Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

காதல் சர்வாதிகாரி  

Page 5 / 10

Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 30

 

பாரன்சிக் ரிப்போர்டை தேவன் ஆராய்ந்து கொண்டிருந்த நேரத்தில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டை ஆராய்ந்தான் இனியன்.

நிறைய இடங்களில் கத்தியின் வெட்டு ஏற்பட்டு இருந்தது அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஆழ வெட்டால் மரணம் ஏற்படாமல் நிறைய ரத்தம் வெளியேறியதாலேயே இறந்துள்ளாள் தேவ சுந்தரி. இனியனுக்கு இந்த இடத்திலேயே முதல் சந்தேகம் வந்து விட்டது.

தனது அம்மாவின் பழைய கேஸை எடுத்து புரட்டினான். ஒரே ஒரு வெட்டுதான். சக்தி பல நாள் மருத்துவமனையில் மயங்கி கிடந்ததையும் அந்த ஒரே வெட்டிற்கே எவ்வளவு ரத்தத்தை அவள் இழந்துள்ளாள் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

"தேவன் இதை கொஞ்சம் பாருங்களேன்.." என சக்தியின் கேஸ் பைலையும் தேவ சுந்தரி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டையும் நீட்டினான் இனியன்.

இரண்டையும் படித்து பார்த்த தேவன் புரியாதவனாக நிமிர்ந்தான்.

"என் அம்மா ஒரு போலிஸ்.. அவங்களோட பாடி பில்ட் ஓரளவுக்கு வலுவாதான் இருக்கும். அவங்களையே தூரத்துல இருந்து கத்தி வீசியே சாகடிக்க இருந்தான் காளி.

அன்னைக்கு தூரத்துல இருந்து இவன் வீசிய கத்திக்கே எங்க அம்மா பலநாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க.. ஆனா தேவ சுந்தரியை பக்கத்துல இருந்து இவன் வெட்டி இருந்தாலும் கூட இவன் ஏன் இத்தனை முறை வெட்டணும்.? ஒரே வெட்டுல தேவ சுந்தரி செத்திருக்கணும் இல்லையா.? அதுவும் இல்லாம கொலை நாலஞ்சி வெட்டுனால கூட ஏற்படல.. பல வெட்டுக்கள்... நின்னு நிதானமா கொஞ்சம் கொஞ்சமா வெட்டியிருக்காங்க.. இவன் வீட்டுக்குள்ள போய் இரண்டே நிமிசத்துல திரும்பிட்டான்.. இந்த கொலையை செய்ய குறைஞ்ச பட்சமா இருபது நிமிசமாவது ஆகியிருக்கும்.." இனியன் சொன்னது கேட்டு குழம்பி போனான் தேவன்.

"ஆனா சார் இதுல பாருங்க.. பாரன்சிக் ரிப்போர்ட் படி அந்த வீட்டுல மூணு பேரோட கை ரேகைகள் மட்டும்தான் இருந்திருக்கு.. தேவ சுந்தரி, மேகலை, காளி.. இவங்க மூணு பேர் மட்டும்தான் அந்த வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க.. அதுவும் காளி கை ரேகை கதவுலயும் ஹால் சுவர் மேலயும் ஹால் ஓரமா இருந்த சோபா மேலயும் மட்டும்தான் இருந்திருக்கு.. கொலை பண்ண யூஸ் பண்ண கத்தி இன்னும் கிடைக்கல.. இவங்க மூணு பேரை தவிர மத்த யாரோட பாத அடியும் கூட வீட்டை சுத்தி இல்ல.. இது கன்பார்ம்மா காளி செஞ்சதுதான்.. அஞ்சி வருசத்துல இவனுக்கு வலு குறைஞ்சி இருக்கும் சார். அதனாலதான் நிறைய முறை வெட்டி தேவ சுந்தரியை கொன்னிருக்கான்.. இல்லன்னா ஸ்லோ மர்டரா இதை பிளான் பண்ணி இருப்பான்.." என்றான் தேவன்.

"நீங்க சொல்றபடியே வந்தாலும் இவனுக்குதான் வலு குறைஞ்சிடுச்சே.. இல்லன்னா ஸ்லோ மர்டரா இருந்தாலும் கூட அப்புறம் எப்படி தன் மேல் ரத்தமே தெறிச்சி விழாம இரண்டு நிமிசத்துல அத்தனை முறை அவங்களை வெட்டிட்டு கத்தியையும் ஒளிச்சி வச்சிட்டு அவன் வெளியே வந்திருப்பான்.?" தனது சந்தேகத்தை கேட்டான் இனியன்.

"அதான் எனக்கும் தெரியல சார்.. வேற யாராவது வீட்டுக்குள்ள இருந்து உதவி செய்யாம கொலை செஞ்சிருக்க வாய்ப்பு இல்லன்னு நினைக்கிறேன் சார்.."

"எனக்கென்னவோ வேற எவனாவதோ அங்கே வந்து இந்த கொலையை பண்ணிட்டு பின் கதவு வழியாகவோ இல்ல மாடி வழியாகவோ இல்ல ஜன்னல் வழியாகவோ இல்ல சிசிடிவி கேமரா கண்காணிக்காத இடமா பார்த்தோ தப்பிச்சிருப்பானோன்னு சந்தேகம்.."

"ஆனா இவங்க மூணு பேரை தவிர வேற யாரோட கை ரேகைகளும் அங்கே இல்லையே.?"

"கொலைக்காரன் கிளவுஸ் போட்டுட்டு இருந்திருப்பான் தேவன்..‌ காளியோட பிரண்ட் ராமனை பிடிச்சாச்சா தேவன்.?"

"ஆள் காணம் சார்.. கண்டுபிடிச்சதும் உடனே தகவல் தரதா குமரன் சார் சொல்லி இருக்காங்க.."

"காளியை விசாரிக்கலாம் வாங்க.. அவன்கிட்ட இருந்து க்ளூ கிடைக்கலாம்.." என்றவன் காளி இருந்த செல்லை நோக்கி நடந்தான்.

"ஏய்.. எழுந்திரு.. இதென்ன உன் மாமியார் வீடா..? ஹாய்யா தூங்கிட்டு இருக்க.." என்று காளியை தோளில் தட்டி எழுப்பினான் தேவன்.

காளி கையை ஊன்றி எழுந்து அமர்ந்தான்.

"நான் எங்கே சார் தூங்கினேன்.? இவங்க அப்பா அடிச்ச அடியில உடம்பு அங்கங்க வீங்கி போச்சி.. நானே வலி தாங்காம சும்மா படுத்துட்டு இருக்கேன்.." என்றவன் இனியனை கண்டதும் வழக்கம்போல பம்ம ஆரம்பித்தான்.

"நீ அந்த வீட்டுக்கு பூசாரி வேசத்துல திருடத்தானே போன.. அப்புறம் ஏன் உடனே திரும்பி ஓடி வந்த.?" இனியனின் கேள்வியே காளிக்கு நடுக்கத்தை தந்தது.

"முதல்லயே கேட்டிருக்க வேண்டிய கேள்வியை கடைசியா கேட்கறோம் சார் நாம.." என்றான் தேவன்.

"எனக்கு எதிரி வெளியே எங்கேயும் இல்லய்யா.. கூடவேதான்ய்யா உன் ரூபத்துல இருக்கு.. இது எனக்கு முதல் கேஸ்ய்யா.. கொஞ்சம் அப்படி இப்படிதான்ய்யா இருக்கும்.. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் வச்சி செய்யாதய்யா.." என்ற இனியன் காளி பக்கம் அனல் கக்கும் விழிகளோடு திரும்பினான்.

"ஏன் உடனே திரும்பி வந்தன்னு சொல்லு.." என்றான் அதட்டலாக.

"அ.. அங்கே தேவ சுந்தரி கொலை செய்யப்பட்டு இருந்தாங்க சார்.. அதான் பயந்து ஓடி வந்துட்டேன்.."

"அதுக்கேன்டா இரண்டு நிமிசம் ஆகுது.?" அவனது கன்னத்தில் ஒரு அறையை விட்டு கேட்டான் தேவன்.
உடனே இனியன் பக்கம் திரும்பி "எப்படி சார் நம்ம இம்ப்ரூவ்மென்டு.?" என்றான்.

இனியனுக்கு நெற்றியில் அடித்துக் கொள்ளாத குறை.
"நான் காலிங்பெல் அடிக்கும்போது யாரும் அந்த கதவை திறக்கல சார்.. அதனால தயங்கி தயங்கிதான் உள்ளே போனேன்.. கதவு திறந்தா பார்க்கற இடத்துல பாடி இருந்திருந்தா நான் கதவை திறந்தப்பவே ஓடி வந்திருப்பேன். ஆனா பாடி ஒரு ஓரமா சோபா பின்னாடிதானே இருந்தது.? நானே ரத்தத்தை பார்த்து பயந்து போய் எல்லா இடத்தையும் நோட்டம் விட்டு சோபா பின்னால தேவ சுந்தரி பாடியை பார்த்ததும் பயத்துல கீழே விழுந்து பதறியடிச்சி எழுந்து ஓடி வந்தேன்.. அந்த கொலை பழி என் மேல விழும்ன்னு தெரியும்.. ஏனா உங்களுக்கு ஆதாரம் இருந்தா போதுமே.. உண்மை தேவையில்லையே.. அதான் பயந்து போய் ஓடி ஒளிஞ்சிக்கிட்டேன்.. அந்த பரதேசி ராமன் மட்டும் கையில கிடைச்சானா மிதிச்சே கொன்னுடுவேன்.. திருட்டுன்னு சொல்லி என்னை கொலை கேசுல மாட்டி விட்டுட்டான் பாவி பையன்.."

தேவன் இனியனின் அருகே வந்தான். "இவன் நம்மளை விட புத்திசாலியா இருக்கான் சார்.. ஆதாரம் மட்டும்தான் நம்மகிட்ட இருக்கு‌.. ஆனா உண்மையை எங்கே சார் போய் தேடுறது.?" என்றான் ரகசிய குரலில்.

"நீ எனக்கு மட்டும் எதிரி இல்லய்யா.. மொத்த டிபார்ட்மெண்டுக்குமே எதிரி.. அவன் சொன்ன விசயத்தை கவனிச்சியாய்யா..? பாடி சோபா பின்னாடி இருந்திருக்குன்னு இவன் சொல்றான்.. ஆனா நாம பார்க்கும்போது பாடி நடு ஹால்லதானே இருந்தது.?" என்றான் இனியன்.

"ஆமா சார்.. கொலை முழுசா முடியும் முன்னாடி இவன் அங்கே போயிட்டான்னு நினைக்கிறேன் சார்.." என தேவன் சொன்ன நேரத்தில் அவனது கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடந்தான் இனியன்.

"அந்த சிசிடிவி ரெக்கார்டை பிளே பண்ணுங்க.." என்றவன் தன் கையிலிருந்த பைலை புரட்டினான்.

தேவ சுந்தரி வீட்டின் முன் இருந்த சிசிடிவியில் ரெக்கார்ட் ஆனவை திரையில் ஓடியது. அதையே விழி அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இனியன் ஒரு இடம் வந்ததும் "இதே இடத்துல நிறுத்துங்க.." என்றான்.

"தேவன் இங்கே பாருங்க அடுத்த சறுக்கல்.. காளி அந்த வீட்டை விட்டு வெளியே ஓடிய நேரம் கடந்து ஒரு மணி நேரம் கழிச்சிதான் கொலையை பத்திய தகவல் போலிஸ்க்கு வந்திருக்கு.. போஸ்ட் மார்ட்டத்துல காளி வீட்டுக்குள்ள போகும் அரை மணி நேரம் முன்னாடியே தேவ சுந்தரி செத்து போயிருக்கணும்ன்னு ரிப்போர்ட் வந்திருக்கு.. கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம்.. இது சாதாரணம் கிடையாது.. அந்த டைம்ல ஐம்பது கொலை செய்யலாம்.. ஆனா இது ஏன் இவ்வளவு லேட்டா தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கு.?" என்றான் தாடையை தடவியபடி.
தேவன் தனக்கு தோன்றியதை சொல்ல நினைத்த நேரத்தில் அவனது போன் ஒலித்தது. எடுத்து பேசியவனின் முகம் சட்டென மாறி போனது.

"சார்.. தேவ சுந்தரி வீட்டுல இருந்துதான் போன்.. அவங்க என்னத்தையோ கண்டுபிடிச்சி இருக்காங்களாம்.. நம்மள உடனே வர சொல்றாங்க.. அநேகமா கேஸ்க்கான ஆதாரமாதான் இருக்கும்.. நம்ம கேஸ் உடனே முடிய போகுதுன்னு நினைக்கிறேன் சார்.." என்றவன் குஷியோடு சொன்னான்.

அவர்கள் இருவரும் அவசரமாக கிளம்பி அங்கே வந்த போது அந்த வீட்டில் இருந்த அனைவரும் பேயறைந்தது போல பயந்து போய் நின்றிருந்தனர்.

"சார் இந்த ரூம்தான்.." மாடியிலிருந்து ஒரு குரல் கேட்டது.

இருவரும் அந்த அறைக்கு வந்தபோது அந்த அறை தாறு மாறாக இருந்தது. அறையின் வாயிலில் ஒரு சிவப்பு சட்டைக்காரன் பதட்டத்தோடு நின்றுக் கொண்டிருந்தான்.

"அங்கேதான் சார்.." அலமாரியை கை காட்டினான் சிவப்பு சட்டைக்காரன்.

இருவரும் சென்று அலமாரி கதவை திறந்தனர். திறந்த உடனே ரத்த வாடை குப்பென தாக்கியது. அலமாரியின் கீழ் அடுக்கில் ரத்த கறையோடு கூடிய கத்தி இருந்தது.

தேவன் கைக்குட்டை உதவியோடு அதை எடுத்து கவரில் பத்திரப்படுத்திய நேரத்தில் அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டான் இனியன்.

மொத்த அறையும் செல்வத்தால் செதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அனைத்துமே மிக சிறந்த வேலைப்பாடுகளால் நிறைந்த பொருட்களே. தேவ சுந்தரியின் அறை இது என அவன் நினைத்த நேரத்தில் அந்த அறையின் ஒரு சுவரில் மேகலை புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"இது யாரோட ரூம்.?" சந்தேகமாக கேட்டான் இனியன்.

"மேகாவுடையது சார்.." என்றான் சிவப்பு சட்டைக்காரன்.

இனியனும் தேவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "மேகலை.." இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

"கத்தி இவளோட ரூம்லதான் இருக்கு சார்.. நான் அப்பவே சொன்னேன் 'கை ரேகைகள் மூணு பேரோடது மட்டும்தான் இருக்கு.. வீட்டுல உள்ளவங்க உதவி செய்யாம வெளி ஆள் கொலை பண்ண முடியாது'ன்னு.. ஆனா வீட்டுல இருந்தவளேதான் கொலையை பண்ணியிருக்கா.. நீங்க சொன்னது எல்லாம் ஒத்து போறது மேகலையோடு மட்டும்தான் சார். இவதான் வலு இல்லாம நிறைய முறை தேவ சுந்தரியை வெட்டி இருக்கா.. அந்த பாடியை ஏதாவது செய்யலாம்ன்னு நினைக்கும் முன்னாடி அதை காளி பார்த்துட்டத்தால பூசாரிதான் கொன்னான்னு சாதிச்சிட்டா.." என்று தனது சந்தேகத்தை சொன்னான் தேவன். ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள இனியனுக்கு மனம் வரவில்லை
சட்டென வீட்டின் காலிங் பெல் சத்தமாக ஒலித்தது. இனியன் திடுக்கிட்டு போய் சுவற்றில் இருந்த காலிங் பெல் ஸ்பீக்கரை பார்த்தான்.

"காளி அத்தனை முறை காலிங் பெல் அடிச்சும் இவ ஏன் எழுந்து வந்து பார்க்கல.? ஏனா இவதான் கொலையே பண்ணி இருக்கா.‌." என்று தேவன் சொல்ல அவள் இப்போது தன் வீட்டில்தான் உள்ளாள் என்பது இனியனுக்கு நினைவுக்கு வந்தது.

Word count 1057

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 31

தேவ சுந்தரி வீட்டின் காலிங்பெல் மீண்டும் ஒலித்தது.
 
"இந்த கொலையை அவதான் பண்ணி இருப்பான்னு எல்லோரும் சொல்லும் போது கூட நான் நம்பவே இல்ல சார்.. ஆனா அவ ரூமை க்ளீன் பண்ணும்போது கிடைச்ச இந்த கத்தியை பார்த்த பிறகுதான் அவ யாருன்னு தெரியுது.." என சிவப்பு சட்டைக்காரன் சொல்ல இனியனுக்கு குப்பென தாக்கியது அதிர்ச்சி.

"அவதான் கொலை பண்ணி இருப்பான்னு எல்லோரும் சொன்னாங்களா.? ஆனா ஏன்.?" என்றான் தன் பதட்டத்தை மறைத்தபடியே.

"அவளை எங்க பெரியம்மா இங்கே கூட்டி வந்ததே வீட்டு வேலை செய்யதான் சார். ஆனா இந்த ரூமை பாருங்க.. வேலைக்காரியோட ரூம் மாதிரியா இருக்கு.. அவ ஒரு பச்சோந்தி சார்.. ஒரு நாகம் போல.. எப்ப எப்படி மாறுவான்னும் தெரியாது.. யாரை எப்படி மயக்குவான்னும் தெரியாது.. அவ இங்கே வந்த கொஞ்ச நாளுலயே தன் பச்சோந்தி குணத்தால பெரியம்மாவையும் மயக்கி வச்சிக்கிட்டா. கொஞ்ச நாளுல தன்னோட பசங்களை கூட பெரியம்மா மறந்துட்டாங்க.. எங்க பெரிய அண்ணன் ஃபோன்ல தினமும் புலம்புவான் சார். 'அம்மா என்கிட்ட ஃபோன்ல கூட பேச மாட்டேங்கிறாங்க.. அவங்க எங்களை சுத்தமா மறந்துட்டாங்க.. நாங்க ஃபோன் பண்ணாலும் மேகாதான் ஃபோனை எடுக்கறா.. அம்மாக்கிட்ட கொடுன்னு சொன்னாலும் கூட கொடுக்காம ஃபோனை இவளே கட் பண்ணிடுறா.. இவ வந்ததிலிருந்து அம்மாவுக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கற தூரம் அதிகமாகிட்டே வருது'ன்னு சொல்வான் சார்.. இவங்களை பார்க்க போன மாசம் எங்க இரண்டு அண்ணனுங்களுமே வந்தாங்க சார்.. ஆனா கடைசியில பெரிய சண்டை ஆயிடுச்சி.. மேகா மேகான்னு இவங்க நொடிக்கு நூறு தரம் கொஞ்சியது அண்ணன்ங்களுக்கு சுத்தமா பிடிக்கல.. 'பெத்த பசங்க முன்னாடி இருக்கும் போது கூட எவளோ ஒருத்தி கூடவே பேசிட்டு இருக்கிங்களே'ன்னு இரண்டு பேரும் கத்திட்டாங்க சார்.. சண்டை பெருசாகி அம்மா அவங்க இரண்டு பேரையும் 'என் வீட்டை விட்டு போங்க'ன்னே சொல்லிட்டாங்க. அண்ணன்களும் கோபத்தோடு கிளம்பி போயிட்டாங்க.. ஆனா இவங்க அடுத்த வாரத்துலயே தன் சொத்து முழுசையும் மேகா பேருக்கு மாத்துறதா சொல்லிட்டாங்க.. 'இது சரி கிடையாது அம்மா.. நாங்க வந்து பிறகு பார்த்துக்கலாம்'ன்னு இரண்டு பேரும் சொன்னாங்க.. ஆனா இரண்டு நாளைக்கு முன்னாடி மொத்தத்தையும் மேகா பேருக்கே பெரியம்மா எழுதிட்டாங்க.. அவ ஒரு பிசாசு சார். எங்க பெரியம்மாவை பிரைன் வாஷ் பண்ணி சொத்து எழுதி வாங்கிட்டு கொன்னுட்டா.. தன் வேசத்தால தாயையும் பிள்ளைகளையும் பிரிச்சவ சொத்துக்காக கொலையையும் பண்ணிட்டா சார்..‌ அவளை தேடி கண்டுபிடிச்சி ஜெயில்ல போடுங்க சார்.." என்றான் சிவப்பு சட்டைக்காரன்.

"இந்த ரூம்ல எதையும் டச் பண்ணாதிங்க.. பாரன்சிக் ஆபிசர்ஸை வர சொல்றோம்.." என்ற தேவன் இனியனின் கை பிடித்து அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.

"உடனே போய் அந்த பொண்ணை அரெஸ்ட் பண்ணிடலாம் சார்.." என்றான் அவன்.

இனியன் குழப்பத்தோடே தேவனின் அருகே அமர்ந்தான்.

காரை ஓட்டிய தேவன் "என்ன சார் யோசனை.?" என்றான்.

"ஒரே குழப்பமா இருக்கு தேவன்.. அந்த பொண்ணுதான் கொலை பண்ணி இருப்பான்னு எனக்கு தோணவே மாட்டேங்குது.."

"அந்த பொண்ணு மேல உங்களுக்கு கிரஷ் ஏதும் வந்துடுச்சா.?" தேவன் இப்படி கேட்கவும் அதிர்ச்சியோடு அவனை பார்த்தான் இனியன்.

"யோவ்.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சிய்யா.." என்றான் அவசரமாக.

"கல்யாணமான ஆண்களுக்கு கிரஷ் வர கூடாதா என்ன..?" என கேட்டவன் இனியன் தன்னை முறைப்பதை கண்டு "சார் அந்த பொண்ணு ரூம்ல கொலை செய்ய பயன்படுத்திய கத்தி இருக்கு.. காலிங் பெல் சத்தம் காது பிளக்கற மாதிரி இருந்தும் இவ கதவை திறக்கல.. கொலை நடந்து ஒன்னரை மணி நேரம் கழிச்சிதான் தகவல் சொல்லி இருக்கா.. அப்படி ஒரு கொலை ஹால்ல நடக்கும்போது அவளுக்கு இது தெரியலன்னு சொல்றது கூட நம்பலாம். ஆனா ஒன்னரை மணி நேரமா அந்த கொலையை பார்க்கலன்னு சொன்னா எப்படி நம்ப முடியும்.? சொத்துக்காகவே காத்திருந்து கொலை பண்ணி இருக்கா..‌ தான் செஞ்ச கொலை தன் மேல விழ கூடாதுன்னு இவளேதான் ராமன் மூலமா காளியை இதுல இழுத்து விட்டிருப்பா.." என்று தனது முடிவை சொன்னான்.

இனியன் கண்களை மூடியபடி சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். மேகலையின் அழுத முகம் கண்ணில் வந்து போனது.

எங்கேயோ ஏதோ ஒன்றை தவற விட்டதை போல இருந்தது.
சந்தியா சமையலறையில் இருந்தாள். மல்லியிடம் கேட்டு சரியான முறையில் பாயாசம் செய்வது எப்படி என கற்றுக் கொண்டிருந்தாள்.

"உங்களுக்கு சமைக்க தெரியாதா.?" என ஒரு குரல் கேட்கவும் சந்தியா திரும்பி பார்த்தாள். சமையலறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தாள் மேகலை.

"எங்க சந்தியாம்மா சின்ன புள்ளையிலிருந்து கிச்சன் பக்கமே வந்தது இல்ல.. இப்ப சின்ன தம்பிக்காக புதுசா கத்துக்கறாங்க.." என்று அவளுக்கு பதிலை சொன்னாள் மல்லி. சந்தியா முகம் நாணத்தால் சிறிது சிவந்தது. அவளது புன்னகை குறையாத முகம் மேகலைக்கு சிறு பொறாமையை தந்தது.

"ஓ.. நான் சின்ன பொண்ணா இருக்கும் போதிருந்து சமைக்கிறேன்.." என்றபடி உள்ளே வந்தாள் மேகலை.

அவளது குரலில் இனம் புரியாத சோகம் இருந்தது.

"என்ன செய்யறிங்க.?" என்றாள் அருகில் வந்து நின்று.

"பாயாசம்.." என்று சந்தியா சொன்ன அதே வேளையில் சக்தி அங்கு வந்தாள்.

"அதுக்குள்ள ஏன் வந்துட்டிங்க அத்தை.? ஸ்டேசன்ல வேலை ஏதும் இல்லையா.?" சக்தியின் காவல் உடையை பார்த்தபடி கேட்டாள் சந்தியா.

"இந்த வீட்டுலதான்ம்மா வேலையே.." என்றவள் மேகலையின் அருகே வந்து அவளது கையில் விலங்கை பூட்டினாள்.

மேகலை அதிர்ச்சியோடு சக்தியை பார்த்தாள்.

"என்னை ஏன் அரெஸ்ட் பண்றிங்க மேடம்.?"

"தேவ சுந்தரியை கொலை பண்ண காரணத்துக்காக உங்களை அரெஸ்ட் பண்றோம் மேகலை.." என்றவள் அவளை முதுகில் கை வைத்து வெளியே நடத்தி வந்தாள்.

சந்தியா அதிர்ச்சியோடு அவர்களின் பின்னால் ஓடினாள்.

"நான் எந்த கொலையும் செய்யல மேடம்.. நான் ஏன் எங்க சித்தியை கொல்ல போறேன்.? என்னோட ஒரே சொந்தம் அவங்க மட்டும்தான். அவங்களை கொலை செய்ய எனக்கு என்ன பைத்தியமா.?" மேகலையின் கண்களில் கண்ணீர் உடனடியாக திரண்டு விட்டது.

"எல்லா ஆதாரமும் உங்களுக்கு எதிரா இருக்கு மேகலை.. நீங்கதான் கொலைகாரின்னு ஒத்துக்கிட்டா எங்களுக்கு வேலை முடிஞ்சிடும்.." அந்த வீட்டின் ஹாலில் நின்றிருந்த தேவன் இதை சொன்னான்.

அவனருகில் நின்றிருந்த இனியன் இன்னும் தன் யோசனையிலேயே இருந்தான்.

இனியனின் அருகே ஓடினாள் மேகலை. விலங்கிட்ட தன் கையால் அவனது கையை பற்றினாள்.

"சார் நீங்களாவது என்னை நம்புங்க சார்.. நான் அப்பாவி சார்.. என் மேல எந்த தப்பும் இல்ல.." இனியனின் கையை பிடித்தபடி கெஞ்சினாள் அவள்.

இனியன் சிலையாகவே நின்றான்.

"உங்க அப்பாவி தனத்தை கோர்டுல சொல்லுங்க மேகலை.." என்ற தேவன் சக்தியை பார்க்க, அவள் தலையசைத்து விட்டு அவளை தன்னோடு அழைத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

தேவன் இனியனின் கை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே நடக்க ஓடி வந்து இனியனின் கையை பற்றினாள் சந்தியா.

இனியனும் தேவனும் நின்றனர்.

"அந்த பொண்ணு பாவம் இனியா.. எப்படி அழறா பாரு.. அவளை விட்டுடேன்.." என்றாள் கெஞ்சலாக.

"மேடம் அவ கொலைக்காரி.. அவளை பார்த்து நீங்க பயப்படணுமே தவிர பரிதாபப்பட கூடாது.." என்றான் தேவன்.

இனியன் சந்தியாவின் கன்னத்தில் தன் உள்ளங்கையை பதித்தான்.

"அந்த பொண்ணு  தப்பு செய்யாதவளா இருந்தா கோர்டே அவளை விடுதலை பண்ணிடும்.. நீ இதை பத்தி யோசிக்காம உன் ஃபார்ம்க்கு கிளம்பு.." என்றான்.
அவனது கையின் மீது தன் கையை பதித்த சந்தியா "நான் இன்னைக்கு பார்ம்க்கு போகல.. பாயாசம் செய்ய கத்துட்டு இருந்தேன்.." என்றாள் சிறு வெட்க குரலில்.

"மேகலை உண்மையை ஒத்துக்கிட்டா எங்க முதல் கேஸ் சக்சஸ் ஆகிடும்.. அப்புறம் பாயாச விருந்து தாராளமா சாப்பிடலாம்.. அதை பிரிட்ஜ்ல பத்திரப்படுத்தி வைங்க.‌. சார் சாயங்காலம் வந்து சாப்பிடுவாரு.. இப்போதைக்கு சார் கொஞ்சம் பிஸி.." என்ற தேவன் இனியனை இழுத்துக் கொண்டு காருக்கு நடந்தான்.

ஆபிஸ்க்கு திரும்பும் வழியில் தேவன் ஆச்சரியத்தோடு "ஒரு கொலைக்காரியை பார்த்து பயப்படாம அவளுக்கே வக்காலத்து வாங்கறாங்களே.. உங்க வொய்ப்க்கு ரொம்ப தைரியம் சார்.." என்றான்.

இனியன் சிரித்தான்.

"எங்க தாத்தா சாதி பிரச்சனைகள் செஞ்சவரு.. அவளோட அப்பா எங்க தாத்தாவுக்கு கையாளா இருந்து அவர் கை காட்டிய ஆளையெல்லாம் கை கால் உடைச்சி விட்டவரு.. எங்க அப்பா கட்டப்பஞ்சாயத்து ரவுடி.. எங்க அம்மா போலிஸ். நானும் போலிஸ்காரன்.. அப்புறம் எதுக்குயா அவ இதுக்கெல்லாம் பயப்பட போறா.?" என்றவன் மீண்டும் மேகலையின் நினைவில் மூழ்கினான்.

சக்தி பல முறை விசாரித்தும் கூட மேகலை தான்தான் கொலைக்காரி என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. வனஜா மேகலைக்கு இரண்டு மூன்று அறைகளை வேறு தந்து விட்டாள். அது இனியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"அவளை அடிக்காம விடுங்க ஆன்டி.." என்று வனஜாவிடம் சொன்ன இனியன் மேகலையின் முன்னால் சென்று நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தான்.

"உண்மையை சொல்லும்மா.. உனக்கு கிடைக்கற தண்டனை குறையவாவது நாங்க ஏற்பாடு பண்றோம்.." என்றான் இனியன்.

'எதுக்கு இவன் குழந்தைக்கிட்ட மிட்டாய் காட்டி பதில் கேட்கற மாதிரி இவக்கிட்ட கொஞ்சுறான்.?' என குழம்பி போனாள் வனஜா.

"சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணல சார்.." என்று அழுத்தம் திருத்தமாக சொன்னாள் மேகலை.

"அப்படின்னா நான் கேட்கற கேள்விகளுக்கு பதிலை சொல்லு.. பாடியை பார்த்து எவ்வளவு நேரம் கழிச்சு போலிஸ்க்கு சொன்ன.?" தனது முதல் கேள்வியை கேட்டான் இனியன்.

"அப்பதான் சார் நான் என் ரூமை விட்டே வெளியே வந்தேன். வந்து பார்த்தா ஹால்ல எங்க சித்தி வெட்டுப்பட்டு இருந்தாங்க.. பக்கத்துல போய் அவங்களை உலுக்கி பார்த்தேன். ஆனா அவங்க ஜில்லுன்னு இருந்தாங்க.. பயந்து போய் பக்கத்துல இருந்தவங்களை கூட்டி வந்தேன்.. அவங்கதான் பார்த்துட்டு எங்க சித்தி செத்துட்டாங்கன்னு சொன்னாங்க.. அவங்களேதான் போலிஸ்க்கு ஃபோன் பண்ண சொன்னாங்க.. நானும் உடனே போலிஸ்க்கு ஃபோன் பண்ணிட்டேன்.." அழுதபடியே சொன்னாள் அவள்.

"ஆனா நீ போலிஸ்க்கு சொல்லும் ஒன்னரை மணி நேரம் முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க.. அதுவுமில்லாம தலைவலியோடு படுத்திருந்த உனக்கு பூசாரி வந்து காலிங்பெல் அடிச்சது கேட்கல.. ஆனா பூசாரிதான் கொன்னுட்டான்னு மட்டும் தெரியும்.. இது எப்படி.?" என்று குறுக்கு கேள்வி கேட்டான் தேவன்.

"அ.. அது.." மேகலை பதில் சொல்ல திணறுவதை கண்டு தனது கேள்வி திறனுக்கு சபாஷ் சொல்லிக் கொண்டான் அவன்.

"அது மட்டுமில்ல.. தேவ சுந்தரியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உங்க அலமாரியில இருந்துதான் கிடைச்சது.." என்று இனியன் சொல்ல அவள் முகம் பேயறைந்தது போல மாறி போனது.

Word count 1073

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 32

 

மேகலை பயத்தோடு இனியனை பார்த்தாள்.

"சார் நீங்களாவது நான் சொல்வதை நம்புங்க சார்.." என்றாள் கரகரத்த குரலில்.

அவளது குரலும் அவளது வாடிய முகமும் இனியனுக்கு பரிதாபத்தையே தந்தது.

"ஆதாரம் அத்தனையும் உங்களுக்கு எதிரா இருக்கு மேகலை.. கொலை செய்ய பயன்படுத்திய கத்தி உங்க ரூம் அலமாரிக்கு எப்படி வந்தது.?" இனியனின் மனநிலை புரிந்தார் போல தேவனே முன்னால் வந்து நின்று கேட்டான்.

"எனக்கு சத்தியமா தெரியாது சார்.." தன் முகத்தில் இருந்த கண்ணீரை துடைத்தபடி சொன்னாள் அவள்.

"அப்படின்னா ஏன் கொலை நடந்து ஒன்னரை மணி நேரம் வரை எங்களுக்கு தகவல் சொல்லல.."

"எங்க சித்தி செத்து ஒன்னரை மணி நேரம் கழிச்சிதான் நான் பார்த்திருக்கேன்ற தகவலே நீங்க சொல்லிதான் சார் எனக்கு தெரியும்.."

"அப்புறம் எப்படி அந்த கொலையை செஞ்சது பூசாரின்னு தெரியும்.?" தேவனின் உரத்த குரலால் மேகலையின் உடல் நடுங்கியது.

"கொஞ்சம் பொறுமையா கேளுங்க தேவன்.." என இனியன் சொல்ல தேவனும் வனஜாவும் விசித்திரமாக அவனை பார்த்தனர்.

"எப்படி சார்.. குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, மரப்பாச்சி பொம்மையெல்லாம் வாங்கி வந்து தந்து சொல்லு பாப்பான்னு கேட்கட்டா.?" இனியனின் அக்கப்போர் தாங்க முடியாமல் தேவனே இந்த முறை திருப்பி பேசி விட்டான்.

"என்னமோ பண்ணுங்க.." என்ற இனியன் சலிப்போடு அங்கிருந்து இரண்டடி தள்ளி போய் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.

"இப்ப சொல்லு.. உனக்கு எப்படி பூசாரி கொலை செஞ்சான்னு தெரியும்..?" தேவன் தான் விட்ட இடத்திலிருந்து கேட்டான்.

"ஏனா அவன் மட்டும்தான் சார் எங்க வீட்டுக்கு அப்போது வந்திருக்க முடியும்.. அந்த டைம்ல எங்க வீட்டுக்கு வேற யாருமே வந்திருக்க மாட்டாங்க சார்.. அதுவும் இல்லாம பூஜைக்கு போட்டு வச்சிருந்த கோட்டு பக்கத்துலதானே எங்க சித்தி செத்து இருந்தாங்க.. அதனாலதான் பூசாரின்னு சொன்னேன்.."

"காலிங் பெல் சத்தம் கேட்டும் ஏன் எழுந்து வரல.?"

"சத்தியமா சத்தம் ஏதும் கேட்கல சார்.." தயக்கத்தோடு சொன்னாள் மேகலை.

"எப்படியெல்லாம் பொய் சொல்றான்னு பாருங்க மேடம்.." தேவன் தன் அருகில் இருந்த வனஜாவிடம் சொன்னான்.

யோசனையில் அமர்ந்திருந்த இனியன் வேகமாக எழுந்து மேகலையின் அருகே வந்தான்.

"பூஜை பொருட்களை நீங்கதானே வாங்கி வந்திங்க..?" என்றான்.

"ஆமா சார்.." என்றாள் அவள் தலை குனிந்து.
"எந்த டைம்.?"

"காலையிலேயே ஒன்பது ஒன்பதரை இருக்கும் சார்.." என்றவள் தான் அணிந்திருந்த துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

"மறுபடி தேவ சுந்தரியை எப்ப பார்த்திங்க.?"

"மணி பத்து இருக்கும் சார்.. அந்த குடுகுடுப்பைக்காரன் சொன்ன மாதிரியே பூஜைக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சி வச்சிட்டேன்.. அப்பதான் சித்தி 'பூசாரி கொஞ்ச நேரத்தில வந்துடுவான்.. நீ வேணா போய் ரெஸ்ட் எடு'ன்னு சொன்னாங்க சார்.. சரின்னு நானும் கிளம்பி என் ரூமுக்கு போயிட்டேன் சார். தலைவலி நிறைய இருந்தது சார்.. அதான் மாத்திரையை சாப்பிட்டு படுத்துட்டேன்.. மறுபடி ஒரு மணிக்குதான் எழுந்து ரூமை விட்டே வெளியே வந்தேன் சார்.."

"சார் இவ பொய் சொல்றா.." தேவன் உறுதியாக சொன்னான்.

"கத்தியை பத்தி ரிப்போர்ட் வரட்டும் தேவன்.." என்ற இனியன் "ஆன்டி இவங்களை அடிக்காம பார்த்துக்கங்க.." என சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே நடந்தான்.

"சார் நீங்க இந்த பொண்ணு மேல ஓவரா கருணை காட்டுறிங்க.." என்று குற்றம் சாட்டினான் தேவன்.

"அனாதை பொண்ணு தேவன்.. அடுத்தவங்க வீட்டுல வளர்ந்திருக்கா.. வளர்த்தியவங்களை எதுக்கு இவ கொல்ல போறா.?" என்றான். அவனுக்கு தான் தனது மாமன் வீட்டில் வளர்ந்தது நினைவிற்கு வந்தது.

"ஆனா கத்தி அவ ரூம்லதானே சார் இருந்தது.?"

"கொலை நடந்து ஒன்னரை மணி நேரம் கழிச்சி சொன்னவ அந்த கத்தியை வேற இடத்துல மறைச்சி வச்சிருக்க கூடாதா.? எந்த முட்டாள் அவங்க ரூம்லயே வைப்பாங்க.?" இனியனால் மேகலையை சந்தேகிக்க முடியவில்லை.

"என்ன சார் இப்படி சொல்றிங்க.? அவளுக்கு அப்ப நேரம் பத்தலன்னு அதை ரூம்ல மறைச்சி வச்சிருக்கா.. அப்புறமா அதை வேற இடத்துல மறைச்சி வைக்கலாம்ன்னு நினைச்சிருப்பா.. ஆனா அவளோட கெட்ட காலம் அவளோட சொந்தகாரங்க அவளை அந்த வீட்டுல இருந்து துரத்திட்டாங்க.. அவங்க அவளை அங்கே இருந்து துரத்தலன்னா இன்னேரம் அவ நினைச்ச மாதிரியே கத்தியை வேற இடத்துல மறைச்சி வச்சிருப்பா.." தனது வாதத்தை சொன்னான் தேவன்.

இனியன் நடப்பதை நிறுத்தி விட்டான். அமைதியாக எதிரில் இருந்த சுவரை பார்த்தான்.

"இப்போதாவது நான் சொல்றதுல உள்ள உண்மை உங்களுக்கு புரியுதா சார்.?" தேவன் தன் கையை கட்டியபடி கம்பீரமாக நிமிர்ந்து நின்று கேட்டான்.

"தேவன்.. நீங்க சொல்றது அத்தனையும் சரிதான்.. ஆனா நான் கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அந்த கத்தி நம்ம கைல கிடைக்கும் வரைக்குமே ரத்த கரையோடுதான் இருந்தது. கொலை நடந்த இடத்துல இருந்து பாத்ரூமும் கிச்சனும் நாலு மைல் தூரத்துல ஒன்னும் இல்ல.. ரொம்ப பக்கதுலதான் இருந்திருக்கு. கொலை செஞ்சவளுக்கு கத்தியை மறைச்சி வைக்குற அளவுக்கு புத்தி இருக்கும்போது அந்த கத்தியை கழுவிட்டு மறைச்சி வைக்கணும்ன்னு கூடவா அறிவு இருக்காது.? யாராவது தானே கொலை செஞ்சிட்டு அந்த கத்தியை கூட ப்ராப்பரா க்ளீன் பண்ணாம மறைச்சி வைப்பாங்களா.? கிட்டத்தட்ட கொலை நடந்து ஒன்னரை மணி நேரம் அவளுக்கு டைம் இருந்தும் கூட அவ ஏன் கத்தியை கூட க்ளீன் பண்ணல.? அந்த ஒன்னரை மணி நேரத்துல அவ நினைச்சிருந்தா அந்த கொலையை ப்ளான் பண்ணி செஞ்சி தற்கொலையா கதை கட்டி விட்டிருக்கலாம்.. இல்லன்னா வீட்டு தோட்டத்துல புதைச்சிட்டு கூட தேவ சுந்தரி வெளிநாடு போயிட்டான்னு சொல்லி காலத்தை ஓட்டி இருக்கலாம்.. இந்த கொலை பழியில எங்கேயாவது ஒரு இடத்துல லாஜிக் இருக்கா சொல்லுங்க.?"

இனியன் சொன்னது தேவனுக்கும் யோசனைகளை தந்தது. எங்கேயோ ஏதோ இடிக்கிறது என்பதை தேவனாலும் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அது எதுவென்றுதான் புரியவில்லை.

"தேவ சுந்தரியோட பசங்களே இந்த கொலையை பண்ணிட்டு பழியை இந்த பொண்ணு மேல போட்டு இருப்பாங்களா சார்.?" தேவன் தன் சந்தேகத்தை கேட்டான்.

"தெரியல தேவன்.. வெயிட் பண்ணிதான் பார்க்கணும்.. நாளைக்கு இந்த பொண்ணை கோர்ட்ல ஆர்ஜர் பண்ணனும்.. எங்க அம்மா அதை பார்த்துப்பாங்க.. நீங்க என்னோடு கொஞ்சம் வாங்க.. தேவ சுந்தரி வீட்டை கொஞ்சம் நோட்டம் விட்டுட்டு வரலாம்.." என்ற இனியன் தன் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

"நாளைக்கு பார்க்கலாம் தேவன்.." என்றவன் பைக்கை ஸ்டார்ட் செய்து வீடு நோக்கி கிளம்பினான்.

வாசற் படியிலேயே கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா. இனியனின் பைக் காம்பவுண்டிற்குள் நுழைந்தவுடன் துள்ளி எழுந்தாள்.

வாசலுக்கு விரைந்தாள். இனியன் தன் பைக்கை நிறுத்திவிட்டு தொப்பியை கழட்டியபடியே கீழே இறங்கினான்.

"மேகாவுக்கு என்ன ஆச்சி.?" ஆவலோடு விசாரித்தாள்.

"என்ன ஆச்சி.? விசாரணை நடந்துட்டு இருக்கு.? உனக்கேன் இதுல இவ்வளவு அக்கறை.?" சந்தேகமாக கேட்டபடி வீட்டுக்குள் நடந்தான்.

"அந்த பொண்ணு பாவம் இல்ல அதான்.. பார்க்கும் போதெல்லாம் அழுதுட்டே இருந்தா.." என்று அவள் சொல்ல நடந்துக் கொண்டிருந்தவன் சட்டென நின்றான். அவன் பின்னால் நடந்துக் கொண்டிருந்தவள் அவனின் முதுகில் மோதி நின்றாள்.

இனியன் திரும்பி பார்த்தபோது அவள் தன் மூக்கை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

"அந்த பொண்ணு உனக்கும் பாவமா தெரியறாளா.?" என்றான்.

ஆமென தலையசைத்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தபோது அவன் தனது யோசனைகளில் மூழ்கி இருந்தான்.

"என்ன ஆச்சி இனியா.?" அவனது தோளை உலுக்கினாள்.

"அந்த பொண்ணை பார்த்தா எனக்கும் பாவமாதான் தெரியுது சந்தியா.. யாரோ வேணும்ன்னே அவ மேல கொலை பழியை போட்டது போல இருக்கு.." என்றான் சோகமாக.

"பழியை போட்டவங்களை கண்டுபிடிச்சி ஜெயில்ல போடு.. நீ அதுக்குதானே போலிஸா ஆன.?" என்றாள்.

முகத்தில் பளிச்சிட்ட புன்னகையோடு அவளது மூக்கின் மீது தன் மூக்கை வைத்து உரசினான். அவளது கன்னம் கிள்ளியவன் "சீக்கிரமே உண்மையான கொலைகாரனை பிடிக்கிறேன்" என்றான்.

அவனது புன்னகை சந்தியா முகத்தில் பிரதிபலித்தது.

ஆனால் இனியன் சட்டென விலகி நின்றான்.

"சாரி.. கொஞ்சமா எமோசனல் ஆகிட்டேன்.. இல்லன்னா உன்னை தொட்டு பேசியிருக்க மாட்டேன்.." என்றவன் முக வாட்டத்தோடு திரும்பி நடந்தான்.

சந்தியாவிற்கு அழுகை வரும்போல இருந்தது. நொடியும் யோசிக்காமல் சட்டென பாய்ந்து அவனை பின்புறமிருந்து அணைத்துக் கொண்டாள்.

"இப்படியெல்லாம் பேசாத.. ப்ளீஸ்.. என்கிட்ட சாரி சொல்லாத.. யாராவது பொண்டாட்டிக்கிட்ட சாரி கேட்பாங்களா.?" என அவள் திக்கி திணறி கேட்க அவன் சிலையாக உறைந்து போய் நின்றான். அவள் சொன்னது அவனின் மனதில் பதியவே சில நிமிடங்களுக்கு மேலானது.
நின்று துடித்த இதயத்தோடு திரும்பினான்.

"என்ன சொன்ன.?" என்றான் நம்பிக்கை இல்லாமல்.

"சாரி.. உன்னை வெறுத்து பேசியது என் தப்புதான்.. உன்னை நான் என்னைக்குமே வெறுக்கல.. ஆனா கோபம் அதிகமா இருந்தது. காதல்ன்னு சொல்லி நீ என்னை ஏமாத்தின.. என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம நமக்குள்ள நடந்ததை உன் அம்மா அப்பாக்கிட்ட சொன்ன.. அஞ்சி வருசம் கழிச்சி திரும்பி வந்ததும் உன் சர்வாதிகாரத்தை மட்டும் காட்டின.. எனக்கு இது எதுவுமே பிடிக்கல.. நீ என்னை ஏமாத்தியதை நினைச்சி பார்க்கும் போது உன் நிழலை கூட மிதிக்காம இருக்கணும்ன்னு தோணுது.. ஆனா நான் என்ன பண்ணேன்.? என் காதல் என்ன பண்ணுச்சி..? நீ செஞ்ச தப்புக்கு என் காதல் ஏன் தனியா இருக்கற தண்டனையை அனுபவிக்கணும்.?" என்று அவள் கேட்க அவன் ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றிருந்தான்.

"என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு நீ சொல்லிட்டு போனதும் என் மனசு எப்படி உடைஞ்சி போச்சி தெரியுமா.? தப்பு பண்ணது எல்லாமே நீதான். ஆனா என்னை ஏத்துக்கோன்னு உன்கிட்ட கெஞ்ச சொல்லி சொல்லுது என் மனசு.. நான் பாவம் இல்லையா..? உன்னை விட்டுட்டு விலகி இருக்க முடியல இனியா.. உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டே கண்டும் காணாதது போல இருக்க முடியல.. நானும் ஒரு மனுசிதானே..? லவ் யூ இனியா.. என்கிட்ட சாரி ஏதும் கேட்காத.." என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் இனியன். அவளது கண்கள் கலங்கி இருந்தது. அவனது பதிலுக்காக காத்திருந்தாள் அவள்.

இனியனுக்கு தன்னை கிள்ளி பார்த்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது. கிடைக்காது என சொல்லி முழுமையாக மறுக்கப்பட்ட காதல் திடீரென கை சேர்ந்ததில் ஆனந்த அதிர்ச்சி அவனுக்கு.

அவளை விட்டு ஓரடி பின்னால் நகர்ந்து நின்றான்.

"என்னை பார்த்தா உனக்கு முட்டாளா தெரியுதா..? நீ வேண்டாம்ன்னு சொன்னா விலகி போகணும்.. நீ வேணும்ன்னு சொன்னா உடனே ஏத்துக்கணுமா..?" என்றவன் அவளை முறைத்து விட்டு திரும்பி நடந்தான்.

சந்தியாவிற்கு நொடியில் கண்ணீர் கன்னம் தாண்டி விட்டது. கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். இப்படி ஒரு நிராகரிப்பு நேருமென அவள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. அவளது காதல் இப்படி ஒரு தோல்வியை சந்தித்ததில் உயிரில் வலியை உணர்ந்தாள்.

நின்றிருந்த இடத்திலேயே உடைந்து விழ இருந்தவளை சட்டென கட்டி அணைத்தன இரு கரங்கள். முகத்திலிருந்த கைகளை விலகிக் கொண்டவள் கண்ணீர் ததும்பும் கண்களோடு தன்னை அணைத்திருந்தவனை பார்த்தாள்.

இனியன் பல்லை காட்டியபடி நின்றிருந்தான். அவள் அதிகமாய் அழ இருந்தபோது அவளது கன்னத்தில் முத்தம் ஒன்றை தந்தான். அவனது நெஞ்சின் மீது சிறு அடியை தந்தாள் சந்தியா. அவன் மீண்டும் ஒரு முத்தத்தை தந்தான்.

"உன் காதலை நான் ஏத்துக்கணும்ன்னா அதுக்கு முன்னாடி ஒரு கன்டிசன் இருக்கு.. நான் என் அதிகாரத்தை உன்கிட்ட காட்ட மாட்டேன்.. ஆனா காதல் சர்வாதிகாரியா உன்னை ஆட்சி செய்வேன்.. என் காதல் சாம்ராஜ்ஜியத்தோட ஒரே அடிமை நீ மட்டும்தான்..? இந்த சர்வாதிகாரிக்கு காலமெல்லாம் காதல் அடிமையா வாழ உனக்கு சம்மதமா.?" என்றான் தனது வழக்கமான கர்ஜனையோடு.

Word count 1172

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..

LIKE
COMMENT
SHARE

 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 33

சந்தியா கன்னம் வெட்கத்தில் சிவந்து போனது. இனியன் அவளது பதிலுக்காக காத்திருந்தான்.

"கண்டிப்பா அடிமையா மட்டும்தான் இருக்கணுமா.? இந்த மகாராணி போஸ்டெல்லாம் எனக்கு தர மாட்டியா.?" என்றாள் தயக்கமாக. தனக்கு மட்டும் ஏன் விதி சுத்தி சுத்தி கொடுமை செய்கிறது என தன் மீது பரிதாபம் கொண்டாள் அவள்.

இனியன் வலம் புறமாக தலையசைத்தான். "நோ.. என் காதல் சாம்ராஜ்யத்துல ஒரே ராஜா நான் மட்டும்தான்.. என்னோட ஒரே அடிமை நீ மட்டும்தான்.. ஓகேவா இல்லையா.?" என்றான்.

சந்தியா உதட்டை கடித்தபடி யோசனையை செய்தாள்.

"கழுதைக்கு வாக்கப்பட்டா உதை வாங்கிதான் ஆகணுமோ.?" என முனகியவளை சிரிப்பு மாறாமல் பார்த்தான் இனியன்.

'கொடுமைடா..' என மனதில் எண்ணியவள் "ஓகே.." என்றாள்.

அவன் பதிலுக்கு முத்தம் ஒன்றை அவளது கன்னத்தில் பதித்து விட்டு விலகி நின்றான். "நான் குளிக்க போறேன்.. நீயும் வரியா.?" என்றான்.

அவள் உடனடியாக மறுத்து தலையசைத்தாள்.

உதடு சுழித்து பழிப்பு காட்டியவன் குளிக்க கிளம்பினான்.

அவனது முதுகை பார்த்தபடி நின்றிருந்த சந்தியாவிற்கு துள்ளி குதிக்க வேண்டும் போல இருந்தது.

அவன் ஈர தலையோடு ஹாலுக்கு வந்தபோது ஜில்லென்று இருந்த பாயாசத்தை எடுத்து வந்து தந்தாள் சந்தியா.

ஆவலோடு அதை சுவைத்தான். வழக்கம் போல ருசி தலைகீழ்தான். ஆனால் அவள் செய்ததாயிற்றே. அதனால் ஆவலின் சிறு பங்கும் குறையாமல் அதை சாப்பிட்டு முடித்தான்.

அவன் பாயாசத்தை பற்றி குறை சொல்வான் என காத்திருந்தாள் அவள். ஆனால் அவன் ஆவலோடு சாப்பிடுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டாள்.

அவனது ஈர தலையில் கையை வைத்து கலைத்து விளையாடினாள். அவளை இழுத்து தன் மடி மீது அமர வைத்துக் கொண்டான் இனியன்.

"அப்பா எங்கே..?" என்றான் அவளது கன்னத்தை வருடியபடி.

"மாமா இன்னும் வரல.." என்றவளின் கழுத்தில் தன் கை விரல்களை ஓட விட்டான் அவன்.

அவனது மடி மீது நெளிந்தாள் சந்தியா.

"அந்த பொண்ணு ஜெயிலுக்குள்ள இருக்காளா.?" என்றாள் வருத்தத்தோடு.

"ஆமா.. வனஜா ஆன்டி அவளை பார்த்துப்பாங்க.."

என்றவன் சட்டென அவளது தோளில் தனது முகம் பதிக்க அவள் மூச்சு விட மறந்து போனாள்.

மேகலை இரவெல்லாம் கண்விழித்து அமர்ந்திருந்தாள்.

கண்களின் ஈரம் காயவே இல்லை.

மறுநாள் இனியன் சொன்னது போலவே மேகலை வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தேவன். அவனுக்கு முன் வந்து அந்த வீட்டின் வாசலில் நின்றிருந்தான் இனியன்.

"சாரி சார்.. கொஞ்சம் லேட் ஆயிடுச்சி.." என்றபடி காரிலிருந்து இறங்கி ஓடி வந்தான் தேவன்.

"வாங்க வீட்டுக்குள்ள போகலாம்.." என்றவன் முன்னால் நடக்க அவனை பின்தொடர்ந்து நடந்தான் தேவன்.

"வாங்க சார்.." இனியனை கண்டதும் நேற்று உரையாடிய அதே சிவப்பு சட்டைக்காரன் இன்றும் வேறொரு சிவப்பு சட்டையோடு வரவேற்றான்.

"நாங்க தேவ சுந்தரி ரூமையும் மேகலை ரூமையும் சோதனை போட வந்திருக்கோம்.." என்றான் இனியன்.

"ஆனா அதைதான் ஏற்கனவே சோதனை போட்டுட்டாங்களே சார்..?" சந்தேகமாக கேட்டான் அவன்.

"நாங்களும் எக்ஸ்ட்ராவா சோதனை போட வந்திருக்கோம்.. ஏனா நாங்க இரண்டு பேரும் எங்க நிழலையே நம்பாதவங்க.. எதுவா இருந்தாலும் எங்க கண்ணால பார்த்துதான் நம்புவோம்.." நெஞ்சு புடைத்து நின்றபடி சொன்னான் தேவன்.

இருவரையும் மாறி மாறி பார்த்த சிவப்பு சட்டைக்காரன் "சரிங்க சார்.. சோதனை பண்ணுங்க.." என்றான்.

இனியன் முதலில் தேவ சுந்தரியின் அறையை நோக்கி நடந்தான்.

சீல் வைத்திருந்த கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

"தேவ சுந்தரியோட டைரி ஏதும் இருக்குதான்னு தேடட்டா சார்.?" என்ற தேவன் கிளவுஸை கையில் மாட்டிக் கொண்டு அலமாரியை தோண்ட ஆரம்பித்தான்.

இனியன் அங்கிருந்தவற்றை ஒவ்வொன்றாய் நோட்டமிட்டான். மேகலையின் புகைப்படம் இரண்டு பக்க சுவர்களில் இருந்தது.

மேஜை மீதும் ஒரு சிறிய அளவிலான புகைப்படம் இருந்தது. அதில் இரண்டு ஆண்களுக்கு மத்தியில் சிரித்தபடி நின்றிருந்தாள் மேகலை. அவர்கள் இருவரும் அவளை பூரிப்போடு பார்த்துத் கொண்டிருந்தனர். இனியன் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்.

மூவருக்கும் முக ஒற்றுமை நிறைய இருந்தது. நேற்று தேவன் காட்டிய தேவ சுந்தரியின் மகன்கள்தான் அந்த இருவரும் என்பதை கண்டுக் கொண்ட இனியனுக்கு அவர்களுக்கு இடையே சிரித்தபடி நின்றிருந்த மேகலையை கண்டுதான் வித்தியாசமாக இருந்தது.

அவளை அடியோடு வெறுக்கும் அண்ணன்கள் இவளோடு இவ்வளவு நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது நம்பும்படியாக இல்லை.

"தேவன் இந்த போட்டோவை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது.?"

இனியன் அழைத்ததும் வந்து பார்த்தான் தேவன். அதை கையில் வாங்கியவன் வெகுநேரம் யோசனையோடு பார்த்தான்.

"இவங்க இந்த பொண்ணை வெறுத்து இருப்பாங்கன்னு நினைக்க முடியல சார்.." என்றான் நெற்றியை தேய்த்தபடி.

"ஒரே குழப்பமா இருக்கு சார். நாம எந்த வழியில் போனாலும் டெட் என்ட்தான் வருது.." என்றவன் புகைப்படத்தை இனியனிடமே திருப்பி தந்தான்.

இனியன் அதன் பிறகே புகைப்படத்தின் பின்னால் ஏதோ இருப்பதை கண்டான். புகைப்படத்தை திறந்து உள்ளே பார்த்தான். நான்காய் மடித்த பேப்பர் ஒன்று இருந்தது. சந்தேகத்தோடு அதை எடுத்து பிரித்தான்.

"அன்பு மேகலைக்கு எனது ஆயிரம் கோடி ஆசிர்வாதங்கள்.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசு சரியில்ல.. ஏதோ ஒன்னு நடக்கப்போறதா மனசு சொல்லுது.. உன் பேர்ல சொத்து எழுதி வச்சது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் புரிஞ்சது.. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் நான்.. உன் அண்ணன்கள் இதுக்காகவே என்னை கொல்ல போறாங்க.. அவங்க பேச்சை கேட்காம விட்டது என் தப்புதானோன்னு தோணுது.. உனக்கு வாழ்க்கையில எந்த பிரச்சனை வந்தாலும் உன் அண்ணன்ங்க தன் உயிரை கொடுத்தாவது உன்னை பத்திரமா பார்த்துப்பாங்க.. அவங்க சொல் பேச்சை கேட்டு நடம்மா.. உன் அப்பாவி தனத்தால யாரையும் நம்பிடாத.. இந்த உலகம் எந்த அளவுக்கு போலியானதுன்னு நீ தெரிஞ்சிக்க வேண்டாம்ன்னு நினைச்சிதான் உன்னை ஊருலயே வச்சிருந்து பத்திரமா பார்த்துக்கிட்டேன் நான்.. பெத்த மகளுக்கே எஜமானியா இருக்க வச்சிடுச்சி என் விதி.. சாரிம்மா..''

"சார்.. இது என்ன புது டிவிஸ்டு.?" என்றான் தேவன் அவனது கையிலிருந்த கடிதத்தை வாங்கியபடி.

"ஏற்கனவே நிறைய குழப்பம்.. இப்ப இதோடு சேர்த்து ஒரு புது குழப்பம்.." வெறுத்து போய் சொன்னான் இனியன்.

"பெத்த மகளை வேலைக்காரியா வளர்த்தி இருக்காங்க.. ஆனா ஏன்.?" என்று கேட்டான் தேவன்.

"எனக்கு மட்டும் எப்படியா தெரியும்.? வெளியே இருக்கற சொந்தகாரங்களுக்கே இந்த விசயம் தெரியாதபோது நாம என்னதான் பண்றது.?" என்றவன் "வேற ஏதாவது உருப்படியா கிடைக்குதான்னு பாருங்க.." என்றான். தேவன் கையில் இருந்த கடிதத்தை வாங்கி பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

இனியனும் தேவனும் அந்த ரூமை மேலும் சோதித்தனர்.

ஆனால் வேறு எதுவும் உருப்படியாக ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் சலித்து போய் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

"மேகா ரூமை பார்க்கலாம்.." என்ற இனியன் மேகலையின் அறை கதவை திறந்தான். கத்தி கண்டு பிடித்த பின் அந்த அறைக்கும் சீல் வைத்திருந்தனர். அந்த ரூமை சோதித்ததிலும் அவர்களுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. நொந்து போனவனாக திரும்பியவன் மேஜையில் ஒரு புத்தகத்தை கண்டு அதை கையில் எடுத்தான். அப்போது அந்த புத்தகத்தின் கீழே இருந்த மாத்திரை இனியனின் கண்களில் பட்டது.

இனியன் அந்த மாத்திரைகளை கையில் எடுத்தான். அந்த வீட்டில் கிடைத்த ஒரே உருப்படியான தடயம் இது மட்டும்தான் என்று உணர்ந்தவன் "தேவன்.." என்றான்.

"என்ன சார்.?" என திரும்பியவனிடம் தன் கையிலிருந்த மாத்திரை அட்டையை காட்டினான்.

ஒற்றை மாத்திரை மட்டும் தீர்ந்து போயிருந்த அந்த அட்டையை கையில் வாங்கிய தேவன் "மேகலை சொன்ன தலைவலி மாத்திரை இதான் சார்.. பாவம் அந்த பொண்ணு நிஜமாவே தலைவலியோடு இருந்திருக்கா.." என உச்சு கொட்டினான் தேவன். தேவ சுந்தரி அறையில் கிடைத்த கடிதம் தேவன் மேகலை மீது வைத்திருந்த சந்தேகத்தை கொஞ்சமாக தீர்த்து விட்டிருந்தது.

"யோவ்.. அது தலைவலி மாத்திரை இல்லையா.. தூக்க மாத்திரை.." என இனியன் சொல்ல தேவன் அவசர அவசரமாக அந்த மாத்திரை அட்டையை சோதித்தான்.

நெற்றியில் அறைந்துக் கொண்டான். "தூக்க மாத்திரை சார்.. தலைவலியில மாத்திரையை மாத்தி சாப்பிட்டு இருக்கா.. அதான் வீட்டுல நடந்த கொலையும் தெரியல.. பூசாரி காலிங் பெல் அடிச்சதும் தெரியல.." என்றவனுக்கு நிஜமாகவே மேகலை மீது பரிதாபம் வந்தது.

"நான் வேற அந்த பொண்ணை ரொம்ப திட்டிட்டேன் சார்.." என சோகமாக சொன்னவன் அந்த மாத்திரையை இனியனிடம் தந்தான்.

இனியன் அந்த மாத்திரையை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"ஆனா இந்த ஆதாரத்தை வச்சி அந்த பொண்ணை காப்பாத்த முடியாதே சார்.." என்று சோகமாக சொன்னான் தேவன்.

"உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்கணும் தேவன்.. காளியோட பிரெண்டையும் மேகலை போனுக்கு மெஸேஜ் அனுப்பியவனையும் கண்டுபிடிக்கணும்.." என்றான் இனியன்.

"கண்டிப்பா சார்.." என்றவன் இனியனோடு சேர்ந்து அந்த வீட்டை விட்டு வெளியே நடந்தான்.

சிவப்பு சட்டைக்காரன் கை அசைத்து விடை தந்தான்.

இனியனும் தேவனும் ஆபிஸ்க்கு திரும்பி வந்தபோது ஆபிஸ் வாசலில் காத்திருந்தனர் தேவ சுந்தரியின் இரு மகன்களும். அவர்களை கண்டதும் இனியனும் தேவனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இருவருமே குழம்பி போய் முன்னோக்கி நடந்தனர்.

இவர்களை கண்டதும் அவர்கள் இருவரும் அவசரமாக ஓடி வந்தனர்‌.

"சார்.. இந்த கொலையை மேகா செஞ்சிருக்க மாட்டா.. தயவு செஞ்சி அவளை வெளியே விட்டுடுங்க.. ப்ளீஸ்.." என்று கையெடுத்து கெஞ்சினான் ஒருவன்.

"உள்ள போய் பேசலாம் வாங்க.." என முன்னால் நடந்தான் இனியன்.

தனது இருக்கையில் அமர்ந்தவன் தன் எதிரில் இருந்த இருக்கைகளுக்கு கை காட்டினான்.

"உட்காருங்க பேசுவோம்.." என்றான்.

அவர்கள் இருவரும் அமர்ந்தனர்.

அவர்கள் முன் தான் கொண்டு வந்திருந்த கடிதத்தை நீட்டினான் இனியன். தயக்கத்தோடு வாங்கினான் ஒருவன். படித்து பார்த்தவனுக்கு கண்கள் கலங்கி விட்டது.

"உண்மையை சொன்னாதான் நானும் என் பக்கமிருந்து ஏதாவது உதவி செய்ய முடியும்.." என்று சொன்னான் இனியன்.

"ஆமா சார்.. அவ எங்க தங்கைதான்.. இது அவளுக்கே இன்னைக்கு வரைக்கும் தெரியாது.. இது எல்லாமே அவ சேப்டிக்குதான் சார்.." என்றான் சின்னவன்.

"கொஞ்சம் தெளிவா சொல்றிங்களா.?" என கேட்டான் தேவன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"நீங்க எங்க மேகாவுக்கு உங்க வீட்டுல இடம் தந்தீங்கன்னு கேள்வி பட்டோம்.. உங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. அதனால் நம்பி சொல்றோம்.. ப்ளீஸ் இதை வெளியே சொல்லிட்டாதிங்க.. எங்க வம்சத்துல அவ்வளவா பெண் குழந்தைகளே பிறக்காது சார்.. எட்டு தலைமுறைக்கு ஒரு முறைதான் ஒரே ஒரு பெண் குழந்தை பிறக்கும்ன்னு நம்பிக்கை.. அப்படி அதிசயமா பிறக்கற பெண் குழந்தையையும் உயிர்ப்பலி தந்துடுவாங்க சார்.." என பெரியவன் தயக்கமாக சொல்ல தேவன் ஓரடி தடுமாறி நின்றான்.

"என்னது..?" என்றான் அதிர்ச்சியோடு.

"இது எல்லாமே ஒரு வரலாறு சார்.. ஒரு எழவெடுத்த வரலாறு.." என்றான் சின்னவன் எரிச்சலோடு.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே 1084

VOTE
COMMENT
SHARE


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 158
 

Ada kadavuley ethu ena oru puthu twist.. But super suspense... 


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 34

வணக்கம் நட்புக்களே.. இது லவ் ஸ்டோரி மட்டுமில்ல ஒரு போலிஸ் ஸ்டோரியும் கூட.. அதனால மர்டரும் மிஸ்ட்ரியும் தவிர்க்க முடியல.. உங்களுக்கு சந்தியா எவ்வளவு பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்.. இந்த ஒரு எபிசோட்ல சந்தியா சீன் இல்ல.. ஆனா நாளையில் இருந்து சந்தியா இல்லாம கதை இருக்காது.. ஸோ இந்த ஒரு எபிசோட் மட்டும் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பா♥️♥️♥️

மேகலையின் அண்ணன் சொன்னதை இனியனால் கொஞ்சமும் நம்பமுடியவில்லை.

"நான் சொல்வதை உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும் சார்.. ஆரம்பத்துல எங்களாலயே நம்ப முடியாத விசயம்தான் இது.." என்றான் அண்ணன்களில் பெரியவன்.

"கொஞ்சம் விவரமா சொல்றிங்களா‌.?" என்றான் இனியன்.

"பல நூறு வருசத்துக்கு முன்னாடி எங்க தலைமுறைக்கு வாக்கப்பட்டு வந்த பெண் ஒருத்திக்கு வரிசையா ஆறு பெண் குழந்தைங்க பிறந்ததாம்.. பொட்ட புள்ளை பொட்ட புள்ளைன்னு சொல்லி ஆறு குழந்தைகளுக்கும் பிறந்த கொஞ்ச நேரத்துலயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னுடுவாங்களாம்.. அது மட்டுமில்லாம ஆண் குழந்தை வேணும்ன்னு புகுந்த வீட்டுல இருந்தவங்க அந்த பொண்ணோட புருசனுக்கு இரண்டாம் தாரம் கட்டி வைக்க இருந்தாங்களாம் .. அந்த பொண்ணு அதை எதிர்த்து நின்றிருக்கா.. புகுந்த வீட்டு ஆளுங்களை எதிர்க்கிறது குற்றம்ன்னு சொல்லி அந்த பொண்ணை உயிரோடு கட்டையில் வச்சி எரிச்சி இருக்காங்க அவங்க.. அந்த பொண்ணு நெருப்புல எரிஞ்சபடியே சாபம் ஒன்னு தந்திருக்கா.. "இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு பொண்ணை கொடுமை பண்ண மட்டும்தான் தெரியுது.. பொண்ணோட சிறப்பு ஏதும் தெரியல.. உங்க வம்சத்துக்கு பெண் குழந்தை பிறந்தா அது வீண்தான்.. பெண் சிறப்பு தெரியாத உங்களுக்கு எதுக்கு பெண் செல்வம்.? பொண்ணு இல்லா வீடு பொணம் போனா கூட தெரியாது.. பொண்ணா பிறந்த என்னை கொடுமை பண்ணி சாகடிக்கிறிங்க.. பொட்ட புள்ளைங்கன்னு என் குழந்தைகளையும் கொன்னுட்டிங்க.. ஆனா இனி நீங்களே ஆசைப்பட்டாலும் உங்க வம்சத்துக்கே பொட்ட புள்ளை இருக்காது..  உங்க வம்சத்துல எட்டு தலைமுறைக்கு ஒருமுறைதான் ஒரே ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. ஆனா அதையும் நீங்க கொஞ்ச முடியாது.. அதையும் நீங்க என்னை எரிச்ச மாதிரி கட்டையில் வச்சி உயிரோடு எரிக்கலன்னா அப்புறம் உங்க வம்சமே தளைக்காது'ன்னு சொல்லிட்டு அவங்க எரிஞ்சி போயிட்டாங்களாம்.. இவ விடுற சாபம் பழிக்குமான்னு இருந்தவங்க அதுக்கடுத்து வந்த தலைமுறையில் பெண் குழந்தை பிறக்காத போது சாபம் பழிச்சிடுச்சின்னு புரிஞ்சிக்கிட்டாங்களாம்.. சரியா எட்டாவது தலைமுறையில் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்ததாம். ஆனா அந்த பொண்ணை பெத்தவங்க இந்த சாபம் பலி எதையும் நம்பலையாம்.. அப்புறம் கொஞ்ச நாளுலயே அந்த குடும்பத்துல இருந்த பலரும் பயங்கரமான முறையில இறந்து போனாங்களாம்.. மேலும் இறப்பை தடுக்க அந்தப் பொண்ணை பெத்தவங்களே அந்த பொண்ணை கொண்டு போய் நெருப்புல வச்சிட்டாங்களாம்.. அதுக்கப்புறம் அந்த இறப்பும் நின்னு போச்சாம்.. ஒவ்வொரு எட்டாவது தலைமுறைக்கு மட்டும் பெண் குழந்தை பிறக்கறதும் அவங்க பலி தராம காலம் கடத்துறதும் வீட்டுல உள்ளவங்க பயங்கரமா செத்து போறதை பார்த்து அவங்களே அந்த பொண்ணை கொல்லுறதும் வாடிக்கை ஆயிடுச்சாம்.." மேகலையின் பெரிய அண்ணன் சொன்னான்.

"ஆனா‌ இந்த காலத்துல கூடவா இப்படியெல்லாம் இருக்கு.?" தேவன் பொறுமையில்லாமல் கேட்டான்.

"இந்த காலம் இல்ல சார்.. சரியா ஏழு தலைமுறைக்கு முன்னாடி பிறந்த கடைசி பெண் குழந்தையை கடைசி முறையா பலி கொடுத்து இருக்காங்க.. அடுத்த வந்த ஏழு தலைமுறைக்கு பெண் குழந்தைகளே பிறக்கலயாம்.. நாங்க அத்தனை தலைமுறையிலையும் வாழல.. அதனால் அவங்க சொன்னதுல இருந்த உண்மை தன்மை எங்களுக்கும் தெரியாது. ஆனா எங்க அப்பா கூடவோ தாத்தா கூடவோ பெண் குழந்தைகள் பிறக்கல.. இது மட்டும் தெரியும்.. எட்டாவது தலைமுறையில கண்டிப்பா ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. அந்த குழந்தையை பழி தரணும்ன்னு காத்திட்டு இருந்திருக்காங்க.. எங்க பெரியப்பா சித்தப்பான்னு அத்தனை பேரோட மனைவிகளையும் கவனமாக கவனிச்சிட்டு இருந்திருக்காங்க.. ஆனா யாருக்கும் பெண் குழந்தை பிறக்கல.." என பெரியவன் சொல்ல, அடுத்து சின்னவன் ஆரம்பித்தான்.

"எங்க அம்மாவுக்கு இந்த வரலாறு எதையும் சொல்லாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு எங்க அப்பா.. முதல் இரண்டும் நாங்க பசங்களா பிறந்துட்டோம்.. மூணாவதா மறுபடியும் அவங்க பிரகனென்ட் ஆன பிறகுதான் எங்க அப்பா இதை பத்தி சொல்லி இருக்காரு.. இப்படி ஒரு விசயம் எங்க அம்மாவுக்கு தெரிய வந்தவுடனே அப்பாக்கிட்ட சண்டை போட்டாங்க.. அவங்களை விட்டுட்டும் வந்துட்டாங்க.. ஆனா அவங்க யாரும் என் அம்மாவை விடல.. தினமும் அவங்களை கண்காணிச்சிட்டு இருந்திருக்காங்க.. பிரசவ நாளுக்கு நாலு நாள் இருக்கும்போது அவங்க கண்காணிப்புல இருந்து தப்பிச்ச எங்க அம்மா எங்க இரண்டு பேரையும் எங்க அம்மா வழி பாட்டி வீட்டுல விட்டுட்டு அவங்க மட்டும் தூரமா ஒரு கிராமத்துக்கு போயிருக்காங்க.. அங்கேயே குழந்தையை பெத்தவங்க அங்கிருந்த குழந்தை இல்லாத தம்பதி ஒருத்தருக்கு குழந்தையை தந்துட்டாங்க.. அதுக்கப்புறமும் இரண்டு வருசத்துக்கு அவங்க எங்க அப்பா வீட்டு ஆளுங்க கண்ணுல படல.. ஆனா அதுக்கப்புறம் எப்படியோ இவங்க அம்மாவை கண்டுபிடிச்சி அவங்க ஊருக்கு இழுத்துட்டு போயிருக்காங்க.. பிறந்த குழந்தை பத்தி கேட்டு இருக்காங்க.. தனக்கு பிறந்தது ஆண் குழந்தை அதுவும் செத்துதான் பிறந்ததுன்னு எங்க அம்மா பொய் சொல்லி சாதிச்சிட்டாங்க.. அவங்களுக்கு எங்க அம்மா மேல நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அம்மா கையில் பெண் குழந்தை‌ ஏதும் இல்லாததால அவங்களால இவங்களை தொல்லை ஏதும் பண்ண முடியல.. அதுவுமில்லாம ரொம்ப தொல்லை பண்ணினா இவளும் ஏதாவது சாபம் வச்சிட்டு செத்துடுவான்னு பயந்து இருந்திருக்காங்க.." என அவன் சொல்லி முடிக்க தேவனும் இனியனும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.

"எங்க அம்மா அதுக்கப்புறம் அரசியல்ல சேர்ந்து நிலையான ஒரு இடத்துக்கும் வந்து சேர்ந்தாங்க.. எங்க அப்பா கொஞ்ச வருசத்துல செத்துட்டாரு.. எங்க அப்பா வீட்டு ஆளுங்க எங்களோடு சொந்தத்தை தொடர்ந்துட்டுதான் இருந்தாங்க.. அதுக்கு காரணம் போன தலைமுறையில் பிறக்காத அந்த பெண் குழந்தை இந்த தலைமுறையில் எங்க இரண்டு பேருல யாருக்காவது பிறக்குதான்னு தெரிஞ்சிக்கதான்.‌ ஆனா எங்க அம்மா நாங்க வளர்ந்த பிறகு இதை பத்தி சொல்லிட்டாங்க.. வளர்ந்து வர இந்த காலகட்டத்தில நாங்க இதை எதையும் நம்ப தயாரா இல்ல.. எங்க தங்கச்சி எங்கேன்னு தேடி கண்டுபிடிச்சோம்.. அவளோட தத்து பேரண்ட்ஸ் ஒரு ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க.. அதனால அவ எங்க சித்தி பொண்ணுன்னு பொய் சொல்லி அவளை எங்க வீட்டுக்கு கூட்டி வந்தோம்.. நாங்க வெளிநாடு போய் செட்டில் ஆனதே எங்க தங்கையை அங்கேயே கூட்டி போய் பத்திரமா பார்த்துக்கதான்.. ஆனா ரொம்ப வருசம் கழிச்சி வந்து சேர்ந்த பொண்ணை கொஞ்ச நாள் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி சொல்லியே அம்மா வருசங்களை ஓட்டிட்டாங்க.. எங்க சித்தப்பா பெரியப்பாவுக்கெல்லாம் அதிகம் சந்தேகம் வந்துட கூடாதுன்னு அவளை வேலைக்காரின்னு சொல்லியே சமாளிச்சாங்க.. நாங்க அடிக்கடி ஊருக்கு வந்தா மேகாக்கிட்ட உண்மையை சொல்லிடுவோமோன்னு பயந்து எங்க அம்மா எங்களை ஊருக்கு கூட வர விடாம தடுத்துட்டாங்க.. நாங்க அவளை எங்களோடு கூட்டி போறோம்ன்னு சொன்னதுக்கு அம்மா அவளை எங்களோடு அனுப்ப மறுத்துட்டாங்க.. நாங்க அவளை அம்மாக்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறதா சொல்லி எங்களோடு சண்டையும் போட்டுட்டாங்க.. சாகும்வரை அவங்க எங்க கூட ஃபோன்ல கூட பேசல.." பெரியவன் சோகத்தோடு சொன்னான் இதை.

"ஆனா உங்களுக்கும் மேகலைக்கும் ஆகாதுங்கற மாதிரி உங்க சொந்தக்காரங்க பேசிக்கிட்டாங்களே.." சந்தேகத்தோடு கேட்டான் தேவன்.

"அப்படி ஏதும் இல்ல சார்.. நாங்க அவங்களோடு ஃபோன்ல கூட டச் வச்சிக்கிட்டது கிடையாது.. அந்த மிருகங்களோடு எந்த மனுசன் சொந்தம் வச்சிப்பான்.?"

"அப்புறம் ஏன் நீங்க உங்க அம்மா இறுதி சடங்குல கலந்துக்கல.. அதுவும் இல்லாம அன்னைக்கு மேகலையை அந்த வீட்டுல இருந்து போக சொன்னிங்களே.?" இனியன் தன் சந்தேகத்தை கேட்டான்.

"இறுதி சடங்குல கலந்துக்காததுக்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் கிடைக்க சார்.. அதான்.. ஆனா மேகாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு காரணம் இருக்கு சார்.. எல்லாம் எங்க அம்மாவால் வந்ததுதான்.. இவங்க மேகா மேல ஓவரா பாசம் வச்சது பார்த்து அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி.. வேலைக்காரிக்கு ஏன் இவ்வளவு செல்லம் தரன்னு அடிக்கடி கேட்பாங்க.? தேவையில்லாம சொத்தை வேற அவ பேருல எழுதி வச்சிட்டாங்க.. சித்தப்பா பெரியப்பா இவங்களுக்கு ஏதும் சந்தேகம் வர கூடாதுன்னுதான் அவளை அந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னேன்.. யாராவது அவ யாருன்னு தெரிஞ்சிட்டு அவளை கொன்னுடுவாங்களோன்னு பயமா இருந்தது சார்.. நான் அந்த நேரத்துக்கு அவளை அங்கிருந்து வெளியே அனுப்பிட்டா கூட போதும்ன்னு நினைச்சிட்டேன்.. அவ வெளியே வந்த பிறகு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா பைத்தியக்காரி ஃபோனை எடுக்கவே மாட்டேன்னுட்டா.." என்றவன் சோகமாக இனியனை பார்த்தான்.

"இப்ப மட்டும் அவ யாருன்னு தெரிஞ்சா எங்க சித்தப்பா பெரியப்பாவெல்லாம் சேர்ந்து அவளை கொன்னுடுவாங்க சார்.. எங்க அம்மா கொலையால செத்தாங்க.. ஆனா அதுக்கும் அந்த சாபம்தான் காரணம்ன்னு ஸ்ட்ராங்கா சொல்லிடுவாங்க சார்.." என்றவனை கை காட்டி நிறுத்தினான் இனியன்.

"கொலை.. சாபம்.. சாபம்.. கொலை." என திரும்ப திரும்ப யோசித்தவன் "தேவன் அந்த பொண்ணு யாருன்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்பாங்க.?" என்றான்.

"ஐ திங்க்.. கொன்னு இருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்.. இல்லன்னா இந்த கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி ஆக்ஸிடென்ட் பண்ணியோ இல்ல ப்ளானிங் மர்டராவோ செஞ்சி இருப்பாங்க.."

"ஓகே வாங்க நாம புது விருந்தாளி ஒருத்தரை இங்கே கூட்டி வரலாம்.." என்றபடி எழுந்து நின்றான் இனியன்.

அவனை புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.

"என் மொத்த சந்தேகமும் அந்த சிவப்பு சட்டைக்காரன் மேலதான்‌.. அவன்தான் மேகலை மேல கடுப்பு இருக்கிறதை தன் வார்த்தைகளால காண்பிச்சான்.. இவர் அவங்க கூட ஃபோன்ல கூட பேசாத போது அவன்தான் இவருக்கும் மேகலைக்கும் செட்டாகுதுங்கற மாதிரி பொய் சொன்னான்.. அவனை தூக்கிட்டு வந்தா இந்த கேஸ் பாதி முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்.." என்றவன் மேகலையின் அண்ணன்கள் பக்கம் திரும்பினான்.

"உங்க தகவலுக்கு தேங்க்ஸ்.. ஒரு கால் மணி நேரம் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நாங்க திரும்பி வந்திடுறோம்.." என்ற இனியன் வெளியே நடந்தான்.

"சார் சிவப்பு சட்டைக்காரன் மேல ஏன் உங்களுக்கு திடீர் சந்தேகம்.?" என்ற தேவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த இனியன் "அந்த பூஜை கோடும் பூஜை பொருளும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தருதா தேவன்.?" என்றான்.

இனியனின் சந்தேகம் தேவனுக்கும் புரிந்தது. "ஆனா அங்கே செத்தது மேகலை கிடையாதே.." என்றான் அவன்.

"இப்ப என்னை யாராவது கொல்ல வரும்போது நீங்க வந்து குறுக்க நின்னா என்ன ஆகும்.?"

"நான் முதல் பலியாவேன்.. ஆனா உங்களுக்கு ஏன் இவ்வளவு பேராசை.?" சிறு கோபத்தோடு கேட்டான் தேவன்.

"உங்களை கொன்னவனுக்கு என்னை கொல்ல போதுமான நேரம் கிடைக்கலன்னாவோ இல்ல வாய்ப்பு கிடைக்கலன்னாவோ உங்களை கொன்னது நான்தான்னு பழியை திருப்பி விடுவான்.. கரெக்டா.?" என்றான்.

"ஆமா.." என்றவனுக்கு அதன் பிறகே விசயம் புரிந்தது.

"சார் இத்தனையும் கெஸ்ஸா.? செம சார்.." என்றான்.

"கெஸ்ஸிங்தான் தேவன்.. ஆதாரம் கண்டுபிடிக்கலன்னா கடைசி வரை கெஸ்ஸிங்காவே இருந்திடும்.. அந்த வீட்டுல இருக்கற யாரோதான் இத்தனையையும் ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொலை செய்ய திட்டம் போட்டவங்க குடுகுடுப்பைக்காரன் மூலமா பூஜை ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொன்னு பழியை பூசாரி மேல போட இருந்திருக்கணும்.. ஆனா மேகலையை கொலை பண்ண முடியாதபடி தேவ சுந்தரி தடுத்து இருக்கணும்.. தன் பொண்ணு வாங்க வேண்டிய கத்தி குத்தை இவங்களே வாங்கி இருக்கணும்.. கொலை பண்ணவன் ஏதோ ஒரு காரணத்தால மேகலையை கொல்லாம திரும்பி இருக்கணும்.. இப்ப சான்ஸ் கிடைச்ச உடனே பழியை அவ மேல போட்டு இருக்கணும்.. இதுல நீங்க இன்னொன்னு கவனிச்சிங்களா.? பாரன்சிக் ஆபிசர்ஸ் முழுசா செக் பண்ண அந்த வீட்டுல கொலை நடந்து இரண்டு நாள் கழிச்சி மேகலை ரூம்ல கத்தி கிடைச்சிருக்கு.. இங்கேயே நாம சுதாரிச்சி இருந்திருக்கணும்.." என்றவன் மேகலையின் வீட்டின் முன்னால் கார் நின்றவுடன் முதல் ஆளாக இறங்கி அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1160
VOTE
COMMENT
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 35

தனக்கு முன்னால் இருந்த வீட்டை பார்த்தபடி நின்றிருந்த இனியனின் தோளை தொட்டான் தேவன்.

"அந்த சிவப்பு சட்டைகாரன் தான் கொலை பண்ணலன்னு சொல்லிட்டா என்ன சார் பண்றது.?"

"ஆதாரத்தை நாமதான் கண்டுபிடிக்கணும் தேவன்.."

அந்த வீட்டை நோக்கி இருவரும் நடந்தனர். அவர்கள் அந்த வீட்டின் காலிங் பெல்லை இசைக்க இருந்த போது இனியனின் போன் ஒலித்தது.

போனை எடுத்து பேச ஆரம்பித்தான் அவன்.

"ஹலோ சார்.. நான் கலையரசன் சார்.. நீங்க டிரேஸ் பண்ண சொன்ன போன் இப்ப ஆன்ல இருக்கு சார்.. அதுவும் தேவ சுந்தரி வீட்டுலதான் இருக்கு சார்.."

"தகவலுக்கு நன்றி கலையரசன்.." என்றவன் தன் போனை வைத்து விட்டு தேவனை பார்த்தான்.

"தேவ சுந்தரி போன் இப்ப இந்த வீட்டுலதான் இருக்கு தேவன்.." என்றவன் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

தேவன் மற்ற காவல் அதிகாரிக்களுக்கு போன் செய்தான்.

அந்த சிவப்பு சட்டைகாரன் இன்றும் சிவப்பில் வெள்ளை கலந்த சட்டை ஒன்றை அணிந்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான். அவனை நோக்கி சென்ற இனியன் அவன் கையில் இருந்த போனை படக்கென பிடுங்கிக் கொண்டான். அது தேவ சுந்தரியின் போன்தான் என்பது பார்த்த உடனே தெரிந்தது.

"இதை பத்திரமா வச்சிக்கிங்க தேவன்.." போனை தேவனிடம் தந்தவன் தன் எதிரில் இருந்தவனின் வயிற்றில் உதை ஒன்றை தந்தான்.

"சார் எதுக்கு தேவையில்லாம எங்க வீட்டுல வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கிங்க..?" என்றபடி அறை ஒன்றிலிருந்து வெளியே வந்தான் ஒரு மொட்டையன்.

கேள்வி கேட்டவனின் தலையில் இடியாக ஒரு அடியை இறக்கினான் இனியன்.

அடுத்த நொடியில் அந்த வீட்டிலிருந்த மொத்த பேரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

"சார் எதுக்காக நீங்க இங்கே வந்து பிரச்சனை பண்ணிட்டு இருக்கிங்க..? இங்கே வந்து டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா எங்க தேவ சுந்தரியை கொன்ன மேகாவுக்கு தூக்கு தண்டனை வாங்கி தாங்க.." என்றாள் பெண் ஒருத்தி.
இனியன் கோபத்தோடு அவளை நெருங்கினான்.

"தேவ சுந்தரியை கொன்னது மேகலை கிடையாது.. நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டோம்.." என்றான்.

அங்கிருந்த அனைவர் முகத்திலும் உடனடியாக திகில் பரவியது.

"சார் நம்ம முதல் கேஸ், முதல் கெஸ் வெற்றி.." என்றான் தேவன்.

"நாங்க எந்த தப்பும் பண்ணல சார்.." என்றாள் அந்த பெண்.

"அத்தனை ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு.." என்றான் தேவன்.

அவனை அங்கிருந்தவர்கள் திகிலோடு பார்த்தனர்.

"ஒரு உதவாத வரலாறு.. அதுக்கு உதவாத பாலோவர்ஸ்.. ச்சீ நீங்க எல்லாம் மனுசங்களா.? ஏதாவது ஒரே ஒரு தலைமுறை நினைச்சி இருந்தா கூட இந்த சேதியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகாம விட்டு இருக்கலாம்.." என்றவனை முறைத்தான் மொட்டையன்.

"சார் எங்க வரலாறு தெரியாம பேசாதிங்க.. இது அத்தனையும் நிஜம்.. கடந்த ஏழு தலைமுறையா எங்க வம்சத்துல பெண் குழந்தைகளே பிறக்கல.." என்றவனின் கன்னத்தில் பளீரென ஒர் அறையை விட்டான் தேவன்.

"ஏழு தலைமுறைக்கு ஒரு முறை ஒரு பெண் பிறந்தடா அவ சாபம் இல்ல.. வரம்.." என்றவன் அங்கிருந்தவர்களை சுற்றிலும் நோட்டம் விட்டான்.

"உங்க வம்சத்துல இருந்தவங்க ஒரு பொண்ணை ஆரம்பத்துல கொன்னதே தப்பு.. செத்தவ சாபம் தந்தான்னு அதை இந்த இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டு வரை கடைப்பிடிச்சிட்டு வந்திருக்கிங்களே.. உங்க மூளையெல்லாம் தலையில இருக்க வேண்டியது இல்ல.. மியூசியத்துல இருக்க வேண்டியது.. ஒருத்தி செத்ததாலதானே உங்களுக்கு பெண் வாரிசே இல்லாம போச்சி.. மறுபடி மறுபடி பெண் குழந்தைகளை கொன்னா அப்புறம் எப்படிடா உங்க சாபம் தீரும்.. உயிரை விடுற எல்லாருமேதானே சாபத்தை தருவாங்க.. முதல் ஒருத்தி தந்த சாபமே இத்தனை வருசமா பழி வாங்குதுன்னு நீங்க நம்பும் போது அதுக்கடுத்து செத்தவங்க விட்ட சாபம் பழி வாங்காதா..? மிருகம் கூட இந்த மாதிரி விசயத்தை நம்பாது.. தன் வாரிசை பலி தர நினைக்கிற நீங்க மிருகத்தை விட கேவலமானவங்க.. மேகாவை தூக்குல போட்டா உங்களோட வேலை முடிஞ்சிடும்ன்னு நினைச்சிதானே அவ மேல கொலை பழியை போட்டிங்க.. ஆனா கொலைக்கு தூக்கு தண்டனையே கிடையாது.. அது தெரியுமா..?" என அவன் கேட்க அங்கிருந்தவர்கள் முகம் மாறாமல் நின்றிருந்தனர்.

"தேவ சுந்தரியை கொன்னவங்க அந்த பொண்ணை ஜெயில்ல வச்சி தீர்த்து கட்ட கூட ப்ளான் பண்ணி இருப்பிங்க.. ஆனா உங்க ப்ளான் எதுவும் இனி செயல்படாது.." என்றவன் முடித்த போது அந்த வீட்டிற்குள் காக்கி காவலர்கள் சிலர் நுழைந்தனர்.

"தலைமுறை தலைமுறையாவா பெண் குழந்தைகளை கொல்லுறிங்க.. உங்க மொத்த தலைமுறையும் இனி ஜெயில்லதான் காலம் கடத்த போகுது.." என்றான் தேவன்.

அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை ஒட்டு மொத்தமாக கைது செய்து வேனில் எற்றிக் கொண்டு கிளம்பினர் காவல் துறை அதிகாரிகள்.

அவர்கள் சென்ற பிறகு அந்த வீட்டை சலித்து எடுத்தனர் இனியனும் தேவனும். மேகலையின் டி.என்.ஏ டெஸ்டின் காபியும், தேவ சுந்தரியின் சொத்து பத்திர காப்பியும் ஒரு அறையிலிருந்து எடுத்தான் தேவன்.

அந்த மொத்த வீட்டிற்கும் சீல் வைத்து விட்டு திரும்பியவர்களின் முன்னால் வந்து நின்றாள் ஒரு பெண்.
"சார் நான் இவங்களோட பின்னாடி வீட்டுல குடி இருக்கேன்.. உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா பயமா இருந்தது.. ஆனா இன்னைக்கு இந்த வீட்டுல இருந்தவங்களை நீங்க அரெஸ்ட் பண்ணதை பார்த்தேன்.. அதான் உங்ககிட்ட இதை தந்துட்டு போகலாம்ன்னு வந்தேன்.. எனக்கு பர்சனல் ப்ராப்ளம் நிறைய இருக்கு சார்.. அதனால கோர்ட்டு வரைக்கும் வர முடியாது.. ஆனா மேகா ரொம்ப நல்ல பொண்ணு சார்.. என்னால முடிஞ்ச சின்ன உதவி இதுதான்.." என்றவள் தன்னிடமிருந்த மெமரி கார்ட் ஒன்றை அவனிடம் தந்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
வந்து போனவளை புதிராக பார்த்தபடி இனியன் நின்றிருந்த நேரத்தில் அவன் கையிலிருந்த மெமரி கார்டை எடுத்து தன் போனில் செருகினான் தேவன். அதிலிருந்ததை சோதித்து பார்த்தான்.

"சார் இந்த கேஸோட ஆதாரம் இது.." என தேவன் சொல்ல அதை இனியனும் வாங்கி பார்த்தான். பின் வீட்டின் வாசலில் பொருத்தி இருந்த சிசிடிவி ரெக்கார்ட் அது. அதில் தேவ சுந்தரி வீட்டின் பின்பகுதி தெளிவாக தெரிந்தது. தேவ சுந்தரி இறந்த நாளின் இறந்த நேத்திற்கு உட்பட்ட நேரத்தில் பதிவாகி இருந்தது போனில் ஓடிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் ஒரு ஜன்னல் கதவு வழியாக ஐந்தாறு பேர் உள்ளே செல்வதும் இரண்டு மணி நேரம் கழித்து திரும்புவதும் அதில் தெளிவாக பதிவாகி இருந்தது. சிவப்பு சட்டைகாரனும் மொட்டையனும் அதில் தெளிவாக தெரிந்தனர்.

"கேஸ் பினிஸ் சார்.." என்றான் தேவன்.

அவரல்கள் இருவரும் ஆதாரங்களோடு ஆபிஸ் வந்து சேர்ந்தனர். மேகலையின் அண்ணன்கள் இவர்களுக்காக காத்திருந்தனர்.

"சார் மேகாவுக்கு பெயில் வாங்கிட்டு வந்துட்டோம் சார்.." என்றனர் அவர்கள்.

"நாங்களும் சில ஆதாரங்களை கலெக்ட் பண்ணி இருக்கோம்.. மேகலையை நீங்க உங்க வீட்டுக்கு கூட்டி வந்தபோதே உங்க சொந்தகாரங்க அவ யாருன்னு யூகிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்.. சரியான ஆதாரம் வேணும்ன்னு அவளுக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து இருக்காங்க.. அவங்களால மேகலையை தனியா கூட்டிப் போய் எரிக்க முடியாததால் அவளை ப்ளான் பண்ணி கொல்ல பார்த்திருக்காங்க.. அவங்க மேல சந்தேகம் வந்துட கூடாதுன்னுதான் ராமன் மூலமா காளியை பூசாரியாக்கி இருக்காங்க.. தன் பெண் குழந்தையை மூட நம்பிக்கைகிட்ட இருந்து காப்பாத்த நினைச்ச உங்க அம்மா தனது பதவிக்கு ஒரு நல்லது நடக்கும்ன்னு நம்பி பூசாரியை வர சொன்னது மிக பெரிய முட்டாள்தனமான சறுக்கல்.." என்று இனியன் சொல்ல அவர்கள் இருவரும் தலைகுனிந்தனர்.

"மேகலையை கொல்ல வீட்டு ஜன்னல் வழியா உங்க சொந்தகாரங்க உள்ளே நுழைஞ்சிருக்காங்க.. மேகலை தலைவலியில் தூக்க மாத்திரை போட்டு உள் தாழ்ப்பாள் போட்டு தூங்கிட்டதால வெளியே நடந்த எதுவும் அவளுக்கு தெரியல.. ஆனா அவளை தேடி வந்த உங்க சொந்தகாரங்க மேகலை நெருங்க முடியாத கோபத்துல உங்க அம்மாவை கொலை பண்ணி இருக்காங்க.. அவளை பொறுத்திருந்து கொல்லலாம்ன்னு நினைச்சவங்க அவ மேல கொலை பழியை சுமத்த அவ ரூம்ல கத்தியை வச்சிட்டு எங்களுக்கு தகவலை சொல்லி இருக்காங்க.." என்று மீதி தகவலையும் சொன்னான் தேவன்.

சற்று நேரத்தில் மேகலையை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் சக்தி.

"அண்ணா நான் கொலை பண்ணல.." என்று ஆரம்பித்த மேகலையை அணைத்து கொண்ட அவளின் சின்ன அண்ணன் "தெரியும் ம்மா.. நாங்க உன்னை நம்புறோம்.." என்றான்.

"பெயில் கிடைச்சிடுச்சே தவிர இந்த பொண்ணுக்கு வெளியே இன்னும் ஆபத்து இருக்கு.." என்றாள் சக்தி.

"நாங்க இரண்டு பேருமே உடனடியா திரும்பி போயாகணும்.. மேகாவை எங்களோடு கூட்டி போக முடியுமா.?" என்றான் மேகலையின் பெரிய அண்ணன்.

"முடியாது பிரதர்.. அந்த பொண்ணு பெயில்ல வந்திருக்கா.. அவ இந்த ஊரையே தாண்ட முடியாது.. அப்புறம் எங்கே நாட்டை தாண்டுறது.?" என்றான் தேவன்.

"நீங்க உங்க வேலையை பாருங்க பிரதர்.. மேகலையை நான் எங்க வீட்டுல தங்க வச்சி பத்திரமா பார்த்துக்கறேன்.." என்றான் இனியன்.

இனியனை ஆச்சரியத்தோடு பார்த்த மேகலைக்கு கண்கள் கலங்கி விட்டது.

"நீங்க இதைதான் சொல்விங்கன்னு நான் நினைச்சேன் சார்.." அவனின் காதில் கிசுகிசுப்பாக சொன்னான் தேவன்.

அவனை முறைத்து விட்டு திரும்பிய இனியன் தன் அம்மா தன்னை யோசனையுடன் பார்ப்பதை கண்டான்.

"இந்த நாட்டுல நல்லவங்களுக்கு காலமே இல்ல.." என முனகியவனை நக்கலாக பார்த்தான் தேவன்.

"நல்லவங்களா இருக்கறது தப்பில்ல.. ஆனா ரொம்ப நல்லவங்களா இருந்தா அவங்களை எல்லோருமே சந்தேகமாதான் பார்ப்பாங்க.." என தேவன் பதிலுக்கு முனகினான்.

தலைக்கு மேல் வேலையோடு மாலையில் வீடு வந்து சேர்ந்தான் இனியன்.

சந்தியா வாசலில் அவனுக்காக காத்திருப்பதே அவனுக்கான மிகப்பெரிய பொக்கிஷமாக இருந்தது.
நொடிக்கு நொடி அதிகமாகும் புன்னகையோடு அவளை நெருங்கினான்.

"காலையில வேலைக்கு போயிட்டு மாலையில் வீடு வரேன்.. ஆனா உன்னை பார்க்காம இருக்கற இடைப்பட்ட நேரம் ஒரு யுகமா இருக்கு.." என்றபடி அவளது கன்னத்தில் தன் உள்ளங்கயை பதித்துக் கொண்டான்.

"ஆனா எனக்கு அப்படி இல்லையே.. எனக்கு பார்ம் வேலை நிறைய இருக்கு.. உன்னை பத்தி நினைக்க கூட எனக்கு நேரம் இல்ல.." பொய் சொன்னவளின் காதோரம் தன் முகத்தை கொண்டு சென்றான் இனியன்.

"காமெடி நல்லா இல்ல.. என்னை நினைக்க நேரம் இல்லன்னு நீ சொன்னா அப்புறம் தினமும் ரூம்ல அடைச்சி வச்சிட்டு நான் கிளம்பிடுவேன்.. நான் திரும்பி வரும் வரைக்கும் நீ என்னை பத்தியே நினைச்சிட்டு இருக்க வேண்டி வரும்.. வசதி எப்படி..?" மிரட்டல் குரலில் அவன் கேட்க அவள் உண்மையில் மிரண்டு போனாள்.

"சு.. சும்மா ப.. பயப்படுத்துறியா..?" என்றாள். அவனது வார்த்தைகள் அவளை பயப்படுத்தி விட்டது அவள் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது.

அவளின் முகத்தை பார்த்தவன் "என்னை பார்த்தா உனக்கு சும்மா சொல்பவனை போல தெரியுதா.?" என்றான். அவள் இல்லையென தலையை அசைத்தாள்.

"நல்லது.. சரி போ.. நான் குளிச்சிட்டு வரும் முன்னாடி சூடா சுவையா உன் கையால காபி போட்டு கொண்டு வா.." என்றவன் அவளை விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றான்.

"நான் கழுதைக்கு வாக்கப்படல.. சுத்தமான காதல் சைக்கோவை கட்டிக்கிட்டேன்.." என முனகியபடியே கிச்சனை நோக்கி கிளம்பினாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1122

VOTE
COMMENT
SHARE


ReplyQuote
Subha Mathi
(@subhamathi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 107
 

I want more episodes with santhiya and iniyan ...sis😘😘😘..nice epo sis👍👍


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 36

சந்தியா காப்பியோடு ஹாலுக்கு வந்தபோது சக்தியும் மேகலையும் வீட்டிற்குள் வந்தனர்.

"மேகா.." என்றபடி அவளை நெருங்கினாள் சந்தியா.

அழுது அழுது சோர்ந்திருந்த மேகாவை பார்க்கும்போது சந்தியாவிற்கு பரிதாபமாக இருந்தது.

"இவ ரெஸ்ட் எடுக்கட்டும் ம்மா.." என்றாள் சக்தி.
"சரி அத்தை.." என்றவள் மேகலையின் வழியில் இருந்து விலகி நின்றாள்.

மேகலை சென்ற பிறகு இனியனை தேடி போனாள் சக்தி.

அவன் தன் அறையிலிருந்து வெளியேறிய அதே நொடியில் சக்தியும் அவனது அறை வாயிலில் வந்து நின்றாள்.

"அம்மா.." என்றவனை கை கட்டி நின்றபடி பார்த்தாள் அவள்.

அவனுக்கு காப்பியை தந்து விட்டு செல்ல அங்கு வந்த சந்தியா சக்தியும் அவனும் பேசிக் கொண்டிருப்பது கண்டு திரும்பி செல்ல நினைத்தாள்.

"மேகா மேல உனக்கு என்ன ஸ்பெஷல் பாசம்.?" என சக்தி கேட்கவும் சந்தியா அங்கேயே நின்று விட்டாள்.

"என்னம்மா பாசம்.?" என்றவன் அவளின் கேள்விக்கு சிக்காமல் தப்பிக்க முயல்வது நன்றாகவே தெரிந்தது.

"நான் ஒன்னும் முட்டாள் கிடையாது இனியா.? நீ ஒரு போலிஸ்.. அவ அக்யூஸ்டா குற்றம் சாட்டப்பட்டு பெயில்ல வந்திருப்பவ. அவளுக்கு நீ அன்னைக்கு ஆதரவு தந்தது சரிதான். ஆனா இன்னைக்கு என்ன அவசியம் வந்தது.? அவளுக்குன்னு அண்ணனுங்க இரண்டு பேர் இருக்காங்க.. அவனுங்களுக்கு இல்லாம அக்கறை உனக்கு என்ன வந்தது.?" என கேட்டாள்.

இனியன் கை கட்டி நின்றடி அருகேயிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டான்.

"அவங்க உடனடியா திரும்பி போற வேலை இருக்குன்னு உங்க முன்னாடிதானே சொன்னாங்க.?" என்றான்.

"ஆனா ஏன்..? அவங்க அவளோட அண்ணன்கள்.. அவங்க தங்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்கு.. தங்கச்சிக்காக வேலையை விட்டுட்டு இங்கேயே இருக்க வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்கு.. நீ நடுவுல பேசாம இருந்திருந்தா அவங்க இங்கேயே தங்கி அவளை கவனிச்சிட்டு இருந்திருப்பாங்க.. ஆனா நீ ஏன் தேவையில்லாத வேலைகளை செய்ற.?" என்றாள் சக்தி.

"ம்மா.. நீங்களுமா.? நான் என்ன அவங்களை தப்பான எண்ணத்தோடா இங்கே கூட்டி வந்திருக்கேன்..? அவளோட சொந்த குடும்பமே அவளை கொல்ல துடிக்குது.. இப்படி ஒரு நிலையில நான் எப்படி அவங்களை தனியா விட முடியும்.? இது என் முதல் கேஸ்.. அவங்க உயிரை பாதுகாக்கற பொறுப்பும் எனக்கு இருக்கு.. இதுல என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்க முடியாது.." தனது முடிவை தெளிவாக சொல்லி விட்டான் அவன்.

"நீ சொல்றதை என்னால புரிஞ்சிக்க முடியுது இனியா.. ஆனா சந்தியா என்ன நினைப்பான்னு யோசிச்சியா.? உன்னால அடிபணிஞ்சி போக முடியாது. நீ பிடிச்ச முயலுக்கு மூணு காலோ நாலு காலோ எனக்கு அது தேவையில்ல.. ஆனா இந்த பொண்ணை காரணம் காட்டி சந்தியாவுக்கும் உனக்கும் இடையில சண்டை ஏதும் வந்தா அப்புறம் நான் உன்னை சும்மா விட மாட்டேன் பார்த்துக்க.." என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

சக்தி பேசி சென்றதை நினைத்தபடி சிலையாக நின்றிருந்தாள் சந்தியா. உண்மை சொல்ல வேண்டுமானால் அவளுக்கும் மேகலை அந்த வீட்டில் இருப்பதில் இஷ்டமில்லைதான். ஆனால் தனது பேச்சிற்கு காது கொடுக்காத இனியன் தான் ஏதாவது சொல்ல போனால் அதையும் தனக்கு எதிராக ஏதும் திருப்பி விட்டு விடுவானோ என பயந்தாள். இனியன் மீது கொண்ட நம்பிக்கையை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைத்தாள்.

தனது யோசனையின் பிடியில் இருந்தவள் இனியன் தன் அருகே வந்ததை கவனிக்கவே இல்லை. அவளது கையிலிருந்த காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டவன் "அப்படி என்ன யோசனை.?" என்றான்.

தனது சிந்தையிலிருந்து விடுப்பட்டவள் "ஒன்னுமில்ல.." என்றாள் ஒற்றை வார்த்தையில்.

"அம்மா சொன்னதை ஏதும் மனசுல போட்டு குழப்பிக்காத.. அந்த பொண்ணுக்கு எதிரிங்க அதிகம்.. அந்த பொண்ணு செத்து போனா அந்த குற்ற உணர்ச்சி வாழ்க்கை முழுக்க எனக்கு இருக்கும்.. இதை அம்மாவாலதான் புரிஞ்சிக்க முடியல.. நீயாவது புரிஞ்சிக்க.. என்னோட காதல் வேற.. என் பொறுப்பு வேற.." என்றவன் கோப்பையை திருப்பி தந்தான்.
புரிந்துக் கொண்டதாக தலையசைத்தவள் திரும்பி நடந்தாள்.

"சந்தியா.."

என்னவென திரும்பி பார்த்தாள்.

"காப்பி சூப்பர்.. உன் உதடுகளை போல சர்க்கரை சுவைக்காதுதான்.. ஆனா அடுத்த முறையாவது மறக்காம காப்பியில் சர்க்கரையும் போடு.." என்றவன் திரும்பி நடக்க சிவந்து போன முகத்தோடு சமையலறை நோக்கி நடந்தாள் சந்தியா.

மறுநாள் வீட்டிலிருந்தவர்கள் தங்களது பணிகளை புறப்பட்டு சென்றனர்.

சோகமே உருவாக அமர்ந்திருந்த மேகலையை தேடி வந்த சந்தியா "உங்களுக்கு வீட்டுல இருக்க போர் அடிச்சா என்னோடு வரிங்களா..?" என்றாள்.

மேகலையும் தனக்கு சிறு மாற்றம் கிடைக்கட்டுமே என நினைத்து அவளோடு கிளம்பினாள்.

சந்தியாவின் விவசாய நிலத்தை பார்த்தவள் "சூப்பர்ங்க.. நீங்க விவசாயியா.?" என்றாள்.

"அந்த அளவுக்கெல்லாம் இல்லைங்க.. சிறு பிள்ளை விளையாட்டு போல ஏதாவது செய்வேன்.." என்றவள் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த தன் தோழியை கை காட்டினாள்.

"இது நித்யரூபா.. என் பிரெண்ட்.. இந்த பார்ம்ல என் பார்ட்னரும் இவளே.." என்றவள் தன் தோழியிடம் "இவங்க மேகலை.." என்றவள் சிறு யோசனைக்கு பிறகு "பேமிலி பிரெண்ட்.." என்றாள்.

அவர்கள் இருவரும் கைகளை குலுக்கிக் கொண்டனர்.

சந்தியா தனது சிறு ஆராய்ச்சிகளை பற்றி மேகலைக்கு எடுத்து சொன்னாள்.

"பல வருசங்களுக்கு முன்னாடி நிறைய தானிய வகைகள் அழிஞ்சிடுச்சி.. ஆனா அதுல பல முழுசா அழிஞ்சிருக்காதுன்னு நான் நம்புறேன்.. எங்கேயாவது எனக்குன்னு கிடைக்கற நாலு தானிய மணிகளை வச்சாவது அதை அழிவில் இருந்து காப்பாத்த நினைக்கிறேன்.. நான் விவசாயம் ஏதும் செய்றது கிடையாது.. எங்கே என்ன விதைகள் எந்த தரத்துல கிடைக்கும்ன்னு எனக்கு தெரியும். பழமையை அழிக்காம அதையும் புதுமையா செய்ய நினைக்கற விவசாயிகளுக்கு என் பார்ம் மூலமா உதவிகளை செய்றேன்.." என்றாள் சந்தியா. மேகலை அவள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டாள்.

அன்றிலிருந்து அவளும் சந்தியாவிற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய ஆரம்பித்தாள். வீட்டில் வெட்டியாக இருப்பதை விட இப்படி இரு பெண்களோடு சேர்ந்து செடிகளுக்கு உரமிடுவது மேகலைக்கு பிடித்திருந்தது.
ரகுவிற்கு திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது.

அந்த வார இறுதியில் முத்து சிறையிலிருந்து வீடு திரும்பினார். அவர் வந்த இரண்டு நாட்கள் கழித்து சுந்தரமும் பொன்னியும் வீடு வந்தனர். அதுவரையிலும் தனது அறையில் அடைந்து கிடந்தவருக்கு சந்தியாதான் பணிவிடைகளை செய்தாள்.

தான் ஐந்து வருடங்கள் கழித்து வீடு வரும் வேளையில் தன் மனைவி தனக்காக வீட்டில் காத்திருக்கவில்லை என அவருக்கு கோபம் வந்து விட்டது.

"எங்கடி ஊர் சுத்த போன..?" என்றார் பொன்னி திரும்பி வந்தவுடன்.

அவரை சக்திக்கு எப்போதுமே பிடிக்காது. இப்போதும் தன் வாயை திறந்து தனது திருவருள் வார்த்தைகள் எதையாவது சொல்லலாமா என நினைத்தாள் அவள். ஆனால் இந்த ஐந்து வருடத்தில் தன்னை வார்த்தைகளால் குத்திய அத்தை இன்று எதையாவது பதிலாக சொல்லட்டும் நாம் வேடிக்கை பார்ப்போம் என அமைதியாக இருந்துக் கொண்டாள்.

"அஞ்சி வருசமா நீங்க எங்கே போனிங்கன்னு நான் கேட்டேனா.? அது மாதிரி நான் எங்கே போனன்னு நீங்களும் கேட்காதிங்க.." என்றாள்.

சுந்தரமும் சக்தியும் அந்த வீட்டில் இருப்பதே அவருக்கு பிடிக்கவில்லை. பொன்னி தன்னை எதிர்த்து பேசியதும் பிடிக்கவில்லை. ஐந்து வருடத்தில் தனது நிலையே தலைகீழாக மாறி விட்டது போல என நினைத்தவருக்கு கோபம்தான் அதிகமாக வந்தது. அந்த கோபத்தை யார் மீது காட்டலாம் என அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில் இனியன் அங்கு வந்து சேர்ந்தான்.

"தாத்தா.."

"என்னப்பா.." முத்துவும் சுந்தரமும் ஒரே நேரத்தில் பேசினர். சுந்தரத்தை முறைத்த முத்து இனியனை பார்த்தார்.

"எதுக்குப்பா கூப்பிட்ட.?" என்றார்.

"நீங்க ஒரு தனிக்காட்டு சிங்கம் போல.. நீங்க இங்கே இருந்தா வீணா சண்டைதான் வரும்.. அதனால நீங்க மாந்தோப்புக்கு போய் தங்கிக்கங்க.." என்றான்.

"இனியா.. பாட்டியையும் தாத்தாவையும் ஏன் பிரிக்கற.?" வருத்தத்தோடு கேட்டாள் சந்தியா.

"அடச்சை.. இந்த மனுசன் கூட நான் இத்தனை வருசம் வாழ்ந்ததே பெரிசு.. இனியும் வாழ என்ன இருக்கு.? அந்த ஆளை மாந்தோப்புக்கே போக சொல்லுங்க.. தாலி கட்டிய பாவத்துக்கு தினமும் சோறு கொடுத்து விடுறேன்.."

என்றவள் முத்துவின் முன்னால் நிற்கவும் பிடிக்காமல் சமையலறைக்குள் சென்று நுழைந்துக் கொண்டாள்.

முத்துவுக்கும் கோபம் வந்து விட்டது. "இந்த ராட்சசி இருக்கற வீட்டுல நான் ஏன் இருக்க போறேன்.? நான் மாந்தோப்புக்கே போய் நிம்மதியா இருக்கேன்.. இவ ஒன்னும் எனக்கு ஓசியில சோறு தர வேண்டாம்.. இது அத்தனையும் எங்க அப்பா சம்பாதிச்சது.. நான் சம்பாதிச்சது.. அவளும் அவங்க அப்பனும் சம்பாதிச்சது இல்ல.. அதை நியாபகம் வச்சிக்க சொல்லு.." சந்தியாவிடம் சொல்லியவர் தனது துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு வெளியே நடந்தார்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக இவர்கள் இப்படி சண்டை போட்டுக் கொண்டது சுந்தரத்திற்கு பிடிக்கவே இல்லை. தான் விரைவில் மீண்டும் புண்ணியம் தேடி கிளம்ப போகிறோம் என்பதை புரிந்துக் கொண்டார்.

இவர்களது இந்த குடும்பத்தை மேகலையால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.

மறுநாள் இனியனை தேடி வந்தான் மூர்த்தி.

"எதுக்கு மாப்பிள்ளை வர சொன்னிங்க.?" என்றான்.

"நீங்க இனி மாந்தோப்புல காவலா இருக்க வேணாம் மாமா.. அதை தாத்தா பார்த்துக்கட்டும்.. நீங்க வீட்டுல சும்மா இருங்க.." என்றான்.

"எனக்கு சும்மா இருக்க வராது மாப்பிள்ளை.. இந்த வேலையும் இல்லன்னா நான் என்ன பண்றதுன்னே தெரியல.." என சோகமாக சொன்னவன் குழப்பத்தோடு அங்கிருந்து கிளம்பினான்.

தன்அப்பாவின் சோக முகம் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவிற்கு இனியன் மீது ஆத்திரமாக வந்தது. அவன் தனியாக இருக்கும் நேரத்தில் அவனிடம் தன் கோபத்தை கொட்டினாள்.

"எதுக்கு எங்க அப்பாவை மாந்தோப்புல இருந்து வெளிய அனுப்பின.?" என்றாள் கோபத்தோடு.

அவளை யோசனையோடு பார்த்தான் இனியன்.

"நீதானே உங்க அப்பாவை வீட்டோட மாப்பிள்ளையாக்கி அடிமை மாதிரி கொடுமை படுத்துறதா சொன்ன.? அதனாலதான் இப்படி.. அந்த தோப்பை இனி தாத்தா பார்த்துப்பாரு.. உங்க அப்பாவை கால் மேல கால் போட்டுக்கிட்டு உட்கார சொல்லு.."

"எங்க அப்பாவை பார்த்தா உனக்கு ஓசியில சாப்பிடுற மாதிரி தெரியுதா.?" என அவள் திருப்பி கேட்க , இனியன் சிரிப்போடு தலையை வலம் புறமாக அசைத்தான்.

"இதை உங்க வீடா நினைச்சிருந்தா அவர் தோப்புல வேலை செஞ்சது உனக்கு வித்தியாசமா தெரிஞ்சிருக்காது.. இதை நீதான் கேட்ட.. நீ என்ன சொன்னியோ அதை நான் செஞ்சிட்டேன்.. இனி இந்த வீட்டுல அவர் எந்த வேலையும் செய்ய தேவையில்ல.. உங்க அப்பா ஒன்னும் ஓசி சோறு சாப்பிடல.. அவருக்கும் சேர்த்துதான் நீயும் நானும் உழைக்கிறோம்.. நீ வேணா உரிமை ஏதும் இல்லன்னு நினைக்கலாம்.. ஆனா அவருக்கு வேண்டியதை செய்ய வேண்டிய எல்லா உரிமையும் எனக்கு இருக்கு.." என்றவன் தனது கையிலிருந்த பைலில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

"எங்க அப்பா சோகமா வெளியே போனாரு.." அவனிடம் இதை ஏன் சொல்கிறோம் என்பது அவளுக்கு புரியவே இல்லை. இனியன் தன் கையில் இருந்த பைலை ஓரம் வைத்து விட்டு அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்தான்.

"அவர் சோகம் கொஞ்ச நேரத்துல போயிடும்.. நீ அதை ஏன் நினைச்சி பீல் பண்ற.?" என்றான் அவளது கன்னத்தை கிள்ளிக் கொண்டே.

"ஏனா அவர் என் அப்பா.." என அவள் சோகமாக சொன்னாள்.

அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அவன்.

"அவர் ஒன்னும் குழந்தை இல்ல.. அவருக்குன்னு ஒரு லைப் இருக்கு.. அதை இதுக்கு மேலயாவது அவர் வாழட்டும் விடு.." என்றவன் அவளது நெற்றியில் முத்தத்தை தந்தான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

word count 1147
VOTE
COMMENT
FOLLOW
SHARE


ReplyQuote
Sevanthi Durai
(@sevanthi)
Estimable Member Writer
Joined: 7 months ago
Posts: 233
Topic starter  

சர்வாதிகாரம் 37

ரகுவிற்கு திருமணம் என்று ஓடி ஓடி வேலை செய்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

இனியன் தனது வேலையில் மூழ்கியிருந்தான். மேகலையின் கேஸை முடிக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருந்தது. ராமனை தேடி பிடித்தவன் அவனையும் தான் சேகரித்த சாட்சியங்களையும் கோர்டில் ஒப்படைத்து விட்டிருந்தான். இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என ஊடகங்கள் நியூஸில் வாசித்துக் கொண்டிருந்தனர்.

தன்னை கொல்ல இருந்தவர்கள் தனது குடும்பத்தினரே என்ற விசயம் மேகலைக்கு பேரதிர்ச்சியை தந்து விட்டது.

தான் தேவ சுந்தரியின் மகள் என்பது அவளுக்கு இன்னும் அதிகமான அதிர்ச்சியை தந்து விட்டிருந்தது. அவளுடைய மன நிலையை இனியனால் நன்றாக புரிந்துக் கொள்ள முடிந்தது.

மேகலை இனியன் குடும்பத்தில் தானும் ஒரு ஆளாக மாறி விட்டிருந்தாள். அவளும் ரகுவின் திருமணத்திற்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்துக் கொண்டிருந்தாள்.

ரகுவின் திருமணத்திற்கு முன்னால் நாள் மேகலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
அன்றுதான் மேகலைக்கு மனம் சற்று நிம்மதி அடைந்தது.

இன்னும் ஒரிரு மாதத்தில் அவளை தங்களோடு அழைத்து செல்வதாக அவளது அண்ணன்கள் சொல்லி விட்டனர். அவள் தனது வீட்டில் தனியாக இருந்தால் ஆபத்து நேருமென அவளை இங்கேயே தங்க சொல்லி விட்டான் இனியன்.
அன்றைய நாள் மாலை நேரத்தில் இனியனிடம் தன் நன்றிகளை கூறினாள் மேகலை.

"ரொம்ப தேங்க்ஸ் சார்.. நீங்க ஒருத்தர் இல்லன்னா இன்னேரம் நான் என்ன ஆகியிருப்பேன்னே தெரியாது.. என்னை இந்த கேஸ்ல இருந்து காப்பாதியதும் இல்லாம எனக்கு உங்க வீட்டுலயே அடைக்கலமும் தந்த உங்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன் சார்.." என்றாள்.

"எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றிங்க.? உங்க மேல தப்பு இல்லாத பட்சத்துல உங்களை காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு.." என சொல்லி விட்டான் இனியன்.

ரகுவிற்கு திருமணம் நல்லபடியாக முடிந்தது. திருமணம் முடிந்து தங்களது வீடு திரும்பியது இனியனின் குடும்பம். அலை அடித்து ஓய்ந்தார் போல இருந்தது மொத்த வீடும்.

"ரகு கல்யாணம் நமக்கு ரொம்ப வேலை வாங்கிடுச்சி.." என சோம்பலாக சொல்லியபடியே கட்டிலில் விழுந்தான் இனியன்.

இடுப்பில் கை வைத்து நின்றபடி அவனை ஒய்யார பார்வை பார்த்தாள் சந்தியா.

"எனக்கு அந்த கேஸ் விசயமா வேலை இருக்கு இந்த கேஸ் விசயமா வேலை இருக்குன்னு சொல்லிட்டு இப்ப நீ என்னவோ கல்யாணத்துல எல்லா வேலையையும் இழுத்து போட்டு செஞ்ச மாதிரி சீனை போடுற.." என கிண்டலாக கேட்டாள் சந்தியா.

ஒரு பக்கமாக திரும்பி படுத்தபடி அவளை பார்த்தவன் "நீ வேற நான் வேறயா.? நீ வேலைகளை செஞ்ச.. ஆனா அலைச்சல் மட்டும் எனக்கு வந்து சேர்ந்துடுச்சி.." என சொன்னான்.

"நல்லா பேச கத்துட்டு இருக்க.." என்ற சந்தியா அருகில் இருந்த தலையணை ஒன்றை எடுத்து அவன் மீது எறிந்தாள்.

"என்கிட்டயே சண்டைக்கு வரியா.?" என கேட்டவன் எழுந்து அமர்ந்தான்.

"எனக்கு வேலை இருக்கு.. உன்னோடு சண்டை போட எனக்கு நேரம் இல்ல.." என்றவள் தனது கழுத்தில் இருந்த நகைகளை கழட்டி வைக்க ஆரம்பித்தாள்.

"நகையை கழட்டி வைக்கிறது உனக்கு வேலையா.? என்கிட்ட விட்டா அதை சேவையா செய்வேன் தெரியுமா.?" கன்னத்தில் கை ஊன்றியபடி சொன்னான் இனியன்.

"நீ ஒன்னும் செய்ய தேவையில்ல.." கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்து சொன்னாள்.‌ அவளது முகத்தில் செம்மை படர ஆரம்பித்தை அதே கண்ணாடி பிம்பத்தில் பார்த்தவன கண்ணடித்தபடி "அப்படிலாம் சொல்ல கூடாது.. நான் ஏதாவது சொன்னா சரிங்க மாமா.. ஓகே மாமான்னுதான் சொல்லணும்.." என்றான்.

கண்ணாடியை விட்டுவிட்டு அவன் பக்கம் திரும்பியவள் "மாமாவா..? ஹாஹா... கனவுல கூட நினைச்சி பார்த்துடாத.. உனக்கெல்லாம் இனியான்னு பேர் சொல்லி கூப்பிடுறதே பெருசு.. இதுக்கு மேல ஏதாவது ஓவரா பேசினா வாடா போடான்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவேன்.." என்றாள்.

அவன் ஏதோ சொல்ல வந்த பொழுது அறையின் கதவு தட்டப்பட்டது.

"டிஸ்டர்பன்ஸ்.. இதுக்காகவே நான் உன்னை தனியா எங்கேயாவது கடத்திட்டு போக போறேன்.." என்றவன் எழுந்து சென்று கதவை திறந்தான்.

"உனக்கு ஏதோ லெட்டர் வந்திருக்குடா.." என்ற மகேஷ் கடிதத்தை இனியனிடம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

"என்ன லெட்டர் அது.?" சந்தியா தன் கை வளையல்களை கழட்டி வைத்தபடியே கேட்டாள்.

"தெரியல.." என்றவன் அதன் முகவரியை பார்த்தான். அனுப்பிய முகவரியே இல்லாமல் இருந்தது அதில்.

"இதென்னடா அனாமதேய கடிதம்.?" என நினைத்தவன் அதை பிரித்தான்.

'காலம் காலமா பின்பற்றி வர ஒரு சடங்கை தடுக்கிறது எவ்வளவு பெரிய தப்புன்னு கூடிய சீக்கிரம் நம் புரிஞ்சிப்ப..'
இந்த காலத்துல கூட மொட்டை கடுதாசி நடைமுறையில் இருக்கா என நினைத்தவன் அதை நான்கு துண்டாக கிழித்து குப்பை தொட்டியில் எறிந்தான்.

"என்ன அனுப்பி இருக்காங்க.?" என கேட்டபடி அருகில் வந்தாள் சந்தியா.

"மாடர்ன் டைம்ல கூட மொட்ட கடுதாசியில் பயப்படுத்த முயற்சி பண்றாங்க.. அதை விட்டு தள்ளு.." என்றவன் அவளை திருப்பி நிறுத்தினான். அவளின் கூந்தலில் இருந்த ரோஜாக்களை ஒவ்வொன்றாய் எடுத்து தூர எறிந்தான்.

"என்ன பண்ற நீ.? எதுக்கு பூவை எடுக்கற.?" என கேட்டு திரும்ப முயன்றவளை அப்படியே பிடித்து நிறுத்தினான் அவன்.

"அந்த பூவெல்லாம் வாடி போச்சி.." என்றவன் அவள் தலையிலிருந்த மல்லிகை சரங்களை கழட்டி தூர எறிந்தான்.

அவளது பின்னலையும் கழட்டி விட்டான்.

"இனியா.." என்றபடி கோபமாக திரும்பியவளின் முன்னால் சிரிப்போடு நின்றவன் அவளது தலைமுடியை கலைத்து விட்டு விட்டு "இப்ப அழகா இருக்க.." என்றான்.

"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு.." என்றவள் அவனை விட்டு விலகி செல்ல முயன்றாள்.

"சந்தியா.."

"உனக்கு இன்னும் என்ன வேணும்.?"

"உன் ரவிக்கை கொக்கிகள் முதுகு பக்கம் இருக்கு.. அதை கழட்ட ஏதாவது ஹெல்ப் வேணுமா.?" என்றான்.

"ஓ.." தன் முதுகு பக்கம் கை வைத்து பார்த்தவள் அமைதியாக வந்து அவன் முன்னால் நின்றாள்.

"சந்தியா.."

"சொல்லு.."

தரை பார்த்தபடி நின்றிருந்தவளின் முதுகில் கோலம் போட்டவன் "நீ ஏன் அழகா இருக்க.?" என்றான்.

"உன்னாலதான்.. உனக்காகதான்.." என்று வெட்கத்தோடு சொன்னவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன். இனியனின் காதல் பாடத்தை படிக்க ஆரம்பித்தாள் சந்தியா.

அவங்க என்னமோ படிக்கட்டும்.. அந்த பாடமெல்லாம் நமக்கு எதுக்கு.? வாங்க நாம அடுத்த சீன்க்கு போகலாம்..
பொன்னியின் அறை கதவை‌ தட்டி விட்டு உள்ளே வந்தான் மூர்த்தி

"அத்தை இந்த வீட்டோட பத்திரம் எங்கேயிருக்குன்னு தெரியுமா.? மாமா கேட்டாரு.‌." என்றான் அவன்.

யோசித்து பார்த்தாள் பொன்னி. "என்கிட்ட இல்லப்பா.. என் பேர்ல இருந்ததை ஒருநாள் மகேஷ் அவன் பேருக்கு மாத்திக்கிட்டான்.. அதுக்கு மேல அது அவன்கிட்டதான் இருக்கும்.. இருங்க கேட்டு வாங்கி தரேன்.. ஆனா அந்த கிழவனுக்கு இந்த வயசுல எதுக்கு பத்திரம் பார்க்கற வேலை..?" என்றவள் மகேஷை தேடி வந்தாள்.

சக்தியோடு அமர்ந்து ஹாலில் கதை பேசிக் கொண்டிருந்தவனிடம் வந்தாள் பொன்னி.

"மகேஷ்.. இந்த வீட்டு பத்திரத்தை உங்க அப்பா கேட்கறாராம்.. எடுத்துட்டு வா.." என்றாள்.

மகேஷின் முரட்டு பார்வை திருட்டு முழியாக மாறியபோதே ஏதோ வில்லங்கம் இருப்பதை புரிந்து கொண்டாள் பொன்னி. தனது அறைக்கு சென்று திரும்பியவன் அவளிடம் பத்திரத்தை நீட்டினான்.

"ஏன் ஒரு மாதிரியா இருக்க.?" என கேட்டபடி பத்திரத்தை மூர்த்தியிடம் கை மாத்தி விட்டாள் பொன்னி.

"ஒன்னுமில்லம்மா.." என மகேஷ் சொல்ல, மூர்த்தி அதிர்ச்சியோடு தன் வாய் மீது கை வைத்தான்.

"அத்தை.. வீடு சக்தி பேர்ல இருக்கு.." என்றவன் மகேஷை ஆச்சரியத்தோடு பார்த்தான்.

"இது எப்ப நடந்தது.?" என்றான்.

மகேஷ் தனக்கும் சக்திக்கும் நடந்த இரண்டாவது திருமணத்தின் விதிமுறைகளை நினைத்து பார்த்தான்.

'அவளே கட்டிக்கிட்ட தாலிக்கு எல்லா சொத்தையும் எழுதி தர சொல்லிட்டாளே..' என நினைத்தவனுக்கு இன்றளவிலும் அவளது நியாயமே இல்லாத அந்த விதிமுறைகள் நியாயம் இல்லாததாகவே தோன்றியது.

"எப்ப நடந்தா என்னங்க.? இந்த வீடு என் பேர்லதான் இருக்கு.." என்றாள் சக்தி.

"பத்திரத்தை உன் மாமனார் கேட்டிருக்காராம்.. இது தெரிஞ்சா ஒரு ஆட்டமே ஆடிடுவாரு.." என்றாள் பொன்னி.

"அவருக்கு நான் பதிலை சொல்லிக்கிறேன் அத்தை.. இந்த வீட்டுல எனக்கு உரிமை வேணாம்ன்னுதான் என் பேருக்கு மாத்திக்கிட்டேன்.. என் குலத்தோட வாரிசுன்னு அவர் கொஞ்சுற இனியனை நான்தான் பெத்து தந்தேன்.. எனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு.. இது என்னைக்காவது ஒருநாள் அவருக்கும் புரியட்டும்ன்னுதான் இந்த வீட்டை என் பேருக்கு மாத்தி எழுதினேன்.." என்று பதிலை தந்த சக்திக்கு முத்து இதற்கு மேலும் தன்னிடம் மோதுவார் என்ற நம்பிக்கை இல்லை.

மூர்த்தி அந்த பத்திரத்தை வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினான்.

"இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு எனக்கு கூட தெரிய மாட்டேங்குது.." என புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தாள் பொன்னி.

"சக்தி.." என்றபடி அவள் முன்னால் தன் விரல்களை ஆராய்ந்து கொண்டு நின்றான் மகேஷ்.

"எதுக்கு நீ இப்ப புது பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு நின்னுட்டு இருக்க.?" குழப்பத்தோடு கேட்டாள் அவள்.

"நான் என் கண்ணை மூடிக்கிட்டு உன் சொல் பேச்சை கேட்கறேன் இல்ல.. நீ கேட்டவுடனே சொத்து கூட எழுதி தந்தேன் இல்லையா.? அது போல இந்த ஒருமுறை நீ என் பேச்சை கேட்கறியா.?" என்றான் சிறு குழந்தையின் சிணுங்கலோடு.

"சொல்லு.." என்றாள்.

"நாம இரண்டு பேரும் ஹனிமூன் போயிட்டு வர‌.." அவன் மேலும் பேசும் முன் அவனது வாயை தன் கரம் கொண்டு அடைத்தவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு திரும்பினாள்.

"பைத்தியமா நீ.. ஹால்ல உட்கார்ந்துட்டு யார் காதுலயாவது விழற மாதிரி இப்படியா பேசுவ.?" கோபமாக கேட்டவளின் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டமிட்டவன் "தனியா ரூம்ல இருக்கும் போது கேட்டா என்னோடு வருவியா.?" என்றான்.

தனது கையை உருவி கொண்டு எழுந்து நின்றவள் "நான் வரல.. நீ வேணா தனியா போயிட்டு வா.." என சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து நடந்தாள்.

"தனியா போகணும்ன்னா சன்னியாசம்தான் போகணும்.. அப்ப நான் ஏன் உன்னை கூப்பிடுறேன்..?" என தனக்குள் புலம்பியவன் சக்தியை முறைப்போடு பார்த்தான்.

மேகலையின் மொட்டை தலை சித்தப்பா கடுப்போடு ஜெயிலில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான் அவனை பார்க்க உறவினர் வந்திருப்பதாக தகவல் வந்தது.

உறவினர்களை சந்திக்கும் இடத்தில் கோபத்தோடு வந்து நின்றவன் "அவளை கொல்லாம விட்டது எவ்வளவு தப்பு பார்த்தியா.? அவளோடு பிறந்த சாபம்தான் எங்க எல்லோரையும் ஜெயில்ல கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.." என்றான் தன் எதிரில் இருந்தவனிடம்.

"எனக்கும் புரியுது.. அவளை கொன்னுட்டு வந்து செய்தியை உன்கிட்ட சொல்றேன்.." என எதிரில் இருந்தவன் திரும்பி செல்ல முயன்றான்.

"அவளை மட்டுமில்ல அந்த போலிஸ்காரனையும் முடிச்சிடு.. எங்க மேலயே கை வச்சிட்டான்.. அவனுக்கு நாம யாரு நம்ம வம்சம் என்னன்னு காட்டணும்.." என அவன் சொல்ல, எதிரில் இருந்தவன் "அவனை கதற வைக்கிறேன் பாரு.." என சொல்லி விட்டு கிளம்பினான்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

Word count 1076

LIKE
COMMENT
SHARE


ReplyQuote
Page 5 / 10
Share: