டில்மென்ட் பண்ணியாச்சு இன்னும் அந்த கேட்டரிங் காண்ட்ராக்டர் மட்டும் வரல அவர் வந்தா அவருக்கும் செட்டில்மென்ட் பண்ணிட்டு கிளம்பவேண்டியதுதான்"

"சரி ஸ்ருதி, ரொம்ப நேரம் வெயிட் பண்ணாத பத்து நிமிஷம் வரைக்கும் பாரு ,அதுக்குள்ள அவர் வரலைனா நீ கிளம்பிடு மா, நான் அவர நம்ம ஆபீஸ்க்கு வரச்சொல்லி செட்டில் பண்ணிடுறேன்"

மிஸ்டர்.சித்தார்த் உங்கள டாக்டர் உள்ள வரச்சொல்றாங்க என்ற செவிலியரின் அழைப்பில் "நீ பாத்து வீட்டுக்கு போய்ட்டு ஸ்ருதி" என அழைப்பை துண்டித்த சித்தார்த் டாக்டரை காண சென்றான்.


Quote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
09/08/2020 4:08 pm  

அத்தியாயம்- 2

மண்டபத்திலிருந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு தன் வீட்டை நோக்கி பயணித்தாள் ஸ்ருதி.

வயது-24, உயரத்திற்கேற்ற எடை, அடர்த்தியான கேசம், அதனை கேட்ச் கிளிப்பின் உதவி கொண்டு அடக்கியி ருந்தாள். காதுகளில் அளவான தங்க வளையங்கள், அதனை தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு பொருந்தியி ருந்தது மேலும் ஒரு சிறு வளையம்,  திருத்தப்பட்ட புருவங்களின் மத்தியில் சிறிய கருப்பு நிற ஐடெக்ஸ் பொட்டு. கழுத்தில் டாலருடன் கூடிய ஒரு மெல்லிய ஷார்ட் செயின். வெளியே செல்வதற்கேன அணியும் காட்டன் சுடிதார், அதன் ஷால் இடது தோள்  பக்கம்  மடித்தும்,  வலது தோள் பக்கம் விரித்தும் பின் செய்யப்பட்டிருக்கும். இதுவே ஸ்ருதி !

அப்பா சோமசுந்தரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை பூர்விகமாகவும், சமையலை தொழிலாகவும் கொண்டவர். அம்மா தனலட்சுமி, 32 வருடங்களாக சோமசுந்தரத்தின் இல்லத்தை கட்டியாளும் அரசி. இரண்டு அண்ணன்களுக்கு அடுத்து பிறந்த கடைக்குட்டி ஸ்ருதி. பெரியவன்  கௌதமை விட ஏழு வயதும், சின்னவன் சித்தார்த்தை விட நான்கு வயதும் இளையவள்.

மிடில் கிளாஸ் வர்கத்தை சேர்ந்த இவர்களது வாழ்வு, அப்பர் மிடில் கிளாஸ்ஸாக தரமுயர்ந்தது சோமசுந்தரத்தின் இருமகன்களது தலையெடுப்பில்.

மூத்தவன் கெளதம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடையாமல் போகவே,  தந்தைக்கு துணையாக சமையல் வேலையில் இறங்கியவன், பின் அதையே தான் தொழிலாகவும் மாற்றினான். தனது 20 வயதில் சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தவனது தொழில் முதலில் சற்று மந்தமாக போக, கெளதம் அறிமுகப்படுத்திய புதுவகை பதார்த்தங்களால் அவனது தொழில் ஒரே வருடத்தில் மக்களிடையே சற்று பிரபலமாக தொடங்கியது. பின் அதுவே தொடர,  அவர்களின் வியாபாரம் பெருகி ஹோட்டலின் பெயர் சுற்றுவட்டாரம் முழுக்க பிரபலமாக, அவர்களுக்கு லாபம் குவிந்தது. அப்போது சித்தார்த் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அங்குள்ள அரசுக்கல்லூரியிலே தன் படிப்பை தொடர்ந்தான்.

நான்கு வருடத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டவன், அந்த பணத்தில் வீட்டை புதுப்பிக்க எண்ணினான். சோமசுந்தரத்தின் தந்தை அந்த காலத்திலேயே வீட்டை சற்று பெரியாதவும், நேர்த்தியாகவும் கட்டியிருந்ததால், அதில் இரண்டு அறைகள் மட்டுமே கூடுதலாக இணைக்க, அதுவே போதுமானதாக இருந்தது. எஞ்சிய பணத்தில் கௌதமின் ஆலோசனைப்படி,  அவர்கள் ஹோட்டலின் பின்பகுதியிலிருந்த நிலத்தை வாங்கி அதில் மத்திய அளவிலான திருமணமண்டபத்தை கட்டத்தொடங்கினர். கல்லூரி படிப்பை முடித்த சித்தார்த், தன் அண்ணனின் ஹோட்டல் நிர்வாகத்திலும், மண்டபம் கட்டுமானத்திலும் அவனுக்கு துணையாகினான். ஸ்ருதி அப்போது ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாள்.

முழுதாக இரண்டு வருடஙகளுக்கு பிறகே, அந்த மண்டபம் அவர்களால் கட்டிமுடிக்கப்பட, அதில் முதலாக  நடைபெயற்றது  கெளதம்-சாருலதா திருமணம். சித்தார்த் ஹோட்டல் மற்றும் மண்டபம் நிர்வாகத்தில் கௌதமிற்கு உதவியாக இருந்தாலும் தனக்கென ஒரு தொழிலை தொடங்க நினைத்தவன், தன் அண்ணன் தொழிலுக்கு அவன்   துணையாகயிருப்பது பாதிக்காத  வகையில் ஹோட்டல் மற்றும் மண்டபதுக்கு பொதுவான ஈவென்ட் மேனேஜ்மென்ட் எனப்படும் சுப நிகழ்ச்சிகளுக்கான ஒருங்கிணைப்பு செய்யும் தொழிலை தன் தங்கையின் பெயரில் ஆரம்பிக்க, அடுத்த இரண்டுவருடத்தில் சித்தார்த்-ப்ரீத்தி திருமணம் நடைபெற்றது.

கூடுதல் தகவலாக !!! சோமசுந்தரத்தின் தந்தையான மருதாச்சலமூர்த்தி தன் மாமன் மகளான அகிலாண்டத்தை திருமணம் செய்தவர். சோமசுந்தரமும் தன் மாமன் மகளான தனலட்சுமியை தான் திருமணம் செய்துள்ளார். தனது அத்தை மகளான சாருவை கௌதமும், மாமன் மகளான ப்ரீத்தியை சித்தார்த்தும் மணந்துள்ளார்.

ஆம்! இவர்களின் குடும்பம் சொந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கத்தை கொண்டது.
          
                         ************

தனது ஸ்கூட்டியை வீட்டின்முன் நிறுத்திய ஸ்ருதி, செருப்பை கழட்டி ரேக்கின் மேல் வைத்தபோது அவள் கையிலிருந்த வண்டிச்சாவி தவறி கீழே விழ, அதனை எடுக்க குனிந்தவளின் கண்கள் ரேக்கின் கீழ்தட்டிலிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவின் மீது நிலைத்து நின்றது.

சாவியை எடுத்தவள், அந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி, வீட்டின் வலதுபக்கத்தில் மண்டிக்கிடந்த புதரில், தங்களது காம்பவுன்டில் நின்றவாறே தூக்கியேறிந்தாள். காலையில், அவனது நினைவில் கலங்கி, குழம்பிய மனதிற்கு இந்தச்செயலால் எதிலிருந்தோ மீண்ட ஒரு உணர்வு.

ஸ்ருதி மெல்ல வீட்டினில் நுழைய,  அங்கே அவளின் பெரிய அண்ணி சாரு தன் மூன்று வயது மகன் பிரணவ்க்கு உடை மாற்றிக்கொண்டும், தாய் தனலட்சுமி முருங்கைக்கீரையை சுத்தம்செய்து கொண்டுமிருந்தனர்.

அண்ணன் மகனை செல்லம்  கொஞ்சியவள், மதியம் சமயலுக்காக தாய்க்கு சில உதவிகளை செய்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள். சமூக வலயத்தளத்தில் மூழ்கியவள், சிறிதுநேரத்தில் அது போரடிக்கவே போனில் ஹெட் செட்டை பொறுத்தி அதில் இளையராஜாவின் பாடல்களை ஒலிக்கவிட்டு, மெத்தையில் தளர்வாக சாய்ந்துக்கொண்டு கண்ணமூடி கேட்டுக்கொண்டிருக்க, சீராக ஒலித்த பாடல் சிறிதுநேரத்தில் விட்டு விட்டு கேட்டு, சில வினாடிகளிலேயே செவியை அடையாமல் நின்றுபோக கண்திறந்தாள் ஸ்ருதி.

கெஞ்சியும், கொஞ்சியும் ப்ரீத்தியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான் சித்தார்த்.

பாடல் நின்று போக இமைத்திறந்தவளுக்கு, சித்தார்த்தின் குரலகேட்கவே, எழுந்து வெளியே வந்தாள் ஸ்ருதி.

"அண்ணா, எப்போ வந்த? ஸ்கேன் போட்டாச்சா?"

"ம்ம், இப்போ தான் வந்தோம் மா,  ஸ்கேன் போட்டாச்சு ஸ்ருதி, சாரி மா ரொம்ப லாங் அலைய வச்சிட்டேனா? ".

"இல்லைல்ல அண்ணா அலைச்சலெல்லாம் ஒன்னும் இல்லை இதோ இருக்கு ரெட்ஹில்ஸ் அங்க தான போய்ட்டு வந்தேன், நீ சொன்னமாதிரி வெயிட் பண்ணிப்பாத்தேன் அந்த கேட்டரிங் காண்ட்ராக்டர் மட்டும் வரலை அதுனால நான் கிளம்பிட்டேன்".

"சரி மா, அவரை நம்ப ஆபீஸ்க்கு வரச்சொல்லி நான் செட்டில் பண்ணிக்குறேன், நீ  இன்னைக்கு ஆபீஸ் வரவேணாம், வீட்லயே ரெஸ்ட் எடு மா".

"நானும் அதைதான் சொல்ல நெனச்சேன், இன்னைக்கு ஆபீஸ்க்கு வர மூடே இல்ல லீவு எடுத்துட்டு நாளைக்கு வரேன் அண்ணா, மண்டபத்துலருந்து பொண்ணுவீடு நமக்கு செட்டில் பண்ணின காச ரூம்ல வச்சிருக்கேன் எடுத்துட்டு வரேன்ணா" என்று சொல்லி ஸ்ருதி தன்னறைக்கு செல்ல.

பேட்டரி குறைவாகயிருந்த போன்-னை  சார்ஜரில் பொருத்திவிட்டு,  அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த சித்தார்திடம் பண்ணதை கொடுத்தாள் ஸ்ருதி.

"ம்ம் அப்போ நான் கிளம்புறேன் ஸ்ருதி, ப்ரீத்தி கால்பண்ணப்போ நீ  போன் எடுக்கலைனு கோபமா இருக்கா போய் பாரு மா "

"சரி அண்ணா, அப்புறம் இந்த போன்ல சவுண்ட் கேக்கல, கால் பேசும்போதும் வாய்ஸ் சரியா விழல, இதை கொஞ்சம் என்னனு கடைல குடுத்து பாத்து சரி பண்ணிட்டு வா அண்ணா "

"ஏன் ஸ்ருதி, நல்லாதானே இருந்துச்சி உன் போன் இப்போ என்னாச்சு"

"நேத்து பிரணவ் விளையாடும் போது தெரியாம போன் மேல தண்ணி கொட்டிட்டான் அண்ணா, அதுனால இப்படி ஆகியிருக்கும் போல "

"சரி குடு, மதியம் லன்சுக்கு வரப்போ சரிபண்ணி கொண்டுவரேன்".

"அம்மா நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்" என்று தாயிடம் விடைபெற்று சென்றவன், சார்ஜில் போடப்பட்டிருந்த போன்னை மறந்து சென்றான்.

                           ***********

பதினைந்து நிமிடங்களில் சரி செய்யக்கூடிய ப்ராப்லம் தான் என போன் சர்வீஸ் செய்பவன் கூறதால், கடைக்கு வெளியே நிறுத்திய தனது பைக்கில் சென்டர் ஸ்டாண்ட் போட்டு ஏறியமர்ந்தவனின் பக்கவாட்டில் வந்துநின்ற கருப்பு நிற பல்சரிலிருந்து இறங்கினான் விஜய்.

"என்ன டா,உன் தங்கச்சி  வெள்ளிமலரோட மாமியார் வீட்டு சைடுல ஏதோ ஒரு முக்கியமான கல்யாணம், அதுக்குப்போக லீவு எடுத்திருக்கேன்னு சொல்லிட்டு, இப்போ இங்க  வந்து நிக்கிற" என்ற சித்தார்த்தின் குரலில் வியப்பு!

"போய்ட்டு முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்டா" என்ற விஜயின் குரலின் சலிப்பு!

"அம்மாவும், வெள்ளிமலரும் எப்படி உன்ன கிளம்பவிட்டாங்க? "

"அவங்களுக்கு நான் கிளம்பினது தெரிஞ்சா தானே, அத விடு நீ ஏன் இங்கயிருக்க ஆபீஸ் ஓபன் பன்னாலயா?  "

அதற்கு சித்தார்த் பதிலளிக்கும் முன்பே

"ரத்தத்தின் ரத்தமே....
என் இனிய உடன்பிறப்பே... சொந்தத்தின் சொந்தமே...
நான் இயங்கும் உயிர் துடிப்பே..."

என விஜயின் போன் அலற, அதில் வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவனின் காதில் ஒலித்தது இல்லை இல்லை கிழித்தது வெள்ளிமலரின் குரல்!

"ஏ அண்ணா சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டியா? என் அத்தை சொன்ன பொண்ணு உனக்கு பிடிக்கலைன்னா அதை என்கிட்டே சொல்லவேண்டியதான, அதுக்கு போய் இப்படியா சொல்லாம கிளம்புவ,  நானும் அம்மாவும் உன்ன கோவில் முழுக்க தேடினும் தெரியுமா உனக்கு"

"சரி விடு மலரு, எனக்கு அங்க போரா இருந்துச்சி கிளம்பிட்டேன், நீயும் அம்மாவும் கல்யாண சடங்குல பிஸியா இருந்திங்க அதான் சொல்லிட்டு வரமுடியால. சரி நீ அம்மாவை ஒரு மூணு மணிபோல பஸ் ஏதிவிட்டிரு, நான் திரும்ப அங்க வந்து அம்மாவை கூட்டிட்டு வரமுடியாது அலைச்சலா இருக்கும்"

"பஸ்சும் ஏத்தமாட்டேன் ஒன்னும் ஏத்தமாட்டேன், விட்டுட்டு போக தெரிஞ்சிதுல, அப்போ நீயே வந்து கூட்டிட்டு போ. இன்னும் ரெண்டு நாள்ல சண்டே வந்துரும் அப்போ உனக்கு லீவு தானே அன்னைக்கு வந்து கூட்டிட்டு போ,  நீ வராம நான் அம்மாவ அனுப்பமாட்டேன் அங்க" என கூறி பட்டென போனை வைத்தாள் வெள்ளிமலர்.

"இவளுக்கு எதுக்கு போன் வேஸ்ட்டா,  நான் நிக்கிற திசை பக்கம் பாத்து இவ பேசினாலே போதும் எனக்கு நல்ல கேக்கும். பாஆஆஆ என்ன கத்து கத்துறா " என முணுமுணுத்த விஜயின் போன் மீண்டும் அலற அதில் ஒலித்தது

"அந்த வானத்த போல....
மனம் படைச்ச மன்னவனே.....
பணிதூளியை போல.....
குணம் படைச்ச தென்னவனே...."

"யாரு டா வினோத்தா " என்ற சித்தார்த்தின் கேள்விக்கு, ஆமாம் என தலையசைத்து அழைப்பை ஏற்று காதில் வைத்தான் விஜய்.

"சொல்லு வினோத்து" என்றவனிடம் எதிர்முனை என்ன கேட்டதோ, அதற்கு பதிலளித்தான் விஜய்

"இன்னும் வீட்டுக்கு போகல டா,  வரவழியில சித்தார்த்த பாத்தேன் அவன்கூட தான் பேசிட்டு இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்,  நீ உன் போன் புல்  சார்ஜ்ல வை வந்துடுறேன்" என்றவனிடம், சித்தார்த் "என்ன டா சொல்றான் வினோத்" என கேட்க

"பப்ஜி மேட்ச் போடலாமான்னு கேட்டான் டா, வீட்டுக்கு போய்ட்டு போடலாம்னு சொன்னேன் "

"ஹ்ம் சரி டா, விஜய் எனக்கு ரொம்பநாளா ஒரு டவுட் டா "

"என்ன டா கேளு"

"அது எப்படி டா வேலை மெனக்கெட்டு இப்படி ரிங்க்டோன் செட் பண்ற, எல்லாரும் பேமிலி ஆளுங்களுக்கு ரிங்க்டோன் வைப்பாங்க அது பாத்துருக்கேன். ஆனா எனக்கு தெரிஞ்சி நீ ஒருத்தன் தான் டா போன்ல உள்ள எல்லா நம்பர்க்கும் தனித்தனியா ரிங்க்டோன் வெச்சி, அத நியாபகம் வேற வெச்சிருக்க, அது எதுக்கு டா? "

"அதுவா டா, இப்படி வா சொல்றேன்" என கூறி பைக்கின் மேல் அமர்ந்திருந்த சித்தார்த்தை கீழிறக்கி, அதன் மீதேறி அமர்ந்தவன், சித்தார்த்தின் முறைப்பையும் பொருட்படுத்தாமல், அவன் கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தான்.

"இப்போ நம்ம முக்கியமான ஒரு வேலைல இருக்கோம்னு வை, அப்போ தான் சொல்லிவச்சா மாதிரி போன் அடிச்சி நம்மல கொல்லுவானுங்க,  அந்த டைம்ல நாம யாரோ எவரோனு பதறி போனெடுத்து டிஸ்பிலேல நம்பர் பாத்தா அட சே இவனா அப்படினு தோணும், இப்போ ரிங்க்டோன் செட் பண்ணிட்டோம்னுவை எவன் போன் வந்தாலும், அட இவன் தானேனு நாம பதறாம சிதறாம நம்ப வேலைய பாக்கலாம்ல அதுக்குதான் " என ஏற்றமிறக்கத்தோடு சொல்லிமுடித்த  விஜய்யை, சித்தார்த் கேவலமான பார்வை பார்த்து வைக்க "சரி சரி லுக் விட்டது போதும், ஆபீஸ் ஓபன் இங்க ஏன் நின்னுட்டுருக்கனு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலையே "

"ஹ்ம்ம் சர்வீஸ் சென்டர்க்கு என்ன சாமி கும்பிடவா வருவாங்க, போன் சர்வீஸ் பண்ணத்தான் வந்தேன் " என்றவன் முழுவிபரம் கூறும் முன்னே "அண்ணா போன் ரெடி பண்ணியாச்சு" என்ற கடைக்காரனின் குரலில் அங்கிருந்து நகர்ந்து கடைக்குள் சென்றான் சித்தார்த்.

"இந்தாங்க அண்ணா உங்க போன், நம்பர் சொல்லுங்க கால் பண்றேன் வாய்ஸ் கிலீயரா கேக்குதான்னு செக் பண்ணிக்கோங்க"

"இல்ல பா என்கிட்ட வேற போன் இருக்கு நான் அதுலேயிருந்து கால் பண்ணி செக் பண்ணிட்டு வரேன் " என்று கடைக்காரனிடம் கூறிவிட்டு நகர்ந்து வரும்போது தான் சித்தார்த் கவனித்தான் தன்னுடைய போன் சார்ஜ் போட்டபடி வீட்டிலே மறந்து வைத்ததை.

"விஜய், நான் உன் நம்பர்க்கு கால் பண்றேன் அட்டென்ட் பண்ணி என் வாய்ஸ் உனக்கு கிலீயரா கேக்குதான்னு சொல்லு" என சித்தார்த் கூறியதற்கு, பைக்கின் மேல் அமர்ந்து, தலையை கவிழ்த்துக்கொண்டு தன் போனை நோண்டிக்கொண்டிருந்த விஜய் சம்மதமாக தலையசைக்க. மூளையில் பதிவு செய்திருந்த விஜயின் போன் நம்பரை சித்தார்த்தின் கைகள் அழுத்த,

"பாரதிக்கு கண்ணம்மா....
நீ எனக்கு உயிரம்மா......
பாரதிக்கு கண்ணம்மா....
நீ எனக்கு உயிரம்மா....
நேற்றைக்கு நீ தந்த
பார்வைக்கு பக்தன் இங்கே....." என்ற ரிங்க்டோன் கொண்டு ஒலித்தது விஜயின் போன்!!!

 


ReplyQuoteLavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
09/08/2020 6:38 pm  

@savitha-nagaraj sissy... superb start. enaku kuda ellarukum ringtone set panra habit iruku. waiting for sidharth reaction

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
10/08/2020 5:50 am  

@lavanyadhayu thank you sissy. Keep supporting me 


ReplyQuote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
10/08/2020 1:13 pm  

அத்தியாயம்- 3

ரிங்க்டோனில் வந்த பாடல் கேட்டு இருவருக்கும் வெவ்வேறு விதத்தில் அதிர்ச்சி.

"இவன் ஸ்ருதி போன்க்கு தான் சர்வீஸ் பண்ண வந்தனா? அது தெரியாம கால் பண்ண சொல்லிட்டேனே, ச்ச.... அவன் போன்ன எடுத்துட்டு வந்து பக்கத்துல நின்னப்போவாது நிமிந்து பாத்துருக்கலாம் " என்று புலம்பிய மனதை புறந்தள்ளியவன், சித்தார்த்திடம் பேச முயன்ற சமயம், தனது கையை உயர்த்தி அவன் முயற்சிக்கு தடையிட்டான் சித்தார்த்.

நொடியும் தாமதிக்காமல் கடைக்கு சென்று பணத்தை செலுத்திய சித்தார்த், தனது பைக்ல் ஏறி பறந்து செல்ல, இது எதையும் தடுக்கும் வழியின்றி நின்றிருந்தான் விஜய்.

நிமிடங்கள் கரைய நின்றிருந்தவன், பின் ஒரு முடிவெடுத்தவனாய் தன் பைக்கில் அமர்ந்து "ஸ்ருதி ஈவென்ட் மேனேஜ்மென்ட்" நோக்கி பயணத்தை தொடங்கினான்.

விஜய், வயது-28, சராசரியை விட சற்று கூடுதலான உயரம், திருத்தப்பட்ட அடர்த்தியான கேசம், பியர்ட் கல்ச்சரை விரும்புபவன், எனவே கிளீன் ஷேவை கண்டதில்லை இவனின் கண்ணங்கள். வலது கையில் தடிமனான ஒரு வெள்ளி பிரேஸ்லெட், பைக் பயணத்தின் போது கட்டாயமாக கண்களில் குடிகொண்டிருக்கும் கருப்பு நிற கூலர். மனநிலை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அணியும் பார்மல்ஸ் அல்லது கேஷ்வல்ஸ். இதுவே விஜய் !

தந்தை வேதாச்சலம் இறந்த பிறகு, தாய் கஸ்தூரி மற்றும் தங்கை வெள்ளிமலருடன், தங்களுக்கென இருந்த ஒரே சொந்தமாகிய ராமமூர்த்தி மாமாவின் ஊரான பொன்னேரிக்கு வந்து சேர்ந்தான் வெற்றிவிஜயன் என்கிற விஜய் !

நெருங்கிய உறவு இல்லை என்றாலும், ஆதரவின்றி நின்றவர்களை அரவணைத்து, அவர்களை தங்களுடனே அழைத்து வந்தனர் ராமமூர்த்தி-பார்வதி தம்பதியர். எவ்வளவு கேட்டும் தங்களுடன் தங்கமறுத்த கஸ்தூரியை, வாடகை வீடு ஒன்றில் குடிவைத்து, வாரம் ஒருமுறை தங்களது இரண்டு வயது மகள் பவித்ராவுடன் சென்று அங்கு தங்கி வந்தனர்.

தன் கணவன், ஊரில் தங்களுக்கென சேர்த்து வைத்திருந்த வீட்டையும் சிறிது நிலத்தையும் விற்றுவிட்டு,  இங்கு வந்து சேர்ந்த போதே அந்த பணத்தை,  ராமமூர்த்தி அண்ணனின் யோசனைப்படி இரண்டு பாகங்களாக பிரித்து விஜயின் பேரிலும், வெள்ளிமலரின் பேரிலும் சமமாக பேங்க்கில் டெபாசிட் செய்துவைத்தார் கஸ்தூரி. ஒரு தனியார் பள்ளியில் விஜய் ஆறாம் வகுப்பிலும், வெள்ளிமலர் இரண்டாம் வகுப்பிலும் தங்களின் படிப்பை தொடர, அருகிலிருந்த எஸ்ப்போர்ட் கம்பெனியில் வேலைக்கு செல்ல துவங்கினர் கஸ்தூரி.

காலம் தன் சக்கரங்களை கொண்டு வேகமாக உருண்டோட, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற விஜய் தன் தாயின் சுமையை குறைக்க எண்ணி, தனது மேல்நிலை படிப்பை அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடர, அங்கு ஏற்பட்டது தான் சித்தார்த் மற்றும் வினோத்துடனான நட்பு.

பன்னிரெண்டாம் வகுப்பிலும் அவன் நல்ல மதிப்பெண் பெறவே, ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மெரிட்டில்  சீட் கிடைத்து, அங்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்க துவங்கினான் விஜய். சித்தார்த் மற்றும் வினோத் அங்கிருந்த அரசு கல்லூரியிலே தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

படிப்பை முடித்த விஜய், கேம்பஸ்சில் செலக்ட் ஆகி ஒரு பிரபல நான்குசக்கர வாகனங்கள் தயாரிக்கும் கம்பெனியில் நிரந்தர வேலையில் பணியமர, சித்தார்த் அவனது  அண்ணன் தொழிலுக்கு துணையாகவும், வினோத் வி.ஐ.பி ஆகவும் இருந்தனர்.

பள்ளிப்படிப்பு முடிந்து வெவ்வேறு பாதைகளின் பயணித்த இவர்களின் வாழ்வை இணைத்தது,  வார இறுதிநாளாகிய ஞாயிறு. அன்று ஒரு நாள் மட்டுமே விஜய், சித்தார்த், வினோத் மற்றும் மேலும் சில நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஒரு வருடம் முன்பு வரை இவ்வழக்கத்தை கடைபிடித்து வந்த குழுவின் அங்கத்தினர்க்கு, ஒருவர்க்கு பின் ஒருவர் என அடுத்தடுத்து திருமணம் நடக்க,  அவர்களின் வருகை படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போக குழுவில் எஞ்சியது விஜய், சித்தார்த் மற்றும் வினோத் மட்டுமே.

இதற்கிடையில் சித்தார்த் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆரம்பிக்க, வினோத் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். விஜயின் தங்கை வெள்ளிமலர்-யுகேந்திரன் திருமண நிகழ்வை சிறப்பாக ஏற்று நடத்தியதால், ஆரம்பித்து சில காலமே ஆகியிருந்த அவனது ஈவென்ட் மேனேஜ்மென்ட் சற்று பிரபலமடைய துவங்கியது.

மகளின் பெயரில் பேங்க்கில் டெபாசிட் செய்த பணம், தனது சேமிப்பு மற்றும் மகனது வருமான சேமிப்பை கொண்டு அதிக கடனில்லாமல் பெரிய அளவில் பிரமாண்டமாக வெள்ளிமலரின் திருணத்தை நடத்தினார் கஸ்தூரி. விஜய் எவ்வளவு கேட்டும் தங்கையின் திருமணத்திற்காக அவன் பங்கு பணத்தை செலவு செய்ய கஸ்தூரி மறுத்துவிட, அந்த பணத்தில் தங்களுக்கென ஒரு சொந்த வீட்டை கட்டினான் விஜய்.

வாரம் ஒரு முறை பகல், இரவு என மாறி வரும் வேலை ஷிபிட், வீடு, அம்மா, தங்கை, சித்தார்த் மற்றும் வினோத் என்ற விஜயின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, ஒரு நாள் வேலை விஷயமாக ரயிலில்,  சென்னை வரை சென்றுவிட்டு,  திரும்பி வந்துகொண்டிருந்தவன் முன் வந்தமர்ந்து அந்த நான்கு பேர் கொண்ட பதின் வயது குழு. அதில் ஒருவன் அழுது சிவந்த விழிகளுடன் காணப்பட மற்ற மூவரும் அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க, அதனை கவனிக்க தொடங்கினான் விஜய்.

அதில் ஒருவன் "டேய் இப்போ எதுக்கு அழுது கண்ணீர் வடிச்சிட்டு இருக்க?  நீ வேணா பாரு இன்னைக்கு இப்படி அழுற நீ, இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சி இதே விஷயத்தை நினைச்சி பாக்குற அப்போ உனக்கே சிரிப்பா வரும்" என கூறியது விஜயின் மனதில் பதிந்து, அவனை ஆழ்ந்த சிந்தனையில் தள்ளியது.

சிந்தனையின் முடிவில் அவனுக்கு விளங்கியது, இப்படி எந்த ஒரு நினைத்தாலே இனிக்கும் நினைவுகளுக்கு அவன் மனதில் இல்லை என்பதே!

பள்ளியிலும், கல்லூரியிலும் படிப்பில் அதிக கவனம் செலுத்தியவனை, ஒரு எல்லைக்கு மேல் யாரும் நெருங்கியதில்லை. அந்த எல்லைகளை கடந்தது சித்தார்த் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே. எனவே அவனுக்கு நட்பு வட்டாரமும் குறைவு. படிப்பு, அது முடிந்ததும் வேலை என இயந்திரகதியவே செல்ல, வாழ்வில் கால்வாசியை கடக்கும் சமயத்தில் தான் இனிமையான நினைவுகளுக்கான தேடலில் இறங்கினான் விஜய்.

நிதர்சனத்தில் அந்த தேடலும் அவனுக்கு எளிதாகயிருக்கவில்லை அவனின் மாற்றங்களை,  தன்னை பற்றி முன்பே அறிந்த மனிதர்களினால் ஏற்க கால அவகாசம் தேவைப்பட, அத்தகைய கால அவகாசம் ஏதும் தேவையானதாக இருக்கவில்லை தன்னை அறியாத மக்களிடத்தில் அவனுக்கு.

உலகில் உள்ள அனைவரையும் ஒரே செயலியில் இணைக்கும் முகநூலில் எம்.சி எனப்படும் மீம் கிரீயேடர் ஆனான் விஜய். தன் மீம்களுக்கு கிடைக்கும் லைக், கமெண்ட், ஷேரினால் அவனின் இனிமையான நினைவுகள் நிரப்பும் ஜாடி நிரம்பி வழிய, கூடவே அவனின் பேச்சில் நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல் மற்றும் சினிமா டைலாக்குகளும் நிரம்பி வழிந்தது.

                        ***********

அண்ணியாரே, என அழைத்தவாறு ப்ரீத்தியின் அறைக்கு நுழைந்தாள் ஸ்ருதி.

"வா மா நாத்தனாரே" என ஸ்ருதியை வரவேற்றாள் ப்ரீத்தி

"ஸ்கேன் போட போயிருந்திங்களே, எப்படி இருக்கான் என் மருமகன்"

"அவனுக்கு என்ன நல்ல ஜம்முனு இருக்கானாம், அவன் அம்மா தான் வீக்கா இருக்கலாம்"

"ஹ்ம்ம் ஒழுங்கா சாப்பிடுங்க அண்ணியாரே"

"அதெல்லாம் நான் கரெக்ட்டா தான் சாப்பிடுறேன். அத விடு, காலைல உனக்கு நான் போன் பண்ணினா, என் கால்ல அட்டென்ட் பண்ண கூட முடியாதா உன்னால?"

"ஐயோ, தெரிஞ்சே எடுக்காம இருந்திருப்பேனா அண்ணியாரே, நீங்க கால் பண்ணப்போ நான் மண்டபத்துல இருந்தேன், அங்க மேளம்,  நாதஸ்வரம் சவுண்ட் போதாம மைக் செட் வேற,  நான் அட்டென்ட் பண்ணி பேசினாலும் உங்க வாய்ஸ்  எனக்கு கேக்காது அதான் உங்க கால் வந்தப்போ எடுக்க முடியல, ஆனா நான் கொஞ்ச நேரம் கழிச்சி உங்களுக்கு கால் பண்ணினேன் அப்போ அண்ணா தான் நீங்க ஸ்கேன் போட போயிருக்கர்தா சொன்னாரு "

"சும்மா சாக்கு சொல்லாத போ டி"

"அதான் பத்திரமா போய்ட்டு வந்துட்டேன்ல விடு ப்ரீத்தி" என கூறி் நுனி நாக்கை கடித்தவள் "சாரி அண்ணியாரே ஒரு புளோல வந்துருச்சி"

"நடிக்காத டி நாத்தனாரே, வேணும்னே சொல்லிட்டு இப்போ புளோல வந்துருச்சாமே"

"போ ப்ரீத்தி உன்ன அண்ணியார்னு சொல்றத விட ப்ரீத்தினு கூப்பிடுறது தான் எனக்கும் பிடிக்கும், ஆனா இந்த  அம்மா தான் வெளில இருந்து பாக்குறவங்களுக்கு அது மரியாதையா இருக்காது அப்படி இப்படினு சொல்றாங்க" என்றாள் ஸ்ருதி சோகமான முகத்துடன்.

"சரி சரி உடனே சோக கீதம் வாசிக்காத, ஆமா இன்னைக்கு நீ ஆபீஸ் போகலையா" என்றவளுக்கு இல்லை என்பதாய் தலையசைத்தாள் ஸ்ருதி.

"ஏன்?" என்ற ப்ரீத்தியின் ஊடுருவும் பார்வையை எதிர்கொண்டவள், "சும்மா தான் அண்ணியாரே, டையர்டா இருந்துச்சு அதான்" என்றவள்

தொடர்ந்து இங்கேயே நின்றால், கேள்விகளை கேட்டே, காலை மண்டபத்தில் அர்ஜுனின் நினைவு வந்து கலங்கி நின்றதை தன் வாயாலே அவளிடம் சொல்லவைத்து விடுவாளோ என்றெண்ணி அவளிடம் விடைபெற்று அறையிலிருந்து வெளியேற, சிறுது நேரம் கழித்து ப்ரீத்தியின் அறைக்கு வந்து நின்றாள்  சாரு.

"வாங்க கா"

"ப்ரீத்தி,  உன் கிட்ட ஒரு ஸ்ருதி ஏதாச்சும் சொன்னாலா"

"இல்லையே கா, ஏதும் சொல்லல, ஏன் என்னாச்சு கா"

"காலைல இருந்தே ஒரு மாதிரியா இருக்கா ப்ரீத்தி அவ, ஆபீஸ்யும் போகல. அதான் உன்கிட்ட ஏதாவது சொல்லிருப்பானு பாத்தேன் "

"நானும் தான் கவனிச்சேன் கா, அவ முகமே சரியில்ல, ஏன் ஆபீஸ் போகலானு கேட்டா, டயர்டா இருந்துச்சு அதான் போகலனு சொல்லிட்டா "

"ரெண்டு வருஷம் ஓடிப்போச்சி, இன்னும் அவ எதையும் மறக்கலயா ப்ரீத்தி? "

"அதெல்லாம் அவ மறந்துட்டா கா, இன்னைக்கு பணம் வாங்க மண்டபம் போனால, அந்த கல்யாணத்துல ஏதாவது பாத்து அவ அப்செட் ஆகி இருப்பானு நினைக்குறேன். " என ப்ரீத்தி தன் அன்பு அத்தை மகளின் மனக்கவலை எதனால் ஏற்பட்டிருக்கும் என்பதை சரியாக யூகித்தாள்.

"என்னவோ ப்ரீத்தி, எல்லாத்தையும் மறந்து, அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சா போதும், சரி நீ ஸ்கேன் எடுக்க போனியே என்ன சொன்னாங்க டாக்டர்?

"அப்பாடா, இப்பயாச்சும் நாத்தனார் மறந்து ஓரவத்திய பத்தி கேக்கணும்னு தோணுச்சே"

"ஹேய்..." என ப்ரீத்திக்கு செல்லமாக இரண்டு அடிகளை போட்டவள்,  அவளது உடல் நிலையை பற்றி தெரிந்து கொண்ட பின் தன் அறைக்கு சென்றாள் சாரு.

படுக்கையில் உறங்கும் தன் மகன் பிரணவின் அருகில் அமர்ந்து மெல்ல  தலையை வருடியவளின் கண்கள், அவனது வலது புருவத்தின் மேல் இருந்த மச்சத்தில் நிலைத்து நிற்க, அவளின் மனதில் இதே போல் மச்சம் உள்ளவளின் நினைவு, அவளது அனுமதி இன்றி வந்து நின்றது.

நினைவு வந்ததும் அவனின் முகம் பார்க்கும் ஆவலெழ, தனது மொபைலில் உள்ள அவன் படத்தை பார்க்க தொடங்கினாள். அதில் முத்துப்பற்கள் தெரிய, தன் அருகில் அமர்ந்திருந்த ஸ்வாதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுக்கொண்டிருந்தான் அர்ஜுன் !

 


ReplyQuote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
12/08/2020 3:03 pm  

அத்தியாயம்-4

இரண்டு வாரங்கள் கடந்திருந்தது, சித்தார்த்தின் வேலைக்கு துணையாக அவனின் ஆபீஸ்சுக்கு செல்லும் ஸ்ருதி, மாலை ஐந்து மணிக்கு அண்ணனிடம் விடைபெற்று தனது ஸ்கூட்டியில் வீடு திரும்புவது வழக்கம். அன்றும் வழமை போல் வீட்டை நோக்கி பயணித்தவளின் பார்வையில், பைக்கை தள்ளிக்கொண்டு செல்லும் விஜய் விழுந்தான்.

அவனுடன் அதிகம் பேசியதில்லை, எனினும் அண்ணனின் மிக நெருங்கிய நண்பன் இவன் என அறிந்தும் அப்படியே விட்டுவிட்டு, தெரியாதவர் போல் செல்ல மனம் வரவில்லை அவளுக்கு. எனவே ஸ்கூட்டியை ஸ்லோ செய்தவள்,  தயக்கத்துடனே அவன் அருகில் சென்று நிறுத்தி "என்னாச்சு, ஏன் வண்டிய தள்ளிட்டு போறீங்க? " என ஒரு வழியாக தயக்கத்தை மீறி கேட்டுவிட்டாள்.

குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவன்,  ஸ்ருதியிடம் ஒரு சினேக புன்னகையை உதிர்த்துவிட்டு பதில் சொல்ல தொடங்கினான் விஜய்.

"நீங்களா ஸ்ருதி, நான் யாரோனு நெனைச்சு திரும்பி பாத்தேன். பைக் பிரன்ட் வீல் பஞ்சர் அதான் தள்ளிலிட்டு போய்ட்ருக்கேன்"

"ஓ... எவ்ளோ லாங் இப்டியே போவீங்க இந்த பக்கம் வேற மெக்கானிக் ஷெட் ஏதும் இல்லையே"

"வேற என்ன பண்றது ஸ்ருதி, இப்போ தான் வேலை முடிஞ்சி வரேன் டயர்ட்டா  வேற இருக்கு. தெரிஞ்சவங்க யாராச்சும் வந்தா பைக்க இப்டியே விட்டுட்டு அவங்ககூட வீட்டுக்கு போய் சேரலாம்னு பாக்குறேன்  இந்த நேரம் பாத்து யாரும் வரமாற்றங்க"

அவனின் களைத்த முகமும் சோர்ந்த நடையும் கண்டவளது மனம் அவனுக்கு உதவ சொல்ல "சரி வாங்க நானே ட்ராப் பண்றேன், பாக்கவே டயர்ட்டா தான் தெரியிறீங்க" என்று அவள் கூறியது தான் தாமதம், "இத தானே எதிர்பாத்தேன்" என்ற ரீதியில் விரைவாக தன் பைக்கை பக்கத்தில் இருந்த கடையில் நிறுத்திவிட்டு அவளின் ஸ்கூட்டியில் ஏறியமரந்தான் விஜய்.

அவனது விரைவான செயலில் "பாவம் ரொம்ப டயர்ட் போல அதான் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்க இவ்ளோ ஆர்வமா இருக்காங்க" என்று நினைத்துக்கொண்டவள், அவன் ஏறியதும் ஸ்கூட்டியை கிளம்பினாள்.

அவனுக்கல்லவா தெரியும் அவனின் இந்த ஆர்வம் எதனால் என்பது !!!

அவனுடைய வீடு எங்கே என்பது தெரியாததால், அவன் வழி சொல்ல அதன்படி வண்டியை செலுத்தியவளுக்கு ஆச்சர்யம்! காரணம், அவள் வீட்டை கடந்து பத்து நிமிட பயணத்தில் அவன் வீடு இருக்க, இந்த வழியில் ஒரு முறை கூட அவன் பயணித்ததை கண்டதில்லை அவள். தனது சந்தேகத்தை மறைக்காமல் அவனிடேமே ஸ்ருதி கேட்க,

"இது என் வீட்டுக்கு வர இன்னொரு வழி ஸ்ருதி, இது கொஞ்சம் சுத்து அதான் இந்த பக்கம் வரமாட்டேன். இன்னைக்கு என்ன ட்ராப் பண்ணிட்டு நீங்க உங்க வீட்டுக்கு போகும் போது உங்களுக்கு கஷ்டம் வேண்டாமேன்னு இப்படி வர சொன்னேன் "

அவனது விளக்கத்தை கேட்டவள் பின் அங்கிருந்து கிளம்ப நினைத்து "சரிங்க நான் கிளம்புறேன் " என அவனிடமிருந்து விடைபெற நினைக்க.

"கரெக்ட் டைம்ல ஹெல்ப் பண்ணிருக்கிங்க, தேங்க்ஸ் ஸ்ருதி. வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டு போகலாம் வாங்க "

"இல்லங்க, பரவாயில்ல லேட் ஆகுது நான் கிளம்புறேன், வீட்ல தேடுவாங்க"

"ஹ்ம்ம்.. சரி. இந்த வாங்க போங்க எல்லாம் வேணாம் பார்மல்லா இருக்கு, விஜய்னே கூப்பிடுங்க ஸ்ருதி "

"இல்லங்க,  எனக்கு இதே கம்பர்டபுலா இருக்கு நான் வரேன் " என்று அவனிடம் விடை பெற்று செல்பவளை, அவன் பார்வையிலிருந்து மறையும் வரை விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தான் விஜய்.

அந்த வானத்த போல....
மனம் படைச்ச மன்னவனே....
பனி துளியை போல....
குணம் படைச்ச தென்னவனே....
என்ற போன் ஒலியால் சுற்றுபுறம் உணர்ந்தவன், அந்த அழைப்பை ஏற்று பேச தொடங்கினான்.

"சொல்லு டா, ஹ்ம்ம் ஆமா அந்த கடைக்கு பக்கத்துல தான் டா பைக்க நிறுத்திருக்கேன், நான் வீட்டுக்கு வந்துட்டேன் நீ பைக்க எங்க வீட்ல எடுத்துட்டு வந்து விட்ரு" என பேசிக்கொண்டே திரும்பிய விஜய்யின் முன் வந்து நின்றுகொண்டிருந்தார் அவனின் அன்னை கஸ்தூரி.

"யாரு டா விஜயா அந்த பொண்ணு? உன் பைக் எங்க விட்டு வந்துருக்க? இப்போ யார எடுத்துட்டு வர சொல்லி போன் பேசிட்டு இருக்க? என கேள்விகளை அடுக்கியவரிடம், போன் அழைப்பை துண்டித்துவிட்டு பதில் கூற ஆரம்பித்தான் விஜய்.

"நம்ப சித்தார்த்தோட தங்கச்சி ஸ்ருதி மா, மலர் கல்யாணத்துல கூட பாத்தியே மறந்துட்டியா? "

"அந்த பொண்ணா டா இவ, பாத்து ரெண்டு வருஷம் ஆச்சில அதான் அடையாளமே தெரியல"

"சரி வா மா உள்ள போலாம்" என்று உள்ளே சென்றவனை பின்தொடர்ந்து அவன் அன்னை கஸ்தூரியின் குரல் "உன் பைக் எங்க டா? என்னாச்சு விஜயா ? "

"பைக் பிரன்ட் வீல் பஞ்சர் மா, அப்போ தான் ஸ்ருதி அந்த வழியா வந்தாங்க, அவங்க கிட்ட லிப்ட் கேட்டு வந்தேன், பஞ்சர் பாத்துட்டு நம்ப வினோத் பைக்க வீட்டுக்கு எடுத்துட்டு வந்து விடுரதா சொல்லிருக்கான்" என ஒருவாரு எல்லா பதில்களையும் சொல்லிவிட்டு அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டவன் பின் ஹாலுக்கு வந்து அமர்ந்து அன்னை தந்த காபியை குடித்து கொண்டிருந்தான்.

கஸ்தூரி ஏதோ தன்னிடம் சொல்ல முயல்வதும் பின் அந்த முயற்சியை கைவிடுவதுமாக இருக்க அதனை கண்டுகொண்டவன் "என்ன மா ஏதாவது சொல்லனுமா என்கிட்ட" என்றான் விஜய்.

"ம்ம்,  ஆமாபா  . அந்த பொண்ணு அதான் மலரோட அத்தை அன்னைக்கு கோவில்ல காட்டினாங்களே, அவங்க வீட்ல இருந்து பொண்ணை பிடிச்சிருக்கா? மேற்கொண்டு கல்யாணத்த பத்தி பேசலாமானு கேக்குறாங்க" என்றவர் எங்கே மகன் மறுப்பாக ஏதேனும் சொல்லிவிடுவானோ என நினைத்தவர் உடனே "பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு மேல பேசலாம்னு சொல்லிறட்டுமா" என அவரே அதற்கு பதிலையும் கூறி மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்தார்.

"பொண்ணு பாக்க நல்லா அழகா தான் இருந்தாங்க" என்றதும் "விஜயா உனக்கு அப்போ அந்த பொண்ணை பிடிச்சிருக்கா டா" என உற்சாகத்தில் துள்ளியறவர் அடுத்து அவன் சொன்னதில் "வடைபோச்சே" என்ற ரீதியில் நின்றார் கஸ்தூரி.

"பொண்ணு நல்லா தான் இருக்காங்க மா ஆனா அவங்க எனக்கு வேணாம்" என்ற விஜயின் பதிலில் அவனை முறைத்தவர் "சரி டா அந்த பொண்ணு வேணாம்னா வேற எந்த பொண்ணு வேணும்னு சொல்லு" என்று நக்கல் குரலில் கேட்டார் கஸ்தூரி.

"என்ன மா உன் குரல் ஒரு டைப்பா இருக்கு "

"பின்ன என்ன டா, பொண்ணு நல்லாருக்கு ஆனா எனக்கு வேணாம் சொன்னா,  என்ன தான் டா உனக்கு பிரச்சனை ஏதாவது பொண்ணை லவ்வு கிவ்வு பன்றியா அம்மாகிட்ட சொல்லுடா நான் போய் அவங்க வீட்ல பேசுறேன்"

"மா, நீ வேற அதெல்லாம் ஒன்னும் இல்ல"

"சரி தான் போ டா, இனி நீயா "அம்மா எனக்கு பொண்ணு பாருனு" சொல்ற வரைக்கு நான் உனக்கு பொண்ணு பாக்கமாட்டேன் டா "

"இதை தானே மா நீ போன மாசமும் சொன்ன, ஆனா இந்த மாசம் நீ மலரு மாமியார் கிட்ட சொல்லி பொண்ணை பாக்கல" என்றான் விஜய்.

"சரி டா இது தான் கடைசி இனிமே நீ சொல்ற வரை நான் உனக்கு பொண்ணு பாக்கல போதுமா? ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரியணும். உனக்கு என்ன தான் பிரச்சனை எதுக்கு நீ கல்யாணம் வேணாம் சொல்ற அதுக்கு உண்மையான காரணம் சொல்லு, எனக்கு இருக்குறதே கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே பையன் உனக்கு கல்யாணம் பண்ணி பாக்க எனக்கு ஆசை இருக்காதா?" என்றவரிடம் விஜய் ஏதோ கேட்க வர

"நிறுத்து, நீ என்ன கேட்க வரனு எனக்கு தெரியும், கருவேப்பிலை கொத்து எதுக்கு சொல்றாங்க அப்படினு கேட்டு பேச்சை மாத்த போற அதானே. எனக்கு தெரியாது ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கவங்க எல்லாரும் அப்படி தான் சொல்லுவாங்க அதுனால நானும் சொன்னேன். நீ பேச்சை மாத்தாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு எதுக்கு கல்யாணம் வேணாம்ங்குற" என்றார் கஸ்தூரி விடாபிடியாக.

சூட்சமத்தை கண்டு பிடிச்சிட்டாங்களே டா என் நினைத்து கண்களை மூடி சிறிது நேரம் அமைதி காத்தவன், "நீ இவ்ளோ கேக்குறதால நான் உண்மைய சொல்றேன் மா..." என்ற விஜய், ஆழ மூச்செடுத்து பின் இமைகளை மூடியவாறே தனது காதல் கதையை சொல்ல தொடங்கியவன், அனைத்தையும் அன்னையிடம் சொல்லிய பின்னே இமை பிரித்தான்.

கஸ்துரிக்கு மகனின் காதல் கைகூடாமல் போனதில் அவரின் மனம் அவ்வளவு கனத்தது, அதிலே மூழ்கியவர் விஜய் தன்னிடம் வெளியே செல்வதாக விடை பெற்றதைக் கூட உணரும் நிலையில் இல்லை.

கவலையில் மூழ்கியவரின் நினைவை வெள்ளிமலரின் போன் அழைப்பு நடப்புக்கு கொண்டுவர, அழைப்பை ஏற்று காதில் வைத்தார் கஸ்தூரி.

" மா... காலைல நீ போன் பண்ணப்போ கொஞ்சம் வேலையா இருந்தேன் அதான் எடுக்க முடியல மா" என வெள்ளிமலரின் குரல் எப்போதும் போல் உயர்ந்த ஒலிக்க.

"ம்ம்ம் சரி மலரு" என்ற கஸ்தூரியின் குரலில் சுரத்தே இல்லை

"என்ன மா குரலே ஒரு மாதிரி இருக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா?"

"அதெல்லாம் இல்ல டி, உன் அண்ணன் இப்போ தான் அவன் ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல அப்டிங்குற காரணத்தை சொல்லிட்டு போனான் அத நினைச்சிட்டு இருக்கேன்"

"என்ன மா சொல்லுச்சு அண்ணன்?"

"மலரு அவன் யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானாம் டி, உனக்கு ஏதாவது தெரியுமா? "

"என்ன மா சொல்ற லவ் பண்ணானாமா! என்கிட்டயும் எதுமே சொன்னதில்லயே மா அவன். சரி பொண்ணு யாருனு விசாரி நம்ப போய் அவங்க வீட்ல பேசுவோம்"

"அந்த பொண்ணு இப்போ இந்த ஊர்லயே இல்லயாம் டி, இவஙக காதல் விவகாரம் தெரிஞ்சி அவங்க அப்பா அந்த பொண்ணை எங்கயோ அனுப்பி வெச்சிட்டாராம்" என்றவர் மலரிடம், விஜய் சொன்ன அனைத்தையும் சொல்லி முடிக்க.

"அப்போ அந்த பொண்ணை மனசுல வெச்சிட்டு தான் அண்ணா கல்யாணம் வேணாம்னு சொல்றானா" என அடுத்து சில பல உரையாடல்களுக்கு பின் போன்னை வைத்த வெள்ளிமலர், யோசனையுடன் அறையில் அமர்திருக்க.

"ஏய்.. மலரு புள்ளைய கவனிக்காம உள்ள என்ன டி பண்ணிட்டு இருக்க? பாரு அவன் எப்படி மண்ல உருண்டு பிரண்டு வந்துருக்கான்னு" என்றவாறே அவர்களது இரண்டு வயது மகன் யுகேஷை தூக்கியபடி அறைக்கு வந்து நின்றான் அவளின் கணவன் யுகேந்திரன்.

"நீங்க இதையும் சொல்லுவிங்க இதுக்கு மேலயும் சொல்லுவிங்க,   உங்களையும் உங்க பையனையும் கவனிச்சதால தான், நான் எங்க அண்ணனை கவனிக்காம விட்டுட்டேன்"

"என்ன மலரு என்னாச்சி மச்சானுக்கு" என்றவனிடமிருந்து குழந்தையை வாங்கி அவனை சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி வெளியே விளையாடுமாறு அனுப்பி வைத்தவள் கணவனின் முன் வந்து அவனுக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.

"எங்க அண்ணன் ஒரு பொண்ணை லவ் பண்ணிருக்கானாம்ங்க, அத நெனைச்சி தான் கல்யாணம் வேணாம் சொல்றான். அந்த பொண்ணு இப்போ எங்க இருக்கானு தெரியலயாம் எப்படியாவது அவனுக்கு அந்த பொண்ணை கண்டுபிடிச்சி கட்டிவெச்சிரணும்ங்க"

"இப்படி தலையும் இல்லாம வாலும் இல்லாம சொன்னா எப்படி மலரு முழு விவரம் சொல்லு" என்றவனுக்கு தன் அன்னை சொன்னதை சொல்ல தொடங்கினாள் வெள்ளிமலர்.

"அண்ணன் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது ஒரு பொண்ணை லவ் பண்ணினானாம். ரொம்ப சின்சியரான லவ்வாம். அப்போ அந்த பொண்ணு அவன் கிட்டவந்து எங்க வீட்ல நம்ப லவ்வை ஏத்துக்க மாட்டாங்க நம்ப ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க, இவனும் எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணிட்டு,  ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு அந்த பொண்ணு இவன் பிரண்ட்ஸ் எல்லாம் போயிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சி பொண்ணுக்கு அப்பா அங்க வந்து பொண்ணை கூட்டிட்டு போய்ட்டாராம். அப்போவே அந்த பொண்ணை எங்கயோ ஊருக்கு அனுப்பி வெச்சிட்டாராம்ங்க" என முடித்தாள் வெள்ளிமலர்.

மனைவி சொல்வதை முதலில் சீரியஸ்சாக கேட்டு கொண்டிருந்தவன், பின் எதுவோ புரிய அவள் முடித்ததும் "அந்த பொண்ணு பேரு ஐஸ்வர்யாவா மலரு? " என கேட்க, மலருக்கோ ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.

"ஆமாங்க உங்களுக்கு அந்த பொண்ணை தெரியுமா? அப்போ யாருனு சொல்லுங்க நாமா அவங்க வீட்ல பேசுவோம்" என்றவளை முறைதான் யுகேந்திரன்.

"அடியே.... உங்க அண்ணன் சில்லுனு ஒரு காதல் படத்துல வர கதையை அவன் காதல் கதை மாதிரி சொல்லிட்டு போயிருக்கான். இது தெரியாம நீயும் உங்க அம்மாவும் அந்த பொண்ணை தேடி கண்டுபிடிச்சி கட்டி வைக்குற அளவுக்கு பிளான் போட்டுட்டு இருக்கிங்க. உங்க அம்மா ஆச்சும் அந்த காலத்து ஆளு அவங்களுக்கு தெரியல நீ அந்த படத்தை எத்தனை தடவை பாத்துருக்க உன்னாலயுமா கண்டு பிடிக்கமுடியல?" என்ற கணவனின் அர்ச்சனையில் நனைந்து கொண்டிருந்தவளுக்கு,  அவளது அண்ணன் விஜயை நினைத்து கொலைவெறியே வர அதே வேகத்துடன் அவனுக்கு போன்னில் அழைக்க அவன் எடுத்ததும் கோவத்தில் பல்லை கடித்தவாறு "டேய் அண்ணா.... உன் ஐஸ்வர்யாவை கண்டுபிடிச்சாச்சு, நாளைக்கே நான் வந்து கல்யாணம் பண்ணிவைக்குறேன் உனக்கு" என்றாள் வெள்ளிமலர்.

 


ReplyQuoteLavanya Dhayu
(@lavanyadhayu)
Trusted Member Writer
Joined: 9 months ago
Posts: 75
12/08/2020 5:57 pm  

@savitha-nagaraj sissy!!! 🤣 Semma comedy. Vijay vera level

உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ


ReplyQuote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
13/08/2020 4:39 pm  

@lavanyadhayu thank you sissy 😍


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 125
13/08/2020 6:14 pm  

Hi Savitha, vijay samayana aallu eruparu pola🤣 🤣 ..story super 👍 


ReplyQuote
Savitha Nagaraj
(@savitha-nagaraj)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 11
14/08/2020 2:28 am  

@vaniprabakaran  😍😍thank you sisy


ReplyQuotePage 1 / 2
Share: