Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

காதல் சர்வாதிகாரி  

Page 1 / 5
  RSS

Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
26/10/2020 4:17 am  

முன்னுரை

இனியன் சர்வாதிகாரத்தின் மன்னன்..

சந்தியா அப்பாவிதனத்தின் குழந்தை..

இது எந்தன் நேசம் கதையோட அடுத்த பாகம்.. அந்த கதையை படிக்காதவங்க இந்த கதையை புரிஞ்சிக்கணும்ன்னு இதுல ஒரு சின்ன முன்னுரை தரேன்..

கட்டப்பஞ்சாயத்து ரவுடி மகேஷுக்கும் காவல் துறை அதிகாரி சக்திக்கும் இடையில் அழியாத காதல் இருந்தது. அந்த காதலுக்கு எதிரியாக மகேஷின் தந்தை முத்துவும், மகேஷின் மாமன் மூர்த்தியும் இருந்தனர். ஆணவ கொலையில் தன் காதல் கணவனை பலியாக்கி விட கூடாது என நினைத்து அவனை விட்டு விலகி விட்டாள் சக்தி.  அவள் வயிற்றில் ஒரு குழந்தை இருந்ததையோ அவன் ஆக்ராவில் உள்ள தன் மாமன் வீட்டில் இளைஞனாக வளர்ந்ததையோ மகேஷும் அவனது குடும்பமும் அறியவில்லை.

போலிஸ் சக்திக்கும் ரவுடி மகேஷுக்கும் இடையில் அழியாத பகையும் இருந்தது. அந்த பகையின் இடையே தங்களின் காதலையும் உயிர் வளர்த்து வந்தனர் இருவரும்.
இளைஞனாக வளரும் வரையிலும் கூட இனியனுக்கு தன் தந்தை யாரென தெரியாது. அம்மா சக்தியும் அவனை சொந்த ஊருக்கு வரவிடாமல் தடுத்து வைத்திருந்தாள்.

மாமன் வீட்டில் வளர்ந்தாலும் அவனுக்கு அம்மா சக்தியின் மீது உயிர்.

தவிர்க்க இயலாத சூழல் ஒன்றில் மகேஷும் சக்தியும் மற்றோரு முறை திருமண பந்தத்தில் இணைகின்றனர்.  இதை எதேச்சையாக அறிந்துக் கொள்கிறான் இனியன்.
இனியனுக்கு உரிமை பெற்று தரும் எண்ணம் கொண்டு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த சக்திக்கு விரைவிலேயே தன் மாமனார் முத்துவின் வஞ்சகத்தால் மருத்துவமனையில் மயங்கி கிடக்கும் சூழல்.

அம்மா மட்டும் போதும் தந்தை வேண்டாம், சொத்து வேண்டாம், உரிமை வேண்டாம் என அம்மாவிடம் சொல்லுவதற்காக சொந்த ஊர் வந்த இனியன் தன் அம்மாவின் நிலைக்காக அந்த குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறான்.

சந்தியா மகேஷின் அக்காளுக்கும் மூர்த்திக்கும் பிறந்த மகள். தன் அக்கா தன் மீது காட்டி வந்த பாசத்தை அவன் தன் அக்காள் மகள் மீது காட்டி வந்தான்.

தாத்தாவையும் மாமனையும் பழிவாங்க நினைத்து தன் அத்தை‌ மகள் சந்தியாவிடம் பொய்யாய் காதல் வலை விரித்தான் இனியன். அவன் அவளை ஏமாற்ற நினைத்த நொடியில் அவள் மீது காதல் கொண்டு விட்டான். ஆனால் சந்தியா உண்மை தெரிந்ததும் அவனை வெறுத்து ஒதுங்கினாள்.

ஒரு சூழலில் மகேஷ் தனக்கு மகன் இருப்பதை அறிந்துக் கொள்கிறான். அவன் மீது எல்லையில்லா அன்பையும் காட்டுகிறான். ஆனால் அந்த அன்பு இனியனை சர்வாதிகாரியாக மாற்றி விடுகிறது. சக்தி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இனியன் கேட்டு விட்டான் என்ற ஒரே காரணத்திற்காக இனியனுக்கும் சந்தியாவிற்கும் திருமணத்தை நடத்தி வைக்கிறான் மகேஷ்.

சந்தியா விருப்பம் இல்லாமல் இனியனை திருமணம் செய்துக் கொண்டாள். இனியன் தன் அதிகாரத்தின் மூலம் அவளின் அன்பை பெற்று விடலாம் என நினைக்கிறான்.. அவன் நினைத்தது நடக்குமா..?

 இந்த கதை பற்றிய உங்களின் கருத்துகளை காதல் சர்வாதிகாரி கமெண்ட் செக்சன் என்ற திரியில் பதிவிடுங்கள் நட்புக்களே..


Quote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
26/10/2020 4:22 am  

சர்வாதிகாரம் 1

ஆக்ராவில் உள்ள தன் மாமன் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுக் கொண்டிருந்தான் இனியன். தமிழ்நாடு இருக்கும் திசை பக்கம் பார்த்தான். சந்தியா அவன் கண்களுக்கு தெரியமாட்டாள் என தெரிந்தும் கூட அதே திசையில் பார்த்துக் கொண்டிருந்தான். சந்தியா இருக்கும் திசையை பார்ப்பதே அவனுக்கு போதும் என்று இருந்தது.

சந்தியாவை அவன் கடைசியாக பார்த்து ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவளின் முகம் பார்த்து விட போகிறோம் என்ற எண்ணம் அவனது மனதை வானில் பறக்க வைத்தது.

அவனுக்கு மீசை கூட சரியாக அரும்பாத வயதிலேயே அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டான் இனியன். ஐந்து வருட பிரிவு அவனது காதலை பைத்தியக்கார நேசமாக மாற்றி விட்டிருந்தது.
சந்தியாவின் நினைவில் மூழ்கி இருந்தவனின் தோளில் கரம் ஒன்று விழுந்தது. திரும்பி பார்த்தான்.

மாமன் மகள் ரியா அவனை குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்ன ரியா..?''

"அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.." என்றவள் அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அத்தை இவனை கண்டதும் புன்னகை ஒன்றை தந்தாள். தன் கையை பிடித்து இழுத்தபடி நடக்கும் ரியாவையும் அத்தையையும் பார்த்தான். ஐந்து வருடங்களுக்கு முன்புவரை இவனை ஒரு பொறுக்கியாகவும் தொல்லையாகவும் பார்த்த அதே அத்தை அவன் யாருடைய மகனென அறிந்ததும் இளவரசனை போல மரியாதை தந்து பார்த்துக் கொண்டாள். ரியாவுடன் ஏதாவது பேசினால் கூட குத்தம் என சொன்ன அவளே இப்போது ரியாவை அவனோடு பேசுவதற்கு தாராளமாக அனுமதி தந்திருக்கிறாள்.

ஐபிஎஸ் தேர்வில் அவன் வென்று விட்ட நாளிலிருந்து அவனை மருமகன் என்றுதான் அழைக்கிறாள் அத்தை.

இங்கே செல்வாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது இனியனுக்கு திருமணம் ஆகி விட்ட விசயம். இனியனின் திருமணம் ரகசியமாக வைக்கப்பட காரணம் சக்திதான்.

சக்திக்கு இனியன் மீதும் இனியன் சந்தியா மீது வைத்துள்ள காதலை பற்றியும் துளியும் நம்பிக்கை இல்லை. சிறு பிள்ளை தனமான அவனுடைய காதல் என்று வேணாலும் மாறிவிடும் என நம்பியவள் அவனுக்கு திருமணம் முடிந்த அன்றே ஆக்ராவிற்கு அனுப்பி வைத்து விட்டாள். அம்மாவின் சொல்லை இனியனால் தட்ட முடியவில்லை. தன் காதலின் உண்மை தன்மை பற்றி வாதாடி தோற்றவன் சோகம் நிரம்பிய முகத்தோடுதான் ஆக்ராவிற்கு கிளம்பினான்.

மகேஷ் மகனை பார்க்க மாதத்தில் மூன்று நான்கு முறை ஆக்ராவிற்கு வருவான். பல வருடங்கள் கழித்து கிடைத்த மகன் என்பதால் அவனை விட்டு விலகி இருக்க மகேஷால் முடியவில்லை.

ஆனால் சக்தியின் கட்டளையையும் மீற முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகனை பார்க்க கிளம்பி விடுவான் மகேஷ்.

மகேஷ் காட்டிய அளவில்லா பாசமும், மகேஷ் தந்து செல்லும் அளவில்லா பணமும் இனியனை இன்னும் அதிகமாக கெடுத்து வைத்து விட்டது. அனைத்து இடங்களிலும் அவன் வைப்பதே சட்டம். கல்லூரியில் மற்ற மாணவர்கள் அனைவரும் அவன் பேச்சை கேட்டுதான் நடந்தாக வேண்டும். அவனை எதிர்க்க கூட யாரும் முயலவில்லை. வீட்டிலும் அத்தையும் ரியாவும் அவனுக்கு அதிக அளவு அன்பை தந்தனர்.

திமிரின் உச்சமாக இருந்தவன் ஐபிஎஸ் தேர்விலும் கலந்துக் கொண்டு வெற்றியும் பெற்று விட்டான். திமிரின் உச்சம் இப்போது சர்வாதிகாரத்தின் உச்சமாகவும் மாறி விட்டது.

"சாப்பாடு ருசி இல்லையா மருமகனே..?" என்ற அத்தையை நிமிர்ந்து பார்த்தான்.

"டேஸ்டாதான் இருக்கு அத்தை..'' என்றவனுக்கு அவளின் மருமகனே என்ற வார்த்தை நாராசமாக ஒலித்தது. அத்தை ரியாவுக்கும் அவனுக்கும் முடிச்சி போட முயன்று கொண்டிருப்பது அவனுக்கே தெளிவாக தெரிந்தது. அத்தைக்கும் மாமனுக்கும் இடையில் இவனால் சண்டை ஏதும் வந்து விட கூடாது என்று சக்தி என்றோ கட்டளை இட்டதற்காக இன்றும் அனைத்தையும் பொறுத்து போனான் இனியன்.

அவனுக்கு ரியா வேண்டாம் சந்தியாதான் வேண்டும். ஆனால் சக்தி இத்தனை நாளாக அவனது காதலுக்கு தடையாக இருந்து விட்டாள். இந்த ஐந்து வருடத்தில் சந்தியாவோடு போனில் கூட பேசியது இல்லை இனியன். நாளொன்றுக்கு ஓராயிரம் முறை போன் செய்து இருக்கிறான் இனியன். ஆனால் அவள் ஒருநாள் கூட ஃபோனை எடுத்ததே இல்லை. மகேஷிடம் தன் பிரச்சனையை சொல்ல நினைத்தான் இனியன். ஆனால் அவனும் அதன்பிறகு சக்தியின் பேச்சை கேட்டு சந்தியாவை தன்னிடமிருந்து பிரித்து வைத்து விடுவானோ என பயந்து அமைதியாக இருந்துக் கொண்டான் இனியன். இவனது பிரச்சனையை அறியாமல் அத்தை வேறு நொடிக்கு நூறு தரம் மருமகனே என அழைத்து அவனை கடுப்பாக்கி கொண்டிருந்தாள்.

இனியனது ஃபோன் ஒலித்தது. அவனது நண்பன் அழைத்திருந்தான். ஃபோன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"இனியா... எங்கே இருக்க.? இன்னும் பத்து நிமிசத்துல பார்ட்டி ஆரம்பிக்க போகுது.." என எதிரில் இருந்தவன் சொல்லவும் சட்டென எழுந்தான் இனியன்.

"சாப்பிடாம ஏன் எழுந்துட்ட..?" கரிசனமாக கேட்டாள் அத்தை.

"பிரெண்ட்ஸோடு பார்ட்டி அத்தை.." என்றவன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வேகமாக வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

அவனுக்கு அவனது சொந்த ஊரிலேயே வேலை நிர்ணயம் செய்ய பட்டுவிட்டது. பணியில் சேர நாளை கிளம்ப இருக்கிறான். அதனால்தான் அவனது நண்பர்கள் அவசரமாக அவனுக்காக பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தனர்.

பார்ட்டி நடக்கும் ஹோட்டலின் முன்னால் தன் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான். ஹால் எண் பதினொன்றுக்கு வர சொல்லி இருந்தார்கள் நண்பர்கள். பதினொன்றாம் எண்ணை கொண்ட ஹாலின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை கை தட்டல்கள் வரவேற்றது. அவனது கல்லூரி நண்பர்களும் மற்ற நண்பர்களும் அந்த ஹாலில் நிரம்பி இருந்தனர். தகப்பன் பெயர் தெரியாதவன் என தினம் தினம் இவன் மனதை புண்படுத்தியவர்கள் இன்று இவனது அப்பா ஒரு செல்வந்தன் என தெரிந்ததும் வெறுப்பை கூட நட்பாக மாற்றிவிட்டனர்.

மது கிண்ணங்களை கையிலேந்தியபடி மாதுக்கள் சிலரும் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தனர்.

"இனியா.. கன்க்ராட்ஸ்.." ஆளாளும் வந்து அவனுக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இனியனின் நெருங்கிய நண்பன் வெங்கட் தனது வாழ்த்தை சொல்லி விட்டு தனது நண்பர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு இனியனை அழைத்து சென்றான்.

சுற்றும் முற்றும் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்தவனின் முன்னால் மதுபான கோப்பை ஒன்று வைக்கப்பட்டது.

"அவன் ட்ரிங் பண்ண மாட்டான்.." என வெங்கட் சொல்லவும் அந்த கோப்பையை அருகில் இருந்த ஒருவன் எடுத்து ஒரே விழுங்கில் குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தான்.

"என்ன மனுசன்ப்பா நீ..? ட்ரிங்க்ஸ் பண்றது இல்ல.. எந்த பொண்ணையும் சைட் அடிக்கறது இல்ல.. உன்னை போல முனிவனுக்கு எதுக்கு சொத்து சுகமும் இப்படி வேலையும்..?" என்றான் அருகில் இருந்தவன் கேலியோடு.

"ட்ரிங்க்ஸ் பண்ண மாட்டேன்னு நான் என் அம்மாவுக்கு சத்தியம் பண்ணி தந்திருக்கேன்.." என்றபடி அருகே இருந்த குளிர் பானத்தை எடுத்து குடிக்க ஆரம்பித்தான் இனியன்‌.

"உன்னை போல அம்மா பிள்ளையை நான் பார்த்ததே இல்லை.." என்ற வெங்கட் "அவளை பாரேன்.. செம பிகர் இல்ல.." என்றான் ஓரு பெண்ணின் பக்கம் கையை காட்டி.

இனியன் அவன் கை காட்டிய பெண்ணை திரும்பி பார்த்தான். அழகான பெண்ணாகத்தான் இருந்தாள்.

"நல்ல பிகர்தான்.." என்றவன் அவள் பக்கமிருந்து திரும்பிக் கொண்டான்.

"அவ கம்பெனி வேணும்ன்னா சொல்லு.." என்றான் அருகில் இருந்தவன்.

"தேவையில்ல.." என்றவன் குளிர்பானம் குடிப்பதில் கவனத்தை செலுத்தினான்.

"சாமியாரா போக திட்டம் ஏதும் வச்சிருக்கியா..?" என்றான் வெங்கட் குழப்பமாக.

இனியன் தன் தலையை கோதியபடி நிமிர்ந்து அவனை பார்த்தான்.

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி வெங்கட்.. நான் அவளை ரொம்ப விரும்புறேன்.. என்னால அவளை தவிர வேற யாரையும் சைட் அடிக்க முடியாது.." என அவன் சொல்ல சுற்றி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"சாமியாரா போக போறேன்னு உண்மையை சொல்ல வேண்டியதுதானே..? இதுக்கு ஏன் இப்படி ஒரு படுபயங்கரமான ஜோக் சொல்ற..?" என கேட்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் வெங்கட்.

ஆனால் இனியனின் முகத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படாததை கண்டு அவனை அதிர்ச்சியோடு பார்த்தான் வெங்கட்.

"அஞ்சி வருசமா உன் நிழல் போல இருக்கேன் நான்.. எனக்கு தெரியாம எப்படா கல்யாணம் பண்ண..?" என வெங்கட் கேட்க மற்றவர்களும் இனியனின் பதிலுக்கு காத்திருந்தனர்.

"அஞ்சி வருசம் முன்னாடி நான் இருபது நாளா காலேஜை கட் அடிச்சேனே.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா..?"

"ஞாபகம் இருக்கு.. ராக்கி கூட நீ துப்பாக்கியோடு யாரையோ கொலை பண்ண போயிருக்கறதா காலேஜ் முழுக்க வதந்தி பரப்பி விட்டானே.."

"ம்.. ஆமா.. அந்த இருபது நாள் கேப்லதான் எனக்கு கல்யாணம் ஆச்சி.. என் பொண்டாட்டி ஊர்ல எங்க வீட்டுல என் அம்மா அப்பாவோடு இருக்கா.." என்றவன் தன் ஃபோனை எடுத்து அதிலிருந்த சந்தியாவின் புகைப்படத்தை அவர்களிடம் காட்டினான்.

"டேய்.. நிஜமாவா இதுதான் பொண்டாட்டியா..? சூப்பரா இருக்காங்கடா சிஸ்டர்.." அங்கிருந்தவர்கள் சந்தியாவை புகழ்ந்து தள்ளினர்.

இனியன் ஃபோனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"இப்படி அழகான மனைவி இருக்கும் போது நீ யாரையும் சைட் அடிக்க கூடாதுதான்.. ஆனா நான் பேச்சிலராச்சே.. நானாவது இந்த கூட்டத்துல நல்ல பிகர் இருக்கான்னு தேடுறேன்.." என்றபடி அருகில் இருந்தவன் எழுந்து சென்றான்.

"ஊருக்கு எப்ப மச்சி..?" என்று ஒருவன் கேட்டான்.

"விடியற்காலை ஃப்ளைட் ஏற போறேன்.." என்றவனின் தோளை தட்டி தந்தான் வெங்கட்.

"பொண்டாட்டியை பார்க்க அவ்வளவு அவசரமா..?"

அவசரம்தான். மனைவியின் முகம் பார்ப்பது அவனுடைய ஐந்து வருட தவம். மனம் முழுக்க நிறைந்து இருந்த சந்தியாவை நேரில் பார்ப்பது அவனுடைய பேராசை.

பார்ட்டி இனிதாக நடைப்பெற்றது. இனியனின் பெயரை சொல்லி மற்ற அனைவரும் குடித்து கும்மாளம் அடித்தனர். நள்ளிரவு தாண்டும் நேரத்தில் இனியன் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

நள்ளிரவில் காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த செல்வா இனியனை கோபமாக பார்த்தான்.

"எதுக்கு இப்படி நடுராத்திரியில் குடிச்சிட்டு வந்திருக்க..?" என்றான் கோபமாக.

"நான் குடிக்கல மாமா.." சலிப்போடு சொல்லியபடியே அவனை தாண்டிக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான் இனியன்.

செல்வாவும் அவனை பின்தொடர்ந்து அறைக்குள் வந்தான்.

"இங்கே நடுராத்திரி வரைக்கும் ஆட்டம் போட்டுட்டு வர மாதிரி ஊருலயும் இருக்காத.. உங்க அம்மா உன்னை தோலை உரிச்சிடுவா.. அப்புறம் உன்னால உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில்தான் சண்டை வரும்.." செல்வாவின் கண்களுக்கு இனியன் போலிஸ் அதிகாரியாக தெரியவில்லை. வம்பு செய்து அவனிடம் தினம் திட்டு வாங்கும் அதை பழைய இனியனாகதான் தெரிந்தான்‌.

"எனக்கும் தெரியும் மாமா.. நான் என்ன குழந்தையா..?" என கேட்டவன் கட்டிலில் சாய்ந்தான்.
செல்வா அவனை முறைப்போடு பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றான். இனியன் தன் கனவுலகில் சந்தியாவின் வரவுக்காக காத்திருந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

கதை ஆரம்பம் எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க..

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
27/10/2020 3:54 am  

சர்வாதிகாரம் 2

 

சந்தியா பூந்தோட்டத்தில் இருந்த பூக்களையெல்லாம் பறித்து வந்து பூ தொடுத்தபடி அமர்ந்திருந்தாள். இந்த ஐந்து வருடத்தில் சந்தியா எவ்வளவோ மாறி விட்டாள். முன்பை விட அழகு கூடியிருந்தது. பேச்சு குறைந்திருந்தது. தோட்ட கலையில் பட்டம் பெற்றவள் மாந்தோப்பை தவிர மீதி இருக்கும் இடத்தில் தான் கற்றுக் கொண்ட விசயத்தை பரிசோதித்துக் கொண்டிருக்கிறாள்.

அவள் உண்டு அவளது வேலை உண்டு என்று இருக்கிறாள். மகேஷிடம் பழையபடி பேச அவளால் முடியவில்லை. நான் விருப்பப்பட்டுதான் திருமணம் செய்துக் கொண்டேன் என சக்தியிடம் பல முறை சொல்லிவிட்டாள். ஆனாலும் மகேஷ் தன்னை பற்றி ஒரு நொடி கூட யோசிக்காமல் போய் விட்டது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்து விட்டது. அதனால் அவனாக அழைத்து பேசினால் பேசுவதோடு சரி.. பழையபடி மாமா மாமா என்று கொஞ்சுவதில்லை. இவள் பெரிய பொண்ணாக வளர்ந்து விட்டதால் வந்து விட்ட மாற்றம் இது என நினைத்திருக்கும் மகேஷிற்கு தெரியாது இவள் மனதில் உள்ள வருத்தம்.

சக்தியும் மகேஷும் தங்களின் தவற விட்ட வாழ்க்கையை இரு மடங்கு சந்தோஷத்தோடு வாழ்ந்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் இருவருக்கும் இடையில் உள்ள போலிஸ் ரவுடி பகையும் குறையவில்லை. மகேஷ் மாதத்தில் இருமுறையாவது இவன் காலை உடைத்தேன் அவன் கையை உடைத்தேன் என சொல்லியபடி சக்தியிடம் வந்து சரணடைந்துக் கொண்டிருந்தான்.

மூர்த்தி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளி வந்தான். இப்போது மாந்தோப்பை கவனிக்கும் பொறுப்பில் அவன்தான் இருக்கிறான்.

பொன்னிக்கு இனியன் கிடைத்ததில் மிகுந்த சந்தோசம். ஆனால் அவனை திருமணம் முடிந்த உடனே ஆக்ரா அனுப்பி வைத்ததில் அவளுக்கு துளியும் உடன்பாடில்லை. பேரன் இன்று வருவான் நாளை வருவான் என காத்திருந்தாள் அவள். ஆனால் ஜெயிலில் உள்ள கணவனை பற்றி யோசிக்கவும் மறந்து விட்டாள்.

சக்தி தன் அப்பா சுந்தரத்தை தன்னோடு தன் புகுந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள். அவருக்கும் சந்தியாவுக்கும் மட்டும்தான் கூட்டே. சந்தியா அவரிடம் மட்டும்தான் தன் மனதில் உள்ள அத்தனையையும் சொல்வாள். அடங்க பிடாரி பேரனுக்கு தாத்தாவாகி விட்டார் அவர். அதனால் அவள் தன் பேரனை கரித்து கொட்டுவதை அமைதியாக கேட்டுக் கொண்டு அவள் பக்கம் அக்கறையாக பேசுவார் அவர்.

பூ தொடுத்துக் கொண்டிருந்தவளின் முன்னால் வந்து அமர்ந்தாள் சக்தி.

"இன்னைக்கு நாள் எப்படி போச்சி ம்மா..?" என்றாள் கனிவோடு.

"சூப்பரா போச்சி அத்தை.. உங்களுக்கு பரவால்லையா..?"

அவள் முன்னால் பூக்களை ஜோடி சேர்த்து வைத்தாள் சக்தி. "என்னவோ போச்சி.. உன் குமரன் பெரியப்பா எனக்கு மேலதிகாரியா இருக்கும்வரை நான் தினமும் திட்டு வாங்கிட்டுதான் இருப்பேன்.." என அவள் சலிப்போடு சொல்ல சந்தியா களுக்கென சிரித்தாள்.

"உனக்கென்ன..? நல்லா சிரிச்சி வை.. திருடன் திருடுறான் அவனை நான் பிடிக்கும் முன்னாடி உன் மாமா அவன் காலை உடைச்சி வைக்கிறாரு.. உங்க மாமாவை பிடிச்சி நான் ஜெயில்ல போட்டா உடனே உன் பெரியப்பா வந்து ஒரு திருடனையாவது பிடிக்க துப்பிருக்கா உனக்குன்னு கேட்டு திட்டிட்டு போறாரு.. ஒரு நாளாவது எனக்கும் அவகாசம் தந்தாதானே நானும் திருடனை பிடிக்க முடியும்.. உங்க மாமா கேடி. அதான் இன்னொரு கேடியை சட்டுன்னு கண்டுபிடிச்சிடுறாரு.." என சொன்னவளின் தலை மீது ஏதோ வித்தியாசமாக தோன்றியது. பூச்சி ஏதும் தலையில் ஏறி விட்டதா என நினைத்து பதட்டத்தோடு தலையை தட்டி விட முயற்சித்தாள். ஆனால் கரம் ஒன்று‌ தட்டுபடவும் குழப்பமாக திரும்பி பார்த்தாள். மகேஷ் அவளை குறும்பு சிரிப்போடு பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான்.

"எதுக்காக இப்படி பயப்படுத்தற..?" என கேட்டவளை சிரிப்போடு பார்த்தபடி அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் மகேஷ்.

"சந்தியாம்மா.." என்றான் சக்தியின் கேள்வியை பொருட்படுத்தாமல்.
சந்தியா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்த வலியை அவன் புரிந்துக் கொள்ளவில்லை.

"நான் கேடின்னு இவ சொல்றா.. ஆனா நீ இந்த தெரஸா வாரிசுக்கிட்ட எனக்காக சண்டை போடவே இல்ல.." என்றான் பொய் கோபத்தோடு.

சந்தியாவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை. அதனால் சிறு சிரிப்போடு பூ தொடுக்க ஆரம்பித்தாள்.

சக்தியோ மகேஷின் காதை பிடித்து திருகினாள். "நான் வேணா தெரஸா‌ வாரிசாக இல்லாம இருக்கலாம்.. ஆனா நீ கேடிதான்..'' என்றாள்.
சந்தியாவிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கவில்லை.

"உன்னால நான் எத்தனை பேருக்கு தினம் தினம் பதில் சொல்றேன் தெரியுமா..? ஒரு போலிஸா இருந்துக்கிட்டு எதுக்கு ஒரு ரவுடியை கல்யாணம் பண்ணிங்கன்னு தினம் ஒரு ஆள் கேட்கறாங்க.."

"ரவுடியும் போலிஸும் கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்னன்னு நீ திருப்பி கேட்க வேண்டியதுதானே..?" என்றவனின் முன்னால் காப்பியை கொண்டு வந்து வைத்தாள் பொன்னி.

சந்தியா முன்னால் ஒரு கோப்பையை வைத்தவள் சக்தியிடம் ஒன்றை தந்தாள்.

"நாளைக்கு வரைக்கும் நான் காத்திருக்கணும்.." என்று அவள் சொல்ல மகேஷும் சக்தியும் புரியாமல் அவளை பார்த்தனர்.

"எதுக்கு பாட்டி..?" என்றாள் சந்தியா.

"என் பேரன் வீடு வர.. அஞ்சி வருசமாகுது அவனை பார்த்து. கண்ணுக்குள்ளயே இருக்கான் என் பேரன்.." என பொன்னி சொல்லவும் சந்தியாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

நாளைய நாளில் இருந்து தன் வாழ்க்கை ஒரு கெட்ட கனவாக மாற போகிறது என நினைத்தவளுக்கு உள்ளுக்குள் ஏனோ உதறல் எடுத்தது. ஆரம்ப காலத்தில் அவன் மீது அவளுக்கு கோபமும் வெறுப்பும் மட்டுமே இருந்தது. ஆனால் இந்த ஐந்து வருடத்தில் வீட்டில் உள்ளவர்கள் அவனை கொஞ்சல் சொல்லில் அழைத்ததை‌ கண்டவளுக்கு பொறாமையும் உண்டாகி விட்டது. இந்த வீட்டின் செல்ல பிள்ளை அவள் அல்ல அவன்தான் என்ற நிதர்சனத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறந்ததிலிருந்து அந்த வீடுதான் அவள் வீடு. ஆனால் இன்று வந்தவன் அந்த வீட்டின் வாரிசாக ஆகி விட்டதால் தன்னை அந்த வீட்டின் விருந்தாளியாகவே எண்ணிக் கொண்டாள் சந்தியா.

மகேஷின் உலகம் தான்தான் என நினைத்தவளுக்கு அவனுக்கு தன்னை விட அவனது மகனைதான் அதிகம் பிடித்து உள்ளது என்ற உண்மை ஒன்றே அவள் மனதை சுக்கல் சுக்கலாக உடைத்து விட்டது.

இனியனை அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை. அவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை ஏன் மகேஷும் பொன்னியும் புரிந்துக் கொள்ளவில்லை என உள்ளுக்குள் குமுறினாள் சந்தியா. சக்தி தன் மீது கொண்ட பாசத்தை கூட இவர்கள் தன் மீது கொண்டிருக்கவில்லையே என எண்ணி மனதிற்குள் அழுதாள்.

"நாளைக்கு உங்க பேரன் உங்கக்கிட்டயே வந்துடுவான் ம்மா.. அப்புறமாவது என் பேரன் என் கண்ணுக்குள்ள இருக்கான்ங்கற பாட்டை பாடாம இருங்க.." என்றான் மகேஷ்.

"உனக்கு அந்த பையன் மேல கொஞ்சமாவது பாசம் இருக்கா.. பெத்த புள்ளையை அஞ்சி வருசமா கண் காணாத இடத்துல விட்டுட்டு எப்படி உங்க இரண்டு பேராலயும் இங்கே வயிறு நிறைய சோறு சாப்பிட முடியுதோ..?‌" என்று அவள் திட்ட ஆரம்பிக்கவும் மகேஷும் சக்தியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஐந்து வருடமாக கேட்கும் ஒரே திட்டு. திட்டு வாங்கி பழகி விட்டது இருவருக்குமே.

"எருமை மாடு வயசுல இருக்கற அவனை மடியில் வச்சி கொஞ்ச முடியலன்னு தினம் அழவா முடியும்..?" என சக்தி மெல்லிய குரலில் சொன்னாள். அவள் சொன்னது பொன்னியின் காதிலும் விழுந்து விட்டது.

"நீயெல்லாம் புள்ளையைதானே பெத்த..? உனக்கு மட்டும் ஏன் மனசு கல்லா இருக்கு..? பாவம் என் பேரன் உங்க இரண்டு பேருக்கும் புள்ளையா பிறந்த பாவத்துக்கு பிறந்ததிலிருந்து இருபத்தி நாலு வருசமா அனாதையா வளருறான்.." என்றவள் தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.

சக்தி மகேஷை அப்பாவியாக பார்த்தாள். தன் மேல் எந்த தவறும் இல்லை என்பது சக்தியின் எண்ணம்.

"நாளைக்கு வந்துடுவான்ம்மா.. நீங்க அழாம இருங்க.." என பொன்னிக்கு சமாதானம் சொன்னான் மகேஷ்.

அவள் கண்ணீரை துடைத்தபடியே சமையற்கட்டிற்கு சென்றாள்.

மகேஷ் சக்தியின் கையை தன் கைக்குள் வைத்துக் கொண்டான். "அவங்க பாசத்துல ஏதோ பேசுறாங்க.. நீ அதையெல்லாம் மனசுல வச்சிக்காத.." என்றான்.

சக்தி உதட்டை சுழித்து விட்டு எழுந்தாள். "நாளைக்கு அவனோட பதிவியேற்பு விழாவுல வந்து இந்த மாதிரி இவங்க அழுது வைக்காம இருந்தா சரி.." என்றவள் தனது வேலைகளை கவனிக்க கிளம்பினாள்.

மகேஷ் சந்தியா பக்கம் திரும்பினான். "அவன் உனக்கு போன் பண்ணானா..?" என்றான்.

"கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசினோம் மாமா.." என்றாள் வழக்கம் போல.

"சரி.. போலிஸ் அதிகாரியா பதவியேற்ற பிறகுதான் இந்த வீட்டுக்கே வருவேன்னு சொல்லியிருக்கான்.. பதவியேற்பு விழாவுல கலந்துக்க நாளைக்கு சீக்கிரம் ரெடியாகி இரு.." என்றவன் அங்கிருந்து செல்ல சந்தியா பூ தொடுப்பதை விட்டுவிட்டு குழப்பத்தோடு நெற்றியை தேய்த்தாள்.

நாளை அவனை நேரில் சந்திக்க போகிறோம் என்ற நினைவே அவளுக்கு சலிப்பை தந்தது. வர முடியாது என வீட்டில் உள்ளோரிடம் காரணமும் சொல்ல முடியாது, என்னதான் செய்வது என குழம்பினாள் அவள்.

மறுநாள் பதவியேற்பு விழா நடக்கும் இடத்திற்கு வேண்டா வெறுப்பாகவே சென்றாள் சந்தியா. மகேஷ் முகம் பூரிப்பில் இருந்தது. சக்தி சலனமில்லாமல் இருந்தாள். பொன்னியும் சுந்தரமும் முகமெல்லாம் சிரிப்பாக இருந்தனர்.

குமரன் இவர்களை கண்டதும் அருகில் வந்தார். "உன் மகன் ஒருநாள் முன்னாடி வந்து சேர கூடாதா..? இப்ப பாரு.. நாங்க எல்லோரும் வந்துட்டோம்.. அவனை காணோம்.." என்றார் சலிப்போடு மகேஷிடம்.

"என் மகன் நாயகன் மாமா.. அவனுக்கு இஷ்டப்பட்ட நேரத்துலதான் வருவான்.." என்றான் மகேஷ்.

"அவன் புகழாரத்தை என்கிட்ட பாடாதே.." என்றவர் சந்தியாவின் தலையை வருடி தந்தார்.

"அவனை மிஸ் பண்றியா..?" என்றார் அன்போடு.

சந்தியா பதில் சொல்லாமல் தரையை பார்த்தார். 'அவனை மிஸ் பண்ண என்ன இருக்கு..!' என அவள் நினைத்த நேரத்தில் அருகில் யாரோ கனைக்கும் சத்தம் கேட்டது.

அனைவரும் ஆவலோடு திரும்பிய போது சந்தியா மட்டும் திடுக்கிடலோடு திரும்பி பார்த்தாள்.

இனியன் நின்றுக் கொண்டிருந்தான். கம்பீரமாக இருந்தது அவன் தோரணை. ஐந்து வருடத்திற்கு முன்பு பார்த்ததை போல இல்லாமல் மீசை வைத்த ஆண் மகனாக இருந்தான் இப்போது.

பொன்னி அவனருகே செல்லும் முன் குமரன் அவனது தோளை பற்றி விட்டார்.
"ஏன்டா லேட்..?" என்றார் கோபத்தோடு.

"யாராவது வேணும்ன்னே எல்லோரையும் காக்க வைப்பாங்களா..?'' என கேட்டவனின் கண்கள் சந்தியாவின் மீதே நிலைத்திருந்தது.

சந்தியாவை தலை முதல் கால் வரை கண்களால் அளந்தான் அவன். அவளது புடவையின் முந்தானை காற்றில் பறந்த நேரத்தில் அவனின் அருகாமையில் அவளது மனதுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறந்ததை போல உணர்ந்தாள்.

அவனின் பார்வையை தாங்க இயலாமல் சக்தியின் பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டாள் அவள்.

"இனியா.. ஏன்டாப்பா இப்படி இளைச்சி போய் இருக்க..?'' பொன்னி கரகரத்த குரலோடு கேட்டபடி வந்து அவனது கையை பற்றினாள்.

இனியன் அவளுக்கு பதில் சொல்லும் முன் குமரன் முந்திக் கொண்டார்.

"உங்க செண்டிமெண்டை வீட்டுல வச்சிக்கங்க.. இப்ப மேடைக்கு வந்து சேருடா.." என்றவர் அவனை தன்னோடு இழுத்துக் கொண்டு மேடைக்கு சென்றார்.

மொத்த குடும்பமும் அவனை பார்த்தபடி நாற்காலிகளில் அமர்ந்தது. சந்தியா அவனை பார்ப்பதை தவிர்த்தாள். ஆனால் அவன் அவளைத்தான் பார்த்தான்.
அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இனியன் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டான்.

ஊடகவியலாளர்கள் தங்களது கேள்விகளை அவன் முன் வைக்க ஆரம்பித்தனர். அவனும் அவர்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அனைத்து நேரங்களிலும் அவனது கண்கள் நொடிக்கொரு முறை சந்தியாவின் திசை பார்த்தது.

அங்கு இனியன் முன் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் சந்தியாவிற்கு ஏதோ ஓர் அசௌகரியத்தை தந்தது.

"அத்தை நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா..?" என்றாள் சக்தியிடம்.

சக்தி அவளை குழப்பமாக பார்த்தாள். "ஏன்ம்மா..?"

"லேசா தலைவலி அத்தை.." என்றவள் தலையை பிடித்தபடி மேடையிலிருப்பவனை பார்த்தாள். அவன் புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

சந்தியா உடனடியாக தன் பார்வையை திசை திருப்பி கொண்டாள்.

"துணைக்கு நான் வரட்டாம்மா..?" என்றாள் சக்தி.

"வேணாம் அத்தை.. நீங்க பங்ஷன் முடியும் வரை இருந்துட்டு வாங்க.. நான் வீட்டுக்கு போறேன்.." என்றவள் இருக்கையை விட்டு எழுந்து வெளியே நடந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
28/10/2020 3:22 am  

சர்வாதிகாரம் 3

இனியனின் கண்கள் சந்தியாவை தொடர்ந்தது. அவள் அந்த கட்டிடத்தை விட்டு வெளியே நடந்தாள். அவள் ஏன் பாதியில் செல்கிறாள் என்பதை அவனால் யூகிக்க முடிந்தது. அது அவனுக்கு கோபத்தைதான் தந்தது.

ஐந்து வருடங்கள் பிரிந்திருந்தாலும் கூட அவள் தன் மீது உள்ள கோபத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்பது புரிந்தது. அவளின் திமிருக்கு நல்ல பாடம் புகட்ட நினைத்தான் அவன்.

அவள் அந்த அறையை தாண்டுகையில் அவளின் ஒற்றை கொலுசு ஒன்று கழண்டு விழுந்தது. அதை கவனிக்காமல் அவள் சென்று விட்டாள்.

"நீங்க இந்த வட்டத்து திருடர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் ஏதாவது சொல்ல விரும்புறிங்களா..?" என ஒருவர் அவனிடம் மைக்கை நீட்டி கேட்டார்.

"அவங்களை வேற வேலை தேடிக்க சொல்றேன்.. நான் யாருக்கும் கருணை காட்ட மாட்டேன்.. சட்ட ஒழுங்கு எனக்கு ரொம்ப முக்கியம்.." என அவன் சொன்னதும் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுந்து நின்றார்.

"உங்க அம்மா ஒரு போலிஸ்.. ஆனா உங்க அப்பா ரவுடி.. இது எப்படி ஒத்துவரும்..?" என்றார் அவர்.
இந்த கேள்வியால் சக்தியின் முகம் வாடிப்போனது. மகேஷ் அந்த பத்திரிக்கையாளரை முறைத்தான்.

இனியன் புன்னகை மாறா முகத்தோடு கேள்வி கேட்டவரை பார்த்தான்.

"தப்பு செய்றது எங்க அப்பாவாவே இருந்தாலும் சொந்தம் பந்தம் பார்க்காம எங்க அம்மா அவரை அரெஸ்ட் பண்ணிடுறாங்க.. பிறகென்ன உங்களுக்கு பிரச்சனை..?"

மற்றொருவர் எழுந்து நின்றார்.

"உங்க அப்பா செய்ற கட்டப்பஞ்சாயத்து பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க..? ஒரு போலிஸ் குடும்பத்துல ரவுடியும் இருப்பதை இந்த சமுதாயம் எப்படி எடுத்துக்கும்ன்னு நினைக்கிறிங்க..?"

"இனி அவர் கட்டப்பஞ்சாயத்து ஏதும் செய்யும் அவசியம் இருக்காது.. அவர் அதையும் மீறி சட்டத்துக்கு புறம்பா ஒரு விசயம் செய்யும் போது நானே அவரை அரெஸ்ட் பண்ணுவேன்.."

பத்திரிக்கையாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சற்று நேரத்தில் கை தட்டல் பறந்தது. அவர்கள் ஏன் கை தட்டினார்கள் என்று இனியனுக்கு புரியவில்லை.

குமரன் அவனை பெருமையோடு பார்த்தார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பினர்.

"சூப்பரா பதில் சொன்னடா மாப்பிள்ளை.." என்றார் குமரன்.

அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பிறகு மேடையை விட்டு கீழே இறங்கி வந்தான் இனியன்.

"நான் கட்டப்பஞ்சாயத்து பண்ண வேண்டிய அவசியம் இருக்காதா..? ஏன்..?" என சந்தேகமாக கேட்டான் மகேஷ்.

"நீங்க செய்ற வேலையை செய்யதான் இனி நான் இருக்கேனே.." என மகேஷின் காதில் சொன்னான் அவன். மகேஷ் குறும்பாக சிரிக்க அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சந்தேகமாக பார்த்தனர்.

"எப்படி இருக்க இனியா..?" பொன்னி கண்ணீரை துடைத்தபடி கேட்டாள்.

"நல்லாருக்கேன் பாட்டி.. உங்களை தினம் தினம் நினைச்சிப்பேன்.‌." என்றவன் அவளை கட்டிக்கொண்டான்.

"நானும் உன்னை தினம் நினைப்பேன்.. என் பேரன் கண் காணாத தேசத்துல இருக்கிறதை நினைச்சா எனக்கு சாப்பாடு கூட இறங்காது‌.." என அவள் சொல்ல சக்தி அலுப்போடு தன் கண்களை சுழற்றினாள்.

"வீட்டுக்கு போகலாமா..? இல்ல இங்கேயே செண்டிமென்டல் டிராமா போட போறிங்களா..?" என்றாள் சக்தி.

பொன்னி அவளை முறைத்து பார்த்தாள். "நீ வாடா செல்லம் நாம வீட்டுக்கு போவோம்..‌ என் பேரன் வரானேன்னு உனக்கு பிடிச்ச எல்லாம் சமைச்சி வச்சிருக்கேன்.." என்றவள் அவனின் கை பற்றி அழைத்துத் கொண்டு வெளியே நடந்தாள்.

வாசலருகே வந்ததும் "பாட்டி ஒரு நிமிஷம்.." என்றவன் அவளிடமிருந்து விலகி நடந்தான்.

அறை வாயிலில் காவலாக நின்றிருந்தவனின் முன்னால் வந்தவன் "உங்க பாக்கெட்டுல இருக்கற கொலுசு எனக்கு சொந்தமானது.." என்றான். சந்தியா தவற விட்ட கொலுசை அவன்தான் எடுத்து தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

அந்த காவலாளி அவனை ஒரு மாதிரியாக பார்த்தான். "நீங்க கொலுசு கூட போடுவிங்களா..?" என்றான் ஆச்சரியத்தோடு.

"ஆமா.. பூனைக்கு மணி கட்டின மாதிரி நானும் கொலுசை கட்டிப்பேன்.. தேவையில்லாத கேள்வி கேட்காம கொலுசை எடு.." என்றான் எரிச்சலோடு.

அவன் தயக்கமாக கொலுசை அவனிடம் தந்தான். கொலுசை தின்று விடுவதை போல பார்த்தவன் எதிரில் இருப்பவன் ஒரு மாதிரியாக பார்ப்பதை உணர்ந்து கொலுசை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

சந்தியா வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்கு வந்து சேர்ந்தாள். இனியனை பற்றி நினைக்க நினைக்க நிஜமாகவே தலைவலி வந்து விட்டது அவளுக்கு. அவனின் உருவம் கண்ணுக்குள்ளேயே இருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்த அரை குறை அழகுக்கே முதல் நாளே காதலில் விழுந்தவள் இவள். இன்று வீரமும் துணிவுமாக ஆளை சாய்க்கும் அழகில் ஆண்மகனாக வந்து நின்றவனை கண்டு தன் வீராப்பில் விரிசல் ஏற்பட்டதை உணர்ந்தாள்.

தன்னை தானே நொந்தபடி அறையின் கட்டிலில் அமர்ந்தவள் அறையில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கண்டு குழம்பினாள். அவள் கழட்டி ஓரமாக வைத்திருந்த அவர்களின் திருமண புகைப்படம் மீண்டும் சுவற்றில் ஆடிக் கொண்டிருந்தது. புத்தக அலமாரியில் புதிதாக பல புத்தகங்கள் இருந்தது. அலங்கார மேஜை மீது ஆண்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சரியாக பூட்டாமல் இருந்த துணி அலமாரியை திறந்து பார்த்தாள்.

அலமாரியின் ஒரு புறத்தில் ஆண்களுக்கான உடைகள் வரிசையாக தொங்கிக் கொண்டிருந்தது.

"மல்லிக்கா.." என இவள் கத்தி அழைத்ததில் உடனே அங்கு ஓடி வந்தாள் வீட்டின் வேலையாள் மல்லி.

"என்ன சந்தியா ம்மா..?" பதட்டமாக கேட்டாள் அவள்.

"இது யார் டிரெஸ்..? இது ஏன் என் ரூம்ல இருக்கு..? என் ரூமை இப்படி ஏன் மாத்தி வச்சிருக்கிங்க..?" என்றாள் கோபத்தோடு.

மல்லி தன் வாய் மீது கை வைத்து தன் சிரிப்பை அடக்கினாள்.

"அதெல்லாம் சின்ன தம்பியோடது.. நம்ம டிரைவர்க்கிட்ட அவரோட பொருளையெல்லாம் கொடுத்து விட்டிருந்தாரு.. பொன்னி அம்மாதான் அது எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்க சொன்னாங்க.." என்றாள்.

சந்தியாவிற்கு சுவற்றில் முட்டிக் கொள்ள தோன்றியது. பாட்டியின் மீது ஆத்திரமாக வந்தது.
"சரி நீங்க போங்க.." என்றவள் அவள் சென்றதும் அலமாரியை திறந்தாள்.

இனியனின் உடைகளை வன்மத்தோடு பார்த்தாள். அந்த உடைகள் அனைத்திற்கும் நெருப்பு வைக்க தோன்றியது அவளுக்கு. பற்களை கடித்தபடி வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

இவ்வளவு நாளாக நினைவிலும் கனவிலும் கொடுமை செய்தவன் இப்போது நிஜத்தில்.. அதுவும் அதே வீட்டில் அவளின் அறையில் வசிக்க போகிறான். அவளுக்கு இதை நினைக்க நினைக்க ஆத்திரம்தான் அதிகமானது.

வெகுநேரம் இதே யோசனையில் இருந்தவள் பொன்னியின் குரலை கேட்டதும் சட்டென எழுந்து ஹாலுக்கு ஓடினாள்.

"பாட்டி உனக்கு என்ன பைத்தியமா.. எதுக்கு என் ரூம்ல‌‌.." பொன்னியை திட்டியபடியே ஹாலுக்கு வந்தவள் வாசலில் நின்ற இனியனை கண்டு மீதியை சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள்.

"எதுக்குடி இப்படி காட்டு கத்தல் கத்திட்டு இருக்க..?" என கேட்ட பொன்னி "மல்லி சீக்கிரம் ஆரத்தியை எடுத்துட்டு வா.." என்றாள்.

இனியன் சந்தியாவை புருவம் உயர்த்தி யோசனையுடன் பார்த்தான். சந்தியாவிற்கு அவன் பார்வை படும் இடத்தில் நிற்க விருப்பம் இல்லை. அதனால் திரும்பி நடந்தாள்.

சக்தி மகேஷை ஓரக்கண்ணால் பார்த்தாள். "நான் இந்த வீட்டு மருமகதானே..? உங்க அம்மா எனக்காக ஒருநாள் ஆரத்தி சுத்தி இருப்பாங்களா..?" என்றாள் குற்றச்சாட்டாக.

அவள் மெல்லமாக பேசியதால் மகேஷை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை. மகேஷ் சக்தியின் காதருகே தன் முகத்தை கொண்டு சென்றான். "எங்க அம்மா உனக்கு ஆரத்தி சுத்தலன்னா என்ன..? உனக்காக என்னையே தந்திருக்காங்க.. உனக்கு நான் போதாதா..?" என்றான் சிணுங்கல் குரலில். முகம் சிவந்து தலை குனிந்த சக்தி அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

மல்லி கொண்டு வந்து தந்த ஆரத்தியை கையில் வாங்கிய பொன்னி இனியனின் பக்கம் திரும்பினாள்.

"பாட்டி.. சந்தியாவை என் கூட நிற்க வச்சி ஆரத்தி சுத்துங்க.. அவ இல்லாம ஆரத்தி சுத்திக்க ஏதோ மாதிரியா இருக்கு.." என்றான் இனியன்.

அறைக்கு செல்ல ஓரடி எடுத்து வைத்த சந்தியா இவன் சொன்னதை கேட்டு திரும்பி பார்த்து அவனை முறைத்தாள். 'பிராடு.. பொய் காதலை சொல்லி என்னை ஏமாத்தியதை போல இப்ப மொத்த குடும்பத்தையும் ஏமாத்துறான்..' அவனை உள்ளுக்குள் திட்டி தீர்த்தாள் அவள்.

மற்றவர்கள் பார்க்கும் முன் தனது அறைக்கு சென்று விட வேண்டும் என நினைத்து திரும்பினாள். "என் பேரன் சொன்னது காதுல விழலையா..? வந்து இவன் கூட நில்லு.." என்றாள் பொன்னி.

சந்தியாவிற்கு நெஞ்சம் சோகத்தில் விம்மியது. இதுவரை பாசத்தை மட்டும் காட்டிய பாட்டி கூட இன்று அவனால் அதிகாரத்தை காட்டுகிறாளே என நினைத்து வருந்தினாள் சந்தியா.

தரையை பார்த்தபடி நடந்து வாசலுக்கு வந்தாள். அவனை பார்க்கவும் பிடிக்கவில்லை. பாட்டியை பார்க்கவும் கூட பிடிக்கவில்லை அவளுக்கு.

தரையில் கண் பதித்து இருந்தவளின் கையை வலிய கரம் ஒன்று பற்றியது. அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அந்த கரம் இனியனுடையது என்பதை அறிவாள் அவள்.

தயக்கமாக நின்றவளை தன் அருகாமையில் இழுத்து நிறுத்தினான் இனியன். அவளை பற்றியிருந்த கையின் பிடிமானம் இறுகியது. தன்னுடையவள் என்ற உணர்வு அவனுக்கு சிறு கர்வத்தை தந்தது.

'என் கையை உடைக்க போறானா இவன்..? பங்ஷன்ல இருந்து பாதியிலேயே வந்துட்டேன்னு பழி வாங்க போறானா..?' பயத்தோடு யோசித்தாள் சந்தியா.

பொன்னி இருவருக்கும் ஆரத்தியை சுற்றினாள். இனியனின் நெற்றியில் பொட்டு வைத்தவள் சந்தியாவின் குனிந்த தலையை குழப்பமாக பார்த்தாள்.

"இப்பதான் புது பொண்ணுன்னு நினைப்பா உனக்கு..?" என பொன்னி கேட்டது சந்தியாவின் காதில் விழவேயில்லை.

தனது யோசனையில் இருந்தவளின் முகத்தை பற்றி நிமிர்த்தினான் இனியன். சிலையாக நின்று அவனை பார்த்தாள் அவள். சிந்தனையின் உலகை விட்டு வெளி வந்தவள் அவனை விழியெடுக்காமல் பார்த்தாள். கனவு போல இருக்கும் இந்த நெருக்கம் தொடர வேண்டும் என்று ஒரு குரலும் இந்த நொடியே முடிய வேண்டும் என்றும் இரு வேறு குரல் அவளின் மனதுக்குள் ஒலித்தது‌.

அவளின் முகத்தை பார்த்த இனியனுக்கு தன்னை சுற்றி ஒரு உலகம் இருப்பதே மறந்து போனது.
"அவனை பார்வையாலேயே தின்னுடாத.." என பொன்னியின் குரல் கேட்கவும் இனியன்தான் முதலில் சுய நினைவிற்கு வந்தான். சந்தியா பாட்டியின் குரலால் குழம்பிய நேரத்தில் அவளின் முகத்தை பாட்டிக்கு நேராக திருப்பினான் இனியன்.

பாட்டி சந்தியாவின் நெற்றியிலும் பொட்டை வைத்த பிறகு ஆரத்தி தட்டை மல்லியிடம் தந்தாள்.
மல்லி ஆரத்தி தட்டோடு வாசலுக்கு செல்ல இனியன் சந்தியாவின் கை பிடித்தபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
29/10/2020 4:51 am  

சர்வாதிகாரம் 4

சந்தியா இனியனின் கை பிடியிலிருந்து தன் கையை உருவி கொள்ள முயன்றாள். ஆனால் இரும்பாக இருந்தது அவனது கையின் பிடி. அதனால் பற்களை கடித்தபடி தலை குனிந்து நின்றாள் அவள்.

"சாப்பிடலாம்‌.. வாடா ப்பா.." என்று அழைத்தாள் பொன்னி‌.

இனியன் சந்தியாவையும் தன்னோடு அழைத்து சென்றான்.

"நான் சாப்பிட்டுட்டேன்.." என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.
இனியன் அவளை ஒருநொடி நின்று பார்த்தான்.

"இன்னொரு முறை சாப்பிடுவதால நீ ஒன்னும் குறைஞ்சிட போறதில்ல.." என்றவன் அவளை டைனிங் டேபிள் முன்னால் இருந்த நாற்காலியில் அமர வைத்தான். அவனே ஒரு தட்டை எடுத்து அவள் முன்னால் வைத்து உணவை பரிமாறவும் செய்தான்.

சக்தி கண்களை உருட்டி மகேஷை பார்த்தாள். "பெத்த தாய்.. நான் சாப்பிடேனான்னு கேட்டானா அவன்..?" என்றாள் மெல்லிய குரலில் கோபத்தோடு.

மகேஷ் சிரித்தபடியே அவளை தனியாக இழுத்து வந்தான். "நீ வர வர ரொம்ப மாமியாராவும் மருமகளாவும் ஆகிட்ட.. எங்க அம்மாவையும் குறை சொல்லுற.. இப்ப மகன் மருமக மேல வச்ச பாசத்தையும் குறை சொல்லுற.. உனக்கு சாப்பிட்டியான்னு கேட்கணும் அவ்வளவுதானே..? நான் உனக்கு ஊட்டியே விடுறேன்.. வா.." என அவன் கை பிடித்து இழுக்க, அவனிடமிருந்து விலகி நின்றாள் சக்தி.

"எனக்கு ஒன்னும் நீ ஊட்டி விட வேண்டாம்.. நான் என் வேலையை பார்க்க போறேன்.. நீயே போய் உன் அம்மாவையும் மகனையும் கொஞ்சிட்டு உட்கார்ந்திரு.." என்றவள் அவனை விலக்கி நிறுத்திவிட்டு நடந்தாள். மகேஷ் நெற்றியில் அடித்துக் கொண்டு அவளை பின்தொடர்ந்து நடந்தான்.

சந்தியா தனக்கு உணவு பரிமாறியவனை முறைக்க ஆசைப்பட்டாள். தட்டு நிறைய உணவை கொட்டி வைத்தவன் தன்னை எருமை மாடாக எண்ணி விட்டானோ என நினைத்து அவனை திட்டி தீர்த்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்த்து முறைக்கத்தான் திராணி இல்லை.

அவள் அருகில் அமர்ந்த இனியனை பாசத்தோடு பார்த்தபடியே உணவை பரிமாறினாள் பொன்னி.

பேரனை தலை முதல் கால் வரை பார்த்து வியந்து போனாள் பொன்னி. தனது பேரன் அவன், அதுவும் வீர திருமகனாய் உருவம் கொண்டுள்ளவன் தன் வாரிசு என்ற எண்ணத்தில் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

இனியனோ தன் அருகே இருந்த சந்தியா உணவை கை தொடாமல் இருப்பதை கண்டு குழப்பமாக அவளின் தோளை தொட்டான்.

"என்ன வேடிக்கை..? சாப்பிடு.." என்று அவன் அதட்டலாக சொல்லவும் சந்தியாவின் முகம் நொடியில் பொலிவிழந்து போனது. பயம் கொஞ்சம் கொஞ்சமாக அவளது மேனியில் குடியேறியது‌.

குனிந்த தலையை நிமிர்த்தாமல் உணவை எடுத்து உண்டவளுக்கு உணவு தொண்டையின் கீழே செல்ல மறுத்தது.

உயிர் வளர்க்கும் உணவு கூட பிடிக்காதவர்கள் பரிமாறுகையில் விஷமாய் தோன்றும் என்பதை புரிந்துக் கொண்டாள் சந்தியா.

கடமைகென இரண்டு பருக்கைகளை உண்டவள் இனியன் தன் பசி தீர்க்கும் கவனத்தோடு இருக்கும் போதே எழுந்து விட்டாள்.

இனியன்‌ தன்னை கவனிக்கும் முன் தனது அறைக்குள் வந்து நுழைந்து கொண்டாள்.

பொன்னி பேரனின் அருகே அமர்ந்து அவனுக்கு வேண்டியது அனைத்தையும் பார்த்து பார்த்து பரிமாறினாள்.

"உன் அத்தை இப்பவும் உன்னை ஏதாவது சொன்னாளா..?" என்று விசாரித்தாள் அவள்.

இந்த ஐந்து வருடத்தில் இனியனும் பாட்டியும் தினம் தினம் போனில் உரையாடி உள்ளனர். அதனால் இனியன் அதற்கு முன் தன் வாழ்நாளில் நடந்த அத்தனையையும் பாட்டியிடம் ஒப்பித்து விட்டான்.

"இல்ல பாட்டி.. நான் இந்த குடும்பத்தோட வாரிசுன்னு தெரிஞ்சதிலிருந்து என்னை ஏதும் சொல்லுறது இல்ல.. என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க.. இதைதான் நான் போன்லயே உங்ககிட்ட சொல்லிட்டேனே.."

பொன்னி வேண்டாமென்றேதான் இதை மீண்டும் கேட்டாள்.

"எத்தனை முறை சொன்னா என்னப்பா.. இந்த குடும்பத்தோட ஒரே வாரிசு நீ.. உங்க அப்பாவும் அம்மாவும் உன்னை அனாதை மாதிரி யார் வீட்டுலயோ வளர விட்டுட்டாங்களேன்னு ஆதங்கம்தான்.. பச்சை குழந்தையிலிருந்து என் பேரன் அனாதையா வளர்ந்துட்டானேங்கற வருத்தம்தான்.. யாராவது தான் பெத்த பிள்ளையை யாரோ ஒருத்திக்கிட்ட ஏச்சு பேச்சு வாங்க விடுவாளா..? நானா இருந்திருந்தா எனக்கு வேலை வேணாம்.. புள்ளை மட்டும் போதும்ன்னு இருந்திருப்பேன்.. ஆனா எல்லாரும் அப்படியா..?" என்றவள் குரலை சற்று உயர்த்தித்தான் சொன்னாள்.

சக்தி கோபத்தோடு கையை முறுக்கியபடி தன் அறையை விட்டு வெளியே நடக்க முயன்றாள். ஆனால் மகேஷ் அவளெதிரே கை எடுத்து கும்பிடவும் பல்லை கடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள் அவள்‌.

"உன் அம்மா ஓவரா பண்றாங்க.. நான் என் வேலைக்காக அவனை விட்டுட்டு வரல.. உனக்காகதான் விட்டுட்டு வந்தேன்.. எல்லாம் தெரிஞ்சும் இவங்க மறுபடியும் இதே மாதிரி பேசிட்டு இருந்தாங்கன்னா அப்புறம் நான் மனுசியாவே இருக்க மாட்டேன் பார்த்துக்க.. வயசான காலத்துல உன் அம்மாவை அமைதியா இருக்க சொல்லு.. அப்புறம் நான் கொடுமைகார மருமகளா மாறின பிறகு அழுது வச்சிடாத.." கோபத்தோடு சொன்னவள் சுவர் பக்கம் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தாள்.

பாட்டி சொன்ன சொல் ஒன்று சந்தியாவின் காயம் பட்ட இதயத்தை மேலும் ரணமாக்கியது.

அவன்தான் இந்த வீட்டின் ஒரே ஒரு வாரிசு என பாட்டி சொல்லியது சந்தியாவை நேரடியாக காயப்படுத்தி விட்டது. இவ்வளவு நாளாக மறைமுகமாக காயம்பட்டவள் இன்று துரோக கத்தியை நேரடியாக நெஞ்சில் வாங்கி விட்டாள்.

கண்களில் கண்ணீர் துளிர்க்க முயன்றது. ஆனாலும் பற்களை கடித்தபடி தன்னை தானே அமைதி படுத்திக் கொண்டவள் ஜன்னல் வழி தெரிந்த பூந்தோட்டத்தில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்.

அவள் அந்த பூந்தோட்டத்து பூக்களில் மனம் லயித்து கிடந்த நேரத்தில் அந்த அறையின் கதவு சடாரென திறக்கப்பட்டது. திடுக்கிடலோடு திரும்பி பார்த்தாள். இனியன் வாசற்படியில் சாய்ந்து நின்றபடி அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.

சேலை விலகியிருந்த இடுப்பின் ஓரத்தில் அவனது பார்வை நிற்கவும் அவளின் கை சட்டென புடவையை இழுத்து இடுப்பை மறைத்து விட்டுக் கொண்டது.

இனியனின் பார்வை அவளது முகத்திற்கு வந்து சேர்ந்தது‌. அவனின் பார்வையை நேர் கொண்டு சந்திக்க இயலாமல் தலை குனிந்தாள் சந்தியா.

"புது பொண்ணை விட அதிகமா வெட்கப்படுற நீ.." என்றவன் உள்ளே நுழைந்து தன் காலால் கதவை உதைத்து மூடினான். கதவு சாத்திய சத்தத்தில் துள்ளி விழுந்தாள் சந்தியா.

அவளின் சிறு சிறு செயல் கூட அவனை ஏதோ செய்தது. எப்படி இவள் சின்ன கண் அசைவில் தன் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள் என தனக்குள் கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான் அவன்.

சந்தியா அவன் தன்னை நோக்கி நெருங்கி வருவதை கண்டு பின்னால் நகர முயன்றாள். ஆனால் ஜன்னல் கம்பிகள் அவளது முயற்சியை தடுத்து விட்டன.
அருகில் நெருங்கி வந்தவன் நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அவள் முன்னால் அமர்ந்தான். கால் மீது கால் போட்டபடி அவளை பார்த்தான்.

"உன் போன் எங்கே..?" என்றான் புருவம் உயர்த்தி.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் மேஜை மீது இருந்த ஃபோனை கை காட்டினாள். ஃபோனை எட்டி எடுத்தவன் ஃபோனை சோதித்தான்.

"இதுல ஏதாவது பிரச்சனையா..?" என்றான் ஃபோனை காட்டி.

அவள் இல்லையென தலையசைத்தாள்.

"பிறகேன் கால் பண்ணும் போது எடுக்கல..? அஞ்சி வருசமா தினமும் ஃபோன் பண்ணினேன் நான்.. உன் கண்ணுக்கு நான் அவ்வளவு இளக்காரமா தெரியறேனா..?" என அவன் அடிக்குரலில் அதட்டி கேட்க சந்தியா பயத்தோடு இல்லையென தலையசைத்தாள்.

"உன் வாயில் கொலுக்கட்டையா இருக்கு..? வாய் திறந்து பேச தெரியாதா என்ன..? ஏன் இவ்வளவு நாளா காலை எடுக்கல..?" என்றான் அதட்டலாக.

"எனக்கு பிடிக்கல.." என்றாள் தலைநிமிர்ந்து. ஆனால் பயத்தில் கண்களை மூடி இருந்தாள். இரு கையையும் இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தாள்.
அவளை பார்க்க அவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஆனால் அதே சமயம் கோபமாகவும் இருந்தது.

எழுந்து நின்றவன் அவளை நோக்கி நடந்தான். கண்களை மூடி நின்றுக் கொண்டிருந்தவள் கரம் ஒன்று கன்னத்தில் படரவும் மீண்டும் துள்ளி விழுந்தாள். பதட்டத்தில் அவளின் தலை ஜன்னல் கம்பியில் மோத இருந்த நேரத்தில் சட்டென தன் கையை ஜன்னலுக்கும் அவளது பின்னந்தலைக்கும் இடையில் வைத்தான் இனியன். அவளது தலையில் அடிபடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன் அவள் முகத்தை பார்த்தான். பார்த்த நொடி சூழ்நிலை மறந்து விட்டான்.

சந்தியா மருட்சியோடு அவனை பார்த்தாள். மானா மீனா என தெரியாவிட்டாலும் அவளது பார்வையில் ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் மின்னுவதாக தோன்றியது அவனுக்கு. அவளது நெற்றியில் அசைந்த கூந்தலை ஓரம் தள்ளி விட்டான். அவளின் காதோரம் ஆடிய கம்மலை சுட்டு விரலால் தட்டினான்.

அவள் புலியிடம் சிக்கிய இரையாக மருண்டு போய் அவனது செய்கையை பொறுத்துக் கொண்டிருந்தாள்.

"ஏன் பிடிக்கல..? கால் பேச பிடிக்கலையா..? இல்ல என்னையே பிடிக்கலையா..?" என்றவனின் பார்வை சட்டென கடிமானது. அவனது குரலில் இருந்த அழுத்தம் அவளுக்குள் தானாகவே பயத்தை அதிகப்படுத்தியது.

தலை குனிந்து தரை பார்த்தவள் "உனக்கே பதில் தெரியும்.." என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் முகத்தை பற்றி இருந்த அவனது கையின் பிடிமானம் இறுகியது.
"என்னை பார்த்து பேசு.." என்றான் கர்ஜனையுடன்.

அவனது கை விரல்கள் அழுந்தியதில் தன் கன்னத்தில் வலியை உணர்ந்தவள் கண்ணீர் தத்தளிக்க அவனை பார்த்தாள்.

"எனக்கு உன்னை பிடிக்கல.."

"ஏன்..?" என்றான் ஆத்திரமாக.

அவள் கசப்பாக சிரித்தாள். "ஏன் பிடிக்கணும்..? எங்க அப்பாவை பழி வாங்க என்னை யூஸ் பண்ணிக்கிட்ட.. பழிதான் வாங்கிட்ட இல்ல..? அப்புறமும் ஏன் என்னை டார்ச்சர் பண்ற..?" என்றாள் விம்மலுடன்.

அவளின் முகத்தை ஆராய்ந்தான் அவன். "நான் உன்னை காதலிக்கிறேன்.. இதை நிறைய முறை உன்கிட்ட சொல்லிட்டேன்.. உன.." அவன் முடிக்கும் முன் தொடர்ந்தாள் அவள்.

"உன் காதல் பொய்.. உன்னை நம்ப வேண்டிய அவசியம் இல்ல எனக்கு.. என் அப்பாவை பழி வாங்க என்னை காதலிக்கறதா ஏமாத்தின நீ.. எனக்காக காதலுக்காக என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு என்னால நம்ப முடியாது.. உன் காதல் உண்மையா இருந்தாலும் கூட எனக்கு அது தேவை இல்ல.. என்னை என் வழியில விட்டுடு.. இல்லன்னா உன் வாழ்க்கையும் சேர்ந்து நாசமாகும்.. மத்தவங்க முன்னாடி சின்சியரான கணவனா சீன் போடதே.. என்னை அதட்டுற வேலையை வச்சிக்காத.. நீ ஓவரா பண்ணா அப்புறம் நான் மொத்த ஊரையும் கூப்பிட்டு டைவர்ஸ் கேட்பேன்.. நீ காதல்ன்னு சொல்லி என்னை ஏமாத்தியதை இந்த மொத்த ஊருக்கும் மைக் போட்டு சொல்வேன்.." அவன் மேல் இருந்த கோபத்திலும் பயத்திலும் என்ன பேசுகிறோம் என்று கூட புரியாமல் பேசிக் கொண்டிருத்தாள் அவள். அவளின் இரு கன்னத்தில் அவனது கை விரல்கள் இன்னும் அழுந்தமாக பதிந்தது‌.

"உனக்கு திமிர் மட்டும்தான்டி இருக்கு.. உன் அப்பா என் அம்மா அப்பா வாழ்க்கையை நாசம் பண்ணி இந்த குடும்பத்து நிம்மதியை கெடுத்தாரு.. இப்ப நீ என் மூலமா என் அம்மா அப்பா நிம்மதியை கெடுக்க பார்க்கறியா..?" அவன் கேட்ட கேள்வி அவளுக்கு சாட்டையடியை தந்தது.

"நான் உன் வாழ்க்கையை நாசம் பண்றேனா..? நல்ல காமெடி.. நீதான் என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்ட..? விருப்பம் இல்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டது நீதான்.. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல.. நாடகமாடி காதல்ன்னு பொய் சொல்லி என்னை ஏமாத்திட்ட.. அதுக்கப்புறமும் கூட என் அப்பாவை பழி வாங்கதான் என்னை கல்யாணமே பண்ணிக்கிட்ட நீ.. என் அப்பாவுக்காவும் உன் அம்மாவுக்காகவும் மட்டும்தான் நான் இந்த வீட்டுல இருக்கேன்.. என் பொறுமையை ரொம்ப சோதிக்காத நீ.." என்றவள் சுவர் பக்கம் முகம் திருப்ப முயன்றாள். ஆனால் அவன் அவளது முகத்தை தான் பார்க்கும்படி நிறுத்தினான்.

"என்னை விட்டுட்டு போக உனக்கு அவ்வளவு ஆசையா..?" என கேட்டவன் அவளின் காதோரம் தன் உதட்டை கொண்டு வந்தான்.

"பார்த்த செகண்ட் பிடிச்சிருந்த என்னை இன்னைக்கு பிடிக்கலையா..? அன்னைக்கு உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சவன் இன்னைக்கு கேவலமா தெரியறேனா..? ஏன் அதுக்குள்ள வேற எவனையாவது பிடிச்சிட்டியா..? என்னை எப்படி மயக்கி உன் வலையில் விழ வச்சியோ அதே மாதிரி வேற யாரையாவது மயக்கிட்டியா..?" என அவன் கேட்க அவனின் கன்னத்தில் பளீரென ஒரு அறையை விட்டாள் சந்தியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
30/10/2020 5:01 am  

சர்வாதிகாரம் 5

 

தன்னை அறைந்தவளை கோபத்தோடு பார்த்தான் இனியன். சந்தியாவிற்கு பயத்தில் கை கால்கள் நடுங்கியது. ஆனாலும் கோபத்தோடு அவனை முறைத்தாள்.

"நான் ஒன்னும் உன்னை மயக்கல.. வேற எவனையும் மயக்கல.. என்னை டார்ச்சர் பண்ணாம தள்ளி போ.." என்றவள் அவனின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னால் தள்ளினாள்.

இரும்பில் வடித்த சிலையென இருந்தவனை அவளால் துளி கூட தள்ள முடியவில்லை. தோற்று போன முகமென அவனை வெறுப்போடு பார்த்தாள்.

"அஞ்சி வருசத்துல அழகு மட்டும் கூடல.. உன் திமிரும் அதிகமாகி இருக்கு.." என அவன் சொல்ல பயத்தில் அவள் தன் புடவை தலைப்பை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

"ஓவர் திமிரை குறைக்கதான் நான் இருக்கேனே.." என்றவன் அவள் அறைந்த கன்னத்தை தொட்டு பார்த்தான். அவ்வளவாக வலி ஏதும் இல்லையென்றாலும் கூட அவளிடம் அடி வாங்கியது தன் தன்மானத்திற்கு இழுக்கு என நினைத்தான்.

"என்னையே கை நீட்டி அடிக்கற அளவுக்கு திமிரா..? நான் திருப்பி அறைய ஒரு செகண்ட் கூட ஆகாது.. ஆனா ஒரே அடியில செத்துடுவ நீ.. அதனால அமைதியா இருக்கேன்.." என்றவன் அவளின் செல்போனை அவள் முன் கொண்டு வந்தான்.

"அஞ்சி வருசமா நான் ஓயாம போன் பண்ணேன்.. ஆனா ஒரு முறை கூட உனக்கு எடுக்க தோணல.. காரணம் கேட்டா என்னை பிடிக்கலன்னு சொல்ற.. என் காதலை உன்னால நம்ப முடியலன்னா எனக்கும் என் காதலை வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.. உன்கிட்ட காதல் பிச்சை எடுப்பேன்னு கனவுல கூட நினைச்சிடாத.." என்றவன் தலையை கோதிவிட்டுக் கொண்டு தள்ளி நின்று அவளை பார்த்தான். அவன் மனதில் இருந்த காதல் தேவதை அவனது இதயத்தை இரு கூராக வெட்டி எறிந்து விட்டாள். தான் மட்டும் முட்டாள் போல ஐந்து வருடமாக அவளை காதலித்த போது அவள் தன்னை மனிதனாக கூட மதிக்கவில்லை என்ற நிதர்சனம் அவனின் மனதை சுக்கல் நூறாக்கியது. தன் காதல் இப்படி தோற்று போவது அவனுக்கு பிடிக்கவில்லை.

"நீயா வந்து ஐ லவ் யூன்னு என்கிட்ட கெஞ்ச போற.. இவ்வளவு நாளா உங்க அப்பாவை பழி வாங்க நினைக்கல நான்.. ஆனா இனி பழி வாங்க போறேன்.. உயிரோடு மரண வலியை நீயும் உன் அப்பாவும் அனுபவிக்க போறிங்க.." என அவன் சொல்ல சந்தியா குழப்பமும் பயமுமாக அவனை பார்த்தாள்.

"என் அப்பாவை ஏதும் செஞ்சிடாத.." நடுங்கிய குரலில் அவள் சொல்ல கேலி சிரிப்போடு நாற்காலியில் அமர்ந்தான் அவன்.

"அப்ப உன்னை எது வேணாலும் செய்யலாமா..?" என கேட்டவன் அவளை தலை முதல் கால் வரை பார்த்தான். அவன் பார்வையில் உடல் கூசியவள் அருவெறுப்போடு தரையை பார்த்தாள்.

"உடனே என்னை காம கொடூரன் ரேஞ்சிக்கு நினைச்சிடாத.. நான் அந்த மாதிரி கிடையாது.. விருப்பம் இல்லன்னா கட்டின பொண்டாட்டி கூட எனக்கு கால் தூசிதான்.. உன் மேனியை ஆராதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.. ஆனா உன் திமிர் பிடிச்ச மனசை உடைச்சி காட்டுறேன் இருடி.. இனி உன் வாழ்நாள் எல்லாமே நரகம்தான்.." என்றவன் எழுந்து நின்றான்.
அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதை சொன்ன நொடியிலேயே உடைத்து விட்டன. தான்தான் ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது அவளுக்கு. ஆனால் அவன் சொன்னது போல அவன் முன் கெஞ்சி நிற்க விருப்பம் இல்லை அவளுக்கு
அவளின் போனை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்ட இனியன் அந்த அறையை விட்டு வெளியே நடந்தான்.

"என் போன்.." என அவளின் குரலை கேட்டவன் நடப்பதை நிறுத்தி விட்டு அவளை திரும்பி பார்த்தான்.

"நான் பேச சொன்னா மட்டும்தான் நீ பேசணும்.. தேவையில்லா வார்த்தைகள் பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல.."

அவளின் கோபம் அதிகமானது.

"நான் ஒண்ணும் உன் அடிமை இல்ல.." என்றாள் அவள்.

"இனி அடிமைதான்.. புரட்சி பண்ண நினைக்காத. அப்புறம் தோத்துடுவ.. இது என் வீடு. நீ என் பொண்டாட்டி. என்னை கேள்வி கேட்க இங்கே யாருக்கும் உரிமை கிடையாது.. உனக்கும் உரிமை கிடையாது. என் அம்மாக்கிட்டயோ அப்பாக்கிட்டயோ இதை பத்தி சொல்ல நினைக்காத.. ஏனா உங்க அப்பனை ஆயுளுக்கும் ஜெயில்ல போடுற மாதிரி ஆதாரம் இருக்கு என்கிட்ட.. எந்த மகளும் தன் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்ப ஆசைப்பட மாட்டான்னுதான் நினைக்கிறேன்.. உனக்கு ஆசையா இருந்தா சொல்லு.. நானே நமக்குள்ள நடக்கறதை என் அம்மா அப்பாக்கிட்ட சொல்றேன்.." என அவன் சொல்ல சந்தியா முகம் வெளுத்து போனது.

அவன் சொல்வதில் எத்தனை பங்கு உண்மை இருக்கிறது என்பதை அவளால் கண்டறிய முடியவில்லை.

"எங்க அப்பா ஏற்கனவே தண்டனையை அனுபவிச்சிட்டார்.." என்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தான் அவன்.

"நான் போலிஸ்காரன்.. இதை மறந்திருக்க மாட்டன்னு நினைக்கிறேன்.. அஞ்சி வருசத்துக்கு முன்னாடி தாத்தாவையும் உன் அப்பாவையும் ஜெயிலுக்கு அனுப்பி வச்சவனே நான்தான்.. அவங்களுக்கு எதிரான ஆதாரம் என்கிட்ட எத்தனை இருக்குன்னு உன்னால நினைச்சி கூட பார்க்க முடியாது. அதனால ஸ்மார்ட்டா சிந்திக்கறதை விட்டுட்டு நான் சொல்றதை மட்டும் செய்.. என் போன் காலை எடுக்கவே உனக்கு துப்பு இல்ல.. அப்புறம் உனக்கு எதுக்குடி போன் வெங்காயம் வேற.?" என்றவன் அவள் அதிர்ச்சியோடு நிற்பதை சலனமில்லாமல் பார்த்து விட்டு வெளியே நடந்தான்.

கதவை படீரென அவன் சாத்தி விட்டு செல்ல அவள் சுவரில் சாய்ந்து அமர்ந்து தன் கைகளில் முகம் புதைத்தாள். விழியோரம் கண்ணீர் துளிர்த்தது.

'உண்மையாவே அப்பாவுக்கு எதிரா ஆதாரம் வச்சிருப்பானோ..?' என நினைத்தவளுக்கு அவனின் அதிகாரம் புரிந்தது.

தனது வாழ்க்கை எந்த அளவிற்கு விந்தையாக மாறி போனது என்பதை புரிந்துக் கொண்டவளுக்கு சிரிப்பு வந்தது.

''சந்தியா.." பொன்னி கத்தி அழைத்ததில் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

கிச்சனிலிருந்து அவளை அழைத்த பொன்னி அவள் வந்ததும் தன் கையிலிருந்த கத்தியை அவள் கையில் தந்தாள்.

"என் பேரனுக்கு பொண்டாட்டி கையால சாப்பிடணுமாம்.. அதனால எல்லாத்தையும் சமைச்சி வச்சிடு.." என்றாள்.

சந்தியா தன் கையிலிருந்த கத்தியையும் பாட்டியையும் மாறி மாறி பார்த்தாள். இவ்வளவு நாளாக வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்து விட்டவள் இது வரை கிச்சன் பக்கம் வந்ததே இல்லை. எப்போதும் சமையற்காரர்கள் இருக்கும் அந்த வீட்டில் அவள் இதுவரை தண்ணீரை கூட சூடு பண்ணியது இல்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று அனைவரிடமும் வெட்டி பேச்சு பேசியவளுக்கு இன்று இப்படி ஒரு விதி வந்து சேரும் என நினைக்கவேயில்லை.

இனியன் தன்னை தண்டிப்பது கூட ஒரு வகையில் சரி என நினைத்தவளுக்கு பாட்டி ஏன் இப்படி தன்னை சோதிக்கிறாள் என புரியாமல் நின்றாள்.

"பாட்டி எனக்கு சமைக்க தெரியாது.."

"எத்தனை வருசத்துக்கு இதே காரணத்தை சொல்லிட்டு இருக்க போற..? கல்யாணமான ஒரு பொண்ணுக்கு சமைக்க தெரியலன்னு யார்க்கிட்டயாவது சொன்னா சிரிப்பாங்க.. என் பேரனையே கட்டிக்கிட்டு இதே வீட்டுல நீ இருந்துட்டதால பரவாயில்ல.. இதே நீ வேற வீட்டுக்கு கல்யாணமாகி போயிருந்தா உன் வண்டவாளத்தை பார்த்து ஊரே சிரிச்சிருக்கும்.. இனியும் ஏமாத்திட்டு இருக்காம சமைச்சி பழக பாரு.. உன் மாமியாளுக்குதான் பூமி உடைஞ்சாலும் கவலை இல்ல.. வானம் உடைஞ்சாலும் வருத்தம் இல்ல.. மருமக எடுத்த பின்னாடியும் சமைக்க தெரியாம இருக்கா.. அவளை மாதிரி நீயும் இருக்காத.. நீ எப்படி சமைக்கணும்ன்னு மல்லி சொல்வா.. அவ சொல்றபடி கேட்டு செய்.." என்ற பொன்னி அங்கிருந்து வெளியே நடந்தாள்.

இவ்வளவு நாளும் கணவனுக்கு அடிமையென வாழ்ந்து விட்ட பொன்னிக்கு இந்த அதிகாரம் பிடித்திருந்தது. அந்த வீட்டில் தானே பெரியவள் என்ற எண்ணமும் தனது அதிகாரத்திற்கு அனைவரும் பணிந்து போகும் விதமும் அவளுக்கு பிடித்திருந்தது. ஐந்து வருடங்களாக சக்திக்கு மாமியாராக அதிகாரம் செய்தவள் இன்று மற்றொரு வாய்ப்பு கிடைத்ததும் சந்தியாவையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

சந்தியாவை பரிதாபமாக பார்த்தாள் மல்லி.

"நான் என்ன பண்ணனும் அக்கா..?" அப்பாவியாக கேட்டவளுக்கு பாடம் எடுக்க தொடங்கினாள் மல்லி.

வெற்றி புன்னகையோடு ஹாலில் அமர்ந்திருந்தான் இனியன். அவன் அருகே வந்து அமர்ந்தாள் பொன்னி. தன்னருகே அமர்ந்தவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் இனியன்.

அம்மா போடும் கோட்டில் நடந்து நல்ல பிள்ளையாக இருப்பதை விட பாட்டி தரும் அன்பில் மூழ்கிய செல்ல பிள்ளையாகவே இருக்க விரும்பினான் இனியன். ஐந்து வருட தொலைபேசி உரையாடல் இருவரையும் பாசத்தில் நெருக்கமாக்கி இருந்தது.

இனியனின் முகத்தில் சோகம் குடியேறியதை கண்ட பொன்னிக்கு மனம் துணுக்குற்றது.

"என்னப்பா ஆச்சி..? ஏன் சோகமா இருக்க..?" என்றாள் அவனின் தலையை வருடியபடி.

"எனக்கு மனசே சரி இல்ல பாட்டி.. சந்தியாவுக்கு என்னை பிடிக்கல.. நான் அவளோட அழகுக்கு தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டா.. அவளோட கால்தூசிக்கு கூட நான் சமம் கிடையாதுன்னு சொல்லிட்டா.. அனாதையா வளர்ந்தவனுக்கு இந்த வீட்டுடோட வாரிசா இருக்க தகுதி இல்லையாம்.." அவன் சொன்னதில் பொய் என்பதை ஒரு பங்கு கூட யாராலும் கண்டு பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சோகம் நிறைந்த முகத்தோடு சொன்னான் அவன்.

பொன்னியின் பலவீனம் அனாதை என்ற வார்த்தைதான். தன் பேரன் அனாதையாக வளர்ந்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதற்காகவே சக்தியின் மீது வெறுப்பில் இருந்தாள். இப்போது சந்தியா தன் பேரனை இப்படி சொல்லி விட்டாள் என்ற செய்தி கேட்டதும் அவளுக்கு மனம் நொந்து போனது. அது கோபமாக உருவெடுத்தது. இனியனை தள்ளிவிட்டு எழ முயன்றவளை தடுத்தான் இனியன். பாட்டியின் முந்தானை புடவையை தன் முகத்தின் மீது போட்டுக் கொண்டான்.

"நீங்க அவகிட்ட ஏதும் கேட்காதிங்க பாட்டி.. நீங்க கேட்டாலும் அவ இல்லன்னுதான் சொல்வா.. ஆனா அவ சொன்ன எல்லாமே உண்மைதானே..? அவ அழகுல தேவதை.. நானோ கேவலமா இருக்கேன்.. அவ இந்த வீட்டோட வாரிசு.. நான் அனாதை.." என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் திணறுபவனை போல முகத்தை திருப்பிக் கொண்டான்.

பொன்னியின் மனம் பேரனுக்காக வருந்தியது. அவன் வார்த்தைகளால் சொன்னாலும் அந்த வார்த்தைகள் அவளுக்கு தந்த வலிகளும் கோபமும் மிகவும் அதிகமான ஒன்று.

"நான் இருக்கும் போது நீ இப்படி பேசலாமா ப்பா..? நீ என் குலத்தோட ஒரே வாரிசு.. அவ சொன்னான்னு நீ மனசு வருத்தப்பட்டா எனக்கும் மனசு வலிக்குதுப்பா.. அவளுக்கு நல்ல பாடமா நான் சொல்லி தரேன் நீ கவலைபடாத.. உன் அழகுக்கு ரம்பையும் ஊர்வசியும் பூமிக்கு வந்து காலடியில சரணடைவாங்க.. அப்படி இருக்கும்போது இவ சொல்றதை ஏன் காதுல வாங்கற நீ..? இவளுக்கு திமிர் அதிகம்.. இவ திமிரை நான் அடக்கி காட்டுறேன்.." என பொன்னி சபதம் போல சொன்னாள்.

இனியன் தன் முகத்தில் ஓடிய விஷம சிரிப்பை பாட்டி பார்க்காதது போல மறைத்துக் கொண்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே பாட்டியின் கோபத்தை தூண்டி விட்டாயிற்று. இனி சந்தியா எப்படியெல்லாம் பாட்டியிடம் வாங்கி கட்ட போகிறாள் என்பதை நினைத்து மனம் மகிழ்ந்தான்.

'என்னையா பிடிக்கலன்னு சொன்ன..? மகளே இனிதான்டி உனக்கு கச்சேரியே..' என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE

COMMENT

SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
31/10/2020 6:04 am  

சர்வாதிகாரம் 6

இரவு வந்து விட்டதாக சொல்லி சென்றது இருட்டும் நிலவும்.

சந்தியா சமையல் கட்டில் போராடிக் கொண்டிருந்தாள். மல்லி சொன்னபடியே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள்.

"மல்லி சமையல் ஆச்சா..?" என கேட்டபடி கிச்சனுக்கு வந்த சக்தி சந்தியாவை கண்டதும் அதிர்ந்து போனாள். வெங்காயம் வெட்டும் போது கன்னத்தில் உண்டான கண்ணீர் கறை. அதே வெங்காயத்தை வெட்ட தெரியாமல் வெட்டி விரலில் செய்துக் கொண்ட காயத்தால் அவள் போட்டுக்கொண்ட துணி கட்டையும் மீறி ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. ஈர கையை ஓராயிரம் முறை துடைத்ததால் கசங்கி போன புடவையின் முந்தானை என பார்க்கவே பரிதாபமாக இருந்தாள் சந்தியா. சக்தி குழப்பதோடு மல்லியை பார்த்தாள்.

"சந்தியா ஏன் சமைக்கிறா..? உனக்கு என்ன வேலை..?" என்றாள்.

"நான்தான் சமைக்க சொன்னேன்.." என்றபடி அங்கு வந்தாள் பொன்னி.

"ஏன் அத்தை..? பாவம் அவ சின்ன பொண்ணு.. பாருங்க அவளை.. எப்படி இருக்கான்னு..? கையெல்லாம் வெட்டி வச்சிருக்கா.." என்றவள் சந்தியாவை நெருங்கினாள்.

அவசரத்திற்கு துணி சுற்றப்பட்ட அவளின் விரலை கையில் எடுத்தவள் அந்த துணியை அவிழ்த்தாள். சிவப்பாக ரத்தம் உறைந்து போன காயம்பட்ட விரலை பார்த்தவள் சோகத்தோடு சந்தியாவை பார்த்தாள்.

"கை வலிக்குதாம்மா..?" என்றவள் மல்லியிடம் திரும்பினாள். "போய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் கொண்டு வா.." என்றாள்.

மல்லி அங்கிருந்து சென்ற பிறகு பொன்னி தன் முகவாயில் கையை வைத்தபடி அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

"அதிசயம்.. இவ ஒருத்தியேதான் பொண்ணா பிறந்திருக்கா பூமியில.. சமைச்சாலே செத்துடுவா பாரு.." என்றவள் மேலும் சொல்லிக் கொண்டு போக அவள் சொன்ன இந்த வார்த்தையிலேயே அவர்கள் இருவரும் அதிர்ந்து நின்று விட்டனர்.

சந்தியா வேதனையோடு தரை பார்த்தாள். அவளது வேதனையை சக்தியால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் பொன்னியால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. தன் பேரனை பார்த்து அழகில்லாதவன், அனாதை என சந்தியா சொல்லியுள்ளதே அவள் மனதில் இருந்த பாசத்தை அழித்து விட்டது.

"..இவ வயசு பொண்ணுங்க இரண்டு குழந்தைகளோட குடும்பம் நடத்தறாங்க.. ஆனா இவளுக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியல.." என திட்டி முடித்தாள் பொன்னி.

"அதுக்காக இப்படி ஒரே நாளில் இவளை கொல்ல பார்க்கறிங்களா என்ன..? இவ சமைக்கணும்ன்னு என்ன அவசியம்..? மல்லியை சமைக்கதானே வச்சிருக்கிங்க..? அப்புறம் ஏன் இவளை கஷ்டப்படுத்துறிங்க..?" சக்தி பொன்னியை எதிர் கேள்வி கேட்டாள்.

"என் பேரனுக்கு பொண்டாட்டி கையால சமைச்சி சாப்பிட ஆசை.." என பொன்னி சொன்னதை கேட்டு சக்திக்கு கோபத்தில் முகம் சிவந்து போனது.

"இனியா.. இனியா.." சக்தி கத்தி அழைத்தாள். ஆனால் அவன் வரவில்லை.

"எதுக்கு அவனை கூப்பிடுற இப்ப..? அவன் வெளியே போயிருக்கான்.. அவன் மேல என்ன தப்பு இருக்குன்னு நீ இந்த கத்து கத்தற..?"

"அத்தை அவன்தான் லூஸுதனமா சொன்னான்னா நீங்களும் ஏன் இப்படி பண்றிங்க..?"

"என் பேரன் லூஸு.. நான் என்ன பைத்தியமோ..? ஏன் சொல்லமாட்ட..? பெத்த மகனை அனாதையா விட்டு வந்தவதானே நீ.." மீண்டும் அதே வார்த்தை. சக்திக்கு கோபம் எல்லை மீறியது. அவள் தன் வாயை திறக்கும் முன் அவளின் கையை பற்றினாள் சந்தியா.

"இதுல பாட்டி மேலயும் இனியன் மேலயும் எந்த தப்பும் இல்லை அத்தை.. அவனுக்கு என் கையால சாப்பிட ஆசைன்னு தெரிஞ்சதும் நானேதான் சமைக்கலாம்ன்னு ஆசைப்பட்டு சமைக்க வந்தேன்.. நிறைய வேலைகளை மல்லி அக்காதான் செஞ்சாங்க.. நான் சின்ன சின்ன வேலைதான் செஞ்சேன்.. கை தவறி கத்தி விரல்ல பட்டுட்டுச்சி.. இது சின்ன காயம்தான்.. எனக்கு வலிக்கவே இல்ல.." சந்தியாவிற்கு தன் காரணமாக குடும்பத்தில் சண்டை வருவதில் விருப்பம் இல்லை. பாட்டிக்கும் அத்தைக்கும் இடையில் சண்டை வந்தால் பிறகு இந்த வீடு வீடாக இல்லாமல் பாலைவனம் போல் இருக்கும் என்பதை அறிவாள் சந்தியா.

"அவன் ரோட்டுல திரியற பிச்சைக்காரன் இல்ல.. அவன் உன் புருசன்.. அதனால அவர் இவர்ன்னு சொல்லி பழகு.. உன் மாமியார் எப்படி இன்னமும் மகேஷ், மகேஷ்ன்னு இருக்காளோ அதே மாதிரி இனியன், அவன், இவன்னு இருக்காத நீயும்.." என்றாள் பொன்னி.

"சரி பாட்டி.." என தலை குனிந்தாள் சந்தியா.

''நல்லா நடிக்கறா.." என முனகியபடி அங்கிருந்து சென்றாள் பொன்னி.

சக்தி கோபத்தோடு சந்தியாவை பார்த்தாள். "உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..? அவனுக்கு ஆசையா இருந்தா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு சமைச்சி தர வேண்டியதுதானே..? இப்படி ஒரே நாளுல எல்லாத்தையும் கத்துக்கிட்டு என்ன பண்ண போற..?" என்றவள் மல்லி கொண்டு வந்து தந்த முதலுதவி பெட்டியை வாங்கிக் கொண்டு சந்தியாவை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அவள் சந்தியாவோடு ஹாலுக்கு வந்த அதே நேரத்தில் வீட்டுக்குள் வந்தான் இனியன். சக்தி சந்தியாவை நாற்காலி ஒன்றில் அமரவைத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தாள். அவளின் விரலில் மருந்திட ஆரம்பித்தாள். சந்தியாவின் தோற்றத்தை கண்டு வியந்து போனான் இனியன்.

'அரை மணி நேரம் கிச்சன்ல இருந்ததுக்கே இப்படி ஒரு கோரமா..?' என தனக்குள் கேட்டுக் கொண்டவன் அவளருகே வந்து அமர்ந்தான். அவனருகே அமர சந்தியாவிற்கு துளியும் விருப்பம் இல்லை. பாட்டியின் முன்னாலும் அத்தையின் முன்னாலும் தனது வெறுப்பை காண்பிக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை.

சந்தியாவின் அருகில் அமர்ந்தவன் சக்தி மருந்து வைத்துக் கொண்டிருந்த சந்தியாவின் கையை பற்றி தன்னருகே இழுத்தான். சக்தி அவனை முறைத்தாள். ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் சந்தியாவின் கை விரலை ஆராய்ந்தான். காய் வெட்டும் போது விரலையும் வெட்டிக் கொண்டாள் என்பதை புரிந்துக் கொண்டவன் சக்தியின் கையில் இருந்த மருந்தை சக்தியின் விருப்பம் இல்லாமலேயே எடுத்துக் கொண்டான்.

சந்தியாவின் விரலுக்கு அவனே மருந்திட ஆரம்பித்தான்.

"ஒரு வேலையை கூட சரியா செய்ய தெரியாதா உனக்கு..? கொஞ்சம் விசையோடு கத்தி பட்டிருந்தா உன் விரலே துண்டாகி இருக்கும்.. உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..? உன்னை நம்பி கொஞ்ச நேரம் தனியா விட கூடாது போல‌‌.. உன்னையே உன்னால சரியா கவனிச்சிக்க முடியல.. உன்னை வச்சிக்கிட்டு நான் என்னதான் பண்றது..?" அவன் குரலில் இருந்த கனிவை கண்ட சந்தியா அசந்து விட்டாள்.

'நடிப்பில் இவனை மிஞ்ச வேறு யாரேனும் உண்டா..? பாட்டிக்கிட்ட என் கையால் சமையல் வேணும்ன்னு கேட்டுக்கும் போதே தெரியாதா எனக்கு எதுவுமே தெரியாதுன்னு..' என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

அவனின் குரலில் இருந்த அக்கறை கண்டதும் சக்தியின் கோபம் இருக்கும் இடம் இல்லாமல் போனது. ஆனால் பொன்னிக்குதான் கோபம் அதிகமானது. இப்படி பாசக்காரனாக இருப்பவனை மதிக்க தவறி விட்டாளே என்று சந்தியா மீது ஆத்திரம் கொண்டாள்.

அவளது விரலுக்கு மருந்திட்டு முடித்தவன் அவளது கையை விட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தான். அவளது பார்வையில் நக்கல் மட்டுமே இருந்தது. அவனது மனதில் இருக்கும் ரணம் நினைவுக்கு வந்தது. பெருமூச்சோடு அவளை விட்டு விலகி எழுந்தான்.

அவனது கனிவான பார்வை இப்போது விஷமமாக மாறி விட்டது.

"பாட்டி இனி இவளை கிச்சனுக்குள்ள விடாதிங்க.. என்னால இவளுக்கு எந்த காயமும் உண்டாக வேண்டாம்.. இத்தனை வருசமா அத்தை கையால சப்பாத்தி சாப்பிட்ட எனக்கு இங்கேவாவது என் பொண்டாட்டி சமைச்ச சாப்பாடு சாப்பிடணும்ன்னு ஆசைப்பட்டது  தப்புதான்.. இனி அப்படி ஏதும் ஆசைப்பட மாட்டேன்.." என்றவன் சந்தியாவை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு நகர்ந்தான்.

சக்தி இனியனை பாசத்தோடு பார்த்தாள். ஆனால் பொன்னி சந்தியாவை வெறுப்போடு பார்த்தாள். 

"அவர் சொல்றது எதையும் கேட்டுகாதிங்க பாட்டி.. இனி நான் சரியா சமைக்க கத்துக்கறேன்.. இனி கவனமா இருக்கேன்.." என்ற சந்தியாவிற்கு தெரியும் பாட்டியை சமாதானம் செய்ய இதை விடவும் வேறு சிறந்த வழி ஏதும் இல்லையென.

தூரத்தில் நடந்துக் கொண்டிருந்த இனியன் அவளின் பதிலை கேட்டு திருப்திக் கொண்டான்.

அவளின் விரலில் அடிப்பட்டது அவனுக்கும்தான் வலியை தந்தது. அவளது காயத்தை கண்டவன் அதற்கு காரணமான தன்னையே திட்டிக் கொண்டான். ஆனால் அவளின் நக்கல் பார்வை அவனது எண்ணத்தை மாற்றி விட்டது. அவளின் திமிருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமென்ற எண்ணம் மேலும்தான் வளர்ந்தது.

இரவு சமையல் அவன் எதிர்பார்த்ததை போலவே படு கேவலமாகதான் இருந்தது. சந்தியா ஒரு வாய் சாப்பிட்டு பார்த்துவிட்டு தோல்வியோடு தலை குனிந்தாள். எப்படியும் வசவு பாடுவார்கள் என எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.

மகேஷ் உணவை வாயில் வைத்ததுமே துப்பி விட்டான்.

"என்ன கருமம் இது..? மல்லி ஏன் இப்படி சமைச்சி வச்சிருக்க.?" என்றான் கோபமாக.

"சந்தியாம்மாதான் சமைச்சாங்க பெரிய ஐயா.." என சொல்லியவள் விலகி நின்றுக் கொண்டாள்.

பொன்னி முதல் வாய் சாப்பிட்ட உடனே கையை உதறிக் கொண்டு எழுந்து விட்டாள். சக்தி சந்தியாவுக்காக சாப்பிட முயன்றாள். ஆனால் அவளாலும் அதை உண்ண முடியவில்லை. ஆனால் அவள் ஏதும் சொல்லவில்லை.

இனியன் மற்றவர்கள் சொன்ன குறையை கூட காதில் வாங்கவில்லை. சந்தியா சமைத்ததை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனை மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

சந்தியா கூட அவனை ஆச்சரியத்தில் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

"உனக்கேன் இந்த வேண்டாத வேலை சந்தியாம்மா..?" என்றான் மகேஷ் பசிக்கும் தன் வயிறை ஒரு கையால் தடவியபடியே.

"அவ மேல தப்பு ஏதும் இல்லப்பா.. நான்தான் அவளை சமைக்க சொன்னேன்.. சாப்பாடு அவ்வளவு மோசம் கூட கிடையாது.." என இனியன் சொல்ல சந்தியா தன் மனதுக்குள் அவனுக்கு சபாஷ் சொன்னாள்.

"உனக்கு உன் மனைவி சமையல் அதிசயமா இருக்கலாம்.. ஆனா எங்களை பட்டினி போட வேண்டிய அவசியம் என்ன..?" என கேட்ட மகேஷ்க்கு பசி வயிற்றை கிள்ளியது.

இனியன் மறுமொழி கூற இருந்த நேரத்தில் வீட்டின் காலிங்பெல் ஒலித்தது.

"நான்தான் சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன்.. நீங்க போய் வாங்கிட்டு வாங்க மல்லி அக்கா.." என்ற இனியன் தன் அப்பாவை பார்த்தான்.

"என் பொண்டாட்டி சமைச்ச சாப்பாட்டை சாப்பிட ஆசைப்பட்டது நான்தான். எனக்கு இந்த சமையல் பிடிச்சிருக்கு.. இதுக்கு மேல அவ ஆசைப்பட்டு சமைச்சாலும் எனக்கு சம்மதமே.. என் பெண்டாட்டி அரளியை அரைச்சி தந்தாலும் எனக்கு சக்கரைதான்.." என்றவன் மல்லி உணவு பொட்டலத்தோடு திரும்பி வந்ததும் "அதை எல்லோருக்கும் பரிமாறிடுங்க அக்கா.." என்றான்.

சந்தியா தன் உணவில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளது தட்டை அவள் முன் இருந்து நகர்த்தி வைத்த இனியன் "மல்லி அக்கா இவளுக்கும் அதையே பரிமாறுங்க.." என்றான்.

இனியன் செய்வது அத்தனையும் நடிப்பு என நினைத்த சந்தியாவிற்கு அவனது இந்த செய்கை மனதை வருத்தி விட்டது. அவள் செய்த சமையல் சுத்தமாக நன்றாக இல்லை. அப்படி இருக்கையில் அதை ஏன் இவன் உண்ணுகிறான் என தெரியாமல் குழம்பினாள் அவள்.

"இதுக்கு மேல எதையும் சமைச்சிடாத சந்தியாம்மா.." என்ற மகேஷ் கடை உணவை சாப்பிட தொடங்கினான்.

சந்தியா வருத்தத்தோடு தலை குனிந்தாள். தன்னால் சமையலை கூட ஒழுங்காக செய்ய முடியவில்லையே என நினைத்தாள். முதல் தோல்வி எதிர்பார்த்ததை விட அதிகமாக வலித்தது.
"அவர் சொல்றதை காதுல வாங்காத சந்தியா. உனக்கு சமைக்க பிடிச்சிருந்தா சமை. நான் சாப்பிடுறேன் அது எப்படி இருந்தாலும்.." என்றான் இனியன் மென்மையாக.

பொன்னி பேரனை பரிதாபத்தோடு பார்த்தாள்.

"சமைக்க ஆசைப்பட்டா அவனுக்கு மட்டும் சமைச்சி கொடும்மா.. எங்களுக்கும் சேர்த்து சமைச்சிடாத.. எனக்கு இன்னும் கொஞ்ச நாள் வாழ ஆசை இருக்கு.." என மகேஷ் கிண்டலாக சொன்னான்.

மகேஷின் வார்த்தைகளால் சந்தியாவிற்கு கண்கள் குளமாகி விட்டது. சமையல் மோசம் என அறிவாள் அவளும். ஆனால் தன் மாமன் இப்படி சொல்வான் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை. தோல்வியின் காயம் இன்னும் அதிகமாக மாறியது‌.  அவளால் அங்கு இருக்கவே முடியவில்லை. உணவு தட்டை நகர்த்தி வைத்து விட்டு எழுந்து நின்றாள்.

"எனக்கு பசிக்கல.. நான் என் ரூமுக்கு போறேன்.." என்றவள் மற்றவர்கள் பதில் சொல்லும் முன்னே அங்கிருந்து சென்று விட்டாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

 

வணக்கம் நட்புக்களே... இதை நான் முதல்லயே சொல்லி இருக்கணும்.. இது ஒரு ஹேட் லவ் ஸ்டோரி.. இதுல பாதி வரைக்குமே ஆணாத்திகம் இருக்கும்.. ஹீரோ பிடிக்கல அதனால கதையும் பிடிக்கலன்னு சொல்லிடாதிங்க.. கதையை கடைசி வரை படிச்சிட்டு மறக்காம உங்க கருத்தையும் சொல்லுங்க.. 

LIKE

COMMENT

SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
01/11/2020 5:05 am  

சர்வாதிகாரம் 7

சந்தியா அங்கிருந்து சென்றது இனியனுக்கு மனதை வருத்தி விட்டது.

"நான் ஏதோ கிண்டலுக்கு சொன்னேன்.. இதை அவ சீரியஸா எடுத்துக்கிட்டாளா..?" என வருத்ததோடு சொன்னான் மகேஷ்.

"அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன்.. நீங்க சாப்பிடுங்க அப்பா.." என்ற இனியன் சாப்பிட்டு முடித்ததும் எழுந்தான். உணவு பொட்டலம் ஒன்றை எடுத்துக் கொண்டு சந்தியாவை தேடி சென்றான்.

சந்தியா அறை மூலையில் அமர்ந்திருந்தாள். கால் முட்டியில் தலை புதைத்து அமர்ந்திருந்தவளுக்கு மனம் முழுக்க சோகம் மட்டுமே இருந்தது.

இவ்வளவு நாளும் இந்த வீட்டின் செல்ல இளவரசி இவள். இதுநாள் வரையிலும் அவளை யாரும் எதிர்த்து பேசியதில்லை. அவள் செய்யும் சிறு சிறு விசயம் கூட பாராட்டைதான் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கையில் இன்று தன் சொந்த மாமனே தன்னை குறை சொல்லி விட்டதில் அவளுக்கு மிகுந்த சோகம். அவளின் ஆசை கோபுரம் அத்தனையையும் உடைத்து விட்டான் இனியன். வீட்டின் செல்ல பெண்ணாக இருந்தவளின் பதவியை பிடுங்கியவன் அவளை அனைவர் முன்னாலும் கோமாளியாக்கி விட்டான். இதையெல்லாம் நினைக்க நினைக்க அவளுக்கு அழுகைதான் வந்தது. ஆனால் அவனின் காரணமாக அழவே கூடாது என மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டதால் தன்னை தானே தேற்றியபடி அமர்ந்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளின் இந்த தேற்றலுக்கும் குறுக்கீடாக அறைக்குள் வந்தான் இனியன்.

சந்தியாவை தேடி வந்த இனியன் சந்தியா அறையின் மூலையில் அமர்ந்திருப்பதை கண்டு அவளருகே வந்தான்.

"இங்கே ஏன் உட்கார்ந்திருக்க..? எழுந்து வந்து சேர்ல உட்காரு.." என அவன் சொல்ல அவனின் கரிசனம் கண்டு மனதுக்குள் சிரித்தாள் சந்தியா.

அவள் எழவும் இல்லை. பதிலும் ஏதும் சொல்லவில்லை. இது இனியனுக்கு கோபத்தைதான் தந்தது.

"என்னை பார்த்தா உனக்கு பைத்தியமா தெரியுதாடி..? மரியாதையா எழு.." என அவன் அதட்டவும் விம்மும் தன் மனதை வெளிக்காட்டாமல் எழுந்து நின்றாள் சந்தியா.

அவளின் கை பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்தவன் அவளை அமரவைத்து விட்டு அவளெதிரே அமர்ந்தான். உணவு பொட்டலத்தை பிரித்தான். உணவை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்.

ஆனால் சந்தியா வாயை திறக்கவில்லை. தன் முன் அமர்ந்திருந்தவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"எதுக்கு இப்படி பார்க்கற..? உன்னை சாப்பிட வைக்க கூட நான் வில்லன் அவதாரம் எடுக்கணுமா என்ன..?" என அவன் புருவம் உயர்த்தி கேட்க அவள் பயத்தோடு அவன் கையிலிருந்த உணவை சாப்பிட்டாள்.

அவன் கையால் சாப்பிட அவளுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் இனியன் இந்த தண்டனையைதான் அவளுக்கு தர விரும்பினான்.

"நானே சாப்பிட்டுக்கிறேன்.." மெல்லிய குரலில் சொன்னவளை நக்கலாக பார்த்தான் அவன்.

"ஏன்..? நான் ஊட்டி விடுறதால உனக்கு என் மேல காதல் வந்துடும்ன்னு பயமா..?" குரல் முழுக்க கேலியோடு அவன் கேட்க சந்தியாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

"உன் சமையல் படு கேவலம் தெரியுமா..? நீ எதுக்குமே உதவாதவ.. இது இன்னைகாவது உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.. குட்டி இளவரசி கனவை கலைச்சிக்கிட்டு நிஜத்தை பாரு.. எங்க அப்பாவும் அம்மாவும் உனக்கு எக்கச்சக்கமா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிட்டாங்க.. அதனாலதான் கட்டிய கணவனை கூட மதிக்காம திமிரோடு திரியற நீ.." அவன் இப்படி திட்டிக் கொண்டே உணவை ஊட்டினான். அதை காதில் வாங்கியபடியே உண்டவளுக்கு உணவு விஷமாகதான் இருந்தது.

"எனக்கு போதும்.." என்றவளை நக்கல் சிரிப்போடு பார்த்தான் அவன்.

"ஏன் டயட் மெயின்டன் பண்றியா..? புருசனையே மதிக்காதவளாச்சே நீ.. டயட் எதுக்கு..? அப்பதான் மத்த ஆண்களை பின்னால சுத்த வைக்க முடியும்ன்னு நினைக்கிறியா..?" அவன் சொன்னதை கேட்டு சந்தியாவிற்கு கோபம்தான் வந்தது. ஆனால் தந்தையின் நினைவில் தன்னால் வெளிகாட்ட இயலாத அவளின் கோபம் கண்ணீராக மாறி கசிந்தது.

இனியன் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான். "சின்ன சின்ன வார்த்தைகள் கூட நம்ம குட்டி இளவரசியின் குட்டி மனசை உடைக்குதா..?" என கேலியாக கேட்டான் அவன்.

சந்தியாவிற்கு அவமானமாக இருந்தது அவன் முன்னால் அழ. ஆனால் தன்னால் இதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாது என்ற விசயம் அவளுக்கு இன்னும்தான் கண்ணீரை தந்தது. ஒற்றை கையால் அவளது முகத்தை நிமிர்த்தினான் அவன்.

"நான் சொன்ன சின்ன வார்த்தைகள் உனக்கு அவ்வளவு வலிக்குதா..? அப்ப எனக்கு வலிக்காதா என்னை பிடிக்கலன்னு நீ சொன்ன வார்த்தைகள்..?" சாந்தமாக அவன் கேட்க அவனின் கண்களை வெறுப்போடு பார்த்தாள் அவள்.

"பிடிக்கலன்னா பிடிக்கலன்னுதான் சொல்ல முடியும்.. எனக்கு உன்னை பிடிக்கல.. உன் அதிகாரம் பிடிக்கல.. உன் ஆணவம் பிடிக்கல.." அவள் ஒவ்வொரு வார்த்தை சொல்லும் போதும் அவனுக்கு ஆத்திரம்தான் அதிகமானது. தனது கோபத்தால் அவளை சேதம் செய்ய விரும்பவில்லை அவன். அதனால் அவளை விட்டுவிட்டு எழுந்து நின்றான்.

உணவை அருகில் இருந்த மேஜையின் மீது வைத்தான். "நான் திரும்பி வரும் முன்னாடி இது எல்லாத்தையும் சாப்பிட்டுடு.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

பைக் சாவியோடு வீட்டின் கதவை திறந்தவனை கண்டு "எங்கே போற இனியா..?" என கேட்டாள் பொன்னி.

"சும்மா வெளியே போறேன் பாட்டி.. சீக்கிரம் வந்திடுறேன்.." என்றவன் வாசலுக்கு வந்து தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.

மூர்த்தி மாந்தோப்பில் இருந்த குடோனின் வாசலில் இருந்த கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். பசி வேறு அவனின் வயிற்றை கிள்ளியது.

தினமும் வீட்டிலிருந்து இவனுக்கு உணவு கொண்டு வரும் வீரய்யா இன்று இன்னமும் வந்து சேரவில்லை. தாமதத்தின் காரணத்தை அறியாமல் வானம் பார்த்து படுத்துக் கொண்டிருந்தான் அவன்.

இனியன் இன்று ஊருக்கு வந்து விட்டதாக மதியம் வீரய்யா சொல்லி சென்றார்.

தன் மருமகன் இப்போது எப்படி இருக்கிறானோ என பார்க்க ஆவல் கொண்டான் மூர்த்தி. குமரனுக்கு தம்பியான அவனுக்கு இதுநாள்வரை தான் ஒரு முன்னால் கைதி என்பது சிறிதும் வருத்ததை தரவில்லை. ஆனால் இனியனின் மாமனாராகி விட்டவனுக்கு தான் செய்த தவறுக்களை நினைத்தும் தான் ஜெயிலுக்கு சென்று வந்ததை நினைத்தும் அவமானமாக இருந்தது.

தன்னால் தன் மருமகனுக்கு கரும்புள்ளி ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என மனதுக்குள் பிராதித்தான் அவன். ஆனால் அண்ணனுக்கு தன்னால் இந்த கரும்புள்ளி ஏற்பட்டு இருக்குமோ என்பதைதான் யோசிக்கவே மறந்து விட்டான்.

வானம் பார்த்துக் கொண்டிருந்தவன் மாந்தோப்பிற்குள் பைக் ஒன்று வரும் சத்தம் கேட்டு கட்டிலை விட்டு எழுந்து நின்றான். அவனின் முன்னால் பைக்கை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் இனியன்.

விளக்கு வெளிச்சத்தில் இனியனை பார்த்த மூர்த்தி அசந்து நின்று விட்டான். தனது மாப்பிள்ளை இவ்வளவு அம்சமானவனாக மாறி விட்டது அவனுக்கு பெருமிதத்தை தந்து விட்டது. என்ன நடை.. என்ன உருவம்.. என்ன கம்பீரம்.. அவனை வியந்து பார்த்தான் மூர்த்தி.

மூர்த்தியின் அருகில் வந்த இனியன் குனிந்து அவனின் காலை தொட்டான். என்னை "ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா.." என்றவனை சட்டென எழுப்பி நிறுத்தினான் மூர்த்தி.

"நூறு வருசம் சந்தோசமா இரு.." என்றவனை பார்த்து புன்னகைத்தான் இனியன்.

"தேங்க்ஸ் மாமா.. வீரய்யாவுக்கு வீட்டுல வேலை அதிகம்.. அதனாலதான் நான் சாப்பாடு கொண்டு வந்தேன்.." என்றவன் தான் வழியில் வாங்கி வந்த ஹோட்டல் உணவை அவனிடம் நீட்டினான்.

"எதுக்கு கடையில கட்டிட்டு வந்திருக்க..? வீட்டுல சமைக்கலையா..?" குழப்பமாக கேட்டான் மூர்த்தி.

"சந்தியா சமைச்சா மாமா இன்னைக்கு.. இன்னைக்கு நான்தான் சமைப்பேன்னு அடம்பிடிச்சி மத்தவங்களை சமைக்க விடாம இவளே சமைச்சா.. சாப்பாடு கொடூரம்தான்.. என்னை தவிர வேற யாராலயும் அதை சாப்பிட முடியல.. அதனால வீட்டுல எல்லோருக்கும் கடை சாப்பாடுதான்.. அதனாலதான் உங்களுக்கும் கடையிலயே கட்டிட்டு வந்துட்டேன்.." என்றவனை பரிதாபமாக பார்த்தான் மூர்த்தி.

"அவ சின்ன பொண்ணுப்பா.. ஏதாவது குறை இருந்தா மன்னிச்சிடு.." சிறு குரலில் அவன் சொல்ல இனியன் கட்டிலில் அமர்ந்து தரையில் இருந்த சிறு கற்களை காலால் உதைத்துக் கொண்டிருந்தான். அவனின் முகத்தில் இருந்த சோகம் கண்டு துணுக்குற்ற மூர்த்தி அவன் அருகே அமர்ந்தான்.

"என்ன ஆச்சிப்பா..?" என்றான் அக்கறையோடு.

பொய் சொல்வதில் பட்டம் பெற்ற இனியன் மீண்டும் தனது திறமைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான். "என்னவோ சரி இல்ல மாமா.. என்னை அவ திரும்பி கூட பார்க்க மாட்டேங்கறா.. அவளுக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா மாமா.. அவ அழகுக்கு நான் சமம் கிடையாது போல.. அனாதையா வளர்ந்த நான் அவளுக்கு தகுதியானவன் இல்லை போல..‌" என்றவன் தலை தலையை கோதியபடி பெருமூச்சி விட்டான்.

அவன் சொன்னதை கேட்டு மூர்த்திக்கு சந்தியா மேல் ஆத்திரமாக வந்தது. சந்தியா இப்படி சொல்லி இருப்பாளா என மூர்த்தி யோசிக்க கூட முடியாத அளவுக்கு இனியன் அவ்வளவு அழகாய் நடித்து இருந்தான்.

"அவ பைத்தியம் மாப்பிள்ளை.. அவ சொல்ற எதையும் மனசுல வச்சிக்காதிங்க.. இவ்வளவு நாளும் உங்க கூட போன்ல கொஞ்சிட்டு இருந்தவளுக்கு இப்ப என்ன வந்துச்சின்னு தெரியல.. நான் நாளைக்கு வந்து அவக்கிட்ட பேசி பார்க்கறேன்.." என அவனுக்கு ஆறுதல் சொன்னான் மூர்த்தி.
இனியன் சோகமாக தலையசைத்தான்.

"உங்களுக்கு சாப்பாடு தந்துட்டு போகதான் வந்தேன் மாமா.. தேவையில்லாம ஏதேதோ பேசிட்டேன்.. அவக்கிட்ட நீங்க ஏதும் கேட்க வேணாம். என் தலையெழுத்து எப்படியோ அப்படியே இருந்துட்டு போறேன் நான்.

அம்மாவையும் அப்பாவையும் இத்தனை வருசமா பிரிஞ்சி வாழணும்ன்னு எனக்கு விதி. அது மாதிரி இப்ப பொண்டாட்டிக்கிட்ட கேவலமா பேச்சு வாங்கணும்ன்னும் விதி.. என் விதி என்னோடு முடியட்டும் மாமா.. நீங்க ஏதாவது பேசி வச்சா அப்புறம் சந்தியா மனசு வருத்தப்படும்.." என்றவன் சோகத்தோடு எழுந்து நின்றான்.

"நான் வீட்டுக்கு கிளம்பறேன் மாமா.. நீங்க பார்த்து பத்திரமா இருங்க.." என்றான்.

அவனை கண்டு மூர்த்திக்கு பரிதாபமாக இருந்தது. அவன் அவனுக்கு சமாதான மொழிகள் கூறும் முன்பே அங்கிருந்து விருட்டென கிளம்பி விட்டான் இனியன்.

தான் பெற்ற பெண் ஏன் இவ்வளவு திமிரோடு இருக்கிறாள் என சந்தியா மீது கோபம் கொண்ட மூர்த்தி அவளுக்கு போன் செய்தான். மறுமுனையில் ஸ்விட்ச் ஆப் என வரவும் அதற்கும் சந்தியா மீதே கோபம் கொண்டான்.

சந்தியா மேஜை மேல் இருந்த உணவை வெறித்து பார்த்தாள். அவளுக்கு அதை உண்ணவே பிடிக்கவில்லை. உணவை எடுத்து கொண்டு போய் கொட்டி விட்டு அறைக்கு வந்தவள் தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்தாள்.

இவனது அதிகாரத்திற்கு தன் தன்மானத்தை அடமானம் வைக்க விரும்பவில்லை இவள். அவனது வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்த நாள் நினைவில் வந்து போனது. நெஞ்சில் ரணமாக இருந்ததை மறக்கவே முடியவில்லை அவளால். அன்று தனது தந்தையை பழி வாங்க தன்னை காதலின் பெயரில் ஏமாற்றியவன் இன்று தன்னை பழி வாங்க என்ன செய்ய போகிறானோ என நினைந்து பயந்தாள் அவள்.

வெகு நேரம் யோசனையில் இருந்தவள் பைக்கின் சத்தம் கேட்டதும் பதறி எழுந்து நின்றாள். கட்டிலை பார்த்தவள் நொடியும் தாமதிக்காமல் தலையணை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

அறை கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வந்து கதவை திறந்தான் மகேஷ்.

அறை வாசலில் தலையணையை நெஞ்சில் அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் சந்தியா. இவள் ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்து இப்படி தலையணையோடு நிற்கிறாள் என்ற குழப்பத்தோடு அவளை பார்த்தான் மகேஷ்.

"என்ன சந்தியாம்மா..?"

"நான் இன்னைக்கு அத்தையோடு தூங்கட்டுமா..?" என்றாள் தயக்கமாக அவள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
SHARE

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
02/11/2020 4:18 am  

சர்வாதிகாரம் 8

வீட்டிற்குள் வந்த இனியன் பைக்கின் சாவியை ஒரு ஓரமாக வீசி விட்டு தனது அறைக்கு சென்றான்.

காலியாக கிடந்த அறையை குழப்பமாக பார்த்தவன் அறையை விட்டு வெளியே வந்தபோது மகேஷின் அறை வாசலில் தலையணையை அணைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் சந்தியா.

"நான் இன்னைக்கு அத்தையோடு தூங்கட்டுமா..?" என கேட்டவளை மகேஷ் ஆச்சரியத்தோடு பார்த்த நேரத்தில் சந்தியாவின் கையை பற்றினான் இனியன்.

மனைவியின் தோளில் கையை போட்டுக் கொண்டு அப்பாவை பார்த்தான்.

"உடனே வந்துடுறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன்.. அஞ்சி நிமிசம் லேட்டாயிடுச்சின்னு கோவிச்சிக்கிட்டு அம்மாவை பார்க்க வந்துட்டா இவ.. இவளை நான் சமாதானம் செஞ்சிக்கிறேன்.. நீங்க போய் தூங்குங்க.." என்றவன் சந்தியாவை தனது அறைக்கு இழுத்து வந்தான்.

அறைக்குள் வந்ததும் அவளது கையை விட்டுவிட்டு கோபமாக அவளை பார்த்தான்.

"உனக்கு என்ன பைத்தியாமாடி..? எதுக்கு இப்ப சின்ன புள்ளை மாதிரி எங்க அம்மா கூட தூங்க கிளம்பின..? இதையெல்லாம் கேட்டா ஊர் சிரிக்கும்‌‌.." என்றான் எரிச்சலோடு.

சந்தியாவிற்கு கண்ணீர் துளிர்த்தது

"நீ சின்ன புள்ளை தனமா நடந்துக்கற போது நான் சின்ன புள்ளை மாதிரி செஞ்சா தப்பா..?" என கேட்டவளை பரிதாபத்தோடு பார்த்தான் இனியன்.

"அதுக்கு நான் என்ன செய்யட்டும்..? நான் சின்ன புள்ளை தனமா நடந்துக்கறதையே உன்னால தாங்கிக்க முடியல.. அப்புறம் எப்படி நான் உனக்கு நிஜமான பிரச்சனைகளை தர முடியும்..? ஒன்னே ஒன்னை மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ.. உன் தைரியம், உன் தாக்குப்பிடிக்கும் திறன், மனசு உடையவதின் கடைசி அளவு எல்லாமே எனக்கு ரொம்ப சரியா தெரியும்.. உன் எல்லையை தொடுவனே தவிர தாண்ட மாட்டேன்.. இது உனக்கு புரியுதா‌..?" என அவன் கேட்க சந்தியாவிற்கு தன்னை நினைத்தே கோபம் கோபமாக வந்தது.

அவன் நிருபிக்க நினைப்பது இதைதான். அவள் எதற்கும் உதவாதவள். அவளால் சிறு பிரச்சனைகளை கூட தாங்க இயலாது. அவனின் தயவு இல்லாமல் அந்த வீட்டில் அவள் எதையும் சமாளிக்க மாட்டாள். அவன் நிரூபிக்க நினைப்பதை புரிந்துக் கொள்ள முடிந்த அவளால் அதை ஏற்றுக் கொள்ளதான் முடியவில்லை.

அவளுக்கு தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் விருப்பம் இல்லை. அவனை வெற்றியடைய வைக்கவும் ஆசையில்லை. அதனால் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு அவனை பார்த்தாள்.

"உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு.. ஆனா நான் என் மனசை மாத்திக்க மாட்டேன்.. நீ ஒரு சீட்டர்.. ஒருமுறை உன் வலையில தெரியாம விழுந்துட்டேன்.. ஆனா இனி அது கனவுல கூட நடக்காது.. நீ என்ன மாதிரி பரிட்சை வச்சாலும் என் மனசை உடைக்கவே முடியாது உன்னால.." என சொன்னவளின் மனதில் 'அதுதான் ஏற்கனவே உடைஞ்சிடுச்சே..' என ஒரு குரல் ஒலித்தது.

இனியன் அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான். எதிர்த்து போராடும் அவளின் குணம் அவனுக்கு பிடித்திருந்தது. எதிராளி சரியாக அமையாவிட்டால் விளையாட்டு எதுவும் சூடு பிடிக்காது என்பதை அறிவான் அவன்.

"ஓகே.. உன்னோட தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கேன் நான்.." என்றவன் சிரிப்போடு அவளின் கன்னம் தட்டினான்.

"ஆனா அதிகமா அழுந்துடாத.. என்னால அதை தாங்கவே முடியாது.." என்றான். அவனை வெறுப்போடு பார்த்தாள் அவள். இந்த மாதிரி வார்த்தைகளால்தான் தான் ஏமாந்து போகின்றோம் என்பதை புரிந்துக் கொண்டு தன்னையே திட்டிக் கொண்டாள்.

"என்னை தொட்டு பேசாத.." அவனது கையை தட்டி விட்டாள்.

"ஏன்..? நான் தொட்டா கரைஞ்சிடுவியா நீ..? இல்ல நான் தொட்டா உன் மனசு கரையுதா..?" என அவன் கேட்க அவளது அனுமதி இல்லாமலேயே அவளது கன்னத்தில் செம்மை படர்ந்தது. அதை கண்டவனுக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி நின்றது.

ஐந்து வருடத்திற்கு முன்பு சிறு தீண்டலுக்கே அதன் முடிவில் அவளையே அவனிடம் தந்துவிட்டாள் அவள். அதை நினைத்து பார்த்தவனுக்கு இப்போது பெரிய ஆச்சரியமாக இருந்தது. அவளின் பலவீனம் அறிந்து அவளை உடைக்க நினைத்தவனுக்கு அந்த பலவீனமே தான்தான் என புரிந்ததும் தனது உறுதி உடைவதை கண்டான். அவளின் மிகப்பெரிய பலவீனம் தான்தான் என புரிந்துக் கொண்டவனுக்கு அத்தனை கோபத்திலும் சிறு சந்தோசமாகதான் இருந்தது.

அவளை விட்டு அவனாகவே விலகி நின்றான்.

"ஓகே.. இனி நான் அவசியம் இல்லாம உன்னை டச் பண்ணல.." என்றவன் அதன்பிறகு எதையும் பேசாமல் கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான்.

அவனால் அதன்பிறகு எதையும் சிந்திக்க கூட முடியவில்லை. உறங்க முயற்சித்து கண்களை மூடினான் அவன்.

சந்தியா கட்டிலின் மறு பக்கத்தில் படுத்தாள். இனி என்ன செய்ய போகிறானோ என நினைத்து பயந்தாள் அவள்.

"சந்தியா.." சில நிமிடங்களுக்கு பிறகு அழைத்தான் இனியன்.

அவன் பக்கம் திரும்பினாள் சந்தியா. கையை கட்டியபடி படுத்துக் கொண்டிருந்தவன் அவளை ஆளை அடிக்கும் பார்வையில் பார்த்துக் கொண்டிருந்தான்.

"எதுக்கு கூப்பிட்ட..?"

"உனக்கு ஏன் என்னை பிடிக்கல..?" உதட்டை கடித்து உணர்ச்சிகளை அடக்கியபடி கேட்டான் அவன்.

"ஏன் பிடிக்கணும்..? என்னை காதல் வசனம் சொல்லி ஏமாத்தியதுக்கா..? இல்ல என் சம்மதம் கேட்காம என் அனுமதி இல்லாமலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கா..?"

"உன்னை ஏமாத்த நினைச்சிருந்தா உன்னை நான் ஏன்டி கல்யாணம் பண்றேன்..?" கசந்த சிரிப்போடு கேட்டவன் நெற்றியில் கையை வைத்தபடி மேற் கூரையை பார்த்தபடி படுத்தான்.

அவனது முகத்தை தன்னை மறந்து பார்த்தாள் சந்தியா. அவனது தோற்றம் எப்போதுமே அவளுக்கு பிடிக்கும். அவனது முகத்தில் முன்பு இருந்த குழந்தை தனம் இப்போது முழுவதுமாக மறைந்து விட்டிருந்தது. கம்பீரமும் கடுமையும், அத்தோடு நக்கல் சிரிப்பும் மட்டுமே இருந்த இந்த முகமும் கூட அவளுக்கு பிடித்துதான் இருந்தது. ஆனால் அவனின் திமிருக்கு ஒரு முடிவு கட்டாமல் தான் தன் மனதின் எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதில்லை என முடிவெடுத்துக் கொண்டவள் கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள்.

காலையில் இனியன் கண் விழித்தபோது அவன் முன்னால் ஈர கூந்தலில் துண்டை சுத்தியிருந்த சந்தியா புன்னகையோடு நின்றிருந்தாள்.

தன் கண்களை நம்ப முடியாமல் கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தான் அவன். கழுத்தின் ஓரங்களில் இருந்த தண்ணீர் துளிகள் அவள் இப்போதுதான் குளித்து இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லின. அவள் கட்டியிருந்த புடவை அந்த காலை நேர வேளையில் அவளை பேரழகியாக்கி காட்டியது.

"என்ன அப்படி பார்க்கற..? டீயை எடுத்துக்க.. எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.." என்றவள் தன் கையிலிருந்த தேனீர் கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

இன்னும் கனவு கலையவில்லை போலும் என்ற எண்ணத்தோடு தேநீர் கோப்பையை கையில் வாங்கி கொண்டான் அவன்.

அவள் சிறு புன்னகையோடு அங்கிருந்து திரும்பி நடந்தாள். நடந்து சென்றவளை பார்த்தபடியே தேனீரை குடித்தவன் குடித்த நொடியில் அதை துப்பி விட்டு தேனீரை பார்த்தான்.

உப்பு கலந்த தேனீர் மொத்த தூக்கத்தையும் கலைத்து சென்று விட்டது.

சந்தியா காலையிலேயே தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது. எத்தனை கரண்டி உப்பை கலந்தாளோ என நினைத்து சிரித்தவன் அதே சிரிப்போடு குளிக்க கிளம்பினான்.

அவன் தனது பணிக்கு செல்ல தயாராகி வெளியே வந்தபோது அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர்.

"சாப்பிடுவிங்க வாங்க.." என இனிப்பான குரலில் அழைத்தாள் சந்தியா.
சாப்பிட வந்து அமர்ந்தவனின் அருகே அமர்ந்தவள் அவன் முன் தட்டை வைத்து உணவுகளை பரிமாறினாள்.

தன் முன் இருந்த உணவை பசியோடு பார்த்தான். "நான்தான் சமைச்சேன்.. உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.." என அவள் சொல்ல அவனது மொத்த பசியும் பறந்து விட்டது.

இருந்தாலும் தன் ஏமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தான். உப்பு கலந்த தேனீரே பரவாயில்லை எனும் அளவிற்கு இருந்தது அந்த உணவு. காரம் அவனது நாக்கை நெருப்பாக சுட்டது.

"இன்னைக்கு எப்படிப்பா இருக்கு சமையல்..? காலையில் நாலு மணியிலிருந்து சமைச்சா.." என்றாள் பாட்டி.

'ரொம்ப உழைச்சி இருப்பா போல..' இனியனுக்கு அவள் மேல் பரிதாபமாக இருந்தது.

"நல்லா இருக்கு பாட்டி.." என அவன் சொல்ல சந்தியா ஆச்சரியத்தோடு அவனை பார்த்தாள்.

"செம டேஸ்ட்.. நீ இன்னும் சாப்பிடலையா சந்தியா..?" அக்கறையோடு கேட்டான் அவன்.

"நான் உங்களுக்கு மட்டும்தான் சமைச்சேன்.. எங்களுக்காக மல்லி அக்கா சமைக்கிறாங்க.. அவங்க சமையலை முடிச்ச உடனே நான் சாப்பிட்டுடுவேன்.." என கண்ணடித்து சொன்னவளை யோசனையோடு பார்த்தான் அவன்.

"அது வரைக்கும் நீ பசியோடு இருப்பியா..? நான் உனக்கு ஊட்டி விடுறேன்.. நீ சாப்பிடு.." என்றவன் அவளுக்கு உணவை ஊட்டினான்.

பாட்டியின் முன்னிலையில் முடியாதென சொல்ல முடியாமல் அவன் ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டாள். காரமான காரம். நாக்கு எரிந்தது. காரம் தொண்டையிலும் பிடித்துக் கொண்டதால் இருமல் வேறு. கண்களில் கண்ணீரோடும், நாக்கின் எரிச்சலோடும் அவள் இரும்ப அவள் முன்னால் தண்ணீர் டம்ளரை நீட்டினான் இனியன். அவசரமாக தண்ணீர் டம்ளரை வாங்கியவள் ஒரே மூச்சில் தண்ணீர் முழுமையும் குடித்தாள். காரம் சற்று மட்டுப்பட்டது. ஆனாலும் எரிச்சல் அடங்கவே இல்லை. நாக்கை கடித்துக் கொண்டு திரும்பியவள் இனியன் அமைதியாக அந்த உணவை சாப்பிடுவதை கண்டு அதிர்ந்து விட்டாள்.

காலையில் தேனீரில் வேண்டுமென்றேதான் உப்பை கலந்தாள். ஆனால் சமையலில் அவள் எந்த குழப்பமும் வேண்டுமென்று செய்யவில்லை. சாப்பாடு கேவலமாக இருக்கும் என்று மட்டும்தான் நினைத்தாளே தவிர அது இவ்வளவு காரமாக இருக்கும் என அவள் நினைக்கவே இல்லை. அவன் ஏதும் சொல்லாமல் சாப்பிடுவது அவளுக்கு மனதை வருத்தியது.

அவன் முன்னால் இருந்த உணவு தட்டை தள்ளி வைத்தாள். இனியன் நிமிர்ந்து அவளை பார்த்தான். கண்ணீரோடு தரை பார்த்தாள் அவள்.

"ஸாரி.. நான் வேணும்ன்னு காரம் போடல.. இதை சாப்பிடாதே.. மல்லி அக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல சமைச்சிடுவாங்க.." என மெல்லிய குரலில் கெஞ்சலாக சொன்னாள் சந்தியா.

"பரவால்லை நான் இதையே சாப்பிடுறேன்.." என்றவனை கோபமாக பார்த்தாள் அவள்.

"ஏன் இப்படியெல்லாம் பண்ற..?"

"எனக்கு தேவை ருசியான சமையல் இல்ல.. என் மனைவி செய்த சமையல்தான்.." என்றவன் தட்டிலிருந்த உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் சொன்ன வார்த்தைகள் சந்தியாவை வியப்பில் ஆழ்த்தி விட்டன. அவள் அவனை வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே உணவை முடித்துக் கொண்டு எழுந்தான் இனியன். அவனின் செய்கையும் பேச்சும் அவளை என்னவோ செய்தது. தவறு முழுக்க அவள் மீது உள்ளது என்பதை போல உணர்ந்தாள். இந்த முறை தவறு அவள் மீது என்றாலும் கூட அதை அவன் தவிர்த்து இருக்கலாமே.. ஏன் இப்படி செய்கிறான்..? என்ற குழப்பத்தில் இருந்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 5 months ago
Posts: 117
03/11/2020 4:20 am  

சர்வாதிகாரம் 9

இனியன் தனது வேலைக்கு கிளம்பினான். அவனின் பின்னால் ஓடினாள் சந்தியா. அவன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு திரும்பி பார்க்க சந்தியா கதவை பிடித்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் தயக்கத்தை கண்டவன் புன்னகையோடு தன் கையை ஆட்டி விடை தந்தான்.

சந்தியா தயக்கத்தோடு டாடா காட்டினாள். ஆனால் அதற்குள் அவன் அந்த வீட்டின் கேட்டை தாண்டி சென்று விட்டான்.

சக்தி தனது வேலைக்கு புறப்பட மகேஷ் தனது தினசரி அலுவல்களை பார்க்க கிளம்பி விட்டான்.

அவர்கள் அந்த பக்கம் சென்றதும் இந்த பக்கம் வந்தான் மூர்த்தி.

''அப்பா.." ஆசையோடு வாசல் வரை சென்று வரவேற்றாள் சந்தியா. ஆனால் அவனோ அவளை முறைப்போடு பார்த்துவிட்டு அவளை தாண்டிக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

'இவர் ஏன் இப்படி கோபமா முறைச்சிட்டு போறாரு..' என யோசித்தபடி அவரை பின்தொடர்ந்தாள் சந்தியா.

''வாங்க மாப்பிள்ளை.. சாப்பிடுவிங்க வாங்க..'' பொன்னி அழைத்தாள். மூர்த்தி சந்தியாவை முறைத்து பார்த்துக் கொண்டே சாப்பிட அமர்ந்தான்.

''உங்களுக்கு இப்பதான் சாப்பாடு கொடுத்து விடலாம்ன்னு இருந்தோம்.. அதுக்குள்ள நீங்களே வந்துட்டிங்க.. சந்தியா இனியனுக்கு சமைச்சா.. அதனால மல்லி சமைக்க லேட் ஆயிடுச்சி.. அதனாலதான் உங்களுக்கு சாப்பாடு கொடுத்து விட லேட்டாயிடுச்சி.." பொன்னி மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னாள்.

மல்லி உணவை பரிமாறினாள். அவள் முன் கையை காட்டி தடுத்தான் மூர்த்தி. "சந்தியா சமைச்சதை பரிமாறுங்க.." என்றான்.

சந்தியா தயக்கமாக அப்பாவை பார்த்தாள். "அப்பா நான் அவருக்காக மட்டும் கொஞ்சமாதான் சமைச்சேன்.."

சமையல் கட்டிலிருந்து திரும்பிய மல்லி "கொஞ்சமா குழம்பு மட்டும்தான் இருக்கு.." என்றவள் சந்தியா வேண்டாமென தடுக்கும் முன்பே மூர்த்திக்கு அதை பரிமாறினாள்.

"அப்பா.. அந்த குழம்பு நல்லாருக்காது.. ப்ளீஸ் சாப்பிடாதிங்க.." கெஞ்சினாள் சந்தியா.

"இதைதானே என் பேரனும் சாப்பிட்டான்.. இப்ப என்ன புதுசா நல்லா இருக்காதுன்னு இப்படி கெஞ்சுற.." பொன்னி சந்தேகமாக கேட்டாள்.

சந்தியா பொன்னிக்கு என்ன பதிலை சொல்வதென புரியாமல் நின்றுக் கொண்டிருந்த வேளையில் மூர்த்தி ஒரு வாய் உணவை சாப்பிட்டு விட்டு தொண்டையை செருமிக் கொண்டே எழுந்தான்.

காரத்தால் கண்களில் நீர்துளிர்த்து. அவன் இரும்புவதை கண்டு மல்லி தண்ணீரை கொண்டு வந்து தந்தாள். அதை அவசரமாக வாங்கி குடித்தவன் சந்தியாவை ஆத்திரத்தோடு பார்த்தான். மூர்த்தியின் முகத்தை பார்த்து சந்தேகம் கொண்ட பொன்னி குழம்பை கொஞ்சமாக ருசித்து பார்த்தாள்.

அவளுக்கும் காரம் நாக்கை சுட்டு விட்டது. அருகிலிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தவள் வாயை ஊதிக் கொண்டு சந்தியாவை பார்த்தாள்.
சந்தியா திட்டை எதிர்பார்த்து தலைகுனிந்து நின்றாள்.

"மல்லி.. உனக்கு வேற வேலை ஏதாவது இருந்தா அதை போய் பாரு.." என்றான் மூர்த்தி.

அவள் தலையசைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்தாள்.

பொன்னி சந்தியாவை திட்ட இருந்த நேரத்தில் சந்தியாவின் கன்னத்தில் பளீர்ரென ஒரு அறையை விட்டான் மூர்த்தி. அவள் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

"தாயில்லா புள்ளைன்னு உனக்கு ஓவரா செல்லம் கொடுத்தது தப்பா போயிடுச்சி.. என்ன சமையல் இது.. இதை எப்படி அவன் சாப்பிட்டானோ தெரியல.. சாதாரண சமையல் கூட உனக்கு சரியா வரலன்னா அப்புறம் பூமிக்கு பாரமா ஏன் இருக்க..?" மூர்த்தியின் ஒவ்வொரு வார்த்தையும் சந்தியாவிற்கு அதிக வருத்தத்தை தந்தது. அவர் தந்த அறையை விட அவரது வார்த்தைகள் அதிகமாக காயத்தை தந்து விட்டது. இதுவரை ஒரு வார்த்தை கடும் சொல்லென சொல்லாதவன் அவன். அவனிடம் அறையையும் வாங்கி திட்டையும் வாங்கியது அவளுக்கு அதிக வருத்தம்.

"எனக்கு அவ்வளவா சமைக்க வராதுப்பா.." தரை பார்த்து சொன்னவளை ஆத்திரம் குறையாமல் பார்த்தார் அவன்.

"கட்டிய புருசன் மேல பாசம் வச்சி சமைச்சிருந்தா எல்லாமே சரியா வரும்.. அவனை தெருவுல சுத்துற பரதேசிக்கு சமமா நினைச்சா இப்படிதான் இருக்கும் குழம்பும்.." மூர்த்தி இப்படி சொல்லவும் சந்தியா அதிர்ச்சியோடு அவரை பார்த்தார்.

"என்னப்பா சொல்றிங்க நீங்க..? நான் அவர் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கேன்.." என சந்தியா சொல்லவும் பொன்னி முகத்தை திருப்பிக் கொண்டாள். மூர்த்தியோ சந்தியாவை அறைய மீண்டும் கையை ஓங்கினான்.

அவள் பயத்தோடு கண்களை மூடவும் அவன் கையை பின்னிழுத்துக் கொண்டு அவளை முறைத்தான்.

"நீ செய்றது எதுவுமே சரி கிடையாது சந்தியாம்மா.. உன் புருசன்தான் இனி உனக்கு எல்லாமே.. அவனை பிடிக்கலன்னு சொல்லவும் அவன் மேல வெறுப்பை காட்டுவதும் ரொம்ப தப்பு.. அவனே இத்தனை வருசம் அனாதையா வளர்ந்தவன்.. அவனை அனாதைன்னு சொல்லுறது ரொம்ப தப்பு.." அவர் திட்டிக் கொண்டே இருந்தார்.

'நான் அவனை பிடிக்கலன்னு சொன்னது இவருக்கு எப்படி தெரியும்..?' என்ற ஒரு யோசனையே அவளின் மனதை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது.

மூர்த்தி திட்ட திட்ட பொன்னிக்கு ஆத்திரம் கொஞ்சம் மட்டுப்பட்டது. அவள் திட்ட நினைத்ததை விட அதிகமாவே திட்டினான் மூர்த்தி.

"பொம்பள புள்ளைன்னா பொறுப்போடு நடந்துக்கணும்.. நீ இன்னமும் சின்ன பொண்ணு கிடையாது.. மகேஷும் சக்தியும் உன் மேல உயிரையே வச்சிருக்காங்க.. அதனாலதான் அவங்க பையனுக்கே உன்னை கட்டி வச்சி உன் மேல பாசம் காட்டிட்டு இருக்காங்க.. அவங்க பையனை நீ அவமானப்படுத்தற விசயம் தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளவு வேதனை படும்ன்னு கொஞ்சமாவது நினைச்சி பாரு.. நல்ல பொண்ணா நடந்துக்கோ.. இனியும் நீ அவனை ஏதாவது மனசு வருந்துற மாதிரி சொன்னா அப்புறம் நீ என்னை எப்பவுமே பார்க்க முடியாத மாதிரி கண்காணாத தேசம் புறப்படு போயிடுவேன்.." என அவர் சொல்ல சந்தியாவிற்கு கண்ணீர் கரை புரண்டது.

தன் பக்க நியாயத்தை காது கொடுத்து கூட கேட்காமல் அப்பா இனியனை மட்டும் நம்புகிறாரே என நினைத்து வருந்தினாள். அவள் கண்ணீரை துடைத்தபடியே அங்கிருந்து சென்றாள். அப்பா அவள் செல்வதை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு பொன்னியின் பக்கம் திரும்பினான்.

"ஏதோ சின்ன பொண்ணு அத்தை.. அவ ஏதாவது தப்பு செஞ்சா கூட சரியா சொல்லி கொடுங்க.. அவளுக்கு இந்த வீட்டாளுங்களை விட்டா வேற யாரும் இல்ல.."

"அவளை பார்த்துக்கதான் நாங்க இருக்கோமே.. நீங்க ஏன் கவலை படுறிங்க. உட்கார்ந்து சாப்பிடுங்க.." என்றவள் அவனுக்கு உணவை பரிமாறினாள்.

இனியனுக்கு பணி சுமையாக ஏதும் இல்லை. அவன் எதிர்பார்த்ததை விடவும் சுலபமாகதான் இருந்தது. மகேஷ் சம்பந்தபட்ட பைலை எடுத்து வந்தவன் இருக்கையில் அமர்ந்து அதை பிரித்தான்.

சாட்சியோடு நிரூபிக்கப்பட்டு அவன் சிறை சென்று வந்த குற்றங்கள் இனியனுக்கு பெருமிதத்தை தந்தது. மகேஷ் எவ்வளவு தைரியமாக குற்றங்களை தன் பாணியில் தட்டிக் கேட்டு உள்ளான் என்பதை புரிந்துக் கொண்டான். ஒருவேளை மகேஷ் மட்டும் காவல்துறையில் பதவி புரிந்து இருந்தால் இந்த வட்டத்தில் ஒரு குற்றம் கூட நிகழ்ந்து இருக்காது என்பதை புரிந்துக் கொண்டான்.

குற்றங்கள் மட்டும் சாட்டப்பட்டு ஆதாரம் இல்லாமல் முடிக்கப்பட்ட வழக்குகள் இனியனுக்கு சிரிப்பை தந்தது. சாமிநாதன், கலை கொலையில் ஆரம்பித்த குற்றங்கள் வரிசையாக வந்துக் கொண்டே இருந்தன. அந்த வழக்குகள் அனைத்தும் சக்தியால் பதியப்பட்டவை. தன் அம்மாவிற்கு அப்பாவின் மேல் எந்த அளவிற்கு கொலைவெறி இருந்துள்ளது என்பதை அறிந்து மனதுக்குள் சிரித்தான்.

சீனுவோடு சம்பந்தபட்ட வழக்கு இனியனை ஒரு நொடி யோசிக்க வைத்தது. அவனால்தான் அம்மா மீண்டும் கத்தி குத்துப்பட்டு ஹாஸ்பிட்டலில் மயங்கி கிடந்தாள் என்பது நினைவிற்கு வந்ததும் அவன் மீது ஆத்திரமாக வந்தது. அப்பா அவனை கொல்லாமல் விட்டதற்காக வருத்தப்பட்டான்.

ரகுவை பற்றி சேகரித்து வைத்திருந்த தகவல்கள் இனியனுக்கு புதிதான ஒரு விசயம். சந்தியாவை அவன் கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்ய இருந்ததும், சக்தியின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியதும் விவரமாக எழுதி இருந்தது. ஆனால் அதற்கு சாட்சி சொல்ல சந்தியா வராததால் அதை வழக்காக கூட பதியவில்லை என்பதையும் தெரிந்துக் கொண்டான்.

முன் பின் பார்த்திராத ரகுவின் மீது கொலைவெறி கொண்டான் இனியன்.

சந்தியாவை அவன் கடத்தியுள்ளான் என்பதையும் அவள் கழுத்தில் தாலி கட்ட இருந்தான் என்பதையும் இனியனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
தனக்கு சொந்தமானவளை எவனோ ஒருத்தன் உரிமை கொண்டாட இருந்துள்ளான் என்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனை கொல்லும் அளவுக்கு கோபத்தில் இருந்தான் இனியன்.

"என்னடா மாப்பிள்ளை பலமான யோசனையில இருக்க போல.." என்றபடி அங்கு வந்தார் குமரன்.

"குட் ஆப்டர்நூன் ஸார்.." எழுந்து வீர வணக்கம் வைத்தான் இனியன்.

"எவ்வளவு பொறுப்பா மேலதிகாரி வந்த உடனே வணக்கம் வைக்கிற.. ஸார்ன்னு கூப்பிடுற.. ஆனா பாரு இவரை.. வேலையில இருக்கற ஒரு அதிகாரிக்கிட்ட என்னடா.. மாப்பிள்ளைன்னு பேசுறதை.." கிண்டலாக சொல்லியபடி குமரனை தொடர்ந்து உள்ளே வந்தான் மகேஷ்.

"அப்பா.. இங்கே என்ன பண்றிங்க..?" ஆச்சரியத்தோடு கேட்டான் இனியன்.

"எனக்கு பொழுது போகல.. அதான் என் மகன் இந்த ஆபிஸ் சேர்ல உட்கார்ந்திருக்கும் போது எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க வந்தேன்.." என்றவன் வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்தான்.

"செமையா இருக்குடா இனியா.. சக்தி மகன் சக்தி மகன்தான்.." என சொன்னவன் குமரன் முகத்தை அஷ்ட கோணலாக்குவதை கண்டு முகம் சுளித்தான்.

"உங்களுக்கு ஏன் பொறாமை..?" என அவன் கேட்க அவர் கலகலவென சிரித்தார்.

"எனக்கு பொறாமையா..? இவன் மேல பொறாமை பட என்ன இருக்கு..? இவன் உன்னை மாதிரி இல்லாம சக்தி மாதிரி இருக்கறதை நினைச்சி நான் சந்தோசப்படுறேன்.." குமரன் சொன்னதற்கு மகேஷ் மறுமொழி கூற இருந்த நேரத்தில் இனியன் பேச ஆரம்பித்தான்.

"நான் எங்க அப்பா மாதிரிதான் மாமா.." என்றவனை இருவரும் ஆச்சரியத்தோடு திரும்பி பார்த்தனர்.

"எனக்கு அடிதடிதான் ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.." என அவன் சொல்ல மகேஷிற்கு அளவுக்கு அதிகமான ஆச்சரியத்தில் உடல் சிலிர்த்தது.

"அடப்பாவி.. உன் மேல சக்தி வச்ச நம்பிக்கை எல்லாத்தையும் இப்படி ஒரு வார்த்தையில காலி பண்ணிட்டியே.." குமரன் அதிர்ச்சியோடு சொன்னான்.

"அதுக்கு நான் என்ன பண்ணட்டும் மாமா..? என் மனசுல பட்டதை நான் சொல்ல கூடாதா என்ன..? எந்த ஒரு தடையும் இல்லாம தப்பு செய்றவங்களை தூக்கி போட்டு மிதிக்கணும்.. எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு.."

"இதை முன்னயே சொல்லி இருக்க கூடாதா..? உனக்கு படிக்க செலவு பண்ண காசாவது மீதி ஆகி இருக்குமே.." குமரன் கேலியாக சொல்ல, மகேஷ் முக வாட்டத்தோடு எழுந்து நின்றான்.

"தப்பு தப்பா யோசிக்காத இனியா.. நீ இப்படி இருக்கறதுதான் சரி.. உனக்கு அடிதடி வேண்டாம்.. உன் அம்மா உன் மேல வச்சிருக்கற நம்பிக்கையை கெடுக்காத.. உன் பேருல ஏதாவது தப்பு வந்தா அப்புறம் அவ உன்னை சும்மா விட மாட்டா.. இந்த விசயத்துல என்னாலயும் கூட உனக்கு உதவ முடியாது.." என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான். குமரன் இனியனை பார்த்து கண்கள் சேரா புன்னகை ஒன்றை அளித்து விட்டு மகேஷை பின்தொடர்ந்து சென்றார்.

"உனக்கு என்னப்பா ஆச்சி..?" மகேஷின் கையை பிடித்து நிறுத்தி கேட்டார் குமரன்.

"இவனுக்கு பைத்தியமா மாமா..? ஏன் இவனுக்கு இப்படியெல்லாம் தோணுது..? ரவுடி ரவுடின்னு என்னை எல்லோரும் கேவலமா பார்க்கறது இவனுக்கு புரியலையா..? நான் நல்லதே பண்ணா கூட தப்பா பார்க்கற சமூகம் இவன் கெட்டதை பண்ணா கூட சரின்னு பார்க்கும்.. இது ஏன் இவனுக்கு புரியல.. கத்தி எடுத்தவனுக்கு கத்தயாலதான் சாவு.. இதை நான் அனுபவத்துல உணர்ந்திருக்கேன். அதே மாதிரி அவனும் பீல் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்.." என்றவனை தன்னோடு அணைத்துக் கொண்டார் குமரன்.

"சின்ன பையன் ஏதோ விளையாட்டா சொல்லிட்டான்.. இதை எல்லாம் பெருசா எடுத்துக்காத.." அவர் ஆறுதல் சொன்னார். அவன் புரிந்துக் கொண்டவனாக தலையை அசைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.

அப்பாவின் மனதை வருத்தபட வைத்ததற்காக இனியன் தன் மீதே கோபம் கொண்டான். இனி முட்டாள் மாதிரி பேச செய்ய கூடாது என முடிவெடுத்துக் கொண்டான்.

அன்றைய நாளில் தன் மனதை வருத்தத்தில் ஆழ்த்திய விசயம் இது மட்டும்தான் என நினைத்தவனுக்கு நிஜ வருத்தத்தை அளிக்க இருந்தாள் சந்தியா.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Page 1 / 5
Share: