Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

எந்தன் நேசம்  

Page 5 / 8
  RSS

Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
23/09/2020 6:00 am  

அத்தியாயம் 34

மகேஷ் சக்தியின் வாடிய முகத்தை கண்டு மனம் வருந்தினான்.

"சந்தியா இப்படி திடீர்னு ஏன் மனசு மாறினான்னு தெரியல.. நான் வீட்டுக்கு போய் அவக்கிட்ட பேசி பார்க்கிறேன்.. நீ அது வரைக்கும் இவனை இங்கேயே வச்சிரு..."

"எனக்கு உன் அப்பாவை பத்தி நல்லாவே தெரியும்.. சந்தியா இனி ஸ்டேஷனுக்கு வரமாட்டா.. நீ வீணா டைம் வேஸ்ட் பண்ணாத.. அதுவுமில்லாம இந்த மாதிரி பாதியில் அந்துபோன கேஸ் நிறைய பார்த்துட்டேன்.. இனியும் இந்த கேஸ்களுக்காக மனம் நொந்துக்க நான் விரும்பல.. அதுவுமில்லாம உன் மேல நான் கேஸ் பைல் பண்ணியிருக்கேன்.. நீ இந்த இடத்தை விட்டு போக முடியாது.."

சக்தி சொன்னதை கேட்டு ரகு சிரித்தான். "செம பல்பு ஸார் உங்களுக்கு.." என்று கூறி சிரித்தவனின் அருகே வந்து அவனது தலையில் ஒரு தட்டு தட்டியவன் "பிராடு பையன் நீ என் நிலைமையை பார்த்து சிரிக்கறியா..?" என்றான்.

அவன் தலையை தடவிக் கொண்டே சக்தியை பார்த்தான்.

"மேடம் இந்த ஆள் எப்பவும் என் தலை மேலயே அடிக்கிறார்.. என்னன்னு நீங்களாவது கேட்க கூடாதா..?" சக்தி அவனையும் மகேஷையும் முறைத்து விட்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

சந்தியா தயாராகி ஹாலுக்கு வந்து அப்பாவை தேடினாள். மூர்த்தி அங்கிருந்த ஒரு இருக்கையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருக்க அவனருகே சென்று அவனின் தோளை தொட்டாள் அவள்.

"அப்பா நாம போகலாமா..?"

"நீங்க எங்கேயும் போக போறது இல்ல.." என்றார் முத்து தூரத்திலிருந்த டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தபடி.

"தாத்தா இதோடு உங்க கெட்ட எண்ணங்களை செயல்படுத்துவதை நிறுத்திடுங்க.. உங்களால் இனியும் யார் வாழ்க்கையும் வீணாக வேண்டாம்.. அந்த ரகு எனக்கு எவ்வளவு தொந்தரவு தந்தான் தெரியுமா..? அவனை முட்டிக்கு முட்டி தட்டாம நான் விடப்போறதில்ல.."

"ஓ.. அவன் மேல் அவ்வளவு கோபம் இருந்தா அவன் முதல் நாள் உன் பின்னாடி சுத்தும்போதே எங்கக்கிட்ட சொல்லியிருக்க வேண்டிதுதானே..? அன்னைக்கே அதை நீ எங்கக்கிட்ட சொல்லியிருந்தா பிரச்சனை இப்போ இவ்வளவு தூரம் வந்திருக்குமா..?"

சந்தியாவிற்கு தாத்தா சொன்னதில் இருந்த சிறு நியாயம் புரிந்தது. ரகுவை பற்றி முதலிலேயே வீட்டில் சொல்லியிருந்தால் பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காதுதான்.. சிறு இடறலை கூட கவனமாக பார்க்க வேண்டும் என்பதை இப்போதுதான் சந்தியா புரிந்துக் கொண்டாள். இவனது இந்த பார்வை நம்மை என்ன செய்து விடும்..? சும்மா பின்னாடி இவன் சுற்றுவதால் என்ன நஷ்டம் நிகழ்ந்து விடப்போகிறது..? என நினைக்கும் சிறு அசாதாரண எண்ணம்தான் பலரையும் படுகுழியில் கொண்டு சென்று வீழ்த்தி விடுகிறது.

"முதல்லயே நான் இதை சொல்லாம விட்டது என் தப்புதான்.. ஆனா அதுக்காக இப்போது அவனை சும்மா விட சொல்றிங்களா..?"

முத்து அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வந்தார்.

சந்தியா அனிச்சையாக தன் தந்தையின் அருகே நெருங்கி நின்றாள். மூர்த்திக்கு இரு தலை கொள்ளி எறும்பென துடித்தது மனம்.

பெற்ற மகள் பல வருடங்கள் கழித்து தன்னை நம்பி தன்னை சார்ந்திருக்கிறாள் என்ற மகிழ்ச்சியும் அவளின் ஆரம்ப நிலை நம்பிக்கையை கூட காப்பாற்ற இயலாத நிலையில் முத்துவிடம் தான் சிக்கிக் கொண்டதையும் நினைத்து பித்து பிடித்தாற் போல் அமர்ந்திருந்தான் மூர்த்தி.

"அவனை சும்மா விட சொல்ல நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்ல.. அவனை உன் மாமன் பார்த்துப்பான்.. அதனால் நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு வீட்டுலயே இரு.. போதும்.."

சந்தியா அதிர்ச்சியோடு தாத்தாவை பார்த்தாள். தனது அப்பாவை நம்பிக்கையோடு திரும்பி பார்த்தாள். மூர்த்தி தலை கவிழ்ந்து அமர்ந்திருப்பதை பார்த்த பிறகே அவளுக்கும் இதில் ஏதோ வில்லங்கம் உள்ள விசயம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.

தாத்தாவை தைரியமாக எதிர்கொள்ள தயாராகியவளாக அவரை பார்த்தாள். "நான் ஏன் உங்க பேச்சை கேட்கணும்..? நான் இதை சரியான வழியில் சட்டப்படி பார்த்துக்கிறேன்.. நீங்க இது எதுலையும் தலையிடாதிங்க.."

முத்து சிரித்தபடியே அவளின் எதிரே அமர்ந்தார். "இதுக்கே இப்படி குதிச்சா எப்படி..? உனக்கும் உன் மாமனுக்கும் கல்யாணம் செய்ய முடிவு பண்ணியிருக்கேன் நான்.." அவர் சொன்னது அவள் தலையில் இடியென்றுதான் விழுந்தது. நேற்று வரை பெத்த தகப்பனை விடவும் அதிக பாசத்தோடு பார்த்தவனை திருமண இணையாக பார்க்க யாருக்குதான் மனம் ஒப்புக் கொள்ளும்..?

"உங்களுக்கென்ன பைத்தியமா..? மாமாவும் நானும் எப்படி..? உங்க சூழ்ச்சியை என்னை பலிகடா ஆக்காதிங்க.. எனக்கு இங்கேயிருந்தா பைத்தியமே பிடிச்சிடும்.. நான் இப்பவே சக்தி அத்தைக்கிட்ட போறேன்.." என்றவள் வாசலை நோக்கி நடக்க அவளின் எதிரே வந்து நின்றார் முத்து.

"நீ எங்கேயும் போக முடியாது.. அதென்ன சக்தி அத்தை..? அந்த சக்தியை நானே என் மருமகளா ஏத்துக்கல.. நீ இன்னைக்கு பொறந்த நண்டு அவளை அத்தைன்னு உரிமை கொண்டாடுறியா..? பல்லெல்லாம் தட்டிருவேன் பார்த்துக்க.. விட்டா நீயே தாலி எடுத்து தந்து கல்யாணத்தையும் பண்ணி வச்சிடுவ போல.." என்றவர் கையை ஓங்க அவள் பயந்து போய் கண்களை மூடினாள்.

அவர் நக்கலாக சிரித்தபடியே கையை இறக்கினார்.

"பொம்பள புள்ளைன்னா இப்படி பயத்தோடுதான் இருக்கணும்.. வீட்டு பெரிய மனுசங்களுக்கு எதிரே போராட்டத்தில் இறங்க கூடாது.. அமைதியா உன் ரூம்ல போய் இரு.. நான் போய் உன் மாமனை ஸ்டேசன்ல இருந்து கூட்டி வரேன்.."

அவள் மறுத்து தலையசைக்க அவர் சிரித்தபடியே தன் மனைவியை தேடினார். "இங்கே வா நான் கட்டிய பொண்டாட்டி பொன்னி.. இவளை இவ ரூம்ல வச்சி நீயே பத்திரமா பார்த்துக்க.. இல்லன்னா நான் பாட்டுக்கு கழுத்தை திருகி எங்கேயாவது புதைச்சிட்டு போயிடுவேன்.. நீதான் பாசக்கார பாட்டியாச்சே.. உன் பேத்தியை உயிரோடு காப்பாத்திக்க பார்க்கலாம்.." அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் கிண்டலும் நக்கலும்தான் இருந்தது. ஆனால் அதுவே பொன்னிக்கு பயத்தை தந்து விட்டது.

பொன்னி வாடிய முகத்தை மறைத்தபடி வந்து சந்தியாவை தன்னோடு அழைத்துச் செல்ல முயன்றாள். சந்தியா பொன்னியின் கையை உதறிவிட்டு செல்ல முயன்றாள்.

ஆனால் பொன்னி "அமைதியா என்னோடு வா.. இல்லன்னா நீ என் பொணத்தை தாண்டித்தான் இந்த வீட்டை விட்டு போயாகணும்.." என்றாள் அழுத்தமாக.

சந்தியா வியப்போடு பொன்னியை பார்த்தாள்.

முத்து கை தட்டியபடி தன் மனைவியை பார்த்து சிரித்தார்.

"இதுக்குதான் எமோசனல் ப்ளாக் மெயில் பண்ண ஒரு லேடி கேரக்டராவது வீட்டுல வேணும்ங்கறது.. பொன்னி நீ செத்தபிறகு உனக்கு நம்ம தோட்டத்திலேயே மணிமண்டபம் கட்டுறேன்டி.." என அவர் சொல்ல பொன்னி முக சுளிப்பை மறைத்தபடி சந்தியாவை தன்னோடு அழைத்துச் சென்றாள்.
சந்தியா தனது அறைக்கு வந்ததும் இடுப்பில் கை வைத்தபடி தன் பாட்டியை பார்த்தாள். "ஏன் பாட்டி நீங்களும் இப்படி மாறிட்டிங்க..? தாத்தா எவ்வளவு கெட்டவரா இருக்காருன்னு உங்களுக்குமா புரியல..?"

பொன்னி கதவை தாளிட்டு விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். "எனக்கு எல்லா விசயமும் தெரிஞ்சதால்தான் இப்படி நடந்துக்கிறேன்.. உன் தாத்தா நமக்கு பண்ண துரோகத்தை விட சக்திக்கு பண்ண துரோகம் அதிகம்.. அவளோட குழந்தை இந்த மண்ணை பார்க்கும் முன்னாடியே அந்த குழந்தையை அழிச்சிருக்காரு இவர்.. இந்த பாவத்துக்கு இவர் கண்டிப்பா தண்டனை அனுபவிப்பார்.."

"ஆனா எப்படி பாட்டி..?" என்றவளின் தலையை வருடி விட்டாள் பொன்னி.

"இவரை மாதிரி ஆட்களை அவங்களோட வழியில போய்தான் கவுத்தாகணும்.. நீ அவர் சொல்படி கேட்டு நட.. மகேஷ் தனியா கிடைச்சதும் சக்திக்கு உங்க தாத்தா பண்ண துரோகத்தை சொல்லிடு.. மீதியை அவன் பார்த்துப்பான்.. உன் தாத்தன் எனக்கு மணிமண்டபம் கட்டப் போறானாம்.. அந்த ஆளுக்கு நான் கட்டுறேன் பாரு ஜீவ சமாதி.."

சந்தியா பாட்டியிடமிருந்து ஓரடி விலகி நின்று அவளை வியப்பாக பார்த்தாள். "எதுக்கு பாட்டி நீ இப்போ வில்லி மாதிரி பேசுற..?"

பொன்னி தனக்குள் சிரித்தபடி அவளை பார்த்தாள்.

"அமைதியான குடும்ப தலைவியாக இருந்து இப்ப மட்டும் நான் என்னத்தை சாதிச்சேன்..? பொம்பளைன்னா அடங்கி கிடக்கணும்ன்னு என் ரத்தத்துல ஊறிய எண்ணம்தான் தப்பு.. சக்தி மாதிரி பிரச்சினையை எதிர்த்து போராட கத்துருக்கணும்.. இந்த உலகத்துல நம்மை சுத்தியிருக்கற முக்கால் வாசி விஷம்தான்.. நாமதான் பார்த்து பத்திரமா இருந்துக்கணும்ன்னு இன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன்.. அந்த சக்திதான் என் மருமகள்.. இதை நான் முடிவு பண்ணிட்டேன்.. மகேஷ் எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிட்டு அவனா ஒரு நல்ல முடிவை எடுக்கும் வரை உன் தாத்தனோட பேச்சை கேட்டு நட.."

குமரன் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததை மகேஷ்தான் முதலில் பார்த்தான். "மாமா.. என்ன இந்த பக்கம்..?" என கேட்டவனை தலை சாய்த்து பார்த்தார் அவர்.

"இந்த ஸ்டேசன் என் கட்டுப்பாட்டுல இரு.. இதை நீ மறந்துட்டு என்னை விருந்தாளி மாதிரி வரவேற்காத.." என்றவர் நேராக சக்தியின் எதிரே சென்று நின்றார்.

"குட் ஆஃப்டர் நூன் ஸார்.." வீர வணக்கம் வைத்தவளுக்கு தலையசைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தார் அவர்.

"மகேஷை நீ பொய் கேஸ்ல உள்ள பிடிச்சி போட்டிருக்கன்னு அவனோட அப்பா என்கிட்ட கம்ப்ளைண்ட் தந்திருக்காரு.." என அவர் தலையை பிடித்து கொண்டு சொன்னார்.
சக்தி கோபத்தோடு மகேஷை பார்த்தாள். அவன் இரு

கைகளையும் விரித்து 'எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..' என்னும் விதமாக தலையசைத்தான்.

"ஸார் அவர் தந்த கம்ப்ளைண்ட்தான் ஸார் பொய்.."

"தெரியும்மா.. ஆனா என்ன செய்ய சொல்ற..? சந்தியா காணாம போனதுக்கு எந்த கம்ப்ளைண்டும் இல்ல.. அவளை ஒருத்தன் கடத்தி வச்சிருந்தான்னு சொல்ல சாட்சியும் இல்ல.. ஆரம்பமே இல்லாதபோது மகேஷ் அந்த இடத்துல ஆயுதத்தோடு இருந்தான்னு எப்படி நிருபிக்கிறது..?''

சக்தி மீண்டும் மகேஷை பார்த்தாள். அவன் கண்களில் பரிதாபம்தான் இருந்தது. அவளது வெளுத்து போன முகத்தை கண்டவனுக்கு அவளின் ஆசைக்காகவாவது ஜெயிலுக்கு போய் வர ஆசை கொண்டான்.

"நான் வேற என்ன ஸார் பண்ணட்டும்..? இந்த ரகுவை என்ன செய்யட்டும்..? மகேஷ் கையிலிருந்து நான் பிடுங்கி வச்சிருக்கற துப்பாக்கியை என்ன செய்யட்டும்..?''

"அந்த கோவிலோட பூசாரி கீழே கிடந்த துப்பாக்கி ஒன்னை கண்டெடுத்து உன்கிட்ட தந்ததா என்கிட்ட சொல்லியிருக்காரு.. மகேஷோட அப்பா நீ உன் சொந்த பகையை மனசுல வச்சி இந்த சந்தர்ப்பத்துல மகேஷ் மேல பொய் கேஸ் போட்டிருப்பதா என்கிட்ட கேஸ் தந்திருக்காரு.."

இதை கேட்டு மகேஷ்க்கே சுவற்றில் முட்டிக் கொள்ள தோன்றியது.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..

wattpad  ல இந்த கதையோட கிளைமேக்ஸ் முடிச்சிட்டேன் நட்புக்களே.. 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
24/09/2020 6:25 am  

அத்தியாயம் 35

மூர்த்தி வானம் பார்த்து அமர்ந்திருந்தான். அவனருகே அமைதியாக வந்து அமர்ந்தார் முத்து. "மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவான்.. அவனுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் முதல்ல குதிப்பான்.. ஆனா அவனை அடக்கற வழி எனக்கு தெரியும்.. இதுல நீ ஏதாவது குழப்பம் பண்ண நினைச்ச அப்புறம் நானே உனக்கு கொள்ளி வச்சிடுவேன்.. நீ நான் சொல்வதை மட்டும் கேட்டு நட.. இல்லன்னா நீதான் சக்தியோட குழந்தைக்கு எமனானன்னு மகேஷ்கிட்ட சொல்லிடுவேன்.."

மூர்த்திக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு அவரை பார்த்தான். "நீங்க அதை சொல்லும் முன்பே அத்தை இதை அவன்கிட்ட சொல்லிடுவாங்க மாமா.."

முத்து தன் மீசையை நீவி விட்டபடி அவனை பார்த்தார்.

"அப்பாவும் மகனும் சண்டை போட்டுக் கூடாதுன்னு நினைக்கிறதுதான் தாய் உள்ளம்.. அவ இதை அவன்கிட்ட சொல்ல மாட்டா.. ஆனா நீ ஏதாவது எனக்கு கட்டுப்படலன்னு தெரிஞ்சதுன்னு வை.. நான் அந்த பரிதாபமெல்லாம் பார்க்க மாட்டேன்.."

'அந்த விசயம் எனக்கு தெரியும்.. ஆனா என் பொண்ணோட வாழ்க்கையை நீங்க அழிக்க நினைக்கும்போது நான் அமைதியா இருப்பேன்னு நினைக்கிறிங்களே.. அதை நினைச்சாதான் எனக்கு சிரிப்பு வருது.. இந்த மூர்த்தியோட சுய ரூபத்தை இனிதான் நீங்க பார்க்க போறிங்க..' அவன் எடுத்த முடிவு தெரியாமல் ரொம்பவும் நம்பிக்கையோடு இருந்தார் முத்து.

சக்தி யோசனையோடு அமர்ந்திருந்தாள். அவளின் முடிவுக்கு காத்திருந்தார் குமரன்.

"ஸார் நான் அந்த பையனை வெளியே விட்டா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்.. மகேஷோட அப்பா அவனை ஆள் வச்சி அடிச்சி கொன்னுடுவாரு.."

"அது எனக்கும் தெரியும் சக்தி.. ஆனா நமக்கு வேற வழி கிடையாது.. அவங்க வலுவான சாட்சியை ரெடி பண்ணி வச்சிருக்காங்க.."

சக்தி தலையை பிடித்தபடி அவரை பார்த்தாள். மகேஷ்க்கு தனது அப்பாவின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை.

எதற்காக அவர் இப்படி இந்த விசயத்தில் மூக்கை நுழைத்தார் என அவனுக்கு கோபம் வந்தது.

"சக்தி நீ கவலைப்படாதே.. என்னை வெளியே விடு.. நான் இந்த கேஸ் ஸ்ட்ராங்கா நிக்கற மாதிரி சாட்சி ரெடி பண்றேன்.. எங்க அப்பாவையும் இந்த கேஸ்ல தலையிடாத மாதிரி பண்றேன்.."

சக்தி இருந்த இடத்திலிருந்து அவனை புருவம் உயர்த்தி பார்த்தாள். அவளது பார்வையில் 'இது உண்மைன்னு நம்பட்டா?' என்ற கேள்வி இருந்தது. மகேஷ் இரு கைகளையும் விரித்து உதடு பிதுக்கினான். "நீ என்னை நம்பலன்னா நான் என்ன பண்வேன்..? எனக்கும் வாய்ப்பு தந்து பாரேன்.."

சக்தி எழுந்து அவனருகே வந்தாள். இடுப்பில் கை வைத்தபடி அவனை பார்த்தாள். "உனக்கு எதிராக நீயே சாட்சி ரெடி பண்ண போறேன்னு சொல்லுவதை நம்ப சொல்றியா..?"

"இதை நான் உனக்காக செய்றேன் சக்தி.. அழியாத நம்ம காதலுக்காக.." அவன் மேலே பேசும் முன் அவனை கை காட்டி நிறுத்தினாள்.

"உங்க அப்பா பண்ணதே போதும்.. இதுக்கு மேல நீ எதுவும் செஞ்சி அந்த ஆளோட கோபத்துக்கு பலியாக வேண்டாம்.." என்றவள் லாக்அப்பை திறந்து விட்டாள்.

"இரண்டு பேரும் கிளம்பலாம்.. ஆனா ரகு பாரு உனக்கு ஒரு விசயம் சொல்றேன்.. நீ கெட்டவன்தான்.. ஆனா பாரு உனக்கு தண்டனையை சட்டபடி தண்டனை வாங்கி தர நினைச்சேன் நான்.. இப்போ நீ மகேஷோட அப்பாக்கிட்ட சிக்கினா உன்னை கொன்னுடுவாங்க அவங்க.. அதனால் நீதான் பத்திரமா இருந்துக்கணும்..."

மகேஷ் சக்தியின் கன்னத்தை கிள்ளினான். "முன்ன பின்ன தெரியாதவங்க மேல கூட உனக்குத்தான் எவ்வளவு பாசம்..? அவன் செஞ்ச தப்புக்கு சட்டபடி தண்டனை வாங்கி தர நினைக்கிற பார்த்தியா..? அங்கே தெரியுது உன் நல்ல மனசு.."

சக்தி அவனது கையை தட்டி விட்டாள். "எப்படி மகேஷ் கொஞ்சம் கூட வெட்கம் மானமே இல்லாம இப்படி சொல்ற.. இவனை நான் காப்பாத்த போராடுவது உங்க அப்பாக்கிட்டயிருந்து.. அதை மறந்துட்டு பேசாத நீ.."

மகேஷ் சிறு சிரிப்போடு அவளை தாண்டி நடந்தான். "எங்க அப்பாவோட கௌரவம் உன்னை என்கிட்ட வரவிடாம தடுத்த போது கூடத்தான் நான் வெட்கம் மானம் இல்லாம இருந்தேன்.. இதெல்லாம் பெரிய விசயமா விடு.. நான் வீட்டுக்கு போய் அங்கே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிட்டு உனக்கு போன் பண்றேன்.."

அவள் சரியென தலையசைத்தாள். அவன் வெளியே செல்ல முயலும் முன் அவனை தன்னோடு இழுத்து கொண்டு ஓரமாக சென்றார் குமரன்.

"ஏன் மாமா..?"

"விசயம் ஏதோ பெருசுன்னு நினைக்கிறேன்.. மூர்த்தி எனக்கு போன் பண்ணான்.." மகேஷ் அவர் சொன்னதை கேட்டு சிரித்தான். "நடக்கற உண்மை எதையாவது சொல்லுங்க மாமா.. அவருக்கும் உங்களுக்கும் ஜென்மத்துக்கும் ஒத்து வராதுன்னு தெரியாதா எனக்கு..?"

அவனை ஆழமாக அவர் பார்த்தார். அவர் சொன்னது உண்மை என்று இப்போதும் கூட அவனால் நம்ப முடியவில்லை. "நிஜமாவா..? ஆனா அவர் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணாரு..?"

"நான் இந்த வீட்டை விட்டு வரேன்.. எனக்கும் என் பொண்ணுக்கும் உன் வீட்டுல இடம் தருவியான்னு சோகமா கேட்டான்.. ரொம்ப நாள் கழிச்சு பேசினாலும் கூட பொறந்த பாசம் சட்டுன்னு வந்து ஒட்டிக்கிச்சி.. அதனால நானும் என்ன பண்றதுன்னு புரியாம 'சரி வா'ன்னு சொன்னேன்.. அவன் வருவான்னு நான் காத்திட்டு இருந்தா அவனுக்கு பதிலா உங்க அப்பா சக்திக்கு எதிரா புகார் கொடுக்க வந்தாரு.. எனக்கு அவர்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல.. அதனால் அமைதியா அவர் சொன்னதுக்கு தலையாட்டிட்டு கிளம்பி வந்துட்டேன்.. மூர்த்தி மேல எனக்கு கோபம் வேணாலும் இருக்கலாம்.. ஆனா சந்தியா எங்க வீட்டோட ஒரே பெண் வாரிசு.. அவ விசயத்துல நான் அலட்சியமா இருக்க முடியாது.. வீட்டுக்கு போனதும் உடனே எனக்கு போன் பண்ணுப்பா.."

மகேஷ்க்கு மூர்த்தியின் இந்த திடீர் முடிவு பல சந்தேகத்தை தந்தது. ஆனாலும் இங்கு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் குமரனிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சந்தியா தனது அறைக்குள் அமர்ந்திருந்தாள். அவளது கண்ணில் கண்ணீர் முத்து முத்தாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்பா கடைசி நேரத்தில் இப்படி ஏமாற்றி விட்டாரே என மனம் நொந்துப் போய் இருந்தாள்.

மாமாவுடன் திருமண ஏற்பாடு செய்ய முடிவெடுத்த தாத்தாவின் மீது கொலைவெறியோடு இருந்தாள். அவர் அடித்த இடம் இன்னும் கூட வலித்தது. கன்னத்தை தொட்டு பார்த்தாள். அதிகம் வலித்தது. இதுவரை அவளை இந்த வீட்டில் யாருமே அடித்ததில்லை. அதிலும் மகேஷ் காட்டி வரும் அன்பின் முன்னால் இந்த ஒரு அறை ஆயிரம் பூகம்பத்திற்கு சமமானது.

அறை கதவை படீரென திறந்தது. சந்தியா நிமிர்ந்து பார்த்தாள். மகேஷ் உள்ளே வந்தான். அவளின் கண்ணீர் அவனது இதயத்தை ஒரு நொடியில் உடைத்து விட்டது என்னவோ உண்மைதான்.

"என்னாச்சி சந்தியா..?" அமைதியான குரலில் கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.

"மாமா.. தாத்தா உங்களுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்காரு.." என்றவள் வேண்டுமென்றேதான் தேமிபியழுதாள். அவளின் சிறு பிள்ளை இதயத்தை முத்து மிகவும் கஷ்டபடுத்தி விட்டார். அதனால் அவளின் அதிக கண்ணீர் அவருக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவாள் அவள்.

மகேஷிற்கு இந்த விசயம் சிறு தடுமாற்றை தந்ததுதான்.

ஆனால் இது ஒன்னும் கை மீறி செல்லப் போகும் விசயமில்லையே என உணர்ந்தவனுக்கு அதிக குழப்பம் உண்டாகவில்லை. அவனது குழப்பம் சந்தியாவின் அடங்கவியலா கண்ணீர்தான்.

"சரி விடுமா.. மாமா இதை கவனிச்சிக்கிறேன்.. அவர் சொன்னதும் நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேனா என்ன..?"

சந்தியா மகேஷை நிமிர்ந்து பார்த்தாள். கண்களை துடைத்துக் கொள்ள முயற்சிப்பது போல் கையை கன்னத்தின் மீது வைத்தாள். "ஸ்ஸ்ஸ்.. அப்பா.." என்று முனங்கி கொண்டே கையை தூரம் எடுத்துக் கொண்டாள்.

மகேஷ் அவளது கையை ஒதுக்கி விட்டு அவளது கன்னத்தை பார்த்தான். கைரேகைகள் பதிந்திருந்த கன்னத்தை பார்த்ததும் அவனுக்கு கண்கள் சிவந்தது.

"என்னாச்சிம்மா..?" பரிவோடு அவன் கேட்க அவள் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் கொட்டியது.

"தாத்தா அடிச்சிட்டாரு.." என்றாள் தலை குனிந்தபடி.

மகேஷ் ஆத்திரத்துடன் கையை மடக்கினான். "அவருக்கு இந்த உரிமையை யார் தந்தது..? நான் கஷ்டப்பட்டு வளர்த்த பொண்ணை அடிக்க அவருக்கென்ன உரிமை இருக்கு..?" கோபத்தோடு எழுந்தவனை கையை பிடித்து நிறுத்தினாள் சந்தியா.

"இங்கே உங்களுக்கு தெரியாத பல விசயம் நடந்துருக்கு மாமா.. எனக்கு இன்னைக்குதான் தெரியும்.." என்றவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள். மகேஷ் திகைத்து போய் அவளது அருகே அமர்ந்து அவளது முதுகை வருடி விட்டான்.

"என்னாச்சிம்மா..? மாமாட்ட சொல்லு.. எது நடந்திருந்தாலும் நான் சரி செய்றேன்.. இப்படி நீ அழுதா நான் என்னன்னு புரிஞ்சிக்கட்டும்..?" அவன் கேட்க அவள் தலையசைத்தபடி நிமிர்ந்தாள். கண்களை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

"உங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல சக்தி அத்தை பிரகனென்டா இருந்திருக்காங்க.. அந்த விசயம் தெரிஞ்சி தாத்தா சக்தி அத்தைக்கு விஷம் கொடுத்துருக்காரு.. ஆனா அவங்க சாகல.. அவங்க வயித்துல இருந்த குழந்தை செத்துடுச்சி.." அவள் அவனது கண்களை பார்த்து சொன்னாள். ஆனால் அவனால்தான் நம்ப முடியவில்லை. சிரித்தபடியே எழுந்து நின்றான். பெருமூச்சு விட்டபடி அறையை சுற்றினான். சந்தியாவை நான்கைந்து முறை திரும்பி திரும்பி பார்த்தான். ஆனால் அவள் முகம் மாறாமல் அவனின் விசித்திர நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்தாள்.

"பொய் சொல்ற.." என்றான் திடீரென.

அவள் இல்லையென தலையசைத்தாள். அவன் தலையை பிடித்தபடி கண்களை மூடினான். நின்ற இடத்திலேயே மண்டியிட்டான். பற்களை அவன் கடிக்கும் சத்தம் சந்தியாவிற்கே கேட்டது.

"மாமா.." என எழுந்தவளை கை காட்டி நிறுத்தினான்.
வராதே என சைகை காட்டினான். அவன் தனது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் புது உண்மையை ஜீரணிக்க போராடிக் கொண்டிருந்தான்.

சக்தி மீது அளவு கடந்த காதலை கொண்டிருந்தான் அவன். அவளது வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை அறியாமல் இருந்ததற்காக அவனுக்கே அவனை நினைத்து ஆத்திரமாக வந்தது.

"விஷம்.. விஷம் கொடுத்துருக்காங்க என் மனைவிக்கு.. இது இந்த பரதேசிக்கு இவ்வளவு நாளா தெரியல.. விட்டுட்டு போயிட்டா விட்டுட்டு போயிட்டான்னு தினம் தினம் திட்டினேனே.. பாவி ஒருநாள் இந்த உண்மையை என்கிட்ட சொல்லியிருக்க கூடாதா..? என்னை கல்யாணம் செஞ்ச பாவத்துக்கு இத்தனை வருசமா தனி வாழ்க்கை வாழுறான்னு நினைச்சேன்.. என் குழந்தையை வயித்துல சுமந்த பாவத்துக்கு விஷமெல்லும் குடிச்சிருக்கான்னு தெரியாம போச்சே.." பைத்தியம் போல பிதற்றிக் கொண்டிருந்தவனை பயத்தோடு பார்த்தாள் சந்தியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..

 


ReplyQuote
Firoza Nazeer
(@firoza645)
New Member Registered
Joined: 4 months ago
Posts: 2
24/09/2020 2:35 pm  

A touching story of two lovers  who were separated by extremists😤


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
26/09/2020 5:18 am  

@firoza645

❤️ ❤️ ❤️ 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
26/09/2020 5:21 am  

அத்தியாயம் 36

மகேஷின் அருகே வந்து மண்டியிட்டாள் சந்தியா.

"மாமா.. சக்தி அத்தைக்கு தாத்தா ரொம்ப அநியாயம் பண்ணிட்டாரு.. இப்பவும் கூட திருந்தாம உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காரு..அவர் இப்பவும் கூட சக்தி அத்தைக்கு துரோகம் செய்யதான் நினைக்கிறாரு.. சக்தி அத்தை மனமுடையறதுல எனக்கு துளியும் விருப்பம் இல்ல.. நீங்க அவங்களை கல்யாணம் கட்டிட்டு வந்தாதான் இந்த பிரச்சனை முடியும்.."

மகேஷ் அவளை சந்தேகமாக பார்த்தான். "உனக்கேன் அவ மேல இந்த திடீர் பாசம்..? நியாயமா பார்த்தா நீ உன் தாத்தாவுக்கும் உன் அப்பாவுக்கும்தானே சப்போர்ட் பண்ணனும்..?" இப்படி சந்தேகம் கொண்டதில் அவன் மீது எந்த தப்பும் இல்லை. அவன் இப்போதுதான் தன் வாழ்வில் நடந்த மிகப்பெரும் உண்மையை அறிந்துள்ளான். அவனது நிலையில் யார் இருந்தாலும் இப்படிதான் வாழ்க்கையின் மீதே சந்தேகம் கொள்வர்.

அவன் சக்தி மீது கொண்ட காதல் அவன் உயிருக்கும் மேலானது. ஆனால் அந்த காதலியின் வாழ்வில் தன்னை காரணமென காட்டி ஒரு பெரும் தீங்கு நடந்துள்ளதை அவனால் எப்படி சுலபமாக ஜீரணித்துக் கொள்ள முடியும்..? அதையும் கூட இத்தனை வருடமாக அறியாமல் இருந்துள்ளோமே என்ற எண்ணம்தான் அவனை அதிகமாக வாட்டி வதைத்தது.

"மாமா.. உங்களுக்கு இப்ப இப்படி பல சந்தேகம் வருவது இயல்புதான்.. ஆனா நீங்க ஒன்னை மறந்துட்டிங்க.. நான் உங்க சந்தியா.. நமக்குள்ள இருப்பது அப்பா மகள் உறவா வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா நம்முடைய உறவு அதுக்கும் மேல.. சக்தி அத்தையும் நீங்களும் காதலிக்கறது தெரிஞ்ச அந்த செகண்டல இருந்து நான் அவங்களை உங்க மனைவியாதான் பார்க்கிறேன்.. எனக்கு இந்த காதலை பத்தி அதிகம் தெரியாது மாமா.. ஆனா உங்க வாழ்க்கையில் சக்தி அத்தை இருந்திருந்தா நீங்க இன்னைக்கு கட்டப்பஞ்சாயத்து ரவுடியா இல்லாம சமுதாயம் பாராட்டுற அளவுக்கு ஒரு நல்ல மனுசனா இருந்திருப்பிங்கன்னு தெரியும்..

நான் தாத்தா செஞ்ச தவறுகளை உங்கக்கிட்ட சொன்னதுல 'எனக்கு கல்யாணம் நடக்க கூடாதுங்கற சிறு சுயநலம் இருக்குன்னு ஒத்துக்குறேன்.. ஆனா அதை விட அதிகமா உங்க மேலயும் உங்க வாழ்க்கை மேலயும் எனக்கும் அக்கறை இருக்கு.." சந்தியா அருகிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்து சொன்னாள்.

மகேஷ் அவள் சொன்னது அனைத்தையும் கேட்ட பிறகு சற்று சந்தேகம் தீர்ந்து நேராக அமர்ந்தான்.

"மாமா.." என்று தயக்கமாக அழைத்தாள் சந்தியா.

"என்னம்மா..?"

"சக்தி அத்தைக்கு நடந்த துரோகம் எப்படிப்பட்ட பாவம்ன்னு எனக்கும் தெரியும்.. ஆனா இதுல ஏதாவது எங்க அப்பா சம்மந்த பட்டிருந்தா அதுக்கு மூலக்காரணம் தாத்தா மட்டும்தானே..? எங்க அப்பா பண்ணது எல்லாமே தப்புதான்.. ஆனா ப்ளீஸ் அவரை எதுவும் செஞ்சிடாதிங்க.. அவருக்கு பதிலா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. எனக்காக என் அப்பாவை மன்னிச்சிடுங்களேன்.." கண் கலங்க கெஞ்சியவளை அமைதியாக பார்த்தான்.

"ஆயிரம் தப்பு செஞ்சிருந்தாலும் உன் அப்பா உனக்கு முக்கியமா போயிட்டார் இல்ல..? இதைதான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்ன்னு சொல்றதா..? ஆனா பாரு.. ஆயிரம் தப்பு செஞ்ச உன் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ண அவரோட மக நீ இருக்க.. என் வாரிசு ஆணா பெண்ணான்னு கூட தெரியும் முன்னாடியே அழிக்க பட்டிருச்சி.. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு சந்தியா.. என்னால எதையும் சரியா யோசிக்க முடியல.. நாம மீதியை அப்புறம் பேசிக்கலாம்.." என்றவன் எழுந்து நின்றான்.

அவன் அந்த அறையை விட்டு செல்வதை கண்ணீரோடு பார்த்தாள் சந்தியா.

சக்தி தனது மற்ற அலுவலக பணியில் மும்முரமா ஈடுப்பட்டிருந்த போது செல்வா அவளது போனுக்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்று அவள் காதில் வைத்த மறு நொடியே "நீ உடனே கிளம்பி இங்கே வா.." என்று போனில் கத்தினான் செல்வா.

"எதுக்கு இப்படி பறக்கற..? ஆக்ரா என்ன அரை கிலோ மீட்டர்லயா இருக்கு நீ கூப்பிட்ட உடனே வர..? முதல்ல விசயம் என்னன்னு சொல்லு.."

"இதை போன்ல சொன்னா உனக்கு புரியாது.. நீ உடனே கிளம்பி வா.. அவ்வளவுதான் நான் சொல்வேன்.."

"லூஸா நீ..? எதையும் சொல்லாம உடனே கிளம்பி வான்னு கத்தினா எப்படி நான் வருவது..? றெக்கை கட்டிக்கிட்டா வர முடியும்..?"

"ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. நீ டக்குன்னு கிளம்பி வா.."

சக்திக்கு அவனது அவசரம் ஆச்சரியத்தை தந்தது. இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட அவன் இப்படி அவசரப்படுத்தியது இல்லை. 'ஒருவேளை இனியனுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிடுச்சா..' நினைக்கும் போதே அவளுக்கு பக்கென இருந்தது.

"இனியன் நல்லாருக்கானா..?" என்றாள் அவசரமாக.

"அவன் நல்லாதான் இருக்கான்.. நீ கேள்வி மேல கேள்வியா கேட்காம கிளம்பி வா.. என்னால இதுக்கு மேல உன்கிட்ட போன்ல எதுவும் சொல்ல முடியாது.." என்றவன் போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.

சக்தி குழப்பத்தோடே எழுந்து நின்றாள். அவள் பெயரில் ப்ளைட் டிக்கெட் புக் செய்யப்பட்டதாக போனுக்கு மெஸேஜ் வந்து சேர்ந்தது. "என்னதுக்கு இவன் இவ்வளவு அவசரப்படுறானோ..?" என புலம்பியபடி தனது அலுவல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

வனஜா அவளை எதிர்க்கொண்டு வந்தாள். "சக்தி நான் நேத்து எடுத்த செல்பிய பாரேன்.." என்று தனது போனை அவளின் கண்களுக்கு நேராக காட்டினாள். அவளும் மகேஷும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் அந்த போனில் வரிசை கட்டியது.

சக்தி நெற்றியில் அறைந்துக் கொண்டாள். "லாக்கப்ல இருக்கற குற்றவாளியோடு போலிஸே செல்பி எடுக்கற காலம் இருக்கும்போது இந்த நாடு எப்படி உருப்படும்..?"

"போலிஸ் நீ அவனை காதலிச்சா கரெக்டு.. ஆனா நான் அவனோடு ஒரு செல்பி எடுத்தா தப்பா..? உன்னால எடுக்க முடியாத போட்டோவை நான் எடுத்துட்டனேன்னு உனக்கு பொறாமை.."

"அக்கா.. உங்க அலப்பரை அவன் அலப்பரையை விட அதிகமா இருக்கு.. இது ஒன்னும் ஒத்தை செல்பி கிடையாது.. நீங்க எடுத்த போட்டோவை வச்சி ஒரு கண்காட்சியே நடத்தலாம்.. அப்புறம் இன்னொன்னு சொன்னிங்களே பொறாமைன்னு.. பேய் பிசாசுதான் அவனோடு போட்டோ எடுக்க ஆசைப்படும்.. நான் இல்ல.." அவள் அதை சொன்ன பிறகே தன் வார்த்தையிலிருந்த கிண்டல் உரைக்கும் பிழையை உணர்ந்தாள். வனஜாவை நாக்கை கடித்தபடி ஓரக்கண்ணால் பார்த்தாள்.

"நான் உன் கண்ணுக்கு பேய் பிசாசு மாதிரி தெரியறேன்..!?" வனஜா புருவம் உயர்த்தி கேட்டாள்.

"ஸாரி அக்கா டங்க் ஸ்லிப் ஆகிடுச்சி.." என்றவளை இதை நான் நம்பணுமா என்ற அர்த்ததோடு பார்த்தாள் வனஜா.

"அக்கா நான் அர்ஜென்டா ஆக்ரா வரைக்கும் போறேன்..  குமரன் ஸார்கிட்ட நான் போன் பண்ணி சொல்லிக்கிறேன்.. நான் வரும் வரைக்கும் நீங்க ஸ்டேஷனை கொஞ்சம் அதிக கவனத்தோடு பார்த்துக்கங்க.."

"என்ன நீ பாட்டுக்கு திடீர்ன்னு கிளம்பிட்ட..? அங்கே ஏதாவது பிரச்சனையா..?"

"எனக்கும் எதுவும் தெரியாது அக்கா.. திடீர்ன்னு செல்வா போன் பண்ணி வர சொல்லிட்டான்.. அதனாலதான் இப்படி அவசரமா கிளம்பறேன்.. அங்கே போய் போன் பண்ணி மீதியை சொல்றேன்.. செல்வா மட்டும் ஏதாவது உதவாத விசயத்துக்கு இப்படி என்னை அலைக்கழிச்சான்னு தெரியட்டும்.. அவனை அங்கேயே மண்டையை பேத்துடுறேன்.." அவள் அங்கிருந்து வேகமாக கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்ததும் அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு அப்பாவிடம் வந்தாள். "அப்பா நான் ஆக்ரா போறேன்.. சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்.. வனஜாக்காட்ட சொல்லியிருக்கேன்.. அவங்க சாப்பாடு கொண்டு வந்து தந்திருவாங்க.. நீங்க நைட்ல கதவை தாள் போட்டுட்டு தூங்குங்க.." அவர் அவளது அவசரம் கண்டு எதிர் கேள்வி ஏதும் கேட்காமல் சரியென மட்டும் தலையசைத்தார்.
விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகும் கூட செல்வா எதற்காக வரச்சொன்னான் என்ற காரணத்தை யோசித்து குழப்பாமல் இருக்க முடியவில்லை சக்தியால்.

மகேஷ் சந்தியாவின் அறையை விட்டு வெளியே வந்தவுடனே அவன் கண்களில் முதலில் பட்டது மூர்த்திதான்.

மகேஷை கண்டவுடன் அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான்.

"என் கையை விடுங்க மாமா.." கோபத்தோடு தன் கையை உருவினான் மகேஷ். "எதுக்காக என்னை இங்கே கூட்டி வந்திங்க..?"

மூர்த்தி அவனின் முன் தலை குனிந்து நின்றான். "நான் பெரிய பாவம் பண்ணிட்டேன் மகேஷ்.. அந்த பாவத்துக்கு தண்டனையாதான் என் மனைவி இப்படி அல்பாயுசுல செத்துட்டா போல.. இப்பவும் கூட அந்த பாவம் முடியாம என் பொண்ணோட வாழ்க்கையை கூட அழிக்க பார்க்குது.. நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.. என் பொண்ணு வாழ்க்கையை மட்டும் நாசம் பண்ணிடாத.. அம்பு நான்.. ஏவியது உங்க அப்பா.. பழிக்கு பாவம் சுமக்கிறது என் பொண்ணா..? வேண்டாம் மகேஷ்.." அவனின் கையை பிடித்து கெஞ்சினான்.

மகேஷ் அவனை உறுத்து பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் மூர்த்தி ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

"உங்க பொண்ணு மேல நீங்க வச்ச பாசத்தை விட ஆயிரம் மடங்கு நேசத்தை நான் சக்தி மேல வச்சிருக்கேன்... அவ வாழ்க்கையை இப்படி நாசம் பண்ண உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சி..? நான்தானே உங்களுக்கு பிரச்சனை.. அவளுக்கு ஏன் விசம் தந்திங்க..? அதுவும் இவ்வளவு நாளா தெரியாம இருந்தேனே.. நான்தான் எவ்வளவு பெரிய முட்டாள்..?"

மூர்த்தி அவனை சிறு பயத்தோடு பார்த்தான்.

"உனக்கெப்படி தெரியும்..?"

"சந்தியா எல்லாத்தையும் சொல்லிட்டா.." என்றபடி சுவரை பார்த்தவனை கை பிடித்து தன் பக்கமாக திரும்பினான் மூர்த்தி.

"உங்க அப்பா சொல்லிதான் நான் எல்லாத்தையும் செஞ்சேன்.. நீ எதுவாயிருந்தாலும் எவ்வளவு கோபமா இருந்தாலும் அதை உங்க அப்பா மேல காட்டு.. வீணா என் பொண்ணை இதுல பலிகடா ஆக்காத.."

"நான் என்ன செய்யப் போறேங்கறதை அப்புறம் பாத்துக்கலாம்.. முதல்ல நீங்க செஞ்ச அக்கிரமத்தை சொல்லுங்க.." மகேஷ் உறுமலாக கேட்டான்.

மூர்த்திக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. "அ.. அது வந்து.. சக்தி உன்னை விட்டு பிரிஞ்சி போன கொஞ்ச நாள் கழிச்சி நீ விஷம் குடிச்சியே நியாபகம் இருக்கா..?"

மகேஷ் ஆமோதித்து தலையசைத்தான்.

"அன்னைக்கு நாங்க உன்னை ஹாஸ்பிடல் சேர்க்க போன இடத்துலதான் சக்தி கர்ப்பமா இருந்த விசயம் தெரிய வந்தது. உங்க அப்பா அவளை மாந்தோப்புல கட்டி வச்சி நீ மீதி வச்ச பாதி விஷத்தை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்.. அவ குடிக்க மறுத்தப்போது நான்தான் வலுக்கட்டாயமா அவளுக்கு அந்த விஷத்தை கொடுத்தேன்.."

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
26/09/2020 5:25 am  

அத்தியாயம் 37

தான் மீதி வைத்த விஷம்தான் தன் வாரிசை கொன்றிருக்கிறது என அறிந்ததும் மகேஷின் மனம் துடியாக துடித்தது. வியர்த்த முகத்தை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.

"அதுக்கப்புறம் என்ன ஆச்சி..?" கரகரத்த குரலில் கேட்டான் மகேஷ்.

"நான் அதுக்கப்புறம் உன்னை பார்க்க ஹாஸ்பிட்டல் வந்துட்டேன்.. நான் மாந்தோப்புக்கு திரும்பிப்போய் பார்த்த போது அங்கே சக்தி இல்ல.. அவளோட வீட்டுல கூட போய் பார்த்தேன்.. அவ அங்கேயும் இல்ல.. மாமா பிணத்தை மறைக்கற அளவுக்கு வேலை வைக்காம அவளே எங்கேயோ போய் செத்துட்டா போலன்னு சொல்லி என்னை மறுபடி எங்கேயும் தேடி போக விடல.. அவ செத்துட்டான்னுதான் நாங்க நம்பியிருந்தோம். ஆனா அவ ஒரு வருசம் கழிச்சி திரும்பி வந்த பிறகுதான் அவ சாகலன்னு எங்களுக்கே தெரிஞ்சது.. உங்க அப்பா போய் அவளை பார்த்தாரு.. அவ உன் வாழ்க்கையில் மீண்டும் வரக்கூடாதுன்னு உறுதியா இருந்தாரு.. ஆனா அவ திரும்பி வரதுக்கு ஒரு வாரம் முன்னாடிதான் உன் அக்கா கர்ப்பமா இருப்பது உங்க அப்பாவுக்கு தெரிஞ்சது.. தன் மகள் வயித்துல வளரும் குழந்தைக்கு தோஷம் எதுவும் பிடிச்சிடக்கூடாதுன்னு நினைச்சி சக்திக்கிட்ட ஒரு லட்ச ரூபா பணத்தை தந்துட்டு வந்துட்டாரு.. சக்தியும் அந்த பணத்தை வாங்கிக்கிட்டு உன் பக்கம் திரும்பி பார்க்காம இருந்துட்டதாதான் நானும் நினைச்சேன்.. ஆனா அன்னைக்கு ஒரு நாள் நைட் நான் அவளை கொல்ல கத்தியோடு போனபோதுதான் அவ விலகி இருக்க காரணம் எங்களோட மிரட்டல் இல்ல உங்க அம்மாவோட கண்ணீர்ன்னு தெரிஞ்சது.. அவ நல்லவன்னு எனக்கும் தெரியும் ஆனா என் ரத்ததுல ஊறிப்போன சாதிவெறி அவளை ஏத்துக்க விடல.. இதை நான் இன்னைக்கு சொல்ல காரணம் கூட என் மகளோட வாழ்க்கை மேல இருக்கற சுயநலம்ன்னு உனக்கே தெரியும்.. எங்களை திருத்த யாராலயும் முடியாது மகேஷ்.. நீங்க வாழணும்ன்னா நீங்களேதான் போராடி வாழ்ந்துக்கணும்.."

மகேஷிற்கு தன் இதயம் நடுங்குவது தெரிந்தது.

வாழ்க்கையின் போராட்டம் பற்றி நன்கு அறிவான் அவன்.

ஆனால் இப்படி வாழ்வே போராட்டம் என்பதைதான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அவனால் மூர்த்தியின் எதிரே நிற்க கூட முடியவில்லை.

அந்த வீட்டில் இருப்பதே அவனுக்கு நரகத்தில் இருப்பது போலிருந்தது. மூர்த்தியை தாண்டிக்கொண்டு நடந்தான். ஊர்த்தி அவனது கையை பற்றி நிறுத்தினான். "எதுவும் சொல்லாம போறியே மகேஷ்..?" என்றான்.

மகேஷ் சிலைப் போன்ற முகப்பாவத்தோடு அவனை பார்த்தான். "நான் இதுல சொல்ல என்ன இருக்கு மாமா..? உங்க முன்னாடி நான் அற்பமா உணர்கிறேன்.. அறியாத பிள்ளை அத்துவான காட்டுக்குள்ள இருக்கா மாதிரி தோணுது.. இவ்வளவு நாளா உங்களோடுதான் சேர்ந்து வாழ்ந்தேன். ஆனா பாருங்க எனக்கென்னவோ நீங்க எல்லோரும் புதுசா அறிமுகமான எமலோக பூதங்கள் மாதிரியே இருக்கு.. உங்களோடு இருக்க எனக்கு பயமா இருக்கு மாமா.." என்றவன் தன் கையை விடுவித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

மகேஷின் மனம் முழுக்க ஏதேதோ நினைவுகள். கால் போனப் போக்கில் நடந்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நடுமதிய தார்சாலை அவனது வெற்றுப்பாதத்தை அனலாக சுட்டது. ஆனால் அதன் உணர்வை அறியக்கூட அவனது மூளையால் முடியவில்லை.

கரும்புகை கிளப்பி செல்லும் மோட்டார் வாகனங்களில் மத்தியில் பைத்தியம் போல நடந்தான். காதோரம் கத்திய வாகனமொன்றின் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பியவன் அந்த வாகன ஓட்டி எதையை திட்டியபடி அவனை கடநயது செல்வதை உணர்ந்தான். ஆனால் அவன் என்ன திட்டினான் என்பதை கூட அவன் செவி கேட்டுக் கொள்ள மறுத்து விட்டது.

வானில் சூழ்ந்த திடீர் கரும் மேகங்கள் துளிதுளியாக மழை நீரை சிந்தியது. தரைப்பட்ட தண்ணீர் துளிகள் இதுவரை அடித்த வெயிலின் காரணமாய் கொதித்துப்போயிருந்த தரையில் பட்டு உடனடியாக ஆவியாகி மறைந்தக் கொண்டிருந்தது.

மகேஷ் தன் மேல் விழுந்த மழைத்துளிகளை அண்ணாந்துப் பார்த்தான். அவனது கண்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணீர் மழையோடு சேர்ந்து கரைய தொடங்கியது. கன்னம் விழும் குளிர்ந்த மழையோடு கலக்கும் தன் சூடான கண்ணீரை புறங்கையால் துடைக்க முயன்றான். ஆனால் அவனது முயற்சியையும் மீறி கண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்தது. தன்னோடு போராடவே இயலாமல் அருகிருந்த ஒரு பூங்காவில் நுழைந்து சிமெண்ட் பெஞ்ச் மீது அமர்ந்தான்.

மழையோடு தானும் கரைந்து விட மாட்டோமா என ஆசைக்கொண்டான். இதுவரை தன் வீட்டில் தன் காதலியை ஏற்க மறுக்கிறார்கள் என்று மட்டுமே எண்ணியிருந்தவனுக்கு தன் சொந்த குடும்பம் தன் காதலிக்கு செய்த துரோகம் அறிந்ததும் தனது இவ்வளவு நாள் வாழ்வே வீணென உணர்ந்தான்.

கண்கள் மூடி வானத்திற்கு தன் முகம் காட்டி பெஞ்ச் மீது தலை சாய்த்தவனுக்கு தான் தனது இரண்டாம் கட்ட நரகத்து தண்டனையை அனுபவிப்பது போல இருந்தது. முதல் கட்டமாக அனுபவித்த தண்டனை இன்னும் அவன் நெஞ்சில் இருந்தது.

விஷமருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளி வந்தவன் முதலில் தேடு சென்றது சக்தியையே. அவளை காணாமல் தினம் தினம் இப்படி பைத்தியம் போல சுற்றியதை எப்படி மறப்பான் அவன்..?

இன்றும் அதே நிலையில் பைத்தியமாக சுற்றுவதை உணர்ந்தவனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் புத்தியில் உரைத்தது. அன்று சோகமாக திரிய அவன் காரணம் சக்தி.

இன்றும் அவன் சோகமாக திரிய காரணம் சக்தியேதான்.

ஆனால் அன்று அருகில் இல்லாதவள் இன்று இருக்கிறாளே என உணர்ந்து உடனடியாக எழுந்து நின்றான்.

போலிஸ் ஸ்டேசனை நோக்கி வேகமாக நடந்தான்.

சக்தியின் இவ்வளவு நாள் சோகத்தையும் இன்று ஒரே நாளில் துடைக்க ஆசைக்கொண்டான். அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாலே அனைத்தும் சரியாகி விடுமென நம்பினான்.

"சக்தி.. விஷம் கொடுக்கப்பட்ட அன்னைக்கு எப்படியெல்லாம் துடிச்சியோ..? அன்னைக்குதான் இந்தம பாவி உன்னை காப்பாத்தவும் இல்ல.. உன் வேதனையில் பங்கு கொள்ளவும் இல்லை.. ஆனா இன்னைக்கு நான் இருக்கேன் உனக்காக.. இனிமேல் எந்த சக்தியாலும் நம்மளை பிரிக்க முடியாது.. பழைய முட்டாள் மகேஷ் நான் இல்ல இனிமேலும்.. இனி எவனாவது உன் நிழலை தொட்டாக்கூட நான் அவன் கழுத்தை வெட்டப்போறேன்.. உன்னோட ஒவ்வொரு நொடையையும் கூட நானே எடுத்துக்க போறேன்.." தனது நனைந்த உடைகளை சரிசெய்துக் கொண்டான். தனது கலைந்த தலையை கைகளை கொண்டு இயல்பாக்கிக்கொண்டான். முகத்தை நிறைய முறை அழுந்த துடைத்துக் கொண்டான்.

மகேஷ் ஸ்டேசனுக்குள் நுழைந்து சக்தியின் அறையை நோக்கி நடந்தான். வனஜா அவனை பார்த்ததும் அவனருகே வந்தாள்.

"மகேஷ் இந்த நேரத்துக்கு இங்கே என்ன பண்ற..? இன்னைக்கும் எவனோட கையையும் காலையும் உடைச்சிட்டு நீயே சரணடைய வந்திருக்கியா..?" வனஜா கேட்ட கேள்விக்கு இல்லையென தலையசைத்து விட்டு சக்தியின் அறைக்குள் நுழைந்தான். காலியாக இருந்த அவளது இருக்கையை பார்த்து விட்டு முகம் சுருங்கி வனஜா பக்கம் திரும்பினான். "சக்தி எங்கே..?"

"அவ இங்கே இல்ல.. ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்கா.."

"எங்கே..?" என கேட்டவனுக்கு எப்படி பதிலை சொல்வதென ஒரு நொடி யோசித்தாள் வனஜா.

"வேலை விசயமா போயிருக்கா.. எங்கே போறன்னு எங்கிட்ட கூட சொல்லாம போயிருக்கா.. சீக்கிரம் வந்துடுவேன்னு சொல்லிட்டுதான் போயிருக்கா.."

மகேஷ்க்கு முகம் வாடிப்போனது. அவளை உடனடியாக சந்திக்க முடியாமல் போனதே என்று வருந்தினான்.

"என்ன விசயம் மகேஷ்..? ஏதாவது முக்கியமான விஷயம்ன்னா போன் பண்ணி பாரேன்.."

"போன் எடுக்கல அக்கா.." அவன் சோகமாக கூற,

"ப்ளைட்டல இருப்பா போல.. கொஞ்சம் நேரம் கழிச்சி போன் பண்ணி பாரேன்.." என்றாள் வனஜா.

அவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று விட்டது. "ப்ளைட்டா..? என் தொல்லை தாங்காம வெளிநாடு எங்காவது கிளம்பிட்டாளா..?" அவசரமாக கேட்டவனை சிரிப்போடு பார்த்தாள் அவள்.

"இல்லப்பா.. வேலை விசயமா எங்கேயோ பக்கத்துலதான் போயிருக்கா.. இன்னும் கொஞ்ச நேரம் கழுச்சி போன் பண்ணி பாரு.. அவளே மீதியை சொல்வா.."

வனஜா நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சொன்னாலும் கூட அவனுக்கு என்னவோ சிறு சந்தேகமாகவே இருந்தது. அதனால் ஸ்டேசனை விட்டு வெளியே வந்த மறு நிமிடமே குமரனுக்கு போன் செய்தான்.

"மாமா சக்தி எங்கே..?" அவன் அவசரமாக கேட்க எதிர் முனையில் குமரன் கலகலகவென சிரித்தார்.

"சக்தியை நான் என்ன என் பாக்கெட்டுக்குள்ளயா வச்சிருக்கேன்..? அவ அவளோட ஸ்டேசன்ல இருப்பா.."

"இங்கே இல்ல மாமா.. ஏதோ வேலை விசயமா அவ வெளியூர் போனதா ஸ்டேசன்ல சொன்னதாலதான் அவ எங்கேன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு போன் பண்ணேன்.."

இந்த தகவல் குமரனுக்கே புது தகவல். அவருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் கூட மகேஷிடம் வீணாக வார்த்தைகளை விட்டி விடக்கூடாதென புரிந்தது.

'சக்தி சொல்லாம கொள்ளாம எங்கே போனா..? இவன்கிட்ட நான் என்னன்னு சொல்வேன்..?' அவர் குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சக்தி அழைப்பது போனில் தெரிந்தது.

"மகேஷ் ஒரு செகண்ட் லைன்லயே இரு.. ஒரு முக்கியமான கால் வருது.."

சக்தியின் அழைப்பை ஏற்றவர் "எங்கே போன என்கிட்ட கூட சொல்லாம.. உன் லவ்வர் என்னை போன் பண்ணி டார்ச்சர் பண்றான்.. அவன்கிட்ட நான் என்னத்தை சொல்றது..?" என கோபமாக கேட்டார்.

"ஸாரி ஸார்.. என் அண்ணன் செல்வா அவசரமா ஆக்ரா வரச்சொல்லிட்டான்.. ப்ளைட் பிடிக்கற அவசரத்துல உங்கக்கிட்ட சொல்ல முடியாம போயிடுச்சி.. இங்கே இறங்கின மறு நொடியே உங்களுக்குதான் போன் பண்ணேன்.. அப்புறம் ஒரு முக்கியமான வேண்டுக்கோள்.. அந்த ரவுடியை என் லவ்வர்ன்னு சொல்லாதிங்க.."

"உங்களுக்குள்ள இருக்கற காதல் ஊர் அறிஞ்சதுங்கற விசயத்தை மறந்துட்டு என்கிட்ட பேசாதே.. அவன் லைன்லதான் இருக்கான்.. நீ இப்படியே பேசினா நான் கான்ப்ரன்ஸ் காலா போட்டு விட்டுடுவேன்.."

"ஸார்.. " என அவள் இழுக்க அவர் சிரித்தார்.

"என்ன பாட்டு மாதிரி இழுத்துட்டு இருக்க..? உன் ஆளு காலை கட் பண்ணிக்கிட்டு போயிட்டான்.. இல்லன்னா கான்பரன்ஸ் காலா போட்டு கதை பேசிட்டு இருந்திருக்கலாம்.." என்றவர், "என்ன விசயமா ஆக்ரா போனன்னனு சொல்லவே இல்லையே.." என்றார் நினைவு வந்தவராக.

"எனக்கும் தெரியல ஸார்.. செல்வாவை பார்த்த பிறகுதான் எனக்கே தெரியும்.. அங்கே அவன் காலை கட் பண்ணான்னு சொன்னிங்க இல்ல..? இங்கே பண்ணியிருக்கான்.."

"அப்படின்னா நான் காலை கட் பண்ணிக்கிறேன்.. சிவ பூஜையில் கரடி நான் எதற்கு..?" என்றவர் சிரிப்போடு அழைப்பை துண்டித்துக் கொள்ள, சக்தி மகேஷின் அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..

 

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
28/09/2020 11:00 am  

அத்தியாயம் 38

 

சக்தி மகேஷின் அழைப்புக்கு பதில் அளித்தாள். "ஹலோ.."

"நீ இப்போ எங்க இருக்க..? என்கிட்ட கூட சொல்லாம எங்க போன..?"

சக்திக்கு அவனது திடீர் அவசரம் சுத்தமாக புரியவில்லை. தான் ஆக்ரா வந்தது அவனுக்கு தெரிந்தால் அதன் பிறகு அவனுக்கு செல்வாவை பற்றி தெரிய வரும். அதை விட முக்கியமாக இனியனை பற்றி தெரிய வரும் என எண்ணி பயந்தாள். அவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது என யோசித்தாள்.

"எதுக்கு கேட்கற..? நீ ஒன்னும் என் காதலனோ இல்ல என் கணவனோ கிடையாது.. நான் எங்கே போனாலும் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்ன்னு எனக்கு எந்த ஒரு அவசியமும் கிடையாது.."

அவள் எப்போதும் போல கிண்டலாகதான் சொன்னாள். ஆனால் அது அவனின் இதயத்தில் பெரிய வலியை தந்தது.

சக்தி தன் நெஞ்சில் இருக்கும் வலியால்தான் தன்னை இப்படி கேட்கிறாள் என நினைத்தான். தனது குடும்பம் அவளுக்கு செய்த துரோகத்தை மறக்க இயலாமல்தான் அவள் இவ்வளவு நாளும் தன்னையும் ஒரு எதிரியாக நினைப்பதாக எண்ணினான்.

அவன் பதில் ஏதும் பேசாமல் இருக்கவும் அவள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தாள்.

"நான் ஒரு முக்கிய வேலையா வந்திருக்கேன்.. இப்போ உன்கிட்ட பேச கூட எனக்கு நேரம் இல்ல.. அதனால் நான் அப்புறம் டைம் கிடைச்சா போன் பண்றேன்.." என்றவள் சட்டென அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.

அவள் போனை வைத்த சற்று நேரத்தில் செல்வா தன் காரை நிறுத்தி விட்டு இறங்கி வருவது கண்களுக்கு தென்பட்டது.

நல்ல உயரத்தில் இன்னும் தனது இளமை மாறாமல் இருந்த அவனுக்கு அவன் கண்களிலிருந்த கண்ணாடி அவனை இன்னும் அழகாக்கி காட்டிக் கொண்டிருந்தது. அவன் இவளை கண்டதும் கையை ஆடினான். சக்தி பதிலுக்கு கையை ஆட்டிவிட்டு அவனருகே சென்றாள்.

"எதுக்காக என்னை இவ்வளவு அவசரமா வர சொன்ன..?"

"கார்ல ஏறு.. பேசிக்கிட்டே போகலாம்.." என்றவன் அவளுக்காக கதவை திறந்து விட்டாள்.

"இப்போதவது சொல்லேன்.." கார் சற்று தூரம் வந்த பிறகு கேட்டாள்.

"என் மச்சினனை உனக்கு நினைவு இருக்கா..?"

"அந்த டூரிஸ்ட் கைடுதானே..? நியாபகம் இருக்கு.. ஏன்..?"

"என் மச்சினனுக்கு இந்த முறை புதுசா ஒரு குரூப்பை கைட் பண்ற வேலை வந்திருந்தது.. தமிழ்நாட்டுல இருந்து வந்த ஸ்கூல் பசங்க கூடவே இருந்து அவங்களுக்கு ஆக்ராவை சுத்தி காட்டணும்.. இன்னைக்கு காலையில் அவனோட பைக் ரிப்பேர். அதனால நான் அவனை அந்த பசங்க வந்து தங்கியிருக்கற ஹோட்டலுக்கு கூட்டிப்போக வேண்டியதாயிருச்சி.."

சக்தி கொட்டாவி விட்டபடி சீட்டில் தலை சாய்த்தாள். "நீ அப்படியே சொல்லிக்கிட்டே இரு.. நான் இதுல ஏதாவது உருப்படியான செய்தி வரும்போது எழுந்துக்கறேன்.. ஏனா நீ அவ்வளவு மொக்க போடுற..?" அவள் கண்களை மூடிக்கொண்டு சொன்னாள்.

செல்வா அவளை முறைப்போடு பார்த்தான். "கலையோட பொண்ணை நான் பார்த்தேன்.."

சக்தி விலுக்கென எழுந்து அமர்ந்தாள். "என்ன சொன்ன.."

"அதுக்குள்ள உருப்படியான விசயம் சொல்லிட்டனா..?" என அவன் கிண்டலாக கேட்க "விளையாடாத.. எந்த கலைன்னு சொல்லு.." என்றாள் சந்தேகமாக.

"உன் பிரெண்ட் கலை.."

அவள் கசந்த சிரிப்போடு அவளை பார்த்தாள். "என்ன விளையாடுற நீ..? என் பிரெண்ட் செத்துட்டா.. உன் பிரெண்டுதான் கொன்னுட்டான்.." என்றவள் தன் விழியோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"நான் அன்னைக்கே சொன்னேன்.. மகேஷ் அவ்வளவு சீக்கிரத்துல யாரையும் கொல்ல மாட்டான்னு.. ஆனா நீதான் நம்பல.."

"எதையாவது செல்லி என்னை குழப்பாத.. எந்த கலைன்னு சொல்லு.."

"உன் பிரெண்ட் கலையோட இரட்டை குழந்தைகளில் ஒருத்தியை நான் இன்னைக்கு காலையில் என் மச்சானை ஹோட்டல்ல ட்ராப் பண்ணும் போது பார்த்தேன்.. அதை நீ போன்ல சொன்னா நம்ப மாட்டேன்னுதான் உன்னை நேர்ல வரவச்சேன்.."

"என்னை ஏப்ரல் பூல் பண்ண பாக்காத.." அவள் சொன்ன அதே நேரத்தில் சட்டென காரை நிறுத்தினான் செல்வா.

அவள் கோபமாகவும் சந்தேகமாகவும் அவனை பார்த்தாள்.

ஆனால் அவனா அவளுக்கு பின்னால் இருந்த ஜன்னல் வழியாக வேறு எங்கோ பார்த்தான். சக்தி சில நெடிகளுக்கு பிறகே அவனது கண்களின் பார்வை சென்ற திசையை உணர்ந்தாள். அவன் பார்வை குடியிருக்கும் இடத்திற்கு தனது பார்வையை திருப்பினாள்.

அங்கிருந்த பூங்கா ஒன்றில் பள்ளி சிறுமிகள் கலகலப்பாக பேசியபடி ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் இருந்த சிறுமிகளில் ஒருத்தி அசப்பில் கலையின் உருவத்தில் இருந்தாள்.

"அந்த பொண்ணை பார்த்துதான் என்னை இவ்வளவு அவசரமா வர வச்சியா..? அசப்புல அவ கலை மாதிரி இருப்பதால் அவதான் செத்துபோன கலையோட பொண்ணுன்னு எப்படி சொல்ற..?"

செல்வா பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான். "பைத்தியம் நீ.. உன்னையெல்லாம் அவன் எப்படிதான் காதலிக்கிறானோ..? உன்கூட அரை மணி நேரம் பேசவே எனக்கு அவ்வளவு கடுப்பாகுது.. மனுசங்க மேல நம்பிக்கை இல்லாத உனக்கு எல்லாத்தையும் தெளிவா சொன்னாதான் புரியும்.. ஆனா அதையும் விலாவாரியா கேட்க மனசு வராது உனக்கு.." அவன் கோபமாக சொன்னான்.

செல்வா அவ்வளவு சீக்கிரத்தில் கோபம் கொள்ளமாட்டான்.

அதனால் இதில் தான் அறியாத ஏதோ ஓர் விசயம் உள்ளதை புரிந்துக் கொண்டாள்.

"நான் குறுக்க பேசல.. நீ மேல சொல்லு.." அவள் அமைதி குரலில் அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.

"நான் இன்னைக்கு காலையில் என் மச்சானை ஹோட்டல்ல ட்ராப் பண்ண போனபோது அவன் கைட் பண்ண வேண்டிய ஸ்கூல் பிள்ளைங்க வரிசையா ஹோட்டலை விட்டு வெளியே வந்தாங்க.. அந்த வரிசையில இருந்த அந்த பொண்ணு என்னை தாண்டி போகும் போது அவ கழுத்துல இருந்த ஐடி கார்ட் அறுந்து என் காலடியில் விழுந்துடுச்சி.. ஆனா அதை அந்த பொண்ணு பாக்கல.. அதனால அதை நான் கையில எடுத்து அந்த பொண்ணுக்கிட்ட கொடுக்க போனேன்.. அப்போ எதேச்சையா ஐடி கார்டை பார்த்தபோதுதான் அவளோட பேரண்ட்ஸ் பேரை அதுல பார்த்தேன்.. இருந்தாலும் சந்தேகத்தோடு அவளை நைசா விசாரிச்சி அவ தன்னோடு கூடவே வச்சிருந்த அவங்க பேமிலி போட்டோவை வாங்கி பார்த்தபோதுதான் அவ கலையோட பொண்ணுன்னு கன்பார்ம் ஆச்சி.. இந்த எதேச்சை சந்திப்பை நீ நேர்ல சொன்னாவே நம்ப மாட்டேன்னு தெரியும்.. அதனாலதான் உன்னையே இங்க வரவச்சேன்.."

சக்திக்கு அவன் சொன்ன விசயங்கள் மனதில் பதியவே வெகுநேரம் ஆனது. கலை உயிரோடுதான் இருக்கிறாள் என நம்ப அவளால் முடியவே இல்லை. கலையின் அம்மா இறந்த மறுநாள் அவள் மகேஷின் மாந்தோப்பிற்கு சென்றபோது மகேஷ் கையிலிருந்த கத்தியில் சொட்டிய ரத்தத்தை வருடங்கள் கடந்தாலும் அவள் எப்படி மறப்பாள்.? அவள் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன 'அவர்களை கொன்று விட்டேன்' என்ற பதிலை கனவில் கூட மறக்காத சக்தி இதையெல்லாம் எப்படி நிஜத்தில் நம்புவாள்..?

காரிலிருந்து கீழே இறங்கி அந்த பூங்காவை நோக்கி வேகமாக நடந்தாள் சக்தி. அவள் பூங்கா நுழைவாயிலில் நுழையும் முன் அவளை கை பிடித்து நிறுத்தினான் செல்வா.

"என்ன பண்ண போற..?"

"அந்த பொண்ணுக்கிட்ட போய் கலை எங்க இருக்கான்னு விசாரிக்க போறேன்.."

"உன்னை முன்ன பின்ன பார்க்காத அந்த பொண்ணு நீ கேட்டவுடனே எல்லா தகவலையும் சொல்லிட போறாளா..? நீ நார்மலா எங்கக்கிட்ட பேசினாலே நாங்க பயந்து போய் நாலடி தள்ளி நிற்போம்.. இதுல நீ அந்த அப்பாவி சின்ன பொண்ணுக்கிட்ட பேச போறியாக்கும்.. நீ இங்கேயே இரு.. நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசி தனியா கூட்டி வரேன்.."

அவளை அங்கேயே நிறுத்தி விட்டு அவன் பொன்னாவை தேடி சென்றான். இவனை கண்டதும் அவள் காலையில் பார்த்த முகமென புரிந்து மென்மையாக சிரித்தாள்.

சற்று தயங்கியபடியே அவளருகே வந்தான் செல்வா.

"பொன்னா.. நாம காலையில் மீட் பண்ணோமே உனக்கு ஞாபகம் இருக்கா..?"

அவள் ஆமோதித்து தலையசைத்தாள்.

"அதோ அங்கே இருக்காங்களே அந்த ஆன்டி உங்கிட்ட பேச ஆசைப்படுறாங்க.. என் கூட வரியா..?" அவள் சக்தியை சந்தேகமாக பார்த்தாள்.

"நீ பயப்பட வேண்டாம்.. உன்கிட்ட சில கேள்விகள் கேட்கணும்.. அவ்வளவுதான்.."

பொன்னா சற்று தயங்கினாள். அறியாத ஊரில் அவன் தமிழ் பேசிய காரணமே அவளுக்கு சற்று தைரியத்தை தந்தது.

தனது ஆசிரியையிடம் சொல்லி விட்டு செல்வாவோடு சேர்ந்து சக்தியின் அருகே சென்றாள்.

தன் அருகே வந்த பெண்ணை சக்தி கவனமாக தலை முதல் கால் வரை ஆராய்ந்தாள். கலையின் சாயல் அவளிடம் நன்றாக தெரிந்தது. "உன் பேர் என்ன பாப்பா..?"

"பொன்னா.." அவள் மருண்டு போய் பார்த்தபடி சொன்னாள்.

"பயப்படாத.. நான் கெட்டவ கிடையாது.. உண்மையை சொல்லணும்ன்னா நான் உன் அம்மாவோட பிரெண்ட்.."

என்றவள் அவளை அழைத்துக் கொண்டு சென்று அருகிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தாள்

செல்வா நெற்றியில் அறைந்து கொண்டான். "இப்படியா எடுத்த எடுப்பில் சொல்வது..?'

அந்த பெண் நம்பாமல் அவளை பார்த்தாள். "நீ என்னை நம்பலதானே.. சரி இரு.. உனக்கு நான் ஆதாரம் காட்டுறேன்.." என்றவள் தனது போனை எடுத்து போட்டோ கேலரியை திறந்தாள். கலையின் தந்தையோடு அவள் எடுத்துக் கொண்ட போட்டோவை பொன்னாவிடம் காட்டினாள்.

"இதை பார்த்தியா.. உன் தாத்தாவோடு நான் எடுத்துக் கொண்ட போட்டோ.." பொன்னா இதுவரை அவளது தாத்தாவை பற்றி கேள்விப்பட்டதே இல்லை. அதனால் இப்போது சற்று சந்தேகம் அதிகமாகி சக்தியை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள். அவளது முக மாற்றம் கண்டு சக்திக்கு வருத்தமாக இருந்தது.

"உனக்கு உன் தாத்தாவை தெரியல போல.. விடு.. உன் அப்பா அவனோட வீட்டாளுங்களையாவது காட்டிருப்பான்.. இதோ பாரு.. உன் அத்தை கூடவும் உன் பாட்டி கூடவும் சேர்ந்து நான் எடுத்த போட்டோ.."

பொன்னா இம்முறையும் அந்த போட்டோவில் இருப்பவர்களை பார்த்ததில்லை என்ற அர்த்ததில் தலையசைத்தாள்.

"எங்களுக்கு எந்த சொந்தகாரங்களும் இல்லைன்னு என் அப்பாவும் அம்மாவும் சொல்லியிருக்காங்க.."
பொன்னா சென்னதை கேட்டு சக்தியின் முகம் வாடிப்போனது.

"நீ உன் வீடு எங்கேயிருக்குன்னு மட்டும் சொல்றியா..? நானே நேரா உன் அம்மாக்கிட்ட போய் மத்த விசயத்தை பேசிக்கறேன்.."

பொன்னா பென்ஞ்சிலிருந்து எழுந்து நின்றாள். "எனக்கு உங்களை பார்த்தா சந்தேகமா இருக்கு.. நான் என் டீச்சர்க்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ண போறேன்.."

என்றவளின் கையை அவசரமாக பற்றினாள் சக்தி. ஆனால் அதே நேரத்தில் மகேஷ் அவளுக்கு போன் செய்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்பு உள்ளங்களே...


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
28/09/2020 11:03 am  

அத்தியாயம் 39

சக்தி பொன்னாவின் நம்பிக்கையை பெற போராடிக் கொண்டிருந்த நேரத்தில் அவளது போனுக்கு அழைத்தான் மகேஷ்.

"இவன் ஒருத்தன்.. நேரம் கெட்ட நேரத்துக்கு ஃபோன் பண்ணி டார்ச்சர் பண்றான்.." புலம்பலாக. எரிச்சலோடு அவனது அழைப்பை துண்டித்தாள்.

சக்தியை இவ்வளவு நேரம் பயத்தோடு பார்த்த பொன்னா இப்போது தயக்கமாக பார்த்தாள்.

"உங்களுக்கு மகேஷ் மாமாவை தெரியுமா..?"

பொன்னா இப்படி கேட்கவும் சக்தியின் முகத்திலும் செல்வா முகத்திலும் வெளிச்சம் பிறந்தது.

சக்தி தனது ஃபோனில் சேமிக்கப்படிருந்த மகேஷின் புகைப்படங்களை அவள் முன் காட்டினாள்.

"நானும் மகேஷும் பிரெண்ட்ஸ்.." என்றாள். செல்வா தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"எங்க வீடு மகேஷ் மாமாவுக்கு தெரியுமே.. அவர்கிட்டயே நீங்க கேட்கலாமில்ல..?"

பொன்னாவின் குறுக்கு கேள்வி சக்தியை சற்று இடறி விட்டது.

"அது.. அது வந்து.. எனக்கும் அவனுக்கும் சண்டை.. உங்க அம்மா இருக்கற இடத்தை அவன் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டான்.. அதனால் நான் அவன் கூட பேசுறது இல்ல.. இப்ப கூட பார்த்த இல்ல.. அவன்தான் எனக்கு போன் பண்ணான்.. எனக்கு அவன் மேல் இருக்கற கோபம் தீரல.. அதனால்தான் அவன் ஃபோனை கூட நான் அட்டென்ட் பண்ணல.."

சக்தி சொன்னதை கேட்டு பொன்னாவின் முகம் வாடி போனது‌. "எங்க மகேஷ் மாமா ரொம்ப நல்லவர்.. அவர்கிட்ட ஏன் பேசாம இருக்கிங்க..? அவர் பாவம்..!"

சக்தி தனது முயற்சி வேலை செய்வதை புரிந்து கொண்டாள்.

"நானும் உன் அம்மாவும் உயிருக்கு உயிரான தோழிகள்.. எனக்கு தெரியாம உன் அம்மாவும் அப்பாவும் ஊரை விட்டு வந்துட்டாங்க.. நான் அவங்களை எங்கங்கயோ தேடினேன்.. கடைசி வரை என்னால் கண்டு பிடிக்க முடியல.. ஆனா அவங்க இருக்கற இடம் மகேஷ்க்கு தெரியும்.. ஆனாலும் என்கிட்ட சொல்ல மாட்டேன்டான்.. அதனால் நான் அவனோடு பேசுவதை விட்டுட்டேன்.." சக்தி சொல்ல சொல்ல பொன்னாவின் முகம் சோகமானது.

"இன்னைக்கு நைட் நாங்க திரும்பி போக போறோம்.. நீங்களும் எங்க கூட வாங்க.." என்றாள் பொன்னா. சக்தி தன் திட்டம் வென்று விட்டதை அறிந்து உள்ளூர நிம்மதியானாள்.

மகேஷ் தன் கையிலிருந்த போனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவ்வப்போது ஒவ்வொரு தூறல் விழுந்துக் கொண்டிருந்தது. அந்த தூறல் தன் மீது விழுவதை பொருட்படுத்தாமல் நடந்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தது.

'சக்தி ஏன் என் ஃபோனை எடுக்க மாட்டேங்கறா..? நமக்கே இப்படின்னா அவளோட மனசுல எவ்வளவு வலி இருக்கணும்..? அவளுடைய தாய்மையையே கொன்னுட்டாங்களே பாவிங்க.. சக்தி அந்த நேரத்தில நீ எப்படியெல்லாம் துடிச்சியோ..? எப்படியெல்லாம் அழுதியோ..? எல்லாமே என்னால் வந்ததுதான்.. அவசர குடுக்கை போல அன்னைக்கு நான் விஷத்தை குடிச்சதால்தான் என் சக்திக்கு இவ்வளவு பெரிய கஷ்டம்... அப்பா நிஜமாவே மனிதர்தானா..? அவ ஒரு கர்ப்பவதின்னு தெரிஞ்சும் எப்படி அவரால் இப்படி செய்ய முடிஞ்சது..? அவ வயித்துல இருந்த என் குழந்தை அவரோட வாரிசுன்னு தெரிஞ்சும் எப்படி இப்படி செய்ய முடிஞ்சது..?' அவன் தனக்கு தானே கேட்டு கொண்டான்.

வழியிலிருந்த ஒரு கோவிலை பார்த்தவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான். தனது போனிலிருக்கும் சக்தியின் புகைப்படத்தை பரிதாபமாக பார்த்தான். அவளது புகைப்படம் காணும் போதே அவனது இதயம் விம்மி அழுதது.

'என் சக்திக்கா இப்படி நடக்கணும்..? அவளை வாழ்க்கை முழுக்க சந்தோசமா பார்த்துக்கவே காதலிச்சேன்.. ஆனா என் காதல்தான் அவளுக்கு மிக பெரிய துயரத்தையே தந்திருக்கு..'

அவன் சக்தியை எண்ணி சோகமாக இருக்க அவனது போனுக்கு சாமிநாதன் அழைப்பு விடுத்தான். கீழே விழுந்து முட்டியில் காயம் பட்டுக் கொண்ட குழந்தை அம்மாவை கண்டதும் ஓடி சென்று கட்டி அணைத்து அழுவதை போல சாமிநாதனின் அழைப்பை கண்டதும் தன் துயரத்தை நீக்க கிடைத்த தூணாக நினைத்து அழைப்பை ஏற்றான்.

"மகேஷ் என்னடா பண்ற..?" சாமிநாதனின் குரல் கேட்டதும் மகேஷின் கடைசி தடையும் தகர்ந்து விட்டது.

"சா..சாமிநாதா.." என்றவனின் குரல் துக்கத்தில் அடைத்துக் கொண்டது. அவனது கண்களிலிருந்து கண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தது. உடனுக்குடன் கண்ணீரை துடைத்து கொண்டாலும் கூட கண்ணீர் நிற்கவே இல்லை. இவனது குரலில் இருந்த துக்கம் சாமிநாதனுக்கு உடனடியாகவே புரிந்து போனது. நண்பன் அழுகிறான் என அறிந்ததும் அவனது மனமும் துடியாய் துடித்து பதறி போனது.

"என்னடா ஆச்சி மகேஷ்..? ஏன்டா அழற..?" பதட்டமாக கேட்டான் அவன். ஆனால் இதனால்தான் சட்டென அவனுக்கு பதில் அளிக்க முடியவில்லை. இன்னும் அழுகை அதிகமாகத்தான் வந்தது. மௌனமாக அழுதாலும் கூட இவன் அவ்வப்போது பெருமூச்சு விடுவதையும் மூக்கை உறிஞ்சுவதையும் கொண்டே அவன் இவனது கண்ணீரை அறிந்துக் கொண்டான்.

"என்ன ஆச்சின்னு சொல்லாம இப்படி அழுது தொலைஞ்சா நான் என்னன்னு கண்டு பிடிக்கட்டும்டா..? எந்த பிரச்சனையா இருந்தாலும் சரியாயிடும்டா.. ஆமா சக்திக்கு ஒன்னும் இல்லதானே..?" நண்பனின் நிலை அறிந்து அவசரமாக கேட்டான்.

மகேஷ்க்கு அழுகை இன்னும் அதிகமானது. "என்ன கருமம்ன்னு எனக்கும் சொன்னாதானடா தெரியும்..? நீ பாட்டுக்கு அங்கே அழுதா எனக்கு இங்கே கை காலெல்லாம் வெடவெடன்னு நடுங்குது.."

"ச..சக்தி.. சக்தி வயித்துல இருந்த எங்க குழந்தை செத்து போச்சி.." என சொல்லி விட்டு மீண்டும் இவன் கண்ணீரை தொடர்ந்தான். ஆனால் சாமிநாதன்தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பி நின்றான்.

'சக்தி வயித்துல இருந்த குழந்தையா..? ஆனா எப்படி..? இரண்டு பேரும் எலியும் பூனையுமா வெறுத்துக்கறாங்களே.. பிறகெப்படி இது சாத்தியம்..?'

"என்னடா சொல்ற நீ..? எப்படா அவ ப்ரகெனன்ட் ஆனா..? எப்படிடா குழந்தை செத்துச்சி..? இரண்டு நாளைக்கு முன்னாடி நீ இங்கே வந்தப்ப கூட அவ உன்னோடு பேச கூட மாட்டேங்கறான்னு புலம்பினாயே.. அப்புறம் எப்படிடா இதெல்லாம் நடந்துச்சி..?" மகேஷ் சோகமாக கண்ணீர் வடிக்க அவனோ குழப்பமாக தலையை பிய்த்துக் கொண்டான்.

மகேஷ் தன் கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி எழுந்தமர்ந்தான்.

"நாங்க இரண்டு பேரும் கல்யாணம் முடிஞ்சி மூணு மாசம் கழிச்சு ஊர் வந்து சேர்ந்தோமே ஞாபகம் இருக்கா..?"

"இருக்கு.."

"அப்ப சக்தி பிரகனன்டா இருந்திருக்கா.. அவ பிரெகனன்டா இருந்தது எனக்கு அப்போது தெரியாது.." என்றவன் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவன் சொன்னதையெல்லாம் கேட்ட பொழுது சாமிநாதனுக்கும் தன் நெஞ்சில் யாரோ பாறாங்கல்லை தூக்கி வைத்ததை போலிருந்தது.

"உங்க அப்பா ஏன்டா இப்படி இருக்காரு..? நீங்க கல்யாணம் முடிச்சி ஊருக்கு திரும்பியே வந்திருக்க கூடாதுடா.. அப்படியே கண்ணுக்கு தெரியாத ஊர்லயே வாழ்ந்துட்டு வயசாகி செத்திருக்கணும்டா.. உறவுகள் வேணும்ன்னு நீ திரும்பி வந்த.. ஆனா அந்த உறவுகளே உன்னோட வருங்காலத்தை அழிச்சிட்டாங்க.."

மகேஷ் பெருமூச்சோடு அருகிருந்த தூணில் தலையை சாய்த்தான். வானை பார்த்தபடி ஃபோனை காதில் வைத்திருந்தவன் "உங்களை போலவே எல்லா பந்த பாசத்தையும் அறுத்தெரிஞ்சிட்டு அங்கேயே இருந்திருக்கணும்டா.. அவதான் பைத்தியம் போல என்னை நச்சரிச்சி திருப்பி கூட்டி வந்தா.. அவளோட பிடிவாதமே கடைசியா அவளை பழிவாங்கிடுச்சி.. ஆனா நான் என்னடா பாவம் பண்ணேன்..? ஏன்டா என் வாழ்க்கையை இவங்க இப்படி நாசகதி செஞ்சாங்க..? நான் அவரோட பையன்தானடா.. சொந்த பையனோட வாழ்க்கையை அழிக்க அவங்களுக்கு எப்படிடா மனசு வந்துச்சி..?"

இவன் இப்படி போனில் புலம்பி கொண்டிருந்ததை கோவிலில் இருந்தவர்கள் வித்தியாசமாக பார்த்து விட்டு சென்றனர்.

"அவங்களுக்கு புள்ளைங்களா பொறந்ததே நம்ம தப்புதான்டா.. இவங்களுக்கு நாம பொறந்த பாவத்துக்கு நமக்கு பொறந்த குழந்தைங்க கூட தண்டனையை அனுபவிக்கறாங்க.. சக்திக்கிட்ட இதை பத்தி கேட்டியாடா..? என்ன சொன்னா அந்த மகராசி..? இப்படி உன் வாரிசை அவங்க கொன்னிருக்காங்க ஆனா அவ மூச்சு விடாம இருந்திருக்கா பார்த்தியா.. இதுதான்டா கல்நெஞ்சுங்கறது.."
"இன்னும் நான் அவக்கிட்ட இதை பத்தி கேட்கலடா சாமிநாதா.. அவ வேலை விசயமா வெளியூர் போயிட்டா.. அவ திரும்பி வந்த பிறகுதான் அவக்கிட்ட இதை கேட்கணும்.."

"நீ எதையும் அவக்கிட்ட கேட்காத.." சாமிநாதனிடமிருந்து ஃபோனை பிடுங்கி கலை சொன்னாள்.

"ஆனா ஏன் கேட்கக் கூடாது..?" தயக்கமாக கேட்டான் மகேஷ்.

"அவளோட வேதனையை அவளை மாதிரி பெண்ணான என்னால்தான் புரிஞ்சிக்க முடியும்.. அவ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்னு நாம கொஞ்ச நேரம் யோசிச்சாலே புரிஞ்சிக்கலாம்.. அவளுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் கூட அவளோட வேதனையை அவ தனக்குள்ள மறைச்சி வச்ச காரணமே அந்த சோகம் உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னுதான்.. இப்போ போய் அவக்கிட்ட சொல்ல போறியா.. நம்ம குழந்தை செத்து போன செய்தி தெரிஞ்சி நான் மனமுடைஞ்சி போயிருக்கேன்னு..? அவ தனக்குள்ள இவ்வளவு நாள் இதை மறைச்சி வச்சத்தை நீயாவது புரிஞ்சிக்க.. அவ தன் சோகத்தை விட உன் சோகத்தால்தான் அதிகமா கஷ்டபடுவா.. அவளே இன்னேரம் அதையெல்லாம் மறந்திருப்பா.. அவக்கிட்ட போய் ஆறின காயத்தை வெட்டி மறுபடியும் அவளை கதற வைக்க போறியா..?" என கலை கேட்க மகேஷ்க்கு அவள் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது.

"நான் என்ன செய்யட்டும் கலை..?" சோக குரலில் கேட்டான் மகேஷ்.

"இந்த விசயத்தை பத்தி அவக்கிட்ட எதையும் கேட்காத.. இந்த விசயம் உனக்கு தெரிஞ்சதா அவக்கிட்ட காட்டிக்காத.. அவளோட இந்த இழப்புக்கு ஈடா நீ தரப்போறது உன் காதலை மட்டும்தான்.. எப்பவும் பைத்தியம் போல அவ பின்னாடி சுத்துவ இல்ல.. இப்பவும் அதை மட்டுமே செய்.. ஆனா கொஞ்சம் மெச்சூரிட்டியோடு அவளை காதலிக்க பழகு.. கட்டப்பஞ்சாயத்து பண்ணி அவக்கிட்ட கைதியாக போறதுக்கு பதிலா அவ விரும்புற ஒரு கேரக்டரா அவளை நெருங்கு.." கலை தனது எண்ணத்தை அவனிடம் சொன்னாள். அவனுக்கும் அவளது அறிவுரையில் இருந்த நன்மை புரிந்தது.

'நீ ரவுடி‌.. நான் போலிஸ்.. நமக்குள்ள ஒத்து வராது..' அவள் அடிக்கடி சொல்லும் வாசகம் மனதில் வந்து போனது.
அவன் இதுவரை செய்த தவறுகளை மாற்ற இயலாது என்றாலும் இனி தவறுகள் செய்யாமல் இருக்க இயலும் என புரிந்து கொண்டான்.

"நீ சொன்ன மாதிரியே இனி நடந்துக்கறேன் கலை.‌. அவளே தானாவே வந்து என்கிட்ட சரணடையற மாதிரி நடந்துக்கறேன்.." உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகேஷ்.

கலைக்கு அதன்பிறகு மனதின் பாரம் சற்று குறைந்தது. தனது கையிலிருந்த போனை சாமிநாதனிடம் தந்துவிட்டு தனது அன்றாட வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.
ஆனால் அவள் மறுநாள் காலையில் சக்தியை தன் வீட்டு வாசலில் பார்ப்போம் என கனவில் கூட நினைக்கவில்லை..

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே...

Vote and comment பண்ணுங்க கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா...

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
30/09/2020 6:08 am  

அத்தியாயம் 40

சக்தி பொன்னாவை தன்னோடு அழைத்துக் கொண்டு அவளது ஊருக்கு புறப்பட முடிவெடுத்தாள். பொன்னாவின் ஆசிரியையிடம் பேசி சம்மதம் வாங்கிக் கொண்டாள்.

பின்னர் செல்வாவோடு அவனது வீட்டிற்கு சென்றாள்.

கல்லூரி பாடத்தில் கண்களை வைத்திருந்த இனியன் யாரோ வீட்டின் காலிங்பெல்லை அடிக்க எழுந்துச் சென்று கதவை திறந்தான். அந்த நேரத்திற்கு செல்வாவை எதிர்பார்த்து கதவை திறந்தவன் தன் எதிரே அம்மாவை கண்டதும் தன் கண்களையே நம்ப மறந்து விட்டான்.

சக்தி தன் மகனை அன்போடு பார்த்தாள். மகேஷை போலவே அசப்பில் இருந்தவன் அவனை விடவும் ஒரு படி அதிக அழகாக தெரிந்தான் பெற்றவளின் கண்களுக்கு.

"அம்மா.." என்றான் சந்தேகமாக.

சக்தி சிறு புன்னகையோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

"நீங்க இங்கே வரதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே..?" என்றான் வருத்தமும் சந்தேகமுமாக.

"அம்மா இங்கே அவசர வேலையா வந்தேன்.. இப்பவே திரும்பி போக போறேன்.. உன்னை கண்லயாவது பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.." என்றவள் அவன் உடனடியாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட போது அவனை சமாதானம் செய்து விட்டு உடனடியாகவே அங்கிருந்து கிளம்பினாள்.

மகேஷ் தனது அறையில் இருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்துக் கொண்டிருந்தான். நேற்று இரவு வெகுநேரம் கழித்துதான் வீடு வந்து சேர்ந்திருந்தான். வீட்டிலிருந்த யாரிடமும் அவன் பேசவில்லை.

முத்துவிற்கு அவன் உண்மைகளை அறிந்துக் கொண்ட விசயத்தை இன்னமும் அறிந்துக் கொள்ளவில்லை. ஏதோ நினைவில் அவன் சோகமாக இருப்பதாக நினைத்தார் அவர்.
மூர்த்தி அவன் கண்களில் தென்படவே இல்லை. மகேஷின் நிலை இப்போது பொங்கும் எரிமலையை போன்றது என அறிந்து அந்த எரியும் நெருப்பிற்கு தான் பலியாகி விட கூடாது என நினைத்தான்.

மகேஷ் பொழுது விடிந்து வெகு நேரம் ஆனபிறகும் தன் அறையை விட்டே வெளிவரவில்லை. அம்மாவும் சந்தியாவும் கதவை ஒன்றிரண்டு முறை தட்டி பார்த்து விட்டு அமைதியாகிக் கொண்டனர்.

கலை அப்போதுதான் காலை உணவை முடித்துக் கொண்டு தன் குடிசையை விட்டு வெளியே வந்தாள். வாசலின் முன்னால் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அந்த சிறு கிராமத்திற்கு வந்து செல்லும் ஒரே வாகனமே மகேஷுடையது மட்டும்தான். ஆனால் இம்முறை வந்த இந்த வாகனம் வேறு மாடலில் இருந்ததால் கலை அந்த காரை ஆர்வத்தோடும் சந்தேகத்தோடும் பார்த்தாள்.

ஆனால் காரில் இருந்து பொன்னா இறங்கவும் கலை காரின் அருகே சென்றாள். "பொன்னா.. நீ எப்படி.." அவள் கேள்வியை முடிக்கும் முன்பே காரின் மற்ற பக்க கதவை திறந்துக் கொண்டு சக்தி கீழே இறங்கினாள். அவளை கண்டதும் கலைக்கு தான் கனவு காண்பது போலிருந்தது.

அதே நேரத்தில் சாமிநாதனும் தங்களது விவசாய நிலத்தில் வேலையை முடித்துக் கொண்டு காலை உணவை உண்ண வீடு திரும்பினான். அங்க தன் வீட்டு வாசலில் சக்தியை கண்டதும் அவனுடைய கையிலிருந்த மண்வெட்டி கை தவறி கீழே விழுந்தது. அந்த சத்தம் கேட்டு அப்போதுதான் டிரைவர் சீட்டிலிருந்து கீழே இறங்கிய செல்வா திரும்பி அவனை பார்த்தான். இருவரது கண்களும் சந்தித்து கொண்ட போது இருவருக்குமே பழைய நட்பு சூறாவளியை போல தாக்கியது.

"ச.. சக்தி.." கலை ஆச்சரியம் குறையாமல் அவளை பார்த்தாள். சக்தி அவளருகே வந்தாள். அவளை தலை முதல் கால் வரை ஒருதரம் பார்த்தாள். கலை அவளை பார்த்து புன்னகைக்க முயன்ற போது சக்தியின் கரம் பளீரென அவளின் கன்னத்தில் இறங்கியது.

கலை கன்னத்தை பிடித்தபடி அவளை புரியாமல் பார்த்தாள்.

"இவ்வளவு நாள் நீ செத்துப்போயிட்டன்னு நினைச்சி நான் தினம் தினம் அழுது தொலைஞ்சேன்டி.. உனக்கு மனசாட்சின்னு ஒன்னு கொஞ்சமாவது இருக்கா..? நீ உயிரோடு இருக்கன்னு எனக்கும் சொல்லியிருக்க கூடாதா..? உன்னால நான் இவ்வளவு நாளும் அவனை வெறுத்தேனே.. அவனாவது ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா..?"

சக்தியின் கன்னத்தில் கண்ணீர் கொடகொடவென கொட்டியது. கலைக்கும் அவளது பாசம் கண்டு கண்ணீர் பெருக்கெடுத்தது.

"ஸாரி சக்தி.. உனக்கு என்னை பிடிக்கலன்னு நான் நினைச்சிட்டேன்.. எனக்கு சப்போர்ட் பண்ணாம என் அம்மாவுக்கு நீ சப்போர்ட் பண்ணதால நீ என் மேல வெறுப்போடு இருக்கன்னு நினைச்சிட்டே்.."

சக்தி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

"அம்மா இல்லாம வளர்ந்தவ நான் அப்படிதான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுவேன்.. ஆனா உன் மேல எனக்கு அக்கறை இல்லன்னு எப்படி நீ நினைக்கலாம்..? நீ உன் வீட்டாரை பிரிஞ்சி வந்தது தப்புன்னு சொன்னேனே தவிர நீ சாமிநாதன் மேல வச்ச காதலை எப்ப தப்பு சொன்னேன்..?"

சக்தி கேட்டது கண்டு கலைக்கு கண்ணீர் அதிகமானது.

"ஸாரி சக்தி.." அழுகையின் நடுவே சொன்னாள் கலை.

"உனக்கெப்படி இந்த ஊரை பத்தி தெரிஞ்சது..?" சந்தேகமாக கேட்டாள் கலை.

சக்தி நடந்ததை சொன்னாள். "உன்னை பார்க்கணும்ன்னு ஆசையோடு ஓடி வந்தேன் நான்.. ப்ளைட்ல வரும்போது கூட எனக்கு இது கனவுன்னுதான் தோணுச்சி.. உன்னை இப்போ நேர்ல பார்க்கும் போது எப்படி இருக்குன்னு உன்னால புரிஞ்சிக்கவே முடியாது.." என்றவள் தன்னருகே இருக்கும் கலை கனவில்லை என நம்ப போராடிக் கொண்டிருந்தாள்.
சாமிநாதன் கலையின் கன்னத்தில் விழுந்த அறை கண்டு விதிர்த்து நின்ற வேலையில் அவனருகே வந்த செல்வா அவனது நெஞ்சில் கை வைத்து அவனை பின்னால் தள்ளினான்.

"இவ்வளவு நாளா இங்கேதான் இருந்தேன்னு சொல்ல உனக்கென்ன கேடு வந்தது நாயே..? உன்னை நான் தேடாத இடமே கிடையாது தெரியுமா..? ஒரு கட்டதுல நானே மகேஷ் உங்களை நிஜமாவே கொன்னுட்டான்னு நினைச்சிட்டேன்.. பரதேசி.. ஒத்தை வார்த்தை என்கிட்டயும் சொல்லிட்டு வந்திருந்தா குறைஞ்சா போயிருப்ப..?" கேட்டுக் கொண்டே அவனை இடித்து தள்ளினான் செல்வா.

"ஸாரிடா.. உன்கிட்ட சொல்லதான் நினைச்சேன்.. ஆனா உன் அட்ரஸ்தான் எனக்கும் தெரியல.. மகேஷ்க்கும் தெரியல.. நீ இவ்வளவு சொல்றியே.. உன்னை மகேஷ் எங்கேயெல்லாம் தேடினான்னு தெரியுமா..? உன் அட்ரஸை சக்தி கடைசி வரை மகேஷ்கிட்ட சொல்லல தெரியுமா..?" சாமி நாதன் திருப்பி கேட்டான்.

செல்வாவால் அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லைதான். அதனால் வெற்று மௌனம் காட்டினான்.

சாமிநாதன் அவனது மௌனத்தின் பின்னால் ஏதோ இருப்பதை உணர்ந்து மேற்கொண்டு எதையும் கேட்காமல் விட்டு விட்டான்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சாமிநாதன்தான் முதலில் புன்னகை பூத்தான் . பின்னர் இருவரும் ஒருவரையொருவர் பாய்ந்து அணைத்துக் கொண்டனர்.

பொன்னா தன் கண் முன் நடப்பதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். முதல் நொடி அடித்துக் கொண்டு மறு நொடி அணைத்துக் கொண்டவர்களை கண்கள் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சக்தி கலையின் அணைப்பிலிருந்து விலகி தன் முன்னால் இருந்த குடிசையையயும் அந்த ஊரின் சுற்று சூழலையும் பார்த்தாள்.

அவள் சூழ்நிலையை கணக்கிடுவதை கண்டு கலை தனக்குள் சிரித்தாள். "இந்த இடத்துல வாழ்வதால் எனக்கு எந்த குறையும் இல்லை. நமக்கு பிடிச்சவங்களோடு வாழும் போது எந்த இடமா இருந்தாலும் அது சொர்க்கத்தின் மறு வடிவம்தான்.."

கலை சொன்னதற்கு ஆமோதித்து தலையாட்டினாள் சக்தி.

"எனக்கும் இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு.. பிடிச்சவங்களோடு வாழ முடியலன்னா கூட பரவால்ல.. எனக்கு ரிட்டையர்மெண்ட் ஆனதும் இங்கேயே நானும் வாழ வரப்போறேன்.." என்ற சக்தி தன்னை சுற்றி இருந்த அழகில் தன் மனம் லயித்து கிடந்தாள்.

சாமிநாதன் நண்பனை விட்டு விலகி நின்றான். "கலை சாப்பாடு எடுத்து வை எல்லோருக்கும்.." என்றான்.

"நீ போய் கட்டில்ல உட்கார்ந்துட்டு இருடா.. நான் பல் விளக்கிட்டு வந்துடுறேன்.." என்றவன் அருகிருந்த மரத்திலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து எடுத்துக் கொண்டு பல்லை தீட்டிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் வந்தான்.

செல்வாவின் கண்ணிலிருந்து மறைந்ததும் உடனடியாக தனது போனை எடுத்து மகேஷை அழைத்தான்.

"ஹலோ..?" கரகரத்த குரலில் பதில் பேசினான் மகேஷ்.

"செல்வா என் வீட்டுல இருக்கான்.." சாமிநாதன் சொன்னது கேட்டு விலுக்கென எழுந்து அமர்ந்தான் மகேஷ்.

"என்ன சொன்ன..?"

"செல்வா என் வீட்டுல இருக்கான்.. அவனோடு சக்தியும் இருக்கா.."

சாமிநாதன் மீதியை சொல்லும் முன் மகேஷ் தன் தொடர்பை துண்டித்துக் கொண்டான்.

சாமிநாதன் மீண்டும் போன் செய்தான். ஆனால் அவன் போனை எடுக்கவில்லை. மகேஷ் அதற்குள் குளியலறைக்குள் நுழைந்து குளிக்க ஆரம்பித்து விட்டான்.

சாமிநாதன் மீண்டும் அழைத்து அழைத்து பார்த்தான்.

ஆனால் அவன் எடுக்கவே இல்லை. செல்வா காத்திருப்பானே என்று போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வந்தான் சாமிநாதன்.

குடிசையின் முன்னால் போட்டிருந்த இரண்டு கட்டில்களில் செல்வாவும் சக்தியும் அமர்ந்திருந்தனர். சாமிநாதன் பற்களை விலக்கிக் கொண்டு வந்தான்.

கலை அனைவருக்கும் உணவு எடுத்து வைத்தாள். கேழ்வரகு களியும் கொத்தவரை பொரியலும் தட்டில் வைத்து அனைவருக்கும் தந்தாள்.

"இதுதான் இங்கே சாப்பாடா..?" என்றாள் சக்தி கண்கள் விரித்து.

"ஆமா.. எங்க நிலத்துல விளைஞ்ச கேழ்வரகு.. எங்க செடி கொத்தவரை.. இங்கே நாங்க சாப்பாட்டுக்கு எதையும் விலை கொடுத்து வாங்கறது இல்ல.. இயற்கை உணவு மட்டும்தான்.."

"வாவ் சூப்பர்.." என்ற செல்வாவிற்கு இந்த உணவு பிடித்து விட்டது. ஆக்ராவில் அவனது மனைவி தினம் தினம் செய்து தரும் ரொட்டியை மட்டுமே தின்றவனுக்கு இங்கே இந்த உணவு அமிர்தமாக இருந்தது.

சாமிநாதன் சக்தியை பார்த்தான். "சக்தி உனக்கு மகேஷ் மேல இன்னமும் கோபமா..?"

சக்தி சாப்பிட்டபடியே அவனை பார்த்தாள். "எனக்கெதுக்கு அவன் மேல கோபம் வர போகுது..? அவன் ஒரு ரவுடி.. நான் ஒரு போலிஸ்.. எங்களுக்குள்ள சொந்த விருப்பு வெறுப்புக்கு வேலை என்ன..?" என்றவளை முறைத்தாள் கலை.

"அவன் ரவுடின்னு சொல்ல உனக்கென்ன ரூல்ஸ் இருக்கு.. உன்னால முடியாத பல வேலைகளை செய்ய அவனால்தன் முடியும்..."

"லூஸு மாதிரி பேசாத கலை.. அவனால எங்க வேலையும் சேர்ந்து கெடுது.. இன்னும் சொல்லணும்ன்னா என் பெரிய தலைவலியே அவன்தான்.. என் ஸ்டேஷன்ல நான் பதிவு பண்றதுல தொண்ணூரு பர்செண்ட் கேஸ் அவன் மேலதான் போடுறேன்.. அவனை பத்தி பேசுறதுல எந்த ப்ரயோசனமும் இல்ல.. அதனால் அதை விட்டுடு.. உன் பேமிலியை பத்தி சொல்லு.."

அவள் பேச்சை மாற்றுவது கலைக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டு "எனக்கு இரண்டு பொண்ணுங்க.. இரண்டு பேரும் இரட்டை பிறவி.. பொன்னா ஸ்கூல் படிக்கறா.. செங்கா இயற்கையை படிக்கறா.." என்றாள்.

சக்தி அவளை புரியாமல் பார்த்தாள். 'இயற்கையை படிக்கறாளா..?'

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Trusted Member Writer
Joined: 4 months ago
Posts: 87
01/10/2020 6:54 am  

அத்தியாயம் 41

சக்திக்கு கலை சொன்னதன் அர்த்தம் புரியவில்லை.

"புரியலையா..? என் பொண்ணு செங்கா கரட்டு வாழ்க்கை வாழுறா.. அவளுக்கு கரடுதான் வீடு.. அங்கேயிருக்க மரமும் மலைகளும்தான் சொந்தம்.. ஒரு வாரம் முன்னாடி காட்டுக்குள்ள போனவ இன்னும் வரல.. எப்ப வேணாலும் வந்து சேர்ந்துடுவா.."

"ஓ.. சின்ன பொண்ணை தனியா அனுப்பியிருக்கியே.. அறிவிருக்கா உனக்கு..?" என சக்தி கேட்க கலை சிரித்தாள்.

"அவ சின்ன பிள்ளைதான் இந்த உலகத்து வாழ்க்கைக்கு.. ஆனா காட்டு வாழ்க்கையில் அவ எங்க எல்லோரையும் விட அனுபவசாலி.."

செல்வா சாமிநாதனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா.. என் முகத்துல ஏதாவது இருக்கா..?"

இல்லையென தலையாட்டி சிரித்தவன் "எப்படி வாழ்ந்த ஆள் நீ.. இங்கே இப்படி மண்வெட்டி, விவசாயம், குடிசைன்னு வாழ்வதை பார்த்தா ரொம்ப வியப்பா இருக்குடா.." என்றான் செல்வா.

"இதுல வியப்புக்கு என்னடா இருக்கு..? விவசாயம் எங்களுக்கு அடிப்படை தேவையான உணவை தருது.. நாங்க சந்தோசமா வாழ இந்த குடிசை போதும்.. ஆசைக்கு இரண்டு பிள்ளைங்க.. நாளைக்கு அவங்க பிழைச்சிக்க நாலு ஏக்கர் நிலம்.. இதே போதும்டா.. இருக்கற காசுக்கு நல்ல வீடா ஒன்னு கட்டிக்க தோணும்.. ஆனா அது கூட அநாவசியம்தான்னு உடனே தோணிடும்.. எங்களுக்கு இந்த வாழ்க்கையே சொர்க்கத்தை தரும்போது நாங்க ஏன் தேவையில்லாத ஒன்னை தேடி போகணும்..?"

செல்வாவிற்கு அவனது வாழ்க்கையை கண்டு சற்று பொறாமையாக இருந்தது.

அதன் பிறகு கலையும் சாமிநாதனும் இவர்கள் இருவரையும் தங்களது விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றனர். ஒரு பக்கம் கம்பும் மறுபக்கம் கேழ்வரகும் விளைந்து இருந்தது.

பச்சை கதிர்களின் வாசம் சக்தியின் மனதை மயக்கியது.
"வாவ்.. நல்ல வாசம்.." என்றான் செல்வா.

சாமிநாதன் மண்வெட்டியுடன் வயலில் இறங்கினான். கலை கிணற்றின் தண்ணீர் மோட்டரை இயக்கினாள்.

செல்வா வரப்பில் நின்றபடி சாமிநாதன் செய்யும் வேலைகளை பார்த்தான். ஒவ்வொரு பாத்தியாக அவன் தண்ணீர் திருப்பி விட்டுக் கொண்டு வந்தான். அதை இவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சக்தி கலையின் கைகளை இறுக்க பற்றினாள். "நீ நிஜமாவே செத்துட்டன்னு நான் நினைச்சேன்.." என்றாள் கண்ணீர் மீண்டும் கண்களில் துளிர்க்க.

"என் தப்புதான் சக்தி.. ஸாரி.."

"உன் அப்பா கூட உன்னை நினைச்சி ஏங்கறார் தெரியுமா..?"

கலை அவளை பார்த்து சிரித்தாள்.

"சக்தி ஒரு விசயத்தை நீ புரிஞ்சிக்க.. அவர் ஒரு சுயநலவாதி‌.. என் வீட்டுல இருக்கற எல்லோருமே சுயநலவாதிகள்தான்.. அவங்க யாருக்குமே என் மேல் அக்கறையோ பாசமோ கிடையாது.. அவங்களுக்கு அவங்களோட அந்தஸ்த்தே கடைசி வரை துணை வரும்.."

என்றவள் தன் கண்களோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

"உன் அப்பாக்கிட்ட நான் பேசி பார்க்கட்டுமா..?" என்ற சக்தியிடம் கையெடுத்து கும்பிட்டாள் கலை.

"நான் அதே பழைய கலையா இருந்திருந்தா கூட அவங்க கொன்னா கூட பரவால்லன்னு இருந்திருப்பேன்.. இப்ப எனக்கு இரண்டு குழந்தைங்க இருக்காங்க.. எனக்கு அவங்களோட வெத்து கௌரவத்துக்கு என் உயிரை விடுறதுல துளியும் விருப்பமில்லை.."

"அப்படி நினைக்காத கலை.. உங்க அப்பா உன்னை மனசு மாறி ஏத்துப்பாரு.."

கலை தலையசைத்தாள். "வேண்டாம்.. எனக்கு அவங்களோட பாசமும் வேண்டாம்.. அவங்க உறவும் வேண்டாம்.. என் குழந்தைகளுடனான சொந்தம் போதும்.. சாமிநாதனுடனான நேசம் போதும்... இதுக்கும் மேல எனக்கு எதுவுமே தேவை கிடையாது.."

அவள் மனதை மாற்ற இயலாது என புரிந்து கொண்டாள் சக்தி.

"உங்களுக்கு என்னதான் ஆச்சி அன்னைக்கு..? நான் மறுநாள் மகேஷோட மாந்தோப்புக்கு வந்து பார்த்தபோது அங்கே அவன் ரத்த கத்தியை கையில் வச்சிட்டு இருந்தான்.. உங்க இரண்டு பேரையும் கொன்னுட்டதா சொன்னான்.."

பழைய நினைவில் உடல் சிலிர்த்து சொன்னாள் சக்தி.

"அன்னைக்கு எங்களை எங்க அப்பா அனுப்பி வச்ச ஆளுங்கதான் கொல்ல வந்தாங்க.." என்றவள் அன்று நடந்த அனைத்தையும் விரிவாக சொன்னாள். அவள் சொன்னது கேட்டு சக்திக்கு நெஞ்சுக்குள் ஒரு பய மின்னல் ஓடியது.

ஒற்றை நிமிடத்தில் உயிர் தப்பி விட்ட தனது நண்பர்களின் அன்றைய நிலைக்கு இன்று வருத்தப்பட்டாள்.

"அன்னைக்கு மட்டும் மகேஷ் சரியான நேரத்துக்கு அங்கே வரலன்னா நிஜமாவே நாங்க செத்திருப்போம்.. எங்களோட காவல் தெய்வமே அவன்தான்.. இன்னைக்கு நாங்க இந்த அளவுக்கு சந்தோசமா இருக்கோம்ன்னா அதுக்கு அவன்தான் முக்கிய காரணம்.."

கலை சொல்ல சொல்ல சக்தியின் முகம் வழக்கம் போல கிண்டல் முக பாவத்திற்கு மாறியது. "ஒரு ரவுடிக்கு இவ்வளவு பில்டப்பா..?" கேள்வியும் வழக்கம் போல அனிச்சையாக வந்தது.

"பைத்தியம் மாதிரி பேசாத சக்தி.. இத்தனை வருசத்துல அவன் எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கான் தெரியுமா..? எங்களை மாதிரி காதலர்களை கொன்னுட்டதா சொல்லி பெத்தவங்ககிட்ட காசை வாங்கி அந்த காசை வச்சே அவங்களை தூரமா எங்கேயாவது உயிரோடும் அவங்க காதலோடும் வாழ வச்சிருக்கான் அவன்..."

'இவங்களையே காப்பாத்தி இத்தனை வருசமா மறைஞ்சிருந்து வாழ வச்சவன் மத்தவங்களையும் அப்படிதான் வாழ வச்சிருப்பான்..' அவள் தனக்குள் யோசித்தாள்.

'அதனால்தான் இத்தனை வருசமா செத்தவங்களோட தடயத்தை என்னால கண்டு பிடிக்கவே முடியல.. இது கண்டிப்பா குமரன் ஸாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. அதனால்தான் அவர் எப்பவும் அவனுக்கே சப்போர்ட் பண்ணியிருக்காரு.. கடைசி வரை நான் மட்டும்தான் முட்டாளா இருந்திருக்கேன்.. எல்லோருமே என் முதுகுக்கு பின்னாடி வேற ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க..' சக்திக்கு இதை நினைக்கையில் அழுகை வரும் போல இருந்தது. அந்த மொத்த கூட்டத்தில் அவள் மட்டும் ஏமாற்றப்பட்டவள். அவளுக்கும்தான் கலை உயிர் தோழி.. ஆனால் அவளை பற்றிய உண்மைகளையே மகேஷ் அவளிடமிருந்து மறைத்து விட்டான். மகேஷை அவள் இத்தனை வருடங்கள் வெறுத்து வந்ததற்கான ஆரம்ப அடித்தளமே இன்று பொய்யென மாறி அவள் கண் முன் இடிந்து விழுந்தது. அதை எப்படி அவளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியும்..?

சக்திக்கு இப்போதுதான் நெஞ்சில் பெரும் மலையையே தூக்கி வைத்தாற் போலிருந்தது. அவள் கண் முன்னால் நடந்த அனைத்தும் நாடகம்.. அவளிடம் கூறப்பட்ட அனைத்தும் பொய்களின் சித்திரம்.. அவள் நம்பிய அனைத்தும் பொய்களின் கருவூலம்..
சக்திக்கு கோபமாக வந்தது. மகேஷ் மட்டும் அந்த நேரத்திற்கு கிடைத்தால் அவனை தோலுரித்து விடும் அளவிற்கு அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

"அம்மா.. மகேஷ் மாமா வந்திருக்காரு.." பொன்னா கத்திக் கொண்டே வரப்பின் மீது ஓடி வந்தாள்.

சாமிநாதன் மண்வெட்டியை விட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தான். மகேஷ் அங்கு வருவது தெரிந்தது. 'அடப்பாவி.. நான் உனக்கு போன் பண்ணி ஒன்றரை மணி நேரம்தானடா ஆச்சு.. அதுக்குள்ள இங்கே வந்து நிக்கற.. காதல் வந்தா கண் மண் தெரியாதுன்னு சொல்றது நிஜம்தான் போல..'

செல்வாவும் மகேஷை பார்த்தான். அதே பழைய மகேஷ்தான்.. உருவத்தில் ஒரு மாற்றமும் இல்லை. கம்பீரம் மட்டும் முகத்திலும் நடையிலும் அதிகமாகவே இருந்தது.
சக்தி அவனை இந்த நேரத்தில் இங்கு எதிர்பார்க்கவில்லை.

சந்தேகமாகதான் திரும்பி பார்த்தாள். பொன்னா துள்ளிக் கொண்டு ஓடி வந்த வரப்பின் தொடக்கத்தில் மகேஷ் வந்துக் கொண்டிருந்தான். சக்தியை கண்டதும் தன் கண்ணிலிருந்த கருப்பு கண்ணாடியை கழட்டி விட்டு வேகமாக நடந்து வந்தான்.

"சக்தி நீ எங்கே போன..? நான் உன்னை காணாம பைத்தியம் மாதிரி ஆகிட்டேன் தெரியுமா..?" மகேஷின் கண்ணிற்கு அப்போதைக்கு அவள் மட்டும்தான் தெரிந்தாள்.

சக்தி அவனை உணர்ச்சியில்லா முகத்தோடு வெறித்தாள்‌.

"நான் எங்கே போனா உனக்கென்ன..? என்கிட்ட சொல்ல வேண்டிய பொய்கள் ஏதாவது மீதி இருக்கா..? என்னை ஏமாத்தி ஏமாத்தி இருட்டுல விட வேண்டியதுக்கான வேற விசயம் இருக்கா..?"

"இது என்ன புது சண்டையா..? உனக்கு என்கிட்ட சண்டை போடுவதை தவிர வேற வேலையே இருக்காதா..?" மகேஷ் கவலையோடு கேட்டான்.

சக்தி தன் சுட்டு விரல் கொண்டு அவனது நெஞ்சில் குத்தினாள். "உன்கிட்ட சண்டை போட எனக்கொன்னும் ஆசையில்ல.. உனக்குத்தான் என்னை வாழ்க்கை முழுக்க முட்டாளாக்க ஆசை.. இவ செத்துட்டான்னு நினைச்சி நான் இத்தனை வருசம் அழுதேனே.. அப்போதாவது உனக்கு உண்மையை சொல்ல தோணுச்சா..? நீ ஒரு கொலைகாரன்னு சொல்லி தினம் தினம் வெறுத்தேனே.. அப்போதாவது உனக்கு சொல்ல தோணிச்சா..?" சக்திக்கு ஒவ்வொரு வார்த்தை சொல்லுக்கையிலும் ஒவ்வொரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டோடியது.

மகேஷ்க்கு அவளது கண்ணீர் கண்டு மனம் நொந்து போனது. "ஸாரி சக்தி.. உண்மையை உன்கிட்ட சொன்னா அவங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடுமோன்னு பயந்துட்டேன்.."

அவனை தன்னிடமிருந்து விலக்கி தள்ளி விட்டாள் சக்தி.

"உனக்கு எல்லோர் நலனை பத்தியும் கவலை.. ஆனா என் நலனை பத்தி எந்த கவலையும் இல்ல.. என் வாழ்க்கையில்தான் எத்தனை பொய்..? எவ்வளவு பித்தலாட்டங்கள்..? ஊரை பத்தி உறவை பத்தி நட்பை பத்தி கவலைப்பட்ட உனக்கு என்னை பத்தி கவலைப்பட ஏதுமில்ல.. நான் யாரு உனக்கு..? நீ டைம் பாஸ்க்கு காதலிச்ச.. நானும் அதை உண்மைன்னு நம்பி என் மொத்த வாழ்க்கையையும் உன் காலடியில் காவு கொடுத்துட்டேன்.." அவள் அழுதுக்கொண்டே சொன்னாள்.

"வார்த்தையை விடாத சக்தி.. நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கறேன்னு உனக்கே தெரியும்.. டைம் பாஸ் காதல்ன்னு சொல்லி என் காதலை மதிப்பு குறைக்காதே.." சிரமப்பட்டு அமைதியான குரலில் சொன்னான் அவன்.

சக்தி இப்போதும் அவனை கசப்பாகதான் பார்த்தாள்.

ஆனால் கண்ணீர் மட்டும் ஆறாக ஓடியது. "காதலாம் காதல்.. நீ எனக்கு எந்த அளவுக்கு வலியை தந்திருக்கேன்னு உன்னால புரிஞ்சிக்கவே முடியாது மகேஷ்.. தன்னவன் ஒரு கொலைகாரன்.. அதுவும் ஆசைப்பட்டு நேசிக்கிற காதலர்களை காசுக்காக கொல்றவன்.. இதை என் இடத்துல இருந்து உன்னால யோசிக்க முடியுமா..? போலிஸா உனக்கு எதிராக ஆதாரம் தேடிக்கிட்டே.. ஆதாரம் கிடைச்சி நீ தூக்குல தொங்கினா நான் எப்படி வாழ்வேன்னு பதறிக்கிட்டே இருதலை கொள்ளியா என்னை மாதிரி உன்னால் வாழ முடியுமா..? என்னோட இத்தனை நாள் கஷ்டத்தை உனக்கு எப்படி நான் சொன்னாலும் புரியாது.. ஏனா நீ மனசு உள்ள மனுசன் இல்ல.." சக்தி கண்ணீரை துடைத்தபடி அவனை விலக்கி நிறுத்திவிட்டு நடந்தாள்.

'புது புது பிரச்சனை எனக்கு மட்டும் ஏன் வருது..? எப்பவோ அழிஞ்ச என் குழந்தை நேத்து முழுக்க என் மனசை கொன்னது.. எல்லாரும் நல்லாருக்க நான் சொன்ன பொய்க்காக இப்ப இவ என்னை வெறுத்துட்டு போறா..‌ எனக்கு மட்டும் நார்மல் லைப்பே கிடையாதா..?‌‍‌'
அவர்களது உரையாடலை பார்த்து‌க் கொண்டிருந்த நண்பர்கள் என்ன செய்வதென புரியாமல் நின்றனர்.

சக்தி நிற்காமல் வழியும் கண்ணீரை துடைத்தபடியே அவர்களை விட்டு விலகி நடந்து போய் கொண்டிருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..

சக்தி பாவம்ன்னு நினைக்கறிங்களா இல்ல மகேஷ் பாவம்ன்னு நினைக்கிறிங்களான்னு மறக்காம சொல்லிட்டு போங்க நட்புக்களே...

என்னுடைய கை பிடித்த கண்ணாலா நாவலை ஆடியோ வடிவில் யூ டியூப்பில் வெளியிட்டு இருக்கேன். கை பிடித்த கண்ணாலா ன்னு டைப் பண்ணி சர்ச் பண்ணா வீடியோ வரும். அதை கேட்டுட்டு உங்க கருத்தை மறக்காம எனக்கு சொல்லுங்க நட்புக்களே..

 


ReplyQuote
Page 5 / 8
Share: